கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒரு படிநிலை இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்து முடிக்கப்பட்டது. பொதுவாகச் சொன்னால், இந்த கிரியையின் எந்தக் கட்டமும் இஸ்ரவேலுக்கு வெளியே செய்யப்படவில்லை, ஒவ்வொன்றும் முதலில் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மீதே செய்யப்பட்டது. இதன் பலனாக, யேகோவா தேவன் இஸ்ரவேலருக்கு மட்டுமே தேவன் என்று இஸ்ரவேலர் நம்புகிறார்கள். இயேசு, சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்த யூதேயாவில் அவர் கிரியைப் புரிந்ததால், யூதர்கள் அவரை யூத ஜனங்களின் மீட்பராகக் கருதுகிறார்கள். அவர் யூதர்களுக்கு மட்டுமே ராஜா, வேறு எந்த ஜனங்களுக்கும் இல்லை என்றும், அவர் ஆங்கிலேயர்களை மீட்கும் கர்த்தர் இல்லை, அமெரிக்கர்களை மீட்கும் கர்த்தரும் இல்லை, ஆனால் இஸ்ரவேலரை மீட்கும் கர்த்தர் என்றும்; அவர் இஸ்ரவேலில் மீட்டது யூதர்களையே என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், தேவன் எல்லாவற்றிற்கும் எஜமானர். அவரே சகல சிருஷ்டிகளின் தேவன். அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு மட்டுமோ, யூதர்களுக்கு மட்டுமோ தேவனாக இல்லை; அவர் சகல சிருஷ்டியின் தேவனாக இருக்கிறார். அவருடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்கள் இஸ்ரவேலில் நடந்தன, இது ஜனங்களிடையே சில கருத்துக்களை உருவாக்கியது. யேகோவா இஸ்ரவேலில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், இயேசு தாமே யூதேயாவில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், மேலும், அவர் கிரியை செய்வதற்காக மாம்சமானார் என்றும்—எதுவாக இருந்தாலும், இந்தக் கிரியை இஸ்ரவேலுக்கு அப்பால் பரவவில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தேவன் எகிப்தியர்களிடமோ அல்லது இந்தியர்களிடமோ கிரியையை நடப்பிக்கவில்லை; அவர் இஸ்ரவேலரிடத்தில் மட்டுமே கிரியை செய்தார். இவ்வாறு ஜனங்கள் பல்வேறு கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், மேலும் தேவனின் கிரியையை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் சித்தரிக்கிறார்கள். தேவன் கிரியை செய்யும் போது, தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடமும், இஸ்ரவேலிலும் அவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்; இஸ்ரவேலரைத் தவிர, தேவன் வேறு யாரிடத்திலும் கிரியை செய்வதில்லை, அவருடைய கிரியைக்கு இதைவிட பெரிய நோக்கம் இல்லை என்கின்றனர். மனுவுருவான தேவனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அவர்கள் குறிப்பாக கண்டிப்புடன் இருக்கிறார்கள், மேலும் அவரை இஸ்ரவேலின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல அனுமதிப்பதில்லை. இவை அனைத்தும் மனித கருத்துக்கள் இல்லையா? தேவன் வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், சகல சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார், அதனால் அவர் தனது கிரியையை இஸ்ரவேலுக்கு மட்டும் என்று எப்படி வரையறைப்படுத்த முடியும்? அப்படியானால், சகல சிருஷ்டிகளையும் அவர் சிருஷ்டித்ததன் நோக்கம் என்ன? அவர் உலகம் முழுவதையும் சிருஷ்டித்தார், மேலும் இஸ்ரவேலில் மட்டுமல்ல, அவர் தனது ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தைப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவில் ஜீவிக்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதரும் ஆதாமின் சந்ததியினராய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவராலும் சிருஷ்டிப்பின் எல்லையிலிருந்து தப்ப முடியாது, அவர்களில் ஒருவர் கூட “ஆதாமின் சந்ததியினர்” என்ற அடையாளத்திலிருந்து தங்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் அனைவரும் தேவனின் சிருஷ்டிகள், அவர்கள் அனைவரும் ஆதாமின் சந்ததியினர், அவர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளின் சீர்கெட்ட சந்ததியினரும் ஆவர். தேவனின் சிருஷ்டியாக இருப்பது இஸ்ரவேலர் மட்டுமல்ல, சகல ஜனங்களும்தான்; இதில் சிலர் சபிக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிலர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இஸ்ரவேலரைப் பற்றி ஏற்றுக்கொள்ளக் கூடிய பல காரியங்கள் உள்ளன; தொடக்கத்தில் தேவன் அவர்கள் மீது கிரியைப் புரிந்தார், ஏனென்றால் அவர்கள் குறைவாக சீர்கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் ஒப்பிட சீனர்கள் தகுதியற்றவர்கள்; அவர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள். ஆகவே, தேவன் ஆரம்பத்தில் இஸ்ரவேல் ஜனங்களிடையே கிரியை செய்தார், அவருடைய இரண்டாம் கட்டக் கிரியை யூதேயாவில் மட்டுமே நிறைவேற்றப்பட்டது—இது மனிதர்களிடையே நிறைய கருத்துக்களுக்கும் விதிகளுக்கும் வழிவகுத்தது. உண்மையில், தேவன் மனிதக் கருத்துக்களின்படி செயல்பட வேண்டுமானால், அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், இதனால் அவர் தனது கிரியையை புறஜாதியின தேசங்களுக்கு இடையே விரிவுபடுத்த இயலாது, ஏனெனில் அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், மேலும் சகல சிருஷ்டிகளின் தேவனாக இருக்க மாட்டார். யேகோவாவின் பெயர் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் பிரசித்திப்படுத்தப்படும், அது புறஜாதியின தேசங்களுக்கும் பரப்பப்படும் என்று தீர்க்கதரிசனங்கள் கூறின. இந்தத் தீர்க்கதரிசனம் ஏன் உரைக்கப்பட்டது? தேவன் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருந்தால், அவர் இஸ்ரவேலில் மட்டுமே கிரியை புரிவார். மேலும், அவர் இந்த கிரியையைப் பரப்ப மாட்டார் மற்றும் அத்தகைய தீர்க்கதரிசனத்தை அவர் உரைக்கமாட்டார். அவர் இந்தத் தீர்க்கதரிசனத்தை உரைத்தது முதற்கொண்டே, அவர் நிச்சயமாக தனது கிரியையைப் புறஜாதி தேசங்கள் நடுவிலும், அனைத்து தேசங்களிலிலும் மற்றும் அனைத்து நாடுகளிலும் பரப்புவார். அவர் இதைச் சொன்னதால், அவர் அதைச் செய்ய வேண்டும்; இது அவருடைய திட்டம், ஏனென்றால் அவரே வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த கர்த்தராக இருக்கிறார், மேலும் அவரே சகல சிருஷ்டிகளுக்கும் தேவன். அவர் இஸ்ரவேலர்கள் நடுவிலோ அல்லது யூதேயா முழுவதிலுமோ கிரியை செய்தாலும், அவர் செய்யும் கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், மற்றும் முழு மனிதகுலத்தின் கிரியையாகவும் இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில்—ஒரு புறஜாதியின தேசத்தில்—அவர் செய்கிற கிரியை இன்னும் சகல மனித குலத்தின் கிரியையாக இருக்கிறது. பூமியில் அவரது கிரியைக்கு இஸ்ரவேல் அடித்தளமாக இருக்கக்கூடும்; அதேபோல், புறஜாதியின தேசங்களுக்கு நடுவிலான அவருடைய கிரியைக்குச் சீனாவும் அடித்தளமாக இருக்க முடியும். “புறஜாதி தேசங்களுக்கு நடுவில் யேகோவாவின் நாமம் பிரசித்திப்படுத்தப்படும்” என்ற தீர்க்கதரிசனத்தை அவர் இப்போது நிறைவேற்றவில்லையா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் அவர் செய்கிற இந்தக் கிரியைதான் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் அவரது கிரியையின் முதல் படியாகும். மனுவுருவான தேவன் இந்தத் தேசத்தில் கிரியை செய்ய வேண்டும், மற்றும் இந்தச் சபிக்கப்பட்ட ஜனங்களுக்கு நடுவிலும் கிரியை செய்ய வேண்டும் என்பது குறிப்பாக மனித கருத்துக்களுடன் முரண்படுகிறது; இவர்கள் அனைவரையும் விட கீழ்த்தரமான ஜனங்கள், அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை, ஆரம்பத்தில் இவர்கள் யேகோவாவால் கைவிடப்பட்டார்கள். ஜனங்கள் மற்றவர்களால் கைவிடப்படக் கூடும், ஆனால் அவர்கள் தேவனால் கைவிடப்பட்டால், அந்தஸ்தில்லாதவர்களாகவும், பாக்கியமற்றவர்களாகவும் அவர்களைவிட வேறு யாரும் இருக்கமாட்டார்கள். தேவனின் ஒரு சிருஷ்டியைப் பொறுத்தவரை, சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பது அல்லது ஜனங்களால் கைவிடப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது—ஆனால் ஓர் உயிரினம் சிருஷ்டிகரால் கைவிடப்படுவது என்பதன் அர்த்தம் அவர்களுக்கு இதைவிட குறைந்த அந்தஸ்து இருக்க முடியாது என்பதாகும். மோவாபின் சந்ததியினர் சபிக்கப்பட்டார்கள், அவர்கள் இந்த பின்தங்கிய தேசத்தில் பிறந்தார்கள்; எந்த சந்தேகமுமின்றி, இருளின் ஆதிக்கத்தின் கீழுள்ள சகல ஜனங்களிலும், மோவாபின் சந்ததியினர் மிகவும் தாழ்ந்த அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். இந்த ஜனங்கள் இதற்கு முன் தாழ்நிலையில் இருந்ததால், அவர்கள் மீது செய்யப்படும் கிரியை மனித கருத்துக்களை உடைத்தெறிவதற்கு சிறந்தவையாகும், மேலும் தேவனின் ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் முழுவதற்கும் இது மிகவும் பயனளிக்கிறது. இந்த ஜனங்களுக்கு நடுவில் இத்தகைய கிரியையைச் செய்வது மனித கருத்துக்களை உடைத்தெறிவதற்கான சிறந்த வழியாகும், இதன் மூலம் தேவன் ஒரு யுகத்தைத் தொடங்குகிறார்; இதன் மூலம் அவர் அனைத்து மனிதக் கருத்துக்களையும் உடைத்தெறிகிறார்; இதன் மூலம் அவர் கிருபை யுகத்தின் முழு கிரியையையும் முடிவுக்குக் கொண்டு வருகிறார். அவரது முதல் கிரியை யூதேயாவில், இஸ்ரவேலின் எல்லைக்குள், செய்யப்பட்டது; புதிய யுகத்தைத் தொடங்க, புறஜாதியினத்தாருக்கு நடுவில் அவர் எந்த கிரியையும் செய்யவில்லை. கிரியையின் இறுதிக் கட்டம் புறஜாதியினத்தாருக்கு நடுவில் மட்டுமல்லாமல், சபிக்கப்பட்டவர்களிடையேயும் கூட அதிகமாகச் செய்யப்படுகிறது. இந்த ஒரு காரணம் சாத்தானை அவமானப்படுத்த மிகவும் தகுதியான சான்றாகும், மற்றும் இவ்வாறு, பிரபஞ்சத்தில் உள்ள சகல சிருஷ்டிகளின் தேவனாகவும், எல்லாவற்றிற்கும் கர்த்தராகவும், ஜீவனுள்ள அனைத்துக்கும் தொழுதுகொள்வதற்குரிய பொருளாகவும் தேவன் “ஆகுகிறார்”.

இன்று, தேவன் எந்தப் புது கிரியையைத் தொடங்கியுள்ளார் என இன்னும் புரியாதவர்கள் இருக்கிறார்கள். புறஜாதி தேசங்களுக்கு நடுவில், தேவன் ஒரு புதுத் தொடக்கத்தை ஆரம்பித்துள்ளார். அவர் ஒரு புது யுகத்தைத் தொடங்கியுள்ளார், மேலும் புதுக் கிரியையைத் தொடங்கியுள்ளார்—மோவாபின் சந்ததியினர் மீது அவர் இந்தக் கிரியையைச் செய்கிறார். இது அவருடைய புத்தம்புதுக் கிரியை அல்லவா? வரலாறு முழுவதும் இந்தக் கிரியையை யாரும் இதற்கு முன்பு உணர்ந்ததில்லை. யாரும் அதைக் கேள்விப்பட்டதுமில்லை, அதை யாரும் பாராட்டியதுமில்லை. இறுதி நாட்களின் கிரியையான இந்தக் கட்டக் கிரியை மூலம் தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் புரிந்துகொள்ள முடியாத தன்மை, தேவனின் மகத்துவம் மற்றும் தேவனின் பரிசுத்தத்தன்மை அனைத்தும் வெளிப்படுகின்றன. இது மனிதக் கருத்துக்களை உடைத்தெறியும் புதுக் கிரியை அல்லவா? இவ்வாறு நினைப்பவர்கள் இருக்கிறார்கள்: “தேவன் மோவாபைச் சபித்து, மோவாபின் சந்ததியினரைக் கைவிடுவார் என்று சொன்னதால், இப்போது அவரால் அவர்களை எப்படி இரட்சிக்க முடியும்?” தேவனால் சபிக்கப்பட்டு இஸ்ரவேலிலிருந்து விரட்டப்பட்ட புறஜாதியினர் இவர்கள்; இஸ்ரவேலர் இவர்களை “புறஜாதி நாய்கள்” என்று அழைத்தனர். அனைவருடைய பார்வையிலும், அவர்கள் புறஜாதி நாய்கள் மட்டுமல்ல, அதைவிட மோசமாக, அழிவின் புத்திரர்கள் ஆவர்; அதாவது, அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அல்லர். அவர்கள் இஸ்ரவேலின் எல்லைகளுக்குள் பிறந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்லர், மேலும் புறஜாதி தேசங்களுக்குத் துரத்தப்பட்டனர். அவர்கள் அனைத்து ஜனங்களிலும் தாழ்ந்தவர்கள். சரியாக அவர்கள் மனிதகுலத்தின் நடுவில் தாழ்ந்தவர்களாக இருப்பதால், அவர்களிடையே ஒரு புது யுகத்தைத் தொடங்குவதற்கான தனது கிரியையை தேவன் செய்கிறார், ஏனென்றால் அவர்கள் சீர்கெட்ட மனிதகுலத்தின் பிரதிநிதிகள் ஆவர். தேவனின் கிரியை தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மற்றும் இலக்கை நோக்கியதாகவும் இருக்கிறது; இன்று இந்த ஜனங்களில் அவர் செய்யும் கிரியை சிருஷ்டிப்பின் மீது செய்யப்படும் கிரியையாகவும் உள்ளது. நோவா அவருடைய சந்ததியினரைப் போலவே தேவனின் சிருஷ்டியாக இருந்தார். இந்த உலகில் மாம்சமும் இரத்தமும் கொண்ட எவரும் தேவனின் சிருஷ்டிகளாக இருக்கிறார்கள். தேவனின் கிரியை சகல சிருஷ்டிப்புகளையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது; இது யாராவது சிருஷ்டிக்கப்பட்ட பிறகு அவர்கள் சபிக்கப்படுகிறார்களா என்பதைச் சார்ந்தது அல்ல. அவரது இரட்சிப்பின் கிரியை சகல சிருஷ்டிப்புகளையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது, சபிக்கப்படாத தெரிந்துகொள்ளப்பட்ட அந்த ஜனங்களை அல்ல. தேவன் தம்முடைய கிரியையை அவருடைய சிருஷ்டிப்புகளின் நடுவில் நிறைவேற்ற விரும்புவதால், உறுதியாக அவர் அதை வெற்றிகரமாக நிறைவு செய்வார், மேலும் அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும் ஜனங்களின் நடுவில் அவர் கிரியை செய்வார். எனவே, அவர் ஜனங்களுக்கு நடுவில் கிரியை செய்யும்போது, அனைத்து மரபுகளையும் உடைத்தெறிகிறார்; அவரைப் பொறுத்தவரை, “சபிக்கப்பட்ட,” “சிட்சிக்கப்பட்ட” மற்றும் “ஆசீர்வதிக்கப்பட்ட” ஆகிய வார்த்தைகள் அர்த்தமற்றவை! இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் போலவே யூத ஜனங்களும் நல்லவர்கள்; அவர்கள் நல்ல திறமை மற்றும் மனிதநேயம் கொண்டவர்கள். ஆரம்பத்தில், அவர்கள் நடுவில்தான் யேகோவா தம்முடைய கிரியையைத் தொடங்கினார், மேலும் அவருடைய ஆரம்பகாலக் கிரியையைச் செய்தார்—ஆனால் இன்று அவர்களை ஜெயிப்பதற்கான கிரியையைச் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். அவர்களும், சிருஷ்டிப்பின் ஓர் அங்கமாக இருக்கலாம், மேலும் அவர்களைப் பற்றிய நேர்மறையான காரியங்கள் பல இருக்கலாம், ஆனால் அவர்கள் நடுவில் இந்த கட்டக் கிரியையைச் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும்; தேவனால் ஜனங்களை ஆட்கொள்ள முடியாது, அனைத்து சிருஷ்டிகளையும் அவர் நம்ப வைக்க முடியாது, இது துல்லியமாக ஒரு சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தின் ஜனங்களுக்குத் தனது கிரியையை மாற்றுவதற்கான அம்சமாகும். அவர் ஒரு யுகத்தைத் தொடங்குவதும், எல்லா விதிகளையும், அனைத்து மனிதக் கருத்துக்களையும் அவர் உடைத்தெறிவதும் மற்றும் கிருபையின் முழு யுகத்தினுடைய அவருடைய கிரியையை அவர் முடித்ததும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அவருடைய தற்போதைய கிரியை இஸ்ரவேலரின் நடுவில் செய்யப்பட்டால், அவருடைய ஆறாயிரம் ஆண்டு இரட்சிப்பின் திட்டம் இறுதியை நெருங்கும் நேரத்தில், ஒவ்வொருவரும் தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமே என்றும், இஸ்ரவேலர் மட்டுமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும், இஸ்ரவேலர் மட்டுமே தேவனின் ஆசீர்வாதங்களையும் வாக்குதத்தத்தையும் பெறத் தகுதியானவர்கள் என்றும் நம்புவார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் என்னும் புறஜாதி தேசத்தில் கடைசி நாட்களில் தேவனின் மனுஷ ரூபமெடுத்தலானது தேவனே அனைத்து சிருஷ்டிப்புகளின் தேவன் என்ற கிரியையை நிறைவேற்றுகிறது; அவர் தனது முழு நிர்வாகப் பணியை முழுவதுமாக முடிக்கிறார், மேலும் அவர் தனது கிரியையின் மையப் பகுதியை சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் முடிக்கிறார். இந்த மூன்று நிலைகளின் முக்கியக் கரு மனிதனின் இரட்சிப்பாகும்—அதாவது, சகல சிருஷ்டிப்பையும் சிருஷ்கரைத் தொழுதுகொள்ளச் செய்வதாகும். இவ்வாறு, கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பெரிதான அர்த்தம் உள்ளது; தேவன் அர்த்தமில்லாத அல்லது பெறுமதியில்லாத எதையும் செய்வதில்லை. ஒருபுறம், கிரியையின் இந்தக் கட்டம் ஒரு புது யுகத்தை ஆரம்பித்து, முந்தைய இரண்டு யுகங்களையும் முடிக்கின்றது; மறுபுறம், இது அனைத்து மனிதக் கருத்துக்களையும், மனித நம்பிக்கை மற்றும் அறிவின் பழைய முறைகளையும் உடைத்தெறிகிறது. முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகள் பல்வேறு மனிதக் கருத்துக்களின்படி செய்யப்பட்டன; எவ்வாறாயினும், இந்தக் கட்டம் மனித கருத்துக்களை முற்றிலுமாக நீக்குகிறது, இதன் மூலம் மனிதகுலத்தை முற்றிலுமாக வென்று அடைகிறது. மோவாபின் சந்ததியினரை ஆட்கொள்வதன் மூலமும், மோவாபின் சந்ததியினர் நடுவில் செய்து முடிக்கப்பட்ட கிரியையின் மூலமும், தேவன் பிரபஞ்சம் முழுவதும் உள்ள சகல ஜனங்களையும் வெல்வார். இதுவே இந்தக் கட்டத்தில் அவரது கிரியையின் ஆழமான முக்கியத்துவமாக இருக்கிறது, மேலும் இது இந்தக் கட்டத்தில் அவரது கிரியையின் அதிக விலையேறப்பெற்ற அம்சமாகும். உனது சொந்த நிலை தாழ்வானது, மற்றும் நீ குறைந்த மதிப்புடையவன் என்பதை இப்போது நீ அறிந்திருந்தாலும், நீ மிகவும் மகிழ்ச்சியானவற்றை அடைந்ததாக நீ இன்னும் உணருவாய்: நீ ஒரு பெரிய ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்திருக்கிறாய், ஒரு பெரிய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறாய், மேலும் தேவனின் இந்த மகத்தான கிரியையை நிறைவேற்றி முடிக்க உன்னால் உதவ முடியும். தேவனின் உண்மையான முகத்தோற்றத்தை நீ கண்டுள்ளாய், தேவனின் உள்ளார்ந்த மனநிலையை நீங்கள் அறிவீர்கள், தேவனின் சித்தத்தை நீங்கள் செய்கிறீர்கள். தேவனுடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்கள் இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டன. கடைசி நாட்களின்போது அவருடைய கிரியையின் இந்தக் கட்டம் இஸ்ரவேலர் நடுவில் செய்யப்பட்டிருந்தால், இஸ்ரவேலர் மட்டுமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்று சகல சிருஷ்டிகளும் நம்புவதோடு மட்டுமல்லாமல், தேவனின் முழு நிர்வாகத் திட்டமும் அதன் பலனை அடையத் தவறி விடும். அவருடைய கிரியையின் இரண்டு கட்டங்கள் இஸ்ரவேலில் செய்யப்பட்ட காலகட்டத்தில், புறஜாதி தேசங்களுக்கு மத்தியில் ஒரு புதுக் கிரியையோ அல்லது ஒரு புது சகாப்தத்தைத் தொடங்குவதற்கான எந்தவொரு கிரியையோ செய்யப்படவில்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் கிரியையான இன்றைய கிரியையின் நிலை முதலில் புறஜாதி தேசங்களுக்கு நடுவில் செய்யப்பட்டது, மேலும், இது ஆரம்பத்தில் மோவாபின் சந்ததியினரிடையே செய்யப்பட்டது, இதனால் முழு யுகமும் தொடங்கப்பட்டது. மனித கருத்துக்களில் உள்ள எந்த அறிவையும் தேவன் உடைத்தெறிந்து, அது எதனையும் இருக்க அனுமதிக்கவில்லை. அவருடைய ஜெயத்தின் கிரியையில், மனிதக் கருத்துக்களை, அந்தப் பழைய, முந்தைய மனித அறிவின் வழிகளை அவர் உடைத்தெறிந்து விட்டார். தேவனுக்கு எந்த விதிகளும் இல்லை என்றும், தேவனைப் பற்றி பழையது எதுவுமில்லை என்றும், அவர் செய்கிற கிரியை முற்றிலும் விடுதலையானது, முற்றிலும் சுதந்திரமானது என்றும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவர் சரியானவர் என்றும் அவர் ஜனங்களைக் காண அனுமதிக்கிறார். சிருஷ்டிகள் மத்தியில் அவர் செய்யும் எந்தக் கிரியைக்கும் நீ முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அவர் செய்யும் அனைத்து கிரியைக்கும் அர்த்தம் உண்டு, அது அவருடைய சொந்த சித்தத்திற்கும் ஞானத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது, ஆனால் மனிதத் தேர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் ஏற்ப அல்ல. அவருடைய கிரியைக்கு ஏதாவது நன்மையாக இருந்தால், அவர் அதைச் செய்கிறார்; அவருடைய கிரியைக்கு ஏதாவது நன்மையாக இல்லாவிடில், அது எவ்வளவு நல்லது என்றாலும் அவர் அதனைச் செய்வதில்லை! அவர் தமது கிரியையின் அர்த்தம் மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப கிரியை செய்கிறார் மற்றும் பெறுநர்களையும் கிரியைக்கான இருப்பிடத்தையும் தேர்வு செய்கிறார். அவர் கிரியை செய்யும் போது கடந்த கால விதிகளைக் கடைபிடிப்பதும் இல்லை, பழைய சூத்திரங்களைப் பின்பற்றுவதும் இல்லை. அதற்குப் பதிலாக, கிரியையின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அவர் தனது கிரியையைத் திட்டமிடுகிறார். இறுதியில், அவர் ஓர் உண்மையான பலனையும், எதிர்பார்த்த இலக்கையும் அடைவார். இந்தக் காரியங்களை நீ இன்று புரிந்துகொள்ளாவிட்டால், இந்தக் கிரியை உனக்குள் எந்தப் பலனையும் தராது.

முந்தைய: மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு

அடுத்த: ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக