மாம்சமாகியதன் மறைபொருள் (3)
தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது, அவர் எதையும் கட்டியெழுப்புவதற்கோ அல்லது இயக்கங்களை உருவாக்குவதற்கோ இங்கு வருவதில்லை, மாறாக அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே வருகிறார். ஒவ்வொரு முறையும் கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுவதற்கும், புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். ராஜ்யத்தின் பயிற்சியைப் போலவே இப்போது ராஜ்யத்தின் யுகமும் வந்துள்ளது. கிரியையின் இந்தக் கட்டம் மனுஷனின் கிரியை அல்ல, இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனுஷனை கிரியை செய்ய வைக்கும் கட்டமும் அல்ல, ஆனால் தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதற்கானக் கட்டம் ஆகும். அவர் செய்வது மனுஷனின் கிரியை அல்ல, பூமியை விட்டுப் புறப்படும் முன் மனுஷனுள் செய்யும் கிரியையில் ஒரு குறிப்பிட்ட முடிவை எட்டுவதற்காகவும் அல்ல; அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடிப்பதும் மட்டுமே ஆகும், அதாவது பூமியில் அவர் செய்யும் கிரியைகளுக்குச் சரியான ஏற்பாடுகளைச் செய்வதும், அதன் மூலம் மகிமை அடைவதுமே ஆகும். மாம்சமாகிய தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை போன்றது அல்ல. தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வரும்போது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே அவர் அக்கறை காட்டுகிறார். அவருடைய ஊழியத்துடன் தொடர்பில்லாத மற்ற எந்த விஷயங்களிலும், கண்மூடித்தனமாகக் கூட எந்தப் பங்கையும் எடுப்பதில்லை. அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டும் அவர் செய்கிறார், மேலும் மனுஷன் செய்ய வேண்டிய கிரியையைப் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. அவர் செய்யும் கிரியை, அவர் இருக்கும் யுகம் மற்றும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியம் ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது, மற்ற எல்லா விஷயங்களும் அவருடைய ஆதிக்க எல்லைக்கு வெளியே இருப்பதைப் போல்தான் அவர் இருக்கிறார். மனுஷரில் ஒருவராக ஜீவித்திருப்பதைப் பற்றிய அடிப்படை அறிவை அவர் கொண்டிருப்பதில்லை, மேலும் சமூகத் திறன்களையும் கற்றுக்கொள்வதில்லை, மனுஷன் புரிந்துகொள்ளும் வேறு எதையுமே அவர் கொண்டிருப்பதில்லை. மனுஷன் வைத்திருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை, அவரது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே செய்கிறார். எனவே, மனுஷன் பார்வையில், மாம்சமாகிய தேவன் அதிக அளவில் குறைவுபட்டவராக இருக்கிறார், அதனால் மனுஷன் வைத்திருக்க வேண்டிய பல விஷயங்களை அவர் கவனிப்பது கூட இல்லை, அத்தகைய விஷயங்களைப் பற்றி அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை. ஜீவிதத்தைப் பற்றியப் பொதுவான அறிவு, அத்துடன் தனிப்பட்ட நடத்தை மற்றும் மற்றவர்களுடனான தொடர்புகளை நிர்வகிக்கும் கொள்கைகள் போன்றவை அவருடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மாம்சமாகிய தேவனிடமிருந்து சிறிதளவு அசாதாரணத் தன்மையைக் கூட உன்னால் உணர முடியாது. அதாவது, அவருடைய மனுஷத்தன்மையானது, அவரது ஜீவிதத்தை ஒரு சாதாரண மனுஷனாகவும், அவரது மூளையை இயல்பான பகுத்தறிவு கொண்டதாகவும் மட்டுமே பராமரிக்கிறது. அது அவருக்குச் சரியானது எது தவறானது எது என்பதைக் கண்டறியும் திறனை அளிக்கிறது. இருப்பினும், மனுஷன் (சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள்) மட்டுமே வைத்திருக்க வேண்டிய வேறு விஷயங்கள் எதுவும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற மட்டுமே மாம்சமாகிறார். அவரது கிரியை எந்த ஒரு தனிநபரிடத்திலோ அல்லது இடத்திலோ அல்லாமல் முழு பிரபஞ்சத்திலும் செய்யப்படுகிறது. இதுவே அவருடைய கிரியையின் திசையும் அவர் செயல்படும் கொள்கையும் ஆகும். இதை யாராலும் மாற்ற முடியாது, மேலும் மனுஷனுக்கு அதில் ஈடுபட எந்த வழியும் இல்லை. ஒவ்வொரு முறை தேவன் மாம்சமாகும்போதும், அந்த யுகத்தின் கிரியையை அவர் தன்னுடன் கொண்டு வருகிறார், மேலும் அவரைப் பற்றி சிறப்பாகப் புரிந்துகொள்ளும் மற்றும் உள்ளார்ந்த அறிவைப் பெறும் பொருட்டு இருபது, முப்பது, நாற்பது, அல்லது எழுபது அல்லது எண்பது ஆண்டுகள் கூட மனுஷனுடன் சேர்ந்து ஜீவிப்பதற்கான எண்ணம் அவருக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை! அவ்வாறு செய்வது எந்த வகையிலும் தேவனின் உள்ளார்ந்த மனநிலையைப் பற்றிய மனுஷனின் அறிவை ஆழப்படுத்தாது; அதற்குப் பதிலாக, அது அவனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே செய்யும் மற்றும் அவனது கருத்துகளையும் எண்ணங்களையும் பழமையானதாக்கிவிடும். ஆகவே, மாம்சமான தேவனின் கிரியை என்ன என்பதை நீங்கள் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் உங்களிடம் பேசிய வார்த்தைகளை நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ளத் தவறியிருக்க முடியாது: “நான் சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை அனுபவிப்பதற்காக வரவில்லையா?” “தேவன் பூமிக்கு ஒரு சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்க வருவதில்லையா?” என்ற வார்த்தைகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? மாம்சமாக மாறுவதில் இருக்கும் தேவனின் நோக்கம் உங்களுக்கு புரியவில்லை, மேலும், “சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷனின் ஜீவிதத்தை அனுபவிக்கும் நோக்கத்துடன் தேவன் எவ்வாறு பூமிக்கு வர முடியும்?” என்பதன் அர்த்தமும் உங்களுக்குத் தெரியவில்லை. தேவன் தமது கிரியையை நிறைவு செய்ய மட்டுமே பூமிக்கு வருகிறார், எனவே பூமியில் அவர் செய்யும் கிரியை குறுகிய காலத்திற்கானது. அவர் பூமிக்கு வருவது தேவ ஆவியானவர் தம்முடைய சரீர உடலை திருச்சபையை வழிநடத்தும் ஓர் உயர்ந்த மனுஷனாக உருவாக்க அல்ல. தேவன் பூமிக்கு வரும்போது, அதுவே மாம்சமாகும் வார்த்தை என்பதாகும்; இருப்பினும், மனுஷன் அவருடைய கிரியையைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அவரைப் பற்றிய விஷயங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறான். ஆனால் தேவன்தான், மாம்சமாகிய வார்த்தை என்பதையும், அவர் இப்போதைக்கு தேவனின் பங்கை ஏற்றுக்கொள்வதற்காக தேவ ஆவியானவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாம்ச சரீரம் அல்ல என்பதையும் நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தேவன் என்பவர் பயிரிட்டதனால் கிடைத்த விளைபொருள் அல்ல, ஆனால் அவர்தான் மாம்சமாகிய வார்த்தை, இன்று அவர் உங்களிடையே தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்கிறார். தேவன் மாம்சமாகியது உண்மை என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள், ஒப்புக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அதை புரிந்துகொண்டது போல் செயல்படுகிறீர்கள். மாம்சமாகிய தேவனின் கிரியை முதல் அவருடைய மாம்சத்தின் முக்கியத்துவம் மற்றும் சாராம்சம் வரை என உங்களால் இவற்றை மிகச் சிறிய அளவிற்குக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை, மேலும் ஞாபகசக்தியிலிருந்து வார்த்தைகளை மென்மையாக ஒப்பிப்பவர்களை மட்டுமே பின்பற்றுகிறீர்கள். நீங்கள் கற்பனை செய்வது போலத்தான் மாம்சமாகிய தேவன் இருப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
தேவன் யுகத்தை வழிநடத்துவதற்கும், புதிய கிரியையைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். இது மனுஷனின் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இரண்டையும் ஒருசேரக் குறிப்பிட முடியாது. கிரியை செய்ய மனுஷனைப் பயன்படுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவனைப் பண்படுத்தி, பரிபூரணப்படுத்த வேண்டும், மேலும் அதற்குத் தேவைப்படும் மனுஷத்தன்மை குறிப்பாக உயர்ந்ததாக இருக்க வேண்டும். சாதாரண மனுஷத்தன்மையின் உணர்வை மனுஷன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடனான அவனது நடத்தையை நிர்வகிக்கும் பல கொள்கைகளையும் விதிகளையும் அவன் மேலும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும், மனுஷனின் ஞானம் மற்றும் நெறிமுறை அறிவு பற்றி மேலும் கற்பதிலும் அவன் ஈடுபட வேண்டும். இதுதான் மனுஷனுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், மாம்சமாகிய தேவனுக்கு இது அவ்வாறு இல்லை, ஏனென்றால் அவருடைய கிரியை மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அது மனுஷனின் கிரியையும் இல்லை; மாறாக, அவர் இருப்பது ஒரு நேரடி வெளிப்பாடு மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையை நேரடியாகச் செயல்படுத்துதல் மட்டுமே ஆகும். (இயற்கையாகவே, அவருடைய கிரியை தற்செயலாகவோ அல்லது சீரற்ற முறையிலோ இல்லாமல், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டிய நேரம் வரும்போது இது தொடங்கப்படுகிறது.) அவர் மனுஷனின் ஜீவிதத்திலோ அல்லது மனுஷனின் கிரியையிலோ பங்கேற்பதில்லை அதாவது, அவருடைய மனுஷத்தன்மை இவற்றில் எதையுமே கொண்டிருப்பதில்லை (இருப்பினும் இது அவருடைய கிரியையைப் பாதிக்காது). அவர் ஊழியம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது மட்டுமே அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்; அவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை அவர் வெறுமனே முன்னெடுத்துச் செல்கிறார். மனுஷன் அவரைப் பற்றி என்ன அறிந்திருந்தாலும், அவரைப் பற்றி மனுஷனின் கருத்து எதுவாக இருந்தாலும், அவருடைய கிரியை முற்றிலும் பாதிக்கப்படாது. உதாரணமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது, அவர் யார் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, ஆனாலும் அவர் வெறுமனே தமது கிரியையில் முன்னேறினார். அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதில் இவை எதுவும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. ஆகையால், அவர் முதலில் தமது சொந்த அடையாளத்தை ஒப்புக் கொள்ளவில்லை அல்லது அறிவிக்கவில்லை, ஆனாலும் மனுஷன் வெறுமனே அவரைப் பின்பற்றினான். இயற்கையாகவே இது தேவனின் தாழ்மை மட்டுமல்ல, தேவன் மாம்சத்தில் கிரியை செய்த முறையும் இதுதான். அவரால் இவ்வாறாக மட்டுமே கிரியை செய்ய முடியும், ஏனென்றால் மனுஷனுக்கு அவனது வெறும் கண்ணால் அவரை அடையாளம் காண வழியே இல்லை. மனுஷன் அவரைக் கண்டுணர்ந்திருந்தாலும், அவருடைய கிரியையில் அவனால் உதவ முடிந்திருக்காது. மேலும், மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்வதற்காக அவர் மாம்சத்தில் வரவில்லை; தமது கிரியையைச் செய்து, ஊழியத்தை நிறைவேற்றவே அவர் மாம்சத்தில் வந்தார். இந்தக் காரணத்திற்காக, அவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்த எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை. அவர் செய்ய வேண்டிய அனைத்துக் கிரியைகளையும் அவர் முடித்தவுடன், அவருடைய முழு அடையாளமும் நிலைப்பாடும் இயல்பாகவே மனுஷனுக்குத் தெரிய வந்தது. மாம்சமாகிய தேவன் மௌனமாக இருக்கிறார், எந்த அறிவிப்பும் செய்வதில்லை. அவர் மனுஷனுக்கோ அல்லது மனுஷன் அவரைப் பின்பற்றுவதில் எவ்வாறு ஈடுபடுகிறான் என்பதைக் கவனிக்கவோ கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதிலும் மட்டுமே முன்னேறிச் செல்கிறார். அவருடைய கிரியையின் வழியில் குறுக்கே யாராலும் நிற்க முடியாது. அவர் தமது கிரியையை முடிக்க வேண்டிய நேரம் வரும்போது, அது நிச்சயமாக முடிவுக்கு வரும், அதற்கு எதிராக வேறு எவராலும் பேசிட முடியாது. அவர் தமது கிரியையை முடித்தவுடன் மனுஷனிடமிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, அவர் செய்யும் கிரியையை மனுஷன் புரிந்துகொள்வான், இருப்பினும் முற்றிலுமாக தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை. அவர் கிரியையை மேற்கொண்ட நோக்கத்தை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்ள நீண்ட காலம் எடுக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சமாகிய தேவனின் யுகத்திற்கான கிரியை இரண்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் மாம்சமாகிய தேவன் அவராகவே செய்யும் கிரியையும், அவராகவே பேசும் வார்த்தைகளும் அடங்கும். அவருடைய மாம்சத்தின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், கிரியையின் இரண்டாவது பகுதி பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களால் செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில்தான் மனுஷன் தன் செயல்பாட்டை நிறைவேற்ற வேண்டும், ஏனென்றால் தேவன் ஏற்கெனவே பாதையைத் திறந்துவிட்டார், அந்தப் பாதையில்தான் மனுஷன் நடந்துசெல்ல வேண்டும். அதாவது, மாம்சமாகிய தேவன் கிரியையின் ஒரு பகுதியை நிறைவேற்றுகிறார், பின்னர் பரிசுத்த ஆவியானவரும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களும் இந்தக் கிரியையை தொடர்ந்து செய்வார்கள். ஆகையால், இந்தக் கட்டத்தில் மாம்சமாகிய தேவனால் முதன்மையாகச் செய்யப்பட வேண்டிய கிரியை பற்றி மனுஷன் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவர் செய்த கிரியை என்ன என்பதையும் அவன் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனுஷனின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவனிடம் கோரிக்கைகளைக் கேட்கக்கூடாது. இங்கேதான் மனுஷனின் பிழை, அவனது கருத்து மற்றும் அதற்கும் மேலாக அவனது கீழ்ப்படியாமை ஆகியவை இருக்கின்றன.
தேவன் மாம்சத்தில் வருவது மனுஷனை தமது மாம்சத்தை அறிய அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்லது தேவனின் மாம்சத்திற்கும் மனுஷனின் மாம்சத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை வேறுபடுத்திப் பார்க்க மனுஷனை அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்ல; மனுஷனின் பகுத்தறியும் சக்திகளைப் பயிற்றுவிக்கவும் தேவன் மாம்சமாக மாறவில்லை, மேலும் மாம்சமாகிய தேவனை வணங்க மனுஷனை அனுமதித்து அதன் மூலம் பெரும் மகிமை அடையும் நோக்கத்தோடும் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவன் மாம்சமாவதன் நோக்கம் அல்ல. மனுஷனைக் கண்டிக்கவோ, வேண்டுமென்றே மனுஷனை வெளிப்படுத்தவோ, அவனுக்கு விஷயங்களை கடினமாக்கவோ தேவன் மாம்சமாகவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவனின் நோக்கம் அல்ல. ஒவ்வொரு முறையும் மாம்சத்தில் வரும்போது, அது தவிர்க்க முடியாத ஒரு கிரியையாக இருக்கிறது. மனுஷன் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அல்ல, ஆனால் அவருடைய பெரிய கிரியைக்காகவும், அவருடைய பெரிய ஆளுகைக்காகவும் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். தமது கிரியைக்கு தேவை என்பதாலும், அவசியம் என்பதாலும்தான் தேவன் பூமிக்கு வருகிறார். அவர் வெறுமனே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பூமிக்கு வருவதில்லை, ஆனால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வருகிறார். வேறு எதற்காக அவர் இந்த கிரியையைச் செய்ய இவ்வளவு பெரிய சுமையை ஏற்றுக்கொண்டு இவ்வளவு பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டும்? தேவன் அவர் மாம்சமாக வேண்டியபோதுதான் மாம்சமாகிறார், எப்போதும் தனித்துவமான முக்கியத்துவத்துடன் மாம்சமாகிறார். ஜனங்கள் அவரைப் பார்க்கவும், அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும் அனுமதிப்பதற்காக மட்டுமே தேவன் மாம்சமாக வருவதாக இருந்திருந்தால், அவர் நிச்சயமாக ஜனங்களிடையே ஒருபோதும் இவ்வளவு எளிதாக வந்திருக்கமாட்டார். அவர் தமது ஆளுகைக்காகவும், அவருடைய பெரிய கிரியைக்காகவும், அதன் மூலம் அவர் மனுஷகுலத்தை அதிகம் ஆதாயம் செய்வதற்காகவும் பூமிக்கு வருகிறார். அவர் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வருகிறார், அவர் சாத்தானைத் தோற்கடிக்க வருகிறார், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக அவர் மாம்சத்தை அணிந்துகொள்கிறார். அதற்கும் மேலாக, முழு மனுஷகுலத்தையும் அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்துவதற்காக அவர் வருகிறார். இவை அனைத்தும் அவருடைய நிர்வகித்தலையும், முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் பற்றியது. மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்ளவும், ஜனங்களின் கண்களைத் திறக்கவுமே தேவன் மாம்சத்தில் வந்திருந்தால், அவர் ஏன் ஒவ்வொரு தேசத்திற்கும் பயணிக்கவில்லை? இது மிகவும் எளிதான விஷயமாக இருந்திருக்காதா? ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, அதற்குப் பதிலாக அவர் செய்ய வேண்டிய கிரியையைத் தொடங்கவும் அதற்கானப் பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்தார். இந்த மாம்சம் மட்டும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு முழு யுகத்தைப் பிரதிநித்துவப்படுத்துகிறார், மேலும் ஒரு முழு யுகத்தின் கிரியையையும் செய்கிறார்; அவர் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய யுகத்தைத் தொடங்குகிறார். இவை அனைத்தும் தேவனின் நிர்வகித்தல் பற்றிய ஒரு முக்கியமான விஷயமாகும், மேலும் இவை அனைத்தும் தேவன் பூமியில் செய்வதற்கு வரும் கிரியையின் ஒரு கட்டத்தின் முக்கியத்துவமுமாகும். இயேசு பூமிக்கு வந்தபோது, அவர் சில வார்த்தைகளை மட்டுமே பேசினார், சில கிரியைகளை மட்டுமே செய்தார்; அவர் தமது மனுஷ ஜீவிதத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை, அவர் தமது கிரியையை முடித்தவுடன் புறப்பட்டுச் சென்றார். இன்று, நான் எனது வார்த்தைகளை உங்களிடம் பேசி முடித்ததும், நீங்கள் அனைவரும் அவற்றைப் புரிந்துகொண்டதும், உங்கள் ஜீவிதம் எப்படி இருந்தாலும், எனது கிரியையின் இந்தக் கட்டம் முடிவடைந்திருக்கும். எதிர்காலத்தில் எனது கிரியையின் இந்த கட்டத்தைத் தொடரவும், இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப பூமியில் தொடர்ந்து கிரியை செய்யவும் சிலர் இருக்க வேண்டும்; அந்த நேரத்தில், மனுஷனின் கிரியையும், மனுஷனின் கட்டியெழுப்புதலும் தொடங்கும். ஆனால், தற்போது, தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கும், அவருடைய கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்வதற்கும் மட்டுமே தமது கிரியையைச் செய்கிறார். தேவன் மனுஷனைப் போலல்லாமல் வேறுவிதமாகச் செயல்படுகிறார். மனுஷன் கூடுகைகளையும் மன்றங்களையும் விரும்புகிறான், சடங்காச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான், அதேசமயம் தேவன் மனுஷனின் கூடுகைகளையும் கூட்டங்களையும் தான் அதிகம் வெறுக்கிறார். தேவன் மனுஷனுடன் நட்பான முறையில் உரையாடுகிறார், பேசுகிறார்; இதுவே தேவனின் கிரியை, இது ஆச்சரியமான விதத்தில் விடுவிக்கப்பட்டதோடு உங்களையும் விடுவிக்கிறது. இருப்பினும், உங்களுடன் கூடுவதை நான் முற்றிலும் வெறுக்கிறேன், மேலும் உங்களுக்கு இருப்பது போலக் கட்டுப்பாடான ஒரு ஜீவிதத்திற்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது. விதிகளை நான் வெறுக்கிறேன்; அவை மனுஷனைக் கட்டிப்போடுகின்றன, அவர்கள் நகரக் கூட பயப்படுகிறார்கள், பேசுவதற்கு பயப்படுகிறார்கள், பாட பயப்படுகிறார்கள், அவனது கண்கள் உன்னை நேருக்கு நேர் பார்க்கின்றன. உங்கள் கூடுகை முறையை நான் முற்றிலும் வெறுக்கிறேன், பெரிய கூடுகைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன். இந்த வழியில் உங்களுடன் கூடுவதை நான் வெறுமனே மறுக்கிறேன், ஏனென்றால் இவ்வாறான ஜீவிதம் ஒருவனை கட்டுண்டவனாக உணர வைக்கிறது, மேலும் நீங்கள் அதிகமான சடங்காச்சாரங்களையும், பல விதிகளையும் கடைப்பிடிக்கிறீர்கள். நீங்கள் வழிநடத்தப்பட அனுமதிக்கப்பட்டால், நீங்கள் அனைவரையும் விதிகளின் ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வீர்கள், மேலும் உங்கள் தலைமையின் கீழ் விதிகளை ஒதுக்கி வைப்பதற்கான வழி அவர்களுக்கு இருக்காது; அதற்குப் பதிலாக மதத்தின் சூழல் இன்னும் தீவிரமாகிவிடும், மேலும் மனுஷனின் நடைமுறைகளும் பெருகிவிடும். சிலர் கூடுகையில் பிரசங்கித்துக்கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை, சிலர் ஒரு டஜன் நாட்கள் கூட நிறுத்தாமல் பேசுகிறார்கள். இவை அனைத்தும் பெரிய கூடுகைகளாகவும் மனுஷனின் கூட்டங்களாகவும் கருதப்படுகின்றன; புசித்துக் குடிக்கும் மற்றும் களிப்புறும், அல்லது விடுவிக்கப்பட்ட ஆவியின் ஜீவிதத்துடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இவை அனைத்தும் கூட்டங்களே! உங்களது சகப் பணியாளரின் கூட்டங்கள், பெரிய மற்றும் சிறிய கூடுகைகள் அனைத்தும் எனக்கு வெறுக்கத்தக்கவை, அவற்றில் நான் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. இதுதான் நான் கிரியை செய்யும் கொள்கை: கூடுகைகளின் போது எனக்குப் பிரசங்கிக்க விருப்பம் இல்லை, ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் எதையும் அறிவிக்கவும் நான் விரும்பவில்லை, மேலும் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு உங்கள் அனைவரையும் கூட்டுவதற்குக் கூட எனக்கு விருப்பமில்லை. ஒரு கூட்டத்தில் நீங்கள் அனைவரும் சொகுசாகவும், முறையாகவும் உட்கார வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை; எந்தவொரு சடங்காச்சார எல்லைக்குள்ளும் நீங்கள் ஜீவிப்பதைக் கண்டு நான் வெறுக்கிறேன், அதற்கும் மேலாக, இதுபோன்ற உங்களுடைய சடங்காச்சாரத்தில் பங்கேற்கவும் நான் மறுக்கிறேன். இதை நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு வெறுக்கிறேன். உங்களுடைய இந்த சடங்காச்சாரங்கள் மற்றும் விதிகளில் எனக்குச் சிறிதும் ஆர்வம் இல்லை; அவற்றில் நீங்கள் எவ்வளவு நல்ல வேலையைச் செய்தாலும், அவை அனைத்தையும் நான் வெறுக்கிறேன். உங்கள் ஏற்பாடுகள் பொருத்தமற்றவை அல்லது நீங்கள் கீழானவர்கள் என்பது விஷயம் அல்ல; நீங்கள் ஜீவித்திருக்கும் முறையைத்தான் நான் வெறுக்கிறேன், மேலும், என்னால் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது. நான் செய்ய விரும்பும் கிரியையில் சிறிதளவு கூட உங்களுக்குப் புரியவில்லை. இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது, ஏதோ ஓர் இடத்தில் ஒரு பிரசங்கம் செய்தபின், அவர் தம்முடைய சீஷர்களை நகரத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று, அவர்கள் புரிந்துகொள்ள வழிவகுத்த வழிகளைப் பற்றி அவர்களுடன் பேசினார். அவர் பெரும்பாலும் அப்படியே கிரியை செய்தார். பெருந்திரளான ஜனங்களிடையே அவர் செய்த கிரியைகள் மிகக் குறைவானவையாக இருந்தன. நீங்கள் அவரிடம் கேட்கும் விஷயத்தின்படி பார்த்தால், மாம்சமாகிய தேவன் சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை வாழக்கூடாது; அவர் தமது கிரியையைச் செய்ய வேண்டும், அவர் உட்கார்ந்திருந்தாலும், நின்றாலும், நடந்து கொண்டிருந்தாலும், அவர் பேச வேண்டும். அவர் எல்லா நேரங்களிலும் கிரியை செய்ய வேண்டும், “செயல்பாடுகளை” அவர் ஒருபோதும் நிறுத்தக் கூடாது, இல்லையெனில் அவர் தமது கடமைகளைப் புறக்கணித்ததாகிவிடும். மனுஷனின் இந்தக் கோரிக்கைகள் மனுஷ உணர்வுக்குப் பொருத்தமானவையா? உங்கள் நேர்மை எங்கே? நீங்கள் கேட்பது அதிகமாக இல்லையா? நான் கிரியை செய்யும் போது நீ என்னை ஆராய்வது அவசியமா? நான் என் ஊழியத்தை நிறைவேற்றும்போது நீ மேற்பார்வையிட வேண்டுமா? நான் என்ன கிரியை செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன்; மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. நான் அதிகம் செய்யவில்லை என்பது போல் உனக்குத் தோன்றலாம், ஆனால் அதற்குள் எனது கிரியை முடியும் நிலைக்கு வந்துவிடுகிறது. உதாரணமாக நான்கு சுவிசேஷங்களில் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள்: அவை குறைவாக இல்லையா? அந்த நேரத்தில், இயேசு ஜெப ஆலயத்திற்குள் நுழைந்து ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கித்தபோது, அவர் மிகச் சில நிமிடங்களில் அதை முடித்தார், அவர் பேசி முடித்ததும், அவர் தம்முடைய சீஷர்களை படகில் ஏற்றிக்கொண்டு எந்த விளக்கமும் கொடுக்காமல் புறப்பட்டார். ஜெப ஆலயத்திற்குள் இருந்தவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றி விவாதித்தார்கள், ஆனால் இயேசுவுக்கு அதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. தேவன் தாம் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே செய்கிறார், அதற்கு மேல் எதுவும் செய்வதில்லை. இப்போது, நான் அதிகம் பேச வேண்டும், ஒரு நாளைக்குக் குறைந்தது பல மணிநேரம் பேச வேண்டும் என்று அநேகர் விரும்புகிறார்கள். நீங்கள் அதைப் பார்க்கிறபடி, பேசாத வரை தேவன் தேவனில்லை, மேலும் பேசுபவர் மட்டுமே தேவன். நீங்கள் அனைவரும் குருடர்கள்! முரட்டுத்தனமானவர்கள்! நீங்கள் அனைவரும் அறிவற்றவர்கள்! உங்களிடம் பல கருத்துக்கள் இருக்கின்றன! உங்கள் கோரிக்கைகள் வெகுதூரம் செல்கின்றன! நீங்கள் மனிதாபிமானமற்றவர்! தேவன் என்னவாக இருக்கிறார் என்பதைப் பற்றி உங்களுக்குச் சிறிதளவும் புரிவதில்லை! அனைத்துப் பேச்சாளர்களும் சொற்பொழிவாளர்களும் தேவன் என்றும், உங்களுக்கு வார்த்தைகளை வழங்கத் தயாராக இருக்கும் எவரும் உங்களது பிதா என்றும் நீங்கள் விசுவசிக்கிறீர்கள். என்னிடம் சொல்லுங்கள், நன்கு வடிவமைக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் அசாதாரணமான தோற்றத்துடன் இருக்கும் உங்கள் அனைவருக்கும் சிறிதளவேனும் அறிவு இருக்கிறதா? உங்களுக்குப் பரலோக சூரியன் பற்றி ஏதும் தெரியுமா! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பேராசைக் கொண்ட மற்றும் சீர்கெட்ட அதிகாரியைப் போன்றவர்கள், எனவே நீங்கள் எவ்வாறு அறிவைக் காண்பீர்கள்? சரியானது மற்றும் தவறானது எது என்பதை உங்களால் எவ்வாறு வேறுபடுத்தி அறிய முடியும்? நான் உங்களுக்கு அதிகம் வழங்கியுள்ளேன், ஆனால் உங்களில் எத்தனை பேர் அவற்றின்மீது மதிப்பு வைத்திருக்கிறீர்கள்? அதை முழுமையாக வைத்திருப்பவர் யார்? இந்த நாளில் நீங்கள் நடந்து செல்லும் பாதையைத் திறந்தவர் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை, அதனால் நீங்கள் தொடர்ந்து என்னிடம் கோரிக்கைகளை வைக்கிறீர்கள், இந்தக் கேலிக்குரிய மற்றும் அபத்தமான கோரிக்கைகளை என்னிடம் கேட்கிறீர்கள். வெட்கத்தால் உங்கள் முகம் சிவக்கவில்லையா? நான் போதுமான அளவு பேசியிருக்கவில்லையா? நான் போதுமான அளவு செய்திருக்கவில்லையா? உங்களில் யாரால் என் வார்த்தைகளை உண்மையிலேயே ஒரு பொக்கிஷமாக மதிக்க முடிந்திருக்கிறது? என் சமூகத்தில் இருக்கும்போது நீங்கள் என்னைப் புகழ்ந்து பேசுகிறீர்கள், ஆனால் என் சமூகத்தில் நீங்கள் இல்லாதபோது நீங்கள் பொய் சொல்கிறீர்கள், ஏமாற்றுகிறீர்கள்! உங்கள் செயல்கள் மிகவும் இழிவானவை, அவை என்னை கலங்கடிக்கின்றன! உங்கள் ஜீவிதத்தை மாற்றியமைப்பதற்காக இல்லாமல், உங்கள் கண்களுக்கு விருந்தளித்து, உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் நீங்கள் என்னைப் பேசவும் கிரியை செய்யவும் சொல்வதில்லை என்பது எனக்குத் தெரியும். நான் உங்களிடம் அதிகம் பேசியிருக்கிறேன். உங்கள் ஜீவிதம் நீண்ட காலத்திற்கு முன்பே மாறியிருக்க வேண்டும், ஆகவே, நீங்கள் ஏன் இப்போதும் கூட உங்கள் பழைய நிலைக்கே மீண்டும் செல்கிறீர்கள்? என் வார்த்தைகள் உங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதால் நீங்கள் அவற்றைப் பெறவில்லை என்றிருக்க முடியுமா? உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உங்களைப் போன்ற சீர்கெட்டவர்களுக்கு நான் இனி எதையும் சொல்ல விரும்பவில்லை—அது வீணான செயல்! அவ்வளவு பயனற்றக் கிரியைகளை நான் செய்ய விரும்பவில்லை! நீங்கள் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவோ அல்லது கண்களுக்கு விருந்தளிக்கவோ மட்டுமே விரும்புகிறீர்கள், ஆனால் ஜீவிதத்தில் நன்மை பெற விரும்புவதில்லை! நீங்கள் அனைவரும் உங்களையே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்! நான் உங்களிடம் கேட்கிறேன், நான் உங்களிடம் நேருக்கு நேர் பேசியவற்றில் எவ்வளவு விஷயங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? நீங்கள் செய்வது எல்லாம் மற்றவர்களை ஏமாற்ற தந்திரங்களை மேற்கொள்வதுதான்! உங்களில் பார்வையாளர்களாக இருப்பவர்களை நான் வெறுக்கிறேன், மேலும் உங்கள் ஆர்வம் மிகவும் வெறுக்கத்தக்கதாக இருப்பதை நான் காண்கிறேன். உண்மையான வழியைத் தேடவோ அல்லது சத்தியத்திற்காகத் தாகம் கொள்ளவோ நீங்கள் இங்கே வரவில்லை என்றால், நீங்கள்தான் என் வெறுப்பின் பொருட்கள்! உங்கள் ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய அல்லது உங்கள் பேராசைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நான் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். சத்தியத்தின் இருப்பைத் தேடுவதற்கோ அல்லது ஜீவிதத்தில் நுழைவதற்கான சரியான பாதையை ஆராய்வதற்கோ நீங்கள் நினைத்ததில்லை; இந்தக் கோரிக்கைகள் உங்களிடையே கிடையாது. நீங்கள் செய்வது எல்லாம் நீங்கள் படித்துப் பாராட்டும் ஒரு விளையாட்டுப் பொருளைப் போலவே தேவனைக் கருதுவதுதான். நீங்கள் ஜீவிதத்தை நாடுவதில் மிகக் குறைவான ஆர்வம் கொண்டவர்கள், ஆனால் ஆர்வமாக இருக்க ஏராளமான ஆசை உள்ளது! அத்தகையவர்களுக்கு ஜீவ வழியை விளக்குவது காற்றோடு பேசுவதற்கு ஒப்பாகும்; நான் பேசப்போவதே இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் உங்கள் இருதயத்திற்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப விரும்பினால், நீங்கள் என்னிடம் வரவேண்டாம்! நீங்கள் ஜீவிதத்தைப் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்! உங்களை நீங்களே முட்டாளாக்காதீர்கள்! உங்கள் ஜீவிதத்தைப் பின்தொடர்வதற்கான அடிப்படையாக உங்கள் ஆர்வத்தை நீங்கள் சிறந்த முறையில் எடுத்துக் கொள்ளவில்லை அல்லது உங்களிடம் பேசும்படி என்னைக் கேட்பதற்கு ஒரு சாக்குப்போக்காக அதைப் பயன்படுத்தவில்லை. இந்தத் தந்திரங்கள் அனைத்திலும் நீங்கள் மிகவும் திறமையானவர்கள்! நான் உன்னிடம் மீண்டும் கேட்கிறேன்: நீ பிரவேசிக்க வேண்டும் என்று நான் கூறியவற்றில் நீ எவ்வளவு விஷயங்களில் உண்மையிலேயே பிரவேசித்திருக்கிறாய்? நான் உன்னிடம் பேசிய அனைத்தையும் நீ புரிந்து கொண்டாயா? நான் உன்னிடம் பேசிய அனைத்தையும் நீ நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறாயா?
ஒவ்வொரு யுகத்தின் கிரியையும் தேவனால் தொடங்கப்படுகிறது, ஆனால் தேவன் எந்த வழியில் செயல்படுகிறாரோ, உங்கள் சார்பாக அவர் ஒரு இயக்கத்தைத் தொடங்கவோ, சிறப்பு மாநாடுகளை நடத்தவோ அல்லது எந்தவொரு அமைப்பையும் நிறுவவோ வரவில்லை என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே அவர் வருகிறார். அவரது கிரியை எந்த மனுஷனுக்கும் தடையை ஏற்படுத்தாது. அவர் விரும்பியபடி தமது கிரியையைச் செய்கிறார்; மனுஷன் அதைப்பற்றி என்ன நினைக்கிறான் அல்லது அறிந்திருக்கிறான் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அவர் தமது கிரியையைச் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்றுவரை, ஏற்கனவே கிரியையின் மூன்று கட்டங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன; யேகோவாவிலிருந்து இயேசு வரையிலும், மற்றும் நியாயப்பிரமாணத்தின் யுகத்திலிருந்து கிருபையின் யுகம் வரையிலும், தேவன் ஒருபோதும் மனுஷனுக்காக ஒரு சிறப்பு மாநாட்டைக் கூட்டுவதில்லை, ஒரு சிறப்பு உலகளாவிய கிரியை கூட்டத்தைக் கூட்டி அதன் மூலம் தமது கிரியைக்கான ராஜ்யத்தை விரிவுபடுத்த அவர் எல்லா மனுஷரையும் ஒன்றிணைத்ததில்லை. அவர் செய்வதெல்லாம் ஒரு முழு யுகத்தின் ஆரம்ப கிரியைகளைப் பொருத்தமான நேரத்திலும் பொருத்தமான இடத்திலும் மேற்கொள்வதேயாகும், இதன் மூலம் யுகத்தைத் தொடங்குவதோடு, மனுஷகுலத்தின் ஜீவிதத்தை எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதில் அவர்களை வழிநடத்துவார். சிறப்பு மாநாடுகள் மனுஷனின் கூடுகைகள் ஆகும்; விடுமுறை நாட்களைக் கொண்டாடுவதற்காக ஜனங்களை ஒன்று சேர்ப்பது மனுஷனின் கிரியை. தேவன் விடுமுறை நாட்களைக் கடைப்பிடிப்பதில்லை, மேலும், அவற்றை வெறுக்கத்தக்கதாகக் காண்கிறார்; அவர் சிறப்பு மாநாடுகளைக் கூட்டுவதில்லை, மேலும், அவர் அவற்றை வெறுக்கிறார். மாம்சமாகிய தேவனால் செய்யப்படும் கிரியை என்ன என்பதை இப்போது நீ புரிந்து கொள்ள வேண்டும்!