உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன

மனிதனை நிர்வகிப்பது எப்போதுமே என் கடமையாக இருக்கிறது. மேலும், உலகத்தைச் சிருஷ்டித்தபோதே நான் மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கு உத்தரவிட்டேன். கடைசி நாட்களில் நான் மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவேன் என்பதையோ, அல்லது மனிதகுலத்தின் மத்தியிலுள்ள கலகக்காரர்களை ஜெயங்கொள்ளுவதே நான் சாத்தானைத் தோல்வியடையச் செய்வதற்கான சான்றாக உள்ளது என்பதையோ மக்கள் அறியாதிருக்கலாம். ஆனால், என் விரோதியானவன் என்னுடன் போரிட வந்தபோது, சாத்தான் சிறைப்படுத்தி, தனது பிள்ளைகளாக்கி தனது வீட்டைக் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமைகளாக வைத்திருப்பவர்களை ஜெயங்கொள்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். தோல்வியுறச் செய்வது, அவமானத்திற்கு ஆளாக்குவது என்பதே ஜெயங்கொள்ளுதல் என்பதன் மெய்யான அர்த்தமாக உள்ளது; இஸ்ரவேலரின் மொழியில், இது எனக்கு எதிரான முற்றிலுமான தோல்வி, அழிவு மற்றும் பிற எதிர்ப்பைக் காட்டக்கூடாதவனாக்குதல் என்று அர்த்தப்படுகிறது. ஆனால் இன்று, உங்களிடையே பயன்படுத்தப்படுகிறபோது, ஜெயங்கொள்ளுதல் என்பது இதன் அர்த்தமாக உள்ளது. மனிதகுலத்தின் பொல்லாங்கானவர்களை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவருதலும் அதைத் தோற்கடிப்பதுமே எப்பொழுதும் என் நோக்கமாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறிய வேண்டும், இதனால் அவர்கள் இனி எனக்கு எதிராகக் கலகம் செய்ய முடியாது, மேலும் என் கிரியையில் குறுக்கிடவோ அல்லது தொந்தரவு செய்யவோ முடியாது. இவ்வாறு, மனிதனைப் பொறுத்தவரை, இந்த வார்த்தையானது ஜெயங்கொள்ளுதல் என்று அர்த்தப்படலாயிற்று. இந்த வார்த்தையின் வெளிப்படையான அர்த்தங்கள் என்னவாக இருப்பினும், மனிதர்களைத் தோற்கடிப்பதே எனது கிரியையாக உள்ளது. ஏனெனில், மனிதகுலம் எனது ஆளுகையுடன் இணைந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், மனிதர்கள் என் விரோதிகளே தவிர வேறில்லை. மனிதர்கள் என்னை எதிர்க்கிற மற்றும் எனக்குக் கீழ்ப்படியாதிருக்கிற பொல்லாதவர்களாவர். மனிதர்கள் வேறு யாருமல்லர், என்னால் சபிக்கப்பட்ட பொல்லாங்கின் சந்ததிதான் அது. மனிதர்கள் வேறு யாருமல்ல, என்னைக் காட்டிக் கொடுத்த பிரதான தூதனின் சந்ததியினர் தான். மனிதர்கள் வேறு யாருமல்லர், நீண்ட காலத்திற்கு முன்பு என்னால் முறியடிக்கப்பட்டவர்களும், அன்றிலிருந்து சரிசெய்யப்பட இயலாத எனது விரோதியாக இன்றும் இருக்கிற பிசாசின் மரபுவழி வந்தவர்களே. மனிதகுலம் யாவற்றிற்கும் மேலாக உள்ள வானம் கொந்தளிப்பாகவும் இருட்டாகவும், தெளிவின் அறிகுறி சிறிதும் இல்லாமலும் இருக்கிறது, மனித உலகம் கார் இருளில் மூழ்கியுள்ளது, இதனால் அதில் வாழும் ஒருவன் தனது தலையை உயர்த்தும்போது, முகத்திற்கு முன்னாக வெளிநீட்டப்பட்ட கையையோ அல்லது சூரியனையோ கூடக் காணக் கூடாதவனாக இருக்கிறான். அவனது பாதங்களுக்குக் கீழே உள்ள சாலை, சேறும் சகதியுமாகக் குழிகளுடன், கோணல்மாணலான வளைவுகள் கொண்டுள்ளது; முழு நிலமும் பிரேதங்களால் குப்பையாக்கப்பட்டுள்ளது. இருண்ட மூலைகள் மரித்தவர்களின் எச்சங்களால் நிரப்பப்பட்டுள்ளன, அத்துடன் குளிர்ந்த மற்றும் நிழலான மூலைகளை பிசாசுகளின் கூட்டங்கள் வாசம்பண்ணும் இடங்களாக்கிக் கொண்டுள்ளன. மனிதர்களுடைய உலகின் எல்லா இடங்களிலும் பிசாசுகள் சேனைகளாக வந்து போகின்றன. அசுத்தத்தால் மூடப்பட்ட எல்லா வகையான மிருகங்களின் சந்ததியும், களமிறக்கப்பட்ட யுத்தத்தில் பூட்டப்பட்டுள்ளன, அதன் இரைச்சலானது இருதயத்தைப் பயங்கரமாகத் தாக்குகிறது. இப்படிப்பட்ட வேளைகளில், இத்தகையதொரு உலகில், இப்படிப்பட்டதொரு “பூமிக்குரிய பரதீசில்” வாழ்வின் சந்தோஷங்களைத் தேட ஒருவன் எங்கே செல்வான்? அவனுடைய வாழ்வின் இலக்கைக் கண்டறிய ஒருவன் எங்கே செல்ல முடியும்? நெடுங்காலத்திற்கு முன் சாத்தானின் கால்களின்கீழ் மிதிக்கப்பட்ட நாளில் இருந்தே, மனிதகுலம், சாத்தானின் சாயலைப் பூண்டிருக்கும் ஒரு நடிகன் போலவே முதலாவது இருந்துள்ளது—இதற்கும் மேலாக, மனிதகுலமானது சாத்தானின் உருவகமாகவே ஆகி, சாத்தானுக்கு உரத்த குரலில் தெளிவாகச் சாட்சியளிக்கும் ஆதாரமாகவே பணியாற்றுகிறது. இத்தகையதொரு மனிதகுலம், இப்படிச் சீரழிந்த கறைபடிந்த ஒரு கும்பல், இவ்வாறு சீர்கேடு நிறைந்த மனிதக் குடும்பத்தின் சந்ததி, தேவனுக்கு எப்படி சாட்சியளிக்கக் கூடும்? என் மகிமை எங்கிருந்து வருகிறது? எங்கிருந்து என் சாட்சியைப் பற்றி ஒருவர் பேசத் தொடங்குவார்? மனிதகுலத்தைச் சீர்கெடுத்து எனக்கு எதிராக நிற்கும் விரோதியானவன், ஏற்கனவே மனிதகுலத்தை எடுத்துக்கொண்டு—அதாவது நீண்டகாலத்திற்கு முன்பே நான் சிருஷ்டித்ததும் எனது மகிமையாலும் எனது ஜீவனாலும் நிரப்பப்பட்டதுமாக இருக்கிற மனிதகுலத்தைக் கறைப்படுத்தினான். இது என் மகிமையைப் பறித்துவிட்டது, மற்றும் இவையெல்லாம் மனிதனைச் சாத்தானின் அவலட்சணத்துடன் பெரிதும் இணைக்கப்பட்ட விஷத்தினாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியிலிருந்து பெற்ற சாறினாலும் மனிதனை ஊக்குவித்துள்ளது. ஆதியிலே, நான் மனிதகுலத்தைச் சிருஷ்டித்தேன்; அதாவது, மனிதகுலத்தின் மூதாதையரான ஆதாமை நான் சிருஷ்டித்தேன். அவன் ஒரு சாயலும் ரூபமும் அருளப்பட்டவனான், பெலன் நிறைந்தவனாயிருந்தான், சத்துவம் நிறைந்தவனாயிருந்தான், மேலும் அவன் எனது மகிமையிலும் பங்கேற்றான். நான் மனிதனைச் சிருஷ்டித்தபோது அது மகிமையான நாளாக இருந்தது. அதன்பிறகு, ஆதாமின் சரீரத்தில் இருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள், அவளும் மனிதனின் மூதாதையாக இருந்தாள், அதனால் நான் சிருஷ்டித்த ஜனங்கள் என் சுவாசத்தால் நிரப்பப்பட்டு எனது மகிமை பொங்கி வழிபவர்கள் ஆனார்கள். ஆதாம் ஆதியிலே எனது கரங்களிலிருந்து பிறந்தான் மற்றும் அவன் எனது சாயலின் பிரதிபலிப்பானான். இவ்வாறு, “ஆதாம்” என்பதன் மெய்யான பொருள் என்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஓர் உயிரினமாக, என் உயிர்நிலையான ஆற்றலைக்கொண்டு நிரப்பப்பட்ட, என் மகிமையைக்கொண்டு நிரப்பப்பட்ட, சாயலும் ரூபமும் கொண்ட, ஆவியும் சுவாசமும் உள்ளவனானான் என்பதாகும். ஆவியைக்கொண்ட, என்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற, எனது சாயலைத் தாங்கியிருக்கிற மற்றும் எனது சுவாசத்தைப் பெற்றிருக்கிறதான சிருஷ்டிக்கப்பட்ட ஒரே உயிரினம் அவன் மட்டுமே. ஆதியிலே, நான் சிருஷ்டித்த இரண்டாவது மனிதப் படைப்பாக ஏவாள் இருந்தாள், அந்த சிருஷ்டிக்கு நான் என் சுவாசத்தை வழங்கி நியமித்திருந்தேன், எனவே “ஏவாள்” என்பதன் மெய்யான அர்த்தம், எனது மகிமையைத் தொடருகிற ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியும், எனது ஜீவனால் நிரப்பப்பட்டவளும் மற்றும் எனது மகிமையைப் பெற்றுக்கொண்டவள் என்பதாகும். ஏவாள் ஆதாமிலிருந்து வந்தாள், அதனால் அவளும் என் சாயலைத் தரித்துள்ளாள், ஏனென்றால் அவள் என் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட இரண்டாவது மனிதப் படைப்பு ஆவாள். “ஏவாள்” என்பதன் மெய்யான அர்த்தம் ஆவி, சதை மற்றும் எலும்பு ஆகியவற்றைக் கொண்ட, மனிதகுலத்திற்குள் எனது இரண்டாவது சாயலும் மற்றும் எனது இரண்டாவது சாட்சியுமாக இருக்கிற ஓர் உயிருள்ள மனுஷி என்பதாகும். இவர்களே மனிதகுலத்தின் மூதாதையர்கள், மனிதனின் தூய்மையான மற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷமும், மற்றும் தொடக்கத்திலிருந்தே, ஆவி அருளப்பட்ட உயிரினங்களும் ஆவார்கள். இருப்பினும், பொல்லாங்கன், மனிதகுலத்தின் முன்னோர்களுடைய சந்ததியை மிதித்து சிறைப்பிடித்தான், மனித உலகத்தை முழுமையான அந்தகாரத்தில் மூழ்கடித்தான், மேலும் சந்ததியினர் நான் இருப்பதை இனியும் நம்பாதபடிக்குச் செய்தான். பொல்லாங்கன் ஜனங்களை சீர்கெடுத்து, அவர்கள் அனைவரையும் மிதிக்கிற நிலையிலும், அது என் மகிமையையும், என் சாட்சியத்தையும், நான் அவர்களுக்கு அளித்த உயிர்ச்சக்தியையும், நான் அவர்களுக்குள் ஊதிய சுவாசம் மற்றும் ஜீவனையும், மனித உலகினுள் எனது மகிமையையும், நான் மனிதகுலத்தின் மீது செலவிட்ட எனது இருதயத்தின் இரத்தம் யாவற்றையும் கொடூரமாகப் பறிக்கிறான் என்பது இன்னும் அருவருப்பானதாக இருக்கிறது. மனிதகுலம் இனியும் வெளிச்சத்தில் இருப்பதில்லை, நான் அவர்களுக்கு அருளிய அனைத்தையும் ஜனங்கள் இழந்துவிட்டார்கள், நான் கொடுத்த மகிமையை அவர்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் நானே கர்த்தராயிருக்கிறேன் என்பதை அவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? பரலோகத்தில் நான் இருப்பதை அவர்கள் எப்படித் தொடர்ந்து நம்புவார்கள்? பூமியின்மீது என் மகிமையின் வெளிப்பாடுகளை அவர்கள் எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்? இந்தப் பேரன்கள் மற்றும் பேத்திகள், தங்கள் சொந்த முன்னோர்களைச் சிருஷ்டித்தவர் என்ற வகையில் அவர்கள் வணங்கிய தேவனை எவ்விதம் எடுத்துக்கொள்வார்கள்? இந்தப் பரிதாபமான பேரன்கள் மற்றும் பேத்திகள், பொல்லாங்கனுக்கு மகிமையையும், உருவத்தையும், ஆதாம் மற்றும் ஏவாளுக்கு நான் அருளிய சாட்சியத்தையும், மனிதகுலம் தங்கள் இருப்பிற்குச் சார்ந்துள்ளதான அவர்கள் மீது நான் அருளிய ஜீவனையும்கூட தாரளமாக “வழங்கி” இருக்கின்றனர்; மற்றும் இவர்கள் அந்தப் பொல்லாங்கன் இருத்தல் பற்றி முற்றிலும் கவலையற்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் எனது மகிமையை அதற்குக் கொடுக்கின்றனர். இது “அழுக்கு” என்ற தலைப்பின் ஆதாரமாக இருக்கிறதல்லவா? அத்தகைய ஒரு மனிதகுலம், அத்தகைய பொல்லாத பிசாசுகள், அத்தகைய நடைப்பிணங்கள், அத்தகைய சாத்தானின் உருவங்கள், அத்தகைய என்னுடைய எதிரிகள் எப்படி என் மகிமையைக் கொண்டிருக்கக்கூடும்? நான் என் மகிமையை மீண்டும் மீட்டுக் கொள்ளுவேன், மனிதர்களிடையே இருக்கும் என் சாட்சியத்தை மறுபடியும் மீட்டுக்கொள்ளுவேன், மற்றும் ஒரு காலத்தில் எனக்குச் சொந்தமாயிருந்தவற்றையும், நீண்ட காலத்திற்கு முன்பே நான் மனிதகுலத்திற்குக் கொடுத்தவற்றையும்—மனிதகுலத்தையும் நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவேன். இருப்பினும், நான் சிருஷ்டித்த மனிதர்கள் எனது சாயலையும் எனது மகிமையையும் பெற்றுக்கொண்ட பரிசுத்தவான்களாக இருந்தனர் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். அவர்கள் சாத்தானுக்குரியவர்கள் அல்ல, அல்லது அதன் மிதித்தலுக்கு உட்பட்டவர்களும் அல்ல, ஆனால் அவர்கள் முற்றிலுமாக எனது வெளிப்பாடாயிருந்தனர், சாத்தானுடைய விஷத்தின் இலேசான தடயம்கூட இல்லாதவர்களாக இருந்தனர். எனது கரத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட, நான் நேசிக்கிற மற்றும் வேறு எவருக்கும் உரியவர்களாயிராத மனிதகுலத்தை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதை மனிதகுலத்திற்கு நான் தெரிவிக்கிறேன். மேலும், அவர்களில் நான் சந்தோஷம் அடைந்து அவர்களை எனது மகிமையாகக் கருதுவேன். இருப்பினும், நான் விரும்புவது இன்றைய நாளில் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, சாத்தானுக்குச் சொந்தமான, இனியும் எனது அசல் சிருஷ்டிப்பாயிராத மனிதகுலத்தை அல்ல. மனித உலகில் நிலவும் என் மகிமையை மீட்டெடுக்க நான் நோக்கம் கொண்டுள்ளதால், சாத்தானைத் தோற்கடிப்பதில் என் மகிமைக்குச் சான்றாக, மனிதர்களிடையே தப்பிப்பிழைத்தவர்களை நான் முழுமையாக ஜெயங்கொள்வேன். எனது சாட்சியை மட்டுமே எனது சுத்தத் தெளிவான தன்மையாக, எனது சந்தோஷத்தின் நோக்கமாக எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சித்தமாக உள்ளது.

மனிதகுலம் இன்று இருக்கும் இடத்தை அடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கடந்துள்ளது, ஆயினும் ஆரம்பத்தில் நான் சிருஷ்டித்த மனிதகுலம் சீரழிவில் மூழ்கி நீண்ட காலமாகிவிட்டது. மனிதகுலம் இனியும் நான் விரும்பும் மனிதகுலமாக இருப்பதில்லை, இதனால், என் பார்வையில், ஜனங்கள் இனி மனிதகுலம் என்ற பெயருக்குத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். மாறாக அவர்கள் சாத்தான் சிறைபிடித்து வைத்துள்ள மனிதகுலத்தின் அழுக்காக, சாத்தான் குடியிருக்கப் பயன்படுத்தும் அழுகிய நடைப்பிணங்களாக மற்றும் சாத்தான் தன்னையே உடுத்திக்கொள்ளப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். நான் இருப்பதை ஜனங்கள் நம்பவில்லை, என் வருகையை அவர்கள் வரவேற்கவில்லை. என் கோரிக்கைகளுக்கு மனிதகுலம் அதிருப்தியான வகையிலேயே பதில் கொடுக்கிறது, அவற்றைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறது மற்றும் வாழ்வின் மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் என்னுடன் உண்மையாகப் பகிர்ந்து கொள்ளாதிருக்கிறது. ஜனங்கள் என்னை ஆராயப்படக் கூடாதவர் என்று காண்பதால், அவர்கள் எனக்கு வெறுப்பான புன்னகையைத் தருகிறார்கள், அவர்களின் முதலாம் அணுகுமுறை அதிகாரத்தில் இருக்கும் ஒருவரிடம் ஒத்துழைப்பதாக உள்ளது, ஏனென்றால் ஜனங்களுக்கு என் கிரியையைப் பற்றி எந்த அறிவும் இல்லை, தற்போது எனது சித்தம் பற்றி மிகக்குறைவாகவே அறிந்துள்ளனர். நான் உங்களுக்கு நேர்மையாக இருப்பேன்: நாள் வரும்போது, என்னைத் தொழுதுகொள்கிற எவர் ஒருவருடைய துன்பங்களும் சுமப்பதற்கு உங்களுடைய துன்பங்களைவிட எளிதாக இருக்கும். என்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் அளவு உண்மையில் யோபுவின் விசுவாசத்தைக்காட்டிலும் அதிகமில்லை—யூதப் பரிசேயர்களின் விசுவாசம் கூட உங்களுடையதை விட மிஞ்சியதாய் உள்ளது—எனவே, அக்கினி இறங்கும் நாளில், உங்கள் துன்பம், இயேசுவால் கண்டிக்கப்பட்ட பரிசேயர்களை விடவும், மோசேயை எதிர்த்த 250 தலைவர்களை விடவும், மற்றும் அக்கினிப் பிழம்புகளால் சுட்டெரித்து எரிக்கப்பட்ட சோதோமை விடவும் அதிக கடுமையானதாக இருக்கும். மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவனது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? என்னில் விசுவாசம் கொண்டிருந்தும் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இந்த உலகத்தாலும் புறக்கணிக்கப் பட்டிருக்கவில்லையா? என் வார்த்தைக்குப் புறம்பே வாழ்பவர்கள், சோதனையின் துன்பத்திலிருந்து தப்பி ஓடுகிறார்கள், அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் அதன்போக்கில் இழுக்கப்பட்டுச் செல்வதில்லையா? அவர்கள் இங்கும் அங்கும் பறக்கடிக்கப்படும் இலையுதிர்கால இலைகளைப்போல், இளைப்பாற இடமின்றி, ஆறுதல் அளிக்கும் என் வார்த்தைகளை மிகக்குறைவாகவே பெற்றவர்களாய் உள்ளனர். என் சிட்சையும் புடமிடுதலும் அவர்களைப் பின்தொடரவில்லை என்றாலும், அவர்கள் இடம்விட்டு இடம் நகர்கிற பிச்சைக்காரர்கள்போல் பரலோக ராஜ்யத்திற்குப் புறம்பே வீதிகளில் அலைந்து திரிவதில்லையா? உலகம் உண்மையில் உனக்கு இளைப்பாறும் இடமாக உள்ளதா? என் சிட்சையைத் தவிர்ப்பதனால், உன்னால் உண்மையிலேயே, உலகத்திலிருந்து மனநிறைவின் மயக்கமான புன்னகையைப் பெற்றுக்கொள்ள முடியுமா? உன் இருதயத்தில் உள்ள மறைக்க முடியாத வெறுமையை மூட, விரைந்தோடி வரும் உனது சந்தோஷத்தை நீ உண்மையிலேயே பயன்படுத்த முடியுமா? உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீ முட்டாளாக்கலாம், ஆனால் உன்னால் என்னை முட்டாளாக்க ஒருக்காலும் முடியாது. உன் விசுவாசம் மிகவும் அற்பமானது என்பதால், நீ இந்தநாள் வரையிலும், வாழ்க்கை தருகிற மகிழ்ச்சி எதையும் கண்டறிய வல்லமையற்று இருக்கிறாய். நான் உன்னைக் கேட்டுக்கொள்வது: உன் முழு வாழ்வையும், மாம்சத்திற்காக இரண்டாந்தரமாக சுறுசுறுப்பாக செலவிடுவதைக் காட்டிலும், உன் வாழ்நாளில் பாதியை எனக்காக உண்மையுடன் செலவிட்டு, ஒரு மனிதன் அரிதாகவே சுமக்கக்கூடிய பாடுகளைச் சகித்திருத்தல் மேன்மையானது. இவ்வளவு அதிகமாய் உங்களைப் பாதுகாத்து எனது சிட்சையில் இருந்து விலகி ஓடுவதில் என்ன நோக்கம் இருக்கிறது? நித்திய வேதனையையும், நித்திய சிட்சையையும் மாத்திரமே அறுவடை செய்ய எனது கணநேரச் சிட்சிப்பிலிருந்து உன்னை ஒளித்துக்கொள்வதில் என்ன நோக்கம் இருக்கிறது? உண்மையில், நான் என் சித்தத்திற்கு ஏற்ப யாரையும் வளைக்கவில்லை. எனது எல்லா திட்டங்களுக்கும் யாராவது உண்மையிலேயே கீழ்ப்படிய விரும்பினால், நான் அவர்களை மோசமாக நடத்த மாட்டேன். ஆனால், யேகோவாவாகிய என்னை, யோபு விசுவாசித்தது போலவே எல்லா ஜனங்களும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விசுவாசம் தோமாவின் விசுவாசத்தை விட அதிகமாக இருந்தால், உங்கள் விசுவாசம் எனது பாராட்டைப் பெறும், உங்கள் பற்றுறுதியில் நீங்கள் என் ஆனந்தத்தைக் காண்பீர்கள், மற்றும் உங்கள் நாட்களில் நீங்கள் நிச்சயமாக என் மகிமையைக் காண்பீர்கள். இருப்பினும், உலகத்தை நம்புகிற மற்றும் பிசாசை நம்புகிற ஜனங்கள், சோதோம் நகரத்தின் ஜனங்களைப் போலவே, காற்றினால் அடிக்கப்பட்ட மணல் துகள்களைத் தங்கள் கண்களிலும், பிசாசிடமிருந்து பெற்ற காணிக்கைகளைத் தங்கள் வாய்களிலும் கொண்டவர்களாய்த் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தியுள்ளனர், அவர்களின் மரத்துப்போன சிந்தைகள் உலகைக் கைப்பற்றிய பொல்லாங்கனால் நெடுங்காலத்திற்கு முன்பே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் சிந்தனைகள் ஏறக்குறைய முற்றிலும், பழைய காலத்துப் பிசாசுக்கு அடிமைப்பட்டு விழுந்துள்ளன. எனவே, மனிதகுலத்தின் விசுவாசம் காற்றோடு போய்விட்டது, அவர்கள் என் கிரியையைக் கவனிக்கக்கூட இயலாதவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் செய்யக்கூடியது என்னவென்றால், எனது கிரியையைச் சரியான முறையில் நடத்துவதில் பலவீனமான முயற்சியை மேற்கொள்வது அல்லது தோராயமாகப் பகுப்பாய்வு செய்வதாகும், ஏனென்றால் அவர்கள் நெடுங்காலமாகவே சாத்தானின் விஷத்தினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர்.

நான் மனிதகுலத்தை ஜெயங்கொள்வேன், ஏனென்றால் ஜனங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும், நான் சிருஷ்டித்த ஏராளமான பொருட்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் ஜனங்கள் என்னைப் புறக்கணிக்கின்றனர்; நான் அவர்களின் இருதயங்களில் இல்லை, அவர்கள் என்னைத் தங்கள் வாழ்விலுள்ள ஒரு சுமையாகவே பார்க்கிறார்கள், உண்மையாகவே என்னைப் பார்க்கும்போது, அவர்கள் இன்னும் என்னைப் புறக்கணிக்கிறார்கள், என்னைத் தோல்வியடையச் செய்வதற்குச் சாத்தியமான எல்லா வழிகளையும் நினைத்து அவர்களின் மூளைகளைச் சேதப்படுத்திக் கொள்கிறார்கள். ஜனங்களைத் தீவிரமாக நடத்துவதற்கோ அல்லது அவர்களிடம் கண்டிப்பான கோரிக்கைகளை வைப்பதற்கோ அவர்கள் என்னை அனுமதிப்பதில்லை, அல்லது அவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது அவர்களின் அநீதியைச் சிட்சிக்கவோ அவர்கள் என்னை அனுமதிப்பதில்லை. இந்த ஆர்வத்தைக் கண்டறிவது வெகுதூரத்தில் உள்ளதால், இதை எரிச்சல் மூட்டுவதாகக் காண்கின்றனர். எனவே, எனக்குள் போஜன பானம் பண்ணி, மகிழ்ந்திருக்கிற, ஆனால் என்னை அறியாமல் இருக்கிற மனிதகுலத்தை எடுத்து அவர்களைத் தோற்கடிப்பதே எனது கிரியையாக இருக்கிறது. நான் மனிதகுலத்தை நிராயுதபாணியாக்குவேன், பின்னர், என் தூதர்களை அழைத்து, என் மகிமையைப் பெற்று, நான் என் வாசஸ்தலத்திற்குத் திரும்புவேன். ஏனென்றால், ஜனங்களின் செயல்கள் நீண்ட காலமாக என் இருதயத்தை நொறுக்கி, என் கிரியையைத் துண்டு துண்டாக்கியுள்ளன. நான் மகிழ்ச்சியுடன் விலகிச் செல்வதற்கு முன்பு பொல்லாங்கன் எடுத்துச் சென்ற மகிமையை மீட்டெடுக்கவும், மனிதகுலம் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை வாழ அனுமதிக்கவும் விரும்புகிறேன், அவர்கள் தொடர்ந்து “அமைதியிலும் மனநிறைவிலும் வாழ்ந்து உழைக்க வேண்டும்,” அவர்கள் தொடர்ந்து, “தங்கள் சொந்த நிலங்களில் வேளாண்மை செய்யவேண்டும்,” மற்றும் இனி நான் அவர்களின் வாழ்க்கையில் தலையிடமாட்டேன். ஆனால் இப்போது நான் என் மகிமையை பொல்லாங்கனின் கையிலிருந்து மீட்டு உரிமையாக்கிக்கொள்ளவும், உலகைப் படைக்கும் போது மனிதனுக்குள் நான் கொடுத்திருந்த மகிமையை முழுவதுமாக திரும்பப் பெறவும் விரும்புகிறேன். மீண்டும் அதைப் பூமியில் உள்ள மனித இனத்திற்கு நான் இனி ஒருபோதும் வழங்க மாட்டேன். ஏனென்றால், ஜனங்கள் என் மகிமையைக் காக்கத் தவறியது மட்டுமல்லாமல், அதைச் சாத்தானின் சாயலுக்கு மாற்றாகக் கொடுத்திருக்கிறார்கள். என் வருகையை ஜனங்கள் பொக்கிஷமாகக் கருதுவதில்லை, அல்லது அவர்கள் என் மகிமையின் நாளை உயர்த்துவதில்லை. என் சிட்சையைப் பெறுவதில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, என் மகிமையை என்னிடம் திருப்பித் தரவோ அல்லது பொல்லாங்கனின் விஷத்தைத் தூக்கி எறியவோ அவர்கள் தயாராக இல்லை. மனிதகுலம் தொடர்ந்து அதே பழைய வழியில் என்னை வஞ்சிக்கிறது, ஜனங்கள் இன்னும் பிரகாசமான புன்னகையையும் மகிழ்ச்சியான முகங்களையும் அதே பழைய வழியில் அணிந்துகொள்கிறார்கள். என் மகிமை அவர்களை விட்டு விலகியபின் மனிதகுலத்தின் மீது இறங்கும் இருளின் ஆழத்தை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். குறிப்பாக, என் நாள் மனிதகுலம் முழுவதற்கும் வரும்போது, நோவாவின் காலத்தில் இருந்த ஜனங்களைவிட இது அவர்களுக்கு இன்னும் கடினமாகிவிடும் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஏனென்றால் என் மகிமை இஸ்ரவேலை விட்டுவிலகியபோது, அது எவ்வளவு அந்தகாரமாயிற்று என்பது அவர்களுக்குத் தெரியாது, ஏனெனில் காரிருள் கொண்ட இரவைக் கடந்து செல்வது எவ்வளவு கடினமானது என்பதை அதிகாலையில் மனிதன் மறந்துவிடுகிறான். சூரியன் மீண்டும் மறைந்து இருள் மனிதனின் மீது இறங்கும்போது, அவன் மீண்டும் புலம்புவான், மற்றும் இருளில் தனது பற்களைக் கடித்துக் கொள்வான். என் மகிமை இஸ்ரவேலிலிருந்து விலகியபோது, இஸ்ரவேலர்கள் அந்த நாட்களின் துன்பங்களை சகித்துக்கொள்வது எவ்வளவு கடினமாயிருந்தது என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இப்போது நீங்கள் என் மகிமையைக் காணும் நேரமாக உள்ளது, இது நீங்கள் என் மகிமையின் நாளைப் பகிர்ந்து கொள்ளும் நேரமாகவும் உள்ளது. அசுத்தமான நிலத்தைவிட்டு என் மகிமை வெளியேறும்போது மனிதன் இருளின் மத்தியில் புலம்புவான். இப்போது நான் என் கிரியையைச் செய்யும் மகிமையின் நாளாக உள்ளது, மற்றும் இது பாடுகளில் இருந்து மனிதகுலத்தை விலக்கிக் கொள்ளும் நாளாகவும் உள்ளது, ஏனென்றால் நான் அவர்களுடன் வேதனையான மற்றும் உபத்திரவம் நிறைந்த காலங்களைப் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை. மனிதகுலத்தை முழுவதுமாக ஜெயங்கொள்ளவும், மனிதகுலத்தின் பொல்லாங்கானவர்களை முற்றிலுமாக தோற்கடிக்கவும் மட்டுமே நான் விரும்புகிறேன்.

முந்தைய: தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?

அடுத்த: விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக