தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 455

டிசம்பர் 2, 2022

பிரபஞ்சம் முழுவதிலும் தன் கிரியையின் தொடக்கத்திலிருந்தே, தேவன் அனைத்துத் தரப்பிலான ஜனங்கள் உட்பட, பல ஜனங்களைத் தனக்கு ஊழியம் செய்வதற்காக முன்குறித்திருக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதும், அவருடைய கிரியையை பூமியில் சுமூகமாக நிறைவேற்றுவதுமே அவருடைய நோக்கமாகும். இதுவே ஊழியம் செய்வதற்காக ஜனங்களைத் தெரிந்துகொள்வதில் தேவனுடைய நோக்கமாகும். தேவனுக்கு ஊழியம் செய்கிற ஒவ்வொருவரும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய இந்த கிரியை தேவனுடைய ஞானத்தையும், சர்வவல்லமையையும், பூமியில் அவருடைய கிரியையின் கோட்பாடுகளையும், ஜனங்களுக்கு மேலும் தெளிவாக்குகிறது. தேவன் அவருடைய கிரியையைச் செய்வதற்கும், ஜனங்களோடு ஈடுபட்டு, அதனால் அவருடைய செயல்களை அவர்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொள்வதற்குமே உண்மையில் இந்த பூமிக்கு வந்திருக்கிறார். இன்றைக்கு, இந்த ஜனக்கூட்டமாகிய நீங்கள் நடைமுறை தேவனுக்கு ஊழியம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் தேவனால் எழுப்பப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குக் கணக்கிட முடியாத ஆசீர்வாதமாகும். தனக்கு ஊழியம் செய்ய ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய சொந்தக் கோட்பாடுகள் தேவனுக்கு எப்பொழுதும் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது, ஜனங்கள் கற்பனை செய்வதுபோல், எவ்வகையிலும் வெறுமனே ஓர் உற்சாகமான விஷயம் அல்ல. இன்றைக்கு தேவனுக்கு முன் ஊழியம் செய்பவர்கள் எல்லாரும் தேவனுடைய வழிநடத்துதல் மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை தங்களிடத்தில் இருப்பதாலும், சத்தியத்தைப் பின்தொடரும் ஜனங்களாக அவர்கள் இருப்பதாலும் அப்படிச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தேவனுக்கு ஊழியம் செய்கிற அனைவருக்கும் இவை குறைந்தபட்ச நிபந்தனைகளாகும்.

தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான வேலை கிடையாது. நேர்மையற்ற மனநிலை மாறாமல் இருக்கிறவர்கள் ஒருபோதும் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. உன்னுடைய மனநிலை தேவனுடைய வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் இருந்தால், உன் மனநிலை இன்னும் சாத்தானையே பிரதிபலிக்கிறது. உன்னுடைய சொந்த, நல்ல நோக்கங்களைக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்றும், உன்னுடைய ஊழியம் உன்னிலுள்ள சாத்தானின் தன்மையைச் சார்ந்திருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கிறது. உன்னுடைய இயல்பான குணத்தைக் கொண்டும், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படியும் நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய். மேலும் என்னவென்றால், நீ செய்ய விரும்புகிற காரியங்கள் தேவனுக்கு மகிழ்ச்சியளிப்பவை என்றும், நீ செய்ய விரும்பாத காரியங்கள் தேவனுக்கு வெறுப்பூட்டுபவை என்றும் நீ எப்போதும் நினைக்கிறாய். முழுவதும் உன்னுடைய சொந்த விருப்பங்களின்படி நீ வேலை செய்கிறாய். தேவனுக்கு ஊழியம் செய்வது என்று இதை அழைக்க முடியுமா? முடிவில் உன்னுடைய வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றமும் இருக்காது. அதற்குப் பதிலாக, உன்னுடைய ஊழியம் உன்னை இன்னும் அதிகப் பிடிவாதமாக மாற்றும், இப்படி உன்னுடைய நேர்மையற்ற மனநிலை இன்னும் ஆழமாக வேரூன்றும். அதன் காரணமாக தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றிய விதிகள் உனக்குள் உருவாகும். அவைகள் உன்னுடைய சொந்தக் குணத்தையும், உன்னுடைய சொந்த மனநிலையின்படி செய்யப்படும் உன்னுடைய ஊழியத்தில் இருந்து பெற்ற அனுபவங்களையும் முதன்மையாகச் சார்ந்திருக்கும். இவை மனிதனுடைய அனுபவங்களும் பாடங்களுமாகும். இது உலகில் வாழும் மனிதனுடைய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஜனங்களைப் பரிசேயர்கள் எனவும் மதத்தலைவர்கள் எனவும் வகைப்படுத்தலாம். அவர்கள் விழித்துக்கொண்டு மனந்திரும்பாவிட்டால், அவர்கள் நிச்சயமாகக் கள்ள கிறிஸ்துகளாகவும், கடைசி நாட்களில் ஜனங்களை வஞ்சிக்கும் அந்திக்கிறிஸ்துகளாகவும் மாறிவிடுவார்கள். சொல்லப்பட்ட கள்ளக்கிறிஸ்துகளும், அந்திக்கிறிஸ்துகளும் இப்படிப்பட்ட ஜனத்தின் நடுவிலிருந்து எழும்புவார்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அவர்களுடைய சொந்தக் குணத்தைப் பின்பற்றி, அவர்களுடைய சொந்தச் சித்தத்தின்படி செயல்பட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் துரத்திவிடப்படும் அபாயத்தை வருவித்துக் கொள்கிறார்கள். தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக தாங்கள் பெற்றுக்கொண்ட பல வருட அனுபவத்தை மற்றவர்களின் இதயங்களை வெல்வதற்காக, அவர்களைக் கடிந்துகொள்ள, அவர்களைக் கட்டுப்படுத்த, மேலும் உயர்ந்த நிலையில் நிற்க, ஜனங்கள் உபயோகிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும், மேலும் மனந்திரும்பாதவர்களும் தங்களின் பாவங்களை அறிக்கையிடாதவர்களும், பதவியின் பலன்களை விட்டுக்கொடுக்காதவருமாகிய ஜனங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாக விழுந்து போவார்கள். அவர்கள் பவுலைப் போன்று, தங்களுடைய மூத்தநிலையைக் குறித்து மிதமிஞ்சி எண்ணி, தங்கள் தகுதிகளைப் பறைசாற்றுகிறார்கள். இதுபோன்ற ஜனங்களை தேவன் பரிபூரணத்திற்குக் கொண்டுவர மாட்டார். இதுபோன்ற ஊழியம் தேவனுடைய கிரியையில் தலையிடுகிறது. ஜனங்கள் பழையவற்றைப் பற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் கடந்த நாட்களின் கருத்துக்களைப் பற்றிக்கொள்கிறார்கள். இது அவர்களின் ஊழியத்திற்கு மிகப்பெரிய தடையாகும். உன்னால் அவைகளைத் தூக்கியெறிய முடியாவிட்டால், உன்னுடைய முழு வாழ்க்கையையும் அவைகள் திக்குமுக்காட வைத்து விடும். ஓடுவதால் உன் கால்களை அல்லது உழைப்பினால் உன் முதுகை நீ உடைத்துக்கொண்டாலும்கூட, தேவனுடைய ஊழியத்தில் நீ இரத்தசாட்சியாய் மரித்தாலும்கூட, தேவன் உன்னைச் சிறிதளவுகூட மெச்சிக்கொள்ள மாட்டார். அதற்கு நேர்எதிராக நீ ஒரு பாவி என்று அவர் சொல்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க