வேதாகமத்தைக் குறித்து (3)

வேதாகமத்தில் உள்ள எல்லாமே தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்பட்ட வார்த்தைகளின் பதிவு அல்ல. தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளை மட்டுமே வேதாகமம் ஆவணப்படுத்துகிறது, இவற்றில் ஒரு பகுதி தீர்க்கதரிசிகளினுடைய முன்னறிவிப்பின் பதிவாகும், மற்றொரு பகுதி காலங்கள் முழுவதும் தேவனால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களால் எழுதப்பட்ட அனுபவங்களும் அறிவுமாகும். மனித கருத்துக்களினாலும் அறிவினாலும் மனித அனுபவங்கள் கறைப்படுத்தப்பட்டுள்ளன, இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். வேதாகமத்தின் பல புத்தகங்களில் மனிதக் கருத்துக்கள், மனித தற்சார்புகள் மற்றும் மனிதர்களுடைய பொருத்தமற்ற புரிதல் ஆகியவை உள்ளன. நிச்சயமாகவே, பெரும்பாலான வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றின் விளைவாகும். இவையே சரியான புரிதல்களாகும். ஆனாலும், இவை சத்தியத்தைப் பற்றிய முற்றிலும் துல்லியமான வெளிப்பாடுகள் என்றும் சொல்லிவிட முடியாது. சில விஷயங்களைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பெறப்பட்ட அறிவோ அல்லது பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியே தவிர வேறு எதுவுமில்லை. தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பு என்பது தேவனால் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தப்பட்டதாக இருந்தது: ஏசாயா, தானியேல், எஸ்றா, எரேமியா, எசேக்கியேல் போன்றவர்களின் தீர்க்கதரிசனங்கள் பரிசுத்த ஆவியானவரின் நேரடி அறிவுறுத்துதலிருந்து வந்தவையாகும். இவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். இவர்கள் தீர்க்கதரிசன ஆவியைப் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். நியாயப்பிரமாண காலத்தில், இவர்கள் யேகோவாவின் ஏவுதலைப் பெற்று, யேகோவாவால் நேரடியாக அறிவுறுத்தப்பட்ட பல தீர்க்கதரிசனங்களை உரைத்தார்கள். யேகோவா அவர்களில் ஏன் கிரியை செய்தார்? ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக இருந்தனர், தீர்க்கதரிசிகளின் கிரியையானது அவர்களின் நடுவே செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அதனால்தான் தீர்க்கதரிசிகளால் அத்தகைய வெளிப்பாடுகளைப் பெற முடிந்தது. உண்மையிலேயே, தேவனுடைய வெளிப்பாடுகளை அவர்கள் தாமாகவே புரிந்துகொள்ளவில்லை. பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தைகளை அவர்களுடைய வாய்களின் வழியாகப் பேசினார், இதன்மூலம் வருங்கால ஜனங்களால் அந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது மற்றும் அவை மனிதனிடமிருந்து வரவில்லை, அவை உண்மையிலேயே தேவனுடைய ஆவியானவரின், பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்ததைப் பார்க்கவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அவர்களுக்கு உறுதிப்படுத்திக் கொடுக்கவும் முடிந்தது. கிருபையின் காலத்தில், அவர்களுக்குப் பதிலாக இயேசுவே இந்தக் கிரியையை செய்தார், ஆகவே ஜனங்கள் அதற்கு மேலும் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா? நிச்சயமாகவே, இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், ஆனால் அவரால் அப்போஸ்தலர்களின் கிரியையையும் செய்ய முடிந்தது. அவரால் தீர்க்கதரிசனம் உரைக்கவும், தேசமெங்கும் ஜனங்களுக்கு பிரசங்கிக்கவும் போதிக்கவும் முடிந்தது. ஆனாலும், அவர் செய்த கிரியையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அடையாளமும் ஒன்றல்ல. அவர் முழு மனுக்குலத்தையும் மீட்பதற்காகவும், மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காகவும் வந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு அப்போஸ்தலராகவும் இருந்தார், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கிறிஸ்துவாக இருந்தார். ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கலாம், ஆனால் கிறிஸ்து அத்தகையதொரு தீர்க்கதரிசி என்று சொல்ல முடியாது. அந்த நேரத்தில், இயேசு அதிக தீர்க்கதரிசனம் உரைத்தார், ஆகவே அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்று கூறலாம், ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததினால், அவர் கிறிஸ்து அல்ல என்று சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு கட்ட கிரியையைச் செய்வதில் அவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவருடைய அடையாளம் ஏசாயாவின் அடையாளத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தது: அவர் மீட்பின் கிரியையை நிறைவு செய்ய வந்தார். அவர் மனிதனுக்கு ஜீவனையும் வழங்கினார், மேலும் தேவனுடைய ஆவியானவர் அவரிடம் நேரடியாக வந்தார். அவர் செய்த கிரியையில், தேவனுடைய ஆவியானவரிடமிருந்து எந்த ஏவுதல்களோ அல்லது யேகோவாவிடமிருந்து அறிவுறுத்துதல்களோ வரவில்லை. அதற்குப் பதிலாக, ஆவியானவர் நேரடியாகவே கிரியை செய்தார், இதுவே இயேசு ஒரு தீர்க்கதரிசியைப் போன்றவராக இருக்கவில்லை என்பதை நிரூபிக்க போதுமானது. அவர் செய்த கிரியையானது மீட்பின் கிரியையாக இருந்தது, இதற்கு அடுத்ததாகவே தீர்க்கதரிசனம் உரைப்பது வந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு அப்போஸ்தலராகவும் இருந்தார், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மீட்பராக இருந்தார். இதற்கிடையில், தீர்க்கதரிசிகளால் தீர்க்கதரிசனத்தை மட்டுமே பேச முடிந்தது, வேறு எந்தக் கிரியையும் செய்வதில் தேவனுடைய ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்த இயலவில்லை. ஏனென்றால், மனிதனால் இதற்கு முன்பு செய்யப்படாத அநேக கிரியைகளை இயேசு செய்தார், மனுக்குகுலத்தை மீட்பதற்கான கிரியையைச் செய்தார். இவ்வாறு அவர் ஏசாயாவைப் போன்றவர்களை விட வேறுபட்டவராக இருந்தார். இன்றைய பிரவாகத்தை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், இது அவர்களுக்கு ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சொல்கின்றனர்: “பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கதரிசிகள் பல வார்த்தைகளைப் பேசினார்கள், அப்படியானால் அவர்கள் ஏன் மாம்சமாகிய தேவனாக இருக்கவில்லை? இன்றைய தேவன் வார்த்தைகளைப் பேசுகிறார், அவர் மாம்சமாகிய தேவன் என்பதை நிரூபிக்க அது போதுமானதா? நீ வேதாகமத்தை உயர்த்துவதுமில்லை, அதைப் படிப்பதுமில்லை, அப்பபடியானால் எதன் அடிப்படையில் அவர் தேவனுடைய மனுஷஅவதரிப்பு என்று சொல்கிறாய்? அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அறிவுறுத்தப்பட்டவர் என்று நீ சொல்கிறாய், மேலும் இந்தக் கட்ட கிரியை தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது என்று நீ நம்புகிறாய், ஆனால் இதற்கான உனது அடிப்படை காரணம் என்ன? நீ தேவனுடைய இன்றைய வார்த்தைகளின் மீது உனது கவனத்தை செலுத்துகிறாய். நீ வேதாகமத்தை மறுத்து, அதை ஒதுக்கி வைத்திருப்பது போல தோன்றுகிறது.” ஆகவே, நீ மதங்களுக்கு எதிரான கொள்கை மற்றும் மரபை நம்புகிறாய் என அவர்கள் கூறுகின்றனர்.

கடைசி நாட்களில் தேவனுடைய கிரியைக்கு நீ சாட்சி பகர விரும்பினால், வேதாகமத்தின் உள் கதை, வேதாகமத்தின் கட்டமைப்பு மற்றும் வேதாகமத்தின் சாராம்சம் ஆகியவற்றை நீ புரிந்துகொள்ள வேண்டும். இன்று, ஜனங்கள் வேதாகமத்தை தேவன் என்றும், தேவனே வேதாகமமாக இருக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஆகவே, வேதாகமத்தின் எல்லா வார்த்தைகளும் தேவன் பேசிய வார்த்தைகள் மட்டுமே என்றும், இவை அனைத்தும் தேவனால் சொல்லப்பட்டவை என்றும் அவர்கள் நம்புகின்றனர். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அறுபத்தாறு புத்தகங்கள் யாவுமே மனிதர்களால் எழுதப்பட்டவை என்றாலும், இவை அனைத்தும் தேவனுடைய ஏவுதலினால் வழங்கப்பட்டவை என்றும், பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளின் பதிவு என்றும் தேவனை விசுவாசிப்பவர்கள் கூட நினைக்கின்றனர். இது மனிதனின் தவறான புரிதலாகும், இது உண்மைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை. உண்மையிலேயே, தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி ஒரு வரலாற்றுப் பதிவாகும். புதிய ஏற்பாட்டின் சில நிருபங்கள் ஜனங்களுடைய அனுபவங்களிலிருந்து வருகின்றன. மேலும், சில பரிசுத்த ஆவியின் அறிவொளியிலிருந்து வருகின்றன. உதாரணமாக, பவுலின் நிருபங்கள் ஒரு மனிதனுடைய கிரியையிலிருந்து தோன்றியவையாகும். இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியின் விளைவாகும். இவை சபைகளுக்காக எழுதப்பட்டவையாகும், மேலும் இவை சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாக இருந்தன. இவை பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல, பவுலால் பரிசுத்த ஆவியானவரின் சார்பாகப் பேச முடியவில்லை, அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, யோவான் கண்ட தரிசனங்களையும் அவன் பார்க்கவில்லை. அவனது நிருபங்கள் எபேசு, கொரிந்து, கலாத்தியா மற்றும் பிற சபைகளுக்கே எழுதப்பட்டவையாகும். ஆகவே, புதிய ஏற்பாட்டிலுள்ள பவுலின் நிருபங்கள் சபைகளுக்கு பவுல் எழுதிய நிருபங்களாகும், இவை பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல்களும் அல்ல, இவை பரிசுத்த ஆவியானவரின் நேரடி வெளிப்பாடுகளும் அல்ல. இவை அவனுடைய ஊழியத்தின் போது சபைகளுக்கு எழுதிய வெறும் அறிவுரை, ஆறுதல் மற்றும் தேற்றும் வார்த்தைகளாகும். ஆகவே, இவை அந்தக் காலத்தில் பவுலின் பெரும்பாலான கிரியையைப் பற்றிய ஒரு பதிவாகவே இருக்கிறது. அக்காலச் சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றி கர்த்தராகிய இயேசுவின் மனந்திரும்புதலுக்கான வழியைக் கடைப்பிடிப்பார்கள் என்பதற்காக இவை கர்த்தருக்குள்ளான சகோதர சகோதரிகளுக்காக எழுதப்பட்டன. அக்காலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ சேர்ந்த சபைகளாக இருந்தாலும், அவன் எழுதியவற்றை அனைவரும் புசித்துக் குடிக்க வேண்டும் என்றோ, தனது வார்த்தைகள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்றோ பவுல் சொல்லவே இல்லை. அக்கால சபையின் சூழ்நிலைகளின்படி, அவன் சகோதர சகோதரிகளுடன் வெறுமனே உரையாடி, அவர்களை அறிவுறுத்தினான், அவர்களுக்குள்ளாக இருந்த விசுவாசத்தைத் தூண்டினான், மேலும் அவன் ஜனங்களுக்கு பிரசங்கித்தான் அல்லது நினைவுபடுத்தினான் மற்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினான். அவனுடைய வார்த்தைகள் அவனது சொந்த பாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன. அவன் இந்த வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆதரித்தான். அவன் அக்கால சபைகளின் ஓர் அப்போஸ்தல கிரியையைச் செய்தான். அவன் கர்த்தராகிய இயேசுவால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஊழியக்காரனாக இருந்தான். ஆகவே, அவன் சபைகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும், சபைகளின் கிரியையை மேற்கொள்ள வேண்டும், சகோதர சகோதரிகளின் நிலைகளைப் பற்றி அவன் கற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. இதன் காரணமாக, அவன் கர்த்தருக்குள்ளான எல்லா சகோதர சகோதரிகளுக்கும் நிருபங்களை எழுதினான். ஜனங்களுக்கு அறிவுறுத்துதலாகவும், நேர்மறையானதாகவும் அவன் சொன்னது எல்லாமே சரிதான், ஆனால் அது பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளை குறிக்கவில்லை, அது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. ஒரு மனிதனின் அனுபவங்களின் பதிவுகளையும், ஒரு மனிதனின் நிருபங்களையும் சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகளாக ஜனங்கள் கருதுவது ஒரு தவறான புரிதலும், மாபெரும் தேவதூஷணமுமாகும்! பவுல் சபைகளுக்காக எழுதிய நிருபங்கள் என்று வரும்போது, அது குறிப்பாக உண்மையாக இருக்கிறது. ஏனென்றால், அவனது நிருபங்கள் அக்காலத்திலுள்ள ஒவ்வொரு சபையின் சூழ்நிலைகள் மற்றும் நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் சகோதர சகோதரிகளுக்காக எழுதப்பட்டன, மேலும் இவை சகோதர சகோதரிகள் கர்த்தராகிய இயேசுவின் கிருபையை பெறும்படிக்கு அவர்களுக்கு அறிவுறுத்துவதற்காகவே எழுதப்பட்டன. அவனுடைய நிருபங்கள் அக்காலத்து சகோதர சகோதரிகளுக்கு தூண்டுதலை ஏற்படுத்துவதற்காகவே இருந்தன. இது அவனது சொந்த பாரம் என்றும், பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு அளிக்கப்பட்ட பாரம் என்றும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் அக்கால சபைகளை வழிநடத்திய ஓர் அப்போஸ்தலனாக இருந்தான், அவன் சபைகளுக்கு நிருபங்களை எழுதி அவர்களுக்கு அறிவுரை வழங்கினான், அது அவனுடைய பொறுப்பாக இருந்தது. அவனுடைய அடையாளம் கிரியை செய்யும் அப்போஸ்தலனின் அடையாளமாக மட்டுமே இருந்தது. அவன் தேவனால் அனுப்பப்பட்ட ஓர் அப்போஸ்தலனாக மட்டுமே இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, முன்னறிவிப்பாளனும் அல்ல. அவனைப் பொறுத்தவரை, அவனுடைய சொந்த கிரியையும் சகோதர சகோதரிகளின் ஜீவிதங்களுமே மிகவும் முக்கியத்துவமானவையாக இருந்தன. இதனால், பரிசுத்த ஆவியானவரின் சார்பாக அவனால் பேச முடியவில்லை. அவனுடைய வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் அல்ல, அவற்றை தேவனுடைய வார்த்தைகள் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், பவுல் தேவனுடைய சிருஷ்டியே தவிர வேறில்லை, அவன் நிச்சயமாக தேவனுடைய மனுஷஅவதரிப்பு அல்ல. அவனுடைய அடையாளம் இயேசுவின் அடையாளமாக இருக்கவில்லை. இயேசுவின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளாக இருந்தன, அவை தேவனுடைய வார்த்தைகளாக இருந்தன, ஏனென்றால் அவருடைய அடையாளம் கிறிஸ்துவின் அடையாளமாக இருந்தது அதாவது தேவனுடைய குமாரனின் அடையாளமாக இருந்தது. பவுலால் எப்படி அவருக்கு சமமாக இருக்க முடியும்? பவுல் போன்றவர்களின் நிருபங்கள் அல்லது வார்த்தைகளை ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளாகவே பார்த்து, அவற்றை தேவனாகவே ஆராதித்தால், அவர்களை மிகவும் கண்மூடித்தனமானவர்கள் என்று மட்டுமே கூற முடியும். மிகவும் கடுமையாகப் பேசுவதென்றால், இது தேவதூஷணமாக மட்டுமே இருக்காதா? தேவனுடைய சார்பாக ஒரு மனிதனால் எவ்வாறு பேச முடியும்? அவனுடைய நிருபங்களின் பதிவுகளுக்கும் அவன் பேசிய வார்த்தைகளுக்கும் முன்பாக ஜனங்களால் எவ்வாறு அவற்றை ஒரு புனித நூல் அல்லது பரலோக புத்தகம் போல வணங்க முடிகிறது? ஒரு மனிதனால் தேவனுடைய வார்த்தைகளைச் சாதாரணமாக உச்சரிக்க முடியுமா? தேவனுடைய சார்பாக ஒரு மனிதனால் எவ்வாறு பேச முடியும்? ஆகவே, நீ என்ன சொல்கிறாய், அவன் சபைகளுக்கு எழுதிய நிருபங்கள் அவனுடைய சொந்தக் கருத்துக்களால் கறைப்படுத்தப்படவில்லையா? அவை மனித கருத்துக்களால் எப்படி கறைப்படுத்தப்படாமல் இருக்க முடியும்? அவன் தனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் தனது சொந்த அறிவின் அடிப்படையில் சபைகளுக்கு நிருபங்களை எழுதினான். உதாரணமாக, பவுல் கலாத்திய சபைகளுக்கு ஒரு நிருபத்தை எழுதினான், அது ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தது. பேதுரு மற்றொரு கருத்தை எழுதினான், அது மற்றொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது. அவற்றில் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தது எது? ஒருவரும் உறுதியாக சொல்ல முடியாது. இதனால், அவர்கள் இருவருக்கும் சபைகள் மீதான ஒரு பாரம் இருந்தது என்று மட்டுமே கூற முடியும். ஆனாலும், அவர்களுடைய எழுத்துக்கள் அவர்களுடைய வளர்ச்சியைக் குறிக்கின்றன, அவை சகோதர சகோதரிகளுக்கான அவர்களின் ஏற்பாட்டையும் ஆதரவையும், சபைகள் மீதான அவர்களுடைய பாரத்தையும் குறிக்கின்றன. மேலும், அவை மனித கிரியையை மட்டுமே குறிக்கின்றன, அவை முற்றிலும் பரிசுத்த ஆவியானவருடையவை அல்ல. அவனுடைய நிருபங்கள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் என்று நீ சொன்னால், நீ அபத்தமானவன், நீ தேவதூஷணம் சொல்கிறாய்! பவுலின் நிருபங்களும் புதிய ஏற்பாட்டின் பிற நிருபங்களும் மிகவும் சமீபத்திய ஆவிக்குரிய நபர்களின் வாழ்க்கை வரலாறுகளுக்கு சமமானவையாகும்: அவை வாட்ச்மேன் நீ புத்தகங்களுக்கோ அல்லது லாரன்ஸின் அனுபவங்களுக்கோ நிகரானவையாகும். சமீபத்திய ஆவிக்குரிய நபர்களின் புத்தகங்கள் புதிய ஏற்பாட்டில் தொகுக்கப்படவில்லை என்றாலும், அவர்களின் சாராம்சம் ஒன்றுதான்: அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டவர்கள், அவர்களால் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை.

புதிய ஏற்பாட்டின் மத்தேயு எழுதிய சுவிசேஷம் இயேசுவின் வம்ச வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. ஆரம்பத்தில், இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீதின் சந்ததி என்றும், யோசேப்பின் குமாரன் என்றும் அது கூறுகிறது. அடுத்தது, இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார் என்றும், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவர் என்றும் கூறுகிறது, அதாவது அவர் யோசேப்பின் குமாரன் அல்ல, ஆபிரகாம் மற்றும் தாவீதின் சந்ததி அல்ல. இருப்பினும், இயேசுவை யோசேப்புடன் தொடர்புபடுத்தவே வம்ச வரலாறு வலியுறுத்துகிறது. அடுத்தது, இயேசு பிறந்த செயல்முறையை வம்ச வரலாறு பதிவு செய்யத் தொடங்குகிறது. இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், அவர் ஒரு கன்னிகைக்குப் பிறந்தவர், யோசேப்பின் குமாரன் அல்ல என்று அது கூறுகிறது. ஆனாலும் வம்ச வரலாறில் இயேசு யோசேப்பின் குமாரன் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மேலும், வம்ச வரலாறானது இயேசுவுக்காக எழுதப்பட்டிருப்பதால், அது நாற்பத்திரண்டு தலைமுறைகளை பதிவு செய்கிறது. அது யோசேப்பின் தலைமுறைக்குச் செல்லும்போது, யோசேப்புதான் மரியாளின் கணவன் என்று அவசரமாகச் சொல்கிறது. இவை இயேசு ஆபிரகாமின் சந்ததி என்பதை நிரூபிக்க கொடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். இது ஒரு முரண்பாடு அல்லவா? வம்ச வரலாறானது யோசேப்பின் வம்சாவளியைத் தெளிவாக ஆவணப்படுத்துகிறது, இது தெளிவாகவே யோசேப்பின் வம்ச வரலாறாகும், ஆனால் இது இயேசுவின் வம்ச வரலாறு என்று மத்தேயு வலியுறுத்துகிறார். பரிசுத்த ஆவியினால் இயேசு கருத்தரித்ததன் உண்மையை இது மறுக்கவில்லையா? இதனால், மத்தேயு வழங்கிய வம்ச வரலாறு ஒரு மனித யோசனை அல்லவா? இது கேலிக்குரியது! இவ்வாறே இப்புத்தகம் முற்றிலுமாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரவில்லை என்பதை நீ அறிந்துகொள்ளலாம். தேவனுக்கு பூமியில் ஒரு வம்ச வரலாறு இருக்க வேண்டும் என்று நினைக்கும் சிலர் இருக்கின்றனர், இதன் விளைவாக அவர்கள் ஆபிரகாமின் நாற்பத்தி இரண்டாம் தலைமுறையாக இயேசுவை நியமிக்கின்றனர். அது உண்மையில் கேலிக்குரியது! பூமிக்கு வந்த பிறகு, தேவனுக்கு எப்படி ஒரு வம்ச வரலாறு இருக்க முடியும்? தேவனுக்கு ஒரு வம்ச வரலாறு இருப்பதாக நீ சொன்னால், தேவனுடைய சிருஷ்டிகளின் மத்தியில் நீ அவரை வரிசைப்படுத்தவில்லையா? தேவன் பூமியைச் சேர்ந்தவர் அல்ல, அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர். அவர் மாம்சமானவர் என்றாலும், அவர் மனிதனைப் போன்ற ஒரு சராம்சத்தைக் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய ஒரு சிருஷ்டியைப் போலவே தேவனும் இருப்பதாக உன்னால் எப்படி வரிசைப்படுத்த முடியும்? ஆபிரகாமால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அக்காலத்தில் அவன் யேகோவாவின் கிரியையின் இலக்காக இருந்தான், அவன் யேகோவாவால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையுள்ள ஊழியக்காரனாக மட்டுமே இருந்தான், மேலும் அவன் இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனாக இருந்தான். அவனால் எப்படி இயேசுவின் மூதாதையராக இருக்க முடியும்?

இயேசுவின் வம்ச வரலாறை எழுதியது யார்? இயேசுவே அதை எழுதினாரா? “என் வம்ச வரலாறை எழுதுங்கள்” என்று இயேசு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சொன்னாரா? இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அது மத்தேயுவால் பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு புரியாத பல கிரியைகளைச் செய்து, எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் சென்ற பிறகு, சீஷர்கள் எல்லா இடங்களிலும் பிரசங்கித்து கிரியை செய்யத் தொடங்கினர். மேலும், அந்த கிரியையின் நிமித்தமாக, அவர்கள் நிருபங்களையும் சுவிசேஷப் புத்தகங்களையும் எழுதத் தொடங்கினர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருபது முதல் முப்பது ஆண்டுகள் சென்ற பிறகே புதிய ஏற்பாட்டின் சுவிசேஷப் புத்தகங்கள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்கள் பழைய ஏற்பாட்டை மட்டுமே வாசித்தனர். அதாவது, கிருபையின் காலத்தின் துவக்கத்தில் ஜனங்கள் பழைய ஏற்பாட்டை வாசித்தனர். புதிய ஏற்பாடானது கிருபையின் காலத்தின் போதே தோன்றியது. இயேசு கிரியை செய்தபோது புதிய ஏற்பாடு கிடையாது. அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்கு ஏறிச் சென்ற பிறகே ஜனங்கள் அவருடைய கிரியையைப் பதிவு செய்தனர். அதன்பிறகுதான் நான்கு சுவிசேஷங்களும் வந்தன, அத்துடன் பவுல் மற்றும் பேதுருவின் நிருபங்களும், வெளிப்படுத்துதல் புத்தகமும் வந்தன. இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்று முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த ஆவணங்களைத் தேடியெடுத்துத் தொகுத்தனர், அதன்பிறகுதான் வேதாகமத்தின் புதிய ஏற்பாடு வந்தது. இந்தக் கிரியை முடிந்த பிறகுதான் புதிய ஏற்பாடு வந்தது. இதற்கு முன்பு அது காணப்படவில்லை. தேவன் அந்தக் கிரியையை எல்லாம் செய்திருந்தார், பவுலும் பிற அப்போஸ்தலர்களும் பல்வேறு இடங்களிலுள்ள சபைகளுக்குப் பல நிருபங்களை எழுதியிருந்தனர். அவர்களுக்குப் பின் வந்தவர்கள் அவர்களுடைய நிருபங்களைத் தொகுத்து, பத்மு என்னும் தீவில் யேவோனால் பதிவு செய்யப்பட்ட மாபெரும் தரிசனத்தை சேர்த்தனர், இந்த தரிசனத்தில்தான் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. ஜனங்கள் இந்த வரிசையை உருவாக்கியுள்ளனர், இது இன்றைய வெளிப்பாடுகளிலிருந்து வேறுபட்டதாகும். இன்று பதிவு செய்யப்படுவது தேவனுடைய கிரியையின் படிகளுக்கு ஏற்ப உள்ளது. இன்று ஜனங்கள் ஈடுபடுவது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கிரியையாகவும், அவரால் தனிப்பட்ட முறையில் உச்சரிக்கப்பட்டட வார்த்தைகளாகவும் இருக்கிறது. மனிதனாகிய நீ தலையிட வேண்டியதில்லை. ஆவியானவரிடமிருந்து நேரடியாக வரும் வார்த்தைகள் படிப்படியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை மனிதனின் பதிவுகளின் வரிசைகளிலிருந்து வேறுபடுகின்றன. அவர்களுடைய கல்வி நிலை மற்றும் மனிதத் திறனுக்கு ஏற்ப அவர்கள் பதிவு செய்தது இருந்தது என்று கூறலாம். அவர்கள் பதிவுசெய்தது மனிதர்களின் அனுபவங்களாகவே இருந்தது. ஒவ்வொன்றும் தனது சொந்தப் பதிவு செய்யும் முறையையும் அறிவையும் கொண்டிருந்தன, மேலும் ஒவ்வொரு பதிவும் வேறுபட்டதாக இருந்தது. ஆகவே, நீ வேதாகமத்தை தேவனாக ஆராதித்தால், நீ மிகவும் புத்தியீனனாகவும், முட்டாள்தனமானவனாகவும் இருப்பாய்! நீ ஏன் இன்றையத் தேவனுடைய கிரியையை நாடவில்லை? தேவனுடைய கிரியையால் மட்டுமே மனிதனை இரட்சிக்க முடியும். வேதாகமத்தால் மனிதனை இரட்சிக்க முடியாது. பலஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களால் அதை வாசிக்க முடிகிறது, இன்னும் அவர்களுக்குள் சிறிதளவு மாற்றமும் ஏற்படவில்லை. நீ வேதாகமத்தை ஆராதித்தால், நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டாய். இஸ்ரவேலில் தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவேதான், இந்த பதிவுகளில் உள்ள எல்லா பெயர்களும் இஸ்ரவேலின் பெயர்களாகவே இருக்கின்றன, மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் இஸ்ரவேலில் நடந்ததாக இருக்கின்றன. “இயேசு” என்ற பெயர் கூட இஸ்ரவேலரின் பெயர்தான். இன்றும் நீ வேதாகமத்தை வாசித்துக்கொண்டிருந்தால், நீ பாரம்பரியத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லையா? வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளவை யூதேயாவில் நடந்த காரியங்களாகும். மூலப் பிரதி கிரேக்க மற்றும் எபிரேய மொழிகளில் இருந்தது. இயேசு என்று அழைக்கப்பட்ட பெயர் மற்றும் அந்த நேரத்தில் இயேசுவின் வார்த்தைகள் எல்லாமே மனிதனின் மொழியைச் சேர்ந்தவையாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது கூறினார்: “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி?” இது எபிரேய மொழி அல்லவா? இயேசு யூதேயாவில் அவதரித்ததே இதற்குக் காரணமாகும், ஆனால் இயேசு யூதர் என்பதை இது நிரூபிக்கவில்லை. இன்று, தேவன் சீனாவில் மாம்சமாகியிருக்கிறார், ஆகவே அவர் சொல்வதெல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி சீன மொழியில் உள்ளது. ஆனாலும் இதை வேதாகமத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீன மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த வார்த்தைகளின் ஆதாரம் வேறுபட்டதாகும்: ஒன்று மனிதர்களால் பதிவு செய்யப்பட்ட எபிரேய மொழியிலிருந்து வருகிறது, ஒன்று ஆவியானவரின் நேரடி வெளிப்பாடுகளிலிருந்து வருகிறது. இதில் எந்த வேறுபாடும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

முந்தைய: வேதாகமத்தைக் குறித்து (2)

அடுத்த: வேதாகமத்தைக் குறித்து (4)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக