பயிற்சி (4)

இன்று நான் பேசுகிற சமாதானம் மற்றும் சந்தோஷம் என்பது நீ நம்புகிற மற்றும் புரிந்துகொண்டிருக்கிற ஒன்றைப் போல அல்ல. நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது, உங்கள் குடும்பத்தில் வியாதி அல்லது துரதிர்ஷ்டம் இல்லாதிருத்தல், துக்க உணர்வு சிறிதளவும் இல்லாமல் எப்போதும் உன்னுடைய இருதயத்தில் மகிழ்ச்சியாக இருப்பது, மற்றும் உன் வாழ்க்கை எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல் விவரிக்க முடியாத சந்தோஷத்தைப் பெற்றிருப்பது; இவைகளே சமாதானம் மற்றும் சந்தோஷம் என்று நீ நினைக்கிறாய். ஓர் உயர்வைப் பெறுதல் மற்றும் உன்னுடைய மகன் பல்கலைக்கழகத்தில் சேருதல் போன்றவை இதனுடன் அடங்கும். இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு, நீ தேவனிடத்தில் ஜெபிக்கிறாய், தேவனுடைய கிருபை மிகப் பெரியது என்பதைக் கண்டு, நீ மிகுந்த சந்தோஷமடைந்து, ஒரு காது முதல் மறு காது வரை சிரித்துக்கொண்டே, தேவனுக்கு நன்றி சொல்வதை உன்னால் நிறுத்த முடியவில்லை. அத்தகைய சமாதானமும் சந்தோஷமும், பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருப்பதனால் வரும் உண்மையான சமாதானமும் சந்தோஷமும் அல்ல. மாறாக, மாம்சத்தை திருப்திப்படுத்துதலின் விளைவாக ஏற்படும் சமாதானமும் சந்தோஷமுமாக இருக்கிறது. இது எந்தக் காலம் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்; இது கிருபையின் காலம் அல்ல; மேலும், இது நீ உன் வயிற்றை அப்பத்தினால் நிரப்ப முற்படும் நேரமும் அல்ல. உன்னுடைய குடும்பத்தில் எல்லாம் நன்றாக நடப்பதால் நீ மிகுந்த சந்தோஷமடையக்கூடும்; ஆனால் உன் ஜீவன் அதன் கடைசி மூச்சை இழுத்துக்கொண்டிருக்கிறது—மேலும், உன்னுடைய சந்தோஷம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இல்லை. பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றுக்கொள்வது எளிதானது: நீ சரியாகச் செய்ய வேண்டியதைச் செய், ஒரு மனுஷனின் கடமையையும் செயல்பாட்டையும் சிறப்பாகச் செய், மேலும் நீ உன்னுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய விஷயங்களில் உன்னைத் தகுதியுள்ளவனாக்கிக்கொள். நீ எப்போதும் உன்னுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்த ஒரு பாரம் கொண்டிருப்பதாலும், நீ சத்தியத்தைத் தெரிந்துகொண்டதாலும், தேவனுடைய தற்போதைய கிரியையைப் புரிந்து கொண்டதாலும் சந்தோஷமாக இருக்கிறாய் என்றால், இதுவே பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தை உண்மையிலேயே பெற்றிருப்பதாகும். அல்லது, சில சமயங்களில் ஒரு சிக்கலை எதிர்கொண்டு அதைக் கடந்து செல்வது எப்படி என்று நீ அறியாமல், கவலையினால் ஆட்கொள்ளப்படுவாயானால், அல்லது ஐக்கியப்படும் சத்தியத்தை நீ புரிந்து கொள்ளாதிருப்பாயானால், பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கிறார் என்பதை இது நிரூபிக்கிறது. இவைகள் வாழ்க்கை அனுபவத்தின் பொதுவான நிலைகள். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருப்பதற்கும் இல்லாதிருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும், இதைப் பற்றிய உங்கள் பார்வை மிகச் சாதாரணமாக இருக்கக்கூடாது.

முன்னதாக, பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருத்தல் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருத்தல் ஆகிய இரண்டும் வேறுபட்டவை என்று கூறப்பட்டது. பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றிருப்பதன் சாதாரண நிலையானது சாதாரண எண்ணங்கள், சாதாரண பகுத்தறிவு மற்றும் சாதாரண மனிதத்தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பதில் வெளிப்படுகிறது. ஒரு நபரின் குணாதிசயமானது முன்பு இருந்தது போலவே இருக்கும்; ஆனால் அவர்களுக்குள் சமாதானம் இருக்கும், மேலும் வெளிப்புறமாக அவர்களுக்கு ஒரு பரிசுத்தவானுக்கான ஒழுக்கம் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருக்கும்போது அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தை ஒருவர் பெற்றிருக்கும்போது, அவர்களின் சிந்தனை சாதாரணமானதாக இருக்கும். அவர்கள் பசியாக இருக்கும்போது அவர்கள் புசிக்க விரும்புவார்கள், தாகமாக இருக்கும்போது தண்ணீர் குடிக்க விரும்புவார்கள். சாதாரண மனிதத் தன்மையின் இத்தகைய வெளிப்பாடுகள் பரிசுத்த ஆவியானவரின் போதனை அல்ல; அவை மக்களின் சாதாரண சிந்தனை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருத்தலின் சாதாரண நிலை ஆகியவையாகும். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றிருப்பவர்களுக்கு பசி தெரியாது என்றும், அவர்கள் களைப்பை உணர்வதில்லை என்றும், அவர்களுக்குக் குடும்பத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் இருப்பதில்லை என்றும், மாம்சத்திலிருந்து தங்களை முற்றிலும் விலக்கிக்கொள்கிறார்கள் என்றும் சிலர் தவறாக நம்புகிறார்கள். உண்மையில், எவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் சாதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்காகத் துன்பப்படுவதற்கும் காரியங்களை விட்டுக்கொடுப்பதற்கும், தேவனுக்காகத் தங்களை அர்ப்பணிப்பதற்கும், தேவனுக்கு நன்றி விசுவாசமாக இருப்பதற்கும் அறிவார்கள்; அதுமட்டுமின்றி, அவர்கள் உணவு மற்றும் ஆடைகளைப் பற்றியும் சிந்திக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய சாதாரண மனிதத் தன்மையில் ஒன்றையும் அவர்கள் இழந்து போகவில்லை; அதற்குப் பதிலாக, குறிப்பாக பகுத்தறிவைப் பெற்றுள்ளனர். சில சமயங்களில், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படித்து, தேவனுடைய கிரியையைப் பற்றி சிந்திக்கிறார்கள்; அவர்களின் இருதயங்களில் விசுவாசம் இருக்கிறது, அவர்கள் சத்தியத்தைப் பின்தொடர தயாராக இருக்கிறார்கள். இயற்கையாகவே, பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜனங்களுக்கு சாதாரண சிந்தனை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு எந்த பகுத்தறிவும் இருப்பதில்லை. இது சாதாரண நிலை அல்ல. ஜனங்களுக்கு சாதாரண சிந்தனை இருக்கும்போது மற்றும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருக்கும்போது, அவர்கள் நிச்சயமாக ஒரு சாதாரண நபரின் பகுத்தறிவைக் கொண்டிருக்கிறார்கள்; இவ்வாறு அவர்களுக்கு ஒரு சாதாரண நிலை இருக்கிறது. தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதாவது நடக்கிறது; அதேசமயம் பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருப்பது கிட்டத்தட்ட இடைவிடாமல் காணப்படுகிறது. ஜனங்களின் பகுத்தறிவும் சிந்தனையும் சாதாரணமானதாக இருக்கும் வரை, அவர்களின் நிலைகள் சரியாக இருக்கும் வரை, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாகவே அவர்களுடன் இருக்கிறார். ஜனங்களின் பகுத்தறிவும் சிந்தனையும் சாதாரணமானதாக இல்லாதபோது, அவர்களின் மனிதத் தன்மை சாதாரணமானதாக இருக்காது. இந்தத் தருணத்தில், பரிசுத்த ஆவியானவரின் கிரியை உனக்குள் காணப்பட்டால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாகவே உன்னுடன் இருப்பார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருந்தால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உனக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தமல்ல. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் விசேஷித்த நேரங்களில் கிரியை செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருப்பதால் மட்டுமே, ஜனங்களால் சாதாரண வாழ்க்கையைப் பராமரிக்க முடியும்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கிரியை செய்கிறார். உதாரணமாக, நீ ஒரு தலைவனாகவோ அல்லது ஊழியக்காரனாகவோ இருந்தால், நீ சபைக்குத் தண்ணீர் பாய்ச்சி ஆகாரம் அளிக்கும் போது, மற்றவர்களுக்குப் பக்தி விருத்தி உண்டாகும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் சில வார்த்தைகளை உனக்குப் போதிப்பார். மேலும் உங்களில் சில சகோதர சகோதரிகளின் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கக் கூடும். இதுபோன்ற சமயங்களில், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார். சில நேரங்களில், நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய சொந்த அனுபவங்களுக்கு மிகவும் பொருத்தமான சில வார்த்தைகளால் உன்னைப் போதிப்பார்; மேலும் நீ உன்னுடைய சொந்த நிலைகள் குறித்த அதிக அறிவைப் பெற உன்னை அனுமதிப்பார்; இதுவும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை தான். சில நேரங்களில், நான் பேசும்போது, நீங்கள் கவனிக்கிறீர்கள், உங்கள் சொந்த நிலைகளை என் வார்த்தைகளினால் அளவிட முடிகிறது, சில சமயங்களில் நீங்கள் தொடப்படுகிறீர்கள் அல்லது ஏவப்படுகிறீர்கள்; இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை. பரிசுத்த ஆவியானவர் எல்லா நேரங்களிலும் அவர்களுக்குள் கிரியை செய்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். இது சாத்தியமற்றது. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தங்களுடன் இருக்கிறார் என்று அவர்கள் கூறுவார்களானால், அது யதார்த்தமானதாக இருக்கும். தங்களின் சிந்தனையும் உணர்வும் எல்லா நேரங்களிலும் சாதாரணமானதாக இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்களானால், அதுவும் யதார்த்தமானதாக இருக்கும். மேலும் அது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருப்பதைக் காண்பிக்கும். பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் தங்களுக்குள் கிரியை செய்கிறார் என்றும், அவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொரு தருணத்திலும் பரிசுத்த ஆவியானவரானால் தொடப்பட்டவர்கள் என்றும், எல்லா நேரத்திலும் புதிய அறிவைப் பெறுவார்கள் என்றும் அவர்கள் கூறினால், இது எந்த வகையிலும் சரியல்ல! இது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டது! அத்தகையவர்கள் அசுத்த ஆவிகள் என்பதில் ஒரு சந்தேகத்தின் நிழல் கூட இல்லை! தேவனுடைய ஆவியானவர் மாம்சத்திற்குள் வரும்போது கூட, மனுஷர்களைப் பற்றி எதுவும் கூறாமல் அவர் சாப்பிட மற்றும் ஓய்வெடுக்க வேண்டிய தருணங்களும் உண்டு. அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவர்கள் மாம்சத்தில் பலவீனம் இல்லாமல் இருப்பது போலத் தெரிகிறது. அவர்கள் எல்லாவற்றையும் கைவிட்டு, விட்டு விட முடிகிறது, அவர்கள் உணர்ச்சியிலிருந்து விடுபடுகிறார்கள், வேதனையைத் தாங்கும் திறன் கொண்டவர்களாக, மாம்சத்தைக் கடந்ததைப் போல சிறிதளவு களைப்பையும் உணர்வதில்லை. இது மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்லவா? அசுத்த ஆவிகளின் கிரியை இயற்கைக்கு அப்பாற்பட்டது. எந்த மனுஷனும் அத்தகைய விஷயங்களை அடைய முடியாது! பகுத்தறியும் தன்மை இல்லாதவர்கள் அத்தகையவர்களைப் பார்க்கும்போது பொறாமைப்படுகிறார்கள்: அவர்கள் தேவன் மீதுள்ள நம்பிக்கையில் அத்தகைய பலம் இருப்பதாகவும், மிகுந்த விசுவாசம் வைத்திருப்பதாகவும், பலவீனத்தின் சிறிதளவு அடையாளத்தையும் ஒருபோதும் காட்ட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள்! உண்மையில், இவை அனைத்தும் ஓர் அசுத்த ஆவியின் கிரியையின் வெளிப்பாடுகள். ஏனெனில், சாதாரண ஜனங்கள் தவிர்க்க முடியாமல் மனித பலவீனங்களைக் கொண்டுள்ளனர்; பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றிருப்பவர்களின் சாதாரண நிலை இதுவாகும்.

ஒருவரது சாட்சியில் உறுதியாக நிற்பது என்பது எதைக் குறிக்கிறது? சிலர், இப்போது செய்வதைப் போலவே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்; மேலும் அவர்கள் ஜீவனை ஆதாயப்படுத்திக்கொள்ள வல்லவர்களா என்பதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை; அவர்கள் ஜீவனைப் பின்தொடருவதில்லை; ஆனால் அவர்கள் பின்வாங்குவதுமில்லை. இந்தக் கட்ட கிரியை தேவனால் செய்யப்படுகிறது என்பதை மட்டுமே அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது அவர்களின் சாட்சியில் தோல்வியடைதல் அல்லவா? அத்தகையவர்கள் ஜெயங்கொண்டதாக சாட்சி பகருவதில்லை. ஜெயங்கொண்டவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பின்பற்றி, ஜீவனைப் பற்றிக்கொள்ள முடிகிறது. அவர்கள் நடைமுறைத் தேவனை நம்புவது மட்டுமல்லாமல், தேவனுடைய எல்லா திட்டங்களையும் பின்பற்றவும் அறிந்திருக்கிறார்கள். அத்தகையவர்கள் சாட்சி அளிப்பவர்கள். சாட்சி அளிக்காதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பின்தொடரவில்லை, இன்னும் குழப்பத்துடன் தொடர்கிறார்கள். நீ பின்பற்றலாம், ஆனால் நீ ஜெயங்கொண்டதாக அர்த்தமாகிவிடாது; ஏனென்றால் இன்று தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்குப் புரிதல் இல்லை. ஜெயங்கொள்ள சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். பின்தொடர்பவர்கள் அனைவரும் ஜெயங்கொள்ளவில்லை; ஏனென்றால் நீ இன்றைய தேவனை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி உன்னுடைய இருதயத்தில் உனக்கு எந்தவித புரிதலும் இல்லை, நீ இன்று அதை எவ்வாறு எடுத்துக் கொண்டாய் என்பதும் உனக்குத் தெரியாது; இன்று வரை உன்னை ஆதரித்தது யார் என்பதும் உனக்குத் தெரியாது. தேவன் மீது விசுவாசம் கொண்ட சிலரின் பயிற்சி எப்போதும் சீரற்றதாகவும் குழப்பத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்; எனவே, நீ பின்தொடர்கிறாய் என்பதால் சாட்சியளிக்கிறாய் என்று அர்த்தமல்ல. உண்மையான சாட்சி என்பது என்ன? இங்கே கூறப்படுகிற சாட்சி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: ஒன்று ஜெயங்கொள்ளுவதற்கான சாட்சியாகும், மற்றொன்று பரிபூரணப்படுத்தப்பட்டதற்கான சாட்சியாகும் (இது இயற்கையாகவே, பெரிய சோதனைகளையும் எதிர்காலத்தின் உபத்திரவங்களையும் தொடர்ந்து வரும் சாட்சியாக இருக்கும்). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன்னால் உபத்திரவங்களிலும் சோதனைகளிலும் உறுதியாக நிற்க முடிந்தால், நீ சாட்சியின் இரண்டாவது கட்டத்தைப் பெற்றிருப்பாய். இன்று முக்கியமானது சாட்சியின் முதல் படியாகும்: சிட்சைக்கான உபத்திரவம் மற்றும் நியாயத்தீர்ப்பின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதியாக நிற்கத் திறமையைப் பெற்றிருப்பதாகும். இது ஜெயங்கொள்வதற்கான சாட்சியாகும். ஏனென்றால், இப்போது ஜெயங்கொள்ளும் நேரம். (பூமியில் தேவன் கிரியை செய்யும் நேரம் இது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்; பூமியில் மாம்சமாகிய தேவனுடைய முக்கிய கிரியை, நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் அவரைப் பின்பற்றும் பூமியிலுள்ள இந்த ஜனங்கள் கூட்டத்தை ஜெயங்கொள்வதாகும்). வெற்றி சிறந்த சாட்சிகளைப் பெற்றிருப்பதற்கான திறனை நீ கொண்டிருக்கிறாயா இல்லையா என்பது, உன்னால் இறுதிவரை பின்பற்ற இயலுமா என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல; ஆனால், மிக முக்கியமாக, தேவனுடைய ஒவ்வொரு கட்ட கிரியையையும் நீ உணரும்போது, தேவனுடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய உண்மையான புரிதலுக்கு நீ தகுதியானவனா, இந்தக் கிரியையை நீ உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாயா என்பதைப் பொறுத்தது. இறுதிவரை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உங்களால் ஒதுங்கிச் செல்ல முடியாது. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீ முழுமனதுடன் உன்னை அர்ப்பணிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்; நீ அனுபவிக்கும் ஒவ்வொரு கட்ட கிரியையையும் உண்மையாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும்; மேலும் அறிவை அடைந்து கொண்டு, தேவனின் மனநிலைக்குக் கீழ்ப்படிகிறவனாயும் இருக்க வேண்டும்; இது ஜெயங்கொண்டதற்கான இறுதி சாட்சியாகும். உன்னிடத்திலிருந்து எதிர்பார்க்கப்படுகிற சாட்சி இதுவே. ஜெயங்கொண்டதற்கான சாட்சி முதன்மையாக தேவனுடைய மனுஷரூபமெடுத்தல் பற்றிய உன்னுடைய அறிவைக் குறிக்கிறது. முக்கியமாக, இந்த சாட்சியின் படியானது தேவனுடைய மனுவுருவெடுத்தலைப் பற்றியது. உலக ஜனங்கள் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு முன்பாக நீ என்ன செய்கிறாய் அல்லது கூறுகிறாய் என்பது முக்கியமல்ல; எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய வாயிலிருந்து வருகிற அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவருடைய கிரியைகளுக்கும் கீழ்ப்படிய முடியுமா என்பது தான் முக்கியம். ஆகையால், சாட்சியின் இந்தப் படியானது, இரண்டாவது முறை தேவன் மாம்சமாகி, இன்னும் மகத்தான காரியங்களைச் செய்ய வருவார் என்று விசுவாசிக்காத, சாத்தானுக்கும் மற்றும் தேவனுடைய அனைத்து சத்துருக்கள்—அதாவது பிசாசு மற்றும் பகையாளிகள் அனைவருக்கும், இன்னும் அதிகமாக, தேவன் மாம்சத்திற்குத் திரும்புகிற உண்மையை விசுவாசிக்காதவர்களுக்கும் சொல்லப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது எல்லா அந்திக்கிறிஸ்துகளுக்கும்—அதாவது தேவனுடைய மனுவுருவை விசுவாசிக்காத அனைத்து சத்துருக்களுக்கு எதிராகவும் கூறப்படுவதாகும்.

தேவனைப் பற்றி சிந்திப்பதும், தேவனுக்காக ஏங்குவதும் நீ தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கவில்லை; அவர் மாம்சமான வார்த்தை என்று நீ நம்புகிறாயா, வார்த்தை மாம்சமாகிவிட்டது என்று நீ நம்புகிறாயா, ஆவியானவர் வார்த்தையாகிவிட்டார் என்று நம்புகிறாயா, மற்றும் வார்த்தை மாம்சத்தில் தோன்றியதை நம்புகிறாயா என்பதைப் பொறுத்தது. இது முக்கியமான சாட்சியம். நீ எவ்வாறு பின்பற்றுகிறாய், அல்லது நீ உன்னையே எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பது முக்கியமல்ல; முக்கியமானது என்னவென்றால், இந்த சாதாரண மனிதகுலத்திலிருந்து வார்த்தை மாம்சமாகிவிட்டது என்பதையும், சத்தியத்தின் ஆவி மாம்சத்தில் உணரப்பட்டதையும் நீ கண்டுபிடிக்க முடியுமா—அதாவது எல்லா சத்தியமும், வழியும், ஜீவனும் மாம்சத்தில் வந்துவிட்டன, தேவனின் ஆவி மெய்யாகவே பூமியில் வந்துவிட்டது, ஆவியானவர் மாம்சத்தில் வந்துவிட்டார். இருப்பினும், மேலோட்டமாக, இது பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படுதலிருந்து வித்தியாசமாகத் தோன்றுகிறது; ஆவியானவர் ஏற்கனவே மாம்சத்தில் உணரப்பட்டிருப்பதையும் மற்றும், அதற்கும் மேலாக, வார்த்தை மாம்சமாகிவிட்டது, மேலும் வார்த்தை மாம்சத்தில் தோன்றியிருக்கிறது என்பதையும் இந்தக் கிரியையில் உங்களால் மிகவும் தெளிவாகக் காண முடிகிறது. இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” மேலும், இன்றைய வார்த்தை தேவன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்; இதோ, வார்த்தை மாம்சமாகிவிட்டது. இதுவே நீ பகரக்கூடிய சிறந்த சாட்சி. இது மாம்சமாகியிருக்கிற தேவனைப் பற்றிய உண்மையான அறிவை நீ கொண்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறது—அதாவது நீ அவரைத் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், இன்று நீ நடக்கிற பாதை ஜீவ வழி, மற்றும் சத்திய வழி என்பதை அறிந்திருக்கிறாய். இயேசு செய்த கிரியையின் கட்டமானது “வார்த்தை தேவனிடத்தில் இருந்தது” என்ற சாராம்சத்தை மட்டுமே நிறைவேற்றியது: தேவனுடைய சத்தியம் தேவனிடத்தில் இருந்தது; மேலும், தேவனுடைய ஆவி மாம்சத்தினிடத்தில் இருந்தது; மேலும் அந்த மாம்சத்திலிருந்து பிரிக்க முடியாததாய் இருந்தது. அதாவது, மாம்சமாகிய தேவனுடைய சரீரம் தேவ ஆவியினிடத்தில் இருந்தது; இது மாம்சமாகிய இயேசு தேவனுடைய முதல் மனுவுருவெடுத்தல் என்பதற்கான மிகப்பெரிய சான்று. கிரியையின் இந்தக் கட்டமானது “வார்த்தை மாம்சமாகிறது” என்பதன் உள்ளான அர்த்தத்தை சரியாக நிறைவேற்றுகிறது, “அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்பதற்கு ஆழமான அர்த்தத்தைக் கொடுத்தது, மேலும், “ஆதியிலே வார்த்தை இருந்தது” என்ற வார்த்தைகளை உறுதியாய் விசுவாசிக்கச் செய்கிறது. அதாவது, சிருஷ்டிப்பின் போது தேவன் வார்த்தைகளை உடையவராய் இருந்தார், அவருடைய வார்த்தைகள் அவரிடத்தில் இருந்தன மற்றும் அவரிடமிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன, மேலும் இந்தக் கடைசி காலத்தில், அவருடைய வார்த்தைகளின் வல்லமையையும் அதிகாரத்தையும் இன்னும் தெளிவுபடுத்துகிறார்; மற்றும் மனுஷன் அவருடைய அனைத்து வழிகளையும் பார்க்க அனுமதிக்கிறார்—அதாவது அவருடைய எல்லா வார்த்தைகளையும் கேட்பதற்கு அனுமதிக்கிறார். இதுதான் கடைசி காலத்தின் கிரியை ஆகும். இந்த விஷயங்களை நீ முற்றிலும் புரிந்துகொள்ள வேண்டும். இது மாம்சத்தை அறிந்து கொள்வதைப் பற்றிய கேள்வி அல்ல; ஆனால் நீ மாம்சத்தையும் வார்த்தையையும் எவ்வாறு புரிந்துகொள்கிறாய் என்பதைப் பற்றியது. இதுவே நீங்கள் பகர வேண்டிய சாட்சி; ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றும் இதுவே. ஏனென்றால், இது இரண்டாவது மனுவுருவெடுத்தலுக்ககான கிரியை—தேவன் மாம்சமாகிற கடைசி நேரம்—இது மனுவுருவெடுத்தலின் முக்கியத்துவத்தை முழுமையாக நிறைவு செய்கிறது, இந்த நேரத்தில் மாம்சத்தில் தேவனுடைய அனைத்துக் கிரியைகளையும் தொடங்கி முழுமையாக நிறைவேற்றுகிறார், மேலும், மாம்சத்தில் இருப்பதற்கான தேவனுடைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறார். எனவே, நீ மனுவுருவெடுத்தலின் அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். நீ எவ்வளவு ஓடுகிறாய், அல்லது பிற வெளிப்புற விஷயங்களை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறாய் என்பது முக்கியமல்ல; முக்கியமானது என்னவென்றால், மாம்சமாகிய தேவனுக்கு முன்பாக உன்னை உண்மையிலேயே ஒப்புக்கொடுத்து, உன்னுடைய முழுமையையும் தேவனுக்கு அர்ப்பணித்து, அவருடைய வாயிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிய முடிகிறதா என்பது தான். நீ செய்ய வேண்டியதும் நிலைத்திருக்க வேண்டியதும் இதுவே.

சாட்சியின் கடைசிப் படியானது உன்னால் பரிபூரணராக்கப்பட முடிகிறதா இல்லையா என்பதற்கான சாட்சியாகும்—அதாவது, மாம்சமாகிய தேவனுடைய வாயிலிருந்து பேசப்பட்ட எல்லா வார்த்தைகளையும் புரிந்து கொண்டு, தேவனைப் பற்றிய அறிவைப் பெற்று, அவரைப் பற்றிய நிச்சயமுடையவனாகிறாய், நீ தேவனுடைய வாயிலிருந்து வருகிற எல்லா வார்த்தைகளையும் வாழ்ந்து காட்டுகிறாய்; மேலும் தேவன் உன்னிடத்தில் கேட்கிற பேதுருவின் பாணி மற்றும் யோபுவின் விசுவாசத்தைப் போன்ற நிலைகளை அடைகிறாய்—அதாவது உன்னால் மரணபரியந்தம் கீழ்ப்படிய முடியும், உன்னை முற்றிலுமாக அவருக்குக் கொடுத்து, இறுதியில் ஓர் தகுதியான நபரின் சாயலை அடைய முடியும், அதாவது தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை அனுபவித்தபின் ஜெயங்கொண்டிருக்கிற மற்றும் பரிபூரணமாக்கப்பட்டிருக்கிற ஒருவரின் சாயலை அடைய முடியும். இது இறுதி சாட்சி—இது இறுதியில் பரிபூரணராக்கப்பட்ட ஒருவரால் பகரப்பட வேண்டிய சாட்சி. இவை நீ பகர வேண்டிய சாட்சியின் இரண்டு படிகள்; அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஒவ்வொன்றும் இன்றியமையாதவை. ஆனால் நீ அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது: இன்று நான் உன்னிடத்தில் கேட்கிற சாட்சி உலக ஜனங்களிடமோ அல்லது எந்தவொரு தனி நபரிடமோ அல்ல, மாறாக, நான் அதை உன்னிடத்தில் கேட்கிறேன். உன்னால் என்னைத் திருப்திப்படுத்த முடிகிறதா, மற்றும் உங்கள் ஒவ்வொருவரைக் குறித்த எனது எதிர்பார்ப்பின் தரங்களை உங்களால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடிகிறதா என்பதன் மூலம் இது அளவிடப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முந்தைய: பயிற்சி (3)

அடுத்த: பயிற்சி (5)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக