தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்

மக்கள் தேவனில் விசுவாசம் வைத்து, அவரை நேசித்து, அவரைத் திருப்திப்படுத்தும்போது, அவர்கள் தங்கள் இருதயத்தால் தேவனுடைய ஆவியைத் தொடுகிறார்கள், அதன் மூலம் அவரது திருப்தியைப் பெறுகிறார்கள். தங்கள் இருதயத்தைப் பயன்படுத்தி தேவனுடைய வார்த்தைகளோடு தொடர்புகொண்டு, இவ்வாறு அவருடைய ஆவியால் ஏவப்படுகிறார்கள். நீ ஓர் முறையான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்திடவும், தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்பினால், முதலாவது உனது இருதயத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். உனது இருதயத்தை அவருக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவருக்குள் உனது முழு இருதயத்தையும் ஊற்றியதற்குப் பின் மட்டுமே, படிப்படியாக முறையான ஆவிக்குரிய வாழ்க்கையை வளர்த்துக்கொள்ள முடியும். தேவன் மீதான மக்களின் விசுவாசத்தை பொறுத்தமட்டில் அவர்கள் தங்கள் இருதயங்களை அவருக்கு கொடுக்காவிட்டால், அவர்கள் இருதயங்கள் அவரோடு இராவிட்டால், அவர்கள் தேவனின் பாரத்தைத் தங்கள் நுகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த ஜனங்களின் நடத்தையானது தேவனை ஏமாற்றுவதாக, மதம் சார்ந்த மக்களின் செய்கைக்கு ஒத்திருக்குமே தவிர, அதை தேவன் மெச்சிக்கொள்ளமாட்டார். இப்படிப்பட்ட நபரிடமிருந்து தேவன் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர் தேவனுடைய கிரியைக்குப் பிரதிபலிப்புப் படலமாக மட்டுமே ஊழியஞ்செய்ய முடியும், இவர்கள் தேவனுடைய வீட்டில் அலங்காரங்களைப் போல இருக்கின்றனர், அவர்கள் இடத்தை நிரப்புகிறவராகவும் பிரயோஜமில்லாதவராக மட்டுமே இருப்பார். இப்படிப்பட்டவரை தேவன் பயன்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட நபரில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாததோடு, அவர்களைப் பரிபூரணப்படுத்துவதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. இப்படிப்பட்டவர் உண்மையான நடைபிணமாவார். பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தக்கூடியவை எதுவும் இப்படிப்பட்டவர்களில் காணப்படாது. அவர்கள் அனைவரும் முற்றிலும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்களாயும், மிகவும் சீர்கெட்டுப்போனவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களை தேவன் புறம்பே தள்ளுவார். இன்று பரிசுத்த ஆவியானவர் மக்களைப் பயன்படுத்தும்போது, காரியங்களை முடிப்பதற்கு அவர்களிலுள்ள விரும்பத்தக்க பகுதிகளை மட்டும் உபயோகப்படுத்துவதில்லை, அவர்களிலுள்ள விரும்பத்தகாத பகுதிகளையும் அவர் மாற்றி பரிபூரணப்படுத்துகிறார். உன்னால் உன் இருதயத்தை தேவனுக்குள் ஊற்ற முடிந்து அதை அவர் முன்பு அமைதிப்படுத்த முடிந்தால், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுவதற்கும், அவர் அருளும் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கும் தகுதிகளையும் வாய்ப்பையும் நீ பெற்றுக்கொள்வாய். அதையும் விட, உனது தப்பிதங்களை பரிசுத்த ஆவியானவர் சீர்செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். நீ உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கும்போது, நேர்மறை பக்கத்தில், ஆழமான பிரவேசத்தைப் பெறவும், புத்தியின் உயர்தளத்தை அடையவும் முடியும். எதிர்மறை பக்கத்தில், உனது சொந்தத் தவறுகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றிய அதிக அறிவு இருக்கும்; தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்த, அதிகமாக ஏங்கவும் நாடவும் செய்வாய்; மேலும், செயலற்றவனாக இல்லாமல், உற்சாகமாகஉள்ளே பிரவேசிக்க முடியும். இது நீ சரியான நபர் என்பதைக் காண்பிக்கிறது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியும் என்று வைத்துக்கொண்டால், அப்போது நீ பரிசுத்த ஆவியானவரின் பாராட்டுதலைப் பெறுகிறாயோ இல்லையோ, தேவனைப் பிரியப்படுத்துகிறாயோ இல்லையோ, துடிப்பாக உட்பிரவேசிக்க முடிகிறதா என்பதுதான் முக்கியமான காரியம். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைப் பிரகாசிப்பித்து செய்து அவரைப் பயன்படுத்தும்போது, அவர் அவர்களை ஒருபோதும் எதிர்மறையாக மாற்றுவதில்லை. ஆனால், துடிப்பாக முன்னேறிச் செல்லவே வைக்கிறார். அவர் அப்படிச் செய்யும் போது, ஜனங்களுக்கு அப்போதும் பெலவீனங்கள் இருக்கும், அவர்கள் அவற்றின்படி வாழமாட்டார்கள்,அவர்கள் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைத் தள்ளிப் போடுவதில்லை; அவர்கள் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துவதைத் தொடர்ந்து நாடுவர். இது ஒரு தரநிலையாகும். இதை நீ அடைய முடியுமென்றால் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நீ பெற்றுள்ளாய் என்பதை இது நிரூபிக்கிறது. பிரகாசத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும், தங்களை அறிந்து கொண்ட பின்னரும் எழுந்திருந்து தேவனுடன் இணைந்து செயல்பட இயலாமல் எதிர்மறையாக, செயலற்றவராக ஒருவர் இருந்தால், அப்போது அவர்கள் தேவ கிருபையை மட்டும் அடைந்திருக்கிறார்களே தவிர, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இல்லை. அவர்களின் எதிர்மறை தன்மையானது, அவர்களது இருதயம் தேவனிடமாய்த் திரும்பவில்லை என்றும் அவரது ஆவி தேவ ஆவியினால் ஏவப்படவில்லை என்றும் அர்த்தம். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேவனுக்கு முன்பாக ஒருவரது இருதயத்தை அமைதியாய் அமர்ந்திருக்கச் செய்வதே மிக முக்கியமானது என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இது மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அவர்களது வாழ்வின் வளர்ச்சியைக் குறித்த பிரச்னையாகும். தேவனுக்கு முன்பாக உனது இருதயம் அமைதியாக இருந்தால் மட்டுமே, நீ சத்தியத்தைப் பின்பற்றுவதும் உனது மனநிலை மாற்றமும் கனி தரும். இது ஏனென்றால், நீ பாரத்தைச் சுமந்தவனாக தேவனுக்கு முன்பு வருகிறாய், பலவிதங்களில் குறைபாடு உள்ளவன் என்றும், அறிந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்கள் இருக்கின்றன என்றும், அனுபவிக்கவேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன என்றும் மேலும் தேவ சித்தத்தின் மீது முழுவதும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் எப்போதும் நினைக்கிறாய். இந்தக் காரியங்கள் எப்போதும் உன் மனதில் இருக்கின்றன. இவை மூச்சுவிட இயலாமல் எப்போதும் உன்னை அழுத்திக்கொண்டே இருப்பதால், (நீ எதிர்மறை நோக்கில் இல்லையென்றாலும்கூட) இருதயத்தில் பாரத்தை உணர நேரிடும். இப்படி இருக்கும் நபர் மட்டுமே தேவனுடைய வார்த்தையின் பிரகாசத்தை ஏற்றுக்கொள்ளவும் தேவ ஆவியினால் ஏவப்படவும் தகுதியுடையவர். அவர்களது பாரத்தினால், அவர்களது இருதய பாரத்தினால், அவர்கள் செலுத்திய கிரயத்தினால், தேவனுக்கு முன்பாக அவர்கள் அனுபவித்த பாடுகளினால் அவர் அருளும் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அவர்கள் அடைந்தார்கள் என்று கூறலாம். ஏனென்றால் தேவன் ஒருவரையும் பாரபட்சத்துடன் நடத்துவதில்லை. மக்களை அவர் எப்போதும் நீதியுடன் நடத்துகிறார், ஆனால் காரணமில்லாமல் அல்லது நிபந்தனையில்லாமல் அவர் மக்களுக்குக் கொடுப்பதுமில்லை. இது அவரது நீதியுள்ள மனநிலையின் ஓர் அம்சமாகும். நடைமுறை வாழ்வில், இன்னும் அநேகர் இந்நிலையை அடைய வேண்டியதுள்ளது. குறைந்தபட்சம், அவர்கள் இருதயங்கள் இன்னும் முழுமையாக தேவனிடம் திரும்ப வேண்டியுள்ளதால், அவர்களது வாழ்கை மனநிலையில் எந்தப் பெரிய மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இன்னும் பெற்றுக்கொள்ளாமல், தேவ கிருபையில் மட்டுமே வாழ்கிறார்கள். தேவனால் பயன்படுத்தப்படுவதற்குக் கீழ்க்காணும் கட்டளை விதிகளை மக்கள் பூர்த்தி செய்ய வேண்டும்: அவர்கள் இருதயங்கள் தேவனிடம் திரும்பவேண்டும்; அவருடைய வார்த்தைகளின் பாரத்தை அவர்கள் சுமக்கவேண்டும்; வாஞ்சையுள்ள இருதயங்கள் அவர்களுக்கு வேண்டும்; சத்தியத்தைத் தேடும் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் மக்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்ளவும், அவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அடிக்கடி அடையவும் முடியும். தேவனால் பயன்படுத்தப்படும் மக்கள் வெளிப்புறமாக பகுத்தறிவையும், மற்றவர்களுடன் இயல்பான உறவுகளையும் கொண்டிராதவர்களாய்த் தெரிந்தாலும், அவர்கள் மரியாதையுடன் கவனமாகப் பேசுவர், மேலும் அவர்களால் தேவனுக்கு முன்பாக அமைதியான இருதயத்தைக் கொண்டிருக்க முடியும். இப்படிப்பட்ட நபரே சரியாக பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படத் தகுதியானவர். தேவனால் பேசப்படுகிற “பகுத்தறிவற்ற” நபர் மற்றவர்களுடன் இயல்பான உறவுகள் இல்லாதவராகத் தெரிவார், அவர்கள் வெளிப்புற அன்பைப் பற்றியோ அல்லது வெளிப்புற நடைமுறைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை, ஆனால் அவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைக் குறித்து ஐக்கியம்கொள்ளும்போது, அவர்களால் தங்கள் இருதயங்களைத் திறந்து, தேவனுக்கு முன்பான தங்கள் உண்மை அனுபவங்களிலிருந்து பெற்ற பிரகாசத்தோடும், வெளிச்சத்தோடும் சுயநலமின்றி மற்றவர்களுக்குக் கொடுக்க இயலும். இவ்விதமாகவே அவர்கள் தேவன் மீதான அன்பை வெளிப்படுத்தி தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களை அவதூறாய்ப் பேசி, பரியாசம் பண்ணும்போது, வெளியிலுள்ள மக்களால், விஷயங்களால், அல்லது பொருட்களால் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பார்கள் மற்றும் தேவன் முன்பாக அமைதியாக இருப்பர். அவர்கள் தங்களுக்கெனத் தனித்துவமான புரிதல் கொண்டவராகக் காணப்படுவார். மற்ற மக்கள் என்ன செய்தாலும், அவர்களது இருதயங்கள் ஒருபோதும் தேவனை விட்டு விலகாது. மற்றவர்கள் பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாலும், இவர்கள் இருதயங்கள் தேவனுக்கு முன்பாக இருக்கும்; தேவனுடைய வார்த்தையைச் சிந்திக்கும்; தேவனின் நோக்கங்களை நாடி, தங்கள் இருதயங்களுள் அமைதியாக தேவனிடம் ஜெபிக்கும். மற்றவர்களோடு இயல்பாக உறவைப் பேணுவதற்கு அவர்கள் ஒருபோதும் முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள். அவர்கள் வாழ்வதற்கான தத்துவம் ஏதும் இல்லாதவராகக் காணப்படுவார்கள். ஆனால் துடிப்பானவராக, அன்புக்குரியவராக, வெகுளியாகத் தோன்றுவர், ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைதியைக் கொண்டிருப்பார்கள். இதுவே தேவன் பயன்படுத்தும் நபரின் சாயல் ஆகும். வாழ்க்கைக்கான தத்துவங்கள் அல்லது “இயல்பான காரணம்” போன்றவை இப்படிப்பட்ட நபருக்குப் பொருந்துவதில்லை. அவர்கள் தங்கள் முழு இருதயங்களையும் தேவனின் வார்த்தைக்குள் ஊற்றியிருக்கிறார்கள், மேலும் தேவனை மட்டுமே இருதயத்தில் கொண்டவராகக் காணப்படுவார்கள். இப்படிப்பட்ட நபரை தேவன் “பகுத்தறிவற்ற” நபராகக் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட நபரே துல்லியமாக தேவனால் பயன்படுத்தப்படுவார். தேவனால் பயன்படுத்தப்பட்டு வரும் நபரின் அடையாளம் என்னவென்றால், எப்போதும் அல்லது எங்கேயும், அவர்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக இருக்கும்; மற்றவர்கள் எவ்வளவு ஒழுக்கமற்றவர்களாக இருந்தாலும், அல்லது மற்றவர்கள் எந்த அளவிற்கு இச்சையான, மாம்ச பிரகாரமான செயல்களில் ஈடுபட்டாலும், இவரின் இருதயம் ஒருபோதும் தேவனை விட்டு விலகாமல் இருக்கும்; இப்படிப்பட்டவர்கள் பெரும்பான்மையோரைப் பின்பற்ற மாட்டார்கள். இப்படிப்பட்ட நபரே தேவனால் பயன்படுத்தப்படுவதற்குப் பொருத்தமானவர்; இவரே பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படுகிறார். இந்தக் காரியங்களை உன்னால் அடைய இயலாவிட்டால், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கும் பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படுவதற்கும் நீ தகுதி பெறவில்லை.

நீ தேவனோடு இயல்பான உறவை வைத்துக்கொள்வதற்கு விரும்பினால், உனது இருதயம் தேவனிடம் திரும்ப வேண்டும். இதை அஸ்திபாரமாகக் கொண்டால், நீ மற்றவர்களிடமும் இயல்பான உறவைக் கொண்டிருப்பாய். தேவனோடு இயல்பான உறவைக் கொண்டிருக்கவில்லையானால், மற்றவர்களோடு உறவைப் பேணுவதற்கு நீ என்ன செய்கிறாய், எவ்வளவு கடினமாய் உழைக்கிறாய், எவ்வளவு ஆற்றலை செலவழிக்கிறாய் என்பதெல்லாம் பொருட்டே அல்ல; அவையனைத்தும் வாழ்க்கைக்கான மனித தத்துவத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். நீ தேவனுடைய வார்த்தையின்படி மக்களோடு இயல்பான உறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மனிதக் கண்ணோட்டம் மற்றும் மனிதத் தத்துவங்கள் அடிப்படையில் மற்றவர்கள் மத்தியில் உனது ஸ்தானத்தைப் பாதுகாப்பாய். நீ மக்களுடனான உறவில் கவனம் செலுத்தாமல், அதற்குப் பதிலாக தேவனோடு இயல்பான உறவைப் பேணி வந்தாயானால், உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுக்க விரும்பி அவருக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொண்டாயானால், மற்ற மக்களுடனான உனது உறவு தானாகவே இயல்பானதாகிவிடும். பின், இந்த உறவுகள் மாம்சத்தின்மீது கட்டப்படாமல், தேவனுடைய அன்பு என்னும் அஸ்திபாரத்தின்மேல்கட்டப்படும். மற்றவர்களுடன் மாம்சபிரகாரமான எந்த இடைபடுதலும் உனக்குக் கிட்டத்தட்ட இருக்காது, ஆனால் ஆவிக்குரிய நிலையில், ஐக்கியமும், பரஸ்பர அன்பும், ஆறுதலும், ஒருவருக்கொருவர் கொடுத்து உதவுவதும் இருக்கும்.தேவனைத் திருப்தியாக்கும் விருப்பத்தை அஸ்திபாரமாகக் கொண்டே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. இந்த உறவுகள் வாழ்க்கைக்கான மனித தத்துவத்தைச் சார்ந்து பேணப்படாமல், தேவனுக்காகப் பாரத்தைச் சுமப்பதன் மூலமாக இயல்பாக உருவாகின்றன. இவற்றுக்கு உன்னிடமிருந்து எந்தச் செயற்கையான, மனித முயற்சியும் தேவையில்லை. தேவனுடைய வார்த்தைகளுடைய கொள்கைகளின் அடிப்படையில் நீ செயல்பட்டால் மட்டும் போதும். தேவ சித்தத்தைக் கருத்தில் கொள்ள விரும்புகிறாயா? அவருக்கு முன்பாக “பகுத்தறிவில்லாத” ஒரு நபராக இருக்க விரும்புகிறாயா? உனது இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுக்கவும், மற்றவர்கள் மத்தியில் உன் நிலையைப் புறக்கணிக்கவும் தயாராக இருக்கிறாயா? உன்னோடு தொடர்பிலிருக்கும் அனைவரிலும், யாரோடு உனது உறவு சிறப்பானதாக இருக்கிறது? யாருடனான உனது உறவு மோசமான நிலையிலுள்ளது? மக்களுடனான உனது உறவு இயல்பாக உள்ளதா? நீ அனைவரையும் சமமாக நடத்துகிறாயா? மற்றவர்களுடனான உனது உறவு வாழ்க்கைக்குரிய தத்துவத்தின்படி பேணப்படுகிறதா அல்லது அவை தேவனுடைய அன்பென்னும் அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டுள்ளதா? ஜனங்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு கொடுக்காதபோது, அவர்களது ஆவிகள் மந்தமானதாக, மரத்துப்போனதாக, உணர்வற்றதாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள், அவர்கள் தேவனுடன்ஒரு முறையான உறவைக் கொண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் மனநிலையில் ஒருபோதும் மாற்றத்தை அடைய மாட்டார்கள். ஒருவரது மனநிலையை மாற்றுவது என்பது ஒருவரது இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுப்பதற்கான மற்றும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாகும். தேவனுடைய கிரியையானது ஒருவரைத் துடிப்பாக உட்பிரவேசிக்க அனுமதிப்பதோடு தங்கள் எதிர்மறை காரியங்களைக் குறித்த அறிவைப் பெற்றுக்கொண்டு அவற்றை அகற்றுவதற்கும் உதவும். நீ உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தவுடன், , உனது ஆவி ஒவ்வொரு முறையும் லேசாக அசையும்போதும் உன்னால் உணர முடியும் மற்றும் தேவனுடைய பிரகாசம், வெளிச்சம் ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதியுயும் அறிந்து கொள்ள முடியும். நீ விடாது முயற்சி செய்யும்போது, படிப்படியாக பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணப்படுத்தப்படும் பாதைக்குள் பிரவேசிப்பாய். எந்த அளவுக்கு உனது இருதயம் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உனது ஆவி அதிக உணர்வுள்ளதாகவும் மென்மையானதாகவும் இருக்கும், அந்த அளவுக்கு அதிகமாக பரிசுத்த ஆவியானவர் தன்னை ஏவுகிறார் என்பதை அதனால் உணர முடியும், மேலும் அந்த அளவு தேவனுடனான உனது உறவு முறையானதாக மாறும். மக்களுக்கிடையேயான இயல்பான உறவு மனித முயற்சியினால் அல்ல, ஒருவர் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தல் என்ற அஸ்திபாரத்தின்மேலேயே நிலைநாட்டப்படுகிறது. ஒருவரின் இருதயத்தில் தேவன் இல்லாவிட்டால், மக்கள் மற்றவர்களுடன் கொண்டிருக்கும் உறவானது மாம்சரீதியானதாகவே இருக்கும். அந்த உறவு இயல்பானதாக அல்ல, இச்சை யான இன்பங்களாகவே இருக்கும். அவற்றை தேவன் வெறுக்கிறார், அருவருக்கிறார். நீ ஆவியில் ஏவுதல் பெற்றதாகக் கூறியும், தேடும்படிக்கு உன்னிடம் வருபவர்களிடம் அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டி, அவர்களுடன் பேச மறுத்து, நீ விரும்புகிற, மதிக்கிற மக்களோடு மட்டும் ஐக்கியம் கொள்ள விரும்பினால், நீ உணர்ச்சியால் ஆளப்படுகிறாய் என்பதற்கும், தேவனோடு சிறிதளவும் முறையான உறவில் இல்லைஎன்பதற்கும் இது இன்னும் கூடுதலான சான்றாகும். நீ தேவனை வஞ்சிக்கவும் உனது சொந்த அவலட்சணத்தை மூடிமறைக்கவும் முயற்சிக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. உன் அறிவில் சிலவற்றை உன்னால் பகிர்ந்துகொள்ள முடியலாம், ஆனால் உன் நோக்கங்கள் தவறாக இருந்தால், பிறகு நீ செய்யும் ஒவ்வொன்றும் மனிதத் தரத்தின்படி மட்டும் நல்லதாக இருக்கும் மற்றும் தேவன் உன்னைப் புகழ மாட்டார். உன் செயல்கள் தேவனுடைய பாரத்தினால் அல்லாமல், மாம்சத்தினால் இயக்கப்படும். தேவனுக்கு முன்பாக உனது இருதயத்தை அமைதிப்படுத்த முடியுமானால், தேவனை நேசிக்கிற அனைவரோடும் இயல்பாக இடைபட முடியுமானால் மட்டுமே, நீ தேவனால் பயன்படுத்தப்பட தகுதியானவன்.உன்னால் அதைச் செய்ய முடிந்தால், நீ மற்றவர்களுடன் எவ்வாறு பழகினாலும், நீ வாழ்வதற்கான தத்துவத்தின்படி நீ செயல்பட மாட்டாய், நீ தேவனுடைய பாரத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு முன்பாக வாழ்வாய். உங்களில் எத்தனை பேர் இதைப் போல் உள்ளனர்? மற்றவர்களுடனான உனது உறவு உண்மையில் இயல்பானதாக உள்ளதா? எந்த அஸ்திபாரத்தின்மேல் அவை கட்டப்பட்டுள்ளன? உனக்குள் வாழ்க்கைக்கான தத்துவங்கள் எத்தனை உள்ளன? நீ அவற்றை புறந்தள்ளி விட்டாயா? உனது இருதயம் முழுமையாக தேவனிடம் திரும்பமுடியாவிட்டால், நீ தேவனுடையவன் அல்ல. நீ சாத்தானிடமிருந்து வந்தாய், முடிவில் சாத்தானிடமே திரும்புவாய். நீ தேவனுடைய ஜனத்தில் ஒருவனாக இருக்கக்கூடிய தகுதி இல்லாதவன். இவை எல்லாவற்றையுமே நீ கவனத்துடன் ஆராய வேண்டும்.

முந்தைய: தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

அடுத்த: இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களைச் சரியான வழியில் நடத்திச் செல்கின்றது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக