II. கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை குறித்த வார்த்தைகள்

51. யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனை பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

52. மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷதன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும் மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தையும் சுத்திகரிக்கவும், நீயாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: “தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!” என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாக செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

53. இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். நீ மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ளவன், நீ சீர்கேடடைந்தவன் மற்றும் கீழ்ப்படியாதவன் என்று மட்டும் நீ அறிந்து, ஆனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் இன்று உன்னில் அவர் செய்யும் அவரது இரட்சிப்பைத் தெளிவாக விளக்க விரும்புகிறார் என்று அறியாவிட்டால், அதன்பின் அனுபவத்தை அடைய உனக்கு வேறு வழியில்லை, அதைவிட தொடர்ந்து முன்னேற உனக்குத் திறனும் இருக்காது. தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல. அவரது 6000-ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரை—ஒவ்வொரு மனித வகையினரின் முடிவையும் அவர் வெளிப்படுத்தும் முன்—பூமியில் தேவனின் கிரியை இரட்சிப்புக்காகவே இருக்கும்; அவரை நேசிப்பவர்களை பரிபூரணப்படுத்துவதும், இவ்வாறு முற்றிலும் அவரது ஆளுகையின் கீழ் அடங்கியிருக்க அவர்களைக் கொண்டுவருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. தேவன் ஜனங்களை எவ்வாறு இரட்சித்தாலும், அவர்களது பழைய சாத்தானின் சுபாவத்தில் இருந்து உடைத்து வெளியேறும்படி செய்வதன் மூலம் இவையெல்லாம் செய்யப்படுகின்றன; அதாவது, அவர்களை ஜீவனைத் தேடும்படி செய்து அவர் இரட்சிக்கிறார். அவர்கள் அவ்விதம் செய்யவில்லை என்றால், பின்னர் தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழியும் இருக்காது. இரட்சிப்பு என்பது தேவன் தாமே செய்யும் கிரியையாகும், மேலும் ஜீவனைத் தேடுவது என்பது இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளுவதற்காக மனிதன் செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மனிதனின் பார்வையில், இரட்சிப்பு என்பது தேவனின் அன்பாகும், மற்றும் தேவனின் அன்பானது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபங்களாக இருக்க முடியாது; இரட்சிப்பு என்பது அன்பு, மனதுருக்கம் மற்றும், அதற்குமேல் ஆறுதலின் வார்த்தைகளோடு தேவனால் வழங்கப்பட்ட வரம்பற்ற ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். தேவன் மனிதனை இரட்சிக்கும் போது, அவர்கள் தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுக்கும்படியாக அவர்களைத் தமது ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொண்டு மனதை இளகச்செய்தே அவ்வாறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதாவது, மனிதனை அவர் தொடுவதே அவர்களை அவர் இரட்சிப்பதாகும். இது போன்ற இரட்சிப்பு ஓர் ஒப்பந்தத்தை செய்வதன் மூலமே செய்யப்படுகிறது. தேவன் நூறத்தனையாய் அளிக்கும்போதே மனிதன் தேவ நாமத்துக்கு முன்னால் கீழ்ப்படிய வருகிறான் மற்றும் அவருக்கு ஏற்புடையதை செய்ய முயன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிறான். தேவன் மனுக்குலத்துக்கான நோக்கமாகக் கொண்டிருப்பது இதையல்ல. சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையை செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தனுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

54. தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் கிரியையை, மனிதன் தன்னைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனப்பான்மை குறித்து அவர் தீர்ப்பு செய்யாமல், மனிதனால் அவரது நீதியான மனநிலையை அறிவது சாத்தியமில்லை, அது எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் தேவனை பற்றிய தனது பழைய ஞானத்தைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தன் முழுமையையும் வெளியாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது வெளிப்பாட்டின் மூலம், தேவனைப் பற்றிய ஞானத்தைப் பெறவும், அவனுடைய மனநிலையில் உருமாற்றமடையவும், மற்றும் தேவனுக்கு பெரும் சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சி பகிரவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடரவும் முடியாது. மனிதன் தன்னை சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் தாக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பின் தொடர்பவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, அவதரித்த தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்துவிட்டார், மனிதன் அவரைப் பற்றிய ஞானத்தையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய செயல்படுகிற மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை வென்றிட அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாகிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகள் மட்டுமே சாத்தானை அவமதிக்க முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலமாய் கடந்துபோய் தம்மை தெரிந்துகொண்டவர்களை, கையாண்டு நேர்த்தியாக்கி, அவருக்குச் சாட்சி பகிர பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகிர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்கு தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் புகழ்ச்சியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் உருமாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சி பகிர தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதை தேவன் அனுமதிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

55. கடைசி நாட்களில், மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனுக்குச் சம்பூரணமாகக் கீழ்ப்படிவதை நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். நீ இந்தச் சத்தியங்களை முக்கியமானதாகக் கருதவில்லை என்றால், மேலும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தவிர்த்து வேறு எதையும் நீ சிந்திக்காமல் இருக்கிறாய் என்றால், அல்லது அவை சம்பந்தப்படாத ஒரு புதிய வழியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தால், நீ ஒரு மாபெரும் கொடும் பாவி என்று நான் சொல்கிறேன். நீ தேவன்மீது விசுவாசம் வைத்திருந்து அதேவேளையில், சத்தியத்தையோ தேவனுடைய சித்தத்தையோ தேடாமல், அல்லது உன்னைத் தேவனிடம் நெருங்கிக் கொண்டு வரும் வழியை நேசிக்கவில்லை என்றால், நீ நியாயத்தீர்ப்பைத் தவிர்க்க முயற்சிப்பவன் என்று நான் சொல்கிறேன், மேலும் நீ ஒரு பொம்மை மற்றும் பெரிய வெள்ளை சிங்காசனத்திலிருந்து தப்பி ஓடும் ஒரு துரோகியும் கூட. தம்முடைய கண்களுக்குக் கீழுள்ள கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முயலும் கலகக்காரர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். அத்தகைய மனிதர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள். நியாயந்தீர்க்கப்பட தேவனுக்கு முன்பாக வந்து சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள். நிச்சயமாக, இது எதிர்காலத்திற்குச் சொந்தமான ஒன்றாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

56. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்த கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப் பதிலாக மனிதனால் அதைச் செய்ய முடியாது. நியாயத்தீர்ப்பானது மனிதகுலத்தை வெல்வதற்கு சத்தியத்தைப் பயன்படுத்துவது என்பதால், மனிதர்களிடையே இந்த கிரியையைச் செய்ய தேவன் இன்னும் மனித ரூபத்தில் தோன்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, கடைசி நாட்களில், உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். தேவனுடைய இரண்டாவது மனித அவதரிப்பைப் பற்றி பலருக்கும் ஒரு மோசமான உணர்வு இருக்கிறது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பை கொடுக்கும்படிக்கு தேவன் மாம்சமாவார் என்று மக்கள் நம்புவது கடினம். ஆயினும்கூட, தேவனுடைய கிரியையானது பெரும்பாலும் மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது, மனித மனம் இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதை நான் உனக்கு சொல்லியாக வேண்டும். தேவன் பிரபஞ்சத்தை நிரப்புகிற உன்னதமானவராக இருக்கிறார், அதே சமயம், ஜனங்கள் பூமியில் வெறும் புழுக்களாக இருக்கிறார்கள்; மனிதனின் மனதானது புழுக்களை மட்டுமே வளர்க்கும் ஒரு தவறான நீரின் குழி போன்றது, அதேசமயம் தேவனுடைய நினைவுகளால் செயல்படுத்தப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய ஞானத்தின் பலன் ஆகும். ஜனங்கள் எப்பொழுதும் தேவனோடு சண்டையிட முயற்சிக்கிறார்கள், இறுதியில் யார் தோற்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களையே நீங்கள் தங்கத்தை விட அதிகம் மதிப்புமிக்கவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் நான் அறிவுறுத்துகிறேன். தேவனுடைய நியாயத்தீர்ப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், நீ ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீ மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவு உயர்வாக நிற்கிறாய்? மற்றவர்கள் சத்தியத்திற்கு முன்பாக தங்கள் தலைகளைத் தாழ்த்த முடிந்தால், உன்னால் ஏன் முடியாது? தேவனுடைய கிரியையானது யாராலும் தடுத்து நிறுத்த முடியாத ஒரு உத்வேகத்தைக் கொண்டுள்ளது. நீ செய்திருக்கிற “பங்களிப்பு” காரணமாகவே அவர் மீண்டும் நியாயத்தீர்ப்பை வழங்க மாட்டார், மேலும் இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தத்தால் நீ வெல்லப்படுவாய். நீ என்னுடைய வார்த்தைகளை நம்பவில்லை என்றால், வானத்தில் இருக்கும் அந்தப் பெரிய வெள்ளை சிங்காசனம் உன் மீது தீர்ப்பளிப்பதற்காக காத்திரு! இஸ்ரவேலர் அனைவரும் இயேசுவை நிராகரித்தார்கள் மற்றும் மறுதலித்தார்கள் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், ஆனாலும் இயேசுவின் மனிதகுலத்திற்கான மீட்பின் சத்தியம் இன்னும் பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் முடிவுபரியந்தம் விரிவடைந்துள்ளது. இது தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கிய ஒரு யதார்த்தம் அல்லவா? இயேசு உன்னைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நீ இன்னும் காத்திருந்தால், நீ ஒரு செத்துப்போன மரக்கட்டை[அ] என்று நான் சொல்கிறேன். சத்தியத்திற்கு விசுவாசமற்ற மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிற உன்னைப் போன்ற ஒரு போலியான விசுவாசியை இயேசு ஏற்றுக்கொள்ள மாட்டார். மாறாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உன்னை அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதில் அவர் இரக்கம் காட்ட மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

57. தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராக சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்கு செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாக பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாரம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்த கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாக செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாக செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும். இன்றைய மாம்சமான தேவன் கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம், அவருடைய கிரியை, அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய முழு மனநிலை ஆகியவை சேர்ந்துதான் அவருடைய முழுமையாகும். அவருடைய கிரியையின் எல்லை குறைவாக இருக்கின்றபோதிலும், முழு பிரபஞ்சத்தையும் நேரடியாக ஈடுபடுத்துவதில்லை என்றபோதிலும், நியாயத்தீர்ப்பின் கிரியையின் சாராம்சம் என்பது முழு மனுக்குலத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாகும். இது சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்காகவோ அல்லது சிறு எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவோ செய்யப்படும் நியாயத்தீர்ப்பு அல்ல.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

59. மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார். சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனை பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள். அவர்கள், “தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா? தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், மனுஷன் கண்டிக்கப்படமாட்டானா? பின்னர் எப்படி அவன் இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?” என்கிறார்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்களின் வார்த்தைகள் அப்படியாக இருக்கின்றன. தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபிக்கிறார், அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார். அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும், மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மனுஷனுக்குள் இன்றியமையாதவற்றை இந்த கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், ஆனாலும் அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம், அவர் மாம்சத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான அறிவை மனுஷனுக்கு அளிக்கிறார், இதனால் தேவன் முன்பாக மனுஷன் கீழ்ப்படிகிறான். மனுஷனின் மாம்சமானது பாவத்தாலும் சாத்தானாலும் ஆனது, அது கீழ்ப்படியாதது, அது தேவனுடைய சிட்சைக்கான பொருளாகவும் இருக்கிறது. ஆகவே, மனுஷன் தன்னைத் தெரிந்துகொள்ள அனுமதிக்க, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவனுக்கு நேரிட வேண்டும், மேலும் எல்லா வகையான சுத்திகரிப்புகளையும் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் தேவனின் கிரியையானது பயனுள்ளதாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

60. மனுஷனை பரிபூரணமாக்க தேவன் தமது நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்துகிறார், அவர் மனுஷனை நேசித்திருக்கிறார், மனுஷனை இரட்சித்திருக்கிறார்—ஆனால் அவருடைய அன்புக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? நியாயத்தீர்ப்பு, மகத்துவம், கடுங்கோபம் மற்றும் சாபம் ஆகியவை இருக்கின்றன. கடந்த காலத்தில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், அவர் மனுஷனை பாதாளக்குழிக்குள் முழுமையாகத் தள்ளிடவில்லை, ஆனால் மனுஷனின் விசுவாசத்தை சுத்திகரிக்க அவ்வழியைப் பயன்படுத்தினார்; அவர் மனுஷனைக் கொல்லவில்லை, ஆனால் மனுஷனை பரிபூரணமாக்குவதற்காகவே செயல்பட்டார். மாம்சத்தின் சாராம்சம் சாத்தானிடமிருந்து வந்தது—தேவன் அதைச் சரியாகச் சொன்னார்—ஆனால் தேவனால் மேற்கொள்ளப்பட்ட உண்மைகள் அவருடைய வார்த்தைகளின்படி முடிக்கப்படவில்லை. நீ அவரை நேசிப்பதற்காகவும், நீ மாம்சத்தின் சாராம்சத்தை அறிந்து கொள்வதற்காகவும் அவர் உன்னைச் சபிக்கிறார்; நீ விழித்துக் கொள்ளவும், உனக்குள் இருக்கும் குறைபாடுகளை நீ அறிந்துகொள்ள மற்றும் மனுஷனின் முழு தகுதியற்ற தன்மையை அறிய உன்னை அனுமதிக்கவும் அவர் உன்னை சிட்சிக்கிறார். ஆகவே, தேவனின் சாபங்கள், அவருடைய நியாயத்தீர்ப்பு, அவருடைய மகத்துவம் மற்றும் கடுங்கோபம்—இவை அனைத்தும் மனுஷனை பரிபூரணமாக்குவதற்காகத்தான். இன்று தேவன் செய்கிற எல்லாவற்றையும், அவர் உனக்குள் தெளிவுபடுத்தும் நீதியான மனநிலையும்—இவை அனைத்தும் மனுஷனை பரிபூரணமாக்குவதற்காகத்தான். இதுவே தேவனின் அன்பு.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

61. தேவன் மனுஷனை நியாயந்தீர்த்தாலும் சபித்தாலும், இரண்டுமே மனுஷனை பரிபூரணமாக்குகின்றன: இவை இரண்டும் மனுஷனுக்குள் தூய்மையற்றதை பரிபூரணமாக்கவே செய்யப்படுகின்றன. இதன் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்படுகிறான், மேலும் மனுஷனுக்குள் இல்லாத விஷயங்கள் அவருடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் மூலம் பரிபூரணமாக்கப்படுகின்றன. கடுமையான வார்த்தைகள் அல்லது நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சை என எதுவாக இருந்தாலும், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் மனுஷனை பரிபூரணமாக்குகிறது, மேலும் அது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கிறது. யுகங்கள் முழுவதும் தேவன் இதுபோன்ற கிரியையைச் செய்ததில்லை; இன்று, நீங்கள் அவருடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் உங்களுக்குள் கிரியை செய்கிறார். உங்களுக்குள் சில வேதனைகளை நீங்கள் அனுபவித்திருந்தாலும், உங்கள் இருதயங்கள் உறுதியும் சமாதானமும் அடைகின்றன; தேவனுடைய இந்தக் கட்ட கிரியையை உங்களால் அனுபவிக்க முடிகிறது என்பது உங்களது ஆசீர்வாதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் எதை ஆதாயமாக்கிக்கொள்ள முடியும் என்பதைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், இன்று தேவனின் கிரியையில் நீங்கள் காண்பது அன்பு மட்டுமாகத்தான் இருக்கிறது. தேவனின் நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் மனுஷன் அனுபவிக்காவிட்டால், அவனுடைய செயல்களும் ஆர்வமும் எப்போதும் மேற்பரப்பு மட்டத்திலேயே இருக்கும், மேலும் அவனது மனநிலையும் எப்போதும் மாறாமல் இருக்கும். இது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறதா? இன்று, ஆணவமும் அகந்தையும் நிறைந்த மனுஷனுக்குள் இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், மனுஷனின் மனநிலை முன்பை விட மிகவும் நிலையானதாக இருக்கிறது. தேவன் உன்னிடத்தில் செய்யும் விஷயங்கள் உன்னை இரட்சிப்பதற்காக செய்யப்படுகின்றன, மேலும் அந்த நேரத்தில் நீ சிறிது வலியை உணர்ந்தாலும், உனது மனநிலையில் மாற்றம் ஏற்படும் நாள் வரும். அந்த நேரத்தில், நீ திரும்பிப் பார்த்து, தேவனின் கிரியை எவ்வளவு ஞானமானது என்பதைக் காண்பாய், அந்த நேரத்தில் உன்னால் தேவனின் சித்தத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்” என்பதிலிருந்து

62. ஜனங்கள் தங்கள் பழைய மூதாதையனான சாத்தானைக் கைவிட்டு விலகச்செய்வதற்காகவே இப்போது கிரியை நடப்பிக்கப்பட்டு வருகிறது. வார்த்தையின் அனைத்து நியாயத்தீர்ப்புகளும் மனிதகுலத்தின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்தவும் வாழ்க்கையின் சாராம்சத்தை ஜனங்கள் புரிந்துகொள்ள உதவுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் தொடர் நியாயத்தீர்ப்புகள் ஜனங்களின் இருதயங்களை உருவ குத்துகின்றன. ஒவ்வொரு நியாயத்தீர்ப்பும் அவர்களின் விதியோடு தொடர்புடையதாக இருக்கிறது மேலும் அது அவர்களுடைய இருதயங்களை காயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அதனால் அவர்கள் வாழ்க்கையை அறிந்து கொள்ளுகிறார்கள், இந்த அருவருப்பான உலகத்தை அறிகிறார்கள், தேவனின் ஞானத்தையும் சர்வவல்லமையையும் அறிகிறார்கள், மற்றும் சாத்தானால் சீர்குலைக்கப்பட்ட மனிதகுலத்தையும் அறிகிறார்கள். இத்தகையக் கடிந்துகொள்ளுதலையும் நியாயத்தீர்ப்புகளையும் மனிதன் எந்த அளவிற்கு அதிகமாகப் பெறுகிறானோ அந்த அளவிற்கு மனிதனின் இருதயம் காயப்படுவதோடு அவனுடைய ஆவி விழிப்படையும். இந்த அளவுக்கதிகமாக சீர்குலைக்கப்பட்ட மற்றும் மிக ஆழமாக வஞ்சிக்கப்பட்ட ஜனங்களின் ஆவியை விழிப்படையச் செய்வதே இந்த வகையான நியாயத்தீர்ப்புகளின் இலக்காகும். மனிதனிடம் ஆவி இல்லை, அதாவது, அவனுடைய ஆவி நீண்ட காலத்திற்கு முன்னமே மரித்துவிட்டது மேலும் பரலோகம் இருப்பதை அவன் அறியவில்லை, தேவன் ஒருவர் இருப்பதை அவன் அறியவில்லை, மற்றும் மரணப் பாதாளத்தில் அவன் போராடிக்கொண்டிருப்பதை அவன் நிச்சயமாக அறியவில்லை; பூமியில் இந்தத் தீய நரகத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? அவனது இந்த அழுகிப்போன சடலம் சாத்தானால் சீர்குலைக்கப்பட்டு மரணப் பாதளத்தில் விழுந்துவிட்டதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? இந்த உலகத்தில் உள்ள யாவும் வெகு காலத்திற்கு முன்னமே சீர்ப்படுத்த முடியாதபடி பாழ்பட்டுப் போய்விட்டதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? மேலும் சிருஷ்டிகர் இன்று உலகத்திற்கு வந்துவிட்டதையும் அவரால் இரட்சிக்கப்படக் கூடிய சீர்குலைக்கப்பட்ட ஒரு ஜனக் குழுவினரை அவர் தேடிக்கொண்டு இருப்பதையும் அவனால் அறிந்துகொள்ளுவது எவ்வாறு சாத்தியம்? சாத்தியமான ஒவ்வொரு புடமிடுதலையும் நியாயத்தீர்ப்பையும் மனிதன் அனுபவித்த பின்னரும், அவனது மந்தமான மனசாட்சி இன்னும் அசையவில்லை மற்றும் உண்மையில் ஏறக்குறைய உணர்வற்றதாகவே இருக்கிறது. மனிதகுலம் எவ்வளவு சீர்கெட்டதாக இருக்கிறது! இத்தகைய நியாயத்தீர்ப்பு வானத்தில் இருந்து விழும் கொடிய கல்மழையைப் போல் இருந்தாலும், அது மனிதனுக்கு மிகுந்த நன்மையை அளிப்பதாக இருக்கிறது. இது போல ஜனங்களை நியாயந்தீர்க்காவிட்டால், முடிவுகள் எதுவும் இருக்காது மற்றும் துன்பப் பாதளத்தில் இருந்து ஜனங்களை மீட்பது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகிவிடும். இந்தக் கிரியை இல்லை என்றால், நரகத்தில் இருந்து வெளிவருவது ஜனங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும், ஏனெனில் நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர்களுடைய இருதயங்கள் மரித்துப்போய்விட்டன மேலும் அவர்களுடைய ஆவிகள் வெகு காலத்திற்கு முன்னரே சாத்தானின் காலால் மிதியுண்டு போயின. சீர்குலைவின் மிக ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் உங்களை இரட்சிக்க விடாமுயற்சியுடன் அழைப்பது, கடுமையாக நியாயந்தீர்ப்பது அவசியமாகிறது; அப்போதுதான் உங்கள் உறைந்துபோன இருதயங்களைத் தட்டி எழுப்புவது சாத்தியமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்” என்பதிலிருந்து

64. நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாக கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்த துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவு புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடந்துகொண்டு, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் ஊழியம் செய்யக் கூட தகுதியில்லாதவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாக கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் நான் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையை தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.

முந்தைய: C. இறுதி காலமாகிய ராஜ்யத்தின் காலம் குறித்து

அடுத்த: A. சாத்தான் மனுக்குலத்தை எவ்வாறு சீர்கெட்டுப்போகச் செய்கிறான் என்பதை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக