அத்தியாயம் 14

மனுஷர்கள் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து எதையும் ஒருபோதும் புரிந்து கொண்டதே இல்லை. மாறாக, அவற்றின் மெய்யான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், மேலோட்டமாக அவற்றை வெறுமனே “பொக்கிஷமாக” வைத்திருக்கிறார்கள். ஆகையால், பெரும்பாலான ஜனங்கள் அவருடைய வாக்கியங்களின் மீது நாட்டம் கொண்டிருந்தாலும், அவர்கள் உண்மையில் அவற்றை மனதில் வைத்துக்கொள்வதில்லை என்று தேவன் சுட்டிக்காட்டுகிறார். இதற்குக் காரணம், தேவனுடைய, வார்த்தைகள் பொக்கிஷங்களாக இருந்தாலும், அவருடைய பார்வையில் ஜனங்கள் அவற்றின் உண்மையான இனிமையைச் சுவைக்கவில்லை என்பதுதான். எனவே, அவர்கள் “கிடைக்கப் பெறாத ஒன்றை நினைப்பதால் மட்டுமே தங்கள் தாகத்தைத் தணிக்க முடிவது” போலவே, அவர்களின் பேராசை நிறைந்த இருதயங்களைத் தணிக்க முடிகிறது. எல்லா மனுஷர்கள் மத்தியிலும் தேவனுடைய ஆவி கிரியை செய்வது மட்டுமல்லாமல், நிச்சயமாகவே, அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து வெளிச்சமும் வழங்கப்படுகிறது; பொதுவாகவே அதன் சாராம்சத்தை உண்மையிலேயே புரிந்துகொள்வதற்கு அவர்கள் மிகவும் கவனக்குறைவுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஜனங்களுடைய மனதில், இதுவே ராஜ்யம் முழுமையாக உணரப்படும் காலமாகும், ஆனால் சாராம்சத்தில், இது அப்படி இல்லை. தேவன் தீர்க்கதரிசனமாக உரைத்ததை அவர் நிறைவேற்றியிருந்தாலும், உண்மையான ராஜ்யம் இன்னும் பூமியில் முழுமையாக வரவில்லை. மாறாக, மனிதகுலம் மாறும்போது, கிரியை முன்னேறும்போது, மின்னல் கிழக்கிலிருந்து வெளிவரும்போது—அதாவது, தேவனுடைய வார்த்தை ஆழமாக வேரூன்றும்போது—ராஜ்யம் மெதுவாக பூமியில் நெருங்கிவரும், படிப்படியாக, ஆனால் முழுமையாக இந்த உலகத்தில் இறங்கிவரும். ராஜ்யத்தின் வருகையின் செயல்முறையானது பூமியின் மீதான தெய்வீகக் கிரியையின் செயல்முறையாகவும் இருக்கிறது. இதற்கிடையில், பூமியை முழுவதுமாக மறுசீரமைப்பதற்காக பிரபஞ்சம் முழுவதும், வரலாறு முழுவதும் எல்லா காலங்களிலும் செய்யப்படாத ஒரு கிரியையை தேவன் தொடங்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, பிரபஞ்சம் முழுவதும் பிரமாண்டமான மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, இதில் இஸ்ரவேல் தேசத்தில் மாற்றங்கள், அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சிக் கவிழ்ப்பு, எகிப்தில் ஏற்படும் மாற்றங்கள், சோவியத் யூனியனில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சீனாவின் வீழ்ச்சி ஆகியவை உள்ளடங்கும். முழுப் பிரபஞ்சமும் நிலைபெற்று, இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், பூமியில் தேவனுடைய கிரியை முடிவடையும்; அப்போதுதான் ராஜ்யம் பூமிக்கு வரும். “உலக நாடுகள் அனைத்தும் இடையூறு செய்யப்படும்போது, துல்லியமாக அந்தச் சமயத்திலே என் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு உருவாக்கப்படும், அதே போல, அதே நேரத்தில் நான் மறுரூபமாகி முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளுவேன்.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுதான். தேவன் மனுஷர்களிடம் எதையும் மறைப்பதில்லை; அவர் ஜனங்களிடம் தம் சம்பூரணத்தைப் பற்றித் தொடர்ச்சியாகச் சொல்லியிருக்கிறார்—இருப்பினும் அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவருடைய வார்த்தையை மூடர்களைப் போல ஏற்றுக்கொள்கிறார்கள். கிரியையின் இந்தக் கட்டத்தில், மனுஷர்கள் தேவனைக் குறித்துப் புரிந்துகொள்ள இயலாத தன்மையைக் கற்றுக்கொண்டனர், மேலும், அவரைப் புரிந்துகொள்ளும் பணியின் சிரமத்தை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது; இந்தக் காரணத்தினாலேயே, இந்த நாட்களில், தேவனை விசுவாசிப்பது என்பது, பன்றிக்குப் பாடக் கற்றுக் கொடுப்பதைப் போன்ற மிகவும் கடினமான காரியம் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். ஒரு பொறியில் சிக்கிய எலிகளைப் போல அவர்கள் முற்றிலும் உதவியற்றவர்களாய் இருக்கிறார்கள். உண்மையில், ஒரு நபருக்கு எவ்வளவு வல்லமை இருந்தாலும் அல்லது ஒரு நபர் திறமையில் எவ்வளவு தேறினவராக இருந்தாலும், அல்லது ஒரு நபர் எல்லையற்ற திறன்களைக் கொண்டிருந்தாலும், தேவனுடைய வார்த்தை என்று வரும்போது, அத்தகைய விஷயங்கள் ஒன்றுமே இல்லை. மனிதத்தன்மை என்பது தேவனுடைய பார்வையில் எரிந்த காகிதச் சாம்பலின் குவியலைப் போன்றதும், முற்றிலும் எந்த மதிப்பும் இல்லாததும், ஒன்றுக்கும் உதவாததுமாக இருக்கிறது. “நான் அவர்களின் பார்வையில், மென்மேலும் மறைவாகவும் மேலும் அதிகமாக ஆழங்காண முடியாதவாறும் ஆகிவிட்டேன்.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். இதிலிருந்து, தேவனுடைய கிரியை இயல்பான முன்னேற்றத்தைப் பின்பற்றுகிறது என்பதும், மனித புலனுணர்வு உறுப்புகள் எதை உள்வாங்க முடியுமோ அதன் படி செயல்படுத்தப்படுவதும் தெளிவாகிறது. மனிதகுலத்தின் சுபாவம் உறுதியானதாகவும் அசைக்கப்படாததாகவும் இருக்கும்போது, தேவன் உரைக்கும் வார்த்தைகள் அவர்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் ஒத்துப்போகின்றன, மேலும் இந்தக் கருத்துக்கள் சிறிதளவு கூட எந்த வித்தியாசமும் இல்லாமல், தேவனுடைய வார்த்தைகளைப் போலவே தோன்றுகின்றன. இது “தேவனுடைய உண்மையைப்” பற்றி ஜனங்களுக்கு ஓரளவு தெரியப்படுத்துகிறது, ஆனாலும் அது அவருடைய பிரதான நோக்கம் அல்ல. பூமியில் தம்முடைய மெய்யான கிரியையை முறையாகத் தொடங்குவதற்கு முன், ஜனங்கள் குடியேற தேவன் அனுமதித்துக்கொண்டிருக்கிறார். எனவே, மனுஷர்களுக்கு மிகவும் குழப்பமான இந்த தொடக்கத்தின் காலத்தில், அவர்கள் தங்கள் முந்தைய கருத்துக்கள் தவறானவை என்பதையும், தேவனும் மனிதகுலமும், வானத்தையும் பூமியையும் போல வேறுபட்டவை, மற்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதையும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை மனுஷீகக் கருத்துகளின் அடிப்படையில் இனி மதிப்பிட முடியாது என்பதால், மனுஷர்கள் உடனடியாக தேவனை ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டனர்; இதன் விளைவாக, நடைமுறை தேவன், ஒரு கண்ணுக்குத் தெரியாத மற்றும் தொடமுடியாத தேவனைப் போல அணுக முடியாதவராக இருப்பதைப் போலவும், மனுவுருவான தேவனுடைய மாம்சமானது அவரது சாராம்சம் இல்லாத வெளிப்புறமான ஓட்டைப் போல் இருப்பதைப் போலவும் அவர்கள் தேவனை ஆச்சரியத்துடன் உற்று நோக்குகிறார்கள். அவர் ஆவியானவரின் மனுவுரு என்றாலும், அவரால் எந்த நேரத்திலும் ஆவியானவரின் வடிவமாக மாறி மிதந்து செல்ல முடியும்; எனவே ஜனங்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்ட மனநிலையை உருவாக்கியுள்ளனர். தேவனைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் மேகங்கள் மற்றும் மூடுபனியின் மீது சவாரி செய்ய முடியும், தண்ணீரில் நடக்க முடியும், திடீரென்று மனுஷர்களிடையே தோன்றி மறைந்துவிட முடியும் என்று கூறி, தங்கள் கருத்துக்களால் அவரை அலங்கரிக்கிறார்கள். சிலர், இன்னும் கூட வர்ணனை விளக்கங்களைக் கொண்டுள்ளனர். ஜனங்களுடைய அறியாமையினாலும் நுண்ணறிவு இல்லாததாலும், தேவன் இவ்வாறு கூறினார், “அவர்கள் என்னை எதிர்த்தார்கள் அல்லது எனது நிர்வாக ஆணைகளை மீறிவிட்டார்கள் என்று அவர்கள் நம்பும்போது, நான் இன்னும் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறேன்.”

தேவன் மனிதகுலத்தின் அசிங்கமான முகபாவனையையும் அவர்களின் உள் உலகத்தையும் தவறாது துல்லியமாக, ஒருபோதும் தன் குறியில் சற்றும் தவறாமல் வெளிப்படுத்துகிறார். எதுவாக இருந்தாலும், அவர் எந்தத் தவறும் செய்வதில்லை என்று கூட சொல்லலாம். இது ஜனங்களை முற்றிலும் நம்ப வைக்கும் சான்றாகும். தேவனுடைய கிரியையின் பின்னால் உள்ள கொள்கையின் காரணமாக, அவருடைய பல வார்த்தைகள் மற்றும் செயல்கள் அழிக்க முடியாத ஒரு பதிவை விட்டுச்செல்கின்றன, எனவே ஜனங்கள் அவரில் அதிக விலையேறப்பெற்ற விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதைப் போல, அவர்கள் அவரைப் பற்றி இன்னும் ஆழமான புரிதலைப் பெறுகிறார்கள். “அவர்களின் நினைவுகளில், நான் அவர்களைத் தண்டிப்பதை விட ஜனங்களுக்கு இரக்கம் காட்டும் தேவன், அல்லது அவரது வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்ற சிரத்தை கொள்ளாத தேவன். இவை அனைத்தும் மனித சிந்தனையிலிருந்து பிறந்த கற்பனைகள், அவை உண்மைகளுடன் ஒத்துப்போகவில்லை.” மனிதகுலம் தேவனுடைய மெய்யான முகத்திற்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் கரங்களின் பின் பக்கத்தை அறிவதைப் போல “அவருடைய மனநிலையின் மறு பக்கத்தை” அறிந்துகொள்கிறார்கள்; அவர்கள் எப்போதும் தேவனுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் குறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஏனென்றால், ஜனங்கள் எப்போதும் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடைய கிரியைகளை இழிவாகப் பார்ப்பதன் மூலம் நேர்மறையான ஒன்றைப் புறக்கணிப்பதற்கும் மட்டுமே தயாராக இருக்கிறார்கள். தேவன் தாழ்மையுடன் தம்முடைய வாசஸ்தலத்தில் தம்மை மறைத்துக் கொள்வதாக எவ்வளவு அதிகமாகக் கூறுகிறாரோ, அவ்வளவு அதிகமான கோரிக்கைகளை மனிதகுலம் அவரிடம் வைக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள், “மனுவுருவான தேவன் மனிதகுலத்தின் ஒவ்வொரு கிரியையையும் கவனித்து, மனுஷ வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் என்றால், பெரும்பாலான நேரங்களில் நம் உண்மையான நிலைமை பற்றி ஏன் தேவனுக்குத் தெரிவதில்லை? தேவன் உண்மையிலேயே மறைந்திருக்கிறார் என்பதைத்தான் இது அர்த்தப்படுத்துகிறதா?” தேவன் மனுஷனுடைய இருதயத்திற்குள் ஆழமாக உற்று நோக்கினாலும், அவர் இன்னும் கண்ணுக்குப் புலப்படாதவராகவும் இல்லாமல், இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் இல்லாமல், மனிதகுலத்தின் உண்மையான நிலைமைகளுக்கு ஏற்ற படி கிரியை செய்கிறார். மனிதகுலத்தை அவர்களின் பழைய மனநிலைமையிலிருந்து முற்றிலுமாக விடுவிப்பதற்காக, பல்வேறு கோணங்களில் பேசுவதற்கும், ஜனங்களுடைய உண்மையான சுபாவத்தை வெளிக்கொணருவதற்கும், அவர்களின் கீழ்ப்படியாமைக்கான நியாயத்தீர்ப்பை வழங்குவதற்கும் தேவன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை, ஒரு தருணத்தில் தாம் ஒவ்வொருவரையும் கையாளப்போவதாகவும், மற்றும் அடுத்ததாகத் தாம் ஒரு கூட்ட ஜனங்களை இரட்சிக்கப்போவதாகவும் கூறுகிறார்; மனுஷர்கள் மீது கோரிக்கைகளை வைக்கிறார் அல்லது அவர்களை எச்சரிக்கிறார்; மற்றும் அவர்களின் உள்ளானவைகளை மாறி மாறி பிரித்து சிகிச்சை அளிக்கிறார். இவ்வாறு, தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ், மனுஷர்கள் பூமியின் ஒவ்வொரு மூலையிலும் பயணம் செய்து, ஒவ்வொரு பூவும் மிகவும் அழகாக இருக்க போட்டியிடும் ஓர் அற்புதமான தோட்டத்திற்குள் நுழைந்தது போலாகும். இரும்பினாலான எதையும் தன்னை நோக்கி இழுக்கும் ஒரு காந்தம் போன்று தேவன் இருப்பதைப் போல, தேவன் எதைச் சொன்னாலும் மனுக்குலத்தினர் அவருடைய வார்த்தைக்குள் நுழைந்து விடுவார்கள். வார்த்தைகளைப் படித்தவுடன், “மனிதர்கள் எனக்குச் செவிசாய்ப்பதில்லை, எனவே நானும் அவர்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் என்மீது கவனம் செலுத்துவதில்லை, எனவே நானும் அவர்கள்மீது எந்தக் கடினமான கிரியையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இது இரு உலகங்களிலும் சிறந்தது அல்லவா?” தேவனுடைய ஜனங்கள் அனைவரும் மீண்டும் பாதாளத்திற்குள் தள்ளப்படுவது போலவும், அல்லது, அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை முற்றிலும் ஸ்தம்பித்துப்போகச் செய்யும் ஆபத்தின் விளிம்பில் சிக்கியிருப்பதைப் போலவும் தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் மீண்டும் முறைமைக்குள் பிரவேசிக்கிறார்கள். “ராஜ்யத்தில் என் ஜனங்களின் உறுப்பினர்களாக உங்கள் கடமைகளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாவிட்டால், நீங்கள் என்னால் வெறுக்கப்படுவீர்கள், நிராகரிக்கப்படுவீர்கள்!” என்ற வார்த்தைகள் குறித்து அவர்கள் குறிப்பாகக் குழப்பமடைந்துள்ளனர். பெரும்பாலான ஜனங்கள் மிகவும் காயமடைந்தவர்களாய், கண்ணீர்விட்டு, “நான் பாதாளத்திலிருந்து வெளியேறுவதற்கான மிகக் கடினமான சமயத்தைப் பெற்றிருந்தேன், அதனால் நான் மீண்டும் அதில் விழுந்தால், எனக்கு இனி எந்த நம்பிக்கையும் இருக்காது. நான் மனித உலகத்தில் எதையும் பெற்றிருக்கவில்லை, என் வாழ்க்கையில் எல்லாவிதமான கஷ்டங்களுக்கும் உபத்திரவங்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன். குறிப்பாக, விசுவாசத்திற்கு வந்ததிலிருந்து, நான் அன்பானவர்களைக் கைவிடுவதையும், என் குடும்பத்தாரால் துன்புறுத்தப்படுவதையும், சமூகத்தில் மற்றவர்களின் அவதூறுகளையும் அனுபவித்திருக்கிறேன், மேலும் நான் உலகத்தின் எந்தவித சந்தோஷத்தையும் அனுபவித்திருக்கவில்லை. நான் மீண்டும் அதல பாதாளத்தில் விழுந்தால், என் வாழ்க்கை வீணாகிப் போய்விடாதா?” (ஒரு நபர் எவ்வளவு அதிகமாக இதில் வசிக்கிறாரோ, அவ்வளவு துக்கமாக அவர்கள் உணர்கிறார்கள்.) “என் நம்பிக்கைகள் அனைத்தும் தேவன் தம்முடைய கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் என்னைக் கைவிட்டால், நான் இப்போதே மரித்துவிடுவேன். நல்லது, அனைத்தும் தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டது, எனவே இப்போது நான் தேவனை நேசிப்பதை மட்டுமே நாட முடிகிறது; மற்ற அனைத்தும் இரண்டாவதாக இருக்கிறது. இது ஏன் என் விதியாக உள்ளது?” என்று நினைக்கின்றனர். எவ்வளவு அதிகமாக ஜனங்கள் இப்படி நினைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய தரத்திற்கும் அவருடைய வார்த்தைகளின் நோக்கத்திற்கும் அருகில் நெருங்கி வருகிறார்கள். இந்த வழியில், அவரது வார்த்தைகளின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. மனுஷர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பார்த்த பிறகு, அவர்கள் அனைவரும் உள்ளான கருத்தியல் போராட்டத்தை அனுபவிக்கிறார்கள். விதியின் நடத்துதலுக்குக் கீழ்ப்படிவதே அவர்களின் ஒரே விருப்பத் தேர்வாகும், இந்த வழியில் தேவனுடைய நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. தேவனுடைய வார்த்தைகள் எந்த அளவுக்குக் கடுமையானவைகளாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக மனுஷர்களின் உள்ளான உலகம் மிகவும் சிக்கலானதாக ஆவதே அதன் விளைவாக இருக்கிறது. இது ஒரு காயத்தைத் தொடுவது போன்றது; அது எவ்வளவு அழுத்தமாகத் தொடப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக, ஜனங்கள் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையில் அலைக்கழிக்கப்பட்டு, உயிர்வாழும் நம்பிக்கையைக் கூட இழக்க நேரிடும் அளவுக்கு வலிக்கிறது. அதைப்போலவே, மனுஷர்கள் மிகவும் துன்பப்பட்டு, நம்பிக்கையின்மையின் ஆழத்தில் இருக்கும்போதுதான் அவர்களால் தங்கள் உண்மையான இருதயங்களை தேவனுக்குக் கொடுக்க முடியும். ஒரு துளியளவு நம்பிக்கை இருந்துவிட்டால், அவர்கள் உதவிக்காக தேவனிடம் செல்ல மாட்டார்கள், மாறாக இயற்கையாக வாழ்வதற்கான தன்னிறைவு முறைகளைப் பின்பற்றுவார்கள், இதுவே மனுஷ சுபாவமாகும். ஏனென்றால், மனிதகுலத்தின் சுபாவமானது சுயநீதியுள்ளது, மேலும் ஜனங்கள் எல்லோரையும் இழிவாகப் பார்க்கப் பழக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, தேவன் கூறினார், “சௌகரியமான நிலையில் இருக்கும்போது ஒரு மனிதனால் கூட என்னை மேலும் நேசிக்க முடியவில்லை; அவர்கள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்போது அவர்களின் சந்தோஷத்தில் நான் பங்கெடுக்க வேண்டும் என்று ஒரு மனிதன்கூட என்னைக் கேட்டதில்லை.” இது உண்மையில் ஏமாற்றத்தை அளிக்கிறது; தேவன் மனிதகுலத்தைப் படைத்தார், ஆனால் அவர் மனித உலகத்திற்கு வரும்போது, ஜனங்கள் ஏதோ, அவர் உலகம் முழுவதும் அலைந்து திரிகிற சில அனாதைகளைப் போலவும் அல்லது ஒரு நாடு இல்லாத உலக மனுஷனைப் போலவும் அவரை எதிர்த்து, தங்கள் பிரதேசத்திலிருந்து அவரைத் துரத்த முற்படுகிறார்கள். யாரும் தேவனுடன் இணைந்திருப்பதாக உணர்வதில்லை, யாரும் அவரை மெய்யாகவே நேசிப்பதில்லை, அவருடைய வருகையை யாரும் ஒருபோதும் வரவேற்கவில்லை. மாறாக, தேவனுடைய வருகையைப் பார்க்கும்போது, திடீரென்று ஒரு புயல் வருவதைப் போலவும் அல்லது தங்களது குடும்பங்களின் மகிழ்ச்சியை தேவன் எடுத்துவிடுவார் என்பது போலவும், மற்றும் தேவன் ஒருபோதும் மனுஷர்களை ஆசீர்வதித்ததே இல்லை, மாறாக, அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை மட்டுமே கொண்டு வந்திருக்கிறார் என்பது போலவும், கண் இமைக்கும் நேரத்தில் மேகங்கள் மகிழ்ச்சியான முகங்களை நிழலால் மறைக்கின்றன. எனவே, மனுஷர்களின் மனதில், தேவன் ஒரு வரமாக அல்ல, மாறாக அவர்களை எப்போதும் சபிப்பவராக இருக்கிறார். இதன் காரணமாக, ஜனங்கள் அவருக்குச் செவிசாய்ப்பதில்லை அல்லது அவரை வரவேற்பதில்லை; அவர்கள் எப்பொழுதும் அவரிடத்தில் அக்கறையில்லாதவர்களாய் இருக்கிறார்கள், இது எப்பொழுதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. மனுஷர்கள் தங்கள் இருதயங்களில் இந்த விஷயங்களைக் கொண்டிருப்பதால், மனிதர்கள் நியாயமற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள். மனிதர்களிடம் பொருந்தி இருக்க வேண்டும் என்று கருதக்கூடிய உணர்வுகள் கூட அவர்களிடம் அறியப்படவில்லை என்றும் தேவன் கூறுகிறார். மனுஷர்கள் தேவனுடைய உணர்வுகளுக்கு எந்தக் கரிசனையும் காட்டுவதில்லை, மாறாக தேவனுடன் இடைபடுவதற்கு பெயரளவிலான “நீதியைப்” பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறார்கள், இதனால்தான், அவர்களின் மனநிலைகள் மாறியிருக்கவில்லை என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஒரு கையளவு இறகுகளைத் தவிர வேறெந்த பொருளும் அவர்களிடத்தில் இல்லை என்பதை இது காட்டப்போகிறது. மனுஷர்கள் தங்களைத் தாங்களே பொக்கிஷமாகக் கருதாததால், அவர்களை மதிப்பற்ற மோசமானவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் தங்களைக் கூட நேசிப்பதில்லை, மாறாக, தங்களைத் தாங்களே மிதித்துக்கொள்கிறார்கள் என்றால், அப்போது, அது அவர்களின் மதிப்பற்ற தன்மையைக் காட்டுவதில்லையா? மனுக்குலமானது, தன்னுடனே விளையாடி, மற்றவர்களைக் கெடுக்க அவர்களுக்குத் தன்னை மனமுவந்து கொடுக்கிற ஓர் ஒழுக்கக்கேடான ஸ்திரீயைப் போன்றதாகும். அப்படி இருந்தும் ஜனங்கள் தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை இன்னும் கண்டுணர்வதில்லை. அவர்கள் மற்றவர்களுக்காகக் கிரியை செய்வதில் அல்லது மற்றவர்களுடன் பேசுவதில், மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் தங்களை வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்; இது துல்லியமாக மனித இனத்தின் அசுத்தம் இல்லையா? நான் மனுக்குலத்தின் மத்தியில் ஒரு வாழ்க்கையை அனுபவித்திருக்கவில்லை என்றாலும், மனித வாழ்க்கையை மெய்யாகவே அனுபவித்திருக்கவில்லை என்றாலும், மனுஷர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு கிரியையையும் பற்றிய மிகத் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறேன். மனுஷர்கள் தங்கள் சொந்த வஞ்சகத்தை வெளிப்படுத்தவோ அல்லது அவர்களின் இச்சைக்கு இடமளிக்கவோ இனி துணியாதபடி, அவர்களுடைய ஆழ்ந்த அவமானத்தை அவர்களுக்கு நான் வெளிப்படுத்தவும் இயலும். தங்கள் ஓடுகளுக்குள் பின்வாங்கும் நத்தைகளைப் போல, அவர்கள் தங்கள் சொந்த அசிங்கமான நிலையை ஒருபோதும் வெளிப்படுத்தத் துணிவதில்லை. மனுஷர்கள் தங்களைத் தாங்களே அறியாத காரணத்தால், தங்களது அசிங்கமான முகபாவனைகளைக் காண்பித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு முன்பாக தங்கள் அழகை அணிவகுத்துச் செல்லச் செய்வதற்கான விருப்பமே, அவர்களின் மிகப்பெரிய குறைபாடாகும். இது தேவன் மிகவும் வெறுக்கும் ஒரு விஷயமாகும். ஏனென்றால், ஜனங்களிடையே உள்ள உறவுகள் அசாதாரணமானவை, மேலும் ஜனங்களுக்கு இடையே இயல்பான தனிப்பட்ட உறவுகள் இல்லை, அவர்களுக்கும் தேவனுக்கும் இடையிலும் கூட இயல்பான உறவுகள் இல்லை. தேவன் அநேகக் காரியங்களைச் சொல்லியிருக்கிறார், அவ்வாறு செய்வதன் மூலம், அவருடைய முக்கிய நோக்கம் ஜனங்களின் இருதயங்களில் ஓர் இடத்தைப் பிடிப்பதாகும், இதனால் அவர்களால் அங்கு குடிகொண்டிருக்கும் அனைத்து விக்கிரகங்களிலிருந்தும் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியும். அதன்பிறகு, தேவனால் முழு மனிதகுலத்தின் மீதும் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும், மேலும், பூமியின் மீதான அவரது இருப்பின் நோக்கத்தை நிறைவேற்றவும் முடியும்.

முந்தைய: அத்தியாயம் 13

அடுத்த: அத்தியாயம் 15

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக