சுத்திகரிப்பை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே மனுஷனால் மெய்யான அன்பைக் கொண்டிருக்க முடியும்
நீங்கள் அனைவரும் சோதனையின் மத்தியிலும் சுத்திகரிப்பின் மத்தியிலும் இருக்கிறீர்கள். சுத்திகரிப்பின்போது தேவனிடத்தில் எவ்வாறு அன்புகூறவேண்டும்? சுத்திகரிப்பை அனுபவித்த பின்னர் ஜனங்கள் தேவனுக்கு மெய்யாகத் துதி செலுத்த முடியும். மேலும் சுத்திகரிப்பின் மத்தியில் தாங்கள் மிகவும் குறைபாடு உடையவர்கள் என்பதை அவர்களால் கண்டுகொள்ளமுடியும். உன்னுடைய சுத்திகரிப்பு அதிகமாக இருக்கும்போது உன்னால் உன்னுடைய மாம்சத்தை அதிகமாக கைவிட முடியும்; ஜனங்களின் சுத்திகரிப்பு அதிகமாக இருந்தால் தேவனிடத்தில் அவர்களின் அன்பும் அதிகமாக இருக்கும். இதுவே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது. ஜனங்கள் ஏன் சுத்திகரிக்கப்பட வேண்டும்? அது என்ன பலனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது? மனுஷனில் தேவனுடைய சுத்திகரிப்புக் கிரியையின் முக்கியத்துவம் என்ன? நீ மெய்யாகவே தேவனைத் தேடுவாயானால், அவரது சுத்திகரிப்பை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அனுபவித்த பின்னர் அது மிகவும் நன்மையானதும் மிகவும் தேவையானதுமாய் இருப்பதை உணர்ந்துகொள்ளுவாய். சுத்திகரிப்பின் போது மனுஷன் தேவனை எவ்வாறு அன்பு கூற வேண்டும்? தேவனுடைய சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ள அவரை அன்பு கூறுவதற்கான தீர்மானத்தைப் பயன்படுத்துவதன் மூலம்: சுத்திகரிப்பின் போது உன் இருதயத்தில் ஒரு கத்தி திருக்கப்பட்டதைப் போல, நீ உள்ளுக்குள் வேதனைப்படுகிறாய், ஆனாலும் அவரை அன்பு கூற உன் இருதயத்தைப் பயன்படுத்தி தேவனை திருப்திப்படுத்த நீ தயாராக இருக்கிறாய், நீ மாம்சத்தின் மீது அக்கறைகொள்ள விரும்பவில்லை. இதுதான் தேவனை அன்பு கூறுவதைப் பயிற்சி செய்வது என்று அர்த்தமாகும். நீ உள்ளுக்குள் காயப்பட்டிருக்கிறாய், உன் துன்பம் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துள்ளது, ஆனாலும் நீ இன்னும் தேவனுக்கு முன்பாக வந்து இவ்வாறு சொல்லி ஜெபம் செய்யத் தயாராக இருக்கிறாய்: “ஓ தேவனே! என்னால் உம்மை விட்டுச் செல்ல முடியவில்லை. எனக்குள் இருள் இருந்தாலும், உம்மை திருப்திப்படுத்த விரும்புகிறேன்; நீர் என் இருதயத்தை அறிவீர், அதிகப்படியான உமது அன்பை எனக்குள் முதலீடு செய்ய விரும்புகிறேன்.” இது சுத்திகரிப்பின்போதான பயிற்சியாக இருக்கிறது. நீ தேவனுடைய அன்பை அஸ்திபாரமாக உபயோகப்படுத்தினால், சுத்திகரிப்பு உன்னை தேவனுக்கு அருகில் கொண்டுவந்து உன்னை தேவனிடத்தில் மிகவும் நெருக்கமாக்கும். நீ தேவனை விசுவாசிக்கிறபடியால் நீ தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை ஒப்படைக்க வேண்டும். நீ தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை அர்ப்பணித்து ஒப்படைத்தால், சுத்திகரிப்பின்போது உன்னால் தேவனை மறுதலிக்கவோ அவரை விட்டுவிலகவோ முடியாது. இவ்விதமாக தேவனோடு உனக்குள்ள உறவு எப்போதும் நெருக்கமாகவும் எப்போதையும் விட இயல்பானதாகவும் தேவனோடு உனக்குள்ள தொடர்பு எப்போதும் மிகவும் அடிக்கடி இருக்கும். நீ இவ்விதமாக எப்போதும் பயிற்சி செய்தால், நீ தேவனின் வெளிச்சத்தில் அதிக நேரத்தையும் அவரது வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் அதிக நேரத்தையும் செலவளிப்பாய். உன் மனநிலையில் அதிகதிகமான மாற்றங்கள் ஏற்படும் மேலும் உன் அறிவு நாளுக்குநாள் அதிகமாகும். திடீரென தேவனின் சோதனை உனக்கு நேரிடும்போது, உன்னால் தேவனின் பக்கத்தில் நிற்கக் கூடுவது மட்டுமல்லாமல் தேவனுக்குச் சாட்சியாகவும் விளங்க முடியும். அந்த நேரத்தில் நீ யோபுவைப் போலவும் பேதுருவைப் போலவும் காணப்படுவாய். தேவனுக்குச் சாட்சியாக விளங்குவதால் நீ மெய்யாகவே தேவனில் அன்புகூருவாய் மேலும் சந்தோஷத்தோடே அவருக்காக ஜீவனையும் கொடுப்பாய்; நீ தேவனுக்குச் சாட்சியாக இருப்பாய் மேலும் தேவனால் நேசிக்கப்படும் ஒருவனாய் இருப்பாய். சுத்திகரிப்புக்கு உள்ளாகும் அன்பு பலமானதாக இருக்கும், பலவீனமாக இருக்காது. எப்போது அல்லது எவ்வாறு தேவன் உன்னை அவரது சோதனைகளுக்கு உட்படுத்துகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவிப்பது அல்லது மரிப்பது குறித்த கவலைகளை விட்டுவிடவும், சந்தோஷத்தோடே எல்லாவற்றையும் தேவனுக்காகப் புறம்பே தள்ளிவிடவும், தேவனுக்காக எதையும் சகித்துக்கொள்ளவும் உன்னால் கூடும்—இவ்வாறு உனது அன்பு சுத்தமானதாகவும் உன் விசுவாசம் உண்மையானதாகவும் இருக்கும். அதற்குப்பின்தான், தேவனால் மெய்யாகவே அன்புகூரப்படும் ஒருவனாய் இருப்பாய், மேலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டவனாகவும் இருப்பாய்.
ஜனங்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழிருந்தால் அவர்களுக்குள் தேவன்பேரில் அன்பு இருக்காது, மேலும் அவர்களது முந்தைய தரிசனங்கள், அன்பு, மற்றும் தீர்மானங்கள் மறைந்து போய்விடும். தேவனுக்காகத் தாங்கள் துன்பப்படவேண்டும் என்ற உணர்வுடையவர்களாக ஜனங்கள் இருந்துவந்தனர், ஆனால் இன்றோ அவர்கள் அவ்வாறு செய்வது வெட்கக்கேடானது என்று நினைக்கிறார்கள், மேலும் அவர்களது குறைகூறுதலும் அதிகமாகவே இருக்கிறது. இது சாத்தானின் கிரியையும், மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் அகப்பட்டுக்கொண்டான் என்பதற்கான அடையாளமுமாகும். இத்தகைய நிலையை நீ எதிர்கொண்டாயானால் ஜெபிக்க வேண்டும், மேலும் உன்னால் முடிந்த அளவு அதை வேகமாக மாற்றிப்போட வேண்டும்—இது சாத்தானின் தாக்குதல்களில் இருந்து உன்னைப் பாதுகாக்கும். கசப்பான சுத்திகரிப்பின் போதுதான் மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் மிகவும் எளிதாக விழுந்துவிடுகிறான், ஆகவே இத்தகைய சுத்திகரிப்பின்போது நீ எவ்வாறு தேவனில் அன்புகூறவேண்டும்? நீ உன் சித்தத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை ஒப்புக்கொடுத்து, உனது கடைசி நேரத்தை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும். தேவன் உன்னை எவ்வாறு சுத்திகரித்தாலும், நீ தேவ சித்தத்தை நிறைவேற்ற சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறவனாய் இருக்க வேண்டும், மேலும் தேவனைத் தேடுவதையும் ஐக்கியத்தை நாடுவதையும் நீதான் உன் பொறுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட காலங்களில், நீ மிகவும் செயலற்று இருந்தால், அதிக எதிர்மறை எண்ணமுள்ளவனாகி எளிதில் பின்வாங்கிப் போவதற்கு வழிவகுக்கும். உன் கிரியையைச் செய்யவேண்டிய தேவை இருக்கும்போது, அதைச் சரியாக செய்ய முடியாவிட்டாலும், உன்னால் செய்யமுடிந்ததை எல்லாம் செய், மேலும் அப்படிச் செய்யும்போது, தேவனிடத்தில் நீ வைத்திருக்கும் அன்பின் நிமித்தமே அல்லாமல் வேறொன்றையும் பயன்படுத்தி நீ செய்ய வேண்டாம்; மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி—நீ நன்றாக செய்திருக்கிறாய் என்று சொன்னாலும், அல்லது நீ மோசமாக செய்திருக்கிறாய் என்று சொன்னாலும்—உன் நோக்கம் சரியாக இருக்கும்போது, மற்றும் நீ சுயநீதி அற்றவனாக இருக்கும்போது நீ அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனெனில் நீ தேவனுடைய சார்பாக செயல்படுகிறாய். மற்றவர்கள் உன்னைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போது, உன்னால் தேவனிடத்தில் ஜெபித்து இவ்வாறு கூறமுடியும்: “தேவனே! மற்றவர்கள் என்னைச் சகித்துக்கொள்ள வேண்டுமென்றோ அல்லது என்னை நன்றாக நடத்தவேண்டுமென்றோ, அல்லது அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவோ அல்லது ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. என் இருதயம் இலகுவாகவும் என் மனச்சாட்சி தெளிவானதாகவும் இருக்கும்படியாக நான் என் முழுஇருதயத்தோடு உம்மில் அன்புகூரவேண்டும் என்று மட்டுமே கேட்கிறேன். பிறர் என்னைப் பாராட்டவேண்டும், அல்லது என்னை உயர்வாக மதிக்கவேண்டும் என்று நான் கேட்கவில்லை; என் இருதயத்தில் இருந்து உம்மைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றே நாடுகிறேன்; என்னால் முடிந்ததை எல்லாம் செய்து என் பங்கை ஆற்றுகிறேன், மேலும் நான் புத்தியற்றும், முட்டாளாகவும், திறன்குறைந்தும், குருடாகவும் இருந்தாலும், நீர் பிரியமானவர் என்பதை நான் அறிவேன், மேலும் நான் என்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் உமக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.” இவ்வாறு நீ ஜெபித்தவுடன், தேவனிடத்தில் உள்ள உன் அன்பு வெளிப்பட்டு உன் இருதயம் மிக அதிகமாக இலகுவானதை உணருகிறாய். இதுவே தேவனின் அன்பை நடைமுறைப்படுத்துதல் என்பதற்கான அர்த்தமாகும். நீ அனுபவத்தை அடையும்போது, நீ இருமுறை தோல்வியடைந்து ஒருமுறை வெற்றியடைவாய், அல்லது ஐந்து முறை தோல்வியடைந்து இரு முறை வெற்றிபெறுவாய், மேலும் இவ்வகை அனுபவத்தை அடையும்போது, தோல்விகளின் மத்தியில்தான் உன்னால் தேவனின் பிரியத்தைப் பார்க்க முடியும், மேலும் உனக்குள் இருக்கும் குறைபாட்டை உன்னால் கண்டறிய முடியும். இத்தகைய சூழலை அடுத்த முறை நீ எதிர்கொள்ளும்போது, உன்னையே நீ எச்சரிக்கை செய்து, நடைகளைப் பக்குவப்படுத்தி, அடிக்கடி ஜெபிக்கவேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் ஜெயம்பெறும் திறனை படிப்படியாக நீ வளர்த்துக்கொள்ளுவாய். அது நிகழும்போது உன் ஜெபங்கள் பலனளிப்பவைகளாக இருக்கின்றன. இந்தச் சமயத்தில் நீ வெற்றிபெறுவதைப் பார்க்கும்போது, நீ உன்னுள் திருப்தியடைவாய், மேலும் ஜெபிக்கும்போது தேவனையும், பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னம் உன்னைவிட்டு நீங்கவில்லை என்பதையும் உன்னால் உணரமுடியும்—அதன் பின்னர்தான் தேவன் எவ்வாறு உனக்குள் கிரியைசெய்கிறார் என்பதை நீ அறிவாய். இந்த வகையில் பயிற்சி செய்யும்போது அது அனுபவத்திற்கான பாதையை உனக்கு அளிக்கும். நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் உனக்குள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாதவனாய் இருப்பாய். ஆனால், விஷயங்களை உள்ளது உள்ளபடியே எதிர்கொள்ளும்போது நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், உனக்குள் நீ காயப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் பரிசுத்த ஆவியானவர் உன்னோடு இருப்பார், ஜெபிக்கும்போது தேவ பிரசன்னத்தை உணருவாய், தேவ வார்த்தைகளைப் பயிற்சி செய்வதற்கான வலிமையை நீ பெற்றிருப்பாய், மேலும் உன் சகோதர சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ளும்போது உன் மனசாட்சியில் பாரம் எதுவும் அழுத்தாது, சமாதானத்தை உணர்வாய் மற்றும் இவ்விதமாக, நீ செய்து முடித்ததை உன்னால் வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடியும். மற்றவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாமல் உன்னால் தேவனோடு இயல்பான உறவை வைத்துக்கொள்ள முடியும், மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படமாட்டாய், எல்லாவற்றிற்கும் மேலாக எழும்புவாய்—இதன் மூலம் தேவ வார்த்தைகளைப் பயிற்சி செய்வது பலன் அளிக்கும் என்பதை நீ நிரூபிப்பாய்.
தேவனின் சுத்திகரிப்பு அதிகமாக இருக்கும்போதுதான், ஜனங்களின் இருதயங்கள் தேவனில் அதிகதிகமாக அன்புகூர முடியும். அவர்களது இருதயத்தின் கடும்வேதனை அவர்களுடைய வாழ்க்கைகளுக்கு நன்மையாக இருக்கிறது, தேவனுக்கு முன்பாக அவர்களால் அதிக சமாதானத்தோடு இருக்க முடிகிறது, தேவனோடு அவர்களுக்குள்ள உறவு நெருக்கமாக இருக்கிறது, தேவனின் மேலான அன்பையும் அவருடைய மேலான இரட்சிப்பையும் அவர்களால் சிறந்த முறையில் பார்க்க முடிகிறது. பேதுரு சுத்திகரிப்பை நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் அனுபவித்தார், மேலும் யோபு பலமுறை சோதனைக்குட்படுத்தப்பட்டார். நீங்கள் தேவனால் பூரணமாக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், நீங்களும் நூற்றுக்கணக்கான முறை சுத்திகரிப்புக்கு ஆளாகவேண்டும்; இந்தச் செயல்முறையின் வழியாகச் சென்று இந்தப் படிமுறையை நம்பினால் மட்டுமே உங்களால் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்தி தேவனால் பரிபூரணமாக்கப்பட முடியும். சுத்திகரிப்பு என்ற சிறந்த வழிமுறையின் மூலமாகவே ஜனங்களை தேவன் பரிபூரணப்படுத்துகிறார்; சுத்திகரிப்பும் கசப்பான சோதனைகளுமே ஜனங்களின் இருதயத்தில் தேவன் பேரில் உண்மையான அன்பைக் கொண்டுவரமுடியும். துன்பம் இல்லாமல் ஜனங்களிடத்தில் தேவன் பேரில் உண்மையான அன்பு இருக்காது; உள்ளுக்குள் அவர்கள் சோதிக்கப்படாவிட்டால், அவர்கள் உண்மையிலேயே சுத்திகரிப்புக்குள்ளாகாவிட்டால், அவர்கள் இருதயங்கள் எப்போதும் வெளியில் மிதந்துகொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்படும்போது, நீ உன் சொந்த பலவீனங்களையும் கஷ்டங்களையும் பார்க்கலாம், உன்னிடம் எவ்வளவு குறைகள் உள்ளன என்பதையும் மற்றும் நீ எதிர்கொள்ளும் அநேகப் பிரச்சனைகளை உன்னால் மேற்கொள்ள முடியாததையும், உனது கீழ்ப்படியாமை எவ்வளவு பெரியது என்பதையும் உன்னால் காணமுடியும். சோதனைகளின்போது மட்டுமே ஜனங்கள் தங்களின் யதார்த்த நிலையை உண்மையிலேயே அறிய முடியும்; சோதனைகள் ஜனங்களைப் பரிபூரணப்படுத்தத் தக்கவர்களாக்குகிறது.
தன் வாழ்நாளில் பேதுரு நூற்றுக்கணக்கான தடவைகள் சுத்திகரிப்புகளை அனுபவித்து பல வேதனையான கடுஞ்சோதனைகளை எதிர்கொண்டான். பேதுருவினிடத்தில் காணப்பட்ட தேவன் மீது மேலான அன்பைக் கொண்டிருக்க அவனது முழு வாழ்க்கையின் மிக முக்கியமான அனுபவத்திற்கும் இந்த சுத்திகரிப்புதான் அஸ்திபாரமாக இருந்தது. தேவனை நேசிக்க வேண்டும் என்ற அவனது தீர்மானத்திலேயே ஒருவகையில் அவன் தேவனுடைய மேலான அன்பை உடைமையாக்கிக்கொள்ள முடிந்தது; இருப்பினும், அவன் கடந்துசென்ற சுத்திகரிப்பும் பாடுகளுமே மிக முக்கிய காரணங்கள் ஆயின. தேவனிடத்தில் அன்புகூரும் பாதையில் பாடுகள் அவனது வழிகாட்டியாக இருந்தன, மேலும் அதுவே அவனால் மறக்க முடியாத விஷயமாகவும் இருந்தது. தேவனில் அன்புகூரும்போது ஜனங்கள் சுத்திகரிப்பின் வேதனையின் ஊடாகச் செல்லாவிட்டால், அவர்களது அன்பில் அசுத்தங்களும் அவர்களது சொந்த முன்னுரிமைகளுமே காணப்படும்; இத்தகைய அன்பில் சாத்தானின் கருத்துக்களே முற்றிலுமாக இருக்கும், மேலும் அடிப்படையில் இதனால் தேவ சித்தத்தை நிறைவேற்ற முடியாது. தேவனிடத்தில் அன்புகூர வேண்டும் என்ற மனவுறுதி உண்மையில் தேவனிடத்தில் அன்புகூருவதற்கு சமமான ஒன்றல்ல. தங்கள் இருதயங்களில் சிந்திப்பது அனைத்தும் அன்புசெலுத்துவதற்காகவும் தேவனை திருப்திப்படுத்துவதற்காகவுமே இருந்தாலும், மேலும் அவர்களது சிந்தனைகள் முழுவதும் தேவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டு எந்த ஒரு மானிட சிந்தனைகளும் இல்லாமல் இருந்தாலும், அவர்களது சிந்தனைகள் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவரப்படும்போது, அவர் அத்தகைய சிந்தனைகளைப் பாராட்டவோ ஆசீர்வதிக்கவோ மாட்டார். ஜனங்கள் எல்லா உண்மைகளையும் புரிந்துகொண்டிருந்தாலும்—அவை அனைத்தையும் அவர்கள் அறிந்துகொண்ட பொழுதும்—அதை தேவனிடத்தில் அன்புகூருவதற்கான ஓர் அடையாளம் எனக் கூறமுடியாது, இந்த ஜனங்கள் தேவனிடத்தில் உண்மையிலேயே அன்புகூருகிறார்கள் என்று கூறமுடியாது. பல சத்தியங்களைப் புரிந்துகொண்டாலும், சுத்திகரிப்புக்கு உட்படாமல், ஜனங்களால் இந்தச் சத்தியங்களை கடைபிடிக்க முடியாது; சுத்திகரிப்பின்போதே இந்தச் சத்தியங்களின் உண்மையான அர்த்தங்களை ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும், அதன் பின்னரே ஜனங்களால் அவற்றின் உள்ளர்த்தத்தை உண்மையாகவே பாராட்டமுடியும். அந்த நேரத்தில், மீண்டும் அவர்கள் முயற்சி செய்யும்போது, அவர்களால் தகுந்த முறையில், தேவ சித்தத்தின் படி, சத்தியங்களை நடைமுறைக்குள் கொண்டுவர முடியும்; அந்த நேரத்தில், அவர்களது மானிட எண்ணங்கள் குறைக்கப்படுகின்றன, அவர்களது மானிடச் சீர்கேடுகள் குறைக்கப்படுகின்றன, மேலும் அவர்களது மானிட உணர்ச்சிகள் நலிவுறுகின்றன; அந்த நேரத்தில் மட்டும் அவர்களது நடைமுறை தேவனுடைய அன்பின் உண்மையான வெளிப்பாடாக இருக்கிறது. தேவன் மீதான அன்பின் சத்தியத்தின் பலனை பேசப்படும் அறிவின் மூலமோ அல்லது மன விருப்பத்தின் மூலமோ அடையமுடியாது, மேலும் அதைச் சத்தியத்தை வெறுமனே புரிந்துகொள்வதாலும் அடையமுடியாது. அதற்கு ஜனங்கள் ஒரு விலைக்கிரயம் செலுத்தவேண்டும், அதாவது சுத்திகரிப்பின்போது அவர்கள் மிகவும் கசப்பை அனுபவிக்க வேண்டும், மேலும் அதன் பின்னரே அவர்களது அன்பு தூய்மையாகும் மேலும் தேவனின் இருதயத்துக்கு ஏற்றதாகும். மனிதன் தனது பெரும் விருப்பத்தையும் அல்லது தன் சொந்தச் சித்தத்தையும் பயன்படுத்தி தம்மிடம் அன்புகூற வேண்டும் என்று தேவன் கோரவில்லை; விசுவாசத்தின் மூலமும் அவரைச் சேவிக்கச் சத்தியத்தைப் பயன்படுத்துவதினாலும் மட்டுமே மனிதனால் அவரை மெய்யாக நேசிக்க முடியும். ஆனால் மனிதன் சீர்கேட்டின் மத்தியில் வாழ்கிறான், மற்றும் அதனால்தான் அவனால் சத்தியத்தையும் விசுவாசத்தையும் பயன்படுத்தி அவரை சேவிக்கமுடியவில்லை. அவன் தேவனிடத்தில் அதிகப் பேரார்வம் உள்ளவனாய் இருக்கிறான், அல்லது மிகவும் உணர்வற்றவனாகவும் அக்கறையற்றவனாகவும் இருக்கிறான்; அவன் அளவுக்கு அதிகமாக தேவனில் அன்புகூருகிறான் அல்லது அதிகமாக வெறுக்கிறான். சீர்குலைவுக்கு மத்தியில் வாழ்கிறவர்கள் எப்போதும் இந்த இரு தீவிரநிலைகளுக்கு இடையிலேயே வாழ்கிறார்கள், எப்போதும் தங்கள் சுயச் சித்தப்படியே வாழ்கிறார்கள், இருப்பினும் தாங்கள் சரியானவர்களே என்று நம்புகிறார்கள். நான் இதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்தாலும், இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள ஜனங்கள் இயலாதவர்களாக இருக்கிறார்கள், அதனுடைய முக்கியத்துவத்தை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள், ஆகவே அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுதல் எனும் நம்பிக்கையின் மத்தியில், தங்கள் சுயச் சித்தத்தைச் சார்ந்திருக்கும் தேவனிடத்தில் மாயையான அன்பில் வாழ்கிறார்கள். மனுக்குலம் வளர்ச்சிபெற்று காலங்கள் கடந்துசென்ற வரலாறு முழுவதும், மனிதனிடத்திலான தேவனின் தேவைகள் எப்போதும் அதிகமாகவே இருந்துவந்துள்ளது மேலும் மனிதன் தன்னிடத்தில் முழுமையானவனாக இருக்கவேண்டும் என்று தேவன் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார். இருந்தாலும் தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு மென்மேலும் தெளிவற்றதும் அருவமானதாகவும், அதே நேரத்தில் அவனது தேவன் பேரிலான அன்பு மிகவும் அசுத்தமானதாகவும் போய்விட்டது. மனிதனின் நிலையும் அவன் செய்வதெல்லாம் அதிகதிகமாக தேவ சித்தத்துக்கு முரண்பட்டதாகவும் உள்ளது, ஏனெனில் மனிதன் மிக ஆழமாகச் சாத்தானால் சீர்குலைக்கப்பட்டிருக்கிறான். இதன் காரணமாக தேவன் மேலும் பெரிய அளவிலான இரட்சிப்பின் கிரியையைச் செய்யவேண்டியுள்ளது. தேவனிடத்தில் தன் தேவைகளை மனிதன் அதிகதிகமாக வற்புறுத்துகிறான், மேலும் தேவனிடத்தில் அவனது அன்பு குறைந்துகொண்டே வருகிறது. ஜனங்கள் கீழ்ப்படியாமையிலும், சத்தியம் இல்லாத, மனிதத்தன்மை அற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்; தேவனிடத்தில் கொஞ்சமும் அன்பில்லாதவர்கள் மட்டுமல்லாமல் கீழ்ப்படியாமையிலும் எதிர்ப்பிலும் வளர்ந்து பெருகி வருகின்றனர். தங்களுக்கு ஏற்கனவே தேவனிடம் மிகவும் அன்பு இருப்பதாக அவர்கள் எண்ணும் போதிலும், அவர்களால் அதற்குமேல் தேவனிடத்தில் இணக்கமுடையவர்களாக இருக்க முடியவில்லை, தேவனும் இது அப்படியிருக்கும் என்று நம்பவில்லை. தேவன் மீதான மனிதனின் அன்பு எவ்வளவு தூரம் கறைபடிந்துள்ளது என அவருக்கு முற்றிலும் தெளிவாகத் தெரிந்துவிட்டது மேலும் மனிதனின் தீமையான எண்ணத்தின் காரணமாக மனிதனைப் பற்றிய தமது எண்ணத்தை அவர் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை, அல்லது மனிதனின் பக்தியின் விளைவான நல்லெண்ணத்துக்காக அவர் ஒருபோதும் பலாபலனையும் அளிக்கவில்லை. மனிதனைப் போல் அல்லாமல் தேவனால் வகையறுக்க முடியும்: யார் அவரை மெய்யாகவே நேசிக்கிறார்கள் யார் நேசிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியும். மனிதனின் கணநேரத் தூண்டுதல் காரணமாக, உற்சாகத்தில் தன்னை இழந்துவிடாமல், மனிதனை அவனது சாரம் மற்றும் நடத்தைக்கு ஏற்ப அவனைக் கையாளுகிறார். தேவனே எல்லாவற்றிற்கும் மேலாக தேவனாக இருக்கிறார், மேலும் அவருக்கு அவரது கண்ணியம் மற்றும் உள்ளொளி உண்டு; மொத்தத்தில் மனிதன் மனிதனே மற்றும் சத்தியத்துக்கு முரணாக இருக்கும் மனிதனின் அன்பினால், அவரைத் தலை அசைக்கவைக்க முடியாது. மாறாக, மனிதன் செய்வதை எல்லாம் அவர் தகுந்தபடியாகக் கையாளுகிறார்.
தேவன் மீதான மனுஷனுடைய நிலை மற்றும் மனுஷனுடைய மனப்பான்மையை எதிர்கொண்ட தேவன் புதிய கிரியையைச் செய்து, அவரைக் குறித்த அறிவையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கொண்டிருக்கவும் அன்பையும் சாட்சியையும் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்கிறார். ஆகவே, மனுஷன் தேவனுடைய சுத்திகரிப்பையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும், தன்னைக் கையாள்வதையும், கிளை நறுக்குவதையும் அனுபவிக்க வேண்டும், இது இல்லாமல் மனுஷன் ஒருபோதும் தேவனை அறிந்துகொள்ளமாட்டான், ஒருபோதும் அவரை உண்மையாக நேசிக்கவும் சாட்சி பகரவும் தகுதிபெறமாட்டான். தேவன் மனுஷனைச் சுத்திகரிப்பது ஒருதலைப்பட்ச விளைவுக்காக மட்டுமின்றி, பன்முக விளைவுக்காகவும் ஆகும். இவ்விதமாக மட்டுமே, அவர்களுடைய உறுதியும் அன்பும் தேவனால் பரிபூரணமாக்கப்பட வேண்டும் என்பதற்காகச் சத்தியத்தைத் தேட விரும்புகிறவர்களிடம் தேவன் சுத்திகரிப்பின் கிரியையைச் செய்கிறார். சத்தியத்தைத் தேட விரும்புகிறவர்களுக்கும், தேவனுக்காக ஏங்குகிறவர்களுக்கும், இது போன்ற சுத்திகரிப்பைக் காட்டிலும் வேறு எதுவும் அர்த்தமுள்ளதாகவோ அல்லது அதிக உதவியுள்ளதாகவோ இருப்பதில்லை. தேவனுடைய மனநிலையானது மனுஷனால் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ளப்படுவதில்லை அல்லது புரிந்துகொள்ளப்படுவதில்லை, ஏனென்றால் தேவன் இறுதியில் தேவனாக இருக்கிறார். இறுதியாக, தேவனுக்கு மனுஷனைப் போன்ற அதே மனநிலையைக் கொண்டிருப்பதற்கு சாத்தியமில்லை, ஆகவே மனுஷனுக்கு அவரது மனநிலையை அறிந்துகொள்வது எளிதல்ல. சத்தியம் இயல்பாகவே மனுஷனிடம் இல்லை, அதைச் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது; மனுஷனிடம் சத்தியம் இல்லை, சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் உறுதியும் இல்லை, அவன் துன்பப்படாமல் சுத்திகரிக்கப்படாமல் அல்லது நியாயந்தீர்க்கப்படாமல் இருந்தால், அவனுடைய தீர்மானம் ஒருபோதும் பரிபூரணமாக்கப்படாது. சகல ஜனங்களுக்கும், சுத்திகரிப்பு என்பது மிகவும் வேதனையானது மற்றும் அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது—ஆனாலும், சுத்திகரிப்பின் போதுதான் தேவன் மனுஷனிடம் தமது நீதியான மனநிலையை தெளிவுபடுத்துகிறார், மேலும் மனுஷனுக்கான தேவைகளைப் பகிரங்கப்படுத்துகிறார், மேலும் அதிக அறிவொளியையும், அதிக உண்மையான கிளைநறுக்குதலையும் கையாளுதலையும் கொடுக்கிறார்; உண்மைகளுக்கும் சத்தியத்திற்கும் இடையிலான ஒப்பீட்டின் மூலம், அவர் மனுஷனுக்குத் தம்மையும் சத்தியத்தையும் பற்றிய அதிக அறிவைக் கொடுக்கிறார், மேலும் தேவனுடைய சித்தத்தைப் பற்றிய அதிகமானப் புரிதலை மனுஷனுக்குக் கொடுக்கிறார், இவ்வாறு தேவன் மீது உண்மையான மற்றும் தூய்மையான அன்பைக் கொண்டிருக்க மனுஷனை அனுமதிக்கிறார். சுத்திகரிப்பு செய்வதில் தேவனுடைய நோக்கங்கள் அத்தகையவை. தேவன் மனுஷரில் செய்யும் சகல கிரியைகளுக்கும் அதன் சொந்த நோக்கங்களும் முக்கியத்துவமும் உள்ளது; தேவன் அர்த்தமில்லாத கிரியையைச் செய்வதில்லை, மனுஷனுக்கு நன்மை பயக்காத கிரியையையும் அவர் செய்வதில்லை. சுத்திகரிப்பு என்றால் தேவனுக்கு முன்னால் இருந்து ஜனங்களை நீக்குவது என்று அர்த்தமல்ல, அவர்களை நரகத்தில் அழிப்பது என்றும் அர்த்தமில்லை. மாறாக, அதற்குச் சுத்திகரிப்பின் போது மனுஷனுடைய மனநிலையை மாற்றுவது, அவனுடைய நோக்கங்களை, அவனுடைய பழைய கண்ணோட்டங்களை மாற்றுவது, தேவன் மீதான அவனுடைய அன்பை மாற்றுவது மற்றும் அவனது முழு ஜீவியத்தையும் மாற்றுவது என்று அர்த்தமாகும். சுத்திகரிப்பு என்பது மனுஷனுடைய ஓர் உண்மையான சோதனையாகும் மற்றும் உண்மையான பயிற்சியின் ஒரு வடிவமாகும், மேலும் சுத்திகரிப்பின் போது மட்டுமே அவனுடைய அன்பானது தனது உள்ளார்ந்த செயல்பாட்டை வழங்க முடியும்.