அத்தியாயம் 11

மனிதகுலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் என் ஆவியால் ஆராயப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் உன்னிப்பாக ஆராய வேண்டும், மேலும், எனது அதிசய செயல்களையும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். ராஜ்யம் பூமிக்கு வரும் நேரத்தில் அதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? என் புத்திரர்களும் மக்களும் என் சிங்காசனத்தை நோக்கி விரைந்து வரும்போது, பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன்பாக நான் முறையாக நியாயத்தீர்ப்பைத் தொடங்குகிறேன். அதாவது, நான் பூமியில் எனது கிரியையை நேரில் சென்று தொடங்கும் போது மற்றும் நியாயத்தீர்ப்பின் சகாப்தம் அதன் முடிவுக்கு வரும்போது, எனது வார்த்தைகளை முழு பிரபஞ்சத்திற்கும் வழிநடத்தத் தொடங்குகிறேன், மேலும் என் ஆவியின் சத்தத்தை முழு பிரபஞ்சத்திற்கும் வெளியிடுகிறேன். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜனங்களையும் பொருட்களையும், என் வார்த்தைகளின் மூலம் நான் சுத்தமாகக் கழுவுவேன், இதனால் பூமியானது இனிமேல் அசுத்தமாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இல்லாமல் ஒரு பரிசுத்த ராஜ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் நான் புதுப்பிப்பேன், இதனால் அவை என் பயன்பாட்டிற்கு வைக்கப்படும், இதனால் அவை இனி பூமியின் சுவாசத்தைத் தாங்கி இருக்காது, மேலும் மண்ணின் வாசனையால் அவை கறைபடாது. பூமியில், மனிதன் என் வார்த்தைகளின் குறிக்கோள் மற்றும் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கொண்டான், என் செயல்களைக் கவனித்திருக்கிறான், ஆனாலும் என் வார்த்தைகளின் தோற்றத்தின் ஆரம்பத்தை யாரும் உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை, என் செயல்களில் உள்ள அதிசயத்தை யாரும் உண்மையிலேயே கண்டதில்லை. இன்றுதான், நான் நேரடியாக வந்து மனிதர்களிடையே என் வார்த்தைகளைப் பேசும்போது, அவர்களின் எண்ணங்களில் “நான்” என்பது ஆக்கிரமித்துள்ள இடத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நடைமுறை தேவனுக்கு அவர்களின் பிரக்ஞையில் ஓர் இடத்தை உருவாக்கும்போது, மனிதனுக்கு என்னைப் பற்றி கொஞ்சம் தெரிகிறது. மனிதனுக்கு எண்ணங்கள் உள்ளன, மிகுந்த ஆர்வம் உள்ளது; யார்தான் தேவனைப் பார்க்க விரும்பவில்லை? தேவனைச் சந்திக்க விரும்பாதவர் யார்? ஆயினும், மனிதனின் இதயத்தில் ஒரு திட்டவட்டமான இடத்தைப் பிடிக்கும் ஒரே விஷயம், தெளிவற்ற மற்றும் எண்ணத்தில் மனிதன் உணரும் தேவன். நான் அவர்களிடம் தெளிவாகச் சொல்லாவிட்டால் இதை யார் உணருவார்கள்? நான் உண்மையிலேயே இருக்கிறேன் என்று, இம்மியளவும் சந்தேகம் இல்லாமல், யார் உறுதியாக நம்புவார்கள்? மனிதனின் இருதயத்தில் உள்ள “நான்” மற்றும் யதார்த்தத்தில் உள்ள “நான்” ஆகியவற்றுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது, மேலும் யாராலும் அவற்றுக்கிடையே ஒப்பீடுகளைச் செய்ய இயலாது. நான் மாம்சமாக மாறாவிட்டால், மனிதன் என்னை ஒருபோதும் அறியமாட்டான், அவன் என்னை அறிய நேர்ந்தாலும்கூட, அத்தகைய அறிவு அப்போதும் ஓர் எண்ணமாக இருக்காதா? ஒவ்வொரு நாளும் நான் இடைவிடாமல் பாயும் ஜனங்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நடக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நபருக்குள்ளும் செயல்படுகிறேன். மனிதன் என்னை உண்மையாகப் பார்க்கும்போது, அவன் என் வார்த்தைகளால் என்னை அறிந்து கொள்ள முடியும், மேலும் நான் பேசும் வழிமுறைகளையும் என் நோக்கங்களையும் புரிந்துகொள்வான்.

ராஜ்யம் முறையாக பூமிக்கு வந்து சேரும்போது, எல்லாவற்றிற்கும் மேலாக, எது அமைதியாக இல்லாதது? எல்லா ஜனங்களிடையேயும் பயப்படாதவர் யார்? நான் பிரபஞ்ச உலகம் முழுவதிலும் எல்லா இடங்களிலும் நடக்கிறேன், எல்லாமே நேரடியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், என் செயல்கள் அற்புதமானவை என்று யாருக்குத் தெரியாது? என் கைகள் எல்லாவற்றையும் உயர்த்திப் பிடிக்கின்றன, ஆனாலும் நான் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறேன். இன்று, என் மனத்தாழ்மை மற்றும் மறைவின் உண்மையான அர்த்தம் என் அவதரிப்பு மற்றும் மனிதர்களிடையே எனது தனிப்பட்ட பிரசன்னம் ஆகியவை அல்லவா? வெளிப்புறமாக, பலர் என்னை நல்லவர் என்று போற்றுகிறார்கள், என்னை அழகுள்ளவர் என்று துதிப்பார்கள், ஆனால் என்னை உண்மையாக அறிந்தவர் யார்? இன்று, என்னை அறிந்திருக்கிறீர்களா என்று உங்களை நான் ஏன் கேட்கிறேன்? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெட்கப்படச் செய்வது என் நோக்கம் அல்லவா? என்னைத் துதிக்கும்படி மனிதனை வற்புறுத்த நான் விரும்பவில்லை, ஆனால் அவன் என்னை அறியும்படியும், அதன் மூலம் அவன் என்னை நேசிக்கும்படியும், அதனால் அவன் என்னைத் துதிக்கும்படியும் செய்வேன். இத்தகைய துதி அதன் பெயருக்குத் தகுதியானது, மேலும் இது வெற்றுப் பேச்சு அல்ல; இது போன்ற துதித்தல் மட்டுமே என் சிங்காசனத்தை அடைந்து வானத்தில் மேலே செல்லமுடியும். ஏனென்றால், மனிதன் சாத்தானால் தூண்டப்பட்டு, சீர்கேடு அடைந்துள்ளான், ஏனென்றால் அவன் எண்ணங்களாலும் சிந்தனையினாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறான், மனிதகுலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் வெல்லவும், மனிதனின் எல்லா எண்ணங்களையும் வெளிப்படுத்தவும், மனிதனின் சிந்தனையைக் கிழித்து எறியவும் நான் மாம்சமாக மாறியுள்ளேன். இதன் விளைவாக, மனிதன் இனிமேல் எனக்கு முன்னால் வந்து எதிர்த்து நிற்க மாட்டான், இனிமேல் அவனது சொந்த எண்ணங்களைப் பயன்படுத்தி எனக்குச் சேவை செய்ய மாட்டான், இதனால் மனிதனின் எண்ணங்களில் உள்ள “நான்” முற்றிலும் அகற்றப்படுகிறது. ராஜ்யம் வரும்போது, நான் முதலில் செய்வது இந்தக் கட்டத்தின் வேலையைத் தொடங்குவது, மேலும் நான் என் மக்களிடையே அவ்வாறே செய்கிறேன். சிவப்பான பெரிய வலுசர்ப்ப நாட்டில் பிறந்த எனது ஜனங்கள் என்ற முறையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமல்ல, அல்லது ஒரு பகுதியாவது நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும். எனவே, எனது கிரியையின் இந்த கட்டம் முதன்மையாக உங்கள் மீது கவனம் செலுத்துகிறது, இது சீனாவில் எனது அவதரிப்பின் முக்கியத்துவத்தின் ஓர் அம்சமாகும். நான் பேசும் சொற்களின் ஒரு துணுக்கைக் கூட பெரும்பாலான ஜனங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை, அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்களின் புரிதல் மங்கலாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. இதுதான் நான் பேசும் முறையின் திருப்புமுனையாகும். எல்லா ஜனங்களும் என் வார்த்தைகளைப் படித்து அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தால், மனிதர்களில் யார் பாதாளத்தில் தள்ளப்படாமல் காப்பாற்றப்படக் கூடும்? மனிதன் என்னை அறிந்திருக்கும்போது, எனக்குக் கீழ்ப்படியும்போது, அதுதான் நான் ஓய்வெடுக்கும் நேரமாக இருக்கும், அதுவே என் வார்த்தைகளின் அர்த்தத்தை மனிதனால் புரிந்துகொள்ளக்கூடிய நேரமாக இருக்கும். இன்று, உங்கள் அந்தஸ்து மிகச் சிறியது—இது கிட்டத்தட்டப் பரிதாபகரமான அளவுக்குச் சிறியது, மேலே உயர்த்தப்படுவதற்குக் கூட தகுதியற்றது—என்னைப் பற்றிய உங்கள் அறிவைப் பற்றி எதுவும் கூறவேண்டியதில்லை.

தேவதூதர்கள் என் புத்திரர்களையும் ஜனங்களையும் மேய்ப்பதற்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள் என்று நான் சொன்னாலும், என் வார்த்தைகளின் அர்த்தத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நேரடியாக மனிதர்கள் மத்தியில் வரும்போது, அதேநேரத்தில் தேவதூதர்கள் மேய்ப்பர் கிரியையைத் தொடங்குகிறார்கள், தேவதூதர்கள் மேய்ப்பர் வேலை செய்யும்போது, எல்லா புத்திரர்களும் ஜனங்களும் சோதனைகளையும் மேய்ச்சலையும் பெறுவது மட்டுமல்லாமல், அனைத்து வகையான தரிசனங்களின் நிகழ்வுகளையும் தங்கள் சொந்தக் கண்களால் பார்க்க முடிகிறது. நான் தெய்வீகத்தில் நேரடியாகக் கிரியை செய்வதால், எல்லாமே ஒரு புதிய தொடக்கத்தில் பிரவேசிக்கின்றன, மேலும் இந்த தெய்வீகம் நேரடியாகச் செயல்படுவதால், இது மனிதர்களால் சிறிதளவுகூட கட்டுப்படுத்தப்படவில்லை, மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் சுதந்திரமாக இயங்குவதுபோல மனிதனுக்குத் தெரிகிறது. ஆனாலும், என்னைப் பொறுத்தவரை, இது முற்றிலும் இயல்பானது (மனிதன் அது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று நம்புகிறான், ஏனெனில் அவன் ஒருபோதும் தெய்வீகத்தை நேரடியாகச் சந்தித்ததில்லை); இது மனிதனின் எண்ணங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை, மேலும் மனிதக் கருத்துக்களால் கறைபடவில்லை. மக்கள் அனைவரும் சரியான பாதையில் பிரவேசிக்கும்போதுதான் அவர்கள் இதைப் பார்ப்பார்கள்; ஏனென்றால் இப்போதுதான் இதன் ஆரம்பம், அவன் நுழைவுக்கு வரும்போது மனிதனுக்குப் பல குறைபாடுகள் உள்ளன, மேலும் தோல்விகள் மற்றும் மனம் மழுங்கிப் போவதைத் தவிர்க்க முடியாது. இன்று, நான் உங்களை இந்த நிலைக்கு இட்டுச் சென்றதிலிருந்து, நான் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன், எனது சொந்த நோக்கங்கள் உள்ளன. அவற்றை நான் உங்களுக்குச் சொல்வதாக இருந்தால், நீங்கள் உண்மையிலேயே அவற்றை அறிந்து கொள்ள முடியுமா? மனிதனின் மனதின் சிந்தனைகள் மற்றும் மனிதனின் இருதயத்தின் விருப்பங்களை நான் நன்கு அறிவேன்: தங்களுக்கு என்று ஒரு வழியை ஒருபோதும் தேடாதவர் யார்? தங்கள் சொந்த வாய்ப்புகளை ஒருபோதும் நினைக்காதவர்கள் யார்? ஆயினும், மனிதன் ஒரு செறிவுள்ள மற்றும் பளபளக்கும் புத்தியைக் கொண்டிருந்தாலும், யுகங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே நிகழ்ந்ததுபோல் நிகழ்காலம் மாறிவிடும் என்று யாரால் கணிக்க முடிந்தது? இது உண்மையில் உனது சொந்த அகநிலை முயற்சிகளின் பலனா? இது உனது அயராத விடாமுயற்சிக்கான கிரயமா? உனது மனதால் கருதப்பட்ட அழகான ஒப்பனைக்காட்சி இதுதானா? எல்லா மனிதர்களுக்கும் நான் வழிகாட்டவில்லை என்றால், எனது ஏற்பாடுகளிலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ளவும் வேறு வழியைக் கண்டுபிடிக்கவும் யாருக்கு இயலக்கூடும்? மனிதனின் கற்பனைகளும் விருப்பங்களும்தான் அவனை இன்றைய நாளுக்கு அழைத்து வந்துள்ளனவா? பலர் தங்கள் முழு வாழ்க்கையிலும் தங்கள் விருப்பங்கள் நிறைவேறாமல் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களின் சிந்தனையில் உள்ள தவறுதான் இதற்குக் காரணமா? பலரது வாழ்க்கை எதிர்பாராத மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் நிரம்பியுள்ளது. இது, உண்மையாகவே அவர்கள் மிகக் குறைவாக எதிர்பார்க்கிறார்கள் என்பதால்தானா? ஒட்டுமொத்த மனிதகுலத்திலும் சர்வவல்லமையுடையவரின் பார்வையில் யார் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்? சர்வவல்லமையுடையவரின் முன்குறித்தல் மத்தியில் யார் வாழவில்லை? மனிதனின் வாழ்க்கையும் மரணமும் அவனது விருப்பப்படி நடக்கிறதா? மனிதன் தன் சொந்த விதியைக் கட்டுப்படுத்துகிறானா? பலர் மரணத்திற்காகக் கூக்குரலிடுகிறார்கள், ஆனால் அது அவர்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது; பலர் வாழ்க்கையில் வலிமையானவர்களாகவும், மரணத்திற்குப் பயந்தவர்களாகவும் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியாமல், அவர்கள் மரிக்கும் நாள் நெருங்கி, மரணம் என்ற படுகுழியில் ஆழ்த்துகிறது; பலர் வானத்தைப் பார்த்து ஆழ்ந்து பெருமூச்சு விடுகிறார்கள்; பலர் பலமாகக் கூக்குரலிடுகிறார்கள், தேம்பி அழுது ஒப்பாரி வைக்கிறார்கள்; பலர் சோதனைகளுக்கு மத்தியில் விழுகிறார்கள்; மேலும் பலர் இச்சைகளின் கைதிகளாக மாறுகிறார்கள். மனிதன் என்னைத் தெளிவாகக் காண அனுமதிக்க நான் நேரில் தோன்றவில்லை என்றாலும், பலர், நான் அவர்களைத் தாக்குவேன், நான் அவர்களை அழிந்துபோகுமாறு செய்வேன் என்று ஆழ்ந்த பயம் கொண்டு, என் முகத்தைப் பார்க்க அஞ்சுகிறார்கள். மனிதன் என்னை உண்மையாக அறிந்திருக்கிறானா, அல்லது அவன் அறியவில்லையா? உறுதியாக யாரும் இதனைச் சொல்ல முடியாது. இது அப்படி அல்லவா? நீ எனக்கும் என் தண்டனைக்கும் அஞ்சுகிறாய், ஆனாலும் நீ எழுந்து நின்று என்னை வெளிப்படையாக எதிர்த்து என்மீது நியாயத்தீர்ப்பு வழங்குகிறாய். இது அப்படிப்பட்ட ஒன்று இல்லையா? ஏனென்றால் மனிதன் என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் அவன் என் முகத்தைப் பார்த்ததில்லை அல்லது என் சத்தத்தைக் கேட்டதில்லை. ஆகவே, நான் மனிதனின் இருதயத்திற்குள் இருந்தாலும்கூட, யாருடைய இருதயத்தில் மந்தமாகவும் தெளிவற்றும் நான் இல்லாது இருக்கிறேன்? யாருடைய இருதயத்தில் நான் பரிபூரணமான தெளிவுடன் இருக்கிறேன்? என் ஜனங்களாக இருந்துகொண்டு, தெளிவின்றியும், மனம் மழுங்கியும் அவர்கள் என்னைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை, இதனால் நான் இந்த மாபெரும் கிரியையை மேற்கொள்கிறேன்.

நான் அமைதியாக மனிதனின் மத்தியில் வருகிறேன், நான் மென்மையாகப் புறப்படுகிறேன். யாராவது என்னை எப்போதாவது பார்த்திருக்கிறார்களா? சூரியன், அதன் எரியும் தீப்பிழம்புகள் இருக்கும் காரணத்தால், என்னைப் பார்க்க முடியுமா? சந்திரன், அதன் பளபளக்கும் தெளிவு இருக்கும் காரணத்தால் என்னைப் பார்க்க முடியுமா? விண்மீன்கள் வானத்தில் அவை இடம் பெற்றிருக்கும் காரணத்தால் என்னைப் பார்க்க முடியுமா? நான் வரும்போது, அது மனிதனுக்குத் தெரியாது, அனைத்து ஜீவன்களுமே அதனை அறியாமலே இருக்கின்றன, நான் புறப்படும்போது, அப்போதும் அது மனிதனுக்குத் தெரியாது. எனக்கு யார் சாட்சியமளிக்க முடியும்? இது பூமியிலுள்ள ஜனங்களின் துதியாக இருக்க முடியுமா? வனாந்தரங்களில் மலரும் லீலி புஷ்பங்களாக இருக்க முடியுமா? அவை வானத்தில் பறக்கும் பறவைகளா? அவை மலைகளில் கர்ஜிக்கும் சிங்கங்களா? யாரும் எனக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க முடியாது! நான் செய்யும் கிரியையை யாராலும் செய்ய முடியாது! அவர்கள் இந்தக் கிரியையைச் செய்தாலும், அது என்ன விளைவை ஏற்படுத்தும்? ஒவ்வொரு நாளும் நான் பலருடைய ஒவ்வொரு செயலையும் கவனிக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் பலருடைய இருதயங்களையும் மனங்களையும் தேடுகிறேன்; என் நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் ஒருபோதும் தப்பவில்லை, என் நியாயத்தீர்ப்பின் யதார்த்தத்தை யாரும் அவர்களாகவே ஒருபோதும் களைவதில்லை. நான் வானத்திற்கு மேலே நின்று வெகு தூரத்திற்குள் பார்க்கிறேன்: எண்ணற்ற ஜனங்கள் என்னால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள், ஆனாலும், எண்ணிக்கையில் அடங்காத ஜனங்கள் என் கருணை மற்றும் அன்பின் மத்தியில் வாழ்கிறார்கள். நீங்களும் அத்தகைய சூழ்நிலைகளில் வாழவில்லையா?

மார்ச் 5, 1992

முந்தைய: ராஜ்ய கீதம்

அடுத்த: அத்தியாயம் 12

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக