மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு

நீங்கள் தேவனுடைய கிரியையைக் குறித்த தரிசனங்களை அறிந்துகொள்ள வேண்டும், மேலும் அவருடைய கிரியை செல்லும் பொதுவான திசையையும் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நேர்மறையான பிரவேசமாகும். தரிசனங்களைக் குறித்த சத்தியத்தை நீ துல்லியமாக அறிந்துகொண்டவுடன், உனது பிரவேசம் பாதுகாக்கப்படும்; தேவனின் கிரியை எவ்வாறு மாறினாலும், உனது இருதயத்தில் நீ உறுதியாக இருப்பாய், தரிசனங்களைப் பற்றி தெளிவாக இருப்பாய், மேலும் உனது பிரவேசம் மற்றும் உன் நாட்டத்திற்கான ஒரு இலக்கையும் வைத்திருப்பாய். இவ்வாறு, உனக்குள் உள்ள அனைத்து அனுபவங்களும் அறிவும் ஆழமாகி மேலும் விரிவடையும். இதன் சாராம்சத்தை நீ முழுவதுமாகப் புரிந்துகொண்டதும், நீ உன் ஜீவிதத்தில் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டாய், நீ வழிதவறவும் மாட்டாய். இந்தக் கிரியையின் படிகளை நீ அறிந்து கொள்ளாவிட்டால், ஒவ்வொரு படியிலும் நீ இழப்பை சந்திக்க நேரிடும், மேலும் இழப்பிலிருந்து மீள சில நாட்களுக்கு மேல் ஆகும், அல்லது இரண்டு வாரங்கள் ஆனால் கூட உன்னால் சரியான பாதைக்குத் திரும்ப முடியாது. இது தாமதத்தை ஏற்படுத்தாதா? நேர்மறையாகப் பிரவேசிக்கும் வழி மற்றும் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டிய நடைமுறை ஆகியவற்றில் ஏராளமானவை உள்ளன. தேவனுடைய கிரியைகளைக் குறித்த தரிசனங்களைப் பொறுத்தவரை, நீ பின்வரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்: அவரது ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம், பரிபூரணப்படுத்தப்படுவதற்கான எதிர்காலப் பாதை, சோதனைகள் மற்றும் உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் எதை அடைய வேண்டும், நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் முக்கியத்துவம், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் உள்ள கொள்கைகள், மற்றும் பரிபூரணப்படுத்துதல் மற்றும் ஜெயங்கொள்ளுதல் ஆகியவற்றிற்குப் பின்னால் உள்ள கொள்கைகள். இவை அனைத்தும் தரிசனங்களைக் குறித்த சத்தியத்தைச் சேர்ந்தவை. மீதமுள்ளவை நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம், மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்டக் கிரியைகள், அத்துடன் எதிர்கால சாட்சி ஆகியவை ஆகும். இவையும் தரிசனங்களைக் குறித்த சத்தியம்தான், மேலும் இவை மிக அடிப்படையானவையாகவும், மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. தற்போது நீங்கள் பிரவேசித்து, கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய உள்ளன, அது இப்போது அதிக அடுக்குகள் கொண்டதாகவும் மற்றும் மிக விபரமாகவும் இருக்கிறது. இந்தச் சத்தியங்களைப் பற்றி உனக்கு எந்த அறிவும் இல்லை என்றால், நீ இன்னும் பிரவேசித்தலை அடையவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அநேக நேரங்களில், சத்தியத்தைப் பற்றிய ஜனங்களின் அறிவு மிகவும் ஆழமற்றதாக இருக்கிறது; அவர்களால் சில அடிப்படைச் சத்தியங்களைக் கூட கடைப்பிடிக்க முடியவில்லை, மேலும் அற்ப விஷயங்களைக் கூட எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை. ஜனங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாததற்குக் காரணம், அவர்களின் மனநிலை கலகத்தனமாக இருப்பதாலும், இன்றைய கிரியையைப் பற்றிய அவர்களின் அறிவு மிகவும் மேலோட்டமானதாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருப்பதுதான். எனவே, ஜனங்களைப் பரிபூரணமாக்குவது எளிதான காரியமல்ல. நீ மிகவும் கலகக்காரனாக இருக்கிறாய், மேலும் நீ உன் பழைய தன்மையையே இன்னும் அதிகமாகக் கொண்டிருக்கிறாய்; உன்னால் சத்தியத்திற்கு அருகில் நிற்க முடியாது, மேலும் மிகவும் தெளிவான சத்தியங்களைக் கூட உன்னால் கடைப்பிடிக்க முடிவதில்லை. அத்தகையவர்களை இரட்சிக்க முடியாது, மேலும் அவர்கள் ஜெயங்கொள்ளப்படாதவர்களாக இருப்பார்கள். உனது பிரவேசத்திற்கு விபரங்களோ அல்லது குறிக்கோள்களோ இல்லை என்றால், வளர்ச்சி உன்னிடம் மெதுவாகத்தான் வரும். உன் பிரவேசத்திற்கு சிறிதளவும் யதார்த்தம் இல்லை என்றால், உன் நோக்கம் வீணாகிவிடும். சத்தியத்தின் சாராம்சம் உனக்குத் தெரியாவிட்டால், நீ மாறாமல் இருப்பாய். மனுஷனின் ஜீவிதத்தில் வளர்ச்சியும், அவனது மனநிலையின் மாற்றங்களும் யதார்த்தத்திற்குள் நுழைவதன் மூலமும், மேலும், விரிவான அனுபவங்களுக்குள் நுழைவதன் மூலமும் அடையப்படுகின்றன. உனது பிரவேசத்தின் போது உனக்குப் பல விரிவான அனுபவங்கள் இருந்தால், உன்னிடம் உண்மையான அறிவும் பிரவேசமும் இருந்தால், உன் மனநிலை விரைவாக மாறலாம். தற்போது, உனக்கு நடைமுறையைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், தேவனின் கிரியையைக் குறித்த தரிசனங்களைப் பற்றி நீ குறைந்தபட்சத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால், உன்னால் பிரவேசிக்க இயலாது; சத்தியத்தைப் பற்றி அறிந்த பின்னரே நீ பிரவேசிப்பது சாத்தியமாகும். பரிசுத்த ஆவியானவர் உன் அனுபவத்தில் உன்னைத் தெளிவூட்டினால் மட்டுமே நீ சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும், ஆழமாகப் பிரவேசிப்பது பற்றிய புரிதலையும் பெறுவாய். நீங்கள் நிச்சயம் தேவனின் கிரியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஆதியில், மனுஷகுலத்தை சிருஷ்டித்த பிறகு, தேவனுடைய கிரியையின் அஸ்திபாரமாக ஊழியம் செய்தது இஸ்ரவேலர்கள்தான். பூமியில் இஸ்ரவேல் முழுவதும் யேகோவாவின் கிரியையின் அஸ்திபாரமாக இருந்தது. மனுஷனை ஒரு சரியான ஜீவிதத்தை வாழச் செய்யவும், பூமியில் ஒரு சரியான முறையில் யேகோவாவை வணங்கச் செய்யவும், நியாயப்பிரமாணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனுஷனை நேரடியாக வழிநடத்துவதும் மேய்ப்பதும் யேகோவாவின் கிரியையாக இருந்தது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனால் தேவனைப் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. ஏனென்றால், அவர் செய்ததெல்லாம் சாத்தானால் சீர்கெட்டுப்போன ஆதிகால ஜனங்களை வழிநடத்துவதும், அவர்களுக்குக் கற்பிப்பதும், அவர்களை மேய்ப்பதும்தான். அவருடைய வார்த்தைகளில் நியாயப்பிரமாணங்கள், சட்டங்கள் மற்றும் மனுஷ நடத்தை விதிமுறைகளைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை, மேலும் அவர்களுக்கு ஜீவனைக் குறித்த சத்தியங்களையும் வழங்கவில்லை. அவருடைய தலைமையின் கீழ் இருந்த இஸ்ரவேலர் சாத்தானால் ஆழமாகச் சீர்கெட்டுப்போகவில்லை. அவரது நியாயப்பிரமாணத்தின் கிரியையே, இரட்சிப்பிற்கான கிரியையின் முதல் கட்டமாக, இரட்சிப்பிற்கான கிரியையின் ஆரம்பமாக இருந்தது, மேலும் அதற்கு மனுஷனின் ஜீவ மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் நடைமுறையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகையால், இரட்சிப்பிற்கான கிரியையின் ஆரம்பத்தில் இஸ்ரவேலில் அவர் செய்த கிரியைக்காக அவர் மாம்சமாக வேண்டிய அவசியம் இல்லை. இதற்குத்தான் மனுஷனுடன் ஈடுபட அவருக்கு ஓர் ஊடகம்—ஒரு கருவி—தேவைப்பட்டது. இவ்வாறு, யேகோவாவின் சார்பாகப் பேசியவர்களும் கிரியை செய்தவர்களும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களிடையே எழுந்தார்கள், இவ்வாறுதான் மனுஷகுமாரர்களும் தீர்க்கதரிசிகளும் மனுஷரிடையே கிரியை செய்ய வந்தார்கள். மனுஷகுமாரர்கள் யேகோவாவின் சார்பாக மனுஷரிடையே கிரியை செய்தனர். யேகோவாவால் “மனுஷகுமாரர்” என்று அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால், அத்தகையவர்கள் யேகோவாவின் சார்பாக நியாயப்பிரமாணத்தை வகுக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடையே ஆசாரியர்களாக இருந்தனர், அவர்கள் யேகோவாவால் கவனிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், யேகோவாவின் ஆவி கிரியை செய்தவர்களாகவும் இருந்தார்கள்; அவர்கள் ஜனங்களிடையே தலைவர்களாக இருந்து, நேரடியாக யேகோவாவுக்கு ஊழியம் செய்தார்கள். மறுபுறம், தீர்க்கதரிசிகள், யேகோவாவின் சார்பாக, எல்லா நாடுகளிலும், பழங்குடியின ஜனங்களிடமும் பேசுவதற்காக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் யேகோவாவின் கிரியையையும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் மனுஷகுமாரர்களாக இருந்தாலும், தீர்க்கதரிசிகளாக இருந்தாலும், அனைவரும் யேகோவாவின் ஆவியினால் எழுப்பப்பட்டு, தங்களுக்குள் யேகோவாவின் கிரியையைக் கொண்டிருந்தார்கள். ஜனங்களிடையே, அவர்கள்தான் யேகோவாவை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்; அவர்கள் பரிசுத்த ஆவியானவர் மனுஷனாக அவதரித்த மாம்சமாக இருந்ததால் அல்ல, மாறாக அவர்கள் யேகோவாவால் எழுப்பப்பட்டதனால் மட்டுமே அவர்கள் தங்கள் கிரியையை செய்தார்கள். ஆகையால், அவர்கள் தேவனின் சார்பாகப் பேசுவதிலும் கிரியைசெய்வதிலும் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் இருந்த மனுஷகுமாரர்களும், தீர்க்கதரிசிகளும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. கிருபையின் யுகத்திலும், கடைசி கட்டத்திலும் செயல்படுத்தப்பட்ட தேவனின் கிரியை நேர்மாறாக இருந்தது, ஏனென்றால் மனுஷனின் இரட்சிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டும் மனுஷனாக அவதரித்த தேவனால் நிகழ்த்தப்பட்டன. எனவே அவர் சார்பாகக் கிரியை செய்ய தீர்க்கதரிசிகளையும் மனுஷகுமாரர்களையும் மீண்டும் ஒரு முறை எழுப்ப வேண்டிய அவசியமிருக்கவில்லை. மனுஷனின் பார்வையில், சாராம்சத்திற்கும், அவர்களின் கிரியையின் முறைக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் எதுவும் இருப்பதில்லை. இந்தக் காரணத்தினாலேயே, ஜனங்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரனின் கிரியைகளோடு மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளைத் தொடர்ந்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மனுஷனாக அவதரித்த தேவன் தோன்றியது அடிப்படையில் தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரர்கள் தோன்றியதைப் போன்றதுதான். மனுஷனாக அவதரித்த தேவன், தீர்க்கதரிசிகளை விட மிகவும் இயல்பாகவும், உண்மையாகவும் இருந்தார். எனவே, மனுஷனால் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. மனுஷன் தோற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறான், கிரியை செய்வதிலும் பேசுவதிலும் இருவரும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு இடையே முக்கியமான வேறுபாடு இருப்பதை அவனால் முழுமையாக அறியமுடிவதில்லை. மனுஷனின் விஷயங்களை ஆழ்ந்து கவனிக்கும் திறன் மிகவும் மோசமாக இருப்பதால், அவனுக்கு எளிய சிக்கல்களை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை, மிகவும் சிக்கலானவற்றையும் கூட வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. தீர்க்கதரிசிகளும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களும் பேசியபோதும், கிரியை செய்தபோதும், இது மனுஷனின் கிரியைகளை மற்றும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் செயல்பாட்டைச் செய்வதாக இருந்தது. இது மனுஷன் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகளும் கிரியையும் அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டவை ஆகும். அவருடைய வெளிப்புறத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டவைக்குரியதாக இருந்தபோதிலும், அவருடைய கிரியை அவருடைய செயல்பாட்டைச் செய்வதல்ல, அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். “கடமை” என்ற சொல் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் “ஊழியம்” என்பது மனுஷனாக அவதரித்த தேவனைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது. இரண்டிற்கும் இடையே ஒரு கணிசமான வேறுபாடு உள்ளது; அவை ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக் கூடியவை அல்ல. மனுஷனின் கிரியை அவனுடைய கடமையைச் செய்வதேயாகும், அதேசமயம் தேவனின் கிரியை நிர்வகிப்பதும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும் ஆகும். ஆகையால், பல அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பல தீர்க்கதரிசிகள் அவரால் நிரப்பப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கிரியையும் வார்த்தைகளும் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷராகத் தங்கள் கடமையைச் செய்வதற்காக மட்டுமே இருந்தன. அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் மனுஷராக அவதரித்த தேவனால் பேசப்பட்ட ஜீவவழியை மிஞ்சியிருக்கலாம், மேலும் அவர்களின் மனுஷத்தன்மையானது மனுஷனாக அவதரித்த தேவனின் தன்மையை மிஞ்சியிருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள், ஊழியத்தை நிறைவேற்றவில்லை. மனுஷனின் கடமை மனுஷனின் செயல்பாட்டைக் குறிக்கிறது; அதுவே மனுஷனால் அடையக்கூடியதும் கூட. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனால் மேற்கொள்ளப்படும் ஊழியம் அவருடைய நிர்வாகத்துடன் தொடர்புடையது, இது மனுஷனால் அடைய முடியாதது. மனுஷனாக அவதரித்த தேவன் பேசினாலும், கிரியை செய்தாலும், அதிசயங்களை வெளிப்படுத்தினாலும், அவர் தனது நிர்வாகத்தின் மத்தியில் மிகச் சிறந்த கிரியையைச் செய்துவருகிறார், அத்தகையக் கிரியையை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. மனுஷனின் கிரியை என்பது தேவனின் நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக தனது கடமையைச் செய்வதாகும். தேவனின் நிர்வாகம் இல்லாமல், அதாவது, மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியம் இழக்கப்பட்டால், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவனின் கடமை இழக்கப்பட நேரிடும். தன் ஊழியத்தைச் செய்வதில் இருக்கும் தேவனின் கிரியை, மனுஷனை நிர்வகிப்பதாகும், அதேசமயம் மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது சிருஷ்டிகரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத் தனது சொந்த கடமையை நிறைவேற்றுவதாகும், மேலும் ஒருவருடைய சொந்த ஊழியத்தை நிறைவேற்றுவதை எந்த வகையிலும் கருத முடியாது. தேவனின் ஆழமான சாராம்சத்திற்கு—அவருடைய ஆவிக்கு—தேவனின் கிரியை அவருடைய நிர்வாகமாகும், ஆனால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் வெளிப்புறத் தோற்றத்தை அணிந்திருக்கும் மனுஷனாக அவதரித்த தேவனுக்கு, அவருடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும் அது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்; மனுஷனால் செய்யக்கூடியது, தேவனின் நிர்வாகத்தின் எல்லைக்குள் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தனது சிறந்ததைக் கொடுப்பது மட்டுமே ஆகும்.

மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது, உண்மையில், மனுஷனுக்குள் ஆழமாக இருக்கும் அனைத்தையும், அதாவது மனுஷனுக்கு சாத்தியமானதை நிறைவேற்றுவதாகும். அப்போதுதான் அவனது கடமை நிறைவேற்றப்படுகிறது. மனுஷனின் ஊழியத்தின் போது ஏற்படும் குறைபாடுகள் படிப்படியாக முற்போக்கான அனுபவம் மற்றும் அவனது நியாயத்தீர்ப்பின் செயல்முறை மூலம் குறைக்கப்படுகின்றன; அவை மனுஷனின் கடமைக்குத் தடையாகவோ அல்லது அதை பாதிக்கவோ இல்லை. தங்கள் ஊழியத்தில் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஊழியம் செய்வதையோ அல்லது கீழ்ப்படிவதையோ நிறுத்திவிட்டு பின்வாங்குவோர், அனைவரையும் விட மிகவும் கோழைத்தனமானவர்கள் ஆவர். ஊழியத்தின் போது வெளிப்படுத்த வேண்டியதை ஜனங்கள் வெளிப்படுத்தவோ அல்லது அவர்களுக்கு இயல்பாகவே சாத்தியமானதை அடையவோ முடியாமல், அதற்குப் பதிலாக முட்டாள்தனமாக செயல்பட்டால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்கு இருக்க வேண்டிய செயல்பாட்டை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் “பிரயோஜனமில்லாதவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் பயனற்றவர்கள் ஆவர். அத்தகையவர்களை எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் என்று முறையாக அழைக்க முடியும்? அவர்கள் வெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆனால் உள்ளே அழுகிப்போன சீர்கெட்ட குணம் கொண்ட ஜீவன்கள் அல்லவா? ஒரு மனுஷன் தன்னை தேவன் என்று அழைத்துக் கொண்டு, தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தவோ, தேவனின் கிரியையைச் செய்யவோ, அல்லது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாவிட்டால், அவன் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனே அல்ல. ஏனென்றால் அவனிடம் தேவனின் சாராம்சம் இல்லை, மேலும் தேவனால் இயல்பாகவே அடையக்கூடியதும் அவனுக்குள் இல்லை. மனுஷன் அவன் இயல்பாக அடையக்கூடியதை இழந்தால், அவனை இனி மனுஷனாகக் கருத முடியாது, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனாக இருக்கவோ அல்லது தேவனுக்கு முன்பாக வந்து அவருக்கு ஊழியம் செய்யவோ தகுதியற்றவன் ஆகிறான். மேலும், அவன் தேவனின் கிருபையைப் பெறவோ அல்லது தேவனால் கவனிக்கப்படவோ, பாதுகாக்கப்படவோ, பரிபூரணப்படுத்தப்படவோ தகுதியற்றவன் ஆகிறான். தேவனிடத்தில் விசுவாசத்தை இழந்த பலர் தேவனின் கிருபையையும் இழக்கிறார்கள். அவர்கள் செய்த தவறான செயல்களை அவர்கள் வெறுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தேவனின் வழி தவறானது என்ற கருத்தை அவர்கள் வெட்கமின்றி பிரசங்கிக்கிறார்கள், மேலும், கலகக்காரர்கள் தேவன் இருப்பதையே மறுக்கிறார்கள். அத்தகைய கலகத்தனத்தைக் கொண்ட அத்தகைய ஜனங்கள் எவ்வாறு தேவனின் கிருபையை அனுபவிக்கும் உரிமையைப் பெறுவார்கள்? தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுக்கு எதிராக மிகுந்த கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மேலும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் முகந்திரும்பி, தேவன் தவறானவர் என்று கடுமையாகத் திட்டுகிறார்கள். அத்தகைய மனுஷன் பரிபூரணராக ஆவதற்கு எப்படித் தகுதியானவர்? இது புறம்பாக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கான முன்னோடி அல்லவா? தேவனுக்கு முன்பாகத் தங்கள் கடமையைச் செய்யாத ஜனங்கள் ஏற்கனவே மிகக் கொடூரமான குற்றங்களுக்கான குற்றவாளிகள் ஆவர், அந்தக் குற்றங்களுக்கு மரணம் கூட போதுமான தண்டனை அல்ல, ஆனாலும் தேவனுடன் வாக்குவாதம் செய்து அவருக்கு எதிராகத் தங்களை ஒப்பிட்டுக் கொள்ள அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையவர்களைப் பரிபூரணமாக்குவதன் மதிப்புதான் என்ன? ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறும்போது, அவர்கள் குற்ற உணர்ச்சியையும் கடமை தவறியதையும் உணர வேண்டும்; அவர்கள் தங்கள் பலவீனம் மற்றும் பயனற்ற தன்மை, தங்கள் கலகத்தன்மை மற்றும் சீர்கெட்டத் தன்மை ஆகியவற்றை வெறுக்க வேண்டும், மேலும், தங்கள் ஜீவனைத் தேவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவனை உண்மையாக நேசிக்கும் சிருஷ்டிப்புக்களாக இருப்பார்கள், அத்தகையவர்கள் மட்டுமே தேவனின் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் அனுபவித்து, அவரால் பரிபூரணமாக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். உங்களில் பெரும்பாலோர் யார்? உங்களிடையே வாழும் தேவனை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் உங்கள் கடமைகளை அவருக்கு முன்பாக எவ்வாறு செய்தீர்கள்? உங்கள் சொந்த ஜீவிதத்தைப் பணயம் வைத்துக் கூட, நீங்கள் செய்ய அழைக்கப்பட்ட அனைத்தையும் செய்துள்ளீர்களா? நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள்? நீங்கள் என்னிடமிருந்து அதிகம் பெறவில்லையா? உங்களால் பகுத்தறிய முடியுமா? நீங்கள் எனக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வாறு ஊழியம் செய்தீர்கள்? நான் உங்களுக்கு எவ்வளவு வழங்கியுள்ளேன், உங்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளேன்? அவற்றையெல்லாம் நீங்கள் அளந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் இதை நியாயந்தீர்த்து, உங்களுக்குள் இருக்கும் சிறிய மனசாட்சியுடன் இதை ஒப்பிட்டீர்களா? உங்கள் சொற்களும் செயல்களும் யாருக்குத் தகுதியானவை? உங்களுடைய இத்தகைய சிறிய தியாகம் நான் உங்களுக்கு வழங்கிய எல்லாவற்றிற்கும் ஈடானதா? எனக்கு வேறு வழியில்லாமல் முழு மனதுடன் உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனாலும் நீங்கள் பொல்லாத நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள், என்னை நோக்கி அரை மனதுடன் இருக்கிறீர்கள். அதுவே உங்கள் கடமையின் அளவு, உங்கள் ஒரே செயல்பாடு. அப்படித்தானே? ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையைச் செய்ய நீங்கள் முற்றிலும் தவறிவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக எப்படிக் கருதுவது? நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்கள் மற்றும் எவ்வாறு ஜீவிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள், ஆனால் நீங்கள் தேவனின் சகிப்புத்தன்மையையும் ஏராளமான கிருபையையும் பெற முற்படுகிறீர்கள். அத்தகைய கிருபை உங்களைப் போன்ற பயனற்றவர்களுக்காகவும், கீழ்த்தரமானவர்களுக்காகவும் தயாரிக்கப்படவில்லை, ஆனால் எதையும் கேட்காமல் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யாதவர்களுக்காக தயாரிக்கப்பட்டவை. உங்களைப் போன்றவர்கள், உங்களைப்போன்ற பிரயோஜனமில்லாதவர்கள், பரலோகத்தின் கிருபையை அனுபவிக்க முற்றிலும் தகுதியற்றவர்கள். உங்கள் நாட்களில் கஷ்டங்களும் இடைவிடாத தண்டனையும் மட்டுமே இருக்கும்! உங்களால் என்னிடம் உண்மையாக இருக்க முடியாவிட்டால், உங்கள் விதி துன்பங்களில் ஒன்றாக இருக்கும். எனது வார்த்தைகளுக்கும், எனது கிரியைகளுக்கும் உங்களால் பொறுப்பேற்க முடியாவிட்டால், உங்கள் முடிவு தண்டனைகளில் ஒன்றாக இருக்கும். எல்லா கிருபை, ஆசீர்வாதங்கள் மற்றும் ராஜ்யத்தின் அற்புதமான ஜீவிதம் ஆகியவற்றிற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இதுதான் நீங்கள் சந்திக்கத் தக்க முடிவு மற்றும் உங்கள் சொந்த செய்கையின் விளைவும் ஆகும்! அறியாமை மற்றும் ஆணவம் உள்ளவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்யமாட்டார்கள், அல்லது தங்கள் கடமையையும் செய்யமாட்டார்கள், ஆனாலும் அவர்கள் கேட்பதற்குத் தகுதியானவர்கள் போலக் கிருபைக்காகத் தங்கள் கைகளை நீட்டுகிறார்கள். அவர்கள் கேட்பதைப் பெறத் தவறினால், அவர்கள் எப்போதும் உண்மையில்லாதவர்களாக மாறுகிறார்கள். அத்தகையவர்களை எவ்வாறு நியாயமானவர்களாகக் கருத முடியும்? நீங்கள் மோசமான திறமை வாய்ந்தவர்கள் மற்றும் காரணமில்லாதவர்கள், நிர்வாகக் கிரியையின் போது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை உங்களால் முற்றிலும் நிறைவேற்ற இயலாது. உங்கள் மதிப்பு ஏற்கனவே சரிந்துவிட்டது. உங்களுக்குக் கிருபை காட்டியதற்காக நீங்கள் எனக்குத் திருப்பிச் செலுத்தத் தவறியது ஏற்கனவே தீவிரமான கலகத்தின் செயலாக இருக்கிறது, இதுவே உங்களை கண்டிக்கவும், உங்கள் கோழைத்தனம், திறமையின்மை, கீழ்த்தரம் மற்றும் தகுதியற்ற தன்மையை நிரூபிக்கப் போதுமானது. உங்கள் கைகளை நீட்டிக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதாவது என் கிரியைக்கு உங்களால் சிறிதளவு கூட உதவியாக இருக்க முடியவில்லை, விசுவாசமாக இருக்க முடியவில்லை மற்றும் எனக்குச் சாட்சி கொடுக்க முடியவில்லை என்பது உங்களது தவறான செயல்கள் மற்றும் தோல்விகள்தான். ஆனாலும் நீங்கள் என்னைத் தாக்குகிறீர்கள், என்னைப் பற்றிப் பொய்களைக் கூறுகிறீர்கள், மேலும் நான் அநீதியானவன் என்றும் குறை கூறுகிறீர்கள். இதுதான் உங்கள் விசுவாசமா? இதுதான் உங்கள் அன்பைக் குறிக்கிறதா? இதைத் தவிர வேறு என்ன கிரியையை உங்களால் செய்ய முடியும்? செய்யப்பட்டுள்ள அனைத்துக் கிரியைகளுக்கும் நீங்கள் எவ்வாறு பங்களித்திருக்கிறீர்கள்? எவ்வளவு செலவு செய்தீர்கள்? உங்களைக் குற்றம் சாட்டாததன் மூலம் நான் ஏற்கனவே மிகுந்த சகிப்புத்தன்மையைக் காட்டியிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் வெட்கமின்றி என்னிடம் சாக்குப்போக்கு கூறி என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குறை கூறுகிறீர்கள். உங்களிடம் மனுஷகுலத்தின் சிறிதளவு சுவடேனும் இருக்கிறதா? மனுஷனின் கடமை மனுஷனின் மனதாலும் அவனது கருத்துக்களாலும் களங்கப்படுத்தப்பட்டிருந்தாலும், நீ உன் கடமையைச் செய்து உனது விசுவாசத்தைக் காட்ட வேண்டும். மனுஷனின் கிரியையில் உள்ள அசுத்தங்கள் அவனது திறனுக்கான ஒரு பிரச்சினையாகும், அதேசமயம், மனுஷன் தனது கடமையைச் செய்யாவிட்டால், அது அவனுடைய கலகத்தனத்தைக் காட்டுகிறது. மனுஷனின் கடமைக்கும், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா அல்லது சபிக்கப்பட்டவனா என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடமை என்பது மனுஷன் நிறைவேற்ற வேண்டியது; அது அவனுக்குப் பரலோகம் கொடுத்த கிரியை, மேலும் அது பிரதியுபகாரம், நிபந்தனைகள் அல்லது காரணங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. அப்போதுதான் அவன் தனது கடமையைச் செய்கிறான். ஆசீர்வதிக்கப்படுவது என்பது, யாரோ ஒருவன் பரிபூரணனாகி, நியாயத்தீர்ப்பை அனுபவித்தபின் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறான் என்பதாகும். சபிக்கப்படுவது என்பது, ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்தபின்பும் ஒருவனின் மனநிலை மாறாதபோதும், அவன் பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிக்காமல் தண்டிக்கப்படும்போதும் வழங்கப்படுவது என்பதாகும். ஆனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது சபிக்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும், அவர்களால் செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டும்; தேவனைப் பின்தொடரும் ஒருவன் செய்ய வேண்டிய குறைந்தபட்ச விஷயம் இது. நீ ஆசீர்வதிக்கப்படுவதற்காக மட்டுமே உன் கடமையைச் செய்யக்கூடாது, மேலும் சபிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் நீ செயல்பட மறுக்கவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: மனுஷனுடைய கடமையின் செயல்திறன்தான் அவனது கடமையின் முக்கிய விஷயமாகும், அவனால் தனது கடமையைச் செய்ய இயலாது என்றால், இதுவே அவனது கலகத்தன்மையாகும். தனது கடமையைச் செய்யும் செயல்முறையின் மூலம்தான் மனுஷன் படிப்படியாக மாற்றப்படுகிறான், மேலும் இந்த செயல்முறையின் மூலம்தான் அவன் தன் விசுவாசத்தை நிரூபிக்கிறான். எனவே, நீ எவ்வளவு அதிகமாக உன் கடமையை செய்கிறாயோ, அவ்வளவு சத்தியத்தை நீ பெறுவாய், மேலும் உன் வெளிப்பாடும் மிகவும் உண்மையானதாகிவிடும். தங்கள் கடமையைச் செய்வதில் வெறுமென சிரத்தையின்றி இருப்பவர்களும், சத்தியத்தைத் தேடாதவர்களும் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள், ஏனென்றால் அத்தகையவர்கள் சத்தியத்தின் நடைமுறையில் தங்கள் கடமையைச் செய்ய மாட்டார்கள், தங்கள் கடமையை நிறைவேற்றுவதிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்கள் மாறாமல் இருப்பவர்கள், அதனால் சபிக்கப்படுவார்கள். அவர்களின் வெளிப்பாடுகள் தூய்மையற்றவை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்தும் அனைத்தும் பொல்லாதவையும் கூட.

கிருபையின் யுகத்தில், இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அதிகக் கிரியைகள் செய்தார். அவர் ஏசாயாவை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் தானியேலை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் ஒரு தீர்க்கதரிசியா? அவர் ஏன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்? அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசிய மனுஷர், அவர்களுடைய வார்த்தைகள் மனுஷனுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் தோன்றின. அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசினர், கிரியைகள் செய்தனர். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களைப் பேசினார்கள், அதே விஷயத்தை இயேசுவினாலும் செய்திருக்க முடியும். இது ஏன் அப்படி? இங்கே வேறுபாடானது கிரியையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயத்தை அறிய, நீ மாம்சத்தின் தன்மையை கருத்தில் கொள்ளக்கூடாது, அல்லது அவர்களின் சொற்களின் ஆழத்தையோ அல்லது மேலோட்டமான சாரத்தையோ நீ கருத்தில் கொள்ளக்கூடாது. எப்போதும் நீ முதலில் அவர்களின் கிரியைகளையும், அந்தக் கிரியைகள் மனுஷனில் ஏற்படுத்தும் விளைவுகளையுமே கருத்தில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனங்கள் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவில்லை, மேலும் ஏசாயா, தானியேல் போன்றவர்களால் பெறப்பட்ட உத்வேகங்கள் வெறும் தீர்க்கதரிசனங்களாக மட்டுமே இருந்தன, ஜீவவழியாக இருக்கவில்லை. யேகோவாவின் நேரடி வெளிப்பாடு இல்லாவிட்டால், மனுஷருக்குச் சாத்தியமில்லாத அந்தக் கிரியையை யாராலும் செய்திருக்க முடியாது. இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், ஆனால் அத்தகைய வார்த்தைகள் மனுஷனால் கடைப்பிடிக்கக் கூடிய ஜீவவழிக்கானப் பாதையை கண்டுபிடிக்க உதவும்படி இருந்தன. அதாவது, முதலாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை அவனுக்கு வழங்க முடியும், ஏனென்றால் இயேசு ஜீவனாக இருக்கிறார்; இரண்டாவதாக, அவரால் மனுஷனின் வழிவிலகல்களை மாற்றியமைக்க முடியும்; மூன்றாவதாக, யுகத்தைத் தொடர யேகோவாவின் கிரியைகளைப் பின்பற்றி அவரது கிரியைகள் செயல்படக்கூடும்; நான்காவதாக, அவரால் மனுஷனுக்குள் இருக்கும் தேவைகளையும், மனுஷனிடம் இல்லாததைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஐந்தாவதாக, அவரால் ஒரு புதிய யுகத்தில் நுழைந்து பழையதை முடித்துவைக்க முடியும். அதனால்தான் அவர் தேவன் என்றும், கிறிஸ்து என்றும் அழைக்கப்படுகிறார்; அவர் ஏசாயாவிடமிருந்து மட்டுமல்ல, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவர். ஏசாயாவை தீர்க்கதரிசிகளின் கிரியைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாவதாக, அவனால் மனுஷனுக்கான ஜீவனை வழங்க முடியவில்லை; இரண்டாவதாக, அவனால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடியவில்லை. அவன் யேகோவாவின் தலைமையில் பணிபுரிந்து கொண்டிருந்தான், ஆனால் ஒரு புதிய யுகத்தை தொடங்கவில்லை. மூன்றாவதாக, அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவன் தேவனுடைய ஆவியிலிருந்து நேரடியாக வெளிப்பாடுகளைப் பெற்றுவந்தான், மற்றவர்கள் அவற்றைக் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரியாது. அவனுடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனங்களை விடவும், யேகோவாவின் இடத்தில் செய்யப்படும் கிரியையின் அம்சத்தை விடவும் பெரியது இல்லை என்பதை நிரூபிக்க இந்த சில விஷயங்கள் மட்டுமே போதுமானவை. ஆயினும், அவனால் யேகோவாவை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. அவன் யேகோவாவின் ஊழியனாக இருந்தான், யேகோவாவின் கிரியையில் ஒரு கருவியாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்குள்ளும், யேகோவாவின் கிரியையின் எல்லைக்குள்ளும் மட்டுமே கிரியை செய்து கொண்டிருந்தான்; அவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தைத் தாண்டி கிரியை செய்யவில்லை. இதற்கு மாறாக, இயேசுவின் கிரியை வேறுபட்டதாக இருந்தது. அவர் யேகோவாவின் கிரியையின் வரம்பை மிஞ்சினார்; சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் மனுஷனாக அவதரித்த தேவனாகக் கிரியை செய்தார், மேலும் சிலுவையிலும் அறையப்பட்டார். அதாவது, யேகோவா செய்த கிரியைக்கு வெளியே அவர் புதிய கிரியையைச் செய்தார். இது ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், மனுஷனால் அடைய முடியாததைப் பற்றி அவரால் பேச முடிந்தது. அவருடைய கிரியை தேவனின் நிர்வாகத்திற்குட்பட்ட கிரியையாக இருந்தது, இது மனுஷகுலம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவர் ஒரு சில மனுஷருக்காக மட்டும் கிரியை செய்யவில்லை, அவரது கிரியை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுஷரை மட்டும் வழிநடத்துவதாக இருக்கவில்லை. தேவன் ஒரு மனுஷனாக எப்படி அவதரித்தார், அந்த நேரத்தில் ஆவியானவர் எவ்வாறு வெளிப்பாடுகளைக் கொடுத்தார், ஆவியானவர் எவ்வாறு ஒரு மனுஷன் மீது இறங்கி கிரியை செய்யத் தொடங்கினார்—இவை மனுஷரால் பார்க்கவோ தொடவோ முடியாத விஷயங்கள். அவர் மனுஷனாக அவதரித்த தேவன் என்பதற்கு இந்த உண்மைகள் சான்றாக செயல்படுவது முற்றிலும் சாத்தியமற்றது. எனவே, மனுஷனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் மட்டுமே அவனால் வேறுபாடு காண முடியும். இது மட்டுமே உண்மையானது. ஏனென்றால், ஆவியானவரின் விஷயங்கள் உனக்குப் புலப்படாது, அவை தேவனால் மட்டுமே தெளிவாக அறியப்படுகின்றன, மேலும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தால் கூட அவற்றை அறிய முடியாது; அவர் செய்த கிரியைகளிலிருந்து மட்டுமே அவர் தேவன்தானா என்பதை உன்னால் சரிபார்க்க முடியும். அவருடைய கிரியையிலிருந்து, முதலில், அவரால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடிகிறது என்பதைக் காணலாம்; இரண்டாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவும், மனுஷன் பின்பற்றுவதற்கான வழியைக் காட்டவும் முடியும். அவர் தான் தேவன் என்பதை நிரூபிக்க இது போதுமானது. குறைந்தபட்சம், அவர் செய்யும் கிரியையால் தேவ ஆவியானவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அத்தகைய கிரியையிலிருந்து தேவ ஆவி அவருக்குள் இருப்பதைக் காணலாம். மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகள் முக்கியமாக ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும், புதியக் கிரியைகளை வழிநடத்துவதற்கும் மற்றும் ஒரு புதிய சாம்ராஜ்யத்தைத் தொடங்குவதற்குமாக இருந்ததால், அவர் மட்டுமே தேவன் என்பதை உறுதிப்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இது அவரை ஏசாயா, தானியேல் மற்றும் பிற பெரிய தீர்க்கதரிசிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. ஏசாயா, தானியேல் மற்றும் மற்றவர்கள் அனைவரும் மிகவும் படித்த மற்றும் பண்பட்ட மனுஷ வர்க்கமாக இருந்தனர்; அவர்கள் யேகோவாவின் தலைமையில் அசாதாரண மனுஷராக இருந்தனர். மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சமும் அறிவுமிக்கதாக இருந்தது, அதில் எந்தவிதமான குறையும் இல்லை, ஆனால் அவருடைய மனுஷத்தன்மையானது குறிப்பிடும்படிக்கு சாதாரணமானதுதான். அவர் ஒரு சாதாரண மனுஷன், வெறும் கண்களால் அவரைப் பற்றிய எந்தவொரு சிறப்பு மனுஷத்தன்மையையும் உணரவோ அல்லது மற்றவர்களைப் போலல்லாத அவருடைய மனுஷத்தன்மையில் எதையும் கண்டறியவோ முடியவில்லை. அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவோ அல்லது தனித்துவமானவராகவோ இல்லை, மேலும் அவருக்கு உயர் கல்வி, அறிவு அல்லது கோட்பாடு என எதுவும் இருக்கவில்லை. அவர் பேசிய ஜீவனையும், அவர் வழிநடத்திய பாதையையும் கோட்பாட்டின் மூலமாகவோ, அறிவின் மூலமாகவோ, ஜீவித அனுபவத்தின் மூலமாகவோ அல்லது குடும்ப வளர்ப்பின் மூலமாகவோ பெறப்படவில்லை. மாறாக, அவை ஆவியானவரின் நேரடி கிரியைகளாக இருந்தன, இது மாம்சத்தில் அவதரித்தவர் செய்த கிரியை. மனுஷனுக்குத் தேவனைக் குறித்துப் பெரிய கருத்துக்கள் இருப்பதால், குறிப்பாக இந்தக் கருத்துக்கள் பல தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளால் ஆனவை என்பதால், மனுஷனின் பார்வையில், அறிகுறிகளையும் அதிசயங்களையும் செய்ய முடியாத, மனுஷனுக்குரிய பலவீனத்துடன் கூடிய சாதாரண தேவன், நிச்சயமாக தேவன் இல்லை. இவை மனுஷனின் தவறான கருத்துக்கள் அல்லவா? மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சம் ஒரு சாதாரண மனுஷனாக இல்லையென்றால், அவர் எப்படி மாம்சமாக மாறினார் என்று சொல்ல முடியும்? மாம்சத்தில் இருப்பது என்பது ஒரு வழக்கமான, சாதாரண மனுஷனாக இருக்க வேண்டும்; அவர் தலைசிறந்த ஒருவராக இருந்திருந்தால், அவர் மாம்சத்திலிருந்து வந்திருக்க மாட்டார். அவர் மாம்சத்திலிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க, சாதாரண மாம்சத்தை மனுஷனாக அவதரித்த தேவன் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இது வெறுமனே மனுஷ அவதாரத்தின் முக்கியத்துவத்தை நிறைவு செய்வதற்காக இருந்தது. இருப்பினும், தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட மனுஷர்; மனுஷனின் பார்வையில், அவர்களின் மனுஷத்தன்மை குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக இருந்தது, மேலும் அவர்கள் சாதாரண மனுஷத்தன்மையை விஞ்சும் பல செயல்களைச் செய்தனர். இந்த காரணத்திற்காக, மனுஷன் அவர்களை தேவர்களாகக் கருதினான். இப்போது நீங்கள் அனைவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இது கடந்த காலங்களில் உள்ள எல்லா மனுஷராலும் மிக எளிதாகக் குழப்பிக்கொள்ளப்பட்ட பிரச்சனையாக இருக்கிறது. மேலும், மனுஷ அவதாரம் எல்லாவற்றைக் காட்டிலும் மறைபொருள் மிக்கதாக இருந்து, மேலும் தேவன் மனுஷனாக அவதரித்ததை மனுஷன் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். நான் சொல்வது உங்கள் செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கும் மனுஷ அவதாரத்தின் மறைபொருளை நீங்கள் புரிந்துகொள்வதற்கும் உகந்ததாகும். இவை அனைத்தும் தேவனின் நிர்வாகத்துடன், தரிசனங்களுடன் தொடர்புடையவை ஆகும். இதைப் பற்றிய உங்கள் புரிதல் தரிசனங்களைப் பற்றிய அறிவை, அதாவது தேவனின் நிர்வாகக் கிரியை பற்றிய அறிவைப் பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், நீங்கள் பல்வேறு வகையான ஜனங்கள் செய்ய வேண்டிய கடமையைப் பற்றியும் அதிகப் புரிதலைப் பெறுவீர்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்கு வழியை நேரடியாக காட்டவில்லை என்றாலும், அவை உங்கள் பிரவேசத்திற்குப் பெரிதும் உதவுகின்றன, ஏனென்றால் உங்களது தற்போதைய ஜீவிதங்களில் தரிசனங்கள் அதிகம் இருப்பதில்லை, இப்படியிருந்தால் அது உங்கள் பிரவேசத்தைத் தடுக்கும் குறிப்பிடத்தக்க தடையாக மாறிவிடும். இந்தச் சிக்கல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், உங்கள் பிரவேசத்தைத் துரிதப்படுத்த எந்த உந்துதலும் இருக்காது. இதுபோன்ற ஒரு நோக்கம் உங்கள் கடமையை எவ்வாறு சிறப்பாகச் செய்ய உதவும்?

முந்தைய: தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்

அடுத்த: கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக