தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

“மக்களின் திறனை வளர்த்தல்” என்பதற்கு “நீங்கள் உங்களது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்று அர்த்தமாகும். இதன் மூலம் உங்களால் தேவனின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கு ஏற்ப எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இதுவே அனைத்திற்குமான மிகவும் அடிப்படைத் தேவையாகும். நான் என்ன சொல்கிறேன் என்றே புரியாமல் நீ என்னைப் பின்தொடர்ந்தாயானால், உனது விசுவாசம் குழப்பமுடையதாய் இருக்காதா? நான் எத்தனை வார்த்தைகளைப் பேசினாலும், அவை உங்களுக்கு எட்ட முடியாததாய் இருந்தால், நான் என்ன சொன்னாலும் உங்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், அது நீங்கள் திறன் குறைந்தவர் என்பதையே குறிக்கிறது. புரிந்துகொள்ளும் திறன் இல்லாவிட்டால், நான் சொல்வது எதுவுமே உங்களுக்குப் புரியாது. இது விரும்பிய பலனை அடைவதை மிகுந்த சிரமமானதாக்கிவிடும். பல விஷயங்களை உங்களோடு என்னால் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள முடியாது; எதிர்பார்த்த பலனையும் எட்டமுடியாது, இதனால்தான் கூடுதல் வேலை அத்தியாவசியமானதாகிவிடுகிறது. உங்களது புரிந்துகொள்ளும் ஆற்றல், நீங்கள் காரியங்களை பார்க்கும் திறன் மற்றும் நீங்கள் எந்தத் தரத்துடன் வாழ்கிறீர்கள் என்பவை எல்லாம் மிகவும் குறைபாடுள்ளதாக இருப்பதால், “திறன் வளர்த்தல்” என்ற பணியை உங்களில் செய்து முடிப்பது கட்டாயமாகிறது. இது தவிர்க்க முடியாதது. மேலும், இதற்கு மாற்று என்று எதுவும் கிடையாது. இப்படித்தான் சில பலன்களை அடைய முடியும். இல்லாவிட்டால், நான் கூறும் அனைத்து வார்த்தைகளும் பிரயோஜனமற்றதாக இருக்கும். மேலும், இதனால் வரலாற்றில் நீங்கள் அனைவருமே பாவிகள் என்று நினைவுகூரப்படமாட்டீர்களா? இதனால் நீங்கள் உலகத்திற்குக் கேடுகெட்டவர்கள் ஆகிவிடமாட்டீர்களா? உங்களில் எந்தக் கிரியை நடப்பிக்கப்படுகிறது என்றும், உங்களிடமிருந்து எது தேவைப்படுகிறது என்றும் உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு கண்டிப்பாக உங்களது சொந்தத் திறன் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்: இது எனது தேவைகளைப் பூர்த்தி செய்வதே இல்லை. இது எனது கிரியையைத் தாமதப்படுத்தவில்லையா? உங்களுடைய தற்போதைய திறன் மற்றும் தற்போதைய குணங்களின் அடிப்படையில், உங்களில் ஒருவர் கூட எனக்குச் சாட்சிபகர பொருத்தமற்று இருப்பதோடு, உங்களில் எவருமே எனது வருங்கால கிரியைக்கான கடினமான பொறுப்புகளுக்குத் தோள்கொடுக்கும் காரியத்திற்கும் பொருத்தமாக இல்லை. உங்களுக்கு இது மிகவும் வெட்கமாக இல்லையா? இவ்வாறே நீங்கள் நடப்பீர்களானால், எவ்வாறு உங்களால் எனது சித்தத்தை நிறைவேற்ற முடியும்? நீ உன் வாழ்க்கையைப் பரிபூரணமாய் வாழவேண்டும். நேரத்தை வீணாய்க் கழிக்காதீர்கள்—அப்படிச் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. நீ எதனால் ஆயத்தம் செய்யப்பட வேண்டும் என்று உனக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்தப் பண்டிதனாக நீ உன்னை நினைத்துக்கொள்ள வேண்டாம்—நீ இன்னும் கடந்துசெல்ல வேண்டிய பாதை எவ்வளவோ நீளமாக இருக்கிறது. மனிதனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்சப் பொதுஅறிவு கூட உன்னிடம் இல்லையெனில், உன்னிடம் சொல்வதற்கு வேறு என்னதான் இருக்கிறது? இது முழுவதும் வீண் இல்லையா? எனக்குத் தேவைப்படும் மனிதர்களையும், திறனையும் பொருத்தவரை, உங்களில் ஒருவர் கூட அவற்றுக்கு முழுத் தகுதியும் பெற்றவரில்லை. பயன்படுத்துவதற்கு பொருத்தமான ஒருவரைக் கண்டெடுப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. உங்களால் மகத்தான காரியங்களை எனக்காகச் செய்யமுடியும் என்றும், என்னால் மகத்தான காரியங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நீங்கள் நம்புகிறீர்கள்; உண்மையில், உங்கள் கண்களுக்கு முன்பாகவே இருக்கும் பல பாடங்களைத் தொடங்கக்கூட உங்களுக்குத் தெரியாது—எனவே ஆழமான உண்மைகளுக்குள் பிரவேசிப்பதென்பது உங்களுக்கு எப்படிச் சாத்தியப்படும்? உங்களது பிரவேசமானது அடுக்கடுக்கான அணுகுமுறையைப் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும். அது குழப்பமானதாக இருக்கக்கூடாது—அது நல்லது அல்ல. மிகவும் மேலோட்டமான பிரவேசித்தலில் இருந்து தொடங்குங்கள்: இந்த வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொண்டு தெளிவு பெறும்வரை ஒவ்வொரு வரியாக வாசியுங்கள். தேவனின் வார்த்தைகளை வாசிக்கும் போது, குதிரைமீதேறி அதிவிரைவுச் சவாரி செய்பவர் கண்ணில்படும் மலர்களைப் பாராட்டிச் செல்வது போல், மேலோட்டமாகப் படிக்காதீர்கள். வெறும் அசைவுகளை மட்டுமே கணக்கில் கொள்ளாதீர்கள். நீ தொடர்ச்சியாகச் சில மேற்கோள் நூல்களை (இலக்கணம் அல்லது அணிநயம் குறித்த நூல்கள் போன்றவை) வாசிப்பதன் மூலம் உனது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும். காதல் குறித்த நாவல்கள், சிறந்த மனிதர்களின் சுயசரிதைகள் மற்றும் சமூகஅறிவியியல் தொடர்பான நூல்கள் போன்றவற்றைப் படிக்காதீர்கள். இவ்வகைப் புத்தகங்களால் நன்மை ஏதும் விளையாது, மாறாக இவை தீமைக்கே வழிவகுப்பவை. நீ பிரவேசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அனைத்திலும் கற்றுத்தேர்ந்தவனாக வேண்டும். மக்களின் திறனை வளர்ப்பதற்கான நோக்கம் என்னவென்றால் அவர்களுடைய சாராம்சம், அடையாளம், அந்தஸ்து மற்றும் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு கொடுப்பதே ஆகும். தேவன் மீதான விசுவாசத்தின் சத்தியத்தை மக்கள் ஏன் விடாது பற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும், மக்கள் தங்களது திறனை வளர்க்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கல்விமானாகத் திகழவேண்டியது கட்டாயம்; நீங்கள் இதை உதாசினப்படுத்தக் கூடாது! மக்களின் திறன் ஏன் வளர்க்கப்பட வேண்டும், எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் மற்றும் எந்த அம்சங்களில் பிரவேசிக்க வேண்டும் என்பனவற்றை நீங்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். இயல்பான மனிதத்தன்மையில் வாழ்வதன் முக்கியத்துவத்தையும், ஏன் இந்த கிரியை செய்து முடிக்கப்பட வேண்டும் மற்றும் இதைச் செய்வதில் மனிதனின் பங்கு என்ன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, கற்றவனாகும் பொழுது, எந்த அம்சங்களைக் கற்கவேண்டும் என்பதையும், அவற்றில் ஒருவர் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கல்விமானாகத்திகழ வேண்டியதற்கான நோக்கத்தையும் நீங்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இது தேவனின் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு, சத்தியத்திற்குள் நுழைவதற்கான முயற்சி இல்லையா? இன்று எல்லா சபைகளிலும் நிகழ்வதென்ன? மக்களைத் தாங்களாகவே கல்விகற்கச் செய்வதால், தேவனின் வார்த்தைகளால் விளையும் இன்பங்களை மறந்துபோகிறார்கள். நாள்முழுவதும் கல்வி கற்பதைத் தவிர அவர்கள் எதையுமே செய்வதில்லை. இயல்பான மனிதத்தன்மையில் அவர்கள் வாழ வேண்டும் என்று நீங்கள் கேட்டுக்கொண்டால், அவர்கள் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்வது, சமைப்பது அல்லது சமையலறைச் சாமான்களை வாங்குவதை மட்டுமே செய்வார்கள். இவை மட்டுமே அவர்களது பிராதான நோக்கமாக மாறிவிடும்; சாதாரணமாக ஒரு திருச்சபை வாழ்வை எப்படி வாழ்வது என்பதைக்கூட அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். இத்தகைய சூழலில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உங்கள் நடைமுறையில் வழிதவறிச் சென்றிருக்கிறீர்கள். அப்படியானால், ஆவிக்குரிய வாழ்வில் பிரவேசிக்க வேண்டுமென ஏன் நீ கேட்டுக்கொள்ளப்படுகிறாய்? வெறுமனே அவற்றைக் கற்றுக்கொள்வது, எதைச் செய்யவேண்டும் என்று நீ கேட்டுக்கொள்ளப்படுகிறாயோ, அதைச் செய்து முடிக்கும் வல்லமை அற்றவனாக உன்னை ஆக்கிவிடும். ஜீவனுக்குள் பிரவேசிப்பதே இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது; அதேசமயத்தில், மக்கள் தங்களது அனுபவத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்ப்பதே அந்தப் பணியைச் செய்வதற்கான காரணமாகும். உன் திறனை வளர்த்துக் கொள்வதால் மனிதர்களின் சுபாவத்தையும், சாராம்சத்தையும் பற்றிய அறிவைப் பெறுகிறாய். மக்களின் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியையும், அவர்களது மனநிலையில் மாற்றத்தையும் கொண்டுவருவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். உனக்கு எப்படி உடுத்துவது என்றும், பார்வைக்கு அழகாக இருக்கும்படி உன்னை அலங்கரித்துக் கொள்ளவும் தெரிந்திருக்கலாம், நீ ஆழ்ந்த அறிவுடையவனாகவும், புத்திமானாகவும் இருக்கலாம், ஆனால் நீ கிரியை செய்வதற்கான நாள் வரும்போது, உன்னால் அது முடியாது. ஆகவே, உனது திறனை மேம்படுத்திக்கொள்ளும் போதே வேறு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்தும் நீ அறிந்திருக்க வேண்டும். உன்னை மாற்ற வேண்டும் என்பதே குறிக்கோள்; திறனை மேம்படுத்துவது கூடுதலான ஒன்றாகும். உன் திறன் மேம்படவில்லை என்றால், அதில் பிரயோஜனமில்லை. உன் மனநிலையும் மாறாதபட்சத்தில், அது இன்னும் மோசமாகிவிடும். எதையும் தவிர்க்க முடியாது. சாதாரண மனிதத்தன்மை இருப்பதால் நீ புகழத்தக்க சாட்சி பகர்ந்திருக்கிறாய் என்று அர்த்தமில்லை—உன்னிடம் கேட்கப்படும் எதுவும் மிகவும் எளிதானது அல்ல.

இயல்பான மனிதத்தன்மையுடன் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் உணர்வையும் அடையுமளவிற்கு மக்களின் திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்கள் ஜீவனுக்குள் பிரவேசித்திருந்தால் மட்டுமே, அவர்களிடம் சொல்வதற்குகந்த மாற்றங்களும், சாட்சியங்களும் இருக்கும். நீங்கள் சாட்சி சொல்ல வேண்டிய நாள் வரும்போது, உங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும், உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய அறிவைப் பற்றியும் நீங்கள் நிச்சயம் பேச வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் இணைந்துதான் உன்னுடைய உண்மையான சாட்சியமாகவும் அறுவடையாகவும் இருக்கும். உனக்குள் எந்தப் புரிதலும் இல்லாமல் உனது மனிதத்தன்மையில் வெளித்தோற்றத்தில் மட்டும் மாற்றம் பெறுவது போதாது. அதேபோல உனக்குள் சத்தியமும், புரிதலும் இருந்தாலும், நீ இயல்பான மனிதத்தன்மையில் வாழாமல் விட்டுவிட்டால் அதுவும் பிரயோஜனமில்லை. இன்று உனக்குள் கிரியை செய்தது, பகட்டுக்காக அல்லாமல் உன்னை மாற்றும் பொருட்டே செய்யப்பட்டிருக்கிறது. உன்னை மாற்றிக்கொள்வதில் மட்டுமே நீ கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளையும், உன்னுடைய வாழ்க்கையில் வேறெதுவும் இல்லாமல், எழுதுவதிலும் கேட்பதிலும் பிரயோஜனமிருக்காது; நீ எல்லா அம்சங்களிலும் பிரவேசத்தைக் கொண்டிருக்க வேண்டும், கண்டிப்பாக நீ ஒரு பரிசுத்தவானுக்குரிய இயல்பான வாழ்வைப் பெற்றிருக்க வேண்டும். பரிசுத்தவான்களுக்கான அலங்காரத்தை முற்றிலும் அழித்து, அநேக சகோதரிகள் வாலிப பெண்கள் போலவும், சகோதரர்கள் பிரபுக்கள் அல்லது பெரும்புள்ளிகளைப் போலவும் உடுத்திக்கொள்கிறார்கள். இது ஒருவரின் திறனை மேம்படுத்தும் ஒரு வழியாகும்—இது தற்செயலாகவே பெறப்படுகிறது. தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவது மற்றொரு காரியம்—இதுதான் முக்கியம். நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணவில்லை என்ற காரணத்தால், உனது திறன் மேம்பட்டு இருந்தும் அதனை உபயோகப்படுத்த முடியாமல் போனால், கற்றுக்கொள்வதற்காக நீ எடுத்துக்கொண்ட சிரத்தையெல்லாம் வீணாகிவிடாதா? இரண்டு அம்சங்களும் கட்டாயமாக இணைந்திருக்க வேண்டும், உன்னிடமிருந்து தேவைப்படுவதைப் பற்றி விவாதிக்கும் போது எதற்காக தேவனுடைய அறிவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்? வரப்போகிற கிரியையின் முடிவுகளுக்காக அல்லவா? நீ ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, உன்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தே நீ சாட்சி பகரக்கூடியவனாக இருக்க வேண்டும். இயல்பான மனிதத்தன்மையில் ஒன்றாக உங்களது வெளித்தோற்றம் இருந்தாலும், உங்கள் அனுபவங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களேயானால், அது பயனற்றதாகவே இருக்கும். இயல்பான ஆவிக்குரிய வாழ்வில் இருக்கும்போதே, நீங்கள் இயல்பான மனிதத்தன்மையைப் பெற வேண்டும். அதற்கான பல அம்சங்களையும் தற்செயலாகவே கற்றுக்கொள்ள முடியும். தரையைப் பெருக்கி சுத்தம் செய்ய பிரத்யேகமான பயிற்சி எதுவும் தேவை என்று நீ நினைக்கிறாயா? சாப்பிடும் போது உனது கரண்டிகளை எவ்வாறு பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்காக ஒருமணி நேரத்தைச் செலவிடுவது அதைவிடவும் மோசமானது! இயல்பான மனிதத்தன்மை எந்தெந்த அம்சங்களை உள்ளடக்கியது? ஆழமான புரிதல், அறிவு, மனசாட்சி மற்றும் ஒழுக்கம். இந்த அம்சங்கள் ஒவ்வொன்றிலும் நீ சரியான நிலையை அடைந்தால், உனது மனிதத்தன்மை மேம்பாடடையும். நீ ஒரு சாதாரண மனிதனின் சாயலிலேயே இருக்க வேண்டும். நீ தேவனின் விசுவாசியை ஒத்திருக்க வேண்டும். நீ அளவுக்கதிகமாக எதையும் சாதிக்கவோ அல்லது இராஜதந்திரங்களில் ஈடுபடவோ வேண்டியதில்லை. நீ ஒரு சாதாரண மனிதனாக, சாதாரண மனிதனின் உணர்வோடு, எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கும் திறனோடு, ஓரளவுக்காவது ஒரு சாதாரண மனிதனாகவே இருக்க வேண்டும். அதுவே போதுமானதாக இருக்கும். இன்று உன்னிடம் கேட்கப்படும் ஒவ்வொன்றும் உன் திறன்களுக்குள்ளேயே இருக்கிறது; இது அமர்ந்திருக்கும் ஒரு வாத்தை “சூ” என்று சத்தமிட்டு விரட்ட முயல்வது போன்றதல்ல. பயனற்ற வார்த்தையோ பயனற்ற செயலோ உன் மீது செய்யப்படமாட்டாது. உன் வாழ்வில் வெளிப்படுத்தப்பட்ட அல்லது தெரிவிக்கப்பட்ட எல்லா வெறுக்கத்தக்க விஷயங்களும் கண்டிப்பாக விட்டொழிக்கப்பட வேண்டும், நீங்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு சாத்தானின் விஷம் உங்களில் நிரம்பி வழிகிறது. உன்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவதெல்லாம், இந்தச் சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை விட்டுவிட வேண்டும் என்பதே ஆகும். நீ ஒரு உயர்ந்த மனிதனாகவோ, பிரபலமானவனாகவோ அல்லது சிறந்த மனிதனாகவோ திகழவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படவில்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்குள் இயல்பாக என்ன உள்ளது என்பதையே உங்களுக்குள் செய்யப்படும் கிரியையானது கருத்தில் எடுத்துக்கொள்கிறது. நான் மக்களிடம் கேட்பது வரம்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. புத்திசாலிகள் பேசும் முறையையும் தொனியையும் நீங்கள் கடைப்பிடித்தால், இதைச் செய்யவே முடியாது; உங்களால் அதைச் செய்ய முடியாது. உங்களது திறனைக்கொண்டு குறைந்தபட்சம் நீங்கள் ஞானத்தோடும், சாதுரியத்தொடும் பேசுபவராகவும், தெளிவாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எல்லாவற்றையும் விளக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவை தான் வேண்டும். குறைந்த பட்சம், நீங்கள் நுண்ணறிவையும் உணர்வையும் பெற்றால், அது போதும். நீங்கள் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை விட்டுவிடுவதே இப்போது மிகவும் அவசியமாகிறது. உன்னிடமிருந்து வெளிப்படும் அருவருக்கத்தக்க விஷயங்களை நீ கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும். இவற்றை நீ விட்டொழிக்காத பட்சத்தில் உன்னால் எப்படிச் சிறந்த ஆழமான புரிதலையும், சிறந்த அறிவையும் பற்றிப் பேச முடியும்? காலமாற்றத்தால் அநேக மக்களிடம் தாழ்மையோ, பொறுமையோ இல்லாமல் போய்விட்டது. அவர்களிடம் அன்போ, பரிசுத்த அலங்காரமோ கூட இல்லாமல் போகலாம். அத்தகைய மக்கள் எவ்வளவு அபத்தமானவர்கள்! அவர்களிடம் இயல்பான மனிதத்தன்மை சிறிதளவேனும் இருக்கிறதா? அவர்களால் சாட்சி கூற இயலுமா? அவர்கள் முற்றிலும் ஆழமான புரிதலோ அல்லது அறிவோ அற்றவர்கள். நிச்சயமாகவே, மக்களிடமிருக்கும் மாறுபட்ட, தவறான சில பழக்கங்களின் அம்சங்கள் நிச்சயமாகச் சரிசெய்யப்பட வேண்டும்; உதாரணமாக அவர்களுடைய முந்தைய வளைந்து கொடுக்காத ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அவர்களுடைய உணர்வற்ற மற்றும் மதிகெட்ட தோற்றம் என இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். மாற்றம் என்பது உன்னைப் பாழாக்கவோ அல்லது மாம்சத்தில் ஈடுபடவோ அனுமதிப்பது மற்றும் நீ விரும்பியதைச் சொல்வது என அர்த்தமல்ல. நீ தாறுமாறாக பேசக்கூடாது. ஒரு சாதாரண மனிதனின் பேச்சையும் நடத்தையையும் கொண்டிருப்பது என்றால் ஒத்திசைவாகப் பேசி, உங்களுக்குச் “சரி” என்று தோன்றும்போது “சரி” என்றும் “தவறு” என்று தோன்றும்போது “தவறு” என்றும் இயல்பாகக் கூறுவதாகும். உண்மைகளுக்கு ஒத்து சரியாகப் பேசுங்கள். ஏமாற்றாதே, பொய் சொல்லாதே. ஒரு சாதாரண மனிதனால் எந்த அளவுக்கு மனிநிலையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் உன்னால் சத்தியத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

முந்தைய: பயிற்சி (8)

அடுத்த: மோவாபின் சந்ததியை இரட்சிப்பதன் முக்கியத்துவம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக