பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்

தங்கள் பழைய மூதாதையனான சாத்தானைக் கைவிட்டு ஜனங்களை விலகச்செய்வதற்காகவே உண்மையில் இப்போது கிரியைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வார்த்தையின் அனைத்து நியாயத்தீர்ப்புகளும் மனிதகுலத்தின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்தவும் வாழ்க்கையின் சாராம்சத்தை ஜனங்கள் புரிந்துகொள்ள உதவுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் தொடர் நியாயத்தீர்ப்புகள் ஜனங்களின் இருதயங்களை உருவ குத்துகின்றன. ஒவ்வொரு நியாயத்தீர்ப்பும் அவர்களின் விதியோடு தொடர்புடையதாக இருக்கிறது மேலும் அது அவர்களுடைய இருதயங்களை காயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதனால் அவர்களால் அந்தக் காரியங்களையெல்லாம் விட்டுவிட முடிகிறது, மேலும் அதனால் அவர்கள் வாழ்க்கையை அறிந்து கொள்ளுகிறார்கள், இந்த அருவருப்பான உலகத்தை அறிகிறார்கள், தேவனின் ஞானத்தையும் சர்வவல்லமையையும் அறிகிறார்கள், மற்றும் சாத்தானால் சீர்குலைக்கப்பட்ட மனிதகுலத்தையும் அறிகிறார்கள். இத்தகையக் கடிந்துகொள்ளுதலையும் நியாயத்தீர்ப்புகளையும் மனிதன் எந்த அளவிற்கு அதிகமாகப் பெறுகிறானோ அந்த அளவிற்கு மனிதனின் இருதயம் காயப்படுவதோடு அவனுடைய ஆவி விழிப்படையும். இந்த அளவுக்கதிகமாக சீர்குலைக்கப்பட்ட மற்றும் மிக ஆழமாக வஞ்சிக்கப்பட்ட ஜனங்களின் ஆவியை விழிப்படையச் செய்வதே இந்த வகையான நியாயத்தீர்ப்புகளின் இலக்காகும். மனிதனிடம் ஆவி இல்லை, அதாவது, அவனுடைய ஆவி நீண்ட காலத்திற்கு முன்னமே மரித்துவிட்டது மேலும் பரலோகம் இருப்பதை அவன் அறியவில்லை, தேவன் ஒருவர் இருப்பதை அவன் அறியவில்லை, மற்றும் மரணப் பாதாளத்தில் அவன் போராடிக்கொண்டிருப்பதை அவன் நிச்சயமாக அறியவில்லை; பூமியில் இந்தத் தீய நரகத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? அவனது இந்த அழுகிப்போன சடலம் சாத்தானால் சீர்குலைக்கப்பட்டு மரணப் பாதளத்தில் விழுந்துவிட்டதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? இந்த உலகத்தில் உள்ள யாவும் வெகு காலத்திற்கு முன்னமே மனிதகுலத்தால் சீர்ப்படுத்த முடியாதபடி பாழ்பட்டுப் போய்விட்டதை அவன் அறிந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? மேலும் சிருஷ்டிகர் இன்று உலகத்திற்கு வந்துவிட்டதையும் அவரால் இரட்சிக்கப்படக் கூடிய சீர்கெட்ட ஒரு ஜனக் குழுவினரை அவர் தேடிக்கொண்டு இருப்பதையும் அவனால் அறிந்துகொள்ளுவது எவ்வாறு சாத்தியம்? சாத்தியமான ஒவ்வொரு புடமிடுதலையும் நியாயத்தீர்ப்பையும் மனிதன் அனுபவித்த பின்னரும், அவனது மந்தமான மனசாட்சி இன்னும் அசையவில்லை மற்றும் உண்மையில் ஏறக்குறைய உணர்வற்றதாகவே இருக்கிறது. மனிதகுலம் எவ்வளவு சீர்கெட்டதாக இருக்கிறது! இத்தகைய நியாயத்தீர்ப்பு வானத்தில் இருந்து விழும் கொடிய கல்மழையைப் போல் இருந்தாலும், அது மனிதனுக்கு மிகுந்த நன்மையை அளிப்பதாக இருக்கிறது. இது போல ஜனங்களை நியாயந்தீர்க்காவிட்டால், முடிவுகள் எதுவும் இருக்காது மற்றும் துன்பப் பாதளத்தில் இருந்து ஜனங்களை மீட்பது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகிவிடும். இந்தக் கிரியை இல்லை என்றால், நரகத்தில் இருந்து வெளிவருவது ஜனங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும், ஏனெனில் நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர்களுடைய இருதயங்கள் மரித்துப்போய்விட்டன மேலும் அவர்களுடைய ஆவிகள் வெகு காலத்திற்கு முன்னரே சாத்தானின் காலால் மிதியுண்டு போயின. சீர்குலைவின் மிக ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் உங்களை இரட்சிக்க விடாமுயற்சியுடன் அழைப்பது, கடுமையாக நியாயந்தீர்ப்பது அவசியமாகிறது; அப்போதுதான் உங்கள் உறைந்துபோன இருதயங்களைத் தட்டி எழுப்புவது சாத்தியமாகும்.

உங்கள் மாம்சம், உங்கள் ஆடம்பர விருப்பங்கள், உங்கள் பேராசைகள், மற்றும் உங்கள் காமம் யாவும் உங்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த விஷயங்கள் தொடர்ந்து உங்கள் இருதயங்களை கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பதால் அந்தப் பழமையான மற்றும் சீர்குலைந்த சிந்தனைகளின் நுகத்தைக் களைந்துபோட நீங்கள் வலிமையற்றவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்களது தற்போதைய சூழலில் இருந்து விடுபடவோ அல்லது இருளின் பிடியில் இருந்து தப்பிக்கவோ தீவிரமாக விரும்பவில்லை. அந்த விஷயங்களால் ஒட்டுமொத்தமாகக் கட்டுண்டு கிடக்கிறீர்கள். இந்த வாழ்க்கை வேதனையானது மற்றும் மனிதர்களின் இந்த உலகம் மிக இருண்டது என நீங்கள் யாவரும் அறிந்திருக்கும் போதிலும் உங்களில் ஒருவருக்குக் கூட உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்கிற துணிவில்லை. இந்த வாழ்க்கையின் எதார்த்தத்தில் இருந்து தப்பிக்கவும், ஆத்துமாவின் ஆழ் உயர் நிலையை அடையவும், மேலும் அமைதியான, மகிழ்ச்சியான, பரலோகம் போன்ற சூழலில் வாழவும் மட்டுமே விரும்புகிறீர்கள். உங்கள் தற்போதைய வாழ்க்கையை மாற்றுவதற்காகக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை; நீங்கள் செல்ல வேண்டிய வாழ்க்கைக்காக இந்த நியாயத்தீர்ப்புக்குள்ளும் கடிந்துகொள்ளுதலுக்குள்ளும் தேடவும் நீங்கள் விரும்பவில்லை. மாறாக, நீங்கள் மாம்சத்துக்கு அப்பால் இருக்கும் அழகான உலகைப் பற்றிய முற்றிலும் உண்மையற்ற கனவுகளைக் காண்கிறீர்கள். நீங்கள் விரும்பும் இந்த வாழ்க்கை முயற்சியின்றி எந்த வேதனையும் இன்றி நீங்கள் அடையக்கூடிய ஒன்றே. அது முற்றிலும் எதார்த்தமற்றது! மாம்சத்தில் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வாழ்க்கைக் காலத்தில் சத்தியத்தை அடைவதற்காக, அதாவது சத்தியத்திற்காக வாழ்ந்து நியாயத்திற்காக நிற்பதற்காக நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஒரு பிரகாசமான, ஒளிவீசும் வாழ்க்கை எனக் கருதுவது இதை அல்ல. இது ஒரு கவர்ச்சிகரமான அல்லது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்காது என்று நீங்கள் உணர்வீர்கள். உங்கள் பார்வையில், இத்தகைய வாழ்க்கையை வாழ்வது ஓர் அநீதியைப் போல் உணரப்படும்! இன்று நீங்கள் இந்தக் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டாலும்கூட நீங்கள் தேடிக்கொண்டிருப்பது சத்தியத்தை அடைவதற்காகவோ அல்லது இப்போது சத்தியத்தை வாழ்ந்து காட்டுவதற்காகவோ அல்ல, மாறாக பின்னர் மாம்சத்திற்கு அப்பால் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்குள் நுழைய முடிவதற்காகவே. நீங்கள் சத்தியத்திற்காகத் தேடவில்லை, சத்தியத்திற்காக நிற்கவுமில்லை, மேலும் நீங்கள் நிச்சயமாக சத்தியத்திற்காக இருக்கவுமில்லை. இன்று பிரவேசிப்பதை நீங்கள் தேடவில்லை, ஆனால் உங்கள் சிந்தனைகள் எதிர்காலத்தாலும், என்றோ ஒரு நாள் வருவதைக் குறித்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: நீங்கள் நீல வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறீர்கள், கசப்பான கண்ணீரைச் சிந்துகிறீர்கள், மேலும் என்றோ ஒரு நாள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவதை எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கும் முறை ஏற்கெனவே உண்மைக்குப் புறம்பானதாகிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? எல்லையற்ற கருணையும் இரக்கமும் கொண்ட இரட்சகர் ஒருநாள் சந்தேகமின்றி வந்து இந்த உலகத்தில் கஷ்டங்களையும் துன்பங்களையும் பொறுத்துகொண்ட உன்னைத் தம்மோடு கொண்டுசெல்வார் என்றும், அவர் உன் குறைகளைத் தீர்ப்பார் மற்றும் வஞ்சிக்கவும் ஒடுக்கவும்பட்ட உன் சார்பாக அவர் பழிவாங்குவார் என்றும் தொடர்ந்து நீங்கள் சிந்தித்துக்கொண்டு வருகிறீர்கள். நீ முற்றிலும் பாவம் நிறைந்தவன் இல்லையா? இந்த உலகத்தில் துன்பப்பட்டவன் நீ மட்டும்தானா? நீ சாத்தானின் ஆதிக்க எல்லைக்குள் நீயாகவே விழுந்து துன்பப்பட்டாய்—தேவன் உண்மையில் இன்னும் உன் குறைகளைத் தீர்க்க வேண்டுமா? தேவனின் எதிர்பார்ப்புகளை திருப்திப்படுத்த முடியாதவர்கள்—அவர்கள் அனைவரும் தேவனின் எதிரிகள் இல்லையா? தேவனின் அவதாரத்தை நம்பாதவர்கள்—அவர்கள் அந்திக்கிறிஸ்து இல்லையா? உன் நற்கிரியைகள் எதற்காக எண்ணப்படுகின்றன? தேவனை ஆராதிக்கும் ஓர் இருதயத்தின் இடத்தை அவைகளால் நிரப்ப முடியுமா? சில நற்கிரியைகளைச் செய்வதனால்மட்டும் நீ தேவ ஆசிர்வாதத்தைப் பெற முடியாது, மேலும் நீ வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதனால் மட்டுமே தேவன் உன் குறைகளைத் தீர்க்க மாட்டார் மற்றும் உனக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காக பழிவாங்க மாட்டார். தேவனை நம்பியும் இன்னும் தேவனை அறியாமல், ஆனால் நற்காரியங்களை செய்பவர்கள்—அவர்கள் யாவரும் கடிந்துகொள்ளப்படவில்லையா? நீ வெறுமனே தேவனை நம்புகிறாய், உனக்கு எதிராக இழைக்கப்பட்டத் தவறுகளை தேவன் நிவிர்த்திசெய்து பழிவாங்க வேண்டும் என்று வெறுமனே விரும்புகிறாய், மேலும், இறுதியாக உன்னால் தலையை நிமிர்த்திக் கொள்ளக்கூடிய ஒரு நாளாகிய உனது நாளை தேவன் உனக்கு அளிக்கவேண்டும் என்று விரும்புகிறாய். ஆனால் நீ சத்தியத்தில் கவனம் செலுத்த மறுக்கிறாய் மேலும் சத்தியத்தின் படி வாழும் தாகமும் உனக்கில்லை. அதைவிட, இந்தக் கடினமான, வெற்று வாழ்க்கையில் இருந்து தப்பிக்கவும் உன்னால் முடியவில்லை. அதற்குப் பதிலாக, உன் மாம்ச வாழ்க்கையையும் உன் பாவ வாழ்க்கையையும் வாழும்போதே உன் குறைகளை நேர்செய்ய வேண்டும் என்றும் உன் இருப்பைக் கவிழ்ந்திருக்கும் மூடுபனியை நீக்க வேண்டும் என்றும் தேவனிடம் நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறாய். ஆனால் இது சாத்தியமா? உன்னிடம் சத்தியம் இருந்தால் நீ தேவனைப் பின்பற்றலாம். நீ உன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் நீ தேவ வார்த்தையின் வெளிப்பாடாய் இருக்கலாம். உன்னிடம் வாழ்க்கை இருந்தால், நீ தேவ ஆசிர்வாதத்தை அனுபவிக்கலாம். சத்தியத்தைப் பெற்றிருக்கிறவர்கள் தேவ ஆசிர்வாதத்தை அனுபவிக்கலாம். தேவன் தம்மில் முழு இருதயத்தோடு அன்பு செலுத்திக் கஷ்டங்களையும் துன்பங்களையும் பொறுத்துக்கொண்டவர்களுக்குப் பரிகாரத்தை உறுதியளிக்கிறாரே தவிர தங்களை மட்டுமே நேசிக்கிறவர்களுக்கும் சாத்தானின் வஞ்சகத்தில் வீழ்ந்துபட்டவர்களுக்கும் அல்ல. சத்தியத்தை நேசிக்காதவர்களிடம் நன்மை எவ்வாறு இருக்க முடியும்? மாம்சத்தை மட்டுமே நேசிக்கிறவர்களிடத்தில் நீதி எவ்வாறு இருக்க முடியும்? நீதி நன்மை ஆகிய இரண்டும் சத்தியத்தின் சம்பந்தமாக மட்டும் அல்லவோ பேசப்படுகின்றன? அவைகள் முழு இருதயத்தோடும் தேவனில் அன்பு கூருகிறவர்களுக்கு அல்லவா ஒதுக்கப்பட்டுள்ளன? சத்தியத்தை நேசிக்காதவர்கள் மற்றும் அழுகிய சடலமாக மட்டுமே இருக்கிறவர்கள்—இந்த ஜனங்கள் எல்லாம் தீமையைக் கொண்டிருக்கவில்லையா? சத்தியத்தின்படி வாழ முடியாதவர்கள்—அவர்கள் எல்லாம் சத்தியத்துக்கு எதிரிகள் அல்லவா? மேலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

உன்னால் இருளின் பிடியில் இருந்து விலக முடியுமானால் மேலும் அந்த அசுத்தமான விஷயங்களில் இருந்து உன்னை விடுவித்துக்கொள்ள முடியுமானால், உன்னால் பரிசுத்தமாக முடியுமானால், பிறகு நீ சத்தியத்தை கொண்டிருப்பாய். உன்னுடைய தன்மை மாறிவிட்டதால் அல்ல, ஆனால் சத்தியத்தை உன்னால் நடைமுறைக்குக் கொண்டுவர முடிந்ததால் மற்றும் உன்னால் மாம்சத்தை விட்டு விலகமுடிந்த காரணத்தால். சுத்திகரிக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கும் இயல்பே இதுவாகும். சத்தியத்தைப் பற்றி மனிதகுலம் மிகக்குறைவாகவே புரிந்துகொண்டிருப்பதால், மனிதன் சத்தியத்தைக் கொண்டிருக்கும்படியாக மனிதகுலத்தைச் சுத்திகரிப்பதே ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கிய இலக்காகும்! இத்தகைய மக்களிடம் ஜெயங்கொள்ளும் கிரியையை நடத்துவது ஆழ்ந்த முக்கியத்துவம் கொண்டது. நீங்கள் யாவரும் இருளின் பிடியில் விழுந்து ஆழமான தீங்குக்குள்ளாயிருக்கிறீர்கள். அப்படியானால், இந்தக் கிரியையின் இலக்கானது, மானிட இயல்பை நீங்கள் அறிந்துகொண்டு அதன் மூலம் சத்தியத்தின்படி வாழ உதவுவதே. பரிபூரணப்படுவது என்பது எல்லா படைக்கப்பட்ட சிருஷ்டிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கிரியையின் இந்த கட்டத்தில் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவது மட்டுமே அடங்கியிருந்தால், பின் அது பிரிட்டன், அல்லது அமெரிக்கா, அல்லது இஸ்ரவேலில் செய்யப்படலாம்; அது எந்த நாட்டிலும் ஜனங்களிடம் செய்யப்படலாம். ஆனால் ஜெயங்கொள்ளும் கிரியை தேர்ந்தெடுத்து செய்யப்படுவதாகும். ஜெயங்கொள்ளும் கிரியையின் முதல் படி குறுகிய காலம் கொண்டது; மேலும், சாத்தானைச் சிறுமைப்படுத்துவதற்கும் முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளுவதற்கும் அது பயன்படுத்தப்படும். இதுவே ஜெயங்கொள்ளுதலின் ஆரம்ப வேலை. தேவனை நம்புகிற எந்த சிருஷ்டியையும் பரிபரிபூரணப்படுத்தலாம் என்று ஒருவர் கூறலாம், ஏனெனில் பரிபூரணப்படுவது என்பது நீண்ட கால மாற்றத்துக்குப் பின் அடையக்கூடிய ஒன்றாகும். ஆனால் ஜெயங்கொள்வது என்பது வேறு. வெகு தூரத்தில் பின்தங்கி இருக்கும் ஒருவரும், மிக ஆழ்ந்த இருளில் வாழ்பவருமே ஜெயங்கொள்வதற்கான வகைமாதிரியும் முன்மாதிரியும் ஆகும்; அவர்கள் மிகவும் சீர்கெட்டவர்களாகவும், தேவனை அங்கீகரிக்க முற்றிலும் மனமற்றவர்களாகவும், மற்றும் தேவனுக்கு அறவே கீழ்ப்படியாதவர்களாகவும் இருக்கவேண்டும். ஜெயங்கொண்டதற்கு சாட்சியாக நிறுத்தப்படக்கூடிய சரியான நபர் இவரே. ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கிய இலக்கு சாத்தானைத் தோற்கடிப்பதே, அதே வேளையில் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதன் முக்கிய இலக்கு ஜனங்களை ஜெயங்கொள்வதே. ஜெயங்கொண்ட பின்னர் ஜனங்கள் சாட்சியைக் கொண்டிருப்பதை சாத்தியமாக்கவே, ஜெயங்கொள்ளும் கிரியை இங்கே, உங்களைப் போன்ற ஜனங்களிடம் மேற்கொள்ளப்படுகிறது. ஜெயங்கொண்ட பின்னர் ஜனங்கள் சாட்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த ஜெயங்கொண்ட ஜனங்கள் சாத்தானை சிறுமைப்படுத்தும் இலக்கை அடையப் பயன்படுத்தப்படுவார்கள். ஆகவே, ஜெயங்கொள்ளுதலின் முக்கிய முறை என்ன? சிட்சித்தல், நியாயந்தீர்த்தல், சாபமிடுதல் மற்றும் வெளிப்படுத்துதல்—ஜனங்களை ஜெயங்கொள்ள ஒரு நீதியான மனநிலையை பயன்படுத்துதல். இதனால் தேவனின் நீதியான மனநிலையின் காரணமாக அவர்கள் முழுமையான நம்பிக்கையை அடைவார்கள். ஜனங்களை ஜெயங்கொண்டு அவர்களுக்கு முழு நம்பிக்கையை உருவாக்க வார்த்தையின் உண்மையையும் அதிகாரத்தையும் பயன்படுத்துதல்—ஜெயங்கொள்ளுதல் என்பதற்கு அர்த்தமாகும். ஜெயங்கொண்ட பின்னர் பரிபூரணப்பட்டவர்கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருப்பது மட்டுமன்றி நியாயத்தீர்ப்பு கிரியையின் அறிவைப் பெறவும், தங்கள் மனநிலையை மாற்றவும், தேவனை அறிந்துகொள்ளவும் முடிந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அன்பான தேவனின் பாதையை அனுபவித்து சத்தியத்தால் நிரம்பப்பெறுகிறார்கள். அவர்கள் தேவ கிரியையை அனுபவிப்பது எவ்வாறு என்று கற்றுக்கொள்ளுகிறார்கள், தேவனுக்காகத் துன்பப்படவும் தங்கள் சொந்த சித்தங்களைக் கொண்டவர்களாக இருக்கவும் அவர்களால் முடிகிறது. தேவ வார்த்தையை அனுபவித்ததின் காரணமாக சத்தியத்தைப் பற்றிய உண்மையான புரிதல் கொண்டவர்களே பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் ஆகும். ஜெயங்கொண்ட பின்னர் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள், ஆனால் அவர்கள் பெற்ற நியாயத்தீர்ப்பின் விளைவே அவர்களின் கீழ்ப்படிதல். பல சத்தியங்களின் உண்மை அர்த்தத்தை பற்றிய புரிதல் முழுமையாக அவர்களுக்கு இல்லை. அவர்கள் வாய்வார்த்தையாக சத்தியத்தை அங்கீகரிக்கின்றனர், ஆனால் அவர்கள் சத்தியத்துக்குள் பிரவேசிக்கவில்லை; சத்தியத்தை அவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள், ஆனால் அவர்கள் சத்தியத்தை அனுபவிக்கவில்லை. பரிபூரணப்படுத்தப்பட்டவர்களிடம் நடத்தப்படும் கிரியையில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றுடன் கடிந்துகொள்ளுதலும் நியாயத்தீர்ப்புகளும் அடங்கும். சத்தியத்துக்குள் பிரவேசிப்பதை மதிக்கும் ஒரு நபரே பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர். பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவருக்கும் ஜெயங்கொள்ளப்பட வேண்டியவருக்கும் நடுவில் உள்ள வித்தியாசம் அவர்கள் சத்தியத்துக்குள் பிரவேசிக்கிறார்களா என்பதில்தான் உள்ளது. சத்தியத்தைப் புரிந்துகொண்டு, சத்தியத்துக்குள் நுழைந்து, மேலும் சத்தியத்தின்படி வாழ்பவர்களே பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள்; சத்தியத்தைப் புரிந்துகொள்ளாமல், சத்தியத்துக்குள் நுழையாமல், அதாவது, சத்தியத்தின்படி வாழாதவர்களே பரிபூரணப்படுத்தப்பட முடியாத ஜனங்கள். அத்தகைய ஜனங்களால் இப்போது முழுமையாகக் கீழப்படிய முடிந்தால், பின் அவர்கள் ஜெயங்கொண்டவர்கள் ஆகும். ஜெயங்கொண்டவர்கள் சத்தியத்தை நாடாமல் இருந்தால்—பின்பற்றியும் அவர்கள் சத்தியத்தின்படி வாழாமல் இருந்தால், சத்தியத்தைப் பார்த்தும் கேட்டும் ஆனால் சத்தியத்தின்படி வாழ்வதை மதியாமல் இருந்தால், பின்னர் அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய ஜனங்கள் பரிபூரணத்தின் பாதையில் தேவனின் தேவைகளின்படி சத்தியத்தைக் கடைபிடிக்கிறார்கள். இதன் மூலமாக, அவர்கள் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுகிறார்கள். ஜெயங்கொள்ளுதலின் கிரியை நிறைவடையும் முன் முடிவு வரை பின்பற்றுகிற ஒருவரே ஜெயங்கொண்டவர், ஆனால் அவரைப் பரிபூரணப்படுத்தப்பபட்ட ஒருவர் என்று கூற முடியாது. ஜெயங்கொள்ளுதல் கிரியை முடிவடைந்த பின்னர், சத்தியத்தைப் பின்தொடர முடிகிறவரையும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவரையுமே “பரிபூரணப்படுத்தப்பட்டவர்” என்பது குறிக்கிறது. ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது, உபத்திரவ காலத்தில் உறுதியாக நின்று சத்தியத்தின்படி வாழ்கிறவரையே அது குறிக்கிறது. பரிபரிபூரணப்படுத்தப்படுதலில் இருந்து ஜெயங்கொள்ளுதலை எது வேறுபடுத்துகிறது என்றால் கிரியையின் படிகளில் இருக்கும் வித்தியாசமும் ஜனங்கள் புரிந்து கொண்டு சத்தியத்துக்குள் நுழையும் விதத்தில் இருக்கும் வித்தியாசமுமே. பரிபூரணத்தின் பாதைக்குள் அடியெடுத்து வைக்காத யாவரும், அதாவது சத்தியத்தைக் கொண்டிராதவர்கள், முடிவாக இன்னும் புறம்பாக்கப்படுவார்கள். சத்தியத்தைக் கொண்டிருப்பவர்களும் சத்தியத்தின்படி வாழ்பவர்களையுமே தேவனால் முற்றிலுமாக ஆதாயப்படுத்தப்பட முடியும். அதாவது, பேதுருவின் சாயலின்படி வாழ்கிறவர்களே பரிபூரணமடைந்தவர்கள், அதே வேளையில் பிறர் யாவரும் ஜெயங்கொண்டவர்கள். சாபமிடுதல், சிட்சித்தல், மற்றும் கோபத்தை வெளிப்படுத்துதல் ஆகியவையே ஜெயங்கொண்டவர்களிடம் நடத்தப்படும் கிரியை மேலும் அவர்களுக்கு வருவதெல்லாம் நீதியும் சாபங்களுமே. பீடிகை அல்லது பணிவு இன்றி வெளிப்படுத்துதலே இத்தகைய ஒரு நபரின் மேல் கிரியை நடத்துவது ஆகும்—அவர்களுக்குள் இருக்கும் அசுத்த மனநிலை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் அதைத் தாங்களாகவே அறிந்து முற்றிலுமாக நம்புவது. மனிதன் முற்றிலுமாக கீழ்ப்படிகிறவனாகிவிட்டால், ஜெயங்கொள்ளும் வேலை முடிவடைகிறது. அப்படியும் பெரும்பாலான ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ள நாடாவிட்டாலும், ஜெயங்கொள்ளும் பணி முடிவுற்றிருக்கும்.

நீ பரிபூரணப்படுத்தப்பட வேண்டுமானால், சந்திக்கப்பட வேண்டிய கட்டளை விதிகள் உள்ளன. உனது தீர்மானம், உனது பொறுமை மற்றும் உனது மனசாட்சி மூலம், மற்றும் உனது தேடல் மூலம், நீ வாழ்க்கையை அனுபவித்து தேவ சித்தத்தை திருப்திசெய்ய முடியும். இது உன் நுழைவு, மற்றும் இந்த விஷயங்கள் பரிபூரணத்திற்கான பாதையில் தேவைப்படுவன. பரிபூரணப்படுத்தும் கிரியையை எல்லா ஜனங்களிடத்தும் நடத்தலாம். தேவனைத் தேடும் யாரொருவரும் பரிபூரணப்படுத்தப்படலாம். அவருக்கு பரிபூரணப்படக்கூடிய வாய்ப்பும் தகுதியும் உள்ளன. ஒருவர் பரிபூரணப்படுத்தப்படலாமா என்பது அவர் எதைத் தேடுகிறார் என்பதைப் பொறுத்தே உள்ளது. இங்கு நிலையான விதி எதுவுமில்லை. சத்தியத்தை நேசிக்கும் மற்றும் சத்தியத்தின்படி வாழக் கூடிய ஜனங்களை உறுதியாகப் பரிபூரணப்படுத்தப்பட முடியும். சத்தியத்தை நேசிக்காத மக்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை; தேவன் கோரும் வாழ்க்கையை அவர்கள் கொண்டிருக்கவில்லை, மேலும் அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பரிபூரணப்படுத்தும் கிரியை ஜனங்களை ஆதாயப்படுத்தவே தவிர சாத்தானோடு போரிடும் வேலையின் ஒரு பகுதி அல்ல; ஜெயங்கொள்ளும் கிரியை சாத்தானிடம் போரிடுவதற்காக மட்டுமே, அதாவது மனிதனை ஜெயங்கொண்டு சாத்தானைத் தோற்கடிப்பது ஆகும். ஜெயங்கொள்ளும் வேலையே முதன்மையான வேலை, புத்தம்புதிய வேலை, காலங்கள் தோறும் ஒருபோதும் நடைபெறாத வேலை. இந்தக் காலகட்டத்தின் கிரியை முதன்மையாக அனைத்து மக்களையும் ஜெயங்கொண்டு சாத்தானைத் தோற்கடிப்பதே என்று ஒருவர் கூறலாம். ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் வேலை—இது புதிய வேலை அல்ல. மாம்சத்தில் தேவனின் கிரியையின் போது அனைத்து கிரியையின் இலக்கின் மிகச்சிறந்த தன்மை ஜனங்களை ஜெயங்கொள்வதே. இது கிருபையின் காலத்தைப் போன்றது. அப்போது முக்கிய கிரியை சிலுவைமரணத்தின் மூலம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பதாக இருந்தது. “ஜனங்களை ஆதாயப்படுத்துதல்” மாம்சத்தில் நடைபெற்ற கூடுதல் கிரியையாக இருந்தது மேலும் அது சிலுவைமரணத்திற்குப் பின்னரே நடைபெற்றது. இயேசு வந்து தம் வேலைகளை செய்தபோது, அவரது இலக்கு முக்கியமாகத் தமது சிலுவைமரணத்தைப் பயன்படுத்தி மரணத்தின் அடிமைத்தனத்தையும் பாதாளத்தையும் மேற்கொள்ளுவதே—அதாவது சாத்தானைத் தோற்கடிப்பது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரே பரிபூரணத்தின் பாதையை ஒவ்வொரு படியாக பேதுரு வந்தடைந்தான். இயேசு கிரியை செய்துகொண்டு இருந்தபோது, அவரைப் பின்பற்றியவர்களுள் பேதுருவும் இருந்தான். ஆனால் அந்த நேரத்தில் அவன் பரிபரிபூரணம் அடையவில்லை. மாறாக, இயேசு தமது வேலைகளை முடித்த பின்னரே பேதுரு படிப்படியாக சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதன்பின்னர் பரிபரிபூரணம் அடைந்தான். ஒரு குறுகிய காலத்தில் கிரியையின் ஒரு முக்கிய, இறுதிக் கட்டத்தை முடிக்கவே தேவன் மாம்சத்தில் அவதாரமாக பூமிக்கு வந்தாரே தவிர, ஜனங்கள் மத்தியில் நீண்ட காலம் வாழ்ந்து அவர்களைப் பரிபூரணப்படுத்தும் எண்ணத்தோடு அல்ல. அவர் அந்த வேலையைச் செய்யவில்லை. மனிதன் முற்றிலுமாக பரிபூரணம் அடையும் வரை தன் கிரியை முடிக்கக் காத்திருக்கவில்லை. அது அவரது அவதாரத்துக்கான இலக்கும் முக்கியத்துவமும் இல்லை. அவர் மனிதகுலத்தை இரட்சிக்கும் குறுகிய கால வேலைக்கே வருகிறார், மனித குலத்தைப் பரிபூரணப்படுத்தும் நீண்ட கால வேலையைச் செய்ய வரவில்லை. மனித குலத்தை இரட்சிக்கும் வேலை பிரதிநிதித்துவமானது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கும் திறன் கொண்டது. அதை ஒரு குறுகிய கால அளவில் முடித்துவிடலாம். ஆனால் மனிதகுலத்தை பரிபூரணப்படுத்துவதற்கு மனிதனை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேலே கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது; இத்தகைய வேலைக்கு நீண்ட காலம் தேவைப்படும். இந்த வேலையை தேவ ஆவியானவர்தான் செய்ய வேண்டும், ஆனால் அது மாம்சத்தில் செய்யப்பட்ட வேலையின் போது பேசப்பட்ட சத்தியத்தின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. அவரது இலக்கான மனிதகுலத்தைப் பரிபூரணப்படுத்த மேலும் அது நீண்ட கால மேய்ப்பு வேலைக்காக அவரது அப்போஸ்தலர்களை எழுப்பி செய்யப்படுகிறது. தேவ அவதாரமானவர் இந்த வேலையைச் செய்யவில்லை. மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர் வாழ்க்கை முறையைப் பற்றி மட்டுமே பேசுகிறார், மேலும் அவர் மனித குலத்துக்குச் சத்தியத்தை மட்டுமே அளிக்கிறார், சத்தியத்தைக் கடைப்பிடிக்க மனிதனோடு தொடர்ந்து இருக்கவில்லை, ஏனெனில் அது அவரது ஊழியத்துக்குள் வரவில்லை. ஆகவே, மனிதன் முற்றிலுமாகச் சத்தியத்தைப் புரிந்து கொண்டு சத்தியத்தை முழுமையாக பெறும் வரையில் அவர் மனிதனோடு இருக்கப்போவதில்லை. மனிதன் முறையாக தேவனிடத்தில் நம்பிக்கை என்ற சரியான பாதையில் நுழையும் போது, மனிதன் பரிபூரணப்படும் சரியான பாதையில் காலடி வைக்கும்போது மாம்சத்தில் அவரது கிரியை முடிவடைகிறது. அவர் முற்றிலுமாக சாத்தானை முறியடித்து உலகத்தை வெற்றி காணும்போதும் நிச்சயமாக இது நிகழும். அந்த நேரத்தில் மனிதன் முடிவாகச் சத்தியத்துக்குள் நுழைந்துவிட்டானா என்று அவர் கவலைப்படுவதில்லை, அல்லது மனிதனின் வாழ்க்கை பெரிதா அல்லது மிகச்சிறியதா என்றும் அவர் கவலைப்படுவதில்லை. மாம்சத்தில் இருக்கும் போது இவற்றில் ஒன்றையும் அவர் நிர்வகிப்பது இல்லை; தேவ அவதாரத்தின் ஊழியத்திற்குள் இவை ஒன்றும் இல்லை. அவர் எண்ணிய வேலையை அவர் முடித்தவுடன், மாம்சத்தில் அவர் தமது வேலையை முடித்துவிடுவார். ஆகவே, தேவ அவதாரம் செய்யும் ஒரே வேலை என்னவெனில் ஆவியால் நேரடியாகச் செய்யமுடியாத வேலையே. மேலும், அது இரட்சிப்பு என்னும் குறுகிய காலக் கிரியை, நீண்ட கால அடிப்படையில் பூமியில் அவர் செய்யப்போகிற காரியம் அல்ல.

உங்களுடைய திறனை மேம்படுத்துவது என் கிரியையின் வரம்பில் இல்லை. உங்கள் திறன் மிகக் குறைவாக இருப்பதனால் மட்டுமே நான் இதைச் செய்யுமாறு உங்களிடம் கூறுகிறேன். உண்மையில் பரிபூரணப்படுத்தும் கிரியையில் இது ஒரு பகுதி அல்ல; மாறாக, இது உங்களிடம் செய்யப்படும் ஒரு கூடுதல் வேலையே. இன்று உங்களிடம் செய்து முடிக்கப்பட்ட வேலை உங்கள் தேவைக்கு ஏற்ப செய்யப்பட்டது. இது தனி நபர்க்கானது மேலும் பரிபூரணப்படுத்தப்படும் ஓவ்வொருவரும் செல்லக்கூடிய பாதை அல்ல. ஏனெனில் உங்கள் திறன் கடந்த காலத்தில் பரிபூரணமாக்கப்பட்ட யாரொருவரையும் விட குறைந்தது ஆகும். உங்களிடம் இந்த வேலை செய்யப்படும்போது, அதிக அளவிலான தடைகள் உள்ளன. பரிபூரணத்தின் இலக்குகள் வெவ்வேறானவை என்பதால் நான் உங்கள் மத்தியில் இருந்து இந்தக் கூடுதல் வேலையைச் செய்கிறேன். அடிப்படையில், தேவன் உலகிற்கு வரும்போது, பிற சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தமது சரியான செயல்எல்லைக்குள் இருந்தே தமது கிரியைகளை நடப்பிக்கிறார். குடும்ப விஷயங்களில் அவர் ஈடுபடுவதில்லை அல்லது ஜனங்களின் வாழ்க்கையில் பங்கேற்பதில்லை. இத்தகைய அற்பமான விஷயங்களைப் பற்றி அவர் முற்றிலும் கவலைப்படுவதில்லை; அவை அவரது ஊழியத்தின் ஒரு பகுதி அல்ல. ஆனால் உங்கள் திறன் நான் கோரியதை விட மிகவும் குறைவாக உள்ளது—உண்மையில், முழுமையான ஒப்புமை ஒன்றும் இல்லவே இல்லை—அதாவது அது கிரியைக்கு மிகத் தீவிரமான தடைகளை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த வேலை இந்தச் சீன நாட்டின் மக்கள் மத்தியில் செய்யப்பட வேண்டும். நீங்கள் குறைந்த அளவே கல்வியறிவு உடையவர்களாக இருப்பதனால் உங்களுக்கு நீங்களே பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இது கூடுதல் வேலை என்று நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் பெற வேண்டிய ஒன்றாகும், நீங்கள் பரிபூரணமடைய உங்களுக்கு உதவும் ஒன்றாகும். உண்மையில், கல்வி, சுய-நடத்தைப் பற்றிய அடிப்படை அறிவு, மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை அறிவு ஆகியவெல்லாம் நீங்கள் இயற்கையாகவே கொண்டிருக்கவேண்டிய விஷயங்கள் ஆகும்; இந்த விஷயங்கள் பற்றி நான் உங்களிடம் பேச வேண்டிய தேவை இல்லை. ஆனால் இந்த விஷயங்கள் உங்களிடம் இல்லாத காரணத்தால், இந்த உலகத்தில் நீங்கள் ஏற்கெனவே பிறந்துவிட்டதால், உங்களுக்குள் இந்த விஷயங்களைப் புகுத்தும் பணியைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களுக்குள் என்னைப் பற்றிய பல கருத்துக்களை நீங்கள் கொண்டிருந்தாலும், நான் இன்னும் இதை உங்களிடம் இருந்து கோருகிறேன்—நீங்கள் உங்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்று நான் இன்னும் உங்களைக் கோருகிறேன். வந்து இந்த வேலையைச் செய்வது என் எண்ணம் அல்ல, ஏனெனில் உங்களை ஜெயங்கொள்வதே, உங்களை நியாயந்தீர்த்து உங்கள் குற்றத்தை முழுமையாக உணர்த்தி, நீங்கள் செல்லவேண்டிய வாழ்க்கைப் பாதையை சுட்டிக்காட்டுவதே என் வேலை. வேறு விதமாக கூறினால், என்னுடைய வார்த்தையால் உங்களை நான் ஜெயங்கொள்ள வேண்டும் என்ற உண்மைக்காக மட்டும் இல்லை எனில், நீங்கள் எவ்வளவு படித்துள்ளீர்கள் என்பதோ மற்றும் நீங்கள் வாழ்க்கையைப் பற்றிய அறிவுடையவர்களா என்பதெல்லாம் முழுமையாக சம்பந்தமற்றவையாக இருந்திருக்கும். ஜெயங்கொள்ளும் வேலையில் முடிவுகளை உறுதிசெய்யவும் மேலும் உங்கள் தொடர் பரிபூரணத்துக்காகவும் இவை எல்லாம் சேர்க்கப்படுகின்றன. இது ஜெயங்கொள்ளும் வேலையின் ஒரு பகுதி அல்ல. நீங்கள் குறைந்த திறனோடு இருப்பதாலும், நீங்கள் சோம்பேறித்தனமாகவும் அலட்சியமாகவும், முட்டாள்தனமாகவும் மந்த அறிவுடனும், உணர்வற்றும் மூடத்தனமாகவும் இருப்பதால்—நீங்கள் மிகவும் அசாதாரணமாக இருப்பதால்—நீங்கள் முதலில் உங்கள் திறனை மேம்படுத்துவது எனக்குத் தேவையாக இருக்கிறது. பரிபூரணமாவதற்கு ஒருவர் சில கட்டளை விதிகளை சந்திக்க வேண்டும். பரிபூரணப்படுவதற்கு ஒருவர் தெளிவான, நிதானமான மனதுடனும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான விருப்பத்துடனும் இருக்க வேண்டும். ஒரு வெற்று வாழ்க்கையை வாழ விருப்பமற்ற யாரோ ஒருவனாக நீ இருந்தால், சத்தியத்தைத் தேடும் ஒருவனாக, தான் செய்யும் ஒவ்வொன்றிலும் ஆர்வமுள்ள ஒருவனாக இருந்தால், மற்றும் மிகவும் சாதாரணமான மனிதத்தன்மை கொண்டவனாக இருந்தால் பரிபூரணப்படுவதற்கான நிபந்தனைகளை நீ பூர்த்திசெய்கிறாய்.

என்ன வேலை செய்யப்பட வேண்டுமோ அதற்கு இணங்க, இந்த வேலை உங்கள் மத்தியில் உங்களிடம் செய்யப்படுகிறது. இந்த ஜனங்களை ஜெயங்கொண்ட பின்னர், ஒரு குழுவினரான ஜனங்கள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். ஆகவே, தற்போதைய அதிக அளவிலான கிரியையும் உங்களைப் பரிபூரணப்படுத்தும் இலக்கிற்கான தயாரிப்பாகவே உள்ளது, ஏனெனில் பரிபூரணப்படுத்தக் கூடிய பலர் சத்தியத்திற்காகத் தாகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். ஜெயங்கொள்ளும் வேலை உங்களிடம் நடைபெற வேண்டுமானால் மற்றும் அதன்பின்னர் கூடுதல் வேலை எதுவும் செய்யப்படாவிட்டால், அதன்பின் சத்தியத்திற்காக ஏங்குகிற யாரோ அதை அடைய முடியாத நிலையாக இருக்கும் அல்லவா? தற்போதைய கிரியை மக்களைப் பின்னர் பரிபூரணப்படுத்தும் பாதையைத் திறப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என்னுடைய கிரியை ஜெயங்கொள்ளும் வேலையாக மட்டுமே இருப்பினும், நான் பேசுகின்ற வாழ்க்கை முறை மக்களைப் பின்னர் பரிபூரணப்படுத்துவதற்கான தயாரிப்பாக உள்ளது. ஜெயங்கொள்வதற்குப் பின்னர் வரும் வேலை மக்களைப் பரிபூரணப்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது, மேலும் பரிபூரணப்படுத்தும் வேலைக்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதற்காகவே ஜெயங்கொள்ளுதல் செய்யப்படுகிறது. ஜெயங்கொண்ட பின்னரே மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியும். இப்போது, முக்கிய பணி ஜெயங்கொள்வதே; பின்னர், சத்தியத்தைத் தேடி அதற்காக ஏங்குபவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். பரிபூரணப்படுவது மக்களின் செயலாற்றும் நுழைவு அம்சங்களை உள்ளடக்கியது: உனக்கு தேவனை நேசிக்கும் ஓர் இருதயம் இருக்கிறதா? இந்தப் பாதையில் நடந்து வந்த உனது அனுபவத்தின் ஆழம் எதுவாக இருந்துவருகிறது? தேவன் பேரில் உனக்குள்ள அன்பு எவ்வளவு தூய்மையானது? சத்தியத்தை நீ எவ்வளவு தூரம் சரியாகக் கடைபிடிக்கிறாய்? பரிபூரணப்பட, ஒருவருக்கு மனிதகுலத்தின் அனைத்து அம்சங்கள் பற்றிய அடிப்படை அறிவும் தேவை. இது ஓர் அடிப்படையான தேவை. ஜெயங்கொண்ட பின்னர் பரிபூரணப்படுத்தப்பட முடியாத யாவரும் சேவைப் பொருட்கள் ஆவார்கள் மேலும் இறுதியாக கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டு மேலும் இன்னும் பாதாளத்தில் விழுவார்கள், ஏனெனில் உன்மனநிலை மாறவில்லை மேலும் நீ இன்னும் சாத்தானுக்கு உரியவனாகவே இருக்கிறாய். ஒரு மனிதன் பரிபூரணத்துக்கான இயல்புகளைக் கொண்டிராவிட்டால், அவன் பயனற்றவன்—அவன் வீணானவன், ஒரு கருவி, நெருப்பின் சோதனையில் நிற்கமுடியாத ஏதோ ஒன்று! இப்போது தேவன் பேரில் உனக்குள்ள அன்பு எவ்வளவு பெரியது? உன் மேல் உனக்குள்ள வெறுப்பு எவ்வளவு பெரியது? உண்மையில் சாத்தானை நீ எவ்வளவு தூரம் ஆழமாக அறிவாய்? நீங்கள் உங்கள் முடிவை வலிமைப்படுத்தி உள்ளீர்களா? உங்கள் மனித சமுதாயத்துக்குள் உங்கள் வாழ்க்கை நன்கு முறைப்படுத்தப்பட்டுள்ளதா? உங்கள் வாழ்க்கை மாறியுள்ளதா? நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டம் மாறியுள்ளதா? இந்த விஷயங்கள் மாறவில்லை என்றால், நீ பின்வாங்க மாட்டாய் என்றாலும் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியாது; மாறாக, நீ ஜெயங்கொள்ளப்பட்டு மட்டுமே இருக்கிறாய். உன்னை சோதிக்கும் நேரம் எது, நீ சத்தியம் இல்லாமல் இருக்கிறாய், உன் மானிடத்தன்மை அசாதாரணமானதாக இருக்கும், மேலும் நீ ஒரு பொதி சுமக்கும் மிருகத்தைவிடக் கீழாக இருப்பாய். உன்னுடைய ஒரே சாதனை ஜெயங்கொள்ளப்படுதலே—என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட ஒரு வெறும் பொருளே நீ. ஒருமுறை எஜமானனின் சாட்டையை ருசிபார்த்த கழுதை, ஒவ்வொரு முறை எஜமானனை பார்க்கும் போதும் அச்சத்தோடேயே நடந்துகொள்ளும். அது போன்றே ஜெயங்கொள்ளப்பட்ட வெறும் கழுதைதான் நீ. ஒரு நபரிடம் அந்த நேர்மறை அம்சங்கள் இல்லாமல் இருந்தால் மேலும் அதற்குப் பதிலாக செயலற்றவனாகவும் அச்சமுள்ளவனாகவும், கோழையும் எல்லாவற்றிலும் தயங்கிறவனாகவும், எது ஒன்றையும் தெளிவாக அறிய முடியாதவனாகவும், சத்தியத்தை ஏற்க முடியாதவனாகவும், கடைப்பிடிக்க ஒரு பாதையற்றவனாகவும், மேலும் அதற்கு மேலாக தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இல்லாதவனாகவும்—தேவனை எப்படி நேசிப்பது ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது அல்லது எவ்வாறு ஓர் உண்மையான நபராக இருப்பது—என்ற புரிதல் இல்லாத ஒரு நபராக இருந்தால்—எவ்வாறு இத்தகைய நபர் தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியும்? உன் வாழ்க்கை மதிப்பற்றது மற்றும் நீ அடக்கப்பட்ட ஒரு கழுதை மட்டுமே என்று இது காட்டும். நீ ஜெயங்கொள்ளப்படுவாய், ஆனால் அது, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைக் கைவிட்டு அதன் ஆட்சிக்கு அடங்க மறுத்துவிட்டாய் என்று மட்டுமே அர்த்தம்; ஒரு தேவன் இருக்கிறார் என்று நம்புகிறாய், தேவ திட்டத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறாய், மற்றும் முறுமுறுப்புகள் எதுவும் இல்லை என்று அது அர்த்தமாகும். நேர்மறை அம்சங்களைப் பொறுத்த வரையில், தேவ வார்த்தையின் படி வாழ்ந்து தேவனை உன்னால் வெளிப்படுத்த முடியுமா? இந்த அம்சங்களில் ஒன்று கூட உன்னிடம் இல்லை என்றால், நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படவில்லை என்பது பொருள், மேலும் நீ ஜெயங்கொள்ளப்பட்ட ஒரு கழுதை மட்டுமே. விரும்பத்தக்க ஒன்றும் உன்னிடம் இல்லை, மேலும் பரிசுத்த ஆவி உன்னில் கிரியை செய்யவில்லை. உன் மனிதத்துவம் மிகவும் குறைபாடுள்ளது; உன்னை தேவன் பயன்படுத்துவது சாத்தியமற்றது. நீ தேவனால் அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் நம்பிக்கையற்ற மிருகங்களையும் நடக்கும் சவங்களையும் விட நூறு மடங்கு சிறந்து இருக்க வேண்டும்—இந்த நிலையை அடைபவர்கள் மட்டுமே பரிபூரணப்பட தகுதியுடையவர்கள். மனிதத்துவமும் மனசாட்சியும் கொண்ட ஒருவனே தேவன் பயன்படுத்த தகுதி உள்ளவன். நீங்கள் பரிபூரணப்பட்டால் மட்டுமே மனிதன் என்று கருதப்படுவீர்கள். பரிபூரணமடைந்த மக்களே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். இத்தகைய மக்கள் மட்டுமே தேவனுக்கு அதிக வலிமையான சாட்சியாக விளங்க முடியும்.

முந்தைய: பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து

அடுத்த: நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக