அத்தியாயம் 16
ஒரு மனுஷக் கண்ணோட்டத்தில், தேவன் மிகவும் மகத்தானவர், நிறைவானவர், மிகவும் அற்புதமானவர், ஆராய்ந்து பார்க்க முடியாதவர்; ஜனங்களின் கண்களில், தேவனது வார்த்தைகள் வானளாவியவை, அவை உலகின் மாபெரும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன. ஆனால் ஜனங்கள் மிகப்பல பலவீனங்களைக் கொண்டிருப்பதாலும், அவர்களின் மனம் மிகவும் எளிமையானது என்பதாலும், மேலும், அவர்களின் ஏற்றுக்கொள்ளும் திறன்கள் மிகக் குறைவாக இருப்பதாலும், தேவன் அவருடைய வார்த்தைகளை எவ்வளவு தெளிவாகப் பேசினாலும், அவர்கள் மனநோயால் அவதிப்படுவது போல் அமர்ந்தும் அசையாமலும் இருக்கிறார்கள். அவர்கள் பசியுடன் இருக்கும்போது, அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை; தாகம் எடுக்கும்போது, அவர்கள் குடிக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை; அவர்களது ஆவியின் ஆழத்தில் விவரிக்க முடியாத கஷ்டத்தை அனுபவிப்பதைப் போல அவர்கள் கத்திக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களால் அதைப் பற்றிப் பேச முடியவில்லை. தேவன் மனுக்குலத்தைப் படைத்தபோது, மனுஷன் இயல்பான மனுஷத் தன்மையுடன் ஜீவிக்க வேண்டும் அவனது உள்ளுணர்வுக்கு ஏற்றாற்போல தேவனது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது ஆனால் ஆதியிலே, முதன் முதலாக மனுஷன் சாத்தானின் சோதனைக்கு இரையாகியதால், இன்று அவன் தன்னைத் தானே உபத்திரவங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள இயலாமல் இருக்கிறான், இன்னும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாத்தான் மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களைக் கண்டறிய இயலாமல் இருக்கிறான். மேலும், மனுஷனுக்கு தேவனது வார்த்தைகளை முழுமையாக அறிந்துகொள்ளும் திறன் போதவில்லை—இவை அனைத்தும் தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. இன்று இருக்கும் நிலைமையின்படி, ஜனங்கள் இன்னும் சாத்தானின் சோதனையின் ஆபத்தில் வாழ்கின்றனர், எனவே தேவனது வார்த்தைகளைச் சரியான வழியில் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கிறார்கள். சாதாரண ஜனங்களின் மனநிலையில் தாறுமாறு அல்லது வஞ்சகம் இல்லை, ஜனங்கள் ஒருவருக்கொருவர் சரியான உறவைக் கொண்டுள்ளனர், அவர்கள் தனித்து நிற்பதில்லை, அவர்களின் வாழ்க்கை இரண்டாம் தரமாகவோ அல்லது இழிவுற்றதாகவோ இருப்பதில்லை. ஆகையால், அனைத்துக்கும் மத்தியிலும் தேவன் மேன்மையாக இருக்கிறார்; அவரது வார்த்தைகள் மனுஷர் மத்தியில் ஊடுருவிச் செல்கின்றன, ஜனங்கள் ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ்கின்றனர் மற்றும் தேவனது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றனர், சாத்தானின் குறுக்கீடு இல்லாமல் பூமியில் நல்லிணக்கம் நிரம்பியுள்ளது, மற்றும் தேவனது மகிமை மனுஷர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அத்தகைய ஜனங்கள் தேவதூதர்களைப் போன்றவர்கள்: தூய்மையானவர்கள், துடிப்பானவர்கள், தேவனைப் பற்றி ஒருபோதும் குறை கூறாதவர்கள் மற்றும் பூமியில் தேவனது மகிமைக்காக மட்டுமே தங்கள் எல்லா முயற்சிகளையும் அர்ப்பணிப்பவர்கள். இப்போது கறுப்பு இரவின் நேரம்—அனைவரும் கைகளால் தூளாவித் தேடிக்கொண்டிருக்கிறார்கள், கறுப்பு இரவு அவர்களின் தலைமுடியைச் சிலிர்க்கும்படி செய்கிறது, அவர்களால் நடுங்காமல் இருக்க முடியவில்லை; கூர்ந்து கேட்கும்போது, ஒன்றுக்குப் பின் ஒன்றாக வேகமாக வீசும், ஊளையிடும் வடமேற்கு திசைக்காற்றுடன் மனுஷனின் துயரக் கதறல்களும் சேர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஜனங்கள் தங்கள் விதியை நினைத்துத் துக்கப்படுகிறார்கள், அழுகிறார்கள். அவர்கள் தேவனது வார்த்தைகளைப் படிக்கிறார்கள் ஆனால் ஏன் அவற்றைப் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கை நம்பிக்கையின்மையின் விளிம்பில் இருப்பது போலவும், அவர்களுக்கு மரணம் வரப்போகிறது போலவும், அவர்களின் கடைசி நாள் அவர்கள் கண்களுக்கு முன்பாக இருப்பதுபோலவும் இருக்கிறது. பலவீனமான தேவதூதர்கள் தேவனை அழைக்கும்போது, அவர்கள் தங்கள் சொந்தக் கஷ்டங்களைத் துக்ககரமான அழுகையுடன் ஒருவருக்குப் பின் ஒருவராகச் சொல்லும் தருணம் போன்ற அதே பரிதாபகரமான சூழ்நிலைகளாக இருக்கின்றன. இந்தக் காரணத்தினால்தான் தேவனது ஜனங்கள் மற்றும் குமாரர்கள் மத்தியில் கிரியை செய்யும் தேவதூதர்கள் மீண்டும் ஒருபோதும் மனுஷர் மத்தியில் வந்து இறங்குவதில்லை; இது அவர்கள் மாம்சத்தில் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் இருக்கும்போது சாத்தானின் சூழ்ச்சியின் பிடியிலிருந்து தங்களைத் தடுப்பதற்காகும், அதனால் அவர்கள் மனுஷனின் கண்ணுக்குத் தெரியாத ஆவிக்குரிய உலகில் மட்டுமே கிரியை செய்கிறார்கள். இப்படியாக, தேவன், “நான் மனுஷனின் இருதயத்தில் சிங்காசனம் ஏறும்போது, அது என் குமாரர்களும் என் ஜனங்களும் பூமியை ஆட்சி செய்யும் தருணமாக இருக்கும்” என்று கூறும்போது, அவர் பூமியில் உள்ள தேவதூதர்கள் வானத்தில் உள்ள தேவனுக்குச் செய்யும் ஊழியத்தின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கும் நேரத்தைக் குறிப்பிடுகிறார். மனுஷன் தேவதூதர்களின் ஆவியானவர்களின் வெளிப்பாடாக இருக்கும் காரணத்தால், மனுஷருக்கு, பூமியில் இருப்பது பரலோகத்தில் இருப்பது போன்றது; மனுஷன் பூமியில் தேவனுக்கு ஊழியம் செய்வது தேவதூதர்கள் பரலோகத்தில் தேவனுக்கு நேரடியாக ஊழியம் செய்வதைப் போன்றது என்று தேவன் கூறுகிறார்—இப்படியாக, பூமியில் அவன் வாழும் காலத்தில், மனுஷன் மூன்றாம் வானத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறான். இந்த வார்த்தைகளில் உண்மையில் சொல்லப்படுவது இதுதான்.
தேவனது வார்த்தைகளில் நிறைய அர்த்தம் மறைந்திருக்கிறது. “அந்த நாள் வரும்போது, ஜனங்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்தில் என்னை அறிந்துகொள்வார்கள், மேலும் அவர்களது சிந்தனைகளில் என்னை ஞாபகம் கொள்வார்கள்.” இந்த வார்த்தைகள் மனுஷனின் ஆவியை நோக்கிக் கூறப்படுகின்றன. தேவதூதர்களின் பலவீனம் காரணமாக, அவர்கள் எப்போதும் எல்லா விஷயங்களிலும் தேவனைச் சார்ந்திருக்கிறார்கள், எப்போதும் தேவனுடன் இணைந்திருந்து தேவனை ஆழமாக நேசிக்கிறார்கள். ஆனால் சாத்தானின் தொந்தரவு காரணமாக, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவ முடியாமல் போகிறது மற்றும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது; அவர்கள் தேவனை நேசிக்க விரும்புகிறார்கள் ஆனால் முழு மனதுடன் அவரை நேசிக்க அவர்களால் இயலவில்லை அதனால் அவர்கள் வலியை அனுபவிக்கிறார்கள். தேவனது கிரியை ஒரு குறிப்பிட்டக் கட்டத்தை அடையும் போதுதான் தேவனை உண்மையாக நேசிக்க வேண்டும் என்ற இந்த எளிய தேவதூதர்களின் ஆசை நிறைவேறும், அதனால்தான் தேவன் அந்த வார்த்தைகளைப் பேசினார். தேவதூதர்களின் இயல்பு தேவனை நேசிப்பது, போற்றுவது, தேவனுக்குக் கீழ்ப்படிவது, இருப்பினும் அவர்கள் பூமியில் இதை அடைய இயலாது இருக்கிறார்கள், தற்காலம் வரை பொறுமையாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இன்றைய உலகத்தை நீங்கள் பார்க்கலாம்: அனைத்து ஜனங்களின் இதயங்களிலும் தேவன் இருக்கிறார் இருப்பினும் ஜனங்கள் தங்கள் இதயங்களில் உள்ள தேவன் உண்மையான தேவனா அல்லது பொய்யான தேவனா என்பதை வேறுபடுத்தி அறிய இயலாது இருக்கிறார்கள். அவர்களுடைய இந்த தேவனை அவர்கள் நேசித்தாலும், அவர்கள் உண்மையிலேயே தேவனை நேசிக்க இயலாது இருக்கிறார்கள், இதன் பொருள் என்னவென்றால், அவர்களுக்குத் தங்கள்மீது கட்டுப்பாடு இல்லை. தேவனால் வெளிப்படுத்தப்பட்ட மனுஷனின் அசிங்கமான முகம் ஆவிக்குரிய உலகத்தில் உள்ள சாத்தானின் உண்மையான முகமாகும். மனுஷன் முதலில் குற்றமற்றவனாகவும் பாவமில்லாதவனாகவும் இருந்தான், இதன்பட மனுஷனின் சீர்கேடு, அசிங்கமான நடத்தைமுறைகள் அனைத்தும் ஆவிக்குரிய உலகத்தில் உள்ள சாத்தானின் செயல்களாகும், மேலும் அவை ஆவிக்குரிய உலகத்தில் நடப்பவற்றின் உண்மையுள்ள பதிவாகும். “இன்று, ஜனங்களுக்குத் தகுதிகள் உள்ளன, மேலும் அவர்கள் எனக்கு முன்னால் ஓடியாடிச் செல்ல முடியும் மேலும் சிறிதும் தடையின்றி என்னுடன் சிரிக்கவும் கேலி செய்யவும், எனக்குச் சமமாக உரையாற்றவும் முடியும் என்று நம்புகிறார்கள். இன்னமும் மனிதன் என்னை அறியவில்லை, இன்னமும் சுபாவத்தில் நாம் ஒரே மாதிரியாக இருக்கிறோம், நாம் இருவருமே மாம்சம் மற்றும் இரத்தத்தால் ஆனவர்கள், இருவரும் மனித உலகில் வாழ்கிறோம் என்று நம்புகிறான்.” மனுஷனின் இருதயத்தில் இதைத்தான் சாத்தான் செய்திருக்கிறான். சாத்தான் மனுஷனின் எண்ணங்களையும் சாதாரணக் கண்களையும் தேவனை எதிர்ப்பதற்குப் பயன்படுத்துகிறான், இருப்பினும் மனுஷன் இங்கு பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, தேவன் இந்த நிகழ்வுகளை எந்தவித ஐயத்துக்கும் இடமின்றிச் சொல்கிறார். அனைத்து ஜனங்களுக்கும் இருக்கும் மிக மோசமான பலவீனம் என்னவென்றால் ஜனங்கள் “மாம்சமும் இரத்தமுமான ஓர் உடலை மட்டுமே பார்க்கிறார்கள், தேவனுடைய ஆவியானவரை உணரவில்லை.” இது மனுஷனைக் கவர்ந்திழுக்கும் சாத்தானின் ஒரு அம்சத்தின் அடிப்படையாகும். இந்த மாம்சத்தில் உள்ள ஆவியானவரை மட்டுமே தேவன் என்று அழைக்க முடியும் என்று அனைத்து ஜனங்களும் நம்புகிறார்கள். இன்று, ஆவியானவர் மாம்சமாகியுள்ளார், உண்மையில் அவர்கள் கண்களுக்கு முன்பாக தோன்றியிருக்கிறார் என்று யாரும் நம்பவில்லை; ஜனங்கள் தேவனை “அணிந்துள்ள ஆடை மற்றும் மாம்சம்” என்ற இரண்டு பகுதிகளாகப் பார்க்கிறார்கள் மற்றும் தேவனை ஆவியானவரின் மனுவுருவாக யாரும் பார்க்கவில்லை, மாம்சத்தின் சாராம்சம் தேவனது மனநிலை என்பதை யாரும் பார்க்கவில்லை. ஜனங்களின் கற்பனையில், தேவன் குறிப்பாக இயல்பானவர், ஆனால் இந்த இயல்பில் மறைந்திருப்பது தேவனது மிகப்பெரும் முக்கியத்துவத்தின் ஒரு அம்சம் என்பது அவர்களுக்குத் தெரியுமா?
தேவன் உலகம் முழுவதையும் மூடத் தொடங்கியபோது, அது மிகவும் அந்தகாரப்பட்டது, ஜனங்கள் தூங்கியவுடன், தேவன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மனுஷர் மத்தியில் வந்திறங்கினார், மேலும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையில் இறங்கி, அதிகாரப்பூர்வமாக பூமியின் எல்லா மூலைகளுக்கும் ஆவியானவரைக் கொடுப்பதைத் தொடங்கினார். தேவன் மாம்ச உருக்கொள்ளத் தொடங்கியபோது, தேவன் தனிப்பட்ட முறையில் பூமியில் கிரியை செய்தார் என்று சொல்லலாம். பின்னர் ஆவியானவரின் கிரியை தொடங்கியது, அதிகாரப்பூர்வமாக பூமியில் அனைத்து கிரியைகளும் நடைபெறத் தொடங்கின. இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவனுடைய ஆவியானவர் எப்போதும் பிரபஞ்சம் முழுவதும் கிரியை செய்து கொண்டிருக்கிறார். ஜனங்கள் இதனை அறியவோ அல்லது உணரவோ இல்லை, ஆனால் கடைசி நாட்களில், இந்தக் காலம் விரைவில் முடிவடையும் நேரத்தில், தேவன் நேரில் கிரியை செய்ய பூமிக்கு வந்திறங்கியுள்ளார். இது கடைசி நாட்களில் பிறந்தவர்களின் ஆசீர்வாதமாகும், மாம்சத்தில் வாழும் இவர்களுக்குத் தேவனுடைய சாயலைத் தனிப்பட்ட முறையில் பார்க்க இயலும். “ஆழமான கடலின் முழுப் பரப்பும் கலங்கிய நிலையில் இருக்கும்போது, மனிதர்களிடையே உலகின் கசப்பை நான் சுவைக்க ஆரம்பித்தேன். என் ஆவி உலகம் முழுவதும் பயணிக்கிறது, எல்லா ஜனங்களின் இருதயங்களையும் பார்க்கிறது, ஆனாலும்கூட, என் மனித உருவான மாம்சத்தில் மனிதகுலத்தை நான் ஜெயங்கொள்கிறேன்.” பரலோகத்தில் உள்ள தேவன் மற்றும் பூமியில் உள்ள தேவனுக்கு இடையே இணக்கமான ஒத்துழைப்பு இப்படியானது. இறுதியில், ஜனங்கள் தங்கள் எண்ணங்களில் பூமியில் உள்ள தேவனே பரலோகத்தில் உள்ள தேவன், வானங்கள் மற்றும் பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தும் பூமியிலுள்ள தேவனால் உருவாக்கப்பட்டவை, மனுஷன் பூமியில் தேவனால் கட்டுப்படுத்தப்படுகிறான், பூமியிலுள்ள தேவன் பூமியின் மேலுள்ள வானத்தில் கிரியை செய்கிறார், மேலும் பரலோக தேவன் மாம்சத்தில் தோன்றினார் என்று நம்புகிறார்கள். இதுவே, பூமியில் தேவனது கிரியையின் இறுதி நோக்கமாகும், எனவே, மாம்ச காலத்தில் இந்தக் கட்டம் மிக உயர்தரமான கிரியையாகும்; இது தெய்வீகமாக மேற்கொள்ளப்படுகிறது, மற்றும் அனைத்து ஜனங்களும் உண்மையாக நம்புவதற்குக் காரணமாகிறது. ஜனங்கள் தங்கள் எண்ணங்களில் தேவனை எவ்வளவு அதிகமாகத் தேடுகிறார்களோ, அந்த அளவுக்கு பூமியில் உள்ள தேவன் உண்மையானவர் அல்ல என்று அதிகமாக அவர்கள் உணர்கிறார்கள். இவ்வாறு, ஜனங்கள் வெற்று வார்த்தைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு மத்தியில் தேவனைத் தேடுகிறார்கள் என்று தேவன் கூறுகிறார். ஜனங்கள் தங்கள் எண்ணங்களில் தேவனை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பேசுவதில் அவர்கள் அதிகத் திறமையானவர்களாகவும், மிகவும் பாராட்டுக்கு உரியவர்களாகவும் ஆகிறார்கள்; ஜனங்கள் எவ்வளவு அதிகமாக வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பேசுகிறார்களோ, அந்த அளவு அவர்கள் தேவனிடமிருந்து அதிகமாக விலகிச் செல்கிறார்கள், அந்த அளவுக்கு அவர்கள் மனுஷனின் சாரம்சத்தை அதிகமாக அறிய முடியாமல் போகிறார்கள், தேவனுக்கு அதிகமாகக் கீழ்ப்படியாமல் போகிறார்கள், மேலும் அவர்கள் தேவனது தேவைப்பாடுகளிலிருந்து விலகிச் செல்கிறார்கள். ஜனங்கள் கற்பனை செய்வது போல், மனுஷரைப் பற்றிய தேவனது தேவைகள் அந்த அளவுக்கு இயற்கைக்கு மீறியவை அல்ல, இருப்பினும் தேவனது சித்தத்தை யாரும் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை, இதனால் தேவன் கூறுகிறார், “ஜனங்கள் எல்லையற்ற வானத்தில், அல்லது உருண்டோடும் கடலில், அல்லது அமைதியான ஏரியில், அல்லது வெற்று எழுத்துக்களில் மற்றும் கோட்பாடுகளில் மட்டும் தேடுகிறார்கள்.” தேவன் மனுஷனிடம் எந்த அளவுக்கு தேவைகளை முன்வைக்கிறாரோ, அந்த அளவுக்கு தேவனை அதிகமாக அடைய முடியாது என்று ஜனங்கள் உணர்கிறார்கள், மேலும் தேவன் மகத்தானவர் என்று நம்புகிறார்கள். இவ்வாறு, அவர்களின் உணர்வுநிலையில், தேவனது வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் அனைத்தும் மனுஷரால் அடைய முடியாதவை, தேவனுக்குத் தனிப்பட்ட முறையில் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை; இதற்கிடையில், மனுஷன் தேவனுடன் ஒத்துழைக்கச் சிறிதும் விருப்பம் கொண்டிருக்கவில்லை, மேலும் வெறுமனே அவன் தலையைக் குனிந்து தனது பாவங்களை ஒப்புக்கொண்டு, தாழ்மையுடனும் கீழ்ப்படிதலுடனும் இருப்பதிலேயே தொடர்ந்து நிற்கிறான். இப்படியாக, அதை உணராமல், ஜனங்கள் மதத் திருச்சபைகளில் இருப்பதைக் காட்டிலும் இன்னும் தீவிரமான ஒரு புதிய மதத்தில், மதச் சடங்கில் பிரவேசிக்கிறார்கள். இதற்கு, ஜனங்கள் தங்கள் எதிர்மறை நிலையை நேர்மறையான ஒன்றாக மாற்றுவதன் மூலம் இயல்பான நிலைக்குத் திரும்புவது தேவைப்படுகிறது; இல்லையென்றால், மனுஷன் இன்னும் ஆழமாகச் சிக்கிக்கொள்வான்.
தேவன் ஏன் தனது பல பேச்சுக்களில் மலைகளையும் தண்ணீரையும் விவரிப்பதில் கவனம் செலுத்துகிறார்? இந்த வார்த்தைகளில் அடையாளமான அர்த்தம் உள்ளதா? தேவன் தன் மாம்சத்தில் அவரது காரியங்களைப் பார்க்க மனுஷரை அனுமதிப்பது மட்டுமல்லாமல், ஆகாயவிரிவில் அவரது வல்லமையைப் புரிந்துகொள்ளவும்கூட அனுமதிக்கிறார். இவ்வாறாக, ஜனங்கள், இது மாம்சமாகிய தேவன்தான் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நம்பும் அதே நேரத்தில், நடைமுறை தேவனது காரியங்களையும் தெரிந்து கொள்கிறார்கள், இதனால் பூமியில் உள்ள தேவன் பரலோகத்துக்கு அனுப்பப்படுகிறார், மேலும் பரலோகத்தில் உள்ள தேவன் பூமிக்குக் கொண்டு வரப்படுகிறார், அதன் பிறகுதான் ஜனங்கள் தேவனை முழுமையாகப் பார்க்கவும், தேவனது சர்வவல்லமை பற்றிய அதிக அறிவைப் பெறவும் முடியும். தேவன் எந்த அளவுக்கு மாம்சத்தில் மனுக்குலத்தை ஜெயங்கொண்டு, முழு பிரபஞ்சத்திற்கு மேலே மற்றும் முழுவதும் பயணம் செய்வதற்கு, மாம்சத்தையும் கடந்து செல்கிறாரோ, அந்த அளவுக்கு நடைமுறை தேவனைப் பார்ப்பதற்கான அடிப்படையில் அதிகமான ஜனங்கள் தேவனது செயல்களைப் பார்க்க முடிகிறது, இப்படியாக பிரபஞ்சம் முழுவதிலும் தேவனது கிரியையின் உண்மைத்தன்மையை அறிய முடிகிறது—அது போலியானது அல்ல ஆனால் உண்மையானது—அதனால் அவர்கள் இன்றைய நடைமுறை தேவன் ஆவியானவரின் உருவமாக இருப்பதையும் மேலும் அது மனுஷரைப் போன்ற மாம்சமான அதே வகையான உடல் அல்ல என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். இப்படியாக, “ஆனால் நான் என் கடுங்கோபத்தைக் கட்டவிழ்த்து விடும்போது, மலைகள் உடனடியாக இரண்டாகப் பிரிந்து போகின்றன, பூமி உடனடியாக அதிரத் தொடங்குகிறது, தண்ணீர் உடனடியாகக் காய்ந்து விடுகிறது, மனிதன் உடனடியாகப் பேரழிவால் சூழப்படுகிறான்” என்று தேவன் கூறுகிறார். ஜனங்கள் தேவனது வார்த்தைகளைப் படிக்கும்போது, அவர்கள் அவற்றை தேவனது மாம்சத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள், இதனால், ஆவிக்குரிய உலகத்தில் செய்யும் கிரியை மற்றும் வார்த்தைகள் நேரடியாக மாம்சத்தில் உள்ள தேவனைச் சுட்டிக்காட்டுகின்றன, இது மிகவும் பயனுள்ள முடிவுக்கு வழிவகுக்கிறது. தேவன் பேசும்போது, அது பெரும்பாலும் பரலோகத்திலிருந்து பூமிக்கும், பின்னர் மீண்டும் ஒருமுறை பூமியிலிருந்து பரலோகத்திற்குமாக இருக்கிறது, இது எல்லா ஜனங்களையும் தேவனது வார்த்தைகளின் உள்நோக்கத்தையும் அதன் மூலத்தையும் புரிந்துகொள்ள இயலாமல் செய்கிறது. “நான் வானத்தில் இருக்கும்போது, என் பிரசன்னத்தைக் கண்டு நட்சத்திரங்கள் ஒருபோதும் பீதியடையவில்லை. அதற்குப் பதிலாக, அவை எனக்காகச் செய்யும் அவற்றின் வேலையில் தங்கள் இருதயங்களைச் செலுத்துகின்றன.” இதுவே பரலோகத்தின் நிலையாகும். தேவன் மூன்றாம் வானத்தில் முறைப்படி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார், தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்கள் அனைவரும் தேவனுக்காகத் தங்கள் சொந்த ஊழியத்தைச் செய்கிறார்கள். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் எதையும் செய்யவில்லை, அதனால் அவர்கள் தேவனால் பேசப்பட்ட பயத்துக்குள் தள்ளப்படுவதில்லை, மாறாக அவர்களது வேலையில் தங்கள் இருதயத்தை ஈடுபடுத்துகிறார்கள்; ஒருபோதும் அதில் சீர்குலைவு இல்லை, இதனால் அனைத்து தேவதூதர்களும் தேவனுடைய ஒளியில் வாழ்கின்றனர். இதற்கிடையில், அவர்களின் கீழ்ப்படியாமையின் காரணமாகவும், அவர்கள் தேவனை அறியாததாலும், பூமியில் உள்ள ஜனங்கள் அனைவரும் இருளில் ஜீவிக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனை எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் இருளில் வாழ்கிறார்கள். தேவன் “வானம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கீழே உலகம் இருண்டதாக உள்ளது” என்று சொல்லும்போது, தேவனது நாள் எப்படி அனைத்து மனுக்குலத்துக்கும் சமீபமாக இருக்கிறது என்பதை அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு, மூன்றாம் வானத்தில் உள்ள தேவனது 6,000 வருடக் கிரியை விரைவில் முடிவடையும். பூமியில் உள்ள அனைத்தும் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துவிட்டன, விரைவில் ஒவ்வொன்றும் தேவனது கையிலிருந்து துண்டிக்கப்படும். ஜனங்கள் கடைசி நாட்களின் காலத்திற்குள் எவ்வளவு தூரம் செல்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மனுஷ உலகில் சீர்கேட்டை அதிகம் ருசிக்க முடிகிறது; அவர்கள் கடைசி நாட்களின் காலத்திற்குள் எவ்வளவு தூரம் செல்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் சொந்த மாம்சத்தில் அதிக சந்தோஷத்தில் ஈடுபடுகிறார்கள். உலகின் துன்பகரமான நிலையை மாற்றியமைக்க விரும்பும் பலரும்கூட இருக்கிறார்கள், ஆனாலும் தேவனது செயல்களால் அவர்கள் பெருமூச்சுக்கு மத்தியில் அவர்களது நம்பிக்கையை இழக்கிறார்கள். இவ்வாறு, ஜனங்கள் வசந்தத்தின் கதகதப்பை உணரும்போது, தேவன் அவர்களது கண்களை மறைக்கிறார், அதனால் அவர்கள் உருளும் அலைகளில் மிதக்கிறார்கள், அவர்களில் எவரும் தொலைதூரத்தில் உள்ள உயிர்காப்புப் படகை அடைய முடியவில்லை. ஜனங்கள் இயல்பாகவே பலவீனமாக இருப்பதால், விஷயங்களை மாற்றுவதற்கு யாருமில்லை என்று தேவன் கூறுகிறார். ஜனங்கள் நம்பிக்கையை இழக்கும்போது, தேவன் முழுப் பிரபஞ்சத்துக்கும் பேசத் தொடங்குகிறார். அவர் முழு மனுக்குலத்தையும் இரட்சிக்கத் தொடங்குகிறார், இதற்குப் பிறகுதான் விஷயங்கள் மாறியதும் வருகின்ற புதிய வாழ்க்கையை ஜனங்களால் அனுபவிக்க முடிகிறது. இன்றைய ஜனங்கள் சுய ஏமாற்றத்தின் கட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் உள்ள சாலை மிகவும் வெறிச்சோடியதாகவும் தெளிவற்றதாகவும் இருப்பதால், அவர்களது எதிர்காலம் “வரம்பில்லாமல்” மற்றும் “எல்லைகள் இல்லாமல்” இருப்பதால், இந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சண்டையிட விருப்பம் இல்லை, மேலும் அவர்கள் ஒரு ஹன்ஹாவ் பறவையைப் போலத் தங்கள் நாட்களைக் கடத்த மட்டுமே முடிகிறது.[அ] வாழ்க்கையையும் மனுஷனின் இருப்பு பற்றிய அறிவையும் தீவிரமாகப் பின்பற்றியவர்கள் யாரும் ஒருபோதும் இருந்ததில்லை; அதற்குப் பதிலாக, பரலோதில் உள்ள இரட்சகர் திடீரென்று உலகின் துன்பகரமான நிலையை மாற்றியமைக்க இறங்கி வரும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள், அதன் பிறகுதான் அவர்கள் வாழ்க்கையை வாஞ்சையோடு வாழ முயற்சிப்பார்கள். முழு மனுக்குலத்தின் உண்மையான நிலையும், எல்லா ஜனங்களின் மனப்போக்கும் இப்படியே இருக்கிறது.
இன்று, மனுஷனின் தற்போதைய மனப்போக்கின் வெளிச்சத்தில், தேவன் மனுஷரின் எதிர்கால புதிய வாழ்க்கையை முன்னறிவிக்கிறார். இதுதான் தேவன் சொல்லும் மங்கலான ஒளி. தேவன் எதனை முன்னறிவிக்கிறாரோ அதுவே இறுதியாக தேவனால் நிறைவேற்றப்படும், அதுவே சாத்தானின் மீது தேவனது வெற்றியின் பலன்களாகும். “நான் எல்லா மனிதர்களுக்கும் மேலாக நகர்ந்து செல்கிறேன் எல்லா இடங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எதுவுமே பழையதாகத் தெரியவில்லை, எந்த நபரும் முன்பு அவர் இருந்ததைப் போல இல்லை. நான் சிங்காசனத்தில் ஓய்வெடுக்கிறேன், முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக நான் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறேன்….” தேவனின் தற்போதைய கிரியையின் முடிவு இதுவேயாகும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அனைவரும் தங்கள் அசல் வடிவத்திற்குத் திரும்புகிறார்கள், இதன் காரணமாக பல ஆண்டுகளாகத் துன்பப்பட்ட தேவதூதர்கள் விடுவிக்கப்படுகிறார்கள், தேவன் சொல்வது போல் “அவர்களுடைய முகங்கள் மனுஷனின் இருதயத்திற்குள் பரிசுத்தமானது போன்று இருக்கின்றன.” தேவதூதர்கள் பூமியில் கிரியை செய்வதாலும், பூமியில் தேவனுக்கு ஊழியம் செய்வதாலும், தேவனது மகிமை உலகம் முழுவதும் பரவுவதாலும், பரலோகம் பூமிக்குக் கொண்டு வரப்பட்டது, மேலும் பூமி பரலோகத்துக்கு உயர்த்தப்பட்டது. ஆகையால், மனுஷன் பரலோகத்தையும் பூமியையும் இணைக்கும் இணைப்பாக இருக்கிறான்; பரலோகமும் பூமியும் இனி தனித்தனியாக இல்லை, இனி பிரிக்கப்படவில்லை, ஆனால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் தேவனும் மனுஷரும் மட்டுமே இருக்கிறார்கள். அங்கே தூசி அல்லது அழுக்கு இல்லை, தேவனது கிருபையை அனுபவித்து, வானத்தின் கீழே ஒரு பச்சைப் புல்வெளியில் கிடக்கும் ஒரு சிறிய ஆட்டுக்குட்டியைப் போல, அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் அது வாழ்க்கையின் மூச்சு ஒளி விட்டுப் பிரகாசிக்கும் பசுமையின் வருகையால் ஏற்பட்டதாகும், ஏனென்றால் “நான் மீண்டும் ஒருமுறை சீயோனுக்குள் அமைதியாக வாசம் செய்ய முடியும்.” என்று தேவனது வாயிலிருந்து சொல்லப்பட்டதைப் போலவே தேவன் மனுஷனுடன் நித்திய காலம் வரை வசிக்க உலகிற்கு வருகிறார். இது சாத்தானின் தோல்வியின் அடையாளம், இது தேவன் இளைப்பாறும் நாள், இந்த நாள் எல்லா ஜனங்களாலும் போற்றப்பட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டு, எல்லா ஜனங்களாலும் நினைவுகூரப்படும். தேவன் சிங்காசனத்தில் இளைப்பாறுதலில் இருக்கும் நேரம், அது தேவன் பூமியில் தமது கிரியையை முடிக்கும் நேரமுமாகும், அந்தத் தருணத்தில்தான் தேவனது இரகசியங்கள் அனைத்தும் மனுஷனுக்குக் காட்டப்படும்; தேவனும் மனுஷரும் என்றென்றும் ஒத்திசைவுடன் இருப்பார்கள், எப்பொழுதும் பிரிந்திருக்க மாட்டார்கள்—இவையே ராஜ்யத்தின் அழகான காட்சிகள்!
இரகசியங்களில் இரகசியங்கள் மறைந்திருக்கும்; தேவனது வார்த்தைகள் உண்மையிலேயே ஆழமானவை மற்றும் புரிந்துகொள்ள முடியாதவை!
அடிக்குறிப்பு:
அ. ஒரு ஹன்ஹாவ் பறவையின் கதை ஈசாப்பின் எறும்பும் வெட்டுக்கிளியும் என்ற நீதிக்கதையை மிகவும் ஒத்திருக்கிறது. வானிலை வெப்பமாக இருக்கும்போது, அதன் அண்டை வீட்டுப் பறவையான மேக்பையின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கூடு கட்டுவதற்குப் பதிலாக ஹன்ஹாவ் பறவை தூங்க விரும்புகிறது. குளிர்காலம் வந்ததும், பறவை குளிரில் உறைந்து இறக்கிறது.