தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்

இன்றைக்கு, நீங்கள் தேவனில் அன்புகூரவும் அவரை அறிந்துகொள்ளவும் நாடுவதால், ஒரு பக்கம் நீங்கள் வருத்தத்தையும் புடமிடுதலையும் சகித்துக்கொள்ளவேண்டும்; இன்னொரு பக்கம் நீங்கள் ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்தவேண்டும். தேவனை நேசிக்கும் பாடத்தைக் காட்டிலும் அதிக ஆழமான பாடம் எதுவும் இல்லை, தேவனை நேசிப்பது எப்படி என்ற பாடத்தை ஜனங்கள் வாழ்நாள் முழுவதுமான நம்பிக்கையில் கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறலாம். அதாவது, நீ தேவனில் விசுவாசம் வைத்தாயானால் நீ அவரை நேசிக்க வேண்டும். நீ தேவனில் விசுவாசம் மட்டும் வைத்து ஆனால் அவரில் அன்புகூரவில்லையென்றால், மற்றும் தேவனைப் பற்றிய அறிவை அடையவில்லையென்றால், மற்றும் இருதயத்திலிருந்து வரும் உண்மையான அன்புடன் அவரை ஒருபோதும் நேசிக்கவில்லையென்றால், நீ தேவன்மேல் வைக்கும் விசுவாசம் வீண்; தேவன்மேலுள்ள விசுவாசத்தில், நீ அவரை நேசிக்கவில்லையென்றால், நீ வீணாய் உன் வாழ்க்கையை வாழ்கிறாய், உன்னுடைய முழு வாழ்க்கையுமே மற்ற எல்லாருடைய வாழ்வைக் காட்டிலும் மிகவும் தாழ்ந்ததாய் இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கை முழுவதுமே, நீ ஒருபோதும் தேவனை நேசிக்கவில்லையென்றால் அல்லது அவரைத் திருப்திபடுத்தவில்லையென்றால், பிறகு நீ வாழ்கிறதன் அர்த்தம் என்ன? தேவன்மேல் வைக்கும் உன்னுடைய நம்பிக்கையின் அர்த்தம் என்ன? அது ஒரு வீணான முயற்சியாகாதா? அதாவது, ஜனங்கள் தேவனில் நம்பிக்கை வைத்து அவரை நேசிக்க வேண்டுமானால், அவர்கள் ஒரு கிரயத்தைச் செலுத்தவேண்டும். ஒரு குறிப்பிட்ட வெளிப்புறமாய் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட அவர்கள் முயற்சிப்பதற்குப் பதிலாக, தங்கள் இருதயங்களின் ஆழங்களில் உண்மையான நுண்ணறிவினை அவர்கள் தேட வேண்டும். பாடுவதிலும் நடனமாடுவதிலும் நீங்கள் உற்சாகமாக இருந்தாலும், சத்தியத்தை நடைமுறைப்படுத்த இயலாவிட்டால், நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று கூற இயலுமா? தேவனை நேசிப்பது என்பது எல்லா காரியங்களிலும் தேவனுடைய சித்தத்தை நாடுவதாகும், மேலும் உனக்கு ஏதாவது நேரிடும்போது, தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொள்ளவும், அந்த விஷயத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் காணவும் முயற்சிப்பதும், அவர் உன்னை எதை அடையும்படிக்கு கேட்கிறார் என்பதையும், மற்றும் அவரது சித்தத்தைக் குறித்து எப்படி கவனமாயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆழமாக நோக்குவதாகும். உதாரணமாக, நீ துன்பப்படவேண்டிய ஒன்று நடக்கும்போது, அந்த நேரத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதையும் மற்றும் அவரது சித்தத்தைக் குறித்து நீ எவ்வாறு கவனமாயிருக்கவேண்டும் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ உன்னையே திருப்திசெய்து கொள்ளக்கூடாது: முதலில் உன்னை ஒரு பக்கம் வைக்க வேண்டும். மாம்சத்தைக் காட்டிலும் இழிவானது எதுவுமில்லை. தேவனைத் திருப்திப்படுத்த நீ தேட வேண்டும்; மற்றும் உனது கடமையை நீ நிறைவேற்றியாக வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளில், இவ்விஷயத்தில் தேவன் விசேஷித்த பிரகாசத்தை உனக்குக் கொண்டு வருவார், மேலும் உன்னுடைய இருதயமும் ஆறுதல் அடையும். பெரிதோ அல்லது சிறிதோ, ஏதாவது உனக்கு நிகழும்போது, நீ முதலாவது உன்னை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மாம்சத்தை எல்லாவற்றிலும் மிகவும் தாழ்ந்ததாகக் கருத வேண்டும். நீ எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தைத் திருப்திப்படுத்துகிறாயோ, அந்த அளவிற்கு அதிகமாக அது சுதந்திரம் எடுக்கிறது; இம்முறை அதை நீ திருப்தியாக்கினால், அடுத்த முறை அது இன்னும் அதிகமாகக் கேட்கும். இப்படியே நடக்கும்போது, ஜனங்கள் மாம்சத்தை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பார்கள். மாம்சம் எப்போதுமே அளவுகடந்த ஆசைகள் கொண்டது; நீ சாப்பிடும் உணவுப்பொருட்களாக இருக்கட்டும், உடுத்தும் ஆடையாக இருக்கட்டும், பொறுமையை இழந்து முன்கோபப்படுவதாக இருக்கட்டும், உன்னுடைய சொந்த, பலவீனங்கள் மற்றும் சோம்பேறித்தனத்திற்கு தீனிபோடுகிற காரியமாக இருக்கட்டும், அது எப்போதுமே தன்னைத் திருப்திப்படுத்தும்படி கேட்கும், மற்றும் உள்ளாக சந்தோஷப்படுத்தும்படி கேட்கும். நீ எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தைத் திருப்திப்படுத்துகிறாயோ, அந்த அளவிற்கு அதன் ஆசைகள் அதிகமாக மாறி மற்றும் ஜனங்களின் மாம்சம் இன்னும் ஆழமான எண்ணங்களை உருவாக்கி, தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தன்னைத் தானே உயர்த்தி, தேவனின் செயல்களைக் குறித்து சந்தேகமுறும் அளவுக்கு மாம்சமானது இன்னும் அதிகமாய் ஒழுக்கக்கேடாகி விடும். நீ எந்த அளவுக்கு மாம்சத்தைத் திருப்திபடுத்துகிறாயோ, அந்த அளவுக்கு மாம்சத்தின் பலவீனங்கள் அதிகமாகும்; உன் பலவீனங்களைக் குறித்து யாரும் பரிதவிக்கவில்லை என்று எப்போதும் உணர்வாய்; தேவன் அதிகத் தொலைவு சென்றுவிட்டதாக எப்போதும் நம்பி, “தேவன் எப்படி இவ்வளவு கடுமையாக இருக்கக்கூடும்? ஏன் அவர் ஜனங்களுக்கு சற்று இளைப்பாறுதல் கொடுக்கக்கூடாது?” என்று கூறுவாய். ஜனங்கள் மாம்சத்தைத் திருப்தியாக்கி அதை அதிகம் பேணும்போது, அவர்கள் தங்களையே கெடுத்துக்கொள்கிறார்கள். நீ உண்மையாக தேவனை நேசித்து மாம்சத்தைத் திருப்திப்படுத்தாதிருந்தால், பிறகு தேவன் செய்யும் எல்லாம் மிகச் சரியானவையாகவும் நல்லதாகவும் இருப்பதை நீ காண்பாய், மற்றும் அவர் சபித்த உன் கலகம் மற்றும் உன் அநீதியின் நியாயத்தீர்ப்பு நியாயமானதென்று தோன்றும். தேவன் உன்னை சிட்சித்து, தண்டித்துத் திருத்தி, பக்குவப்படுத்தும்படியான சூழ்நிலையை எழுப்பி, தமக்கு முன்பாக வரும்படி உன்னைக் கட்டாயப்படுத்துவார்—தேவன் செய்வது ஆச்சரியமானதாக இருக்கிறது என்று எப்போதும் நீ உணர்வாய். இப்படியாக அதிக வேதனையில்லாதது போன்றும், தேவன் அதிக அன்பானவராக இருப்பதையும் நீ உணர்வாய். மாம்சத்தின் பலவீனங்களுக்கு நீ தீனிபோட்டு, தேவன் வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார் என்று கூறுவாயானால், பிறகு நீ எப்போதும் வேதனையை உணர்வாய், எப்போதும் மனச்சோர்வுடன் இருப்பாய், தேவனுடைய எல்லா கிரியைகளையுங் குறித்து தெளிவற்றிருப்பாய். தேவன் மனுஷனுடைய பலவீனங்களைக் குறித்து சற்றும் பரிதவியாமல் இருப்பது போன்றும் மனுஷனுடைய வருத்தங்களை அறியாமல் இருப்பது போன்றும் தோன்றும். இப்படி நீ எப்போதும் பரிதாபமாகவும் தனிமையாகவும், பெரும் அநீதிக்கு நீ ஆளாகியிருப்பது போன்றும் உணர்வாய், இந்த நேரத்தில் குற்றஞ்சாட்டவும் தொடங்குவாய். இதுபோன்று எவ்வளவு அதிகமாக மாம்சத்தின் பலவீனங்களுக்குத் தீனி போடுகிறாயோ, அவ்வளவு அதிகமாய்த் தேவன் உங்களைவிட்டு தூரமாய்ப் போய்விட்டதாக உணர்வாய், அது தேவனுடைய கிரியைகளை மறுத்து, அவரை எதிர்க்க ஆரம்பித்து, கீழ்ப்படியாமையால் நிறைந்திருக்கும் அளவிற்கு அது மோசமாகிவிடும். இப்படியாக, நீ மாம்சத்துக்குத் தீனி போடாமல், அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும்: “என் கணவர் (மனைவி), பிள்ளைகள், வாய்ப்புகள், திருமணம், குடும்பம்—இவை யாவுமே பொருட்டல்ல! என் இருதயத்தினுள் தேவன் மட்டுமே இருக்கிறார், மாம்சத்தை அல்ல, தேவனை திருப்திப்படுத்தவே என்னால் இயன்ற அளவுக்கு நான் முயற்சி செய்ய வேண்டும்.” இந்தத் தீர்மானத்தை நீ கொண்டிருக்க வேண்டும். நீ எப்போதும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டிருந்தால், உன்னை ஒதுக்கி வைத்து, சத்தியத்தை நடைமுறைப்படுத்தும் போது, அதிகச் சிரமம் இல்லாமல் உன்னால் எளிதாக இதைச் செய்ய முடியும். ஒருமுறை விவசாயி ஒருவர் சாலையில் விறைத்துப்போய்க் கிடந்த பாம்பு ஒன்றைக் கண்டார். அதை விவசாயி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டார், அந்தப் பாம்பு புத்துயிர் பெற்றபோது, விவசாயியைக் கடித்து அவர் மரணமடைந்தார். மனுஷனின் மாம்சம் இந்தப் பாம்பைப் போன்றது: அதன் சாராம்சம் அவர்களுடைய வாழ்வுக்கு ஆபத்தை விளைவிப்பதாகும்—முற்றிலுமாக அதன் போக்கில் செல்லும்போது, உங்கள் ஜீவன் இழக்கப்படுகிறது. மாம்சம் சாத்தானுக்குச் சொந்தமானது. அதனுள் அளவுக்கு மிஞ்சிய ஆசைகள் இருக்கின்றன, அது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது, வசதியையும் ஓய்வு நேரத்தில் கேளிக்கையையும் அனுபவிக்கவும், சோம்பேறித்தனத்தில் புரளவும் விரும்பும், குறிப்பிட்ட அளவு அதைத் திருப்திபடுத்தினபின் அது முடிவாக உன்னை விழுங்கிவிடும். அதாவது, இந்த முறை நீ அதைத் திருப்தியாக்கினால், அடுத்த முறை அது இன்னும் அதிகமாகக் கேட்கும். அதற்கு எப்போதும் அளவுக்கு மீறிய ஆசைகளும் புதிய கோரிக்கைகளும் உண்டு, மாம்சத்துக்கு நீ தீனி போடுவதை அது சாதகமாக எடுத்துக்கொண்டு, உன்னை இன்னும் அதிகமாக அதைப் போற்றவும், அதனுடைய சுகபோகத்திற்குள் வாழவும் செய்யும்—நீ அதை மேற்கொள்ளாவிட்டால், இறுதியில் உன்னை நீயே அழித்துக்கொள்வாய். தேவனுக்கு முன்பாக நீ ஜீவனை அடைய முடியுமா என்பதும் உன்னுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பதும், நீ மாம்சத்திற்கு விரோதமாக எப்படி உன்னுடைய எதிர்ப்பைச் செயல்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்ததாகும். தேவன் உன்னை இரட்சித்திருக்கிறார், தெரிந்தெடுத்திருக்கிறார் மற்றும் முன்குறித்திருக்கிறார், ஆனாலும் இன்று நீ அவரைத் திருப்திப்படுத்த மனமில்லாதிருந்தால், சத்தியத்தை நடைமுறைப்படுத்த மனமில்லாதிருந்தால், தேவனை உண்மையாய் நேசிக்கும் இருதயத்தோடு உன் சொந்த மாம்சத்திற்கு எதிர்த்து நிற்க மனமில்லாதிருந்தால், இறுதியில் உன்னை நீயே கெடுத்துக் கொள்வாய்; மற்றும் இவ்வாறு அதிகபட்ச வேதனையை சகிப்பாய். நீ எப்போதும் மாம்சத்திற்குத் தீனி போட்டால், சாத்தான் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விழுங்கி, உள்ளே முழுவதும் இருளாகும் வரைக்கும் உன்னை ஜீவனற்றவனாக அல்லது ஆவியின் தொடுதல் இல்லாதவனாக விட்டுவிடுவான். நீ அந்தகாரத்தில் வசிக்கும்போது, சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டிருப்பாய், உன் இருதயத்தில் ஒருபோதும் தேவனைக் கொண்டிருக்க மாட்டாய், அப்போது நீ தேவன் இருப்பதை மறுதலித்து, அவரை விட்டு விலகிச்செல்வாய். இப்படியாக, ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், அவர்கள் வேதனையின் விலைக்கிரயத்தைச் செலுத்தவேண்டும் மற்றும் துன்பத்தைச் சகிக்க வேண்டும். வெளிப்புறமான ஆர்வமோ, பெருங்கஷ்டமோ, அதிகமான வாசிப்போ, இங்குமங்கும் அதிகமாய் ஓடுவதோ தேவையில்லை; மாறாக, அவர்கள் தங்களுக்குள் இருக்கும் அதிக ஊதாரித்தனமான எண்ணங்கள், தனிப்பட்ட விருப்பங்கள், மற்றும் தங்களின் சொந்தப் பரிசீலனைகள், கருத்துகள் மற்றும் நோக்கங்கள் ஆகிய காரியங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். தேவனுடைய சித்தம் அப்படிப்பட்டதாக இருக்கிறது.

ஜனங்களுடைய வெளிப்புற மனநிலையை தேவன் கையாளுதல் கூட அவருடைய கிரியையின் ஒரு பகுதியாக இருக்கிறது, உதாரணமாக, அவர்கள் வாழ்க்கை முறை மற்றும் பழக்கங்கள், அவர்களது வழிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், வெளிப்புற நடைமுறைகள் மற்றும் உணர்ச்சிகர ஆவல்கள் போன்ற மக்களின் வெளிப்புற, இயல்புக்கு மாறான மனிதத் தன்மை இவற்றைக் கையாள்வதும் தேவனுடைய செயலின் ஒரு பகுதியாகும். ஆனால் ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தி அவர்களுடைய மனநிலைகளை மாற்றவேண்டும் என்று அவர் கேட்கும்போது, அது அவர்களுக்குள் இருக்கும் நோக்கங்களும் கருத்துகளும் கையாளப்படுகின்றவற்றை முதன்மையாய்க் குறிக்கிறது. உன்னுடைய வெளிப்புற மனநிலையை மாத்திரம் கையாளுவது கடினமல்ல; நீ விரும்பிப் புசிக்கும் உணவைத் தவிர்க்க கேட்டுக்கொள்வது போன்று அது எளிதானது. ஆனால் உனக்குள் இருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களுடன் தொடர்புடையவற்றை விட்டுவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு ஜனங்கள் மாம்சத்திற்கு எதிர்த்து நிற்பதும் ஒரு விலைக்கிரயத்தை செலுத்துவதும் மற்றும் தேவனுக்கு முன்பாக பாடு அனுபவிப்பதும் தேவையாயிருக்கிறது. இது குறிப்பாக ஜனங்களுடைய நோக்கங்களுடன் இவ்வாறு இருக்கிறது. ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைக்க ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதபோது, உன்னுடைய நோக்கங்கள் அனைத்தும் சரியானவை என்றே நீ நினைப்பாய், ஆனால் ஏதாவது ஒன்று உனக்கு நிகழும்போது, உனக்குள் பல தவறான நோக்கங்கள் இருப்பதை நீ காண்பாய். இப்படியாக, தேவன் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துகிறபோது, தேவனைக் குறித்த அறிவை தடைசெய்யும் பல எண்ணங்கள் அவர்களுக்குள் இருப்பதை அவர்கள் உணரும்படி செய்கிறார். உன் நோக்கங்கள் தவறானவை என்று நீ அறிந்துகொள்ளும்போது, உன்னால் நீ கொண்டிருக்கும் கருத்துகள் மற்றும் நோக்கங்களின்படி பயிற்சி செய்வதை நிறுத்த முடிந்தால், தேவனுக்கு சாட்சியமளித்து, உனக்கு நேரிடும் எல்லாவற்றின் மத்தியிலும் உன் நிலையில் நிலைத்திருக்கவும் கூடுமானால், மாம்சத்திற்கு விரோதமாக கலகம் செய்துள்ளாய் என்பதை இது நிரூபிக்கிறது. நீ மாம்சத்திற்கு எதிர்த்து நிற்கும்போது, கண்டிப்பாக உனக்குள் ஒரு யுத்தம் எழுவது தவிர்க்க முடியாதது. சாத்தான், ஜனங்களை அதைப் பின்பற்ற வைக்க முயற்சிப்பான், அவர்களை மாம்சத்தின் கருத்துகளைப் பின்பற்றப் பண்ணவும் மற்றும் மாம்சத்தின் நலன்களை நிலைநிறுத்தச் செய்யவும் முயற்சிப்பான்—ஆனால் தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களை உள்ளாக பிரகாசிப்பித்து ஒளியூட்டும், இந்த நேரத்தில் தேவனையா, அல்லது சாத்தானையா யாரைப் பின்பற்றுவது என்பது உன்னைப் பொறுத்ததாகும். தேவன், ஜனங்களுக்கு உள்ளிருக்கும் காரியங்களைக் கையாள, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதாக இல்லாத எண்ணங்கள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றைக் கையாள சத்தியத்தை முதன்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அவர்களைக் கேட்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டு அவர்களைப் பிரகாசிப்பித்து ஒளியூட்டுகிறார். ஆகவே சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னாக ஒரு யுத்தம் இருக்கிறது: ஜனங்கள் ஒவ்வொருமுறையும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போதும், அல்லது தேவனுக்கான அன்பை நடைமுறைப்படுத்தும்போதும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. மாம்சத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களுடைய இருதயங்களின் ஆழங்களில் உண்மையில், ஒரு வாழ்வா-சாவா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்—இந்தத் தீவிர யுத்தத்திற்கு பிறகுதான், மிகப் பெரிய அளவிலான தீவிர சிந்தனைக்குப் பிறகே வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும். ஒருவருக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியாது. ஏனென்றால் ஜனங்களுக்குள் இருக்கும் பெரும்பாலான நோக்கங்கள் தவறானவை, இல்லையென்றால் தேவனுடைய அநேக செயல்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளிலிருந்து மாறுபட்டவை, ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, சம்பவங்களுக்குப் பின்னாக ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. இந்தச் சத்தியத்தை நடைமுறைப்படுத்திய பிறகு, இக்காட்சிகளுக்குப் பின்னால் முடிவாக, தேவனைத் திருப்திப்படுத்தும் வகையில் ஜனங்கள் தங்கள் மனதை மாற்றுவதற்கு முன்பு அளவிடமுடியாத அளவிற்குக் கவலையின் கண்ணீரை வடித்திருப்பார்கள். இந்த யுத்தத்தின் காரணமாக ஜனங்கள் வருத்தங்களையும் புடமிடப்படுதலையும் சகிக்கின்றனர்; இது உண்மையான பாடு. உன்மீது யுத்தம் வரும்போது, உண்மையில் உன்னால் தேவன் பட்சமாக நிற்க முடிந்தால், உன்னால் தேவனைத் திருப்திப்படுத்த இயலும். சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறபோது, ஒருவர் உள்ளாகப் பாடுகளை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஜனங்களுக்குள் எல்லாமே சரியாக இருந்தால், பிறகு அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய அவசியமிருக்காது, அங்கே யுத்தம் இருக்காது, மற்றும் அவர்கள் பாடனுபவிக்க மாட்டார்கள். அதேனென்றால் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதல்லாத பல காரியங்கள் ஜனங்களுக்குள் இருப்பதாலும், மாம்சத்தின் கலகத்தனமான மனநிலை அதிகமாய் இருப்பதாலும், ஜனங்கள் மாம்சத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கான பாடத்தை அதிக ஆழமாகப் படிக்க வேண்டியது அவசியம். இதுதான் தேவன் மனுஷனைத் தம்முடன் அனுபவிக்கச் சொன்ன துன்பமும் பாடும் ஆகும். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, விரைந்து சென்று தேவனிடம், “ஓ தேவனே! நான் உம்மைத் திருப்திப்படுத்த விரும்புகிறேன், உம் இருதயத்தைத் திருப்தியாக்க இறுதி துன்பத்தைத் தாங்க விரும்புகிறேன், எவ்வளவு அதிக பின்னடைவுகளை எதிர்கொண்டாலும், நான் இன்னும் உம்மைத் திருப்திப்படுத்தவேண்டும். நான் என் வாழ்க்கை முழுவதையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும், உம்மைத் திருப்திபடுத்தியே ஆக வேண்டும்!” என்று ஜெபம் செய்யுங்கள். இந்தத் தீர்மானத்தோடு, நீ இப்படியாக ஜெபிக்கும்போது, உன்னுடைய சாட்சியில் உன்னால் நிலைத்து நிற்க இயலும். ஒவ்வொருமுறை அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஒவ்வொருமுறையும் புடமிடப்படுதலின் வழியாய் செல்லும்போதும், ஒவ்வொருமுறை பரீட்சிக்கப்படும்போதும், தேவனுடைய செயல் அவர்கள்மேல் வரும் ஒவ்வொருமுறையும், மக்கள் அதிகமான வேதனையைச் சகிக்கவேண்டியதிருக்கும். இவை அனைத்துமே ஜனங்களுக்கான ஒரு சோதனையாகும், ஆகவே, அவர்கள் எல்லாருக்குள்ளும் ஒரு யுத்தம் உண்டு. இதுவே அவர்கள் செலுத்தும் உண்மையான கிரயம். தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிப்பதும், அதிகமாக ஓடுவதும் இக்கிரயத்தின் ஒரு பகுதியாகும். இதுவே ஜனங்கள் செய்ய வேண்டியதாகும், இது அவர்களுடைய கடமையும், அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புமாகும், ஆனால் ஜனங்கள் தங்களுக்குள் ஒதுக்கப்படவேண்டியவற்றை ஒதுக்கியாகவேண்டும். நீ அப்படிச் செய்யாவிட்டால், உன் வெளிப்புற பாடுகள் எவ்வளவு அதிகமாயினும், நீ எவ்வளவுதான் ஓடியலைந்தாலும், அத்தனையும் வீணாயிருக்கும்! அதாவது, உனக்குள் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே உன் புறம்பான பாடுகளுக்கு மதிப்பு உண்டா என்பதைத் தீர்மானிக்கும். உனது உள்ளான மனநிலை மாற்றப்பட்டு, நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், உன் புறம்பான பாடுகள் அனைத்தும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறும்; உன்னுடைய உள்ளான மனநிலையில் எந்த மாற்றமும் இல்லையென்றால், புறம்பாக நீ எவ்வளவு பாடுகளைச் சகித்துக் கொண்டாலும் அல்லது வெளியில் எவ்வளவுதான் ஓடினாலும், தேவனிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காது—தேவனால் உறுதிப்படுத்தப்படாத எந்த பாடும் வீணாகவே போகும். நீ செலுத்திய கிரயத்தை தேவன் அங்கீகரிக்கிறாரா இல்லையா என்பது உனக்குள் ஏற்படும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா, மற்றும் நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறாயா இல்லையா மற்றும் தேவனுடைய சித்தம், தேவனுடைய அறிவு, தேவனிடமான விசுவாசம் ஆகிவற்றைத் திருப்திப்படுத்தும்படி உங்கள் சொந்த நோக்கங்கள் மற்றும் கருத்துகளுக்கு எதிர்த்து நிற்கிறீர்களா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். நீ எவ்வளவு ஓடுகிறாய் என்பது பொருட்டல்ல, உன் சொந்த நோக்கங்களுக்கு எதிர்த்து நிற்க ஒருபோதும் அறியாதிருந்து, புறம்பான செயல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வ ஆர்வத்தை மட்டுமே தேடி, உன் ஜீவனுக்கு ஒருபோதும் கவனம் செலுத்தாமல் இருந்தால், உன்னுடைய பாடுகள் அத்தனையும் வீணாயிருந்திருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், நீ ஏதாவது ஒன்றைச் சொல்ல விரும்பியும், அதைக் கூறுவது சரியானது அல்ல என்றும், அதைக் கூறுவது உன் சகோதர சகோதரிகளுக்கு பயனைத் தராது, அவர்களைப் புண்படுத்தும் என்றும் உள்ளாக உணர்ந்தால், உள்ளே வேதனைப்படுவதை விரும்பி, அவ்வார்த்தைகள் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அதைக் கூறாமல் விட்டுவிடுவாய். இந்த நேரத்தில் உனக்குள் ஒரு யுத்தம் நடைபெறும், ஆனால், நீ வேதனையை அநுபவிக்க மனதாய், நீ நேசிப்பதை விட்டுக் கொடுப்பாய். தேவனைத் திருப்திப்படுத்தும்படியாய்ப் பாடு அநுபவிக்க நீ மனதாயிருப்பாய், மேலும் உள்ளே வேதனையை அநுபவித்தாலும், மாம்சத்திற்கேற்றபடி நடக்க மாட்டாய், தேவனின் இருதயமும் திருப்திப்பட்டிருக்கும், மற்றும் நீயும் உள்ளே ஆறுதல்படுத்தப்படுவாய். இதுவே உண்மையில் கிரயம் செலுத்துவதாகும், தேவன் விரும்பும் கிரயமுமாகும். நீ இவ்வழியில் நடைமுறைப்படுத்தினால், தேவன் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பார்; உன்னால் இதை அடைய இயலாவிட்டால், நீ எவ்வளவு அதிகமாகப் புரிந்து கொண்டாலும், அல்லது நீ எவ்வளவு நன்றாகப் பேசினாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை! தேவனை நேசிக்கும் பாதையில், சாத்தானுடனான தேவனுடைய யுத்தத்தில் உன்னால் அவர் பக்கம் நிற்க இயன்று, சாத்தானின் பக்கமாக நீ திரும்பாதிருந்தால், நீ தேவனுக்கான அன்பை அடைந்திருப்பாய்; உன்னுடைய சாட்சியில் நீ உறுதியாக நின்றிருப்பாய்.

தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கு இடையிலான இடைபடுதல்களாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும். தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு கிரியையின் பின்னணியிலும் தேவனுடன் சாத்தானின் பந்தயம் இருக்கிறது, அதன் பின்னால் அனைத்தும் ஒரு யுத்தம்தான். உதாரணமாக, உன் சகோதர சகோதரிகள் குறித்து நீ தப்பெண்ணம் கொண்டிருந்தால், நீ கூற விரும்புகிற வார்த்தைகளையே கொண்டிருப்பாய்—நீ நினைக்கும் வார்த்தைகள் தேவனுக்குப் பிரியமில்லாதவையாக இருக்கக்கூடும்—ஆனால் அவற்றைக் கூறாமற்போனால், நீ உள்ளுக்குள் அசௌகரியத்தை உணர்வாய், அந்தப் பொழுதில், “நான் பேசுகிறேனா, இல்லையா?” என்கிற யுத்தம் உனக்குள் தொடங்கும். இதுதான் யுத்தம். இப்படி நீ எதிர்கொள்ளும் ஒவ்வொன்றிலும் ஒரு யுத்தம் இருக்கும், உனக்குள் யுத்தம் ஏற்படும்போது, உன் உண்மையான ஒத்துழைப்பு, உண்மையான பாடுகளுக்கு நன்றி, தேவன் உனக்குள் செயல்படுகிறார். முடிவாக, நீ உனக்குள் இந்த விஷயத்தை ஒதுக்கி வைக்க முடியும் மற்றும் கோபம் இயல்பாகவே தணிந்துவிடும். இதுவே தேவனுடனான உன் ஒத்துழைப்பின் பயன். ஜனங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தங்கள் முயற்சிகளில் குறிப்பிட்ட கிரயத்தை செலுத்தவேண்டும். உண்மையான துன்பம் இல்லாமல் அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது; அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்தும் இடத்தை நெருங்கக்கூட இயலாது. வெற்றுக் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்! இந்த வெற்றுக் கோஷங்களால் தேவனைத் திருப்தியாக்க இயலுமா? தேவனும் சாத்தானும் ஆவிக்குரிய மண்டலத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, நீ எப்படி தேவனைத் திருப்திபடுத்த வேண்டும், எப்படி அவருக்கு உனது சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும்? உனக்கு நேரிடும் ஒவ்வொன்றும் ஒரு பெரிய உபத்திரவம் என்றும் நீ சாட்சியாக நிற்கவேண்டும் என்று தேவன் விரும்புகிற நேரம் என்றும் நீ அறிந்திட வேண்டும். வெளிப்பார்வைக்கு இவை முக்கியத்துவம் இல்லாதவையாகத் தோன்றினாலும், இந்தக் காரியங்கள் நடக்கும்போது நீ தேவனை நேசிக்கிறாயா இல்லையா என்பதைக் காண்பித்துவிடும். நீ உண்மையாக நேசித்தால், தேவனுக்கான உன் சாட்சியில் உறுதியாக நிற்க இயலும், அவர் மீதான அன்பை நீ நடைமுறைப்படுத்தவில்லையென்றால், நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதவன் என்றும், சத்தியம் இல்லாதவன் என்றும், ஜீவன் இல்லாதவன் என்றும், பதர் போன்றவன் என்பதையும் காட்டும். ஜனங்கள் தேவனுக்கு உறுதியான சாட்சியாக நிற்கவேண்டிய தேவை எழும்போதுதான் இவையெல்லாம் மக்களுக்கு நேரிடுகிறது. இந்த நேரத்தில் உனக்குப் பெரிதாக எதுவும் நடக்காவிட்டாலும், நீ பெரிய சாட்சி அளிக்கவில்லையென்றாலும், உன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சமுமே தேவனுக்கான சாட்சியாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் உன் குடும்பத்தினர், சுற்றியிருக்கும் அனைவருடைய பாராட்டுதலைப் பெற உன்னால் கூடுமானால்; ஒருநாள் அவிசுவாசிகளும் வந்து நீ செய்த எல்லாவற்றையும் பாராட்டினால், தேவன் செய்தவை அனைத்தும் ஆச்சரியமானவை என்று கண்டால், உனக்கு சாட்சி அளிப்பாய். உனக்கு நுண்ணிய அறிவு இல்லையானாலும், நீ குறைந்த திறன் கொண்டவனாக இருந்தாலும், தேவன் உன்னைப் பரிபூரணமாக்கியதன் மூலம், உன்னால் அவரைத் திருப்திப்படுத்தவும் மற்றும் அவரது சித்தம் குறித்து கவனமாயிருக்கவும், குறைந்த திறன் கொண்ட ஜனங்களில் அவரது மகத்தான கிரியையை மற்றவர்களுக்குக் காண்பிக்கவும் முடியும். ஜனங்கள் தேவனை அறிந்து, சாத்தானுக்கு முன்பாக ஜெயம்கொள்பவர்களாய், சிறப்பான அளவில் தேவனுக்கு விசுவாசமாக இருப்பவர்களாய் மாறும்போது, இந்த ஜனக்கூட்டத்தைவிட வேறு யாருக்கும் அதிக தைரியம் இருக்காது, இதுவே பெரிய சாட்சியாகும். மகத்தான காரியத்தைச் செய்ய உன்னால் இயலாவிட்டாலும், உன்னால் தேவனைத் திருப்திப்படுத்த முடியும். மற்றவர்களால் தங்கள் கருத்துகளை ஒதுக்கி வைக்க இயலாது; ஆனால் உன்னால் கூடும்; தங்கள் உண்மையான அனுபவங்களின்போது மற்றவர்களால் தேவனுக்கு சாட்சியமளிக்க இயலாது, ஆனால் உன்னால் உன் உண்மையான வளர்ச்சி மற்றும் செயல்களை தேவனின் அன்புக்குப் பிரதிபலன் செய்யப் பயன்படுத்துவதோடு அவருக்குப் பெரும் சாட்சியமளிக்க இயலும். உண்மையில் இதுவே தேவனை நேசிப்பதாக எண்ணப்படும். உங்களால் இவற்றைச் செய்ய இயலாவிட்டால், நீ உன் குடும்ப உறுப்பினர்கள், சகோதர சகோதரிகள், அல்லது உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் சாட்சியமளிக்கமாட்டாய். சாத்தானுக்கு முன்பாக உன்னால் சாட்சியமளிக்க முடியாவிட்டால், சாத்தான் உன்னைப் பார்த்து நகைப்பான்; உன்னைக் கேலியாக, விளையாட்டுப் பொருளாக நடத்துவான், உன்னை அடிக்கடி முட்டாளாக்கி தன்னிலை மறந்தவனாக்குவான். எதிர்காலத்தில், பெரிய உபத்திரவங்கள் உனக்கு வரலாம்—ஆனால் இன்று, நீ உண்மையான இருதயத்தோடு தேவனை நேசித்தால், மேலும், எத்தனை பெரிய உபத்திரவங்கள் எதிரே இருந்தாலும், உனக்கு என்ன நேர்ந்தாலும், உன்னால் சாட்சியில் உறுதியாக நிற்க முடிந்தால், தேவனைத் திருப்திப்படுத்த முடிந்தால், பிறகு உன் இருதயம் தேற்றப்படும், எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய உபத்திரவங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் பயப்படாதிருப்பாய். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை உங்களால் காண இயலாது; இன்றைய சூழலில் மட்டுமே நீங்கள் தேவனைத் திருப்திப்படுத்த முடியும். எந்தப் பெரிய செயலையும் செய்ய உங்களால் இயலாது, தேவனுடைய வார்த்தைகளை உண்மை வாழ்வில் அனுபவிப்பதன் மூலம் அவரைத் திருப்தியாக்குவதில் கவனமாயிருக்க வேண்டும், சாத்தானுக்கு வெட்கமுண்டாகும்படி உறுதியான, பெரும் சாட்சியமளிக்க வேண்டும். உன் மாம்சமானது அதிருப்தியடையாமல், வேதனையுற்றாலும், நீ தேவனைத் திருப்திபடுத்தி சாத்தான்மேல் வெட்கத்தைக் கொண்டு வருவாய். நீ எப்போதும் இதுபோன்றே செயல்பட்டால், தேவன் உனக்கு முன்பாக ஒரு பாதையைத் திறப்பார். ஒருநாள், ஒரு பெரிய சோதனை வரும்போது, மற்றவர்கள் விழுந்து போவார்கள், ஆனால் உன்னால் இன்னும் உறுதியாக நிற்க முடியும்: நீ செலுத்தியிருக்கிற கிரயத்தின் காரணமாக, நீ விழுந்துபோகாமல் உறுதியாக நிற்கும்படி தேவன் உன்னைப் பாதுகாப்பார். சாதாரணமாக, சத்தியத்தை நடைமுறைப்படுத்த உன்னால் முடிந்தால், உண்மையாக தேவனை நேசிக்கும் இருதயத்திலிருந்து அவரைத் திருப்திபடுத்த முடிந்தால், தேவன் எதிர்கால உபத்திரவங்களின்போது நிச்சயமாய் உன்னைப் பாதுகாப்பார். நீ பேதையாக, குறைந்த வளர்ச்சியுள்ளவனாய், செயல்திறன் குறைந்தவனாய் இருந்தாலும், தேவன் உனக்கு எதிராகப் பாகுபாடு பார்க்கமாட்டார். அது உன் நோக்கங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது. இன்றைக்கு, உன்னால் தேவனைத் திருப்திப்படுத்த முடிகிறது, அதில் நீ மிகச்சிறிய விஷயத்தில் கவனம் செலுத்துகிறாய், எல்லா காரியத்திலும் நீ தேவனைத் திருப்திப்படுத்துகிறாய், தேவனை உண்மையாய் நேசிக்கும் இருதயம் உனக்கிருக்கிறது, நீ உண்மையாய் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கிறாய், உன்னால் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், உன் நோக்கங்களைச் சரிப்படுத்திக் கொள்ளும்படி தேவன் முன் வந்து, அவருடைய சித்தத்தை நாடலாம், எல்லா காரியங்களிலும் தேவனைத் திருப்திப்படுத்த தேவையானவற்றைச் செய்கிறாய். உன் சகோதர சகோதரிகள் ஒருவேளை உன்னைக் கைவிடலாம், ஆனால் உன் இருதயம் தேவனைத் திருப்திப்படுத்தும், நீ மாம்சத்தின் இன்பங்களை நாடித் தேட மாட்டாய். எப்போதும் இம்முறையை நடைமுறைப்படுத்துவாயானால், பெரிய உபத்திரவங்கள் உன்மீது வரும்போது நீ பாதுகாக்கப்படுவாய்.

ஜனங்களுடைய எந்த உள்ளார்ந்த நிலையை சோதனைகள் குறி வைக்கின்றன? அவை தேவனைத் திருப்திப்படுத்த இயலாத ஜனங்களின் கலகம்பண்ணுகிற மனநிலையைக் குறி வைக்கின்றன. ஜனங்களுக்குள் அசுத்தமானவை அதிகம் உள்ளன, மாய்மாலமானவை அதிகம் உள்ளன, ஆகவே தேவன் ஜனங்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களை உபத்திரவத்திற்கு உட்படுத்துகிறார். ஆனால், இன்று, உன்னால் தேவனைத் திருப்திப்படுத்தக்கூடுமானால், எதிர்கால உபத்திரவங்கள் உன்னைப் பரிபூரணப்படுத்துகிறவையாய் இருக்கும். இன்று, உன்னால், தேவனைப் திருப்திப்படுத்த இயலாவிட்டால், எதிர்கால உபத்திரவங்கள் உன்னைச் சோதிக்கும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல் நீ விழுந்து போவாய், அந்த வேளையில் உனக்கே உன்னால் உதவி செய்ய இயலாது, ஏனென்றால் உன்னால் தேவனுடைய செயலைத் தொடர முடியாது, உண்மையான வளர்ச்சியைப் பெற்றிருக்க மாட்டாய். அதனால், எதிர்காலத்தில் உறுதியாக நிற்கவேண்டுமென்றும், இன்னும் நல்லமுறையில் தேவனைத் திருப்திப்படுத்த வேண்டுமென்றும், கடைசி வரைக்கும் அவரைப் பின்பற்றவும் விரும்பினால், இன்று நீ உறுதியான அஸ்திபாரத்தை உருவாக்க வேண்டும். நீ எல்லாவற்றிலும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தி தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும்; அவரது சித்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நீ எப்போதும் இம்முறையில் செயல்படும்போது, மேலும் உனக்குள் ஓர் அஸ்திபாரம் இருக்கும், தம்மை நேசிக்கும்படி ஓர் இருதயத்தைத் தேவன் உன்னில் தூண்டுவார், மேலும் உனக்கு விசுவாசத்தை அளிப்பார். ஒருநாள், உண்மையாகவே ஓர் உபத்திரவம் உனக்கு வரும்போது, கொஞ்சம் வேதனையை அனுபவிக்கலாம்; ஓரளவிற்கு சோகமாக உணரலாம், நீ மரித்துவிட்டது போன்று நொறுக்கும் துயரத்தை அனுபவிக்கலாம்—ஆனால் தேவனுக்கான உன் அன்பு மாறாது, அது இன்னும் ஆழமாகும். அவையே தேவனுடைய ஆசீர்வாதங்கள். தேவன் கூறுகிற மற்றும் செய்கிற எல்லாவற்றையும் உன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், கீழ்ப்படிதலின் இருதயத்தோடு இன்றே செய்யக்கூடுமானால், நீ நிச்சயமாகவே தேவனால் ஆசீர்வதிக்கப்படுவாய், அதனால் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பாய், அவரது வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வாய். இன்று, நீ நடைமுறைப்படுத்தவில்லையென்றால், ஒருநாள் உபத்திரவங்கள் உனக்கு நேரிடும்போது நீ விசுவாசமின்றியும், நேசிக்கிற இருதயம் இன்றியும் இருப்பாய், அப்போது உபத்திரவம் சோதனையாய் மாறும்; நீ சாத்தானின் சோதனைக்குள் மூழ்கிவிடுவாய், தப்பிப்பதற்கு எந்த வழியும் இருக்காது. இன்று, சிறு உபத்திரவம் வரும்போது உன்னால் உறுதியாய் நிற்க இயலலாம், ஆனால் ஒருநாள் பெரிய உபத்திரவம் வரும்போது உன்னால் எப்போதும் உறுதியாய் நிற்க முடியாது. சிலர் அகந்தையுள்ளவர்களாய் தாங்கள் ஏற்கனவே கிட்டத்தட்ட பரிபூரணமடைந்து விட்டதாக நினைப்பார்கள்; இதுபோன்ற வேளைகளில் நீ ஆழமாகச் செல்லாமல் தொடர்ந்து மெத்தனமாக அமர்ந்திருந்தால், நீ ஆபத்தில் இருப்பாய். இன்று தேவன் பெரிய உபத்திரவங்களின் கிரியையைச் செய்வதில்லை, எல்லாம் நன்றாகத் தோன்றுகிறது, ஆனால் தேவன் உன்னைச் சோதிக்கும்போது, நீ அதிகக் குறைபாடு உள்ளவன் என்பதை நீ கண்டுபிடிப்பாய், ஏனென்றால் உன் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது மற்றும் உன்னால் பெரிய உபத்திரவங்களைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. நீ, இருக்கின்ற நிலையிலேயே இருந்துகொண்டு, செயலற்ற நிலையில் இருந்தால், உபத்திரவங்கள் வரும்போது, விழுந்து போவாய். உங்கள் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருக்கிறதென்று அடிக்கடி நீங்கள் பார்க்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் முன்னேற முடியும். உபத்திரவங்களின்போது மட்டுமே உன் வளர்ச்சி மிகவும் குறைவு என்றும், உன் மனவலிமை மிகவும் பலவீனமானது என்றும், உனக்குள் இருக்கும் மிகக் குறைவானதே உண்மையானது என்றும், தேவனுடைய சித்தத்திற்கு நீ போதுமானவனல்ல என்பதையும் நீ கண்டால், அப்போதுதான் இவற்றை உணர்வாயானால், அது மிகவும் தாமதமாகிவிடும்.

நீ தேவனின் மனநிலையை அறியவில்லையென்றால், உபத்திரவங்களின்போது கண்டிப்பாக விழுந்துபோவாய், ஏனென்றால் தேவன் ஜனங்களை எப்படிப் பரிபூரணப்படுத்துகிறார், எதன் மூலம் அவர் அவர்களைப் பரிபூரணமாக்குகிறார் என்பதை நீ அறியாமல் இருக்கிறாய், மேலும் தேவனுடைய உபத்திரவங்கள் உன்மேல் வரும் போது உன் கருத்துகளுடன் உபத்திரவங்கள் பொருந்தாத போது, உன்னால் உறுதியாக நிற்க இயலாமல் போகும். தேவனுடைய உண்மையான அன்பே அவரது முழுமையான மனநிலையாகும். தேவனுடைய முழுமையான மனநிலை ஜனங்களுக்குக் காண்பிக்கப்படும்போது, அது உன் மாம்சத்துக்கு எதைக் கொண்டு வரும்? தேவனுடைய நீதியுள்ள மனநிலை ஜனங்களுக்குக் காண்பிக்கப்படும்போது, அவர்களது மாம்சம் வேதனையை அநுபவிப்பது தவிர்க்க இயலாததாகும். நீ இந்த வேதனையை அனுபவிக்காவிட்டால், நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் முடியாது, தேவனுக்கு உண்மையான அன்பை அர்ப்பணிக்கவும் இயலாது. தேவன் உன்னை பரிபூரணமாக்கினால், அவர் நிச்சயமாக தமது முழு மனநிலையையும் உனக்குக் காட்டுவார். சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரைக்கும், தேவன் ஒருபோதும் தமது முழு மனநிலையை மனுஷனுக்கு காட்டியதில்லை—ஆனால் கடைசி நாட்களில் அவர் இதை தாம் முன்குறித்த மற்றும் தெரிந்து கொண்ட ஜனக்குழுவினருக்கு வெளிப்படுத்துகிறார், மேலும் ஜனங்களைப் பூரணப்படுத்துவதன் மூலம் அவர் தம் மனநிலைகளை வெளியரங்கமாக வைக்கிறார், அதன் மூலம் ஜனக்குழுவை முழுமைப்படுத்துகிறார். ஜனங்கள் மீதான தேவனுடைய உண்மையான அன்பு அத்தகையது. தேவனுடைய உண்மையான அன்பினை அநுபவிக்கிறதற்கு ஜனங்கள் அதிக வேதனையை சகிக்கவேண்டியதோடு, அதிக கிரயத்தையும் செலுத்தவேண்டும். அதன்பின்னரே அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படுவர், தங்கள் உண்மை அன்பைத் திரும்பவும் தேவனுக்குக் கொடுக்க முடியும், அதன் பின்னரே தேவனுடைய இருதயம் திருப்தியடையும். தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனங்கள் விரும்பினால், அவரது சித்தத்தைச் செய்ய விரும்பினால், தங்கள் உண்மை அன்பை முழுமையாக தேவனுக்குக் கொடுத்தால், தங்கள் சூழ்நிலைகளிலிருந்து அதிக பாடுகளையும் தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டும், மரணத்தை காட்டிலும் மோசமான வலியையும் அனுபவிக்க வேண்டும். முடிவில் அவர்கள் தங்கள் முழு இருதயத்தையும் தேவனிடம் திருப்பி தரவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவர் தேவனை உண்மையில் நேசிக்கிறாரா, இல்லையா என்பது பெருங்கஷ்டங்கள் மற்றும் புடமிடுதலின்போது வெளிப்படுத்தப்படும். ஜனங்களின் அன்பை தேவன் சுத்திகரிக்கிறார், இதுவும் பெருங்கஷ்டங்கள் மற்றும் சுத்திகரித்தலின் மத்தியில் மட்டுமே அடையப்படுகிறது.

முந்தைய: வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்

அடுத்த: “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக