பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து

நீங்கள் தேவனால் பயன்படுத்தப்பட தகுதியுடையவராக இருக்க விரும்பினால், நீங்கள் தேவனின் கிரியையை அறிந்திருக்க வேண்டும், அவர் முன்பு செய்த (புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளிலுள்ள) கிரியையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், இன்றைய தினத்தின் அவருடைய கிரியையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதாவது, 6,000 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட தேவனின் கிரியையின் மூன்று கட்டங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீ சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், தேவனின் கிரியையை அறிந்துகொள்ளாமல் உன்னால் அவ்வாறு செய்ய முடியாது. வேதாகமம், பழைய ஏற்பாடு மற்றும் இயேசுவின் கிரியை மற்றும் அக்கால வார்த்தைகளைப் பற்றி உங்கள் தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்று யாராவது உன்னிடம் கேட்கலாம். வேதாகமத்தில் உள்ள மறைபொருளை உன்னால் பேச முடியாவிட்டால், அவர்கள் நம்பமாட்டார்கள். அந்த நேரத்தில், இயேசு பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதியைத் தம்முடைய சீஷர்களுடன் பேசினார். அவர்கள் வாசித்த அனைத்தும் பழைய ஏற்பாட்டில் இருந்தவை. புதிய ஏற்பாடு இயேசு சிலுவையில் அறையப்பட்ட அநேக தசாப்தங்களுக்குப் பிறகுதான் எழுதப்பட்டது. சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்துவதற்கு, நீங்கள் முக்கியமாக வேதாகமத்தின் ஆழ்ந்த உண்மையையும், இஸ்ரவேலில் தேவனின் கிரியையையும் புரிந்துகொள்ள வேண்டும், இது யேகோவா செய்த கிரியையாகும், மேலும் இயேசு செய்த கிரியையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா ஜனங்களும் அதிக அக்கறை கொள்ளும் பிரச்சினைகள் இவைதான், அந்த இரண்டு கட்டக் கிரியைகளின் மறைபொருளைத்தான் அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தும்போது, முதலில் பரிசுத்த ஆவியானவரின் இன்றைய கிரியையைக் குறித்த பேச்சை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தக் கிரியையின் கட்டம் அவர்களுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் நீங்கள் பின்தொடரும் அனைத்திலும் மிக உயர்ந்தது, தேவனைக் குறித்த அறிவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த அறிவும், இந்த இரண்டு காரியங்களை விட வேறு எதுவும் உயர்ந்ததில்லை. உயர்ந்ததைப் பற்றி நீங்கள் முதலில் பேசினால், அது அவர்களுக்கு மிக அதிகமானதாக இருக்கும், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரால் இதுபோன்ற கிரியையை யாரும் அனுபவித்ததில்லை. அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை, மற்றும் இது மனிதன் ஏற்றுக்கொள்ள எளிதானதல்ல. அவர்களின் அனுபவங்கள், அவ்வப்போது நடக்கிற பரிசுத்த ஆவியானவரின் சில கிரியைகளுடனான, கடந்த காலத்தின் பழைய காரியங்களாகும். அவர்கள் அனுபவிப்பது பரிசுத்த ஆவியானவரின் இன்றைய கிரியை அல்ல, அல்லது தேவனின் இன்றைய சித்தத்தை அல்ல. புதிய வெளிச்சம் இல்லாமலும், புதிய காரியங்கள் இல்லாமலும் அவர்கள் இன்னும் பழைய நடைமுறைகளின்படி கிரியை செய்கிறார்கள்.

இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் முக்கியமாக இயேசுவில் அவருடைய கிரியையைச் செய்தார், அதே சமயம் ஆலயத்தில் ஆசாரிய வஸ்திரம் தரித்து யேகோவாவுக்கு ஊழியம் செய்தவர்கள் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செய்தார்கள். அவர்களும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றிருந்தனர், ஆனாலும் தேவனின் தற்போதைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை, வெறுமனே பழைய நடைமுறைகளுக்கு ஏற்ப யேகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள், மற்றும் புதிய வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தார்கள். இயேசு வந்து புதிய கிரியையைக் கொண்டுவந்தார், ஆனாலும் ஆலயத்தில் சேவித்தவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் இல்லாதிருந்தது, அவர்களுக்குப் புதிய கிரியையும் இல்லாதிருந்தது. ஆலயத்தில் ஊழியம் செய்வதால், அவர்கள் வெறுமனே பழைய நடைமுறைகளைக் கைக்கொள்ள முடிந்தும், ஆலயத்தை விட்டு வெளியேறாமல், அவர்கள் எந்தவொரு புதிய பிரவேசத்தையும் பெற இயலாதவர்களாய் இருந்தனர். புதிய கிரியை இயேசுவால் கொண்டுவரப்பட்டது, இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய ஆலயத்திற்குள் சென்றதில்லை. அவர் ஆலயத்திற்கு வெளியே மட்டுமே தம்முடைய கிரியையைச் செய்தார், ஏனென்றால் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனுடைய கிரியையின் நோக்கம் மாறிவிட்டது. அவர் ஆலயத்திற்குள் கிரியை செய்ததில்லை, மனிதன் அங்கே தேவனைச் சேவித்தபோது, இருந்தவை அப்படியே இருப்பதற்கு மட்டுமே அது உதவியது, மேலும் புதிய கிரியை எதையும் கொண்டு வர முடியவில்லை. அதேபோல், இன்றும் மதவாதிகள் வேதாகமத்தைத் தொழுதுகொள்கிறார்கள். நீ அவர்களிடம் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தினால், அவர்கள் வேதாகமத்தின் வார்த்தைகளின் சிறிய விவரங்களை உன்னிடம் ஆவலுடன் கேட்பார்கள். மேலும், உன்னை வாயடைத்துப் போனவனாய்ப் பேச்சில்லாமல் ஆக்குவதற்கு, அவர்கள் அநேக ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள். பின்னர் அவர்கள் உங்கள் மீது ஒரு அடையாளத்தையிட்டு, உங்களுடைய விசுவாசத்தில் உங்களை முட்டாளாக நினைப்பார்கள். “தேவனின் வார்த்தையான வேதாகமத்தைக் கூட நீ அறியவில்லை, எனவே நீ தேவனை எவ்வாறு விசுவாசிக்கிறாய் என்று சொல்லுகிறாய்?” என்று அவர்கள் சொல்வார்கள். பின்னர் அவர்கள் உன்னை இழிவாகப் பார்த்து, “நீங்கள் விசுவாசிப்பவர் தேவன் என்பதால், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டைப் பற்றி அவர் ஏன் உங்களுக்குச் சொல்கிறதில்லை? அவர் இஸ்ரவேலிலிருந்து கிழக்கிற்கு தனது மகிமையைக் கொண்டு வந்திருக்கும் போது, அவருக்கு ஏன் இஸ்ரவேலில் செய்யப்பட்ட கிரியையை தெரியாது? அவருக்கு ஏன் இயேசுவின் கிரியையை தெரியாது? உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களுக்கு அது சொல்லப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர் இயேசு என்னும் இரண்டாவது மனுஷ அவதரிப்பு என்பதால், அவர் இதை எப்படி தெரியாமல் இருக்க முடியும்? யேகோவா செய்த கிரியையை இயேசு அறிந்திருந்தார். அவருக்கு எப்படி தெரியாமல் இருக்க முடியும்?” நேரம் வரும்போது, அவர்கள் அனைவரும் உன்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களின் தலைகள் இதுபோன்ற காரியங்களால் நிறைந்திருக்கின்றன. அவர்களால் எப்படி கேட்காமல் இருக்க முடியும்? இந்தப் பிரவாகத்தில் உள்ளவர்கள் வேதாகமத்தில் கவனம் செலுத்துவதில்லை, ஏனென்றால் நீங்கள் இன்று தேவன் செய்த படிப்படியான கிரியைகளைத் தொடர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் இந்தப் படிப்படியான கிரியையை உங்கள் சொந்தக் கண்களால் கண்டிருக்கிறீர்கள், கிரியையின் மூன்று நிலைகளை நீங்கள் தெளிவாகக் கண்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் வேதாகமத்தைக் கீழே போட்டுவிட்டு அதைத் தியானிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் அவர்களால் அதை ஆராய்ந்து பார்க்க முடியவில்லை, ஏனென்றால் இந்தப் படிப்படியான கிரியையைப் பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. “மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளுக்கும், கடந்த கால தீர்க்கதரிசிகளும் மற்றும் அப்போஸ்தலர்களும் செய்தவற்றிற்கும் வித்தியாசம் என்ன? தாவீது கர்த்தர் என்றும் அழைக்கப்பட்டார், இயேசுவும் அப்படித்தான். அவர்கள் செய்த கிரியை வேறுபட்டிருந்தாலும், அவை ஒரே காரியமென்று அழைக்கப்பட்டன. எனக்குச் சொல்லுங்கள், ஏன் அவர்களின் அடையாளங்கள் ஒன்று போல் இல்லை? யோவான் கண்டது ஒரு தரிசனமாக இருந்தது, அதுவும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்ததாக இருந்தது, மேலும் பரிசுத்த ஆவியானவர் சொல்ல நினைத்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது. யோவானின் அடையாளம் இயேசுவின் அடையாளத்திலிருந்து ஏன் வேறுபட்டது?” என்று சிலர் கேட்பார்கள். இயேசு பேசிய வார்த்தைகளால் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது, அவை தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. யோவான் கண்டது ஒரு தரிசனம், அவர் தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாமல் இருந்தார். இயேசுவைப் போலவே யோவானும், பேதுருவும், பவுலும் அநேக வார்த்தைகளைப் பேசினார்கள், ஆனாலும் அவர்கள் ஏன் இயேசுவைப் போன்ற அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை? அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது என்பதே இதற்கு முக்கியமான காரணம். இயேசு தேவனுடைய ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், தேவனுடைய ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு யாரும் செய்திராத கிரியையான புதிய யுகத்தின் கிரியையை அவர் செய்தார். அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார், அவர் யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் தேவனையே பிரதிநிதித்துவப்படுத்தினார், அதேசமயம் பேதுரு, பவுல் மற்றும் தாவீது ஆகியோர் இயேசுவால் அல்லது யேகோவாவால் அனுப்பப்பட்டவர்கள், அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தேவனின் ஒரு சிருஷ்டிப்பின் அடையாளத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆகவே, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் தேவனின் ஆவியானவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் தேவனின் சிருஷ்டிகளாக இருந்தனர். அவர்கள் தேவனின் நாமத்தால் கிரியை செய்தார்கள் அல்லது தேவனால் அனுப்பப்பட்ட பிறகு கிரியை செய்தார்கள். மேலும், அவர்கள் இயேசு அல்லது யேகோவா ஆரம்பித்த யுகங்களில் கிரியை செய்தார்கள், அவர்கள் வேறு எந்தக் கிரியையும் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனின் சிருஷ்டிப்புகளாக மட்டுமே இருந்தனர். பழைய ஏற்பாட்டில், அநேக தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தார்கள், அல்லது தீர்க்கதரிசன புத்தகங்களை எழுதினார்கள். அவர்களை தேவன் என்று யாரும் சொல்லவில்லை, ஆனால் இயேசு கிரியை செய்ய ஆரம்பித்தவுடன், தேவனின் ஆவியானவர் அவரை தேவன் என்று சாட்சி பகிர்ந்தார். அது ஏன்? இந்தக் கட்டத்தில், இதற்கு முன்பே, அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பல்வேறு நிருபங்களை எழுதி, அநேக தீர்க்கதரிசனங்களை உரைத்தார்கள் என்பதை நீ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும்! பிற்காலத்தில், ஜனங்கள் அவற்றில் சிலவற்றை வேதாகமத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுத்தார்கள், சில தொலைந்து போயின. அவர்களால் பேசப்படுபவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று சொல்பவர்கள் இருந்தாலும், ஏன் அவற்றில் சில நன்மையாகக் கருதப்படுகின்றன, அவற்றில் சில தீமையாகக் கருதப்படுகின்றன? சிலர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், மற்றவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? அவை உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவரினால் பேசப்பட்ட வார்த்தைகளாக இருந்தால், அவற்றைத் தேர்ந்தெடுப்பது ஜனங்களுக்கு அவசியமா? இயேசு பேசிய வார்த்தைகளின் விவரங்களும் அவர் செய்த கிரியையும் நான்கு சுவிஷேசங்களில் ஒவ்வொன்றிலும் ஏன் வேறுபடுகின்றன? இது அவற்றை எழுதியவர்களின் தவறு அல்லவா? சிலர் கேட்பார்கள், “பவுலும் மற்ற ஆசிரியர்களும் எழுதிய புதிய ஏற்பாட்டின் நிருபங்களும் அவர்கள் செய்த கிரியையும் மனிதனின் சித்தத்திலிருந்து ஓரளவு உயர்ந்து, மனிதனின் கருத்துக்களால் கலப்படம் செய்யப்பட்டதால், இன்று நீர் (தேவன்) பேசும் வார்த்தைகளில் மனிதனின் தூய்மையற்ற தன்மை இல்லையா? அவை உண்மையில் மனிதனின் கருத்துக்கள் எதையும் கொண்டிருக்கவில்லையா?” தேவன் செய்த கிரியையின் இந்த நிலை பவுல் மற்றும் அநேக அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்ததைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அடையாளத்தில் வேறுபாடு இருப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமாக, மேற்கொள்ளப்படுகிற கிரியையிலும் வேறுபாடு உள்ளது. பவுல் தாக்கப்பட்டு கர்த்தருக்கு முன்பாக விழுந்தபின், பரிசுத்த ஆவியானவரினால் கிரியைக்கு வழிநடத்தப்பட்டார், அவர் அனுப்பப்பட்ட ஒருவரானார். ஆகவே அவர் சபைகளுக்கு நிருபங்களை எழுதினார், இந்த நிருபங்கள் அனைத்தும் இயேசுவின் போதனைகளைப் பின்பற்றின. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே கிரியை செய்ய பவுல் கர்த்தரால் அனுப்பப்பட்டார், ஆனால் தேவன் தாமே வந்தபோது, அவர் எந்த நாமத்திலும் கிரியை செய்யவில்லை, தேவனுடைய ஆவியானவரைத் தவிர வேறு எவரையும் அவருடைய கிரியையில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. தேவன் தனது கிரியையை நேரடியாகச் செய்ய வந்தார். அவர் மனிதனால் பரிபூரணமாக்கப்படவில்லை, அவருடைய கிரியை எந்த மனிதனின் போதனைகளிலும் மேற்கொள்ளப்படவில்லை. கிரியையின் இந்தக் கட்டத்தின் போது, தேவன் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிக் கூறுவதன் மூலம் வழிநடத்துவதில்லை, மாறாக, தன்னிடம் உள்ளதைப் பொறுத்து நேரடியாக அவருடைய கிரியையைச் செய்கிறார். உதாரணமாக, ஊழியம் செய்பவர்களுக்குரிய சோதனை, சிட்சிப்பின் நேரம், மரணத்தின் சோதனை, தேவனை நேசிக்கும் நேரம்…. இது அனைத்தும் முன்பு செய்யப்பட்டிராத கிரியை, இது மனிதனின் அனுபவங்களை விட தற்போதைய யுகத்தின் கிரியையாகும். நான் கூறிய வார்த்தைகளில், மனிதனின் அனுபவங்கள் எவை? அவை அனைத்தும் ஆவியானவரிடமிருந்து நேரடியாக வரவில்லையா, அவை ஆவியானவரினால் வெளியாக்கப்படவில்லையா? உன் திறமை மிகவும் மோசமாக இருப்பதால்தான் நீங்கள் யதார்த்தத்தை நிதானிக்க முடியவில்லை! நான் கூறும் நடைமுறை வாழ்க்கைமுறை, பாதையை வழிநடத்துவதாகும், இதற்கு முன்னர் யாராலும் எப்போதும் பேசப்படவில்லை, இந்தப் பாதையை யாரும் ஒருபோதும் அனுபவித்ததில்லை, அல்லது இந்த யதார்த்தத்தை அறிந்திருக்கவில்லை. நான் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு, யாரும் அவற்றைப் பேசவில்லை. இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி யாரும் பேசவில்லை, அத்தகைய விவரங்களை அவர்கள் இதுவரைப் பேசியதில்லை, மேலும், இந்தக் காரியங்களை வெளிப்படுத்த யாரும் இதுபோன்ற நிலைகளைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று நான் வழிநடத்தும் பாதையை யாரும் வழிநடத்தவில்லை, அது மனிதனால் வழிநடத்தப்பட்டிருந்தால், அது ஒரு புதிய வழியாக இருந்திருக்காது. உதாரணமாகப் பவுலையும் பேதுருவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இயேசு பாதையை வழிநடத்துவதற்கு முன்பு அவர்களுக்குச் சொந்த அனுபவங்கள் இல்லாதிருந்தது. இயேசு வழிநடத்திய பின்புதான் அவர்கள் இயேசு பேசிய வார்த்தைகளையும், அவர் வழிநடத்திய பாதையையும் அனுபவித்தார்கள். இதிலிருந்து அவர்கள் அநேக அனுபவங்களைப் பெற்றார்கள், மேலும் அவர்கள் நிருபங்களை எழுதினார்கள். எனவே, மனிதனின் அனுபவங்கள் தேவனின் கிரியைக்கு சமமானவை அல்ல, தேவனின் கிரியை என்பது மனிதனின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களால் விவரிக்கப்படும் அறிவுக்கு சமமானதல்ல. இன்று நான் ஒரு புதிய பாதையை வழிநடத்துகிறேன், புதிய கிரியையைச் செய்கிறேன் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன், என் கிரியையும் வெளிப்பாடுகளும் யோவானிடமிருந்தும் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவை. அது அப்படியல்ல, நான் ஒருபோதும் அனுபவங்களைப் பெற்று, பின்னர் அவற்றைப் பற்றி உங்களிடம் பேசுவதில்லை. அப்படிச் செய்திருந்தால், அது உங்களை நீண்ட காலத்திற்கு முன்பே தாமதப்படுத்தியிருக்காதா? கடந்த காலத்தில், அநேகர் பேசிய அறிவும் போற்றப்பட்டது, ஆனால் அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் ஆவிக்குரிய நபர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அடிப்படையில் மட்டுமே பேசப்பட்டன. அவர்கள் பாதையை வழிநடத்தவில்லை, ஆனால் அவர்களின் அனுபவங்களிலிருந்து வந்தவர்கள், அவர்கள் பார்த்திருந்தவற்றிலிருந்து வந்தவர்கள், அவர்களின் அறிவிலிருந்து வந்தவர்கள். சில அவர்களின் கருத்துக்கள், மற்றும் சில அவர்கள் சுருக்கமாகக் கூறியிருந்த அனுபவத்தை உள்ளடக்கியவை. இன்று, எனது கிரியையின் தன்மை அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மற்றவர்களால் வழிநடத்தப்படுவதை நான் அனுபவித்ததில்லை, மற்றவர்களால் பரிபூரணமாக்கப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், நான் பேசிய மற்றும் விவாதித்தவை எல்லாம் வேறு யாரையும் போன்றதல்ல மற்றும் வேறு யாராலும் பேசப்படவுமில்லை. இன்று, நீங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், நான் பேசும் வார்த்தைகளின் அடிப்படையில் உங்கள் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வெளிப்பாடுகளும் கிரியையும் இல்லாமல், இந்தக் காரியங்களை அனுபவிக்கும் திறன் கொண்டவர்கள் யார், (ஊழியம் செய்பவர்களின் சோதனை, சிட்சிப்புக் காலம்…), அத்தகைய அறிவைப் பற்றி யாரால் பேச முடியும்? இதைக் காண்பதற்கு நீ உண்மையில் தகுதியற்றவனா? கிரியையின் நிலையைப் பொருட்படுத்தாமல், என் வார்த்தைகள் பேசப்பட்டவுடன், நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஏற்ப ஐக்கியம் கொள்ளவும், அதன்படி கிரியை செய்யவும் தொடங்குகிறீர்கள், அது உங்களில் எவரும் நினைவில் கொண்டிருந்த ஒரு வழி அல்ல. இவ்வளவு தூரம் வந்திருந்தும், இதுபோன்ற தெளிவும் எளிமையுமான கேள்வியைக் காண உன்னால் இயலவில்லையா? இது யாரோ நினைவில் கொண்ட ஒரு வழி அல்ல, எந்தவொரு ஆவிக்குரிய நபரின் அடிப்படையிலானதும் இல்லை. இது ஒரு புதிய பாதை, முன்பு இயேசு பேசிய அநேக வார்த்தைகள் கூட இனி ஒருபோதும் பொருந்தாது. நான் பேசுவது ஒரு புதிய சகாப்தத்தைத் திறக்கும் கிரியை, அது தனித்து நிற்கும் கிரியை. நான் செய்யும் கிரியை மற்றும் நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும் புதியவை. இது இன்றைய தினத்தின் புதிய கிரியை அல்லவா? இப்படியே இயேசுவின் கிரியையும் இருந்தது. அவருடைய கிரியையும் ஆலயத்தில் இருந்தவர்களிடமிருந்து வேறுபட்டது, அதுவும் பரிசேயர்களின் கிரியையிலிருந்தும் கூட வேறுபட்டது, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவராலும் செய்யப்பட்டதைப் போல எந்த ஒற்றுமையையும் அது கொண்டிருக்கவில்லை. அதைக் கண்டபின், ஜனங்களால் தீர்மானம் செய்ய முடியவில்லை. “இது உண்மையில் தேவனால் செய்யப்பட்டதா?” இயேசு யேகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அவர் மனிதனுக்கு கற்பிக்க வந்தபோது, அவர் பேசியதெல்லாம் பழைய ஏற்பாட்டின் பண்டையக் கால புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் கூறியதை விட புதியவை, வேறுபட்டவை, இதன் காரணமாக ஜனங்கள் உறுதியில்லாதவர்களாகவே இருந்தனர். இதுதான் மனிதனை சமாளிக்க மிகவும் கடினமானவனாக்குகிறது. இந்தப் புதிய கட்ட கிரியையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, உங்களில் பெரும்பாலோர் நடந்து வந்த பாதை, அந்த ஆவிக்குரிய நபர்களின் அஸ்திபாரத்தைக் கடைப்பிடிப்பதும், பிரவேசிப்பதும் ஆகும். ஆனால், நான் இன்று செய்யும் கிரியை மிகவும் வித்தியாசமானது, அதனால் அது சரியானதா இல்லையா என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை. முன்பு நீ எந்தப் பாதையில் நடந்தாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை, யாருடைய “உணவை” நீ புசித்தாய், அல்லது உன் “தகப்பனாக” நீ தெரிந்து கொண்டாய் என்பதில் எனக்கு விருப்பமில்லை. மனிதனை வழிநடத்த நான் வந்திருந்து புதிய சிருஷ்டிப்புகளைக் கொண்டு வந்திருப்பதால், என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நான் சொல்வதற்கேற்ப கிரியை செய்ய வேண்டும். நீ எவ்வளவு வல்லமையுள்ள “குடும்பத்தைச்” சேர்ந்தவனாக இருந்தாலும், நீ என்னைப் பின்பற்ற வேண்டும், நீ உன் முந்தைய நடைமுறைகளின்படி கிரியை செய்யக்கூடாது, உன் “வளர்ப்புத் தகப்பன்” பொறுப்பில் இருந்து விலக வேண்டும், நீ உன் நியாமான பங்கைப் பெற உன் தேவனுக்கு முன் வர வேண்டும். நீ முழுமையாக என் கைகளில் இருக்கிறாய், மேலும் நீ உன் வளர்ப்புத் தகப்பனுக்கு அதிகமான குருட்டு விசுவாசத்தை அர்ப்பணிக்கக்கூடாது. அவன் உன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இன்றைய தினத்தின் கிரியை தனித்து நிற்கிறது. நான் இன்று சொல்வது அனைத்தும் கடந்த காலத்திலிருந்து ஒரு அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இது ஒரு புதிய ஆரம்பம், அது மனிதனின் கையால் சிருஷ்டிக்கப்பட்டது என்று நீ சொன்னால், நீ இரட்சிப்புக்கு அப்பாற்பட்ட அளவுக்குக் குருடனாய் இருக்கிறாய்!

ஏசாயா, எசேக்கியேல், மோசே, தாவீது, ஆபிரகாம் மற்றும் தானியேல் ஆகியோர் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடையே தலைவர்களாகவோ தீர்க்கதரிசிகளாகவோ இருந்தார்கள். ஏன் அவர்கள் தேவன் என்று அழைக்கப்படவில்லை? ஏன் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு சாட்சி பகரவில்லை? பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் கிரியையைத் தொடங்கியதும், அவருடைய வார்த்தைகளைப் பேசத் தொடங்கியதும் ஏன் அவருக்கு சாட்சி பகர்ந்தார்? ஏன் பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு சாட்சி பகரவில்லை? அவர்கள் மாம்சமான மனிதர்கள், அனைவரும் “ஆண்டவன்” என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அழைக்கப்பட்டதைக் கவனம் கொள்ளாமல், அவர்களின் கிரியை அவர்கள் இருக்கும் நிலை மற்றும் அவர்களின் சாராம்சத்தைக் குறிக்கிறது, மேலும் அவர்கள் இருக்கும் நிலை மற்றும் அவர்களின் சாராம்சம் ஆகியவை அவர்களின் அடையாளத்தைக் குறிக்கின்றன. அவர்களின் சாராம்சம் அவர்களின் பட்டங்களுடன் தொடர்புடையது அல்ல. அது அவர்கள் வெளிப்படுத்தியவை மற்றும் அவர்கள் வாழ்ந்த விதம் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவன் என்று சாதாரணமானவர்கள் அழைக்கப்படுவதில் எதுவும் இல்லை, ஒரு நபர் எந்த வகையிலும் அழைக்கப்படலாம், ஆனால் அவருடைய சாராம்சம் மற்றும் இயல்பான அடையாளம் மாற்ற முடியாததாக இருந்தது. அந்தக் கள்ளக் கிறிஸ்துக்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள் மற்றும் ஏமாற்றுபவர்களில், “தேவன்” என்று அழைக்கப்படுபவர்களும் இருந்தார்கள் இல்லையா? ஏன் அவர்கள் தேவன் இல்லை? ஏனென்றால் அவர்களால் தேவனின் கிரியையைச் செய்ய முடியாது. அடிப்படையில் அவர்கள் மனிதர்கள், ஜனங்களை ஏமாற்றுகிறார்கள், தேவன் அல்ல, எனவே அவர்கள் தேவனின் அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. பன்னிரண்டு கோத்திரங்களில் தாவீது ஆண்டவன் என்றும் அழைக்கப்படவில்லையா? இயேசு ஆண்டவர் என்றும் அழைக்கப்பட்டார். இயேசு மட்டும் ஏன் மனுஷ ரூபமெடுத்த தேவன் என்று அழைக்கப்பட்டார்? எரேமியாவும் மனுஷகுமாரன் என்று அறியப்படவில்லையா? மேலும் இயேசு மனுஷகுமாரன் என்று அறியப்படவில்லையா? தேவனின் சார்பாக இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? அவருடைய சாராம்சம் வேறுபட்டது என்பதால் அல்லவா? அவர் செய்த கிரியை வேறுபட்டது என்பதால் அல்லவா? பட்டப்பெயர் முக்கியமா? இயேசு மனுஷகுமாரன் என்றும் அழைக்கப்பட்டாலும், அவர் தேவனின் முதல் மனுஷ அவதரிப்பு ஆவார், அவர் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும், மீட்பின் கிரியையைச் செய்யவும் வந்திருந்தார். மனுஷ குமாரன் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களிடமிருந்து இயேசுவின் அடையாளமும் சாரமும் வேறுபட்டவை என்பதை இது நிரூபிக்கிறது. இன்று, பரிசுத்த ஆவியானவரினால் பயன்படுத்தப்பட்டவர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று உங்களில் யார் சொல்லத் துணிகிறார்கள்? இதுபோன்ற காரியங்களை யாராவது சொல்லத் துணிகிறார்களா? நீ இதுபோன்ற காரியங்களைச் சொன்னால், எஸ்ராவின் தீர்க்கதரிசன புத்தகம் ஏன் நிராகரிக்கப்பட்டது, அந்தப் பண்டைய காலப் புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் ஏன் அதேபோல் செய்யப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், நீங்கள் ஏன் இத்தகைய நிலையற்ற தேர்வுகளைச் செய்யத் துணிகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேர்ந்தெடுப்பதற்கு நீ தகுதியுள்ளவனா? இஸ்ரேலில் இருந்து அநேக கதைகளும் நிராகரிக்கப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று நீ நம்பினால், சில புத்தகங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்திருந்தால், அவை அனைத்தும் வைக்கப்பட்டிருக்க வேண்டும், சபைகளின் சகோதர சகோதரிகளுக்கு வாசிக்க அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவை மனிதனின் சித்தத்தால் தேர்ந்தெடுக்கப்படவோ நிராகரிக்கப்படவோ கூடாது. அதைச் செய்வது தவறாகும். பவுல் மற்றும் யோவானின் அனுபவங்கள் அவர்களின் தனிப்பட்ட உள்ளுணர்வுடன் கலந்தன என்று சொல்வதால் அவர்களின் அனுபவங்களும் அறிவும் சாத்தானிடமிருந்து வந்தவை என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உள்ளுணர்வுகளிலிருந்து வந்த காரியங்களை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் அறிவு அந்த நேரத்தில் அவர்களின் நிஜ அனுபவங்களின் பின்னணிக்கு ஏற்ப இருந்தது, இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று யாரால் விசுவாசத்துடன் சொல்ல முடியும்? நான்கு சுவிசேஷங்களும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்றால், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஒவ்வொருவரும் இயேசுவின் கிரியையைப் பற்றி ஏன் வித்தியாசமாகச் சொன்னார்கள்? நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை என்றால், பேதுரு எவ்வாறு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தான் என்ற வேதாகமத்தில் உள்ள விளக்கங்களைப் பாருங்கள். அவை அனைத்தும் வேறுபட்டவை, அவை ஒவ்வொன்றும் அவற்றின் தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. அறியாதவர்கள் அநேகர், “மனுஷ ரூபமெடுத்த தேவனும் ஒரு மனிதராவார், ஆகவே அவர் பேசும் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து முழுமையாக வர முடியுமா? பவுல் மற்றும் யோவானின் வார்த்தைகள் மனிதனின் சித்தத்துடன் கலந்திருந்தால், அவர் பேசும் வார்த்தைகள் உண்மையில் மனிதனின் சித்தத்துடன் கலக்கப்படவில்லையா?” இப்படிச் சொல்லும் ஜனங்கள் குருடர்கள் மற்றும் அறிவற்றவர்கள்! நான்கு சுவிஷேசங்களையும் கவனமாக வாசியுங்கள். இயேசு செய்த காரியங்களையும், அவர் பேசிய வார்த்தைகளையும் பற்றி அவர்கள் பதிவுசெய்ததை வாசியுங்கள். ஒவ்வொரு விளக்கமும் மிகவும் வித்தியாசமானது, ஒவ்வொன்றும் அதன் சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏன் முரண்பாடுகள் உள்ளன? இதைக் காண முடியாத அளவிற்கு மனிதன் மிகவும் முட்டாளானவன் அல்லவா? தேவனுக்காக சாட்சி பகர உன்னைக் கேட்டால், நீ எந்த வகையான சாட்சிகளைப் பகர முடியும்? தேவனை அறிவதற்கான அத்தகைய ஒரு வழியில் அவருக்கு சாட்சி பகர முடியுமா? “யோவான் மற்றும் லூக்காவின் பதிவுகள் மனித விருப்பத்துடன் கலந்திருந்தால், உங்கள் தேவன் பேசும் வார்த்தைகள் மனித விருப்பத்துடன் கலக்கப்படவில்லையா?” என்று பிறர் உன்னிடம் கேட்டால், உன்னால் தெளிவான பதிலைக் கொடுக்க முடியுமா? லூக்காவும் மத்தேயுவும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டிருந்து, இயேசுவின் கிரியையைப் பார்த்திருந்த பின், இயேசுவின் கிரியையின் சில யதார்த்தங்களை நினைவுறுத்தும் படியாக, அவர்கள் தங்கள் சொந்த அறிவைப் பற்றிப் பேசினார்கள். அவர்களின் அறிவு பரிசுத்த ஆவியானவரினால் முழுமையாக வெளிப்பட்டது என்று நீ சொல்ல முடியுமா? வேதாகமத்திற்கு வெளியே, அவர்களை விட உயர்ந்த அறிவைக் கொண்ட அநேக ஆவிக்குரிய பிரமுகர்கள் இருந்தார்கள், ஆகவே, அவர்களின் வார்த்தைகள் பிற்கால சந்ததியினரால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை? அவை பரிசுத்த ஆவியானவரினாலும் பயன்படுத்தப்படவில்லையா? இன்றைய தினத்தின் கிரியையில், இயேசுவின் கிரியையின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்ட எனது சொந்த உள்ளுணர்வுகளைப் பற்றி நான் பேசவில்லை என்பதையும், இயேசுவின் கிரியையின் பின்னணிக்கு எதிராக எனது சொந்த அறிவைப் பற்றியும் நான் பேசவில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயேசு என்ன கிரியை செய்தார்? இன்று நான் என்ன கிரியை செய்கிறேன்? நான் செய்வதற்கும் சொல்வதற்கும் எந்த முன் மாதிரியும் இல்லை. இன்று நான் நடந்து செல்லும் பாதை இதற்கு முன் ஒருபோதும் நடக்கப்படவில்லை, இது ஒருபோதும் யுகங்களுக்கும் தலைமுறைகளுக்கும் முன்பான ஜனங்களால் நடக்கப்படவில்லை. இன்று, இது தொடங்கப்பட்டுள்ளது, இது ஆவியானவரின் கிரியை அல்லவா? இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றாலும், கடந்த காலத் தலைவர்கள் அனைவரும் மற்றவர்களின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் தங்கள் கிரியையைச் செய்தார்கள்; இருப்பினும், தேவனாகிய அவருடைய கிரியை வேறுபட்டது. இயேசுவின் கிரியையின் கட்டம் ஒரே மாதிரியாக இருந்தது. அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார். அவர் வந்ததும், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், மனிதன் மனந்திரும்பி அறிக்கையிட வேண்டும் என்று கூறினார். இயேசு தம்முடைய கிரியையை முடித்த பிறகு, பேதுருவும் பவுலும் மற்றவர்களும் இயேசுவின் கிரியையைச் செய்யத் தொடங்கினார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டு பரலோகத்திற்கு ஏறிய பிறகு, அவர்கள் சிலுவையின் வழியைப் பரப்ப ஆவியானவரால் அனுப்பப்பட்டார்கள். பவுலின் வார்த்தைகள் போற்றப்பட்டாலும், பொறுமை, அன்பு, துன்பம், முக்காடிடுதல், ஞானஸ்நானம் அல்லது பின்பற்ற வேண்டிய பிற உபதேசங்கள் போன்ற இயேசு கூறிய அஸ்திபாரத்தின் அடிப்படையிலும் அவை அமைந்தன. இவை அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் பேசப்பட்டன. அவர்களால் ஒரு புதிய வழியைத் திறக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதர்கள்.

அந்த நேரத்தில் இயேசுவின் வெளிப்பாடுகளும் கிரியைகளும் கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை, பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின் கிரியைக்கு ஏற்ப அவர் தனது கிரியையைச் செய்யவில்லை. இது கிருபையின் காலத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு ஏற்றாற்போல் மேற்கொள்ளப்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த கிரியையின்படி, அவருடைய சொந்தத் திட்டத்தின்படி, அவருடைய ஊழியத்தின்படி பிரயாசப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி கிரியை செய்யவில்லை. அவர் செய்த எதுவும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி இல்லை, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக அவர் கிரியை புரிய வரவில்லை. தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிப்படையாகச் செய்யப்படவில்லை, மேலும் அவர் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவோ அல்லது பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை வேண்டுமென்றே உணரவோ வரவில்லை. ஆயினும் அவருடைய கிரியைகள் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளைப் பாழாக்கவில்லை, அவர் முன்பு செய்திருந்த கிரியையையும் இடையூறு செய்யவில்லை. எந்தவொரு கோட்பாட்டையும் பின்பற்றாமல் அதற்குப் பதிலாக அவரே செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது என்பது அவருடைய கிரியையின் முக்கிய அம்சமாகும். அவர் ஒரு தீர்க்கதரிசியோ அல்லது ஞானதிருஷ்டிக்காரரோ அல்ல, ஆனால் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செய்ய உண்மையாக வந்த ஒரு செய்கைக்காரர், அவர் தனது புதிய யுகத்தைத் தொடங்கவும், அவருடைய புதிய கிரியையைச் செய்யவும் வந்தார். நிச்சயமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, பழைய ஏற்பாட்டில் பண்டைய தீர்க்கதரிசிகள் பேசிய அநேக வார்த்தைகளையும் அவர் நிறைவேற்றினார். இன்றைய கிரியையும் பழைய ஏற்பாட்டின் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளையும் நிறைவேற்றியுள்ளது. “பழைய பஞ்சாங்கத்தை” நான் வைத்திருப்பதில்லை என்பது போன்றதுதான் இது, அவ்வளவுதான். ஏனென்றால், நான் செய்யவேண்டிய கிரியைகள் அதிகம் உள்ளன, நான் உங்களிடம் பேச வேண்டிய அநேக வார்த்தைகள் உள்ளன, இந்தக் கிரியையும் இந்த வார்த்தைகளும் வேதாகமத்தின் பத்திகளை விளக்குவதை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் இதுபோன்ற கிரியைக்கு பெரியதான முக்கியத்துவம் அல்லது மதிப்பு உங்களுக்கு இல்லை, அது உங்களுக்கு உதவ முடியாது, அல்லது உங்களை மாற்ற முடியாது. வேதாகமத்திலிருந்து எந்தவொரு பத்தியையும் நிறைவேற்றுவதற்காக புதிய கிரியையைச் செய்ய நான் விரும்புகிறதில்லை. வேதாகமத்தின் பண்டைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்ற மட்டுமே தேவன் பூமிக்கு வந்திருந்தால், யார் பெரியவர், மனுஷனாக அவதரித்த தேவனா அல்லது அந்தப் பண்டைய தீர்க்கதரிசிகளா? எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்க்கதரிசிகள் தேவனுக்குப் பொறுப்பானவர்களா, அல்லது தேவன் தீர்க்கதரிசிகளுக்குப் பொறுப்பானவரா? இந்த வார்த்தைகளை நீ எவ்வாறு விளக்குகிறாய்?

ஆரம்பத்தில், இயேசு தம்மைப் பின்பற்றிய சீடர்களைப் போல அதிகாரப்பூர்வமாக தம்முடைய ஊழியத்தை இன்னும் செய்யாதபோது, சில சமயங்களில் அவர் கூட்டங்களிலும் கலந்துகொண்டு, பாமாலைகளைப் பாடினார், துதி செய்தார், ஆலயத்தில் பழைய ஏற்பாட்டை வாசித்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று எழுந்தபின், ஆவியானவர் அதிகாரப்பூர்வமாக அவர்மீது இறங்கி கிரியை செய்யத் தொடங்கினார், அவருடைய அடையாளத்தையும் அவர் மேற்கொள்ளவிருந்த ஊழியத்தையும் வெளிப்படுத்தினார். இதற்குமுன், மரியாளைத் தவிர யாருக்கும் அவருடைய அடையாளம் தெரியாது, யோவான் கூட அறிந்திருக்கவில்லை. ஞானஸ்நானம் பெற்றபோது இயேசுவுக்கு இருபத்தொன்பது வயது. அவருடைய ஞானஸ்நானம் முடிந்தபின், அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன், பரிசுத்த ஆவியானவர் இந்த வழியில் அவருக்கு சாட்சி அளிக்கத் தொடங்கினார். இருபத்தொன்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு, அவர் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார், அவர் புசிக்க வேண்டியபோது புசிப்பது, தூங்குவது மற்றும் சாதாரணமாக ஆடை அணிவது, அவரிடத்தில் எதுவும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதல்ல, நிச்சயமாக, இது மனிதனின் மாம்சக் கண்களுக்கு மட்டுமே இப்படி இருந்தது. சில நேரங்களில் அவரும் பலவீனமாக இருந்தார், சில நேரங்களில் அவராலும் கூட வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பதைப் போல காரியங்களை பகுத்தறிய முடியவில்லை. அவருடைய புத்திசாலித்தனம் அவருடைய வயதிற்கு ஏற்றாற்போல் வளர்ந்தது. இந்த வார்த்தைகள் அவர் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தார் என்பதையும், அவர் மற்ற சாதாரண ஜனங்களிடமிருந்து குறிப்பாக வேறுபட்டவர் அல்ல என்பதையும் காட்டுகின்றன. அவர் ஒரு சாதாரண மனிதராக வளர்ந்திருந்தார், அவரைப் பற்றி சிறப்பு எதுவும் இல்லை. ஆயினும் அவர் தேவனின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருந்தார். ஞானஸ்நானம் பெற்ற பிறகு, அவர் சோதனைக்கு உட்படத் தொடங்கினார், அதன் பிறகு அவர் தம்முடைய ஊழியத்தையும் கிரியைகளையும் செய்யத் தொடங்கினார், மேலும் வல்லமை, ஞானம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பெற்றவரானார். இது பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஞானஸ்நானத்திற்கு முன்பு அவரிடத்தில் கிரியை செய்யவில்லை, அல்லது அவருக்குள் இல்லை என்று சொல்லவில்லை. அவருடைய ஞானஸ்நானத்திற்கு முன்பும் பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் வாசமாயிருந்தார், ஆனால் அதிகாரப்பூர்வமாகக் கிரியை செய்யத் தொடங்கவில்லை, ஏனென்றால் தேவன் தம்முடைய கிரியையை எப்போது செய்ய வேண்டுமென வரம்புகள் உள்ளன, மேலும், சாதாரண ஜனங்கள் வளர்ந்து வரும் ஒரு சாதாரண செயல்முறையைக் கொண்டுள்ளனர். பரிசுத்த ஆவியானவர் எப்போதும் அவருக்குள் வாசமாயிருந்தார். இயேசு பிறந்தபோது, அவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தார், ஒரு காலை நட்சத்திரம் தோன்றியது. அவர் பிறப்பதற்கு முன்பு, ஒரு தேவதூதன் யோசேப்புக்கு ஒரு கனவில் தோன்றி, மரியாள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்றும், குழந்தை பரிசுத்த ஆவியானவரினால் கருத்தரிக்கப்பட்டதாகவும் சொன்னார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையைத் தொடங்கினார், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மீது இறங்க மட்டுமே செய்தார் என்று அர்த்தமல்ல. பரிசுத்த ஆவியானவர் அவர்மீது புறாவைப் போல இறங்கினார் என்ற கூற்று அவருடைய ஊழியத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது. தேவனுடைய ஆவியானவர் முன்பே அவருக்குள் இருந்தார், ஆனால் அவர் இன்னும் கிரியை செய்யத் தொடங்கவில்லை, ஏனென்றால் நேரம் வரவில்லை, ஆவியானவர் அவசரமாக கிரியை செய்யத் தொடங்கவில்லை. ஞானஸ்நானத்தின் மூலம் ஆவியானவர் அவருக்கு சாட்சி பகர்ந்தார். அவர் தண்ணீரிலிருந்து எழுந்தபோது, ஆவியானவர் அதிகாரப்பூர்வமாக அவரிடத்தில் கிரியை செய்யத் தொடங்கினார், இது தேவனின் அவதரிப்பான மாம்சம் அவருடைய ஊழியத்தை நிறைவேற்றத் தொடங்கியதையும், மீட்பின் கிரியையைத் தொடங்கியதையும் குறிக்கிறது, அதாவது, கிருபையின் காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. எனவே, அவர் என்ன கிரியை செய்தாலும் சரி, தேவனின் கிரியைக்கு ஒரு நேரம் இருக்கிறது. அவருடைய ஞானஸ்நானத்திற்குப் பிறகு, இயேசுவில் குறிப்பிட்ட மாற்றங்கள் எதுவும் இல்லை. அவர் இன்னும் அவருடைய சுயமான மாம்சத்தில் இருந்தார். அவர் தனது கிரியையைத் தொடங்கினார், அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தினார், அவர் அதிகாரமும் வல்லமையும் நிறைந்தவர். இது சம்பந்தமாக அவர் முன்பு இருந்ததிலிருந்து வேறுபட்டிருந்தார். அவரது அடையாளம் வேறுபட்டிருந்தது, அதாவது அவருடைய அந்தஸ்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியாக இருந்தது, அது மனிதனால் செய்யப்பட்ட கிரியை அல்ல. ஆரம்பத்தில், ஜனங்களுக்குத் தெரியாது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்கு சாட்சி பகர்ந்தவுடன் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சாட்சி அளிப்பதற்கு முன்பு தேவனின் சாட்சி இல்லாமல் இயேசு பெரிய கிரியையைச் செய்திருந்தால், அவருடைய கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவருடைய அடையாளத்தை ஜனங்கள் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் மனிதக் கண்களால் அதைப் பார்க்க முடியாது. பரிசுத்த ஆவியானவரின் சாட்சியின் படி இல்லாமல், அவரை மனுஷ ரூபமெடுத்த தேவனாக யாரும் அங்கீகரிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சாட்சி பகர்ந்தபின், இயேசு எந்த வித்தியாசமும் இல்லாமல் தொடர்ந்து அதே வழியில் கிரியை செய்திருந்தால், அது அந்த விளைவை ஏற்படுத்தி இருக்காது, மேலும் இது முக்கியமாகப் பரிசுத்த ஆவியானவரின் செயலையும் நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகர்ந்தபின், பரிசுத்த ஆவியானவர் தன்னைக் காட்ட வேண்டியிருந்தது, இதனால் அவர் தேவன் என்பதையும், அவருக்குள் தேவனுடைய ஆவியானவர் இருக்கிறார் என்பதையும் உன்னால் தெளிவாகக் காண முடியும். தேவனின் சாட்சி தவறில்லை, இது அவருடைய சாட்சி சரியானது என்பதை நிரூபிக்க முடிந்தது. பரிசுத்த ஆவியானவரின் சாட்சிக்கு முன்னும் பின்னும் அவர் செய்த கிரியைகள் ஒரே மாதிரியாக இருந்திருந்தால், மனுஷ ரூபமெடுத்த அவருடைய ஊழியமும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் முக்கியத்துவம் பெற்றிருந்திருக்காது, ஆகவே மனிதன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்துகொள்ள முடியாதவனாய் இருக்கிறான், ஏனென்றால் அங்கே தெளிவான வேறுபாடு இருந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகர்ந்தபின் இந்த சாட்சியை நிலைநிறுத்த வேண்டியிருந்தது, ஆகவே, அவர் தம்முடைய ஞானத்தையும் அதிகாரத்தையும் இயேசுவில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது, இது கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாய் இருந்தது. நிச்சயமாக, இது ஞானஸ்நானத்தின் பலன் அல்ல. ஞானஸ்நானம் என்பது ஒரு விழா மட்டுமே. அவருடைய ஊழியத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்பதைக் காட்ட ஞானஸ்நானம் என்பது ஒரு வழியாக இருந்தது. தேவனின் மகத்தான வல்லமையைத் தெளிவுபடுத்துவதற்கும், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியைத் தெளிவுபடுத்துவதற்கும், பரிசுத்த ஆவியானவர் இந்த சாட்சிக்கு கடைசி வரை பொறுப்பேற்பார். தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு, இயேசு பிரசங்கங்களைக் கேட்டார், பல்வேறு இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துப் பரப்பினார். அவர் எந்தப் பெரிய கிரியையும் செய்யவில்லை, ஏனென்றால் அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்ய இன்னும் நேரம் வரவில்லை, மேலும் தேவன் தாழ்மையுடன் மாம்சத்தில் மறைந்திருந்தார், நேரம் வாய்க்கும் வரை எந்தக் கிரியையும் செய்யவில்லை. ஞானஸ்நானத்திற்கு முன் அவர் இரண்டு காரணங்களுக்காகக் கிரியை செய்யவில்லை. ஒன்று, ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அதிகாரப்பூர்வமாக அவர்மீது கிரியை செய்ய இறங்கவில்லை (அதாவது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்கு அத்தகைய கிரியையைச் செய்வதற்கான வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கவில்லை), அவர் தனது சொந்த அடையாளத்தை அறிந்திருந்தாலும் கூட, இயேசு பின்னர் செய்ய நினைத்த கிரியையைச் செய்ய முடியாமல் இருந்திருப்பார், அவருடைய ஞானஸ்நானம் பெறும் நாள் வரை காத்திருக்க வேண்டியதாய் இருந்திருக்கும். இது தேவனின் நேரம், அதை மீறும் திறன் எவருக்கும், இயேசுவுக்குக் கூட இல்லை. இயேசு தாமே தனது சொந்தக் கிரியையை குறுக்கிட முடியவில்லை. நிச்சயமாக, இது தேவனின் தாழ்மையும், தேவனுடைய கிரியையின் நியாயப்பிரமாணமும் ஆகும். தேவனின் ஆவியானவர் கிரியை செய்யவில்லை என்றால், அவருடைய கிரியையை யாராலும் செய்ய முடியாது. இரண்டாவதாக, அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு, அவர் மிகவும் பொதுவான மற்றும் சாதாரண மனிதர், மற்ற சாதாரண மற்றும் இயல்பான ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர் அல்ல, இது மனுஷனாக அவதரித்த தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதற்கான ஒரு அம்சமாகும். மனுஷனாக அவதரித்த தேவன் தேவனின் ஆவியானவரின் ஏற்பாடுகளை மீறவில்லை. அவர் ஒரு ஒழுங்கான வழியில் கிரியை செய்தார், அவர் மிகவும் சாதாரணமாகக் கிரியை செய்தார். ஞானஸ்நானத்திற்குப் பிறகுதான் அவருடைய கிரியைக்கு அதிகாரமும் வல்லமையும் இருந்தது. அதாவது, அவர் மனுஷனாக அவதரித்த தேவனாக இருந்தபோதிலும், அவர் எந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட கிரியைகளையும் செய்யவில்லை, மற்ற சாதாரண ஜனங்களைப் போலவே அவர் வளர்ந்தார். இயேசு தம்முடைய அடையாளத்தை முன்பே அறிந்திருந்தால், அவருடைய ஞானஸ்நானத்திற்கு முன்பே தேசமெங்கும் பெரிய கிரியைகளைச் செய்திருந்தால், சாதாரண மனிதர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்திருந்தால், தன்னை அசாதாரணமானவர் என்று காட்டி இருந்தார் என்றால், யோவான் தனது கிரியையைச் செய்ய இயலாது என்பது மட்டுமல்லாமல், தேவன் தனது கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்க எந்த வழியும் இருந்திருக்காது. ஆகவே, தேவன் செய்தது தவறாகிவிட்டது என்பதை இது நிரூபித்திருந்திருக்கும், தேவனின் ஆவியானவரும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சமும் ஒரே ஸ்தானத்திலிருந்து வரவில்லை என்று மனிதனுக்கு தோன்றியிருக்கும். ஆகவே, இயேசுவின் கிரியையாக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது, அவர் ஞானஸ்நானம் பெற்றபின் மேற்கொள்ளப்பட்ட கிரியையே, இது மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்ட கிரியை. அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு அவர் செய்ததை வேதாகமம் பதிவு செய்யவில்லை, ஏனென்றால் அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு இந்தக் கிரியையைச் செய்யவில்லை. அவர் வெறுமனே ஒரு சாதாரண மனிதர், ஒரு சாதாரண மனிதனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, அவர் சாதாரண ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர் அல்ல, மற்றவர்களும் அவரிடம் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அவர் இருபத்தொன்பதாவது வயதை அடைந்த பிறகுதான், தேவனின் கிரியையின் ஒரு கட்டத்தை முடிக்க வந்ததாக இயேசு அறிந்திருந்தார். இதற்கு முன்பு, அவரே இதை அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் தேவன் செய்த கிரியை இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. அவர் பன்னிரெண்டாவது வயதில் ஜெப ஆலயத்தில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது, மரியாள் அவரைத் தேடிக்கொண்டிருந்தார், மற்ற குழந்தைகளைப் போலவே அவர் ஒரு வாக்கியத்தையும் சொன்னார், “அம்மா! எல்லாவற்றிற்கும் மேலாக என் பிதாவின் சித்தத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?” நிச்சயமாக, அவர் பரிசுத்த ஆவியானவரினால் கருத்தரிக்கப்பட்டதால், இயேசு ஏதோ ஒரு வகையில் சிறப்புடையவராக இருக்க முடியாதா? ஆனால் அவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் என்று அர்த்தமல்ல, மாறாக அவர் வேறு எந்த இளம் குழந்தையையும் விட தேவனை அதிகமாக நேசித்தார். அவர் தோற்றத்தில் மனிதராக இருந்தபோதிலும், அவருடைய சாராம்சம் இன்னும் மற்றவர்களிடமிருந்து சிறப்பானதாகவும் வேறுபட்டும் இருந்தது. ஆயினும், ஞானஸ்நானத்திற்குப் பிறகுதான், பரிசுத்த ஆவியானவர் அவரிடத்தில் கிரியை செய்வதை அவர் உணர்ந்தார், அவர்தான் தேவன் என்பதையும் உணர்ந்தார். அவர் முப்பத்திமூன்று வயதை எட்டியபோதுதான், சிலுவையில் அறையப்படுவதை பரிசுத்த ஆவியானவர் அவர் மூலமாக செய்யத் திட்டமிட்டார் என்பதை அவர் உண்மையிலேயே உணர்ந்தார். மத்தேயு நற்செய்தியில் எழுதப்பட்டதைப் போலவே, முப்பத்திரெண்டாம் வயதில், அவர் சில யதார்த்தங்களை அறிந்து கொண்டார்: “சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்” (மத்தேயு 16:16), மேலும் “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” (மத்தேயு 16:21). அவர் என்ன கிரியை செய்ய வேண்டும் என்பது அவருக்கு முன்பே தெரியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில். அவர் பிறந்தவுடனேயே அவர் அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவரிடம் படிப்படியாகக் கிரியை செய்தார், மேலும் கிரியைக்கு ஒரு செயல்முறை இருந்தது. ஆரம்பத்தில், அவர் தேவன் என்றும், கிறிஸ்து என்றும், மனுஷ ரூபமெடுத்த மனுஷ குமாரன் என்றும் அவர் சிலுவையில் அறையப்படுவதை நிறைவேற்றுவதாக அறிந்திருந்தால், அவர் ஏன் முன்பே கிரியை செய்யவில்லை? ஏன் இயேசு தம்முடைய ஊழியத்தைப் பற்றி சீஷர்களிடம் சொன்ன பிறகுதான் துக்கத்தை உணர்ந்து, இதற்காக ஆவலுடன் ஜெபித்தார்? தான் புரிந்திராத அநேகக் காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பே யோவான் ஏன் அவருக்கான வழியைத் திறந்து ஞானஸ்நானம் கொடுத்தார்? இது எதை நிரூபிக்கிறது என்றால், இது மாம்சத்தில் அவதரித்த தேவனின் கிரியை, எனவே அவருக்குப் புரிந்துகொள்வதற்கும், அடைவதற்கும் ஒரு செயல்முறை இருந்தது, ஏனென்றால் அவர் தேவனின் அவதார மாம்சம், அவருடைய கிரியை ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டதைவிட வித்தியாசமானது.

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் ஒரே ஓட்டத்தைப் பின்பற்றுகிறது, எனவே தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தில், ஒவ்வொரு படியும் அடுத்தடுத்து, உலகின் அஸ்திபாரத்திலிருந்து இன்று வரை நெருக்கமாகப் பின்பற்றப்படுகிறது. வழி வகுக்க யாரும் இல்லாதிருந்தால், யாரும் பின்பற்றி வரமாட்டார்கள். பின்னால் வருபவர்களும் இருப்பதால், வழி வகுப்போரும் இருக்கிறார்கள். இந்த வழியில் கிரியை படிப்படியாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு படி மற்றொன்றைப் பின்தொடர்கிறது, யாரோ ஒருவர் வழியைத் திறக்காமல், கிரியையைத் தொடங்குவது சாத்தியமில்லை, மேலும் தேவன் தனது கிரியையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வழி இல்லை. எந்தப் படியும் மற்றொன்றிற்கு முரண்பட்டதாக இல்லை, ஒவ்வொன்றும் ஒரு ஓட்டத்தை உருவாக்குவதற்கு வரிசையாக மற்றொன்றைப் பின்பற்றுகின்றன. இவை அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகின்றன. ஆனால் யாரோ ஒருவர் வழியைத் திறக்கிறாரா அல்லது வேறொருவரின் கிரியையைச் செய்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், இது அவர்களின் அடையாளத்தை தீர்மானிக்கவில்லை. இது சரிதானல்லவா? யோவான் வழியைத் திறந்தார், இயேசு தனது கிரியையைச் செய்தார், ஆகவே, இயேசுவின் அடையாளம் யோவானை விடக் குறைவு என்பதை இது நிரூபிக்கிறதா? யேகோவா இயேசுவுக்கு முன்பாக தனது கிரியையைச் செய்தார், எனவே யேகோவா இயேசுவை விடவும் பெரியவர் என்று உன்னால் சொல்ல முடியுமா? அவர்கள் வழி வகுத்தார்களா அல்லது மற்றவர்களின் கிரியையைச் செய்தார்களா என்பது முக்கியமல்ல. மிக முக்கியமானது என்னவென்றால், அவர்களின் கிரியையின் சாராம்சம் மற்றும் அது குறிப்பிடும் அடையாளம். இது சரிதானல்லவா? தேவன் மனிதர்களிடையே கிரியை செய்ய நினைத்ததால், வழி வகுக்கும் கிரியையைச் செய்ய இயன்றவர்களை அவர் எழுப்ப வேண்டியிருந்தது. யோவான் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று அவர் ஆரம்பத்திலிருந்தே பேசினார், ஏன் இந்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது? இந்த வார்த்தைகள் பேசப்பட்ட வரிசையைப் பொறுத்தவரை, பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்தை முதலில் பேசியது யோவானும், பின்னர் பேசியது இயேசுவும்தான். மனிதனின் கருத்துக்களின்படி, புதிய பாதையைத் திறந்தவர் யோவான், ஆகவே யோவான் இயேசுவை விட பெரியவராக இருந்தார். ஆனால் யோவான் தான் கிறிஸ்து என்று சொல்லவில்லை, தேவனுடைய அன்பான குமாரன் என்று தேவன் அவருக்கு சாட்சி பகிரவில்லை, மாறாக வழியைத் திறந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த வெறுமனே அவரைப் பயன்படுத்தினார். அவர் இயேசுவுக்கு வழி வகுத்தார், ஆனால் இயேசுவின் சார்பாக அவரால் கிரியை செய்ய முடியவில்லை. மனிதனின் எல்லா கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரினால் பராமரிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், யேகோவாதான் வழிநடத்தினார், யேகோவாவின் கிரியை பழைய ஏற்பாட்டின் முழு யுகத்தையும், இஸ்ரேலில் செய்யப்பட்ட அனைத்து கிரியைகளையும் குறிக்கிறது. மோசே பூமியில் இந்தக் கிரியையை வெறுமனே ஆதரித்தார், அவருடைய பிரயாசங்கள் மனிதனால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில், யேகோவா பேசினார், மோசேயை அழைத்தார், அவர் மோசேயை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து எழுப்பினார், அவர்களை வனாந்தரத்தின் வழியாய் கானானுக்கு வழிநடத்தச் செய்தார். இது மோசேயின் கிரியை அல்ல, ஆனால் தனிப்பட்ட முறையில் யேகோவாவால் நடத்தப்பட்டதாகும், எனவே மோசேயை தேவன் என்று அழைக்க முடியாது. மோசேயும் நியாயப்பிரமாணத்தை வகுத்தார், ஆனால் இந்த நியாயப்பிரமாணம் தனிப்பட்ட முறையில் யேகோவாவால் கட்டளையிடப்பட்டது. அவர் அதை மோசேயைக் கொண்டு வெளிப்படுத்தியிருந்தார். இயேசுவும் கட்டளைகளை உண்டாக்கினார், மேலும் அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தை ரத்துசெய்து புதிய யுகத்திற்கான கட்டளைகளை வகுத்தார். இயேசு தாமே ஏன் தேவனாவார்? ஏனெனில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அந்த நேரத்தில், மோசே செய்த கிரியைகள் யுகத்தைக் குறிக்கவுமில்லை, புதிய வழியைத் திறக்கவுமில்லை; அவர் யேகோவாவால் வழிநடத்தப்பட்டார், வெறுமனே தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒருவராவார். இயேசு வந்தபோது, யோவான் வழியை வகுக்கும் ஒரு படியைச் செய்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்த ஆரம்பித்திருந்தார் (பரிசுத்த ஆவியானவர் இதைத் தொடங்கியிருந்தார்). இயேசு வந்த போது, அவர் நேரடியாகத் தனது சொந்த கிரியையைச் செய்தார், ஆனால் அவருடைய கிரியைக்கும் மோசேயின் கிரியைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. ஏசாயாவும் அநேக தீர்க்கதரிசனங்களைப் பேசினார், ஆனாலும் அவர் ஏன் தேவனாக இருந்ததில்லை? இயேசு அநேக தீர்க்கதரிசனங்களைப் பேசவில்லை, ஆனாலும் ஏன் அவர் தாமே தேவனாவார்? அந்த நேரத்தில் இயேசுவின் கிரியை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்று யாரும் சொல்லத் துணியவில்லை, அதெல்லாம் மனிதனின் சித்தத்திலிருந்தே வந்தன, அல்லது அது முற்றிலும் தேவனின் கிரியை என்று சொல்லத் துணியவில்லை. இதுபோன்ற காரியங்களை ஆய்வு செய்ய மனிதனுக்கு வழி இருந்ததில்லை. ஏசாயா அத்தகைய கிரியையைச் செய்தார், அத்தகைய தீர்க்கதரிசனங்களைப் பேசினார், அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவைகள் என்று கூறலாம். அவை ஏசாயாவிடமிருந்து நேரடியாக வரவில்லை, ஆனால் யேகோவாவிடமிருந்து வெளிப்பட்டவை. இயேசு பெரிய அளவில் கிரியை செய்யவில்லை, அநேக வார்த்தைகளைச் சொல்லவில்லை, அநேக தீர்க்கதரிசனங்களையும் உரைக்கவில்லை. மனிதனைப் பொறுத்தவரை, அவருடைய பிரசங்கம் குறிப்பாக உயர்ந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் அவர் தாமே தேவன், இது மனிதனால் விவரிக்க முடியாதது. யோவான், ஏசாயா, தாவீது ஆகியோரையும் யாரும் நம்பவில்லை, அவர்களை தேவன், அல்லது தாவீதாகிய தேவன், அல்லது யோவானாகிய தேவன் என்று யாரும் அழைக்கவில்லை; இதுவரை இப்படியாக யாரும் பேசவில்லை, இயேசு மட்டுமே கிறிஸ்து என்று எப்போதும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த வகைப்படுத்துதல் தேவனின் சாட்சி, அவர் மேற்கொண்ட கிரியை மற்றும் அவர் செய்த ஊழியத்தின் படி செய்யப்படுகிறது. வேதாகமத்தின் பெரிய மனிதர்களான ஆபிரகாம், தாவீது, யோசுவா, தானியேல், ஏசாயா, யோவான் மற்றும் இயேசு ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்கள் செய்த கிரியையின் மூலம், தேவன் யார், எந்த வகையான ஜனங்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் யார் அப்போஸ்தலர்கள் என்பதை உன்னால் சொல்ல முடியும். தேவனால் யார் பயன்படுத்தப்பட்டார்கள், தேவனாக இருந்தவர் யார், என்பவை அவர்களின் சாராம்சத்தையும் மற்றும் அவர்கள் புரிந்த கிரியையைப் பொருத்தும் வேறுபடுத்தப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. உன்னால் வித்தியாசத்தைச் சொல்ல முடியாவிட்டால், தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் உனக்குத் தெரியாது என்பதை இது நிரூபிக்கிறது. இயேசு தேவனாவார், ஏனென்றால் அவர் அநேக வார்த்தைகளைப் பேசினார், அநேகக் கிரியைகளைச் செய்தார், குறிப்பாக அநேக அற்புதங்களை அவர் செய்துகாட்டினார். அதேபோல், யோவானும் மோசே செய்ததைப் போலவே அதிகக் கிரியை செய்தார், அநேக வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? ஆதாம் தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டார். ஒரு சிருஷ்டி என்று மட்டுமே அழைக்கப்படுவதற்குப் பதிலாக அவர் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? “இன்று, தேவன் இவ்வளவு கிரியைகளைச் செய்துள்ளார், அநேக வார்த்தைகளைப் பேசினார். அவரே தேவனாவார். பின்னர், மோசே அநேக வார்த்தைகளைப் பேசியதால், அவரும் தேவனாக இருந்திருக்க வேண்டும்!” என்று யாராவது உன்னிடம் சொன்னால், அதற்கு நீ அவர்களிடம் திரும்ப கேட்க வேண்டியது, “அந்த நேரத்தில், தேவன் ஏன் யோவானுக்கு இல்லாமல் இயேசுவுக்கு தேவனாகவே சாட்சி பகர்ந்தார்? யோவான் இயேசுவுக்கு முன்பாக வரவில்லையா? எது பெரியது, யோவானின் கிரியையா அல்லது இயேசுவின் கிரியையா? மனிதனுக்கு, யோவானின் கிரியை இயேசுவை விட உயர்ந்ததாகத் தோன்றுகிறது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஏன் யோவானுக்கு இல்லாமல் இயேசுவுக்கு சாட்சி அளித்தார்?” இன்றும் இதேதான் நடக்கிறது! அந்த நேரத்தில், மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தியபோது, யேகோவா மேகங்களில் இருந்து அவரிடம் பேசினார். மோசே நேரடியாகப் பேசவில்லை, மாறாக யேகோவாவால் நேரடியாக வழிநடத்தப்பட்டார். இது பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலின் கிரியை. மோசேக்குள் ஆவியானவரும் இல்லை, தேவனின் சாயலும் இல்லை. அவரால் அந்த கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆகவே, அவர் செய்த கிரியைக்கும் இயேசு செய்த கிரியைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது! யாராவது தேவனால் பயன்படுத்தப்பட்டார்களா, அல்லது ஒரு தீர்க்கதரிசியா, ஒரு அப்போஸ்தலனா, அல்லது தேவன்தானா என்பதை அவருடைய கிரியையின் தன்மையால் அறிய முடியும், இது உன்னுடைய சந்தேகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. யுகங்கள் முழுவதும், அந்த பெரிய நபர்களிடையே அநேக வேதங்களை வெளிப்படுத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஆட்டுக்குட்டியானவர் என்று நீ சொல்ல முடியுமா? அவர்களின் விளக்கங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்று நீ சொல்ல முடியுமா? அவர்கள் வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு ஆட்டுக்குட்டியானவரின் அடையாளம் இல்லை. ஏழு முத்திரைகளைத் திறக்க அவர்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்? “ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும்” என்பது யதார்த்தம்தான், ஆனால் அவர் ஏழு முத்திரைகளைத் திறக்க மட்டும் வரவில்லை. இந்த கிரியைக்கு எந்த அவசியமும் இல்லை, இது தற்செயலாக செய்யப்படுகிறது. அவர் தனது சொந்த கிரியையைப் பற்றி முற்றிலும் தெளிவாக இருக்கிறார். வேதவசனங்களை விளக்குவதற்கு அவர் அதிக நேரம் செலவிடுவது அவசியமா? ஆறாயிரம் ஆண்டுகால கிரியைகளில் “வேதவசனங்களை விளக்கும் ஆட்டுக்குட்டியானவரின் காலமும்” சேர்க்கப்பட வேண்டுமா? அவர் புதிய கிரியைகளைச் செய்ய வருகிறார், ஆனால் கடந்த கால கிரியைகளைக் குறித்த சில வெளிப்பாடுகளையும் அவர் அளிக்கிறார், ஆறாயிரம் ஆண்டு கிரியைகளின் சத்தியத்தை ஜனங்களுக்குப் புரிய வைக்கிறார். வேதாகமத்திலிருந்து அதிகமான பத்திகளை விளக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய கிரியைதான் மதிப்பு மிக்கது, அது முக்கியமானதாகும். ஏழு முத்திரைகளை உடைப்பதற்காக இல்லாமல் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வேண்டும் என்றே தேவன் வந்தார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்.

கடைசி நாட்களில் இயேசு இறங்கி வருவார் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் அவர் எப்படி குறிப்பாக இறங்கி வருவார்? உங்களைப் போன்ற ஒரு பாவி, இப்போது மீட்கப்பட்டு, மாற்றப்படவில்லை அல்லது தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை என்றால், நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல முடியுமா? நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், இயேசுவால் இரட்சிக்கப்பட்டாய் என்பதும், தேவனின் இரட்சிப்பின் காரணமாக நீ பாவியாகக் கருதப்படுவதில்லை என்பதும் உண்மைதான், ஆனால் இது நீ பாவமற்றவன் மற்றும் தூய்மையுள்ளவன் என்பதை நிரூபிக்காது. நீ மாற்றப்பட்டிருக்காவிட்டால், நீ எவ்வாறு புனிதராக இருக்க முடியும்? நீ உள்ளுக்குள் தூய்மையற்றவனாகவும், சுயநலவாதியாகவும், இழிவானவனாகவும் இருக்கிறாய், ஆனாலும் நீ இன்னும் இயேசுவோடு இறங்கி வர வேண்டும் என்று விரும்புகிறாய்; உன்னால் எப்படி மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்! தேவன் மீதான உன் விசுவாசத்தின் ஒரு படியை நீ தவறவிட்டாய். நீ வெறுமனே மீட்கப்பட்டிருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை. நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல, உன்னை மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் கிரியையை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். நீ மீட்கப்பட்டு மட்டும் இருந்தால், நீ புனிதத்தை அடைந்திட முடியாதவனாய் இருப்பாய். இந்த வழியில் நீ தேவனின் நன்மையான ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க தகுதியற்றவனாக இருப்பாய், ஏனென்றால் மனிதனை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் நீ ஒரு படி தவறவிட்டுவிட்டாய், இது மாற்றுவதற்கும் பரிபூரணாமாக்குவதற்கும் முக்கிய படியாகும். நீ இப்போதுதான் மீட்கப்பட்டிருக்கிற ஒரு பாவியாவாய், ஆகையால் தேவனின் சுதந்திரத்தை நேரடியாகச் சுதந்தரிக்க முடியாது.

இந்தப் புதிய கட்டத்தின் கிரியை ஆரம்பமாகாமல், சுவிசேஷகர்கள், போதகர்கள், வெளிப்படுத்துபவர்கள் மற்றும் சிறந்த ஆவிக்குரிய மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்களாகிய நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்பதை யார் அறிவார்கள்! இந்தப் புதிய கட்டத்தின் கிரியை ஆரம்பமாகாமல், நீங்கள் பேசுவது வழக்கற்றுப் போய்விடும்! சுயத்தை மறுப்பது அல்லது ஒருவரின் சரீரத்தை அடக்குவது, பொறுமையாக இருப்பது அல்லது எல்லாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வது, பணிவு அல்லது அன்பு, இவை சிம்மாசனத்திற்கு ஏறுவதை அல்லது ஒரு ராஜாவாக மாறுவதாக சித்தரிப்பதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இது அதே பழைய ராகத்தையே பாடுவதாக இல்லையா? ஒருவரின் தலையை மூடுவது, அப்பத்தைப் பிட்பது, அல்லது கைகளை வைத்து ஜெபிப்பது, நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது மற்றும் பேய்களை விரட்டுவது போன்ற ஒரே காரியத்தை வேறு பெயரில் அழைப்பதைப் போன்றதாகும்! ஏதாவது புதிய கிரியை இருக்க முடியுமா? வளர்ச்சிக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்க முடியுமா? நீ தொடர்ந்து இதே வழியில் வழிநடந்தால், நீ கண்மூடித்தனமாக உபதேசத்தைப் பின்பற்றுவாய், அல்லது மரபுகளினால் கட்டுப்படுவாய். உங்கள் கிரியை மிகவும் உயர்ந்தது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், ஆனால் இவை அனைத்தும் பண்டைய காலத்தின் “வயதானவர்களால்” இயற்றப்பட்டு கற்பிக்கப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் சொல்வது எல்லாம் அந்த முதியவர்களின் கடைசி வார்த்தைகள் அல்லவா? இந்த வயதானவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்களால் சுமத்தப்பட்டவை அல்லவா? உங்கள் கிரியைகள் கடந்த தலைமுறையின் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் கிரியைகளை மிஞ்சி, மற்றும் அனைத்தையும் மிஞ்சிவிட்டன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்தக் கட்டத்தின் கிரியையின் ஆரம்பம், விட்னஸ் லீயின் கிரியையான, ஒரு ராஜாவாகி அரியணையில் ஏற முற்படுவதைப் போற்றும் உங்கள் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, மேலும் இது உங்கள் ஆணவத்தையும் கொந்தளிப்பையும் சிறைப்படுத்தியுள்ளது, இதனால் நீங்கள் இந்தக் கிரியையின் கட்டத்தில் தலையிட முடியாது. இந்தக் கட்டக் கிரியை இல்லாமல், நீங்கள் மீட்கப்படமுடியாத அளவிற்கு நீங்கள் ஆழமாக மூழ்கிவிடுவீர்கள். உங்களிடையே பழையது அதிகம்! அதிர்ஷ்டவசமாக, இன்றைய கிரியை உங்களைத் திரும்பக் கொண்டு வந்துள்ளது. இல்லையெனில், நீங்கள் எந்தத் திசையில் செல்வீர்கள் என்பது யாருக்குத் தெரியும்! தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் இல்லாத தேவன் என்பதால், நீ ஏன் புதிய காரியங்களைத் தேடவில்லை? நீ எப்போதும் ஏன் பழைய காரியங்களுடன் ஒட்டிக்கொள்கிறாய்? எனவே, இன்று பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிவது மிக முக்கியமானதாகும்!

முந்தைய: இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்

அடுத்த: பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக