கிரியையும் பிரவேசித்தலும் (10)

மனிதகுலம் இவ்வளவு தூரம் முன்னேறியிருப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலையாகும். தேவனுடைய கிரியையும் மனுஷனின் பிரவேசமும் தோளோடு தோள் சேர்ந்து முன்னேறுகின்றன, எனவே தேவனுடைய கிரியையும் இணை எதுவும் இல்லாத ஓர் அற்புதமான நிகழ்வாகும். இன்றுவரை மனுஷனின் பிரவேசம் மனுஷனால் முன்னெப்போதும் கற்பனை செய்யப்படாத ஓர் அதிசயமாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அதன் உச்சநிலையை எட்டியுள்ளது—மேலும், அதைத் தொடர்ந்து மனுஷனின் “பிரவேசம்”[1] அதன் உச்சத்தை எட்டியுள்ளது. தேவன் தம்மால் இயன்றவரை தம்மைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறார், மேலும் அவர் ஒருபோதும் மனுஷகுலத்திற்கோ அல்லது பிரபஞ்சம் மற்றும் எல்லாவற்றிற்குமோ எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இதற்கிடையில், மனுஷன் தேவனுடைய தலை மீது ஏறி நிற்கிறான், தேவன் மீதான மனுஷனின் அடக்குமுறை அதன் உச்சத்தை எட்டியுள்ளது; எல்லாம் அதன் உச்சத்தை அடைந்து, நீதியின் நாள் தோன்றும் காலமாக இது இருக்கிறது. மந்தாரம் தேசத்தை மூடுவதற்கும், இருள் எல்லா ஜனங்களையும் மூடுவதற்கும் ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறீர்கள்? தேவன் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறார்—பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக,—அவருடைய சகிப்புத்தன்மை நீண்ட காலத்திற்கு முன்பே அதன் எல்லையை எட்டியுள்ளது. அவர் மனிதகுலத்தின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார், மனுஷனின் அநீதி எவ்வளவு காலத்திற்கு கலவரத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார், ஆனாலும், நீண்ட காலமாக மரத்துப்போயிருக்கும் மனுஷன் எதையும் உணர்வதில்லை. மேலும் இதுவரை தேவனுடைய கிரியைகளைக் கவனித்திருக்கிறவன் யார்? இதுவரை தங்கள் கண்களை உயர்த்தி தூரத்தைப் பார்த்தவர்கள் யார்? இதுவரை கவனமாகக் கேட்டவன் யார்? சர்வவல்லவருடைய கரங்களில் இதுவரை இருந்தவர் யார்? ஜனங்கள் அனைவரும் கற்பனைப் பயங்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்[2]. வைக்கோல் மற்றும் வைக்கோல் குவியலால் என்ன பயன்? மனுவுருவான தேவனை மரண சித்திரவதை செய்ய மட்டுமே அவர்களால் முடியும். அவர்கள் வைக்கோல் மற்றும் வைக்கோல் குவியல்களாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் “எல்லாவற்றிலும் சிறப்பாகச்”[3] செய்யும் ஒரு காரியம் இன்னும் இருக்கிறது: தேவனை மரண சித்திரவதை செய்து, பின்னர் “அது ஜனங்களுடைய இருதயங்களை மகிழ்விக்கிறது” என்று அழுவதுதான். என்ன ஒரு இறால் வீரர்கள் மற்றும் நண்டு தளபதிகளின் கூட்டங்கள்! குறிப்பிடத்தக்க வகையில், ஜனங்களுடைய இடைவிடாத போக்கின் மத்தியில், அவர்கள் தங்கள் கவனத்தை தேவன் மீது செலுத்துகிறார்கள், ஓர்ஊடுருவ முடியாத முற்றுகையால் அவரை சுற்றி வளைக்கிறார்கள். அவர்களின் உக்கிரம் இன்னும் அதிகமாக எரிகிறது[4], அவர்கள் ஓர் அங்குலம் கூட நகர முடியாதபடி, கூட்டமாக தேவனைச் சூழ்ந்துள்ளனர். தங்கள் கைகளில், அவர்கள் எல்லா வகையான ஆயுதங்களையும் ஏந்தி, எதிரியைப் பார்ப்பது போல், தங்களின் கோபம் நிறைந்த கண்களால் தேவனைப் பார்க்கிறார்கள்; அவர்கள் “தேவனுடைய அவயவத்தை அங்கம் அங்கமாகப் பிய்க்க” துடிக்கிறார்கள். எவ்வளவு குழப்பம்! மனுஷனும் தேவனும் ஏன் சமரசம் செய்ய முடியாத எதிரிகளாக மாறியிருக்கிறார்கள்? மிகவும் அன்பான தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே பகை இருக்க முடியுமா? தேவனுடைய செயல்களால் மனுஷனுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதாக இருக்க முடியுமா? அவை மனுஷனுக்கு தீங்கு விளைவிக்குமா? அவர் மனுஷனின் முற்றுகையை உடைத்து, மூன்றாவது வானத்திற்குத் திரும்புவார், மேலும் ஒருமுறை மனுஷனை சிறைக்குள் தள்ளுவார் என்ற ஆழ்ந்த பயத்தினால், மனுஷன் தேவன் மீது நிலையான பார்வையை வைக்கிறான். மனுஷன் தேவனைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறான், அவன் பதற்றமாக இருக்கிறான், மேலும் மனுஷனின் மத்தியில் இருக்கும் தேவனை இலக்காகக் கொண்ட ஓர் “இயந்திர துப்பாக்கி” வைத்திருக்கும் தூரத்தில் தரையில் நெளிந்து கொண்டிருக்கிறான். இது தேவனுடைய சிறிதளவு அசைவிலும், மனுஷன் அவருடைய அனைத்தையும்—அவரது முழு சரீரத்தையும், அவர் அணிந்துள்ள அனைத்தையும்—எதையும் விட்டுவிடாமல் அழித்துவிடுவது போல இருக்கிறது. தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான உறவு சரிசெய்ய முடியாததாக இருக்கிறது. தேவன் மனுஷனுக்குப் புரியாதவராக இருக்கிறார்; இதற்கிடையில், மனுஷன் என் பிரசன்னத்தைப் பார்க்க முற்றிலும் விரும்பாமலும், என் நியாயத்தீர்ப்பை மன்னிக்காமல் வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு, சோம்பித் திரிகிறான். இவ்வாறு, மனுஷன் இதை எதிர்பார்க்காத போது, நான் அமைதியாகக் கடந்து செல்கிறேன், இனி மனுஷர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டேன். மனிதன் எல்லாவற்றிலேயும் மிகவும் தாழ்ந்த “விலங்காக” இருக்கிறான், மேலும் நான் அவனை இனி கவனிக்க விரும்புவதில்லை. நீண்டகாலத்திற்கு முன்பே நான் நிம்மதியாக வசிக்கும் இடத்திற்கு என் கிருபையை முழுவதுமாக எடுத்துச் சென்றுவிட்டேன்; மனுஷன் மிகவும் கீழ்ப்படியாதவனாக இருப்பதால், என் விலையேறப்பெற்ற கிருபையை அவன் அனுபவிக்க என்ன காரணத்தைப் பெற்றிருக்கிறான்? எனக்கு விரோதமான வல்லமைகளுக்கு வீணாக என் கிருபையை வழங்க நான் தயாராக இல்லை. வைராக்கியமுள்ள மற்றும் நான் திரும்பி வருவதை ஆர்வத்துடன் வரவேற்கிற கானான் விவசாயிகளுக்கு எனது விலையேறப்பெற்ற பழங்களை வழங்குவேன். சிறந்த சகாப்தத்தில் ஒன்றாகப் பிரவேசிப்பதில் வானங்கள் நித்திய காலமாக நிலைத்திருக்கவும், அதைவிட, மனுஷன் முதுமை அடையாமல் இருக்கவும், வானமும் மனுஷனும் என்றென்றும் இளைப்பாறுதலில் இருக்கவும், அந்தப் பசுமையான “தேவதாரு விருட்சங்களும் ஊசி இலை மரங்களும்” என்றென்றும் தேவனுடனும் என்றென்றும் வானங்களுடனும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நான் மனுஷனுடன் பல நாட்களையும் இரவுகளையும் செலவழித்திருக்கிறேன். நான் இந்த உலகத்தில் மனுஷனுடன் தங்கியிருந்திருக்கிறேன், நான் மனுஷனிடத்தில் ஒருபோதும் எந்தவித கோரிக்கைகளையும் வைத்ததில்லை; நான் வெறுமனே மனுஷனை எப்போதும் முன்னோக்கி வழிநடத்துகிறேன், நான் மனுஷனை வழிநடத்துவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை, மேலும் மனித இனத்தின் தலைவிதிக்காக, நான் இடைவிடாமல் ஆயத்த வேலையைச் செய்கிறேன். பரலோகப் பிதாவின் சித்தத்தை எப்போதாவது புரிந்துகொண்டவன் யார்? வானத்திற்கும் பூமிக்கும் நடுவே பயணித்தது யார்? மனுஷனின் “முதுமையை” இனி அவனுடன் கழிக்க நான் விரும்பவில்லை, ஏனென்றால் மனுஷன் மிகவும் பழமையானவன், அவனுக்கு ஒன்றும் புரியவில்லை; அவனுக்குத் தெரிந்த ஒரே விஷயம் என்னவென்றால், நான் வைத்த விருந்தில் தெவிட்டும் அளவிற்குப் புசித்து, எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி, வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதுதான். மனிதகுலம் மிகவும் பேராசையுள்ளது, மனுஷர்களிடையே கூச்சல், இருள் மற்றும் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது, எனவே கடைசி நாட்களின்போது ஆதாயப்படுத்திய ஜெயத்தின் விலையேறப்பெற்ற பலன்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. மனுஷன் தானே உருவாக்கிய செழிப்பான ஆசீர்வாதங்களை அனுபவிக்கட்டும், ஏனென்றால், மனுஷன் என்னை வரவேற்கவில்லை—நான் ஏன் மனிதகுலத்தை ஒரு புன்னகைக்காக போலியாக வற்புறுத்த வேண்டும்? உலகின் ஒவ்வொரு மூலையிலும் வெப்பம் இல்லாதிருக்கிறது, உலகின் அனைத்து நிலப்பரப்புகளிலும் வசந்தத்தின் தடயமே இல்லை, ஏனென்றால், தண்ணீரில் வாழும் உயிரினத்தைப் போல, மனுஷன் சிறிதும் வெப்பத்தைப் பெற்றிருக்கவில்லை, அவன் ஒரு சடலத்தைப் போன்றவன், மேலும், அவனது நரம்புகள் வழியாகச் செல்லும் இரத்தம் கூட இருதயத்தைக் குளிர்விக்கும் உறைந்த பனிக்கட்டி போன்றதாக இருக்கிறது. சூடு எங்கே? மனுஷன் காரணமின்றி தேவனை சிலுவையில் அறைந்தான், அதன் பிறகு அவன் சிறிதும் சந்தேகத்தை உணரவில்லை. யாரும் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை, மேலும் இந்தக் கொடூரமான கொடுங்கோலர்கள் இன்னும் ஒருமுறை மனுஷகுமாரனை “உயிருடன் பிடிக்க”[5] திட்டமிட்டு, தங்கள் இருதயங்களில் உள்ள வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, அவரைத் துப்பாக்கிப் படையின் முன் கொண்டு வருகிறார்கள். இந்த ஆபத்தான நிலத்தில் நான் தங்கியிருப்பதால் என்ன பயன்? நான் தங்கியிருந்தால், நான் மனுஷனுக்குக் கொண்டுவரும் ஒரே விஷயம் மோதல் மற்றும் வன்முறையாகும், மற்றும் முடிவில்லாத பிரச்சனையாக இருக்கும், ஏனென்றால், நான் மனுஷனுக்கு ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டுவந்திருக்கவில்லை, யுத்தத்தை மட்டுமே கொண்டுவந்திருக்கிறேன். மனிதகுலத்தின் கடைசி நாட்கள் யுத்தத்தால் நிறைந்திருக்க வேண்டும், மேலும் மனுஷனின் இலக்கு வன்முறை மற்றும் மோதல்களுக்கு மத்தியில் கவிழ்க்கப்பட வேண்டும். நான் யுத்தத்தின் “மகிழ்ச்சியில்” பங்கு கொள்ள விரும்பவில்லை, மனுஷனின் இரத்தம் சிந்துதல் மற்றும் பலி ஆகியவற்றுடன் நான் உடன்படமாட்டேன், ஏனென்றால் மனுஷனின் நிராகரிப்பு என்னை “விரக்திக்கு” தள்ளியது, மேலும் மனுஷனின் யுத்தங்களைப் பார்க்க எனக்கு மனமில்லை. மனுஷன் தன் மனம் திருப்தியடையும் வரை போராடட்டும். நான் இளைப்பாற விரும்புகிறேன், நான் தூங்க விரும்புகிறேன்; அவனது கடைசி நாட்களில் பிசாசுகள் மனித குலத்திற்குத் துணையாக இருக்கட்டும்! என் சித்தத்தை அறிந்திருப்பவன் யார்? நான் மனுஷனால் வரவேற்கப்படாததாலும், அவன் எனக்காகக் காத்திருக்காததாலும், என்னால் அவனிடம் விடைபெற மட்டுமே முடியும், மனித குலத்தின் இலக்கை அவனுக்கு அளிக்கிறேன், என் ஐசுவரியங்கள் அனைத்தையும் மனுஷனுக்குக் கொடுத்துவிடுகிறேன், என் ஜீவனை மனுஷர்கள் மத்தியில் விதைக்கிறேன், என் ஜீவனின் விதையை மனுஷனின் இருதயமாகிய நிலத்தில் விதைக்கிறேன், என்றென்றைக்குமான நினைவுகளை அவனுக்கு விட்டுச் செல்கிறேன், என் முழு அன்பையும் மனித குலத்திற்கு அளிக்கிறேன், மேலும் மனுஷன் என்னில் வைத்துப் போற்றுகின்ற அனைத்தையும், ஒருவருக்கொருவர் ஏங்கும் அன்பின் பரிசாக, மனுஷனுக்குக் கொடுக்கிறேன். நாம் ஒருவரையொருவர் என்றென்றும் நேசிக்க வேண்டும் என்றும், நம்முடைய நேற்றைய தினம் நாம் ஒருவருக்கொருவர் கொடுக்கும் சிறந்த விஷயமாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன், ஏனென்றால், நான் ஏற்கனவே மனிதகுலத்திற்கு என்னை முழுமையாக அளித்துள்ளேன்—மனுஷன் குறைகூறுவதற்கு என்ன இருக்க முடியும்? நான் ஏற்கனவே என் வாழ்நாள் முழுவதையும் மனுஷனிடம் விட்டுவிட்டேன், ஒரு வார்த்தையும் இல்லாமல், மனிதகுலத்திற்காக, அன்பின் அழகான நிலத்தை உழுவதற்கு நான் கடினமாக உழைத்தேன்; நான் ஒருபோதும் மனுஷனிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்ததில்லை, வெறுமனே மனுஷனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்து மனிதகுலத்திற்கு இன்னும் அழகான நாளையதினத்தை உருவாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்திருக்கவில்லை.

தேவனுடைய கிரியை செழுமையாகவும், ஏராளமாகவும் இருந்தாலும், மனுஷனின் பிரவேசம் மிகவும் குறைபாடான ஒன்றாக இருக்கிறது. மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான கூட்டு “முயற்சியில்”, கிட்டத்தட்ட அனைத்தும் தேவனுடைய கிரியையாகத்தான் இருக்கிறது; மனுஷன் எவ்வளவு பிரவேசித்திருக்கிறான் என்பதைப் பொறுத்தவரை, ஏறக்குறைய அதைக் காட்ட அவனிடம் எதுவும் இல்லை. மிகவும் ஏழ்மையானவனாகவும் மற்றும் குருடனாகவும் இருக்கும் மனுஷன், இன்றைய தேவனுக்கு எதிராகத் தனது பலத்தைத் தனது கைகளில் உள்ள “பண்டைய ஆயுதங்களைக்” கொண்டுதான் அளவிடுகிறான். இந்த “பழமையான குரங்குகள்” அரிதாகவே நிமிர்ந்து நடக்க முடியும், மேலும் தங்கள் “நிர்வாண” சரீரங்களால் அவமானத்தை உணர்வதே இல்லை. தேவனுடைய கிரியையை மதிப்பிட அவைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த நான்கு கால் குரங்குகளில் பலவற்றின் கண்கள் ஆத்திரத்தால் நிரம்பி வழிகின்றன, மேலும் அவைகள் தங்கள் கைகளில் பண்டைய கல் ஆயுதங்களுடன் தேவனுக்கு எதிராகத் தங்களைத் தாங்களே முன்னிறுத்துகின்றன, நாடு முழுவதும் பிரபலமாகப்போகிறதான, உலகம் இதுவரை கண்டிராத ஒன்றைப் போன்றதாகிய குரங்கு மனுஷர்களின் போட்டியைத் தொடங்கவும், குரங்கு மனுஷர்களுக்கும் தேவனுக்கும் இடையே கடைசி நாட்களில் ஒரு போட்டியை நடத்துவதற்கும் முயற்சிக்கின்றன. இவைகளில் பல பாதி நிமிர்ந்து நிற்கும் பழங்காலக் குரங்கு மனுஷர்கள், மேலும், மனநிறைவால் நிரம்பி உள்ளன. அவைகளின் முகத்தை மறைக்கும் முடி ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டிருக்கிறது, கொலை செய்யும் நோக்கத்தால் நிறைந்திருக்கின்றன, மேலும் அவைகள் தங்கள் முன்னங்கால்களை உயர்த்துகின்றன. அவைகள் இன்னும் முழுமையாக நவீன மனுஷனாக பரிணமிக்கவில்லை, அதனால் சில சமயங்களில் நிமிர்ந்து நிற்கின்றன, சில சமயம் தவழ்கின்றன, வியர்வைத் துளிகள் நெற்றியில் நெருக்கமாக நிரம்பிய பனித்துளிகள் போல மூடிக்கொண்டிருக்கின்றன—அவைகளின் ஆர்வமே அதற்குச் சான்றாக இருக்கிறது. பழமையான, பழங்கால மனிதக் குரங்கு மனுஷன் மற்றும் அவைகளின் கூட்டாளிகள், அனைவரும் நான்கு கால்களால் நிற்பதைப் பார்க்கும்போது, அதன் நான்கு கால்களும் பருமனாகவும் மெதுவாகவும் காணப்படுகின்றன, அடிகளைத் தடுத்து நிறுத்த முடியாமலும் எதிர்த்துப் போராடும் பெலன் இல்லாமலும், அவைகள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமலும் இருக்கின்றன. கண் இமைக்கும் நேரத்தில்—என்ன நடந்தது என்று பார்க்க நேரம் கிடைக்கும் முன்—மேடையில் உள்ள “கதாநாயகன்” தரையில் விழுந்து, கைகால்களை காற்றில் அசைக்கிறான். இத்தனை ஆண்டுகளாக தரையில் தவறாகக் காட்சியளித்த அந்த உறுப்புகள், திடீரென்று தலைகீழாகப் புரட்டப்பட்டுவிட்டன, மேலும், குரங்கு மனுஷன் எதிர்ப்பதற்கான விருப்பத்தை இனி ஒருபோதும் பெற்றிருக்க மாட்டான். இந்த நேரத்திலிருந்து, மிகவும் பழமையான குரங்கு மனுஷர்கள் பூமியிலிருந்து அழிக்கப்படுகிறார்கள்—அது உண்மையிலேயே “துயரமானது”. இந்தப் பழங்கால குரங்கு மனுஷன் இத்தகைய ஒரு திடீர் முடிவுக்கு வந்தான். மனுஷனின் அற்புதமான உலகத்திலிருந்து அது ஏன் இவ்வளவு சீக்கிரம் விரைந்து நடந்திருக்க வேண்டும்? அடுத்த கட்ட உத்தி பற்றி ஏன் தன் கூட்டாளிகளுடன் ஆலோசிக்கவில்லை? தேவனுக்கு எதிராக ஒருவரின் பலத்தை அளவிடும் இரகசியத்தை விட்டுவைக்காமல் உலகத்திடம் விடைபெறுவது எவ்வளவு பரிதாபகரமானது! “பண்டையக் கலாச்சாரம் மற்றும் கலைகளை” அதன் சந்ததியினருக்கு வழங்காமல் விட்டுவிட்டு, ஒரு வயதான குரங்கு ஒரு சத்தமும் இல்லாமல் மரித்தது எவ்வளவு சிந்தனையற்றது. தனக்கு நெருக்கமானவர்களைத் தன் பக்கம் அழைத்துத் தன் அன்பைச் சொல்ல நேரமில்லை, கற்பலகையின் மீது எந்தச் செய்தியையும் எழுதி வைக்கவில்லை, பரலோக மகிமையையும் பகுத்தறியவில்லை, அதனுடைய சொல்ல முடியாத கஷ்டத்தைப் பற்றி எதுவும் சொல்லவுமில்லை. அது தன் கடைசி மூச்சை விடும்போது, அது கண்களை மூடி, நான்கு உறுதியான கால்கள் வானத்தை நோக்கி எப்போதும் மரக்கிளைகள் போல மேல்நோக்கி ஒட்டிக்கொள்ளும் முன்பு, “தேவனுக்கு சவால் விடும் யுத்த மேடையில் ஏறாதே” என்று அவர்களிடம் சொல்ல, தன் சந்ததியினரை மரித்துக்கொண்டிருக்கும் தன் சரீரத்தின் பக்கம் அழைக்கவில்லை. அது ஒரு கசப்பான மரணமாகத் தெரிகிறது…. திடீரென்று, மேடைக்கு அடியில் இருந்து ஒரு கர்ஜிக்கும் சிரிப்பு வெடித்தது; பாதி நிமிர்ந்து நிற்கும் குரங்கு மனுஷர்களில் ஒருவன் கலக்கமுற்றிருக்கிறான்; வயதான குரங்கு மனுஷனை விட மேம்பட்ட விலங்குகளான மறிமான் அல்லது பிற காட்டு இரைகளை வேட்டையாடுவதற்காக ஒரு “கல் குச்சியைப்” பிடித்து, கோபத்தால் நிறைந்து, அதன் மனதில் நன்கு சிந்திக்கப்பட்ட திட்டத்தை[6] வைத்துக்கொண்டு, அது யுத்த மேடையின் மீது குதிக்கிறது, ஏதோ அது ஒரு மெச்சிக்கொள்ளத்தக்க செயலைச் செய்தது போல் இருக்கிறது. அதனுடைய கல் குச்சியின் “பலத்தைப்” பயன்படுத்தி “மூன்று நிமிடங்கள்” வரைக்கும் நிமிர்ந்து நேராக நிற்பதற்கு சமாளிக்கிறது. இந்த மூன்றாவது “காலின்” “பலம்” எவ்வளவு அதிகம்! இது பெரிய, விகாரமான, பாதி அளவே நிமிர்ந்து நிற்கும் முட்டாளாகிய குரங்கு மனுஷனை மூன்று நிமிடங்கள் நிற்க வைத்துவிட்டது—இந்த வணக்கத்திற்குரிய[7] வயதான குரங்கு மனுஷன் மிகவும் ஆதிக்கம் செலுத்துபவனாக இருப்பதில் ஆச்சரியமில்லை. நிச்சயமாக, பண்டைய கல் “அதன் நற்பெயருக்கு ஏற்றவாறு வாழ்கிறது” என்பதை நிறைவேற்றுகிறது: ஒரு கத்தி கைப்பிடி, விளிம்பு மற்றும் முனை உள்ளது, ஒரே குறைபாடு விளிம்பிற்கு பளபளப்பு இல்லாததுதான்—அது எவ்வளவு வருந்தத்தக்கது. பழங்காலத்தின் “சிறிய கதாநாயகனைப்” பார்க்கவும், மேடையில் நின்று கீழே உள்ளவர்களை, ஏதோ அவர்கள் ஆண்மையற்ற தாழ்ந்தவர்கள் போலவும், மேலும் அது ஒரு துணிச்சலான கதாநாயகன் போலவும் இழிவான பார்வையுடன் பார்க்கிறது. அது தன் இருதயத்தில், மேடைக்கு முன்னால் உள்ளவர்களை இரகசியமாக வெறுக்கிறது. “நாடு சிக்கலில் உள்ளது, நாம் ஒவ்வொருவருமே பொறுப்பாளிகளாய் இருக்கிறோம், நீங்கள் ஏன் ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள்? நாடு பேரழிவை எதிர்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா, ஆனால் இரத்தம் சிந்தும் யுத்தத்தில் ஈடுபட மாட்டீர்களா? நாடு பேரழிவின் விளிம்பில் உள்ளது—நீங்கள் ஏன் அக்கறை காட்டுவதில் முதன்மையாகவும், உங்களது சுய மகிழ்ச்சிக்காக கடைசியாகவும் இருக்கக்கூடாது? நாடு தோல்வியடைவதையும், அதன் ஜனங்கள் சீரழிந்து போவதையும் உங்களால் எப்படி நின்று பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது? தேசிய அடிமைத்தனத்தின் அவமானத்தை நீங்கள் சகிக்கத் தயாராக இருக்கிறீர்களா? என்ன ஓர் எதற்கும் உதவாத கூட்டத்தினர்!” அது இவ்வாறு நினைக்கும் போது, மேடைக்கு முன் சண்டைகள் வெடிக்கின்றன, மேலும் அதன் கண்கள் தீப்பிழம்புகளை சுடுவது[8] போல் இன்னும் அதிகமாக எரிகின்றன. அது ஜனங்களை மகிழ்ச்சியடையச் செய்ய சண்டையில் தேவனைத் தோல்வியடைய வைக்கவும், துணிந்து தேவனைக் கொல்லவும் துடிக்கிறது. அதன் கல் கருவியானது தகுதியான புகழைப் பெற்றிருந்தாலும், அது ஒருபோதும் தேவனுக்கு விரோதமாக இருக்க முடியாது என்பதை அது அறியவில்லை. அது தன்னைத் தற்காத்துக் கொள்ள நேரமில்லாமல், படுத்துக்கிடந்து எழுந்திருக்க நேரமில்லாமல், முன்னும் பின்னுமாக நடுங்கி, இரு கண்களிலிருந்தும் பார்வையை இழந்துவிட்டது. அது அதன் பழைய மூதாதையருக்குக் கீழே விழுந்து மீண்டும் எழுவதில்லை; பழங்கால குரங்கு மனுஷனை இறுகப் பற்றிக் கொண்டு, அது இனி ஒருபோதும் அழுவதில்லை, மேலும் அதன் தாழ்வு மனப்பான்மையை ஒப்புக்கொள்கிறது, இனி எதிர்க்க எந்த விருப்பமும் கொண்டிருப்பதில்லை. அந்த இரண்டு பரிதாபகரமான குரங்கு மனுஷர்களும் மேடைக்கு முன்பாகவே மரித்துவிடுகிறார்கள். இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டிருந்த மனிதகுலத்தின் முன்னோர்கள், நீதியின் சூரியன் தோன்றிய நாளில் அறியாமையால் மரித்தது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது! இவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை அவர்களை விட்டுக் கடந்து செல்ல அனுமதித்திருப்பது—அவர்களின் ஆசீர்வாதத்தின் நாளில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்திருந்த குரங்கு மனுஷர்கள், பிசாசுகளின் ராஜாவுடன் “அனுபவிப்பதற்கு” ஆசீர்வாதங்களைப் பாதாளத்திற்கு எடுத்துச் செல்வது எவ்வளவு முட்டாள்தனமானது! இந்த ஆசீர்வாதங்களை ஜீவனுள்ளவர்களின் உலகில் தங்கள் குமாரர்கள் மற்றும் குமாரத்திகளுடன் அனுபவிக்க ஏன் வைத்திருக்கக்கூடாது? அவர்கள் பிரச்சினையை மட்டும்தான் கேட்கிறார்கள்! ஒரு சிறிய அந்தஸ்து, நற்பெயர் மற்றும் வீண்பெருமைக்காக, அவர்கள் கொல்லப்படும் துரதிர்ஷ்டத்தை அனுபவித்து, நரகத்தின் வாயில்களைத் திறக்க முதன்மையாக இருக்கும்படிப் போராடி அதன் குமாரர்களாக மாறுவது எவ்வளவு வீணானது. அத்தகைய விலைக்கிரயம் மிகவும் வீணானது. மிகவும் “தேசிய உணர்வு நிறைந்த” அத்தகைய பழைய முன்னோர்கள் “தங்களுக்கு மிகவும் கண்டிப்பானவர்களாகவும், ஆனால் மற்றவர்களிடம் மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும்,” இருந்து தங்களை நரகத்தில் தள்ளி அடைத்துக்கொள்வதோடு, அந்த வலிமையற்ற தாழ்ந்தவர்களை வெளியேவிட்டு மூடுவது எவ்வளவு பரிதாபகரமானதாக இருக்கக் கூடும். இது போன்ற “ஜனங்களின் பிரதிநிதிகளை” எங்கே காண முடியும்? அவர்கள் “தங்கள் சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும்” மற்றும் “எதிர்கால சந்ததியினரின் சமாதானமான வாழ்க்கைக்காகவும்”, தேவனைத் தலையிட அனுமதிக்க மாட்டார்கள், அதைப்போலவே, அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்கவும் மாட்டார்கள். கட்டுப்பாடு இல்லாமல், அவர்கள் “தேசிய காரணத்திற்காக” தங்களை அர்ப்பணித்து, ஒரு வார்த்தையும் இல்லாமல் பாதாளத்தில் பிரவேசிக்கிறார்கள். அத்தகைய நாட்டுப்பற்றை எங்கே காண முடியும்? தேவனுடன் யுத்தம் பண்ணும்போது, அவர்கள் மரணத்தையோ, இரத்தம் சிந்துவதையோ பற்றி பயப்படுவதில்லை, அவர்கள் நாளைய தினத்தைக் குறித்தும் அதிகம் கவலைப்படுவதில்லை. அவர்கள் வெறுமனே யுத்தகளத்திற்குச் செல்கிறார்கள். அவர்களுடைய “அர்ப்பணிப்பின் ஆவிக்காக” அவர்கள் பெறும் ஒரே விஷயமானது நித்திய வருத்தமும் நித்திய காலமாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் அக்கினிக்கு பலியாவதுமே என்பது எவ்வளவு பரிதாபகரமானது!

எவ்வளவு புதிரானது! தேவனுடைய மனுவுருவானவர் ஏன் எப்போதும் ஜனங்களால் நிராகரிக்கப்பட்டும் நிந்திக்கப்பட்டும் இருக்கிறார்? ஏன் ஜனங்கள் தேவனுடைய மனுவுருவாதலைப் பற்றிய புரிதலை ஒருபோதும் பெற்றிருப்பதில்லை? தேவன் தவறான காலத்தில் வந்திருக்கிறாரா? தேவன் தவறான இடத்திற்கு வந்திருக்கக் கூடுமோ? மனுஷனின் “ஒப்புதல் கையொப்பம்” இல்லாமல் தேவன் தனியாகச் செயல்பட்டதால் இது நடந்திருக்குமோ? மனுஷனின் அனுமதியின்றி தேவன் தமது சொந்த எண்ணத்தால் நிறைவேற்றியதால் இருக்கக் கூடுமோ? தேவன் முன்னறிவிப்பு கொடுத்ததாக உண்மைகள் கூறுகின்றன. மாம்சமாக மாறுவதில் தேவன் எந்தத் தவறும் செய்யவில்லை—மனுஷனுடைய சம்மதத்தை அவர் கேட்க வேண்டுமா? மேலும், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே மனுஷனுக்கு நினைவூட்டினார், ஒருவேளை ஜனங்கள் மறந்திருப்பார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டியதில்லை, ஏனென்றால், வானத்தின் கீழே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ள முடியாதபடி, ஆவிக்குரிய உலகில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி எதுவும் சொல்ல முடியாதபடி, மனுஷன் நீண்ட காலமாகச் சாத்தானால் சீர்குலைக்கப்பட்டிருக்கிறான்! மனுஷனின் முன்னோர்களான குரங்கு மனுஷர்கள் யுத்த மேடையில் மரித்தது எத்தனை அவமானம், ஆனால் இது ஆச்சரியமல்ல: வானமும் பூமியும் ஒருபோதும் ஒத்துப்போயிருந்ததில்லை, மேலும் கல்லால் ஆன மனதைக் கொண்ட குரங்கு மனுஷர்களால் தேவனால் மறுபடியும் மாம்சமாக மாற முடியும் என்று எப்படி சிந்திக்க முடியும்? “அறுபதாம் வயதில்” இருக்கும் இவரைப் போன்ற ஒரு “முதியவர்” தேவன் தோன்றுகிற நாளில் மரித்தது எவ்வளவு வருத்தமானது. இவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தின் வருகையில் அது உலகத்தை ஆசீர்வதிக்காமல் விட்டுச் சென்றது ஆச்சரியமல்லவா? தேவனுடைய மனுவுருவாகுதல் அனைத்து மதங்கள் மற்றும் கோளங்கள் வழியாக அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது, அது மத வட்டாரங்களின் சரியான ஒழுங்குமுறைகளை “குழப்பத்தில் தள்ளியிருக்கிறது”, மேலும் தேவனுடைய தோற்றத்திற்காக ஏங்கும் அனைவரின் இருதயங்களையும் உலுக்கியிருக்கிறது. வணங்காதவன் யார்? தேவனைக் காண ஏக்கம் கொள்ளாதவன் யார்? தேவன் தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக மனுஷர்களிடையே இருக்கிறார், ஆனாலும் மனுஷன் அதை ஒருபோதும் உணர்ந்ததில்லை. இன்று, தேவனே தாமே தோன்றி, தமது அடையாளத்தை ஜனங்களுக்குக் காட்டியிருக்கிறார்—இது எப்படி மனுஷனின் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவராமல் இருக்க முடியும்? தேவன் ஒரு காலத்தில் மனுஷனுடன் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொண்டார், இன்று, அவர் மனிதகுலத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார், மேலும் அவனுடன் கடந்த கால கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் யூதேயாவை விட்டு வெளியேறிய பிறகு, ஜனங்களால் அவரைப் பற்றிய எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று அவர்கள் மீண்டும் அவரைச் சந்தித்து அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்பதை அறியாமல், அவர்கள் மீண்டும் ஒருமுறை தேவனைச் சந்திக்க ஏங்குகிறார்கள். இது எப்படி நேற்றைய தினத்தின் எண்ணங்களைக் கிளறாமல் இருக்கும்? இன்றிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்களின் வம்சாவளியைச் சேர்ந்த சைமன் பர்ஜோனா, இரட்சகராகிய இயேசுவை அதே மேஜையில் சாப்பிடுவதைக் கண்டான், பல ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்ந்த பிறகு, அவர் மீது ஆழமான பாசம் ஏற்பட்டது: அவன் தன்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து அவரை நேசித்தான்; அவன் கர்த்தராகிய இயேசுவை ஆழமாக நேசித்தான். குளிர்ந்த தொழுவத்தில் பிறந்த இந்தத் தங்க முடி கொண்ட குழந்தை எப்படி தேவனுடைய மனுவுருவின் முதல் சாயலாக இருந்தார் என்பதைப் பற்றி யூத ஜனங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் தங்களைப் போன்றவர் என்று அவர்கள் அனைவரும் நினைத்தார்கள், யாரும் அவரை வித்தியாசமாக நினைக்கவில்லை—இந்த பொதுவான மற்றும் சாதாரண இயேசுவை ஜனங்கள் எவ்வாறு அடையாளம் காண முடியும்? யூத ஜனங்கள் அவரை அந்த காலத்தின் ஒரு யூத குமாரன் என்று நினைத்தார்கள். யாரும் அவரை ஓர் அழகான தேவனாகப் பார்க்கவில்லை, ஜனங்கள் கண்மூடித்தனமாக அவரிடம் கோரிக்கைகளை வைப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அவர் தங்களுக்கு ஐசுவரியத்தையும் ஏராளமான கிருபைகளையும், மற்றும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தருமாறு கேட்டுக் கொண்டனர். ஒரு கோடீஸ்வரரைப் போலவே, ஒருவன் விரும்பும் அனைத்தையும் அவர் கொண்டிருந்தார் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆயினும் ஜனங்கள் அவரை ஒருபோதும் பிரியமானவராக நடத்தவில்லை; அக்கால ஜனங்கள் அவரை நேசிக்கவில்லை, அவருக்கு விரோதமாக எதிர்க்க மட்டுமே செய்தனர், மேலும் அவரிடம் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தனர். அவர் ஒருபோதும் எதிர்க்கவில்லை, மாறாக, மனுஷன் அவரை அறியாவிட்டாலும், மனுஷனுக்குத் தொடர்ந்து கிருபைகளை வழங்கினார். அவர் அமைதியாக மனுஷனுக்கு அரவணைப்பு, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றை வழங்குவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, மேலும், மனுஷனை நியாயப்பிரமாணத்தின் கட்டுகளிலிருந்து வெளியே கொண்டுவருவதன் மூலம், அவர் மனுஷனுக்கு புதிய நடைமுறை வழிகளை அளித்தார். மனுஷன் அவரை நேசிக்கவில்லை, அவன் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டான் மற்றும் அவரது அசாதாரணமான திறமைகளை அங்கீகரித்தான். இரட்சகராகிய அழகான இயேசு மனுஷர்களுக்குள் வந்தபோது அவர் அனுபவித்த அவமானம் எவ்வளவு பெரியது என்பதை குருட்டாட்டமுள்ள மனிதகுலத்தால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அவருடைய துன்பத்தை யாரும் கருத்தில் கொள்ளவில்லை, பிதாவாகிய தேவன் மீது அவர் கொண்ட அன்பை யாரும் அறிந்திருக்கவில்லை, அவருடைய தனிமையை யாராலும் அறிய முடியவில்லை; மரியாள் அவரைப் பெற்றெடுத்த தாயாக இருந்தாலும், இரக்கமுள்ள கர்த்தராகிய இயேசுவின் இருதயத்தில் உள்ள எண்ணங்களை அவளால் எப்படி அறிய முடியும்? மனுஷகுமாரன் அனுபவித்த சொல்லொண்ணாத் துன்பம் யாருக்குத் தெரியும்? அவரிடம் கோரிக்கைகளை வைத்த பிறகு, அக்கால ஜனங்கள் இரக்கமின்றி அவரைத் தங்கள் மனதின் பின்னுக்குத் தள்ளி, அவரை வெளியே தள்ளினார்கள். ஆகையால், அவர் நாளுக்கு நாள், ஆண்டுதோறும், தெருக்களில் அலைந்து திரிந்தார், நீண்ட மற்றும் குறுகிய ஆண்டுகளாக இருந்த, முப்பத்து மூன்று கடினமான ஆண்டுகளை வாழ்ந்து முடிக்கும் வரை பல ஆண்டுகளாக அலைந்து திரிந்தார். ஜனங்கள் அவருக்குத் தேவைப்படும்போது, அவர்கள் அவரைச் சிரித்த முகத்துடன் தங்கள் வீடுகளுக்கு அழைத்தனர், அவரிடம் கோரிக்கைகளை வைக்க முயன்றனர்—மேலும் அவர் அவர்களுக்கு தமது பங்களிப்பை வழங்கிய பிறகு, அவர்கள் உடனடியாக அவரைக் கதவுக்கு வெளியே தள்ளினார்கள். அவருடைய வாயிலிருந்து வழங்கப்பட்டதை ஜனங்கள் புசித்தார்கள், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணினார்கள், அவர் தங்களுக்கு அளித்த கிருபைகளை அனுபவித்து மகிழ்ந்தார்கள், ஆனாலும், தங்களுக்கு ஜீவனைக் கொடுத்தது யார் என்று அவர்கள் ஒருபோதும் அறியாததினால், அவர்கள் அவரை எதிர்த்தார்கள். இறுதியில், அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள், ஆனாலும் அவர் இன்னும் சத்தம் போடவில்லை. இன்றும் கூட, அவர் அமைதியாகவே இருக்கிறார். ஜனங்கள் அவருடைய மாம்சத்தைப் புசிக்கிறார்கள், அவர்கள் அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணுகிறார்கள், அவர் அவர்களுக்காகச் செய்யும் உணவைப் புசிக்கிறார்கள், மேலும் அவர் தங்களுக்காகத் திறந்திருக்கிற வழியில் அவர்கள் நடக்கிறார்கள், ஆனாலும், அவர்கள் அவரை நிராகரிக்கும் நோக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் உண்மையில் தங்களுக்கு ஜீவனைக் கொடுத்த தேவனை சத்துருவாகக் கருதுகிறார்கள், மாறாக அவர்களைப் போலவே அடிமைகளாக இருப்பவர்களை பரலோகப் பிதாவாகக் கருதுகிறார்கள். இந்த இடத்தில், அவர்கள் வேண்டுமென்றே அவரை எதிர்க்கவில்லையா? இயேசு எப்படி சிலுவையின் மீது மரிக்க வந்தார்? உங்களுக்குத் தெரியுமா? அவருடன் புசித்து, அவருடன் பானம்பண்ணி, அவருடன் மகிழ்ந்த, அவருக்கு நெருக்கமான யூதாஸால் அவர் காட்டிக் கொடுக்கப்படவில்லையா? அவர் ஓர் அற்பமான, சாதாரண ஆசானாக இருந்ததால் மட்டுமே, யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் அல்லவா? இயேசு அசாதாரணமானவர் என்றும், பரலோகத்தில் இருந்தவர் என்றும் ஜனங்கள் உண்மையில் கண்டிருந்தால், அவருடைய சரீரத்தில் மூச்சு இல்லாமல் போகும் வரைக்கும், இருபத்து நான்கு மணிநேரமாக, அவர்கள் எப்படி அவரை உயிருடன் சிலுவையில் அறைந்திருக்க முடியும்? தேவனை யாரால் அறிய முடியும்? தீராத பேராசையுடன் தேவனை அனுபவிப்பதைத் தவிர ஜனங்கள் எதையும் செய்வதில்லை, ஆனால், அவர்கள் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு ஓர் அங்குலம் அளவு கொடுக்கப்பட்டு, ஒரு மைல் தூரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது, மேலும் அவர்கள் “இயேசுவை” அவர்களின் கட்டளைகளுக்கும், அவர்களின் ஆணைகளுக்கும் முழுவதும் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்குகிறார்கள். தலை சாய்க்க இடமில்லாத இந்த மனுஷகுமாரனுக்கு எப்போதாவது இரக்கத்தின் வழியைக் காட்டியவன் யார்? பிதாவாகிய தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற போர்வீரர்களை அவருடன் ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைத்தவன் யார்? அவர் மீது எப்போதாவது சிந்தை வைத்தவன் யார்? அவருடைய கஷ்டங்களைக் கருத்தில் கொண்டவன் யார்? சிறிதளவும் அன்பு இல்லாமல், மனுஷன் அவரை முன்னும் பின்னுமாக இழுக்கிறான்; மனுஷனுக்கு வெளிச்சமும் ஜீவனும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனுஷனிடையே வேதனையை அனுபவித்த “இயேசுவை” மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைவது எப்படி என்று இரகசியமாகத் திட்டமிடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. “இயேசு” உண்மையில் அப்படிப்பட்ட வெறுப்பைத் தூண்டுகிறாரா? அவர் செய்த அனைத்தும் நீண்ட காலமாக மறந்துபோய்விட்டதா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றிணைந்த வெறுப்பு இறுதியாக வெளியில் வெடித்து வெளிவரும். நீங்கள் யூதர்களைப் போன்ற அதே வகையைச் சேர்ந்தவர்கள்! நீங்கள் அவரை இவ்வளவாய் வெறுக்கும்படி, “இயேசு” எப்பொழுது உங்களுக்கு எதிராக இருந்திருக்கிறார்? அவர் எவ்வளவோ செய்திருக்கிறார், எவ்வளவோ பேசியிருக்கிறார்—அது எதுவுமே உங்களது நன்மைக்காக இல்லையா? அவர் பதிலுக்கு எதையும் கேட்காமல் உங்களுக்காகத் தமது ஜீவனையும் கொடுத்திருக்கிறார், அவர் உங்களுக்கு அவரை முழுமையாகக் கொடுத்துள்ளார்—நீங்கள் உண்மையிலேயே அவரை இன்னும் ஜீவனுடன் புசிக்க விரும்புகிறீர்களா? உலகப் புகழையும், மனுஷனிடையே உள்ள அரவணைப்பையும், மனுஷனிடையே உள்ள அன்பையும், மனுஷனிடையே உள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் அனுபவிக்காமல், எதையும் வைத்துக்கொள்ளாமல், தம்முடைய அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஜனங்கள் அவரிடத்தில் மிகவும் இழிவானவர்களாய் இருக்கிறார்கள், அவர் பூமியில் உள்ள அனைத்து ஐசுவரியங்களையும் ஒருபோதும் அனுபவித்ததில்லை, அவர் தமது நேர்மையான, பாசமுள்ள இருதயம் முழுவதையும் மனுஷனுக்காக அர்ப்பணித்தார், அவர் தம்மை முழுவதுமாக மனிதகுலத்திற்காக அர்ப்பணித்தார்—மேலும் அவருக்கு எப்போதாவது அரவணைப்பை கொடுத்தவன் யார்? அவருக்கு எப்போதாவது ஆறுதல் அளித்தவன் யார்? மனுஷன் எல்லா பாரங்களையும் அவர் மீது குவித்துவிட்டான், அவன் எல்லா துரதிர்ஷ்டங்களையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டான், அவன் மனுஷனிடையேயான மிகவும் துரதிர்ஷ்டவசமான அனுபவங்களை அவர் மீது திணிக்கிறான், எல்லா அநியாயங்களுக்கும் அவர் மீது பழி சுமத்துகிறான், அவர் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவர் யாருக்காவது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரா? எப்போதாவது அவர் யாரிடமாவது கொஞ்சம் ஈடாக எதையும் கேட்டதுண்டா? அவர் மீது அனுதாபம் காட்டியவன் யார்? சாதாரண மனுஷர்களாக, உங்களில் யாருக்கு கற்பனை நிறைந்த குழந்தைப் பருவம் இல்லை? யாருக்கு வண்ணமயமான இளமைப் பருவம் இல்லாதிருந்தது? அன்புக்குரியவர்களின் அரவணைப்பு யாருக்கு இல்லை? உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பு இல்லாதவன் யார்? மற்றவர்களின் மரியாதை இல்லாமல் இருப்பவன் யார்? அன்பான குடும்பம் இல்லாதவன் யார்? தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரவான்களின் ஆறுதல் இல்லாதிருப்பவன் யார்? மேலும் அவர் எப்போதாவது இவற்றில் எதையாவது அனுபவித்திருக்கிறாரா? அவருக்கு ஒரு சிறிய அரவணைப்பை வழங்கியவன் யார்? அவருக்கு ஒரு துளியளவு ஆறுதலையும் கொடுத்தவன் யார்? அவருக்கு எப்போதாவது கொஞ்சம் மனுஷீக ஒழுக்கத்தைக் காட்டியவன் யார்? இதுவரை அவரைப் பொறுத்துக் கொண்டவன் யார்? இதுவரை கடினமான காலங்களில் அவருடன் இருந்தவன் யார்? அவருடன் சேர்ந்து கடினமான வாழ்க்கையைக் கடந்தவன் யார்? மனுஷன் அவனுக்கான கோரிக்கைகளை ஒருபோதும் தளர்த்தியதில்லை; மனுஷனுடைய உலகத்திற்கு வந்தபின், அவர் மனுஷனுக்கு எருது அல்லது குதிரையாக, அவனுடைய கைதியாக இருக்க வேண்டும் என்பது போலவும், மேலும் அவருடைய அனைத்தையும் மனுஷனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது போலவும், எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரிடம் கோரிக்கைகளை மட்டுமே வைக்கிறான்; இல்லாவிட்டால், மனுஷன் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டான், அவருடன் ஒருபோதும் எளிதாக ஒத்துப்போக மாட்டான், அவரை ஒருபோதும் தேவன் என்று அழைக்க மாட்டான், அவரை ஒருபோதும் உயர்வாக மதிக்க மாட்டான். தேவனை மரணம் வரை துன்புறுத்த ஆயத்தமாகியிருப்பதைப் போலவும், அதன் பின்பே, தேவனிடத்தில் தனது கோரிக்கைகளை அவன் தளர்த்திக் கொள்வான் என்பதைப் போலவும் தேவன் மீதான தனது அணுகுமுறையில் மனுஷன் மிகவும் கடுமையாக இருக்கிறான்; இல்லையெனில், மனுஷன் தேவனிடத்தில் வைக்கும் கோரிக்கைகளின் தரத்தை ஒருபோதும் குறைக்க மாட்டான். இப்படிப்பட்ட மனுஷன் தேவனால் எப்படி வெறுக்கப்படாமல் இருக்க முடியும்? இது இன்றைய நாட்களின் துக்கமான விஷயம் அல்லவா? மனுஷனின் மனசாட்சியை ஓர் இடத்திலும் காண முடியவில்லை. அவன் தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறான், ஆனால் அவன் தேவனைக் கூறுபோட்டு, மரணபரியந்தம் அவரைச் சித்ரவதை செய்கிறான். இது அவனுடைய தேவ நம்பிக்கைக்கான, அவனுடைய முன்னோர்களிடமிருந்து அவனுக்கு வழங்கப்பட்ட “இரகசிய செய்முறை” அல்லவா? “யூதர்கள்” காணப்படாத இடமே இல்லை, இன்றும் அவர்கள் இன்னும் அதே கிரியையை செய்கிறார்கள், தேவனை எதிர்க்கும் அதே கிரியையை அவர்கள் இன்னும் செய்கிறார்கள், ஆனாலும், இன்னும் அவர்கள் தேவனை உயர்த்திக்கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். மனுஷனுடைய சொந்தக் கண்கள் எப்படி தேவனை அறிய முடியும்? மாம்சத்தில் வாழும் மனுஷன், ஆவியிலிருந்து வந்த மனுவுருவான தேவனை, தேவனாக எப்படிக் கருத முடியும்? மனுஷர்கள் மத்தியில் இருக்கிற யாரால் அவரை அறிய முடியும்? மனுஷர்கள் மத்தியில் சத்தியம் எங்கே இருக்கிறது? உண்மையான நீதி எங்கே இருக்கிறது? தேவனுடைய மனநிலையை அறியக்கூடியவன் யார்? பரலோகத்தில் இருக்கும் தேவனுடன் யார் போட்டியிட முடியும்? அவர் மனுஷர்கள் மத்தியில் வந்தபோது, தேவனை ஒருவனும் அறிந்திருக்கவில்லை, மேலும் அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார் என்பதில் ஆச்சரியமில்லை. தேவன் இருப்பதை மனுஷனால் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? உலகத்தின் இருளை விரட்ட அவன் எப்படி ஒளியை அனுமதிக்க முடியும்? இதெல்லாம் மனுஷனின் மரியாதைக்குரிய பக்தி அல்லவா? இது மனுஷனின் நேர்மையான பிரவேசம் அல்லவா? மேலும் தேவனுடைய கிரியை மனுஷனின் பிரவேசத்தை மையமாகக் கொண்டதல்லவா? நீங்கள் தேவனுடைய கிரியையை மனுஷனின் பிரவேசத்துடன் இணைத்து, மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி, மனுஷன் ஆற்ற வேண்டிய கடமையை உன்னுடைய திறமைக்கு ஏற்றவாறு சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்விதமாக, தேவனுடைய கிரியை அதன் இறுதியில், அவருடைய மகிமையைப் பெறுதலுடன் முடிவடையும்!

அடிக்குறிப்புகள்:

1. இங்கே “மனுஷனின் ‘பிரவேசம்’” என்பது மனுஷனின் கீழ்ப்படியாமை நடத்தையைக் குறிக்கிறது. நேர்மறையான காரியமாகிய—ஜனங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக—இது அவர்களின் எதிர்மறையான நடத்தை மற்றும் செயல்களைக் குறிக்கிறது. இது தேவனுக்கு எதிரான மனுஷனின் அனைத்து செயல்களையும் பரவலாகக் குறிக்கிறது.

2. “கற்பனைப் பயங்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்” என்பது மனுஷனின் தவறாக வழிநடத்தப்பட்ட மனிதத்தன்மையைப் பரியாசம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது ஜனங்கள் பிசாசுகளுடன் சேர்ந்து வாழும் மனித வாழ்க்கையின் அசிங்கமான நிலையைக் குறிக்கிறது.

3. “எல்லாவற்றிலும் சிறப்பாகச்” என்று ஏளனமாகச் சொல்லப்படுகிறது.

4. “உக்கிரம் இன்னும் அதிகமாக எரிகிறது” என்று ஏளனமாகச் சொல்லப்படுகிறது, மேலும் அது மனுஷனின் அசிங்கமான நிலையைக் குறிக்கிறது.

5. “உயிருடன் பிடிக்க” என்பது மனுஷனின் வன்முறை மற்றும் இழிவான நடத்தையைக் குறிக்கிறது. மனுஷன் மிருகத்தனமானவன், தேவனை சிறிதும் மன்னிக்காதவன், மேலும் அவரிடம் முட்டாள்தனமான கோரிக்கைகளை வைக்கிறான்.

6. “அதன் மனதில் நன்கு சிந்திக்கப்பட்ட திட்டத்தை” என்று ஏளனமாகச் சொல்லப்படுகிறது, மேலும் இது ஜனங்கள் தங்களைத் தாங்களே அறியாமலும் தங்கள் உண்மையான வளர்ச்சியைப் பற்றி அறியாமலும் இருப்பதைக் குறிக்கிறது. இது ஓர் இழிவான அறிக்கையாகும்.

7. “வணக்கத்திற்குரிய” என்று ஏளனமாகச் சொல்லப்படுகிறது.

8. “சுடுவது” என்பது தேவனால் தோற்கடிக்கப்படும்போது ஆத்திரத்தால் கொதித்து எழும் ஜனங்களுடைய அசிங்கமான நிலையைக் குறிக்கிறது. தேவனுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் அளவை இது குறிக்கிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (9)

அடுத்த: தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக