பதின்மூன்று நிருபங்களைப் பொறுத்தவரையில் உன் நிலைப்பாடு என்ன?

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் பவுலின் பதின்மூன்று நிருபங்கள் உள்ளன. அவன் கிரியை செய்த கால கட்டத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த சபைகளுக்கு பவுல் பதின்மூன்று நிருபங்களை எழுதினான். அதாவது, இயேசு பரலோகத்துக்கு எழுந்தருளிய பின்னர் பவுல் எழுப்பப்பட்டு இந்தக் நிருபங்களை எழுதினான். கர்த்தராகிய இயேசுவின் மரணத்துக்குப் பின் அவர் உயிர்த்தெழுந்து பரலோகத்துக்கு ஏறியதற்குப் பவுலின் நிருபங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. மேலும் அவை மனந்திரும்புதலுக்கான வழியையும் சிலுவையைச் சுமப்பதைப் பற்றிய செய்தியையும் பரப்பின. நிச்சயமாகவே, அக்காலத்தில் யூதேயாவைச் சுற்றி இருந்த பல்வேறு இடங்களில் இருந்த சகோதர சகோதரிகளுக்குப் போதிப்பதையே இந்த அனைத்து செய்திகளும் சாட்சிகளும் நோக்கமாகக் கொண்டிருந்தன. ஏனெனில் அப்போது பவுல் கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரனாக இருந்தான், மேலும் அவன் கர்த்தராகிய இயேசுவுக்குச் சாட்சி கொடுப்பதற்காக எழுப்பப்பட்டிருந்தான். பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அவரது பல்வேறுபட்ட கிரியைகளைச் செய்வதற்காக, அதாவது, தேவன் தாமே செய்யும் கிரியைகளைத் தொடர்வதற்கான அப்போஸ்தலர்களின் கிரியையைச் செய்வதற்காகப் பல்வேறு ஜனங்கள் எழுப்பப்படுகிறார்கள். ஜனங்கள் யாரும் எழுப்பப்படாமல் பரிசுத்த ஆவியானவரே அதை நேரடியாகச் செய்திருந்தால், அந்தக் கிரியையைச் செய்வது கடினமானதாக இருந்திருக்க்கும். இது இப்படியிருக்க, தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் பவுல் கீழேவீழ்த்தப்பட்டுப் பின்னர் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு சாட்சியாக எழுப்பப்பட்டான். இயேசுவின் பன்னிரண்டு சீஷர்கள் தவிர அவன் ஓர் அப்போஸ்தலனாக இருந்தான். சுவிசேஷத்தைப் பரப்புவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் இருந்த சபைகளுக்கு மேய்ப்பனின் கிரியையையும் அவன் மேற்கொண்டான். இதில் சபைகளின் சகோதர சகோதரிகளைக் கவனிக்கும் பொறுப்பு அடங்கும்—வேறு வகையில் கூறினால், கர்த்தருக்குள்ளாக சகோதர சகோதரிகளை வழிநடத்தினான். கர்த்தாராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலையும் பரலோகத்துக்கு எழுந்தருளின உண்மையையும் அறிவிப்பதே பவுலின் சாட்சியாகும். அதுமட்டுமல்லாமல் மனந்திரும்புவதற்கும், பாவத்தை அறிக்கையிடுவதற்கும் சிலுவையின் பாதையில் நடப்பதற்கும் ஜனங்களுக்குப் போதிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவன் இயேசுகிறிஸ்துவின் சாட்சிகளில் ஒருவனாக இருந்தான்.

வேதாகமத்தில் பயன்படுத்தப்பட பவுலின் பதின்மூன்று நிருபங்கள் தேர்வுசெய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்த ஜனங்களின் பல்வேறு நிலைகளைத் தெரிவிக்க அவன் பதின்மூன்று நிருபங்களையும் எழுதினான். அவற்றை எழுத அவன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டான், மேலும் அப்போஸ்தலன் என்ற நிலையில் இருந்து (கர்த்தராகிய இயேசுவின் ஓர் ஊழியக்காரன் என்ற நிலையில் இருந்து) எல்லா இடங்களிலும் இருந்த சகோதர சகோதரிகளுக்குப் போதித்தான். இவ்வாறு, பவுலின் நிருபங்கள் தீர்க்கதரிசனங்களில் இருந்தோ அல்லது நேரடியாக தரிசனங்களில் இருந்தோ எழாமல் அவன் மேற்கொண்ட கிரியையில் இருந்து எழுந்தன. இந்த நிருபங்கள் அபூர்வமானவைகளும் அல்ல தீர்க்கதரிசனங்களைப் போன்று புரிந்து கொள்ளுவதற்குக் கடினமானவைகளும் அல்ல. அவைகள் கடிதங்களைப் போல் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் தீர்க்கதரிசனங்களும் இரகசியங்களும் அடங்கியிருக்கவில்லை; சாதாரண அறிவுறுத்தும் வார்த்தைகளையே அவை கொண்டிருக்கின்றன. அவற்றின் பல வார்த்தைகள் ஜனங்கள் கிரகிப்பதற்குக் கடினமாகவும் அல்லது புரிந்துகொள்ளுவதற்குச் சிரமமானவைகளாகவும் இருந்தாலும், அவை பவுலின் சொந்த விளக்கங்களில் இருந்தும் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசிப்பித்தலில் இருந்தும்தான் எழுகின்றன. பவுல் வெறும் ஓர் அப்போஸ்தலனே; அவன் கர்த்தராகிய இயேசுவால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஊழியக்காரனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. பல்வேறு தேசங்கள் வழியாக நடந்து செல்லும் போது, அவன் சபைகளின் சகோதர சகோதரிகளுக்குக் கடிதங்கள் எழுதினான் அல்லது அவன் வியாதியாய் இருக்கும் போது குறிப்பாக அவனது மனதில் இருந்த ஆனால் அவனால் செல்ல முடியாத சபைகளுக்கு எழுதினான். அதன்படி, அவனது நிருபங்கள் ஜனங்களால் பின்பற்றப்பட்டன மற்றும் பின்னர் அவை பின்வந்த தலைமுறையினரால் சேகரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, வேதாகமத்தில் நான்கு சுவிசேஷங்களுக்குப் பின்னால் வரிசைப்படுத்தப்பட்டன. நிச்சயமாக, அவன் எழுதியவற்றில் சிறந்த நிருபங்களை அவர்கள் தேர்ந்தெடுத்து தொகுத்தனர். சபைகளின் சகோதர சகோதரிகளின் ஜீவிதத்துக்கு இந்த நிருபங்கள் பிரயோஜனமானவைகளாக இருந்தன மேலும் அவை அவனது காலத்தில் குறிப்பிடும் அளவுக்குப் பிரபலமாக இருந்தன. பவுல் அவற்றை எழுதும்போது, அவனுடைய சகோதர சகோதரிகள் கடைபிடிக்கும் ஒரு பாதையைக் கண்டடைவதற்கு உதவும் ஆவிக்குரிய ஒரு படைப்பையோ அல்லது தனது சொந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் ஓர் ஆவிக்குரிய சுயவரலாற்றையோ எழுதுவது அவனுடைய நோக்கம் அல்ல; அவன் ஒரு புத்தக எழுத்தாளர் ஆவதற்கு எழுதவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையின் சகோதர சகோதரிகளுக்கு அவன் நிருபங்களை சும்மா எழுதிக்கொண்டிருந்தான். ஊழியக்காரன் என்ற தன் நிலையில் இருந்து பவுல் தன் சகோதர சகோதரிகளுக்குப் போதித்தான், தனது பாரத்தைக் குறித்து, கர்த்தராகிய இயேசுவின் சித்தத்தைப் பற்றி, மேலும் எதிர்காலத்துக்காக ஜனங்களிடம் அவன் என்ன வேலைகளை ஒப்படைத்துள்ளான் என்பது பற்றி கூறினான். இதுதான் பவுல் செய்த கிரியை. அனைத்து எதிர்கால சகோதர சகோதரிகளுக்கும் அவனது வார்த்தைகள் மிகவும் அறிவுறுத்துபவைகளாக இருந்தன. இத்தனை நிருபங்களின் வாயிலாக அவன் தெரிவித்த சத்தியங்கள் கிருபையின் காலத்தில் ஜனங்கள் கடைபிடிக்க வேண்டியவைகளாக இருந்தன. அதனால்தான் பிற்காலத் தலைமுறையினரால் இந்த நிருபங்கள் புதிய ஏற்பாட்டில் வரிசைப்படுத்தப்பட்டன. பவுலின் கிரியையின் விளைவு எப்படி முடிந்திருந்தாலும் சரி, அவன் அவனது காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒருவன் மேலும் அவன் சபைகளின் சகோதர சகோதரிகளை ஆதரித்தான். அவனது கிரியையின் விளைவு அவனது சாராம்சத்தினால் மட்டுமல்லாமல் அவன் ஆரம்பத்தில் வீழ்த்தப்பட்டதனாலும் கூட தீர்மானிக்கப்பட்டது. அப்போது அவனால் அந்த வார்த்தைகளைப் பேச முடிந்தது ஏனென்றால் அவனிடம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருந்தது, மற்றும் இந்தக் கிரியையினால் சபைகளின் மீது பவுல் பாரம் கொண்டவனாக இருந்தான். அதனால், பவுலால் தன் சகோதர சகோதரிகளை ஆதரிக்க முடிந்தது. இருப்பினும், சில பிரத்தியேகமான சூழ்நிலைகள் காரணமாக, பவுலால் தனிப்பட்ட முறையில் கிரியை செய்வதற்காக சபைகளுக்குச் செல்ல முடியவில்லை, ஆகையால், கர்த்தருக்குள் தன் சகோதர சகோதரிகளுக்குப் புத்திமதி சொல்ல அவன் நிருபங்களை எழுதினான். ஆரம்பத்தில், கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களைப் பவுல் துன்புறுத்தினான், ஆனால் இயேசு பரலோகத்துக்கு எழுந்தருளிய பின்னர்—அதாவது, பவுல் “ஒளியைக் கண்ட” பின்னர்—அவன் கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டான். கர்த்தரின் வழிக்காக சுவிசேஷத்தைப் பிரசங்கித்த பரிசுத்தர்களை அவன் அதற்கு மேலும் துன்புறுத்தவில்லை. ஒரு பிரகாசமான ஒளியாக இயேசு தனக்குக் காட்சியளித்ததைப் பார்த்த பின், அவன் கர்த்தருடைய கட்டளையை ஏற்றுக்கொண்டு சுவிசேஷத்தைப் பரப்பப் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் ஒருவனானான்.

அப்போது தன் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளித்து தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே பவுலின் கிரியையாக இருந்தது. ஓர் எதிர்காலத்தை வகுப்பது அல்லது இலக்கியப் படைப்புகளை உருவாக்குவது, வேறு வழிகளைக் கண்டறிவது, அல்லது சபைகளின் ஜனங்கள் புதிய பிரவேசங்களை அடையும்படி அவர்களை வழிநடத்த வேதாகமத்துக்குப் புறம்பே பாதைகளைக் கண்டறிவது போன்றவற்றை விரும்பும் ஒரு சிலரைப் போன்று அவன் இருக்கவில்லை. பவுல் உபயோகப்படுத்தப்பட்ட ஒருவன்; அவன் செய்த கிரியைகளின் மூலம் அவன் வெறுமனே அவனது கடமைகளையே நிறைவேற்றினான். சபைகளின் மேல் அவனுக்குப் பாரம் இல்லாமல் இருந்திருந்தால், அவன் கடமையைப் புறக்கணித்து விட்டதாகக் கருதப்பட்டிருக்கும். சீர்குலைவான எதுவும் நிகழ்ந்திருந்தால், அல்லது சபைகளில் இருந்த ஜனங்களை அசாதாரண நிலைக்கு வழிகோலிய ஒரு துரோகச் செயல் சபையில் நிகழ்ந்திருந்தால், பின்னர் அவன் தன் கிரியையை தகுந்தவாறு செய்யவில்லை என்று கருதப்பட்டிருக்கும். ஓர் ஊழியக்காரன் சபைகளின் மீது பாரமுடையவனாக இருந்து தன் திறனுக்கு உகந்த வகையில் சிறப்பாகக் கிரியை செய்தால், இப்படிப்பட்டவன் தகுதியான ஊழியக்காரன் அதாவது உபயோகப்படுத்த தகுதியுள்ளவன் என்பதை நிரூபிப்பான். ஒருவன் சபையின் மீது பாரத்தை உணராவிட்டால், அவர்களுடைய கிரியைகளில் பலன் ஒன்றையும் அடையாவிட்டால், அவர்களால் வழிநடத்தப்படும் பலர் பலவீனமானவர்களாக அல்லது விழுந்துவிடக் கூடியவர்களாகக் கூட இருப்பார்கள். அப்படிப்பட்ட ஊழியக்காரர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றவில்லை. அதுபோல, பவுலும் விதிவிலக்கானவன் அல்ல, அதனால்தான் அவன் சபைகளைக் கவனிக்க வேண்டியதாக இருந்தது மேலும் தன் சகோதர சகோதரிகளுக்கு அடிக்கடி நிருபங்களை எழுதினான். இந்த வகையில் தான் அவனால் சபைகளின் தேவைகளை நிவிர்த்திசெய்து தன் சகோதர சகோதரிகளைக் கவனித்துக்கொள்ள முடிந்தது; இந்த வகையில் மட்டுமே சபைகள் தேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் அவனிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெறவும் முடிந்தது. அவன் எழுதிய நிருபங்களின் வார்த்தைகள் மிகவும் ஆழமானவை, ஆனால் அவைகள் அவனுடைய சகோதர சகோதரிகளுக்குப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசிப்பித்தலை அடைந்த நிலையில் எழுதப்பட்டவை மற்றும் தன் தனியனுபவத்தையும் அவன் ஊழியத்தில் உணர்ந்த பாரத்தையும் தன்னுடைய எழுத்தில் பின்னி எழுதியுள்ளான். பரிசுத்த ஆவியானவரால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு நபரே பவுல், மேலும் அவனது நிருபங்களின் உள்ளடக்கங்களில் அவனது தனிப்பட்ட அனுபவங்கள் இடையிடையே சிதறிக்கிடக்கின்றன. அவன் செய்த கிரியை வெறுமனே ஓர் அப்போஸ்தலனின் கிரியையைத்தான் பிரதிநிதித்துவப் படுத்துகிறது, நேரடியாகப் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியையை அல்ல, மேலும் அது கிறிஸ்துவின் கிரியையில் இருந்து வேறுபடுகிறது. பவுல் தன் கடமையைத்தான் நிறைவேற்றினானே தவிர வேறொன்றுமில்லை. அதனால்தான், அவன் தன் பாரத்தினால், அதுமட்டும் அல்லாமல் தனியனுபவங்கள் மற்றும் உள்நோக்குகளால் கர்த்தருக்குள் தன் சகோதர சகோதரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்தான். தனது தனிப்பட்ட உள்நோக்குகள் மற்றும் புரிதல்களை அளித்து தேவனுடைய கட்டளையின் கிரியையைப் பவுல் நிறைவேற்றினானே தவிர வேறொன்றுமில்லை; இது தேவன் தாமே நேரடியாகச் செய்த கிரியையின் ஒரு நிகழ்வல்ல. இது இப்படி இருக்க, பவுலின் கிரியை சபையின் கிரியை பற்றிய மனுஷீக அனுபவத்துடன், மனுஷ கருத்துக்கள் மற்றும் புரிதல்களுடன் கலந்திருந்தன. இருப்பினும், இந்த மனுஷப் பார்வைகளும் புரிதல்களும் தீய ஆவிகள், மாம்சம் மற்றும் இரத்தத்தின் கிரியை என்று கூற முடியாது; பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிப்பிக்கப்பட்ட ஒருவனின் அறிவும் அனுபவங்களும் என்று மட்டுமே அவற்றைக் கூற முடியும். இதன் மூலம் நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்றால் பவுலின் நிருபங்கள் பரலோகத்தில் இருந்து வந்த புத்தகங்கள் அல்ல. அவைகள் பரிசுத்தமானவைகள் அல்ல, மேலும் அவை பரிசுத்த ஆவியானவரால் கூறப்பட்டவையோ அல்லது வெளிப்படுத்தப்பட்டவையோ அல்ல; அவை சபையின் மீதான பவுலின் பாரத்தின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. தேவனுடைய கிரியைக்கும் மனிதனுடைய கிரியைக்கும் நடுவில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்ளுவதே இவற்றை எல்லாம் நான் சொல்லுவதற்கான நோக்கம் ஆகும்: தேவனுடைய கிரியை தேவனையே வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் மனிதனுடைய கிரியை மனிதனின் கடமை மற்றும் அனுபவங்களைக் குறிக்கிறது. தேவனுடைய சாதாரணக் கிரியையை மனிதனின் சித்தம் என்றோ அவரது இயற்கைக்கு மாறான கிரியையை தேவனின் சித்தம் என்றோ கருதக் கூடாது; மேலும், மனிதனின் உயர்வான பிரசங்கத்தை தேவனின் வார்த்தைகள் என்றோ அல்லது பரலோகத்தில் இருந்து வந்த புத்தகங்கள் என்றோ ஒருவர் கருதக்கூடாது. இத்தகையப் பார்வைகள் யாவும் நெறிமுறைக்கு மாறானவையே. நான் பவுலின் பதின்மூன்று நிருபங்களைப் பகுத்தாய்ந்து கூறியதைக் கேட்ட பின்னர் பலர் பவுலின் நிருபங்களைப் படிக்கக் கூடாது என்றும் பவுல் மிகவும் பாவமுள்ள மனிதன் என்றும் நம்புகிறார்கள். என்னுடைய வார்த்தைகள் இரக்கமற்றவை என்றும், பவுலின் நிருபங்கள் பற்றிய என் மதிப்பீடு சரியில்லாதது என்றும், அந்த நிருபங்கள் மனுஷ அனுபவங்கள் மற்றும் பாரங்களின் வெளிப்பாடுகள் என்று கருதக் கூடாது என்றும் நினைக்கும் பலரும் இருக்கின்றனர். அதற்குப் பதிலாக அவற்றை தேவனுடைய வார்த்தைகளாகக் கருத வேண்டும், அவைகள் யோவானின் வெளிப்படுத்தின விசேஷம் போல முக்கியமானவை, அவற்றைக் குறைக்கவோ அல்லது அவற்றோடு கூட்டவோ மேலும் அவற்றைப் பொதுவாக விளக்கவோ கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மனுஷ வலியுறுத்தல்கள் யாவும் தவறானவையா? ஜனங்களுக்கு அறிவு இல்லை என்ற உண்மைதானே இதற்கு முற்றிலுமாகக் காரணம்? பவுலின் நிருபங்கள் ஜனங்களுக்கு வெகுவாக நன்மை அளிக்கின்றன, மேலும் அவற்றிற்கு 2,000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. இருப்பினும், இந்த நாள் வரை, அப்போது அவன் என்ன கூறினான் என்பதை ஆழ்ந்தறிய முடியாத பல ஜனங்கள் உள்ளனர். பவுலின் நிருபங்கள்தான் முழுக் கிறிஸ்தவத்தின் மாபெரும் படைப்பு என்பதும், மேலும் ஒருவராலும் அதைச் தெளிவுபடுத்த முடியாது என்பதும் அதை ஒருவராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதும் ஜனங்களின் மனதளவிலான புரிதலாக இருக்கிறது. உண்மையில், இந்த நிருபங்கள் ஆவிக்குரிய ஒருவரின் சுயவரலாறு போல் இருக்கிறதே தவிர அவற்றை இயேசுவின் வார்த்தைகளுடனோ அல்லது யோவான் கண்ட மாபெரும் தரிசனங்களோடோ ஒப்பிட முடியாது. மாறாக, யோவான் பார்த்தவையோ பரலோகத்தில் இருந்து வந்த மாபெரும் தரிசனங்களாக இருந்தன—தேவனினுடைய சொந்தக் கிரியையின் தீர்க்கதரிசனங்களாக இருந்தன—இவற்றை மனுஷனால் அடைய முடியாது, அதே சமயத்தில் பவுலின் நிருபங்கள் ஒரு மனுஷன் பார்த்தவை மற்றும் அனுபவித்தவற்றின் வெறும் விளக்கங்களே ஆகும். இவையே மனுஷனால் முடியக் கூடியவை, ஆனால் இவை தீர்க்கதரிசனங்களோ அல்லது தரிசனங்களோ அல்ல; இவை பல இடங்களுக்கு அனுப்பப்பட்ட வெறும் கடிதங்களே. இருப்பினும், அக்காலத்து ஜனங்களுக்கு பவுல் ஓர் ஊழியக்காரன், மேலும் அதனால் அவனுடைய வார்த்தைக்கு மதிப்பு இருந்தது, ஏனெனில் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்டது எதுவோ அதை ஏற்றுக்கொண்ட ஒருவன் அவன். ஆகவே கிறிஸ்துவைத் தேடிய அனைவருக்கும் அவனுடைய நிருபங்கள் நன்மை அளிப்பவைகளாக இருந்தன. அந்த வார்த்தைகள் இயேசுவால் தனிப்பட்ட முறையில் பேசப்படவில்லை எனினும், இறுதியில் அவை அவர்களது காலத்துக்குத் தேவையானவையாக இருந்தன. இது இப்படி இருக்க, பவுலுக்குப் பின் வந்தவர்கள் வேதாகமத்தில் அவனுடைய நிருபங்களை வரிசைப்படுத்தினர். இவ்விதம் அவை இந்நாள் வரையிலும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. நான் கூறுவதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? நான் இந்தக் கடிதங்கள் பற்றிய ஒரு சரியான விளக்கத்தை அளிக்கிறேனே தவிர வேறல்ல, மேலும் ஜனங்களுக்கு குறிப்புகளாக அவை அளிக்கும் நன்மையையும் மதிப்பையும் மறுக்காமல் பகுத்தாய்வு செய்கிறேன். என்னுடைய வார்த்தைகளைப் படித்த பின்னரும், நீங்கள் பவுலின் கடிதங்களை மறுப்பதோடல்லாமல், அவற்றை வேதப்புரட்டு என்றோ மதிப்பற்றவை என்றோ தீர்மானித்தால், உங்களது புரிந்துகொள்ளும் திறன் மட்டுமல்லாது உங்கள் உள்நோக்குகளும் விஷயங்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடும் மிகவும் மோசமானது என்று மட்டும்தான் சொல்ல முடியும்; நிச்சயமாக என்னுடைய வார்த்தைகள் முற்றிலும் ஒருபக்க சார்புடையது என்று கூற முடியாது. இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? அக்கால கட்டத்தில் பவுலுடைய கிரியையின் உண்மையான சூழலும் அவனது கடிதங்கள் எந்தப் பின்னணியில் எழுதப்பட்டன என்பதும்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள். இந்தச் சூழல்கள் பற்றிய ஒரு சரியான பார்வை உங்களுக்கு இருந்தால், பவுலின் நிருபங்கள் பற்றிய ஒரு சரியான பார்வையும் உங்களுக்கு இருக்கும். அதே நேரத்தில், இந்தக் கடிதங்களின் சாராம்சத்தை நீ ஒருமுறை ஆழமாக அறிந்துகொண்டுவிட்டால், வேதாகமத்தைப் பற்றிய உன் மதிப்பீடும் சரியானதாக இருக்கும், மற்றும் பல ஆண்டுகளாகப் பின் வந்த தலைமுறையைச் சேர்ந்த ஜனங்கள் ஏன் பவுலின் கடிதங்களை மிகவும் தொழுதார்கள் என்பதையும் அதுமட்டுமல்லாமல் ஏன் பலர் அவனை தேவனைப் போல கூட நடத்தினார்கள் என்பதையும் நீ புரிந்துகொள்ளுவாய். நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் நீங்கள் நினைப்பதும் அதுவாகத்தானே இருக்கும்?

தாமே தேவன் அல்லாத ஒருவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. பவுலின் கிரியையை மனுஷப் பார்வையின் ஒரு பகுதி என்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசப்படுத்தலின் ஒரு பகுதி என்றுதான் கூறமுடியும். பவுல் இந்த வார்த்தைகளைப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசப்படுத்தலோடு ஒரு மனுஷக் கண்ணோட்டத்தில் இருந்து எழுதினான். இது ஓர் அரிய விஷயம் அல்ல. அதனால் அவனது வார்த்தைகளூடே சில மனுஷ அனுபவங்கள் சிதறிக்கிடப்பது தவிர்க்க முடியாதது ஆகும், மற்றும் பின்னர் அந்தக் காலத்தில் இருந்த தன் சகோதர சகோதரிகளின் தேவையைப் பூர்த்திசெய்யவும் ஆதரவு அளிக்கவும் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்டான். அவன் எழுதிய நிருபங்களை ஜீவித ஆய்வு என்று வகைப்படுத்த முடியாது, அவற்றைச் சுயசரிதைகளாகவும் அல்லது செய்தியாகவும் வகைப்படுத்த முடியாது. மேலும், அவை சபை கடைப்பிடித்த சத்தியங்களும் அல்ல, சபை நிர்வாகக் கட்டளைகளும் அல்லது பாரம் கொண்ட ஒருவரைப் போல—பரிசுத்த ஆவியானவரால் கிரியைக்கு நியமிக்கப்பட்ட ஒரு நபர்—இதுதான் அவர்கள் செய்யவேண்டிய ஒரு விஷயம். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை எழுப்பி ஒரு பாரத்தைக் கொடுத்தால், அவர்கள் சபையின் கிரியைகளை ஏற்று நடத்தாமல் மற்றும் அதன் காரியங்களைச் சரியாக நிர்வகிக்க முடியாவிட்டால், அல்லது திருப்திகரமாக அதன் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காவிட்டால், அந்த ஜனங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகிறது. ஆகவே ஓர் அப்போஸ்தலர் தங்கள் கிரியையின் காலகட்டத்தில் நிருபங்கள் எழுதுவது என்பது ஓர் இரகசியமான விஷயம் அல்ல. இது அவர்களுடைய கிரியையின் ஒரு பகுதியே; அவர்கள் அதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நிருபங்களை எழுதுவதன் நோக்கம் ஒரு ஜீவித ஆய்வை அல்லது ஓர் ஆவிக்குரிய சுயசரிதை எழுதுவது அல்ல, மேலும் மிக முக்கியமாகப் பரிசுத்தவான்களுக்காக இன்னொரு வழியைத் திறப்பதற்காகவும் அல்ல. மாறாக, தங்கள் சொந்தச் செயல்பாட்டை நிறைவேற்றுவதற்காகவும் தேவனுக்கு ஓர் உண்மையுள்ள ஊழியக்காரனாக இருப்பதற்காகவும் அவர்கள் அதைச் செய்தனர். இதன் மூலம் அவர் அவர்களிடம் ஒப்படைத்த பணியை முடித்து அவர்களால் தேவனுக்கு ஒரு கணக்கைக் கொடுக்க முடியும். அவர்கள் தங்கள் கிரியையில் தங்களுக்காகவும் தங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும் பொறுப்பு ஏற்க வேண்டி இருந்தது, மேலும் அவர்கள் தங்கள் கிரியையைச் சிறப்பாகவும் சபையின் காரியங்களை இதயபூர்வமாகவும் செய்ய வேண்டி இருந்தது: இவை அனைத்துமே அவர்களது வேலையின் ஒரு பகுதியே.

நீங்கள் பவுலின் கடிதங்களைப் பற்றிய ஒரு புரிதலைப் பெற்றுவிட்டால், உங்களுக்கு பேதுரு மற்றும் யோவான் ஆகிய இருவரின் நிருபங்கள் பற்றிய சரியான கருத்தும் மதிப்பீடும் கிடைத்துவிடும். நீங்கள் இனி ஒருபோதும் இந்த நிருபங்களை பரலோகத்தில் இருந்து வந்த பரிசுத்தமான மீற முடியாத புத்தகங்கள் என்று பார்க்க மாட்டீர்கள் அதை விடப் பவுலை தேவன் போல கருதவும் மாட்டீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய கிரியை மனுஷக் கிரியையில் இருந்து வேறுபட்டது, மேலும் அவரது வெளிப்பாடுகள் அவர்களுடையது போல் எப்படி இருக்க முடியும்? தேவனுக்கு அவருக்கே உரிய மனநிலை உள்ளது, அதே சமயம் மனுஷனுக்கோ அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. தேவனுடைய மனநிலை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் மனுஷனுடைய கடமைகள் மனுஷனுடைய அனுபவங்களில் உள்ளடங்கியுள்ளன மற்றும் அவை அவனது பின் தொடர்தலில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே ஏதோ ஒன்று தேவனுடைய வெளிப்பாடா அல்லது மனுஷனுடைய வெளிப்பாடா என்பது செய்யப்படுகிற கிரியை மூலம் தெளிவாகிறது. அது தேவனாலேயே விளக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை அல்லது அதற்குச் சாட்சி கொடுக்க மனுஷன் முயற்சி செய்யவேண்டியதும் இல்லை; மேலும் தேவன் தாமே எந்த நபரையும் ஒடுக்கவும் தேவை இல்லை. இவை எல்லாம் இயற்கையான வெளிப்படாக வருகின்றன; அது வலுக்கட்டாயமானதோ அல்லது மனுஷனால் தலையிடக் கூடியதோ அல்ல. மனுஷனுடைய கடமை அவர்களது அனுபவங்கள் மூலம் அறியப்படும், மேலும் ஜனங்கள் கூடுதலாக எந்த ஓர் அனுபவ கிரியைகளையும் செய்யவேண்டிய அவசியமும் இல்லை. மனுஷனின் அனைத்துச் சாராம்சமும் அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது வெளிப்படுத்தப்படலாம். அதே நேரத்தில், தேவன் தமது கிரியையைச் செய்யும்போது தமது உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்தலாம். அது மனுஷனின் கிரியையாக இருந்தால் அதை மறைக்க முடியாது. அது தேவனின் கிரியையாக இருந்தால், தேவனுடைய மனநிலையை யாராலும் இன்னும் அதிகமாக மறைக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் மனுஷனால் கட்டுப்படுத்தவும் முடியாது. எந்த ஒரு மனுஷனையும் தேவன் என்று கூறமுடியாது, அல்லது அவர்களுடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பரிசுத்தமானதாகப் பார்க்கமுடியாது அல்லது மாற்றமுடியாதது என்று கருத முடியாது. தேவன் தமக்கு மாம்சத்தை அணிந்து கொண்டதால் அவரை மனுஷன் என்று கூற முடியுமே தவிர அவரது கிரியையை மனுஷனுடைய கிரியை அல்லது கடமை என்று கூற முடியாது. மேலும், தேவனுடைய பேச்சுக்களையும் பவுலுடைய நிருபங்களையும் சமமாகக் கருத முடியாது, அல்லது தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மற்றும் மனுஷனுடைய அறிவுறுத்தும் வார்த்தை ஆகியவற்றை ஒரே விதத்தில் வைத்துப் பேச முடியாது. ஆகையால், தேவனுடைய கிரியையை மனுஷனுடைய கிரியையில் இருந்து வேறுபடுத்தும் கொள்கைகள் இருக்கின்றன. இவை கிரியையின் நோக்கம் அல்லது அதன் தற்காலிகத் திறனை வைத்தல்லாமல் அவற்றின் சாரத்தின்படி வேறுபடுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஜனங்கள் கொள்கைத் தவறுகளைச் செய்கின்றனர். இது ஏனென்றால் மனுஷன் தன்னால் அடையக் கூடிய வெளிப்புறத்தைப் பார்க்கிறான், ஆனால் மனுக்குலத்தின் புறக்கண்களால் கவனிக்க முடியாத சாராம்சத்தையே தேவன் பார்க்கிறார். நீ தேவனுடைய வார்த்தைகளையும் கிரியைகளையும் ஒரு சராசரி மனுஷனின் கடமைகளாகக் கருதி, மனுஷனுடைய பெரிய அளவிலான கிரியையை மனிதன் நிறைவேற்றும் கடமையாக இல்லாமல் அதற்கு மாறாக மாம்சத்தை அணிந்த தேவனின் கிரியையாகப் பார்த்தால், நீ கொள்கை அளவில் தவறுசெய்யவில்லையா? மனுஷனுடைய நிருபங்களையும் சுயவரலாற்றையும் எளிதாக எழுதிவிடலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகிய அஸ்திவாரத்தின் மேல்தான் எழுதமுடியும். இருப்பினும், தேவனுடைய பேச்சுக்களையும் கிரியையையும் மனுஷனால் எளிதில் நிறைவேற்ற முடியாது அல்லது மனித ஞானத்தாலும் சிந்தனையாலும் அடைய முடியாது மற்றும் அவற்றை ஆராய்ந்து ஜனங்களால் முற்றிலுமாக விளக்க முடியாது. கொள்கை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்குள் எந்த ஓர் எதிர்வினையையும் எழுப்பவில்லையென்றால், உங்கள் விசுவாசம் மிக உண்மையானதும் புடமிடப்பட்டதும் அல்ல என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்கள் விசுவாசம் முற்றிலும் தெளிவற்றதோடு குழப்பமானதும் கொள்கையற்றதுமானதாக உள்ளது. தேவன் மற்றும் மனுஷனைப் பற்றிய மிகவும் அடிப்படையான முக்கியப் பிரச்சினைகளைக் கூட புரிந்துகொள்ளாமல் இருக்கும் இந்த வகையான விசுவாசம் முற்றிலுமாக உள்ளுணர்வு அற்றது இல்லையா? வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்ட ஒரே மனுஷன் பவுலாக எப்படி இருக்க முடியும்? சபைக்காகக் கிரியை செய்த ஒரே மனுஷன் பவுலாக எப்படி இருக்க முடியும்? சபைகளை ஆதரிக்க சபைகளுக்கு எழுதியவர் ஒரே ஒருவனான எப்படி இருக்க முடியும்? இந்த ஜனங்களின் கிரியையின் அளவு அல்லது தாக்கம் அல்லது அவர்களது கிரியையின் பலன் எப்படியாக இருந்தாலும், அத்தகைய கிரியைகளின் கொள்கைகளும் சாராம்சமும் ஒன்றுபோல் இல்லையா? அதைப் பற்றிய விஷயங்கள் தேவனுடைய கிரியையில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இல்லையா? தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையிலும் தெளிவான வித்தியாசங்கள் இருந்த போதிலும், அவருடைய பல கிரியை செய்யும் முறை முற்றிலுமாக ஒன்றுபோல் இல்லாவிட்டாலும், அவைகளுக்கு ஒரே சாராம்சமும் ஆதாரமும் இல்லையா? அதன்படி, இப்போது இந்த விஷயங்களைப் பற்றி ஒருவனுக்கு இன்னும் தெளிவில்லை என்றால், அவனுக்குப் பகுத்தறிவில் மிகவும் குறைபாடு இருக்கிறது. இந்த வார்த்தைகளைப் படித்த பின்னர், ஒருவன் பவுலின் கடிதங்கள் பரிசுத்தமானவையும் மீறமுடியாதவையும் எந்த ஓர் ஆவிக்குரிய மனிதரின் சுயவரலாற்றிலும் இருந்து வேற்பட்டவை என்று இன்னும் கூறினால், இந்த நபரின் பகுத்தறிவு மிக கோளாறானதாகும். மேலும் அத்தகைய நபர் சந்தேகமின்றி முற்றிலும் அறிவற்ற ஒரு கொள்கையியல் நிபுணர் ஆவார். நீ பவுலைப் போற்றி வணங்கினாலும், சத்தியத்தின் யதார்த்தத்தை மாற்றவும் அல்லது சத்தியத்தின் இருப்பை மறுக்கவும் உனது இதமான உணர்வுகளை அவனுக்காக உபயோகப்படுத்தவும் முடியாது. மேலும், நான் கூறியவை பவுலின் அனைத்துக் கிரியை மற்றும் நிருபங்களிலும் எந்த விதத்திலும் நெருப்பைக் கொழுத்தவில்லை அல்லது குறிப்புகளாக அவற்றின் மதிப்பை முற்றிலும் மறுக்கவுமில்லை. எது எப்படியாக இருந்தாலும், அனைத்து விஷயங்கள் மற்றும் ஜனங்களைப் பற்றிய சரியான புரிதலையும் நியாயமான மதிப்பீட்டையும் நீங்கள் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே என்னுடைய இந்த வார்த்தைகள் பேசப்படுகின்றன: இது சாதாரண பகுத்தறிவுதான்; சத்தியத்தைக் கொண்டுள்ள நீதியுள்ள ஜனங்கள் தங்களுக்கு ஆயுதமாகத் தரித்துக்கொள்ள வேண்டியது இதுவே.

முந்தைய: கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்

அடுத்த: ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக