தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (1)
யோவான் இயேசுவுக்காக ஏழு ஆண்டுகள் கிரியை செய்தான், மேலும் இயேசு வந்திறங்கியபோது அவன் ஏற்கனவே அவருக்குப் பாதையை ஆயத்தப்படுத்தியிருந்தான். இதற்கு முன்பு, யோவான் பிரசங்கித்த பரலோகராஜ்யத்தின் சுவிசேஷமானது தேசமெங்கும் கேட்டது, அது யூதேயா முழுவதும் பரவியது, மேலும் எல்லோரும் அவனை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்தனர். அந்த நேரத்தில், ஏரோது ராஜா யோவானைக் கொல்ல விரும்பினான், ஆனாலும் அவனுக்கு தைரியமில்லை, ஏனென்றால் ஜனங்கள் யோவானை உயர்வாகக் கருதினார்கள், யோவானைக் கொன்றால் அவர்கள் தனக்கு எதிராகக் கலகம் செய்வார்கள் என்று ஏரோது அஞ்சினான். யோவான் செய்த கிரியை சாமானிய ஜனங்களிடையே வேரூன்றியது, மேலும் அவன் யூதர்களையும் விசுவாசிக்க வைத்தான். இயேசு தன்னுடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய காலம் வரை ஏழு ஆண்டுகள் அவன் இயேசுவுக்குப் பாதையை ஆயத்தப்படுத்தினான். இந்தக் காரணத்திற்காக, எல்லா தீர்க்கதரிசிகளிலும் யோவான் மிகப் பெரியவனாக இருந்தான். யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர்தான் இயேசு தனது அதிகாரப்பூர்வ கிரியையைத் தொடங்கினார். யோவானுக்கு முன்பு, தேவனுக்குப் பாதையை ஆயத்தப்படுத்த ஒரு தீர்க்கதரிசி இருந்ததில்லை, ஏனென்றால் இயேசுவுக்கு முன்பு, தேவன் ஒருபோதும் மாம்சமாக மாறவில்லை. ஆகவே, யோவான் வரை எல்லா தீர்க்கதரிசிகளிலும், மனுஷனாக அவதரித்த தேவனுக்கு அவன் மட்டுமே பாதையை ஆயத்தப்படுத்தினான், இவ்விதமாகவே, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் யோவான் மிகப் பெரிய தீர்க்கதரிசியானான். இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு யோவான் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பத் தொடங்கினான். ஜனங்களுக்கு, அவன் செய்த கிரியை இயேசுவின் அடுத்தடுத்த கிரியைகளுக்கும் மேலானதாகத் தோன்றியது, ஆனாலும் அவன் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே. அவன் கிரியை செய்ததும், பேசியதும் ஆலயத்தில் அல்ல, அதற்கு வெளியே உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும்தான். யூத தேசத்தின் ஜனங்களிடையே, குறிப்பாக வறிய நிலையில் இருந்தவர்களிடையே அவன் இதைச் செய்தான். யோவான் சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ளவர்களுடன் அரிதாகவே தொடர்பு கொண்டான், மேலும் யூதேயாவின் சாதாரண ஜனங்களிடையே மட்டுமே அவன் சுவிசேஷத்தைப் பரப்பினான். இது கர்த்தராகிய இயேசுவுக்குச் சரியான நபர்களை ஆயத்தமாக்குவதற்கும், அவருக்குக் கிரியை செய்ய ஏற்ற இடங்களைத் தயார் செய்வதற்கும் ஆகும். யோவான் போன்ற ஒரு தீர்க்கதரிசி பாதையை ஆயத்தப்படுத்தியதால், கர்த்தராகிய இயேசுவால் தாம் வந்திறங்கியவுடன் தன்னுடைய சிலுவையின் பாதையை நேரடியாகப் பின்பற்ற முடிந்தது. தேவன் தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தபோது, அவர் ஜனங்களைத் தேர்ந்தெடுக்கும் கிரியையைச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை, மேலும் அவர் தனிப்பட்ட முறையில் ஜனங்களைத் தேட வேண்டிய அவசியமும் இல்லை, அல்லது கிரியை செய்ய வேண்டிய இடத்தைத் தேட வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வந்தபோது அவர் அத்தகைய கிரியையைச் செய்யவில்லை; அவர் வருவதற்கு முன்பே சரியான நபர் அவருக்கு இதுபோன்ற விஷயங்களைத் தயார் செய்து வைத்திருந்தான். இயேசு தன்னுடைய கிரியையைத் தொடங்குவதற்கு முன்பே யோவான் இந்தக் கிரியையை முடித்துவிட்டிருந்தான், ஏனென்றால் மாம்சமாகிய தேவன் தன் கிரியையைச் செய்ய வந்திறங்கியபோது, அவருக்காக நீண்டகாலமாக காத்திருந்தவர்களுக்கு அவர் நேராகக் கிரியை செய்யச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான். மனுஷனைச் சீர்படுத்தும் கிரியையைச் செய்ய இயேசு வரவில்லை. அவர் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்ய மட்டுமே அவர் வந்திருந்தார்; மற்ற அனைத்திற்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. யோவான் வந்தபோது, கர்த்தராகிய இயேசுவின் கிரியையின் இலக்குகளாக மாறலாம் எனும் பொருட்டு, ஆலயத்திலிருந்தும் யூதர்களிடமிருந்தும் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டவர்களில் ஒரு குழுவை வெளிக்கொண்டுவருவதைத் தவிர யோவான் வேறு எதுவும் செய்யவில்லை. யோவான் ஏழு ஆண்டுகள் கிரியை செய்தான், அதாவது அவன் சுவிசேஷத்தை ஏழு ஆண்டுகள் பிரசங்கித்தான். தனது கிரியையின் போது, யோவான் பலவித அற்புதங்களைச் செய்யவில்லை, ஏனென்றால் அவனுடைய கிரியையானது பாதையை ஆயத்தப்படுத்துவது மட்டுமேயாகும்; அவனது கிரியை ஆயத்தப்படுத்த வேண்டியது மட்டுமேயாகும். இயேசு செய்யவிருந்த மற்ற எல்லாக் கிரியைகளுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை; அவன் மனுஷனை அவனது பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்புமாறு மட்டுமே கேட்டுக்கொண்டான், ஜனங்கள் இரட்சிக்கப்படும்படியாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவன் புதிய கிரியைகளைச் செய்து, மனுஷன் இதற்கு முன் நடந்திராத ஒரு பாதையைத் திறந்துவைத்தபோதிலும், அவன் இயேசுவுக்கு மட்டுமே அந்தப் பாதையை ஆயத்தப்படுத்தினான். அவன் வெறுமனே ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, ஆயத்தம் செய்வதற்கான கிரியைகளைச் செய்தான், மேலும் அவன் இயேசுவின் கிரியையைச் செய்ய இயலாதவனாக இருந்தான். பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை முதன்முதலில் பிரசங்கித்தவர் இயேசு இல்லை என்றாலும், யோவான் தொடங்கிவைத்தப் பாதையில்தான் அவர் சென்றார் என்றாலும், அவருடைய கிரியையைச் செய்ய வேறு எவரும் இல்லை. மேலும் அது யோவானின் கிரியைக்கு மேலானதாக இருந்தது. இயேசுவால் தனது சொந்தப் பாதையை ஆயத்தம் செய்ய முடியவில்லை; அவரது கிரியை தேவனின் சார்பாக நேரடியாக மேற்கொள்ளப்பட்டது. எனவே, யோவான் எத்தனை ஆண்டுகள் கிரியை செய்தாலும், அவன் ஒரு தீர்க்கதரிசியாகவும், பாதையை ஆயத்தப்படுத்தியவனாகவும் மட்டுமே இருந்தான். இயேசு மூன்று வருடங்கள் செய்த கிரியை யோவானின் ஏழு வருடக் கிரியையை மிஞ்சிவிட்டன, ஏனென்றால் அவருடைய கிரியையின் சாராம்சம் யோவானின் கிரியையைப் போன்றதல்ல. இயேசு தன்னுடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோதுதான் யோவானின் கிரியை முடிவடைந்தது. கர்த்தராகிய இயேசுவால் பயன்படுத்தப்பட போதுமான மனுஷரையும் இடங்களையும் யோவான் ஆயத்தம் செய்திருந்தான், மேலும் கர்த்தராகிய இயேசுவுக்குத் தன் மூன்று வருடக் கிரியையைத் தொடங்க அவை போதுமானதாக இருந்தன. ஆகவே, யோவானின் கிரியை முடிந்தவுடன், கர்த்தராகிய இயேசு அதிகாரப்பூர்வமாக தனது சொந்தக் கிரியையைத் தொடங்கினார், யோவான் பேசிய வார்த்தைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன. ஏனென்றால், யோவான் செய்த கிரியை மாற்றத்திற்காக மட்டுமே இருந்தது, அவனுடைய வார்த்தைகள் மனுஷனை புதிய வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஜீவவார்த்தைகள் அல்ல; இறுதியில், அவனது வார்த்தைகள் தற்காலிகப் பயன்பாட்டிற்கு மட்டுமே உதவின.
இயேசு செய்த கிரியை இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல; அதற்கு ஒரு செயல்முறை இருந்தது, அது அனைத்தும் விஷயங்களின் சாதாரண விதிகளின்படி முன்னேறிச் சென்றது. தன்னுடைய ஜீவிதத்தின் கடைசி ஆறு மாதங்களில், இந்தக் கிரியையைச் செய்யவே தாம் வந்திருப்பதை இயேசு உறுதியாக அறிந்திருந்தார், மேலும் தாம் சிலுவையில் அறையப்படத்தான் வந்திருக்கிறோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கெத்செமனே தோட்டத்தில் மூன்று முறை ஜெபித்ததைப் போன்றே, பிதாவாகிய தேவனிடம் இயேசு தொடர்ந்து ஜெபம் செய்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, அவர் தனது ஊழியத்தை மூன்றரை ஆண்டுகள் மேற்கொண்டார், மேலும் அவருடைய அதிகாரப்பூர்வ கிரியை இரண்டரை ஆண்டுகள் நீடித்தது. முதல் ஆண்டில், அவர் சாத்தானால் குற்றம் சாட்டப்பட்டார், மனுஷனால் துன்புறுத்தப்பட்டார், மேலும் மனுஷனின் சோதனையை அனுபவித்தார். அவர் தனது கிரியையைச் செய்யும்போது பல சோதனைகளை வென்றார். கடைசி ஆறு மாதங்களில், இயேசு விரைவில் சிலுவையில் அறையப்படவிருக்கும்போது, பேதுருவின் வாயிலிருந்து, இவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன், இவர்தான் கிறிஸ்து என்ற வார்த்தைகள் வந்தன. அப்போதுதான் அவருடைய கிரியை அனைவருக்கும் தெரியவந்தது, அப்போதுதான் அவருடைய அடையாளம் பொதுஜனங்களுக்கு தெரியவந்தது. அதன்பிறகு, அவர் மனுஷனுக்காக சிலுவையில் அறையப்பட வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றும் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் கூறினார்; அவர் மீட்பின் கிரியையைச் செய்ய வந்திருந்தார் என்றும், அவர்தான் இரட்சகர் என்றும் கூறினார். கடைசி ஆறு மாதங்களில் மட்டுமே அவர் தனது அடையாளத்தையும் அவர் செய்ய விரும்பிய கிரியையையும் வெளிப்படுத்தினார். இது தேவனின் காலமாகவும் இருந்தது, இப்படித்தான் கிரியை மேற்கொள்ளப்பட வேண்டியதிருந்தது. அந்த நேரத்தில், இயேசுவுடைய கிரியையின் ஒரு பகுதி பழைய ஏற்பாட்டிற்கும், மோசேயின் நியாயப்பிரமாணங்களுக்கும், நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவாவின் வார்த்தைகளுக்கும் ஏற்ப இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தும், இயேசு தன்னுடைய கிரியையின் ஒரு பகுதியாகச் செய்தார். அவர் ஜனங்களுக்கு பிரசங்கித்தார், ஜெப ஆலயங்களில் அவர்களுக்குப் போதித்தார், பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் கணிப்புகளை அவருடன் பகைமை கொண்ட பரிசேயர்களைக் கண்டிப்பதற்காகப் பயன்படுத்தினார், மேலும் வேதவசனங்களிலிருந்து வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களின் கீழ்ப்படியாமையை வெளிப்படுத்தி, அவர்களைக் கண்டித்தார். ஏனென்றால் இயேசு செய்ததை அவர்கள் இகழ்ந்தார்கள்; குறிப்பாக, இயேசுவின் பெரும்பாலான கிரியைகள் வேதாகமத்தில் உள்ள நியாயப்பிரமாணங்களின்படி செய்யப்படவில்லை, மேலும், அவர் போதித்தவை அவர்களின் சொந்த வார்த்தைகளை விட உயர்ந்தவையாக இருந்தன, மேலும் வேதவசனங்களில் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்ததை விடவும் உயர்ந்தவையாக இருந்தன. இயேசுவின் கிரியை மனுஷனின் மீட்பிற்காகவும் மற்றும் சிலுவையில் அறையப்படுவதற்காகவும் மட்டுமே இருந்தது, எனவே எந்த மனுஷனையும் வெல்வதற்காக அவர் அதிக வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் மனுஷனுக்குப் போதித்தவற்றில் பெரும்பாலானவை வேதவசனங்களின் வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டவை, மேலும் அவருடைய கிரியை வேதவசனங்களைத் தாண்டி இருக்கவில்லை என்றாலும் கூட, சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை அவரால் நிறைவேற்ற முடிந்தது. அவருடைய கிரியை வார்த்தைக்கான கிரியை அல்ல, மனுஷகுலத்தை ஜெயங்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கிரியையும் அல்ல, மாறாக மனுஷகுலத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கிரியை ஆகும். அவர் மனுஷகுலத்திற்கான பாவநிவாரணபலியாக மட்டுமே செயல்பட்டார், மனுஷகுலத்திற்கான வார்த்தையின் ஆதாரமாக அவர் செயல்படவில்லை. மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருந்த புறஜாதியாரின் கிரியையை அவர் மேற்கொள்ளவில்லை, ஆனால் தேவன் ஒருவர் இருப்பதாக நம்புபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கிரியையான சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை அவர் மேற்கொண்டார். அவருடைய கிரியை வேதவசனங்களின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பழைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டதைப் பரிசேயர்களைக் கண்டிக்க அவர் பயன்படுத்தியிருந்தாலும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிக்க இது போதுமானதாக இருந்தது. வேதவசனங்களில் உள்ள பழைய தீர்க்கதரிசிகளின் கணிப்புகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் இன்றைய கிரியை மேற்கொள்ளப்பட்டிருந்தால், உங்களை ஜெயங்கொள்வது கடினமாக இருந்திருக்கும், ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் சீன ஜனங்களாகிய உங்களின் கீழ்ப்படியாமை மற்றும் பாவங்கள் பற்றிய எந்தப் பதிவும் இல்லை, உங்கள் பாவங்களின் வரலாறும் அதில் இல்லை. எனவே, இந்தக் கிரியை வேதாகமத்தில் இன்னும் நீடித்திருந்தால், நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிய சம்மதித்திருக்க மாட்டீர்கள். இஸ்ரவேலரின் வரையறுக்கப்பட்ட வரலாற்றை மட்டுமே வேதாகமம் பதிவு செய்கிறது, நீங்கள் தீயவர்களா அல்லது நல்லவர்களா, அல்லது உங்களை நியாயந்தீர்க்க முடியவில்லையா என்பதைக் கண்டறிய இயலாது. இஸ்ரவேலரின் வரலாற்றின்படி நான் உங்களை நியாயந்தீர்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள், இன்று நீங்கள் என்னைப் பின்பற்றுவது போலவே இனியும் என்னைப் பின்பற்றுவீர்களா? நீங்கள் எவ்வளவு கடினமானவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த யுகத்தில் எந்த வார்த்தைகளும் பேசப்படவில்லை என்றால், ஜெயங்கொள்ளும் கிரியையை முடிப்பது கடினமாகிவிடும். நான் சிலுவையில் அறையப்பட வரவில்லை என்பதால், நான் வேதாகமத்தில் இல்லாத வார்த்தைகளைப் பேச வேண்டும், இதன் மூலம் நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்கள். இயேசு செய்த கிரியை பழைய ஏற்பாட்டை விட ஒரு நிலை மட்டுமே மேலானது; இது ஒரு யுகத்தைத் தொடங்கவும், அந்த யுகத்தை வழிநடத்தவும் பயன்படுத்தப்பட்டது. “நான் நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை, அதை நிறைவேற்றுவதற்காக வந்தேன்,” என்று அவர் ஏன் சொன்னார்? ஆயினும், அவருடைய கிரியையில் அப்பியாசித்துக் கொண்டிருந்த நியாயப்பிரமாணங்களில் இருந்தும், பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களால் பின்பற்றப்பட்ட கட்டளைகளிலிருந்தும் வேறுபடும் பல விஷயங்கள் இருக்கின்றன, ஏனென்றால் அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வரவில்லை, ஆனால் அதை நிறைவேற்றுவதற்காக வந்தார். அதை நிறைவேற்றுவதற்கான செயல்முறை அப்பியாசிப்பதற்கான விஷயங்கள் பலவற்றை உள்ளடக்கியது: அவருடைய கிரியை மிகவும் நடைமுறைக்குரியதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருந்தது, மேலும், அது மிகுந்த ஜீவனுடனும் இருந்தது. அது விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை. இஸ்ரவேலர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லையா? இயேசு வந்தபோது, அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை, ஏனென்றால் மனுஷகுமாரன் ஓய்வுநாளின் ஆண்டவர் என்றும், ஓய்வுநாளின் ஆண்டவர் வந்திறங்கியதும், அவர் விரும்பியபடி செய்வார் என்றும் கூறினார். அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களை நிறைவேற்றவும், நியாயப்பிரமாணங்களை மாற்றவும் வந்திருந்தார். இன்று செய்யப்படும் அனைத்தும் நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஆனாலும் அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் யேகோவாவின் கிரியையின் அஸ்திபாரத்தைச் சார்ந்திருக்கின்றன, மேலும் அவை இந்த நோக்கத்தை மீறுவதில்லை. எடுத்துக்காட்டாக, உங்கள் நாக்கை அடக்குவதும், விபச்சாரம் செய்யாமல் இருப்பதும்—இவை பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்கள் அல்லவா? இன்று, உங்களுக்குத் தேவைப்படுவது பத்து கட்டளைகளுக்கு உட்படுபவை மட்டுமல்ல, முன்பு வந்ததை விட உயர்வான ஒழுக்கக் கட்டளைகளும், நியாயப் பிரமாணங்களும்தான் தேவைப்படுகிறது. இதனால் இதற்கு முன் வந்தவை ஒழிக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தமல்ல, ஏனென்றால் தேவனின் ஒவ்வொரு கட்டமும் முன்பு வந்தக் கட்டத்தின் அஸ்திபாரத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. யேகோவா அப்போது இஸ்ரவேலில் செய்த கிரியையைப் பொறுத்தவரை, ஜனங்கள் பலிகளைச் செலுத்த வேண்டும், தங்களது பெற்றோரை மதிக்க வேண்டும், விக்கிரகங்களை வணங்கக்கூடாது, மற்றவர்களைத் தாக்கவோ சபிக்கவோ கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது, புகைபிடிக்கவோ மது அருந்தவோ கூடாது, இறந்தவற்றைப் புசிக்கவோ அல்லது இரத்தத்தை அருந்தவோ கூடாது—இது இன்றும் உங்கள் பயிற்சிக்கு அடித்தளமாக அமையவில்லையா? கடந்த காலத்தின் அஸ்திபாரத்தில்தான் இன்று வரை கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த கால நியாயப்பிரமாணங்கள் இனியும் குறிப்பிடப்படுவதில்லை என்றாலும், உனக்கான புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இந்த நியாயப்பிரமாணங்கள், ஒழிக்கப்படாமல், அதற்குப் பதிலாக உயர்வாக உயர்த்தப்பட்டுள்ளன. அவை ஒழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்வது முந்தைய யுகம் காலாவதியாகிவிட்டது என்று அர்த்தம் தரும். அதேசமயம் நீ நித்தியம் முழுமைக்கும் மரியாதை செலுத்த வேண்டிய சில கட்டளைகளும் உள்ளன. கடந்த காலக் கட்டளைகள் ஏற்கனவே அப்பியாசிக்கப்பட துவங்கிவிட்டன, ஏற்கனவே மனுஷனுள் ஒன்றிவிட்டன, மேலும் “புகைபிடிக்காதே”, “மது அருந்தாதே” என்பன போன்ற கட்டளைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அஸ்திபாரத்தின் மீது, இன்றைக்கான உங்கள் தேவைக்கு ஏற்பவும், உங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், மற்றும் இன்றைக்கான கிரியைக்கு ஏற்பவும் புதிய கட்டளைகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய யுகத்திற்கான கட்டளைகளை ஆணையிடுவது என்பது பழைய யுகத்திற்கான கட்டளைகளை ஒழிப்பதைக் குறிக்காது, ஆனால் மனுஷனின் செய்கைகளை யதார்த்தத்திற்கு ஏற்ப இன்னும் முழுமையானதாக்க இந்த அஸ்திபாரத்தின் மீது அவற்றை உயர்த்துவதைக் குறிக்கும். இன்று, நீங்கள் இஸ்ரவேலர்களைப் போலவே கட்டளைகளைப் பின்பற்றவும், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், நீங்கள் யேகோவா வகுத்த நியாயப்பிரமாணங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றாகிவிடும். நீங்கள் அந்தச் சில வரையறுக்கப்பட்ட கட்டளைகளுக்கு அல்லது மனப்பாடம் செய்த எண்ணற்ற நியாயப்பிரமாணங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடந்தால், உங்கள் பழைய மனநிலை ஆழமாக வேரூன்றியிருக்கும், மேலும் அதைப் பிடுங்கி எறிய எந்த வழியும் இருக்காது. இதனால் நீங்கள் பெருகிய முறையில் மோசமானவர்களாகி விடுவீர்கள், உங்களில் ஒருவர் கூட கீழ்ப்படிய மாட்டீர்கள். யேகோவாவின் கிரியைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு உதவ சில எளிய கட்டளைகளாலோ அல்லது எண்ணற்ற நியாயப்பிரமாணங்களாலோ இயலாது. நீங்கள் இஸ்ரவேலரைப் போன்றவர்கள் அல்ல: நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றி, கட்டளைகளை மனப்பாடம் செய்வதன் மூலம், அவர்களால் யேகோவாவின் கிரியைகளைக் கண்டு, தங்கள் பக்தியை அவரிடம் மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால் உங்களால் இதை அடைய முடியாது, மேலும் பழைய ஏற்பாட்டு யுகத்தின் ஒரு சில கட்டளைகளால் உங்களை உங்களது இருதயத்தை விட்டுக்கொடுக்கச் செய்யவோ அல்லது உங்களைப் பாதுகாக்கவோ இயலாது என்பது மட்டுமல்லாமல், அதற்குப் பதிலாக உங்களை தளர்ந்துபோகச் செய்து, பாதாளத்தில் வீழ்த்தும். என் கிரியையானது ஜெயங்கொள்வதற்கான கிரியை என்பதால், அது உங்கள் கீழ்ப்படியாமை மற்றும் உங்கள் பழைய மனநிலையை நோக்கமாகக் கொண்டுள்ளது. யேகோவா மற்றும் இயேசுவின் கனிவான வார்த்தைகள் இன்றைய நியாயத்தீர்ப்புகளின் கடுமையான வார்த்தைகளுக்கு அருகே கூட வராது. இத்தகைய கடுமையான வார்த்தைகள் இல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கீழ்ப்படியாத “நிபுணர்களான” உங்களை ஜெயங்கொள்ள முடியாது. பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உங்கள் மீதான அதிகாரத்தை இழந்துவிட்டன, மேலும் இன்றைய நியாயத்தீர்ப்பானது பழைய நியாயப்பிரமாணங்களை விட மிகவும் வலிமையாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பொருத்தமானது நியாயத்தீர்ப்பு தான், நியாயப்பிரமாணங்களின் அற்பமான கட்டுப்பாடுகள் அல்ல, ஏனென்றால் நீங்கள் ஆதியில் இருந்த மனுஷகுலம் அல்ல, ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சீர்கெட்டுப்போன ஒரு மனுஷகுலம். மனுஷன் இப்போது அடைய வேண்டிய விஷயமானது இன்றைய மனுஷனின் உண்மையான நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும், இன்றைய மனுஷனின் திறமை மற்றும் உண்மையான சரீர வளர்ச்சிக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் நீ விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இது உன் பழைய மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் உன் கருத்துக்களை நீ ஒதுக்கி வைக்கவும் கூடும். கட்டளைகள்தான் விதிகள் என்று நீ நினைக்கிறாயா? அவை மனுஷனின் இயல்பான தேவைகள் என்று கூறலாம். அவை நீ பின்பற்ற வேண்டிய விதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, புகைபிடிப்பதை தடைசெய்தல் என்பது ஒரு விதியா? இது ஒரு விதி அல்ல! இது சாதாரண மனுஷகுலத்திற்குத் தேவைப்படுகிறது; இது ஒரு விதி அல்ல, ஆனால் ஒட்டுமொத்த மனுஷகுலத்திற்கும் விதிக்கப்பட்ட ஒன்று. இன்று முன்வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான அல்லது அதற்கு மேற்பட்ட கட்டளைகளும் விதிகள் அல்ல; அவை சாதாரண மனுஷகுலத்தை அடையத் தேவையானவை. கடந்த காலங்களில் இதுபோன்ற விஷயங்களை ஜனங்கள் வைத்திருக்கவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை, எனவே இன்று ஜனங்களுக்கு அவை தேவைப்படுகின்றன, மேலும் இதுபோன்ற விஷயங்கள் விதிகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நியாயப்பிரமாணங்கள், விதிகளுக்கு சமமானவை அல்ல. நான் பேசும் விதிகள் என்பவை விழாக்கள், சம்பிரதாயங்கள் அல்லது மனுஷனின் மாறுபட்ட மற்றும் தவறான நடைமுறைகளைக் குறிக்கின்றன; அந்த விதிமுறைகளும் மனுஷனுக்கு எவ்வித உதவியும் செய்வதில்லை, அவனுக்கு எந்த நன்மையும் அளிப்பதில்லை; அவை எந்த அர்த்தமும் இல்லாத ஒரு போக்கை உருவாக்குகின்றன. இதுவே விதிகளின் சுருக்கமாகும், அத்தகைய விதிகள் நீக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை மனுஷனுக்கு எந்த நன்மையும் அளிப்பதில்லை. மனுஷனுக்கு நன்மை பயக்கும் விஷயம்தான் அப்பியாசிக்கப்பட வேண்டும்.