தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்

தேவனை விசுவாசிப்பதும் தேவனை அறிந்துகொள்வதும் பரலோகத்தால் நியமிக்கப்பட்டு பூமியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, தேவன் மனுவுருவாகி தமது கிரியையைத் தாமே நேரில் செய்யும் ஒரு காலமான இன்றைய காலமானது தேவனை அறிந்து கொள்வதற்கான மிகவும் நல்லதொரு காலமாக இருக்கிறது. தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கான அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் அடையக்கூடிய ஒன்றே தேவனைத் திருப்திப்படுத்துவது என்பதாகும், மேலும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள, தேவனைப் பற்றிய கொஞ்சம் அறிவைப் பெற்றிருப்பது அவசியமானதாகும். தேவனைப் பற்றிய இந்த அறிவு தேவனை விசுவாசிக்கிறவனுக்கு தரிசனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இது தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தின் அடிப்படையாகும். இந்த அறிவு இல்லையானால், தேவன் மீதான மனிதனின் விசுவாசம் தெளிவற்ற நிலையிலும், வெற்றுக் கோட்பாட்டின் மத்தியிலும் இருக்கும். தேவனைப் பின்பற்றுவதே இது போன்றோர்களின் தீர்மானமாக இருந்தாலும், அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டத்தில் எதையும் பெறாதவர்கள் அனைவருமே புறம்பாக்கப்படுவார்கள்—அவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகள். தேவனுடைய கிரியையின் எந்தப் படியை நீ அனுபவித்தாலும், ஒரு வல்லமையான தரிசனம் உன்னுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், புதிய கிரியையின் ஒவ்வொரு அடியையும் ஏற்றுக்கொள்வது உனக்குக் கடினமாக இருக்கும், ஏனென்றால் தேவனின் புதிய கிரியை மனிதனின் கற்பனைத் திறனைத் தாண்டி உள்ளது, மேலும் அது அவரின் எண்ணத்தின் எல்லைக்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, மனிதனை கவனிக்க ஒரு மேய்ப்பன் இல்லாமல், தரிசனங்களைப் பற்றி ஐக்கியத்தில் ஈடுபடுவதற்கு ஒரு மேய்ப்பன் இல்லாமல், இந்தப் புதிய கிரியையை மனிதனால் ஏற்க இயலாது. மனிதனால் தரிசனங்களைப் பெற முடியாவிட்டால், தேவனின் புதிய கிரியையை அவனால் பெற முடியாது, தேவனின் புதிய கிரியைக்கு மனிதனால் கீழ்ப்படிய முடியாவிட்டால், மனிதனால் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள இயலாது, எனவே தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு ஒன்றுமில்லை என்று எண்ணப்படும். மனிதன் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு முன், தேவனுடைய வார்த்தையை அவன் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அவன் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விதமாக மட்டுமே தேவனின் வார்த்தையைத் துல்லியமான வகையிலும் தேவனின் சித்தத்தின் படியும் நிறைவேற்ற முடியும். இது சத்தியத்தைத் தேடும் எல்லோரும் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகும், மேலும் இது தேவனை அறிய முயலும் எல்லோரும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்முறையாகும். தேவனின் வார்த்தையை அறிந்து கொள்ளும் முறையானது தேவனையும் தேவனின் கிரியையையும் அறிந்து கொள்ளும் முறையாகும். எனவே, தரிசனங்களை அறிந்துகொள்வது மனுவுருவான தேவனுடைய மனிதத்தன்மையைத் தெரிந்து கொள்வதை மட்டுமல்லாமல், தேவனின் வார்த்தையையும் கிரியையையும் அறிந்து கொள்வதையும் குறிக்கிறது. ஜனங்கள் தேவனின் வார்த்தையிலிருந்து தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள், தேவனின் கிரியையிலிருந்து அவர்கள் தேவனின் மனநிலையையும் தேவன் என்றால் யார் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். தேவன் மீதான விசுவாசம் என்பது தேவனை அறிந்துகொள்வதற்கான முதல் படியாகும். தேவன் மீதான இந்தத் தொடக்க விசுவாசத்திலிருந்து அவரைப் பற்றிய மிக ஆழமான விசுவாசத்திற்கு முன்னேறுவதற்கான முறையே, தேவனை அறிந்துகொள்வதற்கான முறையும், தேவனுடைய கிரியையின் அனுபவத்தை உணரும் முறையுமாகும். நீ தேவனை அறிந்து கொள்வதற்காக இல்லாமல், விசுவாசிப்பதற்காக மட்டுமே தேவனை விசுவாசித்தால், உன் விசுவாசத்தில் எந்த யதார்த்தமும் இல்லை, உன் விசுவாசம் தூய்மையானதாக மாற முடியாது—இதில் சந்தேகமேதும் இல்லை. தேவனின் கிரியையை மனிதன் அனுபவிக்கும் செயல்முறையின்போது, அவன் படிப்படியாக தேவனை அறிந்துகொள்கிறான் என்றால், அவனது மனநிலை படிப்படியாக மாறும், மேலும் அவனுடைய விசுவாசம் பெரிதான முறையில் உண்மையாகிவிடும். இவ்வழியில், தேவன் மீதான விசுவாசத்தில் மனிதன் வெற்றியடையும் போது, அவன் தேவனை முற்றிலுமாகப் பெற்றிருப்பான். தேவன் தமது கிரியையைத் தாமே நேரில் செய்ய இரண்டாவது முறையாக மாம்சமாக மாற தேவன் இவ்வளவு தூரம் சென்றதன் காரணம், அதனால் அவரை மனிதன் தெரிந்து கொள்ளவும், அவரைப் பார்க்கவும் வேண்டும் என்பதாகும். தேவனை அறிவது[அ] என்பது தேவனுடைய கிரியையின் முடிவில் அடைய வேண்டிய இறுதிப் பலன் ஆகும்; இது மனிதகுலத்திடம் தேவன் வைக்கும் கடைசி கோரிக்கையாகும். அவர் இதைச் செய்வதற்கான காரணம் அவருடைய இறுதி சாட்சியத்திற்காகவே. மனிதன் இறுதியாக முழுவதும் அவரிடம் திரும்புவதற்காகவே அவர் இந்தக் கிரியையைச் செய்கிறார். மனிதனால் தேவனை அறிவதன் மூலம் மட்டுமே தேவனை நேசிக்க முடியும், தேவனை நேசிக்க அவன் தேவனை அறிந்திருக்க வேண்டும். அவன் எப்படி முயன்றாலும், எதைப் பெறுவதற்கு முயன்றாலும், அவனால் தேவனைப் பற்றிய அறிவை அடைய இயல வேண்டும். இவ்வழியில் மட்டுமே மனிதன் தேவனின் இருதயத்தைத் திருப்தி செய்ய முடியும். தேவனை அறிவதன் மூலம் மட்டுமே மனிதனுக்கு தேவன் மீது உண்மையான விசுவாசம் இருக்க முடியும், தேவனை அறிவதன் மூலம் மட்டுமே அவன் தேவனை உண்மையாக வணங்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் முடியும். தேவனை அறியாதவர்கள் ஒருபோதும் தேவனுக்கு கீழ்ப்படியவும் அவரை வணங்கவும் மாட்டார்கள். தேவனை அறிவது என்பதில் அவருடைய மனநிலையை அறிவதும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், அவர் யாரென்று தெரிந்துகொள்வதும் உள்ளடங்கும். எந்தவொரு அம்சத்தை ஒருவர் அறிய நேர்ந்தாலும், ஒவ்வொன்றுக்கும் மனிதன் ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்த வேண்டும், மற்றும் கீழ்ப்படிவதற்கான மன உறுதி தேவைப்படுகிறது, இவை இல்லாமல் இறுதிவரை தொடர்ந்து செல்ல யாராலும் முடியாது. தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் மிகவும் ஒத்துப்போகாததாக இருக்கிறது. தேவனின் மனநிலையும் தேவன் என்றால் யாரென்றும் மனிதனுக்குத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம், தேவன் சொல்லும் செய்யும் எல்லாவற்றையும் மனிதனுக்கு மிகவும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்பியும், அவருக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை என்றால், மனிதன் எதையும் பெறமாட்டான். உலகை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை, மனிதனுக்குப் புரியாத பல கிரியைகளைத் தேவன் செய்ததை ஏற்றுக்கொள்வதை மனிதன் கடினமாகக் கருதியிருக்கிறான், மேலும் மனிதனின் கருத்துக்களைக் குணமாக்குவது கடினம் என்று தேவன் அதிகம் கூறியுள்ளார். ஆனால் மனிதனுக்கு பல சிரமங்கள் இருப்பதால் அவர் ஒருபோதும் தமது கிரியையை நிறுத்தியதில்லை. மாறாக, அவர் கிரியை செய்வதையும் பேசுவதையும் மேற்கொண்டார், மேலும் ஏராளமான “செயல்வீரர்கள்” வழியிலேயே வீழ்ந்திருந்தாலும், அவர் இன்னும் தமது கிரியையைச் செய்து வருகிறார், மேலும் இடைவெளியில்லாமல் அவரின் புதிய கிரியைக்கு தங்களை அர்பணிக்கும் மக்களின் ஒரு குழுவையடுத்து அடுத்த குழுவைத் தொடர்ந்து தேர்வு செய்கிறார். வீழ்ந்த “நாயகர்களைக் குறித்து” அவருக்குப் பரிதாபமில்லை, அதற்குப் பதிலாக அவருடைய புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்பவர்களைப் பொக்கிஷமாக்குகிறார். ஆனால் எது வரையில் அவர் படிப்படியாக இவ்வழியில் செயல்படுகிறார்? ஏன் அவர் சிலரை எப்போதும் புறம்பாக்கி, மற்றவர்களைத் தெரிவு செய்கிறார்? இத்தகைய முறையை ஏன் அவர் எப்போதும் பயன்படுத்துகிறார்? அவரது கிரியையின் நோக்கம் மனிதன் அவரை அறிந்து கொள்ள அனுமதிப்பதும், இதனால் அவரால் ஆதாயப்படுத்தப்படுவதும் ஆகும். அவருடைய கிரியையின் கொள்கை என்னவென்றால், அவர் இன்று செய்யும் கிரியைக்கு கீழ்ப்படியக் கூடியவர்களின் மேல் கிரியை செய்வதே தவிர, அவர் கடந்த காலத்தில் செய்த கிரியைக்குக் கீழ்ப்படிந்து இன்று அவர் செய்யும் கிரியையை எதிர்ப்போரின் மேல் கிரியை செய்யமாட்டார். அவர் அநேகம்பேரை புறம்பாக்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் இதில்தான் உள்ளது.

தேவனை அறிந்துகொள்ளும் பாடத்தின் பலன்களை ஒன்றிரண்டு நாட்களில் அடைய முடியாது. மனிதன் அனுபவங்களைச் சேர்த்து, துன்பங்களுக்குள்ளாகி, உண்மையான கீழ்ப்படிதலைப் பெறவேண்டும். முதலாவதாக, தேவனின் கிரியையிலிருந்தும் வார்த்தைகளிலிருந்தும் தொடங்குங்கள். தேவனைப் பற்றிய அறிவில் என்னென்ன அடங்கியுள்ளன, இந்த அறிவை எவ்வாறு அடைவது, உன் அனுபவங்களில் தேவனை எவ்வாறு பார்ப்பது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுதான் இன்னும் தேவனை அறியாத நிலையில் எல்லோரும் செய்ய வேண்டியதாகும். ஒரே மூச்சில் தேவனின் கிரியையையும் வார்த்தைகளையும் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது, மேலும் தேவனைப் பற்றிய அறிவை முழுமையாக ஒரு குறுகிய காலத்திற்குள் யாராலும் அடைய முடியாது. அனுபவத்தின் அவசியமான செயல்முறை ஒன்று உள்ளது, அது இல்லாமல் யாராலும் தேவனை அறியவோ அவரை உண்மையாக பின்பற்றவோ முடியாது. தேவன் எவ்வளவு அதிகமாகக் கிரியை செய்கிறாரோ, மனிதன் அவரை அவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கிறான். தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் எவ்வளவு அதிகமாக முரண்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு புதுப்பிக்கப்பட்டு ஆழமாகிறது. தேவனின் கிரியை என்றென்றும் நிலையாகவும் மாறாமலும் இருந்திருந்தால், அவரைக் குறித்த மனிதனின் அறிவு அதிகமாக இருந்திருக்காது. சிருஷ்டிப்பின் காலத்திற்கும் தற்போதைய காலத்துக்கும் இடையில், நியாயப்பிரமாண காலத்தில் தேவன் என்ன செய்தார், கிருபையின் காலத்தில் அவர் என்ன செய்தார், ராஜ்யத்தின் காலத்தில் அவர் என்ன செய்கிறார்—நீங்கள் இந்தத் தரிசனங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். தேவனுடய கிரியையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்த பின்னரே, ஆவியானவர் இயேசுவில் செய்த பெரும்பாலான கிரியைகளைப் பற்றி படிப்படியாகத் தெரிந்து கொண்டான். அவன் கூறினான், “முழுமையான அறிவை அடைய மனிதனின் அனுபவங்களைச் சார்ந்திருத்தல் போதாது; தேவனை அறிந்துகொள்ளவதில் நமக்கு உதவ தேவனின் கிரியையில் பல புதிய காரியங்கள் இருக்க வேண்டும்.” இயேசு தேவனால் ஓர் அப்போஸ்தலரைப் போல அனுப்பப்பட்டவர் என்று பேதுரு ஆரம்பத்தில் நம்பினான், அவன் இயேசுவைக் கிறிஸ்துவாகப் பார்க்கவில்லை. இந்த நேரத்தில், அவன் இயேசுவைப் பின்தொடரத் தொடங்கியபோது, இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னைப் பின்பற்றுவாயா?” என்று கேட்டார். “பரலோகப் பிதாவினால் அனுப்பப்பட்டவரை நான் பின்பற்ற வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்பட்டவரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்று பேதுரு கூறினான். அவனுடைய வார்த்தைகளிலிருந்து, பேதுருவுக்கு இயேசுவைப் பற்றி எந்த அறிவும் இல்லை என்பதைக் காணலாம். அவன் தேவனுடைய வார்த்தைகளை அனுபவத்திருக்கிறான், தன்னையே கையாண்டிருக்கிறான், தேவனுக்காகத் துயரங்களை அனுபவித்திருந்தான், ஆனால் அவனுக்கு தேவனின் கிரியையைப் பற்றி எதுவும் தெரியாது. சில கால அனுபவத்திற்குப் பிறகு, பேதுரு இயேசுவில் தேவனின் பல கிரியைகளைக் கண்டான், தேவனின் தயவைக் கண்டான், மேலும் இயேசுவில் தேவனானவர் இருப்பதைக் கண்டான். இயேசு பேசின வார்த்தைகள் மனிதனால் பேசப்பட்டிருக்க முடியாது என்பதையும், இயேசு செய்த கிரியை மனிதனால் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதையும் அவன் கண்டான். மேலும் இயேசுவின் வார்த்தைகளிலும் கிரியைகளிலும், தேவனின் ஞானத்தையும், தெய்வீக இயல்புடைய பல கிரியைகளையும் பேதுரு கண்டான். தன் அனுபவங்களின் போது, அவன் தன்னையே தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், கவனமாக இயேசுவின் ஒவ்வொரு செயலையும் கவனித்தான். அதிலிருந்து அவன் பல புதிய காரியங்களைக் கண்டுபிடித்தான், அதாவது, இயேசுவின் மூலம் தேவன் செய்த கிரியையில் தேவனின் பல நடைமுறை வெளிப்பாடுகள் இருந்தன என்பதையும், மற்றும் இயேசு தாம் பேசிய வார்த்தைகளிலும் தாம் எடுத்த நடவடிக்கைகளிலும், அத்துடன் அவர் சபைகளை மேய்த்த விதம் மற்றும் அவர் மேற்கொண்ட கிரியைகள், ஆகியவற்றில் ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வேறுபடுகிறார் என்பதையும் கண்டறிந்தான். ஆகையால், இயேசுவிடமிருந்து பேதுரு கற்றுக்கொள்ள வேண்டிய பல படிப்பினைகளைக் கற்றுக்கொண்டான், இயேசு சிலுவையில் அறையப்பட்ட வேளையில், அவன் இயேசுவைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட அளவிலான அறிவைப் பெற்றான்—அந்த அறிவு, அவனுடைய வாழ்நாள் முழுவதும் இயேசுவின் மீது விசுவாசமாக இருந்தது, மற்றும் கர்த்தருக்காக அவன் தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டது ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது. அவன் தொடக்கத்தில் சில கருத்துக்களைக் கொண்டிருந்து, இயேசுவைக் குறித்த தெளிவான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இதுபோன்ற காரியங்கள் சீர்கெட்ட மனிதனின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். இயேசு புறப்படுகையில், அவரின் சிலுவைப் பாடுதான் அவர் செய்வதற்காக வந்திருக்கிற கிரியை என்று அவர் பேதுருவிடம் கூறினார். அவர் கைவிடப்பட வேண்டியது காலத்தின் அவசியமாயிருந்தது, மேலும் இந்த அசுத்தமான மற்றும் பழைய காலமானது அவரைச் சிலுவையில் அறைய வேண்டும். அவர் மீட்பின் பணியை நிறைவேற்ற வந்திருந்தார், இந்தக் கிரியையை நிறைவேற்றியதும், அவரது ஊழியம் முடிந்திருக்கும். இதைக் கேட்கையில் பேதுரு துக்கத்தில் மூழ்கி, இயேசுவோடு இன்னும் அதிகமாக நெருக்கமானான். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, பேதுரு தனியாக மனங்கசந்து அழுதான். இதற்கு முன்பு, அவன் இயேசுவிடம், “என் ஆண்டவரே! நீர் சிலுவையில் அறையப்படப் போகிறீர் என்று சொல்கிறீர். நீர் போன பிறகு, நாங்கள் உம்மை எப்போது காண்போம்?” என்று கேட்டிருந்தான். அவன் பேசிய வார்த்தைகளில் குழப்பத்தின் எந்தக் கூறுகளும் இல்லையா? அவைகளில் எந்தக் கருத்துக்களும் கலந்திருக்கவில்லையா? இயேசு தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியை நிறைவேற்ற வந்திருந்தார் என்பதையும், இயேசு கடந்து சென்ற பிறகு, ஆவியானவர் அவனுடன் இருப்பார் என்பதையும், அவர் சிலுவையில் அறையப்பட்டு பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும், தேவனுடைய ஆவியானவர் அவனோடு இருப்பார் என்பதையும் அவன் தன் இருதயத்தில் அறிந்திருந்தான். அந்நேரத்தில், பேதுருவுக்கு இயேசுவைக் குறித்த கொஞ்சம் அறிவு இருந்தது. இயேசு தேவனுடைய ஆவியானவரால் அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும், தேவனுடைய ஆவியானவர் அவருக்குள் இருக்கிறார் என்றும், இயேசு தாமே தேவன் என்றும், அவரே கிறிஸ்து என்றும் அவன் அறிந்திருந்தான். ஆயினும், பேதுரு அதுபோன்ற வார்த்தைகளை, இயேசுவின் மீதிருந்த அவனுடைய அன்பாலும், அவனுடைய மனித பலவீனம் காரணமாகவும் பேசினான். தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒருவனால் கண்ணோக்கமாயிருக்கவும், உறுதியாக அனுபவிக்கவும் முடியுமானால், ஒருவனால் படிப்படியாக தேவனின் தயவைக் கண்டுகொள்ள முடியும். பவுல் தனது தரிசனத்திற்காக என்ன செய்தான்? இயேசு அவனுக்குக் காட்சியளித்தபோது, பவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். இயேசு, “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்றார். இது பவுலின் தரிசனமாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல், நாற்பது நாட்களாக அவர் காட்சியளித்தது, இயேசுவின் வாழ்க்கைப் போதனைகள் ஆகியவற்றைப் பேதுரு தனது பயணத்தின் இறுதி வரையிலும் தனது தரிசனமாக எடுத்துக் கொண்டான்.

தேவனுடைய கிரியையை மனிதன் அனுபவித்து, தன்னையே தெரிந்துகொள்கிறான், அவனுடைய சீர்கேடான மனநிலையைச் சுத்திகரிக்கிறான், வாழ்க்கையில் உயர்வைத் தேடுகிறான், அனைத்துமே தேவனை அறிந்து கொள்வதற்காகவே. நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளவும், உன் சொந்தச் சீர்கேடான மனநிலையைக் கையாளவும் மட்டுமே முயன்று, ஆனால் தேவன் மனிதன் மீது என்ன கிரியை செய்கிறார், அவருடைய இரட்சிப்பு எத்தனைப் பெரியது, அல்லது நீ எவ்வாறு தேவனுடைய கிரியையை அனுபவித்து, அவருடைய செயல்களை சாட்சி பகருகிறாய் என்பதையும் பற்றி எந்த அறிவும் இல்லை என்றால், உனது அனுபவம் பயனற்றதாகும். ஒருவன் சத்தியத்தைக் கைக்கொண்டு நீடித்திருப்பதால் அவனுடைய வாழ்க்கை முதிர்ச்சி அடைந்ததாக நீ நினைத்தால், நீ இன்னும் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையோ அல்லது மனிதனைப் பரிபூரணப்படுத்தும் தேவனின் நோக்கத்தையோ புரிந்துகொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். ஒரு நாள், நீ மதவாத திருச்சபைகளில் மனந்திரும்புதல் திருச்சபையின் அல்லது வாழ்வியல் திருச்சபையின் உறுப்பினர்களிடையே இருக்கும்போது, நீ பல பக்தியுள்ள ஜனங்களைக் காண்பாய், அவர்களுடைய ஜெபங்களில் “தரிசனங்கள்” உள்ளடங்கியிருக்கும், அவர்கள் வாழ்க்கையைத் தொடரும்போது, வார்த்தைகளால் தொடப்பட்டு வழிநடத்தப்படுகிறார்கள். மேலும், அவர்கள் அநேக காரியங்களைத் தாங்கிக் கொள்ளவும், தங்களையே கைவிடவும் இயன்றவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் மாம்சத்தால் நடத்தப்படுவதும் இல்லை. அந்நேரத்தில், உன்னால் வித்தியாசத்தைச் சொல்ல முடியாது: நீ அவர்கள் செய்வது எல்லாம் சரியானது என்று நம்புவாய் என்பது வாழ்க்கையின் இயற்கையான வெளிப்பாடாகும், மற்றும் அவர்கள் தவறான நாமத்தை விசுவாசிக்கிறார்கள் என்பது ஒரு பெரிய பரிதாபம். இதுபோன்ற கருத்துக்கள் முட்டாள்தனமானவை அல்லவா? ஏன் பலருக்கு ஜீவன் இல்லை என்று சொல்லப்படுகிறது? ஏனென்றால் அவர்கள் தேவனை அறியாதிருக்கிறார்கள், ஆகவே அவர்கள் தேவனைத் தங்கள் இருதயங்களில் பெறவில்லை, மற்றும் ஜீவனையும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தேவன் மீதான உன் விசுவாசம், நீ தேவனின் கிரியைகளையும், தேவனின் யதார்த்தத்தையும், தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் முழுவதும் தெரிந்து கொள்ளும் திறனுள்ள ஒரு நிலையை அடைந்துவிட்டால், நீ சத்தியத்தைப் பெற்றிருக்கிறாய். தேவனின் கிரியையும் மனநிலையும் பற்றி உனக்குத் தெரியாவிட்டால், இன்னும் உன் அனுபவத்தில் ஏதோ ஒன்றைக் காணவில்லை. இயேசு தமது கிரியையின் அந்தக் கட்டத்தை எப்படி நடப்பித்தார், இந்தக் கட்டம் எப்படி நடப்பிக்கப்படுகிறது, கிருபையின் காலத்தில் தேவன் எவ்வாறு தமது கிரியையைச் செய்தார் மற்றும் என்ன கிரியை செய்யப்பட்டது, இந்தக் கட்டத்தில் என்ன கிரியை செய்யப்படுகிறது போன்ற இந்தக் காரியங்களைக் குறித்த முழுமையான அறிவு உனக்கு இல்லையென்றால், நீ ஒருபோதும் உறுதியுள்ளவனாக உணர மாட்டாய், நீ எப்போதும் பாதுகாப்பற்றவனாக இருப்பாய். ஓர் அனுபவ காலத்திற்குப் பிறகு, உன்னால் தேவன் செய்த கிரியையையும் அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியையும் அறிந்து கொள்ள முடிந்தால், மற்றும் அவருடைய வார்த்தைகளைப் பேசுவதில் தேவனின் நோக்கங்களைக் குறித்தும், ஏன் அவர் கூறிய பல வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பதைக் குறித்தும் முழுமையான அறிவை நீ பெற்றிருந்தால், நீ தைரியமாகவும், முன்னாலிருக்கும் பாதையைத் தொடர்வதை நிறுத்தி வைக்காமலும் கவலையும் சுத்திகரிப்பும் இல்லாமலும் முன்னேறலாம். தேவன் தமது அநேக கிரியையை எதைக் கொண்டு நிறைவேற்றுகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அவர் பேசுகிற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மனிதனைச் சுத்திகரிக்கிறார் மற்றும் அவனது கருத்துக்களைப் பலவிதமான வார்த்தைகளின் மூலம் மாற்றுகிறார். நீங்கள் அனுபவித்த எல்லா துன்பங்களும், நீங்கள் கடந்து சென்றிருக்கிற அனைத்து சுத்திகரிப்புகளும், உங்களுக்குள் நீங்கள் ஏற்றுக்கொண்ட கையாளுதலும், நீங்கள் அனுபவித்த அறிவொளியும் என இவை அனைத்தும் தேவன் கூறிய வார்த்தைகளின் மூலம் அடையப்பட்டுள்ளன. மனிதன் தேவனை எந்தக் காரணத்தால் பின்பற்றுகிறான்? தேவனின் வார்த்தைகளால் அவன் பின்பற்றுகிறான்! தேவனின் வார்த்தைகள் மிகவும் இரகசியமானவை, அதற்கும் மேல் அவை மனிதனின் இருதயத்தை அசைக்கவும், அதற்குள் ஆழத்தில் புதைந்திருக்கும் காரியங்களை வெளிக்கொணரவும், கடந்த காலத்தில் நடந்த காரியங்களை அவனுக்குத் தெரிவிக்கவும், அவனை எதிர்காலத்திற்குள் ஊடுருவ அனுமதிக்கவும் செய்யும். ஆகவே, தேவனின் வார்த்தைகளால் மனிதன் துன்பத்தைத் தாங்குகிறான், மேலும் தேவனின் வார்த்தைகளாலும் பரிபூரணமாக்கப்படுகிறான். இந்நேரத்தில் மட்டுமே மனிதன் தேவனைப் பின்பற்றுகிறான். இந்தக் கட்டத்தில் மனிதன் செய்ய வேண்டியது என்னவென்றால், அவன் பரிபூரணமாக்கப்பட்டிருக்கிறானா அல்லது சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறானா என்பதைப் பொருட்படுத்தாமல் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் வார்த்தைகளே திறவுகோல் ஆகும். இதுவே தேவனின் கிரியை, இதுவும்கூட மனிதன் இன்று தெரிந்து கொள்ள வேண்டிய தரிசனம் ஆகும்.

தேவன் மனிதனை எப்படிப் பரிபூரணப்படுத்துகிறார்? தேவனின் மனநிலை என்ன? அவருடைய மனநிலையில் என்ன அடங்கியுள்ளது? இந்தக் காரியங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்த, ஒருவன் அதை தேவனின் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதாக அழைக்கிறான், ஒருவன் அதை தேவனுக்குச் சாட்சிப் பகர்வதாக அழைக்கிறான், ஒருவன் அதை தேவனை உயர்த்துவதாக அழைக்கிறான். மனிதன், தேவனை அறியும் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அவனது வாழ்க்கை மனநிலையில் இறுதியாக மறுரூபமடைகிறான். மனிதன் எவ்வளவு அதிகமாகக் கையாளப்பட்டுச் சுத்திகரிக்கப்படுவதற்கு ஆளாகிறானோ, அவன் அவ்வளவு அதிகமாய் ஊக்குவிக்கப்படுகிறான். தேவனின் கிரியையின் படிகள் எவ்வளவு அதிகமாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக மனிதன் பரிபூரணமாக்கப்படுகிறான். இன்று, மனிதனின் அனுபவத்தில், அவனது கருத்துக்களை தேவனின் கிரியையின் ஒவ்வொரு நடவடிக்கையும் தாக்குகிறது, மேலும் இவை எல்லாம் மனிதனின் புத்திக்கு அப்பாற்பட்டவை மற்றும் அவனது எதிர்பார்ப்புகளுக்குப் புறம்பானவை. மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் வழங்குகிறார், ஒவ்வொரு காரியத்திலும் இது அவனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உன் பலவீன நேரத்தில் தேவன் தம்முடைய வார்த்தைகளை உச்சரிக்கிறார். இவ்வழியில் மட்டுமே அவர் உன்னுடைய ஜீவனை அளிக்க முடியும். உன் கருத்துக்களைத் திரும்பத் தாக்குவதன் மூலம், தேவன் கையாள்வதை நீ ஏற்றுக்கொள்ளும்படி அவர் செய்கிறார். இவ்வழியில் மட்டுமே உன் சீர்கேடுகளிலிருந்து உன்னை விடுவிக்க முடியும். இன்று, மனுவுருவான தேவன் ஒரு விதமாக தெய்வீக நிலையிலேயே கிரியை செய்கிறார், ஆனால் மற்றோர் நிலையில் அவர் சாதாரண மனிதத்தன்மையில் கிரியை செய்கிறார். உன்னால் தேவனின் எந்தக் கிரியையையும் மறுக்க முடியாமல் போகும்போது, தேவன் சாதாரண மனிதத்தன்மையில் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் உன்னால் கீழ்ப்படிய முடிந்து, அவர் எந்த வகையான இயல்பான தன்மையை வெளிப்படுத்தினாலும் உன்னால் கீழ்ப்படிந்து புரிந்து கொள்ள முடிந்து, நீ உண்மையான அனுபவத்தைப் பெறும்போது மட்டும் தான், உன்னால் அவர் தேவன் என்று உறுதியாக நம்ப முடியும், அதன்பின்தான் நீ கருத்துக்களைப் பிறப்பிப்பதை நிறுத்துவாய், அதன்பின்தான் உன்னால் இறுதிவரை அவரைப் பின்பற்ற முடியும். தேவனின் கிரியைக்கு ஞானம் உண்டு, மேலும் மனிதன் அவருக்குச் சாட்சியாக எப்படி நிலையாக நிற்க முடியும் என்பதை அவர் அறிவார். அவர் மனிதனின் முக்கியமான பலவீனம் எங்குள்ளது என்பதை அறிவார், மேலும் அவர் பேசும் வார்த்தைகள் உன் முக்கியமான பலவீனத்தில் உன்னைத் தாக்கும், ஆனால் தம்முடைய மாட்சிமையான மற்றும் ஞானமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தி, உன்னை தமக்குச் சாட்சியாக நிலைநிற்கச் செய்கிறார். தேவனின் அற்புதமான கிரியைகள் இத்தகையதாய் இருக்கின்றன. தேவன் செய்யும் கிரியை மனிதனின் புத்திக்கு எட்ட முடியாதது. மாம்சமாயிருக்கும் மனிதன் எவ்வகையான சீர்கேட்டைக் கொண்டிருக்கிறான், எது மனிதனின் சாராம்சத்தை உண்டாக்குகிறது, இவை எல்லாம் தேவனின் நியாயத்தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, இது மனிதனைத் தன் அவமானத்திலிருந்து மறைத்துக் கொள்ள இடமில்லாமல் செய்கிறது.

தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனநிலை குறித்து அவர் நியாயத்தீர்ப்பு செய்யாமல், மனிதனால் எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத அவரது நீதியான மனநிலையை அறிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை, மேலும் தேவனைப் பற்றிய தனது பழைய அறிவைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தம்மை முழுவதுமாக வெளியரங்கமாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது காட்சிப்படுத்துதலின் மூலம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறவும், அவனுடைய மனநிலையில் மறுரூபமடையவும், மற்றும் தேவனுக்கு நற்சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சிப் பகரவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாக இருக்கவும் முடியாது. மனிதன் தன்னைச் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, மனுவுருவான தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்திருக்கிறார், மனிதன் அவரைப் பற்றிய அறிவையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய நடைமுறையான மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை ஜெயங்கொள்ள அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகளால் மட்டுமே சாத்தானை வெட்கப்படுத்த முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, கையாள்தல் மற்றும் கிளைநறுக்குதல் மூலமாய் தம்மை தெரிந்துகொண்டவர்களை அவருக்குச் சாட்சிப் பகரப் பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்குத் தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் துதியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் மாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகரத் தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதைத் தேவன் அனுமதிக்க மாட்டார்.

அடிக்குறிப்பு:

அ. மூல உரை “தேவனை அறிவதற்கான கிரியை” என்று கூறுகிறது.

முந்தைய: “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு

அடுத்த: பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக