அத்தியாயம் 108

எனக்குள், அனைவரும் இளைப்பாறுதலைக் கண்டடையலாம், அனைவரும் விடுதலையை அடையலாம். எனக்கு வெளியே இருப்பவர்கள் சுதந்திரத்தையும் பெறமுடியாது மகிழ்ச்சியையும் பெறமுடியாது, ஏனெனில் என் ஆவி அவர்களுக்குள் இல்லை. அத்தகையவர்கள் ஆவியற்று மரித்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அதேசமயம் எனக்குள் இருப்பவர்களை “ஆவியுடைய உயிரினங்கள்” என்று நான் அழைக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்கள், அவர்கள் ஏன் சிங்காசனத்திற்குத் திரும்ப வேண்டியவர்கள். பிசாசுக்கு ஊழியஞ்செய்பவர்களும், அவனுக்கு உரியவர்களும் ஆவியற்று மரித்தவர்களாவர், அவர்கள் அனைவரும் ஒழிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்படவேண்டும். இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஓர் இரகசியமாகும், இது மனுக்குலத்தால் புரிந்துகொள்ள இயலாத எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்; இருப்பினும், அதே சமயத்தில், நான் இதை அனைவருக்கும் பொதுவாக்கியுள்ளேன். எனக்குச் சொந்தமில்லாதவர்கள் எனக்கு எதிரானவர்கள்; எனக்கு உரியவர்கள் என்னுடன் ஒத்துப் போகிறார்கள். இது முற்றிலும் மறுக்கமுடியாததாகும், இது சாத்தானுக்குரிய எனது நியாயத்தீர்ப்பின் பின்னணியில் உள்ள கொள்கையாகும். என் நீதியையும் என் நியாயத்தையும் அவர்கள் பார்க்கத்தக்கதாய் இந்தக் கொள்கையானது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். சாத்தானிடமிருந்து வரும் ஒவ்வொருவரும் நியாயந்தீர்க்கப்பட்டு, சுட்டெரிக்கப்பட்டு, சாம்பலாக்கப்படுவார்கள். இதுவும்கூட, என்னுடைய கோபமாகும், இதிலிருந்து என் மனநிலை மேலும் தெளிவாகிறது. இப்போதிலிருந்து என் மனநிலை வெளிப்படையாக அறிவிக்கப்படும்; அது படிப்படியாக எல்லா ஜனங்களுக்கும், எல்லா தேசங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லாப் பிரிவுகளுக்கும் மற்றும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வெளிப்படுத்தப்படும். எதுவும் மறைக்கப்படாது; அனைத்தும் வெளிப்படுத்தப்படும். ஏனென்றால் என் மனநிலையும் என் செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கையும் மனிதகுலத்திற்கு மிகவும் மறைக்கப்பட்ட இரகசியங்களாக இருப்பதால், (முதற்பேறான என் குமாரர்கள் எனது நிர்வாக ஆணைகளை மீறாமலிருக்கவும், மேலும் எனது வெளிப்படுத்தப்பட்ட மனநிலையை எல்லா ஜனங்களையும் தேசங்களையும் நியாயந்தீர்க்கப் பயன்படுத்தவும்) நான் இதைச் செய்ய வேண்டும். இது எனது நிர்வாகத் திட்டமாகும், இவை எனது கிரியையின் படிகளாகும். ஒருவராலும் அதை எளிதில் மாற்ற முடியாது. நான் ஏற்கனவே என் தேவத்துவத்தின் முழுமையான மனநிலையை என் மனிதத்தன்மைக்குள் வாழ்ந்து முடித்து விட்டதால், என் மனிதத்தன்மையை ஒருவரும் அவமதிக்க நான் அனுமதிப்பதில்லை. (நான் வாழும் அனைத்தும் தேவத்துவமான மனப்பான்மையாகும்; சாதாரண மனிதத்துவத்தைத் தாண்டிய தேவன் நான்தான் என்று நான் முன்பு கூறியற்கான காரணம் இதுதான்.) என்னை அவமதிக்கும் எவரையும் நான் நிச்சயமாக மன்னிக்க மாட்டேன், அவனை நித்தியமாக அழியும்படி விட்டுவிடுவேன். நினைவில் கொள்ளுங்கள்! இதைத்தான் நான் முடிவு செய்துள்ளேன்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது எனது நிர்வாக ஆணைகளின் இன்றியமையாத பகுதியாகும். எல்லோரும் இதைப் பார்க்க வேண்டும்: நான் இருக்கிறவராகிய தேவன், மேலும், நானே தேவனானவர். இது இப்போது தெளிவாக இருக்க வேண்டும்! நான் கவனக்குறைவாக எதுவும் சொல்வதில்லை. நீ ஒரு முழுமையான புரிதலைப் பெறும்வரை நான் எல்லாவற்றையும் தெளிவாகச் சுட்டிக்காட்டிப் பேசுகிறேன்.

நிலைமை மிகவும் பதட்டமாயிருக்கிறது; என் வீட்டில் மட்டுமல்ல, அதைவிட, என் வீட்டிற்கு வெளியே, என் நாமத்திற்கு நீங்கள் சாட்சியாக இருக்க வேண்டும், என்னைப் போல வாழ வேண்டும், எல்லா அம்சங்களிலும் எனக்கு சாட்சியாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இவை கடைசி காலங்களானதால், அனைத்தும் இப்போது தயாராக உள்ளன, எல்லாமே அதன் உண்மையான தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன, இதில் ஒன்றும் எப்போதும் மாறாது. தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் தூக்கி எறியப்படுவார்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். வலுக்கட்டாயமாகப் பிடித்து வைக்கவோ அல்லது தள்ளிவிடவோ முயற்சிக்காதீர்கள்; எனது நிர்வாகத்தை இடையூறு செய்யவோ அல்லது எனது திட்டத்தை அழிக்கவோ முயற்சிக்க வேண்டாம். ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து, நான் எப்போதும் மனுக்குலத்தை நேசிப்பவராக, அவர்களிடத்தில் இரக்கம் உள்ளவராக இருக்கிறேன், ஆனால் எனது கண்ணோட்டத்தில் என் மனநிலையானது எனது கிரியையின் கட்டங்களுக்கு ஏற்ப வேறுபடுத்தப்பட்டுள்ளது, ஏனென்றால், நானே நடைமுறை தேவனானவர்; நானே தனித்துவமான தேவனானவர்! நான் மாற்ற முடியாதவர் மற்றும் எப்போதும் மாறாதவர்! இது யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். அதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்லி, அதை உங்களுக்கு விளக்கும்போது மட்டுமே நீங்கள் அதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்று, அதை கிரகித்துக் கொள்ள முடியும். என் குமாரர்களுக்கு நான் அன்புள்ளவராக, இரக்கமுள்ளவராக, நீதியுள்ளவராக, ஒழுக்கமுள்ளவராக இருப்பேன், ஆனால் நியாயத்தீர்ப்பளிப்பவராக இருக்க மாட்டேன் (இதன்மூலம், நான் என் முதற்பேறான குமாரர்களை அழிக்க மாட்டேன் என்று நான் சொல்கிறேன்). என் குமாரர்களைத் தவிர மற்றவர்களுக்கு, காலங்களின் மாற்றத்தைப் பொறுத்து நான் எந்த நேரத்திலும் மாறுகிறேன்: நான் அன்பானவராக, இரக்கமுள்ளவராக, நீதியுள்ளவராக, மகத்துவமுள்ளவராக, நியாயத்தீர்ப்பளிப்பவராக, கோபமுள்ளவராக, சபிக்கிறவராக, பட்சிக்கிற அக்கினியாக மற்றும் இறுதியாக அவர்களின் மாம்சத்தை அழிப்பவராக இருக்க முடியும். அவரால் அழிக்கப்படுபவர்கள் தங்கள் ஆவிகள் மற்றும் ஆத்துமாக்களுடன் சேர்ந்து மடிந்து போவார்கள். இருப்பினும், ஊழியஞ்செய்பவர்களுக்கு அவர்களின் ஆவிகள் மற்றும் ஆத்துமாக்கள் மட்டுமே தக்கவைக்கப்படும் (மேலும் இதை நான் எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருகிறேன் என்பதைக் குறித்த விவரங்களைப் பொறுத்தவரை, நீங்கள் புரிந்து கொள்வதற்காக நான் பிற்பாடு கூறுவேன்). இருப்பினும் அவர்களுக்கு ஒருபோதும் விடுதலை இருக்காது, விடுவிக்கப்படவுமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் என் ஜனங்களுக்குக் கீழாக இருக்கிறார்கள், என் ஜனங்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்கள். ஊழியஞ்செய்பவர்களை நான் மிகவும் வெறுக்கக் காரணம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினர் ஆவர், மற்றும் ஊழியஞ்செய்யாதவர்களும்கூட சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினராவர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதற்பேறான குமாரர்களல்லாத அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினராவர். நரகத்தில் உள்ளவர்கள் எனக்கு நித்தியத் துதியைத் தருகிறார்கள் என்று நான் கூறும்போது அவர்கள் என்றென்றும் எனக்கு ஊழியஞ்செய்வார்கள் என்று அர்த்தப்படுத்துகிறேன். இது மாற்ற முடியாததாகும். அந்த ஜனங்கள் இப்போதும் அடிமைகளாக, கால்நடைகளாக, குதிரைகளாக இருப்பார்கள். நான் அவர்களை எந்த நேரத்திலும் வெட்டிப்போட முடியும், நான் விரும்பியபடி அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியும், ஏனென்றால் அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினரும் எனது மனநிலையைக் கொண்டிராதவர்களுமாவர். மேலும் அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினர் என்பதால், அவர்கள் அதனுடைய மனநிலையைக் கொண்டுள்ளனர்; அதாவது, அவர்கள் மிருகங்களின் மனநிலையைக் கொண்டுள்ளார்கள். இது முற்றிலும் உண்மையாகும், மற்றும் நித்தியமாக மாறாததாகும்! ஏனென்றால், இவை எல்லாமே என்னால் முன்குறிக்கப்பட்டவையாகும். ஒருவரும் இதை மாற்ற முடியாது (அதாவது இந்தச் சட்டத்திற்கு விரோதமாக யாரையும் செயல்பட நான் அனுமதிக்க மாட்டேன்); நீ முயற்சித்தால், நான் உன்னைத் தாக்கிக் கீழே தள்ளி விடுவேன்.

எனது நிர்வாகத் திட்டமும் எனது கிரியையும் எந்த அடியை எட்டியுள்ளன என்பதைப் பார்க்க நான் வெளிப்படுத்திய இரகசியங்களை நீங்கள் நோக்கிப் பார்க்கவேண்டும். நான் என் கரங்களால் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், என் தீர்ப்புகளும் என் கோபமும் எந்த ஜனங்கள் மீது விழுகின்றன என்பதைப் பாருங்கள். இது என் நீதியாகும். நான் வெளிப்படுத்திய இரகசியங்களுக்கு ஏற்ப எனது கிரியையை முழுமையாக செய்கிறேன், எனது திட்டத்தை நிர்வகிக்கிறேன். இதை யாரும் மாற்ற முடியாது; அது என் விருப்பத்திற்கு ஏற்ப, படிப்படியாகச் செய்யப்பட வேண்டும். இரகசியங்களானது என் கிரியை செயல்படும் பாதையாகும், அவை எனது நிர்வாகத் திட்டத்தில் உள்ள படிகளைக் குறிக்கும் அறிகுறிகளாகும். என் இரகசியங்களிலிருந்து யாரும் எதையும் சேர்க்கவோ கழிக்கவோ கூடாது, ஏனென்றால் இரகசியம் தவறானால், பாதையும் தவறாகும். நான் ஏன் எனது இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்? காரணம் என்ன? உங்களில் யார் தெளிவாகச் சொல்ல முடியும்? கூடுதலாக, இரகசியங்களை, பாதை என்று நான் கூறியுள்ளேன், எனவே இந்தப் பாதை எதைக் குறிக்கிறது? அது நீங்கள் மாம்சத்திலிருந்து சரீரத்திற்குள் செல்லும் செயல்முறையாகும், இது ஒரு முக்கியமான கட்டமாகும். நான் எனது இரகசியங்களை வெளிப்படுத்திய பிறகு, ஜனங்களின் கருத்துக்கள் படிப்படியாக அகற்றப்பட்டு, அவர்களின் எண்ணங்கள் படிப்படியாக பலவீனமடைகின்றன. இதுவே ஆவிக்குரிய மண்டலத்திற்குள் நுழையும் செயல்முறையாகும். எனவே, எனது கிரியை படிப்படியாய் நடைபெறுகிறதென்று நான் சொல்கிறேன், அது தெளிவற்றதல்ல. இதுதான் உண்மை, இதுவே நான் கிரியை செய்யும் வழிமுறையாகும். ஒருவரும் இதை மாற்றவும் முடியாது, ஒருவராலும் இதை அடையவும் முடியாது, ஏனென்றால் நானே தனித்துவமான தேவனானவர்! எனது கிரியை என்னாலேயே செய்யப்படுகிறது. முழு பிரபஞ்ச உலகமும் என்னால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் என்னால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் சொல்வதை கேட்கத் துணியாதவன் யார்? (“என்னால் மட்டுமே” அதாவது, தேவனால் மட்டுமே: ஏனென்றால், நானே தேவன்—எனவே உங்கள் சொந்த கருத்துக்களை இறுக்கிப் பிடித்துக் கொள்ளாதீர்கள்.) எனக்கு எதிராய்ப் போக யாருக்கு தைரியம் உண்டு? அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விளைவை நீங்கள் பார்த்தீர்கள்! அதுவே அதன் முடிவு, ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வெட்கப்படும்படியாய் இந்தக் கிரியை என்னால் மட்டுமே செய்யப்பட வேண்டும். அது மீண்டும் ஒருபோதும் எழும்ப முடியாது, அது முழு நித்தியத்திற்கும் அழிக்கப்படும்! இப்போது நான் இரகசியங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளேன். (நினைவில் கொள்ளுங்கள்! வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களில் பெரும்பாலானவை நீங்கள் அடிக்கடி குரல் கொடுக்கும் விஷயங்களாகும், ஆனால் ஒருவரும் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை.) முடிக்கப்படாதவை என்று ஜனங்கள் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் என் பார்வையில் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன என்று நான் கூறினேன், வெறுமனே தொடக்கம் என்று நான் பார்க்கும் விஷயங்கள், ஜனங்களுக்கு ஏற்கனவே முடிக்கப்பட்டதாய்த் தோன்றுகிறது. இது முரண்பாடானதா? இல்லை. ஜனங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களையும் எண்ணங்களையும் கொண்டிருப்பதால் அப்படி நினைக்கின்றனர். நான் திட்டமிடும் விஷயங்கள் என் வார்த்தைகளின் மூலம் நிறைவடைகின்றன (நான் கூறும்போது அவை நிறுவப்படுகின்றன, நிறைவடைய நான் சொல்லும்போது அவை நிறைவடைகின்றன). இருப்பினும் நான் கூறிய காரியங்கள் நிறைவடைந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் நான் செய்யும் காரியங்களுக்கு நேர வரம்பு உள்ளது. ஆகவே, ஜனங்களின் மாம்சக் கண்களில் (அவர்களின் நேரத்தைக் குறித்த எண்ணங்களில் வேறுபாடுகள் இருப்பதால்) இந்த விஷயங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாய் இருந்தாலும், இந்தக் காரியங்கள் முழுமையடையாததாகவே நான் கருதுகிறேன். இப்போதெல்லாம் நான் வெளிப்படுத்தும் இரகசியங்களால் பெரும்பாலான ஜனங்கள் என்னைப் பற்றி சந்தேகிக்கிறார்கள். உண்மையின் தொடக்கத்தின் காரணமாகவும், எனது நோக்கங்கள் மக்களின் கருத்துக்களுடன் பொருந்தாததாலும் அவர்கள் என்னை எதிர்த்து, என்னை நிராகரிக்கிறார்கள். இது சாத்தான் தனது சொந்தத் திட்டங்களில் தன்னையே சிக்க வைக்கிறதாகும். (அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறார்கள், ஆனால் தேவன் தங்கள் சொந்தக் கருத்துக்களுக்கு இந்த அளவிற்கு பொருந்தாமல் இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை, அதனால் அவர்கள் பின்வாங்குகிறார்கள்.) இதுவும் எனது கிரியையின் விளைவாகும். எல்லா ஜனங்களும் என்னைத் துதித்து, என்னை ஆர்ப்பரித்து, எனக்கு மகிமை செலுத்த வேண்டும். எல்லாக் காரியங்களும் முற்றிலுமாக என் கரங்களில் உள்ளன, எல்லாமே முற்றிலுமாக என் தீர்ப்புக்குள் உள்ளன. எல்லா ஜனங்களும் என் பர்வதத்திற்கு ஓடும்போது, முதற்பேறான குமாரர்கள் ஜெயத்துடன் திரும்பும்போது, அது எனது நிர்வாகத் திட்டத்திற்கான இறுதிநிலையாக இருக்கும். அது எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்திற்கான நிறைவின் தருணமாக இருக்கும். எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்திற்கான நிறைவுத் தருணமாக அது இருக்கும். அனைத்தும் என்னாலே தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன; நான் இதை ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். நீங்கள் இன்னும் உங்கள் கருத்துக்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதால், என் திட்டத்திற்கு இடையூறாக எந்தத் தவறையும் நீங்கள் செய்யாதபடி, நான் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜனங்கள் எனக்கு உதவவும் முடியாது, என் நிர்வாகத்தில் அவர்கள் பங்கேற்கவும் முடியாது, ஏனென்றால் நீங்கள் இப்போதும் மாம்சம் மற்றும் இரத்தத்தையுடையவர்களாக இருக்கிறீர்கள் (நீங்கள் என்னைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் இன்னும் மாம்சத்தில் வாழ்கிறீர்கள்). அதன் காரணமாக, மாம்சமும் இரத்தமும் உள்ளவர்கள் என் சுதந்தரத்தைப் பெற முடியாது என்று நான் சொல்கிறேன். நீங்கள் ஆவிக்குரிய மண்டலத்திற்குள் நுழைய இதுவும் முக்கிய காரணமாகும்.

உலகில், பூகம்பங்கள் பேரழிவின் ஆரம்பமாகும். முதலாவதாக நான் உலகத்தை, அதாவது பூமியை மாற்றுகிறேன், பின்னர் வாதைகள் மற்றும் பஞ்சங்கள் வரும். இது எனது திட்டம், இவை எனது அடிகள், எனது நிர்வாகத் திட்டத்தை நிறைவு செய்வதற்காக என்னை சேவிக்க எல்லாவற்றையும் தயாராக்குகிறேன். இவ்வாறு எனது நேரடித் தலையீடு கூட இல்லாமல், முழு பிரபஞ்ச உலகமும் அழிக்கப்படும். நான் முதன்முதலில் மாம்சமாகி சிலுவையில் அறையப்பட்ட போது, பூமி பயங்கரமாக அதிர்ந்தது, முடிவு வரும் போதும் அப்படியே நடக்கும். நான் மாம்சத்திலிருந்து ஆவிக்குரிய மண்டலத்துக்குள் நுழைந்தவுடனேயே பூகம்பங்கள் தொடங்கும். இப்படி முதற்பேறான குமாரர்கள் பேரழிவால் நிச்சயமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள், அதேசமயம் முதற்பேறான குமாரர் அல்லாதவர்கள் பேரழிவுகளுக்கு மத்தியில் துன்பப்படும்படி விட்டுவிடப்படுவார்கள். எனவே, ஒரு மனிதக் கண்ணோட்டத்திலிருந்து, எல்லோரும் முதற்பேறான குமாரர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஜனங்களின் முன்னெச்சரிக்கை உணர்வுகளில், இது ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்காக அல்ல, மாறாக பேரழிவின் துன்பத்திலிருந்து தப்பிப்பதற்காகவே ஆகும். இதுவே சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் திட்டமாகும். இருப்பினும், நான் அதை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டேன்; நான் எனது கடுமையான தண்டனையை அது அனுபவிக்கும்படி செய்து, பின்னர் எழுந்து நின்று என்னை சேவிக்க வைப்பேன் (இது என் குமாரர்களையும் என் ஜனங்களையும் முழுமையாக்குவதைக் குறிக்கிறது), இதனால் அதனுடைய சொந்த சதித்திட்டங்களால் ஏமாற்றப்பட்டு, என் நியாயத்தீர்ப்பை எப்போதும் ஏற்றுக் கொண்டு, என்றென்றும் என்னால் சுட்டெரிக்கப்படச் செய்வேன். ஊழியஞ்செய்பவர்கள் என்னைப் புகழ்வதன் உண்மையான அர்த்தம் இதுதான் (அதாவது எனது பெரிதான வல்லமையை வெளிப்படுத்த அவர்களைப் பயன்படுத்துதல் ஆகும்). சிவப்பான பெரிய வலுசர்ப்பம் என் ராஜ்யத்தினுள் பதுங்கவும் அனுமதிக்க மாட்டேன், அது என்னைத் துதிப்பதற்கான உரிமையையும் நான் அதற்கு வழங்க மாட்டேன்! (ஏனென்றால் அது தகுதியற்றது, அது ஒருபோதும் தகுதியாயிராது!) சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை எனக்கு நித்தியமாக சேவை மட்டுமே செய்யப்பண்ணுவேன்! அதை எனக்கு முன்பாக மண்டியிட மட்டுமே செய்வேன். (நரகத்தில் இருப்பவர்களைவிட அழிக்கப்படுபவர்கள் சிறந்தவர்களாவர்; அழிவு என்பது கடுமையான தண்டனையின் தற்காலிக வடிவம் மட்டுமே, ஆனால் நரகத்தில் உள்ளவர்களோ நித்தியமாகக் கடுமையான தண்டனைகளை அனுபவிப்பார்கள். இந்தக் காரணத்திற்காக நான் “சாஷ்டாங்கமாய் விழுந்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். இந்த ஜனங்கள் என் வீட்டிற்குள் பதுங்கி, என் கிருபையின் பெரும்பகுதியை அனுபவித்து, என்னைக் குறித்து கொஞ்சம் அறிவைக் கொண்டிருப்பதால், நான் கடுமையான தண்டனைகளை அளிக்கிறேன். என் வீட்டிற்கு வெளியே இருப்பவர்களைப் பொறுத்தவரை, அறியாதவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நீங்கள் சொல்லலாம்.) ஜனங்களின் கருத்துக்களில், நரகத்தில் இருப்பவர்களை விட அழிந்து போகும் மக்கள் மோசமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் மாறாக, நரகத்தில் இருப்பவர்கள் என்றென்றும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், அழிக்கப்படுபவர்கள் முழு நித்தியத்திற்கும் ஒன்றுமில்லாமைக்குத் திரும்புவர்.

முந்தைய: அத்தியாயம் 107

அடுத்த: அத்தியாயம் 109

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக