ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்

ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனைப் புறம்பாக்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், புறம்பாக்கப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பதற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். “வார்த்தைகள்” என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார். ராஜ்யத்தின் யுகம் முழுவதும், தேவன் தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், தன்னுடைய கிரியையின் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் அதிசயங்களைச் செய்வதில்லை அல்லது அற்புதங்களைச் செய்வதில்லை, ஆனால் வார்த்தைகளின் மூலமாகவே அவருடைய கிரியையைச் செய்கிறார். இந்த வார்த்தைகளால், மனுஷன் ஊட்டமளிக்கப்படுகிறான், வழங்கப்படுகிறான், மற்றும் அறிவையும் உண்மையான அனுபவத்தையும் பெறுகிறான். வார்த்தையின் யுகத்தில், மனுஷன் விதிவிலக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளான். அவன் எந்தவிதமான உடல் வலியையும் அனுபவிப்பதில்லை, தேவனுடைய வார்த்தைகளின் ஏராளமான வழங்கலை அனுபவிக்கிறான்; கண்மூடித்தனமாகத் தேடவோ அல்லது கண்மூடித்தனமாகப் பயணிக்கவோ தேவையில்லாமல், அவன் தேவன் தோன்றுவதைக் காண்கிறான், அவர் தனது சொந்த வாயால் பேசுவதைக் கேட்கிறான், அவர் வழங்குவதைப் பெறுகிறான், அவர் தனிப்பட்ட முறையில் அவருடைய கிரியையைச் செய்வதை கவனிக்கிறான். இவை கடந்த யுகங்களின் ஜனங்களால் அனுபவிக்க முடியாத விஷயங்கள், இவை ஒருபோதும் பெற முடியாத ஆசீர்வாதங்கள்.

மனுஷனைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் தீர்மானித்துள்ளார், அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பேசினாலும், அவை அனைத்தையும் ஜனங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே பேசுகிறார். ஆவியானவரின் கண்ணோட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளை ஜனங்கள் புரிந்து கொள்வது கடினம்; அதன்படி நடப்பதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதற்கான வழி அவர்களுக்கு இல்லை, அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக உள்ளது. தேவனின் கிரியை வெவ்வேறு தாக்கங்களை அடைகிறது, மற்றும் கிரியையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதில் அவருக்கு அவருடைய நோக்கம் இருக்கிறது. மேலும், அவர் வெவ்வேறு கோணங்களிலிருந்துப் பேசுவது கட்டாயமாகும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே அவரால் மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும். ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே அவர் தனது குரலை எழுப்பினால், தேவனின் கிரியையின் இந்த நிலையைப் பரிபூரணப்படுத்த எந்த வழியும் இருக்காது. அவர் பேசும் தொனியில் இருந்து, இந்த நபர்களை பூரணப்படுத்துவதில் அவர் உறுதியாக இருப்பதை நீ காணலாம். ஆகவே, பரிபூரணப்படுத்தப்பட விரும்பும் ஒவ்வொருவருக்கும் முதல் படி என்னவாக இருக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தேவனின் கிரியையை அறிந்திருக்க வேண்டும். இன்று, தேவனின் கிரியையில் ஒரு புதிய முறை தொடங்கியிருக்கிறது; யுகம் மாறியுள்ளது, தேவன் கிரியை செய்யும் முறையும் மாறியுள்ளது, தேவன் பேசும் முறையும் விசேஷித்த விதமாக உள்ளது. இன்று, அவருடைய கிரியையின் முறை மட்டும் மாறாமல், யுகமும் மாறியுள்ளது. இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இது அன்பான தேவனின் யுகமாகவும் உள்ளது. இது ஆயிரவருட அரசாட்சியின் யுகத்தின் முன்னறிவிப்பாகும்—இது வார்த்தையின் யுகமும்கூட, இதில் தேவன் பரிபூரண மனுஷனுடன் பேசுவதற்கு பல வழிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனுஷனுக்கு வழங்குவதற்காக வெவ்வேறு கோணங்களில் பேசுகிறார். ஆயிரவருட அரசாட்சியின் யுகத்திற்குள் நுழைந்தவுடன், தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்க வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குவார், மனுஷனை வாழ்வின் யதார்த்தத்திற்குள் நுழைய அனுமதிப்பார், அவனைச் சரியானப் பாதையில் கொண்டு செல்வார். தேவனின் கிரியையின் பல படிகளை அனுபவித்த மனுஷன், தேவனின் கிரியை மாறவில்லை, ஆனால் அது இடைவிடாமல் உருவாகி, ஆழமடைகிறது என்பதைக் கண்டிருக்கிறான். ஜனங்கள் நீண்ட காலமாக அதனை அனுபவித்த பிறகு, கிரியைத் தொடர்ந்து சுழன்று, மீண்டும் மீண்டும் மாறுகிறது. அது எவ்வளவு மாறினாலும், மனிதகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கான தேவனின் நோக்கத்திலிருந்து அது ஒருபோதும் விலகாது. பத்தாயிரம் மாற்றங்களின் மூலம் கூட, அது ஒருபோதும் அதன் உண்மையான நோக்கத்திலிருந்து விலகாது. தேவனின் கிரியையின் முறை எவ்வாறு மாறினாலும், இந்தக் கிரியை ஒருபோதும் சத்தியத்திலிருந்து அல்லது ஜீவனிலிருந்து விலகாது. கிரியையை மேற்கொள்ளும் முறையில் செய்யப்படும் மாற்றங்கள், கிரியையின் வடிவம், மற்றும் தேவன் பேசும் கண்ணோட்டம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதைத்தான் உள்ளடக்கியிருந்தாலும், தேவனின் கிரியையின் மைய நோக்கம் மாறாது. ஒரு பலனை அடைவதற்காக தேவனின் குரலில் மற்றும் அவரது கிரியையின் முறை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குரலின் தொனியில் மாற்றம் என்பது கிரியையின் பின்னால் உள்ள நோக்கம் அல்லது மாற்றத்தைக் குறிக்கவில்லை. ஜீவனைத் தேடுவதற்காகவே ஜனங்கள் தேவனைப் பிரதானமாக விசுவாசிக்கிறார்கள்; நீ தேவனை விசுவாசித்த போதிலும், ஜீவனைத் தேடவில்லை அல்லது சத்தியத்தையோ அல்லது தேவனின் அறிவையோ நாடவில்லை என்றால், அது தேவன் மீதான விசுவாசம் அல்ல! ராஜாவாக இருப்பதற்கு ராஜ்யத்திற்குள் நுழைய இன்னும் முற்படுவது யதார்த்தமானதா? ஜீவனைத் தேடுவதன் மூலம் தேவன் மீதான உண்மையான அன்பை அடைவது—இது மட்டுமே யதார்த்தம்; சத்தியத்தின் நாட்டம் மற்றும் நடைமுறை—இவை அனைத்தும் யதார்த்தம். தேவனின் வார்த்தைகளை வாசிப்பதால், இந்தச் சொற்களை அனுபவிப்பதால், நிஜமான அனுபவத்தின் மத்தியில் நீங்கள் தேவனைப் பற்றிய அறிவைப் பெறுவீர்கள், உண்மையிலேயே பின்தொடர்வது என்றால் இதுதான் அர்த்தம்.

இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இந்தப் புதிய யுகத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாய் என்பது தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது வாழ்வின் யதார்த்தமாகியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது. தேவனின் வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும் தெரியப்படுத்தப்படுகின்றன, இதன் மூலம், இறுதியில், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளின் உலகில் வாழ்வார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொருவரையும் உள்ளிருந்து தெளியச் செய்யும் மற்றும் பிரகாசமாக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் அக்கறையற்றவனாகவும், அவருடைய வார்த்தைகளில் ஆர்வம் காட்டாமலும் இருந்தால், உனது நிலை தவறானது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் வார்த்தையின் யுகத்திற்குள் நுழைய முடியாவிட்டால், பரிசுத்த ஆவியானவர் உன்னுள் கிரியை செய்ய மாட்டார்; நீ இந்த யுகத்திற்குள் நுழைந்திருந்தால், அவர் தம்முடைய கிரியையைச் செய்வார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு வார்த்தையின் யுகத்தின் தொடக்கத்தில் நீ என்ன செய்ய முடியும்? இந்த யுகத்திலும், உங்களுக்கு மத்தியில், தேவன் பின்வரும் உண்மையை நிறைவேற்றுவார்: ஒவ்வொரு மனுஷனும் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வார்கள், சத்தியத்தைக் கடைபிடிக்க அவர்களால் முடியும், தேவனை ஆர்வத்துடன் நேசிப்பார்கள்; எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளை ஒரு அஸ்திவாரமாகவும், அவர்களின் யதார்த்தமாகவும் பயன்படுத்துவார்கள், மேலும் தேவனை ஆராதிக்கும் இருதயங்களைக் கொண்டிருப்பார்கள்; தேவனின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதன் மூலம், மனுஷன் தேவனுடன் சேர்ந்து ராஜரீக வல்லமையைப் பயன்படுத்துவான். இது தேவனால் அடைய வேண்டிய கிரியை. தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் நீ இருக்க முடியுமா? இன்று, அவருடைய வார்த்தைகளை வாசிக்காமல் ஓரிரு நாட்கள் கூட இருக்க முடியாது என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும், நேரம் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றைக் கேட்பது போதுமானதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு அளிக்கும் உணர்வு இதுதான், மற்றும் அவர்களை ஏவத் துவங்கியிருக்கும் வழியும் இதுதான். அதாவது, தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழையும்படி அவர் வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆளுகிறார். தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் ஒரேயொரு நாள் கழிந்தால், நீங்கள் இருட்டையும் தாகத்தையும் உணர்வீர்கள், அதைத் தாங்க முடியாது, இது நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிறாய் என்பதையும், அவர் உன்னிடமிருந்து விலகவில்லை என்பதையும் காட்டுகிறது. அப்போது தான் நீ இந்தப் பிரவாகத்தில் இருப்பவனாவாய். இருப்பினும், தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் ஓரிரு நாட்கள் இருந்த பிறகு, நீ எதையும் உணரவில்லை என்றால், உனக்குத் தாகம் இல்லை, மற்றும் நீ ஏவப்படவே இல்லை, பரிசுத்த ஆவியானவர் உன்னிடமிருந்து விலகி விட்டார் என்பதை இது காட்டுகிறது. இதன் அர்த்தம், உனக்குள் உள்ள நிலையில் ஏதோ தவறு இருக்கிறது; நீ வார்த்தையின் யுகத்திற்குள் நுழையவில்லை, பின்மாற்றமடைந்தவர்களில் நீயும் ஒருவனே. ஜனங்களை ஆள்வதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடித்தால், நன்றாக உணர்வாய், நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ பின்பற்றுவதற்கு வழி இல்லை. தேவனின் வார்த்தைகள் ஜனங்களின் போஜனமாகவும், அவர்களை இயக்கும் சக்தியாகவும் மாறும். “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்தேயு 4:4). என்று வேதாகமம் சொல்கிறது. இன்று, தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிப்பார், இந்த உண்மையை அவர் உங்களிடம் நிறைவேற்றுவார். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் பல நாட்கள் இருந்திருக்கலாம், ஆயினும் அவர்களால் வழக்கம் போல் புசிக்கவும் வேலை செய்யவும் முடியும், ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை? இந்த யுகத்தில், தேவன் அனைவரையும் ஆள வார்த்தைகளைப் பிரதானமாகப் பயன்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் மூலம், மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுகிறான், பின்னர் இறுதியாக ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறான். தேவனின் வார்த்தைகளால் மட்டுமே மனுஷனின் ஜீவனை வழங்க முடியும், மேலும் தேவனின் வார்த்தைகளால் மட்டுமே, குறிப்பாக ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷனுக்கு வெளிச்சத்தையும் கடைபிடிப்பதற்கான ஒரு பாதையையும் வழங்க முடியும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து நீ விலகிச் செல்லாத வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்தால், தேவனால் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியும்.

வாழ்வின் நாட்டம் என்பது அவசரப்பட வேண்டிய ஒன்றல்ல; நம் வாழ்வின் வளர்ச்சி என்பது ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. தேவனின் கிரியை இயல்பானது மற்றும் நடைமுறைக்குரியது, மேலும் அது கட்டாயமாக ஒரு செயல்முறைக்கு உள்ளாகும். சிலுவையில் அறையப்பட்ட தனது கிரியையை நிறைவு செய்வதற்கு மனுஷ ரூபமெடுத்த இயேசுவுக்கு முப்பத்து மூன்றரை ஆண்டுகள் ஆனது—ஆகவே மனுஷனைச் சுத்திகரித்து, அவனுடைய வாழ்வை மாற்றியமைப்பது, மிகவும் கடினமான வேலையா? தேவனை வெளிக்கொணரும் ஒரு சாதாரண மனுஷனை உருவாக்குவதென்பது எளிதான காரியமல்ல. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் பிறந்தவர்கள், மோசமானத் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியை நீண்டகாலத்திற்குத் தேவைப்படும் ஜனங்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். எனவே முடிவுகளைப் பார்க்க பொறுமையிழக்காதீர்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் நீ ஆர்வமுடன் இருக்க வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நீ அவருடைய வார்த்தைகளை வாசித்து முடித்ததும், அவற்றை நீ உண்மையாகக் கடைபிடிக்க முடியும், தேவனுடைய வார்த்தைகளில் அறிவு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் ஞானம் ஆகியவற்றில் வளர வேண்டும். இதன் மூலம், நீ உனக்கே தெரியாமல் மாறிவிடுவாய். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது, குடிப்பது, அவற்றை வாசிப்பது, அவற்றை அறிந்து கொள்வது, அவற்றை அனுபவிப்பது மற்றும் அவற்றைக் கடைபிடிப்பது ஆகியவற்றை நீ உனது கொள்கையாக எடுத்துக் கொள்ள முடிந்தால், நீ உனக்கே தெரியாமல் முதிர்ச்சியடைவாய். தேவனின் வார்த்தைகளைப் படித்த பிறகும் அவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. உனக்கு என்ன அவசரம்? நீ ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது, நீ அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை தனது பெற்றோரை ஆதரிக்கவோ கனப்படுத்தவோ முடியாது என்று கூறுமா? உனது தற்போதைய நிலை எவ்வளவு பெரியது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். உன்னால் கடைபிடிக்க முடிந்தவற்றைக் கடைபிடி, தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் ஒருவனாக இருப்பதைத் தவிர்த்திடு. தேவனின் வார்த்தைகளைப் புசி, குடி. இனிமேல் அதனை உனது கொள்கையாக எடுத்துக் கொள். தற்போதைக்கு தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியுமா என்பது பற்றிக் கவலைப்படாதே. அதை இன்னும் ஆராய வேண்டாம். தேவனின் வார்த்தைகள் உன்னிடம் வரும்போது அவற்றைப் புசித்துக் குடி, மேலும் தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்துவதில் உறுதியாக இருப்பார். இருப்பினும், அவருடைய வார்த்தைகளை நீ புசிப்பதற்கும் குடிப்பதற்கும் ஒரு கொள்கை உள்ளது. கண்மூடித்தனமாக அவ்வாறு செய்ய வேண்டாம். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும், ஒருபுறம், நீ தெரிந்து கொள்ள வேண்டிய சொற்களைத் தேடு—அதாவது, தரிசனங்களுடன் தொடர்புடையவற்றைத் தேடு—மறுபுறம், நீ எதை நிஜமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தேடு—அதாவது நீ எதற்குள் நுழைய வேண்டும் என்று தேடு. ஒரு அம்சம் அறிவோடு தொடர்புடையது, மற்றொன்று நுழைவதோடு தொடர்புடையது. நீ எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நீ எதைக் கடைபிடிக்க வேண்டும் என இரண்டையும் நீ புரிந்துகொண்டவுடன் தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று உனக்குத் தெரியும்.

முன்னோக்கிச் செல்லும்போது, தேவனின் வார்த்தைகளைப் பேசுவது என்பதே நீ பேசுவதன் கொள்கையாக இருக்க வேண்டும். சாதாரணமாக, நீங்கள் ஒன்றாக வரும்போது, தேவனின் வார்த்தைகளைப் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட வேண்டும், தேவனின் வார்த்தைகளை உங்கள் உரையாடல்களின் உள்ளடக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், அவற்றை எவ்வாறு கடைபிடிக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றி பேச வேண்டும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ இசைந்து இருக்கும்வரை பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். தேவனின் வார்த்தைகளின் உலகத்தை அடைய மனுஷனின் ஒத்துழைப்பு தேவை. நீ இதில் நுழையவில்லை என்றால், தேவனுக்கு கிரியை செய்ய வழி இருக்காது; நீ உனது வாயை மூடிக்கொண்டு, அவருடைய வார்த்தைகளைப் பற்றி பேசாவிட்டால், அவரிடம் உன்னைப் பிரகாசிக்கச் செய்ய வழி இருக்காது. நீ வேறுவிதமாக ஆக்கிரமிக்கப்படாத போதெல்லாம், தேவனின் வார்த்தைகளைப் பற்றி பேசு, வெறும் வெட்டி அரட்டையில் ஈடுபடாதே! உனது வாழ்வு தேவனின் வார்த்தைகளால் நிரம்பட்டும்—அப்போதுதான் நீ பக்தியுள்ள விசுவாசியாக இருப்பாய். உனது ஐக்கியம் மேலோட்டமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆழமற்ற தன்மை இல்லாமல் ஆழம் இருக்க முடியாது. ஒரு செயல்முறை இருக்க வேண்டும். உனது பயிற்சியின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும், மேலும் தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு திறம்பட புசிப்பது, குடிப்பது என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஆய்வின் இடைவெளிக்குப் பிறகு, நீ தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழைவாய். நீ ஒத்துழைக்கத் தீர்மானித்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பெற முடியும்.

தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் குடித்தல் போன்ற கொள்கைகளில் ஒன்று அறிவுடன் தொடர்புடையது, மற்றொன்று பிரவேசத்துடன் தொடர்புடையது. எந்த வார்த்தைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்? தரிசனங்களுடன் தொடர்புடைய சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் (அதாவது, தேவனின் கிரியை இப்போது எந்த யுகத்தில் நுழைந்துள்ளது, தேவன் இப்போது எதனை அடைய விரும்புகிறார், மனுஷ ரூபமெடுத்தல் என்றால் என்ன, மற்றும் பல; இவை அனைத்தும் தரிசனங்களுடன் தொடர்புடையவை). மனுஷன் நுழைய வேண்டிய பாதையின் பொருள் என்ன? மனுஷன் கடைபிடிக்க வேண்டிய, நுழைய வேண்டிய தேவனின் வார்த்தைகளை இது குறிக்கிறது. மேற்கூறியவை தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் குடித்தலின் இரண்டு அம்சங்களாகும். இப்போதிலிருந்து, தேவனுடைய வார்த்தைகளை இந்த வழியில் புசியுங்கள். தரிசனங்களைப் பற்றிய அவருடைய வார்த்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதல் இருந்தால், எல்லா நேரத்திலும் தொடர்ந்து வாசித்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் இருதயத்தை தேவனை நோக்கி எப்படித் திருப்புவது, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை எவ்வாறு அமைதிப்படுத்துவது, மாம்சத்தை எப்படி அடக்குவது போன்ற பல வார்த்தைகளைப் புசிப்பதும் குடிப்பதும் முதன்மையானது. இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று தெரியாமல், உண்மையான ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், முக்கியமானது எது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், ஐக்கியமானது விடுதலையாக மாறும், எந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டாலும், நீங்கள் யதார்த்தத்துடன் ஐக்கியப்படவும் அதனைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். தேவனின் வார்த்தைகளுடன் ஐக்கியப்பட்டிருக்கும்போது, உனக்கு எந்த யதார்த்தமும் இல்லை என்றால், முக்கியமானது எது என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை, இது தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் உனக்குத் தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. சிலருக்கு தேவனின் வார்த்தைகளை வாசிப்பது சோர்வடையச் செய்வதைக் காணலாம், இது சாதாரண நிலை அல்ல. இயல்பானது எதுவென்றால் தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்பது, எப்போதும் அவற்றிற்காகத் தாகம்கொள்வது, மற்றும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகளை நன்மை செய்வதாகக் கண்டறிவது ஆகும். இப்படித் தான் உண்மையிலேயே நுழைந்த ஒருவர் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் செய்கிறார். தேவனின் வார்த்தைகள் நடைமுறைக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதாக மற்றும் மனுஷன் துல்லியமாக நுழைய வேண்டியது இதற்குள் தான் என்று நீ உணர்ந்தால்; அவருடைய வார்த்தைகள் மனுஷனுக்குப் பெரிதும் உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மற்றும் அவை மனுஷனின் வாழ்வின் ஏற்பாடாக இருப்பதாக நீ உணர்ந்தால்—பரிசுத்த ஆவியானவர் இந்த உணர்வை உங்களுக்குத் தருகிறார், உங்களை ஏவுகிறவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை புரிகிறார் என்பதையும், தேவன் உன்னிடமிருந்து விலகிச் செல்லவில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது. சிலர், தேவன் எப்பொழுதும் பேசுவதைப் பார்த்து, அவருடைய வார்த்தைகளால் சோர்வடைந்து, அவற்றை வாசித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த விளைவும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள்—இது ஒரு சாதாரண நிலை அல்ல. யதார்த்தத்திற்குள் நுழைய தாகம் கொண்ட ஒரு இருதயம் அவர்களுக்கு இல்லை, அத்தகைய நபர்கள் பரிபூரணமடைவதற்குத் தாகம் கொண்டிருக்க மாட்டார்கள் மற்றும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகம் கொள்ளாததை நீ காணும்போதெல்லாம், நீ ஒரு சாதாரண நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது. கடந்த காலங்களில், தேவன் உன்னிடமிருந்து விலகிவிட்டாரா என்பதை நீ உள்ளுக்குள் அமைதியாக இருக்கிறாயா, மற்றும் நீ இன்பத்தை அனுபவித்தாயா என்பதை வைத்து நீ தீர்மானிக்க முடியும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகமாக இருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது யதார்த்தமாக இருக்கிறதா, நீ விசுவாசமுடையவனா, தேவனுக்காக உன்னால் முடிந்த அனைத்தையும் உன்னால் செய்ய முடிகிறதா என்பதே இப்போது முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தால் மனுஷன் தீர்மானிக்கப்படுகிறான். தேவன் தம்முடைய வார்த்தைகளை மனிதகுலம் முழுவதற்கும் வழிநடத்துகிறார். நீ அவற்றைப் படிக்கத் தயாராக இருந்தால், அவர் உன்னைப் பிரகாசமாக்குவார், ஆனால் நீ தயாராக இல்லையென்றால், அவர் அவ்வாறு செய்ய மாட்டார். நீதிக்காக பசியும் தாகமும் உள்ளவர்களை தேவன் பிரகாசமாக்குகிறார், தன்னைத் தேடுகிறவர்களை அவர் பிரகாசமாக்குகிறார். தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகும் தேவன் அவர்களைப் பிரகாசிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நீ இந்த வார்த்தைகளை எவ்விதமாக வாசித்தாய்? குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் ஒரு மனுஷன் பூக்களைப் பார்ப்பதைப் போல் நீ அவருடைய வார்த்தைகளைப் படித்தால், மற்றும் யதார்த்தத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்றால், தேவன் உன்னை எவ்வாறு பிரகாசிக்கச் செய்வார்? தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாத ஒருவனை அவரால் எப்படிப் பரிபூரணப்படுத்த முடியும்? நீ தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாவிட்டால், உனக்கு சத்தியமும் இருக்காது யதார்த்தமும் இருக்காது. அவருடைய வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கருதினால், நீ சத்தியத்தைக் கடைபிடிக்க முடியும், அப்போதுதான் நீ யதார்த்தத்தைப் பெறுவாய். இதனால்தான் நீ அலுவலாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ சோதிக்கப்பட்டாலும், சோதிக்கப்படாவிட்டாலும் நீ எல்லா நேரங்களிலும் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். மொத்தத்தில், தேவனின் வார்த்தைகள் மனுஷனின் ஜீவிதத்திற்கான அடித்தளமாகும். அவருடைய வார்த்தைகளிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது, ஆனால் அவர்கள் தினமும் புசிக்கும் மூன்று வேளை போஜனங்களைப் போலவே அவருடைய வார்த்தைகளையும் புசிக்க வேண்டும். தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு ஆதாயப்படுத்தப்படுவது அவ்வளவு சுலபமா? தற்போது நீ புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், தேவனின் கிரியையைப் பற்றிய புரிதல் உனக்கு இருந்தாலும் இல்லையென்றாலும், நீ தேவனின் வார்த்தைகளை முடிந்தவரை புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். இதுதான் முனைப்புடன் உட்பிரவேசிப்பதாகும். தேவனின் வார்த்தைகளை வாசித்த பிறகு, நீ உட்பிரவேசிக்கக்கூடியவற்றைக் கடைபிடிக்க துரிதப்படுத்து, உன்னால் முடியாத தருணத்திற்கு இப்போதைக்கு ஒதுக்கு. ஆரம்பத்தில் உன்னால் புரிந்து கொள்ள முடியாத தேவனின் வார்த்தைகள் பல இருக்கலாம், ஆனால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருவேளை ஒரு வருடம் கழித்து உனக்குப் புரியும். இது எப்படிச் சாத்தியம்? ஏனென்றால், ஓரிரு நாட்களில் தேவனால் ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பெரும்பாலும், நீ அவருடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, உனக்குச் சரியான வழியும் புரியாமல் போகலாம்; அந்த நேரத்தில், அவை வெறும் உரையாகத் தெரியுமே தவிர வேறெதுவாகவும் தெரியாது; நீ அவற்றைப் புரிந்துகொள்வதற்கு முன்பு அவற்றை ஒரு முறை அனுபவிக்க வேண்டும். தேவன் இவ்வளவு பேசியதால், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் நீ உன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும், பின்னர், நீ உனக்குத் தெரியாமலேயே, புரிந்துகொள்வாய், உனக்குத் தெரியாமலேயே பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் மனுஷனைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அது பெரும்பாலும் மனுஷனுக்குத் தெரியாமலேயே நடக்கிறது. நீ தாகமாக இருந்து, தேடும்போது அவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்து, வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் செயல்படும் கொள்கை என்பது நீ புசிக்கும், குடிக்கும் தேவனின் வார்த்தைகளை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு எப்போதும் மாறுபட்ட மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள்—அவர்களின் குழப்பமான சிந்தனையில், அவருடைய வார்த்தைகளை வாசித்தாலும் இல்லையென்றாலும் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று நம்புகின்றனர்—இவர்கள் யதார்த்தத்தைக் கொண்டிராதவர்கள். அத்தகைய நபரில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையோ அல்லது அவருடைய பிரகாசத்தையோ காண முடியாது. இது போன்ற ஜனங்கள் திரு. நங்குவோ உவமையைப்[அ] போல எந்தவித முயற்சியும் எடுக்காமல் நிஜமானத் தகுதிகள் இல்லாமல் பாசாங்கு செய்கிறார்கள்.

தேவனின் வார்த்தைகள் உங்கள் யதார்த்தமாக இல்லாமல், உனக்கு நிஜமான வளர்ச்சி கிடைக்காது. சோதிக்கப்படும் நேரம் வரும்போது, நீ நிச்சயமாக விழுந்துபோவாய், பின்னர் உனது நிஜமான வளர்ச்சி வெளிப்படும். ஆனால் வழக்கமாக யதார்த்தத்திற்குள் நுழைய முற்படுபவர்கள், சோதனைகளைச் சந்திக்கும்போது, தேவனின் கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வார்கள். மனசாட்சியைக் கொண்ட ஒருவர், தேவனுக்காகத் தாகம் கொண்டவர், தேவன் காட்டிய அன்பைத் திருப்பிச் செலுத்த சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். யதார்த்தம் இல்லாதவர்கள் அற்ப விஷயங்களுக்குக் கூட உறுதியாக நிற்க முடியாது. நிஜமான வளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு இடையிலான வித்தியாசம் இதுதான். அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தாலும், குடித்தாலும் சிலர் சோதனைகளுக்கு மத்தியில் உறுதியாக நிற்க முடிகிறது, மற்றவர்கள் தப்பி ஓடுகிறார்கள், இது ஏன்? வெளிப்படையான வேறுபாடு என்னவென்றால், சிலருக்கு நிஜமான வளர்ச்சி இல்லை; அவர்களின் யதார்த்தமாக சேவையளிக்க தேவனின் வார்த்தைகள் அவர்களிடம் இல்லை, அவருடைய வார்த்தைகள் அவர்களுக்குள் வேரூன்றவில்லை. அவர்கள் சோதிக்கப்பட்டதும், அவர்கள் தங்கள் பாதையின் முடிவை அடைகிறார்கள். அப்படியானால், சிலரால் சோதனைகளுக்கு மத்தியில் எப்படி உறுதியாக நிற்க முடிகிறது? ஏனென்றால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு ஒரு தரிசனத்தைக் கொண்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனின் சித்தத்தையும், அவருடைய தேவைகளையும் புரிந்துகொள்கிறார்கள், இதனால் அவர்களால் சோதனைளுக்கு மத்தியிலும் உறுதியாக நிற்க முடிகிறது. இது நிஜமான வளர்ச்சியாகும், இதுவும் ஜீவன்தான். சிலர் தேவனின் வார்த்தைகளை வாசிக்கலாம், ஆனால் அவற்றைக் கடைபிடிப்பதில்லை, அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை; அவற்றைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்கள் அவற்றைக் கடைபிடிக்க முக்கியத்துவம் அளிப்பதில்லை. தங்களின் யதார்த்தமாகச் சேவையளிக்க தேவனின் வார்த்தைகளைக் கொண்டிராதவர்கள் நிஜமான வளர்ச்சியைக் கொண்டவர்கள் அல்ல, அத்தகையவர்களால் சோதனைகளின் போது உறுதியாக நிற்க முடியாது.

தேவனுடைய வார்த்தைகள் வெளிவருகையில், நீ உடனடியாக அவற்றைப் பெற்று, அவற்றைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். நீ எவ்வளவு புரிந்துகொண்டாலும் பரவாயில்லை, நீ வேகமாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவருடைய வார்த்தைகளை புசிப்பதும் குடிப்பதும், தெரிந்துகொள்வதும் மற்றும் கடைபிடிப்பதுமேயாகும். இது உன்னால் செய்யக்கூடிய ஒன்றுதான். உனது வளர்ச்சி எவ்வளவு பெரியதாக மாறும் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் கவனம் செலுத்து. இதில் தான் மனுஷன் ஒத்துழைக்க வேண்டும். உனது ஆவிக்குரிய வாழ்க்கை முக்கியமாக தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது மற்றும் குடிப்பது மற்றும் அவற்றைக் கடைபிடிப்பது என்ற யதார்த்தத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகும். வேறு எதிலும் கவனம் செலுத்துவது உனது வேலையல்ல. திருச்சபையின் தலைவர்களால் அவர்களின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வழிகாட்ட இயல வேண்டும், இதனால் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு திருச்சபையின் தலைவரின் பொறுப்பும் இதுதான். அவர்கள் இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும், அனைவரும் தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதையும் குடிப்பதையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும், மேலும் அவருடைய வார்த்தைகளை அவர்கள் இதயங்களில் வைத்திருக்க வேண்டும். இந்த யதார்த்தத்திற்குள் நுழைவது என்பது ராஜ்யத்தின் யுகத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது. இன்று, பெரும்பாலான ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் வாழ முடியாது என்று உணர்கிறார்கள், நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவருடைய வார்த்தைகள் புதியவை என்று உணர்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் சரியானப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர் என்பதேயாகும். தேவன் தனது கிரியையைச் செய்வதற்கும் மனுஷனுக்கு வழங்குவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எல்லோரும் தேவனுடைய வார்த்தைகளுக்காக ஏங்கும்போது, தாகமாக இருக்கும்போது, மனிதகுலம் அவருடைய வார்த்தைகளின் உலகிற்குள் நுழைகிறது.

தேவன் மிகவும் அதிகமாகப் பேசியுள்ளார். நீ எவ்வளவு தெரிந்துக் கொண்டாய்? நீ எவ்வளவு நுழைந்திருக்கிறாய்? ஒரு திருச்சபைத் தலைவர் தனது சகோதர சகோதரிகளை தேவனின் வார்த்தைகளின் நிஜத்திற்குள் வழிநடத்தவில்லை என்றால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து விலகியிருப்பார்கள், மேலும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியிருப்பார்கள்! உனது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் அல்லது மேலோட்டமாக இருந்தாலும், உனது புரிதலின் அளவைப் பொருட்படுத்தாமல், அவருடைய வார்த்தைகளை எப்படிப் புசிக்கலாம், குடிக்கலாம் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், அவருடைய வார்த்தைகளில் நீ அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அவற்றைப் புசிப்பது மற்றும் குடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் இவ்வளவு பேசியிருப்பதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும் குடிக்காமலும், அல்லது தேட முயற்சிக்காமலும், அல்லது அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காமலும் இருந்தால், அதை தேவன் மீதான விசுவாசம் என்று சொல்ல முடியாது. நீ தேவனை நம்புவதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும், அவருடைய வார்த்தைகளை அனுபவிக்கவும் வேண்டும், அவருடைய வார்த்தைகளின்படி வாழவும் வேண்டும். இதை மட்டுமே தேவ நம்பிக்கை என்று அழைக்க முடியும்! நீ உனது வாயால் தேவனை நம்புகிறாய் என்று கூறினால், அவருடைய வார்த்தைகளில் எதையும் கடைபிடிக்கவோ அல்லது எந்த யதார்த்தத்தையும் உருவாக்கவோ முடியவில்லை என்றால், அது தேவனை நம்புவது என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, “பசியினைப் போக்க போஜனத்தைத் தேடுவதைப் போன்றது.” சிறிதளவு உண்மைநிலையைக்கூட சுதந்தரிக்காமல் அற்பமான சாட்சியங்கள், பயனற்ற விஷயங்கள், மற்றும் மேலோட்டமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவது: இவை தேவன் மேலுள்ள நம்பிக்கையை உள்ளடக்கவில்லை. மேலும் தேவன் மேல் நம்பிக்கை வைப்பதற்கானச் சரியான வழியைப் புரிந்துக்கொள்ளவில்லை. ஏன் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை முடிந்தவரைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும்? நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் வெறும் பரலோகத்தை மட்டும் தேடுவது, தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையாகுமா? தேவனை நம்புகிறவர் எடுக்கவேண்டிய முதற்படி என்ன தெரியுமா? எந்தப் பாதையின் மூலம் தேவன் மனுஷனைப் பூரணப்படுத்துகிறார் தெரியுமா? தேவனுடைய வார்த்தையைப் புசிக்காமல், குடிக்காமல் நீங்கள் பூரணமாக இருக்க முடியுமா? தேவனுடைய வார்த்தைகள் உங்களின் யதார்த்தமாக சேவை செய்யாமல் அவருடைய ராஜ்யத்தின் நபராகக் கருத முடியுமா? தேவனை நம்புவதன் அர்த்தம் என்ன? தேவனை விசுவாசிப்பவர்கள் குறைந்தபட்சம் வெளிப்புறத்திலாவது நன்றாக நடந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. தேவனை அறிவது, அவரது உள்நோக்கங்களை நிறைவேற்றுவது என அனைத்தும் அவர் வார்த்தைகளின் மூலம் அடையப்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தேசமும், இனமும், மதமும், துறையும் தேவனுடைய வார்த்தையினால் சுதந்தரிக்கப்படும். தேவன் நேரிடையாகப் பேசுவார், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளைத் தங்கள் கரங்களில் கொண்டிருப்பர். இதன் மூலம் மனுக்குலம் பரிபூரணமாகும். உள்ளேயும், வெளியேயும் தேவனுடைய வார்த்தைகள் முழுவதுமாய் பரவும்: மனுக்குலத்தார் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாயால் பேசுவர், தேவனின் வார்த்தைகளின்படி நடப்பர், அவர்கள் உள்ளே தேவனின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள், மீதமிருப்போர் உள்ளேயும் வெளியேயும் தேவ வார்த்தைகளுக்குள் மூழ்கியிருப்பார்கள். இவ்விதமாய் மனுக்குலத்தார் பரிபூரணப்படுத்தப்படுவர். தேவனின் உள்நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவோர் மற்றும் அவருக்கு சாட்சியாக இருக்கக்கூடியவர்கள், தேவனின் வார்த்தைகளை அவர்களின் யதார்த்தமாகக் கொண்டவர்கள் ஆவர்.

வார்த்தையின் யுகத்திற்குள்—தேவனின் ஆயிரவருட அரசாட்சிக்குள்—நுழைதல் என்னும் கிரியை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுமுதல் தேவனின் வார்த்தைகள் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட பழகிக் கொள்ளுங்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதாலும், குடிப்பதாலும் அனுபவிப்பதாலும் மட்டுமே உங்களால் தேவனின் வார்த்தைகளின்படி வாழ முடியும். மற்றவர்களை நம்பவைக்க நீ சில நடைமுறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தின்படி உன்னால் வாழ முடியாவிட்டால், ஒருவரும் மாற்றப்பட மாட்டார்கள்! தேவனால் பயன்படுத்தப்படும் அனைவரும் தேவனின் வார்த்தைப்படி வாழ முடியும். உன்னால் இந்த யதார்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால் மற்றும் தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னில் செயல்படவில்லை என்பதையும், நீ தேவனில் பூரணப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதுவே தேவனின் வார்த்தைகளின் முக்கியத்துவம். தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளும் இதயத்தை நீ கொண்டிருக்கிறாயா? தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொண்டிருப்பவர்கள், சத்தியத்திற்காகத் தாகம் கொள்கிறார்கள், மற்றும் இது போன்ற ஜனங்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில், தேவன் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து இனத்தவருக்கும் மேலும் பல வார்த்தைகளைக் கூறுவார். அவர் முதலாவது உங்கள் மத்தியில் தனது குரலைப் பேசி, உங்களைப் பரிபூரணப்படுத்துவார், பின்பு புறஜாதியினரை ஜெயங்கொள்ளும்படியாக அவர்கள் மத்தியில் தனது குரலைப் பேசுவார். அவருடைய வார்த்தைகளின் மூலம், அனைவரும் உண்மையோடும் முற்றிலுமாகவும் நம்பவைக்கப்படுவார்கள். தேவனின் வார்த்தைகள் மற்றும் அவரின் வெளிப்பாடுகளின் மூலம் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை குறைகிறது. அவன் மனிதனின் தோற்றத்தைப் பெறுகிறான், மற்றும் அவனுடைய கலகத்தனமான மனநிலை குறைகிறது. இந்த வார்த்தைகள் மனுஷன் மீது அதிகாரத்தைச் செயல்படுத்தி, தேவனின் வெளிச்சத்திற்குள் மனுஷனை ஆட்கொள்ளும். தேவன் தற்போதைய யுகத்தில் மேற்கொள்ளும் கிரியையையும், அவரின் கிரியையின் திருப்புமுனைகளையும் அவருடைய வார்த்தைகளுக்குள்ளே கண்டடையலாம். நீ அவரின் வார்த்தைகளை வாசிக்கவில்லை என்றால், உனக்கு எதுவும் புரியாது. அவருடைய வார்த்தைகளை நீயே புசிப்பதன் மூலம் மற்றும் குடிப்பதன் மூலம், மற்றும் உனது சகோதர சகோதரிகளுடனும் ஐக்கியமாய் இருப்பதன் மூலமும் உனது சொந்த அனுபவங்களின் மூலமும், நீ தேவனின் வார்த்தைகள் பற்றிய முழு அறிவைப் பெறுவாய். அப்போதுதான் உன்னால் அவற்றின் யதார்த்தத்தின்படி உண்மையாக வாழ முடியும்.

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “உவமை” என்ற வார்த்தை இல்லை.

முந்தைய: உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்

அடுத்த: தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக