உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்

பரிசுத்த ஆவியானவரின் கிரியை நாளுக்கு நாள் மாறுகிறது. அவருடைய கிரியையானது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிகரிக்கிறது, நாளைய வெளிப்படுத்துதல் இன்றைய வெளிப்படுத்துதலைக் காட்டிலும் அதிகமாக உள்ளது, எடுத்துவைக்கும் அடிக்கு அடி எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்கும் செயல் இதுவே. ஜனங்களால் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை என்றால், அவர்கள் எந்த நேரத்திலும் வெளியே தள்ளப்படலாம். அவர்களிடம் கீழ்ப்படிதலுள்ள இருதயம் இல்லையென்றால், அவர்களால் இறுதிவரை பின்பற்ற இயலாது. முந்தைய காலம் கடந்துபோனது; இது ஒரு புதிய காலம். புதிய காலத்தில், புதிய கிரியை செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஜனங்கள் பரிபூரணமாக்கப்படும் கடைசி காலத்தில், தேவன் புதிய கிரியைகளை மிகவும் விரைவாகச் செய்வார், ஆகவே ஜனங்கள் தங்கள் இருதயங்களில் கீழ்ப்படிதல் இல்லாமல், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றச் சிரமப்படுவார்கள். தேவன் எந்த விதிகளுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல, அவர் தனது எந்தக் கட்டத்தின் கிரியையையும் மாறாததாக பாவிப்பதில்லை. மாறாக, அவர் செய்யும் கிரியை எப்போதும் புதியதாகவும், எப்போதும் அதிகரித்துக்கொண்டேயும் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அவருடைய கிரியை மேலும் மேலும் நடைமுறையானதாக மாறுகிறது, மேலும் மனுஷனின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப அதிகரித்தவாறு இருக்கிறது. ஜனங்கள் இதுபோன்ற கிரியையை அனுபவித்த பிறகே தங்கள் மனநிலையில் இறுதி மாற்றத்தை அடைய இயலும். ஜீவனைப் பற்றிய மனுஷனின் அறிவு எப்போதும் இல்லாத உயர்ந்த நிலைகளை எட்டுகிறது, ஆகவே அதேபோல, தேவனுடைய கிரியை எப்போதும் இல்லாத உயர்ந்த நிலைகளை எட்டுகிறது. இவ்விதமாக மாத்திரமே மனுஷன் பரிபூரணமாக்கப்பட்டு தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதியுள்ளவனாக இயலும். தேவன் ஒருபுறம் மனுஷனின் எண்ணங்களை எதிர்கொண்டு அவற்றை நேர்மாறாக மாற்றுகிறார், மறுபுறம் மனுஷனை உயர்ந்த மற்றும் மிகவும் யதார்த்தமான நிலைக்கும், தேவன் மீதான விசுவாசத்தின் மிகவும் உயர்ந்த ராஜ்யத்திற்கும் வழிநடத்திச் செல்கிறார், இதன் மூலம் அவனால் தேவனுடைய சித்தத்தை இறுதியில் நிறைவேற்ற இயலும். வேண்டுமென்றே எதிர்க்கும் கீழ்ப்படியாத சுபாவமுள்ளவர்கள் அனைவருமே தேவனுடைய விரைவான மற்றும் பலம் கொண்ட மேம்பட்ட கிரியையின் இந்தக் கட்டத்தில் வெளியே தள்ளப்படுவார்கள்; விருப்பத்துடன் கீழ்ப்படிகிறவர்களும் மகிழ்ச்சியுடன் தங்களைத் தாழ்த்துகிறவர்களும் மாத்திரமே சாலையின் இறுதி வரை பயணிக்க இயலும். இவ்வகையான கிரியையில், நீங்கள் எல்லோரும் எவ்வாறு கீழ்ப்படிவது, உங்கள் கருத்துக்களை எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், நீங்கள் நிச்சயமாகவே பரிசுத்த ஆவியானவரால் புறக்கணிக்கப்பட்டவராகவும், தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்கிறவராகவும் மாறிப்போவீர்கள். இந்தக் கட்டக் கிரியைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு, மனுஷனின் பழைய விதிகளும் சட்டங்களும் எண்ணற்றவையாக இருந்தன, அவன் அதையே கடைபிடித்தான். இதன் விளைவாக, அவன் தற்பெருமை கொண்டு தன்னையே மறந்துவிட்டான். இவை அனைத்தும் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள விடாமல் மனுஷனைத் தடுக்கும் தடைகளாகும்; இவைதான் தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவின் எதிரிகள். ஜனங்கள் தங்கள் இருதயத்தில் கீழ்ப்படிதல் இல்லாமலும், சத்தியத்திற்காக ஏங்காமலும் இருப்பது ஆபத்தானது. எளிய கிரியைக்கும் வார்த்தைகளுக்கும் மாத்திரமே கீழ்ப்படிந்தால் மற்றும் ஆழமான எதையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், நீ பழைய வழிமுறைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறாய், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வேகத்துடன் உன்னால் ஈடுகொடுக்க இயலாது. தேவனால் செய்யப்படும் கிரியைகள் காலத்திற்கு காலம் மாறுபடும். நீ ஒரு கட்டத்தில் தேவனுடைய கிரியைக்கு மிகுந்த கீழ்ப்படிதலுடன் இருந்து, ஆனால் அடுத்தக் கட்டத்தில் அவருடைய கிரியை மீதான உன் கீழ்ப்படிதல் மோசமாக இருந்தால் அல்லது உன்னால் கீழ்ப்படிய இயலவில்லை என்றால், தேவன் உன்னைக் கைவிடுவார். தேவன் இந்த அடியை எடுத்துவைக்கும்போது அவருடைய வேகத்துக்கு நீ ஈடுகொடுத்தால், அவர் அடுத்த படிக்குச் செல்லும்போது, நீ தொடர்ந்து அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும்; அப்போதுதான் நீ பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியும் ஒருவனாக இருப்பாய். நீ தேவனை விசுவாசிப்பதால், உன் கீழ்ப்படிதலில் நீ இடைவிடாமல் நிலைத்திருக்க வேண்டும். வெறுமனே, நீ விரும்பும்போது கீழ்ப்படிந்து விருப்பமற்றபோது கீழ்ப்படியாமல் நீ இருக்கக்கூடாது. இவ்வகையான கீழ்ப்படிதல் தேவனால் பாராட்டப்படுவதில்லை. நான் ஐக்கியங்கொள்ளும் புதிய கிரியையின் வேகத்திற்கு உன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றால், முந்தைய நீதிமொழிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், உன் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றம் காணப்படும்? தேவனுடைய வார்த்தைகளின் மூலம் உனக்குக் கொடுப்பதே தேவனுடைய கிரியையாகும். நீ அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உனக்குள் கிரியை செய்வார். பரிசுத்த ஆவியானவர் நான் பேசுவது போலவே கிரியை செய்கிறார்; நான் சொன்னது போலவே செய்கிறார், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாகக் கிரியை செய்வார். நீங்கள் தற்போதைய ஒளியைக் காண்பதற்கும் அதை உங்களுக்குள் கொண்டுவருவதற்காகவும், ஒரு புதிய ஒளியை வீசச் செய்கிறேன், நீ இந்த ஒளியில் நடக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாக கிரியை செய்வார். சிலர் “நீ சொல்வதை நான் செய்யமாட்டேன்” என்று கூறி, கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், நீ இப்போது சாலையின் இறுதிக்கு வந்துவிட்டாய் என்று நான் உனக்குச் சொல்கிறேன்; நீ வறண்டு போய்விட்டாய், இனிமேலும் உனக்கு ஜீவன் இல்லை. ஆகவே, உன் மனநிலையின் மாற்றத்தை அனுபவிப்பதில், தற்போதைய ஒளியின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. தேவனால் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது மட்டுமின்றி, திருச்சபைக்குள்ளும் கிரியை செய்கிறார். அவரால் யாருக்குள்ளும் கிரியை செய்ய இயலும். அவரால் தற்காலத்திலும் உனக்குள் கிரியை செய்யக்கூடும், மேலும் நீ இந்த கிரியையை அனுபவிப்பாய். அடுத்த காலகட்டத்தில், அவர் வேறொருவருக்குள் கிரியை செய்யலாம், இந்த விஷயத்தில் நீ விரைந்து பின்பற்ற வேண்டும்; தற்போதைய ஒளியை நீ எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறாயோ, அவ்வளவு அதிகமாக உன் வாழ்க்கை வளர்ச்சியடையும். ஒருவர் எவ்விதமான நபராக இருந்தாலும், அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், நீ பின்பற்ற வேண்டும். அவர்கள் அனுபவித்த விதமாகவே நீங்களும் அனுபவிப்பீர்கள், நீங்கள் இன்னும் மேலான காரியங்களையும் பெறுவீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீ மிக விரைவாக முன்னேறுவாய். இதுதான் மனிதர்களின் பரிபூரணத்துக்கான பாதையாகும், இதன் மூலமாகவே வாழ்க்கை வளர்ச்சியடைகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையை அடைகிறாய். உன்னைப் பரிபூரணப்படுத்த தேவன் எந்த வகையான நபரின் மூலம் கிரியை செய்வார் அல்லது எந்த நபர், சம்பவம் அல்லது காரியத்தின் மூலம் அவர் உன் காரியங்களைப் பெறவோ அல்லது பார்க்கவோ அனுமதிப்பார் என்பது உனக்குத் தெரியாது. இந்தச் சரியான பாதையில் நீ அடியெடுத்து வைக்க முடிந்தால், நீ தேவனால் பூரணப்படுத்தப்படுவாய் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் முடியவில்லை என்றால், உன் எதிர்காலம் இருண்டும், ஒளியில்லாமலும் காணப்படும் என்பதையே இது காட்டுகிறது. நீ சரியான பாதைக்கு வந்ததும், எல்லா காரியங்களிலும் நீ வெளிப்படுத்துதலைப் பெறுவாய். பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு எதை வெளிப்படுத்தினாலும், நீயே காரியங்களை அனுபவிக்க அவர்களுடைய அறிவின் அடிப்படையில் நீ செயல்பட்டால், இந்த அனுபவம் உன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், மேலும் இந்த அனுபவத்திலிருந்து உன்னால் மற்றவர்களுக்கும் கொடுக்க இயலும். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வோர் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்; உன் சொந்த உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பற்றிப் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, மற்றவர்களின் ஞானம் மற்றும் வெளிச்சத்தின் மூலம் ஒரு நடைமுறை வழியைக் கண்டுபிடிக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும். இது உன் சொந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தேவனிடமிருந்து வரும் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து நீ அனுபவிக்க வேண்டும். நீ சகலத்திலும் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும், சகலத்திலும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் உன் வாழ்க்கை வளர்சியடையலாம். இதுபோன்ற நடைமுறை மிக விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்கிறது.

உன் நடைமுறை அனுபவங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உனக்குப் போதிக்கிறார், மேலும் உன் விசுவாசத்தின் மூலமாக உன்னைப் பரிபூரணப்படுத்துகிறார். நீ உண்மையிலேயே பரிபூரணமடைய விரும்புகிறாயா? நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், உன் மாம்சத்தை ஒதுக்கி வைக்கும் தைரியத்தை நீ பெறுவாய், தேவனுடைய வார்த்தைகளை உன்னால் நிறைவேற்ற முடியும், மேலும் நீ செயலற்றவனாகவோ பலவீனமானவனாகவோ இருக்க மாட்டாய். தேவனிடமிருந்து வரும் சகலத்திற்கும் உன்னால் கீழ்ப்படிய இயலும், மேலும் பொதுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்யப்படும் உன் செயல்கள் அனைத்தும் தேவனுக்கு முன் பணிவானதாக இருக்கும். நீ ஒரு நேர்மையான நபராக இருந்து, சகலத்திலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தால், நீ பரிபூரணப்படுவாய். மற்றவர்களுக்கு முன்னால் ஒரு விதமாகவும், அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் மற்றொரு விதமாகவும் செயல்படும் அந்த வஞ்சக ஜனங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நித்திய நாசம் மற்றும் அழிவின் புத்திரர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேவனுக்கு அல்ல, சாத்தானுக்கே சொந்தமானவர்கள். அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அல்ல! உன் செயல்களையும் நடத்தையையும் தேவனுக்கு முன்பாக வைக்கவோ அல்லது தேவனுடைய ஆவியால் ஏற்றுக்கொள்ளப்படவோ முடியாவிட்டால், உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என்பதற்கான ஆதாரம் இதுதான். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நீ ஏற்றுக்கொண்டு, உன் மனநிலையை மாற்றுவதில் கவனம் செலுத்தினால் மாத்திரமே, நீ பரிபூரணமாக்கப்படும் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும். நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் தேவனுடைய சித்தத்தைச் செய்யவும் விரும்பினால், ஒரு வார்த்தைகூட குறைகூறாமலும், தேவனுடைய கிரியையை மதிப்பிடவோ அல்லது நியாயந்தீர்க்கவோ முயற்சிக்காமல், நீ தேவனுடைய சகல கிரியைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவைதான் தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கான குறைந்தபட்ச தேவைகளாகும். தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்புகிறவர்களுக்கான அத்தியாவசியமான தேவை பின்வருமாறு: சகலத்திலும் தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்பட வேண்டும். தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்படுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதாவது உன் செயல்கள் மற்றும் நடத்தை அனைத்தையும் தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும் என்பதாகும். உன் செயல்கள் சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருந்தாலும், உன் நோக்கங்கள் சரியானதாக இருப்பதால், நீ அவற்றை தேவனிடமோ அல்லது உன் சகோதர சகோதரிகளிடமோ காண்பிக்க அஞ்சுவதில்லை, மேலும் நீ தேவனுக்கு முன்பாக சத்தியம் செய்யத் துணிகிறாய். உன் ஒவ்வொரு நோக்கத்தையும், சிந்தனையையும், யோசனையையும் தேவன் பரிசோதிப்பதற்காக நீ அவற்றை அவருக்கு முன்பாக வைக்க வேண்டும்; நீ அதன்படி நடந்து இந்த பாதையில் பிரவேசிப்பாயானால், உன் வாழ்க்கையில் முன்னேற்றம் விரைவாக இருக்கும்.

நீ தேவனை விசுவாசிப்பதால், தேவனுடைய எல்லா வார்த்தைகள் மற்றும் அவருடைய எல்லாக் கிரியைகள் மீதும் நீ விசுவாசம் வைக்க வேண்டும். அதாவது, நீ தேவனை விசுவாசிப்பதால், நீ அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். உன்னால் இதைச் செய்ய இயலவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிக்கிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நீ பல வருடங்களாக தேவனை விசுவாசித்தாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய வார்த்தைகளின் பரிபூரணத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமலும், அதற்குப் பதிலாக தேவனை உனக்குக் கீழ்ப்படிந்து, உன் கருத்துக்களின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்வாயானால், நீதான் அனைவரைக் காட்டிலும் மிகவும் கலகக்காரன், நீ ஒரு அவிசுவாசி. மனுஷனின் கருத்துக்களுக்கு இணங்காத தேவனுடைய கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இதுபோன்றவர்கள் எவ்வாறு கீழ்ப்படிய முடியும்? தேவனுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களுமே எல்லோரைக் காட்டிலும் பெரிய கலகக்காரர்கள். அவர்கள் தான் தேவனுடைய எதிரிகள், அந்திகிறிஸ்துக்கள். அவர்களுடையது எப்போதும் தேவனுடைய புதிய கிரியைக்கு எதிரான விரோதப் போக்காகும்; அவர்களிடம் ஒருபோதும் கீழ்ப்படிவதற்கான விருப்பம் சிறிதளவு கூட இருப்பதில்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்ததோ அல்லது தாழ்மைப்படுத்திக் கொண்டதோ கிடையாது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள், ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. தேவனுக்கு முன்பாக, வார்த்தையைப் பிரசங்கிப்பதில் சிறந்தவர்களாகவும், மற்றவர்களை இயக்குவதில் மிகவும் திறமையானவர்களாகவும் தங்களைக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களிடமுள்ள “பொக்கிஷங்களை” ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் அவற்றைத் தொழுகைக்கான, மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கான குடும்பப் பரம்பரைச் சொத்துக்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவற்றைப் பார்த்து பிரமிக்கும் முட்டாள்களுக்குப் பிரசங்கிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். திருச்சபையில் உண்மையிலேயே இது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தலைமுறை தலைமுறையாக தேவனுடைய வீட்டில் தங்கியிருக்கும் “வெல்லமுடியாத கதாநாயகர்கள்” என்று சொல்லலாம். அவர்கள் வார்த்தையை (கோட்பாடு) பிரசங்கிப்பதை தங்களுடைய மிக உயரிய கடமையாக கருதுகிறார்கள். கால காலமாக, தலைமுறை தலைமுறையாக, அவர்கள் தங்கள் “பரிசுத்தமான மற்றும் மீற முடியாத” கடமையைத் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களைத் தொடக்கூட யாரும் துணிவதில்லை; ஒருவர் கூட அவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளத் துணிவதில்லை. அவர்கள் கால காலமாக மற்றவர்களை அடக்கி ஆண்டு வருவதனால் தேவனுடைய வீட்டில் “ராஜாக்கள்” ஆக மாறி கட்டுப்பாடற்றவர்களாக செயல்படுகிறார்கள். இந்த பிசாசுகளின் கூட்டம் ஒன்றாக கைகோர்த்து எனது கிரியையை அழிக்க எத்தனிக்கிறது; இந்த உயிருள்ள பிசாசுகள் என் கண் முன்னே இருப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? பாதி கீழ்ப்படிதல் உள்ளவர்களும்கூட கடைசி வரை தொடர்ந்து பயணிக்க இயலாது. இன்னும் மோசமாக இந்த கொடுங்கோலர்கள் தங்கள் இருதயங்களில் சிறிதளவு கூட கீழ்ப்படிதல் இல்லாமல் இருக்கிறார்கள்! மனுஷன் தேவனை எளிதாக அடைவதில்லை. ஜனங்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தினாலும், அவர்களால் அதில் ஒரு பகுதியை மாத்திரமே அடைந்து, இறுதியில் தங்களை பரிபூரணமாக்க அனுமதிக்க இயலும். தேவனுடைய கிரியையை அழிக்க முற்படும் பிரதான தேவதூதனின் பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்? தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு அவர்களிடம் சிறிதளவு நம்பிக்கை கூட இல்லையா? ஜெயத்தின் கிரியையைச் செய்வதில் எனது நோக்கம் ஜெயத்தின் நிமித்தமாக ஜெயம் கொள்வது மட்டுமின்றி, நீதியையும் அநீதியையும் வெளிப்படுத்துவதற்காகவும், மனுஷனின் தண்டனைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்காகவும், துன்மார்க்கரைக் கடிந்துகொள்வதற்காகவும் ஜெயம் கொள்வதாகும், அத்துடன் விருப்பத்துடன் கீழ்ப்படிபவர்களை பரிபூரணமாக்கும் பொருட்டும் ஜெயம் கொள்வதாகும். இறுதியில், எல்லோரும் தங்கள் வகைக்கு ஏற்ப பிரிக்கப்படுவார்கள், மேலும் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் தங்களது எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் கீழ்ப்படிதலுடன் நிறைந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். இதற்கிடையில், தங்கள் ஒவ்வொரு செயலையும் கலகமாகக் கொண்டிருப்பவர்கள் தண்டிக்கப்பட்டு, நித்திய சாபமான அக்கினியில் எரிக்கப்படுவதற்கு அனுப்பப்படுவார்கள். அந்தக் காலம் வரும்போது, கடந்த காலங்களில் அந்த “வீரதீர, வெல்லமுடியாத கதாநாயகர்கள்” இழிவான மற்றும் புறக்கணிக்கப்பட்ட “பலவீனமான மற்றும் வலுவற்ற கோழைகளாக” மாறிப்போவார்கள். இது மாத்திரமே தேவனுடைய நீதியின் ஒவ்வொரு அம்சத்தையும், மனுஷனால் அவமதிக்கமுடியாத அவரது மனநிலையையும் எடுத்துரைக்க இயலும், மேலும் இதனால் மாத்திரமே என் இருதயத்திலுள்ள வெறுப்பைத் தணிக்க இயலும். இது முற்றிலும் நியாயமானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா?

பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவிப்பவர்கள் அல்லது இந்த ஓட்டத்தில் உள்ள எல்லோராலும் ஜீவனைப் பெற இயலாது. ஜீவன் என்பது சகல மனுஷர்களாலும் பகிரப்படும் ஒரு பொதுச் சொத்து அல்ல, மேலும் மனநிலையின் மாற்றங்களை சகல ஜனங்களாலும் எளிதில் அடைய இயலாது. தேவனுடைய கிரியைக்கு ஒப்புக்கொடுப்பது நிஜமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும், அதன்படி வாழவும் வேண்டும். மேலோட்டமான கீழ்ப்படிதலினால் மாத்திரம் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாது, ஒருவருடைய மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் தேவனுடைய வார்த்தையின் மேலோட்டமான அம்சங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமானது அல்ல. தேவனுக்குக் கீழ்ப்படிவதும் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதும் ஒன்றுதான். தேவனுக்கு மாத்திரமே அடிபணிந்து, அவருடைய கிரியைக்கு கீழ்ப்படியாதவர்களை கீழ்ப்படிதலுள்ளவர்கள் என்று கருத இயலாது, இவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படியாமல் வெளிப்புறமாக துதிபாடுகிறவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிகிறவர்கள் அனைவருமே கிரியையின் மூலம் ஆதாயப்படவும், தேவனுடைய மனப்பாங்கையும் கிரியையையும் குறித்த புரிதலைப் பெறவும் இயலும். இதுபோன்றவர்கள் மாத்திரமே தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்றவர்களால் புதிய கிரியையின் மூலம் புதிய அறிவைப் பெறவும், புதிய மாற்றங்களுக்கு உட்படவும் இயலும். இந்த ஜனங்கள் மாத்திரமே தேவனால் பாராட்டப்படுகிறார்கள், இந்த ஜனங்கள் மாத்திரமே பரிபூரணமாக்கப்படுகிறார்கள், இவர்களுடைய மனநிலைகள் தான் மாறுகின்றன. தேவனால் பாராட்டப்படுகிறவர்கள்தான் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கிரியைக்கும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே சரியானவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே தேவனை உண்மையாக விரும்புகிறார்கள், தேவனை உண்மையாக நாடுகிறார்கள். தேவன் மீதுள்ள தங்கள் விசுவாசத்தைத் தங்கள் வாய் வார்த்தைகளால் மாத்திரமே பேசிவிட்டு, உள்ளுக்குள் அவரைச் சபிப்பவர்கள் வேடந்தரித்த, பாம்பின் விஷத்தைக் கொண்டிருக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் எல்லோரைக் காட்டிலும் துரோகிகளாக இருக்கிறார்கள். இப்போது இல்லையென்றாலும் ஒருநாள் இந்தக் கயவர்கள் தங்கள் கீழ்த்தரமான வேடங்களைக் களைவார்கள். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை அல்லவா? துன்மார்க்கர்கள் எப்போதும் துன்மார்க்கர்களாகவே இருப்பார்கள், அவர்கள் ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்பு நாளிலிருந்து தப்பிக்க மாட்டார்கள். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள், தேவனுடைய கிரியை முடிவுக்கு வரும்போது அவர்கள் வெளிப்படுவார்கள். துன்மார்க்கர்களில் ஒருவனும் நீதிமானாக கருதப்படமாட்டான், நீதிமான்களில் ஒருவரும் துன்மார்க்கராகக் கருதப்படமாட்டார்கள். நான் எந்தவொரு மனுஷனையும் தவறாகக் குற்றஞ்சாட்டலாமா?

உங்கள் வாழ்க்கை முன்னேறும்போது, நீங்கள் எப்போதும் புதிய அணுகுமுறை மற்றும் புதிய, மிகவும் அதிகமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், இது நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆழமாக வளர்ச்சியடையும். இதற்குள்தான் சகல மனுஷர்களும் உட்பிரவேசிக்க வேண்டும். உரையாடுதல், பிரசங்கங்களைக் கேட்டல், தேவனுடைய வார்த்தையைத் தியானித்தல் அல்லது சில விஷயங்களைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலம், நீங்கள் புதிய அறிவையும் புதிய ஞானத்தையும் பெறுவீர்கள், மேலும் பழைய மற்றும் பழங்கால விதிகளுக்குள் வாழ மாட்டீர்கள்; நீங்கள் எப்போதும் புதிய ஒளியில் வாழ்வீர்கள், மேலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் செல்லமாட்டீர்கள். அதாவது சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதே இதற்குரிய அர்த்தமாகும். சில மேலோட்டமான அளவில் விலைக்கிரயம் கொடுப்பது வேலைக்கு ஆகாது; நாளுக்கு நாள், தேவனுடைய வார்த்தை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறது, மேலும் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள் தோன்றுகின்றன, மனுஷனும் ஒவ்வொரு நாளும் புதிதான ஒன்றிற்குள் பிரவேசிக்க வேண்டும். தேவன் பேசும்போது, அவர் பேசிய சகலத்திலும் அவர் பலனைக் கொண்டுவருவார், மேலும் உங்களால் பின்பற்ற இயலவில்லை என்றால், நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள். உங்கள் ஜெபங்களில் நீங்கள் ஆழமாகச் செல்ல வேண்டும்; தேவனுடைய வார்த்தையைப் புசித்துக் குடிப்பதில் இடைவெளிவிட்டு நடக்கக்கூடாது. நீங்கள் பெறும் ஞானத்தையும் வெளிச்சத்தையும் ஆழப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களும் கற்பனைகளும் படிப்படியாக குறைய வேண்டும். உங்கள் விவேகத்தையும் நீங்கள் பலப்படுத்த வேண்டும், நீங்கள் எதை எதிர்கொண்டாலும், அதைப் பற்றிய உங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உங்கள் சொந்தக் கண்ணோட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆவியில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் வெளிப்புற விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் மற்றும் எந்தவொரு பிரச்சினையின் மையத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் இந்த விஷயங்கள் இல்லையென்றால், நீங்கள் திருச்சபையை எவ்வாறு வழிநடத்த இயலும்? எந்தவொரு யதார்த்தமும் இல்லாமலும், நடைமுறையில் நடக்காமலும் நீங்கள் எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றி மாத்திரமே பேசுவீர்களேயானால், உங்களால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்க இயலும். புதிய விசுவாசிகளுடன் பேசும்போது இது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படலாம், ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு, புதிய விசுவாசிகள் சில உண்மையான அனுபவங்களைப் பெற்றிருக்கும்போது, உங்களால் அவர்களுக்கு அவற்றை இனிமேலும் கொடுக்க இயலாது. பிறகு எப்படி நீங்கள் தேவன் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவராக இருப்பீர்கள்? புதிய ஞானம் இல்லாமல், உங்களால் செயல்பட இயலாது. புதிய ஞானம் இல்லாதவர்கள் உணரத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்றவர்கள் புதிய ஞானத்தையோ அல்லது புதிய அனுபவ உணர்வையோ ஒருபோதும் பெற மாட்டார்கள். மேலும், ஜீவனைக் கொடுக்கும் விஷயத்தில், அவர்களால் தங்கள் செயல்பாட்டை ஒருபோதும் செய்ய இயலாது, அவர்களால் தேவன் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானவராக மாறவும் இயலாது. இவ்விதமான நபர் ஒன்றிற்கும் பிரயோஜனமில்லாதவர், ஊதாரியாக மட்டுமே காணப்படுகிறார். உண்மையைச் சொன்னால், இதுபோன்றவர்கள் பணியில் தங்கள் செயல்களைச் செய்ய முற்றிலும் தகுதியில்லாதவர்கள், இவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவர்கள். அவர்கள் தங்கள் செயல்பாட்டைச் செய்யத் தவறுவது மட்டுமின்றி, அவர்கள் திருச்சபைக்கு உண்மையிலேயே தேவையில்லாத அதிக சிரமத்தைக் கொடுக்கின்றனர். இந்த “வணக்கத்திற்குரிய வயதானவர்கள்” இனிமேலும் நீங்கள் காணாதவாறு திருச்சபையை விட்டு அவசரமாக வெளியேற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதுபோன்ற ஜனங்களிடம் புதிய கிரியையைப் பற்றிய புரிதல் இருப்பதில்லை, அவர்கள் முடிவில்லாத கருத்துக்களால் நிரப்பப்பட்டிருக்கின்றனர். அவர்கள் திருச்சபையில் எந்த செயல்பாட்டையும் செய்வதில்லை; மாறாக, அவர்கள் எல்லா இடங்களிலும் தீங்குகளையே செய்கிறார்கள் மற்றும் எதிர்மறையானவற்றையே பரப்புகிறார்கள், திருச்சபையில் எல்லா விதமான தவறான நடத்தைகளிலும் தொந்தரவுகளிலும் ஈடுபடுகிறார்கள், இதனால் பாகுபாடு இல்லாதவர்களைக் குழப்பத்திற்குள்ளும் சீர்கேடான நிலைக்குள்ளும் தள்ளுகிறார்கள். இந்த உயிருள்ள பிசாசுகள், இந்தப் பொல்லாத ஆவிகள் நிமித்தமாக திருச்சபை பாழாகிவிடாதவாறு விரைவிலேயே திருச்சபையை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இன்றைய கிரியைக்குப் பயப்படாமல் இருக்கலாம், ஆனால் நாளைய தினத்தின் நீதியான ஆக்கினைக்குப் பயப்படமாட்டீர்களா? திருச்சபைக்குப் பாரமான ஏராளமான ஜனங்களும், தேவனுடைய வழக்கமான கிரியைக்கு இடையூறு செய்ய முற்படும் ஏராளமான ஓநாய்களும் உள்ளனர். இந்த விஷயங்கள் அனைத்தும் பிசாசுகளின் ராஜாவால் அனுப்பப்பட்ட பிசாசுகளாகவும், ஒன்றுமறியாத ஆட்டுக்குட்டிகளை விழுங்க முயற்சிக்கும் பொல்லாத ஓநாய்களுமாக இருக்கின்றன. இந்தப் பெயரளவிலான ஜனங்கள் வெளியேற்றப்படவில்லை என்றால், அவர்கள் திருச்சபையில் ஒட்டுண்ணிகளாகவும் காணிக்கைகளை விழுங்கும் பூச்சிகளாகவும் மாறிப்போவார்கள். இப்பொழுது இல்லாவிட்டாலும், இந்த அருவருப்பான, அலட்சியமான, இழிவான மற்றும் வெறுக்கத்தக்க மாமிசப்புழுக்கள் தண்டிக்கப்படும் ஒரு நாள் வரும்!

முந்தைய: தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்

அடுத்த: ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக