பாதையின் கடைசிப் பகுதியில் நீ எவ்வாறு நடக்க வேண்டும்

நீங்கள் இப்போது பாதையின் கடைசிப் பகுதியில் இருக்கிறீர்கள். இது பாதையின் முக்கியப் பகுதி ஆகும். ஒருவேளை நீ அதிகத் துன்பங்களை சகித்திருக்கலாம், ஏராளமான கிரியைகளைச் செய்திருக்கலாம், பல சாலைகளில் பயணம் செய்திருக்கலாம், அதிக அளவில் பிரசங்கங்களைக் கேட்டிருக்கலாம்; நீ இப்போது இருக்கும் இடத்தை அடைவது என்பது ஒருவேளை எளிதாக இல்லாமல் இருந்திருக்கலாம். நீ தற்போது எதிர்கொள்ளும் துன்பங்களை உன்னால் சகித்துக்கொள்ள முடியாமல், கடந்த காலத்தில் நீ செய்ததையே தொடர்ந்தாய் என்றால், பின்னர் உன்னை பரிபூரணப்படுத்த முடியாது. இந்த வார்த்தைகளின் நோக்கம் உன்னை பயமுறுத்துவது அல்ல—அவை உண்மைகள். பேதுரு ஏராளமான தேவனுடைய கிரியைகளுக்கு உட்பட்ட பின்னர், சில விஷயங்களில் அவன் தெளிந்த அறிவையும் அதிக அளவில் பகுத்தறிவையும் பெற்றான். ஊழியத்தின் கொள்கை பற்றி அவன் பல விஷயங்களைப் புரிந்துகொண்டான். பின்னர் இயேசு அவனிடம் ஒப்படைத்ததில் அவனால் முற்றிலுமாக அர்ப்பணிக்க முடிந்தது. அவன் தானே செய்த பல விஷயங்களுக்கு அவன் தேவனுக்குக் கடமைப் பட்டிருப்பதையும் அவருக்கு அவனால் அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியாது என்பதையும் உணர்ந்ததனாலேயே பெரும்பாலும் அவனால் பெரிய புடமிடுதலைப் பெற முடிந்தது. மனுஷன் மிகவும் சீர்கெட்டவனாக இருக்கிறான் என்பதையும் பேதுரு அறிந்தான். இதனால் தன் மனசாட்சியில் அவனால் குற்றத்தை உணரமுடிந்தது. இயேசு பல விஷயங்களைப் பேதுருவிடம் கூறியிருந்தார். ஆனால் இந்த விஷயங்கள் சொல்லப்பட்டபோது, அவனால் சிறிதளவே புரிந்துகொள்ள முடிந்ததோடு அவன் இன்னும் கொஞ்சம் எதிர்ப்பையும் கலகத்தன்மையையும் கொஞ்சகாலம் உடையவனாகவே இருந்தான். இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர், அவன் இறுதியாக ஒரு விழிப்புணர்வு போன்றதொன்றை அனுபவித்தான். அவன் தனக்குள் தன்னைப் பற்றிய கடுமையான நிந்தையின் வேதனையை உணர்ந்தான். முடிவில், ஒரு நிலையை அது அடைந்தபோது, தவறான எண்ணங்களை வைத்திருப்பது ஏற்க முடியாதது என்று உணர்ந்தான். அவன் தன்னுடைய நிலையை நன்கு அறிந்திருந்தான். அதுமட்டுமல்லாமல் அவன் கர்த்தரின் பரிசுத்த நிலையையும் நன்றாக அறிந்திருந்தான். இதன் விளைவாக, அவனுக்குள் கர்த்தர் பேரில் அன்புள்ள ஓர் இருதயம் இன்னும் அதிகமாக வளர்ந்தது. அவன் தன்னுடைய சொந்த ஜீவனில் அதிக கவனம் செலுத்துபவனானான். இதனால் அவன் பெரும் கஷ்டங்களை அனுபவித்தான். சில வேளைகளில் அவன் மரணத்துக்கு ஏதுவான வியாதிக்கு ஆட்பட்டு இறந்துவிடும் நிலையில் கூட இருந்தான். இப்படிப் பல முறை அவன் புடமிடப்பட்ட பிறகு, அவன் தன்னைப் பற்றிய அதிகப் புரிதலை அடைந்து கர்த்தரிடத்தில் உண்மையான அன்பை செலுத்த ஆரம்பித்தான். அவனுடைய முழு வாழ்க்கையும் புடமிடப்படுதலிலும், அதற்கும் மேலாக சிட்சையில் செலவாயிற்று என்று கூடச் சொல்லலாம். பிற எந்த நபரையும் விட அவனுடைய அனுபவம் வித்தியாசமானது. பரிபூரணப்படுத்தப்படாத எவரையும் விட அவனது அன்பு அளவுகடந்ததாக இருந்தது. அவன் தன் வாழ்நாளில் அதிக வேதனைகளை அனுபவித்ததாலும் அவனுடைய அனுபவங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்த காரணத்தாலுமே அவன் ஒரு முன்மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பேதுருவைப் போல உங்களால் உண்மையிலேயே பாதையின் கடைசிப் பகுதியை நடந்து கடக்கமுடியுமானால், உங்களுடைய ஆசீர்வாதங்களை எடுத்துப்போட ஒரு சிருஷ்டி கூட இருப்பதில்லை.

பேதுரு மனச்சாட்சியுள்ள ஒரு மனுஷன். அவனுக்கு இருந்த மனிதத்தன்மை அவ்வாறு இருந்த போதிலும், முதன்முதலில் அவன் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியபோது அவனுக்குத் தவிர்க்க முடியாதவாறு பல எதிரானதும் கலகத்தன்மை வாய்ந்ததுமான எண்ணங்கள் இருந்தன. ஆனால் இயேசுவைப் பின்பற்றி வந்தபோது, ஜனங்கள் இந்த வகையில்தான் இருக்க வேண்டும் என்று நம்பி இந்த விஷயங்களை அவன் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே, முதலில் அவன் எந்த நிந்தையையும் உணரவும் இல்லை, அதனால் அவன் கையாளப்படவும் இல்லை. இயேசுவும் பேதுருவின் எதிர் செய்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை, அவற்றைக் கவனத்தில் கொள்ளவும் இல்லை, ஆனால் தாம் செய்யவேண்டிய கிரியைகளைத் தொடர்ந்து செய்துவந்தார். பேதுருவையும் மற்றவர்களையும் ஒன்றுமில்லாதவற்றிற்கெல்லாம் ஒருபோதும் குறைகூறவுமில்லை. நீ கூறலாம்: “அவர்களுக்கு இருந்த எண்ணங்களைப் பற்றி இயேசுவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமோ?” இல்லவே இல்லை. அது ஏனென்றால் அவர் பேதுருவை உண்மையிலேயே புரிந்துவைத்திருந்தார்—உண்மையில், அவனைப் பற்றி ஒரு பெரிதான புரிதலை அவர் கொண்டிருந்தார் என்று கூறலாம்—அதனால் இயேசு அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மனுக்குலத்தை வெறுத்தார் ஆனால் அவர்கள் மேல் பரிதாபப்பட்டார். அந்தக் காலத்தில் பவுலைப் போல எதிர்த்துநிற்கிறவர்களும் பேதுருவைப் போல் பல எண்ணங்களை உடையவர்களும் இப்போதும் உங்களில் பலர் இல்லையா? உனது மூன்றாம் உணர்வான புலனுணர்வை நீ அதிகமாக நம்பாமல் இருந்தால் அது நல்லது என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். அது நம்பமுடியாததும் வெகு காலத்திற்கு முன்னரே முற்றிலுமாக சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டதுமாக இருக்கிறது. உன் புலனுணர்வு பரிபூரணமாகவும் பிழையற்றதுமாய் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? பவுல் பலமுறை கர்த்தராகிய இயேசுவை எதிர்த்தான். ஆனால் இயேசு அதற்கு எதிர்வினை எதையும் ஆற்றவில்லை. வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கி பிசாசுகளைத் துரத்த வல்லவராயிருந்த இயேசுவுக்குப் பவுலுக்குள் இருந்த “பிசாசைத்” துரத்த முடியாமல் இருந்திருக்குமோ? இயேசு உயிர்த்தெழுந்து பரத்துக்கு ஏறிய பின்பு, இயேசுவின் சீஷர்களைப் பவுல் பலவந்தமாகப் பிடித்துச் சிறையில் தொடர்ந்து அடைத்துவரும் போதுதான், தம்ஸ்குவுக்குச் செல்லும் வழியில் கடைசியாக இயேசு அவனுக்குத் தோன்றி அவனை ஏன் கீழே வீழ்த்தினார்? இயேசு மிக மெதுவாகத்தான் எதிர்வினை ஆற்றினார் என்பதாக இருக்குமோ? அல்லது மாம்சத்தில் இருக்கும்போது அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லாமல் இருந்திருக்குமோ? நீ இரகசியமாக என் முதுகுக்குப் பின்னால் அழிக்கிறவனாகவும் எதிர்க்கிறவனாகவும் இருப்பது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து நீ பெறும் கொஞ்சம் பிரகாசத்தைப் பயன்படுத்தி என்னை எதிர்க்கலாம் என்று நினைக்கிறாயா? பேதுரு முதிர்ச்சி அடையாமல் இருந்தபோது அவன் இயேசுவைப் பற்றி பல எண்ணங்களை வைத்திருந்தான். அப்படியிருக்க அவன் ஏன் குற்றப்படுத்தப்படவில்லை? இப்போது, பலர் குற்றவுணர்வு இல்லாமலேயே விஷயங்களைச் செய்துவருகிறார்கள். நீங்கள் செய்வது சரியானது இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டாலும், அவர்கள் அதைக் கேட்பதில்லை. இது முற்றிலும் மனுஷனின் கலகபுத்தியால் அல்லவா? நான் இப்போது நிறைய கூறிவிட்டேன். ஆனால் நீ மனசாட்சியின் பார்வை கொஞ்சம்கூட இல்லாமல் இருக்கிறாய். ஆகவே பாதையின் கடைசிப் பகுதியில் பாதையின் முடிவு வரை உன்னால் எவ்விதம் நடக்கமுடியும். இந்தக் கேள்வி மிகப் பிரமாண்டமான அளவிலானது என்று நீ உணரவில்லையா?

ஜெயங்கொள்ளப்பட்ட பின்னர் ஜனங்கள் தேவனின் திட்டமிடலுக்குக் கீழ்ப்படியக் கூடியவர்களாக இருக்க வேண்டும்; தேவனில் அன்புகூர அவர்களுக்குத் தங்கள் விசுவாசம் மற்றும் தங்கள் சித்தம் ஆகிய இரண்டும் உள்ளது. அவரைப் பின்பற்ற அவர்கள் இவற்றைச் சார்ந்திருக்கலாம். ஆகவே பாதையின் கடைசிப் பகுதியில் எப்படி நடக்கலாம்? நீ உபத்திரவத்தை அனுபவிக்கும் காலத்தில், எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும், அதோடு துன்பப்பட உனக்கு சித்தமும் இருக்க வேண்டும்; இந்த வகையில் மட்டுமே உன்னால் பாதையின் இந்தப் பகுதியை நன்றாகக் கடக்க முடியும். பாதையின் இந்தப் பகுதியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று நீ நினைக்கிறாயா? என்ன செயலை நீ நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும்; நீ உன் திறனை மேம்படுத்தி போதுமான சத்தியத்தால் உன்னை நீயே ஆயத்தப்படுத்த வேண்டும். இது ஒரு நாள் இரு நாள் வேலை அல்ல. நீ நினைப்பது போல அத்தனை சுலபமானதும் அல்ல! பாதையின் கடைசிப் பகுதியில் நடப்பது என்பது உண்மையில் உனக்கு எந்த வகையான விசுவாசமும் சித்தமும் இருக்கின்றன என்பதைப் பொறுத்தது. உனக்குள் கிரியை புரியும் பரிசுத்த ஆவியானவரை ஒருவேளை உன்னால் காண முடியாமல் இருக்கலாம், அல்லது ஒருவேளை திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் கண்டறிய முடியாமல் இருக்கலாம். ஆகவே நீ எதிர்மறையாகவும் ஏமாற்றம் அடைந்தவனாகவும், எதிர்வரும் பாதையை எதிர்கொள்ள முழுவதுமாக விரக்தி அடைந்தவனாகவும் காணப்படலாம். குறிப்பாகக் கடந்த காலத்தின் மாபெரும் வீரர்கள் விழுந்துவிட்டார்கள்—இவையெல்லாம் உனக்கு ஓர் அடியல்லவா? இந்த விஷயங்களை நீ எவ்வாறு பார்க்க வேண்டும்? உனக்கு விசுவாசம் இருக்கிறதா அல்லது இல்லையா? இன்றைய கிரியையை நீ முழுவதுமாகப் புரிந்துகொள்ளுகிறாயா அல்லது இல்லையா? பாதையின் கடைசிப் பகுதியில் உன்னால் வெற்றிகரமாக நடக்க முடியுகிறதா என்பதை இந்த விஷயங்களால் தீர்மானிக்க முடியும்.

நீங்கள் பாதையின் கடைசிப் பகுதியில் இருக்கிறீர்கள் என்று ஏன் கூறப்படுகிறது? இது ஏனென்றால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் ஜனங்கள் அடைய வேண்டிய எல்லாவற்றையும் நான் கூறியிருக்கிறேன். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் பற்றியும் கூட நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். ஆகவே, நீங்கள் இப்போது நடந்துகொண்டு இருப்பது நான் ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பாதையின் கடைசிப் பகுதியாகும். நீங்கள் சுதந்திரமாக வாழும் திறனை அடைய வேண்டும் என்பது மட்டுமே எனக்குத் தேவையானதாகும்; நீ எப்போதும் எந்த நேரத்திலும் நடக்க ஒரு பாதை இருக்கும். முன்போல நீ உன் திறனை அதிகரிப்பாய். இயல்பாக தேவனின் வார்த்தைகளை வாசித்து, ஒரு சாதாரண மனித வாழ்க்கையை வாழ்வாய். நீ இப்படி வாழவே இப்போது நான் உன்னை வழிநடத்துகிறேன். ஆனால் எதிர்காலத்தில் உன்னை நான் வழிநடத்தாத போது, உன்னால் இப்படியே வாழ முடியுமா? உன்னால் தொடர்ந்து செல்ல முடியுமா? இதுவே பேதுருவின் அனுபவமாக இருந்தது: இயேசு அவனை வழிநடத்திய போது, அவனுக்குப் புரிதல் இல்லாமல் இருந்தது; அவன் எப்போதும் ஒரு குழந்தையைப் போல கவலையற்றவனாக இருந்தான். அவன் செய்த விஷயங்களைக் குறித்து அவன் தீவிரமாக இல்லை. இயேசு பிரிந்து சென்ற பிறகே அவனது இயல்பான மனித வாழ்க்கை தொடங்கியது. சாதாரண மனிதத்தன்மையின் சில உணர்வுகளும் சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய சில விஷயங்களும் அவனுக்கு இருந்தாலும், இயேசு பிரிந்து செல்லும் வரை அவனது உண்மையான அனுபவத்துக்கும் தேடலுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இல்லாமல் இருந்தது. உங்களுடைய இப்போதைய சூழ்நிலை என்ன? நான் இப்போது இந்த வழியில் உங்களை வழிநடத்திச் செல்கிறேன். நீ இது அற்புதமாக இருக்கிறது என்று நினைக்கிறாய். எந்த ஒரு சூழலும் சோதனையும் உனக்கு நிகழாது. இருந்தாலும், இந்த வழியில் உண்மையில் உனக்கு என்ன வகையான வளர்ச்சி இருக்கிறது என்பதைக் காண எந்த வழியும் இல்லை, இது மட்டுமல்லாமல் நீ உண்மையில் சத்தியத்தை நாடும் ஒருவனா என்பதைக் காணவும் எந்த வழியும் இல்லை. நீ உன்னுடைய சாராம்சத்தைப் புரிந்துகொள்கிறாய் என்று உன் வாயால் சொல்லுகிறாய், ஆனால் இவை வெற்று வார்த்தைகள். எதிர்காலத்தில்தான், உண்மைகள் உன்னிடம் வரும்போது, உன்னுடைய புரிதல் சரிபார்க்கப்படும். இப்போது, உனக்கு இந்த வகையான புரிதல் உள்ளது: “என் மாம்சம் மிகவும் சீர்கெட்டது என்று நான் புரிந்துகொள்கிறேன். தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதும், தேவனை எதிர்ப்பதுமே ஜனங்களின் மாம்சத்தின் சாராம்சம் ஆகும். தேவனின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதே அவர் ஜனங்களை மேலே எழுப்புவதற்கான வழியாகும். நான் இப்போது அதைப் புரிந்துகொண்டேன். நான் தேவனின் அன்புக்கு ஈடுசெய்ய விரும்புகிறேன்.” ஆனால் இதை சுலபமாகச் சொல்லிவிடலாம். பின்னர் உபத்திரவம், சோதனைகள், துன்பங்கள் உனக்கு வரும்போது, இந்த விஷயங்களுக்கு உட்படுவது எளிதாக இருக்காது. நீங்கள் தினந்தோறும் இந்த வழியைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் இன்னும் உங்களால் உங்கள் அனுபவத்தைத் தொடர முடியவில்லை. நான் உங்களை விட்டுவிட்டு, உங்கள் பேரில் எந்த அக்கறையும் செலுத்தாவிட்டால் இது இன்னும் மோசமாக இருக்கும்; பல ஜனங்கள் கீழே விழுந்து அவமானத்தின் ஓர் அடையாளமான உப்புத்தூணாக மாறிவிடுவார்கள். இத்தகைய நிகழ்வுகள் நேர்வதற்கு சாத்தியக்கூறு அதிகமே. இதைப் பற்றி நீ கவலையோடு அல்லது கலக்கத்தோடு இல்லையா? பேதுரு இந்த வகையான சூழலுக்கு ஆட்பட்டான். அந்த வகையான துன்பங்களையே அனுபவித்தான். ஆனால் அவன் அதன் பின்னும் உறுதியாக நின்றான். அந்தச் சூழலுக்குள் நீ உட்படுத்தப்பட்டால், உன்னால் உறுதியாக நிற்க முடியுமா? இயேசு பூமியில் இருந்தபோது சொன்ன விஷயங்களும் செய்த கிரியைகளுமே பேதுருவுக்கு ஓர் அஸ்திபாரத்தை அளித்தன. இந்த அஸ்திபாரத்தில் இருந்துதான் அவன் தன் பிந்தைய பாதையில் நடந்தான். உன்னால் அந்த நிலையை அடைய முடியுமா? நீ நடந்திருக்கிற பாதைகளாலும் நீ புரிந்துகொண்டிருக்கிற சத்தியங்களாலும்—எதிர்காலத்தில் நீ உறுதியாக நிற்கக் கூடிய அஸ்திபாரமாக மாற முடியுமா? பின்னர் நீ உறுதியாக நிற்பதற்கான தரிசனமாக இந்த விஷயங்களால் மாற முடியுமா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்—ஜனங்கள் தற்போது புரிந்துகொள்ளுவது எல்லாம் கொள்கைகள் என்று ஒருவரால் சொல்ல முடியும். இது ஏனெனில் அவர்கள் புரிந்துகொள்ளும் எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு அனுபவம் இருப்பதில்லை. நீ முற்றிலுமாக ஒரு புதிய ஒளியால் வழிநடத்தப்பட்டதனாலேயே உன்னால் இப்போது வரை தொடர முடிந்திருக்கிறது. உன்னுடைய வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துவிட்டதால் அல்ல, மாறாக இந்நாள் வரை என் வார்த்தைகள் உன்னை வழிநடத்தியதால்தான்; உனக்குப் பெரிய விசுவாசம் இருப்பதனால் அல்ல. மாறாக என் வார்த்தைகளின் ஞானத்தால்தான், அது இன்று வரை முற்றிலுமாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு ஒன்றையும் உன்னால் செய்ய விடாமல் வைத்ததனால்தான் முடிந்திருக்கிறது. இப்போது நான் பேசாவிட்டால், என் குரலை எடுத்துரைக்காவிட்டால், உன்னால் தொடர்ந்து போக முடியாது, அதுமட்டுமல்லாமல் முன்னால் நகருவதை உடனடியாக நிறுத்திவிடுவாய். இதுதானே உங்கள் உண்மையான வளர்ச்சி? எந்த அம்சத்தில் இருந்து உள்ளே பிரவேசிப்பது, உங்களுக்குக் குறைபாடாக இருப்பதை எந்த அம்சத்தில் நிவிர்த்தி செய்வது என்பது பற்றி உங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. ஓர் அர்த்தமுள்ள மனுஷ வாழ்க்கையை எப்படி வாழ்வது, தேவனுடைய அன்பை எப்படித் திரும்பவும் ஈடுசெய்வது அல்லது வல்லமையான மகத்தான ஒரு முறையில் சாட்சி கொடுப்பது என்பதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளுவதில்லை. இந்த விஷயங்களை நீங்கள் முற்றிலும் அடைய முடியாதவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் சோம்பேறிகளாகவும் முட்டாள்களாகவும் இருக்கிறீர்கள்! ஏதாவது ஒன்றை சார்ந்திருப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று. புதிய ஒளியையும் உங்களுக்கு முன்னால் வழிநடத்திச் செல்லும் ஒருவரையும் நீங்கள் சார்ந்திருக்கலாம். நீ புதிய ஒளியையும் மிகவும் சமீபத்திய பேச்சுக்களையும் முற்றிலுமாக சார்ந்திருந்ததனாலேயே இன்று வரை உன்னால் நிலைத்திருக்க முடிந்திருக்கிறது. மெய்யான வழியைப் பின்தொடரும் திறமை பெற்றிருந்த பேதுருவைப் போல அல்லது யேகோவா எவ்வாறு சோதித்த போதிலும் அவர் தன்னை ஆசீர்வதித்தாலும் ஆசீர்வதிக்காவிட்டாலும் யேகோவாவே தேவன் என்று விசுவாசித்து அர்ப்பணிப்போடு ஆராதித்த யோபுவைப் போல நீங்கள் கொஞ்சமும் இல்லை. உன்னால் அதைச் செய்ய முடியுமா? நீங்கள் எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்? நியாயத்தீர்ப்பும், சிட்சையும் சபிப்பும் ஓர் அம்சம் மற்றும் உங்களை ஜெயங்கொள்ளும் இரகசியங்கள் இன்னொரு அம்சம். நீங்கள் எல்லோரும் கழுதைகளைப் போல் இருக்கிறீர்கள். நான் பேசுவது போதுமான அளவுக்கு உங்களுக்கு உயர்ந்ததாக இல்லாவிட்டால், இரகசியங்கள் இல்லை என்றால், உங்களை ஜெயங்கொள்ள முடியாது. பிரசங்கிக்கும் ஒரு நபராக இருந்து, ஒரு கால அளவுக்கு ஒரே விஷயங்களையே எப்போதும் பிரசங்கித்துக் கொண்டிருந்தால், நீங்கள் எல்லோரும் விட்டகன்று இரண்டு வருடங்களுக்குள் சிதறிப் போயிருப்பீர்கள்; உங்களால் தொடர்ந்து செல்ல முடியாது. உங்களால் ஆழமாகச் செல்வது எப்படி என்று தெரியவில்லை, அல்லது சத்தியத்தையோ ஜீவிதத்தின் வழியையோ எவ்வாறு பின்தொடர்வது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவதில்லை. இரகசியங்கள் அல்லது தரிசனங்கள் அல்லது தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார், அல்லது பேதுருவின் அனுபவங்கள் அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்டத்தின் பின்னணி ஆகியவற்றைப் பற்றிக் கேட்பது போன்று உங்களுக்குப் புதுமையாகத் தோன்றுவதை மட்டுமே நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள்…. நீங்கள் இந்த விஷயங்களைக் கேட்பதிலேயே விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். இவைகளை அதிக அதிகமாகக் கேட்கும் போது அதிகமாய் உற்சாகம் அடைகிறீர்கள். உங்களது சோகத்தையும் அலுப்பையும் போக்கவே நீங்கள் இவைகளை வெறுமனே கேட்கிறீர்கள். உங்கள் வாழ்க்கைகள் இந்தப் புதுமையான விஷயங்களாலேயே நிலைத்திருக்கின்றன. உங்கள் சொந்த விசுவாசத்தினால்தான் இன்றிருக்கும் இடத்தை நீங்கள் அடைந்திருப்பதாக எண்ணுகிறீர்களா? இது உங்களிடமிருக்கும் அற்பமான, பரிதாபத்திற்குரிய வளர்ச்சி அல்லவா? உங்கள் நேர்மை எங்கே? உங்கள் மனிதத்தன்மை எங்கே? உங்களுக்கு மனுஷ ஜீவிதம் இருக்கிறதா? பரிபூரணப்படுத்தப்பட்டதற்கான எத்தனை கூறுகள் உங்களுக்கு இருக்கின்றன? நான் கூறுவது உண்மை அல்லவா? நான் இந்த வகையில்தான் பேசிக் கிரியை செய்கிறேன். ஆனால் நீங்கள் மனதைச் செலுத்துவதே இல்லை. நீங்கள் பின்பற்றும்போதே பார்க்கிறீர்கள். நீங்கள் எப்போதும் ஓர் அலட்சியமான தோற்றத்தையே பராமரிக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கண்டிப்பின் கீழ்தான் வழிநடத்தப்படுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் இவ்விதமே தொடர்ந்திருக்கிறீர்கள்; சிட்சையும், சுத்திகரிப்பும், தண்டித்தலுமே நீங்கள் இன்று இருக்கும் இடத்துக்கு வழிநடத்தி இருக்கின்றன. ஜீவ பிரவேசத்தைப் பற்றி சில பிரசங்கங்கள் பிரசங்கிக்கப்படாமல் இருந்திருந்தால் நீங்கள் எல்லோரும் முன்னரே வழுவிப்போயிருப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முன்னை விட முட்டாள்தனமாக இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் வயிறுகளில் முழுதுவதுமாக கெட்ட நீரைத் தவிர எதுவுமில்லை! இதற்கு முன்னர் மனுக்குலம் புரிந்திராத சில விஷயங்களான ஒரு சில இரகசியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதனால்தான் இதுவரை உங்களால் நிலைத்திருக்க முடிந்திருக்கிறது. பின்பற்றாமல் இருக்க உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. அதனால் உங்களை நீங்களே ஆயத்தப்படுத்திக்கொண்டு கூட்டத்தைப் பின்பற்றுகிறீர்கள். என்னுடைய வார்த்தைகளின் மூலம் அடைந்த பலனே இது. இது நிச்சயமாக நீங்களாகவே சாதித்த ஒரு சாதனை அல்ல. தற்பெருமை பேசிக்கொள்ள அதில் உங்களுக்கு ஒன்றுமில்லை. ஆகவே, கிரியையின் இந்தக் கட்டத்தில் பிரதானமாக வார்த்தைகளின் மூலமாகவே தற்போதைய நாளுக்குள் வழிநடத்தப்பட்டிருக்கிறீர்கள். இல்லாவிட்டால், உங்கள் மத்தியில் உள்ளவர்களால் கீழ்ப்படிய முடியுமா? இன்றுவரை நிலைத்திருக்க யாரால் முடியும்? முதலில் இருந்தே கிடைக்கும் முதல் தருணத்தில் நீங்கள் விட்டுச்செல்ல விரும்பியும் அதற்குத் துணியாமல் இருந்தீர்கள்; உங்களுக்குத் தைரியம் இல்லாமல் இருந்தது. இந்நாள்வரை அரை மனதோடேயே நீங்கள் பின்தொடர்ந்து வருகிறீர்கள்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு விட்டுச்சென்ற பின்னரே பேதுரு தன் வழியில் செல்லத் தொடங்கி அவன் நடக்க வேண்டிய பாதையில் நடக்க ஆரம்பித்தான்; தன்னுடைய போதமைகளையும் குறைபாடுகளையும் பார்த்த பின்னரே அவன் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். தனக்கு தேவனிடம் இருக்கும் அன்பு மிகக் குறைவு என்பதையும், துன்பப்படுவதற்கான விருப்பம் போதுமானதாக இல்லை என்பதையும், தனக்கு நுண்ணறிவு எதுவும் இல்லை என்றும், தனக்குப் பகுத்தறிவு குறைவென்றும் அவன் கண்டான். தன்னிடம் இருக்கும் பல விஷயங்கள் இயேசுவின் சித்தப்படி இல்லை என்றும், பல விஷயங்கள் கலகத்தன்மையும் எதிர்ப்பும் மனுஷ சித்தத்தால் கறைபடிந்தவையுமாக இருக்கின்றன என்றும் கண்டான். இதன் பிறகுதான் அவன் ஒவ்வொரு அம்சத்திலும் பிரவேசம் அடைந்தான். இயேசு அவனை வழிநடத்திக் கொண்டிருந்த வேளையில் இயேசு அவன் நிலையை வெளிப்படுத்தியபோது பேதுரு அதை அங்கீகரித்து இயேசு சொன்னதை ஒத்துக்கொண்டான். இருந்தாலும் அவனுக்கு உண்மையான புரிதல் பின்னர்தான் கிடைத்தது. இது ஏனெனில் அந்த நேரத்தில் அவனுக்கு அனுபவமும் இல்லை அல்லது தன் உயரத்தைப் பற்றிய அறிவும் இருக்கவில்லை. அதாவது, நான் உங்களை வழிநடத்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். ஒரு குறுகிய காலத்தில் உங்களைப் பரிபூரணப்படுத்துவது சாத்தியமில்லை. சத்தியத்தை அறிந்து புரிந்துகொள்ளும் திறன் உங்களுக்குக் குறைவாக இருக்கிறது. இது ஏனெனில் உன்னை ஜெயங்கொள்வதும் உன் இருதயத்தில் உன்னை வற்புத்துத்துவதும்தான் தற்போதைய கிரியை, மேலும் ஜனங்களை ஜெயங்கொண்ட பின்னரே அவர்களில் சிலரை பரிபூரணப்படுத்த முடியும். தற்போது, நீ புரிந்துகொள்ளும் அந்த தரிசனங்களும் அந்த சத்தியங்களும் உன் வருங்கால அனுபவங்களுக்கு அஸ்திபாரத்தை அமைக்கின்றன; எதிர்கால உபத்திரவங்களில் நீங்கள் எல்லாரும் இந்த வார்த்தைகளின் நடைமுறை அனுபவங்களைப் பெறுவீர்கள். பின்னர் சோதனைகள் உங்களுக்கு வந்து நீங்கள் உபத்திரவங்களுக்கு உட்படும்போது இன்று நீ கூறும் வார்த்தைகளை யோசித்துப் பார்ப்பாய். அவையாவன: “நான் எதிர்கொள்ளுவது எந்த உபத்திரவமாக, சோதனைகளாக, அல்லது பெரும் பேரழிவுகளாக இருந்தாலும், நான் தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும்.” பேதுருவின் அனுபவங்களையும், மற்றும் அதன் பின் யோபுவின் அனுபவங்களையும் நினைத்துப் பார்—இன்றைய வார்த்தைகளால் நீ உத்வேகப்படுத்தப்படுவாய். இந்த வகையில் மட்டுமே உன்னுடைய விசுவாசமும் உத்வேகப்படுத்தப்படும். அந்த நேரத்தில், தேவனின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் பெற்றுக்கொள்ள அவன் தகுதியற்றவன் என்று பேதுரு கூறினான். நேரம் வரும்போது உன் மூலமாக தேவனுடைய நீதியான மனநிலையை ஜனங்கள் பார்க்கவேண்டும் என்று நீயும் விரும்பலாம். அவருடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நீ உடனடியாக ஏற்றுக்கொள்ளுவாய். அவருடைய நியாயத்தீர்ப்பும், சிட்சையும் சாபமும் உனக்கு ஓர் ஆறுதலாக இருக்கும். இப்போது, சத்தியத்தைத் தரித்துக்கொள்ளாமல் இருப்பது உனக்கு ஏற்புடையதாக இல்லை. அது இல்லாமல், எதிர்காலத்தில் உன்னால் உறுதியாக நிற்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், தற்போதைய கிரியையை உன்னால் அனுபவிக்க முடியாமலும் போகலாம். இது நடந்தால் வெளியேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவனாக இருக்க மாட்டாயா? இப்போதைக்கு, உன்னிடத்தில் வராத உண்மைகள் எதுவும் இல்லை, உனக்கு எந்தெந்த அம்சங்களில் குறைபாடு இருக்கிறதோ அதற்கேற்ப நான் உனக்கு அளித்திருக்கிறேன்; நான் எல்லா அம்சங்களில் இருந்தும் பேசுகிறேன். நீங்கள் அதிக துன்பத்தைச் சகிக்கவில்லை; எந்த வகையான கிரயமும் அளிக்காமல் எது கிடைக்கிறதோ அதையே நீங்கள் பெறுகிறீகள். அதைவிட உங்களுக்குச் சொந்த உண்மையான அனுபவங்களோ அல்லது நுண்ணறிவோ இல்லை. ஆகவே நீங்கள் புரிந்துகொள்ளுவது உங்களது உண்மையான உயரங்கள் இல்லை. உங்களுக்குப் புரிதல், அறிவு மற்றும் பார்வை குறைவாகவே உள்ளது. ஆனால் நீங்கள் மிகுதியான அறுவடையை அறுக்கவில்லை. நான் உங்கள் மேல் மனம்வைக்காமல் இருந்திருந்தால் உங்கள் சொந்த அனுபவங்களையே பெற்று இந்தப் பெரிய பரந்த உலகத்துக்குள் நீண்ட காலத்திற்கு முன்பே மீண்டும் விரைந்து போயிருப்பீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் நடக்கும் பாதை ஒரு துன்பப் பாதையாக இருக்கும். பாதையின் இந்தப் பகுதியில் வெற்றிகரமாக நடந்தால், அதன்பின் எதிர்காலத்தில் நீங்கள் பெரும் உபத்திரவத்தில் ஆட்படும்போது உங்களுக்கு சாட்சி இருக்கும். நீ மனுஷ ஜீவிதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால் மற்றும் மனுஷ ஜீவியத்தின் சரியான பாதையில் நடந்தால், தேவன் உன்னை எப்படி நடத்தினாலும் எதிர்காலத்தில் அவருடைய எண்ணங்களுக்கு எந்த ஒரு குறை கூறுதலும் தேர்வும் இல்லாமல் கீழ்ப்படிந்தால் மேலும் தேவனிடம் எந்த ஓர் கோரிக்கையும் வைக்காமல் இருந்தால், அதன் பின் இந்த வகையில் நீ ஒரு மதிப்பு வாய்ந்த நபராய் இருப்பாய். இப்போது, நீ உபத்திரவத்துக்கு உட்படவில்லை, ஆகையால் மாற்றமின்றி எதற்கும் கீழ்ப்படிய முடியும். தேவன் எப்படி நடத்தினாலும், அந்த வழி நல்லது என்றும், மேலும் நீ அவருடைய திட்டமிடலுக்கெல்லாம் கீழ்ப்படிவதாகவும் சொல்லுகிறாய். தேவன் உன்னைச் சிட்சித்தாலும் சபித்தாலும், நீ அவரைத் திருப்திப்படுத்த விருப்பமாய் இருக்கிறாய். அதைச் சொல்லிவிட்டு இப்போது நீ என்ன சொல்லுகிறாயோ அது உன் உயரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது நீ செய்ய விரும்புவதை நீ கடைசி வரை பின்பற்ற உன்னால் முடியுமா என்பதைக் காட்டாது. பெரும் உபத்திரவங்கள் உனக்கு நேரும்போது அல்லது நீ சில துன்புறுத்தல்கள் அல்லது பலவந்தப்படுத்துதல்கள் மற்றும் உபத்திரவங்களுக்கு உட்படும்போது, உன்னால் இந்த வார்த்தைகளைக் கூற முடியாது. அந்த வகையான புரிதல் உனக்கு இருக்க முடியுமானால், நீ உறுதியாக நிற்பாய். இது உன் வளர்ச்சியாக இருக்கும். அப்போது பேதுரு எப்படி இருந்தான்? பேதுரு கூறினான்: “கர்த்தாவே, உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன். நான் மரிக்க வேண்டும் என்பது உன் சித்தமானால், நான் மரிப்பேன்!” அப்போது அவன் ஜெபித்த விதம் இதுதான். அவன் மேலும் கூறினான்: “உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன். உம்மை எப்போதும் பின்பற்றுவேன்.” அப்போது அவன் கூறியது இதுதான், ஆனால் சோதனைகள் அவனுக்கு வந்தபோது, அவன் விழுந்து போனான், அதற்காக அழுதான். பேதுரு கர்த்தரை மூன்று தரம் மறுதலித்தான் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள், இல்லையா? சோதனைகள் வரும்போது அழுது மனுஷ பலவீனத்தைக் காட்டும்பலர் இருக்கிறார்கள். நீ உனக்கு எஜமானன் அல்ல. இதில் உன்னை நீயே கட்டுப்படுத்த முடியாது. இன்று நீ உண்மையிலேயே நன்றாக நடந்துகொண்டிருக்கலாம், ஆனால் இதற்குக் காரணம் உனக்கு ஒரு பொருத்தமான சூழல் இருக்கிறது. நாளை இது மாறினால், நீ உன் கோழைத்தனத்தையும் திறமையின்மையையும், இழிவான தன்மையையும், தகுதியின்மையையும் காட்டுவாய். உன் “தைரியம்” வெகு காலத்திற்கு முன்னரே ஒன்றுமில்லாமல் போயிருக்கும். சிலநேரங்களில் உன்னுடைய பணியை ஒதுக்கி வைத்துவிட்டு அகன்று போகக்கூடும். அப்போது நீ புரிந்துகொண்ட உன் வளர்ச்சி என்பது உண்மையானது அல்ல என்பதை இது காட்டுகிறது. ஒரு நபர் உணமையிலேயே தேவனை நேசிக்கிறானா என்பதைக் காண அவனின் உண்மை உயரத்தையும், அவர்களால் தேவனுடைய எண்ணத்துக்குக் கீழ்ப்படிய முடிகிறதா, தேவனுக்குத் தேவையானதைச் சாதிக்க அவர்கள் தங்கள் முழு வலிமையையும் செலுத்துகிறார்களா, தங்களுடைய சொந்த ஜீவனைத் தியாகம் செய்ய வேண்டும் என்றாலும், அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருக்கிறார்களா மேலும் எல்லாவற்றிலும் தங்களுடைய சிறந்தை அளிக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த வார்த்தைகள் இப்போது பேசப்பட்டிருக்கின்றன என்பதை நீ ஞாபகத்தில் வைக்க வேண்டும்: பின்னர், நீ பெரும் உபத்திரவத்தையும் பெரிய துன்பத்தையும் அனுபவிப்பாய்! பரிபூரணப்படுத்தப்படுவது என்பது ஓர் எளிதான, சுலபமான விஷயம் இல்லை. மிகவும் குறைந்தபட்சமாக நீ யோபின் விசுவாசத்தை, அல்லது அவனைவிட அதிக விசுவாசத்தைக் கூட கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் வரும் சோதனைகள் யோபுவின் சோதனைகளை விடப் பெரிதாக இருக்கும் என்றும் இன்னும் நீ நீண்ட கால சிட்சைக்கு உடபட வேண்டும் என்றும் நீ அறிய வேண்டும். இது ஓர் எளிய விஷயமா? உன் திறன் மேம்படுத்தப்பட வில்லையென்றால், புரிந்துகொள்ளும் உன் திறன் குறைவாக இருந்தால், மேலும் நீ கொஞ்சமாக அறிந்திருந்தால், அந்த நேரத்தில் உனக்கு எந்தசாட்சியும் இருக்காது, ஆனால் அதற்குப் பதிலாக ஒரு வேடிக்கையாகவும் சாத்தானின் ஒரு விளையாட்டுப் பொருளாகவும் போய்விடுவாய். இப்போது உன்னால் தரிசனங்களில் உறுதியாக நிற்க முடியாவிட்டால், அப்போது உனக்கு அஸ்திபாரம் இருக்கவே இருக்காது, மேலும் எதிர்காலத்தில் நீ நிராகரிக்கப்படுவாய்! பாதையின் எந்த ஒரு பகுதியும் நடக்க சுலபமானது அல்ல. ஆகவே இதை எளிதாக எடுத்துக்கொள்ளாதே. இப்போது இதைக் கவனமாக மதிப்பிட்டு, ஆயத்தங்களைச் செய். அப்போதுதான் இந்தப் பாதையின் கடைசிப் பகுதியில் தகுந்தவாறு நீ நடக்கலாம். இதுதான் எதிர்காலத்தில் நடக்க வேண்டிய பாதையாகும். எல்லா ஜனங்களும் நடக்கவேண்டிய பாதையாகும். இந்த அறிவை நீ கேட்காமல் விட்டுவிடக் கூடாது; நான் உன்னிடம் சொல்வதெல்லாம் வீணானது என்று எண்ணாதே. நீ எல்லாவற்றையும் சிறந்த வகையில் பயன்படுத்தும் நாள் வரும்—என்னுடைய வார்த்தைகள் வீணாகப் பேசப்பட முடியாதது. உன்னை நீயே ஆயத்தப்படுத்திக்கொள்ளும் நேரமாகும் இது. எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் நேரமாகும். நீ பின்னர் நடக்கக் கூடிய பாதையை ஆயத்தப்படுத்த வேண்டும்; எதிர்காலத்தில் உறுதியாக நிற்கக் கூடியது குறித்து நீ கவலையோடும் கலக்கத்தோடும் இருக்க வேண்டும். எதிர்காலப் பாதையை நன்றாக ஆயத்தப்படுத்த வேண்டும். பெருந்தீனிக்காரனாகவும் சோம்பேறியாகவும் இருக்க வேண்டாம்! உன்னுடைய நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த நீ செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய வேண்டும், இதன் மூலம் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நீ பெறலாம். நீ புரிந்துகொள்ளத் தக்கதாக நான் எல்லாவற்றையும் அளிக்கிறேன். மூன்று வருஷங்களுக்குள்ளாக நான் பல விஷயங்களைக் கூறியிருக்கிறேன் மேலும் அதிகக் கிரியையும் செய்திருக்கிறேன் என்பதை நீங்களே உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்கள். நான் இந்த வகையில் கிரியை செய்வதற்கு ஒரு காரணம் ஜனங்கள் மிகவும் குறைபாடு கொண்டவர்களக இருப்பதும், இன்னொரு காரணம் காலம் மிகவும் குறுகியதாக இருப்பதும் ஆகும்; இனிமேலும் இன்னும் தாமதம் இருக்க முடியாது. சாட்சி கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுவதற்கும் முன்னால் முழுமையான உள்ளார்ந்த தெளிவை ஜனங்கள் முதலில் அடையவேண்டும் என்று நீ கற்பனை செய்கிறாய்—ஆனால் அது மிகவும் மெதுவானது அல்லவா? ஆகையால், எவ்வளவு காலத்துக்கு நான் உன்னோடு இருக்கவேண்டும்? வயது முதிர்ந்து முடி வெள்ளையாகும் வரை உன்னோடு நான் இருப்பது என்பது முடியாத காரியம்! பெரிய உபத்திரவத்துக்குட்படுவதனால் எல்லா ஜனங்களுக்குள்ளும் உண்மையான புரிதல் உருவாகும். இதுவே கிரியையின் படிகளாகும். இன்று ஐக்கியப்பட்ட தரிசனங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு நீ உண்மையான வளர்ச்சியை அடைந்தால், எதிர்காலத்தில் எந்தக் கஷ்டங்களை எதிர்கொண்டாலும் அவை உன்னை மேற்கொள்ளாது, மேலும் உன்னால் அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கடைசிப் படிநிலையை நான் முடித்துக் கடைசி வார்த்தைகளைப் பேசி முடிக்கும்போது, எதிர்காலத்தில் ஜனங்கள் தங்கள் சொந்தப் பாதையில் நடக்க வேண்டும். இது முன்னால் பேசிய வார்த்தைகளை நிறைவேற்றும்: ஒவ்வொரு தனி நபருக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஒப்புவிப்பு உண்டு, மேலும் ஒவ்வொரு தனி நபரிலும் செய்யவேண்டிய கிரியை உண்டு. எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு நடக்க வேண்டிய பாதையில் நடப்பார்கள். உபத்திரவத்திற்கு உட்படும்போது யாரால் மற்றவர்களுக்காக அக்கறை கொள்ள முடியும்? ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர்களுடைய துன்பமும் அவரவருடைய வளர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவரின் வளர்ச்சியும் இன்னொருவரைப் போல் இருக்காது. கணவர்களால் தங்கள் மனைவியரை அல்லது பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பேண முடியாது; எவரும் இன்னொருவரைப் பேணிப் பராமரிக்க முடியாது. ஒருவருக்கொருவரான பராமரிப்பும் ஆதரவும் இன்னும் சாத்தியமாக இருக்கும் இப்போதைப் போல் அது இருக்காது. அந்த நேரத்தில் எல்லா வகையான நபர்களும் வெளிப்படுத்தப் படுவார்கள். அதாவது, தேவன் மேய்ப்பர்களை வெட்டும்போது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும். அந்த நேரத்தில் உங்களுக்கு உண்மையான தலைவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஜனங்கள் பிரிக்கப்படுவார்கள்—ஒரு சபையாக நீங்கள் கூடி வரக்கூடிய இப்போது போல் அது இருக்காது. எதிர்காலத்தில், பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்கள் தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டுவார்கள். கணவர்கள் தங்கள் மனைவிகளுக்குத் துரோகம் செய்வார்கள், மனைவிகள் தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்வார்கள், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் துரோகம் செய்வார்கள், மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் துன்புறுத்துவார்கள்—மனுஷ இருதயம் புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது! ஒருவர் தன்னிடம் இருப்பதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுவதும், மேலும் பாதையின் இறுதிப் பகுதியில் சரியாக நடப்பதுமே செய்யக்கூடியதாகும். இப்போது, இதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியாது; நீங்கள் எல்லாரும் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறீர்கள். கிரியையின் இந்தப் படிநிலையை வெற்றிகரமாக அனுபவிப்பது எளிதான விஷயம் இல்லை.

உபத்திரவத்தின் காலம் நீடித்திருக்காது; உண்மையில், அது ஒரு வருஷத்துக்கும் குறைவாகவே நீடிக்கும். அது ஒரு வருஷ காலம் நீடித்தால், கிரியையின் அடுத்த கட்டம் தாமதமாகிவிடும், மற்றும் மனிதர்களின் வளர்ச்சி போதுமானதாக இருக்காது. அது அதிக நாள் நீடித்தால், மக்களால் அதைத் தாங்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனங்களின் வளர்ச்சிக்கு எல்லைகள் உள்ளன. என்னுடைய சொந்தக் கிரியை முடிவடைந்தவுடன், ஜனங்கள் தாங்கள் நடக்க வேண்டிய பாதையில் நடப்பதுதான் அடுத்தப் படிநிலையாகும். ஒவ்வொருவரும் தாங்கள் நடக்க வேண்டிய பாதையைப் புரிந்துகொள்ள வேண்டும்—அது ஒரு பாதை மட்டுமல்லாமல் ஒரு துன்பப்படும் செயல்முறையாகும், அதுமட்டுமல்லாமல் அது தேவனை நேசிக்க உன் விருப்பத்தைச் சுத்திகரிக்கும் ஒரு பாதையாகும். எந்தச் சத்தியத்துக்குள் நீ பிரவேசிக்க வேண்டும், எந்தச் சத்தியங்களை நீ கூடுதலாக சேர்க்க வேண்டும், நீ எப்படி அனுபவம் பெற வேண்டும், மற்றும் எந்த அம்சத்தில் இருந்து நீ உட்பிரவேசிக்க வேண்டும் என்ற இந்த விஷயங்களை எல்லாம் நீ புரிந்துகொள்ள வேண்டும். இப்போது உன்னை நீயே ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். உன்மேல் உபத்திரவம் வரும்போது, அது மிகத் தாமதமானதாக இருக்கும். ஒவ்வொரு நபரும் தங்கள் ஜீவனுக்காக ஒரு பாரத்தைக் கொள்ள வேண்டும். பிறரின் எச்சரிக்கைக்காகவோ அல்லது மற்றவர்கள் உன்னைத் தங்களோடு காதைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டும் என்றோ எப்போதும் காத்திருக்கக் கூடாது. நான் அதிகமானவற்றைச் சொல்லியிருக்கிறேன், ஆனால் உனக்கு எந்தச் சத்தியங்களுக்குள் பிரவேசிக்க வேண்டும் அல்லது எவற்றைக் கொண்டு உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இன்னும் தெரியவில்லை. நீ தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பதில் முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நீ உன் ஜீவனுக்காகக் கொஞ்சம் கூட பாரம் கொள்ளவில்லை—அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நீ எதற்குள் பிரவேசிக்க வேண்டும் என்று உனக்குத் தெளிவில்லை, நீ எதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற புரிதல் உனக்கில்லை, மேலும் நீ எடுக்க வேண்டிய எதிர்காலப் பாதை எது என்பதில் இன்னும் முழுக் குழப்பத்தில் இருக்கிறாய். நீ ஒட்டுமொத்தமாக ஒன்றுக்கும் உதவாதவனா? உன்னால் என்ன பயன் இருக்கிறது? இன்று நீங்கள் உங்களுடைய சொந்தச் சாலைகளையே உருவாக்கி ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். ஜனங்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதையும், மனுக்குலத்திடம் இருந்து தேவன் வைக்கும் கோரிக்கைகளின் தரம் என்ன என்பதையும் நீ அறிந்திருக்க வேண்டும். பின்வரும் புரிதல்கள் உனக்கு இருக்க வேண்டும்: எதுவாக இருந்தாலும் சரி, நான் ஆழமாகச் சீர்கெட்டு இருந்தாலும், இந்தக் குறைபாடுகளை நான் தேவனுக்கு முன்பாகச் சரிசெய்ய வேண்டும். தேவன் என்னிடம் முன்னரே கூறினார், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, சாதாரண மனிதத்தன்மையோடு வாழ, தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற ஒரு சாயலோடு வாழ, நான் குறைபாடுகளை விரைந்து சீர்செய்யவேண்டும். பேதுரு வாழ்ந்தது போல என்னால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நான் ஒரு சாதாரண மனிதத்தன்மையுடன் வாழவேண்டும். இந்த விதத்தில் என்னால் தேவனுடைய இருதயத்தைத் திருப்திப்படுத்த முடியும்.

இந்தப் பாதையின் கடைசிப் பகுதி இப்போதில் இருந்து எதிர்கால உபத்திரவத்தின் முடிவு வரை நீடிக்கும். ஜனங்களின் உண்மையான வளர்ச்சி வெளிப்படுத்தப்படும்போது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்று காட்டும்போதும் பாதையின் இந்தப் பகுதி இருக்கும். இதற்கு முன்னால் ஜனங்களை வழிநடத்திச் செல்லப்பட்ட வேறு எந்தப் பாதையையும் விட பாதையின் இப்பகுதி மிகக் கடினமாகவும், கரடுமுரடானதாகவும் இருப்பதால், இது “பாதையின் கடைசிப் பகுதி” என்று அழைக்கப்படுகிறது. இதுதான் பாதையின் இறுதிப் பகுதி இல்லை என்பதுதான் உண்மை; இது ஏனென்றால், உபத்திரவத்துக்கு உட்பட்ட பிறகு, நீ சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையில் ஈடுபடுத்தப்படுவாய் மேலும் பயன்படுத்தப்படும் கிரியைக்கு உட்படுத்தப்படும் ஒரு பகுதி ஜனங்கள் இருப்பார்கள். ஆகவே “பாதையின் கடைசிப் பகுதி” என்பது ஜனங்களைச் சுத்திகரிக்கும் உபத்திரவம் மற்றும் கடினமான சூழல் சம்பந்தமாக மட்டுமே பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நடக்கப்பட்ட பாதையின் அந்தப் பகுதியில் நான் அந்த மகிழ்ச்சியான பயணத்தில் உனக்குப் போதிக்க உன்னைக் கைப்பிடித்து அழைத்துச்சென்று, என் வாயால் உன்னைப் போஷித்து வழிநடத்தினேன். நீ பல முறை சிட்சைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் உட்படுத்தப்பட்டிருந்தாலும், உன்னைப் பொறுத்தவரையில் அவை வெறும் தொடர்ச்சியான லேசான அடிகளே தவிர வேறல்ல. நிச்சயமாக, தேவனிடத்தில் உனக்கிருக்கும் விசுவாசக் கண்ணோட்டத்தில் அது குறிப்பிடத்தக்க வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது; உன்னுடைய மனநிலை குறிப்படத்தக்க அளவில் ஸ்திரப்படவும், என்னைப் பற்றிய சிறிதளவுப் புரிதலை அடையவும் அது வகைசெய்தது. ஆனால், நான் கூறுவது என்னவென்றால், ஜனங்கள் பாதையின் அந்தப் பகுதியில் நடந்த போது, கொடுக்கப்பட்ட விலைக்கிரயம் அல்லது வேதனைதரும் முயற்சி மிகவும் குறைவு ஆகும்—இன்று நீ இருக்கும் இடத்துக்கு உன்னை வழிநடத்திவந்தது நானே. இது ஏனெனில் நீ எதையாவது செய்யவேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை; உண்மையில், உன்னிடமிருந்து எனக்குள்ள தேவை அதிகமானதே அல்ல—எது இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள உன்னை நான் வெறுமனே அனுமதிக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் நான் உங்களுக்கு உங்கள் தேவைகளைத் தடையின்றி வழங்கியிருக்கிறேன், மற்றும் நான் நியாயமற்ற கோரிக்கைகளை ஒருபோதும் எழுப்பவே இல்லை. நீங்கள் திருப்பித் திருப்பி சிட்சையால் துன்பப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் என்னுடைய உண்மையான கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றவில்லை. நீங்கள் பின்வாங்கி மனதுடைந்து போனீர்கள். ஆனால் நான் இதைக் கருத்தில் கொள்ளவில்லை, ஏனெனில் இப்போது இது என்னுடைய தனிப்பட்ட கிரியையின் நேரமாகும், மேலும் என்பேரில் உள்ள உங்கள் “பயபக்தியை” நான் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பாதையின் இந்தப் பகுதியில் இருந்து, நான் இனிமேலும் கிரியை செய்யவோ பேசவோ மாட்டேன், மற்றும் நேரம் வரும்போது உங்களை இப்படிப்பட்ட சோம்பேறித்தனமான வகையில் தொடரவும் விட மாட்டேன். நீங்கள் போதுமான அளவுக்குப் பாடங்களைப் படித்துகொள்ள நான் உங்களை அனுமதிப்பேன். இருப்பதில் இருந்து எடுத்துக்கொள்ள உங்களை விடமாட்டேன். உங்களுக்கு இன்றிருக்கும் உண்மையான வளர்ச்சி வெளிப்படுத்தப்பட வேண்டும். பாதையின் இந்தக் கடைசிப் பகுதியில் நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பதில் இருந்து உங்கள் பல்லாண்டு முயற்சி இறுதியாக பலனைத் தந்ததா இல்லையா என்பதைப் பார்ப்பீர்கள். கடந்த காலத்தில், தேவனை விசுவாசிப்பது மிகவும் எளிதானது என்று நீங்கள் நினைத்தீர்கள். இதற்குக் காரணம் தேவன் உங்களைக் கண்டிப்புடன் நடத்தாததுதான். இப்போது எப்படி இருக்கிறது? தேவனை விசுவாசிப்பது எளிதானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தேவனை விசுவாசிப்பது சிறுபிள்ளைகள் தெருவில் விளையாடுவது போல மகிழ்ச்சியாகவும் கவலையற்றும் இருக்கும் என்று இன்னும் நீங்கள் உணர்கிறீர்களா? நீங்கள் ஆடுகள் என்பது உண்மைதான்; இருப்பினும், தேவனுடைய கிருபைக்குப் பதிலீடு செய்யவும் நீங்கள் விசுவாசிக்கும் தேவனை முழுமையாக அடையவும் நீங்கள் நடக்க வேண்டிய பாதையில் நடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே வேடிக்கைக்கு உள்ளாக்க வேண்டாம், உங்களை நீங்களே முட்டாள்கள் ஆக்கிக்கொள்ள வேண்டாம்! பாதையின் இந்தப் பகுதியில் உன்னால் நிலைத்திருக்க முடியுமானால், பிரபஞ்சம் முழுவதும் என்னுடைய சுவிசேஷம் பரவிவரும் முன்னெப்போதும் இல்லாத காட்சியை உன்னால் பார்க்க முடியும் மற்றும் எனக்கு மிகவும் நெருங்கியவனாக இருக்கும் நல்ல அதிர்ஷ்டமும் உனக்குக் கிடைக்கும். என்னுடைய கிரியையை பிரபஞ்சம் முழுவதும் விரிவாக்கிப் பரப்புவதிலும் உன் பங்கு இருக்கும். அப்போது, நீ மகிழ்ச்சியுடன் நீ நடக்க வேண்டிய பாதையில் தொடர்ந்து நடப்பாய். எதிர்காலம் எல்லையறற வகையில் பிரகாசமாக இருக்கும். ஆனால் இப்போது முதன்மையானது என்னவென்றால் பாதையின் இந்தக் கடைசிப் பகுதியில் சரியாக நடப்பதுதான். நீ தேடி இதை எப்படி செய்யவேண்டும் என்பதற்கு ஆயத்தப்பட வேண்டும். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்; இதுதான் இப்போது அவசரமான ஒரு விஷயம்!

முந்தைய: நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!

அடுத்த: உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக