தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்

இப்போது, நீங்கள் தேவனுடைய ஜனங்களாக மாறுவதை நாட வேண்டும் மற்றும் முழு பிரவேசத்தையும் சரியான பாதையில் தொடங்க வேண்டும். தேவனுடைய ஜனங்களாக இருப்பது என்பது, ராஜ்யத்தின் யுகத்திற்குள் பிரவேசிப்பதைக் குறிக்கிறது. இன்று, நீங்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் எதிர்கால ஜீவிதம் முன்பு இருந்ததைப் போலவே மந்தமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருப்பது நிறுத்தப்படும். அவ்வாறு ஜீவிப்பதால், தேவனால் எதிர்பார்க்கப்படும் தரங்களை அடைவது சாத்தியமற்றதாக இருக்கிறது. எந்த அவசரத்தையும் நீ உணரவில்லை என்றால், அது உன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான விருப்பம் உனக்கு இல்லை என்பதையும், உன் பின்தொடர்தல் குழப்பமானதாகவும் புரியாததாகவும் இருப்பதையும், தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதையும் காட்டுகிறது. ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது என்பது தேவனுடைய ஜனங்களின் ஜீவிதத்தைத் தொடங்குவதாகும்—இதுபோன்ற பயிற்சியை ஏற்க நீ தயாராக இருக்கிறாயா? அவசர உணர்வை உணர நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய ஒழுங்குபடுத்தலின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய சிட்சையின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் உன் மீது வந்து உன்னைச் சோதிக்கும்போது, நீ எவ்வாறு செயல்படுவாய்? எல்லா விதமான உண்மைகளையும் எதிர்கொள்ளும்போது நீ என்ன செய்வாய்? கடந்த காலத்தில், உங்கள் கவனம் ஜீவிதத்தில் இல்லை. இன்று, நீங்கள் ஜீவிதத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். இதைத்தான் ராஜ்யத்தின் ஜனங்கள் அடைய வேண்டும். தேவனுடைய ஜனங்களாகிய அனைவரும் ஜீவனைக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடைய ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். ராஜ்யத்தின் ஜனங்களிடம் தேவன் எதிர்பார்ப்பது இதுதான்.

ராஜ்யத்தின் ஜனங்களிடமான தேவனுடைய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு இருக்கின்றன:

1. அவர்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்க வேண்டும். அதாவது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையில் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்க வேண்டும்.

3. தங்கள் இருதயங்கள் தேவன் தொடும்படியாக அவர்கள் பின்பற்ற வேண்டும். உன் இருதயம் முழுவதுமாக தேவனிடமாய்த் திரும்பி, உனக்கு ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கும்போது, நீ விடுதலையின் உலகில் ஜீவிப்பாய், அதாவது தேவனுடைய அன்பின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் நீ ஜீவிப்பாய். நீ தேவனுடைய கவனிப்பிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்கும்போதுதான் நீ தேவனுக்குச் சொந்தமானவனாக இருப்பாய்.

4. அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும்.

5. அவர்கள் பூமியில் தேவனுடைய மகிமையின் ஒரு வெளிப்பாடாக மாற வேண்டும்.

இந்த ஐந்து காரியங்களும் உங்களுக்கான எனது ஆணைகளாக இருக்கின்றன. என் வார்த்தைகள் தேவனுடைய ஜனங்களிடம் பேசப்படுகின்றன. இந்த ஆணைகளை நீ ஏற்க விரும்பவில்லை என்றால், நான் உன்னை நிர்ப்பந்திக்க மாட்டேன்—ஆனால் நீ அவற்றை உண்மையாக ஏற்றுக்கொண்டால், உன்னால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியும். இன்று, நீங்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்கத் தொடங்குகிறீர்கள் மற்றும் ராஜ்யத்தின் ஜனங்களாக மாறுவதைத் தொடர நாடுகிறீர்கள், மேலும் ராஜ்யத்தின் ஜனங்களாக இருக்கத் தேவையான தரங்களை அடைகின்றீர்கள். இதுவே பிரவேசத்தின் முதல் படியாக இருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நீங்கள் முழுமையாகச் செய்ய விரும்பினால், இந்த ஐந்து ஆணைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை உன்னால் அடைய முடிந்தால், நீ தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருப்பாய் மற்றும் நிச்சயமாக தேவன் உன்னைப் பெரிதளவில் பயன்படுத்துவார். இன்று முக்கியமானது என்னவென்றால், ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது தான். ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது ஆவிக்குரிய ஜீவிதத்தை உள்ளடக்கியது. முன்னதாக, ஆவிக்குரிய ஜீவிதத்தைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை, ஆனால் இன்று, நீங்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகையில், நீங்கள் அதிகாரப்பூர்வமாக ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிக்கிறீர்கள்.

ஆவிக்குரிய ஜீவிதம் எத்தகைய ஜீவிதம்? ஆவிக்குரிய ஜீவிதம் என்பது உன் இருதயம் முழுவதுமாக தேவனிடம் திரும்பியிருக்கிறதும், தேவனுடைய அன்பைக் கவனத்தில் கொள்ள முடியும் என்பதும் ஆகும். இது, தேவனுடைய வார்த்தைகளில் நீங்கள் ஜீவிப்பதும், வேறு எதுவும் உங்கள் இருதயத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதும், இன்று நீங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் இன்று வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதும் ஆகும். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான அத்தகைய ஜீவிதமே ஆவிக்குரிய ஜீவிதமாக இருக்கிறது. இன்றைய ஒளியை உன்னால் பின்பற்ற முடியவில்லை என்றால், தேவனுடனான உன் உறவில் ஓர் இடைவெளி உருவாகி உள்ளது—அது துண்டிக்கப்பட்டிருக்கலாம்—மேலும் நீ இயல்பான ஆவிக்குரிய ஜீவிதம் இல்லாமல் இருக்கிறாய். தேவனுடனான ஓர் இயல்பான உறவு என்பது இன்று தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கான அஸ்திபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உன்னிடம் இயல்பான ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கிறதா? உன்னிடம் தேவனுடனான இயல்பான உறவு இருக்கிறதா? நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுகிறவனா? இன்று நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றவும், தேவனுடைய சித்தத்தை அவருடைய வார்த்தைகளுக்குள் புரிந்துகொள்ளவும், இந்த வார்த்தைகளில் பிரவேசிக்கவும் முடிந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தைப் பின்பற்றுகிற ஒருவராக இருக்கிறீர்கள். நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தைப் பின்பற்றவில்லை என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி சத்தியத்தைப் பின்பற்றாத ஒருவனாக நீ இருக்கிறாய். தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் செயல்பட வாய்ப்பேயில்லை, இதன் விளைவாக, அத்தகையவர்களால் ஒருபோதும் தங்கள் பெலனை வரவழைத்துக் கொள்ள முடியாது மற்றும் அவர்கள் எப்போதும் செயலற்றவர்களாக இருப்பார்கள். இன்று, நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தைப் பின்பற்றுகிறாயா? நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தில் இருக்கிறாயா? நீ ஒரு செயலற்ற நிலையில் இருந்து வெளிவந்திருக்கிறாயா? இன்று, தேவனுடைய வார்த்தைகளை நம்புகிற அனைவரும், தேவனுடைய கிரியையை அஸ்திபாரமாக எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றுகிற அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தில் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையானவை மற்றும் சரியானவை என்று நீ நம்பினால், தேவன் எதைச் சொன்னாலும் அவருடைய வார்த்தைகளை நீ நம்பினால், நீ தேவனுடைய கிரியைக்குள் பிரவேசிப்பதை நாடும் ஒருவனாக இருக்கிறாய், இவ்வாறு நீ தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறாய்.

பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தினுள் பிரவேசிக்க, நீங்கள் தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்க வேண்டும், முதலில் உங்கள் செயலற்ற நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் கூட்டத்தைப் பின்தொடர்கிறார்கள், அவர்களுடைய இருதயங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. அத்தகையவர்களுக்குத் தங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமில்லை, மேலும் அவர்கள் பின்பற்றும் தரங்களும் மிகவும் தரம் தாழ்ந்தவை. தேவனை நேசிப்பதில் உள்ள பின்தொடர்தலும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதும் மட்டுமே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்த தங்கள் மனசாட்சியை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் உள்ளனர், ஆனால் அது தேவனுடைய சித்தத்தைப் பூர்த்தி செய்யாது. நீ பின்பற்றும் தரநிலைகள் எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, அவ்வளவாக அது தேவனுடைய சித்தத்திற்கு உகந்ததாக இருக்கும். இயல்பானவராகவும், தேவனுக்கான அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிக பாக்கியவான்கள் யாரும் இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள், ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்த ஜனக்கூட்டத்தால் மட்டுமே, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதத்தை ஜீவிக்க முடிகிறது: பூமியில் வேறு எவராலும் அத்தகைய மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள், தேவனால் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும், தேவன் உங்களிடம் அன்பு காட்டியிருக்கிறார் என்பதால், நீங்கள் உண்மையான ஜீவிதத்தைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், மற்றும் மிக உயர்ந்த மதிப்புள்ள ஜீவிதத்தை எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். இது உங்களது பின்தொடர்தல் நல்லதாக இருப்பதால் அல்ல, ஆனால் தேவனுடைய கிருபையால் அவ்வாறு இருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தவர் தேவன், உங்கள் இருதயத்தைத் தொட்டவர் தேவனுடைய ஆவியானவர் மற்றும் அவருக்கு முன்பாக வருவதற்கான நல்ல அதிர்ஷ்டத்தை அவரே உங்களுக்குத் தருகிறார். தேவனுடைய ஆவி உங்களை பிரகாசிப்பித்திருக்கவில்லை என்றால், உங்களால் தேவனைப் பற்றிய அழகான காரியங்களைக் காண இயலாது மற்றும் தேவனை நேசிப்பதும் உங்களுக்கு சாத்தியமற்றதாகும். தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுடைய இருதயங்களைத் தொட்டதால் மட்டுமே அவர்களுடைய இருதயங்கள் தேவனிடம் திரும்பியுள்ளன. சில நேரங்களில், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்கும்போது, உங்கள் ஆவி தொடப்படுகிறது, தேவனை நேசிப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகவும், உங்களுக்குள் பெரும் பெலன் இருப்பதாகவும், நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாத எதுவும் இல்லை என்பதாகவும் நீங்கள் உணர்கிறீர்கள். நீ இப்படி உணர்ந்தால், நீ தேவனுடைய ஆவியால் தொடப்பட்டிருக்கிறாய், உன் இருதயம் முற்றிலுமாக தேவனிடம் திரும்பிவிட்டது. “தேவனே! நாங்கள் உண்மையிலேயே உம்மால் முன்குறிக்கப்பட்டு தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம். உமது மகிமை எனக்குப் பெருமையைத் தருகிறது, மற்றும் உம் ஜனங்களில் ஒருவனாக இருப்பது எனக்கு மகிமையைத் தருகிறது. உமது சித்தத்தைச் செய்ய நான் எதையும் செலவழிப்பேன் மற்றும் எதையும் கொடுப்பேன் மற்றும் என் வருடங்கள் மற்றும் என் ஜீவ கால முயற்சிகள் அனைத்தையும் உமக்காக அர்ப்பணிப்பேன்,” என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்வாய். நீ இப்படி ஜெபிக்கும்போது, தேவனுக்கான முடிவில்லாத அன்பும், உண்மையானக் கீழ்ப்படிதலும் உன் இருதயத்தில் இருக்கும். இது போன்ற ஒரு அனுபவம் எப்போதாவது உனக்கு இருந்திருக்கிறதா? ஜனங்கள் அடிக்கடி தேவனுடைய ஆவியானவரால் தொடப்படும்போது, அவர்கள் குறிப்பாகத் தங்கள் ஜெபங்களில் தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள்: “தேவனே! உமது மகிமையின் நாளைக் காண நான் விரும்புகிறேன், மேலும் நான் உமக்காக ஜீவிக்க விரும்புகிறேன்—உமக்காக ஜீவிப்பதை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ இல்லை, மற்றும் சாத்தானுக்காகவும் மாம்சத்துக்காகவும் ஜீவிக்க எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. இன்று உமக்காக ஜீவிக்க எனக்கு உதவுவதன் மூலம் நீர் என்னை உயர்த்துகிறீர்.” நீ இவ்வாறு ஜெபித்தவுடன், உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும், தேவனைப் பெற வேண்டும் என்றும், நீங்கள் ஜீவனுடன் இருக்கும்போது தேவனைப் பெறாமல் இறப்பதை வெறுக்கிறீர்கள் என்றும் நீங்கள் உணருவீர்கள். அத்தகைய ஜெபத்தை ஏறெடுத்தப் பிறகு, உங்களுக்குள் ஒரு சோர்வடையாத பெலன் இருக்கும், மேலும் அது எங்கிருந்து வருகிறது என்பது உனக்குத் தெரியாது. உன் இருதயத்தில் எல்லையற்ற வல்லமை இருக்கும் மற்றும் தேவன் மிகவும் அழகானவர், அவர் நேசிக்கத் தகுந்தவர் என்பதையும் நீ உணர்வாய். அப்போதுதான் நீங்கள் தேவனால் தொடப்பட்டிருப்பீர்கள். அத்தகைய அனுபவத்தைப் பெற்ற அனைவருமே தேவனால் தொடப்பட்டிருக்கிறார்கள். தேவனால் அடிக்கடி தொடப்படுவோருக்கு, அவர்களுடைய ஜீவிதத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவர்களால் தீர்மானத்தை எடுக்க முடிகிறது மற்றும் அவர்கள் தேவனை முழுமையாக அடையத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இருதயங்களில் தேவன் மீதுள்ள அன்பு வலுவாக இருக்கிறது. அவர்களுடைய இருதயங்கள் முழுமையாகத் தேவனிடம் திரும்பியுள்ளன, குடும்பம், உலகம், சிக்கல்கள் அல்லது தங்கள் எதிர்காலம் ஆகியவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை மற்றும் அவர்கள் ஜீவகாலம் முழுவதும் தங்கள் முயற்சிகளை தேவனுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரால் தொடப்பட்டிருக்கிற அனைவரும் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.

உன் இருதயத்தை தேவனிடம் திருப்பியிருக்கிறாயா? தேவனுடைய ஆவியானவரால் உன் இருதயம் தொடப்பட்டிருக்கிறதா? நீ ஒருபோதும் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை என்றால், நீ ஒருபோதும் அவ்வாறு ஜெபிக்கவில்லை என்றால், உன் இருதயத்தில் தேவனுக்கு இடமில்லை என்பதை அது காட்டுகிறது. தேவனுடைய ஆவியானவரால் வழிநடத்தப்படுபவர்களும், தேவனுடைய ஆவியானவரால் தொடப்பட்டவர்களும் தேவனுடைய கிரியையைக் கொண்டிருக்கிறார்கள். இது தேவனுடைய வார்த்தைகளும் தேவனுடைய அன்பும் அவர்களுக்குள் வேரூன்றியிருப்பதைக் காட்டுகிறது. “நான் என் ஜெபங்களில் உன்னைப் போல அக்கறையுள்ளவனல்ல, தேவனால் நான் தொடப்பட்டவனுமல்ல. சில நேரங்களில் நான் தியானித்து ஜெபிக்கும்போது, தேவன் அழகானவர் என்று உணர்கிறேன், என் இருதயம் தேவனால் தொடப்படுகிறது,” என்று சிலர் சொல்லுகிறார்கள். மனிதனுடைய இருதயத்தை விட வேறு எதுவும் முக்கியமில்லை. உன் இருதயம் தேவனிடம் திரும்பியதும், உன் முழு ஜீவிதமும் தேவனிடம் திரும்பியிருக்கும், மேலும் அந்த நேரத்தில் உன் இருதயம் தேவ ஆவியானவரால் தொடப்பட்டிருக்கும். உங்களில் பெரும்பாலானோர் அத்தகைய அனுபவத்தைக் கொண்டிருக்கிறீர்கள்—உங்கள் ஒவ்வொருவரின் அனுபவங்களின் ஆழங்கள்தான் ஒரே மாதிரியானதாக இல்லை. சிலர் சொல்கிறார்கள்: “நான் ஜெபத்தில் பல வார்த்தைகளைச் சொல்வதில்லை, வெறுமனே மற்றவர்களின் ஐக்கியத்துக்கு நான் செவிசாய்க்கின்றேன் மற்றும் பெலன் எனக்குள் எழுகிறது.” நீ தேவனால் உனக்குள்ளே தொடப்பட்டுள்ளாய் என்பதை இது காட்டுகிறது. தேவனால் தங்களுக்குள்ளே தொடப்பட்டவர்கள் மற்றவர்களின் ஐக்கியத்தைக் கேட்கும்போது ஈர்க்கப்படுகிறார்கள். எழுச்சியூட்டும் வார்த்தைகளைக் கேட்கும்போது ஒரு மனிதனுடைய இருதயம் முற்றிலுமாக அசையாமல் இருந்தால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களுக்குள் இல்லை என்பதை அது நிரூபிக்கிறது. அவர்களுக்குள் எந்த ஏக்கமும் இல்லை, இது அவர்களிடம் எந்தத் தீர்மானமும் இல்லை என்பதை நிரூபிக்கிறது, இதனால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருக்கின்றனர். ஒரு மனிதன் தேவனால் தொடப்பட்டிருந்தால், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது அவனிடம் எதிர்வினை ஏற்படும். அவர்கள் தேவனால் தொடப்படாவிட்டால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் ஈடுபடவில்லை, அவற்றுடன் எந்த தொடர்பும் அவர்களுக்கு இல்லை, மற்றும் அவர்களால் பிரகாசிப்பிக்கப்பட இயலாது. தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டவர்களும், எதிர்வினையாற்றாதவர்களும் தேவனால் தொடப்படாதவர்களாக இருக்கிறார்கள்—அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருப்பவர்கள். புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அனைவரும் தொடப்பட்டிருக்கிறார்கள் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறார்கள்.

உன்னை நீயே அளவிடு:

1. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் மத்தியில் நீ இருக்கிறாயா?

2. உன் இருதயம் தேவனிடம் திரும்பியிருக்கிறதா? நீ தேவனால் தொடப்பட்டிருக்கிறாயா?

3. தேவனுடைய வார்த்தைகள் உனக்குள் வேரூன்றியிருக்கின்றனவா?

4. உன் நடைமுறை தேவனுடைய எதிர்பார்ப்புகளுடைய அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறதா?

5. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியின் வழிகாட்டுதலின் கீழ் நீ ஜீவிக்கிறாயா?

6. உன் இருதயம் பழைய கருத்துக்களால் ஆளப்படுகிறதா, அல்லது இன்றைய தேவனுடைய வார்த்தைகளால் ஆளப்படுகிறதா?

இந்த வார்த்தைகளைக் கேட்கையில், உங்களுக்குள் என்ன எதிர்வினை இருக்கிறது? இத்தனை ஆண்டுகளாக நம்பிய நிலையில், தேவனுடைய வார்த்தைகள் உங்கள் ஜீவிதமாக இருக்கிறதா? உன் முந்தைய, சீர்கேடான மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இன்று, தேவனுடைய வார்த்தைகளின்படி, ஜீவனைக் கொண்டிருப்பதென்றால் என்ன, ஜீவன் இல்லாமல் இருப்பதென்றால் என்னவென்று நீ அறிந்துள்ளாயா? இது உங்களுக்குத் தெளிவாக இருக்கிறதா? தேவனைப் பின்தொடர்வதில் பிரதானமான முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய தேவனுடைய வார்த்தைகளின்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதே: நீங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை அல்லது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைப் பின்தொடர்ந்தாலும், எல்லாம் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நீ பேசுவதும் பின்பற்றுவதும் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியனாகவும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முற்றிலுமாக இழந்தவனாகவும் இருக்கிறாய். தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களை தேவன் விரும்புகிறார். நீ முன்பு புரிந்துகொண்டது எவ்வளவு அற்புதமானதாக மற்றும் தூய்மையானதாக இருந்தாலும், தேவன் அதை விரும்புவதில்லை. இதுபோன்ற விஷயங்களை உன்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் உன் பிரவேசத்துக்கு அவை மிகப்பெரிய தடையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியைப் பின்பற்றக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். கடந்த கால ஜனங்களும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர், ஆனாலும் அவர்களால் இன்று வரை பின்பற்ற முடியவில்லை. இது கடைசி நாட்களின் ஜனங்களுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றக்கூடியவர்கள், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்கள், அதாவது தேவன் அவர்களை வழிநடத்தும் இடங்களிலெல்லாம் அவற்றைப் பின்பற்றுகிறவர்கள்—இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் கிரியையில் பிரவேசித்திருக்கவில்லை, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர்களுடைய துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவர்கள் எவ்வளவாக ஓடுகிறார்கள் என்றாலும், இவை எதுவும் தேவனுக்கு ஒரு பொருட்டாகாது மேலும் அவர் அவர்களைப் பாராட்ட மாட்டார். இன்று, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருக்கிறார்கள். இன்று தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியர்களாக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்லும் ஊழியம் என்பது மாம்சத்திற்கும் கருத்துகளுக்கும் உரிய ஊழியமாகும் மற்றும் அது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பதற்கு சாத்தியமில்லை. ஜனங்கள் மதக் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவித்தால், அவர்களால் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற எதையும் செய்ய இயலாது மற்றும் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்தாலும், அவர்கள் கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நடுவே ஊழியம் செய்கிறார்கள் மற்றும் அவர் சித்தத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய அவர்களால் ஒருபோதும் இயலாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு தேவனுடைய சித்தம் புரிவதில்லை, தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது. தேவன் தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கும் ஊழியத்தை விரும்புகிறார். கருத்துக்கள் மற்றும் மாம்சத்துக்குரிய ஊழியத்தை அவர் விரும்புவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் படிகளைப் பின்பற்ற ஜனங்களால் இயலாது என்றால், அவர்கள் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள். அத்தகையவர்களின் ஊழியம் குறுக்கிட்டு, தொந்தரவு செய்கிறது, மேலும் அத்தகைய ஊழியம் தேவனுக்கு முரணாக இயங்குகிறது. இவ்வாறு தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய இயலாது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்கள் நிச்சயமாக தேவனை எதிர்க்கிறார்கள் மற்றும் அவர்களால் தேவனுடன் ஒத்துப்போக இயலாது. இன்று தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், தேவனுடைய தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடிவதும், இன்றைய தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற முடிவதும், தேவனுடைய புதிய வார்த்தைகளுக்கு ஏற்ப பிரவேசிப்பதும் என இவை “பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுதல்” என்பதன் அர்த்தமாகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றி பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருப்பவன் இவன்தான். அத்தகையவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெறுவது, தேவனைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களால் தேவனுடைய சமீபத்திய கிரியைகளிலிருந்து தேவனுடைய மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கீழ்ப்படியாமை மற்றும் மனிதனுடைய சுபாவம் மற்றும் சாராம்சம் ஆகியவற்றை அவருடைய சமீபத்திய கிரியையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் தங்கள் ஊழியத்தின் போது படிப்படியாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும். இது போன்றவர்கள் மட்டுமே தேவனை அடையக்கூடியவர்கள் மற்றும் உண்மையான வழியை உண்மையாகக் கண்டுபிடித்தவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் புறம்பாக்கப்பட்டவர்கள் தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பின்பற்றத் தகுதியற்றவர்கள் மற்றும் தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள். அத்தகையவர்கள் தேவனை வெளிப்படையாக எதிர்ப்பது தேவன் புதிய கிரியையைச் செய்ததாலும், தேவனுடைய உருவம் அவர்களுடைய கருத்துக்களில் இருப்பதைப் போன்றதல்ல என்பதாலும் தான்—இதன் விளைவாக, அவர்கள் பகிரங்கமாக தேவனை எதிர்க்கிறார்கள், தேவன் மீது நியாயத்தீர்ப்பை வழங்குகிறார்கள். இதனால் தேவன் அவர்களை வெறுக்கிறார் மற்றும் நிராகரிக்கிறார். தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பது எளிதான விஷயம் அல்ல, ஆனால் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதற்கும் தேவனுடைய கிரியையைத் தேடுவதற்கும் ஜனங்களுக்கு மனமிருந்தால், தேவனைப் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய வழிகாட்டுதலைப் பெற வாய்ப்பு கிடைக்கும். தேவனுடைய கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களால் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தையோ அல்லது தேவனுடைய வழிகாட்டலையோ பெற முடியாது. ஆகவே, தேவனுடைய சமீபத்திய கிரியையை ஜனங்கள் பெற முடியுமா இல்லையா என்பது தேவனுடைய கிருபையைப் பொறுத்தது, அவர்களுடைய பின்தொடர்தலைப் பொறுத்தது மற்றும் அவர்களுடைய நோக்கங்களைப் பொறுத்தது.

பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் அல்லது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் எவ்வாறு கிரியை செய்தார் என்பது முக்கியமல்ல, தேவனுடைய சமீபத்திய கிரியையை அடைந்த அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர், மற்றும் இன்றைய சமீபத்திய கிரியையைப் பின்பற்ற முடியாதவர்கள் புறம்பாக்கப்படுகிறார்கள். புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களை தேவன் விரும்புகிறார், மேலும் அவருடைய சமீபத்திய கிரியைகளை ஏற்றுக்கொண்டு அறிந்தவர்களை அவர் விரும்புகிறார். நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாக இருக்க வேண்டும் என்று ஏன் கூறப்படுகிறது? ஒரு கற்புள்ள கன்னிகையால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவும், புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், மேலும், பழைய கருத்துக்களை ஒதுக்கி வைத்து, இன்றைய தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படியவும் முடிகிறது. இன்றைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும் இந்த ஜனக்கூட்டம், யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே முன்குறிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் ஜனங்களுள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் தேவனுடைய சத்தத்தை நேரடியாகக் கேட்கிறீர்கள், தேவனுடைய தோற்றத்தைக் காண்கிறீர்கள். ஆகவே, வானம் பூமி முழுவதுமாக, யுகங்கள் முழுவதுமாக, இந்த ஜனக்கூட்டமான உங்களைவிட வேறு எவரும் ஆசீர்வதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் தேவனுடைய கிரியை காரணமாகவும், தேவனுடைய முன்குறித்தல் மற்றும் தேர்வு காரணமாகவும், தேவனுடைய கிருபையின் காரணமாகவும் இருக்கின்றன. தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசவில்லை, சொல்லவில்லை என்றால், உங்கள் நிலைமைகள் இன்று இருப்பது போல் இருக்க முடியுமா? ஆகவே, எல்லா மகிமையும் துதியும் தேவனுக்கே உரியதாகட்டும், ஏனென்றால் இவை அனைத்தும் தேவன் உங்களை உயர்த்துவதால்தான். இந்த விஷயங்களை மனதில் கொண்ட பின்பும் உன்னால் செயலற்றவனாக இருக்க முடியுமா? இன்னும் உன் பெலனால் எழும்ப முடியவில்லையா?

தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, அடி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, மேலும், தேவனுடைய ஆணைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது, இது நீ சிட்சிக்கப்படும்போது மிகவும் துன்பப்படக்கூடாது என்பதற்காக யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. உங்களில் செய்யப்பட்டுள்ள கிரியையையும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் யாராலும் பறிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் எவரும் பறிக்க முடியாது. மத ஜனங்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. நீங்கள் வேதாகமத்தில் பெரிய நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்லர், மதக் கோட்பாட்டில் வல்லவர்கள் அல்லர், ஆனால் தேவன் உங்களுக்குள் கிரியை செய்ததால், யுகங்கள் முழுவதிலும் உள்ள அனைவரையும்விட நீங்கள் அதிகமாக அடைந்திருக்கிறீர்கள்—ஆகவே இது உங்களுக்கான மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதன் காரணமாக, நீங்கள் தேவனிடம் இன்னும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவனிடம் இன்னும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். தேவன் உன்னை எழுப்புவதால், நீ உன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய ஆணைகளை ஏற்றுக்கொள்ள உன் வளர்ச்சியை ஆயத்தம் செய்ய வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த நிலையில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராக மாறப் பின்தொடர வேண்டும், ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் இறுதியில் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாற வேண்டும். இந்தத் தீர்மானங்கள் உன்னிடம் இருக்கின்றனவா? அத்தகைய தீர்மானங்கள் உன்னிடம் இருந்தால், இறுதியில் நீ தேவனால் நிச்சயமாக ஆதாயப்படுத்தப்படுவாய் மற்றும் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவாய். பிரதானமான ஆணையானது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவதே என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.

இன்றைய பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் இயங்குவியல் ஆகும், மேலும் இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கான பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான பிரகாசம் என்பது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு என்னவாக இருக்கிறது? இது இன்று தேவனுடைய கிரியையிலும், ஒரு இயல்பான ஆவிக்குரிய ஜீவிதத்திலும் ஜனங்களை தலைமையேற்று நடத்துவதாகும். ஓர் இயல்பான ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கு பல படிகள் உள்ளன:

1. முதலில், நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் உன் இருதயத்தை ஊற்ற வேண்டும். நீ கடந்த காலங்களின் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றக்கூடாது, அவற்றைப் படிக்க அல்லது இன்றைய வார்த்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் உன் இருதயத்தை முழுமையாக ஊற்ற வேண்டும். இன்று தேவனுடைய வார்த்தைகளை, ஆவிக்குரிய புத்தகங்களை அல்லது கடந்த காலத்தில் பிரசங்கிக்கப்பட்ட பிற விவரங்களை இன்னும் படிக்க விரும்பும் ஜனங்களும் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைப் பின்பற்றாதவர்களும் இருந்தால், அவர்களே ஜனங்களில் மிகவும் முட்டாள்தனமானவர்கள். அத்தகையவர்களை தேவன் வெறுக்கிறார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் ஒளியை ஏற்கத் தயாராக இருந்தால், இன்று உன் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றிவிடு. நீ அடைய வேண்டிய முதல் விஷயம் இதுதான்.

2. இன்று தேவன் பேசும் வார்த்தைகளுடைய அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ ஜெபிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளில் பிரவேசிக்க வேண்டும் மற்றும் தேவனோடு உரையாட வேண்டும் மற்றும் நீ எந்தத் தரங்களை அடைய விரும்புகிறாய் என்பதை நிலைநாட்டி உன் தீர்மானங்களை தேவனுக்கு முன்பாகச் செய்ய வேண்டும்.

3. பரிசுத்த ஆவியானவரின் இன்றைய கிரியையின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீங்கள் சத்தியத்தினுள் ஆழமாகப் பிரவேசிப்பதைப் பின்தொடர வேண்டும். கடந்த காலத்தின் காலாவதியான வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பிடித்துக் கொள்ளாதீர்கள்.

4. நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட நாட வேண்டும், தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

5. இன்று பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதையில் நீங்கள் பிரவேசிப்பதைப் பின்தொடர வேண்டும்.

பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுகிறதை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள்? தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் ஜீவிப்பதும், தேவனுடைய எதிர்பார்ப்புகளின் அஸ்திபாரத்தில் ஜெபிப்பதுமே முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன. இவ்வாறு ஜெபித்ததால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொடுவார். இன்று தேவன் பேசின வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ நாடவில்லை என்றால், அது பயனற்றதாக இருக்கும். “தேவனே! நான் உம்மை எதிர்க்கிறேன், நான் உமக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்; நான் மிகவும் கீழ்ப்படியாதவன் மற்றும் என்னால் உம்மை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. தேவனே, நீர் என்னை இரட்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், கடைசிவரையில் உமக்கு ஊழியம் செய்ய நான் விரும்புகிறேன். உமக்காக மரிக்க நான் விரும்புகிறேன். நீர் என்னை நியாயந்தீர்த்து, என்னை சிட்சியும், எனக்கு எந்தப் புகாரும் இல்லை. நான் உம்மை எதிர்க்கிறேன் எனவே நான் இறப்பதற்குத் தகுதியானவன், அதனால் என் மரணத்தில் உமது நீதியுள்ள மனநிலையை எல்லா ஜனங்களும் காணக்கூடும்,” என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு நீ உன் இருதயத்திலிருந்து ஜெபிக்கும்போது, தேவன் உனக்குச் செவிகொடுப்பார் மற்றும் உனக்கு வழிகாட்டுவார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் ஜெபிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தொடுவதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. நீ தேவனுடைய சித்தத்தின்படியும், இன்று தேவன் செய்ய வாஞ்சையாய் இருப்பதன் அடிப்படையிலும் ஜெபித்தால், நீ சொல்வாய்: “தேவனே! உமது ஆணைகளை ஏற்றுக் கொள்ளவும், உமது ஆணைகளுக்கு உண்மையாக இருக்கவும் நான் விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதையும் உமது மகிமைக்காக அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன், இதனால் நான் செய்யும் சகல காரியங்களிலும் என்னால் தேவனுடைய ஜனங்களுடைய தரங்களை அடைய முடியும். என் இருதயம் உம்மால் தொடப்படட்டும். உம்முடைய ஆவியானவர் எப்பொழுதும் என்னைப் பிரகாசிப்பிக்க வேண்டும் என்றும், நான் செய்யும் சகல காரியங்களிலும் சாத்தானுக்கு அவமானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இறுதியில் உம்மால் நான் ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.” நீ இவ்வாறு ஜெபித்தால், தேவனுடைய சித்தத்தை மையமாகக் கொண்ட வழியில் ஜெபித்தால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாய் உன்னில் கிரியை செய்வார். உன் ஜெபங்களின் வார்த்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்பது முக்கியமல்ல—தேவனுடைய சித்தத்தை நீ புரிந்துகொள்கிறாயா இல்லையா என்பதே முக்கியம். உங்கள் அனைவருக்கும் பின்வரும் அனுபவம் இருந்திருக்கலாம்: சில நேரங்களில், ஒரு கூட்டத்தில் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் இயங்குவியல் உச்சத்தை எட்டுகிறது, இதனால் அனைவரின் பெலனும் உயருகிறது. சிலர் ஜெபிக்கும்போது மிகவும் அதிகமாக அழுகிறார்கள் மற்றும் கண்ணீர் விடுகிறார்கள், தேவனுக்கு முன்பாக மனஸ்தாபம் கொள்கிறார்கள், சிலர் தங்கள் தீர்மானத்தைக் காட்டுகிறார்கள் மற்றும் பொருத்தனைகள் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் அடைய வேண்டிய விளைவு இதுதான். இன்று, எல்லா ஜனங்களும் தங்கள் இருதயங்களை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவது முக்கியம். முன்பு பேசிய வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டாம். நீ இன்னும் முன்பு வந்ததையே பிடித்துக் கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்பட மாட்டார். இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காண்கிறாயா?

இன்று, பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மேலே உள்ள பல காரியங்கள் பரிசுத்த ஆவியானவரால் இன்றும் எதிர்காலத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியவையாகும். அவை பரிசுத்த ஆவியானவரால் எடுக்கப்பட்ட பாதைகளாக இருக்கின்றன. அவை மனிதனால் பின்தொடர வேண்டிய பிரவேசமாக இருகின்றன. ஜீவனுக்குள் நீங்கள் பிரவேசிக்கும் போது, குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளுக்குள் ஊற்ற வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளும் திறனிருக்க வேண்டும். உங்கள் இருதயம் தேவனுக்காக ஏங்க வேண்டும், நீங்கள் சத்தியத்தில் ஆழமான பிரவேசத்தை மற்றும் தேவனால் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களையும் பின்பற்றுவதற்காக ஏங்க வேண்டும். நீ இந்த பெலனைக் கொண்டிருக்கும்போது, நீ தேவனால் தொடப்பட்டிருக்கிறாய் மற்றும் உன் இருதயம் தேவனிடம் திரும்பத் தொடங்கியிருக்கிறது என்பவற்றை இது காட்டுகிறது.

ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான முதல் படியானது உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவதாகும், இரண்டாவது படியானது பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்ளுவதாகும். பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் அடைய வேண்டிய விளைவு என்னவாக இருக்கிறது? இது மிகவும் ஆழமான உண்மைக்காக ஏங்க, அதைத் தேட, ஆராய முடிவதும், தேவனுடன் நேர்மறையான முறையில் ஒத்துழைக்கும் திறனுடன் இருப்பதுமாகும். இன்று, நீங்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறீர்கள், அதாவது உங்கள் பின்தொடர்தலுக்கு, உங்கள் ஜெபங்களுக்கு மற்றும் தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் தொடர்புகொள்வதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது, மேலும் தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள், இதுவே நீங்கள் தேவனுடன் ஒத்துழைப்பதாகும். தேவனைக் கிரியை செய்ய அனுமதிப்பதைப் பற்றி மட்டுமே நீ பேசி, ஆனால் நீ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஜெபிக்கவோ தேடவோ இல்லை என்றால், இதை ஒத்துழைப்பு என்று அழைக்க முடியுமா? உங்களிடம் ஒத்துழைப்பின் எந்த தடயமும் இல்லாமல் மற்றும் ஒரு குறிக்கோளைக் கொண்ட பிரவேசத்துக்கான நடைமுறை இல்லாமல் இருக்கிறது என்றால், நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதாகும். “எல்லாம் தேவனுடைய முன்குறித்தலைப் பொறுத்தது. இவை அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன. தேவன் அதைச் செய்யவில்லை என்றால், மனிதனால் எப்படி அது சாத்தியமாகும்?” என்று சிலர் சொல்கிறார்கள். தேவனுடைய கிரியை இயல்பானது, சிறிதளவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, மற்றும் உன் உற்சாகமுள்ள தேடுதல் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார், ஏனென்றால், தேவன் மனிதனை நிர்பந்திப்பதில்லை—தேவன் கிரியை செய்ய அவருக்கு நீ வாய்ப்பளிக்க வேண்டும், நீ பின்தொடரவில்லை அல்லது பிரவேசிக்கவில்லை என்றால், மற்றும் உன் இருதயத்தில் சிறிதளவு ஏக்கமும் இல்லை என்றால், கிரியை செய்ய தேவனுக்கு வாய்ப்பில்லை. தேவனால் தொடப்படும்படிக்கு நீங்கள் எந்தப் பாதையினால் தேட முடியும்? ஜெபத்தின் மூலமாக, தேவனிடம் நெருங்கி வருவதால் மட்டுமே அது முடியும். ஆனால் மிக முக்கியமாக, அது தேவன் பேசும் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீ அடிக்கடி தேவனால் தொடப்படும்போது, நீ மாம்சத்தால் அடிமைப்படுத்தப்படுவதில்லை: கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் பணம் ஆகிய அவை அனைத்தும் உன்னை விலங்கிட முடியாது மற்றும் நீ சத்தியத்தைப் பின்பற்றவும், தேவனுக்கு முன்பாக ஜீவிக்கவும் மட்டுமே விரும்புவாய். இந்த நேரத்தில், நீ சுதந்திர உலகில் ஜீவிக்கும் ஒருவனாக இருப்பாய்.

முந்தைய: ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து

அடுத்த: தங்கள் மனநிலையில் மாற்றம் அடைந்தவர்களே தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பவர்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக