மாம்சமாகியதன் மறைபொருள் (1)

கிருபையின் யுகத்தில், யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான். யோவானால் தேவனின் கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆனால் மனுஷனின் கடமையை மட்டுமே நிறைவேற்றினான். யோவான் கர்த்தருடைய முன்னோடியாக இருந்தான் என்றாலும், அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை; அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர்மீது இறங்கினார். பின்னர் அவர் தமது கிரியையைத் தொடங்கினார், அதாவது அவர் கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அதனால்தான் அவர் தேவனின் அடையாளத்தைச் சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவர் தேவனிடமிருந்து வந்தார். இதற்கு முன்பு அவருடைய விசுவாசம் எப்படியிருந்திருந்தாலும்—அது சில சமயங்களில் பலவீனமாக இருந்திருக்கலாம், அல்லது சில சமயங்களில் வலுவாகவும் இருந்திருக்கலாம்—அவை அனைத்தும் அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வழிநடத்தியச் சாதாரண மனுஷ ஜீவிதத்தைச் சேர்ந்தவை. அவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு (அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட பின்), தேவனின் வல்லமையும் மகிமையும் உடனடியாக அவரிடத்தில் வந்துசேர்ந்தன, ஆகவே அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அவரால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடிந்தது, அதிசயங்களைச் செய்ய முடிந்தது, அவருக்கு வல்லமையும் அதிகாரமும் இருந்தன, ஏனென்றால் அவர் நேரடியாக தேவனின் சார்பாகக் கிரியை செய்துவந்தார்; அவர் ஆவியானவரின் கிரியையை அவருக்குப் பதிலாகச் செய்து ஆவியானவரின் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகையால், அவரே தேவன்; இது மறுக்க முடியாதது. யோவான் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒருவன். அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாத்தியமும் அவனுக்கு இல்லை. அவன் அவ்வாறு செய்ய விரும்பியிருந்தால், பரிசுத்த ஆவியானவர் அதை அனுமதித்திருக்க மாட்டார், ஏனென்றால் தேவன் தாமாகவே நிறைவேற்ற நினைத்த கிரியையை அவனால் செய்ய முடியவில்லை. ஒருவேளை மனுஷன் நிறைய விருப்பங்களைக் கொண்டிருந்திருக்கலாம், அல்லது மாறுபட்ட ஏதோவொன்று இருந்திருக்கலாம்; எந்தச் சூழ்நிலையிலும் அவனால் நேரடியாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்திருக்காது. அவனுடைய முட்டாள்தனம் அவனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தின, ஆனால் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. ஆனாலும், அவனுடைய அனைத்தும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்று உன்னால் சொல்ல முடியாது. அவனுடைய விலகலும் பிழையும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறு இருப்பது இயல்பானது, ஆனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒருவன் மாறுபட்டவனாக இருந்தால், அது தேவனை அவமதிப்பதாக இருக்காதா? அது பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் அல்லவா? மற்றவர்களால் உயர்த்தப்பட்டாலும், தேவனின் இடத்தில் நிற்க பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை. அவன் தேவன் இல்லையென்றால், அவனால் இறுதியில் நிலையாக நிற்க முடியாது. மனுஷன் விரும்பியபடி தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை! உதாரணமாக, பரிசுத்த ஆவியானவர் யோவானுக்கு சாட்சியம் அளித்தார், அவன்தான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தியவன் என்பதை வெளிப்படுத்தியதும் பரிசுத்த ஆவியானவர்தான், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவன்மீது செய்த கிரியைகள் நன்கு அளவிடப்பட்டிருந்தன. யோவானிடம் கேட்கப்பட்டதெல்லாம், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும், அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பன மட்டுமே. அதாவது, பரிசுத்த ஆவியானவர், வழியை ஆயத்தப்படுத்தும் அவனுடைய கிரியையை மட்டுமே ஆதரித்தார், அத்தகைய கிரியையைச் செய்ய மட்டுமே அவனை அனுமதித்தார்—வேறு எந்தக் கிரியையும் செய்ய அவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. யோவான் எலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினான், மேலும் வழியை ஆயத்தப்படுத்த ஒரு தீர்க்கதரிசியையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தினான். பரிசுத்த ஆவியானவர் இவ்விஷயத்தில் அவனை ஆதரித்தார்; அவனுடைய கிரியை வழிவகுப்பதாக இருக்கும் வரை, பரிசுத்த ஆவியானவர் அவனை ஆதரித்தார். இருப்பினும், அவனே தேவனாக இருப்பதாகக் கூறி, மீட்பின் கிரியையை முடிக்க வந்திருப்பதாகச் சொன்னால், பரிசுத்த ஆவியானவர் அவனை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்திருக்கும். யோவானின் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கிரியைக்கு எல்லைகள் இல்லாமல் இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கிரியையை உண்மையிலேயே ஆதரித்தார் என்பது உண்மையாக இருப்பினும், அந்த நேரத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வல்லமை அவன் வழியை ஆயத்தப்படுத்த மட்டுமே என வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவனால் வேறு எந்தக் கிரியையும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவன் வழியை ஆயத்தப்படுத்த வந்த யோவான் மட்டுமே, இயேசு அல்ல. ஆகையால், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் முக்கியமானது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷனைச் செய்ய அனுமதிக்கும் கிரியை அதைவிட முக்கியமானது. அந்த நேரத்தில் யோவானுக்கு அற்புதமான சாட்சியம் கிடைக்கவில்லையா? அவனது கிரியையும் பெரிதாக இருக்கவில்லையா? ஆனால் அவன் செய்த கிரியையானது இயேசுவை விட அதிகமானதாக இருக்க முடியாது, ஏனென்றால் அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே, மேலும் தேவனை அவனால் நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, எனவே அவன் செய்த கிரியை வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவன் தனது ஆயத்தப்படுத்தும் கிரியையை முடித்தபின், பரிசுத்த ஆவியானவர் அவனது சாட்சியத்தை ஆதரிக்கவில்லை, புதிய கிரியைகள் எதுவும் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை, தேவன் அவராகவே கிரியை செய்யத் தொடங்கியவுடன் அவன் புறப்பட்டுச் சென்றான்.

சிலர் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டு, “நான் தான் தேவன்!” என்று சத்தமாகக் கூக்குரலிடுகிறார்கள். ஆயினும்கூட, இறுதியில், அவர்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயத்தில் அவர்கள் தவறு செய்கிறார்கள். அவர்கள் சாத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. நீ உன்னை எவ்வளவு உயர்த்திக் கொண்டாலும் அல்லது எவ்வளவு சத்தமாகக் கூக்குரலிட்டாலும், நீ இன்னும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன்தான். நீ சாத்தானுக்குச் சொந்தமானவன். “நான்தான் தேவன், நான்தான் தேவனின் அன்பான குமாரன்!” என்று நான் கூக்குரலிடுவதில்லை, ஆனால் நான் செய்யும் கிரியை தேவனின் கிரியை. நான் கத்த வேண்டுமா? உயர்த்திக் கூறவேண்டிய அவசியமே இல்லை. தேவன் தமது சொந்தக் கிரியையைத் தாமே செய்கிறார், அவருக்கு மனுஷன் ஒரு அந்தஸ்தை வழங்கவோ அல்லது அவருக்கு ஒரு கெளரவமான பட்டத்தை வழங்கவோ தேவையில்லை: அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு முன்பு, அவர் தேவனாக இருக்கவில்லையா? அவர் மாம்சமாகிய தேவனாக இருக்கவில்லையா? சாட்சிப் பிரமாணத்தைப் பெற்ற பிறகுதான் அவர் தேவனுடைய ஒரே குமாரனாக ஆனார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது அல்லவா? அவர் தனது கிரியையைத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இயேசு என்ற பெயரில் ஒரு மனுஷன் ஏற்கனவே இருக்கவில்லையா? உன்னால் புதிய பாதைகளைக் கொண்டு வரவோ அல்லது ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. உன்னால் ஆவியானவரின் கிரியையையோ அல்லது அவர் பேசும் வார்த்தைகளையோ வெளிப்படுத்த முடியாது. உன்னால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, ஆவியானவரின் கிரியையையும் உன்னால் செய்ய முடியாது. தேவனின் ஞானம், அதிசயம் மற்றும் புரிந்துகொள்ள முடியாதத் தன்மை மற்றும் தேவன் மனுஷனை சிட்சிக்கும் மனநிலையின் முழுமை—இவை அனைத்தும் உனது வெளிப்படுத்தும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. எனவே உன்னை தேவன் என்று நீ கூற முயல்வது பயனற்றது; உன்னிடம் பெயர் மட்டுமே இருக்கும், சாராம்சம் எதுவும் இருக்காது. தேவன் வந்துவிட்டார், ஆனால் யாரும் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, ஆனாலும் அவர் தம்முடைய கிரியையைத் தொடர்கிறார், மேலும் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாறு செய்கிறார். நீ அவரை மனுஷன் அல்லது தேவன், கர்த்தர் அல்லது கிறிஸ்து, அல்லது சகோதரி என எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் செய்யும் கிரியை ஆவியானவரின் கிரியையாகும், அது தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனுஷன் தம்மை எவ்வாறு அழைக்கிறான் என்பது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அந்தப் பெயரால் அவருடைய கிரியையைத் தீர்மானிக்க முடியுமா? தேவனைப் பொறுத்தவரை, நீ அவரை எவ்வாறு அழைத்தாலும், அவர் ஆவியான தேவனுடைய மாம்சம்தான்; அவர் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஆவியானவரால் அங்கீகரிக்கப்படுகிறார். உன்னால் ஒரு புதிய யுகத்திற்கு வழிவகுக்கவோ, அல்லது பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ, அல்லது ஒரு புதிய யுகத்தைத் தொடங்கவோ அல்லது புதிய கிரியையைச் செய்யவோ முடியாவிட்டால், நீ உன்னை தேவன் என்று அழைக்க முடியாது!

பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனால் கூட தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதுபோன்ற மனுஷனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று சொல்வது மட்டுமல்லாமல், அவன் செய்யும் கிரியையாலும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனுஷனின் அனுபவத்தை நேரடியாக தேவனின் நிர்வகித்தலின் கீழ் வைத்திருக்க முடியாது, மேலும் அதனால் தேவனின் நிர்வகித்தலைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. தேவன் அவராகவே செய்யும் கிரியை முழுக்க முழுக்க அவர் தமது சொந்த நிர்வகித்தல் திட்டத்தில் செய்ய விரும்பும் கிரியை ஆகும், அது பெரிய அளவிலான நிர்வகித்தலுடன் தொடர்புடையது. மனுஷனால் செய்யப்படும் கிரியையானது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதை உள்ளடக்கியதாகும். இதற்கு முன்னர் சென்றவர்களால் நடந்ததையும் தாண்டி ஒரு புதிய அனுபவ வழியைக் கண்டறிவதும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு வழிகாட்டுவதும் இதில் அடங்கும். இந்த ஜனங்கள் வழங்குவது அவர்களின் தனிப்பட்ட அனுபவம் அல்லது ஆன்மீக ஜனங்களின் ஆன்மீக எழுத்துக்கள் ஆகியவையே ஆகும். இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் செய்யும் கிரியையானது ஆறாயிரம் ஆண்டுகாலத் திட்டத்தில் நிர்வகித்தலின் பெரிய கிரியைக்குத் தொடர்பில்லாதது ஆகும். அவர்கள் வெறுமனே, ஜனங்களை பரிசுத்த ஆவியானவரின் நீரோட்டத்தில் வழிநடத்த, பரிசுத்த ஆவியானவரால் வெவ்வேறு காலங்களில் எழுப்பப்பட்டவர்கள். அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் முடிவடையும் வரை அல்லது அவர்களின் ஜீவிதங்கள் முடிவடையும் வரை அதைச் செய்வார்கள். அவர்கள் செய்யும் கிரியை தேவனுக்கு ஒரு பொருத்தமானப் பாதையை உருவாக்குவது அல்லது பூமியில் தேவனுடைய நிர்வகித்தலில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைத் தொடர்வது மட்டுமே ஆகும். தேவனுடைய நிர்வகித்தலின் பெரிய கிரியையை இவர்களால் தங்களுக்குள்ளேயே செய்ய இயலாது, அல்லது புதிய பாதைகளைத் திறக்கவும் முடியாது, மேலும் அவர்களில் எவரும் முந்தைய யுகத்தைச் சேர்ந்த தேவனுடைய எல்லா கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் முடியாது. ஆகையால், அவர்கள் செய்யும் கிரியை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் செய்யும் ஒரு செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதே அன்றி தேவன் செய்யும் ஊழியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர்கள் செய்யும் கிரியை, தேவனால் செய்யப்படுவதைப் போன்றது இல்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கான கிரியை தேவனின் இடத்தில் உள்ள மனுஷனால் செய்யக்கூடிய ஒன்றல்ல. தேவனைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது. மனுஷனால் செய்யப்படும் அனைத்துக் கிரியைகளும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தனது கடமையைச் செய்வதைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்படும்போது அல்லது தெளிவுபடுத்தப்படும்போது செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் வழங்கும் வழிகாட்டுதல், முழுக்க முழுக்க மனுஷனுக்கு அன்றாட ஜீவிதத்தில் நடைமுறையின் பாதையைக் காண்பிப்பதையும், தேவனின் விருப்பத்திற்கு இணங்க அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கொண்டுள்ளது. மனுஷனின் கிரியை தேவனின் நிர்வகித்தலை உள்ளடக்கியதும் இல்லை, ஆவியானவரின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. உதாரணமாக, விட்னஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ ஆகியோரின் கிரியைகள் தலைமை தாங்குவது மட்டுமே. புதிய பாதையோ அல்லது பழைய பாதையோ, வேதாகமத்தில் மீதமுள்ள கொள்கையின் அடிப்படையில் அந்தக் கிரியை முன்வைக்கப்பட்டது. உள்ளூர் தேவாலயத்தை மீட்டெடுப்பதோ அல்லது உள்ளூர் தேவாலயத்தைக் கட்டியெழுப்புவதோ, எதுவாக இருந்தாலும் தேவாலயங்களை நிறுவுவதே அவர்களின் கிரியையாக இருந்தது. இயேசுவாலும் அவருடைய அப்போஸ்தலர்களாலும் முடிக்கப்படாத கிரியையை அல்லது கிருபையின் யுகத்தில் மேலும் வளர்ச்சியடையாத கிரியையையே அவர்கள் செய்தார்கள். இயேசு தம்முடைய காலக்கட்ட கிரியையில் அவருக்குப் பின் வரும் தலைமுறையினரைக் கேட்டுக்கொண்ட விஷயங்களான முக்காடிடுதல், ஞானஸ்நானம் பெறுதல், அப்பம் பிட்குதல் அல்லது திராட்சைரசம் பருகுதல் ஆகியவற்றையே அவர்கள் தங்களது கிரியையில் செய்தார்கள். அவர்களின் கிரியை, வேதாகமத்தைக் கடைப்பிடிப்பதும், வேதாகமத்தினுள் பாதைகளைத் தேடுவதுமாகும் என்று கூறலாம். அவர்கள் எந்த விதமான புதிய முன்னேற்றங்களையும் செய்யவில்லை. ஆகையால், அவர்களின் கிரியையில் வேதாகமத்தினுள் புதிய பாதைளைக் கண்டுபிடித்ததையும், சிறந்த மற்றும் மிகவும் யதார்த்தமான நடைமுறைகளையும் மட்டுமே காண முடியும். ஆனால் தேவனின் தற்போதைய சித்தத்தை அவர்களின் கிரியையில் கண்டறிய முடியாது, மேலும் கடைசிக் காலத்தில் தேவன் செய்யத் திட்டமிட்டுள்ள புதிய கிரியையையும் கண்டறிய இயலாது. ஏனென்றால், அவர்கள் நடந்து வந்த பாதை இன்னும் பழையதாகவே இருந்தது—புதுப்பித்தலும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. ஜனங்கள் மனந்திரும்பி தங்களது பாவங்களை ஒப்புக்கொள்ளும்படி அவர்களைக் கேட்கும் நடைமுறையை கடைப்பிடிக்கவும், கடைசிவரை சகித்துக்கொள்பவன் இரட்சிக்கப்படுவான் என்றும் மற்றும் ஆணே பெண்ணின் தலைவன் என்றும் சொல்லப்படுவதைக் கடைப்பிடிக்கவும், மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், மேலும் சகோதரிகள் பிரசங்கிக்க முடியாது, ஆனால் கீழ்ப்படிய வேண்டும் என்ற பாரம்பரியக் கருத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்த இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மையை அவர்கள் தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்தனர். இத்தகைய தலைமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரால் ஒருபோதும் புதிய கிரியைகளைச் செய்திருக்கவோ, ஜனங்களை விதிமுறைகளிலிருந்து விடுவித்திருக்கவோ, அல்லது அவர்களை சுதந்திரம் மற்றும் அழகின் ராஜ்யத்திற்கு வழிநடத்திச் சென்றிருக்கவோ முடிந்திருக்காது. ஆகையால், யுகத்தை மாற்றும் கிரியையின் இந்தக் கட்டத்தில் தேவன் தாமே கிரியை செய்யவும், பேசவும் வேண்டும்; இல்லையெனில் எந்த மனுஷனும் அவருக்குப் பதிலாக அவ்வாறு செய்ய முடியாது. இதுவரை, இந்த நீரோட்டத்துக்கு வெளியே பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டவர்கள் சகிப்புத்தன்மைகளை இழந்துவிட்டிருக்கிறார்கள். ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்களின் கிரியையானது தேவன் செய்த கிரியையைப் போலல்லாமல் இருப்பதால், அவர்களின் அடையாளங்களும் அவர்கள் சார்பாக அவர்கள் செயல்படுத்தும் விஷயங்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் செய்ய விரும்பும் கிரியை வேறுபட்டது, இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகக் கிரியை செய்பவர்களுக்கு வெவ்வேறு அடையாளங்களும் அந்தஸ்துகளும் வழங்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்கள் சில புதிய கிரியைகளையும் செய்யலாம், மேலும் முந்தைய யுகத்தில் செய்யப்பட்ட சில கிரியைகளை அகற்றவும் செய்யலாம், ஆனால் அவர்கள் செய்வது புதிய யுகத்தில் தேவனின் மனநிலையையும் சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் முந்தைய யுகத்தின் கிரியையை ஒழிக்க மட்டுமே கிரியைச் செய்கின்றனர், தேவனின் மனநிலையை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்திற்கான புதிய கிரியைகளைச் செய்வதற்காக அல்ல. இவ்வாறு, அவர்கள் எத்தனை காலாவதியான நடைமுறைகளை ஒழித்தாலும் அல்லது எத்தனை புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும், அவர்கள் இன்னமும் மனுஷனையும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களையும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், தேவனே தமது கிரியையைச் செய்யும்போது, பழைய யுகத்தின் நடைமுறைகள் ஒழிக்கப்படுவதை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை அல்லது புதிய யுகத்தின் தொடக்கத்தை நேரடியாக அறிவிப்பதில்லை. அவர் தமது கிரியையில் நேர்மையாகவும், நேரடியாகவும் இருக்கிறார். தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதில் அவர் நேர்மையானவர்; அதாவது, அவர் கொண்டு வந்த கிரியையை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அந்தக் கிரியையை துவக்கத்தில் எப்படிச் செய்ய விரும்பினாரோ அப்படியே செய்கிறார், அவருடைய தன்மையையும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். மனுஷன் அதைப் பார்க்கும்போது, அவருடைய மனநிலையும் அவருடைய கிரியையும் கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. இருப்பினும், தேவனின் கண்ணோட்டத்தில், இது அவருடைய கிரியையின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமாக மட்டுமே இருக்கிறது. தேவன் கிரியை செய்யும்போது, அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, புதிய கிரியையை நேரடியாகக் கொண்டுவருகிறார். இதற்கு நேர்மாறாக, மனுஷன் கிரியை செய்யும் போது, அந்தக் கிரியை, விவாதம் மற்றும் கற்றல் மூலமாகச் செய்யப்படுகிறது, அல்லது மற்றவர்களின் கிரியைகளில் நிறுவப்பட்ட அறிவின் விரிவாக்கம் மற்றும் நடைமுறையை முறைப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது, மனுஷன் செய்த கிரியையின் சாராம்சம் ஒரு நிறுவப்பட்ட ஒழுங்கைப் பின்பற்றுவதும், “பழைய பாதைகளில் புதிய காலணிகளைக் கொண்டு நடப்பதும்,” ஆகும். இதன் பொருள் என்னவென்றால், ஜனங்கள் நடந்துசென்ற பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய பாதை கூட தேவனால் தொடங்கப்பட்டதின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதுதான். எனவே, எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, மனுஷன் இன்னும் மனுஷனாகவே இருக்கிறான், தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார்.

ஈசாக்கு ஆபிரகாமுக்குப் பிறந்ததைப் போலவே, யோவானும் வாக்குத்தத்தத்தினால் பிறந்தான். அவன் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான், அதிகக் கிரியைகள் செய்தான், ஆனால் அவன் தேவன் அல்ல. மாறாக, அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்தான், ஏனென்றால் அவன் இயேசுவுக்காக வழியை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியையும் மிகச் சிறப்பாக இருந்தது, அவன் ஆயத்தப்படுத்திய பின்னரே இயேசு அதிகாரப்பூர்வமாகத் தனது கிரியையைத் தொடங்கினார். முக்கியமாக, அவன் வெறுமனே இயேசுவுக்காக உழைத்தான், மேலும் அவன் செய்த கிரியை இயேசுவின் கிரியைக்கு ஊழியம் செய்வதாகவும் இருந்தது. அவன் வழியை ஆயத்தப்படுத்திய பிறகே, இயேசு தமது கிரியையைத் தொடங்கினார், அந்தக் கிரியை புதியதாகவும், அதிக உறுதியாகவும் மற்றும் விரிவாகவும் இருந்தது. அந்தக் கிரியையின் ஆரம்பப் பகுதியை மட்டுமே யோவான் செய்தான்; புதிய கிரியையின் பெரும்பகுதி இயேசுவால் செய்யப்பட்டது. யோவானும் புதிய கிரியையைச் செய்தான், ஆனால் அவன் ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியவன் அல்ல. யோவான் வாக்குத்தத்தத்தினால் பிறந்தவன், அவனுடைய பெயர் தேவதூதனால் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், சிலர் அவனுடைய தகப்பன் சகரியாவின் பெயரைச் சூட்ட விரும்பினர், ஆனால் அவனது தாயார், “இந்தக் குழந்தை அந்தப் பெயரால் அழைக்கப்பட மாட்டான். அவனை யோவான் என்று அழைக்க வேண்டும்,” என்று கூறினாள். இது எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் கட்டளைப்படி நிகழ்ந்தது. பரிசுத்த ஆவியானவரின் கட்டளைப்படியே இயேசுவுக்கும் பெயர் சூட்டப்பட்டது, அவர் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிறந்தார், மேலும் பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. இயேசு, தேவன், கிறிஸ்து மற்றும் மனுஷகுமாரனாக இருந்தார். யோவானின் கிரியையும் மிகச் சிறந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? இயேசு செய்த கிரியைக்கும் யோவான் செய்த கிரியைக்கும் என்ன வித்தியாசம்? யோவான், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான் என்பதுதான் ஒரே காரணமா? அல்லது இது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதா? யோவான், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்றும் கூறினான், அவன் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தையும் பிரசங்கித்தான், ஆனாலும் அவனுடைய கிரியை மேலும் வளர்ச்சியடையவில்லை, வெறுமனே ஒரு தொடக்கமாக மட்டுமே அமைந்தது. இதற்கு நேர்மாறாக, இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், அதேபோல் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், மேலும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தையும் அவர் நிறைவேற்றினார். அவர் செய்த கிரியை யோவான் செய்ததை விடப் பெரியதாக இருந்தது, மேலும் சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் வந்தார்—கிரியையின் அந்தக் கட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் யோவானைப் பொறுத்தவரை, அவன் வெறுமனே பாதையை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியை சிறப்பானதாக இருந்தாலும், அநேக வார்த்தைகள் கொண்டதாக இருந்தாலும், அவனை ஏராளமான சீஷர்கள் பின்பற்றினார்கள் என்றாலும், அவனுடைய கிரியை மனுஷனுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மனுஷன் ஒருபோதும் அவனிடமிருந்து ஜீவனையோ, வழியையோ, ஆழமான சத்தியங்களையோ பெறவில்லை, மேலும் தேவனின் சித்தத்தைப் பற்றிய புரிதலையும் அவனிடமிருந்து மனுஷன் பெறவில்லை. யோவான் ஒரு சிறந்த தீர்க்கதரிசி (எலியா), அவன் இயேசுவின் கிரியைக்குப் புதிய தளத்தைத் திறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தினான்; அவன் கிருபையின் யுகத்தின் முன்னோடியாக இருந்தான். இத்தகைய விஷயங்களை அவர்களின் சாதாரண மனுஷத் தோற்றங்களைக் கவனிப்பதன் மூலம் வெறுமனே அறிய முடியாது. யோவானும் மிகவும் கணிசமான கிரியையைச் செய்ததால், மேலும் பரிசுத்த ஆவியானவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதால், மற்றும் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டதால் இவை அனைத்தும் பொருத்தமாக இருந்தன. இது அவ்வாறு இருப்பதால், அவர்கள் செய்யும் கிரியையின் மூலம்தான் ஒருவன் அந்தந்த அடையாளங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஏனென்றால் ஒரு மனுஷனின் சாராம்சத்தை அவனது வெளிப்புற தோற்றத்தைக் கண்டு சொல்ல எந்த வழியும் இல்லை, அல்லது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் என்ன என்பதை மனுஷன் அறியும் வழியும் இல்லை. யோவானால் செய்யப்பட்ட கிரியையும், இயேசுவால் செய்யப்பட்ட கிரியையும் வேறுபட்டவை, அவை வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந்தன. இதிலிருந்தே யோவான் தேவனா இல்லையா என்பதை ஒருவன் தீர்மானிக்க முடியும். இயேசுவின் கிரியையானது ஆரம்பிக்க, தொடர மற்றும் முடிவுக்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தேவன் மேற்கொண்டார், அதேசமயம் யோவானின் கிரியை ஒரு தொடக்கத்தைத் தவிர வேறேதுமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில், இயேசு சுவிசேஷத்தைப் பரப்பி, மனந்திரும்புதலுக்கான வழியைப் பிரசங்கித்தார், பின்னர் மனுஷனை ஞானஸ்நானம் செய்யவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், பிசாசுகளை விரட்டவும் செய்தார். இறுதியில், அவர் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டு, யுகம் முழுவதற்குமான தமது கிரியையை நிறைவு செய்தார். அவர் எல்லா இடங்களுக்கும் சென்று, மனுஷரிடம் பிரசங்கித்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார். இந்த விஷயத்தில் அவரும் யோவானும் ஒரே மாதிரியாக இருந்தார்கள், வித்தியாசம் என்னவென்றால், இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், மேலும் கிருபையின் யுகத்தை மனுஷனிடம் கொண்டு வந்தார். கிருபையின் யுகத்தில் மனுஷன் எதைக் கடைப்பிடிக்க வேண்டும், மனுஷன் பின்பற்ற வேண்டிய வழி ஆகியவற்றைப் பற்றிய வார்த்தை அவருடைய வாயிலிருந்து வந்தது, இறுதியில், அவர் மீட்பின் கிரியையை முடித்தார். யோவானால் இந்தக் கிரியையை ஒருபோதும் செய்திருக்க முடியாது. ஆகவே, தேவனின் கிரியையைச் செய்தவர் இயேசுதான், அவரே தேவனாகவும் மற்றும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் இருக்கிறார். வாக்குத்தத்தத்தினால் பிறந்தவர்கள், ஆவியானவரால் பிறந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்படுபவர்கள் மற்றும் புதிய பாதைகளைத் திறப்பவர்கள் என இவர்கள் அனைவருமே தேவன்தான் என்று மனுஷனின் கருத்துக்கள் கூறுகின்றன. இந்தப் பகுத்தறிவின்படி, யோவானும் தேவனாக இருப்பான், மோசே, ஆபிரகாம், தாவீது…, அவர்கள் அனைவரும் தேவனாக இருப்பார்கள். இது ஒரு முழுமையான நகைச்சுவை அல்லவா?

இயேசு தமது ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு, அவரும் பரிசுத்த ஆவியானவர் செய்த எல்லாவற்றிற்கும் ஏற்ப செயல்பட்ட ஒரு சாதாரண மனுஷனாக மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் அவர் தமது சொந்த அடையாளத்தை அறிந்திருந்தாரா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் அவர் கீழ்படிந்தார். அவரது ஊழியம் தொடங்கப்படுவதற்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கிய பின்னர்தான் அவர் அந்த விதிகளையும் அந்த நியாயப்பிரமாணங்களையும் ஒழித்தார், மேலும் அவரது வார்த்தைகள் அதிகாரமும் வல்லமையும் நிறைந்ததாகி அவர் அதிகாரப்பூர்வமாக தமது ஊழியத்தைச் செய்யத் தொடங்கும் வரை அது ஒழிக்கப்படவில்லை. அவர் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கிய பின்னரே புதிய யுகத்தைக் கொண்டுவருவதற்கான அவருடைய கிரியை தொடங்கியது. இதற்கு முன்னர், பரிசுத்த ஆவியானவர் 29 ஆண்டுகளாக இயேசுவிற்குள் மறைந்திருந்தார், அந்த நேரத்தில் அவர் ஒரு மனுஷனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் தேவனின் அடையாளம் இல்லாமலும் இருந்தார். தேவனின் கிரியை இயேசுவின் ஊழியத்தைச் செய்வதிலிருந்தும், அதனை செயல்படுத்துவதிலிருந்தும் தொடங்கியது. மனுஷன் தம்மைப்பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் தமது உள்ளார்ந்த திட்டத்தின்படி கிரியை செய்தார். அவர் செய்த கிரியை தேவனின் நேரடிப் பிரதிநிதித்துவமாகும். அந்த நேரத்தில், இயேசு தம்மைச் சுற்றியுள்ளவர்களிடம், “என்னை யார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நீர் தான் தீர்க்கதரிசிகளில் மிகப் பெரியவர், எங்களுடைய சிறந்த மருத்துவர்,” என்று பதிலளித்தார்கள். மேலும் சிலர், “நீர்தான் எங்களது பிரதான ஆசாரியர்,” என்று பதிலளித்தார்கள். எல்லா வகையான பதில்களும் வழங்கப்பட்டன, சிலர் அவர் யோவான் என்றும், அவர் எலியா என்றும் சொன்னார்கள். பின்னர் இயேசு சீமோன் பேதுருவிடம் திரும்பி, “என்னை யார் என்று நீ கூறுகிறாய்?” என்று கேட்டார். அதற்குப் பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” என்று பதிலளித்தான். அப்போதிருந்து, அவர் தேவன் என்பதை ஜனங்கள் அறிந்தார்கள். அவருடைய அடையாளம் தெரியவந்தபோது, அதை முதலில் அறிந்தவன் பேதுருதான், அது அவனுடைய வாயிலிருந்தே பேசப்பட்டது. பின்னர் இயேசு, “நீ சொன்னது மாம்சத்தினாலும் இரத்தத்தினாலும் வெளிப்படுத்தப்படவில்லை, மாறாக என் பிதாவினால் வெளிப்படுத்தப்பட்டது,” என்று கூறினார். அவருடைய ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து, மற்றவர்கள் இதை அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் செய்த கிரியைகள் தேவனின் சார்பாகவே செய்யப்பட்டன. அவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்த வரவில்லை, தமது கிரியையைச் செய்வதற்காகவே வந்திருந்தார். பேதுரு அதைப் பற்றிப் பேசிய பிறகுதான் அவருடைய அடையாளம் வெளிப்படையாக அறியப்பட்டது. அவர் தான் தேவன் என்பதை நீ அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும், சரியான நேரம் வந்தவுடன், அவர் தமது கிரியையைத் தொடங்கினார். நீ அதை அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும், அவர் முன்பு போலவே தமது கிரியைகளைச் செயல்படுத்தினார். நீ அதை மறுத்தாலும், அவர் தனதுக் கிரியைகளைச் செய்வார், செய்ய வேண்டிய நேரத்தில் அதைச் செய்வார். அவர் மனுஷன் அவரது மாம்சத்தை அறிந்துகொள்வதற்காக வரவில்லை, மாறாக மனுஷன் அவருடைய கிரியையைப் பெறுவதற்காகவும், தம்முடையக் கிரியையைச் செய்வதற்காகவும் தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்காகவும்தான் வந்தார். இந்த நாளுக்கான கிரியையின் கட்டம் தேவனின் கிரியைதான் என்பதை நீ கண்டுணரத் தவறிவிட்டால், அதற்குக் காரணம் உனக்குப் பார்வை இல்லாததுதான். ஆனாலும், கிரியையின் இந்தக் கட்டத்தை உன்னால் மறுக்க முடியாது; நீ அதைக் கண்டுணரத் தவறியது பரிசுத்த ஆவியானவர் செயல்படவில்லை என்பதையோ அல்லது அவருடைய கிரியை தவறானது என்பதையோ நிரூபிக்கவில்லை. வேதாகமத்தில் இருக்கும் இயேசுவின் கிரியைகளையும் நிகழ்காலக் கிரியைகளையும் சரிபார்த்து, அதிலிருக்கும் முரண்பாட்டைக் கொண்டு கிரியையின் இந்தக் கட்டத்தை மறுப்பவர்களும் உள்ளனர். இது குருடர்களின் செயல் அல்லவா? வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் குறைவானவை; அவற்றால் தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நான்கு சுவிசேஷங்களிலும் நூற்றுக்கும் குறைவான அதிகாரங்களே உள்ளன, அவற்றில் இயேசு அத்தி மரத்தை சபிப்பது, பேதுரு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தது, இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து சீஷர்களுக்கு காட்சியளித்தது, உபவாசத்தைப் பற்றி போதித்தது, ஜெபத்தைப் பற்றி போதித்தது, விவாகரத்து பற்றி போதித்தது, இயேசுவின் பிறப்பு மற்றும் பரம்பரை, இயேசு தமது சீஷர்களை நியமித்தது மற்றும் பல என இதுபோன்ற வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும், மனுஷன் அவற்றைப் பொக்கிஷங்களாக மதிப்பிடுகிறான், இன்றைய கிரியைகளை அவற்றிற்க்கு எதிராக ஒப்பிடுகிறான். இயேசு தம் ஜீவிதத்தில் செய்த எல்லாக் கிரியைகளும் இவ்வளவுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஏதோ தேவன் இதை மட்டுமே செய்ய வல்லவர், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதவர் என்பதைப் போல. இது அபத்தமானது இல்லையா?

இயேசு பூமியில் இருந்த காலம் முப்பத்து மூன்றரை ஆண்டுகள், அதாவது அவர் பூமியில் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தார். இந்தக் காலத்தில் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே அவருடைய ஊழியத்தைச் செய்ய செலவிடப்பட்டன; மீதமுள்ள காலம் அவர் ஒரு சாதாரண மனுஷ ஜீவிதத்தை ஜீவித்தார். ஆரம்பத்தில், அவர் ஜெப ஆலயத்தில் நடக்கும் ஊழியங்களில் கலந்துகொண்டார், அங்கே அவர் ஆசாரியர்கள் வேதவசனங்களை விளக்கிக் கூறுவதையும் மற்றவர்களின் பிரசங்கங்களையும் கேட்டார். அவர் வேதாகமத்தைப் பற்றிய அதிக அறிவைப் பெற்றார்: அவர் அத்தகைய அறிவுடன் பிறக்கவில்லை, வாசித்தல் மற்றும் கேட்பதன் மூலம் மட்டுமே அதைப் பெற்றார். அவர் பன்னிரெண்டாவது வயதில் ஜெப ஆலயத்தில் இருந்த ஆசிரியர்களிடம் கேள்விகளைக் கேட்டார் என்று வேதாகமத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது: பண்டைய தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் என்னென்ன? மோசேயின் நியாயப்பிரமாணங்கள் என்னென்ன? பழைய ஏற்பாடு என்றால் என்ன? ஆலயத்தில் ஆசாரிய உடையில் தேவனுக்கு ஊழியம் செய்யும் மனுஷன் யார்? … என அவர் பல கேள்விகளைக் கேட்டார், ஏனென்றால் அவருக்கு அறிவோ புரிதலோ இருக்கவில்லை. அவர் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டாலும், அவர் முற்றிலும் ஒரு சாதாரண மனுஷனாகவே பிறந்தார்; அவரிடம் சில சிறப்புப் பண்புகள் இருந்தபோதிலும், அவர் இன்னும் ஒரு சாதாரண மனுஷனாகவே இருந்தார். அவரது ஞானம், அவரது அந்தஸ்து மற்றும் வயதுக்கு ஏற்ப தொடர்ந்து வளர்ந்தது, மேலும் அவர் ஒரு சாதாரண மனுஷனுடைய ஜீவிதத்தின் கட்டங்களைக் கடந்து சென்றார். ஜனங்களின் கற்பனையில், இயேசு குழந்தைப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும் அனுபவித்ததில்லை; அவர் பிறந்தவுடனேயே ஒரு முப்பது வயது மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்கத் தொடங்கினார், அவருடைய கிரியை முடிந்ததும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர் ஒரு சாதாரண மனுஷனுடைய ஜீவிதத்தின் கட்டங்களைக் கடந்து செல்லவில்லை; அவர் மற்றவர்களுடன் சேர்ந்து புசிக்கவில்லை அல்லது மற்றவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை, மேலும் அவரைக் காண்பது ஜனங்களுக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை. அவர் அநேகமாக சித்தப்பிரம்மை பிடித்தவர், அவரைப் பார்த்தவர்களை அவர் பயமுறுத்துவார், ஏனென்றால் அவர் தேவனாக இருந்தார். மாம்சத்தில் வரும் தேவன் நிச்சயமாக ஒரு சாதாரண மனுஷனைப் போல ஜீவித்திருக்க மாட்டார் என்று ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள்; அவர் பரிசுத்தமானவர் என்பதால், அவர் பல் துலக்காமலும் அல்லது முகத்தைக் கழுவாமலும் கூட அவர் தூய்மையானவராக இருப்பார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். இவை முற்றிலும் மனுஷனின் கருத்துக்கள் அல்லவா? ஒரு மனுஷனாக இயேசுவின் ஜீவிதத்தைப் பற்றி வேதாகமம் எதையும் பதிவும் செய்யவில்லை, அவருடைய கிரியைகளை மட்டுமே பதிவு செய்திருந்தது, ஆனாலும் இது அவருக்கு சாதாரண மனுஷத்தன்மை இருக்கவில்லை என்பதையும் அல்லது முப்பது வயதிற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண மனுஷ ஜீவிதத்தை ஜீவித்திருக்கவில்லை என்பதையும் நிரூபிக்கவில்லை. அவர் தனது 29 வயதில் அதிகாரப்பூர்வமாக தனது கிரியைகளைத் தொடங்கினார், ஆனால் அந்த வயதிற்கு முன்னர் ஒரு மனுஷனாக இருந்த அவருடைய முழு ஜீவிதத்தையும் உன்னால் புறந்தள்ள முடியாது. வேதாகமம் அந்தக் குறிப்பிட்டக் காலத்தை அதன் பதிவுகளிலிருந்து தவிர்த்தது; இது ஒரு சாதாரண மனுஷனாக அவர் ஜீவித்திருந்த ஜீவிதம் தான், அவருடைய தெய்வீகக் கிரியைகளின் காலம் அல்ல என்பதால், அதை எழுத வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யவில்லை, ஆனால் இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யவிருந்த நாள் வரை அவரை ஒரு சாதாரண மனுஷனாகவே அவரது ஜீவிதத்தில் பராமரித்தார் பரிசுத்த ஆவியானவர். அவர் மாம்சமாகிய தேவனாக இருந்தபோதிலும், ஒரு சாதாரண மனுஷனைப் போலவே முதிர்ச்சியடையும் செயல்முறையை அவர் மேற்கொண்டார். அந்த முதிர்ச்சிக்கான செயல்முறை வேதாகமத்திலிருந்து தவிர்க்கப்பட்டது. அது மனுஷனின் ஜீவிதத்தில் வளர்ச்சிக்குப் பெரிய உதவியை வழங்க முடியாததால் தவிர்க்கப்பட்டது. அவருடைய ஞானஸ்நானத்திற்கு முந்தைய காலம் ஒரு மறைக்கப்பட்ட காலமாகும், அதில் அவர் எந்தவித அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்யவில்லை. இயேசுவின் ஞானஸ்நானத்திற்குப் பிறகுதான் அவர் மனுஷகுலத்திற்கான மீட்பின் அனைத்துக் கிரியைகளையும் தொடங்கினார், அந்தக் கிரியைகள் ஏராளமானவற்றையும் மற்றும் கிருபையும் கொண்டதாகவும், சத்தியம், அன்பு மற்றும் கருணை நிறைந்த கிரியைகளாகவும் இருந்தன. இந்தக் கிரியைகளின் ஆரம்பமே கிருபையின் யுகத்தின் தொடக்கமாக இருந்தது; அந்தக் காரணத்திற்காக, அது எழுதப்பட்டு தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது கிருபையின் யுகத்தின் பாதையிலும் சிலுவையின் பாதையிலும் நடக்க கிருபையின் யுகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாதையைத் திறந்து அனைவருக்கும் பலனளிப்பதாக இருந்தது. மனுஷனால் எழுதப்பட்டப் பதிவுகளிலிருந்து அது வெளிவந்தாலும், எல்லாமே உண்மைதான், ஆனாலும் இங்கேயும் அங்கேயும் சிறிய பிழைகள் காணப்படுகின்றன. அப்படியிருந்தும், இந்தப் பதிவுகள் பொய்யானவை என்று கூற முடியாது. பதிவுசெய்யப்பட்ட விஷயங்கள் முற்றிலும் உண்மையானவை, அவற்றை எழுதுவதில் மட்டுமே ஜனங்கள் பிழைகள் செய்தார்கள். இயேசு சாதாரண மற்றும் இயல்பான மனுஷகுலத்தில் ஒருவராக இருந்திருந்தால், அவர் எவ்வாறு அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்ய வல்லவராக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். இயேசு அனுபவித்த நாற்பது நாட்கள் சோதனையானது அற்புதத்திற்கான அறிகுறியாகும், இதனை ஒரு சாதாரண மனுஷனால் அடைந்திருக்க இயலாது. அவருடைய நாற்பது நாட்கள் சோதனையானது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் தன்மையில் இருந்தது; அப்படியானால், அவரிடம் தெய்வீகத்தன்மை கொஞ்சமும் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அறிகுறிகளையும் அதிசயங்களையும் செய்வதற்கான அவரது திறன், அவர் ஒரு ஆழமான மனுஷன், சாதாரண மனுஷன் அல்ல என்பதை நிரூபிக்கவில்லை; பரிசுத்த ஆவியானவர் அவரைப் போன்ற ஒரு சாதாரண மனுஷனில் கிரியை செய்தார், அதனால் அவருக்கு அற்புதங்களைச் செய்வதற்கும் இன்னும் பெரியக் கிரியைகளைச் செய்வதற்கும் அது சாத்தியமானது. இயேசு தம்முடைய ஊழியத்தை செய்வதற்கு முன்பு, அல்லது வேதாகமம் சொல்வது போல், பரிசுத்த ஆவியானவர் இயேசு மீது இறங்குவதற்கு முன்பு, இயேசு ஒரு சாதாரண மனுஷனாகவே இருந்தார், எந்த வகையிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டவராக இருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்கியபோது, அதாவது, அவர் தம்முடைய ஊழியத்தின் செயல்பாட்டைத் தொடங்கியபோது, அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவராக மாறியிருந்தார். இவ்வாறாக, மாம்சமாகிய தேவனிடம் சாதாரண மனுஷத்தன்மை இல்லை என்று மனுஷன் விசுவாசிக்கிறான்; மேலும், மாம்சமாகிய தேவனுக்கு தெய்வீகத்தன்மை மட்டுமே இருக்கிறது, மனுஷத்தன்மை இல்லை என்று அவன் தவறாக நினைக்கிறான். நிச்சயமாக, தேவன் தனது கிரியையைச் செய்ய பூமிக்கு வரும்போது, எல்லா மனுஷரும் தெய்வீக நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதும், அவர்கள் செவிகளால் கேட்பதும் என அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன, ஏனென்றால் அவருடைய கிரியைகளும் அவருடைய வார்த்தைகளும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் அடையமுடியாதவையாகவும் இருக்கின்றன. பரலோத்திற்குச் சொந்தமான ஏதேனும் ஒன்று பூமிக்குக் கொண்டுவரப்பட்டால், அது இயற்கைக்கு அப்பாற்பட்டதே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? பரலோகராஜ்யத்தின் மறைபொருட்கள் பூமிக்குக் கொண்டுவரப்படும்போது, மிகவும் அதிசயமான மற்றும் புத்திசாலித்தனமான மறைபொருட்கள், மனுஷனால் புரிந்துகொள்ளமுடியாத மற்றும் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்கள்—அவை அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை அல்லவா? இருப்பினும், அவை எவ்வளவு இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், அனைத்தும் அவருடைய சாதாரண மனுஷத்தன்மையினால் மேற்கொள்ளப்படுகின்றன என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும். மாம்சமாகிய தேவன் மனுஷத்தன்மையைக் கொண்டிருக்கிறார்; இல்லையென்றால், அவர் மாம்சமாகிய தேவனாக இருந்திருக்க மாட்டார். இயேசு தம் காலத்தில் பல அற்புதங்களைச் செய்தார். அக்கால இஸ்ரவேலர் கண்டது இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்; அவர்கள் தேவதூதர்களையும் தூதர்களையும் கண்டார்கள், அவர்கள் யேகோவாவின் குரலைக் கேட்டார்கள். இவை அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை அல்லவா? நிச்சயமாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களால் மனுஷனை ஏமாற்றும் சில பொல்லாத ஆவிகளும் இன்று உள்ளன; அது பரிசுத்த ஆவியானவரால் தற்போது செய்யப்படாத கிரியையின் மூலம் மனுஷனை ஏமாற்றும் அவர்களின் பங்கில் உள்ள போலித்தோற்றமே தவிர வேறில்லை. அநேகர் அற்புதங்களைச் செய்கிறார்கள், நோயுற்றவர்களைக் குணமாக்குகிறார்கள் மற்றும் பிசாசுக்களை விரட்டுகிறார்கள்; இவை பொல்லாத ஆவிகளின் கிரியையே தவிர வேறில்லை, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் இனிமேல் இதுபோன்ற கிரியைகளைச் செய்யமாட்டார், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை அன்றிலிருந்து பின்பற்றிய அனைவருமே உண்மையில் பொல்லாத ஆவிகள்தான். அந்த நேரத்தில் இஸ்ரவேலில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கிரியைகளும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கிரியைகளாக இருந்தன, இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் இப்போது அப்படி செயல்படுவதில்லை, மேலும் இப்போது செய்யப்படும் அதுபோன்ற எந்தக் கிரியையும் சாத்தானின் போலித்தோற்றமும், மாறுவேடமும் அவனது தொந்தரவாகவும்தான் இருக்கின்றன. ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்தும் பொல்லாத ஆவிகளிடமிருந்து வருகிறது என்று உன்னால் சொல்ல முடியாது—இது தேவனுடைய கிரியையின் யுகத்தைப் பொறுத்தது. மாம்சமாகிய தேவன் இன்றைய நாளில் செய்த கிரியையைக் கவனியுங்கள்: அதன் எந்த அம்சம் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இல்லை? அவருடைய வார்த்தைகள் உன்னால் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியாதவை, மேலும் அவர் செய்யும் கிரியையை எந்த மனுஷனும் செய்ய முடியாது. அவர் புரிந்துகொள்வதை மனுஷனால் புரிந்துகொள்ள முடியாது, மேலும் அவருடைய அறிவைப் பொறுத்தவரை, அது எங்கிருந்து வருகிறது என்று மனுஷனுக்குத் தெரியாது. சிலர், “உம்மைப் போலவே நானும் இயல்பானவன், ஆனால் நீர் அறிந்ததை நான் அறியாதது எப்படி? உம்மைவிட எனக்கு வயதும் அனுபவமும் அதிகம், ஆனாலும் நான் அறியாததை நீர் எப்படி அறிந்திருக்கிறீர்?” என்று கேட்கிறார்கள். இவை அனைத்தும், மனுஷனைப் பொருத்தவரை, மனுஷனால் அடைய வழி இல்லாத ஒன்று. பின்னர், “இஸ்ரவேலில் மேற்கொள்ளப்பட்ட கிரியையைப் பற்றி யாருக்கும் தெரியாது, வேதாகமத்தின் விளக்கவுரையாளர்களால் கூட எந்த விளக்கமும் அளிக்க முடியாது; உமக்கு மட்டும் எப்படித் தெரியும்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை அல்லவா? அவருக்கு அதிசயங்கள் செய்த அனுபவம் இல்லை, ஆனாலும் அவர் அனைத்தையும் அறிவார்; அவர் மிக எளிதாகச் சத்தியத்தைப் பேசுகிறார், அதை வெளிப்படுத்துகிறார். இது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்லவா? மாம்சத்தால் செய்யக்கூடியதை மீறுவதாகவே அவருடைய கிரியை எப்போதும் இருக்கிறது. மாம்சத்தாலான சரீரத்தைக் கொண்ட எந்தவொரு மனுஷனின் சிந்தனையாலும் அதை அடையமுடியாது, மேலும் அதனால் மனுஷனின் மனதை நியாயப்படுத்தவும் முடியாது. அவர் ஒருபோதும் வேதாகமத்தை வாசித்ததில்லை என்றாலும், இஸ்ரவேலில் தேவனின் கிரியையை அவர் புரிந்துகொள்கிறார். அவர் பேசும்போது பூமியின் மீது நின்றாலும், அவர் மூன்றாவது வானத்தின் மறைபொருட்களைப் பற்றியே பேசுகிறார். மனுஷன் இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, இந்த உணர்வு அவனை வெல்லும்: “இது மூன்றாவது வானத்தின் மொழி அல்லவா?” இவை அனைத்தும் ஒரு சாதாரண மனுஷன் அடையக்கூடியதை விட அதிகமானவை அல்லவா? அந்த நேரத்தில், இயேசு நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தபோது, அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லையா? நாற்பது நாட்கள் உபவாசம் இருப்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டதுதான், அது பொல்லாத ஆவிகளின் செயல் என்று நீ சொன்னால், நீ இயேசுவைக் கண்டிப்பதாக இல்லையா? அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு, இயேசு ஒரு சாதாரண மனுஷனைப் போல இருந்தார். அவரும் பள்ளிக்குச் சென்றார்; வேறு எப்படி அவரால் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டிருக்க முடியும்? தேவன் மாம்சத்தில் வந்தபோது, ஆவியானவர் மாம்சத்திற்குள் மறைந்திருந்தார். ஆயினும்கூட, ஒரு சாதாரண மனுஷனாக இருந்ததால், அவர் தம்மை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகிய செயல்முறைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது, மேலும், அவருடைய அறிவாற்றல் திறன் முதிர்ச்சியடையும் வரை, அவர் விஷயங்களை அறிந்துகொள்ளும் வரை, அவர் ஒரு சாதாரண மனுஷனாகத்தான் கருதப்பட்டார். அவருடைய மனுஷத்தன்மை முதிர்ச்சியடைந்த பின்னர்தான் அவரால் அவருடைய ஊழியத்தைச் செய்ய முடிந்தது. அவருடைய சாதாரண மனுஷத்தன்மையானது இன்னும் முதிர்ச்சியடையாத நிலையிலும், அவருடைய பகுத்தறிவு நிலையில்லாமல் இருக்கும்போதும் எப்படி அவரால் அவருடைய ஊழியத்தைச் செய்திருக்க முடியும்? ஆறு அல்லது ஏழு வயதில் அவருடைய ஊழியத்தை அவர் செய்வார் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்க முடியாது! தேவன் முதன்முதலில் மாம்சத்தில் வந்தபோது அவர் ஏன் வெளிப்படையாகத் தம்மை வெளிப்படுத்தவில்லை? ஏனென்றால், அவருடைய மாம்சத்தின் மனுஷத்தன்மையானது இன்னும் முதிர்ச்சியடையாமல் இருந்தது; அவருடைய மாம்சத்தின் அறிவாற்றல் செயல்முறைகள், அதே போல், இந்த மாம்சத்தின் சாதாரண மனுஷத்தன்மை ஆகியவை முழுமையாக அவர்வசம் இருக்கவில்லை. இந்தக் காரணத்திற்காக, அவர் சாதாரண மனுஷத்தன்மையையும் ஒரு சாதாரண மனுஷனின் பொது அறிவையும் கொண்டிருக்க வேண்டும் என்பது அத்தியாவசியத் தேவையாக இருந்தது—அவர் தனது கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு, மாம்சத்தில் அவருடைய கிரியையைச் செய்ய அவர் போதுமான அளவு திறன்களைக் கொண்டிருந்தார். அவர் இந்தக் கிரியைக்குச் சமமான ஒருவராக இல்லாதிருந்திருந்தால், அவர் தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடைவது அவசியமாக இருந்திருக்கும். ஏழு அல்லது எட்டு வயதில் இயேசு தமது கிரியையைத் தொடங்கியிருந்தால், மனுஷன் அவரை ஒரு அதிசயமாகக் கருதியிருக்க மாட்டான் அல்லவா? சகல ஜனங்களும் அவரை ஒரு குழந்தையாக நினைத்திருப்பார்கள் அல்லவா? அவர் பொருத்தமானவர் தான் என்பதை யார் விசுவாசித்திருப்பார்கள்? பின்னால் இருக்கும் மேடையை விட உயரம் குறைந்த ஏழு அல்லது எட்டு வயதுடைய ஒரு குழந்தை—அவர் பிரசங்கிக்கத் தகுதியுடையவராக இருந்திருப்பாரா? அவரது சாதாரண மனுஷத்தன்மை முதிர்ச்சியடைவதற்கு முன்பு, அவர் கிரியை செய்யத் தகுதியற்றவராக இருந்தார். இதுவரை முதிர்ச்சியடையாத அவரது மனுஷத்தன்மையைப் பொருத்தவரை, கிரியையின் ஒரு பகுதியை வெறுமனே அடையமுடியாததாக இருந்தது. மாம்சத்தில் தேவனுடைய ஆவியானவரின் கிரியை அதன் சொந்தக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. அவர் சாதாரண மனுஷத்தன்மையுடன் இருந்தால்தான், அவர் கிரியையை மேற்கொண்டு, பிதாவின் பொறுப்பை ஏற்க முடியும். அப்போதுதான் அவர் தமது கிரியையைத் தொடங்க முடியும். இயேசு தமது குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது, பண்டைய காலங்களில் நிகழ்ந்தவற்றைப் பற்றி அவரால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் ஜெப ஆலயத்தில் இருந்த ஆசாரியர்களைக் கேட்டறிந்ததன் மூலமே அவர் புரிந்துகொண்டார். அவர் பேசக் கற்றுக்கொண்டவுடனேயே அவர் தமது கிரியையைத் தொடங்கியிருந்தால், அவர் தவறு செய்யாமல் இருப்பது எப்படி சாத்தியமாக இருந்திருக்கும்? தேவனால் எவ்வாறு தவறாக வழிநடத்த முடியும்? ஆகையால், அவர் கிரியை செய்ய முடிந்த பின்னர்தான் அவர் தனது கிரியையைத் தொடங்கினார்; கிரியை செய்யத் தேவையான விஷயங்களைப் பெற்ற பின்னரே அவர் கிரியை செய்யத் தொடங்கினார். 29 வயதில், இயேசு மிகவும் முதிர்ச்சியடைந்தவராக இருந்தார், அவர் செய்ய வேண்டிய கிரியையை மேற்கொள்ள அவருடைய மனுஷத்தன்மை போதுமானதாக இருந்தது. அதன் பின்னர்தான் தேவனின் ஆவியானவர் அதிகாரப்பூர்வமாக அவரிடத்தில் கிரியை செய்யத் தொடங்கினார். அந்த நேரத்தில், யோவான் இயேசுவுக்கான பாதையைத் திறப்பதற்காக ஏழு ஆண்டுகளாகத் தயாராகிக்கொண்டு இருந்தான், மேலும் அவனது கிரியை முடிந்தவுடன், அவன் சிறையில் தள்ளப்பட்டான். பின்னர் அந்தச் சுமை முழுக்க முழுக்க இயேசுவின் மீது விழுந்தது. அவருடைய மனுஷத்தன்மை முதிர்ச்சியடையாத நேரத்தில், அவர் இளம் பருவத்தில் நுழைந்திருந்த நேரத்தில், இன்னும் பல விஷயங்கள் அவருக்குப் புரிந்திராத காலத்தில், அதாவது அவர் 21 அல்லது 22 வயதில் இந்தக் கிரியையை மேற்கொண்டிருந்தால், அவரால் கட்டுப்பாட்டை எடுக்க முடியாமல் போயிருக்கும். அந்த நேரத்தில், இயேசு தம்முடைய கிரியையைத் தொடங்குவதற்கு முன்பே யோவான் தனது கிரியையைச் செய்திருந்தான், அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே நடுத்தர வயதில் இருந்தார். அந்த வயதில், அவர் செய்ய வேண்டிய கிரியையை மேற்கொள்ள அவரது சாதாரண மனுஷத்தன்மை போதுமானதாக இருந்தது. இப்போது, மாம்சமாகிய தேவனுக்கும் சாதாரண மனுஷத்தன்மை இருக்கிறது, உங்களிடையே இருக்கும் வயதானவர்களுடன் ஒப்பிடுகையில் இது முதிர்ச்சியடையாத போதிலும், அவருடைய கிரியையை மேற்கொள்ள இந்த மனுஷத்தன்மை போதுமானதாக இருக்கிறது. இன்றைய கிரியையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இயேசுவின் காலத்தில் இருந்தது போல் இல்லை. இயேசு ஏன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்? அவருடைய கிரியைக்கு ஆதரவாகவும், அதனுடன் ஒத்துப்போகவும்தான் தேர்ந்தெடுத்தார். ஒருபுறம், அந்தத் தருணத்தில் அவருடைய கிரியைக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும், மறுபுறம் பின்வரும் நாட்களில் அவருடைய கிரியைகளுக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும்தான் தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் செயல்படுத்திய கிரியைக்கு இணங்க, பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பது இயேசுவின் சித்தமாக இருந்தது, அது தேவனின் சித்தமாக இருந்தது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்து, எல்லா இடங்களிலும் பிரசங்கிக்க அவர்களை வழிநடத்த வேண்டும் என்று அவர் விசுவாசித்தார். ஆனால் இன்று உங்களிடையே இது தேவையில்லை! மாம்சமாகிய தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, பல கொள்கைகளும், மனுஷனுக்கு வெறுமனே புரியாத பல விஷயங்களும் உள்ளன; மனுஷன் தேவனை அறிந்துகொள்ள அல்லது தேவனிடம் அதிகப்படியான கோரிக்கைகளை வைக்க தனது சொந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறான். ஆயினும்கூட, இன்றுவரை, அநேகர் தங்கள் அறிவு தங்கள் சொந்தக் கருத்துக்களால் மட்டுமே ஆனவை என்பதை அறிந்திருக்கவில்லை. தேவன் மாம்சமாகிய யுகம் அல்லது இடம் எதுவாக இருந்தாலும், மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான கொள்கைகள் மாறாமல் இருக்கின்றன. அவரால் மாம்சமாக மாற முடியாமல், அவருடைய கிரியையில் மாம்சத்தை மீற முடியாது; அவரால் மாம்சமாக மாற முடியாமல், மாம்சத்தின் சாதாரண மனுஷத்தன்மையை வைத்துக் கிரியை செய்ய முடியாது. இல்லையெனில், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் ஒன்றுமில்லாமல் கரைந்துவிடும், மேலும் வார்த்தை மாம்சமாக மாறும் என்பது முற்றிலும் அர்த்தமற்றதாகிவிடும். மேலும், பரலோகத்திலுள்ள பிதாவுக்கு மட்டுமே (ஆவியானவர்) மாம்சமாகிய தேவனைப் பற்றித் தெரியும், வேறு யாரும், மாம்சத்திற்கோ அல்லது பரலோகத் தூதர்களுக்கோ கூட தெரியாது. இது இவ்வாறாக இருக்கும்போது, மாம்சத்தில் தேவனின் கிரியை மிகவும் சாதாரணமானதாக இருக்கிறது, மேலும் வார்த்தை உண்மையில் மாம்சமாகிவிட்டது என்பதை நிரூபிக்கச் சிறந்ததாக இருக்கிறது, மற்றும் மாம்சம் என்பது ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷன் என்று பொருளாகிறது.

சிலர், “ஏன் தேவன் மட்டுமே யுகத்தைத் தொடங்கிவைக்க வேண்டும்? ஒரு சிருஷ்டியால் அவருக்குப் பதிலாக அதைச் செய்ய முடியாதா?” என்று ஆச்சரியப்படலாம். ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் வெளிப்படையான நோக்கத்திற்காக தேவன் மாம்சமாகிறார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிச்சயமாக, அவர் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும்போது, அதே நேரத்தில் அவர் முந்தைய யுகத்தை முடித்திருப்பார். தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்; அவரே தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைத்துக்கொள்வதால், அவர் தான் முந்தைய யுகத்தை முடித்துவைக்க வேண்டும். சாத்தானை அவர் தோற்கடித்ததற்கும், உலகை அவர் ஜெயங்கொண்டதற்கும் அதுவே சான்று. ஒவ்வொரு முறையும் அவர் மனுஷரிடையே கிரியை செய்யும்போது, அது ஒரு புதிய யுத்தத்தின் தொடக்கமாக இருக்கிறது. புதிய கிரியையின் ஆரம்பம் இல்லாவிட்டால், இயற்கையாகவே பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இருக்காது. பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இல்லாதபோது, சாத்தானுடனான யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது. தேவன் அவராகவே வந்து மனுஷரிடையே புதிய கிரியைகளைச் செய்தால் மட்டுமே, மனுஷனால் சாத்தானுடைய ஆதிக்க வரம்பின் கீழ் முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய ஜீவிதத்தையும் புதிய தொடக்கத்தையும் பெற முடியும். இல்லையெனில், மனுஷன் என்றென்றும் முதுமையிலேயே ஜீவித்திருப்பான், என்றென்றும் சாத்தானின் பழைய அதிகாரத்தின் கீழ்தான் ஜீவித்திருப்பான். தேவன் வழிநடத்தும் ஒவ்வொரு யுகத்திலும், மனுஷனின் ஒரு பகுதி விடுவிக்கப்படுகிறது, இதனால் மனுஷன் தேவனின் கிரியையுடன் புதிய யுகத்தை நோக்கி முன்னேறுகிறான். தேவனின் ஜெயம் என்பது அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைத்த ஜெயம் என்று பொருள். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷகுலத்தின் இனமானது யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அது மனுஷனின் அல்லது சாத்தானின் கண்ணோட்டத்தில், தேவனை எதிர்ப்பது அல்லது காட்டிக்கொடுப்பது போலாகும், தேவனுக்குக் கீழ்ப்படிவதாக இருக்காது, மேலும் மனுஷனின் கிரியை சாத்தானுக்கு ஒரு கருவியாக மாறும். தேவனால் தொடங்கப்பட்ட ஒரு யுகத்தில் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றினால் மட்டுமே சாத்தான் முழுமையாக நம்புவான், ஏனென்றால் அதுவே ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையாகும். ஆகையால், நீங்கள் பின்பற்றவும் கீழ்ப்படியவும் வேண்டும் என்று நான் சொல்கிறேன், உங்களிடம் இருந்து அதற்குமேல் எதுவும் தேவையில்லை. இதுதான் ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்வது மற்றும் ஒவ்வொருவரும் அந்தந்த செயல்பாட்டைச் செய்வது என்பதன் அர்த்தமாகும். தேவன் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறார், அதற்குப் பதிலாக மனுஷன் அதைச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரின் கிரியையில் அவர் பங்கேற்பதும் இல்லை. மனுஷன் தன் கடமையைச் செய்கிறான், தேவனின் கிரியையில் அவன் பங்கேற்பதில்லை. இதுவே கீழ்ப்படிதல், மற்றும் சாத்தானின் தோல்விக்கான சான்று. தேவன் புதிய யுகத்தைத் தொடங்கியபின், அவர் இனி மனுஷகுலத்தின் மத்தியில் கிரியை செய்ய வரப்போவதில்லை. அப்போதுதான், மனுஷன் தனது கடமையைச் செய்வதற்கும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனுக்கான தனது கிரியையைச் செய்வதற்கும் அதிகாரப்பூர்வமாகப் புதிய யுகத்திற்குள் நுழைகிறான். தேவன் கிரியை செய்யும் கொள்கைகள் இவைதான், இவற்றை யாரும் மீறக்கூடாது. இவ்வாறாக கிரியை செய்வது மட்டுமே விவேகமானதும், நியாயமானதும் ஆகும். தேவனின் கிரியை தேவனால்தான் செய்யப்பட வேண்டும். அவர்தான் தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைக்கிறார், அவரே அவருடைய கிரியையை நிறைவு செய்கிறார். அவர்தான் கிரியையைத் திட்டமிடுகிறார், அதை நிர்வகிப்பவரும் அவரே, அதற்கும் மேலாக, அவர்தான் கிரியையை பலனடையவும் வைக்கிறார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; விதைப்பவனும் நானே, அறுவடை செய்பவனும் நானே.” தேவனுடைய நிர்வகித்தல் கிரியைகள் அனைத்தும் தேவனாலே செய்யப்படுகின்றன. ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் ராஜா அவர்; அவருக்குப் பதிலாக எவராலும் அவருடைய கிரியையைச் செய்ய முடியாது, அவருடைய கிரியையை யாராலும் முடிவிற்குக் கொண்டுவரவும் முடியாது, ஏனென்றால் எல்லாவற்றையும் தம் கையில் வைத்திருப்பவர் அவரே. உலகை சிருஷ்டித்த அவர், உலகம் முழுவதையும் அவருடைய வெளிச்சத்தில் ஜீவித்திருக்க வழிநடத்துவார், மேலும் அவர் முழு யுகத்தை நிறைவும் செய்வார், இதன் மூலம் அவருடைய முழு திட்டமும் பலனைக் கொண்டுவரும்!

முந்தைய: தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)

அடுத்த: மாம்சமாகியதன் மறைபொருள் (2)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக