ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து

உங்கள் அனுதின வாழ்க்கையில் நீங்கள் ஜெபத்திற்கு முக்கிய இடமளிப்பதில்லை. ஜெபக்காரியங்களை மனிதன் ஒதுக்கிவிடுகிறான். ஜெபமானது வெறுமனே தேவனுக்கு முன்பாகச் செல்லுகிற ஓர் இயக்கமாகவும், கடமைக்காகச் செய்யப்படுகிற ஒரு செயலாகவும் வழக்கமாகக் காணப்படுகின்றது. ஒருவனும் உண்மையான ஜெபத்தில் தேவனோடு இணைந்து, தன் இருதயத்தை முழுமையாக அர்ப்பணித்ததில்லை. பிரச்சனைகள் எழும்பியபோது மட்டுமே மனிதன் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்தான். இத்தனை காலத்தில், நீ எப்போதாவது தேவனிடம் உண்மையாகவே ஜெபித்ததுண்டா? நீ தேவனுக்கு முன்பாக வேதனையுடன் கண்ணீர் சிந்தி அழுத நேரம் என்று ஒன்று உண்டா? நீ தேவனுக்கு முன்பாக உன்னை நிதானித்து அறிந்த நேரம் என்று ஒன்று உண்டா? நீ எப்பொழுதாவது, தேவனுடைய இருதயத்தோடு இருதயமாக இணைந்து ஜெபித்து இருக்கிறாயா? ஜெபமானது பயிற்சியின் மூலமாக வருகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் வழக்கமாக ஜெபிக்கிற நபராக இல்லை என்றால், நீங்கள் சபையில் ஜெபிக்கும் வாய்ப்பைப் பெற வழியே இருக்காது; மேலும் உங்களுக்குச் சிறிய கூடுகைகளில் ஜெபிக்கிற பழக்கமில்லாதிருந்தால், நீங்கள் பெரிய அளவிலான கூட்டங்களில் ஜெபிக்கத் தகுதியற்றவர்களாகக் காணப்படுவீர்கள். நீங்கள் தேவனுக்கு அருகாமையில் செல்லாமலும், தேவனுடைய வார்த்தையைச் சிந்தித்து, அசை போடாமலும் தொடர்ந்து காணப்படும்போது, ஜெப நேரத்தில் தேவனோடு பேச உங்களுக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை; அப்படியிருந்தும் நீங்கள் ஜெபிக்க முற்படும்பொழுது, நீங்கள் உதட்டளவில் ஜெபம் செய்கிறவர்களாக இருப்பீர்களே தவிர, உங்கள் ஜெபம் உண்மையான ஜெபமாக இருக்காது.

உண்மையான ஜெபம் என்றால் என்ன? உண்மையான ஜெபம் என்பது உங்கள் இருதயத்தில் உள்ளவற்றைத் தேவனிடத்தில் எடுத்துக் கூறுவதாகும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு, தேவனோடு ஐக்கியப்படுவதாகும், தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவருடன் தொடர்பு கொள்வதாகும், குறிப்பாக தேவனுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்வதாகும், அவர் உங்களுக்கு முன் இருப்பதை உணர்ந்து, தேவனிடம் பேசுவதற்கு உங்களிடம் ஏதோ இருப்பதாக நம்புவதாகும். உங்கள் இருதயம் ஒளியால் நிறைந்திருப்பதை உணர்கிறது; மேலும், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் உணர்கிறீர்கள். நீ தேவனிடமாக ஈர்க்கப்படுவதாக உணர்கிறாய்; உன்னிடம் கேட்கிற உன் சகோதர, சகோதரிகளுக்கு உன் வார்த்தைகள் மனநிறைவைக் கொண்டு வருகின்றன. அவர்கள் சொல்ல விரும்பிய, அவர்களுடைய வார்த்தைகள் உன்னுடைய வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருப்பது போல, அவர்கள் தங்கள் மனதில் உள்ள வார்த்தைகளை நீயே பேசி வெளிப்படுத்துவதாக உணர்வார்கள். இதுவே உண்மையான ஜெபமாகும். உண்மையான ஜெபத்தில் நீ தரித்திருக்கும்பொழுது, உன் இருதயம் சமாதானத்துடன் காணப்பட்டு மனநிறைவை அறியும். தேவனை நேசிக்கும் பலம் அதிகரித்து, தேவனை நேசிப்பதைக் காட்டிலும் மிகவும் மதிக்கப்படத்தக்கவை அல்லது வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க சிறந்தவை எதுவுமில்லை என்று உணர்வாய். இவை அனைத்தும் உனது ஜெபம் வல்லமையுள்ளது என்பதை நிரூபிக்கின்றது. இதைப் போல், நீ எப்போதாவது ஜெபித்ததுண்டா?

ஜெபத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? உன் இருதயத்தின் உண்மையான நிலை மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியைக்கு ஏற்றவாறு உன் ஜெபம் படிப்படியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அவர் மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறியவும், அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும், நீ தேவனோடு ஐக்கியம் கொள்ள வருகிறாய். ஜெபத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத் துவங்கும்பொழுது, முதலாவது உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுங்கள். தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், உங்கள் இருதயத்தில் உள்ள வார்த்தைகளை மட்டும் தேவனிடம் பேச முயற்சி செய்யுங்கள். நீ தேவனுக்கு முன்பாக வரும்பொழுது இவ்விதமாகப் பேசு: “தேவனே, நான் உமக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறதை இன்றைக்குத்தான் உணர்கிறேன். நான் உண்மையிலேயே குற்றம் உள்ளவனும் வெறுக்கப்படத்தக்கவனுமாய் இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முதல் நான் உமக்காக வாழ்வேன். நான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, நீர் திருப்தி அடையும்படி உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவேன். உம்முடைய ஆவி என்னில் எப்பொழுதும் கிரியையை நடப்பித்து, தொடர்ந்து என்னை ஒளிரச் செய்து அறிவூட்டுவதாக. அதனால் நான் உமக்கு முன்பாக உறுதியான மற்றும் மாபெரும் சாட்சி பகருகிறவனாக விளங்கட்டும். எங்களில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிற உம்முடைய மகிமை, உம்முடைய சாட்சி மற்றும் உம்முடைய வெற்றியின் ஆதாரங்களைச் சாத்தான் பார்ப்பானாக.” இவ்விதமாக, நீ ஜெபிக்கும்பொழுது, உன் இருதயம் முழுமையாக விடுதலையைப் பெற்றிருக்கும். இவ்வாறாக ஜெபிக்கும் பொழுது, உன் இருதயம் தேவனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும். இது போன்று அடிக்கடி ஜெபிக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னில் கிரியையை நடப்பிப்பார். இவ்விதமாக நீ எப்பொழுதும் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, உன் தீர்மானங்களை அவருக்கு முன்பாக வைக்கும்பொழுது, உன் தீர்மானங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டு, உன் இருதயமும் உன் முழுமையும் தேவனால் ஆதாயப்படுத்தப்படும். இறுதியில் நீ அவராலே பரிபூரணமாக்கப்படுவாய். உங்களுக்கு ஜெபமானது மிகவும் இன்றியமையாதது ஆகும். நீங்கள் ஜெபித்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக்கொள்ளும் பொழுது, உங்கள் இருதயம் தேவனால் அசைக்கப்படும், மேலும் தேவனை நேசிக்கும்படியான பெலன் உள்ளே இருந்து வெளிப்படும். நீ உன் முழு உள்ளத்தோடு ஜெபிக்காமலும் தேவனோடு ஐக்கியம் கொள்ளும்படி உன் உள்ளத்தைத் திறக்காமலும் இருந்தால், தேவன் உன்னில் கிரியை நடப்பிக்க இயலாது. உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளைத் தேவனிடம் சொல்லி ஜெபித்த பின்பும் தேவ ஆவியானவர் தன் கிரியையை இன்னும் நடப்பிக்கத் தொடங்காமலும், நீ உணர்த்துதல்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அது உன் இருதயத்தில் நேர்மை குறைந்து இருப்பதையும், உன் வார்த்தையில் உண்மை இல்லாத தன்மையையும் மற்றும் இன்னும் தூய்மை இல்லாத தன்மையையும் காட்டுகிறது. ஒருவேளை, ஜெபித்த பின்பு நீ மனநிறைவு அடைந்ததை உணர்வாயேயானால், உன் ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டதாய் காணப்படும். மேலும், தேவ ஆவியானவர் உன்னில் கிரியை செய்து கொண்டு இருக்கிறார். தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்கிற ஒருவனால் ஜெபிக்காமல் இருக்க முடியாது. உண்மையிலேயே நீ தேவனுடனான ஐக்கியத்தை அர்த்தமுள்ளதாகவும், விலைமதிப்புமிக்க ஒன்றாகவும் பார்த்தாயேயானால், நீ ஜெபத்தைக் கைவிட முடியுமா? தேவனுடனான ஐக்கியம் இல்லாமல் ஒருவனும் இருக்க முடியாது. நீ ஜெபிக்காமலிருந்தால் மாமிசத்தில் வாழ்ந்து, சாத்தானுடைய கட்டுகளில் இருப்பாய். உண்மையான ஜெபம் இல்லாத பட்சத்தில், நீ இருளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறாய். என் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொரு நாளும் உண்மையான ஜெபத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இது வெறுமனே விதிகளைக் கைக்கொள்வதைப் பற்றியது அல்ல; மாறாக, ஒரு குறிப்பிட்ட பலனை அடைந்து கொள்வதாகும். ஜெபத்திற்காக அதிகாலையில் எழுந்து, தேவனுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க, உங்களது சிறிது தூக்கத்தையும் சந்தோஷத்தையும் சற்று கைவிட நீங்கள் ஆயத்தமா? நீங்கள் சுத்த இருதயத்துடன் இவ்விதமாக ஜெபம் செய்து, தேவனுடைய வார்த்தையைப் புசித்து, அதைப் பருகும்பொழுது, நீங்கள் அவருக்கு மிகவும் உகந்தவர்களாகக் காணப்படுவீர்கள். தினமும் காலையிலும் நீ இப்படிச் செய்வாயேயானால், ஒவ்வொருநாளும் நீ உன் இருதயத்தைத் தேவனுக்கு அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டும், அவருடன் தொடர்பு கொண்டும், அவரில் ஈடுபாடு கொண்டும் காணப்படுவாயேயானால் தேவனை குறித்ததான உன் அறிவு நிச்சயமாகவே அதிகரிப்பதோடு, நீ தேவ சித்தத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீ தேவனிடம் இப்படியாகக் கூறு: “தேவனே, நான் எனது கடமையைச் செய்து முடிக்க விரும்புகிறேன். என்னை முழுவதும் உமக்காக மட்டுமே பரிசுத்தப்படுத்த முடிகிறது. அதனால், நீர் எங்களிடமிருந்து மகிமை அடைவீராக; மற்றும், நீர் எங்கள் கூட்டத்தினால் உண்டான சாட்சியில் மகிழ்ச்சியடைவீராக. நீர் எங்களுக்குள் கிரியை நடப்பிக்கும்படியாகக் கெஞ்சி மன்றாடுகிறேன்; அதினிமித்தம் நான் உம்மை உண்மையாக நேசித்து, உம்மைத் திருப்திப்படுத்தி, உம்மை என் இலக்காக வைத்துப் பின்தொடரவும் இயலும்.” இவ்வாறு பாரத்துடன் ஜெபிக்கும் பொழுது, தேவன் உன்னை நிச்சயமாகவே பரிபூரணப்படுத்துவார். நீ உனது சுய லாபத்திற்காக மட்டுமே ஜெபிக்கக் கூடாது. தேவனுடைய சித்தத்தைக் கைக்கொள்வதற்காகவும், அவரை நேசிப்பதற்காகவும் கூட நீ ஜெபிக்க வேண்டும். இதுவே, உண்மையான ஜெபம் ஆகும். தேவனுடைய சித்தத்தைக் கைக்கொள்ளும்படியாக ஜெபிக்கிற ஒருவராக நீ இருக்கிறாயா?

கடந்த காலங்களில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருந்ததினால், நீங்கள் ஜெபம் என்ற ஒன்றைப் புறக்கணித்தீர்கள். இப்பொழுதோ, ஜெபத்திற்கு உங்களையே பயிற்றுவிப்பதற்கு, நீங்கள் உங்களாலான மட்டும் சிறப்புடன் செயல்பட வேண்டும். தேவனை நேசிக்க உனக்குள் காணப்படுகிற பலத்தை உன்னால் வரவழைக்க முடியாவிட்டால், எப்படி ஜெபிக்க வேண்டும்? “தேவனே, உம்மை உண்மையாக நேசிக்க என் இருதயத்திற்கு இயலவில்லை. நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு என்னில் பெலன் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நீர் ஏன் ஆவிக்குரிய கண்களைத் திறப்பீராக. மேலும், உம்முடைய ஆவி என் இருதயத்தை அசைக்கட்டும். நான் உமக்கு முன்பாக வரும்பொழுது, எதிர்மறையான எல்லாவற்றையும் எறிந்துவிட்டு, எந்த ஒரு மனிதனாலோ, ஒரு விஷயத்தாலோ அல்லது ஒரு பொருளாலோ நான் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதிலிருந்து நீங்கலாகி, என் இருதயத்தை முற்றிலும் வெறுமையாக்கி, உமக்கு முன்பாக வைக்கிறேன்; என்னை முழுவதுமாக உமக்கு முன்பாக அர்ப்பணிக்கும்படி அப்படி செய்கிறேன். இருப்பினும், நீர் என்னைச் சோதிக்கலாம்; நான் ஆயத்தமாக இருக்கிறேன். இப்பொழுது நான் என் எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொள்வதில்லை; மரணத்தின் நுகத்தின் கீழ் நான் இருப்பதுமில்லை. உம்மை நேசிக்கும் இதயத்துடன் ஜீவ வழியைத் தேட விரும்புகிறேன். ஒவ்வொரு காரியமும் அல்லது எல்லா விஷயங்களும் உம்முடைய கரங்களில் இருக்கின்றன. என் வாழ்க்கையின் விதி உமது கரங்களில் இருக்கின்றது. என் ஜீவனையும் நீர் உமது கரங்களில் வைத்திருக்கிறீர். இப்பொழுதும் நான் உம்மை நேசிக்க நாடுகிறேன். நான் உம்மை நேசிக்க, நீர் என்னை அனுமதிக்கிறீரோ இல்லையோ என்பதைப் பொருட்படுத்தாமல், சாத்தான் எவ்வாறு தலையிடுகிறான் என்பதையும் பொருட்படுத்தாமல், நான் உம்மை நேசிக்கத் தீர்மானித்திருக்கிறேன்.” நீங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, இப்படியாக ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நீ இப்படி ஜெபம் செய்தாயேயானால், தேவனை நேசிக்கும் வலிமை படிப்படியாக உயரும்.

உண்மையான ஜெபத்திற்குள் ஒருவனால் எப்படி நுழைய முடியும்?

ஜெபிக்கும்பொழுது, தேவனுக்கு முன்பாக அமைதியான ஓர் இருதயம் உங்களுக்குக் காணப்பட வேண்டும். மேலும், உன் இருதயத்தில் நேர்மை காணப்பட வேண்டும். நீ உண்மையாகவே தேவனோடு ஐக்கியங்கொண்டு, ஜெபம் செய்யும்பொழுது, நீ இனிய சொற்களாலாகிய வாக்கியங்கள்மூலம் தேவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஜெபமானது, தேவன் இப்பொழுது நிறைவேற்ற விரும்புகிற ஒன்றை மையப்படுத்தியே காணப்படவேண்டும். தேவன் உனக்கு அதிக ஞான ஒளியையும், பிரகாசத்தையும் கொடுக்கும்படி, அவரிடம் கேள். ஜெபிக்கும்பொழுது உன் உண்மை நிலையையும், உனது பிரச்சனைகளையும், தேவனுக்கு முன்பாக நீ எடுத்த தீர்மானங்களையும் கூட அவருடைய சமூகத்திற்குள் கொண்டுவா. ஜெபம் என்பது வெறுமனே செயல்முறையைக் கைக்கொள்ளுதல் அல்ல; மாறாக, நேர்மையுள்ள இருதயத்துடன் தேவனைத் தேடுகிற ஒரு செயலாகும். உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக அமைதியோடு காணப்படும்படியாகவும், அவர் உன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்படியாகவும் அவரிடம் வேண்டிக்கொள்; இதனால், அவர் உன்னை வைத்துள்ள சூழலில், நீ உன்னையே அறிந்துகொண்டு, உன்னை வெறுத்து, உன் சுயத்தைக் கைவிட்டுவிட்டு, பின் தேவனுடன் சாதாரண ஓர் உறவைக் கொண்டிருக்கும் படியாக, உன்னை அனுமதித்து, உண்மையிலேயே தேவனை நேசிக்கும் ஒருவராக மாற முடியும்.

ஜெபத்தின் முக்கியத்துவம் என்ன?

ஜெபமானது மனிதன் தேவனுடன் ஒத்துழைக்கும் வழிகளில் ஒன்றாகும். தேவனை மனிதன் கூப்பிடுவதற்கு ஒரு வழியாகும் மற்றும் தேவனுடைய ஆவியினாலே மனிதன் அசைக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இப்படியாகக் கூறலாம்; ஜெபம் இல்லாதவர்கள், ஆவியில் வெறுமையுடன் காணப்படுகிற மரித்த ஜனங்களாவார்கள். அவர்கள் தேவனால் அசைக்கப்படுவதற்கு மனவலிமை அற்றவர்கள் என்பதை அது நிரூபிக்கின்றது. ஜெபம் இல்லாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்துவது சாத்தியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரின் கிரியை நம்மில் மிகவும் குறைவாகக் காணப்படும். ஜெபம் இல்லாமல் இருப்பது ஒருவன் தேவனுடனான உறவை முறித்துக்கொள்வதாகும். அப்படிப்பட்ட ஒருவன் தேவனிடமிருந்து பாராட்டைப் பெறுவது என்பது சாத்தியமில்லை. தேவனில் விசுவாசம் உள்ளவனாக, அதிகமாக ஜெபிக்கிற ஒருவன்; அதாவது, அதிகமாக ஜெபிக்கிற அவன் தேவனால் அசைக்கப்பட்டிருக்கிறான். அதிகம் ஜெபிக்கிற அவன், தீர்மானங்களால் நிறைந்து காணப்படும்பொழுது, ஓரளவே ஜெபிக்கிற ஒருவன் புதிய ஞான ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு அது உதவுகிறது. அதன் விளைவாக, இப்படிப்பட்ட மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் மிக விரைவாகப் பரிபூரணமாக்கப்படுவார்கள்.

ஜெபம் என்ன பலனை அடைய வேண்டும்?

ஜனங்கள் ஜெபத்தைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஜெபத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஜெபம் வல்லமையுள்ளதாய் இருப்பது எளிதான விஷயம் அல்ல. ஜெபம் என்பது ஓர் இயக்கத்தின் வழியாகச் செல்வதோ, வழிமுறையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்து கூறுவதோ அல்ல. வேறுவிதமாகக் கூறினால், ஜெபம் என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதோ மற்றவர்களைப் பின்பற்றுவதோ அல்ல. ஜெபத்தில் ஒருவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையை அடைந்து, தேவனால் அவன் அசைக்கப்படும்படி ஒருவனது இருதயம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜெபம் வல்லமையுள்ளதாக இருக்க வேண்டுமானால், அது ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் ஜெபிப்பதன் மூலம் மட்டுமே அதிக அறிவொளியையும், வெளிச்சத்தையும் பெற முடியும். ஓர் உண்மையான ஜெபத்தின் வெளிப்பாடு என்னவென்றால், தேவன் கேட்கிற எல்லாவற்றிற்காகவும் ஏங்குகிற ஓர் இருதயம் பெற்றிருத்தல், மேலும் அவர் என்ன கோரிக்கை வைத்திருக்கிறாரோ, அதை நிறைவேற்றி முடிக்க விரும்புதல்; ஆண்டவர் வெறுப்பதை வெறுத்தல், இவற்றின் அடிப்படையில் இதைப்பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ளுதலைப் பெற்று, தேவன் தெளிவுபடுத்திய உண்மையைக் குறித்த சிறிது அறிவையும், தெளிவையும் பெற்றிருத்தலே ஜெபத்தின் வெளிப்பாடு ஆகும். மன உறுதி, விசுவாசம், அறிவு மற்றும் ஜெபத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்ய ஒரு வழி ஆகியவை இருக்கும்பொழுது மட்டுமே, அது உண்மையான ஜெபம் என்று அழைக்கப்பட முடியும். மேலும், இவ்வகையான ஜெபம் மட்டுமே வல்லமையுள்ளதாகக் காணப்படும். இருப்பினும் ஜெபமானது தேவனுடைய வார்த்தைகளினாலான சந்தோஷத்தின் மீது கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்; தேவனோடு அவருடைய வார்த்தைகளின் மூலமாகத் தொடர்பு கொள்வதன் அடிப்படையில் அது ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், இதயம் தேவனைத் தேடக் கூடியதாகவும் அவருக்கு முன்பாக அமைதியுடனும் காணப்பட முடியும். இந்த வகையான ஜெபம் தேவனுடனான உண்மையான ஐக்கிய நிலைக்குள் ஏற்கனவே நுழைந்திருக்கிறது.

ஜெபத்தைப் பற்றிய மிகவும் அடிப்படையான அறிவு:

1. மனதிற்கு வருவதெல்லாவற்றையும் கண்மூடித்தனமாகச் சொல்லாதீர்கள். உங்கள் இருதயத்தில் நீங்கள் ஒரு பாரம் கொண்டிருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஜெபிக்கும்பொழுது, நீங்கள் ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

2. ஜெபம் தேவனுடைய வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தைகளின் மீது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. ஜெபிக்கும் பொழுது, நீங்கள் பழைய பிரச்சனைகளுக்குப் புதிய உருவம் கொடுக்கக் கூடாது. உங்கள் ஜெபம் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஜெபிக்கும்பொழுது, உங்கள் உள்ளத்தின் ஆழ்ந்த கருத்துக்களைத் தேவனிடம் எடுத்துக்கூறுங்கள்.

4. குழு ஜெபம் ஒரு மையத்தைக் கொண்டதாக, முக்கியமாக, பரிசுத்த ஆவியின் தற்போதைய கிரியையை மையப்படுத்தி அமைய வேண்டும்.

5. பரிந்துரை ஜெபத்தை எல்லா மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்வதைக் காண்பிக்கும் ஒரு வழியாகும்.

ஜெபத்தைக் குறித்த அறிவு மற்றும் ஜெபத்தின் முக்கியத்துவம் குறித்த புரிந்துகொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டே ஒரு தனிமனிதனின் ஜெப வாழ்க்கை அமைகின்றது. அனுதின வாழ்க்கையில், உங்கள் குறைபாடுகளுக்காக அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். வாழ்வில் உங்கள் மனநிலையில் மாற்றத்தின் பலனைக் காண ஜெபியுங்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த உங்கள் அறிவின் அடிப்படையில் ஜெபியுங்கள். ஒவ்வொரு நபரும் தங்களுக்கான ஜெப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும். மேலும் அவர்கள் தேவனின் செயலை அறிந்து கொள்ள நாடி ஜெபிக்கவேண்டும். உங்கள் சொந்த சூழ்நிலைகளை தேவனுக்கு முன்பாக அப்படியே வைத்து, நீங்கள் ஜெபிக்கிற வழியைக் குறித்து கவலைப்படாமல் உண்மையாய் இருங்கள். உண்மையான புரிந்து கொள்ளுதலை அடைவது மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுவதே முக்கிய அம்சமாகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைய முற்படும் ஒருவர் பல வெவ்வேறான வழிகளில் ஜெபிக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அமைதியான ஜெபம், தேவனுடைய வார்த்தைகளின் மீது ஆழ்ந்த தியானம், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறுதல் ஆகிய இவை சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைவதற்கான குறிக்கோளுடன் கூடிய செயலுக்கான உதாரணங்களாகும். இது தேவனுக்கு முன்பாக ஒருவனின் நிலையை மேலும் வளரச் செய்து ஒருபோதும் இல்லாத அளவிற்கு அவனை வாழ்க்கையில் முன்னோக்கி நகர்த்துகின்றது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தையைப் புசித்துப், பருகுவது அல்லது அமைதியாக ஜெபிப்பது அல்லது சத்தமாக அறிவிப்பது ஆகிய இவை அனைத்துமே, நீ தேவனுடைய வார்த்தைகளையும், அவருடைய கிரியையையும் மற்றும் அவர் உன்னில் செய்து முடிக்க விரும்புகிறவற்றையும் தெளிவாகப் பார்க்க உனக்கு உதவுகின்றன. மிக முக்கியமாக, நீ செய்கிற இவை அனைத்தும், தேவன் உன்னிடம் எதிர்பார்க்கிற தரத்தை அடையவும், உன் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் உதவுகின்றது. தேவன் மனிதனிடம் வைக்கிற மிகக் குறைந்த கோரிக்கை என்னவென்றால், அவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக திறந்துவைக்க வேண்டும் என்பதாகும். மனிதன் தன் உண்மையான இதயத்தைத் தேவனுக்குக் கொடுத்து, தன் இதயத்தில் உள்ளவற்றை உண்மையாய் எடுத்துக் கூறினால், தேவன் அவனில் கிரியை செய்ய ஆவலாய் இருக்கிறார். தேவன் விரும்புவதெல்லாம் மனிதனின் திருக்குள்ள இருதயம் அல்ல, மாறாகச் சுத்தமும் நேர்மையான இருதயத்தை விரும்புகிறார். மனிதன் தன் இருதயத்திலிருந்து தேவனிடம் பேசாதிருந்தால், தேவனும் அவனுடைய இருதயத்தை அசைக்காமலும் அவனில் கிரியை செய்யாமலும் இருப்பார். ஆகையால், உங்கள் உள்ளத்திலிருந்து தேவனுடன் பேசுதல் உங்கள் குறைபாடுகள் அல்லது கலகத்தனமான மனநிலையைப் பற்றிக் கூறுதல் மற்றும் அவருக்கு முன்பாக உங்களை முழுமையாகத் திறந்து வைத்தல் போன்றவை ஜெபத்தில் மிக முக்கியமான விஷயமாகும். அப்பொழுது மட்டுமே தேவன் உன் ஜெபத்தில் ஆர்வம் உள்ளவராய் இருப்பார். இல்லையெனில் அவர் தன் முகத்தை உன்னிடமிருந்து மறைப்பார். உன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக அமைதியாக காத்துக்கொள்வது மற்றும் அது தேவனை விட்டு விலகாமல் இருக்கச் செய்வதே ஜெபத்தின் குறைந்தபட்ச தகுதி ஆகும். ஒருவேளை இந்தக் கட்டத்தில் புதிய அல்லது உயர்ந்த நுண்ணறிவை நீ பெறவில்லை; எனினும் நீ முன்னிருந்த நிலையைப் பாதுகாத்துப் பராமரிக்க ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ பின்னோக்கி செல்லக்கூடாது. இதுவே மிகக் குறைந்தபட்சம் அடைய வேண்டிய உன் இலக்கு ஆகும். இந்த நிலையைக் கூட நீ அடையத் தவறினால் உன் ஆவிக்குரிய வாழ்க்கை சரியான பாதையில் இல்லை என்பதை அது நிரூபிக்கின்றது. இதன் விளைவாக நீ ஆதியில் கொண்டிருந்த தரிசனத்தைப் பற்றிக்கொண்டு இருக்க முடியாது, தேவன் மீதான விசுவாசத்தை இழந்து உன் மன உறுதி படிப்படியாக சிதறடிக்கப்பட்டுப் போகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ நுழைந்து இருக்கிறாயா இல்லையா என்பதற்கான அறிகுறி என்னவென்றால்: உன் ஜெபங்கள் சரியான பாதையில் இருக்கின்றனவா என காண்பதாகும். எல்லா ஜனங்களும் இந்த யதார்த்தத்துக்குள் நுழைய வேண்டும். அவர்கள் அனைவரும் ஜெபத்தில் தங்களைத் தாங்களே உணர்வுப்பூர்வமாகப் பயிற்றுவித்துக் கொள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். செயலற்ற முறையில் காத்திருக்காமல், பரிசுத்த ஆவியினால் தொடர்ந்து அசைக்கப்படும்படி முயற்சிக்க வேண்டும். அப்பொழுது மட்டும்தான் அவர்கள் உண்மையாகவே தேவனைத் தேடுகிறவர்களாகக் காணப்படுவார்கள்.

நீங்கள் ஜெபிக்கத் துவங்கும்பொழுது, ஒரேயடியாக எல்லாவற்றையும் அடைந்துவிட வேண்டும் என்று அதிகக் கற்பனை செய்யாதீர்கள் உன் வாயைத் திறந்தவுடனே பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுதல் அல்லது அறிவொளியும் வெளிச்சமும் பெறுதல் அல்லது தேவன் உன்மீது கிருபையைப் பொழிந்தருளுவார் என்று எதிர்பார்த்தல் போன்ற அதிகப்படியான கோரிக்கைகளை நீ வைக்க முடியாது. அது அப்படி நடைபெறாது. தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. தேவன் ஜனங்களின் ஜெபத்திற்கு அவருடைய சொந்த நேரத்தில் பதிலளிக்கிறார். மேலும், சில சமயங்களில் அவருக்கு முன்பாக நீ உண்மையாய் இருக்கிறாயா இல்லையா என்பதைக் காண்பதற்கு உன் விசுவாசத்தை சோதிக்கிறார். நீ ஜெபிக்கும்பொழுது உனக்கு விசுவாசம் விடாமுயற்சி மற்றும் மன உறுதி இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்களைப் பயிற்றுவிக்கத் துவங்கும்பொழுது, பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுவதைப் பெற முடியாததால் சோர்ந்து போய் விடுகிறார்கள். இது செயல்படாது! நீ விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியால் அசைக்கப்படுவதற்கான உணர்வில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தேடுவதிலும் ஆராய்ந்து அறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீ பயிற்சி செய்யும் வழி சரியானதாக இல்லாமலும் காணப்படும். மேலும் சில சமயங்களில் உன் சொந்த நோக்கங்களும் எண்ணங்களும் தேவனுக்கு முன்பாக நிலைநிற்க முடியாது. ஆகவேதான், தேவ ஆவியால் உன்னை அசைக்க முடிவதில்லை. சிலவேளைகளில், தேவன் நீ உண்மை உள்ளவனா இல்லையா என்பதைக் காண்கின்றார். சுருக்கமாகக் கூறுவதென்றால், பயிற்சியில் நீ மிகுந்த விலைக்கிரயம் செலுத்த வேண்டும். உன் பயிற்சியில் நீ திசை மாற்றம் அடைவதாக உணர்ந்தால் ஜெபம் செய்யும் வழியை மாற்றி அமைக்கலாம். உத்தம இருதயத்துடன் அவரைத்தேடி அவரை அடைய ஏங்கும்பொழுது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னை இந்த உண்மைக்குள் நிச்சயமாகக் கொண்டு வருவார். சில சமயங்களில், நீ உத்தம இருதயத்துடன் ஜெபித்தும், குறிப்பாக நீ அசைக்கப்பட்டதாக உணர்வதில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் நீ விசுவாசத்தைச் சார்ந்திருந்து, தேவன் உன் ஜெபங்களைக் கவனிக்கிறார் என்று நம்ப வேண்டும். உன் ஜெபங்களில் விடாமுயற்சி வேண்டும்.

ஒரு நேர்மையான நபராக இருந்து, இருதயத்தில் உள்ள வஞ்சகத்திலிருந்து விடுபடத் தேவனிடம் ஜெபித்து, எல்லா நேரங்களிலும் ஜெபத்தின் மூலம் உன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள். தேவ ஆவியினால் அசைக்கப்பட்டு இருப்பாயாக. அப்பொழுது உன் மனநிலை படிப்படியாக மாறும். உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்பது ஜெப வாழ்க்கையாகும். அது பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்பட்டு இருக்கும் ஒரு வாழ்க்கையாகும். பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டு இருக்கிற செயல்முறை என்பது மனிதனின் மனநிலையில் உண்டான மாற்றத்தைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படாத வாழ்க்கை ஓர் ஆவிக்குரிய வாழ்க்கை அல்ல; மாறாக, அது ஒரு மதச் சடங்கு நிறைந்த ஒரு வாழ்க்கையாக மட்டுமே இருக்கும். அவ்வப்போது பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டிருக்கிறவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியினால் அறிவொளியையும், வெளிச்சத்தையும் அடைந்தவர்கள் மட்டுமே ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்து இருக்கிறார்கள். மனிதனின் மனநிலை அவன் ஜெபிக்கும்பொழுது தொடர்ந்து மாறுகிறது. எவ்வளவுக்கு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் அவனை அசைக்கிறாரோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் கிரியை செய்பவனாகவும், கீழ்ப்படிகிறவனாகவும் மாறுகிறான். ஆகவே, இப்படி அவன் இருதயம் படிப்படியாகச் சுத்தப்படுத்தப்பட்டு, அவன் மனநிலை படிப்படியாக மாறுகிறது. இதுவே உண்மையான ஜெபத்தின் பலன் ஆகும்.

முந்தைய: தேவன் மீதான உண்மையான அன்பு தானாகத் தோன்றுவது

அடுத்த: தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நோய் வரும்போது தேவனை நம்புவதற்கு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய 4 முக்கியமான பாதைகள்

“நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு மருத்துவரைக் கண்டுபிடிப்பதற்காக சுற்றித் திரியுங்கள்” என்ற சொற்றொடர், மக்கள்...

ஜெபம் செய்யும் முறை: கர்த்தரால் கேட்கப்படும்படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான 3 கோட்பாடுகள்

கர்த்தருடைய அங்கீகாரத்தைப் பெற ஜெபிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த 3 கொள்கைகளும் உங்கள் ஜெபங்களை தேவனின் விருப்பத்திற்கு இணங்கச் செய்யலாம்.

கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

பல கிறிஸ்தவர்கள் குழப்பமடைகிறார்கள்: தேவன் அன்பாயிருக்கிறார், அவர் சர்வ வல்லவர், அப்படியிருக்க அவர் ஏன் நம்மை துன்பப்படுவதற்கு...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக