நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!

ஒரு குழப்பமான முறையில் விசுவாசிக்கும் ஜனங்கள் பலர் தற்போது இருக்கிறார்கள். உங்களுக்கு மிக அதிகமான அறிந்துகொள்ளும் ஆர்வம், ஆசீர்வாதத்துக்கான அதிகமான ஆசை, மேலும் ஜீவனைத் தேடுவதில் மிகக் குறைவான ஆர்வமே உள்ளது. இப்போதெல்லாம் இயேசுவினிடத்தில் இருக்கும் விசுவாசத்தில் ஜனங்களுக்கு முழு உற்சாகம் உள்ளது. இயேசு அவர்களை மறுபடியும் பரலோக வீட்டிற்குக் கொண்டு செல்லப் போகிறார், ஆகவே அவர்கள் எவ்வாறு விசுவாசிக்காமல் இருக்க முடியும்? சில ஜனங்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் விசுவாசிகளாக இருக்கிறார்கள்; நாற்பது அல்லது ஐம்பது வருடங்களாக விசுவாசம் கொண்டிருந்த போதிலும், அவர்கள் இன்னும் வேதாகமத்தை வாசிப்பதில் களைப்பே அடைவதில்லை. இது ஏனென்றால் எது நடந்தாலும், அவர்களுக்கு விசுவாசம் இருக்கும் வரை, அவர்கள் பரலோகத்திற்குச் சென்றுவிடுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்[அ]. நீங்கள் இந்த வழியில் தேவனை சில ஆண்டுகள் மட்டுமே பின்பற்றியிருக்கிறீர்கள், இருந்தாலும் நீங்கள் ஏற்கெனவே தடுமாறிப்போய்விட்டீர்கள்; நீங்கள் உங்கள் பொறுமையை இழந்துவிட்டீர்கள், ஏனெனில் உங்கள் ஆர்வத்தினால் ஆசீர்வாதத்தை அடையும் உங்கள் ஆசை மிகவும் பலமானது. இந்த மெய்யான வழியில் நீங்கள் நடப்பது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உங்கள் விருப்பத்தாலும் ஆர்வத்தாலும் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தின் கிரியையைப் பற்றி உங்களுக்கு அதிகமான புரிதலே இல்லை. இன்று நான் கூறுவதில் அதிகமானவை இயேசுவை விசுவாசிக்கறவர்களை நோக்கி அல்ல, அல்லது அவர்களுடைய கருத்துகளை எதிர்ப்பதற்காக மட்டுமே நான் இதைக் கூறவில்லை. உண்மையில், வெளிப்படுத்தப்படுபவை உங்களுக்குள் இருக்கும் கருத்துகளே, ஏனெனில் நீங்கள் வேதாகமம் ஏன் புறம்பே வைக்கப்பட்டது, யேகோவாவின் கிரியை பழையதாகிப் போய்விட்டது என்று நான் ஏன் கூறுகிறேன், அல்லது இயேசுவின் கிரியை பழையதாகிப் போய்விட்டது என்று நான் ஏன் கூறுகிறேன் என்று புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வெளியே கூறாமல் பல கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள், அதுமட்டுமல்லாமல் உங்கள் இருதயத்தின் ஆழத்தில் ஏராளமான கண்ணோட்டங்களைப் புதைத்து வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை மற்றும் நீங்கள் வெறுமனே கூட்டத்தைப் பின்தொடருகிறீர்கள். நீங்கள் பல கருத்துக்களை வைத்திருக்கவில்லை என்று உண்மையில் நினைக்கிறீர்களா? நீங்கள் அவற்றைப் பேசுவதில்லை என்பதுதான் உண்மை! உண்மையில், நீங்கள் தேவனை ஏனோதானோவென்றுதான் பின்பற்றுகிறீர்கள், நீங்கள் மெய்யான வழியைத் தேட வரவே இல்லை, மேலும் நீங்கள் ஜீவனை பெறும் நோக்கத்துடன் வரவில்லை. என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க விரும்பும் மனப்பாங்குதான் உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் நீங்கள் உங்கள் பழைய கருத்துக்களில் பலவற்றை விட விரும்பவில்லை, உங்களில் ஒருவரால் கூட தங்களை முற்றிலும் அர்ப்பணிக்க இயலவில்லை. இந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னர், நீங்கள் உங்கள் சொந்த விதியைப் பற்றி தொடர்ந்து கவலைப்படுகிறீர்கள், இரவும் பகலும் உங்கள் சிந்தனைகள் அதை விடமுடியாமல் குழம்புகின்றன. பரிசேயர்களைப் பற்றி நான் பேசும் போது மதத்தில் இருக்கும் “முதியவர்களைக்” குறிப்பிடுகிறேன் என்று நீ எண்ணுகிறாயா? நீங்களே இந்தக் காலத்தின் மிகவும் நவீன பரிசேயர்களின் பிரதிநிதிகள் இல்லையா? என்னை வேதாகமத்துக்கு எதிராக வைத்து அளப்பவர்களைப் பற்றி நான் குறிப்பிடும் போது, நான் முற்றிலும் மத வட்டாரத்தில் இருக்கும் வேதாகம வல்லுநர்களை பற்றி குறிப்பிடுகிறேன் என்று நீ எண்ணுகிறாயா? மீண்டும் ஒருமுறை தேவனைச் சிலுவையில் அறைபவர்களைப் பற்றி நான் பேசும்போது, நான் மத வட்டாரங்களின் தலைவர்களைப் பற்றி பேசுகிறேன் என்று நீ நம்புகிறாயா? நீங்கள் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கேற்ற தலைசிறந்த நடிகர்கள் இல்லையா? ஜனங்களின் கருத்துக்களை எதிர்க்க நான் பேசும் அனைத்து வார்த்தைகளும் மத போதகர்களையும் மூப்பர்களையும் செய்யும் வெறும் கேலிதான் என்று நீ நினைக்கிறாயா? இந்த விஷயங்களில் எல்லாம் நீயும் உன் பங்கை வகிக்கவில்லையா? நீங்கள் ஒரு சில கருத்துக்களையே கொண்டிருப்பதாக நீ சமாதானம் அடைந்துகொண்டாயா? இது வேறு ஒன்றுமில்லை நீங்கள் எல்லாம் இப்போது மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பதற்குக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். உங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை நீங்கள் பேசுவதில்லை அல்லது அவற்றைப் பற்றிய உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை, ஆனால் பயபக்தியும் கீழ்ப்படிதலும் கொண்ட இருதயங்கள் உங்களுக்குள் இல்லவே இல்லை. நீங்கள் காணும் வண்ணமாய்ப் படிப்பதும், கவனிப்பதும், காத்திருப்பதும் இன்று நீங்கள் கடைப்பிடிக்கும் சிறந்த வழிகளாக இருக்கின்றன. நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பதற்குக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். இருந்தாலும் இது ஒருவிதமான மனதளவிலான தந்திரம் என்று நீங்கள் உணரவில்லையா? உங்களது ஒரு நொடி புத்திசாலித்தனம் நித்திய தண்டனையில் இருந்து உங்களைத் தப்புவிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் மிகவும் “ஞானம்” கொண்டவர்களாக இருக்கக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள்! மேலும், சிலர் இப்படிப்பட்ட கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள்: “என்றாவது மத வட்டாரங்களில் இருக்கும் ஜனங்கள், ‘உங்கள் தேவன் ஓர் அற்புதத்தையும் ஏன் செய்யவில்லை?’ என்று என்னிடம் கேட்டால் நான் எவ்வாறு விளக்கம் அளிப்பது?” இது இந்த நாட்களில் மத வட்டாரங்களில் இருக்கும் ஜனங்கள் மட்டுமே கேட்கப் போகும் ஒரு விஷயம் இல்லை; நீயும்கூட இந்நாளின் கிரியையை பற்றிப் புரிந்துகொள்ளவில்லை, மிகவும் அதிகமானக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறாய் என்பதாகும். மத அதிகாரிகள் என்று நான் குறிப்பிடும் போது யாரை நான் குறிப்பிடுகிறேன் என்று இன்னும் நீ அறியவில்லையா? நான் யாருக்காக வேதாகமத்தை விளக்குகிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா? தேவனின் மூன்று கட்ட கிரியைகளைப் பற்றி விளக்கும் போது நான் யாருக்காகப் பேசுகிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா? அந்த விஷயங்களை நான் கூறவில்லை என்றால் நீங்கள் அவ்வளவு எளிதாக நம்பிக்கை கொள்வீர்களா? உங்கள் தலைகளை அவ்வளவு எளிதாகத் தாழ்த்தி வணங்குவீர்களா? அந்தப் பழைய கருத்துக்களை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவீர்களா? குறிப்பாக யாருக்கும் அடிபணியாத அந்த “துணிச்சலுள்ள ஆண்கள்”—அவ்வளவு எளிதாக அடங்குவார்களா? உங்கள் மனிதத்தன்மை கீழ்த்தரமானது என்றும் நீங்கள் மிகக் குறைந்த திறமைகளைக் கொண்டவர்கள் என்றும், குறைந்த அளவே வளர்ச்சி அடைந்த மூளையைக் கொண்டவர்கள் என்றும், தேவனை விசுவாசிப்பதில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள் அல்ல என்றும், நீங்கள் உண்மையில் பல கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள் என்றும், உங்களுக்குள் இருக்கும் இயல்பு யாருக்கும் எளிதில் அடங்கும் தன்மை கொண்டது அல்ல என்பதை நான் அறிவேன். இருப்பினும் இன்று, நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாலும் வேறுவழியின்றியும் உங்களால் கீழ்ப்படிய முடிகிறது; நீங்கள் உங்கள் திறன்களுக்குச் சுதந்திரமான இயக்கத்தை அளிக்கமுடியாத ஓர் இரும்புக் கூண்டுக்குள் இருக்கும் புலிகள். உங்களுக்கு சிறகுகள் இருந்தாலும் கூட, பறப்பதற்குக் கடினமாக இருப்பதாக உணருவீர்கள். ஆசீர்வாதங்கள் அளிக்கப்படாவிட்டாலும் நீங்கள் இன்னும் பின்பற்றி வரவே விரும்புகிறீர்கள். இருந்தாலும், இது “நல்ல மனிதர்கள்” என்பதன் மனப்பாங்கு அல்ல; மாறாக, நீங்கள் முற்றிலுமாக விழத் தள்ளப்பட்டுவிட்டீர்கள் மேலும் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தக் கிரியைகள் எல்லாம் உங்களை விழத்தள்ளிவிட்டன என்பதைத்தான் இது காட்டுகிறது. உங்களால் அடையக் கூடியது ஏதாவது இருந்திருந்தால், நீங்கள் இன்றிருப்பதுபோல் இவ்வளவு கீழ்ப்படிகிறவர்களாக இருந்திருக்க மாட்டீர்கள், நீங்கள் எல்லாம் வனாந்தரத்தின் காட்டுக்கழுதைகள் போல் இருந்தீர்கள். இவ்வாறு, இன்று சொல்லப்படுவது பல்வேறு மதங்கள் மற்றும் மதப் பிரிவுகளின் ஜனங்களை நோக்கி மட்டும் அல்ல, அல்லது அவர்களின் கருத்துக்களை மறுப்பதற்காக மட்டும் அல்ல; இது உங்கள் கருத்துக்களையும் மறுப்பதற்காகும்.

நீதிக்கான நியாயத்தீர்ப்பு தொடங்கிவிட்டது. ஜனங்களுக்கான பாவநிவாரண பலியாக தேவன் இன்னும் செயல்படுவாரா? மீண்டும் ஒருமுறை அவர்களுக்காகப் பரம வைத்தியராக செயல்படுவாரா? தேவனுக்கு இதைவிடப் பெரிய அதிகாரம் இல்லையா? ஒரு கூட்டஜனங்கள் ஏற்கெனவே பரிபூரணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிங்காசனத்துக்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் அவர் பிசாசுகளை விரட்டி நோயாளிகளை சுகமாக்குவாரா? அது மிகவும் பழமையானதாகிவிட்டதல்லவா? இது தொடர்ந்தால் சாட்சியமளிப்பது சாத்தியமாக இருக்குமா? ஒரு தடவை சிலுவையில் அறையப்பட்ட பின்னர் தேவனை என்றென்றும் சிலுவையில் அறைந்தே வைத்திருக்க முடியுமா? அவர் பிசாசுகளை ஒரு தடவை துரத்திய பிறகு, அவரால் என்றென்றும் அவற்றைத் தொடர்ந்து துரத்த முடியுமா? இது ஓர் அவமானம் என்று எண்ணப்படாதா? இந்தக் கட்டத்தின் கிரியை முந்தைய கட்டத்தை விட உயர்ந்ததாக இருந்தால்தான் இந்த யுகம் முன்னேறிச் செல்லும், மேலும் கடைசி காலங்கள் நிகழும், மற்றும் அது இந்த யுகத்தின் முடிவுக்கான காலமாக இருக்கும். ஆகையால் சத்தியத்தை நாடும் ஜனங்கள் ஆழமான தரிசனங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும்; இதுவே அடிப்படையானது. தரிசனங்களைப் பற்றி உங்களோடு நான் பேசும்ம்போதெல்லாம், சிலர் கேட்க மனமற்று இமைகள் தாழ தலையசைப்பதை நான் எப்போதும் பார்க்கிறேன். மற்றவர்கள் கேட்கிறார்கள், “நீ ஏன் கவனிக்கவில்லை?”. அவர்கள் பதில்சொல்லுகிறார்கள், “இது என் வாழ்க்கைக்கு அல்லது உண்மைக்குள் நான் பிரவேசிக்க இது உதவாது. நமக்கு வேண்டியதெல்லாம் கடைப்பிடிப்பதற்கான வழிகளே.” எப்பொழுதெல்லாம் நான் கடைப்பிடிப்பதற்கான வழிகளை அல்லாமல் கிரியையைப் பற்றிப் பேசுகிறேனோ, அவர்கள் கூறுகிறார்கள், “நீ கிரியையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நான் தூங்க ஆரம்பித்து விடுகிறேன்.”. கடைப்பிடிப்பதற்கான வழிகளைப் பற்றி நான் பேச ஆரம்பித்ததும், அவர்கள் குறிப்பெடுக்க ஆரம்பிக்கிறார்கள், நான் மறுபடியும் கிரியைப் பற்றி விளக்க ஆரம்பித்ததும், அவர்கள் மீண்டும் கேட்பதை நிறுத்திவிடுகிறார்கள். இப்போது நீங்கள் எதைக்கொண்டு உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? கிரியையைப் பற்றிய தரிசனங்களில் அதன் ஓர் அம்சம் அடங்கியுள்ளது, மற்றும் அடுத்த அம்சம் உன் கடைப்பிடித்தல் ஆகும். நீ இந்த இரு அம்சங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உன் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தேடுவதில் உனக்கு தரிசனங்கள் இல்லை என்றால், பின்னர் உனக்கு அஸ்திபாரம் இருக்காது. உன்னிடம் சிறிதும் தரிசனம் இல்லாமல் கடைப்பிடிப்பதற்கான வழிகள் மட்டுமே இருந்தால், மேலும் ஒட்டுமொத்த நிர்வாகத் திட்டத்தின் கிரியை பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்றால், நீ ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறாய். தரிசனங்களை உள்ளடக்கியுள்ள சத்தியங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும், மற்றும் கடைப்பிடித்தலைப் பற்றிய சத்தியங்களைப் பொறுத்த வரையில், கடைப்பிடித்தலின் தகுந்த பாதைகளை புரிந்துகொண்ட பின்னர் நீ அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்; நீ வார்த்தைகளுக்கு ஏற்றபடி கடைபிடிக்க வேண்டும், மற்றும் உன் நிலைகளுக்கு ஏற்றபடி பிரவேசிக்க வேண்டும். தரிசனங்களே அஸ்திபாரங்களாகும், மேலும் இந்த உண்மையில் நீ கவனம் செலுத்தாவிட்டால், உன்னால் கடைசி வரை பின்பற்றி வர முடியாது; இந்த முறையிலான அனுபவம் உன்னை ஒன்று வழிவிலகச் செய்யும் அல்லது நீ கீழே விழுவதற்கும் தோல்வி அடைவதற்கும் வழிவகுக்கும். நீ வெற்றி அடைவதற்கு ஒரு வழியும் இருக்காது! பெரும் தரிசனங்களை அஸ்திபாரமாகக் கொண்டிராத ஜனங்கள் தோல்வியே அடைவார்கள்; அவர்களால் வெற்றிபெற முடியாது. உன்னால் உறுதியாக நிற்க முடியாது! தேவனை விசுவாசிப்பதில் என்ன அடங்கி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? தேவனைப் பின்பற்றுவது என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? தரிசனங்கள் இல்லாமல் நீ எந்தப் பாதையில் நடப்பாய்? இன்றைய கிரியையில் உனக்குத் தரிசனம் ஒன்றும் இல்லை என்றால் உன்னை நீ பரிபூரணப்படுத்திக் கொள்ளவே முடியாது. நீ யாரை விசுவாசிக்கிறாய்? நீ ஏன் அவரை விசுவாசிக்கிறாய்? நீ ஏன் அவரைப் பின்பற்றுகிறாய்? நீ உன் விசுவாசத்தை ஒரு வகையான விளையாட்டாய்ப் பார்க்கிறாயா? நீ உன் வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் பொருளாய்க் கையாளுகிறாயா? இன்றைய தேவன்தான் மாபெரும் தரிசனமாக இருக்கிறார். அவரைப் பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்? அவரை நீ எவ்வளவு கண்டிருக்கிறாய்? இன்றைய தேவனைக் கண்ட பின்னர், தேவனைப் பற்றிய உன் விசுவாசத்தின் அடித்தளம் திடமாக இருக்கிறதா? குழப்பமான வழியைப் பின்பற்றும் வரை உன்னால் இரட்சிப்பை அடைய முடியும் என்று நீ நம்புகிறாயா? கலங்கிய நீரில் மீன் பிடிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? அது அவ்வளவு எளிதானதா? இன்று தேவன் பேசும் வார்த்தைகளைப் பற்றி எத்தனைக் கருத்துகளை ஒதுக்கி வைத்திருக்கிறாய்? இன்றைய தேவனைப் பற்றிய ஒரு தரிசனம் உனக்கு இருக்கிறதா? இன்றைய தேவனைப் பற்றிய புரிதல் எங்கு இருக்கிறது? அவரைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது அவரைப் பார்ப்பதன் மூலம் அவரை[ஆ] அடையலாம் என்றும் உன்னை யாரும் விட்டுவிட முடியாது என்றும் நீ நம்புகிறாய். தேவனைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதானது என்று நீ கருதாதே. அவரை நீ அறிய வேண்டும், நீ அவரது கிரியையை அறிய வேண்டும், அவர் நிமித்தம் நீ கஷ்டங்களை சகித்துக்கொள்ளும், அவருக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்யும் விருப்பமும், அவரால் நீ பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பமும் கொண்டிருப்பதுதான் முக்கியமானது ஆகும். உனக்கு இருக்க வேண்டிய தரிசனம் இதுதான். எப்போதும் கிருபையை அனுபவிக்க வேண்டும் என்று உன் சிந்தனைகள் லயித்திருந்தால் அது நடக்காது. ஜனங்களின் மகிழ்ச்சிக்காக அல்லது அவர்கள் மேல் கிருபையைப் பொழியவே தேவன் இங்கு இருக்கிறார் என்று எண்ணாதே. உன் எண்ணம் தவறாகப் போய்விடும்! ஒருவன் அவரைப் பின்பற்ற தனது ஜீவனைப் பணயம் வைக்காவிட்டால், ஒருவன் அவரைப் பின்பற்றுவதற்காக உலக உடைமைகள் ஒவ்வொன்றையும் விட்டுவிடாவிட்டால், பின் அவர்களால் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்து வரமுடியாது. நீ தரிசனங்களை உன் அஸ்திபாரமாகக் கொள்ள வேண்டும். ஒரு நாள் துரதிர்ஷ்டம் உன் மேல் விழும்போது, உன்னால் என்ன செய்ய முடியும்? இன்னும் உன்னால் அவரைப் பின் தொடர முடியுமா? உன்னால் அவரைக் கடைசிவரை பின்பற்ற முடியும் என்று சாதாரணமாகக் கூறாதே. உன் கண்களை அகலத் திறந்து இப்போது என்ன காலம் என்று பார்ப்பது நல்லது. ஆலயத்தின் தூண்களைப் போல் இப்போது நீங்கள் இருந்தாலும், ஒரு காலம் வரும் அப்போது இத்தகைய எல்லா தூண்களையும் புழுக்கள் கடித்துத் துண்டாக்கி ஆலயத்தை நிலைகுலையச் செய்யும், ஏனெனில் தற்போது பல்வேறு தரிசனங்கள் இல்லாமலேயே நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்தச் சிறிய உலகங்களிலேயே கவனம் செலுத்துகிறீர்கள், மேலும் உங்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் பொருத்தமான தேடும் வழி என்னவென்று தெரியவில்லை, இன்றைய கிரியையின் தரிசனத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மட்டுமல்லாது நீங்கள் இந்த விஷயங்களை உங்கள் இருதயங்களிலும் வைப்பதில்லை. ஒருநாள் உங்கள் தேவன் உங்களை மிகவும் பழக்கமில்லாத ஒரு இடத்தில் வைப்பார் என்று நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லையா? ஒரு நாள் உங்களிடம் இருந்து நான் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டால் உங்களுக்கு என்னவாகும் என்று உங்களால் கற்பனை செய்யமுடியுமா? உங்கள் ஆற்றல் இப்போது இருப்பது போலவே இருக்குமா? உங்கள் விசுவாசம் மறுபடியும் தோன்றுமா? தேவனைப் பின்பற்றுவதில் “தேவன்” தான் இந்த மாபெரும் தரிசனம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்: இதுவே மிக முக்கியமான விஷயம். மேலும், பரிசுத்தமாக்கப்படுவதற்காக உலக மனுஷர்களிடம் இருந்து பிரிந்துவிடுவதால் நீங்கள் தேவனின் குடும்பத்தில் இருப்பீர்கள் என்று கருத வேண்டாம். இந்நாட்களில், சிருஷ்டிகளின் மத்தியில் தேவன் தாமே கிரியை செய்கிறார்; தமது சொந்தக் கிரியையைச் செய்ய அவர் தாமே ஜனங்களின் மத்தியில் வந்திருக்கிறார்—பிரச்சாரங்கள் செய்வதற்காக அல்ல. உங்கள் மத்தியில், மாம்சமாக வந்திருக்கும் பரலோகத்தில் இருக்கும் தேவனின் கிரியையே இன்றைய கிரியை என்று ஒரு சிலரால் கூட அறிய முடியவில்லை. இது உங்களைத் திறமையில் தன்னிகரற்றவர்களாக உருவாக்குவதைப் பற்றியதல்ல: இது மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிவதற்கும், மனுஷர்கள் சென்றடையும் இடத்தை அறிவதற்கும் மேலும் தேவனையும் அவரது முழுமையையும் அறிந்துகொள்வதற்கும் உங்களுக்கு உதவுவதற்கும் ஆகும். நீ சிருஷ்டிகரின் கையில் இருக்கும் ஒரு சிருஷ்டிப்புப் பொருளே என்பதை நீ அறிய வேண்டும். நீ எதைப் புரிந்துகொள்ள வேண்டும், நீ எதைச் செய்ய வேண்டும், மேலும் நீ எவ்வாறு தேவனைப் பின்பற்ற வேண்டும்—ஆகியவையே நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியங்கள் அல்லவா? நீ பார்க்க வேண்டிய தரிசனங்கள் அவை அல்லவா?

ஒருகாலத்தில் ஜனங்களுக்குத் தரிசனங்கள் இருந்தன, அவர்களுக்கு ஓர் அஸ்திபாரம் இருந்தது. இந்த அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ நடக்கும்போது உன்னால் பிரவேசிப்பது எளிதாக இருக்கும். இப்படி இருக்க, உனக்குப் பிரவேசிப்பதற்கான ஓர் அஸ்திபாரம் இருக்கும்போது உனக்கு சந்தேகங்கள் இருக்காது, மேலும் பிரவேசிப்பது உனக்கு எளிதானதாக இருக்கும். தரிசனங்களைப் புரிந்துகொள்வதின் இந்த அம்சமும் தேவனின் கிரியையை அறிந்துகொள்வதும் முக்கியமானது; இது உங்கள் சேமிப்பகத்தில் இருக்க வேண்டும். சத்தியத்தின் இந்த அம்சத்தை நீ கொண்டிராமல், கடைப்பிடித்தலின் பாதைகளைப் பற்றி பேசுவது எப்படி என்றுமட்டும் அறிந்திருந்தால், பின்னர் நீ பெரும் குறைபாடு உடையவனாக இருப்பாய். உங்களில் பலர் சத்தியத்தின் இந்த அம்சத்தை வலியுறுத்துவதில்லை என்பதை நான் கண்டறிந்தேன், மற்றும் அதை நீங்கள் கேட்கும் போது, வார்த்தைகளையும் உபதேசங்களையும் மட்டுமே கவனிப்பவர்களாகத் தோன்றுகிறீர்கள். ஒருநாள் நீ இழப்பைச் சந்திப்பாய். இந்நாட்களில் நீ கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை மற்றும் ஏற்பதில்லை என்று சில பேச்சுக்கள் உள்ளன; இந்த மாதிரி வேளைகளில் நீ பொறுமையாகத் தேட வேண்டும் மேலும் நீ புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். படிப்படியாக மேலும் மேலும் தரிசனங்களால் உன்னையே ஆயத்தப்படுத்திக்கொள். ஒரு சில ஆவிக்குரிய உபதேசங்களை நீ புரிந்துகொண்டாலும், தரிசனங்களில் கவனமே செலுத்தாமல் இருப்பதை விட இது கொஞ்சம் நன்மையானதாக இருக்கும், மேலும் இது ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருப்பதை விட நன்மையாக இருக்கும். இவை எல்லம் உன் பிரவேசத்திற்கு உதவிகரமானவை, மற்றும் உன் சந்தேகங்களை எல்லாம் போக்கும். நீ கருத்துக்களால் நிரப்பப்படுவதை விட இது சிறப்பானது. இந்தத் தரிசனங்கள் உன் அஸ்திபாரமாக அமைந்தால் நீ இன்னும் சிறப்பாக இருப்பாய். உனக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்காது, மேலும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் நீ பிரவேசிக்கலாம். ஏன் எப்போதும் ஒரு குழப்பமான மற்றும் சந்தேகமான முறையில் தேவனை பின்பற்றி சிரமத்துக்குள்ளாகிறாய்? இது உன் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்வதைப் போல் இல்லையா? ராஜ்யத்துக்குள் பெருமையுடனும் தன்னம்பிக்கையுடனும் நுழைவது எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஏன் இவ்வளவு சந்தேகங்களுடன் இருக்க வேண்டும்? நீ முற்றிலுமாக நரகத்துக்கு ஊடாக உன்னை ஆட்படுத்திக் கொள்ளவில்லையா? யேகோவாவின் கிரியை, இயேசுவின் கிரியை, மேலும் இந்தக் கட்டத்தின் கிரியை ஆகியவற்றைப் பற்றிய ஒரு புரிதலைப் பெற்றுவிட்டாய் என்றால் உனக்கு ஓர் அஸ்திபாரம் அமைந்துவிடும். இக்கணத்தில், நீ அது மிக எளிமையானது என்று கற்பனை செய்யக் கூடும். சில ஜனங்கள் கூறுகிறார்கள், “நேரம் வந்து பரிசுத்த ஆவியானவர் மாபெரும் கிரியையை தொடங்கும் போது, நான் இந்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேச முடியும். என்னால் இப்போது உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் என்னை அந்த அளவுக்கு தெளிவுபடுத்தவில்லை.” அது அவ்வளவு எளிதல்ல. இப்போது நீ சத்தியத்தை[இ] ஏற்றுக்கொள்ள விரும்புகிறாய், பின் அதை நீ நேரம் வரும்போது திறமையாகப் பயன்படுத்துவாய் என்பது போல் அல்ல அது. அது அவ்வாறு இருக்கத் தேவையில்லை. தற்போது நீ நல்ல முறையில் ஆயத்தமாகியிருப்பதாகவும், மேலும் அந்த மத ரீதியான ஜனங்கள் மற்றும் பெரும் கொள்கை வாதிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல் மறுப்பதற்கும் கூட உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நம்புகிறாய். உன்னால் உண்மையில் அவ்வாறு செய்ய முடியுமா? உனது மேலோட்டமான அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் புரிதலைப் பற்றி நீ பேசுவாய்? சத்தியத்தைக் கொண்டு ஆயத்தமாவதும், சத்தியத்தின் யுத்தத்தை நடத்துவதும், மேலும் தேவனின் நாமத்துக்கு சாட்சி அளித்தலும் ஆகியவற்றை நீ சிந்திக்கவில்லை—தேவன் கிரியை செய்யும்போது அவை எல்லாம் நிறைவேற்றப்படும். அதற்குள், நீ சில கேள்விகளால் தடுமாற்றம் அடைவாய், மற்றும் பின்னர் நீ வாயடைத்துப்போவாய். இந்தக் கட்டத்தின் கிரியையைப் பற்றி உனக்குத் தெளிவான புரிதல் இருக்கிறதா இல்லையா, மேலும் அதைப் பற்றி உண்மையில் உனக்கு எவ்வளவு தெரியும் என்பதுதான் முக்கியமானது. விரோதியின் சக்திகளை உன்னால் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அல்லது மத சக்திகளைத் தோற்கடிக்க முடியவில்லை என்றால், பின்னர் நீ தகுதியற்றவனாக இருக்க மாட்டாயா? நீ இன்றைய கிரியையை அனுபவத்திருக்கிறாய், உன் சொந்தக் கண்ணால் பார்த்திருக்கிறாய், உன் சொந்தக் காதால் கேட்டிருக்கிறாய், ஆனால், இறுதியில், உன்னால் சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், அதன்பின்னும் தொடர்ந்து வாழும் முரட்டுத் தைரியம் உனக்கு இருக்குமா? யாரை உன்னால் எதிர்கொள்ள முடியும்? அது அவ்வளவு எளிதானதாக இருக்கும் என்று இப்போதே கற்பனை செய்யாதே; நீ கற்பனை செய்வது போல் எதிர்காலத்தின் கிரியை அவ்வளவு எளிதானதாக இருக்காது; சத்தியத்தின் யுத்தத்தில் யுத்தம் செய்வது அந்த அளவுக்கு எளிதானது அல்ல, அவ்வளவு நேரடியானதும் அல்ல. இப்போது நீ அதற்கு ஆயத்தப்பட வேண்டும்; சத்தியத்தால் நீ ஆயத்தப்படவில்லை என்றால், பின்னர் நேரம் வரும்போது மற்றும் பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்கு மாறான முறையில் கிரியை செய்யாவிட்டால், நீ இழந்துபோய் நிற்பாய்.

அடிக்குறிப்புகள்:

அ. மூல உரையில் “அவர்கள் நினைக்கிறார்கள்” என்ற சொற்றொடர் இல்லை.

ஆ. மூல உரையில் “அவரை” என்ற வார்த்தை இல்லை.

இ. மூல உரையில் “சத்தியத்தை” என்ற வார்த்தை இல்லை.

முந்தைய: பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு

அடுத்த: பாதையின் கடைசிப் பகுதியில் நீ எவ்வாறு நடக்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக