அத்தியாயம் 16
நான் மனிதனிடம் சொல்ல விரும்பும் விஷயங்கள் நிறைய உள்ளன, அவனிடம் நான் பல விஷயங்களை அவசியம் சொல்ல வேண்டும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் திறன் மனிதனுக்கு மிகக் குறைவு; நான் அவற்றைச் சொல்லக்கூடிய முறையில், என் வார்த்தைகளை மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது, மேலும் ஓர் அம்சத்தை மட்டுமே புரிந்துகொள்கிறான், அதேசமயம் மற்றவைகளைப் பற்றி அறியாமலே இருந்துவிடுகிறான். ஆனாலும் மனிதனின் சக்தியற்ற தன்மையின் காரணத்தால் நான் அவனைச் சாகும்படி விடுவதோ அல்லது அவனுடைய பலவீனத்தைக் கண்டு நான் வேதனைப்படுவதோ கிடையாது. நான் என் கிரியையை மட்டுமே செய்கிறேன், நான் எப்போதும் பேசுதுபோலவே பேசுகிறேன்; மனிதன் என் சித்தத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அந்த நாள் வரும்போது, ஜனங்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்தில் என்னை அறிந்துகொள்வார்கள், மேலும் அவர்களது சிந்தனைகளில் என்னை ஞாபகம் கொள்வார்கள். இந்தப் பூமியிலிருந்து நான் புறப்படும்போது அதுவே மனிதனின் இருதயத்தில் நான் சிங்காசனத்தில் ஏறும் சரியான நேரமாக இருக்கும், அதாவது, அது எல்லா மனிதர்களும் என்னை அறிந்திருக்கும் நேரமாக இருக்கும். ஆகவே, அதுவும்கூட, என் குமாரர்களும் ஜனங்களும் பூமியை ஆளும் நேரமாக இருக்கும். என்னை அறிந்தவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தின் தூண்களாக மாறுவார்கள், வேறு எவருமல்ல, அவர்கள் மட்டுமே என் ராஜ்யத்தை ஆட்சி செய்து அதிகாரம் செலுத்தத் தகுதியானவர்கள். என்னை அறிந்தவர்கள் அனைவரும் என்னால் ஆட்கொள்ளப் பட்டிருக்கிறார்கள், எல்லா மனிதர்களுக்கு இடையேயும் அவர்களால் என்னுடன் வாழ்ந்திட முடிகிறது. மனிதன் என்னை எந்த அளவிற்கு அறிவான் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை: யாரும் எந்த வகையிலும் என் கிரியையைத் தடுக்க முடியாது, மனிதன் எனக்கு எந்த உதவியும் அளிக்க முடியாது, எனக்காக எதுவும் செய்ய முடியாது. மனிதன் என் வெளிச்சத்தில் என் வழிகாட்டலை மட்டுமே பின்பற்ற முடியும், இந்த வெளிச்சத்தில் என் சித்தத்தை நாட முடியும். இன்று, ஜனங்களுக்குத் தகுதிகள் உள்ளன, மேலும் அவர்கள் எனக்கு முன்னால் ஓடியாடிச் செல்ல முடியும் மேலும் சிறிதும் தடையின்றி என்னுடன் சிரிக்கவும் கேலி செய்யவும், எனக்குச் சமமாக உரையாற்றவும் முடியும் என்று நம்புகிறார்கள். இன்னமும் மனிதன் என்னை அறியவில்லை, இன்னமும் சுபாவத்தில் நாம் ஒரே மாதிரியாக இருக்கிறோம், நாம் இருவருமே மாம்சம் மற்றும் இரத்தத்தால் ஆனவர்கள், இருவரும் மனித உலகில் வாழ்கிறோம் என்று நம்புகிறான். அவனுக்கு என்மீதுள்ள பயபக்தி மிகக் குறைவு; அவன் எனக்கு முன்பாக இருக்கும்போது என்னிடம் பயபக்தியுடன் இருக்கிறான், ஆனால் ஆவியானவர் முன்பாக என்னைச் சேவிக்க இயலாது இருக்கிறான். மனிதனைப் பொறுத்தவரை, ஆவியானவர் இல்லவே இல்லை என்பது போல இருக்கிறான். இதன் விளைவாக, எந்த மனிதனும் ஆவியானவரை அறிந்திருக்கவில்லை; நான் மனித உருவம் எடுத்ததில், ஜனங்கள் மாம்சமும் இரத்தமுமான ஓர் உடலை மட்டுமே பார்க்கிறார்கள், தேவனுடைய ஆவியானவரை உணரவில்லை. இந்த வழியில் உண்மையாகவே என் சித்தத்தை நிறைவேற்ற முடியுமா? ஜனங்கள் என்னை ஏமாற்றுவதில் வல்லுநர்கள்; என்னை முட்டாளாக்குவதற்காக அவர்கள் சாத்தானால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டது போலத் தெரிகிறது. ஆனாலும் நான் சாத்தானால் பிரச்சினைக்குள்ளாகவில்லை. என் ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதற்காக, மனிதகுலம் முழுவதையும் ஜெயங்கொள்ளவும், மனிதகுலம் முழுவதையும் சீரழிப்பவனை வீழ்த்தவும் அப்போதும் நான் என் ஞானத்தைப் பயன்படுத்துவேன்.
மனிதர்களிடையே, நட்சத்திரங்களின் அளவையோ அல்லது வானவெளியின் பரிமாணத்தையோ அறிய முயன்றவர்கள் உள்ளனர். ஆயினும் அவர்கள் செய்த ஆராய்ச்சி ஒருபோதும் பலனளிக்கவில்லை, அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் குழம்பிப்போய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொள்வதுதான். எல்லா மனிதர்கள் மத்தியிலும் அவர்களைக் கவனித்து, மனிதனின் தோல்விகளில் அவனது ஆற்றல்களைப் பார்க்கும்போது, என்னை முழுமையாக நம்பக்கூடிய எவரையும், எனக்குக் கீழ்ப்படிந்து மேலும் எனக்கு ஒப்புக்கொடுப்பவர்கள் எவரையும் நான் காணவில்லை. மனிதனின் பேராவல்கள் எவ்வளவு மூர்க்கத்தனமானவை! ஆழமான கடலின் முழுப் பரப்பும் கலங்கிய நிலையில் இருக்கும்போது, மனிதர்களிடையே உலகின் கசப்பை நான் சுவைக்க ஆரம்பித்தேன். என் ஆவி உலகம் முழுவதும் பயணிக்கிறது, எல்லா ஜனங்களின் இருதயங்களையும் பார்க்கிறது, ஆனாலும்கூட, என் மனித உருவான மாம்சத்தில் மனிதகுலத்தை நான் ஜெயங்கொள்கிறேன். மனிதன் என்னைக் காணவில்லை, ஏனென்றால் அவன் குருடனாக இருக்கிறான்; மனிதன் என்னை அறியமாட்டான், ஏனென்றால் அவன் உணர்ச்சியற்றவனாக வளர்ந்திருக்கிறான்; மனிதன் என்னை எதிர்க்கிறான், ஏனென்றால் அவன் கீழ்ப்படியாதவன்; மனிதன் எனக்கு முன்பாகத் தலை வணங்குகிறான், ஏனென்றால் அவன் என்னால் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறான்; மனிதன் என்னை நேசிக்க வருகிறான், ஏனென்றால் நான் இயல்பாகவே மனிதனின் அன்பிற்குத் தகுதியானவன்; மனிதன் என்னுடன் வாழ்கிறான், என்னை வெளிப்படுத்துகிறான், ஏனென்றால் என் வல்லமையும் என் ஞானமும் அவனை என் இருதயத்திற்கு ஏற்றவனாக ஆக்குகிறது. மனிதனின் இருதயத்தில் எனக்கு ஓர் இடம் உண்டு, ஆனால் அவனது ஆவிக்குள் வாழும் மனிதனிடமிருந்து நான் ஒருபோதும் அன்பைப் பெறவில்லை. மனிதனின் ஆவிக்குள் மெய்யாகவே அவன் எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கும் விஷயங்கள் உள்ளன, ஆனால் நான் அவற்றில் ஒன்றாக இல்லை, எனவே மனிதனின் அன்பு ஒரு சோப்புக் குமிழி போன்றது: காற்று வீசும்போது, அது மேலெழுந்து போய்விடும், மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாது. மனிதனைப் பற்றிய எனது அணுகுமுறையில் நான் எப்போதும் நிலையாக, மாறாமல் இருக்கிறேன். மனிதகுலத்தில் யாராவது இதையே செய்திருக்க முடியுமா? மனிதனின் பார்வையில், நான் காற்றைப் போலவே புலன்களால் எளிதில் அறியமுடியாதவனாகவும் கண்ணுக்குத் தெரியாதவனாகவும் இருக்கிறேன், இந்தக் காரணத்திற்காகவே பெரும்பான்மையான ஜனங்கள் எல்லையற்ற வானத்தில், அல்லது உருண்டோடும் கடலில், அல்லது அமைதியான ஏரியில், அல்லது வெற்று எழுத்துக்களில் மற்றும் கோட்பாடுகளில் மட்டும் தேடுகிறார்கள். மனிதகுலத்தின் சாராம்சத்தை அறிந்தவர் ஒருவர் கூட இல்லை, இன்னும் சொல்வதானால், எனக்குள் இருக்கும் இரகசியம் எதையும் சொல்லக்கூடியவர் ஒருவர்கூட இல்லை, ஆகவே, அவனிடம் நான் கோருவதாக அவன் கற்பனை செய்யும் மிக உயர்ந்த தரத்தை, மனிதன் அடைய வேண்டும் என்று நான் கேட்கவில்லை.
என் வார்த்தைகளைப் பேசும்போது, மலைகள் கவிழ்ந்து, நீர் தலைகீழாகப் பாய்கிறது, மனிதன் அடங்கியிருக்கிறான், ஏரிகள் நிற்காமல் பாயத்தொடங்குகின்றன. உருண்டோடும் கடல்கள் கோபமாக வானத்தை நோக்கி எழுந்தாலும், என் வார்த்தைகளைப் பேசும்போது இது போன்ற கடல்கள் ஓர் ஏரியின் மேற்பரப்பு போல அமைதியாக்கப்படுகின்றன. என் கையின் சிறிதளவு அசைப்பினால், கடுமையான புயல்கள் உடனடியாகக் கலைந்து என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்கின்றன, மனித உலகம் உடனடியாக அமைதிக்குத் திரும்புகிறது. ஆனால் நான் என் கடுங்கோபத்தைக் கட்டவிழ்த்து விடும்போது, மலைகள் உடனடியாக இரண்டாகப் பிரிந்து போகின்றன, பூமி உடனடியாக அதிரத் தொடங்குகிறது, தண்ணீர் உடனடியாகக் காய்ந்து விடுகிறது, மனிதன் உடனடியாகப் பேரழிவால் சூழப்படுகிறான். என் கடுங்கோபத்தின் காரணமாக, மனிதனின் அலறல்களுக்கு நான் செவிசாய்ப்பதில்லை, அவனுடைய அழுகைக்குப் பதிலளித்து எந்த உதவியும் செய்வதில்லை, ஏனென்றால் என் கடுங்கோபம் அதிகரித்து வருகிறது. நான் வானத்தில் இருக்கும்போது, என் பிரசன்னத்தைக் கண்டு நட்சத்திரங்கள் ஒருபோதும் பீதியடையவில்லை. அதற்குப் பதிலாக, அவை எனக்காகச் செய்யும் அவற்றின் வேலையில் தங்கள் இருதயங்களைச் செலுத்துகின்றன, ஆகவே நான் அவற்றுக்கு அதிக ஒளியைக் கொடுத்து, மேலும் ஒளிர்வுடன் பிரகாசிக்கச் செய்கிறேன், இதனால் அவை என்னை அதிகமாக மகிமையடையச் செய்கின்றன. வானம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கீழே உலகம் இருண்டதாக உள்ளது; எனது ஏற்பாடுகள் பொருத்தமற்றவை என்று ஜனங்கள் பலரும் முறையிட்டுள்ளனர், எனக்குத் துரோகமிழைக்கப் பயன்படுத்த தங்கள் சொந்த ராஜ்யத்தை உருவாக்கவும் இருள் சூழ்ந்த நிலையைத் திரும்பவும் கொண்டுவரவும் மிகப் பலரும் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். இருப்பினும் அவர்களின் தீர்மானத்தால் இதை அடைந்தவர் யார்? அவர்களின் தீர்மானத்தில் வெற்றிகரமாக இருந்தவர்கள் யார்? என் கையால் ஏற்பாடு செய்யப்பட்டதை யார் பின்னுக்குக் கொண்டுசெல்ல முடியும்? தேசம் முழுவதும் வசந்தம் பரவும்போது, நான் இரகசியமாகவும் அமைதியாகவும் உலகிற்கு ஒளியை அனுப்புகிறேன், இதனால், பூமியில், மனிதன் திடீரெனக் காற்றில் புத்துணர்ச்சியை உணர்கிறான். ஆயினும்கூட, அந்த நேரத்தில், நான் மனிதனின் கண்களை மங்கலாக்குகிறேன், அதனால் அவன் ஒரு மூடுபனி தரையை மூடுவதை மட்டுமே பார்க்கிறான், இதனால் எல்லா ஜனங்களும் விஷயங்களும் தெளிவாகத் தெரியாது போகிறது. ஜனங்கள் செய்யக்கூடியதெல்லாம் தங்களுக்குத் தாங்களே பெருமூச்சுவிட்டு, “ஒளி ஏன் ஒரு கணம் மட்டுமே நீடித்தது? தேவன் ஏன் மனிதனுக்கு மூடுபனியையும் மேகமூட்டத்தையும் தருகிறார்?” என்று நினைக்கிறார்கள். ஜனங்களின் விரக்திக்கு மத்தியிலும், மூடுபனி ஒரு நொடியில் மறைந்துவிடுகிறது, ஆனால் அவர்கள் ஒளிரும் ஒளியைக் கவனிக்கும்போது, நான் அவர்கள்மீது அடை மழையைக் கட்டவிழ்த்து விடுகிறேன் மேலும் அவர்கள் தூங்கும்போது இடியுடன் கூடிய மழையால் அவர்களது செவிப்பறைகள் கிழியும். பீதியால் பிடிக்கப்பட்ட அவர்கள் ஒதுங்குவதற்கு நேரமிருக்காது, கொட்டும் மழையில் அவர்கள் மூழ்கிவிடுகிறார்கள். ஒரு நொடியில், வானத்தின் அடியில் உள்ள அனைத்தும் என் கடுங்கோபத்துக்கு மத்தியில் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. கனமழை தொடங்குவதைப் பற்றி ஜனங்கள் இனி முறையிடப்போவதில்லை, அவர்கள் அனைவரிடமும் பயபக்தி பிறந்திருக்கிறது. திடீரெனப் பெய்த இந்த மழையால், பெரும்பான்மையான ஜனங்கள் வானத்திலிருந்து பெய்யும் மழைநீரில் மூழ்கி, தண்ணீரில் சடலங்களாக மாறுகிறார்கள். நான் பூமியெங்கும் பார்க்கிறேன், பலர் விழித்தெழுகிறார்கள், பலர் மனந்திரும்புகிறார்கள், பலர் சிறிய படகுகளில் ஏறி தண்ணீரின் பிறப்பிடத்தைத் தேடுகிறார்கள், பலர் என்னிடம் மன்னிப்புக் கேட்க என்னைத் தலை வணங்குகிறார்கள், பலர் ஒளியைப் பார்த்திருக்கிறார்கள், பலர் என் முகத்தைப் பார்த்திருக்கிறார்கள், பலருக்கு வாழ்வதற்கான தைரியம் இருக்கிறது, முழு உலகமும் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெரிய அடைமழையைத் தொடர்ந்து, என் மனதிலிருந்தவை எல்லாம் அதனதன் இடத்துக்குத் திரும்பிவிட்டன, இனிமேல் கீழ்ப்படியாமை இருக்காது. வெகுகாலத்திற்கு முன்பே, முழு தேசமும் சிரிப்பின் சத்தத்தால் நிரம்பியுள்ளது, பூமியில் எல்லா இடங்களிலும் துதிக்கும் சூழ்நிலை உள்ளது, என் மகிமை இல்லாத இடம் எங்கும் இல்லை. என் ஞானம் பூமியில் எல்லா இடங்களிலும், முழு பிரபஞ்சத்திலும் உள்ளது. எல்லாவற்றிலும் என் ஞானத்தின் பலன்கள் உள்ளன, எல்லா ஜனங்களிடையேயும் என் ஞானத்தின் தலைசிறந்த கிரியைகளைக் காணலாம்; எல்லாமும் என் ராஜ்யத்தில் உள்ள எல்லாவற்றையும் போன்றது, எல்லா ஜனங்களும் மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளைப் போல என் வானத்தின் அடியில் ஓய்வெடுக்கிறார்கள். நான் எல்லா மனிதர்களுக்கும் மேலாக நகர்ந்து செல்கிறேன் எல்லா இடங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எதுவுமே பழையதாகத் தெரியவில்லை, எந்த நபரும் முன்பு அவர் இருந்ததைப் போல இல்லை. நான் சிங்காசனத்தில் ஓய்வெடுக்கிறேன், முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக நான் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறேன், எல்லா விஷயங்களும் அவற்றின் பரிசுத்த நிலைக்கு மீண்டு விட்டதால் நான் முழுமையாகத் திருப்தி அடைகிறேன், மேலும் நான் மீண்டும் ஒருமுறை சீயோனுக்குள் அமைதியாக வாசம் செய்ய முடியும், பூமியில் உள்ள ஜனங்கள் என் வழிநடத்துலின் கீழ் அமைதியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ முடியும். எல்லா ஜனங்களும் என் கையில் உள்ள அனைத்தையும் நிர்வகிக்கிறார்கள், எல்லா ஜனங்களும் தங்கள் முந்தைய நுண்ணறிவு மற்றும் அசல் தோற்றத்தை மீண்டும் அடைந்து விட்டனர்; அவர்கள் இனியும் தூசியால் மூடப்பட்டிருப்பதில்லை, மாறாக, என் ராஜ்யத்தில், ஒவ்வொருவரும் மனுஷனின் இருதயத்திற்குள் பரிசுத்தமானது போன்ற முகத்துடன் மாணிக்கம் போன்று பரிசுத்தமாக இருக்கிறார்கள், ஏனென்றால் என் ராஜ்யம் மனிதர்களிடையே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 14, 1992