ஆசீர்வாதங்களைக் குறித்த உங்கள் புரிதல் என்ன?

இந்த யுகத்தில் பிறந்த ஜனங்கள் சாத்தானாலும், அசுத்தமான பிசாசுகளினாலும் கெடுக்கப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கெடுதல் அவர்களுக்கு மிக உயர்ந்த இரட்சிப்பையும் கொண்டு வந்துள்ளது. அந்த இரட்சிப்பு யோபுவின் கால்நடைகள் உள்ள மலைகள் மற்றும் சமவெளிகளை விடவும், மற்றும் அவரின் ஆஸ்தியை விடவும் மிகப் பெரிதானது, மேலும் அது அவருடைய சோதனைகளைத் தொடர்ந்து அவரைக் கண்ட யேகோவாவினிடத்திலிருந்து யோபு பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை விடவும் மிகப் பெரிதானது. யோபு மரணத்தின் சோதனையை அனுபவித்த பின்னரே, யேகோவா பேசுவதையும், பெருங்காற்றில் யேகோவாவின் சத்தத்தையும் கேட்டார். ஆனாலும் அவர் யேகோவாவின் முகத்தைப் பார்த்ததில்லை மற்றும் அவருடைய மனநிலையை அவர் அறியவில்லை. மாம்ச இன்பங்களை தந்த வெறும் பொருட்செல்வமும், சுற்றியுள்ள எல்லா பட்டணங்களின் சௌந்தரியமான பிள்ளைகளும், அதோடு பரலோகத் தூதர்களின் பாதுகாப்புமே யோபு பெற்றுக்கொண்டதாகும். அவர் ஒருபோதும் யேகோவாவைப் பார்த்ததில்லை, மேலும் அவர் நீதிமான் என்று அழைக்கப்பட்டாலும் அவர் யேகோவாவின் மனநிலையை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. இன்றைய ஜனங்களின் உலக இன்பங்கள் தற்காலிகமானவை, அற்பமுமானவை என்று சொல்லலாம் என்றாலும் அல்லது வெளி உலகத்தின் சுற்றுச்சூழல் விரோதமாக இருக்கிறது என்றாலும், நான் ஆதியிலிருந்து ஒருபோதும் வெளிப்படுத்தாததும், எப்போதும் மறைபொருளாய் இருந்ததுமான என் மனநிலையையும், அதோடுகூட கடந்த யுகங்களின் பரம இரகசியங்களையும் நான் ஜனங்களுக்குக் காண்பிக்கிறேன். அந்த ஜனங்கள் எல்லாரிலும் தாழ்ந்தவர்களானாலும், என்னுடைய மிகப் பெரிதான இரட்சிப்பை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். மேலும், இந்தக் காரியங்களை நான் வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை; இப்படிப்பட்ட கிரியையை இதற்கு முன்பு நான் செய்ததே இல்லை. நீங்கள் யோபுவை விட மிகவும் தாழ்ந்தவர்களாய் இருப்பினும், நீங்கள் பெற்றுக்கொண்டதும், நீங்கள் பார்த்ததும் அவரைவிட மிக அதிகமானதாகும். நீங்கள் எல்லா வகையான பாடுகளுக்கும் ஆளாகி, எல்லா விதமான துன்புறுத்தலையும் அனுபவித்திருந்தாலும், அந்தப் பாடுகள் சிறிதளவும் யோபுவின் சோதனைகளைப் போன்றதல்ல; மாறாக அது, தங்கள் கலகத்தனத்தினாலும், தங்கள் எதிர்க்கும் தன்மையினாலும், என்னுடைய நீதியான மனநிலையினாலும் ஜனங்கள் பெற்றுக்கொண்ட நியாயத்தீர்ப்பும் தண்டனையும் ஆகும். அது நீதியான நியாயத்தீர்ப்பு, தண்டனை மற்றும் சாபமாகும். யோபுவோ, மறுபுறத்தில், இஸ்ரவேலர்களிடையே யேகோவாவின் பெரிதான அன்பையும் இரக்கத்தையும் பெற்ற நீதியுள்ள மனிதனாக இருந்தார். அவர் எந்தத் தீமையான செயல்களையும் செய்யவில்லை, அவர் யேகோவாவை எதிர்க்கவில்லை; மாறாக, அவர் யேகோவாவிடம் விசுவாசத்தோடு அர்ப்பணித்திருந்தார். தன் நீதியினிமித்தம், அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவர் யேகோவாவின் உண்மையான ஊழியனாயிருந்ததால் அக்கினிச் சோதனைகளுக்கு உள்ளானார். இக்காலத்து ஜனங்கள் தங்கள் அசுத்தத்தினாலும், அநீதியினாலும் என்னுடைய நியாயத்தீர்ப்புக்கும் சாபத்துக்கும் ஆளாகின்றனர். அவர்களின் பாடுகள், யோபு தன் கால்நடைகளையும், தன் ஆஸ்தியையும், தன் வேலைக்காரர்களையும், தன் பிள்ளைகளையும் மற்றும் தனக்குப் பிரியமாயிருந்த எல்லோரையும் இழந்தபோது அனுபவித்த ஒன்றைப்போல் இல்லாமல் இருப்பினும், அவர்கள் அனுபவிப்பது அக்கினியில் புடமிடுதலும் எரியும் உணர்ச்சியும் ஆகும். அந்தப் பாடுகளை யோபு அனுபவித்ததைவிட இன்னும் தீவிரமாக்குவது எதுவென்றால், இப்படிப்பட்ட சோதனைகள், ஜனங்கள் பலவீனமாக இருப்பதால் குறைக்கப்படாமலும் அகற்றப்படாமல்; மாறாக அவை நீண்ட காலம் நீடிப்பதாகவும், மக்களின் இறுதி நாள் வரை தொடர்வதாகவும் இருக்கிறது. இது தண்டனை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபம் ஆகும்; இது இரக்கமில்லா எரியும் உணர்ச்சியும், இன்னும் அதிகமாக, இது மனுக்குலம் நியாயமாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டிய “சுதந்தரமுமாகும்”. இதுவே ஜனங்களுக்குத் தகுதியானது, மேலும் இங்குதான் என் நீதியுள்ள மனநிலை வெளிப்படுகிறது. இது ஓர் அறியப்பட்ட உண்மை. ஆயினும், மக்கள் பெற்றுக்கொண்டவை இன்று அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை விட மிக அதிகமானது. நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் உங்களுடைய மூடத்தனத்தின் விளைவால் உண்டான வெறும் பின்னடைவே, ஆனால் நீங்கள் பெற்றுக்கொண்டதோ உங்கள் துன்பங்களை விட நூறு மடங்கு பெரிதானதாகும். பழைய ஏற்பாட்டிலுள்ள இஸ்ரவேலின் நியாயப்பிரமாணத்தின்படி, என்னை எதிர்ப்பவர்கள் எல்லாரும், என்னை வெளிப்படையாய் நியாயந்தீர்ப்பவர்கள் எல்லாரும் மற்றும் என்னுடைய வழியைப் பின்பற்றாத எல்லாரும், மேலும் பரிசுத்தக்குலைச்சலான பலிகளை எனக்குத் துணிந்து பலியிடுபவர்களும், தேவாலயத்தில் உள்ள அக்கினியினால் நிச்சயம் அழிக்கப்படுவார்கள் அல்லது தெரிந்துகொள்ளப்பட்ட சிலரால் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள், மேலும் அவர்களின் சொந்த ஜாதி மற்றும் அவர்களின் பிற நேரடி உறவினர்களின் சந்ததிகளும்கூட என் சாபத்தை அனுபவிப்பார்கள். வரவிருக்கும் வாழ்வில், அவர்கள் சுதந்திரமாக இல்லாமல் என் அடிமைகளின் அடிமைகளாக இருப்பார்கள். நான் அவர்களைத் தேசத்தை விட்டுப் புறஜாதிகளுக்குள்ளே துரத்திவிடுவேன், அவர்களால் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பமுடியாமல் போகும். தங்களின் செயல்கள் மற்றும் நடத்தையின் அடிப்படையில், இன்றைய ஜனங்களால் அனுபவிக்கப்படும் பாடுகள் இஸ்ரவேலர்கள் அனுபவித்த தண்டனையைவிடக் கடுமையானது அல்ல. நீங்கள் தற்போது அனுபவிப்பது பழிவாங்குதல் என்று சொல்வது நியாயமற்றது, ஏனென்றால் உண்மையாகவே நீங்கள் எல்லை மீறிவிட்டீர்கள். நீங்கள் இஸ்ரவேலில் இருந்திருந்தால், நீங்கள் நித்திய பாவிகளாகியிருப்பீர்கள், மேலும் வெகுகாலத்திற்கு முன்பே இஸ்ரவேலர்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருப்பீர்கள், மேலும் வானத்து அக்கினியினால் யேகோவாவின் ஆலயத்தில் எரிக்கப்பட்டிருப்பீர்கள். நீங்கள் இப்பொழுது பெற்றிருப்பது என்ன? நீங்கள் பெற்றுக்கொண்டதும் அனுபவித்ததும் என்ன? நான் என்னுடைய நீதியான மனநிலையை உங்களிடத்தில் வெளிப்படுத்தியுள்ளேன், ஆனால் மிக முக்கியமானது எதுவென்றால், மனுக்குலத்தை மீட்பதற்கான எனது பொறுமையை வெளிப்படுத்தியுள்ளேன். நான் உங்களில் செய்த கிரியை பொறுமையின் கிரியை என்று ஒருவர் சொல்லலாம்; ஆனால் இது எனது ஆளுகையின் பொருட்டு செய்யப்பட்டுள்ளது, மேலும், இது மனுக்குலத்தின் இன்பத்திற்காக செய்யப்பட்டுள்ளது.

யோபு யேகோவாவின் சோதனைகளுக்கு உள்ளானபோதும், அவர் யேகோவாவை ஆராதித்த ஒரே நீதியுள்ள மனிதர். அவர் அந்தச் சோதனைகளுக்கு உள்ளான போதும், யேகோவாவைப் பற்றி குறை சொல்லவில்லை, மேலும் அவருடனான தன் சந்திப்பைப் பெரிதாக மதித்தார். இன்றைய ஜனங்கள் யேகோவாவின் பிரசன்னத்தைப் போற்றுவதில்லை, அதோடுகூட அவர்கள் அவரின் பிரசன்னத்தை நிராகரித்து, வெறுத்து, குறைகூறி மற்றும் கேலி செய்கிறார்கள். நீங்கள் அதிகமானதைப் பெற்றுக்கொள்ளவில்லையா? உண்மையாகவே உங்கள் பாடுகள் மிகப் பெரிதானவையாக இருக்கின்றனவா? நீங்கள் மரியாளை விடவும் யாக்கோபை விடவும் அதிக பாக்கியவான்கள் இல்லையா? உங்கள் போராடும் திறன் உண்மையில் மிகவும் அற்பமானதா? உங்களிடத்திலிருந்து எனக்கு வேண்டியதும் மற்றும் உங்களிடத்தில் நான் கேட்டதும் மிகப் பெரிதானதா மற்றும் மிக அதிகமானதா? என்னை எதிர்த்த அந்த இஸ்ரவேலர்கள் மீது மாத்திரமே என்னுடைய கோபம் கட்டவிழ்க்கப்பட்டது; உங்கள் மீது நேரடியாக அல்ல; நீங்கள் பெற்றுக்கொண்டது வெறுமனே என்னுடைய இரக்கமற்ற நியாயத்தீர்ப்பும், வெளிப்பாடுகளும் மற்றும் அவைகளோடு தணியாத அக்கினிப் புடமிடுதலும் ஆகும். இதையும் மீறி, ஜனங்கள் தொடர்ந்து என்னை எதிர்த்து நிற்கிறார்கள், மறுக்கிறார்கள், மேலும் சிறிதளவு கீழ்ப்படிதல் கூட இல்லாமல் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். என்னிடமிருந்து தங்களைத் தூர விலக்கி என்னை மறுதலிக்கிற சிலரும் இருக்கிறார்கள்; இத்தகைய ஜனங்கள் மோசேயை எதிர்த்த கோராகு மற்றும் தாத்தான் கூட்டத்தாரை விட எவ்விதத்திலும் வேறுபட்டவர்கள் அல்லர். ஜனங்களுடைய இருதயங்கள் மிகவும் கடினமானவையாகவும் மற்றும் அவர்களுடைய சுபாவங்கள் மிகவும் பிடிவாதமானவையாகவும் இருக்கின்றன. அவர்கள் தங்களின் பழைய வழிகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர்கள் பட்டப்பகலில் வேசிகளைப் போல நிர்வாணிகளாய்ப் படுத்திருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன், ஜனங்களுடைய சுபாவங்களை வெட்டவெளிச்சத்திற்கு அம்பலப்படுத்தும் அளவுக்கு என் வார்த்தைகள் கேட்கிறதற்கே மிகவும் வருத்தம் உண்டாக்கக்கூடியதாய்க் கடுமையாக இருக்கின்றன—ஆனாலும், அவர்கள் வெறுமனே தங்கள் தலைகளை அசைத்து, சில கண்ணீர்த்துளிகளைச் சிந்தி, சற்றே வருத்தமாக உணர தங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இது முடிந்தவுடன், அவர்கள் மலைகளில் உள்ள கொடிய மிருகங்களின் ராஜாவைப் போல் கொடிதானவர்களாய், சிறிதளவாகிலும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலை உள்ள ஜனங்கள் எவ்வாறு தாங்கள் யோபுவை விட நூறு மடங்கு அதிக பாக்கியவான்களாய் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்? தாங்கள் அனுபவிக்கிறது கடந்த காலங்கள் முழுவதும் பார்க்க அரிதானதும், ஒருவரும் இதற்கு முன்பாக அனுபவித்திராததுமான ஆசீர்வாதங்கள் என்று அவர்கள் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? எவ்வாறு இத்தகைய ஆசீர்வாதங்களை, தண்டனையுடன் கூடிய ஆசீர்வாதங்களை ஜனங்களின் மனசாட்சிகள் உணர்ந்து கொள்ளும்? வெளிப்படையாய்ப் பேசினால், நீங்கள் என்னுடைய கிரியைக்கு மாதிரிகளாய், என்னுடைய முழு மனநிலைக்கும் என்னுடைய எல்லா செயல்களுக்கும் சாட்சிகளாய் இருப்பதும், அதனால் சாத்தானுடைய எல்லா உபத்திரவங்களினின்றும் நீங்கள் விடுவிக்கப்படுவதும் அல்லாமல் வேறே என்னத்தை உங்களிடத்தில் கேட்கிறேன். ஆனாலும் ஜனங்கள் என் கிரியையை அருவருக்கிறார்கள், வேண்டுமென்றே அதை விரோதிக்கிறார்கள். இஸ்ரவேலின் நியாயப்பிரமாணங்களை மீண்டும் கொண்டுவருவதற்கும், இஸ்ரவேலின் மீது நான் கொண்டு வந்த கோபாக்கினையை அவர்கள்மீது கொண்டுவருவதற்கும் அத்தகையவர்கள் என்னை எப்படித் தூண்டாமல் இருப்பார்கள்? உங்களில் அநேகர் என்னிடத்தில் “கீழ்ப்படிபவர்களாகவும் தாழ்மையானவர்களாவும்” இருந்தாலும், அவர்களைக் காட்டிலும் கோராகின் கூட்டத்தாரைப் போலவே இருப்பவர்கள் இன்னும் பலர் உள்ளனர். நான் என்னுடைய முழுமையான மகிமையை அடைந்தவுடன் வானத்திலிருந்து அக்கினியைக் கொண்டு அவர்களைச் சாம்பலாக எரித்துவிடுவேன். இனிமேல் என் வார்த்தைகளைக் கொண்டு ஜனங்களைத் தண்டிக்க மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; மாறாக நான் என் கிரியையை இஸ்ரவேலில் செய்வதற்கு முன்பு, என்னை எதிர்ப்பவர்களும், நான் நீண்ட காலத்திற்கு முன்பு புறம்பாக்கினவர்களுமான “கோராகின் கூட்டத்தை” முழுமையாக எரித்துவிடுவேன். இனிமேல் என்னைக் குறித்து மகிழ்வதற்கு மனுக்குலத்திற்கு வாய்ப்பு இருப்பதில்லை; மாறாக அவர்கள் எல்லாரும் பார்ப்பது என்னுடைய கோபமும், வானத்திலிருந்து வரும் அக்கினியுமாகவே இருக்கும். எல்லா வகை மக்களின் பல்வேறு முடிவுகளையும் நான் வெளிப்படுத்தி, அவர்கள் எல்லாரையும் பிரிவுகளாக பிரித்துவிடுவேன். அவர்களின் ஒவ்வொரு கலகத்தனமான செயல்களையும் நான் கவனித்து, அதன் பின்பு என் கிரியையை முடிப்பேன். அதனால் ஜனங்களுடைய முடிவுகள் பூமியில் இருக்கும்போது என்னுடைய தீர்ப்பின்படியும், அதோடுகூட என்னைக்குறித்த அவர்களுடைய மனப்பான்மையின்படியும் தீர்மானிக்கப்படும். அந்த நேரம் வரும்போது, எந்த ஒன்றினாலும் அவர்களுடைய முடிவுகளை மாற்ற முடியாது. ஜனங்கள் தங்களுடைய சொந்த முடிவுகளை வெளிப்படுத்தட்டும்! பின்பு ஜனங்களுடைய முடிவுகளை நான் பரலோகப் பிதாவினிடத்தில் ஒப்படைப்பேன்.

முந்தைய: உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?

அடுத்த: தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக