பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது

மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது. அவருடைய மனிதத்தன்மையாக இருந்தாலும் அல்லது தெய்வீகத்தன்மையாக இருந்தாலும், இரண்டுமே பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகின்றன. கிறிஸ்துவின் சாராம்சம் ஆவியானவர் ஆவார், அதாவது தெய்வீகத்தன்மையுள்ளவர் ஆவார். ஆகையால், அவருடைய சாராம்சம் தேவனாகவே இருக்கிறது; இந்தச் சாராம்சம் அவரது சொந்தக் கிரியைக்கு இடையூறு விளைவிக்காது, மேலும் அவரால் தனது சொந்தக் கிரியையை அழிக்கும் எதையும் செய்ய முடியாது, மேலும் அவர் தனது சொந்தச் சித்தத்திற்கு எதிரான எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கவும் மாட்டார். ஆகையால், மாம்சத்தில் வந்த தேவன் தனது சொந்த நிர்வாகத்தைக் குறுக்கிடும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதைத்தான் ஜனங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சாராம்சம் மனிதனை இரட்சிப்பதே ஆகும், இது தேவனுடைய சொந்த நிர்வாகத்தின் பொருட்டே செய்யப்படுகிறது. இதேபோல், கிறிஸ்துவின் கிரியை மனிதனை இரட்சிப்பதாகும், மேலும் அது தேவனுடைய சித்தத்திற்காகவே செய்யப்படுகிறது. தேவன் மாம்சமாக வந்ததனால், அவரது கிரியையைச் செய்ய அவருடைய மாம்சம் போதுமானதாக இருக்கிறது என்பதை அவர் தமது மாம்சத்திற்குள் தமது சாராம்சத்தை உணர்ந்துகொள்கிறார். ஆகையால், கிறிஸ்துவின் மனித அவதாரத்தின் போது தேவனுடைய ஆவியின் அனைத்துக் கிரியைகளுக்கும் பதிலாக கிறிஸ்துவின் கிரியை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த மனித அவதாரக் காலம் முழுவதுமுள்ள அனைத்துக் கிரியைகளின் பிரதான மையமாக கிறிஸ்துவின் கிரியை இருக்கிறது. இதை வேறு எந்தக் காலத்தின் கிரியையோடும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. தேவன் மாம்சமாக மாறுவதால், அவர் தம்முடைய மாம்சத்தின் அடையாளத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார்; அவர் மாம்சத்தில் வருவதால், அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையை செய்து முடிக்கிறார். அது தேவனுடைய ஆவியாக இருந்தாலும் அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும், இருவரும் தேவனே, அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார், மற்றும் அவர் தாம் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்கிறார்.

தேவனுடைய சாராம்சமே அதிகாரம் செலுத்துகிறது, ஆனால் அவரிடமிருந்து வரும் அதிகாரத்திற்கு அவர் முழுமையாக கீழ்ப்படியக் கூடியவராக இருக்கிறார். அது ஆவியானவருடைய கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், அவை மற்றவற்றுடன் முரண்படுவதில்லை. எல்லா சிருஷ்டிப்புகள் மீதும் தேவனுடைய ஆவியானவர் அதிகாரமுடையவராக இருக்கிறார். தேவனுடைய சாராம்சத்தைக் கொண்ட மாம்சத்திற்கும் அதிகாரம் உண்டு, ஆனால் மாம்சத்தில் உள்ள தேவன் பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறதான எல்லா கிரியைகளையும் செய்யக் கூடியவராக இருக்கிறார். இதை எந்த ஒரு தனிப்பட்ட நபராலும் அடையவோ அல்லது பெறவோ முடியாது. தேவனே முழு அதிகாரம் உடையவராக இருக்கிறார், ஆனால் அவருடைய மாம்சமானது அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படியக் கூடியதாக இருக்கிறது. “பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிகிறார்” என்று கூறப்படும் போது, இவ்வாறுதான் அர்த்தம் கொள்ளப்படுகிறது. தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார், தேவன் மனிதனாக முடிகிறது போல அவராலே இரட்சிப்பின் கிரியையைச் செய்ய முடியும். எப்படியிருந்தாலும், தேவன் தாமே தமது சொந்த கிரியையைச் செய்கிறார்; அவர் குறுக்கிடவோ, தலையிடவோ செய்யாமல், அதையும்விட அவர் தம்மை முரண்படுத்தும் கிரியையை செய்வதில்லை, ஏனென்றால் ஆவியானவரும் மாம்சமாய் வந்தவரும் செய்யும் கிரியையின் சாராம்சம் ஒன்றாயிருக்கிறது. அது ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக வந்தவராக இருந்தாலும், இருவரும் ஒரே சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் மற்றும் ஒரே கிரியையை நிர்வகிப்பதற்குமே கிரியையை நடப்பிக்கிறார்கள். ஆவியானவரும் மாம்சமானவரும் இருவரும் முற்றிலும் வேறுபட்ட குணங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் சாராம்சங்கள் ஒன்றாயிருக்கின்றன; இருவருமே தேவனுடைய சாராம்சம் மற்றும் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். கீழ்ப்படியாமையின் எந்த அம்சங்களையும் தேவன்தாமே தம்மில் கொண்டிருக்கவில்லை; அவரது சாராம்சம் நன்மையானதாக இருக்கிறது. அவர் தாமே சகல அழகு மற்றும் நன்மைகளின் வெளிப்பாடாக இருக்கிறார், அதேபோல் அவர் சகல அன்புள்ளவராகவும் இருக்கிறார். மாம்சத்தில் கூட, பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படியாத செயல் எதையும் தேவன் செய்வதில்லை. தமது ஜீவனைப் பலியாகக் கொடுக்கும் விஷயத்தில் கூட, அவர் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல், அவர் முழு மனதுடன் அவ்வாறே செய்யத் தயாராக இருந்தார். தேவன் சுய-நீதி அல்லது சுய-முக்கியத்துவமாகிய எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை, அல்லது வீண் பெருமை மற்றும் அகந்தை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை; சீர்கேடான எந்த அம்சங்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படியாத அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன; சகல அவலட்சணத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் சாத்தான்தான் ஆதாரம். மனிதன் சாத்தானால் சீர்கெட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதுதான், சாத்தானுக்கு இருக்கின்ற குணங்களைப் போன்று மனிதனுடைய குணங்களும் இருப்பதற்கான காரணமாகும். கிறிஸ்துவானவர் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, எனவே அவர் சாத்தானின் குணங்கள் எதுவும் கொண்டிராமல் தேவனுடைய குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார். எவ்வளவு கடினமான கிரியை அல்லது பலவீனமான மாம்சமாக இருந்தாலும், தேவன் மாம்சத்தில் வாழும்போது, தேவனுடைய கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்ய மாட்டார், மேலும் அதையும்விட கீழ்ப்படியாமையினால் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைக் கைவிடவும் மாட்டார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு எதிராகப் போவதை விட அவர் மாம்சத்தின் வேதனையையே அனுபவிப்பதை விரும்பினார்; “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” என்று இயேசு ஜெபத்தில் சொன்னது போலவே இருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொந்த விருப்பங்களையே தேர்வு செய்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு செய்யவில்லை. அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருந்தாலும், அவர் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே நாடுகிறார், பிதாவாகிய தேவனால் தமக்கு ஒப்புவிக்கப்பட்டதை தமது மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து நிறைவேற்றுகிறார். இது மனிதனால் அடைய முடியாத ஒன்றாகும். சாத்தானிடமிருந்து வருகிற எதுவும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியாது; அது தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் அவரை எதிர்க்கும் ஒன்றை மட்டுமே கொண்டிருக்க முடியும். இது தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது, இன்னும் சொல்வதானால் தேவனுடைய சித்தத்திற்கு மனமுவந்து கீழ்ப்படியாது. கிறிஸ்துவைத் தவிர்த்து மற்ற எல்லா மனிதர்களும் தேவனை எதிர்க்கும் செயலைச் செய்யலாம், தேவனால் ஒப்புவிக்கப்பட்ட கிரியையை ஒரு மனிதனாலும் நேரடியாக மேற்கொள்ள முடியாது; தேவனுடைய நிர்வாகத்தைத் தங்களுடைய சொந்த பொறுப்பாகக் கருதி ஒருவராலும் செயல்படுத்த முடியாது. கிறிஸ்துவின் சாராம்சமானது பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிதல் ஆகும்; தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமையானது சாத்தானின் குணமாகும். இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகும், சாத்தானின் குணங்களைக் கொண்டிருக்கிற எவரையும் கிறிஸ்து என்று அழைக்க முடியாது. தேவனுக்குப் பதிலாக தேவனுடைய கிரியையை மனிதனால் செய்ய முடியாது என்பதற்கான மூலக்காரணம், தேவனுக்குரிய எந்தவொரு சாராம்சமும் மனிதனிடம் இல்லை என்பதே ஆகும். மனிதன் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் எதிர்கால வாய்ப்புகளுக்காகவுமே தேவனுக்கு வேலை செய்கிறான், ஆனால் கிறிஸ்துவோ பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகவே கிரியையை நடப்பிக்கிறார்.

கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மை அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவர் மாம்சத்தில் இருந்தபோதிலும், அவருடைய மனிதத்தன்மையானது மாம்சத்திலிருக்கிற மனிதனைப் போன்றது அல்ல. அவர் தமக்கென்றுள்ள தனித்துவமான குணத்தைப் பெற்றிருக்கிறார், இதுவும் அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவருடைய தெய்வீகத்தன்மைக்கு பலவீனம் இல்லை; கிறிஸ்துவின் பலவீனம் என்பது அவருடைய மனிதத் தன்மையைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த பலவீனமானது அவருடைய தெய்வீகத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது, ஆனாலும் அத்தகைய வரம்புகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் நேரத்திற்கும் உட்பட்டவையாகும், மேலும் அவை வரம்பற்றவை அல்ல. அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையைச் செய்யும்படியான நேரம் வரும்போது, அது அவருடைய மனிதத்தன்மையைப் பொருட்படுத்தாமல் செய்யப்படுகிறது. கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் முழுமையாக வழிநடத்தப்படுகிறது. அவருடைய மனிதத்தன்மையின் இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்து, அவருடைய மனிதத்தன்மையின் மற்ற அனைத்து செயல்களும் அவருடைய தெய்வீகத்தன்மையால் செல்வாக்கைப் பெற்று, செயல் விளைவை அடைந்து, வழிநடத்தப்படுகின்றன. கிறிஸ்துவிடம் ஒரு மனிதத்தன்மை இருந்தபோதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை சீர்குலைப்பதில்லை, துல்லியமாக இதன் காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையினால் வழிநடத்தப்படுகிறது; மற்றவர்களுடனான நடத்தையில் தம்மை எவ்வாறு நடத்துகிறது என்பதில் அவருடைய மனிதத்தன்மையானது முதிர்ச்சியடையவில்லை என்ற போதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைப் பாதிப்பதில்லை. கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மையானது சீர்கெட்டுப்போகவில்லை என்று நான் கூறும்போது, கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் நேரடியாகக் கட்டளையிடப்பட முடியும் என்றும், சாதாரண மனிதனை விட மிகவும் உயர்ந்த உணர்வு அவருக்கு உண்டு என்பதைத்தான் நான் சொல்கிறேன். அவருடைய மனிதத்தன்மையானது அவரது கிரியையின் தெய்வீகத் தன்மையால் வழிநடத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது; அவரது மனிதத்தன்மையானது தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துவதற்கு மிகவும் வல்லது, மேலும் இதுபோன்ற கிரியைக்கு கீழ்ப்படிந்திருப்பதற்கும் வல்லதாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் செயல்படுகிறார் என்பதால், மாம்சத்தில் ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமை மீதான தனது பார்வையை அவர் ஒருபோதும் இழப்பதில்லை; பரலோகத்திலுள்ள தேவனை அவர் ஓர் உண்மையான இருதயத்தோடு தொழுதுகொள்ள முடிகிறது. அவர் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் தேவனே அவருடைய அடையாளமாக இருக்கிறார். ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக மாறி அவர் பூமிக்கு வந்திருக்கிறார் என்பது, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபரின் வெளிப்புற தோற்றத்துடன், இப்போது அவருக்கு இருக்கிற மற்றும் முன்னமே இல்லாத ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதையே குறிப்பிடுகிறது. அவரால் பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்ள முடிகிறது; இது தேவனாக இருப்பதாகும் மற்றும் இது மனிதனால் பார்த்துப் பின்பற்ற முடியாததுமாகும். தேவனாக இருக்கிறார் என்பதே அவரது அடையாளம். அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்தே தேவனைத் தொழுதுகொள்கிறார்; எனவே, “கிறிஸ்து பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்கிறார்” என்னும் வார்த்தைகள் தவறானவை அல்ல. அவர் மனிதனிடம் கேட்பது துல்லியமாக அவருடைய சுய பிரசன்னத்தையே ஆகும்; அத்தகையவற்றைக் கேட்பதற்கு முன்பே அவர் மனிதனிடம் கேட்கும் யாவற்றையும் அவர் ஏற்கெனவே அடைந்துள்ளார். அவரே அவர்களிடமிருந்து விடுபட்டவராக இருக்கிறபோது அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்க மாட்டார், ஏனென்றால் இவை அனைத்தும் அவருடைய பிரசன்னத்தை உள்ளடக்கியவை. அவர் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுக்குக் கீழ்ப்படியாத வகையில் அவர் செயல்பட மாட்டார். அவர் மனிதனிடம் எதைக் கேட்டாலும், எந்தவொரு கோரிக்கையும் மனிதனால் அடையக்கூடியதை விட அதிகமானது அல்ல. அவர் செய்வதெல்லாம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதும் மற்றும் அவருடைய நிர்வாகத்திற்குமே ஆகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையானது சகல மனுஷருக்கும் மேலானது; ஆகையால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அவர் மிக உயர்ந்த அதிகாரம் உடையவராக இருக்கிறார். இந்த அதிகாரம் அவருடைய தெய்வீகத்தன்மையாகும், அதாவது தேவனுடைய மனநிலை மற்றும் பிரசன்னமாகும், அதுதான் அவருடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாததாகும்; அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்து பேசினாலும், அவர் தேவனுடைய சித்தத்திற்கு எந்த அளவுக்கு கீழ்ப்படிந்தாலும், அவர் தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. மதிகெட்ட மற்றும் அறிவற்ற மனிதர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவின் சாதாரண மனிதத்தன்மையை ஒரு குறைபாடாகவே கருதுகின்றனர். அவர் தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதை எவ்வளவு எடுத்துரைத்தாலும் மற்றும் வெளிப்படுத்தினாலும், அவர் கிறிஸ்துதான் என்பதை மனிதன் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறான். கிறிஸ்து தமது கீழ்ப்படிதலையும் மனத்தாழ்மையையும் எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு மதிகெட்ட மனிதர்கள் கிறிஸ்துவை லேசாகக் கருதுகிறார்கள். அவர் மீது புறக்கணிப்பு மற்றும் அவமதிப்பு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறவர்கள் கூட இருக்கிறார்கள், ஆனாலும் “மகான்களின்” உயரமான உருவங்களை மேஜையின் மேல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள். மனிதனின் எதிர்ப்பும் கீழ்ப்படியாமையும் மாம்சத்தில் வந்த தேவனுடைய அவதாரத்தின் சாராம்சமானது தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதிலிருந்து வருகிறது, அதுபோலவே கிறிஸ்துவின் சாதாரண மனிதத்தன்மையிலிருந்தும் வருகிறது; இதுதான் தேவனுக்கு எதிரான மனிதனுடைய எதிர்ப்பிற்கும் கீழ்ப்படியாமைக்கும் பிறப்பிடமாகும். கிறிஸ்து அவருடைய மனிதத்தன்மை என்னும் மாறுவேடத்தைக் கொண்டிருக்கவில்லை மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாடாமல் இருந்து, மாறாக ஒரு மாபெரும் மேன்மையான மனிதத்தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தால், பெரும்பாலும் மனிதர்களிடையே கீழ்ப்படியாமை இல்லாமல் இருந்திருக்கும். பரலோகத்தில் இருக்கும் அதரிசனமான ஒரு தேவனை மனிதன் எப்போதும் நம்புவதற்கான காரணம் என்னவென்றால், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மனிதனுடைய தன்மையில்லை, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் ஒரு குணம் கூட அவரிடம் இல்லை என்பதேயாகும். ஆகவே, மனிதன் எப்போதும் அவரை மிகுந்த மரியாதையுடன் கனம் பொருந்தியவராகக் கருதுகிறான், ஆனால் அதேவேளையில் கிறிஸ்துவை அவமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறான்.

பூமியிலுள்ள கிறிஸ்து தேவனின் சார்பாகச் செயல்பட முடிந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் தம்முடைய உருவத்தை மாம்சத்தில் காண்பிக்கும் நோக்கத்துடன் அவர் வரவில்லை. எல்லா மனிதர்களும் அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் வரவில்லை; தமது கையால் வழிநடத்த மனிதனை அனுமதிக்கவும், அதன் மூலம் மனிதன் புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவுமே அவர் வருகிறார். கிறிஸ்துவினுடைய மாம்சத்தின் செயல்பாடு தேவனுடைய கிரியைக்காகவே ஆகும், அதாவது மாம்சத்தில் செய்த தேவனுடைய கிரியையானது, மனிதன் தமது மாம்சத்தின் சாராம்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவவேண்டும் என்பதற்காக அல்ல. அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமல்ல, ஆனால் அவர் செய்யும் எதுவும் மாம்சத்தால் அடையக்கூடியதைத் தாண்டிச் செல்லாது. அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமல்ல, அவர் சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சத்தில் அவ்வாறு செய்கிறார், மேலும் தேவனுடைய மெய்யான முகத்தை மனிதனுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை. மேலும், மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையானது ஒருபோதும் மனிதன் கருதுவது போல் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்லது விவரிக்க முடியாதது அல்ல. கிறிஸ்து மாம்சத்தில் தேவனை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், தேவன் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை நேரில் செய்தாலும், அவர் தேவன் பரலோகத்தில் இருப்பதை மறுக்கவில்லை, மேலும் அவருடைய செயல்களை அவர் பரபரப்புடன் அறிவிக்கவுமில்லை. மாறாக, அவர் தம்முடைய மாம்சத்திற்குள் மறைந்து, தாழ்மையுடன் இருக்கிறார். கிறிஸ்துவைத் தவிர, கிறிஸ்து என்று பொய்யாகக் கூறுபவர்களுக்கு அவருடைய குணங்கள் இல்லை. அந்த பொய்யான கிறிஸ்துக்களின் திமிர்பிடித்த மற்றும் சுயத்தை மேன்மை பாராட்டும் மனநிலையை எதிர்த்துப் பேசும்போது, எந்த விதமான மாம்சம் உண்மையிலேயே கிறிஸ்துவினுடையது என்பது தெளிவாகிறது. அவர்கள் பொய்யானவர்கள், இதுபோன்ற கள்ளக்கிறிஸ்துக்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகிறார்கள், மேலும் மனிதனை ஏமாற்றுவதற்கான அடையாளங்கள் மற்றும் அதிசயங்களில் அவர்கள் அதிகத் திறமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கள்ளக்கிறிஸ்துக்களுக்கு தேவனுடைய குணங்கள் இல்லை; கள்ளக்கிறிஸ்துக்களுக்கு சொந்தமான எந்தவொரு அம்சத்தினாலும் கிறிஸ்து கறைபடுத்தப்படுவதில்லை. தேவன் மாம்சமாக மாறியது மாம்சத்தின் கிரியையை முடிப்பதற்காக மட்டுமேயாகும், வெறுமனே மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்காக அல்ல. மாறாக, அவர் தமது கிரியையை அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுமதிக்கிறார், மேலும் அவர் வெளிப்படுத்தியதைக் கொண்டு அவருடைய சாராம்சத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அனுமதிக்கிறார். அவரது சாராம்சம் ஆதாரமற்றது அல்ல; அவரது அடையாளம் அவரது கையால் கைப்பற்றப்படவில்லை; அது அவருடைய கிரியை மற்றும் அவரது சாராம்சம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. அவர் தேவன் என்ற சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் தேவனுடைய கிரியையைச் செய்ய வல்லவர் என்கிறபோதிலும், அவர் ஆவியானவரைப் போல இல்லாமல் மாம்சமாக இருக்கிறார். அவர் ஆவியானவருடைய குணங்களைக் கொண்ட தேவன் அல்ல; மாறாக அவர் மாம்சத் தோற்றம் கொண்ட தேவன். ஆகையால், அவர் எவ்வளவு சாதாரணமானவர், மற்றும் எவ்வளவு பலவீனமானவர் என்றாலும், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு எவ்வளவு முயன்றாலும், அவருடைய தெய்வீகத்தன்மையானது மறுக்க முடியாதது ஆகும். தேவன் மாம்சத்தில் வந்த அவதாரத்திற்குள் ஒரு சாதாரண மனிதத்தன்மையும் அதன் பலவீனங்களும் மட்டுமல்ல; அவருடைய தெய்வீகத் தன்மையின் அற்புதமும் புரிந்துகொள்ள முடியாத தன்மையும், மாம்சத்தில் அவர் செய்த எல்லாச் செயல்களும் அடங்கியுள்ளன. ஆகையால், மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கிறிஸ்துவுக்குள் உண்மையிலும் நடைமுறையிலும் உள்ளன. இது குறைந்தபட்சம் வெறுமையானதோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றோ அல்ல. கிரியையைச் செய்வதற்கான முதன்மை நோக்கத்துடன் அவர் பூமிக்கு வருகிறார்; பூமியில் கிரியைகளைச் செய்வதற்கு ஒரு சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருப்பது கட்டாயமாகும்; இல்லையெனில், அவருடைய தெய்வீகத்தன்மையின் வல்லமை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் மெய்யான செயல்பாட்டை நல்ல பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. அவருடைய மனிதத்தன்மையானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது அவருடைய சாராம்சம் அல்ல. அவருடைய சாராம்சம் தெய்வீகத்தன்மை மட்டுமேயாகும்; ஆகையால், அவர் பூமியில் தனது ஊழியத்தைச் செய்யத் தொடங்கும் அந்தத் தருணம், அவர் தனது தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தத் தொடங்கும் தருணம் ஆகும். அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மாம்சத்தின் இயல்பான வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே உள்ளது, இதனால் அவருடைய தெய்வீகத் தன்மையானது மாம்சத்தில் இயல்பாகவே கிரியையைச் செய்ய இயலும்; அவருடைய கிரியையை முழுவதுமாக வழிநடத்துவது அவரது தெய்வீகத்தன்மையே ஆகும். அவர் தமது கிரியையை நிறைவு செய்யும்போது, அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றியிருப்பார். மனிதன் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், அவருடைய கிரியையின் முழுமையும் ஆகும், மேலும் அவரது கிரியையின் மூலம் மட்டும்தான் அவரை அறிந்துகொள்ள அவர் மனிதனுக்கு உதவுகிறார். அவருடைய கிரியையின் போது, அவர் தமது தெய்வீகத்தன்மையை முழுமையாக வெளிப்படுத்துகிறார், இது மனிதகுலத்தால் கறைப்படுத்தப்பட்ட ஒரு மனநிலையோ அல்லது சிந்தனையாலும் மனித நடத்தையாலும் கறைப்படுத்தப்பட்டது அல்ல. அவருடைய ஊழியங்கள் அனைத்தும் முடிவுறும் நேரம் வரும்போது, அவர் வெளிப்படுத்த வேண்டிய மனநிலையை அவர் ஏற்கெனவே பரிபூரணமாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தியிருப்பார். அவரது கிரியையானது எந்த மனிதனுடைய அறிவுறுத்தல்களாலும் வழிநடத்தப்படுவதில்லை; அவரது மனநிலையின் வெளிப்பாடும் மிகவும் தன்னிச்சையானது, மேலும் அது மனதால் கட்டுப்படுத்தப் படுவதில்லை அல்லது சிந்தனையால் செயலாக்கப் படுவதில்லை, ஆனால் அது இயற்கையாகவே வெளிப்படுகிறது. இது எந்த மனிதனும் சாதிக்க முடியாத ஒன்று. சுற்றுச்சூழல்கள் கடுமையானதாக இருந்தாலும் அல்லது நிலைமைகள் சாதகமற்றதாக இருந்தாலும், அவரால் தகுந்த நேரத்தில் தமது மனநிலையை வெளிப்படுத்த முடியும். கிறிஸ்துவாக இருக்கும் ஒருவர் கிறிஸ்துவின் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார், அதே சமயம் கிறிஸ்துவாக இல்லாதவர்கள் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருப்பதில்லை. ஆகையால், அனைவரும் அவரை எதிர்த்தாலும் அல்லது அவரைப் பற்றிய எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் கூட, கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்படும் மனநிலையானது தேவனுடையது என்பதை மனிதனுடைய கருத்துகளின் அடிப்படையில் யாரும் மறுக்க முடியாது. உண்மையான இருதயத்தோடு கிறிஸ்துவைப் பின்தொடர்பவர்கள் அல்லது தேவனை உள்நோக்கத்துடன் தேடுபவர்கள் அனைவரும் அவருடைய தெய்வீகத்தன்மையினுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் அவர் கிறிஸ்து என்பதை ஒப்புக்கொள்வார்கள். மனிதனின் கருத்துக்களுக்கு இணங்காத எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் அவர்கள் ஒருபோதும் கிறிஸ்துவை மறுக்க மாட்டார்கள். மனிதன் மிகவும் மதி கெட்டவன் என்றாலும், மனிதனின் விருப்பம் என்ன, தேவனிடமிருந்து தோன்றியது எது என்பது அனைவருக்கும் மிகச் சரியாகத் தெரியும். பலர் தங்கள் நோக்கங்களின் விளைவாக வேண்டுமென்றே கிறிஸ்துவை எதிர்க்கிறார்கள். இதற்காக இல்லையென்றால், கிறிஸ்துவின் பிரசன்னத்தை மறுக்க ஒரு மனிதனுக்கும் ஒரு காரணம் கூட இருக்காது, ஏனென்றால் கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வீகத்தன்மை உண்மையில் இருக்கிறது, அவருடைய கிரியையை வெறும் கண்களால் வெளியரங்கமாக அனைவராலும் காண முடியும்.

கிறிஸ்துவின் கிரியையும் வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தைத் தீர்மானிக்கிறது. அவரிடம் ஒப்படைக்கப்பட்டதை அவர் உண்மையான இருதயத்தோடு செய்துமுடிக்க முடிகிறது. அவரால் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்ள முடிகிறது, உண்மையான இருதயத்தோடு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாட முடிகிறது. இவை அனைத்தும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படியே அவருடைய இயல்பான வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது; இதை நான் அவருடைய “இயற்கையான வெளிப்பாடு” என்று அழைப்பதற்கான காரணம், அவருடைய வெளிப்பாடு பார்த்துப் பின்பற்றக்கூடிய ஒன்று அல்ல, அல்லது மனிதனுடைய படிப்பறிவின் விளைவோ அல்லது மனிதனால் பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த உழைப்பின் விளைவோ இல்லை. அவர் அதைக் கற்றுக்கொள்ளவுமில்லை அல்லது தம்மை அவ்வாறாக அலங்கரிக்கவுமில்லை; மாறாக, அது அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. மனிதன் அவருடைய கிரியையையும், அவரது வெளிப்பாட்டையும், அவரது மனிதத்தன்மையையும், அவரது சாதாரண மனிதத்தன்மையின் முழு வாழ்க்கையையும் மறுக்கக்கூடும், ஆனால் அவர் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது; பரமபிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே அவர் வந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது, மேலும் அவர் பிதாவாகிய தேவனைத் தேடும் நேர்மையையும் யாரும் மறுக்க முடியாது. அவருடைய உருவம் புலன்களுக்குப் பிரியமானதாக இல்லை என்றாலும், அவருடைய கலந்துரையாடல் ஒரு அசாதாரணமான காற்றைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் அவரது வேலை பூமியைத் தகர்ப்பதோ அல்லது மனிதன் கற்பனை செய்வது போல வானத்தை உலுக்குவதோ இல்லை, அவர் உண்மையில் பரமபிதாவிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரது மரணம் வரை கீழ்ப்படிந்தவராகி பரமபிதாவின் சித்தத்தை உண்மையான இருதயத்துடன் நிறைவேற்றுகிற கிறிஸ்துவாக இருக்கிறார். ஏனென்றால், அவருடைய சாராம்சம் கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது. இந்த உண்மையை நம்புவது மனிதனுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால் இது ஒரு உண்மை. கிறிஸ்துவின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், மனிதன் அவருடைய கிரியையின் மூலம் அவருடைய மனநிலையும் அவருடைய பிரசன்னமும் மற்றும் பரலோகத்தில் உள்ள தேவனுடைய மனநிலையையும் பிரசன்னத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டுகொள்ள முடியும். அந்த நேரத்தில், அவருடைய எல்லா கிரியைகளின் சுருக்கமும், அவர் மெய்யாகவே வார்த்தையானது மாம்சமாக மாறியதுதான் என்பதை உறுதிப்படுத்த முடியும், ஆனால் அது மனிதனுக்குள்ள ஒரு மாம்சமும் இரத்தமும் அல்ல. பூமியில் கிறிஸ்துவினுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும் அதன் பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உள்ளது, ஆனால் ஒவ்வொரு படியின் உண்மையான கிரியையை அனுபவிக்கும் மனிதனுக்கு அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. விசேஷமாக, தேவன் தமது இரண்டாவது அவதாரத்தில் மேற்கொண்ட பல கிரியைகளாய் இருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தைகளை மட்டுமே கேட்டவர்களில் அல்லது பார்த்தவர்களில் பெரும்பாலோர் அவரைப் பார்த்ததில்லை, அவருடைய கிரியையைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை; கிறிஸ்துவைக் கண்டவர்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்டவர்கள், மற்றும் அவருடைய கிரியையை அனுபவித்தவர்களுக்கு, அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. இது கிறிஸ்துவின் தோற்றமும் அவரது இயல்பான மனிதத்தன்மையும் மனிதனின் சுவைக்கு பொருந்தாததினால் தான் அல்லவா? கிறிஸ்து போன பிறகு அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அத்தகையச் சிரமங்கள் இருக்காது, ஏனென்றால் அவர்கள் அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்கிறார்கள், கிறிஸ்துவினுடைய இயல்பான மனிதத்தன்மையுடன் ஐக்கியப்படுவதில்லை. மனிதன் தேவனைப் பற்றிய தனது கருத்துக்களை கைவிட முடியாதவனாக இருக்கிறான், அதற்குப் பதிலாக அவனை இன்னும் தீவிரமாக ஆராய்கிறான்; மனிதன் அவரது தோற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறான் என்பதும், அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் அடிப்படையில் அவரது சாராம்சத்தை அடையாளம் காண முடியவில்லை என்பதும் தான் இதற்குக் காரணம். கிறிஸ்துவின் தோற்றத்திற்கு மனிதன் தன் கண்களை மூடிக்கொண்டால் அல்லது கிறிஸ்துவின் மனிதத்தன்மையைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து, அவரது தெய்வீகத்தன்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறான் என்றால், அவருடைய கிரியையும் வார்த்தைகளும் எந்த மனிதனுக்கும் கிடைக்கவில்லை என்றால், மனிதனின் கருத்துக்கள் பாதியாகக் குறையும், மேலும் அந்த அளவிற்கு மனிதனின் அனைத்து சிரமங்களும் கூட தீர்க்கப்படும். மனித அவதாரமான தேவனுடைய கிரியையின் போது, மனிதனால் அவரை சகித்துக்கொள்ள முடியாது, அவரைப் பற்றிய ஏராளமான கருத்துக்கள் நிறைந்தவனாய் இருக்கிறான், மேலும் எதிர்க்கும் நிகழ்வுகளும் மற்றும் கீழ்ப்படியாமையும் பொதுவானவையாகும். தேவனுடைய பிரசன்னத்தை மனிதனால் பொறுத்துக்கொள்ளவோ, கிறிஸ்துவின் மனத்தாழ்மைக்கும் மறைவுக்கும் கனிவான போக்கோ, பரமபிதாவுக்குக் கீழ்ப்படிகிற கிறிஸ்துவின் சாராம்சத்தை மன்னிக்கவோ முடியாமல் இருக்கிறான். ஆகையால், அவர் தனது கிரியையை முடித்தபின் மனிதனுடன் நித்தியமாக இருக்க முடியாது, ஏனென்றால் மனிதன் அவரை அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்க விரும்பவில்லை. மனிதன் அவரது கிரியையின் போது அவரிடம் கனிவான போக்கைக் காட்ட முடியாவிட்டால், அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றியபின், அவர் படிப்படியாக அவருடைய வார்த்தைகளை அவர்கள் அனுபவிப்பதைப் பார்க்கும்போது, அவர் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதை அவர்கள் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? அவரால் பலர் விழுந்துபோயிருக்க மாட்டார்களா? மனிதன் பூமியில் கிரியை செய்ய மட்டுமே அவரை அனுமதிக்கிறான்; இது மனிதன் அவருக்குக் காண்பித்த கனிவுப்போக்கின் மிகப்பெரிய அளவாகும். அவருடைய கிரியைக்காக இல்லாவிட்டால், மனிதன் அவரை பூமியிலிருந்து வெகு காலத்திற்கு முன்பே வெளியேற்றியிருப்பான், ஆகவே அவருடைய கிரியை முடிந்தவுடன் அவர்கள் எவ்வளவு குறைவான கனிவுப்போக்கைக் காண்பிப்பார்கள்? அப்படியானால் மனிதன் அவரை சித்திரவதைச் செய்து கொலை செய்ய மாட்டானா? அவர் கிறிஸ்து என்று அழைக்கப்படாவிட்டால், அவர் மனிதர்களிடையே கிரியை செய்திருக்க முடியாது; அவர் தேவனுடைய அடையாளத்துடன் செயல்படாமல், அதற்குப் பதிலாக ஒரு சாதாரண மனிதராக மட்டுமே கிரியை செய்தார் என்றால், மனிதன் அவர் ஒரு வாக்கியத்தை உச்சரிப்பதைக் கூட சகித்துக் கொள்ள மாட்டான், அவருடைய கிரியையை சிறிதளவேனும் பொறுத்துக்கொள்ள மாட்டான். எனவே அவர் தமது கிரியையில் இந்த அடையாளத்தை அவருடன் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இந்த வழியில், அவர் அப்படி செய்யாதிருந்தால் அவரது கிரியையானது மிகவும் வல்லமை வாய்ந்தது ஆகும், ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் செல்வாக்கு மற்றும் பெரிய அடையாளத்திற்குக் கீழ்ப்படிய தயாராக இருக்கிறார்கள். அவர் கிரியை செய்தபடியே தேவனுடைய அடையாளத்தை அவர் கொண்டு செல்லவில்லை என்றால் அல்லது தேவனாகத் தோன்றவில்லை என்றால், பிறகு அவருக்குக் கிரியை செய்யவே வாய்ப்பில்லை. தேவனுடைய சாராம்சம் மற்றும் கிறிஸ்துவின் பிரசன்னம் அவரிடம் உள்ளது என்ற போதிலும், மனிதன் தளர்வு கொடுத்து, மனிதர்களிடையே எளிதில் அவரது கிரியையைச் செய்ய அனுமதிக்க மாட்டான். தேவனுடைய அடையாளத்தை அவர் தனது கிரியையில் கொண்டு செல்கிறார்; அத்தகைய அடையாளம் இல்லாமல் செய்யப்படுவதை விட இதுபோன்ற அடையாளத்துடன் கூடிய கிரியையானது டஜன் கணக்கான மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தாலும், மனிதன் இன்னும் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை, ஏனென்றால் மனிதன் அவருடைய செல்வாக்குக்கு மட்டுமே கீழ்ப்படிகிறான், அவருடைய சாராம்சத்திற்கு அல்ல. அப்படியானால், ஒருவேளை கிறிஸ்து ஒரு நாள் தமது பதவியில் இருந்து விலகும்போது, அந்த ஒரு நாள் மட்டுமாவது அவர் ஜீவனோடு இருக்க மனிதனால் அனுமதிக்க முடியுமா? தேவன் மனிதனோடு பூமியில் வாழத் தயாராக இருக்கிறார், இதன்மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தம் கையால் செய்யப்படும் கிரியையின் விளைவுகளை அவர் காண்பார். இருப்பினும், ஒரு நாள் கூட மனிதன் அவரது பிரசன்னத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது இருக்கிறான், எனவே அவரால் கைவிட்டுவிட மட்டுமே முடியும். தேவன் மனிதர்களிடையே செய்ய வேண்டிய கிரியையை செய்யவும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றவும் அனுமதிப்பது என்பது மனிதனுடைய கனிவுப்போக்கின் மற்றும் கிருபையின் மிகப்பெரிய அளவாகும். அவரால் தனிப்பட்ட முறையில் வெல்லப்பட்டவர்கள் அவருக்கு அத்தகைய கிருபையைக் காட்டினாலும், அது அவருடைய கிரியை முடியும் வரை மட்டுமே தொடர்ந்து இருக்க அவர்கள் அனுமதிக்கிறார்கள், அதற்குமேல் இன்னும் ஒரு கணம் கூட இல்லை. இது அப்படியானால், அவரால் வெல்லப்படாதவர்களின் நிலை என்ன? ஒரு சாதாரண மனிதனின் தோற்றத்துடன் கிறிஸ்துவாக அவர் இருக்கிறார் என்பதற்கான காரணத்தினால்தான் மனிதன் மாம்சத்தில் வந்த தேவனுடைய அவதாரத்தை இவ்வாறு நடத்துகிறான் என்பது சரி அல்லவா? அவருக்கு தெய்வீகத்தன்மை மட்டுமே இருந்தது, ஒரு சாதாரண மனிதத்தன்மை இல்லை என்றால், மனிதனுடைய கஷ்டங்கள் மிக எளிதாகத் தீர்க்கப்பட முடியாதா? மனிதன் முணுமுணுப்புடன் அவரது தெய்வீகத்தன்மையை ஒப்புக்கொள்கிறான், ஒரு சாதாரண மனிதனின் தோற்றத்தில் வந்ததில் அக்கறை காட்டவில்லை, அவருடைய சாராம்சம் பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்த கிறிஸ்துவுக்குரியது ஆகும். எனவே, சந்தோஷங்களையும் துக்கங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மனிதர்களிடையே அவர் செய்த கிரியையை மட்டுமே அவர் ரத்து செய்ய முடியும், ஏனென்றால் மனிதனால் அவரது பிரசன்னத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

முந்தைய: தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்

அடுத்த: மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக