தேவனே தனித்துவமானவர் III

தேவனுடைய அதிகாரம் (II)

இன்று “தேவனே தனித்துவமானவர்” என்ற தலைப்பில் நாம் நம் ஐக்கியத்தைத் தொடருவோம். இந்த தலைப்பில், முதலாவதாக தேவனுடைய அதிகாரத்தைப் பற்றியும், இரண்டாவதாக தேவனுடைய நீதியுள்ள மனநிலையைப் பற்றியும் ஏற்கனவே இரண்டு அமர்வுகளை நாம் கேட்டுள்ளோம். இந்த இரண்டு அமர்வுகளையும் கேட்ட பிறகு, தேவனுடைய அடையாளம், நிலை மற்றும் சாராம்சம் பற்றிய ஒரு புதியபுரிதலைப் பெற்றிருக்கிறீர்களா? தேவன் இருக்கிறார் என்ற சத்தியத்தில் தேவையான அறிவையும் நிச்சயத்தையும் அடைய இந்தப் புரிதல்கள் உங்களுக்கு உதவியுள்ளனவா? இன்று நான் “தேவனுடைய அதிகாரம்” என்ற தலைப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

மேலோட்டமான மற்றும் நுட்பமான கண்ணோட்டங்களின் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுதல்

தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது. இது தேவனுடைய அடையாளத்தைப் பற்றிய குணத்தின் வெளிப்பாடும் விஷேசித்த சாராம்சமும் ஆகும். இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவனும் பெறாத ஒன்றாகும். சிருஷ்டிகர் ஒருவரே இந்த வகையான அதிகாரத்தைப் பெற்றுள்ளார். அதாவது, தனித்துவமான தேவனாகிய சிருஷ்டிகர் ஒருவரே இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார். மேலும் அவரிடம் மட்டுமே இந்த சாராம்சம் உள்ளது. இந்நிலையில், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? மனிதன் தன் மனதில் கருதும் “அதிகாரம்” என்பதிலிருந்து தேவனுடைய அதிகாரம் எவ்வாறு வேறுபடுகிறது? இதன் விஷேசம் என்ன? குறிப்பாக இதைப் பற்றி இங்கே பேசுவது ஏன் முக்கியமானது? நீங்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். பெரும்பாலான ஜனங்களுக்கு, “தேவனுடைய அதிகாரம்” என்பது ஒரு தெளிவற்ற கருத்தாக உள்ளது. இதனைப் புரிந்துக் கொள்ள அவர்களுக்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு, இதனைப் பற்றிய எந்தவொரு விவாதமும் சுருக்கமானதாகவே இருக்கும். ஆகையால், மனிதன் தன் திறனுக்கேற்ப பெற்றுக்கொண்ட தேவனுடைய அதிகாரம் பற்றிய அறிவிற்கும், தேவனுடைய அதிகாரத்தின் சாராம்சதிற்கும் இடையே நிச்சயமாக ஒரு இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க, ஜனங்கள், நிகழ்வுகள், விஷயங்கள் மூலமாகவும் மற்றும் தங்கள் நிஜ வாழ்வில் அவர்களுடைய எல்லைக்குள்ளாக மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்குள்ளாக இருக்கும் பல்வேறு சம்பவங்கள் மூலமாகவும் தேவனுடைய அதிகாரத்தை அனைவரும் படிப்படியாக அறிந்துகொள்ள வேண்டும். “தேவனுடைய அதிகாரம்” என்ற சொற்றொடர் புரிந்துகொள்ள முடியாததாகத் தோன்றினாலும், தேவனுடைய அதிகாரம் சுருக்கமானது அல்ல. மனிதனுடைய ஜீவிதத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவர் மனிதனுடன் இருக்கிறார், ஒவ்வொரு நாளும் அவனை வழிநடத்துகிறார். எனவே, நிஜ வாழ்வில், ஒவ்வொரு மனிதரும் தேவனுடைய அதிகாரத்தின் மிக உறுதியான அம்சத்தை நிச்சயமாகவே பார்த்து அனுபவிப்பார்கள். தேவனுடைய அதிகாரம் மெய்யாகவே உள்ளது என்பதற்கு இந்த உறுதியான அம்சம் போதுமான சான்றாகும். மேலும் தேவன் அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்ற சத்தியத்தை ஒருவர் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இது முழுமையாக உதவுகிறது.

தேவன் அனைத்தையும் சிருஷ்டித்தார், அதனை சிருஷ்டித்ததனால், அவருக்கு எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் இருக்கிறது. அவருக்கு எல்லாவற்றின்மீதும் ஆதிக்கம் இருப்பதுடன், அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகிறார். “தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்” என்ற கருத்தின் பொருள் என்ன? அதை எவ்வாறு விளக்க முடியும்? நிஜ வாழ்விற்கு இது எவ்வாறு பொருந்தும்? தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்ற சத்தியத்தைப் புரிந்துக்கொள்வது என்பது, அவருடைய அதிகாரத்தைப் புரிந்துக்கொள்ள எவ்வாறு வழிவகுக்கும்? “தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்” என்ற சொற்றொடரிலிருந்து, தேவன் கட்டுப்படுத்துவது கோள்களின் ஒரு பகுதியையோ, சிருஷ்டிப்பின் ஒரு பகுதியையோ அல்லது மனிதகுலத்தின் ஒரு பகுதியையோ அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். மாறாக பிரமாண்டமான பொருட்கள் முதல் நுண்ணிய பொருட்கள் வரை, காணக்கூடியது முதல் காணமுடியாதது வரை, பிரபஞ்சத்தின் நட்சத்திரங்கள் முதல் பூமியில் உள்ள உயிரினங்கள் வரை, அத்துடன் மனித கண்ணால் காணமுடியாத நுண்ணுயிரிகளும் பிறவடிவங்களில் இருக்கும் உயிரினங்கள் வரை அவர் அனைத்தையுமே கட்டுப்படுத்துகிறார். தேவன் “அனைத்தையும்” “கட்டுப்பாட்டில்” வைத்துள்ளார் என்பதற்கு இதுதான் மிகச் சரியான விளக்கமாகும். இது அவருடைய அதிகாரத்தின் வரம்பும், அவருடைய ராஜரீகம்மற்றும் ஆட்சியின் எல்லையும் ஆகும்.

இந்த மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னதாகவே இந்தப் பிரபஞ்சம்—வானத்தில் உள்ள அனைத்து கோள்கள் மற்றும் அனைத்து நட்சத்திரங்கள்—ஏற்கனவே இருந்தது. அந்த பிரமாண்டமான சூழலில், எத்தனை ஆண்டுகள் சென்றிருந்தாலும், வானத்திலுள்ள இந்தக் கோள்களும் நட்சத்திரங்களும் தாங்கள் இருக்க வேண்டுமென்பதற்காக தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன. எந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் கோள் எங்கு செல்கிறது; எந்தக் கோள் என்ன பணியைச் செய்கிறது, எப்போது எந்தக் கோள் எந்த சுற்றுப்பாதையில் சுழல்கிறது, மேலும் அது மறைவதும் அல்லது மாற்றப்படுவதும் என இவை அனைத்தும் சிறிதும் பிழையின்றி தொடர்கின்றன. கோள்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தூரங்கள் அனைத்தும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன, இவை அனைத்தும் துல்லியமான தரவுகளால் விவரிக்கப்படலாம். அவை பயணிக்கும் பாதைகள், அவற்றின் சுற்றுப்பாதைகளின் வேகம் மற்றும் வடிவங்கள், மேலும் அவை பல்வேறு இடங்களில் நிலைகொண்டிருக்கும் நேரங்கள் என இவை அனைத்தும் துல்லியமாக அளவிடப்பட்டு விஷேசித்த விதிகளால் விவரிக்கப்படலாம். பல யுகங்களாக சிறிதளவுகூட விலகல் இல்லாமல், கோள்கள் இந்த விதிகளைப் பின்பற்றியுள்ளன. எந்தவொரு வல்லமையாலும் அவற்றின் சுற்றுப்பாதைகளை அல்லது அவை பின்பற்றும் வழிமுறைகளை மாற்றவோ, சீர்குலைக்கவோ முடியாது. அவற்றின் இயக்கத்தை நிர்வகிக்கும் விஷேசித்த விதிகளும் அவற்றை விவரிக்கும் துல்லியமான தரவுகளும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதால், அவை சிருஷ்டிகருடைய ராஜரீகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் தங்களது சொந்த விருப்பப்படி இந்தவிதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. அந்தப் பிரமாண்டமான சூழலில், சில வழிமுறைகளையும், சில தரவுகளையும், சில விசித்திரமான மற்றும் விவரிக்க முடியாத விதிகள் அல்லது நிகழ்வுகளையும், மனிதன் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. தேவன் இருக்கிறார் என்பதை மனிதகுலம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சிருஷ்டிகர் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சிருஷ்டிகருடைய அதிகாரம் இருப்பதை அங்கீகரிக்கவில்லை என்றாலும், மனித விஞ்ஞானிகளும், வானியலாளர்களும், இயற்பியலாளர்களும், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள அனைத்தையும், அத்துடன் அவை இயங்குவதற்கு ஆணையிடும் அனைத்துக் கொள்கைகளைளையும் வழிமுறைகளையும் ஒரு பரந்த மற்றும் கண்ணுக்குத் தெரியாத இருண்ட ஆற்றல் நிர்வகித்துக் கட்டுப்படுத்துகின்றது என்பதையும் மட்டுமே மேலும் மேலும் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த உண்மையானது, அந்த இயக்கமுறைகளுக்கு மத்தியில் ஒரு வல்லமை வாய்ந்தவர் இருப்பதையும், அவர் அனைத்தையும் திட்டமிட்டு இயக்குகிறார் என்பதையும் மனிதன் எதிர்க்கொண்டு ஒப்புக்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது. அவருடைய வல்லமை அசாதாரணமானது. அவருடைய மெய்யான முகத்தை யாராலும் பார்க்க முடியாது என்றாலும், அவர் ஒவ்வொரு நொடியிலும் அனைத்தையும் நிர்வகித்துக் கட்டுப்படுத்துகிறார். எந்தவொரு மனிதனும் அல்லது வல்லமையும் அவருடைய ராகரீகத்தை மிஞ்ச முடியாது. இந்த உண்மையைக் கேட்பதன் மூலம், எல்லாவற்றின் இருப்பையும் நிர்வகிக்கும் விதிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும், யாராலும் மாற்ற முடியாது என்பதையும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்; இந்த விதிகளை மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதையும், அவை இயற்கையாகவே நிகழ்கின்றன என்பதையும், ஆனால் அவை ஒரு சர்வவல்லவரால் கட்டளையிடப்படுகின்றன என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் தேவனுடைய அதிகாரத்தின் வெளிப்பாடுகள் என்று ஒரு பிரமாண்டமான சூழலில் மனிதகுலத்தால் உணர முடியும்.

நுண்ணிய அளவில், பூமியில் மனிதன் காணக் கூடிய அனைத்து மலைகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள் மற்றும் நிலப்பரப்புகளும், அவன் அனுபவிக்கும் அனைத்துப் பருவங்களும், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் தேவனுடைய ராஜரீகம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். தேவனுடைய ராஜரீகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ், அனைத்துமே அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப உருவாகின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. அவற்றின் இருப்பை நிர்வகிக்கும் விதிகள் எழுகின்றன. மேலும் அவை விதிகளுடனேயே வளர்ந்து பெருகுகின்றன. எந்தவொரு மனிதனும் அல்லது விஷயமும் இந்த விதிகளுக்கு மேற்படவில்லை. இது ஏன்? ஒரே பதில் இதுதான்: இதற்குக் காரணம் தேவனுடைய அதிகாரமாகும். அல்லது, இதை வேறு விதமாகக் கூறினால், இதற்குக் காரணம் தேவனுடைய எண்ணங்களும், அவருடைய வார்த்தைகளும், அவருடைய தனிப்பட்ட செயல்களுமாகும். இதன் பொருள் என்னவென்றால் தேவனுடைய அதிகாரமும் தேவனுடைய எண்ணமும் தான் இந்த விதிகளுக்கு வழிவகுக்கின்றன. அவை அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப மாறுகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் அவரது திட்டத்தின் நிமித்தம் நிகழ்கின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. உதாரணமாக, தொற்றுநோய்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவை எச்சரிக்கையின்றி வருகின்றன. அவற்றின் தோற்றமோ அவை ஏன் நிகழ்கின்றன என்பதற்கான சரியான காரணங்களோ யாருக்கும் தெரிவதில்லை. மேலும் ஒரு தொற்றுநோய் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும் போதெல்லாம், அங்குள்ளவர்கள் பேரழிவிலிருந்து தப்பமுடியாது. தீய அல்லது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் பரவலால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை மனித அறிவியல் புரிந்துகொள்கிறது. அவற்றின் வேகம், பரவும் தூரம் மற்றும் பரவும் முறை ஆகியவற்றை மனித அறிவியலால் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஜனங்கள் தொற்றுநோய்களை ஒவ்வொரு வழியிலும் எதிர்க்கிறார்கள் என்றாலும், தொற்றுநோய்கள் வரும் போது, மனிதர்கள் அல்லது விலங்குகள் தவிர்க்க முடியாமல் பாதிப்படைகின்றன என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மனிதர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்ப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் எடுக்கும் முயற்சி மட்டுமே ஆகும். ஆனால் எந்தவொரு தனிப்பட்ட தொற்றுநோயின் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கும் மூலக்காரணங்கள் யாருக்கும் தெரிவதில்லை, அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு தொற்றுநோயின் எழுச்சி மற்றும் பரவலை எதிர்கொள்ள, மனிதர்கள் எடுக்கும் முதல் நடவடிக்கை ஒரு தடுப்பூசியை உருவாக்குவதே ஆகும். ஆனால் தடுப்பூசி தயாராகும் முன்பே தொற்றுநோய் தானாகவே மறைந்துவிடுகிறது. தொற்றுநோய்கள் ஏன் மறைகின்றன? கிருமிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் பருவங்களின் மாற்றத்தால் மறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்…. இந்தக் கண்மூடித்தனமான யூகங்கள் நியாயமானவையா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, விஞ்ஞானம் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது. துல்லியமான பதிலையும் கொடுக்க முடியாது. மனிதகுலம் இந்த யூகங்களை மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் தொற்றுநோய்களைப் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் பயத்தையும் கணக்கிடவேண்டும். இறுதி ஆய்வில், தொற்றுநோய்கள் ஏன் தொடங்குகின்றன அல்லது அவை ஏன் முடிவடைகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் மனிதகுலத்திற்கு அறிவியலில் மட்டுமே நம்பிக்கை உள்ளது, அதை முழுவதுமாக நம்பியுள்ளது. மேலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை அல்லது அவருடைய ராஜரீகத்தைஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் அவர்கள் ஒருபோதும் ஒரு பதிலையும் பெறமாட்டார்கள்.

தேவனுடைய ராஜரீகத்தின் கீழ், அவருடைய அதிகாரம் மற்றும் அவரது கட்டுப்பாட்டின் காரணமாக அனைத்துமே பிறந்து, ஜீவிக்கின்றன, மேலும் அழிந்துபோகின்றன. சில விஷயங்கள் வந்து பின் அமைதியாக செல்கின்றன, அவை எங்கிருந்து வந்தன என்பதை மனிதனால் சொல்லவோ அல்லது அவை பின்பற்றும் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவோ முடியாது. அவை ஏன் வந்துசெல்கின்றன என்பதற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள இயலாது. எல்லாவற்றையும் கடந்து செல்வதற்காக வரும் அனைத்தையும் மனிதன் தன் கண்களால் பார்க்க முடிந்தாலும், காதுகளால் கேட்க முடிந்தாலும், அதை அவன் உடலால் அனுபவிக்க முடிந்தாலும்; இவை அனைத்தும் மனிதனின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பல்வேறு நிகழ்வுகளின் ஒப்பீட்டளவில் உள்ள அசாதாரணத்தன்மை, வழக்கமான தன்மை அல்லது விசித்திரத்தன்மை என இவற்றை மனிதன் ஆழ்மனதில் புரிந்துகொண்டாலும், அவற்றின் பின்னால் என்ன இருக்கிறது என்பது பற்றி அவனுக்கு இன்னும் எதுவும் தெரியாது. இது சிருஷ்டிகருடைய சித்தமும் எண்ணமும் ஆகும். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் பல கதைகள் உள்ளன, பல மறைக்கப்பட்ட உண்மைகள் உள்ளன. ஏனென்றால், சிருஷ்டிகருக்கு வெகுதூரத்தில் மனிதன் அலைந்து திரிவதாலும், சிருஷ்டிகருடைய அதிகாரம் அனைத்தையும் நிர்வகிக்கிறது என்ற சத்தியத்தை அவன் ஏற்றுக்கொள்ளாததாலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ராகரீகத்தின் கீழ்நடக்கும் அனைத்தையும் அவன் ஒருபோதும் அறிந்திருக்கவும் புரிந்து கொண்டிருக்கவும் மாட்டான். பெரும்பாலும், தேவனுடைய கட்டுப்பாடு மற்றும் ராஜரீகமானது மனித கற்பனை, மனித அறிவு, மனித புரிதல் மற்றும் மனித விஞ்ஞானம் என இவற்றின் எல்லைகளை மீறியதாக உள்ளது. இது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. சிலர், “தேவனுடைய ராஜரீகத்தை நீ கண்டதில்லை என்பதால், அனைத்துமே அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நீ எவ்வாறு விசுவாசிக்கலாம்?” என்று கூறுவர். பார்த்தல் என்பது எப்போதும் விசுவாசித்தல் ஆகாது, எப்போதும் அறிந்துகொள்ளுதல் என்றும், புரிந்துகொள்ளுதல் என்றும் ஆகாது. எனவே, விசுவாசம் எங்கிருந்து வருகிறது? விசுவாசம் என்பது காரியங்களின் யதார்த்தம் மற்றும் மூலக்காரணங்களைப் பற்றி ஜனங்கள் கொண்டுள்ள எண்ணம் மற்றும் அனுபவத்தின் அளவீட்டிலிருந்தும் ஆழத்திலிருந்தும் வருகிறது என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். தேவன் இருக்கிறார் என்று நீ விசுவாசித்தும், தேவனுடைய கட்டுப்பாட்டின் சத்தியத்தையும், எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தையும் நீ அடையாளம் காண முடியவில்லை என்றால், உணர முடியவில்லை என்றால், நீ தேவனுக்கு இந்த வகையான அதிகாரம் உண்டு என்பதையும் தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது என்பதையும் உன் இருதயத்தில் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாய். சிருஷ்டிகரை உன் கர்த்தர் என்றும் உன் தேவன் என்றும், உண்மையில் நீ ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாய்.

மனிதகுலத்தின் விதியும் பிரபஞ்சத்தின் விதியும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகும்

நீங்கள் அனைவரும் பெரியவர்கள். உங்களில் சிலர் நடுத்தர வயதுடையவர்கள்; சிலர் முதுமை அடைந்துள்ளீகள். நீங்கள் தேவனை விசுவாசியாத காலத்திலிருந்து அவரை விசுவாசிக்கும் வரையிலும், தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் வரையிலும், அவருடைய கிரியை அனுபவிக்கும் வரையிலும், சென்றிருக்கிறீர்கள். தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது? மனித விதியைப் பற்றி எத்தகு நுண்ணறிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள்? ஜீவிதத்தில் தான் விரும்பும் அனைத்தையும் ஒருவர் அடையமுடியுமா? நீங்கள் இருந்த சில தசாப்தங்களில் எத்தனை விஷயங்களை நீங்கள் விரும்பிய வழியில் சாதிக்க முடிந்தது? நீங்கள் எதிர்பார்க்காத எத்தனை விஷயங்கள் நடந்துள்ளன? எத்தனை விஷயங்கள் இனிய ஆச்சரியங்களாக வருகின்றன? பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜனங்கள் இன்னும் எத்தனை விஷயங்களுக்காக காத்திருக்கிறார்கள்—இன்னது என்று அறியாமலேயே சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்கள், பரலோகத்தின் சித்தத்திற்காக காத்திருக்கிறார்களா? எத்தனை விஷயங்கள் ஜனங்களை உதவியற்றவர்களாகவும், தடுக்கப்பட்டவர்களாகவும் உணரவைக்கின்றன? ஒவ்வொருவரும் தங்களது தலைவிதியைப் பற்றிய நம்பிக்கைகளால் நிறைந்தவர்கள். தங்களின் ஜீவிதத்தில் அனைத்துமே அவர்கள் விரும்பியபடி போகும் என்றும், உணவு அல்லது ஆடைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், அவர்களுடைய செல்வம் பிரமிக்கதக்கதாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஏழ்மை மற்றும் நலிந்த, கஷ்டங்கள் நிறைந்த மற்றும் பேரழிவுகளால் சூழப்பட்ட ஒரு ஜீவிதத்தை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விஷயங்களை ஜனங்கள் முன்கூட்டியே பார்க்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. எனினும் சிலருக்கு, கடந்த காலம் என்பது அனுபவங்களின் தடுமாற்றமாக மட்டுமே உள்ளது; பரலோகத்தின் சித்தம் என்ன என்பதை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை, அது என்னவென்றும் அவர்கள் கவலைப்படுவதில்லை. மிருகங்களைப் போலவே, நாள்தோறும் அவர்கள் சிந்தனையின்றி தங்களின் ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள், மனிதகுலத்தின் தலைவிதியைப் பற்றியோ மனிதர்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எப்படி ஜீவிக்க வேண்டும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அத்தகையவர்கள் மனிதவிதியைப் பற்றிய புரிதலை ஆதாயம் செய்யாமல் முதுமையை அடைகிறார்கள். அவர்கள் இறக்கும் தருணம்வரை அவர்களுக்கு ஜீவிதம் என்னவென்று தெரிவதில்லை. அத்தகையவர்கள் மரித்தவர்கள்; அவர்கள் ஆவி இல்லாத மனிதர்கள்; அவர்கள் மிருகங்கள். ஜனங்கள் சிருஷ்டிப்புகளின் நடுவே ஜீவித்து, உலகம் தங்களது பொருட்தேவைகளைப் பூர்த்திசெய்யும் பல வழிகளில் இருந்து இன்பத்தைப் பெற்றாலும், இந்தப் பொருள் உலகம் தொடர்ந்து முன்னேறுவதை அவர்கள் பார்த்தாலும், அவர்களுடைய சொந்த அனுபவங்களுக்கு—அவர்களுடைய இதயங்களும் ஆவிகளும் உணரும் மற்றும் அனுபவிக்கும் அனுபவங்கள்—பொருள் விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை, மேலும், பொருள் எதுவும் அனுபவத்திற்கு ஈடாக இருக்க இயலாது. அனுபவம் என்பது ஒருவருடைய இருதயத்தில் இருக்கும் ஆழமான புரிதலாகும். இது மனித கண்ணால் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்தப் புரிதலானது மனிதனின் ஜீவிதம் மற்றும் மனித விதியை ஒருவர் புரிந்துகொள்வதிலும், ஒருவர் காணும் முறையிலும் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஒரு எஜமானர் அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறார், மனிதனுக்காக அனைத்தையும் திட்டமிடுகிறார் என்ற புரிதலுக்கு பெரும்பாலும் இது வழிவகுக்கிறது. இத்தனைக்கும் மத்தியில், தலைவிதியின் ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; சிருஷ்டிகர் வகுத்துள்ள முன்னோக்கி செல்லும் பாதையை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஒருவருடைய தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது மறுக்கமுடியாத உண்மை. தலைவிதியைப் பற்றி ஒருவர் எத்தகு நுண்ணறிவு மற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்தாலும், இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்கு செல்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள், யாரை அல்லது எதனைச் சந்திப்பீர்கள், நீங்கள் என்ன சொல்வீர்கள், உங்களுக்கு என்ன நடக்கும் என இவற்றில் எதையேனும் கணிக்கமுடியுமா? இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஜனங்கள் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது, இந்தச் சூழ்நிலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கட்டுப்படுத்துவதும் முடியாத ஒன்றாகும். ஜீவிதத்தில், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் நடக்கும்; அவை அன்றாட நிகழ்வுகளாகும். இந்தத் தினசரி விசித்திரங்களும், அவை வெளிப்படும் விதங்களும் அல்லது அவை பின்பற்றும் முறைகளும், சீரற்ற முறையில் எதுவும் நடக்காது, ஒவ்வொரு நிகழ்வின் நடைமுறையும், ஒவ்வொரு நிகழ்வின் விரும்பத்தகாத தன்மையும் மனிதவிருப்பத்தால் மாற்ற முடியாது என்பதை மனிதகுலத்திற்கு தொடர்ந்து நினைவூட்டுகின்றன. ஒவ்வொரு நிகழ்வும் சிருஷ்டிகரிடமிருந்து மனிதகுலத்திற்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. மேலும் மனிதர்களால் தங்களது சொந்தத் தலைவிதிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற செய்தியையும் இது அனுப்புகிறது. மனிதகுலத்தின் முரட்டாட்டமான, பயனற்ற லட்சியத்துக்கும் மற்றும் தன் தலைவிதியை தனது கைகளில் எடுத்துக் கொள்ளும் விருப்பத்திற்கும் இந்த ஒவ்வொரு நிகழ்வும் மறுப்பு தெரிவிக்கிறது. இறுதியில், தங்களது தலைவிதியை நிர்வகிக்கிறவர் மற்றும் கட்டுப்படுத்துகிறவர் யார் என்று மீண்டும் மனதில்கொள்ள ஜனங்களை அவை கட்டாயப்படுத்தும் பொருட்டு மனிதகுலத்தின் முகத்தில் மீண்டும் மீண்டும் அறையப்படும் அடிகள் போன்றதாகும். அவர்களுடைய லட்சியங்களும் ஆசைகளும் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டு, சிதைந்துபோவதால், தலைவிதியானது தன்னிடம் வைத்திருக்கும் யதார்த்தத்தை, பரலோகத்தின் சித்தம் மற்றும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை மனிதர்கள் இயல்பாகவே அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அன்றாட விசித்திரங்கள் முதல் அனைத்து மனித ஜீவன்களின் தலைவிதிகள் வரை என சிருஷ்டிகருடைய திட்டங்களையும் அவருடைய ராஜரீகத்தையும் வெளிப்படுத்தாத எதுவும் இல்லை; “சிருஷ்டிகருடைய அதிகாரத்தை மீற முடியாது” என்ற செய்தியை அனுப்பாத எதுவும் இல்லை; “சிருஷ்டிகருடைய அதிகாரம் மிக உயர்ந்தது” என்ற இந்த நித்திய சத்தியத்தையும் தெரிவிக்காத எதுவும் இல்லை.

மனிதகுலத்தின் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவிதிகள் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கின்றன. அவை சிருஷ்டிகருடைய திட்டங்களுடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளன; இறுதியில், அவை சிருஷ்டிகருடைய அதிகாரத்திலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. எல்லாவற்றின் விதிகளிலும், சிருஷ்டிகருடைய திட்டங்களையும் அவருடைய ராஜரீகமும் மனிதன் புரிந்துகொள்கிறான்; அனைத்தும் பிழைப்பதற்கான விதிகளிலும், சிருஷ்டிகருடைய ஆட்சியை மனிதன் உணர்கிறான்; அனைத்தின் தலைவிதிகளிலும், சிருஷ்டிகர் தனது ராஜரீகத்தையும் அவற்றின் மீதான கட்டுப்பாட்டையும் கையாளுகிற வழிகளையும் மனிதன் யூகிக்கிறான்; மேலும், சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும், பூமிக்குரிய விதிகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்களையும், எல்லா வல்லமைகளையும், ஆற்றல்களையும் எவ்வாறு மீறுகின்றன என்பதை மனிதன் காண்பதற்காக, மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரிங்களின் ஜீவிதச் சுழற்சிகளிலும், மனிதனானவன் உண்மையிலேயே சிருஷ்டிகருடைய திட்டங்களையும், அனைத்துப் பொருட்களுக்கும் உயிரினங்களுக்குமான ஏற்பாடுகளையும் அனுபவிக்கிறான். இந்நிலையில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை எந்தவொரு படைப்பாலும் மீற முடியாது என்பதையும், சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளையும் விஷயங்களையும் எந்த சக்தியும் கைப்பற்றவோ மாற்றவோ முடியாது என்பதையும் மனிதகுலம் அறிந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. இந்தத் தெய்வீக விதிகள் மற்றும் ஆளுகைகளின் கீழ்தான் மனிதர்களும் மற்ற அனைத்து ஜீவன்களும் தலைமுறை தலைமுறையாக ஜீவிக்கிறார்கள், விருத்தியடைகிறார்கள். இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் உண்மையான வெளிப்பாடு அல்லவா? மெய்யான சட்டங்களின் வாயிலாக, சிருஷ்டிகருடைய ராஜரீகமும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருளுக்குமான அவருடைய நியமனத்தையும் மனிதர்கள் பார்த்திருந்தாலும், பிரபஞ்சத்தின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் கொள்கையை எத்தனை மனிதர்களால் புரிந்துகொள்ள முடிகிறது? எத்தனை பேர் உண்மையிலேயே தங்களது சொந்தத் தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தையும் ஏற்பாட்டையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், தங்களைச் சமர்ப்பிக்கவும் முடிகிறது? எல்லாவற்றின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை மெய்யாக விசுவாசித்து, சிருஷ்டிகர் மனிதர்களின் ஜீவிதத்தின் தலைவிதியைக் கட்டளையிடுகிறார் என்பதை உண்மையாக யார் விசுவாசிப்பார், அங்கீகரிப்பார்? மனிதனின் தலைவிதி சிருஷ்டிகருடைய உள்ளங்கையில் உள்ளது என்ற உண்மையை யார் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்? சிருஷ்டிகர் மனிதகுலத்தின் தலைவிதியை நிர்வகிக்கிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார் என்ற சத்தியத்தை எதிர்கொள்ளும்போது சிருஷ்டிகருடைய ராஜரீகம் குறித்து மனிதகுலம் என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்? இதுதான் இந்த உண்மையை இப்போது எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முடிவு ஆகும்.

ஒரு மனித ஜீவிதத்தில் உள்ள ஆறு சந்தர்ப்பங்கள்

ஒருவருடைய ஜீவிதத்தின் போக்கில், ஒவ்வொரு நபரும் தொடர்ச்சியான முக்கியமான சந்தர்ப்பங்களுக்கு வருகிறார்கள். ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியை நிர்ணயிக்கும் மிக அடிப்படையான மற்றும் மிக முக்கியமான நிலைகள் இவை. இதில் பின்வருபவை, ஒவ்வொரு நபரும் தங்களது ஜீவிதத்தின் போக்கில் கடந்து செல்ல வேண்டிய இந்த வழித்தடங்களின் சுருக்கமான விளக்கங்களாகும்.

முதல் சந்தர்ப்பம்: பிறப்பு

ஒரு நபர் எங்கே பிறக்கிறார், அவர் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறார், அவரது பாலினம், தோற்றம் மற்றும் பிறந்த நேரம் என இவை ஒரு நபருடைய ஜீவிதத்தின் முதல் சந்தர்ப்பம் குறித்த விவரங்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தின் சில விவரங்களை யாராலும் தேர்வு செய்யமுடியாது. அவை அனைத்தும் சிருஷ்டிகரால் வெகுகாலங்களுக்கு முன்பே முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. அவை எந்த வகையிலும் வெளிப்புறச் சூழலால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தக் காரணிகளும் இந்த உண்மைகளை மாற்ற முடியாது. அவை சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. ஒரு நபர் பிறக்க வேண்டும் என்றால், அந்த நபருக்காகச் சிருஷ்டிகர் ஏற்பாடு செய்த தலைவிதியின் முதல்படியை அவர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார் என்று அர்த்தமாகும். இந்த விவரங்கள் அனைத்தையும் அவர் வெகுகாலங்களுக்கு முன்பே முன்கூட்டியே தீர்மானித்திருப்பதால், அவற்றில் எதையும் மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு நபருடைய பிறப்பின் நிலைமைகளானது அவருடைய அடுத்தடுத்த தலைவிதியைப் பொருட்படுத்தாமல், முன்னரே தீர்மானிக்கப்படுகின்றன, அவை அப்படியே இருக்கின்றன; அவை ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியால் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை, மேலும் ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியைப் பற்றிய சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அவை எந்த வகையிலும் பாதிப்பதில்லை.

1) சிருஷ்டிகருடைய திட்டங்களிலிருந்து ஒரு புதிய ஜீவிதம் பிறக்கிறது

முதல் சந்தர்ப்பத்தின் விவரங்களான ஒருவருடைய பிறந்த இடம், ஒருவருடைய குடும்பம், ஒருவருடைய பாலினம், ஒருவருடைய உடல் தோற்றம், ஒருவர் பிறந்த நேரம், என இவற்றுள், ஒரு நபர் எதனைத் தேர்வு செய்யக்கூடும்? வெளிப்படையாக, ஒருவருடைய பிறப்பு என்பது தானாக நடக்கும் நிகழ்வாகும். ஒருவர் விருப்பமின்றி, ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்துடன் பிறக்கிறார்; ஒருவர் விருப்பமின்றி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உறுப்பினராகிறார், ஒரு குறிப்பிட்ட குடும்ப மரத்தின் கிளையாகிறார். இந்த முதல் ஜீவிதச் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு வேறு வழியில்லை, மாறாக சிருஷ்டிகருடைய திட்டங்களின்படி, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட பாலினம் மற்றும் தோற்றத்துடன் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், மேலும் ஒரு நபருடைய ஜீவகாலத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளபடி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கிறார். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஒரு நபர் என்ன செய்ய முடியும்? அனைத்திற்கும் மேலாக, ஒருவருடைய பிறப்பு தொடர்பான இந்த விவரங்களில், ஒன்றைக் குறித்தும் ஒருவர் தேர்வு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை. சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பு மற்றும் அவரது வழிகாட்டுதல் மட்டும் இல்லாவிட்டால், இந்த உலகில் புதிதாகப் பிறக்கும் ஒரு ஜீவனுக்கு எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும், உறவுகள், சொந்தம், உண்மையான வீடு எனஎதுவும்தெரியாது. ஆனால் சிருஷ்டிகருடைய மிகச்சிறந்த ஏற்பாடுகள் காரணமாக, இந்த புதிய ஜீவிதத்தில் தங்குவதற்கு ஒரு இடம், பெற்றோர், தனக்குச் சொந்தமான இடம் மற்றும் உறவினர்கள் என இவற்றைப் பெற்றுள்ளது. எனவே ஜீவிதம் அதன் பயணத்தின் போக்கில் அமைந்திருக்கிறது. இந்தச் செயல்முறை முழுவதிலும், இந்தப் புதிய ஜீவிதத்தின் தோற்றம் சிருஷ்டிகருடைய திட்டங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்த ஜீவன் வைத்திருக்கும் அனைத்தும் சிருஷ்டிகரால் வழங்கப்படுகிறது. தனக்கென எதுவுமில்லாமல் ஒரு விடுதலையான மிதக்கும் உடலில் இருக்கும் ஜீவன், படிப்படியாக ஒரு சதை மற்றும் இரத்தமாகப் புலப்பட்டு, உறுதியான மனிதனாக, தேவனுடைய சிருஷ்டிப்புகளில் ஒன்றாகவும், சிந்திக்கும், சுவாசிக்கும் ஒன்றாகவும், சூட்டையும் குளிரையும் உணர்கிற ஒன்றாகவும் மாறுகிறது; மேலும், பொருள் உலகில் சிருஷ்டிக்கப்பட்டவருடைய வழக்கமான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடிய; படைக்கப்பட்ட ஒரு மனிதன் ஜீவிதத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்திற்கும் உட்படும் ஒன்றாக ஜீவன் மாறுகிறது. சிருஷ்டிகர் ஒரு நபருடைய பிறப்பை முன்கூட்டியே தீர்மானிப்பது என்றால் உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அவர் அந்த நபருக்கு வழங்குவார் என்று அர்த்தமாகும்; அதைப் போலவே, ஒரு நபர் பிறக்கிறார் என்றால் சிருஷ்டிகரிடமிருந்து உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அவர்கள் பெறுவார்கள் என்றும், அதுமுதல், அவர்கள் சிருஷ்டிகரால் வழங்கப்பட்ட மற்றும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்ட மற்றொரு வடிவத்தில் ஜீவிப்பார்கள் என்றும் அர்த்தமாகும்.

2) வெவ்வேறு மனிதர்கள் ஏன் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறக்கின்றார்கள்

மனிதர்கள் மறுபிறவி எடுத்தால், ஒரு கற்பனை குடும்பத்தில் தோன்ற வேண்டும் என்று பெரும்பாலும் கற்பனை செய்ய விரும்புகிறார்கள். பெண்களாக இருந்தால், அவர்கள் ஸ்னோ ஒயிட்போல தோற்றமளிக்கவும், எல்லோராலும் நேசிக்கப்படவும் விரும்புவார்கள். ஆண்களாக இருந்தால், அவர்கள் இளவரசர் சார்மிங்போல, எதையும் செய்யாமலே, உலகம் முழுவதையும் தங்களது கையின் அசைவில் ஆட்சி செய்ய விரும்புவார்கள். தங்களது பிறப்பைப் பற்றி பலர் மாயையான காரியங்களை உருவாக்குகிறார்கள். மேலும் அதில் மிகுந்த அதிருப்தி அடைந்து, தங்களது குடும்பம், அவர்களுடைய தோற்றம், பாலினம், அவர்கள் பிறந்த நேரம் போன்றவற்றின் மீது கூடக் கோபப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஏன் பிறக்கிறார்கள் அல்லது ஏன் ஒரு குறிப்பிட்டத் தோரணையில் உள்ளார்கள் என்பதை ஜனங்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் எங்கு பிறந்தார்கள் அல்லது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும் என்பதும் சிருஷ்டிகருடைய ஆளுகையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. மேலும் இந்த நோக்கம் ஒருபோதும் மாறாது. சிருஷ்டிகருடைய பார்வையில், ஒருவர் பிறந்த இடம், ஒருவருடைய பாலினம் மற்றும் ஒருவருடைய உடல் தோற்றம் அனைத்தும் தற்காலிகமான விஷயங்களாகும். அவை முழு மனிதகுலத்தின் தனது சர்வவல்லமையின் ஒவ்வொரு கட்டத்திலும் கொண்டுள்ள சிறிய குறிப்புகளும், அடையாளங்களும் ஆகும். ஒரு நபருடைய உண்மையான இலக்கு மற்றும் விளைவு எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும் அவர்களுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் தங்களது ஜீவிதத்தில் நிறைவேற்றும் பணி மற்றும் அவரது ஆளுகைத் திட்டம் முடிந்ததும் சிருஷ்டிகர் அருளும் தீர்ப்பால் தீர்மானிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருப்பதாகவும், எந்தவொரு விளைவும் காரணமின்றி இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே, ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய தற்போதைய ஜீவிதம் மற்றும் ஒருவருடைய முந்தைய ஜீவிதம் ஆகியவற்றுடன் நிச்சயமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருடைய மரணம் அவர்களுடைய தற்போதைய ஆயுட்காலத்தை முடிக்குமானால், ஒரு நபருடைய பிறப்பு ஒரு புதிய சுழற்சியின் தொடக்கமாக இருக்கிறது. ஒரு பழைய சுழற்சி ஒரு நபருடைய முந்தைய ஜீவிதத்தைப் பிரதிபலிக்கிறது என்றால், புதிய சுழற்சி இயற்கையாகவே அவர்களுடைய தற்போதைய ஜீவிதத்தைக் குறிக்கிறது. ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய கடந்த கால ஜீவிதத்துடனும், ஒருவருடைய தற்போதைய ஜீவிதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளதால், ஒருவருடைய பிறப்புடன் அவருடைய கடந்த கால இருப்பிடம், குடும்பம், பாலினம், தோற்றம் மற்றும் இது போன்ற பிற காரணிகள் அனைத்தும் அவருடைய தற்போதைய ஜீவிதத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இதன்பொருள், ஒரு நபருடைய பிறப்பின் காரணிகள் ஒருவருடைய முந்தைய ஜீவிதத்தால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், தற்போதைய ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகின்றது. இது மனிதர்கள் பிறக்கும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு காரணமாகிறது: சிலர் ஏழைக்குடும்பங்களில் பிறக்கிறார்கள், மற்றவர்கள் பணக்காரக் குடும்பங்களில் பிறக்கிறார்கள். சிலர் சாதாரண முன்னோர்களைப் பெற்றுள்ளனர், மற்றவர்கள் சிறப்பான பரம்பரைகளைக் கொண்டுள்ளனர். சிலர் தெற்கிலும், மற்றவர்கள் வடக்கிலும் பிறக்கிறார்கள். சிலர் பாலைவனத்திலும், மற்றவர்கள் பசுமையான நிலங்களிலும் பிறக்கிறார்கள். சிலருடைய பிறப்புகளில் சந்தோஷம், நகைப்பு மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளன; மற்றவர்கள் கண்ணீர், பேரழிவு மற்றும் துயரத்தை கொண்டு வருகிறார்கள். சிலர் பொக்கிஷமாகப் பிறக்கிறார்கள், மற்றவர்கள் களைகளைப் போல ஒதுக்கி வைக்கப்படுவார்கள். சிலர் சிறந்த அம்சங்களுடன் பிறக்கிறார்கள், மற்றவர்கள் வக்கிரமானவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் பார்ப்பதற்கு அழகானவர்கள், மற்றவர்கள் அசிங்கமானவர்கள். சிலர் நள்ளிரவில் பிறக்கிறார்கள், மற்றவர்கள் மதிய வெயிலின் அடியில் பிறக்கிறார்கள். … எல்லா வகையான ஜனங்களின் பிறப்புகளும் சிருஷ்டிகரால் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தலைவிதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன; அவர்களுடைய பிறப்புகள் தற்போதைய ஜீவிதத்தில் அவர்களுடைய தலைவிதியையும், அவர்கள் செய்யப்போகும் செயல்களையும், அவர்கள் நிறைவேற்றும் பணிகளையும் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்டவை, அவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை; முன்னரே தீர்மானிக்கப்பட்ட இந்த இடத்திலிருந்து யாராலும் தப்ப முடியாது, யாராலும் தங்களுடைய பிறப்பை மாற்ற முடியாது, தங்களுடைய தலைவிதியை யாரும் தேர்வு செய்ய முடியாது.

இரண்டாவது சந்தர்ப்பம்: வளர்ச்சி

மனிதர்கள் எந்த வகையான குடும்பத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்கள் வெவ்வேறு வீட்டுச் சூழல்களில் வளர்ந்து தங்கள் பெற்றோரிடமிருந்து வெவ்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்த காரணிகளே ஒரு நபருடைய இளைஞராகும் நிலைமைகளைத் தீர்மானிக்கின்றன. மேலும் வளர்ச்சி ஒரு நபருடைய ஜீவிதத்தின் இரண்டாவது முக்கியமான சந்தர்ப்பத்தைக் குறிக்கிறது. இந்த நேரத்தில் ஜனங்களுக்கும் வேறு வழியில்லை என்று சொல்லத் தேவையில்லை. இதுவும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகும்.

1) ஒருவர் வளரும் சூழ்நிலைகள் சிருஷ்டிகரால் திட்டமிடப்படுகின்றன

ஒரு நபர் வளரும்போது ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது அவர்களை ஒழுக்கப்படுத்திய மற்றும் ஊக்குவித்த விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஒருவர் பெறும் அறிவையோ அல்லது திறன்களையோ, ஒருவர் என்ன பழக்கத்தை உருவாக்குகிறார் என்பதையோ அவர் தேர்வு செய்யமுடியாது. ஒருவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் யார் என்பதில் அவர் எந்த முடிவும் செய்ய முடியாது. ஒருவர் எந்தவகையான சூழலில் வளர்கிறார்; மற்றவர்களுடனான உறவுகள், நிகழ்வுகள் மற்றும் ஒருவருடைய சூழலில் உள்ள விஷயங்கள் மற்றும் அவை ஒருவருடைய வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பது போன்ற அனைத்தும் ஒருவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை ஆகும். பின்னர், இந்த விஷயங்களை யார் தீர்மானிக்கிறார்கள்? அவற்றை யார் ஏற்பாடு செய்கிறார்கள்? இந்த விஷயத்தில் ஜனங்களுக்கு வேறு வழியில்லை என்பதால், அவர்களால் இந்த விஷயங்களைத் தீர்மானிக்க முடியாது என்பதால், அவை வெளிப்படையாக இயற்கையாகவே வடிவம் பெறாததால், ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள் என இவற்றின் உருவாக்கம் சிருஷ்டிகரின் கரங்களில் உள்ளது என்பதை வெளிப்படையாக் காட்டுகிறது. நிச்சயமாக, ஒவ்வொரு நபருடைய பிறப்பின் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் சிருஷ்டிகர் ஏற்பாடு செய்வது போலவே, ஒருவர் வளரும் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் அவர் ஏற்பாடு செய்கிறார். ஒரு நபருடைய பிறப்பானது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அந்த நபருடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் நிச்சயமாகவே அவற்றை பாதிக்கும். உதாரணமாக, சிலர் ஏழைக் குடும்பங்களில் பிறக்கிறார்கள், ஆனால் செல்வத்தால் சூழப்படுகிறார்கள்; மற்றவர்கள் வசதியான குடும்பங்களில் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களது குடும்பத்தின் செல்வம் குறைய காரணமாகிறார்கள், இதனால் அவர்கள் ஏழ்மைச் சூழலில் வளர்கிறார்கள். யாருடைய பிறப்பும் ஒரு நிலையான விதியால் நிர்வகிக்கப்படுவதில்லை, தவிர்க்க முடியாத, நிலையான சூழ்நிலைகளின்கீழ் யாரும் வளர்வதும் இல்லை. இவை ஒருநபர் கற்பனை செய்யக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள் அல்ல. அவை ஒருவருடைய தலைவிதியின் விளைவுகளாகும். மேலும் அவை ஒருவருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகின்றன. நிச்சயமாக, அவற்றின் மூலம் யாதெனில், ஒவ்வொரு நபருக்கும் சிருஷ்டிகர் முன்னரே தீர்மானித்துள்ள விதியால் இந்த விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த நபருடைய தலைவிதி மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தாலும், சிருஷ்டிகருடைய திட்டங்களாலும் அவை தீர்மானிக்கப்படுகின்றன.

2) ஜனங்கள் வளரும் பல்வேறு சூழ்நிலைகள் வெவ்வேறு பாத்திரங்களை உருவாக்குகின்றன

ஒரு நபருடைய பிறப்பின் சூழ்நிலைகள், ஒரு அடிப்படை மட்டத்தில் அவர்கள் வளரும் சூழல் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. மேலும், ஒரு நபரின் வளரும் சூழ்நிலைகள் இதைப்போலவே அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளின் விளைவாக இருக்கிறது. இந்த நேரத்தில், ஒருவர் மொழியைக் கற்கத் தொடங்குகிறார், ஒருவருடைய மனம் பல புதிய விஷயங்களைச் சந்திக்கவும் உள்வாங்கவும் தொடங்குகிறது. இந்தச் செயல்முறையின் போது ஒருவர் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். ஒருவர் தன் காதுகளால் கேட்கும் விஷயங்கள், கண்களால் பார்க்கும் மற்றும் ஒருவருடைய மனதில் கொள்ளும் விஷயங்கள் படிப்படியாக ஒருவருடைய மனதுக்குள் உள்ள உலகத்தை நிரப்பி உயிரூட்டுகின்றன. ஒருவர் தொடர்பு கொள்ளும் நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள்; ஒருவர் கற்றுக் கொள்ளும் பகுத்தறிவு, அறிவு மற்றும் திறன்கள்; மற்றும் ஒருவருக்குப் புகட்டப்பட்டு அல்லது கற்பிக்கப்பட்டு ஒருவரை வழிநடத்தும் சிந்தனை முறைகள், என இவை அனைத்தும் ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியை வழிநடத்தும் மற்றும் தாக்கத்தை ஏற்படத்தும். ஒருவர் வளரும்போது அவர் கற்றுக்கொள்ளும் மொழி மற்றும் அவருடைய சிந்தனை முறையானது அவர் தனது இளமையைச் செலவழித்த சூழலில் இருந்து பிரிக்க முடியாதது. மேலும் அந்தச் சூழலில் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் மற்றும் பிற நபர்கள், நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் ஆகியவை உள்ளன. எனவே, ஒரு நபருடைய வளர்ச்சியின் போக்கு, அவர் வளரும் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும், அவர் வளரும் காலகட்டத்தில் அவர் தொடர்புகொள்ளும் நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களையும் சார்ந்துள்ளது. ஒரு நபர் வளரும் நிலைமைகள் நீண்ட காலத்திற்கு முன்பே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இந்த செயல்பாட்டின் போது அவர் வாழும் சூழலும் இயற்கையாகவே, முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. இது ஒரு நபருடைய தேர்வுகள் மற்றும் விருப்பங்களால் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் சிருஷ்டிகருடைய திட்டங்களின்படி, சிருஷ்டிகருடைய கவனமான ஏற்பாடுகள் மற்றும் ஜீவிதத்தில் ஒருநபருடைய தலைவிதியைப் பற்றிய அவரது ராஜரீகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, வளர்ந்து வரும் காலத்தில் எந்தவொரு நபரும் சந்திக்கும் வேறு நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் விஷயங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான சிக்கலான தொடர்புகளை ஜனங்கள் முன்கூட்டியே பார்க்க முடியாது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாது. ஒரு நபர் வளரும் சூழலில் பலவிதமான விஷயங்களும் ஜனங்களும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர், மேலும் எந்தவொரு மனிதனும் அத்தகைய பரந்த இணைப்புகளை ஏற்பாடுசெய்யவோ அல்லது திட்டமிடவோ முடியாது. சிருஷ்டிகரைத் தவிர வேறு எந்த நபரோ அல்லது காரியமோ எல்லா மனிதர்களின் தோற்றத்தையும், விஷயங்களையும், நிகழ்வுகளையும் கட்டுப்படுத்த முடியாது. அவற்றைப் நிர்வகிக்கவோ அல்லது மறைந்து போவதைக் கட்டுப்படுத்தவோ முடியாது. மேலும், இது ஒரு பரந்த இணைப்பு மட்டுமே. இது சிருஷ்டிகர் முன்னரே தீர்மானித்தது போல, ஒரு நபருடைய வளர்ச்சியை வடிவமைத்து ஜனங்கள் வளரும் பல்வேறு சூழல்களை உருவாக்குகிறது. சிருஷ்டிகருடைய ஆளுகைப் பணிக்குத் தேவையான பல்வேறு பாத்திரங்களை உருவாக்குவதும், ஜனங்கள் தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உறுதியான, வலுவான அடித்தளங்களை அமைப்பதும் இதுதான்.

மூன்றாவது சந்தர்ப்பம்: சுதந்திரம்

ஒரு நபர் குழந்தைப் பருவத்திலிருந்தும் இளமைப் பருவத்திலிருந்தும் கடந்து, படிப்படியாகவும் தவிர்க்க முடியாமலும் முதிர்ச்சி அடைந்த பிறகு, அடுத்த கட்டம் என்னவென்றால் அவர்கள் இளமையிலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து, பெற்றோரிடமிருந்து விடைபெற்று, சுதந்திரமான வயது வந்தவர்களாக முன்னேறும் பாதையை எதிர்கொள்வதாகும். இந்தக் கட்டத்தில், வயது வந்த ஒருவராக எதிர்கொள்ளவேண்டிய அனைத்து நபர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும், விரைவில் தங்களை முன்வைக்கும் அவர்களுடைய தலைவிதியின் அனைத்துப் பகுதிகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஒரு நபர் கடந்து செல்ல வேண்டிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1) சுதந்திரமான பிறகு, ஒரு நபர் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவிக்கத் தொடங்குகிறார்

ஒரு நபருடைய பிறப்பு மற்றும் வளர்ச்சி ஒருவருடைய ஜீவிதத்தின் பயணத்திற்கான “ஆயத்தக் காலம்” எனவும், ஒரு நபருடைய தலைவிதியின் மூலைக்கல்லாகவும் அமைந்தால், ஒருவருடைய சுதந்திரம் என்பது ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதிக்கான வெளிப்படையான பேச்சாகும். ஒரு நபருடைய பிறப்பு மற்றும் வளர்ச்சி என்பது அவர்கள் ஜீவிதத்தில் அவர்களுடைய தலைவிதிக்குத் தயாராகும் வகையில் சேர்த்த செல்வமாக இருந்தால், அந்த நபருடைய சுதந்திரம் என்பது அவர்கள் அந்தச் செல்வத்தைச் செலவழிப்பதில் அல்லது சேர்க்கத் தொடங்குவதில் இருக்கிறது. ஒருவர் தன் பெற்றோரிடமிருந்து வெளியேறி, சுதந்திரமாக மாறும்போது, அவர் எதிர்கொள்ளும் சமூக நிலைமைகள் மற்றும் அவருக்குக் கிடைக்கக்கூடிய வேலை மற்றும் தொழில் ஆகிய இரண்டும் விதியால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், இவற்றுக்கும் பெற்றோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிலர் கல்லூரியில் ஒரு நல்ல முக்கிய பாடத்தை தேர்ந்தெடுத்து, பட்டப்படிப்பு முடிந்தபின் திருப்திகரமான வேலையைத் தேடி, தங்களது ஜீவிதத்தின் பயணத்தில் வெற்றிகரமான முதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். சிலர் பலவிதமான திறமைகளைக் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுகிறார்கள், ஆனால் அவர்களுக்குப் பொருத்தமான ஒரு வேலையை ஒருபோதும் காண மாட்டார்கள் அல்லது அவர்களுடைய நிலையை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள், தொழிலையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்; அவர்களுடைய ஜீவிதம் பயணத்தின் தொடக்கத்தில், அவர்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் தாங்கள் தடுக்கப்படுவதைக் காண்கிறார்கள், கஷ்டங்களால் சூழப்படுகிறார்கள், அவர்களுடைய வாய்ப்புகள் மோசமானவை, அவர்களுடைய ஜீவிதம் நிச்சயமற்றது. சிலர் தங்களது படிப்புக்கு விடாமுயற்சியுடன் விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நூலளவில் இழக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் வெற்றியைப் பெறுவதற்கு விதிக்கப்படுவதில்லை என்பது போல தோன்றுகிறது, அவர்களுடைய ஜீவிதப் பயணத்தில் அவர்களுடைய முதல் வாஞ்சையே மெல்லிய காற்றில் கரைந்துவிடுகிறது. முன்னோக்கிச் செல்லும் பாதை மென்மையானதா அல்லது பாறை போன்றதா என்பதை அறியாமல், மனித விதி எவ்வளவு மாற்றங்கள் நிறைந்திருக்கிறது என்பதை அவர்கள் முதன்முறையாக உணர்கிறார்கள். எனவே, ஜீவிதத்தை எதிர்பார்ப்பு மற்றும் அச்சம் நிறைந்ததாக கருதுகின்றனர். சிலர் நன்கு படித்தவர்களாக இல்லாவிட்டாலும், புத்தகங்களை எழுதி, ஒரு அளவிலான புகழைப் பெறுகிறார்கள்; சிலர் கிட்டத்தட்ட முற்றிலும் கல்வியறிவற்றவர்களாக இருந்தாலும், வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள், இதனால் தங்களைத் தாங்களே ஆதரித்துக் கொள்கிறார்கள்…. ஒருவர் எந்தத் தொழிலைத் தேர்வு செய்கிறார், ஒருவர் எவ்வாறு ஒரு ஜீவிதத்தை உருவாக்குகிறார்: இந்த விஷயங்களில் ஒரு நல்ல தேர்வு செய்கிறார்களா அல்லது மோசமான தேர்வு செய்கிறார்களா என்பதில் ஜனங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடு இருக்கிறதா? இந்த விஷயங்கள் ஜனங்களின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் பொருந்துமா? பெரும்பாலான ஜனங்கள் பின்வரும் விருப்பங்களைக் கொண்டுள்ளனர்: குறைவாக வேலை செய்து அதிகம் சம்பாதித்தல், வெயிலிலும் மழையிலும் உழைக்காதிருத்தல், நன்றாக ஆடை அணிதல், எல்லா இடங்களிலும் பிரகாசித்தல், ஜொலித்தல், மற்றவர்களுக்கு மேலே உயர்ந்திருத்தல், மற்றும் தங்களின் முன்னோர்களுக்கு மரியாதை அளித்தல் ஆகியன ஆகும். ஜனங்கள் பரிபூரணத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது ஜீவிதப் பயணத்தில் முதல் படிகளை வைக்கும்போது, மனித விதி எவ்வளவு பூரணமற்றது என்பதை அவர்கள் படிப்படியாக உணர்கிறார்கள். மேலும், ஒருவரது தைரியமான திட்டங்களை அவர் செய்ய முடியும் என்றாலும், துணிச்சலான கற்பனைகளை ஒருவர் கொண்டிருக்கலாம் என்றாலும், யாருக்கும் தங்களது சொந்தக் கனவுகளை நனவாக்கும் திறனும் ஆற்றலும் இல்லை மற்றும் யாரும் தங்களது சொந்த எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை என்று முதல்முறையாக அவர்கள் மெய்யாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒருவருடைய கனவுகளுக்கும் ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தங்களுக்கும் இடையில் எப்போதுமே சிறிது தூரம் இருக்கும்; விஷயங்கள் ஒருபோதும் அவர்கள் விரும்புவதைப் போலவே இருப்பதில்லை. அத்தகைய யதார்த்தங்களை எதிர்கொள்வதால், ஜனங்கள் ஒருபோதும் திருப்தியையும் மனநிறைவையும் அடைய முடியாது. சிலர் கற்பனை செய்யக்கூடிய எந்தத் தூரத்திற்கும் செல்வார்கள், பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் தங்களது சொந்த விதியை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் பெரும் தியாகங்களைச் செய்வார்கள். ஆனால் இறுதியில், அவர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் தங்களது கனவுகளையும் ஆசைகளையும் உணர முடிந்தாலும், அவர்களால் ஒருபோதும் தங்களது தலைவிதியை மாற்றமுடியாது. அவர்கள் எவ்வளவு வெறித்தனமாக முயற்சி செய்தாலும், அவர்களுக்கு விதி விதித்ததை அவர்கள் ஒருபோதும் கடந்து போக முடியாது. திறமை, புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதி ஆகியவற்றின் காரணமாக ஜனங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பினும், ஜனங்கள் அனைவரும் விதியின் முன் சமமானவர்கள். விதியானது பெரியவை மற்றும் சிறியவை, உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, பெருமைக்குரியவை மற்றும் சராசரியானவை என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஒருவர் என்ன தொழிலைச் செய்கிறார், ஒருவர் தன் ஜீவிதத்துக்காக என்ன செய்கிறார், ஜீவிதத்தில் ஒருவர் எவ்வளவு செல்வத்தைச் சேகரிக்கிறார் என்பது ஒருவருடைய பெற்றோரால், ஒருவருடைய திறமைகளால், ஒருவருடைய முயற்சிகளால் அல்லது ஒருவருடைய லட்சியங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது.

2) தன் பெற்றோரை விட்டுவிலகி, ஜீவிதத்தின் அரங்கில் தன் பாத்திரத்தை வகிக்க ஆர்வத்துடன் தொடங்குதல்

ஒருவர் முதிர்ச்சி அடையும்போது, ஒருவர் தன் பெற்றோரை விட்டுவிலகிச் சொந்தமாக வேலை செய்ய முடியும். இந்தக் கட்டத்தில் தான் ஒருவர் உண்மையிலேயே அவருடைய சொந்தப் பாத்திரத்தை வகிக்கத் தொடங்குகிறார், ஜீவிதத்தில் மூடுபனி விலகி ஒருவருடைய பணி படிப்படியாகத் தெளிவாகிறது. பெயரளவில், ஒருவர் இன்னமும் அவருடைய பெற்றோருடன் நெருக்கமாக இணைந்திருக்கிறார், எனினும் அவருடைய பணி மற்றும் ஜீவிதத்தில் அவர் வகிக்கும் பங்கிற்கும், அவருடைய தாய் தந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், அவர் படிப்படியாகச் சுதந்திரமாகும் போது, முக்கியமாக இந்த நெருக்கமான பிணைப்பு உடைகிறது. ஒரு உயிரியல் கண்ணோட்டத்தில், மனிதர்கள் இன்னும் ஆழ்மனதின் நிலைகளில் தங்களது பெற்றோரைச் சார்ந்திருக்காமல் இருக்க முடிவதில்லை. ஆனால் சொந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் இல்லாமல் மெய்மைகளை ஆராய்ந்து பேசினால், அவர்கள் முழுமையாக வளர்ந்தவுடன், அவர்கள் பெற்றோரிடமிருந்து முற்றிலும் தனித்தனியான ஜீவிதத்தைப் பெறுகிறார்கள். மேலும், அவர்கள் சுயாதீனமாக எடுத்துக் கொள்ளும் பாத்திரங்களை வகிப்பார்கள். பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைத் தவிர, குழந்தைகளின் ஜீவிதத்தில் பெற்றோருடைய பொறுப்பு வெறுமனே அவர்கள் வளர்வதற்காக அவர்களுக்கு முறையான சூழலை வழங்குவதாகும். ஏனென்றால், சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பைத் தவிர வேறொன்றும் ஒரு நபருடைய தலைவிதியைப் பாதிக்காது. ஒரு நபருக்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; இது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது மற்றும் ஒருவருடைய பெற்றோரால் கூட ஒருவருடைய தலைவிதியை மாற்ற முடியாது. விதியைப் பொறுத்தவரை, எல்லோரும் சுதந்திரமானவர்கள், ஒவ்வொருவருக்கும் அவரவர் விதி உண்டு. எனவே, எவருடைய பெற்றோரும் ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியைத் தடுக்கவோ அல்லது ஜீவிதத்தில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தில் சிறிதளவு செல்வாக்கை செலுத்தவோ முடியாது. ஒருவர் பிறக்க வேண்டிய குடும்பம் மற்றும் ஒருவர் வளரும் சூழல் ஜீவிதத்தில் ஒருவருடைய பணியை நிறைவேற்றுவதற்கான முன் நிபந்தனைகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறலாம். ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியையோ அல்லது அந்த நபர் தன் பணியை நிறைவேற்றும் விதத்தையோ அவை எந்த வகையிலும் தீர்மானிக்கவில்லை. எனவே, ஒருவரது ஜீவிதத்தில் அவரது பணியை நிறைவேற்ற எந்தப் பெற்றோரும் உதவ முடியாது. அதைப் போலவே, ஜீவிதத்தில் ஒருவருடைய பங்கை அவர் நிறைவேற்ற அவருடைய உறவினர்களும் உதவ முடியாது. ஒருவருடைய பணியை ஒருவர் எவ்வாறு நிறைவேற்றுகிறார், எந்த வகையான ஜீவிதச் சூழலில் ஒருவர் அவருடைய பங்கைச் செய்கிறார் என்பது அவருடைய ஜீவிதத்தில் ஏற்படும் தலைவிதியால் முழுமையாகத் தீர்மானிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நபருடைய பணியை வேறு எந்தப் புற நிலைமைகளும் பாதிக்காது. இது சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எல்லா ஜனங்களும் தாங்கள் வளரும் குறிப்பிட்ட சூழலில் முதிர்ச்சியடைகிறார்கள்; பின்னர் படிப்படியாக, படிப்படியாக, அவர்கள் ஜீவிதத்தில் தங்களது சொந்தப் பாதைகளை அமைத்து, சிருஷ்டிகரால் அவர்களுக்காக திட்டமிடப்பட்ட விதிகளை நிறைவேற்றுகிறார்கள். இயற்கையாகவே, விருப்பமின்றி, மனிதகுலத்தின் பரந்த கடலுக்குள் அவர்கள் நுழைந்து ஜீவிதத்தில் தங்களது சொந்தப் பதவிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்கு சிருஷ்டிகருடைய முன்னறிவிப்புக்காகவும், அவருடைய ராஜரீகத்தின் பொருட்டும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாக அவர்கள் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றத் தொடங்குகிறார்கள்.

நான்காவது சந்தர்ப்பம்: திருமணம்

ஒருவர் வயது வந்த பின்பு, தன் பெற்றோரிடமிருந்தும், தான் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்தும் அதிகத் தொலைவிற்குச் செல்கிறார், அதற்குப் பதிலாக ஜீவிதத்தில் ஒரு திசையைத் தேடத் தொடங்குகிறார் மற்றும் தன் பெற்றோரிடமிருந்து வேறுபட்ட பாணியில் தன் சொந்த ஜீவித இலக்குகளைப் பின்தொடரவும் தொடங்குகிறார். இந்த நேரத்தில், ஒருவருக்கு அவருடைய பெற்றோர் இனி தேவைப்படுவதில்லை. ஆனால், அவருடைய ஜீவிதத்தைச் செலவிட அவருக்கு ஒரு கூட்டாளர் தேவைப்படுகிறார், அதாவது அவருடைய தலைவிதியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள ஒரு மனிதர், அதாவது ஒரு துணை தேவைப்படுகிறது. எனவே, சுதந்திரமானதிற்குப் பிறகு ஜீவிதத்தில் நிகழும் முதல் பெரிய நிகழ்வு திருமணம் ஆகும். இது கடந்து செல்ல வேண்டிய நான்காவது சந்தர்ப்பம் ஆகும்.

1) தனி மனித விருப்பம் திருமணத்திற்குள் பிரவேசிக்காது

எந்தவொரு நபருடைய ஜீவிதத்திலும் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்; இது ஒருவர் பல்வேறு வகையான பொறுப்புகளை ஏற்கவும், படிப்படியாக பல்வேறு வகையான பணிகளை முடிக்கவும் தொடங்கும் நேரம் ஆகும். திருமணத்தை அனுபவிப்பதற்கு முன்பே, அதைக் குறித்து ஜனங்கள் பல மாயைகளை மனதில் வைத்திருக்கிறார்கள். இந்த மாயைகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. பெண்கள் தங்களது மறுபாதி இளவரசர் சார்மிங்காக இருப்பார்கள் என்று கற்பனை செய்கிறார்கள், ஆண்கள் ஸ்னோ ஒயிட்டை திருமணம் செய்து கொள்வார்கள் என்று கற்பனை செய்கிறார்கள். இந்தக் கற்பனைகளானது ஒவ்வொரு நபருக்கும் திருமணத்தைப் பற்றிய சில தேவைகளும், அவர்களுக்கே உரித்தான கோரிக்கைகளும் தரநிலைகளும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இந்தத் தீய யுகத்தில், ஜனங்கள், திருமணத்தைப் பற்றிய தவறான செய்திகளால் தொடர்ந்து நிரப்பப்படுகிறார்கள், இது இன்னும் கூடுதலான தேவைகளை உருவாக்கி ஜனங்களுக்கு எல்லா வகையான சுமைகளையும் விசித்திரமான மனநிலைகளையும் தருகிறது என்றாலும், ஒருவர் திருமணத்தை எப்படிப் புரிந்து கொண்டாலும், அதைப் பற்றிய ஒருவருடைய மனப்பான்மை எதுவாக இருந்தாலும், திருமணம் என்பது தனி மனித விருப்பமாக இருக்காது என்று திருமணத்தை அனுபவித்த எந்தவொரு நபருக்கும் தெரியும்.

ஒருவர் தன் ஜீவிதத்தில் பலரைச் சந்திக்கிறார், ஆனால் திருமணத்தில் அவருடைய துணை யார் என்று யாருக்கும் தெரியாது. திருமண விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்களும் தனிப்பட்ட நிலைப்பாடுகளும் இருந்தாலும், உண்மையிலேயே, இறுதியாக அவர்களுடைய மறுபாதியாக யார் மாறுவார்கள் என்று ஒருவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது மற்றும் இந்த விஷயத்தில் ஒருவருடைய சொந்த யோசனைகளுக்கு மதிப்பொன்றும் இல்லை. நீ விரும்பும் ஒருவரைச் சந்தித்த பிறகு, நீ அந்த நபரைப் பின்தொடரலாம்; ஆனால் அவர்கள் உன்னிடம் ஆர்வமாக இருக்கிறார்களா, அவர்கள் உன் துணையாக மாறமுடியுமா என்பவற்றைப் பற்றி எடுக்கப்படும் முடிவு உன்னுடையது அல்ல. உன் பாசத்தின் நோக்கம் உன் ஜீவிதத்தை நீ பகிர்ந்து கொள்ளக்கூடிய நபராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; இதற்கிடையில், நீ ஒருபோதும் எதிர்பார்க்காத ஒருவர் அமைதியாக உன் ஜீவிதத்தில் நுழைந்து உன் துணையாக, உன் விதியின் மிக முக்கியமான பகுதியாக, உன் மறுபாதியாக மாறக்கூடும், அவருடன் உன் விதி பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்படக் கூடும். எனவே, உலகில் கோடிக்கணக்கானத் திருமணங்கள் இருந்தாலும், ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்: பல திருமணங்கள் திருப்தியற்றவை, பல திருமணங்கள் மகிழ்ச்சியானவை; பல திருமணங்களில் மணமக்கள் இருவரில், ஒருவர் கிழக்கிலிருந்தும் மற்றொருவர் மேற்கிலிருந்தும் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்கின்றனர், பல திருமணங்களில் மணமக்கள் இருவரில், ஒருவர் வடக்கிலிருந்தும் மற்றொருவர் தெற்கிலிருந்தும் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்கின்றனர்; பல திருமணங்கள் சரியான பொருத்தங்களாகும், பல சமமான சமூக அந்தஸ்துள்ளவையாகும்; பல திருமணங்கள் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருக்கின்றன, பல வேதனையும் துக்கமும் பெறுகின்றன; பல திருமணங்கள் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டுகின்றன, பல திருமணங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் முகம் சுளிக்கப்படுகின்றன; பல திருமணங்களில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது, பல திருமணங்கள் கண்ணீரால் நிறைந்து விரக்தியையும் கொண்டு வருகின்றன…. இந்த எண்ணற்ற வகையான திருமணங்களில், மனிதர்கள் திருமணத்திற்கு விசுவாசத்தையும் ஜீவ காலம் முழுமைக்குமான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் அன்பு, பாசம் மற்றும் பிரிக்க முடியாத தன்மை அல்லது சகிப்புதன்மை மற்றும் புரிந்து கொள்ளமுடியாத தன்மையை வெளிப்படுத்துகின்றனர். சிலர் தங்களது திருமணத்தை ஏமாற்றுகிறார்கள், அல்லது அதை வெறுக்கிறார்கள். திருமணம் மகிழ்ச்சியை தருகிறதா வேதனையை தருகிறதா என்பதல்லாமல், திருமணத்தில் ஒவ்வொருவருடைய நோக்கமும் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது, அது மாறாது; இந்தப் பணியானது எல்லோரும் முடிக்க வேண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் இருக்கும் ஒவ்வொரு நபருடைய தலைவிதியும் மாறாது. அது சிருஷ்டிகரால் நீண்டகாலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

2) திருமணம் என்பது இரண்டு துணைகளின் தலைவிதிகளிலிருந்தும் பிறக்கிறது

திருமணம் என்பது ஒரு நபருடைய ஜீவிதத்தில் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது ஒரு நபருடைய தலைவிதியின் விளைவு மற்றும் ஒருவருடைய தலைவிதியில் ஒரு முக்கியமான இணைப்பு ஆகும்; இது எந்தவொரு நபருடைய தனிப்பட்ட தேர்விலோ விருப்பங்களிலோ நிறுவப்படவில்லை மற்றும் இது எந்த வெளிப்புறக் காரணிகளாலும் பாதிக்கப்படவும் இல்லை. ஆனால் இரு தரப்பினர்களின் தலைவிதிகளாலும், சிருஷ்டிகருடைய ஏற்பாடுகள் மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தம்பதியினராகும் இருவருடைய தலைவிதிகளாலும் முற்றிலும் தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், திருமணத்தின் நோக்கம் மனித இனத்தைத் தொடர்வதே ஆகும். ஆனால் சத்தியம் என்னவென்றால், திருமணம் என்பது ஒருவர் தன் பணியை நிறைவு செய்ய அவர் மேற்கொள்ளும் ஒரு சடங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. திருமணத்தில், ஜனங்கள் அடுத்தத் தலைமுறையை வளர்ப்பதில் மட்டும் பங்கு வகிப்பதில்லை; ஒரு திருமணத்தை நிர்வகிப்பதிலும், ஒருவர் தான் நிறைவேற்ற வேண்டிய பணியை செய்வதிலும் உள்ள பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவருடைய பிறப்பானது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள விஷயங்களால் ஏற்படும் மாற்றங்களைப் பாதிக்கும் என்பதால், ஒருவருடைய திருமணமும் இந்த ஜனங்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் கண்டிப்பாகப் பாதிக்கும் மற்றும் அவை அனைத்தையும் பல்வேறு வழிகளில் மாற்றும்.

ஒருவர் சுதந்திரமாக மாறும்போது, ஒருவர் ஜீவிதத்தில் தனது சொந்த பயணத்தைத் தொடங்குகிறார், இது அவரைப் படிப்படியாக, ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடைய திருமணத்துடன் தொடர்பு கொண்டுள்ள விஷயங்களை நோக்கி வழிநடத்துகிறது. அதே நேரத்தில், அந்தத் திருமணத்தில் இருக்கும் மற்ற நபர் படிப்படியாக, அதே ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை நோக்கி வருகிறார். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் கீழ், தொடர்புடைய தலைவிதிகளைக் கொண்டுள்ள தொடர்பில்லாத இரண்டு நபர்கள், படிப்படியாக ஒரே திருமண பந்தத்திற்குள் நுழைந்து, அதிசயமான முறையில் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள்: “ஒரே கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வெட்டுக்கிளிகளாக இருக்கிறார்கள்.” எனவே, ஒருவர் திருமண பந்தத்திற்குள் நுழையும்போது, ஒருவருடைய ஜீவிதப் பயணம் அவருடைய துணையைப் பாதிக்கும், அதைப் போலவே ஒருவருடைய துணையின் ஜீவிதப் பயணமும் அவருடைய ஜீவிதத்தில் அவருடைய சொந்த விதியைப் பாதிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனித விதிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன மற்றும் ஜீவிதத்தில் ஒருவரது பணியை யாராலும் முடிக்கவோ அல்லது மற்றவர்களிடமிருந்து முழுமையான சுதந்திரத்தில் விலகி தன் பங்கை ஆற்ற முடியாது. ஒருவருடைய பிறப்பு ஒரு பெரிய உறவுகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது; ஒருவருடைய வளர்ச்சியும் ஒரு சிக்கலான உறவுகளின் சங்கிலியை உள்ளடக்கியுள்ளது; அதைப் போலவே, ஒரு திருமணம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் மனிதத் தொடர்புகளின் பரந்த மற்றும் சிக்கலான வலையில் நிர்வகிக்கப்படுகிறது. அந்த வலையின் ஒவ்வொரு உறுப்பினரையும் உள்ளடக்கி, அதன் ஒரு பகுதியாக இருக்கும் அனைவருடைய தலைவிதியையும் பாதிக்கிறது. திருமணம் என்பது இரு உறுப்பினர்களின் குடும்பங்கள், அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகள், அவர்களுடைய தோற்றங்கள், வயது, குணங்கள், திறமைகள் அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் விளைவு அல்ல; மாறாக, ஒரு பகிரப்பட்ட பணியிலிருந்தும், தொடர்பிலிருக்கும் ஒரு விதியிலிருந்தும் இது எழுகிறது. இதுவே சிருஷ்டிகரால் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மனிதவிதியின் ஒரு விளைவான திருமணத்தின் தோற்றமாகும்.

ஐந்தாவது சந்தர்ப்பம்: சந்ததி

திருமணமான பிறகு ஒருவர் அடுத்தத் தலைமுறையை வளர்க்கத் தொடங்குகிறார். ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர், எப்படிப்பட்ட குழந்தைகள் உள்ளனர் என்பதில் அவர் எந்த முடிவும் செய்ய முடியாது; இதுவும் ஒரு நபருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகிறது, இது சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. இது, ஒரு நபர் கடந்து செல்ல வேண்டிய ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.

யாரோ ஒருவருடைய குழந்தையின் பாத்திரத்தை வகித்து நிறைவேற்றுவதற்காக ஒருவர் பிறந்தால், யாரோ ஒருவருடைய பெற்றோரின் பங்கை நிறைவேற்ற ஒருவர் அடுத்தத் தலைமுறையை வளர்க்கிறார். இந்தப் பங்கு வகிப்புகளின் மாற்றம், வெவ்வேறு கோணங்களில், ஒரு அனுபவத்தை ஜீவிதத்தின் வெவ்வேறு கட்டங்களாக மாற்றுகிறது. இது ஒரு வித்தியாசமான ஜீவித அனுபவத்தையும் தருகிறது, இதன் மூலம் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஒருவர் அறிந்து கொள்கிறார், இது எப்போதும் ஒரே மாதிரியாக இயற்றப்படுகிறது. மேலும், இதன் மூலம் சிருஷ்டிகரால் முன்தீர்மானிக்கப்பட்டதை யாராலும் மிஞ்சவோ மாற்றவோ முடியாது என்ற உண்மையை இது அறியச் செய்கிறது.

1) ஒருவருடைய சந்ததியால் என்ன நடக்கும் என்பதன் மீது ஒருவருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது

பிறப்பு, வளர்ச்சி, திருமணம் அனைத்தும் பல்வேறு வகையான மற்றும் வெவ்வேறு அளவுகளில் ஏமாற்றங்களைத் தருகின்றன. சிலர் தங்களது குடும்பங்கள் அல்லது அவர்களுடைய சொந்த உடற்தோற்றத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர்; சிலர் தங்களது பெற்றோரை விரும்புவதில்லை; சிலர் வளர்ந்த சூழலைப் பற்றி மனக்கசப்பு அல்லது புகார்கள் கொண்டுள்ளனர். இந்த ஏமாற்றங்களுக்கிடையில், பெரும்பாலான ஜனங்களுக்கு, திருமணமே மிகவும் அதிருப்திகரமான ஒன்றாக இருக்கிறது. ஒருவர் தன்னுடைய பிறப்பு, முதிர்ச்சி அல்லது திருமணத்தைக் குறித்து எவ்வளவு அதிருப்தி அடைந்தாலும், இந்த விஷயங்களை அனுபவித்த அனைவருக்கும், அவர்கள் எங்கு, எப்போது பிறந்தார்கள், அவர்கள் எப்படி இருக்கிறார்கள், பெற்றோர் யார், அவர்களுடைய துணை யார் என்பதைக் குறித்து ஒருவர் தேர்வு செய்யமுடியாது என்றும், ஆனால் பரலோகத்தின் விருப்பத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரியும். ஆயினும், ஜனங்கள் அடுத்தத் தலைமுறையை வளர்ப்பதற்கான நேரம் வரும்போது, அவர்கள் தங்களது ஜீவிதத்தின் முதல் பாதியில் உண்மையாக்கத் தவறிய அனைத்து ஆசைகளையும் தங்களது சந்ததியினருக்கு முன் வைப்பார்கள், அவர்களுடைய சொந்த ஜீவிதத்தினுடைய முதல் பாதியின் அனைத்து ஏமாற்றங்களுக்கும் தங்களது சந்ததியினர் ஈடுசெய்வார்கள் என்று நம்புகிறார்கள். ஆகவே, ஜனங்கள் தங்களது குழந்தைகளைப் பற்றிய அனைத்து வகையான கற்பனைகளிலும் ஈடுபடுகிறார்கள்: தங்களுடைய மகள்கள் அசரவைக்கும் அழகிகளாக வளருவார்கள், தங்களுடைய மகன்கள் துணிச்சலும் பண்புமுள்ள மனிதர்களாக இருப்பார்கள்; அதனால் அவர்களுடைய மகள்கள் பண்பட்டவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களுடைய மகன்கள் சிறந்த மாணவர்களாகவும் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்களாகவும் இருப்பார்கள்; அவர்களுடைய மகள்கள் மென்மையானவர்களாகவும், நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், விவேகமானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களுடைய மகன்கள் புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும், உணர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பார்கள். தங்களது சந்ததியினர், அவர்கள் மகள்களாக இருந்தாலும், மகன்களாக இருந்தாலும், தங்களது மூப்பர்களை மதிப்பார்கள், பெற்றோரை கவனித்துக் கொள்வார்கள், அனைவராலும் நேசிக்கப்படுவார்கள், புகழப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்…. இந்தக் கட்டத்தில், ஜீவிதத்துக்கான நம்பிக்கைகள் புதிதாக உருவாகின்றன மற்றும் புதிய உணர்வுகள் ஜனங்களின் இதயங்களில் தூண்டப்படுகின்றன. இந்த ஜீவிதத்தில் அவர்கள் பெலன் அற்றவர்களாகவும் நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், கூட்டத்தில் இருந்து தனித்து நிற்க அவர்களுக்கு இன்னொரு வாய்ப்போ அல்லது நம்பிக்கையோ கிடைக்காது என்பதையும், அவர்களுடைய தலைவிதிகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் ஜனங்கள் அறிவார்கள். எனவே, அவர்கள் தங்களின் நம்பிக்கைகள், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் இலட்சியங்களை அடுத்த தலைமுறையினரிடம் முன்வைக்கிறார்கள், தங்கள் கனவுகளை நனவாக்கவும் தங்கள் மனவிருப்பங்களை உணர்ந்து கொள்ளவும் தங்கள் சந்ததியினர் தங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறார்கள்; அதாவது அவர்களுடைய மகள்களும் மகன்களும் குடும்பப் பெயருக்கு புகழைச் சேர்ப்பார்கள், முக்கியமாவார்கள், பணக்காரராவார்கள் அல்லது பிரபலமாவார்கள் என்று கிறார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், அவர்கள் தங்களது குழந்தைகளின் செல்வங்கள் உயர்வதைப் பார்க்க விரும்புகிறார்கள். ஜனங்களின் திட்டங்களும் கற்பனைகளும் சரியானவையாக இருக்கின்றன; அவர்களிடம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுடைய குழந்தைகளின் தோற்றம், திறமைகள் மற்றும் அதுபோன்ற பலவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்றும், அவர்களுடைய குழந்தைகளின் தலைவிதிகளில் சிறு பகுதி கூட அவர்களுடைய கைகளில் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியாதா? மனிதர்கள் தங்களது சொந்த விதியின் எஜமானர்கள் அல்ல. எனினும், அவர்கள் தங்களின் இளைய தலைமுறையின் தலைவிதியை மாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள்; அவர்கள் தங்களது சொந்த விதிகளிலிருந்து தப்பிக்கத் திராணியற்றவர்கள், ஆனாலும் அவர்கள் தங்களின் மகன்கள் மற்றும் மகள்களின் விதிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களை மிகைப்படுத்திக் கொள்ளவில்லையா? இது மனித முட்டாள்தனமும் அறியாமையும் அல்லவா? ஜனங்கள் தங்களது சந்ததியினருக்காக எந்தத் தூரத்திற்கும் செல்வார்கள். ஆனால் இறுதியில், அவருடைய திட்டங்கள் மற்றும் ஆசைகளால் ஒருவருக்கு எத்தனைக் குழந்தைகள் உள்ளன அல்லது அந்தக் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என்று கட்டளையிட முடியாது. சிலர் பணமில்லாதவர்களாக இருக்கிறார்கள், ஆனால் பல குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்; சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஒரு குழந்தைகூட இல்லை. சிலர் ஒரு மகளை விரும்புகிறார்கள், ஆனால் அந்த விருப்பம் மறுக்கப்படுகிறது; சிலர் ஒரு மகனை விரும்புகிறார்கள், ஆனால் ஒரு ஆண் குழந்தையை உருவாக்க இயலாமல் இருக்கிறார்கள். சிலருக்குக் குழந்தைகள் ஒரு ஆசீர்வாதம்; மற்றவர்களுக்கு அவர்கள் ஒரு சாபக்கேடு. சில தம்பதிகள் புத்திசாலிகள், ஆனால் மந்தமான அறிவுடைய குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்; சில பெற்றோர்கள் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், ஆனாலும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கனிவானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் குழந்தைகள் வஞ்சகமாகவும் தீயவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். சில பெற்றோர்கள் மனதளவிலும் உடலளவிலும் சிறப்பாக இருக்கிறார்கள், ஆனால் ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். சில பெற்றோர்கள் சாதாரணமானவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள், ஆனால் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் குழந்தைகளைப் பெற்றுள்ளார்கள். சில பெற்றோர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தும் மேன்மையான நிலைக்கு எழும்பும் பிள்ளைகளைக் கொண்டுள்ளனர். …

2) அடுத்தத் தலைமுறையை வளர்த்த பிறகு, ஜனங்கள் விதியைப் பற்றிய புதிய புரிதலைப் பெறுகிறார்கள்

திருமண பந்தத்திற்குள் நுழையும் பெரும்பாலான ஜனங்கள் முப்பது வயதிற்குள் அவ்வாறு செய்கிறார்கள். இது இன்னும் மனித விதியைப் பற்றிப் புரிந்துகொள்ளாத ஜீவிதத்தின் ஒரு காலப்பகுதி ஆகும். ஆனால் ஜனங்கள் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கும்போது, அவர்களுடைய சந்ததியினர் வளரும்போது, முந்தையத் தலைமுறையின் ஜீவிதத்தையும் அனைத்து அனுபவங்களையும் புதிய தலைமுறையியினர் மீண்டும் வாழ்வதைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய சொந்த கடந்த காலங்கள் அவற்றில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்கும்போது, தங்களது பாதையைப் போலவே, இளைய தலைமுறையினர் நடந்து சென்ற பாதையையும், அவர்கள் திட்டமிடவும் தேர்ந்தெடுக்கவும் முடியாது என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை எதிர்கொள்வதன் மூலம், ஒவ்வொரு நபருடைய தலைவிதியும் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமற்போகிறது. அதை உணராமல், அவர்கள் படிப்படியாக தங்களது சொந்த ஆசைகளை ஒதுக்கி வைக்கிறார்கள் அவர்களுடைய இருதயங்களில் உள்ள கனவுகள் சிதறி இறந்து போகின்றன…. இந்த காலகட்டத்தில் உள்ளவர்கள், ஜீவிதத்தின் முக்கிய வழித்தடங்களை கட்டாயமான முறையில் கடந்ததால், ஜீவிதத்தைப் பற்றிய ஒரு புதிய புரிதலை அடைந்து, ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றினார்கள். இந்த வயதிற்குட்பட்ட ஒருவர் எதிர்காலத்தில் இருந்து எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும், அவர்கள் என்ன முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும்? எந்த ஐம்பது வயதான பெண் இன்னும் இளவரசர் சார்மிங்கைக் கனவு காண்கிறாள்? எந்த ஐம்பது வயதான ஆண் இன்னும் தனது ஸ்னோ ஒயிட்டைத் தேடுகிறான்? ஓர் அசிங்கமான வாத்திலிருந்து ஓர் அன்னப் பறவையாக மாற இன்னும் எந்த நடுத்தர வயது பெண் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள்? பெரும்பாலான வயதான ஆண்களுக்கு இளைஞர்களைப் போலவே தொழில் உந்துதல் இருக்கிறதா? மொத்தத்தில், ஒருவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த வயது வரை வாழ்ந்த எவருக்கும் திருமணம், குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து ஒப்பீட்டளவில் பகுத்தறிவும், நடைமுறை அணுகுமுறையும் இருக்கக் கூடும். அத்தகைய நபருக்கு அடிப்படையில் தேர்வுகள் எதுவும் இல்லை, விதியைச் சவால் செய்ய எந்தத் தூண்டுதலும் இல்லை. மனித அனுபவம் எவ்வளவாகப் பெருகுகிறதோ, அவ்வளவாக ஒருவர் இந்த வயதை அடைந்தவுடன், இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அவர் வளர்த்துக் கொள்கிறார்: “ஒருவர் விதியை ஏற்கவேண்டும்; ஒருவருடைய குழந்தைகளுக்கு அவர்களுடைய சொந்த செல்வங்கள் உள்ளன; மனித தலைவிதி பரலோகத்தால் நியமிக்கப்படுகிறது.” சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத பெரும்பாலான ஜனங்கள், இந்த உலகத்தின் அனைத்து விசித்திரங்களையும், விரக்திகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்ட பிறகு, மனித ஜீவிதத்தைப் பற்றிய அவர்களுடைய உட்பார்வையை இரண்டு சொற்களால் சுருக்கமாகக் கூறுவார்கள்: “அது விதி!” இந்த சொற்றொடர் உலக ஜனங்களின் மனிதவிதியை உணர்ந்து கொள்வதையும் அவர்கள் கண்டுக்கொண்ட முடிவையும் உள்ளடக்கியது என்றாலும், அது மனிதகுலத்தின் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தி, அது தெளிவாக மற்றும் துல்லியமானதாக விவரிக்கப்படலாம் என்றாலும், இது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் புரிந்து கொள்வதிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவுக்கு மாற்றானது அல்ல.

3) விதியை நம்புவதென்பது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய அறிவுக்கு மாற்றானது அல்ல

பல ஆண்டுகளாக தேவனைப் பின்பற்றியதால், விதியைப் பற்றிய உங்களது அறிவிற்கும் உலக ஜனங்களின் அறிவிற்கும் இடையே முக்கியமான வேறுபாடு இருக்கிறதா? சிருஷ்டிகருடைய முன்குறித்தலை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டு, சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளீர்களா? சிலருக்கு “அது விதி” என்ற சொற்றொடரைப் பற்றிய ஆழ்ந்த, ஆழமான புரிதல் இருக்கிறது, ஆனால் அவர்கள் தேவனுடைய ராஜரீகத்தைச் சிறிதளவும் நம்பவில்லை; மனித விதி தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் நம்பவில்லை மற்றும் தேவனுடைய ராஜரீகத்துக்கு ஒப்புவிக்கவும் விரும்பவில்லை. அத்தகையவர்கள் கடலில் மிதந்து செல்கையில், அலைகளால் தூக்கி எறியப்பட்டு, நீரோட்டத்துடன் நகர்வது போல, வேறு வழியில்லாமல், செயலற்ற முறையில் காத்திருந்து தங்களது விதியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆயினும்கூட, மனித விதி தேவனுடைய ராஜரீகத்துக்கு உட்பட்டது என்பதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை; அவர்களுடைய சொந்த முயற்சியால் தேவனுடைய ராஜரீகத்தை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவைப் பெறவும், தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும், விதியை எதிர்ப்பதை நிறுத்தவும், தேவனுடைய பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வாழவும் முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விதியை ஏற்றுக் கொள்வதென்பது சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிவது போன்றதல்ல; விதியை நம்புவது என்பது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார், அங்கீகரிக்கிறார், அறிவார் என்று அர்த்தமாகாது; விதியை நம்புவது என்பது அதன் உண்மையையும், அதன் மேலோட்டமான வெளிப்பாடுகளையும் அங்கீகரிப்பதாகும். சிருஷ்டிகர் மனிதகுலத்தின் தலைவிதியை எவ்வாறு ஆளுகிறார் என்பதை அறிந்துகொள்வதிலிருந்து இது வேறுபட்டது, எல்லாவற்றின் தலைவிதியின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆதாரமாக சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை அங்கீகரிப்பதில் இருந்தும் இது வேறுபட்டது மற்றும் நிச்சயமாக சிருஷ்டிகருடைய திட்டங்களுக்கும் மனிதகுலத்தின் தலைவிதிக்கான ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதிலிருந்தும் வெகுதொலைவில் உள்ளது. ஒரு நபர் விதியை மட்டுமே நம்புகிறாவராக இருந்தால்—அவர்கள் அதைப் பற்றி ஆழமாக உணர்ந்தாலும்—ஆனால் அதன் மூலம் மனிதகுலத்தின் தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்துகொள்ளவும், அதற்குக் கீழ்ப்படியவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாவிட்டால், அவர்களுடைய ஜீவிதம் ஒரு சோகமாக இருக்கும், வீணாக ஜீவித்த ஒரு ஜீவிதமாகவும், ஒரு வெற்றிடமாகவும் இருக்கும்; அவர்களால் இன்னும் சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின் கீழ் வர முடியாது, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட, சரியான மனிதனாக மாறவும், சிருஷ்டிகருடைய அங்கீகாரத்தை அனுபவிக்கவும் முடியாது. சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை உண்மையாக அறிந்த மற்றும் அனுபவிக்கும் ஒரு நபர் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும், செயலற்ற அல்லது உதவியற்ற நிலையில் இருத்தல் கூடாது. அத்தகைய நபர் எல்லாவற்றையும் தலைவிதி அளிப்பதாக ஏற்றுக்கொள்வார், அவர்கள் ஜீவிதம் மற்றும் தலைவிதி பற்றிய துல்லியமான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும்: ஒவ்வொரு ஜீவிதமும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு உட்பட்டது. தான் நடந்து சென்ற பாதையை ஒருவர் திரும்பிப் பார்க்கும் போது, அவருடைய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர் நினைவுபடுத்தும்போது, ஒவ்வொரு அடியிலும், ஒருவருடைய பயணம் கடினமானதாகவோ அல்லது சுமூகமாகவோ இருந்தாலும், தேவன் அவருடைய பாதையை வழிநடத்தி, அதைத் திட்டமிடுவதை அவர் காண்கிறார். தேவனுடைய உன்னிப்பான ஏற்பாடுகள், அவருடைய கவனமான திட்டமிடல், ஒருவரை அறியாமல், இன்று வரை வழிநடத்தியது. சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக்கொள்வதும், அவருடைய இரட்சிப்பைப் பெறுவதும் எவ்வளவு பெரிய செல்வம்! ஒரு நபருக்கு மனித விதியைப் பற்றி எதிர்மறையான அணுகுமுறை இருந்தால், தேவன் அவர்களுக்கு ஏற்பாடு செய்த எல்லாவற்றையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை அது நிரூபிக்கிறது. அவர்களுக்குக் கீழ்ப்படியும் மனப்பான்மை இல்லை. மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி ஒருவர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தால், அவர் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் உண்மையிலேயே தேவனுடைய ராஜரீகத்தைப் பிடித்துக் கொள்கையில், தேவன் ஏற்பாடு செய்த எல்லாவற்றிற்கும் ஒப்புவிக்க அவர் அதிக ஆர்வத்துடன் விரும்புவார் மற்றும் அவருடைய தலைவிதியை தேவன் திட்டமிடவும், தேவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை நிறுத்தவும் உறுதியுடனும் விசுவாசத்துடனும் இருப்பார். ஒருவர் தலைவிதியைப் புரிந்து கொள்ளாத போது, தேவனுடைய ராஜரீகத்தைப் புரிந்து கொள்ளாதபோது, ஒருவர் வேண்டுமென்றே கண்மூடித்தனமாக முன்னோக்கிச் செல்லும்போது, மூடுபனி வழியாகச் சென்று திகைப்படையும் போதும் தடுமாறும் போதும், பயணம் மிகவும் கடினமாகவும், மிகுந்த மன வருத்தமாகவும் இருக்கும். ஆகவே, மனித விதியின் மீதான தேவனுடைய ராஜரீகத்தை ஜனங்கள் உணரும்போது, தங்களது இரு கைகளாலும் ஒரு நல்ல ஜீவிதத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்த வேதனையான நாட்களிலிருந்து விடைபெறுவதற்கும், விதியை எதிர்த்துப் போராடுவதையும், “ஜீவித இலக்குகள்” என்று பெயரளவில் அழைக்கப்படுபவற்றை தங்களது சொந்த வழியில் பின்பற்றுவதை நிறுத்தவும், புத்திசாலிகள் அதை அறிந்து ஏற்றுக்கொள்வதை தெரிந்து கொள்வார்கள். ஒருவரிடம் தேவன் இல்லாத போது, அவர் தேவனைக் காணமுடியாத போது, தேவனுடைய ராஜரீகத்தை அவர் தெளிவாக அடையாளம் காணமுடியாத போது, ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும். ஒருவர் எங்கிருந்தாலும், அவருடைய வேலை எதுவாக இருந்தாலும், அவருடைய ஜீவித வழிமுறையும், அவர் இலக்குகளைப் பின்பற்றுவதும், முடிவில்லாத மனவருத்தம் மற்றும் விடுதலையற்ற துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டு வருவதில்லை, அதாவது அவரால் அவருடைய கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்கும். ஒருவர் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து, உண்மையான மனித ஜீவிதத்தைத் தேடினால் மட்டுமே, ஒருவர் படிப்படியாக எல்லா மனவருத்தம் மற்றும் துன்பத்திலிருந்து விடுபடத் தொடங்குவார் மற்றும் ஜீவிதத்தின் எல்லா வெறுமையிலிருந்தும் விடுபடுவார்.

4) சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்

தேவனுடைய திட்டங்களையும் தேவனுடைய ராஜரீகத்தையும் ஜனங்கள் உணராததால், அவர்கள் எப்போதுமே விதியை எதிர்ப்புடனும், கலகத்தனமான மனப்பான்மையுடனும் எதிர்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் எப்போதும் தேவனுடைய அதிகாரத்தையும் ராஜரீகத்தையும், விதியானது தன் வசம் கொண்டிருக்கும் விஷயங்களையும் கைவிட விரும்புகிறார்கள், தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகளை மாற்றி தங்களது தலைவிதியையும் மாற்றுவார்கள் என்றும் வீணாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது, ஒவ்வொரு முறையிலும் முறியடிக்கப்படுகிறார்கள். ஒருவருடைய ஆத்துமாவின் ஆழத்தில் நடைபெறும் இந்த போராட்டம், அவர் தன் ஜீவிதத்தை அதுவரையில் விலக்கி வைத்திருந்ததால், அது அவருக்கு எலும்புகளில் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் விதமான ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. இந்த வலிக்கு காரணம் என்ன? இதற்குக் காரணம் தேவனுடைய ராஜரீகமா அல்லது அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக பிறந்ததா? வெளிப்படையாக, இரண்டுமே உண்மை இல்லை. ஆழமாக பார்த்தால், ஜனங்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள், அவர்கள் ஜீவிதத்தை வாழத் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆகியவற்றால் இது ஏற்படுகிறது. சிலர் இந்த விஷயங்களை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீ உண்மையிலேயே அறியும்போது, மனித விதியின் மீது தேவனுக்குச் ராஜரீகம் இருக்கிறது என்பதை நீ உண்மையிலேயே உணரும்போது, தேவன் உனக்காகத் திட்டமிட்டு உனக்காகத் தீர்மானித்த அனைத்தும் ஒரு பெரிய நன்மை மற்றும் பாதுகாப்பு என்பதை நீ உண்மையிலேயே புரிந்து கொள்ளும்போது, உன் வலி லேசாகத் தொடங்குவதை உணர்வாய். மேலும், உன் முழு ஜீவிதமும் நிதானமாகவும், சுதந்திரமாகவும், விடுவிக்கப்பட்டதாகவும் மாறும். பெரும்பான்மையான ஜனங்களின் நிலைகளிலிருந்து ஆராயும்போது, மனிதனின் தலைவிதி மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் நடைமுறை மதிப்பை, அதன் பொருளை, அவர்களால் புறநிலையாக உண்மையாக ஏற்க முடியவில்லை. ஒரு அகநிலைமட்டத்தில், அவர்கள் முன்பு ஜீவித்தது போல தொடர்ந்து ஜீவிக்க விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய வேதனையிலிருந்து விடுதலை பெற விரும்பினாலும்; புறநிலை ரீதியாக, அவர்களால் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை உண்மையாக உணரவும், அதற்குக் கீழ்ப்படிவும் முடியவில்லை மற்றும் சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை எவ்வாறு தேடுவது என்பதும், ஏற்றுக் கொள்வது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆகவே, சிருஷ்டிகருக்கு மனித விதியின் மீதும், எல்லா மனித விஷயங்களின் மீதும் ராஜரீகம் இருக்கிறது என்ற உண்மையை ஜனங்கள் உண்மையிலேயே அடையாளம் காண முடியாவிட்டால், சிருஷ்டிகருடைய ஆதிக்கத்திற்கு அவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படிய முடியாவிட்டால், “ஒருவருடைய தலைவிதி அவருடைய கைகளில் உள்ளது” என்ற கருத்தால் அவர்கள் இயக்கப்படாதிருப்பதும், அதில் பிணைக்கப்படாதிருப்பதும் கடினமாகும். விதி மற்றும் சிருஷ்டிகருடைய அதிகாரத்திற்கு எதிரான அவர்களுடைய தீவிரமான போராட்டத்தின் வேதனையைப் போக்குவது அவர்களுக்குக் கடினமாக இருக்கும் மற்றும் அவர்கள் உண்மையிலேயே விடுவிக்கப்பட்டு சுதந்திரமாகி, தேவனை வணங்கும் ஜனங்களாக மாறுவதும் கடினமாக இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மிகவும் எளிமையான வழி உள்ளது. இது ஒருவருடைய பழைய ஜீவித முறைக்கு விடை கொடுப்பது ஆகும்; ஜீவிதத்தில் ஒருவருடைய முந்தைய இலக்குகளுக்கு விடை கொடுப்பது ஆகும்; ஒருவருடைய முந்தைய ஜீவித முறை, ஜீவிதத்தைக் குறித்தக் கண்ணோட்டம், நாட்டங்கள், ஆசைகள் மற்றும் இலட்சியங்களைச் சுருக்கமாக்கிப் பகுப்பாய்வு செய்வதும்; பின்னர் தேவனுடைய விருப்பத்துடனும் மனிதனுக்கான கோரிக்கைகளுடனும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றில் ஏதேனும் தேவனுடைய விருப்பத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இசைவானதா என்பதைப் பார்ப்பதும், அவற்றில் ஏதேனும் ஒன்று ஜீவிதத்தின் சரியான மதிப்புகளை வழங்குகிறதா என்பதைப் பார்ப்பதும், ஒருவரை சத்தியத்தைப் பற்றிய பெரிய புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா என்பதைப் பார்ப்பதும், மேலும் ஒருவரை மனித நேயத்துடனும் மனிதனாகவும் ஜீவிக்க அனுமதிப்பதும் ஆகும். ஜீவிதத்தில் ஜனங்கள் பின்பற்றும் பல்வேறு இலக்குகளையும் அவர்களுடைய எண்ணற்ற ஜீவித முறைகளையும் நீ மீண்டும் மீண்டும் ஆராய்ந்து, கவனமாகப் பிரிக்கும்போது, அவற்றில் ஒன்றுகூட சிருஷ்டிகருடைய உண்மையான மனித நோக்கத்துடன் ஒத்துப் போவதாக காணமாட்டாய். அவை அனைத்தும் சிருஷ்டிகருடைய ராஜரீகம் மற்றும் பராமரிப்பிலிருந்து ஜனங்களை விலகச் செய்கின்றன; அவை அனைத்தும் கண்ணிகளாக இருக்கின்றன, அவை ஜனங்களை ஒழுக்கத்திலிருந்து வழுவச் செய்கின்றன மற்றும் அவை நரகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இதை நீ உணர்ந்தபிறகு, உன் பணியானது ஜீவிதத்தைப் பற்றிய உன் பழைய பார்வையை ஒதுக்கி வைப்பது, பல்வேறு கண்ணிகளிலிருந்து விலகி இருப்பது, தேவன் உன் ஜீவிதத்தைப் பொறுப்பேற்று உனக்காக ஏற்பாடுகளைச் செய்ய வழிவிடுவது; தேவனுடைய திட்டங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் கீழ்ப்படிய முயற்சிப்பது, தனிப்பட்ட விருப்பமின்றி ஜீவிப்பது, மற்றும் தேவனை வணங்கும் நபராக மாறுவது மட்டுமேயாகும். இது கேட்க எளிதானது, ஆனால் செய்வதற்குக் கடினமான விஷயமாகும். சிலரால் அதன் வலியைத் தாங்கமுடியும், மற்றவர்களால் முடியாது. சிலர் இணங்கத் தயாராக உள்ளனர், மற்றவர்கள் விருப்பமில்லாதிருக்கின்றனர். விருப்பம் இல்லாதவர்களுக்கு அவ்வாறு செய்வதற்கான ஆசையும் தீர்மானமும் இல்லை; அவர்கள் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றித் தெளிவாக அறிந்திருக்கிறார்கள், தேவன் தான் மனித விதியைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் உதைத்துப் போராடுகிறார்கள், தேவனுடைய உள்ளங்கையில் தங்களது விதிகளை வைப்பதற்கும் தேவனுடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிவதற்கும் இணங்காமல் இருக்கிறார்கள்; மேலும், அவர்கள் தேவனுடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை எதிர்க்கிறார்கள். ஆகவே, தங்களால் என்ன முடியும் என்பதைத் தாங்களே பார்க்க விரும்பும் சிலர் எப்போதும் இருப்பார்கள்; அவர்கள் தங்களது இரு கைகளாலும் தங்களது விதிகளை மாற்ற விரும்புகிறார்கள், அல்லது தங்களது சொந்த திறனால் மகிழ்ச்சியை அடைய விரும்புகிறார்கள், தேவனுடைய அதிகாரத்தின் எல்லைகளை மீறி தேவனுடைய ராஜரீகத்துக்கு மேலே உயரமுடியுமா என்றும் பார்க்க விரும்புகிறார்கள். மனிதனுடைய சோகம் எதுவென்றால், அவன் ஒரு மகிழ்ச்சியான ஜீவிதத்தை நாடுகிறான் என்பதோ, அவன் புகழ்ச்சி மற்றும் செல்வத்தைத் பின்தொடர்கிறான் அல்லது மூடுபனி வாயிலாக தனது சொந்த விதியை எதிர்த்துப் போராடுகிறான் என்பதோ அல்ல. மாறாக, சிருஷ்டிகர் ஜீவிப்பதைக் கண்ட பின்னும், மனித விதியின் மீது சிருஷ்டிகருடைய ராஜரீகம் உள்ளது என்ற உண்மையை அவன் அறிந்த பிறகும், அவனால் இன்னும் தனது வழிகளைச் சரிசெய்ய முடியாது என்றும், தனது கால்களைச் சேற்றிலிருந்து வெளியேற்ற முடியாது என்றும், அவனது இருதயத்தைக் கடினப்படுத்துவதும், அவனது தவறுகளில் தொடர்வதும் ஆகும். அவன் சிறிதும் மனவருத்தம் இல்லாமல் சேற்றில் விழுவதைத் தொடர்கிறான், சிருஷ்டிகருடைய ராஜரீகத்துக்கு எதிராகப் போராடுகிறான், கசப்பான இறுதிவரை அதை எதிர்க்கிறான். அவன் உடைந்து இரத்தப் போக்குடன் இருக்கும்போது தான், கடைசியில் தன் பழைய செயல்களைக் கைவிட்டு மனம் திரும்ப முடிவுசெய்கிறான். இதுவே உண்மையான மனித துக்கம். எனவே நான் சொல்கிறேன், கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுப்பவர்கள் புத்திசாலிகள் ஆவர் மற்றும் போராடி தப்பி ஓடுவோர் உண்மையில் முட்டாள்கள் ஆவர்.

ஆறாவது சந்தர்ப்பம்: மரணம்

இவ்வளவு சலசலப்புகளுக்குப் பிறகு, பல விரக்திகள் மற்றும் ஏமாற்றங்களுக்குப் பிறகு, பல சந்தோஷங்கள் மற்றும் துயரங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, மறக்கமுடியாத பல வருடங்களுக்குப் பிறகு, பருவங்கள் மீண்டும் மீண்டும் வருவதைப் பார்த்த பிறகு, ஒருவர் ஜீவிதத்தில் முக்கியமான வழித்தடங்களைக் கவனிக்காமல் கடந்துவிடுகிறார், ஒரு கணப்பொழுதில், ஒருவர் தன்னுடைய இறுதி ஆண்டுகளில் தன்னைக் காண்கிறார். நேரத்தின் அடையாளங்கள் ஒருவருடைய உடல் முழுவதும் முத்திரையிடப்படுகின்றன: ஒருவரால் இனிமேலும் கர்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படமுடியாது, ஒருவருடைய தலை முடி கருமையிலிருந்து வெள்ளை நிறமாக மாறும், அதே நேரத்தில் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்த கண்கள் மங்கலாகவும், மந்தாரமாகவும் மாறும் மற்றும் மென்மையான, மிருதுவான சருமம் சுருக்கம் பெற்று புள்ளிகளுடன் காணப்படும். ஒருவருடைய செவித்திறன் பலவீனமடைகிறது, ஒருவருடைய பற்கள் தளர்ந்து விழுகின்றன, ஒருவருடைய எதிர்வினைகள் மந்தமாகி விடுகின்றன, ஒருவருடைய அசைவுகள் மெதுவாக இருக்கின்றன…. இந்தக் கட்டத்தில், ஒருவர் உணர்ச்சி மிகுந்த இளமையின் வருடங்களுக்கு இறுதி விடைகொடுத்து, அவருடைய ஜீவிதத்தின் அந்திக்குள் நுழைந்தார்: முதுமை. அடுத்து, ஒருவர் மரணத்தை எதிர்கொள்வார், இது ஒரு மனித ஜீவிதத்தின் கடைசி சந்தர்ப்பமாகும்.

1) சிருஷ்டிகர் மட்டுமே மனிதனின் ஜீவன் மற்றும் மரணத்தின் மீது அதிகாரம் கொண்டிருக்கிறார்

ஒருவருடைய பிறப்பு ஒருவருடைய முந்தைய ஜீவிதத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அவருடைய மரணம் அந்த விதியின் முடிவைக் குறிக்கிறது. ஒருவருடைய பிறப்பு இந்த ஜீவிதத்தில் அவருடைய பணியின் தொடக்கமாக இருந்தால், அவருடைய மரணம் அந்தப் பணியின் முடிவைக் குறிக்கிறது. ஒரு நபருடைய பிறப்புக்கான ஒரு நிலையான சூழ்நிலையை சிருஷ்டிகர் தீர்மானித்திருப்பதால், அந்த நபருடைய மரணத்திற்கு ஒரு நிலையான சூழ்நிலைகளின் தொகுப்பையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார் என்று சொல்லாமலே உணர முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யாரும் தற்செயலாக பிறக்கவில்லை, யாருடைய மரணமும் திடீரென வருவதில்லை, பிறப்பு மற்றும் மரணம் இரண்டும் ஒருவருடைய முந்தைய மற்றும் தற்போதைய ஜீவிதத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஒருவருடைய பிறப்பு மற்றும் மரணத்தின் சூழ்நிலைகள் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை; இது ஒரு நபரின் தலைவிதி, ஒரு நபரின் விதி ஆகும். ஒரு நபருடைய பிறப்புக்கு பல விளக்கங்கள் இருப்பதால், ஒரு நபருடைய மரணமும் இயற்கையாகவே அதன் சொந்தமான பல்வேறு சூழ்நிலைகளின் சிறப்பு தொகுப்பின் விளைவாக நிகழும் என்பதும் உண்மையாகிறது. இது ஜனங்களின் மாறுபட்ட ஆயுட்காலம் மற்றும் அவர்களுடைய வெவ்வேறு வகையான மரணம் மற்றும் மரண நேரங்களுக்கான காரணம் ஆகும். சிலர் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள், ஆனால் இளமையிலேயே இறக்கிறார்கள்; மற்றவர்கள் பலவீனமானவர்களாகவும் நோயுற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் முதுமை வரை ஜீவித்திருந்து சமாதானமாக காலமாகிறார்கள். சிலர் இயற்கைக்கு மாறான காரணங்களால் அழிந்து போகிறார்கள், மற்றவர்கள் இயற்கையாகவே இறக்கின்றனர். சிலர் தங்களது ஜீவிதத்தை வீட்டிற்கு வெகுதொலைவில் முடிக்கிறார்கள், மற்றவர்கள் தங்களது அன்புக்குரியவர்களுடன் தங்களது கண்களை இறுதி நேரத்தில் மூடிக்கொள்கிறார்கள். சிலர் ஆகாயத்தில் இறக்கின்றனர், மற்றவர்கள் பூமிக்கு அடியில் இறக்கின்றனர். சிலர் தண்ணீருக்கு அடியில் மூழ்குவதாலும், மற்றவர்கள் பேரழிவுகளினாலும் காணாமல் போகின்றனர். சிலர் காலையிலும், மற்றவர்கள் இரவிலும் இறக்கின்றனர். … எல்லோரும் ஒரு சிறப்பான பிறப்பு, புத்திசாலித்தனமான ஜீவிதம் மற்றும் ஒரு புகழ்ச்சி பெற்ற மரணம் ஆகியவற்றை விரும்புகிறார்கள், ஆனால் யாரும் தங்களது விதியை மீற முடியாது, சிருஷ்டிகருடைய ராஜரீகத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. இதுவே மனித விதி. மனிதன் தனது எதிர்காலத்திற்காக அனைத்து வகையான திட்டங்களையும் வகுக்க முடியும், ஆனால் அவர்கள் பிறக்கும் முறை மற்றும் உலகத்திலிருந்து அவர்கள் புறப்படும் முறை ஆகியவற்றை யாராலும் திட்டமிட முடியாது. மரணம் வருவதைத் தவிர்ப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஜனங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், அவர்களுக்குத் தெரியாமல், மரணம் அமைதியாக நெருங்குகிறது. ஒருவர் எப்போது மரணமடைவார் அல்லது அது எப்படி எங்கு நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. வெளிப்படையாக கூறுகையில், ஜீவன் மற்றும் மரணத்தின் மீதான அதிகாரத்தை வைத்திருப்பது மனிதகுலமோ அல்லது இந்த இயற்கை உலகில் உள்ள பிற உயிர்களோ இல்லை, மாறாக சிருஷ்டிகர். அவருடைய அதிகாரம் தனித்துவமானது. மனிதகுலத்தின் ஜீவனும் மரணமும் இயற்கையான உலகின் ஏதோ ஒரு விதியின் விளைவாக இல்லை, ஆனால் சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ராஜரீகத்தின் விளைவாக இருக்கிறது.

2) சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறியாத ஒருவர் மரண பயத்தால் ஆட்கொள்ளப்படுவார்

ஒருவர் முதுமைக்குள் நுழையும்போது, ஒருவர் எதிர்கொள்ளும் சவால் என்பது ஒரு குடும்பத்திற்கு வழங்குவதோ அல்லது ஜீவிதத்தில் ஒருவருடைய மகத்தான லட்சியங்களை உருவாக்குவதோ அல்ல. ஆனால், அவருடைய ஜீவிதத்திலிருந்து விடை பெறுவது எவ்வாறு என்பதும், ஒருவருடைய ஜீவிதத்தின் முடிவை எவ்வாறு சந்திப்பது என்பதும், ஒருவர் தன் ஜீவித காலத்தை எப்படி நல்ல முறையில் முடிப்பது என்பதுமேயாகும். மேலோட்டமாக, ஜனங்கள் மரணத்தில் சிறிதளவு கவனம் செலுத்துவதாகத் தெரிந்தாலும், இந்த விஷயத்தை ஆராய்வதை யாராலும் தவிர்க்க முடியாது. ஏனென்றால், மரணத்திற்கு அப்பால் இன்னொரு உலகம் இருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது, அது மனிதர்களால் காணவோ உணரவோ முடியாத ஒரு உலகம், அதாவது அவர்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. இது மரணத்தை நேராக எதிர்கொள்ள பயப்பட வைக்கிறது, அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள்; அதற்குப் பதிலாக, அவர்கள் அந்த விஷயத்தைத் தவிர்ப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். எனவே இது ஒவ்வொரு நபரையும் மரணத்தைப் பற்றிய பயத்தால் நிரப்புகிறது மற்றும் இந்த தவிர்க்க முடியாத ஜீவிதத்தின் உண்மையை மர்மமாக மாற்றுகிறது, ஒவ்வொரு நபருடைய இருதயத்திலும் ஒரு நிலையான நிழலையும் செலுத்துகிறது.

ஒருவருடைய உடல் மோசமடைவதை ஒருவர் உணரும்போது, ஒருவர் மரணத்திற்கு அருகில் வருவதை ஒருவர் உணரும்போது, ஒருவர் தெளிவற்ற பயத்தை, விவரிக்க முடியாத பயத்தை உணர்கிறார். மரண பயம் ஒருவரை எப்போதும் தனிமையாகவும் உதவியற்றதாகவும் உணர வைக்கிறது. இந்த நேரத்தில் ஒருவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார்: மனிதன் எங்கிருந்து வந்தான்? மனிதன் எங்கே போகிறான்? மனிதனுடைய ஜீவன் துரிதமாக அவனைவிட்டுக் கடந்துசென்றுவிட அவன் இவ்வாறுதான் இறக்கிறானா? இது மனிதனின் ஜீவிதத்தின் முடிவைக் குறிக்கும் காலமா? இறுதியில், ஜீவிதத்தின் பொருள் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக ஜீவிதத்தின் மதிப்பு என்ன? இது புகழ்ச்சி மற்றும் செல்வத்தைப் பற்றியதா? இது ஒரு குடும்பத்தை வளர்ப்பதா? … இந்த குறிப்பிட்ட கேள்விகளைப் பற்றி ஒருவர் சிந்தித்திருக்கிறாரா என்றில்லாமல், ஒருவர் மரணத்தைக் குறித்து எவ்வளவு ஆழமாக அஞ்சினாலும், ஒவ்வொரு நபருடைய இருதயத்தின் ஆழத்திலும் மர்மங்களை ஆராய்வதற்கான ஆசையும், ஜீவிதத்தைப் பற்றிய புரிதல் இல்லாத உணர்வும் மற்றும் இவற்றோடு கலந்த, உலகத்தைப் பற்றிய ஏக்கமும், வெளியேற ஒரு தயக்கமும் இருக்கும். மனிதன் எதைக் குறித்துப் பயப்படுகிறான், மனிதன் எதைத் தேடுகிறான், அவன் எதைப் பற்றி உணர்ச்சிவசப்படுகிறான், எதை விட்டு வெளியேற தயங்குகிறான் என்பதை யாராலும் தெளிவாகச் சொல்ல முடியாது …

ஜனங்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், அவர்களுக்குப் பல கவலைகள் உள்ளன; அவர்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், தங்களால் கைவிட முடியாத பலவற்றை வைத்திருக்கிறார்கள். சிலர் தாங்கள் இறக்கப்போகும் போது, எதைப் பற்றி எல்லாமோ கவலைப்படுகிறார்கள்; அவர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றியும், தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றியும், செல்வத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். கவலைப்படுவதால், மரணம் தரும் துன்பங்களையும் அச்சத்தையும் அவர்கள் அழிக்க முடியும் என்றும், உயிருள்ளவர்களுடன் ஒருவித நெருக்கம் பேணுவதன் மூலம், மரணத்துடன் வரும் உதவியற்ற தன்மையில் இருந்தும் தனிமையிலிருந்தும் தப்பிக்க முடியும் என்றும் எண்ணுகிறார்கள். மனித இருதயத்தின் ஆழத்தில் ஒரு தெளிவற்ற பயம், தன்னுடைய அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து விடுவேனோ என்ற பயம், நீல வானத்தின் மீது மீண்டும் ஒருபோதும் கண்களை வைக்க முடியாது என்ற பயம், பொருள் உலகத்தை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாது என்ற பயம். ஒரு தனிமையான ஆத்துமா, அதன் அன்புக்குரியவர்களின் துணையுடன் பழகிவிட்டது, தெரியாத மற்றும் அறிமுகமில்லாத ஒரு உலகத்திற்காக, அதன் பிடியை விடுவித்துத் தனியாக வெளியேறத் தயங்குகிறது.

3) புகழ் மற்றும் செல்வத்தைத் தேடுவதில் செலவிடப்பட்ட ஒருவருடைய ஜீவிதம் அவரை மரணத்தின் முன் அனைத்தையும் இழந்தவராக நிற்கச் செய்கிறது

சிருஷ்டிகருடைய ராஜரீகம் மற்றும் முன்னறிவிப்பு காரணமாக, தனக்கென ஒன்றுமில்லாமல் தொடங்கிய தனிமையான ஆத்துமா பெற்றோர்களையும் ஒரு குடும்பத்தையும் பெறுகிறது, மனித இனத்தில் உறுப்பினராகும் வாய்ப்பையும், மனித ஜீவிதத்தை அனுபவித்து உலகைப் பார்க்கும் வாய்ப்பையும் பெறுகிறது. இந்த ஆத்துமா சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவிப்பதற்கும், சிருஷ்டிகருடைய சிருஷ்டிப்பின் அற்புதத்தை அறிந்து கொள்வதற்கும், அதற்கும் மேலாக, சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதற்கும் அதில் உட்படுவதற்குமான வாய்ப்பைப் பெறுகிறது. இன்னும் பெரும்பாலான ஜனங்கள் இந்த அரிய மற்றும் குறுகிய காலத்துக்கான வாய்ப்பை உண்மையில் பயன்படுத்தவில்லை. ஒருவர் விதியை எதிர்த்துப் போராடுவதில், அவருடைய முழு ஜீவ காலத்துக்குமான ஆற்றலை செலவழிக்கிறார், அவருடைய நேரத்தைச் செலவழிக்கிறார், அவருடைய குடும்பத்திற்கு உணவளிக்க முயற்சிக்கிறார் மற்றும் ஆஸ்திக்கும் அந்தஸ்துக்கும் இடையில் முன்னும் பின்னுமாக ஓடுகிறார். ஜனங்கள் பொக்கிஷங்களாக குடும்பம், பணம் மற்றும் புகழை பத்திரப்படுத்துகின்றனர் மற்றும் அவற்றை ஜீவிதத்தின் மிகவும் மதிப்புமிக்க விஷயங்களாகப் பார்க்கின்றனர். எல்லா ஜனங்களும் தங்களது தலைவிதிகளைப் பற்றி குறை கூறுகிறார்கள், ஆனாலும் அவர்கள் ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியமான பிரச்சினைகளை மறந்து விடுகிறார்கள்: மனிதன் ஏன் உயிருடன் இருக்கிறான், மனிதன் எப்படி வாழ வேண்டும், ஜீவிதத்தின் மதிப்பு மற்றும் பொருள் என்ன ஆகியன அவசியமான பிரச்சனைகளாகும். அவர்கள் எவ்வளவு காலம் ஜீவித்தாலும், புகழ்ச்சி மற்றும் செல்வத்தைத் தேடுவதில் விரைந்து செல்கிறார்கள், அவர்களின் இளமை தப்பி ஓடி, அவர்கள் நரைத்தவர்களாகவும் மற்றும் சுருக்கம் உடையவர்களாகவும் மாறும் வரை, அவர்கள் தங்களது முழு ஜீவிதத்தையும் செலவிடுகிறார்கள். புகழ்ச்சி மற்றும் செல்வமானது முதிர்ச்சியை நோக்கிய அவர்களுடைய சரிவை நிறுத்த முடியாது, பணத்தால் இருதயத்தின் வெறுமையை நிரப்ப முடியாது, பிறப்பு, முதுமை, நோய் மற்றும் மரணம் ஆகிய சட்டங்களிலிருந்து யாரும் விலக்கப்படவில்லை. விதியானது தன்னிடம் வைத்திருப்பதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பவற்றை அவர்கள் பார்க்கும் வரையில் இந்த வழியில் ஜீவிக்கிறார்கள். ஜீவிதத்தின் இறுதிக் கட்டத்தை எதிர்கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப்படும்போது தான், ஒருவர் பரந்த செல்வத்தையும் விஸ்தாரமான சொத்துக்களையும் வைத்திருந்தாலும், ஒருவர் சலுகை பெற்றவராகவும், உயர்பதவியில் இருந்தாலும்கூட, ஒருவர் மரணத்திலிருந்து தப்ப முடியாது, அவருடைய மெய்யான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவர்கள் உண்மையிலேயே புரிந்து கொள்கிறார்கள்: ஒரு தனி ஆத்துமா, தனக்கென சொல்லிக் கொள்ள எதுவும் இல்லாத ஒன்று. ஜனங்களுக்கு பெற்றோர் இருக்கும்போது, பெற்றோர் தான் எல்லாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்; ஜனங்களுக்கு சொத்து இருக்கும் போது, பணம் தான் ஒருவருடைய பிரதானம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதாவது இதுவே ஒருவர் வாழும் வழிமுறையாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; ஜனங்களுக்கு அந்தஸ்து இருக்கும்போது, அவர்கள் அதை இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறார்கள். மேலும், அதன் பொருட்டு தங்களது உயிரையும் பணயம் வைப்பார்கள். ஜனங்கள் இந்த உலகத்தை விட்டு போகும் முன்னர் தான், அவர்கள் தங்களது ஜீவிதம் முழுமையும் பின்பற்றிய விஷயங்கள் யாவும் குறுகியக் கால மேகங்கள் போன்றதே தவிர வேறொன்றுமில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், அவற்றில் எதையும் அவர்கள் பிடித்து வைக்க முடியாது, அவற்றில் எதையும் தங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது, அவற்றில் எதுவும் அவர்கள் மரணத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது, திரும்பிச் செல்லும் பயணத்தில் தனிமையான ஆத்துமாவுக்கு துணையோ அல்லது ஆறுதலோ அளிக்க முடியாது; எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விஷயங்கள் எதுவும் ஒரு நபரைக் காப்பாற்ற முடியாது மற்றும் மரணத்தை மீற அவர்களுக்கு உதவவும் முடியாது. பொருள் உலகில் ஒருவர் பெறும் புகழ்ச்சி மற்றும் செல்வம் தற்காலிகத் திருப்தியை அளிக்கின்றன, சிற்றின்பமாக இருக்கின்றன, தவறான உணர்வை எளிதில் தருகின்றன; செயல்பாட்டில், அவை ஒருவரை வழியிலிருந்து விலகச் செய்கின்றன. எனவே, ஜனங்கள், மனிதகுலம் என்னும் பரந்த கடலில் ஜீவிக்கும் போது, சமாதானம், ஆறுதல் மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்காக ஏங்கிக் கொண்டே, அலை அலையாய் வருபவற்றால் மூழ்கடிக்கப்படுகிறார்கள். புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான கேள்விகளை ஜனங்கள் இன்னும் கண்டறியாததால்—அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், மற்றும் பல—அவர்கள் புகழ் மற்றும் செல்வத்தால் மயக்கப்படுகிறார்கள், தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், அவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் மீட்க முடியாத வண்ணம் இழந்து போகிறார்கள். நேரம் கடந்து போகிறது; ஒரு கண் சிமிட்டலில் ஆண்டுகள் கடந்து செல்கின்றன, அதை ஒருவர் உணர்ந்து கொள்வதற்கு முன்பு, அவருடைய ஜீவிதத்தின் சிறந்த வருடங்களுக்கு அவர் விடை கொடுக்கிறார். ஒருவர் விரைவில் உலகத்திலிருந்து புறப்பட வேண்டிய நேரம் வரும்போது, உலகில் உள்ள அனைத்தும் விலகிச் செல்கின்றன என்பதையும், முதலில் அவர்களுடையதாக இருந்த உடைமைகளை இனிமேல் வைத்திருக்க முடியாது என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வார்; ஒருவர், தனக்கென எதுவும் இல்லாமல் உலகில் வெளிவரும், அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போன்றவர் என்று அவர் உண்மையிலேயே உணர்ந்து கொள்வார். இந்தக் கட்டத்தில், ஒருவர் ஜீவிதத்தில் என்ன செய்திருக்கிறார் என்றும், உயிருடன் இருப்பது மதிப்புக்குரியது என்றும், அதன் அர்த்தம் என்ன என்றும், ஒருவர் ஏன் உலகத்திற்கு வந்தார் என்றும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த கட்டத்தில் தான் ஒருவர் உண்மையில் அடுத்த ஜீவிதம் இருக்கிறதா, பரலோகம் உண்மையிலேயே இருக்கிறதா, உண்மையில் பழிவாங்குதல் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறார்…. மரணத்திற்கு வருபவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஜீவிதம் என்றால் உண்மையில் என்ன என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்; மரணத்திற்கு வருபவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவாக அவருடைய இருதயம் காலியாகத் தெரிகிறது; மரணத்திற்கு வருபவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவாக அவர் உதவியற்றவராக உணர்கிறார்; எனவே ஒருவருடைய மரணபயம் நாளுக்குநாள் அதிகமாகிறது. மரணத்தை நெருங்கும்போது இத்தகைய உணர்வுகள் ஜனங்களிடையே வெளிப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: முதலாவதாக, தங்களது ஜீவிதம் நம்பியிருந்த புகழையும் செல்வத்தையும் அவர்கள் இழக்கப் போகிறார்கள், உலகில் கண்ணால் காணும் அனைத்தையும் கைவிட்டு விடுவார்கள்; இரண்டாவதாக, அவர்கள் தனியாக, அறிமுகமில்லாத உலகத்தை, ஒரு மர்மமான, அறியப்படாத ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள், அங்கு அவர்கள் கால் பதிக்கப் பயப்படுகிறார்கள், அங்கு அவர்களுக்கு அன்புக்குரியவர்கள் இல்லை, ஆதரவும் இல்லை. இந்த இரண்டு காரணங்களுக்காக, மரணத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் மனக்குழப்பத்தை உணர்கிறார்கள், பெரும் அச்சத்தை அனுபவிக்கிறார்கள், அவர்கள் இதற்கு முன் அறியாத உதவியற்ற உணர்வை அனுபவிக்கிறார்கள். உண்மையில், இந்த நிலைக்கு ஒருவர் வரும்போதுதான் இந்த பூமியில் ஒருவர் காலடி வைக்கும்போது, அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, மனிதர்கள் எங்கிருந்து வருகிறார்கள், ஜனங்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள், மனித விதியை யார் ஆணையிடுகிறார், யார் வழங்குகிறார், யார் மனித ஜீவிதத்தின் மீது ராஜரீகம் பெற்றுள்ளார், என்று உணர்ந்து கொள்கிறார்கள். இந்த அறிவு ஒருவர் ஜீவிப்பதற்கான உண்மையான வழிமுறையாகும், இது மனித உயிர் ஜீவிப்பதற்கான இன்றியமையாத அடிப்படையாகும். ஒருவருடைய குடும்பத்திற்கு எவ்வாறு வழங்குவது அல்லது புகழ்ச்சி மற்றும் செல்வத்தை எவ்வாறு அடைவது என்பதைக் கற்றுக்கொள்வதோ, கூட்டத்திலிருந்து எவ்வாறு தனித்து நிற்க வேண்டும் அல்லது செல்வந்தர்களாக எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதோ, சிறந்து விளங்குவது மற்றும் மற்றவர்களுக்கு எதிராக வெற்றிகரமாக போட்டியிடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதோ ஜீவிதம் அன்று. ஜனங்கள் தங்களது ஜீவிதத்தைச் செலவழித்துக் கற்றுக்கொண்ட இந்த ஜீவனுக்கான திறன்கள் ஏராளமான பொருள் வசதிகளை அளிக்க முடியும் என்றாலும், அவை ஒருபோதும் உண்மையான சமாதானத்தையும் ஆறுதலையும் ஒருவருடைய இருதயத்திற்குக் கொண்டு வர முடியாது, ஆனால் ஜனங்களை தொடர்ந்து தங்களது திசையை இழக்கச் செய்யும். இதனால் ஜனங்கள் தங்களைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்கள் மற்றும் ஜீவிதத்தின் பொருளைக் கற்றுக்கொள்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள்; இந்த ஜீவனுக்கான திறன்கள் மரணத்தை எவ்வாறு சரியாக எதிர்கொள்வது என்பது குறித்த வியாகுலத்தை உருவாக்குகின்றன. ஜனங்களின் ஜீவிதம் இந்த வழியில் பாழாகிவிட்டது. சிருஷ்டிகர் அனைவரையும் நியாயமாக நடத்துகிறார், அனைவருக்கும் அவரது ராஜரீகத்தை அனுபவிக்கவும் அறிந்துக் கொள்ளவும் முழு ஜீவ காலத்துக்கும் ஈடாகும் மதிப்புமிக்க வாய்ப்புகளை அளிக்கிறார். ஆனாலும் மரணம் நெருங்கும்போதும், அதன் உருவம் தெரியும்போதும், ஒருவர் ஒளியைக் காணத் தொடங்குகிறார். எனினும் அது மிகவும் தாமதமானது!

ஜனங்கள் தங்களது ஜீவிதத்தைப் பணத்தையும் புகழையும் துரத்தச் செலவழிக்கிறார்கள்; அவர்கள் இந்த வைக்கோல்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றை தங்களின் ஒரே ஆதரவு என்று நினைத்து, அவற்றைக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் ஜீவிக்க முடியும், மரணத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இறக்கப் போகும் நேரத்தில் தான், இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன, மரணத்தை எதிர்கொள்ளும் போது அவை எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன, அவை எவ்வளவு எளிதில் சிதறுகின்றன, எங்கும் திரும்ப முடியாவண்ணம் எவ்வளவு தனிமையாகவும் உதவியற்றதாகவும் இருக்கின்றன என்று உணர்கிறார்கள். ஜீவிதத்தைப் பணத்தால் புகழால் வாங்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஒரு நபர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவர்களுடைய நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அனைவரும் மரணத்தை எதிர்கொள்ளும்போது சமமான ஏழைகள் மற்றும் அற்பமானவர்களே. பணத்தால் ஜீவிதத்தை வாங்க முடியாது, புகழ்ச்சி மரணத்தை அழிக்கமுடியாது, பணமோ புகழோ ஒரு நபருடைய ஜீவிதத்தை ஒரு நிமிடம் வரையிலோ, ஒரு நொடி வரையிலோ நீட்டிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இவ்வாறு ஜனங்கள் எவ்வளவு அதிகமாக உணர்கிறார்களோ, அவ்வளவாக அவர்கள் தொடர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள்; இவ்வாறு, ஜனங்கள் எவ்வளவு அதிகமாக உணர்கிறார்களோ, அவ்வளவாக அவர்கள் மரணத்தின் அணுகுமுறையைக் கண்டு அஞ்சுகிறார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்கள் உண்மையிலேயே தங்களது ஜீவிதம் தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதையும், கட்டுப்படுத்த ஜீவிதம் அவர்களுக்கு உரியது அல்ல என்பதையும், ஒருவர் ஜீவிப்பாரா அல்லது இறந்துவிடுவாரா என்பது பற்றியும் ஒருவரால் எந்த முடிவும் செய்ய முடியாது என்பதையும், இவை அனைத்தும் ஒருவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பதையும் அவர்கள் உண்மையிலேயே உணர்கிறார்கள்.

4) சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின்கீழ் வந்து மரணத்தை அமைதியாக எதிர்கொள்ளுங்கள்

ஒரு நபர் பிறக்கும் தருணத்தில், ஒரு தனிமையான ஆத்துமா பூமியிலுள்ள அதன் ஜீவிதத்தினுடைய அனுபவத்தைத் தொடங்குகிறது, சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் அனுபவத்தை சிருஷ்டிகர் அதற்காக ஏற்பாடு செய்துள்ளார். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும், அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதற்கும், தனிப்பட்ட முறையில் அதை அனுபவிப்பதற்கும் மனிதனுக்கு—ஆத்துமாவுக்கு—இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிருஷ்டிகரால் நிர்ணயிக்கப்பட்ட தலைவிதியின் சட்டங்களுக்குள் ஜனங்கள் தங்களது ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள், மனசாட்சியுடன் கூடிய எந்தவொரு பகுத்தறிவுள்ள நபருக்கும், தன் ஜீவிதத்தின் பல தசாப்தங்களில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்துடன் இணங்குவதும், அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதும், செய்வதற்கு ஒரு கடினமான விஷயம் அல்ல. ஆகையால், பல தசாப்தங்களில் பெற்ற தங்களது சொந்த ஜீவித அனுபவங்களின் மூலம், ஒவ்வொரு மனிதனும் அனைத்து மனித தலைவிதிகளும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதை அடையாளம் காண்பது மிகவும் எளியதாக இருக்க வேண்டும் மற்றும் உயிருடன் இருப்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது அல்லது அதன் சாராம்சத்தைக் கூறுவது எளிதாக இருக்கவேண்டும். ஒருவர் இந்த ஜீவிதப் பாடங்களைத் தழுவுகையில், படிப்படியாக வாழ்க்கை எங்கிருந்து வருகிறது என்பதை அவர் புரிந்துக்கொள்வார், உண்மையிலேயே இருதயத்துக்கு எது தேவை என்பதைப் புரிந்து கொள்வார், ஒருவரை ஜீவிதத்தின் உண்மையான பாதைக்கு எது அழைத்துச் செல்கிறது என்பதையும், ஒரு மனித ஜீவிதத்தின் நோக்கம் மற்றும் இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வார். ஒருவர் சிருஷ்டிகரை வணங்கவில்லை என்றால், ஒருவர் சிருஷ்டிகருடைய ஆதிக்கத்தின் கீழ் வரவில்லை என்றால், மரணத்தை எதிர்கொள்ளும் நேரம் வரும் போது—அவருடைய ஆத்துமா சிருஷ்டிகரை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும்போது—அவருடைய இருதயம் எல்லையற்ற அச்சம் மற்றும் கொந்தளிப்பால் நிறைந்து இருக்கும் என்பதை ஒருவர் படிப்படியாக உணர்ந்துகொள்வார். ஒரு நபர் பல தசாப்தங்களாக உலகில் இருந்தும், மனித ஜீவிதம் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை அல்லது யாருடைய உள்ளங்கையில் மனித விதி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் மரணத்தை அமைதியாக எதிர்கொள்ள முடியாது என்பதில் ஆச்சரியமில்லை. மனித ஜீவிதத்தின் பல தசாப்த ராஜரீகத்தைப் பற்றிய அறிவைப் பெற்ற கால அனுபவத்தில், சிருஷ்டிகருடைய நபர் தான், ஜீவிதத்தின் அர்த்தத்தையும் மதிப்பையும் பற்றிய சரியான புரிதலைக் கொண்ட நபராக இருக்கிறார். அத்தகைய நபருக்கு சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையான அனுபவமும் புரிதலும் நிறைந்த, ஜீவிதத்தின் நோக்கம் பற்றிய ஆழமான அறிவு உள்ளது, அதையும் கடந்து, அவர்களால் சிருஷ்டிகருடைய அதிகாரத்திற்கு அடிபணிய முடியும். அத்தகைய நபர், தேவன் மனிதகுலத்தை உருவாக்கியதன் அர்த்தத்தை புரிந்துகொள்கிறார், மனிதன் சிருஷ்டிகரை வணங்கவேண்டும், அதாவது மனிதனிடம் உள்ள அனைத்தும் சிருஷ்டிகரிடமிருந்து வந்தவை, எதிர்காலத்தில், விரைவில் அவை அவரிடம் ஒரு நாள் திரும்பும் என்பதைப் புரிந்து கொள்கிறார். சிருஷ்டிகர் மனிதனின் பிறப்பை ஏற்பாடு செய்கிறார், மனிதனின் மரணத்தின் மீது ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்பதையும், ஜீவன் மற்றும் மரணம் இரண்டும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதையும் இந்த வகையான நபர் புரிந்துகொள்கிறார். ஆகவே, ஒருவர் உண்மையிலேயே இவற்றைப் புரிந்துகொள்ளும்போது, ஒருவர் இயல்பாகவே மரணத்தை அமைதியாக எதிர்கொள்ளவும், ஒருவருடைய உலக உடைமைகள் அனைத்தையும் அமைதியாக ஒதுக்கி வைக்கவும், பின்வரும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கவும், சிருஷ்டிகரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜீவிதத்தின் இறுதி சந்தர்ப்பத்துக்குக் கண்மூடித்தனமாகப் பயந்து, அதற்கு எதிராகப் போராடாமல், அதை வரவேற்கவும் முடியும். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவித்து, அவருடைய அதிகாரத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாக ஜீவிதத்தை ஒருவர் கருதினால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக, தன்னுடைய ஜீவிதத்தைத் தன்னுடைய கடமையைச் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாகக் கருதினால், தன்னுடைய பணியை நிறைவு செய்தால், நிச்சயமாகவே அவர் ஜீவிதத்தின் மீது சரியான கண்ணோட்டம் கொண்டிருப்பார், நிச்சயமாக சிருஷ்டிகரால் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வழிநடத்தப்பட்ட ஒரு ஜீவிதத்தை ஜீவிப்பார், நிச்சயமாக சிருஷ்டிகருடைய வெளிச்சத்தில் நடப்பார், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிவார், நிச்சயமாக அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வருவார், நிச்சயமாக அவருடைய அற்புதமான செயல்களுக்குச் சாட்சியாகவும், அவருடைய அதிகாரத்திற்கு சாட்சியாகவும் மாறுவார். அத்தகைய நபர் நிச்சயமாக சிருஷ்டிகரால் நேசிக்கப்படுவார், ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய நபர் மட்டுமே மரணத்தைப் பற்றி அமைதியான அணுகுமுறையை வைத்திருக்க முடியும் மற்றும் ஜீவிதத்தின் இறுதி சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கவும் முடியும். மரணத்தைப் பற்றி இந்த வகையான அணுகுமுறையை வெளிப்படையாகக் கொண்டிருந்த ஒருவன் யோபு. ஜீவிதத்தின் இறுதிக்கட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நிலையில் யோபு இருந்தான். மேலும், தனது ஜீவிதத்தின் பயணத்தை ஒரு சுமூகமான முடிவுக்குக் கொண்டு வந்து ஜீவிதத்தில் தனது பணியை முடித்த அவன், சிருஷ்டிகருடன் இருக்கும்படி திரும்பிச் சென்றான்.

5) ஜீவிதத்தில் யோபுவின் நோக்கங்களும் ஆதாயங்களும் மரணத்தை அமைதியாக எதிர்கொள்ள அனுமதிக்கின்றன

வேத வசனங்களில் யோபுவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது: “யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்” (யோபு 42:17). இதன் பொருள், யோபு மரித்த போது, அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை, வேதனையும் இல்லை, மாறாக இயற்கையாகவே இந்த உலகத்தை விட்டுப் புறப்பட்டான். யோபு உயிருடன் இருந்தபோது தேவனுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகினான் என்று எல்லோருக்கும் தெரியும். அவனது செயல்கள் தேவனால் பாராட்டப்பட்டன, மற்றவர்களால் நினைவுகூரப்பட்டன மற்றும் அவனது ஜீவிதத்துக்கு மற்ற அனைவரையும் விட மதிப்பும் முக்கியத்துவமும் இருந்ததாகக் கூறலாம். யோபு தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்தான், பூமியில் தேவனால் நீதியுள்ளவன் என்று அழைக்கப்பட்டான், அவன் தேவனால் சோதிக்கப்பட்டான் மற்றும் சாத்தானால் சோதிக்கப்பட்டான். அவன் தேவனுக்கு சாட்சியாக நின்றான், அவனால் ஒரு நீதியுள்ளவன் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானான். பல தசாப்தங்களில் அவன் தேவனால் சோதிக்கப்பட்ட பின்பு, அவன் முன்பைவிட மிகவும் மதிப்புமிக்க, அர்த்தமுள்ள, தாழ்மையான மற்றும் சமாதானமான ஒரு ஜீவிதத்தை ஜீவித்தான். அவனுடைய நீதியுள்ள செயல்களின் காரணமாக, தேவன் அவனைச் சோதித்தார், மேலும், அவனுடைய நீதியான செயல்களால், தேவன் அவனுக்குத் தோன்றி அவனுடன் நேரடியாகவும் பேசினார். ஆகவே, அவன் சோதிக்கப்பட்டதற்குப் பிறகான ஆண்டுகளில், யோபு ஜீவிதத்தின் மதிப்பை மிகவும் உறுதியான முறையில் கண்டுகொண்டான், புரிந்து கொண்டான், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றான் மற்றும் சிருஷ்டிகர் எவ்வாறு தனது ஆசீர்வாதங்களை அளிக்கிறார், பறிக்கிறார் என்பதைப் பற்றிய துல்லியமான மற்றும் திட்டவட்டமான அறிவைப் பெற்றான். யேகோவா தேவன் யோபுவுக்கு, முன்பு கொடுத்ததை விட மிகப்பெரிய ஆசீர்வாதங்களை கொடுத்ததாக யோபு புத்தகம் பதிவு செய்கிறது. மேலும், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வதற்கும் மரணத்தை அமைதியாக எதிர்கொள்வதற்கும் யோபுவை இன்னும் சிறந்த நிலையில் தேவன் வைத்தார். ஆகவே, யோபு வயதாகி மரணத்தை எதிர்கொண்டபோது, நிச்சயமாக அவன் தனது உலக சொத்தினை பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டான். அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை, வருத்தப்படவும் ஒன்றுமில்லை மற்றும் நிச்சயமாக மரணத்திற்கு அஞ்சவில்லை, ஏனென்றால் அவன் தனது ஜீவ காலம் முழுவதையும் தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகினான். அவன் தனது சொந்த முடிவைப் பற்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை. தனது மரணத்தை எதிர்கொண்டபோது யோபு செய்தது போல இன்று எத்தனை பேர் செய்யமுடியும்? இவ்வளவு எளிமையான புற சகிப்பினை நிர்வகிக்க ஏன் யாருக்கும் இயலவில்லை? ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது: விசுவாசம், அங்கீகாரம் மற்றும் தேவனுடைய ராஜரீகத்துக்கு ஒப்புவித்தல் ஆகியவற்றின் அகநிலை நோக்கத்தில் யோபு தனது ஜீவிதத்தை ஜீவித்தான். இந்த விசுவாசம், அங்கீகாரம் மற்றும் ஒப்புவிப்பு ஆகியவற்றால்தான் அவன் ஜீவிதத்தின் முக்கியமான சந்தர்ப்பங்களைக் கடந்து, தனது கடைசி ஆண்டுகளில் ஜீவித்தான் மற்றும் தனது இறுதி சந்தர்ப்பத்தை வரவேற்றான். யோபு அனுபவித்ததல்லாமல், ஜீவிதத்தில் அவனது நோக்கங்களும் இலக்குகளும் வேதனையாக இருக்கவில்லை, மாறாக, மகிழ்ச்சியாக இருந்தன. சிருஷ்டிகரால் அவனுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அல்லது புகழ்சிகள் காரணமாக மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, அவனது நோக்கங்கள் மற்றும் ஜீவித இலக்குகளின் காரணமாகவும், தேவனுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகியதன் மூலம் அவன் அடைந்த சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய வளர்ந்து வரும் அறிவு மற்றும் உண்மையான புரிதல் காரணமாகவும் மற்றும் அவனது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாகவும், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தில் ஒருவனாக இருந்ததன் காரணமாகவும், தேவனுடைய அற்புதமான செயல்கள், மென்மையான மற்றும் மறக்கமுடியாத அனுபவங்கள், மனிதனின் நினைவுகள் மற்றும் தேவனுடன் சகவாழ்வு, அறிமுகம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் காரணமாகவும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். சிருஷ்டிகருடைய விருப்பத்தை அறிந்து கொள்வதன் மூலம் கிடைத்த ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியாலும், அவர் பெரியவர், அதிசயமானவர், அன்பானவர், உண்மையுள்ளவர் என்பதைக் கண்டபின் எழுந்த பயபக்தியின் காரணமாகவும் யோபு மகிழ்ச்சியாக இருந்தான். யோபு எந்த துன்பமும் இல்லாமல் மரணத்தை எதிர்கொள்ள முடிந்தது, ஏனென்றால் இறக்கும்போது, அவன் சிருஷ்டிகருடைய பக்கம் திரும்புவான் என்று அவன் அறிந்திருந்தான். ஜீவிதத்தில் அவனது நோக்கங்கள் மற்றும் ஆதாயங்களே அவனை மரணத்தை அமைதியாக எதிர்கொள்ள அனுமதித்தன, சிருஷ்டிகர் தனது ஜீவிதத்தை அமைதியாக திரும்பப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை எதிர்கொள்ள அனுமதித்தன மற்றும் சிருஷ்டிகருக்கு முன்பாக அவ பரிசுத்தமானவனாகவும் கவலையற்றவனாகவும் நிற்க அனுமதித்தன. யோபு பெற்ற மகிழ்ச்சியை ஜனங்கள் தற்போது அடைய முடியுமா? அவ்வாறு செய்வதற்குத் தேவையான நிபந்தனைகள் உங்களிடம் உள்ளதா? தற்பொது ஜனங்களிடம் இந்த நிபந்தனைகள் இருந்தும், யோபுவைப் போல அவர்களால் ஏன் மகிழ்ச்சியுடன் ஜீவிக்க முடியவில்லை? மரண பயத்தின் துன்பத்திலிருந்து அவர்களால் ஏன் தப்பமுடியவில்லை? மரணத்தை எதிர்கொள்ளும்போது, சிலர் கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் கழிக்கிறார்கள்; மற்றவர்கள் நடுங்குகிறார்கள், மயங்குகிறார்கள், பரலோகத்திற்கும் மனிதனுக்கும் எதிராக ஒரே மாதிரியாக அரற்றுகிறார்கள்; சிலர் ஓலமிடுகிறார்கள், கதறி அழுகிறார்கள். இவை எந்த வகையிலும் மரணம் நெருங்கும் போது திடீரென ஏற்படும் இயற்கை எதிர்வினைகள் அல்ல. ஜனங்கள் இந்தச் சங்கடமான வழிகளில் நடந்து கொள்வதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இருதயத்தில் ஆழமாக, அவர்கள் மரணத்திற்குப் பயப்படுகிறார்கள், ஏனென்றால் தேவனுடைய ராஜரீகம் மற்றும் அவருடைய ஏற்பாடுகள் பற்றிய தெளிவான அறிவும் உணர்வும் அவர்களுக்கு இல்லை, உண்மையாகவே அவற்றுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். ஜனங்கள் இந்த வழியில் நடந்து கொள்கிறார்கள், ஏனென்றால் எல்லாவற்றையும் தாங்களாகவே ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க வேண்டும் என்றும், தங்களது சொந்த விதிகளையும், தங்களது ஜீவிதத்தையும், மரணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஆகவே, ஜனங்கள் ஒருபோதும் மரணபயத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றால், அது ஆச்சரியமில்லை.

6) சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவர் சிருஷ்டிகரிடம் மீண்டும் செல்லமுடியும்

தேவனுடைய ராஜரீகம் மற்றும் அவருடைய ஏற்பாடுகள் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் ஒருவரிடம் இல்லாதபோது, அவருடைய விதி மற்றும் மரணம் பற்றிய அறிவு நிச்சயமாகப் பொருத்தமற்றதாக இருக்கும். எல்லாம் தேவனுடைய உள்ளங்கையில் உள்ளது என்பதை ஜனங்கள் தெளிவாகக் காண முடியாது, அனைத்துமே தேவனுடைய கட்டுப்பாட்டிற்கும் ராஜரீகத்துக்கும் உட்பட்டவை என்பதை உணர இயலாது, மனிதனால் அத்தகைய ராஜரீகத்தை விட்டு வெளியேறவோ தப்பிக்கவோ முடியாது என்பதை உணரவும் இயலாது. இந்தக் காரணத்திற்காக, அவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் நேரம் வரும்போது, அவர்களுடைய கடைசி வார்த்தைகளுக்கும், கவலைகளுக்கும், வருத்தங்களுக்கும் முடிவே இருக்காது. அவர்கள் மிகுதியான சுமைகளால், தயக்கங்களால், குழப்பங்களால் நிறைந்திருகிறார்கள். இதனால் அவர்கள் மரணத்திற்கு அஞ்சுகிறார்கள். இந்த உலகில் பிறந்த எந்தவொரு நபருக்கும், பிறப்பு அவசியமாகும் மற்றும் மரணம் தவிர்க்க முடியாததாகும்; இந்த விஷயங்களுக்கு மேலாக எவரும் உயர முடியாது. ஒருவர் வலியின்றி இந்த உலகத்திலிருந்து விடைப்பெற விரும்பினால், ஒருவர் தயக்கமோ கவலையோ இல்லாமல் ஜீவிதத்தின் இறுதிச் சூழ்நிலையை எதிர்கொள்ள விரும்பினால், எந்த விசனமும் இல்லாமல் இருப்பதுதான் ஒரே வழி. விசனமின்றி புறப்படுவதற்கான ஒரே வழி, சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வது, அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வது, அவற்றிற்குக் கீழ்ப்படிவது ஆகியனவாகும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் மனித சச்சரவிலிருந்து, தீமையிலிருந்து, சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விலகி இருக்க முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் யோபுவைப் போன்ற ஒரு ஜீவிதத்தை ஜீவிக்க முடியும், சிருஷ்டிகரால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் விடுவிக்கப்பட்ட ஜீவிதத்தை, மதிப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை, நேர்மையான மற்றும் திறந்த மனதுடன்கூடிய ஜீவிதத்தை ஜீவிக்க முடியும். இந்த வழியில் மட்டுமே, யோபுவைப் போல, சிருஷ்டிகருடைய சோதனைகளுக்கும், பறித்தலுக்கும், சிருஷ்டிகருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் சிருஷ்டிகரை ஜீவகாலம் முழுவதும் வணங்குவார், யோபுவைப் போல, அவருடைய புகழ்ச்சியையும் பெற முடியும், அவருடைய குரலைக் கேட்கவும், அவர் தோன்றுவதைக் காணவும் முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் யோபுவைப் போல, வேதனையோ, கவலையோ, வருத்தமோ இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஜீவிக்கவும் மரிக்கவும் முடியும். இந்த வழியில் மட்டுமே ஒருவர் யோபுவைப் போல, வெளிச்சத்தில் ஜீவிக்க முடியும் மற்றும் ஜீவிதத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வெளிச்சத்தில் கடந்து செல்ல முடியும், ஒருவருடைய பயணத்தை வெளிச்சத்தில் சுமுகமாக முடிக்க முடியும், ஒருவருடைய பணியை ஜெயமாக முடிக்க முடியும், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அனுபவிக்கவும், கற்றுக் கொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடியும். மேலும், வெளிச்சத்தில் மரிக்கவும், சிருஷ்டிகருடைய பக்கத்தில் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக என்றென்றும் நிற்கவும், அவரால் புகழப்படவும் முடியும்.

சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வதற்கான நல்வாய்ப்பை இழக்காதீர்கள்

மேலே விவரிக்கப்பட்ட ஆறு சந்தர்ப்பங்களும் சிருஷ்டிகரால் வகுக்கப்பட்ட முக்கியமான கட்டங்களாகும். ஒவ்வொரு சாதாரண மனிதனும், தன் ஜீவிதத்தில் இதன் வழியாகக் கடந்து செல்லவேண்டும். ஒரு மனிதக் கண்ணோட்டத்தில், இந்த ஒவ்வொரு சந்தர்ப்பமும் உண்மையானது, எவற்றையும் தவிர்க்க முடியாது மற்றும் அனைத்தும் சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பு மற்றும் ராஜரீகத்துடன் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது. எனவே, ஒரு மனிதனைப் பொறுத்தவரை, இந்த ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒரு முக்கியமான சோதனைப்புள்ளி ஆகும். அவை ஒவ்வொன்றையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்து செல்வது என்ற தீவிரமான கேள்வியை இப்போது நீங்கள் அனைவரும் எதிர்கொள்கிறீர்கள்.

ஒரு மனித ஜீவிதத்தை உருவாக்கும் பல தசாப்தங்களானது நீண்டதாகவோ குறுகியதாகவோ இல்லை. பிறப்புக்கும் வயதுக்கு வருவதற்கும் இடையிலான இருபது ஒற்றைப்படை ஆண்டுகள் கண்சிமிட்டும் நேரத்தில் கடந்து செல்கின்றன, ஜீவிதத்தின் இந்தக் கட்டத்தில் ஒரு நபர் வயது வந்தவராக கருதப்பட்டாலும், இந்த வயதினருக்கு மனித ஜீவிதம் மற்றும் மனித விதியைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் அதிக அனுபவத்தைப் பெறும்போது, அவர்கள் படிப்படியாக நடுத்தர வயதிற்குள் நுழைகிறார்கள். முப்பது மற்றும் நாற்பது வயதுகளில் உள்ளவர்கள், ஜீவிதம் மற்றும் விதியின் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஆனால், இந்த விஷயங்களைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளன. தேவன் உருவாக்கிய மனிதகுலத்தையும், பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளவும், மனித ஜீவிதம் எதைப் பற்றியது, மனித விதி என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும், சிலர் நாற்பது வயதுவரை முயற்சிப்பது இல்லை. சிலர் நீண்ட காலமாக தேவனைப் பின்பற்றுபவர்களாகவும், தற்போது நடுத்தர வயதினராகவும் இருக்கையிலும், இன்னும் அவர்களால் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய துல்லியமான அறிவையும் வரையறையையும் கொண்டிருக்க முடிவதில்லை, உண்மையானக் கீழ்ப்படிதலும் அவர்களிடம் இல்லை. சிலர் ஆசீர்வாதங்களைப் பெறுவதைத் தவிர வேறொன்றையும் கவனிப்பதில்லை, அவர்கள் பல ஆண்டுகளாக ஜீவித்திருந்தாலும், மனித விதியின் மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையை அவர்கள் சிறிதளவிலும் அறிந்திருக்கவில்லை அல்லது புரிந்திருக்கவில்லை மற்றும் தேவனுடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கான மிகச் சிறிய அடிகூட நடைமுறையில் எடுத்து வைக்கவில்லை. அத்தகையவர்கள் முற்றிலும் முட்டாள்கள், அவர்களுடைய ஜீவிதம் வீணாக ஜீவிக்கப்படுகிறது.

ஒரு மனித ஜீவிதத்தின் காலங்கள், ஜனங்களின் ஜீவிதத்தினுடைய அனுபவம் மற்றும் மனித விதியைப் பற்றிய அறிவின்படி பிரிக்கப்பட்டால், அவை தோராயமாக மூன்று கட்டங்களாக பிரிக்கப்படலாம். முதல் கட்டமானது இளமை, அதாவது பிறப்புக்கும் நடுத்தர வயதுக்கும் இடையிலான ஆண்டுகள், அல்லது பிறப்பு முதல் முப்பது வயது வரை. இரண்டாவது கட்டம் முதிர்ச்சி, நடுத்தர வயது முதல் முதுமை வரை, அல்லது முப்பது முதல் அறுபது வயது வரை. மூன்றாம் கட்டம் ஒருவருடைய முதிர்ந்த காலம். இது அறுபது வயதில், முதுமையின் தொடக்கத்தோடு தொடங்கி, ஒருவர் உலகத்திலிருந்து புறப்படும்வரை நீடிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிறப்பு முதல் நடுத்தர வயது வரை, விதியையும் ஜீவிதத்தையும் பற்றிய பெரும்பாலான ஜனங்களின் அறிவு, மற்றவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுவதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் உண்மையான நடைமுறை சாராம்சம் எதுவும் இல்லை. இந்த காலகட்டத்தில், ஒருவருடைய ஜீவிதத்தைப் பற்றிய கண்ணோட்டமும், உலகில் ஒருவர் எவ்வாறு தன் வழியை உருவாக்குகிறார் என்பதை பற்றிய கண்ணோட்டமும் மிகவும் மேலோட்டமாகவும் அனுபவமற்றும் இருக்கின்றன. இது ஒருவருடைய இளமைக் காலமாகும். ஜீவிதத்தின் எல்லா சந்தோஷங்களையும் துக்கங்களையும் ஒருவர் ருசித்த பின்னரே ஒருவர் விதியைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறுகிறார் மற்றும்—ஒருவருடைய உணர்விற்கு அப்பாற்பட்டு, ஒருவருடைய ஆழ்மனதில்—படிப்படியாக விதியின் மீளமுடியாத தன்மையை உணர்கிறார். மேலும், மனிதவிதியின் மீது சிருஷ்டிகருடைய ராஜரீகம் உண்மையிலேயே உள்ளது என்பதையும் மெதுவாக உணர்கிறார். இது ஒருவருடைய முதிர்ச்சியின் காலமாகும். ஒரு நபர் விதியை எதிர்த்துப் போராடுவதை நிறுத்திவிடும்போது, அவர் சச்சரவுகளுக்குள் தலையிடத் தயாராக இல்லாதபோது, முதிர்ச்சியடைந்த காலத்திற்குள் நுழைகிறார். மேலும், அதற்குப் பதிலாக, அவர் ஜீவிதத்தில் நிறைய விஷயங்களை அறிந்திருக்கிறார், பரலோக விருப்பத்திற்கு ஒப்புவிக்கிறார், ஜீவிதத்தில் அவர்கள் செய்த சாதனைகள் மற்றும் தவறுகளைச் சுருக்கமாகக் கூறுகிறார் மற்றும் அவர்களுடைய ஜீவிதத்துக்கான சிருஷ்டிகருடைய நியாயத்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். இந்த மூன்று காலகட்டங்களில் ஜனங்கள் பெற்ற வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் கையகப்படுத்தியவற்றை கருத்தில் கொள்ளும் போது, சாதாரண சூழ்நிலைகளில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிவதற்கான ஒருவருடைய நல்வாய்ப்பின் வழி பெரிதல்ல. ஒருவர் அறுபது வயது வரை ஜீவித்தால், தேவனுடைய ராஜரீகத்தை அறிந்து கொள்ள அவருக்கு முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் மட்டுமே உள்ளது; ஒருவர் நீண்டகாலம் ஜீவித்திருக்க விரும்பினால், அவருடைய ஜீவிதம் நீண்டகாலம் நீடித்தால் மட்டுமே, அவர் ஒரு நூற்றாண்டு காலம் ஜீவிக்க முடிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகவே, மனித ஜீவிதத்திற்கான சாதாரண விதிகளின்படி, சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் பற்றி அறிந்துகொள்வது முதல், அந்த ராஜரீகத்தின் உண்மையை ஒருவர் அடையாளம் காணும் காலம் வரை, பிறகு, அடையாளம் கண்ட காலம் முதல் ஒருவர் அதற்கு கீழ்ப்படியும் காலம் வரை, மிக நீண்ட செயல்முறை என்றாலும் நான் சொல்கிறேன், ஒருவர் உண்மையில் ஆண்டுகளைக் கணக்கிட்டால், இந்த வெகுமதிகளைப் பெறுவதற்கான நல்வாய்ப்புகளைக் கிட்ட முப்பது அல்லது நாற்பதுக்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகாது. பெரும்பாலும், ஜனங்கள் தங்களது ஆசைகளாலும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அவர்களுடைய லட்சியங்களாலும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள், இதனால் மனித ஜீவிதத்தின் சாராம்சம் எங்குள்ளது என்பதை அவர்களால் அறியமுடியாமல் போகிறது. மேலும், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. மனித ஜீவிதத்தையும் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தையும் அனுபவிப்பதற்காக மனித உலகில் நுழைவதற்கான இந்த அருமையான வாய்ப்பை அத்தகைய ஜனங்கள் மதிக்கவில்லை மற்றும் சிருஷ்டிகருடைய தனிப்பட்ட வழிகாட்டுதலை ஒரு சிருஷ்டிக்கப்பட்டவர் பெறுவது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அவர்கள் உணரவில்லை. ஆகவே, தேவனுடைய கிரியை விரைவாக முடிவடைய வேண்டும் என்று விரும்புபவர்கள், மனிதனின் முடிவை விரைவில் தேவன் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் அவரை உடனடியாக நேரடியாகக் காணலாம் என்றும், விரைவில் ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கீழ்ப்படியாத மோசமானக் குற்றவாளிகள். மேலும், பயங்கரமான முட்டாள்கள். இதற்கிடையே, மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஞானிகளும், மிகுந்த மனக்கூர்மையைக் கொண்டவர்களும், தங்களுக்கானக் குறிப்பிட்ட நேரத்தில், சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை அறிந்து கொள்வதற்கான இந்த தனித்துவமான நல்வாய்ப்பைப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த இரண்டு வெவ்வேறு ஆசைகள் இரண்டு மாறுபட்ட கண்ணோட்டங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன: ஆசீர்வாதங்களைத் தேடுபவர்கள் சுயநலவாதிகளும், இழிவானவர்களும் ஆவர். அவர்கள் தேவனுடைய சித்தத்தை கருத்தில் கொள்ளாதவர்கள். அவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜரீகத்தை அறிய முற்படுவதில்லை, ஒருபோதும் அதற்குக் கீழ்ப்படியவும் விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் இஷ்டம்போல வாழ விரும்புகிறார்கள். அவர்கள் வெறுக்கத்தக்கவர்கள் மற்றும் இந்த வகையான ஜனங்கள் தான் அழிக்கப்படுவார்கள். தேவனை அறிய முற்படுபவர்களால் தங்களது ஆசைகளை ஒதுக்கி வைக்க முடிகிறது, அவர்கள் தேவனுடைய ராஜரீகத்துக்கும் தேவனுடைய ஏற்பாட்டிற்கும் கீழ்ப்படிய தயாராக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் நபர்களாக இருக்க முயற்சிக்கிறார்கள். அத்தகையவர்கள் வெளிச்சத்திலும் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியிலும் ஜீவிக்கிறார்கள், அவர்கள் நிச்சயமாக தேவனால் புகழப்படுவார்கள். எதுவாக இருந்தாலும், மனிதனுடைய தேர்வு பயனற்றது, தேவனுடைய கிரியை எவ்வளவு காலம் செல்லும் என்று மனிதர்களால் எதுவும் சொல்லமுடியாது. ஜனங்கள் தேவனுடைய திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அவருடைய ராஜரீகத்துக்குக் கிழ்ப்படிவது நல்லது. அவருடைய திட்டத்தில் நீ ஈடுபடவில்லை என்றால், நீ என்ன செய்யமுடியும்? இதன் விளைவாக தேவன் எதையேனும் இழப்பாரா? அவருடைய திட்டத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல், அதற்குப் பதிலாக நீயே உன்னை பொறுப்பில் வைக்க முயற்சித்தால், நீ ஒரு முட்டாள்தனமான தேர்வை செய்கிறாய், இறுதியில் நீ மட்டுமே இழப்பைச் சந்திப்பாய். ஜனங்கள் விரைவில் தேவனுடன் ஒத்துழைத்தால் மட்டுமே, அவருடைய திட்டங்களை ஏற்றுக் கொள்வதற்கும், அவருடைய அதிகாரத்தை அறிந்து கொள்வதற்கும், அவர்களுக்காக அவர் செய்த அனைத்தையும் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் விரைந்து சென்றால் மட்டுமே, அவர்களுக்கு நன்மை இருக்கும். இந்த வழியில் மட்டுமே அவர்களுடைய ஜீவிதம் வீணாக ஜீவிக்கப்படாமல், அவர்கள் இரட்சிப்பை அடைவார்கள்.

மனித விதியின் மீது தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை யாராலும் மாற்ற முடியாது

நான் இப்போது சொன்ன அனைத்தையும் கேட்டபிறகு, விதியைப் பற்றிய உங்கள் எண்ணம் மாறிவிட்டதா? மனிதவிதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தின் உண்மையை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்? இதை தெளிவாகச் சொல்வதானால், தேவனுடைய அதிகாரத்தின் கீழ், ஒவ்வொரு நபரும் அவருடைய ராஜரீகத்தையும் அவருடைய ஏற்பாடுகளையும் தீவிரமாக அல்லது செயலற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஒருவருடைய ஜீவிதத்தின் போக்கில் ஒருவர் எவ்வளவு சிரமப்பட்டாலும், எத்தனை கோணலான பாதைகளில் நடந்தாலும், இறுதியில் சிருஷ்டிகர் அவர்களுக்காகக் கண்டுபிடித்து வைத்த விதியின் சுற்றுப்பாதைக்கு அவர்கள் திரும்புவார்கள். இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் ஜெயிக்க முடியாத வல்லமை மற்றும் அவரது அதிகாரம் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும் முறையும் ஆகும். இவ்வாறு கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும், அதாவது அனைத்து ஜீவிதங்களையும் ஆணையிடும் விதிகளுக்குக் காரணமான ஜெயிக்க முடியாத வல்லமை, மனிதர்களை குறுக்கீடு இல்லாமல் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்க அனுமதிக்கிறது, நாள்தோறும், ஆண்டுதோறும், உலகத்தைத் தவறாமல் சுழன்று முன்னேறச் செய்கிறது. இந்த உண்மைகள் அனைத்தையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள், அவற்றை மேலோட்டமாகவோ அல்லது ஆழமாகவோ புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் உங்கள் புரிதலின் ஆழமானது, சத்தியத்தைப் பற்றிய உங்கள் அனுபவத்தையும் அறிவையும், தேவனைப் பற்றிய உங்கள் அறிவையும் சார்ந்துள்ளது. சத்தியத்தின் உண்மையை நீ எவ்வளவு நன்றாக அறிவாய், தேவனுடைய வார்த்தைகளை நீ எவ்வளவு அனுபவித்திருக்கிறாய், தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையை நீ எவ்வளவு நன்கு அறிந்துள்ளாய் என இவை அனைத்தும் தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகள் பற்றிய உன் புரிதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றன. தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளின் இருப்பானது, மனிதர்கள் அவற்றிற்கு கீழ்ப்படிகின்றனரா இல்லையா என்பதைப் பொறுத்ததா? இந்த அதிகாரத்தை தேவன் வைத்திருக்கிறார் என்ற உண்மையானது, மனிதகுலம் அதற்குக் கீழ்ப்படிந்ததா இல்லையா என்பதால் தீர்மானிக்கப்படுகிறதா? சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய அதிகாரம் உள்ளது. எல்லா சூழ்நிலைகளிலும், தேவன் ஒவ்வொரு மனித விதியையும், எல்லாவற்றையும் அவருடைய எண்ணங்களுக்கும் அவருடைய சித்தங்களுக்கும் ஏற்ப ஆணையிடுகிறார், ஏற்பாடு செய்கிறார். மனித மாற்றத்தின் விளைவாக இது மாறாது; இது மனிதனின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது. மேலும், நேரம், இடம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் நிகழும் எந்த மாற்றங்களாலும் இதை மாற்ற முடியாது. ஏனென்றால், தேவனுடைய அதிகாரமே அவருடைய சாராம்சம் ஆகும். தேவனுடைய ராஜரீகத்தை மனிதனால் அறியவும் ஏற்றுக் கொள்ளவும் முடியுமா, மனிதனால் அதற்குக் கீழ்ப்படிய முடியுமா என்பதுமாகிய இந்த உண்மைகளில் எதுவுமே மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைச் சிறிதளவுக்கூட மாற்றாது. அதாவது, தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி மனிதன் எந்த அணுகுமுறையை எடுத்துக்கொண்டாலும், மனித விதி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை மாற்ற முடியாது. நீ தேவனுடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படியவில்லை என்றாலும், அவர் உன் தலைவிதியைக் கட்டளையிடுகிறார்; அவருடைய ராஜரீகத்தை நீ அறிய முடியாவிட்டாலும், அவருடைய அதிகாரம் இன்னும் உள்ளது. தேவனுடைய அதிகாரம் மற்றும் மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தின் உண்மை ஆகியவை மனித விருப்பத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் மனிதனின் விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கும் ஏற்ப மாறாது. தேவனுடைய அதிகாரம் எல்லா இடங்களிலும், ஒவ்வொரு மணிநேரத்திலும், ஒவ்வொரு நொடியிலும் உள்ளது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் அவருடைய அதிகாரம் ஒருபோதும் ஒழியாது, ஏனென்றால் அவர் தான் தேவன், அவருக்கு தனித்துவமான அதிகாரம் உண்டு, அவருடைய அதிகாரம் ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது விஷயங்களால், விண்வெளி அல்லது புவியியலால் கட்டுப்படுத்தப்படவில்லை அல்லது வரையறுக்கப்படவில்லை. எப்பொழுதும் இருப்பதைப்போலவே, எல்லா நேரங்களிலும், தேவன் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார், அவருடைய வல்லமையைக் காட்டுகிறார், அவருடைய ஆளுகைப் பணிகளையும் தொடர்கிறார்; அவர் எப்போதும் இருப்பதைப் போலவே, எல்லா நேரங்களிலும், எல்லாவற்றையும் அவர் ஆளுகிறார், எல்லாவற்றிற்கும் வழங்குகிறார், எல்லாவற்றையும் திட்டமிடுகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. இது உண்மை; பழங்காலத்தில் இருந்து மாறாத உண்மையாக இது இருக்கிறது!

தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய விரும்பும் ஒருவருக்கான சரியான மனப்பான்மை மற்றும் பயிற்சி

தேவனுடைய அதிகாரம் மற்றும் மனித விதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தின் உண்மை ஆகியவற்றை மனிதன் இப்போது எந்த மனப்பான்மையுடன் அறிந்து கொள்ள மற்றும் கருத வேண்டும்? இது ஒவ்வொரு நபருக்கும் முன்னால் நிற்கும் ஒரு உண்மையான பிரச்சனை. அன்றாட ஜீவித சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய ராஜரீகத்தையும் நீ எவ்வாறு அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்? இந்த சிக்கல்களை நீ எதிர்கொள்ளும் போது, அவற்றைப் புரிந்துகொள்வது, கையாள்வது மற்றும் அனுபவிப்பது எப்படி என்று தெரியாத போது, தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்கு நீ கீழ்ப்படிவதற்கான உன் நோக்கத்தை, விருப்பத்தை மற்றும் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை நிரூபிக்க நீ என்ன மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும்? முதலில் நீ காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நீ தேட கற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின் நீ கீழ்ப்படிய கற்றுக் கொள்ள வேண்டும். “காத்திருத்தல்” என்பது தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருத்தல், அவர் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களுக்காகக் காத்திருத்தல், அவருடைய விருப்பம் படிப்படியாக உனக்கு வெளிப்படும்வரை காத்திருத்தல் என்பதாகும். “தேடுவது” என்பது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர் வகுத்துள்ள விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் உனக்காக தேவனுடைய சிந்தனை மிகுந்த நோக்கங்களைக் கவனித்து புரிந்து கொள்வது, அவற்றின் மூலம் சத்தியத்தைப் புரிந்து கொள்வது, மனிதர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகளையும் புரிந்து கொள்வது, தேவன் மனிதர்களில் எத்தகைய முடிவுகளை அடைய மற்றும் அவர்களில் எத்தகைய சாதனைகளை அடைய எண்ணுகிறார் என்பதையும் புரிந்து கொள்வதாகும். “கீழ்ப்படிதல்” என்பது, தேவன் திட்டமிட்டுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை ஏற்றுக் கொள்வது, அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் அதன் மூலம், சிருஷ்டிகர் மனிதனின் தலைவிதியை எவ்வாறு ஆணையிடுகிறார், அவர் தன் ஜீவினைக் கொண்டு மனிதனுக்கு எவ்வாறு வழங்குகிறார், அவர் மனிதனுக்குள் எவ்வாறு சத்தியத்தைச் செயல்படுத்துகிறார் ஆகியவற்றை அறிந்து கொள்வதைக் குறிக்கிறது. தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் ராஜரீகத்தின்கீழ் உள்ள அனைத்தும் இயற்கையான விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. மேலும், உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கட்டளையிட தேவனை அனுமதிக்க நீ தீர்மானித்தால், நீ காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், நீ தேட கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நீ கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிய விரும்பும் ஒவ்வொரு நபரும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை இதுதான், தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணம் இதுதான். அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்க, அத்தகைய குணத்தைக் கொண்டிருக்க, நீ கடினமாக உழைக்கவேண்டும். உண்மையான யதார்த்தத்திற்குள் நீ நுழைவதற்கு ஒரே வழி இதுதான்.

தேவனை உன் தனித்துவமான எஜமானராக ஏற்றுக் கொள்வது இரட்சிப்பை அடைவதற்கான முதல் படியாகும்

தேவனுடைய அதிகாரம் தொடர்பான சத்தியங்கள் ஒவ்வொரு நபரும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டிய, அனுபவிக்க வேண்டிய மற்றும் அவர்களுடைய இருதயத்துடன் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும்; இந்த உண்மைகள் ஒவ்வொரு நபருடைய ஜீவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஒவ்வொரு நபருடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஒவ்வொரு நபரும் ஜீவிதத்தில் கடந்து செல்ல வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களில்; தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய மனிதனின் அறிவு மற்றும் தேவனுடைய அதிகாரத்தை ஒருவர் எதிர்கொள்ளவேண்டிய மனப்பான்மையில்; மேலும் இயற்கையாகவே, ஒவ்வொரு நபரும் சென்று சேர்கின்ற இறுதியான இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் ஜீவ காலம் முழுமைக்குமான ஆற்றல் தேவை. தேவனுடைய அதிகாரத்தை நீ சரியாகப் பார்க்கும்போது, அவருடைய ராஜரீகத்தை நீ ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரம் இருப்பதன் உண்மையை நீ படிப்படியாக உணர்ந்து புரிந்துக் கொள்வாய். ஆனால் நீ ஒருபோதும் தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை, அவருடைய ராஜரீகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீ எத்தனை ஆண்டுகள் ஜீவித்தாலும், தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய சிறிதளவு அறிவையும் பெறமாட்டாய். தேவனுடைய அதிகாரத்தை நீ உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ ஜீவ பாதையின் முடிவை எட்டும்போது, நீ பல தசாப்தங்களாக தேவனை விசுவாசித்தாலும், உன் ஜீவிதத்துக்காக நீ காண்பிக்க எதுவும் இருக்காது, இயற்கையாகவே மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி உனக்குச் சிறிதளவிலும் அறிவும் இருக்காது. இது மிகவும் துக்கமான விஷயம் அல்லவா? எனவே, நீ ஜீவிதத்தில் எவ்வளவு தூரம் நடந்து வந்தாலும், இப்போது உனக்கு எவ்வளவு வயதாகி இருந்தாலும், உன் பயணத்தின் எஞ்சிய காலம் எவ்வளவாக இருந்தாலும், முதலில் நீ தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரித்து அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தேவன் உனக்கே உனக்கான தனித்துவமான எஜமானர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மனித விதியின் மீதான தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய இந்த சத்தியங்களைப் பற்றிய தெளிவான, துல்லியமான அறிவையும் புரிதலையும் பெறுவது அனைவருக்குமான கட்டாயப் பாடமாகும்; இது மனித ஜீவிதத்தை அறிந்து கொள்வதற்கும் சத்தியத்தை அடைவதற்கும் முக்கியமாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான ஜீவிதமானது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளவேண்டிய, யாரும் தவிர்க்க முடியாத, அடிப்படை கல்வி ஆகும். இந்த இலக்கை அடைய யாராவது குறுக்கு வழிகளை எடுக்க விரும்பினால், நான் இப்போது உனக்கு சொல்கிறேன், அது சாத்தியமற்றது! நீ தேவனுடைய ராஜரீகத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், அதுவும் சாத்தியமற்றது! தேவன் மனிதனின் ஒரே கர்த்தர், தேவன் மட்டுமே மனித விதியின் எஜமானர். எனவே, மனிதன் தனது சொந்த விதியை ஆணையிடுவது சாத்தியமில்லாதது, தனது விதிக்கு அப்பால் காலடி எடுத்து வைப்பதும் சாத்தியமில்லாதது. ஒருவருடைய திறமைகள் எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், மற்றவர்களின் தலைவிதிகளை அவர் பாதிக்க முடியாது, திட்டமிடவோ, ஏற்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது. தனித்துவமான தேவன் மட்டுமே மனிதனுக்காக எல்லாவற்றையும் ஆணையிடுகிறார். ஏனென்றால் தனித்துவமான தேவன் மட்டுமே மனித விதியின் மீதான ராஜரீகத்தைக் கொண்டிருக்கும் தனித்துவமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார், சிருஷ்டிகர் மட்டுமே மனிதனின் தனித்துவமான எஜமானர். தேவனுடைய அதிகாரம் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மீது மட்டுமல்ல, எந்தவொரு மனிதனும் பார்த்திராத, உருவாக்கப்படாத ஜீவன்கள் மீதும், நட்சத்திரங்கள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் ராஜரீகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு மறுக்கமுடியாத உண்மை, உண்மையாகவே இருக்கும் ஒரு உண்மை, எந்தவொரு நபரும் அல்லது விஷயமும் மாற்ற முடியாத ஒன்றாகும். இன்னும், உங்களில் ஒருவர், இந்த நிலையில் உள்ள விஷயங்கள் குறித்து அதிருப்தி அடைந்தால், உங்களுக்கு சில சிறப்புத் திறமை அல்லது திறன் இருப்பதாக நம்பினால் மற்றும் அதிர்ஷ்டத்தால் தங்களது தற்போதைய சூழ்நிலைகளை மாற்றலாம் அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால்; மனித முயற்சியின் மூலம் தங்களது சொந்த விதியை மாற்ற முயற்சித்தால், அதன் மூலம் தங்களது கூட்டாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி புகழ்ச்சி மற்றும் செல்வத்தை ஜெயிக்க நினைத்தால்; பின்னர் நான் உனக்குச் சொல்கிறேன், நீயே விஷயங்களைக் கடினமாக்குகிறாய், நீ பிரச்சனையை மட்டுமே உருவாக்குகிறாய், நீ உன் சொந்த கல்லறையைத் தோண்டிக் கொண்டிருக்கிறாய்! உடனடியாகவோ அல்லது பின்னரோ, ஒரு நாள், நீ தவறான தேர்வு செய்துள்ளாய், உன் முயற்சிகள் வீணாகி விட்டன என்பதைக் கண்டு கொள்வாய். உன் லட்சியம், விதியை எதிர்த்துப் போராடுவதற்கான உன் விருப்பம் மற்றும் உன் சொந்த அருவருப்பான நடத்தை ஆகியவை உன்னைத் திரும்ப முடியாத பாதையில் இட்டுச் செல்லும். இதற்காக ஒரு கசப்பான விலையை நீ செலுத்துவாய். பின்விளைவுகளின் தீவிரத்தை நீ தற்போது காணவில்லை என்றாலும், தேவன் மனித விதியின் எஜமானர் என்ற சத்தியத்தை நீ தொடர்ந்து அனுபவித்து, ஆழமாக உணர்கையில், இன்று நான் பேசுவதையும் அதன் உண்மையான தாக்கங்களையும் நீ மெதுவாக அறிந்து கொள்வாய். உன்னிடம் உண்மையிலேயே ஒரு இருதயமும் ஆவியும் இருக்கிறதா இல்லையா, நீ சத்தியத்தை நேசிக்கும் ஒரு நபரா இல்லையா என்பதெல்லம், தேவனுடைய ராஜரீகத்தையும் சத்தியத்தையும் குறித்து நீ எத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்கிறாய் என்பதைப் பொறுத்தது. இயற்கையாகவே, தேவனுடைய அதிகாரத்தை நீ உண்மையிலேயே அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியுமா என்பதை இது தீர்மானிக்கிறது. தேவனுடைய ராஜரீகத்தையும் அவருடைய ஏற்பாடுகளையும் உன் வாழ்வில் நீ ஒருபோதும் உணரவில்லை என்றால், தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நீ முற்றிலும் பயனற்றவனாக இருப்பாய் மற்றும் நீ மேற்கொண்ட பாதை மற்றும் நீ செய்த தேர்வு ஆகியவற்றின் காரணமாக, தேவனுடைய வெறுப்பு மற்றும் நிராகரிப்பின் பொருளாக நீ இருப்பாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தேவனுடைய கிரியையில், அவருடைய சோதனையை ஏற்றுக் கொள்பவர்களும், அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்பவர்களும், அவருடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களும் மற்றும் படிப்படியாக அவருடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுபவர்களும், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுவார்கள், அவருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறுவார்கள் மற்றும் அவர்கள் உண்மையிலேயே சிருஷ்டிகருக்கு கீழ்ப்படிந்திருப்பார்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். தேவனுடைய ராஜரீகத்தை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதால், மனித விதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதற்குக் கீழ்ப்படிந்திருப்பதும் உண்மையானது மற்றும் துல்லியமானது. அவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது, அவர்கள் யோபுவைப் போலவே, மரணத்தால் ஆட்கொள்ளப்படாத மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும், எந்தவொரு தனிப்பட்ட தேர்வு இல்லாமலும் தனிப்பட்ட விருப்பம் இல்லாமலும் கீழ்ப்படிவார்கள். அத்தகைய நபர் மட்டுமே உண்மையான, சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக சிருஷ்டிகரிடம் மீண்டும் செல்ல முடியும்.

டிசம்பர் 17, 2013

முந்தைய: தேவனே தனித்துவமானவர் II

அடுத்த: தேவனே தனித்துவமானவர் IV

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக