ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயங்கொள்ளும் கிரியையின் நோக்கம் என்னவென்றால் மனுஷனின் மாம்சம் இனி கலகம் செய்யக்கூடாது என்பதாகும்; அதாவது, மனுஷனின் மனம் தேவனைப் பற்றிய புதிய அறிவைப் பெற வேண்டும், மனுஷனின் இருதயம் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும், மற்றும் மனுஷன் தேவனுக்காக வாழ வாஞ்சிக்க வேண்டும். ஜனங்கள் தங்கள் மனோபாவம் அல்லது மாம்சம் மாறும்போது தாங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதாக எண்ணுவதில்லை; மனுஷனின் சிந்தனை, மனுஷனின் உணர்வு மற்றும் மனுஷனின் அறிவு மாறும்போது, அதாவது, உனது முழு மனப்பாங்கும் மாறும்போது—இதெல்லாம் நீ தேவனால் ஜெயங்கொள்ளப்படும்போது ஏற்படும். நீங்கள் கீழ்ப்படிய தீர்மானித்ததும், ஒரு புதிய மனநிலையைப் பின்பற்றத் துவங்கியதும், தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் நீங்கள் இனி உங்கள் சொந்தக் கருத்துக்களையோ நோக்கங்களையோ கொண்டு வராதபோது, உங்கள் மூளை இயல்பாக சிந்திக்கும்போது—அதாவது, நீங்கள் முழு இருதயத்தோடு தேவனுக்காக உங்களைப் பயன்படுத்தும்போது—நீங்கள் முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்ட நபராக இருக்கிறீர்கள். மதத்தில், அநேகர் தங்கள் ஜீவிதங்கள் முழுவதும் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்: அவர்கள் தங்கள் சரீரங்களை அடக்கி, தங்கள் சிலுவையைச் சுமக்கிறார்கள், மேலும் அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போதும் அவர்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள், சகித்துக்கொள்கிறார்கள்! சிலர் தங்கள் மரித்துப்போன காலை நேரத்தில் இன்னும் உபவாசம் இருக்கிறார்கள். அவர்கள் ஜீவித்திருக்கும் வரை அவர்கள் நல்ல உணவைப் புசிக்காமலிருந்து, ஆடைகளை அணியவும் மறுத்து, துன்பப்படுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அவர்களால் சரீரத்தை அடக்கி, மாம்சத்தைக் கைவிட முடிகிறது. துன்பங்களைத் தாங்குவதற்கான அவர்களின் மனநிலை பாராட்டத்தக்கது. ஆனால் அவர்களின் சிந்தனை, அவர்களின் கருத்துக்கள், அவர்களின் மனப்பான்மை மற்றும் நிச்சயமாக அவர்களின் பழைய சுபாவம் ஆகியவை சிறிதளவும் கையாளப்படவில்லை. அவர்கள் தங்களைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்களது மனதில் கொண்டுள்ள தேவனின் மனநிலை உருவமானது பாரம்பரியமானதாக, தெளிவற்றதாக இருக்கிறது. தேவனுக்காகத் துன்பப்படுவதற்கான அவர்களின் தீர்மானம் அவர்களின் வைராக்கியத்திலிருந்தும், அவர்களின் மனிதத்தன்மை என்னும் நல்ல குணத்திலிருந்தும் வருகிறது. அவர்கள் தேவனை விசுவாசித்தாலும், அவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவோ, அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளவோ இல்லை. அவர்கள் வெறுமனே கிரியை செய்து, தேவனுக்காகக் கண்மூடித்தனமாக துன்பப்படுகிறார்கள். அவர்கள் விவேகத்துக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை, அவர்களின் ஊழியம் உண்மையில் தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை, மேலும் தேவனின் அறிவை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் ஊழியம் செய்யும் தேவன் அவருடைய இயல்பான உருவத்தில் இருக்கும் உண்மையான தேவன் அல்ல, ஆனால் அவர்கள் கேள்விப்பட்ட அல்லது புராணக்கதைகளில் வாசித்த, அவர்கள் கற்பனை செய்த தேவனாக இருக்கிறார். பின்னர் அவர்கள் தங்கள் வளமான கற்பனைகளையும் பக்தியையும் தேவனுக்காகக் கஷ்டப்படுவதற்கும், தேவன் செய்ய விரும்பும் தேவனின் கிரியையை மேற்கொள்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஊழியம் மிகவும் துல்லியமற்றதாக இருக்கிறது, அதாவது நடைமுறையில் அவர்களில் எவரும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ப உண்மையிலேயே ஊழியம் செய்ய முடிவதில்லை. அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கஷ்டப்பட்டாலும், ஊழியம் பற்றிய அவர்களின் உண்மையான கண்ணோட்டமும், தேவன் என்று அவர்கள் மனதில் கொண்டுள்ள உருவமும் மாறாமல் இருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் தேவனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, சுத்திகரிப்பு மற்றும் பரிபூரணத்தை அனுபவிக்கவில்லை, மேலும் சத்தியத்தைப் பயன்படுத்தி யாரும் அவர்களை வழிநடத்தவும் இல்லை. இரட்சகராகிய இயேசுவை அவர்கள் விசுவாசித்தாலும், அவர்களில் யாரும் இரட்சகரைப் பார்த்ததில்லை. புராணக்கதை மற்றும் செவிவழியாக மட்டுமே அவர்கள் அவரை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, ஒரு குருட்டு மனுஷன் தனது சொந்தத் தந்தைக்கு ஊழியம் செய்வது போல, கண்களை மூடிக்கொண்டு தோராயமாக ஊழியம் செய்வதைப் போல இது இருக்கிறது. அத்தகைய ஊழியத்தால் இறுதியில் எதை அடைய முடியும்? அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? ஆதி முதல் அந்தம் வரை, அவர்களின் ஊழியம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது; அவர்கள் மனுஷனால் உருவாக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பெறுகிறார்கள், மேலும் அவர்களின் ஊழியமானது அவர்களின் இயல்பான தன்மை மற்றும் அவர்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. இது என்ன வெகுமதியைக் கொடுக்க முடியும்? இயேசுவைக் கண்ட பேதுருவுக்கு கூட, தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்வது எப்படி என்று தெரியவில்லை; அவன் தனது வயதான காலத்தில் மட்டுமே இதை அறிந்துகொண்டான். சிறிதளவு கூட கையாளப்படுவதை அல்லது கத்தரிக்கப்படுவதை அனுபவிக்காத, மற்றும் தங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத அந்தக் குருடர்களைப் பற்றி இது என்ன கூறுகிறது? உங்களில் பலர் இன்று செய்யும் ஊழியம் இந்த குருடர்களின் ஊழியத்தை போன்றிருக்கிறது அல்லவா? நியாயத்தீர்ப்பைப் பெறாதவர்கள், கத்தரித்தல் மற்றும் கையாளுதலை பெறாதவர்கள், மாறாதவர்கள்—அவர்கள் அனைவரும் அரைகுறையாக ஜெயங்கொள்ளப்படவில்லையா? அத்தகையவர்களால் என்ன பயன்? உனது சிந்தனை, உனது ஜீவித அறிவு, மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஆகியவை புதிய மாற்றங்களைக் காட்டவில்லை என்றால், நீ உண்மையிலேயே எதையும் பெறவில்லை என்றால், நீ உனது ஊழியத்தில் குறிப்பிடத்தக்க எதையும் அடைய மாட்டாய்! தேவனின் கிரியை பற்றிய ஒரு பார்வை மற்றும் புதிய அறிவு இல்லாமல், நீ ஜெயங்கொள்ளப்படவில்லை. தேவனை பின்பற்றுவதற்கான உனது வழி பின்னர் துன்பப்படுபவர்களைப் போலவும் உபவாசம் இருப்பவர்களை போலவும் இருக்கும்: மதிப்பற்றதாக இருக்கும்! துல்லியமாக இது ஏனென்றால், அவர்கள் செய்வதில் சிறிதளவு சாட்சியங்கள்தான் இருக்கின்றன, அதனாலேயே அவர்களின் ஊழியம் பயனற்றது என்று நான் சொல்கிறேன்! தங்கள் ஜீவியம் முழுவதிலும் துயரத்திலும், சிறையில் நேரத்தைச் செலவிடுகிறார்கள்; அவர்கள் எப்போதும் சகிப்புத்தன்மையுள்ளவர்கள், அன்பானவர்கள், அவர்கள் எப்போதுமே சிலுவையைச் சுமக்கிறார்கள், அவர்கள் ஏளனம் செய்யப்படுகிறார்கள், உலகத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள், அவர்கள் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள், அவர்கள் கடைசிவரை கீழ்ப்படிந்தாலும், அவர்கள் இன்னும் ஜெயங்கொள்ளப்படவில்லை, மேலும் அவர்களால் ஜெயங்கொள்ளப்படுவதற்கான எந்தச் சாட்சியமும் அளிக்க முடியாது. அவர்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்களுக்கு தேவனைத் தெரியாது. அவர்களின் பழைய சிந்தனை, பழைய கருத்துக்கள், மத நடைமுறைகள், மனுஷனால் உருவாக்கப்பட்ட அறிவு மற்றும் மனுஷக் கருத்துக்கள் எதுவும் கையாளப்படவில்லை. அவர்களுக்குள் புதிய அறிவிற்கான சிறிதளவு குறிப்பு கூட இல்லை. தேவனைப் பற்றிய அவர்களின் சிறிதளவு அறிவில் கூட உண்மையோ அல்லது துல்லியமோ இருப்பதில்லை. அவர்கள் தேவனின் சித்தத்தைத் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதுதான் தேவனுக்கு ஊழியம் செய்வதா? கடந்த காலங்களில் தேவனைப் பற்றிய உனது அறிவு எதுவாக இருந்திருந்தாலும், அது இன்றும் அப்படியே இருந்தால், தேவன் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நீ தேவன் பற்றிய உனது அறிவை உன் சொந்தக் கருத்துக்கள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் புரிந்துகொண்டிருந்தால், அதாவது நீ தேவன் பற்றிய புது, உண்மையான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனின் உண்மையான உருவத்தையும் மனநிலையையும் நீ அறியத் தவறினால், தேவனை பற்றிய உனது அறிவு நிலப்பிரபுத்துவ, மூடநம்பிக்கை சிந்தனையால் வழிநடத்தப்பட்டு, இன்னும் மனுஷனின் கற்பனை மற்றும் கருத்துக்கள் மூலம் பிறந்தால், நீ இன்னும் ஜெயங்கொள்ளப்படவில்லை என்று அர்த்தமாகும். நான் உன்னிடம் இத்தனை வார்த்தைகளயும் சொல்வது நீ அறிந்து கொள்வதற்காகும், இந்த அறிவைக் கொண்டிருப்பது உன்னை புதிய, சரியான அறிவுக்கு இட்டுச் செல்லும்; அவை நீ புதிய அறிவைப் பெறுவதற்கும், பழைய கருத்துக்களையும், உன்னில் இருக்கும் பழைய அறிவையும் ஒழிப்பதற்குமாகும். நீ உண்மையிலேயே என் வார்த்தைகளைப் புசித்துப் பருகினால், உனது அறிவு கணிசமாக மாறும். கீழ்ப்படியும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை நீ புசித்துப் பருகும்வரை, உனது கண்ணோட்டம் தலைகீழாக மாறுபடும். நீ மீண்டும் மீண்டும் சிட்சைகளை ஏற்றுக்கொள்ளும்வரை, உனது பழைய மனப்பான்மை படிப்படியாக மாறுபடும். உனது பழைய மனப்பான்மை புதியவற்றுடன் முழுமையாக மாற்றப்படும் வரை, உனது நடைமுறையும் அதற்கேற்ப மாறுபடும். இவ்வாறாக, உனது ஊழியம் பெருகிய முறையில் இலக்கை நோக்கிச் செல்லும், மேலும் தேவனின் சித்தத்தையும் உனது ஊழியத்தால் நிறைவேற்ற முடியும். உன்னால் உனது ஜீவிதத்தையும், மனுஷ ஜீவிதம் பற்றிய உனது அறிவையும், தேவனை பற்றிய உனது பலவகை கருத்துக்களையும் மாற்ற முடிந்தால், உனது இயல்பான தன்மை படிப்படியாக குறையும். தேவன் ஜனங்களை ஜெயங்கொள்வதன் விளைவு இதுதான், இதற்குக் குறைவானது எதுவுமில்லை. இதுவே ஜனங்களிடையே ஏற்படும் மாற்றம். தேவன் மீதான உனது விசுவாசத்தில், உனக்குத் தெரிந்ததெல்லாம் உனது உடலைத் தாழ்த்தி, சகித்துக்கொள்வதும், துன்பப்படுவதும் மட்டும் தான், அது சரியா அல்லது தவறா என்று உனக்குத் தெரியாது, மேலும் அது யாருடைய பொருட்டு செய்யப்படுகிறது என்பதும் உனக்குத் தெரியாது, பிறகு எப்படி அத்தகைய பயிற்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்?

நான் உங்களிடம் கேட்பது உங்கள் மாம்சத்தை அடிமைத்தனத்தில் வைத்திருப்பதற்கோ அல்லது உங்கள் மூளை தன்னிச்சையான எண்ணங்களை சிந்திப்பதைத் தடுப்பதற்கோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இது கிரியையின் குறிக்கோளோ, இப்போது செய்ய வேண்டிய கிரியையோ அல்ல. இப்போது, நேர்மறையான அம்சம் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும், இதன்மூலம் நீங்களே உங்களை மாற்றிக் கொள்ள முடியும். மிகவும் அவசியமான செயல் என்னவென்றால், நீங்கள் தேவனின் வார்த்தைகளால் உங்களைச் சித்தப்படுத்திக் கொள்ளுங்கள், அதாவது தற்போதைய சத்தியத்தையும் தரிசனத்தையும் கொண்டு உங்களை முழுமையாகச் சித்தப்படுத்திக் கொண்டு, அதன்பின்னர் முன்னேறிச் சென்று அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். இதுதான் உங்கள் பொறுப்பாகும். இதைவிட பெரிய வெளிச்சத்தைத் தேடவும் பெறவும் நான் உங்களிடம் கேட்கவில்லை. தற்போது, அதற்கான வளர்ச்சி உங்களிடம் இல்லை. உங்களால் முடிந்தவரை தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் பருகவும் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும், இதுதான் உங்களிடமிருந்து தேவைப்படுகிறது. நீங்கள் தேவனின் கிரியையைப் புரிந்துகொண்டு, உங்கள் சுபாவம், உங்கள் சாராம்சம் மற்றும் உங்களுடைய பழைய ஜீவிதத்தை அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் ஈடுபட்ட தவறான முட்டாள்தனமான கடந்தகால நடைமுறைகளையும், மனுஷச் செயல்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாறுதலானது, உங்கள் சிந்தனையை மாற்றுவதன் மூலம் தொடங்க வேண்டும். முதலில், உங்கள் பழைய சிந்தனையைப் புதியதாக மாற்றுங்கள், உங்கள் புதிய சிந்தனை உங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் உங்கள் ஜீவிதத்தையும் நிர்வகிக்கட்டும். இன்று உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படுவது இதுதான். கண்மூடித்தனமாகப் பயிற்சி செய்ய வேண்டாம் அல்லது கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம். உங்களுக்கு ஓர் அடிப்படை மற்றும் இலக்கு இருக்க வேண்டும். உங்களை நீங்களே முட்டாளாக்காதீர்கள். நீங்கள் எதற்காக தேவனை விசுவாசிக்கிறீர்கள், அதிலிருந்து எதைப் பெற வேண்டும், மேலும் இப்போது நீங்கள் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பனவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் நீ அறிந்து கொள்வது கட்டாயமாகும்.

தற்போது நீங்கள் பிரவேசிக்க வேண்டியது உங்கள் ஜீவிதத்தை உயர்த்துவதும், உங்கள் திறனை உயர்த்துவதும்தான். மேலும், உங்கள் கடந்த காலத்துப் பழைய கண்ணோட்டங்களை மாற்ற வேண்டும், உங்கள் சிந்தனையை மாற்ற வேண்டும், மேலும் உங்கள் கருத்துக்களையும் மாற்ற வேண்டும். உங்கள் முழு ஜீவிதமும் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவனின் செயல்களைப் பற்றிய உனது அறிவு மாறும்போது, தேவன் சொல்லும் எல்லாவற்றையும் பற்றிய சத்தியத்தைக் குறித்தப் புதிய அறிவைப் பெறும்போது, உனக்குள் உள்ள அறிவு உயர்த்தப்படும்போது, உனது ஜீவிதத்தில் சிறப்பான ஒரு திருப்பம் ஏற்படும். ஜனங்கள் இப்போது செய்யும் மற்றும் சொல்லும் சகல காரியங்களும் நடைமுறைக்குரியவை. இவை கோட்பாடுகள் அல்ல, மாறாக இவை ஜனங்களின் ஜீவிதத்திற்குத் தேவையானவை, அவை அவர்கள் வைத்திருக்க வேண்டிய காரியங்களாகும். ஜெயங்கொள்ளும் கிரியையின் போது ஜனங்களிடையே ஏற்படும் மாற்றம் இதுதான், ஜனங்கள் அனுபவிக்க வேண்டிய மாற்றமும் இதுதான், அவர்கள் ஜெயங்கொள்ளப்பட்ட பின் ஏற்படும் விளைவும் இதுதான். உனது சிந்தனையை நீ மாற்றி, ஒரு புதிய மனப்பான்மையைக் கடைப்பிடித்து, உன் கருத்துகளையும் நோக்கங்களையும், உன் கடந்தகால தர்க்கரீதியான பகுத்தறிவுகளையும் புறந்தள்ளி, உனக்குள் ஆழமாக வேரூன்றிய விஷயங்களை நிராகரித்து, தேவனை விசுவாசிப்பதில் புதிய அறிவைப் பெறும்போது, நீ அளிக்கும் சாட்சியங்கள் உயர்த்தப்படும், மேலும் நீயும் உண்மையிலேயே முழுமையாக மாறியிருப்பாய். இவை அனைத்தும் மிகவும் நடைமுறைக்குரிய, மிகவும் யதார்த்தமான மற்றும் மிக அடிப்படையான விஷயங்களாகும்—இவை கடந்த காலங்களில் ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களாகவும் மற்றும் அவர்கள் ஈடுபட இயலாத விஷயங்களாகவும் இருந்தன. அவைதாம் ஆவியானவரின் உண்மையான கிரியை. கடந்த காலங்களில் நீ வேதாகமத்தை எவ்வாறு சரியாகப் புரிந்துகொண்டாய்? இன்று இதை ஒப்பீட்டுக்கு உட்படுத்து, அப்போது நீ புரிந்துகொள்வாய். கடந்த காலத்தில் நீ மோசே, பேதுரு, பவுல் அல்லது அந்த வேதாகம அறிக்கைகள் மற்றும் கண்ணோட்டங்கள் அனைத்தையும் மனதளவில் உயர்த்தி, அவற்றை ஒரு பீடத்தில் வைத்தாய். இப்போது, வேதாகமத்தை ஒரு பீடத்தில் வைக்கும்படி உன்னிடம் கேட்கப்பட்டால், நீ அதைச் செய்வாயா? மனுஷனால் எழுதப்பட்ட பல பதிவுகள் வேதாகமத்தில் உள்ளன என்பதையும், தேவனுடைய கிரியையின் இரண்டு கட்டங்களைப் பற்றிய மனுஷனின் பதிவுகள்தாம் வேதாகமம் என்பதையும் நீ அறிவாய். அது ஒரு வரலாற்றுப் புத்தகம். இது குறித்த உனது அறிவு மாறிவிட்டது என்பது இதன் அர்த்தமல்லவா? இன்று மத்தேயுவின் சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் வம்ச அட்டவணையைப் பார்த்தால், நீ, “இயேசுவின் வம்ச அட்ட்வணையா? முட்டாள்தனமானது! இது யோசேப்பின் வம்ச அட்டவணை, இயேசுவின் வம்ச அட்டவணை அல்ல. இயேசுவுக்கும் யோசேப்புக்கும் எந்த உறவும் இல்லை,” என்று கூறுவாய். நீ இப்போது வேதாகமத்தைப் பார்க்கும்போது, அதைப் பற்றிய உனது அறிவு வேறுபட்டதாக இருக்கிறது, அதாவது உனது கண்ணோட்டம் மாறிவிட்டது, மேலும் பழங்கால மத அறிஞர்களைக் காட்டிலும் உயர்ந்த அறிவை நீ அதற்குக் கொண்டு வருகிறாய். இந்த வம்ச அட்டவணையில் ஏதேனும் இருப்பதாக யாராவது சொன்னால், நீ, “என்ன இருக்கிறது? விளக்குங்கள். இயேசுவும் யோசேப்பும் உறவினர்கள் இல்லை. உனக்கு அது தெரியாதா? இயேசுவுக்கு ஒரு பரம்பரை இருக்க முடியுமா? இயேசுவுக்கு மூதாதையர்கள் எப்படி இருக்க முடியும்? அவர் எவ்வாறு மனுஷனின் வழித்தோன்றலாக இருக்க முடியும்? அவருடைய மாம்சம் மரியாளிடமிருந்து பிறந்தது; அவருடைய ஆவி தேவனின் ஆவி, ஒரு மனுஷனின் ஆவி அல்ல. இயேசு தேவனின் நேசகுமாரன், எனவே அவருக்கு ஒரு வம்ச அட்டவணை இருக்க முடியுமா? பூமியில் இருந்தபோது அவர் மனுஷகுலத்தின் உறுப்பினராக இருக்கவில்லை, எனவே அவருக்கு எப்படி ஒரு வம்ச அட்டவணை இருக்க முடியும்?” என்று பதிலளிப்பாய். நீ அந்த வம்ச அட்டவணையை ஆராய்ந்து உள்ளார்ந்த சத்தியத்தைத் தெளிவாக விளக்கும்போது, நீ புரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த நபர் வாயடைத்து நிற்பான். சிலர் வேதாகமத்தைக் குறிப்பிட்டு உன்னிடம், “இயேசுவுக்கு ஒரு வம்ச அட்டவணை இருந்தது. இன்றைய நாளுக்கான உனது தேவனுக்கு ஒரு வம்ச அட்டவணை இருக்கிறதா?” என்று கேட்பார்கள். நீ உன் அறிவைப் பற்றி அவர்களிடம் சொல்வாய், அது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உண்மையானதாகும், மேலும், இவ்வாறாக, உனது அறிவு ஒரு விளைவை அடைந்திருக்கும். உண்மையில், இயேசுவுக்கு யோசேப்புடன் எந்த உறவும் இல்லை, ஆபிரகாமுக்கும் இல்லை; அவன் வெறுமனே இஸ்ரவேலில் பிறந்தவன். ஆயினும், தேவன் ஓர் இஸ்ரவேலரோ அல்லது இஸ்ரவேலரின் வழித்தோன்றலோ அல்ல. இயேசு இஸ்ரவேலில் பிறந்திருப்பதால், தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டும் தான் என்று அர்த்தமல்ல. அவருடைய கிரியையின் பொருட்டு மட்டுமே அவர் மாம்சமாகும் கிரியையைச் செய்தார். தேவன் பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் தேவன். அவர் முதலில் இஸ்ரவேலில் தனது கிரியையின் ஒரு கட்டத்தை வெறுமனே செய்தார், அதன் பிறகு அவர் புறஜாதி தேசங்களிடையே கிரியை செய்யத் தொடங்கினார். ஆயினும், ஜனங்கள் இயேசுவை இஸ்ரவேலரின் தேவனாகக் கருதினார்கள், மேலும் அவரை இஸ்ரவேலர்களிடமும் தாவீதின் சந்ததியினரிடமும் வைத்தார்கள். கடைசிக் காலத்தில், புறஜாதி தேசங்களிடையே யேகோவாவின் நாமம் பெரிதாக இருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது, அதாவது கடைசிக் காலத்தில் தேவன் புறஜாதி தேசங்களிடையே செயல்படுவார் என்று அர்த்தம். தேவன் யூதேயாவில் மாம்சமானார் என்பது தேவன் யூதர்களை மட்டுமே நேசிக்கிறார் என்பதைக் குறிக்கவில்லை. கிரியைக்குத் தேவைப்பட்டதால் மட்டுமே அது நடந்தது; தேவன் இஸ்ரவேலில் மட்டுமே (இஸ்ரவேலர் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்பதால்) மாம்சமாகியிருக்க முடியும் என்றும் அர்த்தமாகாது. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் புறஜாதி தேசங்களிடையேயும் காணப்படவில்லையா? இயேசு யூதேயாவில் கிரியை முடித்த பிறகுதான் அந்தக் கிரியை புறஜாதி தேசங்களுக்கும் விரிவடைந்தது. (இஸ்ரவேலர் இஸ்ரவேலைத் தவிர எல்லா தேசங்களையும் “புறஜாதி தேசங்கள்” என்று அழைத்தனர்.) உண்மையில், அந்தப் புறஜாதி தேசங்களிலும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்தான் இருந்தனர்; அந்த நேரத்தில் அங்கு எந்த கிரியையும் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. இஸ்ரவேலுக்கு ஜனங்கள் அத்தகைய முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள், ஏனென்றால் கிரியையின் முதல் இரண்டு கட்டங்களும் இஸ்ரவேலில்தான் நடந்தன, அதே நேரத்தில் புறஜாதி தேசங்களில் எந்தக் கிரியையும் செய்யப்படவில்லை. புறஜாதி தேசங்களிடையே கிரியைகள் இன்றுதான் ஆரம்பமாகின்றன, அதனால்தான் இதை ஏற்றுக்கொள்ள ஜனங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இவை அனைத்தையும் உன்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால், உன்னால் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு கருத்தில் கொள்ள முடிந்தால், நீ இன்றைய மற்றும் கடந்த காலத்தின் தேவனைப் பற்றிய துல்லியமான அறிவைப் பெறுவாய், மேலும் இந்தப் புதிய அறிவு, வரலாறு முழுவதும் எல்லாப் புனிதர்களிடமும் இருக்கும் தேவனின் அறிவை விட உனக்கு அதிகமாக இருக்கும். நீ இன்றைய கிரியையை அனுபவித்து, இன்று தேவனின் தனிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டாலும், தேவனின் முழுமையைப் பற்றி எந்த அறிவும் கிடையாது; உனது நாட்டம் எப்போதும் இருக்கும்படியே இருந்தது, அது புதியதாக மாற்றப்படாவிட்டால்; குறிப்பாக நீ இந்த ஜெயங்கொள்ளுதலின் அனைத்துக் கிரியைகளையும் அனுபவித்தும், இறுதியில் உனக்குள் எந்தவித மாற்றமும் காணப்படாவிட்டால், உனது விசுவாசமானது தங்கள் பசியைத் தணிக்கும் ரொட்டியை மட்டுமே தேடுவோரின் விசுவாசத்தைப்போல இருக்காதா? அவ்வாறான நிலையில், ஜெயங்கொள்ளும் கிரியை உன்னில் எந்த விளைவையும் எட்டாது. அப்போது நீ புறம்பாக்கப்பட வேண்டியவர்களில் ஒருவனாக இருக்க மாட்டாயா?

ஜெயங்கொள்ளுதலின் அனைத்து கிரியைகளும் முடிவுக்கு வரும்போது, தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, எல்லா சிருஷ்டிப்புகளுக்குமான தேவன் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் இஸ்ரவேலரை மட்டுமல்ல, எல்லா மனுஷரையும் படைத்தார். தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமே என்று நீ கூறினால் அல்லது இஸ்ரவேலுக்கு வெளியே எந்த தேசத்திலும் தேவன் மாம்சமாவது சாத்தியமில்லை என்று நீ கூறினால், நீ ஜெயங்கொள்ளும் கிரியையின் போது எந்த அறிவையும் பெறவில்லை, மேலும் தேவன் உனது தேவன் என்பதை நீ மிகச் சிறிய வழியில் கூட ஒப்புக் கொள்ளவில்லை என்று அர்த்தம்; தேவன் இஸ்ரவேலில் இருந்து சீனாவுக்குச் சென்றார் என்பதையும், அவர் உனது தேவனாக இருக்க கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று மட்டுமே நீ புரிந்துகொள்கிறாய். நீ விஷயங்களை இன்னும் இப்படித்தான் பார்க்கிறாய் எனில், என் கிரியை உன்னில் பயனற்றதாக இருக்கிறது, நான் சொன்ன ஒரு விஷயத்தைக் கூட நீ புரிந்து கொள்ளவில்லை. இறுதியில், நீ மத்தேயு செய்ததைப் போல எனக்கு இன்னொரு வம்ச அட்டவணையை எழுதி, எனக்குப் பொருத்தமான மூதாதையரைக் கண்டுபிடித்து, எனது சரியான முன்னோடியைக் கண்டுபிடித்தால், அதாவது தேவன் இரண்டு முறை மாம்சமாகியதால் இரண்டு வம்ச அட்டவணைகளைக் கொண்டிருக்கிறார் என்றால்—அது இந்த உலகத்தில் மிகப்பெரிய நகைக்கும் பொருளாக இருக்காதா? எனக்கு ஒரு வம்ச அட்டவணையைக் கண்டறிந்த இந்த “நல்ல எண்ணமுள்ள நபரான” நீ, தேவனைப் பிரித்த ஒருவனாக மாறவில்லையா? இந்தப் பாவத்தின் சுமையை உன்னால் ஏற்க முடியுமா? இந்த ஜெயங்கொள்ளுதலின் அனைத்து கிரியைகளுக்குப் பிறகும், தேவன் எல்லா சிருஷ்டிப்புகளுக்குமான தேவன்தான் என்று நீ விசுவாசிக்கவில்லை என்றால், தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமேதான் என்று நீ இன்னும் நினைத்தால், நீ தேவனை வெளிப்படையாக எதிர்க்கும் ஒருவனாக இருக்கமாட்டாயா? இன்று உன்னை ஜெயங்கொள்வதன் நோக்கம், தேவன் உனது தேவன் என்றும் மற்றவர்களின் தேவன் என்றும், மிக முக்கியமாக அவர் தம்மை நேசிக்கும் அனைவருக்கும் தேவன் என்றும், மற்றும் அனைத்து சிருஷ்டிப்புகளுக்கும் தேவன் என்றும் நீ ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவர் இஸ்ரவேலரின் தேவன், எகிப்து ஜனங்களின் தேவன். அவர் ஆங்கிலேயர்களின் தேவன் மற்றும் அமெரிக்கர்களின் தேவன். அவர் ஆதாம் மற்றும் ஏவாளின் தேவன் மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினரின் தேவனும் கூட. அவர் வானத்திலும், பூமியிலும் உள்ள சகலத்திற்கும் தேவன். எல்லா குடும்பங்களும், அவர்கள் இஸ்ரவேலராக இருந்தாலும், புறஜாதியராக இருந்தாலும், அனைவரும் ஒரே தேவனின் கைகளில் இருக்கிறார்கள். அவர் யூதேயாவில் பிறந்து, இஸ்ரவேலில் பல ஆயிரம் ஆண்டுகள் கிரியை செய்தது மட்டுமல்லாமல், இன்று அவர் சீனாவில் இறங்குகிறார், இங்குதான் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கிறது. யூதேயாவில் பிறந்திருப்பது அவரை யூதர்களின் ராஜாவாக ஆக்குகிறது என்றால், இன்று உங்கள் அனைவருக்கும் இடையே இறங்குவதால் அவர் உங்கள் அனைவருக்குமான தேவன் அல்லவா? அவர் இஸ்ரவேலரை வழிநடத்தி யூதேயாவில் பிறந்தார், மேலும் அவர் ஒரு புறஜாதி தேசத்திலும் பிறந்தார். அவர் செய்த எல்லாக் கிரியைகளும் அவர் சிருஷ்டித்த எல்லா மனுஷர்களுக்காகத்தான் இல்லையா? அவர் இஸ்ரவேலரை நூறு மடங்கு நேசிக்கிறாரா, புறஜாதியாரை ஆயிரம் மடங்கு வெறுக்கிறாரா? அது உங்கள் கருத்து அல்லவா? தேவன் ஒருபோதும் உங்கள் தேவனாக இருக்கவில்லை என்பது விஷயம் அல்ல, மாறாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் விஷயம்; தேவன் உங்கள் தேவனாக இருக்க விரும்பவில்லை என்பது விஷயம் அல்ல, மாறாக நீங்கள் அவரை நிராகரிக்கிறீர்கள் என்பதுதான் விஷயம். சிருஷ்டிக்கப்பட்டவர்களில் யார் சர்வவல்லவரின் கைகளுக்குள் இல்லை? இன்று உங்களை ஜெயங்கொள்வதில், தேவன் உங்கள் தேவன்தானே தவிர வேறு யாருமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதே குறிக்கோள் அல்லவா? தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமே என்பதை நீங்கள் இன்னும் பராமரிக்கிறீர்கள் என்றால், இஸ்ரவேலில் உள்ள தாவீதின் வீடு தேவனின் பிறப்பின் தோற்றம் என்றும், இஸ்ரவேலைத் தவிர வேறு எந்தத் தேசமும் தேவனை “உற்பத்தி” செய்யத் தகுதியற்றவை என்றும், எந்தவொரு புறஜாதிக் குடும்பத்தினரும் யேகோவாவின் கிரியையைத் தனிப்பட்ட முறையில் பெற முடியாது என்றும் நீங்கள் இன்னும் பராமரிக்கிறீர்கள் என்றால்—நீ இப்போதும் இவ்வாறு நினைத்தால், அது உன்னைப் பிடிவாதக்காரனாக மாற்றாதா? எப்போதும் இஸ்ரவேல் மீதே குறியாக இருக்க வேண்டாம். தேவன் இன்று உங்களிடையே இருக்கிறார். நீ பரலோகத்தையே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. பரலோகத்தில் இருக்கும் உன் தேவனுக்காக வருத்தப்படுவதை நிறுத்து! தேவன் உங்கள் மத்தியில் வந்துவிட்டார், எனவே அவர் எப்படி பரலோகத்தில் இருக்க முடியும்? நீ மிக நீண்ட காலமாக தேவனை நம்பவில்லை, ஆனாலும் நீ அவரைப் பற்றி நிறைய கருத்துக்களைக் கொண்டிருக்கிறாய், இஸ்ரவேலரின் தேவன் தமது பிரசன்னத்தால் உனக்கு கிருபை அளிப்பார் என்று நீ ஒரு நொடி கூட நினைக்கத் துணிவதில்லை. நீங்கள் எவ்வளவு இழிவாக இருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவன் தனிப்பட்ட தோற்றத்தில் வருவதை நீங்கள் எப்படிக் காண்பீர்கள் என்பதை நீங்கள் சிந்திக்கத் துணிவதில்லை. தேவன் எப்படி ஒரு புறஜாதி தேசத்தில் தனிப்பட்ட முறையில் இறங்க முடியும் என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை நினைத்ததில்லை. அவர் சீனாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ இறங்கி இஸ்ரவேலருக்குத் தோன்ற வேண்டும். புறஜாதியார் (அதாவது இஸ்ரவேலுக்கு வெளியே உள்ளவர்கள்) அனைவரும் அவர் வெறுக்கும் பொருட்களாக இருக்கவில்லையா? அவர் எவ்வாறு அவர்களிடையே தனிப்பட்ட முறையில் கிரியை செய்ய முடியும்? இவை அனைத்தும் நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள். இன்று உங்களை ஜெயங்கொள்வதன் நோக்கம் உங்களுடைய இந்தக் கருத்துக்களைச் சிதைப்பதாகும். இவ்வாறு, சீனாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ அல்ல, ஆனால் இதற்கு முன் அவர் வழிநடத்தியிராத ஜனங்களாகிய உங்களிடையே தேவனின் தனிப்பட்டத் தோற்றத்தை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையின் இரண்டு கட்டங்களைச் செய்தபின், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பது உண்மைதான் என்றாலும் அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருக்க விரும்புகிறார், புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்று இஸ்ரவேலரும் எல்லா புறஜாதியரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருந்தனர். இஸ்ரவேலர் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: தேவன் எங்கள் தேவனாக மட்டுமே இருக்க முடியும், புறஜாதியாரான உங்கள் தேவனாக இருக்க முடியாது, மேலும் நீங்கள் யேகோவாவை வணங்காததால், எங்கள் தேவனாகிய யேகோவா உங்களை வெறுக்கிறார். அந்த யூத ஜனங்களும் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: கர்த்தராகிய இயேசு யூத ஜனங்களாகிய எங்களது உருவத்தை அணிந்துகொண்டார், அவர் யூத ஜனங்களின் அடையாளத்தைத் தாங்கிய தேவன் ஆகிறார். தேவன் எங்களிடையே கிரியை செய்கிறார். தேவனின் உருவமும் எங்கள் உருவமும் ஒத்தவை; எங்கள் உருவம் தேவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு யூதர்களின் ராஜா; புறஜாதியார் அத்தகைய பெரிய இரட்சிப்பைப் பெற தகுதியற்றவர்கள். கர்த்தராகிய இயேசுதான் யூதர்களான நமக்கு பாவநிவாரணப்பலி. இஸ்ரவேலர்களும் யூத ஜனங்களும் இந்த இரண்டு கருத்துக்களையும் உருவாக்கியது கிரியையின் அந்த இரண்டு கட்டங்களின் அடிப்படையில்தான். தேவன் புறஜாதியினரின் தேவன் என்பதை அனுமதிக்காமல், அவர்கள் தேவனைத் தங்கள் தேவன் என்று கூறி அகந்தை கொள்கிறார்கள். இவ்வாறாக, தேவன் புறஜாதியரின் இருதயங்களில் ஒரு வெற்றிடமாகிப் போனார். ஏனென்றால், தேவன் புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்றும், அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களான இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும், குறிப்பாக அவரைப் பின்பற்றிய சீஷர்களை மட்டுமே நேசிக்கிறார் என்றும் எல்லோரும் விசுவாசித்தனர். யேகோவாவும் இயேசுவும் செய்த கிரியை எல்லா மனுஷரும் உயிர்வாழ்வதற்காகவே என்று உங்களுக்குத் தெரியாதா? இஸ்ரவேலுக்கு வெளியே பிறந்த உங்கள் அனைவருக்கும் தேவன்தான் தேவன் என்பதை நீ இப்போது ஒப்புக்கொள்கிறாயா? தேவன் இன்று இங்கே உங்கள் மத்தியில் இல்லையா? இது ஒரு சொப்பனமாக இருக்க முடியாது, இல்லையா? இந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்கவில்லையா? நீங்கள் அதை நம்பவோ அல்லது அதைப் பற்றிச் சிந்திக்கவோ துணிவதில்லை. நீங்கள் அதை எப்படிப் பார்த்தாலும், உங்கள் நடுவில் தேவன் இங்கே இல்லையா? இந்த வார்த்தைகளை நம்ப நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா? இந்த நாளிலிருந்து, ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரும் மற்றும் தேவனின் சீஷர்களாக இருக்க விரும்பும் அனைவரும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லவா? இன்று பின்பற்றுபவர்களாக இருக்கும் நீங்கள் அனைவரும், இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் ஜனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லையா? உங்கள் அந்தஸ்து இஸ்ரவேலருக்கு சமமானதல்லவா? இவை அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையின் குறிக்கோள் இதுவல்லவா? நீங்கள் தேவனைக் காண முடியும் என்பதால், ஆதியிலிருந்து எதிர்காலம் வரை அவர் என்றென்றும் உங்கள் தேவனாக இருப்பார். நீங்கள் அனைவரும் அவரைப் பின்பற்றி, அவருடைய விசுவாசியாக, கீழ்ப்படிதலுள்ள ஜீவன்களாக இருக்கும்வரை அவர் உங்களைக் கைவிட மாட்டார்.

ஜனங்கள் தேவனை எவ்வளவு நேசிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், இன்று வரை அவரைப் பின்பற்றுவதில் அவர்கள் பொதுவாகக் கீழ்ப்படிந்து வருகின்றனர். இறுதி வரை அல்ல, ஆனால் கிரியையின் இந்தக் கட்டம் முடிவடையும் போது, அவர்கள் முழுமையாக மனந்திரும்புவார்கள். அப்போதுதான் ஜனங்கள் உண்மையிலேயே ஜெயங்கொள்ளப்படுவார்கள். இப்போது, அவர்கள் ஜெயங்கொள்ளப்படும் கிரியையில் மட்டுமே இருக்கிறார்கள். கிரியை முடிவடையும் தருணத்தில், அவர்கள் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்படுவார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை! அனைவரும் நம்பினாலும், அவர்கள் முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஏனென்றால், தற்போது, ஜனங்கள் வார்த்தைகளை மட்டுமே பார்த்திருக்கிறார்கள், உண்மை நிகழ்வுகளை அல்ல, அவர்கள் எவ்வளவு ஆழமாக விசுவாசித்தாலும் அவை நிச்சயமற்றவை. அதனால்தான், அந்தக் கடைசி உண்மை நிகழ்வால் மட்டுமே, வார்த்தைகள் யதார்த்தமாகின்றன, ஜனங்கள் முழுமையாக ஜெயங்கொள்ளப்படுவார்கள். இப்போது, இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் முன்பு கேள்விப்படாத பல மறைபொருட்களை அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அவை ஒவ்வொன்றின் உள்ளேயும், தேவனின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானதாக இருப்பதைக் காண அனுமதிக்கும் சில உண்மை நிகழ்வுகளை அவர்கள் இன்னும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் முழுமையாக நம்புவார்கள். முடிவில், அனைவரும் இந்த உண்மையான யதார்த்தங்களைக் கண்டதும், இந்த யதார்த்தங்கள் அவர்களுக்கு உறுதியான உணர்வை ஏற்படுத்தியதும், அவர்கள் இருதயத்திலும், பேச்சிலும், கண்களிலும் உறுதியான விசுவாசத்தைக் காட்டுவார்கள், மேலும் அவர்களின் இருதயங்களின் அடிப்பகுதியில் இருந்து முழுமையாக நம்புவார்கள். மனுஷனின் இயல்பு இதுதான்: வார்த்தைகள் அனைத்தும் உண்மையாவதை நீங்கள் காண வேண்டும், சில உண்மை நிகழ்வுகள் நடப்பதை நீங்கள் காண வேண்டும் மற்றும் சிலருக்குப் பேரழிவு ஏற்படுவதையும் காண வேண்டும், பின்னர் நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாக முழுமையாக உறுதியான விசுவாசம் கொள்வீர்கள். யூதர்களைப் போலவே, நீங்களும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆயினும் நீங்கள் தொடர்ந்து அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் இருப்பதையும், உங்கள் கண்களைப் பெரிதும் திறப்பதற்கான உண்மைகள் நடப்பதையும் காணத் தவறுகிறீர்கள். அது வானத்திலிருந்து யாரோ இறங்குகிறார், அல்லது உங்களுடன் மேகங்களின் தூண் பேசுகிறது, அல்லது நான் உங்களில் ஒருவனிடமிருந்து பிசாசுகளை விரட்டுகிறேன், அல்லது என் குரல் உங்களிடையே இடி போல் பெருகுகிறது என்று எதுவாக இருந்தாலும், நீங்கள் எப்போதுமே இந்த வகையான நிகழ்வைக் காண விரும்புகிறீர்கள். தேவனை விசுவாசிப்பதில், தேவன் வந்து தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஓர் அடையாளத்தைக் காண்பிப்பதே உங்கள் மிகப்பெரிய விருப்பம் என்று நீங்கள் கூறலாம். அப்போது நீங்கள் திருப்தி அடைவீர்கள். உங்களை ஜெயங்கொள்ள, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்ததற்கு ஒத்த கிரியையை நான் செய்ய வேண்டும், மேலும், உங்களுக்கு ஒருவித அடையாளத்தைக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான், உங்கள் இருதயங்கள் முழுமையாக ஜெயங்கொள்ளப்படும்.

முந்தைய: ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (2)

அடுத்த: ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது படியின் பலன்கள் எவ்வாறு அடையப்படுகின்றன

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக