அத்தியாயம் 43
ஒருவேளை என்னுடைய ஆட்சிமுறை ஆணைகள் நிமித்தமாகவே ஜனங்கள் என்னுடைய வார்த்தைகளில் “அதிக ஆர்வம்” காட்டியிருக்கலாம். என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளால் ஆளப்படாவிட்டால், அவர்கள் எல்லோரும் இப்போதுதான் இடையூறு செய்யப்பட்ட புலிகள் போல ஊளையிட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். தினமும், நான் மேகங்களின் மத்தியில் உலாவுகிறேன், என் ஆட்சிமுறை ஆணைகள் மூலமாக என் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்கும் மனுக்குலம் பெருகி பூமியை நிரப்புவதை பார்த்துகொண்டிருக்கிறேன். இந்த வகையில், மனித இனம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது, மற்றும் நான் என் ஆட்சிமுறை ஆணைகளை நிலைநிறுத்துகிறேன். இந்தக் காலத்தில் இருந்து, என்னுடைய ஆட்சிமுறை ஆணையின் நிமித்தமாக பூமியின் மீதுஇருப்பவர்கள் எல்லா வகையான சிட்சைகளையும் பெறுகிறார்கள். இந்தச் சிட்சை அவர்களுக்கு அளிக்கப்படும்போது முழு மனுக்குலமும் மிகவும் சத்தமிட்டு எல்லா திசைகளிலும் ஓடுகிறார்கள். இந்தக் கணத்தில், பூமியின் தேசங்கள் உடனடியாக அழிந்துபோகின்றன, தேசங்களுக்கு இடையில் இருக்கும் எல்லைக்கோடுகள் இல்லாமல் போகின்றன, இடத்தில் இருந்து இடம் இனிமேலும் பிரிக்கப்படுவதில்லை, மனுஷர்களுக்கு இடையில் பிரிவினைகள் இல்லை. நான் மனுஷர்களுக்கு இடையில் “கருத்தியல் கிரியையைச்” செய்ய ஆரம்பிக்கிறேன். இதனால் ஜனங்கள் அமைதியாக இணைந்து வாழலாம், ஒருவரோடு ஒருவர் இனிமேலும் சண்டைகள் இல்லை, மேலும், மனுக்குலத்தின் நடுவே பாலங்களைக் கட்டி இணைப்புகளை உருவாக்கும் போது, ஜனங்கள் ஒற்றுமையாகிறார்கள். நான் வானம் சார்ந்தவைகளை என்னுடைய செயல்களின் வெளிப்பாடுகளால் நிரப்புகிறேன் மேலும் பூமியில் உள்ளவற்றையெல்லாம் என் வல்லமையின் கீழ் சாஷ்டாங்கமாய் விழச்செய்கிறேன். இவ்வாறு “உலக ஒற்றுமை” க்கான என் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறேன் மற்றும் என்னுடைய இந்த ஒரு விருப்பத்தைப் பலனளிக்குமாறு கொண்டுவருகிறேன். இதனால் மனிதன் பூமியின் மேல் “அலைந்து திரிய” மாட்டான், ஆனால் தாமதமின்றி ஒரு பொருத்தமான சென்றடையும் இடத்தைக் கண்டடைவான். எல்லா மனிதர்களும் விரைவில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு தேசத்தில் வாழவும், அதனால் அவர்களுடைய வாழ்க்கை இனிமேலும் சோகமானதாகவும் வெறுமையானதாகவும் இல்லாமல் இருக்கவும், அதனால் என்னுடைய திட்டங்கள் பூமியில் ஒன்றுமில்லாமல் போய்விடாமல் இருக்கவும் நான் மனித இனத்துக்காக எல்லா வகையிலும் சிந்திக்கிறேன். மனுஷன் பூமியில் வாழ்வதால் நானும் என்னுடைய தேசத்தைப் பூமியின் மேல்தான் கட்ட வேண்டும், ஏனெனில் என்னுடைய மகிமையின் வெளிப்பாட்டின் ஒரு பகுதி பூமியில்தான் உள்ளது. வானத்தில் நான் எனது நகரைச் சரியாக அமைத்து மேலும் கீழும் எல்லாவற்றையும் புதிதாக்குவேன். வானத்துக்கும் மேலேயும் கீழேயும் இருப்பவை அனைத்தையும் ஒன்றாக்குவேன். ஆகவே பூமியில் உள்ள யாவும் வானத்தில் உள்ள யாவற்றுடனும் ஒன்றாக இணைக்கப்படும். இதுவே என் திட்டம்; கடைசி காலத்தில் இதுவே நான் நிறைவேற்றப்போவதாகும்—என்னுடைய கிரியையின் இந்த பகுதியில் யாரும் தலையிடக் கூடாது! புறஜாதியார் தேசங்களின் மத்தியில் என் கிரியையைப் பரப்புவதே பூமியில் என்னுடைய கிரியையின் கடைசிப் பகுதியாகும். நான் செய்யும் கிரியையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது, இதனால்தான் ஜனங்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் பூமியில் என் கிரியைகளில் நான் மும்முரமாக ஈடுபட்டிருப்பதால், ஜனங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “பொறுப்பற்ற தன்மையில்” செயல்படுகிறார்கள். மிகவும் கட்டுப்பாடு இல்லாமல் போவதைக் கட்டுப்படுத்த அவர்களை நான் அக்கினிக் கடலின் கட்டுப்பாட்டைச் சகிக்கும்படி என் சிட்சையின் கீழ் வைத்தேன். இது என் கிரியையின் ஒரு படிநிலையாகும், மேலும் என் கிரியையின் இந்தப் படிநிலையை நிறைவேற்ற நான் அக்கினிக் கடலின் வலிமையைப் பயன்படுத்துவேன்; இல்லாவிட்டால், என் கிரியையை மேற்கொள்வது சாத்தியம் இல்லை. பிரபஞ்சம் முழுவதும் உள்ள மனிதர்களை என் சிங்காசனத்தின் முன் கீழ்ப்படிய வைப்பேன், என்னுடைய நியாயத்தீர்ப்பின் படி பல வகைகளாக அவர்களைப் பிரிப்பேன், இந்த வகைகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்துவேன், மேலும் அவர்களை அவர்களுடைய குடும்பங்களாகப் பிரித்தெடுப்பேன், இதனால் மனுக்குலம் முழுமையும் எனக்கு கீழ்ப்படியாமல் இருப்பதை நிறுத்தும், பதிலாக நான் பெயரிட்ட வகைகளின் படி ஒரு சீரான மற்றும் ஒழுங்கான ஏற்பட்டில் அமையும்—யாரும் ஒழுங்கின்றி அலைந்து திரிய முடியாது. பிரபஞ்சம் முழுதும், புதிய கிரியைகளை உருவாக்கியுள்ளேன்; பிரபஞ்சம் முழுவதும், என்னுடைய திடீர் தோற்றத்தால் எல்லா மனிதர்களும் திகைத்து ஊமையாகப் போயிருக்கிறார்கள், வெளிப்படையான என் தோற்றத்தால் அவர்களுடைய எல்லைகள் பெரிதும் விரிவடைந்துள்ளன. இன்றும் அப்படி அல்லவா இருக்கிறது?
எல்லா தேசங்கள் மற்றும் எல்லா ஜனங்களின் மத்தியிலும் நான் என் முதல் நடையை மேற்கொண்டிருக்கிறேன், மற்றும் எனது கிரியையின் முதல் பகுதியை நான் தொடங்கியிருக்கிறேன். புதிதாக ஆரம்பிக்க நான் என் திட்டத்துக்கு இடையூறு செய்யமாட்டேன்: புறஜாதி தேசங்களின் மத்தியில் நடைபெறும் கிரியையின் வரிசை பரலோகத்தில் என் கிரியையின் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது. எல்லா மனிதர்களும் தங்கள் கண்களை ஏறெடுத்து என் ஒவ்வொரு சைகையையும் செயல்களையும் பார்க்கும் நேரம்தான் நான் உலகத்தின் மீது ஒரு மூடுபனியை தோன்றச்செய்யும் நேரமாகும். மனிதர்களின் கண்கள் உடனடியாக மங்கலாகும், பாலைவனப் பாழில் உள்ள ஆட்டைப் போல அவர்களால் திசையை அறிய முடியாது, மேலும், புயல் ஊளையிட ஆரம்பிக்கும் போது, அவர்களது ஓலம் ஊளையிடும் காற்றால் மூழ்கடிக்கப்படுகிறது. காற்றின் அலைகளின் மத்தியில், மனித உருவங்கள் மங்கலாகத் தெரியலாம், ஆனால் மனிதக் குரலைக் கேட்க முடியாது, மற்றும் மனுஷர்கள் வாய்கிழிய கூக்குரலிட்டாலும், அவர்களுடைய முயற்சி வீணே. இந்த நேரத்தில், மனிதர்கள் தேம்பி அழுகிறார்கள், சத்தமாகப் புலம்புகிறார்கள், இந்த எல்லையற்ற பாலைவனத்தில் இருந்து தங்களை வெளியே வழிநடத்திச் செல்ல ஓர் இரட்சகர் திடீரென வானத்தில் இருந்து வரமாட்டாரா என்று ஏங்குகிறார்கள். ஆனால், அவர்களுடைய விசுவாசம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இரட்சகர் அசையாமல் இருக்கிறார், மற்றும் மனிதனின் நம்பிக்கைகள் அழிகின்றன: கொழுத்தப்பட்ட விசுவாச நெருப்பு பாலைவனத்தில் இருந்து வரும் புயலால் அணைக்கப்படுகிறது, மற்றும் ஒரு பாழான ஆள்நடமாட்டம் அற்ற இடத்தில் மனிதன் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கிறான். இனி ஒருபோதும் ஓர் எரியும் தீவட்டியை ஏற்ற முடியாமல் அவன் உணர்வற்று கீழே விழுகிறான்…. அந்தக் கணத்தைக் கைப்பற்றி, நான் மனிதனின் கண்களின் முன்னால் ஒரு பாலைவனச்சோலையைத் தோன்றச் செய்கிறேன். ஆனால், அவனுடைய இருதயம் அதிகமாய்க் களிப்படைந்தாலும், மனிதனின் உடல் செயலாற்ற முடியாதபடி நலிந்தும், பலவீனமாகவும், அவயவங்கள் நொண்டிக்கொண்டும் இருக்கின்றன; மேலும் அவன் அந்தப் பாலைவனச்சோலையில் அழகிய பழங்கள் பழுத்திருப்பதைக் கண்ட போதிலும் அவற்றைப் பிடுங்க வலுவற்றவனாக இருக்கிறான், ஏனெனில் மனிதனின் “உள் ஆதாரங்கள்” முற்றிலுமாகச் செலவழிந்து போய்விட்டன. மனுஷனுக்குத் தேவையான பொருட்களை நான் எடுத்து அவனுக்கு அளிக்கிறேன், ஆனால் அவனால் கணநேரம் புன்னகைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை, அவனது முகம் முற்றிலும் களையிழந்து காணப்படுகிறது: மனிதனின் ஒவ்வொரு சொட்டு வலிமையும் தடயமின்றி மறைந்துவிட்டது, நகர்ந்துசெல்லும் காற்றோடு காற்றாகப் போய்விட்டது. இந்தக் காரணத்தினால், மனிதனின் முகம் முற்றிலும் உணர்ச்சியற்று இருக்கிறது, அவனது இரத்தச் சிவப்பான கண்களில் இருந்து ஒரு தாய் தன் குழந்தையைப் பார்ப்பது போல் ஒரு மென்மையான தயையுடன் ஓர் ஒற்றை அன்பின் கதிர் வெளிப்படுகிறது. அவ்வப்போது, பேச முனைவது போல் மனிதனின் வறண்ட, வெடித்த உதடுகள் அசைகின்றன ஆனால் அப்படிச் செய்ய பலமில்லாமல் இருக்கிறான். நான் கொஞ்சம் தண்ணீரை மனுஷனுக்குக் கொடுக்கிறேன், ஆனால் தலையை அசைப்பதைத் தவிர அவன் வேறொன்றையும் செய்வதில்லை. இந்த ஒழுங்கில்லாத கணிக்கமுடியாத செயல்களின் மூலம், மனிதன் தன்மேல் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் ஏற்கெனவே இழந்துவிட்டான் என்றும் ஏதோ ஒன்றுக்காகக் கெஞ்சுவது போல என் மேல் தன் மன்றாடும் பார்வையை வைத்திருக்கிறான் என்றும் நான் அறிந்துகொண்டேன். ஆனால், மனுக்குலத்தின் பழக்கவழக்கங்கள் போன்ற பலவற்றை அறியாததால், நான் மனுக்குலத்தின் முக பாவனைகள் மற்றும் செய்கைகளால் திகைத்துப் போயிருக்கிறேன். இந்தக் கணத்தில்தான் மனிதனுடைய இருப்பு ஒரு முடிவுக்கு வேகமாக வருகிறது என்பதை நான் திடீரெனக் கண்டுபிடிக்கிறேன். ஒரு பரிதாபப் பார்வையை அவன் மேல் செலுத்துகிறேன். இந்தக் கணத்தில்தான், அவனது எல்லா விருப்பங்களும் நிறைவேறியது போல, என்னைப் பார்த்துத் தலையை அசைத்து மனிதன் ஒரு மகிழ்ச்சிப் புன்னகையைக் காட்டுகிறான். மனிதன் அதற்கு மேலும் சோகத்தில் இல்லை; பூமியின் மேல் ஜனங்கள் தங்கள் வாழ்க்கையின் வெறுமையைக் குறித்து மேலும் குறைகூறுதில்லை, “ஜீவிதத்தின்” எல்லா செய்கைகளையும் விலக்குவதில்லை. அதில் இருந்து, பூமியில் பெருமூச்சுக்கள் இல்லை, மனுக்குலத்தின் ஜீவித நாட்கள் மகிழ்ச்சியால் நிரம்பி இருக்கும் …
நான் என் சொந்தக் கிரியையைத் தொடங்குவதற்கு முன் மனிதன் தொடர்ந்து என் கிரியைகளில் தலையிடாதபடிக்கு மனுஷனின் விவகாரங்களைத் தகுந்த முறையில் செய்துமுடிப்பேன். எனக்கு மனுஷனின் காரியங்கள் முக்கியப் பிரச்சினை அல்ல; மனுஷனின் காரியங்கள் முக்கியத்துவம் அற்றவைகள். மனுஷன் அற்பமான ஆவியைக் கொண்டிருப்பதால் மனுஷன் ஒரு சிறிய எறும்புக்குக் கூட இரக்கத்தைக் காட்ட விருப்பமற்று இருப்பதுபோல் தோன்றுகிறது அல்லது எறும்புகள் மனுக்குலத்தின் விரோதிகள் போல—மனிதர்களின் மத்தியில் எப்போதும் ஒரு பேதம் இருக்கிறது. மனிதனின் பேதத்தைக் கேட்கும்போது, நான் மீண்டும் ஒரு முறை சென்றுவிடுகிறேன். அவர்களின் கதைகளை அதன்பிறகு கேட்பதில்லை. மனிதனின் கண்களில், நான் “குடியிருப்போரின்” மத்தியில் “குடும்பப் பிரச்சினைகளைத்” தீர்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு “குடியிருப்போர் குழு” வைப் போல இருக்கிறேன். ஜனங்கள் என் முன் வரும்போது, மாற்றமின்றி தங்கள் சொந்த காரணங்களோடும், அதீத ஆர்வத்துடனும் வந்து தங்கள் சொந்த “அசாதாரண அனுபவங்களை” வழக்கம்போல் தங்கள் சொந்த வருணனைகளுடன் கூறுகிறார்கள். நான் மனிதர்களின் அசாதாரண நடத்தையை பார்க்கிறேன்: அவர்கள் முகங்களில் தூசி படிந்திருக்கிறது—வியர்வையால் “நீர்ப்பாசனம்” செய்யப்பட்டு, வியர்வையோடு உடனடியாக இணைந்து தன் “சுதந்திரத்தை” இழந்துபோன தூசி, மற்றும் மனிதனின் முகங்கள் மேலும் “வளம்பெற்று” ஆங்காங்கே கால்தடங்களையும் பார்க்கக்கூடிய ஒரு கடற்கரையின் மணல் பரப்பைப்போல காட்சி அளிக்கின்றன. அவர்களின் முடி இறந்து போனவர்களின் ஆவியைப் போல ஒளியிழந்து ஒரு கோளத்தில் குத்தி நிற்கும் வைக்கோல் துண்டுகளைப் போல நிமிர்ந்து நிற்கிறது. அவனுடைய மனநிலை மிகவும் கொந்தளிப்பதால், அவனுடைய முடி கோபத்தால் குத்திட்டு நிற்கிறது, வியர்வை “கொதிப்பதைப்” போல அவனுடைய முகம் அவ்வப்போது “நீராவியை” வெளியேற்றுகிறது. அவனை நெருக்கமாகச் சோதித்துப்பார்த்தால், மனுஷனுடைய முகத்தில் எரியும் சூரியன் போல “பிழம்புகள்” சூழ்ந்திருப்பதை நான் காண்கிறேன், ஆகவேதான் சூடான வாயு அதில் இருந்து எழுகிறது, மேலும் அவனுடைய கோபம் அவனது முகத்தை எரித்துவிடுமோ என்று அவன் அதைப் பொருட்படுத்தாவிட்டாலும் கூட நான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன். இந்தக் கட்டத்தில், தன் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு நான் மனுஷனை வற்புறுத்துகிறேன், ஏனெனில் இதனால் என்ன நன்மை விளையப்போகிறது? உன்னையே நீ ஏன் சித்திரவதைச் செய்துகொள்கிறாய்? கோபத்தால், இந்த “கோளத்தின்” பரப்பில் நிற்கும் வைக்கோல் தாளடிகள் உண்மையிலேயே சூரியனின் கதிர்களால் எரிக்கப்படுகின்றன; இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், “சந்திரன்” கூட சிவப்பாக மாறுகிறது. தன்னுடைய கோபத்தை மிதமாக வைத்துக்கொள்ளும்படி நான் மனிதனுக்கு வலியுறுத்துகிறேன்—அவனுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது முக்கியமானது. ஆனால் மனிதன் என் ஆலோசனையைக் கேட்பதில்லை; மாறாக, அவன் தொடர்ந்து என்னிடத்தில் “தன் குறைகளைக் கூறிக்கொண்டே” இருக்கிறான். இதில் ஏதாவது பயன் இருக்கிறதா? மனிதன் அனுபவித்து மகிழமுடியாமல் என் நன்மை மனிதனுக்குப் போதுமானதாக இல்லையா? அல்லது நான் கொடுப்பதை மனிதன் மறுக்கிறானா? ஒரு திடீர்க் கோபத்தில் நான் மேசையை உயர்த்துவதால் மனிதன் தன் கதையில் இருந்து உற்சாகமான அத்தியாயங்களைக் கூற அதற்கு மேலும் துணிவதில்லை; நான் அவனை அமைதிப்படுத்த சில நாட்களுக்கு ஒரு “தடுப்பு மையத்துக்கு” அனுப்பிவிடுவேனோ என்று பயப்படுகிறான். நழுவுவதற்கு நான் அளித்த உத்தியை வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொள்ளுகிறான். இல்லாவிட்டால், மனிதன் இப்படிப்பட்ட விஷயங்களை விடுவதற்கு ஒருபோதும் விருப்பப்பட மாட்டான, ஆனால் தன்னுடைய சொந்தக் கவலைகளைக் குறித்து பேசிக்கொண்டே இருப்பான். இந்தச் சத்தமே எனக்கு எரிச்சலூட்டுகிறது. மனிதர்கள் ஏன் தங்கள் இருதயங்களின் மையத்தில் மிகவும் சிக்கல் உள்ளவர்களாக இருக்கிறார்கள்? நான் மனுஷனுக்குள் மிக அதிகமான “பாகங்களைப்” பொருத்திவிட்டேனோ? அவன் ஏன் என் முன்னால் எப்போதும் படம் காட்டுகிறான்? நிச்சயமாக, “குடிகளின் தகராறுகளைத்” தீர்த்து வைப்பதற்கு நான் ஓர் “ஆலோசகர்” இல்லை அல்லவா? என்னிடம் வருமாறு நான் மனிதனிடம் கேட்டேனா? நிச்சயமாக நான் ஒரு மாவட்ட நீதிபதி இல்லை அல்லவா? ஜனங்களின் விவகாரங்கள் எப்போதும் ஏன் என் முன் கொண்டுவரப் படுகின்றன? மனிதன் தன் விவகாரங்களில் என்னைத் தொந்தரவுசெய்யாமல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தகுதியாவான் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் செய்வதற்கு எனக்கு அதிகமான கிரியைகள் இருக்கின்றன.
மே 18, 1992