பயிற்சி (1)
கடந்த காலத்தில், ஜனங்கள் அனுபவித்த வழிகளில் ஏராளமான வழிவிலகல்களும் மூடத்தனங்களும் கூட காணப்பட்டன. தேவனுடைய கோரிக்கைகளின் தரநிலைகளை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை, ஆகவே ஜனங்களுடைய அனுபவங்கள் தவறாகிவிட்ட பல பகுதிகள் காணப்பட்டன. தேவன் மனுஷனிடம் கோருவது என்னவென்றால் அவர்களால் இயல்பான மனிதத்தன்மையில் ஜீவிக்க முடிய வேண்டும். உதாரணமாக, உணவு மற்றும் உடை தொடர்பான நவீன மரபுகளைப் பின்பற்றுவது, சூட் மற்றும் டை அணிவது, நவீன கலையைப் பற்றி கொஞ்சம் கற்றுக்கொள்வது ஆகிய இவையெல்லாம் ஜனங்களுக்கான உரிமையாகும், அவர்களுடைய ஓய்வு நேரத்தில் அவர்கள் கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குகளை ரசிக்கலாம். அவர்கள் சில ஞாபகார்த்தமான புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம், அவர்கள் வாசித்து கொஞ்சம் பயனுள்ள அறிவைப் பெற்று, ஒப்பீட்டளவில் நல்ல ஜீவிய சூழலைக் கொண்டிருக்கலாம். இவையெல்லாம் ஓர் இயல்பான மனிதத்தன்மையுள்ள ஜீவியத்திற்கு பொருத்தமானவையாகும், ஆனாலும் ஜனங்கள் அவற்றை தேவனால் வெறுக்கப்பட்ட காரியங்களாகவே பார்க்கின்றனர், மேலும் அவர்கள் அவற்றைச் செய்யாமல் தங்களை விலக்கி வைத்திருக்கின்றனர். அவர்களுடைய பயிற்சியில் ஒரு சில விதிகளைப் பின்பற்றுவது மட்டுமே அடங்கும், இது சாக்கடை போன்ற மந்தமான மற்றும் முற்றிலும் அர்த்தமில்லாத ஒரு ஜீவியத்திற்கு வழிவகுக்கிறது. உண்மையில், ஜனங்கள் இவ்விதமாகக் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று தேவன் ஒருபோதும் கோரவில்லை. ஜனங்கள் எல்லோரும் தங்கள் சொந்த மனநிலைகளைச் சுருக்க விரும்புகின்றனர், தேவனுடன் நெருக்கமாக இருக்கும்படி தங்கள் ஆவிகளுக்குள் இடைவிடாமல் ஜெபம் செய்கின்றனர், தேவன் என்ன நோக்கமாயிருக்கிறார் என்பதைக் குறித்து அவர்களுடைய மனம் தொடர்ந்து குழம்பிக் கொண்டிருக்கிறது, தேவனுடனான தங்கள் தொடர்பு எப்படியாவது துண்டிக்கப்பட்டுவிடுமோ என்ற பெரும் பீதியில் அவர்கள் கண்கள் இதையோ அல்லது அதையோ தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஜனங்கள் தாங்களாகவே எடுத்துள்ள முடிவுகள், இவை ஜனங்கள் தங்களுக்காகவே வகுத்துக்கொண்ட விதிமுறைகளாகும். உனக்கு உன்னுடைய சொந்த இயல்பான சாராம்சத்தைப் பற்றி தெரியவில்லை என்றால், உன் சொந்தப் பயிற்சியானது எந்த மட்டத்தை எட்டும் என்று உனக்குப் புரியவில்லை என்றால், பின்னர் தேவன் மனுஷனிடம் சரியாக எந்தத் தரநிலைகளைக் கோருகிறார் என்பதை உறுதியாக அறிந்துகொள்வதற்கு உனக்கு எந்த வழியும் இருக்காது, உனக்கு ஒரு துல்லியமான நடைமுறைப் பாதையும் இருக்காது. தேவன் மனுஷனிடம் சரியாக என்ன கோருகிறார் என்பதை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், உன் மனது எப்போதும் குழம்பிக் கொண்டிருக்கிறது, தேவனுடைய நோக்கங்களை ஆராய உன் மூளையை கசக்குகிறாய், மேலும் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுவதற்கும் அறிவூட்டப்படுவதற்கும் ஏதேனும் ஒரு வழியைத் தேடுவதில் தடுமாறுகிறாய். இதன் விளைவாக, உனக்குப் பொருத்தமானதாக இருப்பதாக நீ நம்பும் சில நடைமுறை வழிகளை உருவாக்குகிறாய். தேவன் மனுஷனிடம் சரியாகக் கோருவது என்னவென்று உனக்கு எதுவும் தெரியாது. நீ வெறுமனே உன் சொந்த நடைமுறைகளின் தொகுப்பைக் கவலையில்லாமல் செய்கிறாய், முடிவைப் பற்றி கொஞ்சமாகக் கவலைப்படுகிறாய், உன் பயிற்சியில் வழிவிலகல்கள் அல்லது தவறுகள் உள்ளனவா என்பதைப் பற்றி இன்னும் குறைவாகவே கவலைப்படுகிறாய். இவ்வாறு, உன் பயிற்சியில் இயல்பாகவே துல்லியத்தன்மை இல்லை, அது கொள்கையற்றதாக இருக்கிறது. குறிப்பாகக் குறைவுள்ளது என்னவென்றால் இயல்பான மனித பகுத்தறிவு மற்றும் மனசாட்சி, அத்துடன் தேவனுடைய பாராட்டுதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் உறுதிப்படுத்துதல் ஆகும். உன் சொந்த பாதையில் செல்வது முற்றிலும் மிக எளிதாகிறது. இவ்வகையான பயிற்சியானது வெறுமனே விதிகளைப் பின்பற்றுவதாகும் அல்லது உன்னையே நீ கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் வேண்டுமென்றே அதிக பாரத்தை எடுத்துக்கொள்வதாகும். ஆனாலும், உன் நடைமுறையில் பெரும்பாலானவை தேவையற்ற செயல்முறைகளையோ அல்லது சமயச் சடங்குகளையோ கொண்டிருக்கின்றன என்பதை அறியாமல் உன் பயிற்சி துல்லியமானதாகவும் சரியானதாகவும் இருப்பதாக நீ நினைக்கிறாய். பொதுவாகவே தங்கள் மனநிலைகளில் எந்த மாற்றமும், எந்த புதிய புரிதலும், எந்த புதிய பிரவேசமும் இல்லாமல் இது போல பல வருடங்களாக பயிற்சி செய்யும் பலர் உள்ளனர். அவர்கள் அறியாமலேயே அதே பழைய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கின்றனர் மற்றும் தங்களுடைய மிருகத்தனமான சுபாவங்களுக்கும், பல முறை நியாயமில்லாத மற்றும் மனிதத்தன்மையில்லாத செயல்களை அவர்கள் செய்யும் இடம் வரைக்கும் முழு முக்கியத்துவம் கொடுக்கின்றனர், ஜனங்கள் தங்கள் தலைகளைச் சொறிந்து முற்றிலும் குழப்பத்தில் விடப்படும் விதங்களில் நடக்கின்றனர். இத்தகையவர்கள் மனநிலை மாற்றத்தை அனுபவித்திருப்பதாகக் கூற முடியுமா?
இப்போது, தேவன் மீதான நம்பிக்கை தேவனுடைய வார்த்தையின் காலத்திற்குள் பிரவேசித்துள்ளது. ஒப்பீட்டளவில் சொல்ல வேண்டுமென்றால், ஜனங்கள் ஒரு காலத்தில் செய்ததைப் போல ஜெபம் செய்வதில்லை. தேவனுடைய வார்த்தைகள் சத்தியத்தின் எல்லா அம்சங்களையும் பயிற்சி செய்யும் வழிகளையும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன, ஆகவே ஜனங்கள் இனிமேல் தேடவும் தடவிப் பார்க்கவும் வேண்டிய அவசியமில்லை. ராஜ்யத்தின் கால ஜீவியத்தில், தேவனுடைய வார்த்தைகள் மக்களை முன்னோக்கி வழிநடத்துகின்றன, மேலும் இது அவர்கள் பார்ப்பதற்குச் சகலத்தையும் தெளிவுப்படுத்தியுள்ள ஒரு ஜீவியமாக இருக்கிறது, ஏனென்றால் தேவன் சகலத்தையும் வெளிப்படையாக வைத்திருக்கிறார், மேலும் இனிமேல் மனுஷன் ஜீவன் வழியாகத் தங்கள் வழியை உணருவதற்கு விடப்படுவதில்லை. திருமணம், உலக விவகாரங்கள், ஜீவன், உணவு, உடை மற்றும் தங்குமிடம், ஒருவருக்கொருவர் இடையிலான உறவுகள், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் வகையில் ஒருவர் எவ்வாறு ஊழியம் செய்ய முடியும், ஒருவர் எவ்வாறு மாம்சத்தைக் கைவிட வேண்டும், இன்னும் இதைப் போன்ற காரியங்களில் எதை தேவன் உங்களிடம் விளக்கிக் கூறவில்லை? நீங்கள் இன்னும் ஜெபிக்கவும் தேடவும் வேண்டுமா? உண்மையில் தேவையே இல்லை! நீ இன்னும் இந்தக் காரியங்களைச் செய்தால், நீ மிதமிஞ்சிய முறையில் செயல்படுகிறாய். இது அறியாமையும் மதியீனமும், முற்றிலும் தேவையற்றதுமாகும்! திறனில் மிகுந்த குறைபாடுள்ளவர்களும், தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் மட்டுமே இடைவிடாமல் மதியீனமான ஜெபங்களைச் செய்கின்றனர். உன்னிடம் மனவுறுதி உள்ளதா இல்லையா என்பதே சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கு முக்கியமாகும். சத்தியத்திற்கு இணக்கமாக இல்லை என்று தெரிந்தும் கூட, சிலர் தங்கள் செயல்களில் தங்கள் மாம்ச விருப்பங்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இது ஜீவியத்தில் அவர்களுடைய சொந்த முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது, மேலும் ஜெபம் செய்து, தேடிய பிறகும் கூட அவர்கள் மாம்சத்திற்குத் கீழ்ப்படிந்து செயல்பட விரும்புகின்றனர். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் தெரிந்தே பாவங்களைச் செய்யவில்லையா? மாம்சத்தின் இச்சைகளை விரும்புகிறவர்கள் மற்றும் பணத்திற்காக ஏங்குகிறவர்கள், பின்னர் தேவனிடம் இவ்வாறு சொல்லி ஜெபிப்பவர்கள் போல: “தேவனே! மாம்சத்தின் இன்பங்களை இச்சிப்பதற்கும் செல்வத்தை இச்சிப்பதற்கும் நீர் என்னை அனுமதிப்பீரா? இவ்வழியில் பணம் சம்பாதிப்பதுதான் எனக்காக நீர் கொண்டுள்ள சித்தமா?” இது பொருத்தமான ஜெபம் செய்யும் முறையா? தேவனுக்கு இந்த காரியங்களில் மகிழ்ச்சி கொள்வதில்லை என்பதும், அதனால் அவர்கள் அவற்றைக் கைவிட வேண்டும் என்பதும் இதைச் செய்கிறவர்களுக்கு முற்றிலும் நன்றாக தெரியும், ஆனால் அவர்கள் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கும் காரியங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் ஜெபிக்கும்போதும் தேடும்போதும், அவர்களை இவ்விதமாக நடந்துகொள்ள அனுமதிக்கும்படி தேவனைக் கட்டாயப்படுத்த முயற்சி செய்கின்றனர். இதை உறுதிப்படுத்த தேவன் ஏதாவது சொல்லும்படி அவர்கள் தங்கள் இருதயங்களில் கோரலாம், இதுதான் கலகத்தன்மை என்று அழைக்கப்படுகிறது. திருச்சபையின் சகோதர சகோதரிகளைத் தங்கள் பக்கம் கொண்டுவந்து தங்கள் சொந்த தற்சார்புடைய ராஜ்யங்களை அமைப்பவர்களும் இருக்கின்றனர். இச்செயல்கள் தேவனை எதிர்க்கின்றன என்பதை நீ நன்கு அறிவாய், ஆனால் இதுபோன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய நீ தீர்மானித்தவுடன், நீ அமைதியாகவும், துணிவுடனும் இன்னும் தேவனைத் தேடி, ஜெபம் செய்கிறாய். நீ எவ்வளவு வெட்கமில்லாதவனாகவும் திமிர்த்தனமாகவும் இருக்கிறாய்! உலக காரியங்களை விட்டுச் செல்வதைப் பொறுத்தவரை, இது நீண்ட காலத்திற்கு முன்பே பேசப்பட்டுள்ளது. தேவன் உலகக் காரியங்களை வெறுக்கிறார் என்பதைத் தெளிவாக அறிந்த சிலர் உள்ளனர், ஆனால் இன்னும் இவ்வாறு சொல்லி ஜெபம் செய்கின்றனர்: “ஓ தேவனே! உலகக் காரிங்களுடன் செல்ல நீர் என்னை அனுதிக்கமாட்டீர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உமது நாமத்திற்கு அவமானம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் இதைச் செய்கிறேன், உலக ஜனங்கள் என் மீதுள்ள உமது மகிமையைப் பார்க்கும்படி நான் இதைச் செய்கிறேன்.” இது என்ன வகையான ஜெபம்? உங்களால் சொல்ல முடியுமா? இது தேவனை நிர்ப்பந்திக்கும் மற்றும் அவருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் செய்யப்படும் ஒரு ஜெபமாகும். இவ்விதமாக ஜெபிப்பதை நீ அவமானமாக உணரவில்லையா? இவ்விதமாக ஜெபிப்பவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கின்றனர், இவ்வகையான ஜெபம் முற்றிலும் சந்தேகத்திற்குரிய நோக்கங்களைக் கொண்ட விஷயமாகும், இது உண்மையிலேயே ஒரு சாத்தானிய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனுடைய வார்த்தைகள், குறிப்பாக அவருடைய சித்தம், அவருடைய மனநிலை மற்றும் பல்வேறு வகையான ஜனங்களை அவர் எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்து பேசப்பட்டவை தெள்ளத் தெளிவானவையாக இருக்கின்றன. நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிக்க வேண்டும், இதைச் செய்வதன் விளைவுகள் கண்மூடித்தனமாக ஜெபித்து தேடுவதைக் காட்டிலும் மிகவும் சிறந்தவையாக இருக்கின்றன. தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிப்பதன் மூலமாகவும் சத்தியம் குறித்து ஐக்கியம் கொள்வதன் மூலமாகவும் தேடுவதிலும் ஜெபிப்பதிலும் மாற்றப்பட வேண்டிய பல சம்பவங்கள் உள்ளன. உங்கள் வழக்கமான ஜெபங்களில், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்குள் இருந்து சுயபரிசோதனை செய்து உங்களைப் பற்றியே அதிகம் அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது ஜீவியத்தில் உன் முன்னேற்றத்திற்கு அதிக நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது. இப்போது, நீ இன்னும் உன் கண்களைப் பரலோகத்திற்கு உயர்த்தி தேடுவாயானால், நீ இன்னும் கற்பனை தேவர்களை நம்புகிறாய் என்பதை அது காட்டவில்லையா? இதற்கு முன்பு, நீ தேடுவது மற்றும் ஜெபம் செய்வது மூலம் பலன்களைக் கண்டாய், பரிசுத்த ஆவியானவர் உன் ஆவியை ஓரளவிற்கு ஏவினார், ஏனென்றால் அது கிருபையின் காலமாக இருந்தது. உன்னால் தேவனைப் பார்க்க முடியவில்லை, அதனால் முன்னோக்கிச் செல்லும் உன் வழியை உணர்ந்து அந்த வழியில் தேடுவதைத் தவிர உனக்கு வேறு வழி இருக்கவில்லை. இப்போது தேவன் மனுஷர் நடுவே வந்திருக்கிறார், வார்த்தையானது மாம்சத்தில் தோன்றியிருக்கிறது, நீ தேவனைக் கண்டிருக்கிறாய்; அதனால் பரிசுத்த ஆவியானவர் முன்பு செய்தது போல இனிமேல் கிரியை செய்வதில்லை. காலம் மாறிவிட்டது, அவ்வாறே பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் முறையும் மாறிவிட்டது. தேவன் பூமியில் இருப்பதனால், ஜனங்கள் ஒரு காலத்தில் ஜெபம் செய்ததைப் போல செய்யவில்லை என்றாலும், தேவனை நேசிக்க மனுஷனுக்கு இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. மனுக்குலமானது தேவனை நேசிக்கும் காலத்திற்குள் பிரவேசித்துள்ளது, தங்களுக்குள்ளாகவே தேவனிடம் இயல்பாக நெருங்கி வர முடிகிறது: “ஓ தேவனே! நீர் உண்மையிலேயே மிகவும் நல்லவர், நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன்!” வெறும் ஒரு சில தெளிவான மற்றும் எளிமையான வார்த்தைகள் ஜனங்களுடைய இருதயங்களுக்குள் தேவன் மீதான அன்பிற்குக் குரல் கொடுக்கின்றன, இந்த ஜெபம் மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான அன்பை ஆழப்படுத்துவதற்காக மட்டுமே சொல்லப்படுகிறது. சில நேரங்களில் நீ சில கலகத்தனங்களை வெளிப்படுத்துவதை நீயே பார்த்து, இவ்வாறு சொல்லலாம்: “ஓ தேவனே! நான் ஏன் இவ்வளவு சீர்கெட்டவனாக இருக்கிறேன்?” ஒரு சில நேரங்களில் நீ உன்னையே தாக்குவதற்கான ஒரு வலுவான தூண்டுதலை உணர்கிறாய், உன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இத்தகைய நேரங்களில், உன் இருதயத்தில் நீ வருத்தத்தையும் துன்பத்தையும் உணர்கிறாய், ஆனால் இந்த உணர்வுகளை வெளிப்படுத்த உனக்கு வழியே இல்லை. இது பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையாகும், ஆனால் ஜீவனை நாடுபவர்களால் மட்டுமே அதை அடைய முடியும். தேவன் உன் மீது பெரிதான அன்பு வைத்திருப்பதை நீ உணர்கிறாய், உன்னிடம் ஒரு சிறப்பு வகையான உணர்வு உள்ளது. தெளிவாக ஜெபிப்பதற்கு உன்னிடம் வார்த்தைகள் இல்லை என்றாலும், தேவனுடைய அன்பு சமுத்திரத்தைப் போல ஆழமானது என்பதை நீ எப்போதும் உணர்கிறாய். இந்நிலையை வெளிப்படுத்த பொருத்தமான வார்த்தைகள் ஏதுமில்லை, இது பெரும்பாலும் ஆவிக்குள் தோன்றும் ஒரு நிலையாகும். ஒருவருடைய இருதயத்தில் ஒருவரை தேவனை நெருங்கி வர வைப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்வகையான ஜெபமும் ஐக்கியமும் இயல்பானதாகும்.
ஜனங்கள் ஆராயவும் தேடவும் வேண்டிய காலம் இப்போது கடந்துவிட்ட போதிலும், அவர்கள் இனிமேல் ஜெபிக்கவும் தேடவும் வேண்டிய அவசியமில்லை என்று அதற்கு அர்த்தமல்ல, மேலும் கிரியை செய்வதற்கு முன் தேவனுடைய சித்தமானது தானாகவே வெளிப்படுவதற்கு ஜனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அர்த்தமல்ல; இவை வெறுமனே மனுஷனுடைய தவறான கருத்துக்களே. தேவன் மனுஷரோடு ஜீவிப்பதற்காகவும், அவர்களுடைய ஒளியாகவும், அவர்களுடைய ஜீவனாகவும், அவர்களுடைய வழியாகவும் இருப்பதற்காகவும் அவர்கள் நடுவே வந்திருக்கிறார்: இது ஓர் உண்மையாகும். நிச்சயமாகவே, தேவன் பூமிக்கு வருவதில், மனுக்குலம் அனுபவிப்பதற்கு அவர்களுடைய வளர்ச்சிக்குப் பொருத்தமான ஒரு நடைமுறை வழியையும் ஜீவனையும் அவர் நிச்சயமாகவே கொண்டுவருகிறார், அவர் மனுஷனுடைய நடைமுறை வழிகள் எல்லாவற்றையும் உடைக்க வரவில்லை. மனுஷன் இனிமேல் தடவிப் பார்த்தும் தேடியும் ஜீவிப்பதில்லை, ஏனென்றால் கிரியை செய்வதற்கும் அவருடைய வார்த்தையைப் பேசுவதற்கும் தேவன் பூமிக்கு வருவதால் இவை மாற்றப்பட்டுள்ளன. மனுஷன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தகாரம் மற்றும் தெளிவின்மை நிறைந்த ஜீவியத்திலிருந்து விடுவிப்பதற்காகவும், ஒளி நிறைந்த ஒரு ஜீவியம் ஜீவிக்க உதவுவதற்காகவும் அவர் வந்திருக்கிறார். காரியங்களை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதும், தெளிவாகப் பேசுவதும், நேரடியாகத் தெரிவிப்பதும் மற்றும் காரியங்களைத் தெளிவாக விவரிப்பதுமே தற்போதைய கிரியையாகும், இதனால் பலிகளை எவ்வாறு செலுத்த வேண்டும், ஆலயத்தை எவ்வாறு கட்ட வேண்டும் என்று இஸ்ரவேலரிடம் யேகோவா தேவன் சொல்லி அவர்களை வழிநடத்தியது போலவே ஜனங்களால் இந்த காரியங்களை நடைமுறைப்படுத்த முடியும். ஆகவே, கர்த்தராகிய இயேசு சென்ற பிறகு நீங்கள் செய்ததைப் போல நீங்கள் இனிமேல் வாஞ்சையோடு தேடும் ஒரு ஜீவியத்தை ஜீவிக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையின் மூலம் உங்கள் வழியை நீங்கள் உணர வேண்டுமா? ஜீவிப்பதற்கான சரியான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதைப் பற்றி நீங்கள் குழம்ப வேண்டுமா? உங்கள் சொந்தக் கடமைகளை நீங்கள் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள தடுமாற வேண்டுமா? நீங்கள் எவ்வாறு சாட்சிப் பகர வேண்டும் என்பதை அறிந்து, நீங்கள் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடப்பது அவசியமா? நீங்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும் அல்லது ஜீவிக்க வேண்டும் என்பதை அறிய நீங்கள் உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுவது அவசியமா? தேவனால் ஜெயங்கொள்ளப்படுவதை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள நீங்கள் பரலோகத்திலுள்ள தேவனிடம் இடைவிடாமல் ஜெபம் செய்வது அவசியமா? நீங்கள் தேவனுக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள, இரவு பகலாக இடைவிடாமல் ஜெபம் செய்வது அவசியமா? உங்களுக்குப் புரியவில்லை என்பதனால் உங்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று சொல்லும் பலர் உங்கள் நடுவே உள்ளனர். இன்றைய நாளில் தேவனுடைய கிரியையில் ஜனங்கள் கவனம் செலுத்துவதே இல்லை! நீண்ட காலத்திற்கு முன்பே நான் பல வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன், ஆனால் அவற்றை வாசிப்பதற்கு நீங்கள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை, ஆகவே எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது உனக்குத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. நிச்சயமாக, இன்றைய காலத்தில் ஜனங்களை இன்பத்தை உணர அனுமதிக்க பரிசுத்த ஆவியானவர் அவர்களை இன்னும் ஏவுகிறார், மேலும் அவர் மனுஷனுடன் சேர்ந்து ஜீவிக்கிறார். உன் ஜீவியத்தில் அடிக்கடி நிகழும் அந்த[அ] சிறப்பான, இன்பமான உணர்வுகளின் ஆதாரம் இதுதான். எப்போதாவது, தேவன் மிகவும் தயவுள்ளவர் என்றும், உன்னால் ஜெபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்றும் நீ நினைக்கும் ஒரு நாள் வரும்: “ஓ தேவனே! உமது அன்பு மிகவும் அழகானது உமது சாயல் மிகவும் மகத்துவமானது. உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க விரும்புகிறேன். என் ஆயுள் முழுவதையும் செலவிட என்னை முழுவதுமாக அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் உமக்காகச் சகலத்தையும் அர்ப்பணிப்பேன், அது உமக்காக இருக்கும் வரை, இதைச் செய்யும் வரை என்னால் உம்மை நேசிக்க முடியும்….” இது பரிசுத்த ஆவியானவரால் உனக்கு அளிக்கப்படும் ஓர் இன்பமான உணர்வாகும். இது அறிவூட்டுதலுமில்லை, இது வெளிச்சமும் இல்லை; இது ஏவப்படும் அனுபவமாகும். இதைப் போன்ற அனுபவங்கள் அவ்வப்போது உண்டாகும்: சில நேரங்களில் நீ உன் வேலைக்குப் போகிற வழியில், நீ ஜெபம் செய்து தேவனிடம் நெருங்கி வருவாய், மேலும் கண்ணீர் உன் முகத்தை ஈரமாக்கும் அளவிற்கு நீ ஏவப்படுவாய், நீ முழு சுய கட்டுப்பாட்டையும் இழப்பாய், மேலும் உன் இருதயத்திற்குள்ளிருக்கும் வாஞ்சை அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிக்க நீ ஆவலாய் இருப்பாய்…. நீ ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருக்கும் நேரங்கள் வரும், நீ தேவனுடைய அன்பை அதிகமாக அனுபவிப்பதாகவும், உன் அதிர்ஷ்டம் இயல்பானதே தவிர வேறு எதுவுமில்லை என்பதையும், வேறு யாரையும் விட அதிக அர்த்தமுள்ள ஜீவியத்தை ஜீவித்துக் கொண்டிருப்பதாகவும் உணருவாய். தேவன் உன்னை உயர்த்தியிருக்கிறார் என்பதையும், இது தேவன் உன் மீது வைத்த பெரிதான அன்பு என்பதையும் நீ ஆழமாக அறிந்துகொள்வாய். உன் இருதயத்தின் ஆழத்தில், தேவன் மீது உனக்கு விவரிக்க முடியாத மற்றும் மனுஷனால் புரிந்துகொள்ள முடியாத ஒருவிதமான அன்பு இருப்பதை நீ உணருவாய், உனக்குத் தெரிந்தாலும் அதை விவரிக்க வழியில்லை என்பது போல, எப்போதும் சிந்தனையில் உனக்குச் சிறிது ஓய்வு கொடுக்கிறது, ஆனால் உன்னை அதை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போகச் செய்கிறது. இது போன்ற நேரங்களில், நீ எங்கே இருக்கிறாய் என்பதைக் கூட மறந்துவிடுவாய், நீ இவ்வாறு கதறுவாய்: “ஓ தேவனே! நீர் மிகவும் புரிந்துகொள்ள முடியாதவர், மிகவும் பிரியமானவர்!” இது ஜனங்களை குழப்பத்தில் ஆழ்த்தும், ஆனால் இதுபோன்ற காரியங்கள் எல்லாம் அடிக்கடி நிகழ்கின்றன. நீங்கள் பல முறை இவ்வகையான காரியங்களை அனுபவித்திருக்கிறீர்கள். இதுதான் பரிசுத்த ஆவியானவர் இன்று உனக்குக் கொடுத்த ஜீவியமும் நீ இப்போது ஜீவிக்க வேண்டிய ஜீவியமும் ஆகும். இது உன்னை ஜீவிப்பதிலிருந்து தடுப்பதில்லை, மாறாக உன் ஜீவிய முறையை மாற்றுகிறது. இது விவரிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ முடியாத ஓர் உணர்வாகும். இது மனுஷனுடைய உண்மையான உணர்வுமாக இருக்கிறது, அதைவிட பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாக இருக்கிறது. நீ அதை உன் இருதயத்தில் புரிந்துகொள்ளலாம், ஆனால் நீ அதை யாரிடமும் தெளிவாக வெளிப்படுத்த உனக்கு வழியே கிடையாது. இதற்கான காரணம் நீ மெதுவாகப் பேசுவதனாலோ அல்லது நீ திக்கிப்பேசுதனாலோ அல்ல, ஆனால் இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு வகையான உணர்வாக இருப்பதே காரணம். நீ இன்று இந்தக் காரியங்களை அனுபவிக்க அனுமதிக்கப்படுகிறாய், இதுதான் நீ ஜீவிக்க வேண்டிய ஜீவியமாகும். நிச்சயமாக, உன் ஜீவியத்தின் பிற அம்சங்கள் வெறுமையாக இல்லை. ஏவப்படுகிற இந்த அனுபவம் உன் ஜீவியத்தில் ஒருவிதக் களிப்பாக மாறும், இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிற இதுபோன்ற அனுபவங்களை அனுபவிக்க உன்னை எப்போதும் தயாராக்குகிறது. ஆனால் இவ்விதமாக ஏவப்படுவது நடக்காது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும், இதனால் நீ மாம்சத்தை மீறி மூன்றாம் வானத்திற்குச் செல்லலாம் அல்லது உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். மாறாக, நீ இன்று அனுபவிக்கும் தேவனுடைய அன்பை உணர்ந்து, ருசிக்கும்படி, தேவனுடைய இன்றைய கிரியையின் முக்கியத்துவத்தை அனுபவிக்கும்படி, மேலும் தேவனுடைய பராமரிப்பு மற்றும் பாதுகாப்போடு மீண்டும் உன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும்படி நடக்கும். இந்தக் காரியங்கள் எல்லாமே இன்று தேவன் செய்யும் கிரியையைப் பற்றி நீ அதிக அறிவைப் பெறும் விதத்தில் உள்ளன, இதுவே இந்தக் கிரியையைச் செய்வதில் தேவனுடைய குறிக்கோளாகும்.
தேடுவதும் தடவிப் பார்ப்பதும் தேவன் மாம்சமாவதற்கு முந்தைய ஜீவிய முறையாக இருந்தது. அந்த நேரத்தில் ஜனங்களால் தேவனைப் பார்க்க முடியவில்லை, ஆகவே தேடுவதையும் தடவிப் பார்ப்பதையும் தவிர வேறு வழியில்லை. இன்று நீ தேவனைக் கண்டிருக்கிறாய், நீ எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதை அவர் நேரடியாகவே உன்னிடம் சொல்கிறார்; இதனால்தான் நீ இனிமேல் தடவிப் பார்க்க வேண்டியதோ அல்லது தேட வேண்டியதோ இல்லை. அவர் மனுஷனை வழிநடத்தும் பாதை சத்தியத்தின் பாதையாகும், அவர் மனுஷனிடம் சொல்லும் காரியங்கள் மற்றும் மனுஷன் பெறும் காரியங்கள் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கின்றன. உன்னிடம் வழியும் ஜீவனும் சத்தியமும் உள்ளது, ஆகவே எல்லா இடங்களிலும் தேடுவவதற்கு என்ன தேவை? பரிசுத்த ஆவியானவர் ஒரே நேரத்தில் இரண்டு கட்ட கிரியைகளைச் செய்ய மாட்டார். நான் என் வார்த்தையைப் பேசி முடித்ததும், ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கவனமாக புசித்துப் பானம்பண்ணுவதில்லை, சத்தியத்தைச் சரியாகப் பின்பற்றுவதில்லை, இன்னும் கிருபையின் காலத்தில் செய்ததைப் போலவே செயல்படுகின்றனர், அவர்கள் குருடர்களைப் போல தடவிப் பார்க்கின்றனர், இடைவிடாமல் ஜெபம் செய்கின்றனர், தேடுகின்றனர், எனது இந்தக் கட்ட கிரியை, அதாவது வார்த்தைகளின் கிரியை வீணாக செய்யப்படுகிறது என்று அர்த்தமல்லவா? நான் என் வார்த்தையைப் பேசுவதை முடித்திருந்தாலும், ஜனங்களுக்கு இன்னும் முழுமையாகப் புரியவில்லை, ஏனென்றால் அவர்கள் திறனில் குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர். திருச்சபை ஜீவியத்தை ஜீவிப்பதன் மூலமும் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்வதன் மூலமும் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம். இதற்கு முன்பு, கிருபையின் காலத்தில், தேவன் மாம்சமாகியிருந்தாலும், அவர் வார்த்தைகளின் கிரியையைச் செய்யவில்லை, அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் கிரியையைத் தொடர்ந்து செய்ய அந்தக் கிரியையை அவ்விதமாகச் செய்தார். அந்த நேரத்தில் முக்கியமாகப் பரிசுத்த ஆவியானவர்தான் அந்தக் கிரியையைச் செய்தார், ஆனால் இப்போது மாம்சமான தேவனே அதைச் செய்கிறார், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் இடத்தைப் பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு, ஜனங்கள் அடிக்கடி ஜெபம் செய்தவரை, அவர்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்தனர், கடிந்துகொள்ளுதலும் அத்துடன் சிட்சையும் இருந்தது. இவையெல்லாம்தான் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாக இருந்தன. இப்போது இந்த நிலைகள் வழக்கமானவை அல்ல. பரிசுத்த ஆவியானவரால் எந்த ஒரு காலத்திலும் ஒரே வகையான கிரியையை மட்டுமே செய்ய முடியும். அவர் ஒரே நேரத்தில் இரண்டு வகையான கிரியைகளைச் செய்திருந்தால், மாம்சம் ஒரு வகையைச் செய்து, பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் மற்றொன்றைச் செய்திருந்தால், மாம்சம் சொன்னதைக் கருத்தில் கொள்ளாமல், ஆவியானவர் செய்ததை மட்டும் கருத்தில் கொண்டால், அப்போது கிறிஸ்துவிடம் பேசுவதற்கு எந்தச் சத்தியமும், வழியும் அல்லது ஜீவனும் இருக்காது. இது ஒரு சுய முரண்பாடாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரால் இது மாதிரியாகக் கிரியை செய்ய முடியுமா? தேவன் சர்வவல்லமையுள்ளவர், சகல ஞானமுள்ளவர், பரிசுத்தர், நீதியுள்ளவர், அவர் நிச்சயமாக எந்தத் தவறுகளையும் செய்வதில்லை.
ஜனங்களுடைய கடந்தகால அனுபவங்களில் பல வழிவிலகல்களும் தவறுகளும் காணப்பட்டன. சாதாரண மனிதத்தன்மையுடைய ஜனங்கள் கொண்டிருக்க அல்லது செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன, அல்லது மனுஷ ஜீவியத்தில் தவிர்க்க கடினமான தவறுகள் இருந்தன, இந்தக் காரியங்கள் மோசமாகக் கையாளப்பட்டபோது, ஜனங்கள் அதற்கான பொறுப்பை தேவன் மீது வைத்தனர். ஒரு சகோதரி இருந்தார், அவருடைய வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர். அவருடைய வேகவைத்த ரொட்டிகள் சரியாக வேகவில்லை, அதனால் அவர் நினைத்தார்: “இது அநேகமாக தேவனுடைய சிட்சையாக இருக்கலாம். தேவன் என் வீணான இருதயத்தை மீண்டும் கையாளுகிறார். என் இறுமாப்பு உண்மையில் மிகவும் வலுவானதாக இருக்கிறது.” உண்மையில், மனுஷனுடைய இயல்பான சிந்தனை முறையைப் பொறுத்தவரையில், விருந்தினர்கள் வரும்போது, நீங்கள் உற்சாகமடைந்து, விரைந்து செயல்படுகிறீர்கள், நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் ஒழுங்கற்று காணப்படுகிறீர்கள், ஆகவே நிச்சயமாகச் சோறு கருகிப் போகிறது அல்லது உணவுகள் அதிகமாக உப்பாகிப் போகுமோ போன்ற கதையாக இருக்கிறது. இது அதிகமாகக் கிரியை செய்வதிலிருந்து வருகிறது, ஆனால் ஜனங்கள் அதை “தேவனுடைய சிட்சையுடன்” ஒப்பிடுவதுடன் முடிவுக்கு வருகின்றனர். உண்மையில், இவையெல்லாம் மனுஷ ஜீவியத்தில் செய்யப்படும் தவறுகள் மட்டுமேயாகும். நீ தேவனை நம்பவில்லை என்றால் நீயும் அடிக்கடி இவ்விதமான காரியங்களை எதிர்கொள்ள மாட்டாயா? நிகழும் பிரச்சனைகள் பெரும்பாலும் ஜனங்களால் செய்யப்படும் தவறுகளின் விளைவுகளாக இருக்கின்றன, இதுபோன்ற தவறுகள் பரிசுத்த ஆவியானவர் செய்பவையாக இல்லை. இதுபோன்ற தவறுகளுக்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாப்பிடும்போது உன் நாக்கைக் கடித்துவிடுகிறாய், அது தேவனுடைய சிட்சையாக இருக்க முடியுமா? தேவனுடைய சிட்சைக்குக் கொள்கைகள் உள்ளன, பொதுவாக நீ தெரிந்தே குற்றம் செய்யும்போது இது காணப்படுகிறது. தேவனுடைய நாமம் அல்லது அவருடைய சாட்சி அல்லது கிரியை தொடர்பான காரியங்களைச் செய்யும்போது மட்டுமே, அவர் உன்னைச் சிட்சிக்கிறார். ஜனங்கள் தாங்கள் செய்யும் காரியங்களைப் பற்றிய உள்ளார்ந்த விழிப்புணர்வைப் பெறுவதற்கு இப்போது போதுமான சத்தியத்தைப் புரிந்துகொள்கின்றனர். உதாரணமாக: நீ திருச்சபையின் பணத்தைக் கையாடல் செய்திருந்தால் அல்லது நீ பொறுப்பற்ற முறையில் அதைச் செலவு செய்திருந்தால் உன்னால் எதையும் உணராமல் இருப்பது சாத்தியமா? அதைச் செய்யும்போது நீ எதையாவது உணருவாய். செயல் செய்து முடித்தவுடன் மட்டும்தான் எதையாவது உணருவது நடக்கக்கூடியதில்லை. உன் மனச்சாட்சிக்கு விரோதமாக நீ செய்யும் காரியங்கள் குறித்து உன் இருதயத்தில் தெளிவாக இருக்கிறாய். ஜனங்கள் தங்கள் சொந்த விருப்பங்களையும் முன்னுரிமைகளையும் கொண்டிருப்பதனால், சத்தியத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும் அவர்கள் வெறுமனே தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு இருப்பதனால், அவர்கள் ஏதாவது செய்த பிறகு, அவர்கள் வெளிப்படையான கடிந்துகொள்ளுதலை உணருவதில்லை அல்லது வெளிப்படையான எந்த சிட்சைக்கும் உள்ளாவதில்லை. அவர்கள் தெரிந்தே ஒரு குற்றத்தைச் செய்திருப்பதால், தேவன் அவர்களை சிட்சிப்பதில்லை. நீதியான நீயாயத்தீர்ப்பின் நேரம் வந்ததும், ஒவ்வொருவர் மீதும் அவரவருடைய செய்கைகளுக்குத் தக்கதாக தேவனுடைய தண்டனை கொண்டுவரப்படும். திருச்சபையில் பணத்தைக் கையாடல் செய்பவர்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் தெளிவான எல்லைகளைப் பராமரிக்காதவர்கள் சிலரும் தற்போது உள்ளனர், மேலும் தேவனுடைய கிரியையை இரகசியமாக நியாயந்தீர்க்கும், எதிர்க்கும் மற்றும் அழிக்க முயற்சிக்கும் சிலர் உள்ளனர். எல்லாமே ஏன் இன்னும் அவர்களுக்கு நன்றாக இருக்கிறது? இதுபோன்ற காரியங்களைச் செய்யும்போது, அவர்கள் விழிப்புணர்வைக் கொண்டிருக்கின்றனர், இருதயத்தில் கடிந்துகொள்ளுதலை உணர்கின்றனர், இதன் காரணமாக அவர்கள் சில நேரங்களில் சிட்சையையும் சுத்திகரிப்பையும் அனுபவிக்கின்றனர், ஆனால் அவர்கள் மிகவும்வெட்கமற்றிருக்கிறார்கள்! ஜனங்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபடுவதைப் போலவே, அந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர், ஆனால்அவர்களுடைய இச்சை மிகப் பெரியது, அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அவர்களைச் சிட்சித்தாலும், அது பிரயோஜனமில்லை, ஆகவே பரிசுத்த ஆவியானவர் சிட்சையை அளிக்க மாட்டார். பரிசுத்த ஆவியானவர் அப்போது அவர்களைச் சிட்சிக்கவில்லை என்றால், அவர்கள் எந்தக் கடிந்துகொள்ளுதலையும் உணராமல், அவர்களுடைய மாம்சத்திற்கு எதுவும் நடக்கவில்லை என்றால், அதன் பிறகு என்ன கடிந்துகொள்ளுதல் இருக்க முடியும்? செயல் முடிந்துவிட்டது, அங்கே என்ன சிட்சை இருக்க முடியும்? அவர்கள் மிகவும் வெட்கமில்லாதவர்கள் மற்றும் மனிதத்தன்மை இல்லாதவர்கள் என்பதையும், அவர்கள் சாபங்களுக்கும் தண்டனைக்கும் தகுதியானவர்கள் என்பதையும் மட்டுமே இது நிரூபிக்கிறது! பரிசுத்த ஆவியானவர் தேவையில்லாமல் கிரியை செய்வதில்லை. நீ சத்தியத்தை நன்கு அறிந்திருக்கிறாய், ஆனால் அதைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், நீ எந்தத்தீமையைச் செய்யும் திறனுள்ளவனாக இருந்தால், அப்போது பொல்லாதவனோடு சேர்ந்து நீயும் தண்டிக்கப்படும் நாள் வருவதற்காகத்தான் நீ காத்திருக்க வேண்டியிருக்கும். இதுவே உனக்கான சிறந்த முடிவாகும்! இப்போது நான் மனச்சாட்சியைப் பற்றி மீண்டும் மீண்டும் பிரசங்கித்திருக்கிறேன், இது குறைந்தபட்ச அளவுகோலாகும். ஜனங்களிடம் மனச்சாட்சி இல்லையென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய சிட்சையை இழந்திருக்கின்றனர், அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யலாம், தேவன் அவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. உண்மையிலேயே மனச்சாட்சியும் பகுத்தறிவும் உள்ளவர்கள் ஏதாவது தவறு செய்யும்போது அதை அறிந்திருப்பார்கள். அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியில் ஒரு சிறிய கடிந்துகொள்ளுதலை உணர்ந்ததும் அவர்கள் மன அமைதியின்மையை உணருவார்கள். அவர்கள் ஒரு மனப் போராட்டத்துக்கு ஆளாகி இறுதியில் மாம்சத்தைக் கைவிடுவார்கள். தேவனை மிகவும் கடுமையாக எதிர்க்கும் ஒன்றை அவர்கள் செய்யும் இடத்தை அவர்கள் அடைய மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஒழுங்குபடுத்துகிறார், சிட்சிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லா ஜனங்களும் ஏதாவது தவறு செய்யும் போது அவர்கள் ஒருவித உணர்வைக் கொண்டிருப்பார்கள். ஆகவே, ஜனங்கள் இப்போது எல்லா வகையான சத்தியங்களையும் புரிந்துகொள்கின்றனர், அவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அப்போது அது ஒரு மனிதப் பிரச்சினையாக இருக்கிறது. இதுபோன்றவர்களிடம் நான் எதிர்வினையாற்றுவதே கிடையாது, அவர்கள் மீது நான் நம்பிக்கையையும் வைத்திருப்பதில்லை. நீ விரும்புகிறபடி நீ செய்யலாம்!
சிலர் ஒன்றாகக் கூடும்போது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஒரு பக்கமாக வைத்து, இந்த நபர் அல்லது அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக நீ சற்று பகுத்தறிவுடன் இருப்பது நல்லது, ஆகவே நீ எங்கு சென்றாலும் நீ எளிதில் வஞ்சிக்கப்பட மாட்டாய், அல்லது எளிதில் ஏமாற்றப்பட மாட்டாய் அல்லது முட்டாளாக்கப்படமாட்டாய், இதுவும் ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய ஓர் அம்சமாகும். ஆனால் நீ இந்த அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது. இது காரியங்களின் எதிர்மறையான பக்கத்துடன் தொடர்புடையது, மேலும் நீ உன் கண்களை எப்போதும் மற்றவர்கள் மீது வைத்திருக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பற்றி இப்போது உனக்கு மிகக் குறைவான அறிவு உள்ளது, தேவன் மீதான உன் நம்பிக்கை மிகவும் மேலோட்டமானதாக இருக்கிறது, மேலும் உன்னிடம் மிகக் குறைவான நேர்மறையான காரியங்களே உள்ளன. நீ நம்புகிறவர் தேவன், நீ புரிந்துகொள்ள வேண்டியவர் தேவன், சாத்தான் அல்ல. சாத்தான் எவ்வாறு கிரியை செய்கிறான் என்பதையும், பொல்லாத ஆவிகள் கிரியை செய்யும் எல்லா வழிகளையும் நீ அடையாளங்கண்டு, தேவனைப் பற்றி எந்த அறிவும் இல்லை என்றால், அதில் என்ன பிரயோஜனம்? இன்று நீ நம்புவது தேவனை இல்லையா? உன் அறிவு ஏன் இந்த நேர்மறையான காரியங்களைக் கொண்டிருக்கவில்லை? பிரவேசித்தலின் நேர்மறையான அம்சத்திற்கு நீ கவனம் செலுத்துவதே இல்லை, அல்லது அதைப் பற்றிய ஒரு புரிதலும் உனக்கு இல்லை, ஆகவே பூமியில் உன் விசுவாசத்தில் நீ எதைப் பெற விரும்புகிறாய்? நீ எவ்வாறு பின்தொடர வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லையா? எதிர்மறை அம்சங்களைப் பற்றி உனக்கு நிறைய தெரியும், ஆனால் பிரவேசித்தலின் நேர்மறையான அம்சத்தில் நீ ஒரு வெறுமையைப் பெறுகிறாய், ஆகையால் உன் அந்தஸ்து எப்படி தொடர்ந்து பெருக முடியும்? சாத்தானுடனான யுத்தத்தைத் தவிர வேறொன்றையும் பேசாத உன்னைப் போன்ற ஒருவனுக்கு வளர்ச்சிக்கான என்ன எதிர்கால வாய்ப்புகள் இருக்கும்? உன் பிரவேசம் மிகவும் காலாவதியானதாக இல்லையா? இதைச் செய்வதன் மூலம் தற்போதைய கிரியையிலிருந்து உன்னால் எதைப் பெற முடியும்? இப்போது முக்கியமானது என்னவென்றால் தேவன் இப்போது என்ன செய்ய விரும்புகிறார், மனுஷன் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும், அவர்கள் எவ்வாறு தேவனை நேசிக்க வேண்டும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும், தேவன் இன்று சொல்லும் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அவர்கள் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும், அவற்றை அவர்கள் எவ்வாறு புசித்துப் பானம்பண்ண வேண்டும், அனுபவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், அவர்கள் தேவனுடைய சித்தத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், தேவனால் முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டு தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிய வேண்டும் ஆகிய இவைகளைப் புரிந்து கொள்வதே ஆகும்…. இவைதான் நீ கவனம் செலுத்த வேண்டியவை, இவற்றுக்குள் தான் இப்போது பிரவேசிக்க வேண்டும். உனக்குப் புரிகிறதா? அடுத்தவர்களுடைய பகுத்தறிவில் மட்டுமே கவனம் செலுத்துவதால் என்ன பிரயோஜனம்? நீ இங்கே சாத்தானைப் புரிந்துகொள்ளலாம், அங்கே பொல்லாத ஆவிகளைப் புரிந்துகொள்ளலாம், பொல்லாத ஆவிகளைக் குறித்த ஒரு முழுமையான புரிதலை நீ கொண்டிருக்கலாம், ஆனால் தேவனுடைய கிரியையைப் பற்றி உன்னால் எதுவும் சொல்ல முடியவில்லை என்றால், இத்தகைய பகுத்தறிவு தேவனைப் புரிந்துகொள்வதற்கு மாற்றாகச் செயல்பட முடியுமா? பொல்லாத ஆவிகளுடைய கிரியையின் வெளிப்பாடுகள் குறித்து நான் முன்பு ஐக்கியப்பட்டிருக்கிறேன், ஆனால் இது அதன் பெரும்பகுதி அல்ல. நிச்சயமாகவே ஜனங்களுக்குக் கொஞ்சம் பகுத்தறிவு இருக்க வேண்டும், இது மதியீனமான செயல்களைச் செய்வதையும், தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்வதையும் தவிர்ப்பதற்காக தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் கொண்டிருக்க வேண்டிய ஓர் அம்சமாகும். ஆனாலும், மிகவும் முக்கியமான காரியமானது தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதிலும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதிலும் உள்ளது. தேவனுடைய இந்தக் கட்ட கிரியைப் பற்றிய என்ன அறிவு உனக்குள் இருக்கிறது? தேவன் என்ன செய்கிறார், தேவனுடைய சித்தம் என்ன, உன் சொந்தக் குறைபாடுகள் என்ன, நீ என்னென்ன காரியங்களால் உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பவற்றைப் பற்றி உன்னால் பேச முடியுமா? உன் புதிய பிரவேசம் என்ன என்பதை உன்னால் சொல்ல முடியுமா? புதிய பிரவேசித்தலில் உன்னால் பலனை அறுவடை செய்யவும் புரிதலை அடையவும் முடிய வேண்டும். குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்; உன் சொந்த அனுபவத்தையும் அறிவையும் ஆழப்படுத்த புதிய பிரவேசத்தலில் நீ அதிக முயற்சி எடுக்க வேண்டும், மேலும் தற்போதைய புதிய பிரவேசங்களைப் பற்றிய ஒரு புரிதலையும், மிகவும் சரியான அனுபவிக்கும் முறையையும் நீ இன்னும் அதிகமாகப் பெற வேண்டும். மேலும் என்னவென்றால், புதிய கிரியை மற்றும் புதிய பிரவேசங்கள் மூலம், உன் முந்தைய காலாவதியான மற்றும் வழிவிலகிய நடைமுறைகள் குறித்தப் பகுத்தறிவை நீ கொண்டிருக்கவும், மேலும் புதிய அனுபவங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதை நாடவும் வேண்டும். இவைதான் நீ இப்போது அவசரமாக புரிந்துகொண்டு பிரவேசிக்க வேண்டிய காரியங்களாகும். பழைய மற்றும் புதிய பிரவேசங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் தொடர்பையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீ முன்னேறுவதற்கு எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு உன்னால் ஈடுகொடுக்க முடியாது. உன்னால் தேவனுடைய வார்த்தையையும் இயல்பான ஐக்கியத்தையும் இயல்பாகப் புசித்துப் பானம்பண்ணவும், உன் முந்தைய காலாவதியான நடைமுறை வழிகளையும் உன் பழைய பாரம்பரியக் கருத்துகளையும் மாற்ற அவற்றைப் பயன்படுத்தவும் இயல வேண்டும், இதனால் நீ ஒரு புதிய பயிற்சிக்குள் பிரவேசித்து, தேவனுடைய புதிய கிரியைக்குள் பிரவேசிக்கலாம். இவைதான் நீ அடைய வேண்டியவையாகும். நீ தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கிறாயா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நான் இப்போது உன்னிடம் கேட்கவில்லை, இது குறிக்கோள் அல்ல. மாறாக, சத்தியத்தைப் பற்றிய உன் நடைமுறைப்படுத்தலையும் ஜீவனுக்குள் பிரவேசிப்பதைப் பற்றிய உன் புரிதலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னை நீயே அறிந்துகொள்ளும் திறன் என்பது உன்னுடைய உண்மையான வளர்ச்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. உன்னால் தேவனுடைய கிரியையை அனுபவிக்க முடிந்தால், தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்ற அனுபவத்தையும் புரிதலையும் கொண்டிருந்தால், உன் முந்தைய தனிப்பட்ட கருத்துக்களையும் தவறுகளையும் அறிந்துகொள்ள முடிந்தால், அப்போது அதுதான் உன் உண்மையான வளர்ச்சியாகவும், ஒவ்வொருவரும் அடையக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
நீ நடைமுறைப்படுத்தத் தெரியாத பல சூழ்நிலைகள் உள்ளன, மேலும் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதும்கூட உனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் பரிசுத்த ஆவியானவருக்கு நிச்சயமாகக் கீழ்ப்படியாத எதையோ நீ செய்கிறாய். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதன் மூலம், இந்த விஷயத்தில் நீ ஏற்கனவே கொள்கையைக் குறித்த ஒரு புரிதலைக் கொண்டிருக்கிறாய், அதனால் கடிந்துகொள்ளுதல் மற்றும் அமைதியின்மையான ஓர் உள் உணர்வைக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக இது கொஞ்சம் சத்தியத்தை தெரிந்துகொள்வதன் கீழ் மட்டுமே ஒருவர் உணரும் ஓர் உணர்வாக இருக்கிறது. தேவனுடைய இன்றைய வார்த்தையின்படி ஜனங்கள் ஒத்துழைக்கவோ அல்லது நடக்கவோ இல்லை என்றால், அப்போது அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு செய்கின்றனர் மற்றும் அவர்கள் நிச்சயமாகத் தங்களுக்குள் அமைதியின்மையை உணருவார்கள். ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் கொள்கையை நீ புரிந்துகொண்டு, ஆனால் அதற்கேற்ப நடக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், அதனால் நீ உனக்குள் கடிந்துகொள்ளுதல் உணர்வை அனுபவிப்பாய். நீ கொள்கையைப் புரிந்துகொள்ளவில்லை மற்றும் சத்தியத்தின் இந்த அம்சத்தை சிறிதும் அறிந்துகொள்ளவில்லை என்றால், இந்த விஷயத்தில் நீ தேவையில்லாமல் ஒரு கடிந்துகொள்ளுதல் உணர்வை உணர வேண்டியதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய கடிந்துகொள்ளுதல் எப்போதும் சூழலைப் பொறுத்தது. நீ ஜெபம் செய்யாததனால், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையுடன் ஒத்துழைக்காததனால், நீ கிரியையை தாமதப்படுத்திவிட்டதாக நினைக்கிறாய். உண்மையில், அதைத் தாமதப்படுத்த முடியாது. பரிசுத்த ஆவியானவர் வேறொருவரை ஏவுவார், பரிசுத்த ஆவியானவருடைய கிரியை யாராலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நீ தேவனை ஏமாற்றிவிட்டதாக உணருகிறாய், இது உன் மனச்சாட்சியில் நீ கொண்டிருக்க வேண்டிய ஓர் உணர்வாகும். உன்னால் சத்தியத்தைப் பெற முடியுமா இல்லையா என்பது உன் சொந்த வேலை, இதற்கு தேவனோடு தொடர்பு கிடையாது. சில நேரங்களில் சொந்த மனச்சாட்சிதான் குற்றஞ்சாட்டப்பட்டதாய் உணருகிறது, ஆனால் இது பரிசுத்த ஆவியானவருடைய பிரகாசமோ அல்லது வெளிச்சமோ அல்ல, பரிசுத்த ஆவியானவருடைய கடிந்துகொள்ளுதலும் அல்ல. மாறாக இது மனித மனச்சாட்சிக்குள் ஓர் உணர்வாக இருக்கிறது. தேவனுடைய நாமம், தேவனுடைய சாட்சி அல்லது தேவனுடைய கிரியை தொடர்பான காரியங்களில் நீ விருப்பமில்லாமல் செயல்பட்டால், அப்போது தேவன் உன்னை விடமாட்டார். ஆனால் ஒரு வரம்பு உள்ளது, தேவன் பொதுவாக சிறிய காரியங்களில் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார். அவர் உன்னைப் புறக்கணிப்பார். நீ கொள்கைகளை மீறி, தேவனுடைய கிரியையைச் சீர்குலைத்து, தொந்தரவு செய்தால், அவர் உன் மீது தமது கடுங்கோபத்தைக் கட்டவிழ்த்துவிடுவார், உன்னை நிச்சயமாக விடமாட்டார். நீ செய்யும் சில தவறுகள் மனித ஜீவியத்தின் பாதையில் தவிர்க்க முடியாதவையாகும். உதாரணமாக, நீ உன் ரொட்டிகளை சரியான முறையில் வேக வைக்காமல், தேவன் உன்னை சிட்சிப்பதாகச் சொல்கிறாய், இப்படிச் சொல்வது முற்றிலும் நியாயமில்லாதது. நீ தேவனை நம்புவதற்கு முன்பு, இவ்வகையான காரியங்கள் அடிக்கடி நிகழவில்லையா? இது பரிசுத்த ஆவியானவருடைய சிட்சை என்று நீ எண்ணுகிறாய், ஆனால் உண்மையில் காரியம் (சில விதிவிலக்கான சூழ்நிலைகள் தவிர) இதுவல்ல, ஏனென்றால் இந்தக் கிரியை முற்றிலும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்ததல்ல, மாறாக மனித உணர்வுகளிலிருந்து வந்தது. ஆனாலும், விசுவாசமுள்ளவர்கள் இவ்விதங்களில் சிந்திப்பது இயல்பானதுதான். நீ தேவனை நம்பாதபோது உன்னால் இப்படி சிந்தித்திருக்க முடியாது. நீ தேவனை நம்பியதும், நீ இந்த காரியங்களைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிட ஆரம்பிக்கிறாய், ஆகவே நீ இயல்பாகவே இவ்விதங்களில் சிந்திக்கிறாய். இது சாதாரண ஜனங்களுடைய சிந்தனையிலிருந்து எழுகிறது, இது அவர்களுடைய மனநிலையுடன் தொடர்புடையது. ஆனால் நான் உனக்குச் சொல்கிறேன், இதுபோன்ற சிந்தனை பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் எல்லைக்குள் இல்லை. இது பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய சிந்தனைகளின் மூலமாக அவர்களுக்கு ஒரு சாதாரண எதிர்வினையைக் கொடுப்பதற்கான ஓர் உதாரணமாகும், ஆனால் இந்த எதிர்வினை பரிசுத்த ஆவியானவருடையது அல்ல என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். இவ்வகையான “அறிவைக்” கொண்டிருப்பது உன்னிடம் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை உள்ளது என்பதை நிரூபிக்காது. உன் அறிவு பரிசுத்த ஆவியானவருடைய அறிவூட்டுதலில் இருந்து வருவதில்லை, இது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையும் அல்ல. இது வெறுமனே சாதாரண மனித சிந்தனையில் உற்பத்தியானதாக இருக்கிறது, இதற்கு பரிசுத்த ஆவியானவருடைய பிரகாசத்துடனோ அல்லது வெளிச்சத்துடனோ முற்றிலும் எந்தத் தொடர்பும் இல்லை, இவை ஆணித்தரமாக வேறுபட்ட நிகழ்வுகளாகும். இத்தகைய சாதாரண மனிதச் சிந்தனை முற்றிலும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வருவதில்லை. பரிசுத்த ஆவியானவர் ஜனங்கங்களைப் பிரகாசமாக்கக் கிரியை செய்யும்போது, அவர் அவர்களுக்குப் பொதுவாக தேவனுடைய கிரியை மற்றும் அவர்களுடைய உண்மையான பிரவேசம் மற்றும் உண்மையான நிலை பற்றிய அறிவைக் கொடுக்கிறார். தேவனுடைய அவசர நோக்கங்களையும், இன்று மனுஷனுக்கான அவருடைய தேவைகளையும் புரிந்துகொள்ள அவர் அவர்களை அனுமதிக்கிறார், இதனால் தேவனைத் திருப்திப்படுத்த எல்லாவற்றையும் தியாகம் செய்வதற்கும், துன்புறுத்தல் மற்றும் துன்பங்களைச் சந்தித்தாலும் தேவனை நேசிப்பதற்கும், தங்கள் இரத்தத்தைச் சிந்துவதாக இருந்தாலும் அல்லது தங்கள் ஜீவனையே விடுவதாக இருந்தாலும், வருத்தமில்லாமல் அவ்வாறு செய்வதனாலும் தேவனுக்குச் சாட்சியாக இருப்பதற்கு அவர்களிடம் மனவுறுதி உள்ளது. உன்னிடம் இவ்வகையான மனவுறுதி இருந்தால், உன்னிடம் பரிசுத்த ஆவியானவருடைய தூண்டுதல்களும் கிரியையும் உள்ளது என்று அர்த்தமாகும், ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் இதுபோன்ற தூண்டுதல்கள் உன்னிடம் இல்லை என்பதை அறிந்துகொள். சில நேரங்களில் கூட்டங்களில் நீ ஜெபித்து தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது, நீ மிகவும் ஏவப்பட்டவனாகவும், தூண்டப்பட்டவனாகவும் உணரலாம். மற்றவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த புரிதல் ஆகியவற்றைப் பற்றி சில ஐக்கியங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அது மிகவும் புதியதாகவும் புத்துணர்ச்சியாகவும் உணரப்படுகிறது, மேலும் உன் இருதயம் முற்றிலும் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது. இவையெல்லாம்தான் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாகும். நீ ஒரு தலைவனாக இருந்து, நீ ஊழியத்திற்காகத் திருச்சபைக்குச் செல்லும்போது பரிசுத்த ஆவியானவர் உனக்கு அசாதாரணமான பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் தந்து, திருச்சபைக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்த நுண்ணறிவை உனக்குத் தந்து, அவற்றைத் தீர்ப்பதற்கு சத்தியத்தைக் குறித்த ஐக்கியத்தைப் பகிர்ந்துகொள்வது எப்படி என்பதை அறிய உன்னை அனுமதித்து, உனது ஊழியத்தில் உன்னை நம்பமுடியாத வாஞ்சையுள்ளவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும், தீவிரமுள்ளவனாகவும் மாற்றினால், இவையெல்லாம் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாக இருக்கின்றன.
அடிக்குறிப்பு:
அ. மூல உரை “இவை சில” என்று கூறுகிறது.