மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்

பிரபஞ்சம் முழுவதிலும் தன் கிரியையின் தொடக்கத்திலிருந்தே, தேவன் அனைத்துத் தரப்பிலான ஜனங்கள் உட்பட, பல ஜனங்களைத் தனக்கு ஊழியம் செய்வதற்காக முன்குறித்திருக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதும், அவருடைய கிரியையை பூமியில் சுமூகமாக நிறைவேற்றுவதுமே அவருடைய நோக்கமாகும். இதுவே ஊழியம் செய்வதற்காக ஜனங்களைத் தெரிந்துகொள்வதில் தேவனுடைய நோக்கமாகும். தேவனுக்கு ஊழியம் செய்கிற ஒவ்வொருவரும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய இந்த கிரியை தேவனுடைய ஞானத்தையும், சர்வவல்லமையையும், பூமியில் அவருடைய கிரியையின் கோட்பாடுகளையும், ஜனங்களுக்கு மேலும் தெளிவாக்குகிறது. தேவன் அவருடைய கிரியையைச் செய்வதற்கும், ஜனங்களோடு ஈடுபட்டு, அதனால் அவருடைய செயல்களை அவர்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொள்வதற்குமே உண்மையில் இந்த பூமிக்கு வந்திருக்கிறார். இன்றைக்கு, இந்த ஜனக்கூட்டமாகிய நீங்கள் நடைமுறை தேவனுக்கு ஊழியம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் தேவனால் எழுப்பப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குக் கணக்கிட முடியாத ஆசீர்வாதமாகும். தனக்கு ஊழியம் செய்ய ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய சொந்தக் கோட்பாடுகள் தேவனுக்கு எப்பொழுதும் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது, ஜனங்கள் கற்பனை செய்வதுபோல், எவ்வகையிலும் வெறுமனே ஓர் உற்சாகமான விஷயம் அல்ல. இன்றைக்கு தேவனுக்கு முன் ஊழியம் செய்பவர்கள் எல்லாரும் தேவனுடைய வழிநடத்துதல் மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை தங்களிடத்தில் இருப்பதாலும், சத்தியத்தைப் பின்தொடரும் ஜனங்களாக அவர்கள் இருப்பதாலும் அப்படிச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தேவனுக்கு ஊழியம் செய்கிற அனைவருக்கும் இவை குறைந்தபட்ச நிபந்தனைகளாகும்.

தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான வேலை கிடையாது. நேர்மையற்ற மனநிலை மாறாமல் இருக்கிறவர்கள் ஒருபோதும் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. உன்னுடைய மனநிலை தேவனுடைய வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் இருந்தால், உன் மனநிலை இன்னும் சாத்தானையே பிரதிபலிக்கிறது. உன்னுடைய சொந்த, நல்ல நோக்கங்களைக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்றும், உன்னுடைய ஊழியம் உன்னிலுள்ள சாத்தானின் தன்மையைச் சார்ந்திருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கிறது. உன்னுடைய இயல்பான குணத்தைக் கொண்டும், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படியும் நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய். மேலும் என்னவென்றால், நீ செய்ய விரும்புகிற காரியங்கள் தேவனுக்கு மகிழ்ச்சியளிப்பவை என்றும், நீ செய்ய விரும்பாத காரியங்கள் தேவனுக்கு வெறுப்பூட்டுபவை என்றும் நீ எப்போதும் நினைக்கிறாய். முழுவதும் உன்னுடைய சொந்த விருப்பங்களின்படி நீ வேலை செய்கிறாய். தேவனுக்கு ஊழியம் செய்வது என்று இதை அழைக்க முடியுமா? முடிவில் உன்னுடைய வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றமும் இருக்காது. அதற்குப் பதிலாக, உன்னுடைய ஊழியம் உன்னை இன்னும் அதிகப் பிடிவாதமாக மாற்றும், இப்படி உன்னுடைய நேர்மையற்ற மனநிலை இன்னும் ஆழமாக வேரூன்றும். அதன் காரணமாக தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றிய விதிகள் உனக்குள் உருவாகும். அவைகள் உன்னுடைய சொந்தக் குணத்தையும், உன்னுடைய சொந்த மனநிலையின்படி செய்யப்படும் உன்னுடைய ஊழியத்தில் இருந்து பெற்ற அனுபவங்களையும் முதன்மையாகச் சார்ந்திருக்கும். இவை மனிதனுடைய அனுபவங்களும் பாடங்களுமாகும். இது உலகில் வாழும் மனிதனுடைய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஜனங்களைப் பரிசேயர்கள் எனவும் மதத்தலைவர்கள் எனவும் வகைப்படுத்தலாம். அவர்கள் விழித்துக்கொண்டு மனந்திரும்பாவிட்டால், அவர்கள் நிச்சயமாகக் கள்ள கிறிஸ்துகளாகவும், கடைசி நாட்களில் ஜனங்களை வஞ்சிக்கும் அந்திக்கிறிஸ்துகளாகவும் மாறிவிடுவார்கள். சொல்லப்பட்ட கள்ளக்கிறிஸ்துகளும், அந்திக்கிறிஸ்துகளும் இப்படிப்பட்ட ஜனத்தின் நடுவிலிருந்து எழும்புவார்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அவர்களுடைய சொந்தக் குணத்தைப் பின்பற்றி, அவர்களுடைய சொந்தச் சித்தத்தின்படி செயல்பட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் துரத்திவிடப்படும் அபாயத்தை வருவித்துக் கொள்கிறார்கள். தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக தாங்கள் பெற்றுக்கொண்ட பல வருட அனுபவத்தை மற்றவர்களின் இதயங்களை வெல்வதற்காக, அவர்களைக் கடிந்துகொள்ள, அவர்களைக் கட்டுப்படுத்த, மேலும் உயர்ந்த நிலையில் நிற்க, ஜனங்கள் உபயோகிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும், மேலும் மனந்திரும்பாதவர்களும் தங்களின் பாவங்களை அறிக்கையிடாதவர்களும், பதவியின் பலன்களை விட்டுக்கொடுக்காதவருமாகிய ஜனங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாக விழுந்து போவார்கள். அவர்கள் பவுலைப் போன்று, தங்களுடைய மூத்தநிலையைக் குறித்து மிதமிஞ்சி எண்ணி, தங்கள் தகுதிகளைப் பறைசாற்றுகிறார்கள். இதுபோன்ற ஜனங்களை தேவன் பரிபூரணத்திற்குக் கொண்டுவர மாட்டார். இதுபோன்ற ஊழியம் தேவனுடைய கிரியையில் தலையிடுகிறது. ஜனங்கள் பழையவற்றைப் பற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் கடந்த நாட்களின் கருத்துக்களைப் பற்றிக்கொள்கிறார்கள். இது அவர்களின் ஊழியத்திற்கு மிகப்பெரிய தடையாகும். உன்னால் அவைகளைத் தூக்கியெறிய முடியாவிட்டால், உன்னுடைய முழு வாழ்க்கையையும் அவைகள் திக்குமுக்காட வைத்து விடும். ஓடுவதால் உன் கால்களை அல்லது உழைப்பினால் உன் முதுகை நீ உடைத்துக்கொண்டாலும்கூட, தேவனுடைய ஊழியத்தில் நீ இரத்தசாட்சியாய் மரித்தாலும்கூட, தேவன் உன்னைச் சிறிதளவுகூட மெச்சிக்கொள்ள மாட்டார். அதற்கு நேர்எதிராக நீ ஒரு பாவி என்று அவர் சொல்வார்.

இன்று முதல், எந்த மதம் சார்ந்தக் கருத்துக்களும் இல்லாத, தங்களுடைய பழைய சுயத்தை ஒதுக்கி வைக்கத் தயாராக உள்ள, மற்றும் எளிய மனதுடன் கூடிய வகையில் தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களை தேவன் பரிபூரணப்படுத்துவார். தேவனுடைய வார்த்தைகளுக்காக வாஞ்சையாயிருப்பவர்களை அவர் பரிபூரணப்படுத்துவார். இந்த ஜனங்கள் எழும்பி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும். முடிவில்லா செல்வமும், எல்லையற்ற ஞானமும் தேவனில் இருக்கிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்களால் அனுபவிக்கப்படும்படி அவருடைய அற்புதமான கிரியையும் விலைமதிப்பற்ற வார்த்தைகளும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், மதவாதக் கருத்துக்கள் உள்ள, மூத்தநிலையைக் கருத்தில் கொள்கிற, தங்களை விட்டுக்கொடுக்க இயலாதவர்களுக்கு இந்தப் புதிய காரியங்களை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாய் இருக்கும். இந்த ஜனங்களைப் பரிபூரணப்படுத்த ஆவியானவருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. ஒருவன் கீழ்ப்படியத் தீர்மானிக்காமல், தேவனுடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளாமல் இருந்தால் அவனால் இந்தப் புதிய காரியங்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வெறுமனே, மேலும் மேலும் கலகக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் மாறி, தவறான பாதையில் சென்று விடுவார்கள். இப்பொழுது தன்னுடைய கிரியையை செய்துகொண்டிருக்கும் தேவன், தன்னை நேசிக்கிற மற்றும் புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனேக ஜனங்களை எழுப்புவார், மேலும் அவர், தங்களுடைய மூத்தநிலையைக் கருத்தில் கொள்ளுகிற மதத்தலைவர்களை முழுவதுமாக வெட்டிச் சாய்த்து விடுவார். மாற்றத்தைப் பிடிவாதமாக எதிர்ப்பவர்கள் ஒருவரையும் அவர் விரும்புவதில்லை. இந்த ஜனங்களில் ஒருவராக இருக்க நீ விரும்புகிறாயா? நீ உன்னுடைய ஊழியத்தை உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படி செய்கிறாயா அல்லது தேவனுக்கு வேண்டியபடி செய்கிறாயா? இது உனக்கே தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நீ ஒரு மதத்தலைவனா அல்லது தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தையா? உன்னுடைய ஊழியம் எந்த அளவு பரிசுத்த ஆவியால் மெச்சிக்கொள்ளப்படுகிறது? அதில் எந்த அளவு தேவன் நினைவில்கூட வைத்துக்கொள்வதில்லை? உன்னுடைய அனைத்து வருட ஊழியத்தின் விளைவாக உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் உண்டாயிருக்கிறது? இவை அனைத்தையும் பற்றி நீ தெளிவாய் இருக்கிறாயா? நீ உண்மையாகவே விசுவாசத்துடன் இருந்தால், முன்பிலிருந்து உன்னுடைய பழைய மதம் சார்ந்த கருத்துக்களை ஒதுக்கித்தள்ளி, புதிய வழியில் சிறப்பாக தேவனுக்கு ஊழியம் செய்வாய். இப்போதும் எழும்பி நிற்கத் தாமதமாகி விடவில்லை. பழைய மதம் சார்ந்தக் கருத்துக்கள் ஒரு நபரின் முழு வாழ்க்கையையும் பறித்துக் கொள்ளக்கூடும். ஒரு நபர் பெற்றுக்கொள்ளும் அனுபவம், அவர் தேவனிடமிருந்து விலகி, காரியங்களைத் தன் சொந்த வழியில் செய்விக்கக் காரணமாகக் கூடும். நீ இத்தகைய காரியங்களை ஒதுக்கி வைக்காவிட்டால், பின் இவைகள் உன் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறிப்போகும். தேவன் தனக்கு ஊழியம் செய்பவர்களை எப்பொழுதும் பரிபூரணப்படுத்துகிறார். அவர்களைச் சுலபமாக அவர் தூக்கியெறிவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் நீ உண்மையாக ஏற்றுக்கொள்வாயானால், உன்னுடைய பழைய மதம் சார்ந்த நடைமுறைகளையும் விதிகளையும் உன்னால் ஒதுக்கி வைக்க முடியுமானால், மேலும் உன்னுடைய பழைய மதம்சார்ந்த கருத்துக்களை இன்றைய தேவனுடைய வார்த்தைகளின் அளவுகோலாக உபயோகிப்பதை நிறுத்துவாயானால், அப்பொழுது மட்டுமே உனக்கு எதிர்காலம் இருக்கும். நீ பழைய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவற்றை இன்னும் உயர்வாக மதிப்பாயானால், நீ இரட்சிக்கப்படுவதற்கு ஒரு வழியும் இல்லை. தேவன் அத்தகைய ஜனங்களைக் கவனத்தில் கொள்வதில்லை. நீ உண்மையாகவே பரிபூரணப்பட விரும்பினால், முதலிலிருந்து எல்லாவற்றையும், முழுவதுமாக விட்டுவிட நீ தீர்மானிக்க வேண்டும். முன்பு செய்யப்பட்டவைச் சரியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய கிரியையாக இருந்திருந்தாலும், அப்போதும் அதை ஒதுக்கித் தள்ளி, அதைப் பற்றிக்கொள்வதை நிறுத்துவதற்கு உன்னால் இயல வேண்டும். அது தெளிவாய்ப் பரிசுத்த ஆவியின் கிரியையாய் இருந்திருந்தாலும், பரிசுத்த ஆவியினால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தாலும், இன்றைக்கு அதை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். அதை நீ பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதுவே தேவனுக்குத் தேவையானது. சகலமும் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவனுடைய கிரியையிலும் தேவனுடைய வார்த்தையிலும், முடிந்துபோன பழைய காரியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுவதில்லை, பழைய பஞ்சாங்கத்தை அவர் தோண்டுவதும் இல்லை. தேவன் எப்பொழுதுமே புதியவர், அவர் ஒருபோதும் பழையவரல்ல, அவர் ஆதியிலிருந்த தன்னுடைய சொந்த வார்த்தைகளைக் கூட பற்றிக்கொள்வதில்லை—இது தேவன் எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. எனவே, தேவன் தன்னுடைய பழைய வழிமுறைகளைக் கொண்டு இனி ஒருபோதும் கிரியை செய்யாதபோது, நீ ஒரு மனிதனாக, எப்பொழுதும் கடந்த காலத்துக்குரிய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை விட்டுவிட மறுத்து, அவைகளைச் சூத்திரம் சார்ந்த முறையில் உறுதியாக உபயோகப்படுத்தினால், உன்னுடைய வார்த்தைகளும் செயல்களும் இடைஞ்சலாக இருக்கிறதல்லவா? நீ தேவனுக்குப் பகைஞனாய் மாறி விட்டாய் அல்லவா? இந்தப் பழைய காரியங்கள் உன்னுடைய முழு வாழ்க்கையையும் நாசமாக்க, அழிக்க நீ இடங்கொடுக்க விரும்புகிறாயா? இந்தப் பழைய காரியங்கள் உன்னை தேவனுடைய கிரியையைத் தடுக்கும் நபராக மாற்றிவிடும்—நீ அப்படிப்பட்ட நபராகவா இருக்க விரும்புகிறாய்? உண்மையாகவே நீ அதை விரும்பவில்லை என்றால், சீக்கிரமாக நீ செய்துகொண்டிருப்பதை நிறுத்தி, திரும்பி, எல்லாவற்றையும் மீண்டும் தொடங்கு. தேவன் உன்னுடைய கடந்த கால ஊழியத்தை நினைவில்கொள்ள மாட்டார்.

முந்தைய: சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்

அடுத்த: தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக