சர்வவல்லவரின் பெருமூச்சு
வெளிச்சமில்லாத உலகத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதனால், உன் இருதயத்தில் ஒரு மிகப்பெரிய இரகசியம் இருக்கின்றதை உன்னால் அறிய முடியவில்லை. பொல்லாங்கனால் உன் இருதயமும் ஆவியும் பிடுங்கப்பட்டுள்ளன. உன் கண்கள் இருளடைந்திருப்பதால், வானத்தின் சூரியனையும், இரவில் மின்னும் நட்சத்திரத்தையும் உன்னால் காணமுடியவில்லை. உன் காதுகள் வஞ்சகம் நிறைந்த வார்த்தைகளினால் அடைக்கப்பட்டிருப்பதினால், யேகோவாவின் இடிமுழக்கம்போன்ற குரலையும், அவருடைய சிங்காசனத்தில் இருந்து பாயும் தண்ணீர்களின் சத்தத்தையும் உன்னால் கேட்க முடியவில்லை. சர்வவல்லவர் உனக்கு அளித்த எல்லாவற்றையும், உனக்கு உரிமையுள்ளதாய் இருக்கும் எல்லாவற்றையும் நீ இழந்துவிட்டாய். முடிவில்லாத பெருந்துன்பக் கடலுக்குள் நீ பிரவேசித்துவிட்டாய், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ளும் வலிமை இல்லாமல், தப்பிக்கும் வழி தெரியாமல், இப்போது இங்கும் அங்கும் அலைந்து துடித்துக்கொண்டிருக்கின்றாய். அந்தக் கணம் முதல் நீ பொல்லாங்கனால் வாதிக்கப்பட விதிக்கப்பட்டாய், சர்வவல்லவரின் ஆசீர்வாதங்களில் இருந்து மிகத்தொலைவான இடத்திற்கு, சர்வவல்லவர் வழங்குபவை உன்னை வந்தடைய முடியாத தூரத்திற்கு, திரும்பிவரமுடியாத சாலையில் நீ போய்விட்டாய். இப்போது இலட்சோபலட்சம் அழைப்புகளினாலும் உன் இருதயத்தையும், ஆவியையும் எழுப்பமுடியவில்லை. திசையும், வழிகாட்டியும் இல்லாத எல்லையில்லாத பகுதிக்கு உன்னை நயங்காட்டி அழைத்து வந்த பொல்லாங்கனின் கைகளில் நீ அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றாய். அன்றிலிருந்து நீ உன் களங்கமின்மையையும், தூய்மையையும் இழந்தாய், சர்வவல்லவரின் கரிசனையையும் விட்டு விலக ஆரம்பித்தாய். உன் இருதயத்தில் இருக்கும் பொல்லாங்கன் தான் இப்போது உன்னை எல்லாக் காரியங்களிலும் வழிநடத்துகின்றான். உன் வாழ்க்கையாகவே அவன் மாறிவிட்டான். இப்போது நீ அவனுக்குப் பயப்படுவதில்லை, அவனைத் தவிர்ப்பதில்லை, அவனை சந்தேகப்படுவதுமில்லை, மாறாக, நீ அவனை இப்போது உன் இருதயத்தில் தேவனாக மதிக்கின்றாய். நீ அவனை ஆராதிக்கவும் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்துவிட்டாய், உடலும், நிழலும் போல நீங்கள் வாழ்விலும், சாவிலும் பிரிக்கமுடியாதவர்களைப் போல மாறிவிட்டீர்கள். நீ எங்கிருந்து வந்தாய் என்றோ, ஏன் பிறந்தாய் என்றோ, ஏன் மரிப்பாய் என்றோ அறியாமல் இருக்கின்றாய். நீ சர்வவல்லவரை அந்நியனைப்போலப் பார்க்கின்றாய். அவருடைய துவக்கம் எதுவென்றோ, அவர் உனக்குச் செய்தவைகள் என்னவென்றோ கூட உனக்குத் தெரியாது. அவரிடமிருந்து வருகின்ற எல்லாவற்றையும் நீ வெறுக்கின்றாய். நீ அதை மதிக்கவுமில்லை, அதன் மதிப்பை அறியவுமில்லை. சர்வவல்லவர் வழங்கியவற்றை நீ பெற்ற நாள் முதல் பொல்லாங்கனோடு நடக்க ஆரம்பித்தாய். நீ பொல்லாங்கனோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புயலையும், காற்றையும் சகித்துவிட்டாய், ஆனாலும் அவனோடு சேர்ந்து உன் வாழ்க்கையின் ஆதாரமான தேவனை எதிர்க்கின்றாய். மனம்திரும்புதலைக் குறித்தோ, உன் அழிவின் விளிம்பிற்கு நீ வந்துவிட்டதைக் குறித்தோ நீ இன்னும் அறியவில்லை. பொல்லாங்கன் உன்னை நயமாக இழுத்துக்கொண்டதையோ, உன்னை வாதித்ததையோ நீ அறியவில்லை, நீ உன் துவக்கங்களை மறந்துபோய்விட்டாய். இன்றுவரை உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் உன்னை வாதித்துள்ளான். உன் இருதயமும், ஆவியும் உணர்விழந்து, அழிந்துவிட்டன. இப்போதெல்லாம், நீ மனித உலகின் பாடுகளைக் குறித்து குறைகூறுவதை நிறுத்திவிட்டாய். இந்த உலகம் அநீதி நிறைந்தது என்று நீ இனி ஒருபோதும் நம்புவதில்லை. சர்வவல்லவர் என்று ஒருவர் இருக்கின்றாரா என்று கூட நீ கவலைப்படுவதில்லை. அதன் காரணம், நீ வெகுகாலத்திற்கு முன்பே பொல்லாங்கனை உன்னுடைய மெய்யானத் தகப்பனாக ஏற்றுக் கொண்டாய், இப்போது அவனில்லாமல் உன்னால் இருக்க முடியவில்லை. இதுதான் உன்னுடைய இருதயத்தில் உள்ள இரகசியம்.
பொழுது விடியும்போது, கிழக்கில் ஒரு விடிவெள்ளி மின்னுகிறது. முன் இருந்திராத இந்த நட்சத்திரம், மினுமினுக்கும் அமைதியான வானங்களை வெளிச்சமடையச் செய்து மனிதர்களின் இருதயங்களில் அணைக்கப்பட்ட வெளிச்சத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்கிறது. உன்மேலும் மற்றவர்கள்மேலும் ஒன்றுபோல வீசும் இந்த வெளிச்சத்தினால் இப்போது மனுக்குலம் தனிமையில் இருக்கவில்லை. ஆனாலும், இருண்ட இரவில் இப்போது நீ மட்டுமே அயர்ந்து உறங்குகிறாய். நீ சத்தத்தையும் கேட்கவில்லை, வெளிச்சத்தையும் காணவில்லை. உன் தகப்பன் உன்னிடம், “என் பிள்ளையே, இன்னும் நேரமாகவில்லை, இப்போது எழுந்திருக்கவேண்டாம். குளிராக இருப்பதினால் வெளியே போகாதே. உன் கண்களைப் பட்டயமும் ஈட்டியும் குத்திவிடும்,” என்று சொல்வதினால் நீ புதிய வானமும், பூமியும், புதிய காலமும் துவங்கியதை அறியாமல் இருக்கின்றாய். உன் தகப்பன் உன்னை மிகவும் நேசிப்பதினாலும், அவன் உன்னைவிட மூத்தவன் என்பதினாலும், அவன் சொல்வதுதான் சரி என்று நீ விசுவாசிப்பதினாலும், உன் தகப்பனுடைய கடிந்துகொள்ளுதல்களை மட்டுமே நீ நம்புகிறாய். இந்த உலகத்தில் வெளிச்சம் உண்டு என்னும் கூற்றை அப்படிப்பட்ட எச்சரிக்கைகளும், அன்பும் உன்னை நம்ப விடாமல் செய்கின்றன. இந்த உலகத்தில் சத்தியம் இருக்கின்றதா என்று கவனிக்கக்கூட உன்னை அவை விடுவதில்லை. சர்வவல்லவர் உன்னை விடுவிப்பார் என்று நம்பவும் உனக்கு இப்போது தைரியமில்லை. நீ இப்போதுள்ள நிலைமையிலேயே திருப்தியடைந்திருப்பதினால், முன்னுரைக்கப்பட்டது போல வெளிச்சத்தின் வருகையையோ, சர்வவல்லவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதில்லை. உன்னைப் பொறுத்தவரை, அழகானவைகளை எல்லாம் புதுப்பிக்க முடியாது, அவை இருக்க முடியாது. உன் கண்களில், மனுக்குலத்தின் நாளையதினம், மனுக்குலத்தின் எதிர்காலம் மறைந்து ஒழிந்துபோகிறது. தூரப்பிரயாணத்தின் திசையையும், உன் பயணத் தோழனையும் இழந்துவிடுவாய் என்று நீ பயப்படுவதால், உன் தகப்பனுடைய வஸ்திரங்களை முழு பெலத்தோடு இறுகப் பிடித்துக்கொண்டு அவனுடைய கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாய். மனிதர்களின் பரந்து விரிந்த, தெளிவற்ற இந்த உலகம் உங்களில் அநேகரை உலகத்தின் பல்வேறு வேடங்களை அணிந்துகொள்ள தைரியம் உள்ளவர்களாக மாற்றியுள்ளது. மரணத்தைக் குறித்து பயமில்லாத பல “வீரர்களை” அது உருவாக்கியுள்ளது. அதைவிடவும் மேலாக, தாங்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணராத விறைத்தும், மரத்தும் போன ஏராளமான மனிதர்களையும் அது உருவாக்கியுள்ளது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மனுக்குலத்தின் ஒவ்வொரு மனிதனையும் சர்வவல்லவரின் கண்கள் கண்காணிக்கின்றன. துயரப்படுகிறவர்களின் கூக்குரலை அவர் கேட்கிறார், பாதிக்கப்பட்டவர்களின் வெட்கமின்மையை அவர் காண்கிறார், இரட்சிப்பென்னும் கிருபையை இழந்துபோன மனுக்குலத்தின் திகிலையும், ஆற்றாமையையும் அவர் உணர்கிறார். மனிதகுலமோ அவருடைய ஆதரவைத் தள்ளிவிட்டு, தன்னுடைய பாதையிலே நடக்கிறது, அவருடைய கண்களின் பார்வைத் தன்மேல் விழுவதைத் தவிர்க்கிறது. சத்துருவின் துணையோடு ஆழ்கடலின் கசப்பைக் கடைசி சொட்டுவரை ருசிபார்க்கவும் விரும்புகிறது. சர்வவல்லவருடைய பெருமூச்சை இப்போது மனிதகுலம் கேட்பதில்லை. சர்வவல்லவருடைய கரங்களும் இந்தப் பரிதாபமான மனுக்குலத்தைத் தழுவ விரும்பவில்லை. திரும்பத்திரும்ப அவர் மனுக்குலத்தைத் தம்பக்கம் இழுக்கின்றார், திரும்பவும் விட்டுவிடுகின்றார். இப்படியே, அவருடைய கிரியை ஒரு சுழற்சியாக நடக்கின்றது. அந்தத் தருணம் முதல், அவர் சோர்ந்து களைப்படைய ஆரம்பிக்கிறார். அப்போது அவர் தம்முடைய கரத்தின் கிரியையையும், மனிதர்களிடையே உலாவுவதையும் நிறுத்துகிறார்…. மனிதகுலம் இந்த மாற்றங்களையும், சர்வவல்லவருடைய போக்கையும், வருகையையும், அவருடைய துக்கத்தையும் சலிப்பையும் உணராமல் இருக்கின்றது.
இந்த உலகத்திலுள்ள அனைத்துமே சர்வவல்லவருடைய எண்ணங்களினாலும், அவருடைய கண்களுக்குக் கீழும் சடுதியில் மாறுகின்றன. மனிதகுலம் கேட்டிராத காரியங்கள் திடீரென்று வருகின்றன, தொன்றுதொட்டு மனுக்குலம் வைத்திருந்த காரியங்கள் அவர்களை அறியாமலேயே அவர்கள் கைவசமிருந்து நழுவிப்போகவும் செய்கின்றன. சர்வவல்லவருடைய உறைவிடத்தை யாருமே கண்டுபிடிக்க முடியாது. அதேபோல சர்வவல்லவருடைய உயர்வையும் அவருடைய ஜீவ ஆற்றலின் மேன்மையையும் காண முடியாது. மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாதவைகளை அவர் புரிநந்துகொள்கிறார் என்பதிலே அவர் உயர்ந்தவராய் இருக்கின்றார். மனிதகுலத்தினால் கைவிடப்பட்டவராய் அவர் இருந்தும் மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார் என்பதிலே அவர் பெரியவராய் இருக்கின்றார். அவருக்கு ஜீவன், மரணம் என்பவைகளின் பொருள் தெரியும். அதைவிட மேலாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலம் ஜீவிப்பதற்கான சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். மனித வாழ்க்கையின் அஸ்திபாரம் அவரே, அதுமட்டுமல்ல மனுக்குலத்தை மறுபடியும் உயிர்த்தெழச் செய்யும் இரட்சகரும் அவரே. தம்முடைய கிரியைக்காகவும், தம்முடைய திட்டத்திற்காகவும் அவர் களிப்பான இருதயங்களைத் துயரத்தினால் பாரப்படுத்தவும், துயரப்பட்டிருக்கும் இருதயங்களை மகிழ்ச்சியினால் உயர்த்தவும் செய்கின்றார்.
சர்வவல்லவர் வழங்கிய ஜீவனைவிட்டு விலகிய மனுக்குலம் ஜீவனின் நோக்கத்தைக் குறித்து அறியாமல், மரணத்தைக்குறித்து அஞ்சுகிறது. அவர்கள் உதவியோ, ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றார்கள். ஆனாலும் தங்கள் கண்களை மூடத் தயங்குகிறார்கள். மேலும் தங்கள் சொந்த ஆத்துமாக்களைக் குறித்து உணர்வில்லாதவர்களாய், நடைபிணங்களாய், இந்த உலகத்தில் இழிவான வாழ்க்கையை வாழ, தங்களையே வருத்திக்கொள்கின்றனர். நோக்கமில்லாமல் வாழ்கின்ற மற்றவர்களைப் போலவே நீயும், நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றாய். ஆதிமுதல் இருக்கும் பரிசுத்தர் மட்டுமே தங்கள் துன்பங்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும், அவருடைய வருகைக்காக அதிக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும் ஜனங்களை இரட்சிக்க முடியும். உணர்வில்லாமல் இருப்பவர்களிடம் அப்படிப்பட்ட நம்பிக்கை இதுவரை காணப்படவில்லை. ஆனாலும் ஜனங்கள் அதற்காக அவ்வளவாய் ஏங்குகின்றனர். பெருந்துன்பத்திற்குள்ளான இந்த ஜனங்களின்மேல் சர்வவல்லவர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார். அதே நேரத்தில், வெகுகாலமாய் மனிதகுலத்திடமிருந்து பதில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்ததினால், உணர்வில்லாமல் இருக்கும் இந்த ஜனங்களின்மேல் அவர் சலிப்படைந்திருக்கின்றார். நீ இனிமேலும் பசியோடும், தாகத்தோடும் இருக்காதபடி, உன்னை உணர்வடையச்செய்ய, உனக்குத் தண்ணீரையும், ஆகாரத்தையும் கொண்டுவர, உன் இருதயத்தையும், உன் ஆவியையும் தேட அவர் விரும்புகின்றார். நீ தளர்வடைந்திருக்கும்போது, இந்த உலகத்தின் நம்பிக்கையின்மையை நீ உணர ஆரம்பிக்கும்போது, நீ நம்பிக்கையை இழக்கவோ அழவோ வேண்டாம். கண்காணிப்பாளரான சர்வவல்லமையுள்ள தேவன் நீ வரும்போது உன்னை அணைத்துக்கொள்வார். அவர் உன் பக்கத்திலேயே இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், நீ அவரிடம் திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார். உன் நினைவு திரும்பும் நாளுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நீ அவரிடமிருந்து உருவானவன் என்று நீ உணர்ந்திட, அறியாத நேரத்தில் நீ திசை தவறிப் போனாய் என்றும், அறியாத நேரத்தில் நீ உன் உணர்வை இழந்தாய் என்றும், அறியாத நேரத்தில் உன் தகப்பனைக் கண்டடைந்தாய் என்றும் நீ அறிந்திட, சர்வவல்லவர் உனக்காக, நீ அவரிடம் திரும்பும் நாளுக்காக வெகுகாலமாய்க் காத்துக்கொண்டிருக்கின்றார். உருக்கமான ஏக்கத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார், உன்னுடைய பதிலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய கண்காணிப்பும் காத்திருப்பும் விலைமதிக்க முடியாதது. மனிதனின் இருதயத்திற்காகவும் ஆவிக்காகவுமே அவை இருக்கின்றன. ஒருவேளை அவருடைய கண்காணிப்பும் காத்திருப்பும் முடிவில்லாமல் இருக்கலாம், ஒருவேளை அவை ஒரு முடிவில் இருக்கலாம். ஆனால், உன் இருதயமும், ஆவியும் இப்பொழுது எங்குள்ளன என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள்ளவேண்டும்.
மே 28, 2003