விசுவாசத்தில் ஒருவர் யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல

எத்தனை மதச் சடங்குகளை நீ கடைப்பிடிக்கிறாய்? எத்தனை முறை நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம் செய்து உன்னுடைய சொந்த வழியில் சென்றிருக்கிறாய்? தேவனுடைய பாரத்தை உண்மையிலேயே கருத்தில் கொண்டு, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நாட்டம் கொண்டு நீ தேவனுடைய வார்த்தைகளை எத்தனை முறை கடைப்பிடித்திருக்கிறாய்? நீ தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டு அதன்படியே நடக்க வேண்டும். உன்னுடைய செயல்கள் மற்றும் கிரியைகள் எல்லாவற்றிலும் கொள்கைப்பிடிப்புடன் இருக்கவேண்டும். இருப்பினும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு மன ஈடுபாடின்றி பிறர் காண வேண்டுமென எதையாவது செய்ய வேண்டுமென்று இதற்கு அர்த்தமில்லை; மாறாக சத்தியத்தைக் கடைப்பிடித்துத் தேவனுடைய வசனத்தின்படி வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இது போன்று நடப்பது மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்துகிறது. தேவனைத் திருப்திப்படுத்தும் எந்தச் செயல்முறையும் ஒரு விதிமுறை அல்ல; ஆனால் சத்தியத்தின்படி நடப்பதாகும். சிலர் மற்றவர்களுடைய கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் பெரும் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு முன்பாக தாங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறலாம்; ஆனால் அவர்களுக்குப் பின்னால் இவர்கள் சத்தியத்தைப் பின்பற்றாமல் முற்றிலும் வேறு மாதிரியாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் மதவாத பரிசேயர்கள் அல்லவா? எவர் ஒருவர் தேவனுக்கு உண்மையாக இருந்து வெளித்தோற்றத்தில் இப்படிப்பட்டவைகளைச் செய்யாமல் இருக்கின்றாரோ அவரே தேவனிடம் உண்மையாக அன்புகூர்ந்து சத்தியத்தைக் கொண்டிருப்பவர் ஆவார். இப்படிப்பட்ட ஒருவர் சூழ்நிலைகள் வரும்போது சத்தியத்தைப் பின்பற்ற விரும்புகிறார், மேலும் அவர் தனது மனசாட்சிக்கு விரோதமாக பேசுவதோ அல்லது செயல்படுவதோ இல்லை. இவ்வகையான நபர் சம்பவங்கள் நடைபெறும் போது ஞானத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் எந்தச் சூழ்நிலையிலும் தனது செய்கைகளில் கொள்கைப்பிடிப்புடன் இருக்கிறார். இவ்வகையான நபராலேயே உண்மையான ஊழியத்தைச் செய்ய முடியும். சிலர் தாங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருப்பதாக உதட்டளவில் சொல்கின்றனர். இவர்கள் தங்கள் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு கவலையில் ஆழ்ந்து நாட்களைக் கடத்துகிறார்கள். பாதிக்கப்பட்டது போல நடித்துக் கொண்டு, பரிதாபகரமாக இருப்பது போல பாசாங்கு செய்கிறார்கள். எவ்வளவு இழிவான செயல் இது! நீ இவர்களிடம், “நீ எந்த வகையில் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறாய் என்று என்னிடம் சொல்ல முடியுமா?” என்று கேட்பாயானால், அவர்கள் வாயடைத்துப் போவார்கள். நீ தேவனுக்கு உண்மையாக இருப்பாயானால், மற்றவர்களிடம் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உண்மையாக நடப்பதன் மூலமாகவும் உத்தம இருதயத்துடன் தேவனிடம் ஜெபிப்பதன் மூலமாகவும் தேவன் மீதான உனது அன்பை நிரூபித்துக் காட்டு. தேவனுடன் உதட்டளவில் மற்றும் பெயரளவில் தொழுதுகொள்கிறவர்கள் அனைவரும் மாயக்காரர்கள் ஆவர். சிலர் தேவனிடம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கும் போது தேவனுக்குக் கடமைப்பட்டிருப்பது பற்றி பேசுகின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் எந்த வழிநடத்துதலும் இல்லாமல் தங்கள் ஜெபத்தில் அழுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மதச் சடங்காச்சாரங்களை உடையவர்களாகவும், கருத்துக்களை உடையவர்களாகவும் இருக்கின்றனர். இது போன்ற செயல்களே தேவனைத் திருப்திப்படுத்துவதாகவும், மேம்போக்கான தேவ பக்தியையோ அல்லது துக்கம் நிறைந்த அழுகையையோதான் தேவன் விரும்புகிறார் என்றே எப்போதும் நம்பிக் கொண்டு அவர்கள் இத்தகைய சடங்காச்சாரங்களிலும் கருத்துக்களிலும் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனமான மனிதர்களிடம் இருந்து என்ன நல்லது கிடைக்கும்? தாழ்மையைக் காட்டுவதற்காக பிறருக்கு முன்பாக பேசும் போது இரக்கக் குணம் இருப்பது போல நடிக்கின்றனர். சிலர் மற்றவர்கள் மத்தியில் இருக்கும் போது சிறிதளவு பெலமுமின்றி ஒரு ஆட்டுக் குட்டியைப் போல வேண்டுமென்றே தாழ்மையானவர்களைப் போல நடிக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தின் மக்களாக இருப்பதற்கு இது சரியான முறையாக இருக்குமா? ராஜ்யத்தின் மக்கள் ஜீவனுள்ளவர்களாகவும் விடுதலையுள்ளவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வெளிப்டையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும், நேசிக்கப்படத்தக்கவர்களாகவும், ஒரு சுதந்திரமான நிலையில் வாழுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையையும், மேன்மையையும் உடையவர்களாகவும் எங்குச் சென்றாலும் தேவனுக்குச் சாட்சியாக நிற்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும், இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கும் மனிதர்களுக்கும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். யாரெல்லாம் விசுவாசத்திற்குப் புதியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் அதிகமான வெளிப்புறச் சடங்குகளைக் கடைபிடிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் சில காலங்கள் நொறுங்குண்டவர்கள் ஆகும்படி கையாளப்பட வேண்டும். தேவனிடம் ஆழமான விசுவாசத்தைக் கொண்டவர்கள் வெளித்தோற்றத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர்களாக இருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களுடைய செயல்களும் கிரியைகளும் பாராட்டும்படி இருக்கும். இப்படிப்பட்டவர்களை மட்டுமே தேவனுடைய வார்த்தையின்படி நடக்கிறவர்கள் என்று கருத முடியும். நீ பலதரப்பட்ட மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் போது முடிவில் அவர்கள் விதிமுறைகளையும், கோட்பாடுகளையும் கைக்கொண்டு வாழ்வார்களானால், உன்னால் தேவனுக்கு மகிமையைக் கொண்டு வர முடியாது. இப்படிப்பட்டவர்கள் மதவாதிகளாகவும் மாயக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மதவாதிகள் எப்போதெல்லாம் ஒரு சபை ஐக்கியத்திற்குள் கூடுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் ஒருவரைப் பார்த்து, “சகோதரியே, நீங்கள் இந்த நாட்களில் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்பார்களாயின், அதற்கு அந்தச் சகோதரி, “நான் தேவனுக்கு ஒரு கடனைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் ஆனால் அவரது சித்தத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று உணருகிறேன்” என்று கூறுவார். மற்றொருவரும், “நானும் தேவனுக்குக் கடன்பட்டு இருக்கிறேன், ஆனால் அவரைத் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று கூறுவார். இந்த ஒருசில வாக்கியங்களும் வார்த்தைகளும் அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கீழ்த்தரமான எண்ணங்கள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வார்த்தைகள் மிகவும் அருவருக்கத்தக்கவையாகவும், மிகவும் அதிகமாக வெறுக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்டவர்களின் சுபாவம் தேவனுக்கு விரோதமானது. யாரெல்லாம் யதார்த்தத்தில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக ஐக்கியத்தில் கூறுகிறார்கள். அவர்கள் எந்த ஒரு தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இது போன்ற நாகரீக செயல்களையோ அல்லது வெற்று இன்பங்களையோ வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் எப்போதும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள், உலகப்பிரகாரமான விதிமுறைகளைக் கடைபிடிக்க மாட்டார்கள். சிலர் முற்றிலும் அறிவில்லாத நிலை வரை கூட வெளிப்புறத் தோற்றங்களுக்கான ஒரு விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் பாட்டுப் பாடும்போது தங்கள் பானையில் சோறு ஏற்கனவே தீய்ந்துபோய்விட்டது என்பதைக் கூட அறியாமல் நடனம் ஆட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவபக்தி உள்ளவர்களோ அல்லது கனத்திற்குரியவர்களோ அல்ல; இவர்கள் மிகவும் அற்பமானவர்கள். இவைகளெல்லாம் யதார்த்தமின்மையின் வெளிப்பாடுகளாகும். சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து ஐக்கியப்படும் போது, அவர்கள் தங்கள் தேவனுக்குச் செலுத்த வேண்டியது எதையும் பற்றி பேசாவிட்டாலும் இவர்கள் தேவனிடம் ஆழமான அன்பை எப்போதும் கொண்டுள்ளவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்கு கடன்பட்டிருக்கிறேன் என்கிற உன்னுடைய உணர்வுக்கும் மற்ற மனிதர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை; நீ தேவனுக்கு மட்டுமே கடன்பட்டிருக்கிறாய் மனிதர்களுக்கு அல்ல. இதைக் குறித்து மற்றவர்களிடம் நீ தொடர்ச்சியாகப் பேசுவதால் என்ன பலன்? நீ யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், மற்ற எந்தவொரு வெளிப்புற வைராக்கியத்திற்கோ அல்லது வெளிக்காட்டுதலுக்கோ அல்ல. மனிதருடைய மேலோட்டமான நற்கிரியைகள் எதைக் குறிக்கின்றன? அவைகள் மாம்சத்தைக் குறிக்கின்றன, சிறந்த வெளிப்புற சடங்குகள் ஜீவனைக் குறிப்பதில்லை, அவைகளால் உன்னுடைய தனிப்பட்ட சொந்த மனோநிலையை மட்டுமே காண்பிக்க முடியும். மனிதர்களின் வெளிப்புறச் சடங்குகளால் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. நீ தொடர்ச்சியாக தேவனுக்குக் கடன்பட்டிருப்பதைக் குறித்து பேசிக் கொண்டே இருப்பாயானால் உன்னால் மற்றவர்களின் வாழ்வின் தேவைகளைச் சந்திக்க அல்லது அவர்களை தேவனை நேசிக்கும்படி ஊக்கப்படுத்த முடியாது. இப்படிப்பட்ட உன்னுடைய செயல்கள் தேவனைத் திருப்திப்படுத்தும் என்று நீ நம்புகிறாயா? உன்னுடைய செயல்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணக்கமாக உள்ளன என்றும், அவைகள் ஆவிக்குரியவைகள் என்றும் எண்ணுகிறாயா? ஆனால் உண்மையில் அவைகள் பொருத்தமற்றவைகளாக இருக்கின்றன. உன்னைத் திருப்திப்படுத்துபவைகளும் நீ செய்ய விரும்புகிறவைகளுமே தேவன் பிரியப்படுகிற காரியங்களாக இருப்பதாக நீ நம்புகிறாய். உன்னுடைய விருப்பங்கள் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துமா? ஒரு மனிதனுடைய குணம் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துமா? உன்னை சந்தோஷப்படுத்தும் காரியங்களை தேவன் திட்டமாக வெறுக்கின்றார்; மேலும் உன் பழக்கவழக்கங்களைத் தேவன் வெறுத்துப் புறக்கணிக்கிறார். நீ தேவனுக்குக் கடன்பட்டிருப்பது உண்மையானால், தேவனுக்கு முன்பாகச் சென்று அவரிடத்தில் ஜெபம் செய். அதைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை. நீ தேவனுக்கு முன்பாக ஜெபிக்காமல், மற்றவர்கள் மத்தியில் இருக்கும் போது அவர்கள் கவனத்தைத் தொடர்ச்சியாக உன் பக்கமாகத் திருப்ப எண்ணுவது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா? உன்னுடைய செயல்கள் எப்போதும் வெளிப்பார்வைக்காக மட்டுமே இருக்குமானால், நீ மிகவும் விருதாவானவன் என்று அர்த்தமாகும். மேலோட்டமான நற்கிரியைகளைச் செய்து கொண்டு யதார்த்தமில்லாமல் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர்? இப்படிபட்டவர்கள் மாயக்காரராகிய பரிசேயரைப் போல் மதத்தலைவர்களாக இருகின்றனர். உங்களுடைய வேஷமான செயல்களை விட்டுவிடவும், மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என்றால், இந்த மாய்மாலத்தின் காரணக்கூறுகள் மென்மேலும் வளரும். உங்களுடைய மாய்மாலம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, தேவன் மீதான எதிர்ப்பும் அவ்வளவு அதிகமாக இருக்கும். முடிவில் இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக புறம்பாக்கப்படுவார்கள்!

முந்தைய: அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிச்செல், அப்பொழுது நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படுவாய்

அடுத்த: தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக