அத்தியாயம் 41

தேவன் மனுஷனில் எவ்வாறு கிரியை செய்கிறார்? இதை நீ கண்டுபிடித்திருக்கிறாயா? இது உனக்குத் தெளிவாக இருக்கிறதா? மேலும் அவர் திருச்சபையில் எவ்வாறு கிரியை செய்கிறார்? இந்த விஷயங்களைப் பற்றிய உன் கருத்து என்ன? இந்தக் கேள்விகளை நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா? திருச்சபையில் அவருடைய கிரியையின் மூலம் அவர் எதை நிறைவேற்ற விரும்புகிறார்? இந்த விஷயங்கள் அனைத்தும் உனக்குத் தெளிவாக இருக்கிறதா? இல்லையென்றால், நீ செய்வது அனைத்தும் வீணானதும் வெறுமையானதுமாகும்! இந்த வார்த்தைகள் உன் இருதயத்தைத் தொட்டிருக்கின்றனவா? செயலற்ற முறையில் பின்வாங்காமல் சுறுசுறுப்பாக முன்னேறுவது மட்டுமே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுமா? கண்மூடித்தனமான ஒத்துழைப்பு போதுமானதா? தரிசனங்கள் குறித்து நீ தெளிவற்று இருப்பாயானால் என்ன செய்யப்பட வேண்டும்? மேலும் தேடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா? “நான் ஒருமுறை மனுஷர்களிடையே ஒரு பெரிய முயற்சியை மேற்கொண்டேன், ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை, அதனால் நான் அதை அவர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்த என் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆயினும்கூட, மனுஷனால் என் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் அவன் என் திட்டத்தின் நோக்கத்தைக் குறித்து அறியாமலேயே இருந்தான்” என்று தேவன் கூறுகிறார். இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? இந்த நோக்கத்தைக் நீ எப்போதாவது கருத்தில் கொண்டிருக்கிறாயா? நான் உண்மையிலேயே அதை கவனமின்றியும் நோக்கமின்றியும் செய்தேனா? அப்படி செய்திருந்தால், அதனால் என்ன பயன் இருந்திருக்கும்? இந்த நோக்கத்தைக் உங்களுக்குத் தெளிவற்றதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருந்தால், அப்போது உண்மையான ஒத்துழைப்பை எவ்வாறு அடைய முடியும்? மனுக்குலத்தின் அனைத்து தேடலும் எல்லையற்ற கடல்களின் மீது, வெற்று வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கிற உபதேசத்திற்கு மத்தியில் உள்ளது என்று தேவன் கூறுகிறார். உங்களுடைய நோக்கங்களைப் பொறுத்தவரை, உன்னால் கூட அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை விளக்க முடியவில்லை. தேவன் மனுஷனில் எதைச் சாதிக்க விரும்புகிறார்? இந்த விஷயங்கள் அனைத்திலும் நீ தெளிவாக இருக்க வேண்டும். அது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை எதிர்மறையான வழியில் வெட்கப்படுத்துவதற்காக மட்டுமா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெட்கப்படுத்திய பின் தேவன் வெறுங்கையுடன் மலைகளுக்குச் சென்று அங்கே தனிமையில் வாழ்வதற்காகவா? அப்படியானால், தேவன் விரும்புவது என்ன? அவர் மெய்யாகவே மனுஷர்களின் இருதயங்களை விரும்புகிறாரா? அல்லது அவர்களுடைய ஜீவன்கள் அவருக்கு வேண்டுமா? அல்லது அவர்களின் சம்பத்து மற்றும் உடைமைகள் வேண்டுமா? இவைகளால் என்ன பயன்? அவைகளால் தேவனுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர் தம்முடைய “திறமைகளை” வெளிப்படுத்தும்படியாக, சாத்தானுக்கு எதிரான ஜெயத்தின் நிரூபணமாக மனுஷனைப் பயன்படுத்த, தேவன் மனுஷன் மீது இவ்வளவு கிரியை செய்திருக்கிறாரா? அப்படியென்றால் தேவன் மிகவும் “அற்பமானவராகக்” காணப்படமாட்டாரா? தேவன் அப்படிப்பட்ட தேவனா? பெரியவர்களை மற்றவர்களுடன் சண்டைக்கு இழுக்கும் ஒரு குழந்தையைப் போன்ற ஒருவரா? அதனால் என்ன பயன் இருக்கும்? தேவனை அளவிட மனுஷன் தொடர்ந்து தனது சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறான். தேவன் ஒருமுறை கூறினார், “ஒரு வருடத்தில் நான்கு பருவங்களும், ஒவ்வொரு பருவத்திற்கும் மூன்று மாதங்களும் உள்ளன.” மனுஷன் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை நினைவில் வைத்து, ஒரு பருவத்திற்கு மூன்று மாதங்களும் மற்றும் ஒரு வருடத்தில் நான்கு பருவங்களும் உள்ளன என்று எப்போதும் கூறினான். “ஒரு வருடத்தில் எத்தனை பருவங்கள் உள்ளன? மற்றும் ஒரு பருவத்திற்கு எத்தனை மாதங்கள்?” என்று தேவன் கேட்டபோது, மனுஷன் ஒரே குரலில், “நான்கு பருவங்கள், மூன்று மாதங்கள்” என்று பதிலளித்தான். மனுஷன் எப்பொழுதும் விதிமுறைகளின் மூலம் தேவனை வரையறுக்க முயல்கிறான், மேலும் இப்போது, “ஒரு வருடத்தில் மூன்று பருவங்கள், ஒரு பருவத்தில் நான்கு மாதங்கள்” என்ற சகாப்தத்தில் நுழைந்திருந்தும், மனுஷன் அதை அறியாமலேயே இருக்கிறான், அவன் குருடனாகிவிட்டதைப் போல், எல்லாக் காரியங்களிலும் விதிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கிறான். இன்று, மனிதகுலமானது தங்களது “விதிமுறைகளை” தேவனுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறது! அவர்கள் உண்மையிலேயே குருடர்கள்! இப்போது “குளிர்காலம்” இல்லை, “வசந்தம், கோடை மற்றும் இலையுதிர் காலம்” மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறதில்லையா? மனுஷன் உண்மையிலேயே முட்டாள்! இவ்வளவு தூரம் கடந்து வந்திருந்தும், போக்குவரத்து வாகனங்கள் வசதியாக இல்லை, ஜனங்கள் அனைவரும் நடந்து செல்ல வேண்டும், அல்லது ஒரு சிறிய கழுதையைப் பிரயாணத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும், அல்லது ஜனங்கள் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அல்லது பழமையான வாழ்க்கை முறை இன்னும் நிலவுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிற, 1920 களில் வசிக்கும் ஒரு நபரைப் போல, தேவனை எப்படி அறிவது என்று இன்னும் அறியாமல் இருக்கிறான். இவையெல்லாம் மனுஷர்களின் மூளையில் இருக்கும் கருத்துக்கள் அல்லவா? இன்று, இரக்கம் மற்றும் தயவு குறித்து அவர்கள் இன்னும் ஏன் பேசுகிறார்கள்? இதனால் என்ன பயன்? இது ஒரு வயதான பெண் தனது கடந்த காலத்தைப் பற்றி பிதற்றுவது போன்றதாகும்—இந்த வார்த்தைகளால் என்ன பயன்? எல்லாவற்றிற்கும் மேலாக, நிகழ்காலம் நிகழ்காலமே; காலம் 20 அல்லது 30 வருடங்கள் பின்னோக்கித் திருப்பப்பட முடியுமா? எல்லா ஜனங்களும் கால மாற்றத்தைப் பின்பற்றுகிறார்கள்; இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஏன் மிகவும் தயங்குகிறார்கள்? தற்போதைய சிட்சையின் காலத்தில் இரக்கம் மற்றும் தயவு என்று பேசி என்ன பயன்? இரக்கம் மற்றும் தயவு—இவை அனைத்தும் தேவனுக்கானவைகளா? “மாவும் அரிசியும்” இருக்கும் இந்த சகாப்தத்தில், ஜனங்கள் “தினை உமிகளையும் காட்டுக் காய்கறிகளையும்” தொடர்ந்து பரிமாறிக்கொண்டிருப்பது ஏன்? தேவன் செய்ய விரும்பாததை, மனுஷன் தன் மீது திணித்துக்கொள்கிறான். அவர் எதிர்த்தால், அவர் “எதிர்ப்புரட்சியாளர்” என்று முத்திரை குத்தப்படுவார், மேலும் தேவன் இயல்பாகவே இரக்கமுள்ள அல்லது அன்பான தேவன் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும், யார் கேட்கிறார்கள்? மனுஷன் மிகவும் அபத்தமானவன். தேவனுடைய வார்த்தைக்கு எந்தப் பலனும் இல்லை என்பது போல காணப்படுகிறது. மனுஷர்கள் எப்பொழுதும் என் வார்த்தைகளை வித்தியாசமான பார்வையில் பார்க்கிறார்கள். குற்றங்கள் ஆதாரமற்ற முறையில் குற்றமில்லாத ஜனங்கள் மீது சுமத்தப்படுவது போல, தேவன் மனிதகுலத்தால் துன்பப்படுத்தப்பட்டு வருகிறார்—ஆகவே, தேவனுடன் ஏக சிந்தையாய் இருக்க முடிந்தவர்கள் யார்? நீங்கள் எப்போதும் தேவனுடைய இரக்கத்திலும் தயவிலும் ஜீவிக்க ஆயத்தமாக இருக்கிறீர்கள், எனவே மனுஷனுடைய அவமதிப்புகளைத் தாங்கிக்கொள்வதைத் தவிர தேவனுக்கு என்ன இருக்கிறது? எவ்வாறாயினும், தேவனுடன் வாதிடுவதற்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை நீங்கள் முழுமையாக ஆராய்வீர்கள் என்று நம்புகிறேன். இருப்பினும், தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை கவனமாகப் பார்க்கும்படி நான் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன்—தேவனுடைய வார்த்தைகள் “நீர்த்துப்போனவை” என்று நம்புவதில் உன்னை நீயே புத்திசாலி என்று நினைக்க வேண்டாம். அதற்கான தேவையும் இல்லை! தேவன் நேரடியாகக் கூறாதவரை அல்லது தெளிவாகக் குறிப்பிடாத வரை, தேவனுடைய வார்த்தை எவ்வளவு “நீர்த்துப்போனது” என்று யாரால் சொல்ல முடியும்? உன்னைப் பற்றி நீயே மிகவும் உயர்வாக நினைக்காதே. அவருடைய வார்த்தைகளிலிருந்து பயிற்சியின் பாதையை உன்னால் பார்க்க முடிந்தால், அப்போது நீ அவருடைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்திருப்பாய். நீ வேறு எதைப் பார்க்க விரும்புகிறாய்? “மனுஷனின் பலவீனத்திற்கு நான் எந்தவித இரக்கத்தையும் காட்டுவதை நிறுத்திவிடுவேன்” என்று தேவன் சொன்னார். இந்த வெளிப்படையான மற்றும் எளிமையான கூற்றின் அர்த்தத்தை உன்னால் கிரகித்துக்கொள்ள முடியாவிட்டால், கூடுதல் ஆய்வு மற்றும் விசாரணையின் பயன் என்ன? இயந்திரவியல் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல், உன்னால் ராக்கெட்டை உருவாக்கும் தகுதியடைய முடியுமா? அப்படிப்பட்டவர் சும்மா பெருமை பேசும் ஒருவராக இருக்க மாட்டாரா? தேவனுடைய கிரியையைச் செய்ய மனுஷனுக்குத் திறமைகள் இல்லை; தேவனே அவனை உயர்த்துகிறவராய் இருக்கிறார். அவர் எதை நேசிக்கிறார் அல்லது எதை வெறுக்கிறார் என்று தெரியாமல் வெறுமனே அவருக்கு ஊழியம் செய்வது பேரழிவுக்கான செய்முறை அல்லவா? மனுஷர்கள் தங்களைத் தாங்களே அறியவில்லை, ஆனால் தங்களைத் தாங்களே அசாதாரணமானவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை யாரென்று நினைக்கிறார்கள்! அவர்களுக்கு எது நல்லது அல்லது எது கெட்டது என்று தெரியவில்லை. கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள், எதிர்காலத்தை எதிர்நோக்கிப் பாருங்கள்—அது எப்படி இருக்கிறது? அதன் பிறகு, உன்னை நீயே அறிந்து கொள்.

மனுஷனின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளைப் பற்றிய அநேக காரியங்களை தேவன் வெளிப்படுத்தியுள்ளார். “அப்போதுதான் மனுஷனின் நோக்கங்களையும் இலக்குகளையும் நான் தெளிவாகக் கண்டேன். நான் மேகங்களுக்குள் இருந்து பெருமூச்சு விட்டு: மனுஷர்கள் ஏன் எப்போதும் தங்களுக்காகவே செயல்படுகிறார்கள்? என்னுடைய சிட்சைகள் அவர்களைப் பரிபூரணப்படுத்துவதற்காக இருக்கிறது அல்லவா? அவர்களின் நேர்மறையான அணுகுமுறையை நான் வேண்டுமென்றே தடுக்கிறேனா?” என்று அவர் கூறினார். இந்த வார்த்தைகளிலிருந்து உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டீர்கள்? மனுஷனின் நோக்கங்களும் இலக்குகளும் உண்மையில் போய்விட்டனவா? இதை உங்களுக்குள் நீங்களே பார்த்திருக்கிறீர்களா? நீங்களும் தேவனுக்கு முன்பாக வந்து இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்: உங்களில் தேவன் செய்திருக்கிற சிட்சையின் கிரியையால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? நீங்கள் அதைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்களா? ஒருவேளை விளைவு சிறியதாக இருக்கலாம்; இல்லையெனில், நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றி பெரிய வார்த்தைகளில் பேசியிருப்பீர்கள். தேவன் உங்களை என்ன சாதிக்கச் செய்திருக்கிறார்? உங்களிடம் பேசப்பட்ட பல வார்த்தைகளில், எத்தனை பலனளித்துள்ளன, எத்தனை ஒன்றமில்லாமல் போயிருக்கின்றன? தேவனுடைய பார்வையில், அவருடைய வார்த்தைகளில் ஒருசில வார்த்தைகள் மட்டுமே பலனளித்திருக்கின்றன; ஏனென்றால், மனுஷனால் தனது வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் அவருக்குத் திரும்பக் கிடைப்பதெல்லாம் சுவற்றில் பட்டுத் திரும்புகிற வார்த்தைகளின் எதிரொலிகள் மட்டுமே ஆகும். தேவனுடைய சித்தத்தை அறிவதற்கான வழி இதுதானா? சீக்கிரத்தில், தேவன் மனுஷன் செய்ய வேண்டிய அதிகக் கிரியைகளைக் கொண்டிருப்பார்; இப்போது அவன் பெற்றிருக்கும் சிறிய வளர்ச்சியுடன் அந்தக் கிரியையை மனுஷனால் நிறைவேற்ற முடியுமா? விலகாமல் இருப்பது, தவறு செய்வது அல்லது அகந்தையாக இருப்பது—இது மனுஷீக சுபாவம் போல தோன்றுகிறது. இதைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக உள்ளது: தேவன் இவ்வளவு சொல்லியும், மனுஷன் ஏன் அதில் எதையும் மனதில் கொள்வதில்லை? தேவன் மனுஷனிடம் வேடிக்கையாகப் பேசி எந்த பலனையும் எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? அல்லது “சந்தோஷம், கோபம், துக்கம் மற்றும் மகிழ்ச்சி” என்று அழைக்கப்படும் ஒரு நாடகத்தை மனுஷனை நடத்த வைக்க வேண்டுமா? மனுஷனை ஒரு கணம் மகிழ்விப்பது, அடுத்து அவனை அழ வைப்பது—பின்னர், மனுஷன் மேடையை விட்டு வெளியே சென்றதும், அவன் தன் சொந்த இஷ்டத்திற்கு விடப்படுகிறானா? இதன் விளைவு என்னவாக இருக்கும்? “மனுஷனிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் ஏன் எப்போதும் ஒன்றுமில்லாமல் போகிறது? நான் ஒரு நாயை மரத்தில் ஏறச் சொல்ல முடியுமா? நான் ஒன்றும் இல்லாததை மிகவும் பெரிதாக்குகிறேனா?” தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் மனுஷனின் உண்மையான நிலையை நோக்கியவையாகும். தேவனுடைய வார்த்தையில் யார் வாழ்கிறார்கள் என்பதைக் காண, எல்லா மனுஷர்களுக்குள்ளும் பார்ப்பது எந்தத் தீங்கையும் விளைவிக்காது. “இப்போது கூட, நிலத்தின் பெரும்பகுதி மாறிக்கொண்டே இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்த நிலம் உண்மையாகவே வேறொரு வகையாக மாறினால், நான் அதை என் கையால் தூக்கி எறிந்துவிடுவேன்—தற்போதைய நிலையில் இது என்னுடைய மிகச் சரியான கிரியையல்லவா?” உண்மையில், இப்போதும் தேவன் இந்தக் கிரியையைச் செய்து கொண்டிருக்கிறார்; இருப்பினும், “என் கையால் தட்டிவிட்டு அதை ஒதுக்கி வைப்பது” பற்றி அவர் கூறியது எதிர்காலத்தைக் குறிக்கிறது, ஏனென்றால் எல்லாவற்றுக்கும் ஒரு செயல்முறை இருக்க வேண்டும். தேவனுடைய தற்போதைய கிரியை இதை நோக்கிச் செல்கிறது—இது உங்களுக்குத் தெளிவாகிறதா? மனுஷனின் நோக்கங்களில் குறைபாடுகள் உள்ளன, உள்ளே நுழைவதற்கான இந்த வாய்ப்பை அசுத்த ஆவிகள் பறித்திருக்கின்றன. இந்த நேரத்தில், “நிலம் மற்றொரு வகைக்கு மாறுகிறது.” பின்னர், ஜனங்களின் சாராம்சத்தில் மாற்றம் இல்லாதிருந்தாலும், அவர்கள் ஒரு தரமான மாற்றத்திற்கு உட்பட்டிருப்பார்கள், ஏனெனில் மேம்படுத்தப்பட்ட பூமியில் மற்ற விஷயங்களும் இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அசல் பூமி தாழ்வானதாக இருந்தது, ஆனால் அதன் முன்னேற்றத்திற்குப் பிறகு, அது பயன்படுத்தப்படலாம். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டு, இனி பயன்படுத்தப்படாமல், படிப்படியாக பழைய தோற்றத்திற்குத் திரும்பும். தேவனுடைய கிரியையின் அடுத்த கட்டத்தினுடைய சுருக்கம் இதுவேயாகும். எதிர்காலக் கிரியை மிகவும் சிக்கலானதாக இருக்கும், ஏனென்றால் எல்லாவற்றையும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்க வேண்டிய நேரம் அதுவே ஆகும். சந்திக்கும் இடத்தில், விஷயங்கள் முடிவுக்கு வரும்போது, தவிர்க்க முடியாத குழப்பம் காணப்படும், மேலும் மனுஷன் உறுதியான நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பான். இது, “மனுஷர்கள் அனைவரும், எந்த இசைக்கும் ஏற்ப இசைந்து பாடும் இசைக்கலைஞர்கள்” என்று தேவன் சொன்னது போலவே இருக்கிறது. மனுஷர்கள் அனைவரும், இசைக்கப்படும் இசைக்கு ஏற்ப பாடும் திறனைப் பெற்றிருக்கிறார்கள், எனவே தேவன் அவர்களிடமுள்ள இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, தமது கிரியையின் அடுத்த அடியை எடுத்து வைக்கிறார், இதன் மூலம் எல்லா மனுஷர்களையும் இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வைக்கிறார். உண்மையான வளர்ச்சி இல்லாததால்தான் மனுஷர்கள் சுவரின் மேல் வளரும் புல்லைப் போல் ஆகின்றனர். அவை வளர்ச்சி அடைந்தால், அவை வானத்தைத் தொடும் உயர்ந்த மரங்களாக மாறும். மனுக்குலத்தின் ஒரு பகுதியை பரிபூரணப்படுத்த பொல்லாத ஆவிகளுடைய கிரியையின் ஒரு பகுதியை பயன்படுத்தவும், முழு மனிதகுலமும் தங்கள் “முன்னோர்களை” உண்மையாக அறியும்படி, இந்த ஜனங்களைப் பிசாசுகளின் அக்கிரமங்களை முழுவதுமாகப் பார்க்கச் செய்யவும் தேவன் விரும்புகிறார். இந்த வழியில் மட்டுமே மனுஷர்களால் முற்றிலுமாக விடுதலையடைய முடியும், பிசாசுகளின் சந்ததியினர் மட்டுமல்ல, பிசாசுகளின் முன்னோர்களையும் கூட கைவிட முடியும். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முற்றிலுமாகத் தோற்கடித்து, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் உண்மையான உருவத்தை முழு மனுக்குலமும் அறியும்படிச் செய்வது, அதன் முகமூடியை முழுமையாகக் கிழித்து அதன் உண்மையான உருவத்தைப் பார்ப்பதுதான் தேவனுடைய உண்மையான நோக்கமாகும். இதைத்தான் தேவன் அடைய விரும்புகிறார், பூமியில் அவர் செய்த அனைத்து கிரியைகளின் இறுதி இலக்கு இதுவாகும், மேலும் அனைத்து மனுக்குலத்திலும் இதை நிறைவேற்றுவதை அவர் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். இது தேவனுடைய நோக்கத்திற்காக எல்லாவற்றையும் அசையச்செய்வதாக அறியப்படுகிறது.

எதிர்காலக் கிரியையைப் பொறுத்தவரை, அது எவ்வாறு செய்யப்படும் என்பதில் நீ தெளிவாக இருக்கிறாயா? இந்த விஷயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக: மனுஷர்கள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய ஒருபோதும் முன்வருவதில்லை என்று தேவன் ஏன் கூறுகிறார்? தாம் அவர்களுக்குக் கொடுத்த வீட்டுப்பாடத்தை முடிக்கத் தவறியவர்கள் பலர் இருப்பதாக அவர் ஏன் கூறுகிறார்? இந்த விஷயங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட முடியும்? இந்தக் கேள்விகளை நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா? இவை உனது ஐக்கியத்திற்கான தலைப்புகளாகிவிட்டனவா? கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவனுடைய தற்போதைய நோக்கங்களை மனுஷன் புரிந்து கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும். இதை அடைந்தவுடன், மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கலாம்—இது விஷயங்களைப் பற்றி சொல்ல ஒரு சிறந்த வழி அல்லவா? தேவன் மனுஷனில் எதை அடைய விரும்புகிறார் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும், இல்லையெனில், அனைத்தும் வீணாகிவிடும், மேலும் மனுஷனால் அதற்குள் பிரவேசிக்க இயலாது, அதை அடையவும் முடியாது, மேலும் அனைத்தும் வெற்றுப் பேச்சாக இருக்கும். இன்று தேவன் சொன்னதைப் பொறுத்தவரை—அதை நடைமுறைப்படுத்த ஒரு பாதையைக் கண்டுபிடித்திருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து ஜனங்கள் அனைவரும் நடுக்க உணர்வைப் பெற்றிருக்கின்றனர். அவர்களால் அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனாலும் அவர்கள் தேவனைக் குற்றப்படுத்த பயப்படுகிறார்கள். இதுவரை, தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் எத்தனை வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? பெரும்பாலான ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை எப்படி புசிப்பது மற்றும் பானம்பண்ணுவது என்பது தெரியவில்லை; இதை எப்படி சரிசெய்ய முடியும்? இன்றைய வார்த்தைகளைப் புசிப்பதற்கும் பானம்பண்ணுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தாயா? அவ்வாறு செய்வதற்கு நீ இப்போது எப்படி ஒத்துழைக்க முயற்சிக்கிறாய்? நீங்கள் அனைவரும் அந்த வார்த்தைகளைப் புசித்துப், பானம்பண்ணியவுடன், அவற்றின் மீதான உங்கள் சிந்தனைகளை நீங்கள் எந்த வழியில் விவாதிப்பீர்கள்? மனுஷன் செய்ய வேண்டியது இது அல்லவா? குறிப்பிட்ட நோய்க்கான சரியான மருந்தை ஒருவன் எவ்வாறு பரிந்துரை செய்கிறான்? உனக்கு ஒரு வாக்கியத்தை தேவன் இன்னும் நேரடியாக வெளியிட வேண்டுமா? இது அவசியமா? மேற்கூறிய பிரச்சனைகளை எப்படி முழுமையாக நீக்குவது? இது உங்கள் நடைமுறைச் செயல்களில் பரிசுத்த ஆவியானவருடன் ஒத்துழைக்க முடியுமா என்பதைப் பொறுத்ததாகும். தகுந்த ஒத்துழைப்புடன், பரிசுத்த ஆவியானவர் பெரிய கிரியையைச் செய்வார். தகுந்த ஒத்துழைப்பு இல்லாமல், மாறாகக் குழப்பம் மட்டுமே இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரால் தமது வல்லமையை கட்டவிழ்த்துவிட முடியாது. “உன்னை நீ அறிந்தால், மற்றும் உன் சத்துருக்களையும் நீ அறிந்தால், ஜெயம் எப்பொழுதும் உன்னுடையதாகவே இருக்கும்.” இந்த வார்த்தைகளை யார் முதலில் சொன்னாலும், அவை உங்களுக்கு மிகவும் பொருத்தமானவையாகவே இருக்கலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உங்கள் சத்துருக்களை அறிந்து கொள்வதற்கு முன், நீங்கள் உங்களை அறிந்து கொள்ள வேண்டும், இரண்டையும் செய்த பிறகுதான் நீங்கள் ஒவ்வொரு யுத்தத்திலும் ஜெயம் பெறுவீர்கள். இவை அனைத்து காரியங்களும் உங்களால் செய்யக்கூடியவையே ஆகும். தேவன் உன்னிடம் என்ன கேட்டாலும், உன் முழு பலத்துடன் நீ அதை நோக்கி உழைக்க வேண்டும், மேலும் இறுதியில், நீ தேவனுக்கு முன்பாக வந்து அவருக்கு உன் மிகுந்த பக்தியைக் கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். தேவன் தம்முடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்போது அவரது திருப்தியடைந்த புன்னகையை நீ காணும் வரை, இந்த தருணம் உனது மரணத்தின் நியமிக்கப்பட்ட நேரமாக இருந்தாலும், நீ உன் கண்களை மூடும்போதும், உன்னால் சிரிக்கவும் புன்னகைக்கவும் முடியும். பூமியின் மீதான உன் காலத்தின்போது, தேவனுக்காக உனது இறுதிக்கால கடமையைச் செய்ய வேண்டும். கடந்த காலத்தில், பேதுரு தேவனுக்காகத் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டான்; ஆனால் நீ இறுதியில் தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும், மேலும் உன் முழு ஆற்றலையும் அவருக்காகச் செலவழிக்க வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட ஓர் உயிரினத்தால் தேவனுடைய சார்பில் என்ன செய்ய முடியும்? ஆகவே, நீ உன்னைத் தாமதமாக அல்ல, விரைவில் தேவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். அவர் விரும்பியபடி அவர் உன்னிடமுள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். அது தேவனை மகிழ்ச்சியாக்கும் மற்றும் பிரியப்படுத்தும்வரை, அவர் உன்னில் தாம் விரும்பும்படி கிரியை செய்யட்டும். குறைகூறும் வார்த்தைகளைப் பேச மனுஷர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

முந்தைய: அத்தியாயம் 40

அடுத்த: அத்தியாயம் 42

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக