நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்

தேவனுடைய கிரியையும் வார்த்தையும் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கென்றே உள்ளன. அவருடைய குறிக்கோள் வெறுமனே அவருடைய கிரியை மற்றும் வார்த்தையினை நீங்கள் புரிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ள வைப்பது மட்டும் அல்ல. அது போதுமானது அல்ல. நீங்கள் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கும் ஒரு நபர், எனவே தேவனின் வார்த்தையைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது. ஏனென்றால், தேவனுடைய வார்த்தையின் பெரும்பகுதி மனிதர்களுடைய மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவர் மிகவும் தெளிவாகப் பேசுகின்றார். உதாரணமாக, நீங்கள் எதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதனைக் கற்றுக் கொள்ளும் திறனைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கிறீர்கள்; இது புரிந்துகொள்ளும் மனத்திறன் பெற்றிருக்ககூடிய ஒரு சாதாரண மனிதனால் செய்யக்கூடிய ஒன்றாகும். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கின்றன. மேலும் மக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளாத பல விஷயங்களையும், எல்லா விதமான மனித நிலைகளையும் தேவன் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன, மேலும் ஒரு முழு நிலவில் இருந்து வரும் வெளிச்சத்தைப் போல தெளிவாக இருக்கின்றன. எனவே இப்போது, மக்கள் பல பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் இன்னும் ஏதோ ஒன்று தவறிப் போனதாகத் தெரிகிறது—அது மக்கள் அவருடைய வார்த்தையைக் கடைபிடிப்பதாகும். மக்கள் சத்தியத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக அனுபவிக்க வேண்டும் மற்றும் எது கிடைத்ததோ அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ள காத்திருப்பதற்கும் மேலாக, அதனை மிகவும் விவரமாக தேடி ஆராய வேண்டும்; இல்லாவிட்டால், அவர்கள் ஒட்டுண்ணிகளைக் காட்டிலும் சிறிது மேலானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்து இருப்பார்கள், ஆனாலும் அதைக் கடைபிடிக்காதவர்களாக இருப்பார்கள். இந்த விதமான நபர் சத்தியத்தை நேசிப்பதில்லை, இறுதியில் முழுமையாக புறம்பாக்கப்படுவர். 1990களின் பேதுருவைப் போல இருக்க, நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க வேண்டும், அது உங்களுடைய அனுபவங்களில் மெய்யாக நுழைந்திருக்க வேண்டும், தேவனோடு கொண்டுள்ள உங்கள் ஒத்துழைப்பில் இன்னும் அதிகமாக மேலும் மேலும் பெரிய அளவில் பிரகாசம் அடைய வேண்டும், இது உங்கள் சொந்த வாழ்க்கையில் எப்பொழுதும் பெரிதும் உதவியாக இருக்கும். நீங்கள் தேவனின் வார்த்தையை அதிகமாக படித்திருக்கிறீர்கள், ஆனால் உரையின் பொருளை மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறீர்கள், உன் நடைமுறை அனுபவங்களின் மூலம் தேவனுடைய வார்த்தையை நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றால், நீ தேவனின் வார்த்தையை அறிந்துகொள்ள மாட்டாய். உன்னைப் பொறுத்த மட்டிலும், தேவனுடைய வார்த்தை அது வாழ்க்கை அல்ல அது வெறும் உயிரற்ற எழுத்துக்கள். இந்த உயிரற்ற எழுத்துக்களின் சாராம்சத்தைக் கடைபிடித்து மட்டுமே நீ வாழ்ந்தால், உன்னால் தேவனுடைய வார்த்தையின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியாது அல்லது அவருடைய சித்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ அவருடைய வார்த்தையை உன்னுடைய நடைமுறை அனுபவமாக்கிக் கொள்ளும் போது மாத்திரமே, தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய அர்த்தம் அதுவாகவே உனக்கு வெளிப்படுத்தப்படும், மேலும் அனுபவத்தின் மூலம்தான் பல சத்தியங்களின் ஆவிக்குரிய அர்த்தத்தை உன்னால் புரிந்துகொண்டு தேவனுடைய வார்த்தையின் இரகசியங்களை வெளிப்படுத்த முடியும். நீ இதனைக் கடைபிடிக்கவில்லை என்றால், அவருடைய வார்த்தை எவ்வளவு தெளிவாக இருந்தாலும், நீ புரிந்து கொண்டது எல்லாம் வெறும் எழுத்துக்களும் கோட்பாடுகளுமாகவே இருக்கும், இவை உனக்கு ஒரு மத ரீதியான விதிமுறைகளாகியிருக்கின்றன. இதைத்தான் பரிசேயர்களும் செய்தார்கள் அல்லவா? நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடித்து அதை அனுபவிக்கும்போது அது உங்களுக்கு நடைமுறையாகி விடுகிறது; நீங்கள் அதைக் கடைபிடிக்க முயற்சிக்காத போது, தேவனுடைய வார்த்தை உனக்கு மூன்றாம் வானம் என்னும் புராண கட்டுக்கதைக்கு சற்று மேலானதாகவே இருக்கும். உண்மையில், தேவனை விசுவாசிப்பதற்கான செயல்முறையானது, நீங்கள் அவருடைய வார்த்தையை அனுபவிக்கும், அவரால் ஆதாயப்படுத்தப்படும் செயல்முறையாகும், அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவனை விசுவாசிப்பது என்பது அவருடைய வார்த்தையைப் பற்றிய அறிவையும் புரிதலையும் கொண்டிருப்பதாகும்; அவருடைய வார்த்தையை அனுபவித்து வாழ்வதாகும்; இதுதான் நீங்கள் தேவனிடத்தில் கொண்டுள்ள உங்கள் விசுவாசத்தின் பின்னால் உள்ள யதார்த்தமாகும். நீங்கள் தேவனை விசுவாசித்து, தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க முயற்சிக்காமல் நித்திய ஜீவனை எதிர்பார்த்து, சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்தீர்கள் என்றால், நீங்கள் முட்டாள்தனமாகக் காணப்படுவீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு விருந்துக்குப் போய் அங்கே இருக்கக்கூடிய ருசியான பதார்த்தங்களைப் பார்த்து அதை மனப்பாடம் செய்துகொண்டேன், ஆனால் அதை நான் ருசி பார்க்கவில்லை என்பது போல் இருக்கிறது, அங்கே எதையும் புசித்துப் பானம்பண்ணாதது போல இருக்கும். அப்படிப்பட்ட நபர் ஒரு முட்டாள் அல்லவா?

மனிதன் வைத்திருக்க வேண்டிய சத்தியம் தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறது, அதுவே மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமானதாகவும் இருக்கும் சத்தியம். இது உங்கள் உடலுக்குத் தேவைப்படும் சத்து மருந்தாகவும் ஆகாரமாகவும் இருக்கிறது, மனிதன் அவனது இயல்பான மனிதத்தன்மைக்குத் திரும்ப வருவதற்கு உதவும் ஒன்றாகவும் இருக்கிறது. இது மனிதன் கொண்டிருக்க வேண்டிய ஒரு சத்தியமாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறீர்களோ, உங்களுடைய வாழ்க்கை அவ்வளவு சீக்கிரமாக மலரும், சத்தியமும் அவ்வளவு அதிகமாகத் தெளிவாகும். நீங்கள் வளர்ச்சியடையும்போது ஆவிக்குரிய உலகத்தின் காரியங்களை மிகத் தெளிவாகக் காண்பீர்கள், சாத்தான் மீது நீங்கள் ஜெயங்கொள்ள அதிகமான பெலனையும் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்கும் போது, புரியாதிருந்த அநேக சத்தியங்கள் உங்களுக்குப் புரிய வரும். நடைமுறையில் தங்கள் அனுபவத்தை ஆழமாக்குவதை விட, தேவனுடைய வார்த்தையின் உரையை வெறுமனே புரிந்துகொள்வதிலும், கோட்பாடுகளைக் கொண்டு தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்வதில் தங்கள் கவனத்தைச் செலுத்துவதிலும் பெரும்பாலான மக்கள் திருப்தி அடைகிறார்கள், ஆனால் அது பரிசேயர்களின் வழி அல்லவா? ஆகையால் “தேவனின் வார்த்தை ஜீவனாய் இருக்கிறது” என்ற சொற்றொடர் இவர்களுக்கு எப்படி மெய்யானதாக இருக்க முடியும்? ஒரு மனிதனுடைய வாழ்வு வெறுமனே தேவனுடைய வார்த்தையை வாசிப்பதனால் வளர முடியாது, தேவனுடைய வார்த்தையை அவன் கடைபிடிக்கும் போதுதான் வளர்கிறான். தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது என்பது வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பெறுவதற்குத் தேவையானது என்பது உனது நம்பிக்கையாக இருந்தால், உனது புரிதல் தவறானதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையை உண்மையாக புரிந்து கொள்வது என்பது நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்போது நிகழ்கிறது, “சத்தியத்தைக் கடைபிடிப்பதன் மூலமாக மாத்திரமே உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடியும்” என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இன்று, தேவனுடைய வார்த்தையை வாசித்த பிறகு உனக்குத் தேவனுடைய வார்த்தையைத் தெரியும் என்று நீ வெறுமென சொல்லலாம் ஆனால் நீ அதைப் புரிந்துகொண்டதாகச் சொல்ல முடியாது. சிலர் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஒரே வழி முதலில் அதைப் புரிந்துகொள்வதுதான் என்று கூறுகிறார்கள், ஆனால், இது ஓரளவு மட்டுமே சரியானது, நிச்சயமாக அது முற்றிலும் துல்லியமானது அல்ல. நீ சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முன்பு, நீ அந்தச் சத்தியத்தை அனுபவத்திருக்கவில்லை. நீங்கள் ஒரு பிரசங்கத்தில் இருந்து ஒன்றைக் காதில் கேட்பது மட்டும் மெய்யான புரிந்துகொள்ளுதல் ஆகாது—இது சத்தியம் குறித்த வார்த்தைகளின் வெளிப்படையான அர்த்தத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்வதுதான், ஆனால், அதன் மெய்யான அர்த்தத்தைப் புரிந்து கொண்டதற்கு அது சமம் அல்ல. சத்தியத்தைப் பற்றி ஏதோ மேலோட்டமான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்வீர்களானால் அது நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொண்டீர்கள் அல்லது அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; சத்தியத்தைக் குறித்ததான மெய்யான அர்த்தம் என்பது அதை அனுபவிப்பதிலிருந்தே கிடைக்கிறது. ஆகையால், நீங்கள் சத்தியத்தை அனுபவிக்கும் போது மாத்திரமே உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும் அப்போதுதான் உங்களால் அதன் மறைவான பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அனுபவத்தை ஆழமாக்குவது என்பது அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கும், சத்தியத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரே வழியாகும். ஆகையால், உன்னால் சத்தியத்தோடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும், ஆனால் உனக்குள் சத்தியம் இல்லாது இருக்குமானால், உன் குடும்பத்தாரையோ, மதம் சார்ந்த மக்களையோ நம்ப வைக்க முயற்சிப்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டாம். உன்னிடம் சத்தியம் இல்லாமல் நீ பனித்துளிகள் பறப்பது போன்று இருக்கிறாய், ஆனால் சத்தியத்தோடு இருந்தால் உன்னால் மகிழ்ச்சியாகவும் விடுதலையோடும் இருக்க முடியும், உன்னை யாரும் தாக்க முடியாது. ஒரு கோட்பாடு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், அது சத்தியத்தை வெல்ல முடியாது. சத்தியத்தைக் கொண்டு, உலகத்தையே அசைக்கலாம் மற்றும் மலைகளையும் கடல்களையும் நகர்த்தலாம், அதேசமயம் சத்தியம் இல்லாவிட்டால் வலுவான நகரச் சுவர்களும் புழுக்களால் தகர்க்கப்படும். இது ஒரு வெளிப்படையான உண்மை.

தற்போதைய நிலையில் சத்தியத்தை முதலில் தெரிந்திருக்க வேண்டியதும், அதன் பிறகு அதைக் கடைபிடித்து, சத்தியத்தின் மெய்யான அர்த்தத்தைக் கொண்டு உங்களை நீங்களே மேலும் ஆயத்தப்படுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் இதை அடைய முயற்சிக்க வேண்டும். உனது சொற்களை மற்றவர்கள் பின்பற்றும்படி செய்வதை விட, உனது நடத்தை அவர்கள் பின்பற்றுவதற்குக் காரணமாக அமைய வேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் அர்த்தமுள்ள ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும். உனக்கு எது நேர்ந்தாலும் நீ எப்படிப்பட்டவரைச் சந்திக்க நேர்ந்தாலும் நீ சத்தியத்தைப் பெற்றவனாக எவ்வளவு காலம் இருக்கிறாயோ அவ்வளவு காலம் உன்னால் உறுதியாக நிற்க முடியும். தேவனுடைய வார்த்தை மனிதனுக்கு ஜீவனைக் கொண்டுவருகிறது, மரணத்தை அல்ல. நீ தேவனுடைய வார்த்தையை வாசித்திருந்தும், நீ ஜீவனுள்ளவனாகவில்லை என்றால், இன்னும் நீ மரித்தவனாகவே இருப்பாய். உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது. சிறிது காலம் கழித்து நீ தேவனுடைய வார்த்தையின் பெரும்பகுதியைப் படித்த பிறகும், பல நடைமுறைப் பிரசங்கங்களைக் கேட்ட பிறகும், நீ இன்னும் மரித்த நிலையிலேயே இருந்தால், நீ சத்தியத்தை மதிக்காத ஒருவனாக மட்டுமல்லாமல், சத்தியத்தைப் பின்தொடராத ஒருவனாகவும் இருக்கிறாய் என்பதற்கு இது சான்றாகும். நீங்கள் மெய்யாகவே தேவனை அடைய வேண்டும் எனத் தேடுவீர்களேயானால், உங்களைக் கோட்டுபாடுகளால் நிறைத்துக் கொள்வதிலும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க அந்த உயரிய கோட்டுபாடுகளைப் பயன்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்த மாட்டீர்கள், அதற்கு மாறாக நீங்கள் தேவனுடைய வார்த்தையை அனுபவிப்பதிலும் சத்தியத்தைக் கடைபிடிப்பதிலும் கவனம் செலுத்துவீர்கள். இதுவே நீங்கள் இப்பொழுது பிரவேசிப்பதற்குத் தேடுவதாக இருக்க வேண்டும் அல்லவா?

தேவன் தமது கிரியையை மனிதரிடத்தில் செய்ய குறுகிய காலம்தான் உள்ளது, எனவே நீ அவருடன் ஒத்துழைக்காவிட்டால் என்ன விளைவு நேரும்? நீங்கள் புரிந்து கொண்டவுடன் அவருடைய வார்த்தையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் எப்பொழுதும் விரும்புவது ஏன்? அது ஏனென்றால், தேவன் தம்முடைய வார்த்தைகளை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மேலும் உங்களுடைய அடுத்த படி, நீங்கள் அவற்றைக் கடைபிடிப்பதாகும். நீங்கள் இந்த வார்த்தைகளைக் கடைபிடித்தால், தேவன் பிரகாசிப்பித்தல் மற்றும் வழிநடத்துதல் கிரியையைச் செய்வார். இது இப்படியாகவே செய்யப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை, மனிதனை வாழ்க்கையில் மலர அனுமதிக்கிறது, மனிதன் வழி விலகிப் போக அல்லது செயலற்றுப் போகக் காரணமான எந்தக் காரியங்களையும் கொண்டிருக்காது. நீ தேவனுடைய வார்த்தையை வாசித்து அதைக் கடைபிடித்திருக்கிறேன் என்று சொல்கிறாய், ஆனால் நீ இன்னும் பரிசுத்த ஆவியானவரின் எந்த ஒரு கிரியையும் பெற்றுக் கொள்ளவில்லை. உன்னுடைய வார்த்தைகள் ஒரு சிறு குழந்தையை ஏமாற்றி விட முடியும். உன் நோக்கங்கள் சரியானவையா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? மற்றவர்கள் தேவனுடைய வார்த்தையை எப்படிக் கடைபிடித்துப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள், ஆனாலும் நீ அவருடைய வார்த்தையைப் பின்பற்றியும், பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெறவில்லையா? தேவனுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றனவா? உனது நோக்கங்கள் உண்மையிலேயே சரியானவையாக இருந்து, நீ ஒத்துழைப்பு தருபவனாக இருந்தால், அப்பொழுது தேவனுடைய ஆவியானவர் உன்னுடன் இருப்பார். சிலர் எப்போதுமே தங்கள் சொந்தக் கொடியை நாட்ட விரும்புகிறார்கள், ஆனால் தேவன் ஏன் அவர்கள் எழுந்து திருச்சபையை வழிநடத்த அனுமதிக்கவில்லை? சிலர் தங்களுடைய சொந்தச் செயல்பாடுகளை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், அவர்களுடைய சொந்தக் கடமைகளை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், இதை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்பதாக தேவனுடைய ஒப்புதலை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்? தேவன் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆராய்கிறார், சத்தியத்தைப் பின்தொடர்பவர்கள் அவ்வாறு பின்தொடர்வதைச் சரியான நோக்கங்களுடன் செய்ய வேண்டும். சரியான நோக்கங்கள் இல்லாதவர்களால் உறுதியாக நிற்க முடியாது. அடிப்படையில் பார்க்கும்போது, உங்கள் குறிக்கோள் தேவனுடைய வார்த்தையை உங்களுக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடித்து அதைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளும் திறன் மோசமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தையைக் கடைபிடிக்கும் போது, இந்தக் குறைபாட்டினை அவரால் சரிசெய்ய முடியும். எனவே நீங்கள் பல சத்தியங்களை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை நீங்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். இது புறக்கணிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டியதாகும். இயேசு தமது முப்பத்து மூன்றரை வருட காலத்தில் பல அவமானங்களையும், மிகுந்த பாடுகளையும் அனுபவித்தார். மிகுந்த பாடுகளை அனுபவித்ததற்கு அவர் சத்தியத்தைக் கடைப்பிடித்ததும், எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தைச் செய்ததும், தேவனுடைய சித்தத்தில் மட்டும் கவனம் செலுத்தியதுமே காரணமாகும். அவர் சத்தியத்தை அறிந்து அதைக் கடைப்பிடிக்காமல் இருந்திருப்பார் எனில் இப்படிப்பட்டப் பாடுகளை அனுபவித்திருக்க மாட்டார். இயேசு யூதர்களின் போதனைகளையும், பரிசேயர்களையும் பின்பற்றியிருந்தால், அவர் பாடுகளை அனுபவித்திருக்க மாட்டார். தேவனுடைய கிரியை மிகவும் பயனுள்ளதாக எப்பொழுது மனிதனிடம் செயல்படுகின்றது என்றால், அது மனிதனுடைய ஒத்துழைப்பைப் பொறுத்தது என்பதை நீங்கள் இயேசுவின் செயல்களில் இருந்து கற்றுக்கொள்ள முடியும், இது நீங்கள் அங்கீகரிக்க வேண்டிய ஒன்றாகும். இயேசு சத்தியத்தைக் கடைப்பிடிக்காதிருந்தால், அவர் சிலுவையில் பாடுகளை அனுபவித்திருப்பாரா? தேவனுடைய சித்தத்தின்படி அவர் செயல்படாதவராக இருந்திருந்தால் அவ்வளவு வேதனையுள்ள ஜெபத்தை அவர் செய்திருக்க முடியுமா? ஆகையால், நீங்களும் சத்தியத்தைக் கடைபிடிப்பதற்காகத் துன்பப்பட வேண்டும், ஒருவர் அனுபவிக்க வேண்டிய துன்பம் இதுவே.

முந்தைய: தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி

அடுத்த: சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக