I. மனுக்குலத்தை இரட்சிப்பதற்கு தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளைக் குறித்த வார்த்தைகள்

1. எனது முழு மேலாண்மைத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத்திட்டம் மூன்று நிலைகளை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய நியாயப்பிரமாணத்தின் காலம்; கிருபையின் யுகம் (இது மீட்பின் யுகமும் ஆகும்); மற்றும் கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் யுகம். இந்த மூன்று காலங்களிலும் எனது கிரியை ஒவ்வொரு காலத்தின் தன்மைக்கு ஏற்ப உள்ளடக்கத்தில் வேறுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கிரியை மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சத்தானுக்கு எதிராக நான் செய்யும் யுத்தத்தில் சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. என் கிரியையின் நோக்கம் சாத்தானை மடங்கடிப்பதும், என் ஞானத்தையும் சர்வ வல்லமையையும் வெளிப்படுத்துவதும், சாத்தானின் தந்திரங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அதன் மூலம் சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழும் முழு மனித இனத்தையும் இரட்சிப்பதுமே ஆகும். இது என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிக்காட்டுவதும், சாத்தானின் தாங்கமுடியாத வெறுப்பை வெளிப்படுத்துவதும் ஆகும். அதற்கும் மேலாக, படைக்கப்பட்ட மனிதர்களை நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள பாகுபாட்டைக் கண்டறிய அனுமதிப்பதும், எல்லாவற்றிற்கும் நான் அதிபதி என்பதை அறிந்துகொள்ளச் செய்வதும், சாத்தான் மனிதகுலத்தின் எதிரி என்றும், மனிதகுலத்தை சீரழித்தவன், தீயவன் என்பதையும் தெளிவாகக் காண்பிப்பதும், மேலும் நன்மை மற்றும் தீமையை, உண்மை மற்றும் பொய்யை, பரிசுத்தம் மற்றும் அசுத்தத்தை, மற்றும் எது பெரியது, எது மரியாதை அற்றது என இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை, அவர்கள் உறுதியாகச் சொல்ல அனுமதிப்பதும் ஆகும். இவ்வாறு, நான் மனிதகுலத்தை சிதைக்கவில்லை, சிருஷ்டிகராகிய நான் மட்டுமே மனிதகுலத்தை இரட்சிக்க முடியும், மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கக்கூடிய காரியங்களை வழங்க முடியும், நான் எல்லாவற்றிற்கும் அதிபதி என்பதையும், நான் சிருஷ்டித்தவைகளில் ஒருவன் சாத்தான் என்பதையும், பின்னர் எனக்கு எதிராகத் திரும்பினான் என்பதையும் அறியாமையில் உள்ள மனிதகுலம் அறிந்து எனக்கு சாட்சி கொடுக்க முடியும். எனது ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டம் மூன்று காலகட்டங்களாக பிரிந்துள்ளது. மேலும் படைக்கப்பட்ட மனிதர்கள் எனக்கு சாட்சி கொடுத்தல், என் சித்தத்தை புரிந்துகொள்ளுதல், மேலும் நானே சத்தியம் என்பதை அறிந்து கொள்ளுதல், என இந்த பலன்களை அடைய, நான் இவ்வாறு செயல்படுகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

2. மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டங்களுக்குள்ளும் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆனால் நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்ட கிரியைகளும் அடங்கும். உலகை சிருஷ்டிக்கும் கிரியை என்பது முழு மனுக்குலத்தையும் உருவாக்கும் கிரியையாக இருந்தது. இது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையாக இருக்கவில்லை, இதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது, மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை, ஆகையால் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டிய அவசியமில்லாதிருந்தது. மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது சாத்தானால் மனுஷன் சீர்கெடுக்கப்பட்டபோதுதான் துவங்கியது, ஆகையால் மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்டபோது தான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் துவங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் விளைவாகவே மனுஷனை தேவன் நிர்வகிப்பது துவங்கியது, இது உலகை சிருஷ்டிக்கும் கிரியையிலிருந்து எழும்பவில்லை. மனுக்குலம் ஒரு சீர்கெட்ட மனநிலையைப் பெற்ற பிறகுதான் நிர்வாகக் கிரியையானது செயல்பாட்டுக்கு வந்தது. ஆகையால், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில் நான்கு கட்டங்கள் அல்லது நான்கு யுகங்களுக்குப் பதிலாக மூன்று பகுதிகளே அடங்கும். மனுக்குலத்தை தேவன் நிர்வகிப்பதைக் குறிப்பிட இதுவே சரியான வழியாகும். இறுதி காலம் முடிவுக்கு வரும்போது, மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் முழுமையான முடிவுக்கு வந்திருக்கும். நிர்வாகக் கிரியையின் முடிவு என்றால் சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும், மனுக்குலம் தனது பயணத்தின் முடிவை எட்டியிருக்கும் என்றும் அர்த்தமாகும். சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை இல்லாமல், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது இருக்காது, அல்லது மூன்று கட்ட கிரியைகளும் இருக்காது. மனுக்குலத்தின் சீர்கேடே இதற்கான சரியான காரணமாகவும் இருந்தது. மனுக்குலத்திற்கு இரட்சிப்பு அவசரமாக தேவைப்பட்டதால், யேகோவா உலகை சிருஷ்டிப்பதை முடித்துவிட்டு, நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையை ஆரம்பித்தார். அப்போதுதான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது துவங்கியது, அதாவது அப்போதுதான் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை துவங்கியது. “மனுக்குலத்தை நிர்வகித்தல்” என்றால் பூமியில் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தின் (இன்னும் சீர்கெட்டுப்போகவிருந்த மனுக்குலம்) ஜீவிதத்தை வழிநடத்துதல் என்று அர்த்தமில்லை. மாறாக, சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஒரு மனுக்குலத்தின் இரட்சிப்பு என்று அர்த்தமாகும், அதாவது இந்த சீர்கெட்ட மனுக்குலத்தை மாற்றுவது என்று அர்த்தமாகும். இதுதான் “மனுக்குலத்தை நிர்வகித்தல்” என்பதன் அர்த்தமாகும். மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையில் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆகையால் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் அடங்காது, உலகை சிருஷ்டிக்கும் கிரியையும் அடங்காது, மாறாக உலகின் சிருஷ்டிப்பிலிருந்து தனித்திருக்கும் மூன்று கட்ட கிரியைகள் மட்டுமே அடங்கும். மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையைப் புரிந்து கொள்ள, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். இரட்சிக்கப்படுவதற்கு அனைவரும் இதைத்தான் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவனுடைய சிருஷ்டிகளாகிய நீங்கள் மனுஷனானவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும், மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணத்தையும், அத்துடன் மனுஷனுடைய இரட்சிப்பின் செயல்முறையையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய தயவைப் பெறுவதற்கான முயற்சியில் உபதேசத்தின்படி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருந்து, தேவன் மனுக்குலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார் அல்லது மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணம் ஆகியவை பற்றிய எந்த அறிவும் இல்லையென்றால், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இதில்தான் நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்கள். தேவனுடைய நிர்வாகக் கிரியையைப் பற்றி பரந்த அளவில் அறியாதிருக்கும்போது, கடைப்பிடிக்கக்கூடிய அந்த சத்தியங்களை மட்டும் புரிந்துகொள்வதோடு நீ திருப்தி அடைந்துவிடக்கூடாது. அப்படி திருப்தியடைந்தால், நீ மிகவும் இறுமாப்புள்ளவனாக இருக்கிறாய். மனுஷனை தேவன் நிர்வகித்தலுக்குள் உள்ள கதை, முழு பிரபஞ்சத்திற்கும் சுவிசேஷம் வருதல், சகல மனுஷர் மத்தியில் காணப்படும் மாபெரும் இரகசியம் ஆகியவை கிரியையின் மூன்று கட்டங்களாகும், இவைதான் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான அடித்தளமாகும். உனது ஜீவிதம் தொடர்பான எளிய சத்தியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, இந்த மாபெரும் இரகசியங்கள் மற்றும் தரிசனங்களைக் குறித்து நீ எதையும் அறியவில்லை என்றால், உன் ஜீவிதமானது பார்க்கப்படுதற்குத் தவிர வேறொன்றுக்கும் உதவாத ஒரு குறைபாடுள்ள தயாரிப்புக்கு ஒப்பாக இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

3. தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனிதக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனிதகுலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனிதகுலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீதத் தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்கு கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணப்பலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

4. மூன்று கட்ட கிரியைகளின் நோக்கம் முழு மனுக்குலத்தின் இரட்சிப்பாக இருக்கிறது, அதாவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிப்பதாகும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு குறிக்கோளையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கின்றபோதிலும், ஒவ்வொன்றும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது, ஒவ்வொன்றும் மனுக்குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப செய்யப்படும் வெவ்வேறு இரட்சிப்பின் கிரியையாக இருக்கிறது. இந்த மூன்று கட்ட கிரியைகளின் நோக்கத்தை நீ அறிந்துகொண்டதும், ஒவ்வொரு கட்ட கிரியையின் முக்கியத்துவத்தையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீ அறிந்துகொள்வாய், மேலும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வாய். உன்னால் இந்த நிலையை அடைய முடிந்தால், இந்த மாபெரும் தரிசனங்கள் எல்லாம் தேவன் மீதான உன் விசுவாசத்தின் அஸ்திபாரமாக மாறும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

5. இந்த மூன்று நிலைகளின் முக்கிய கரு மனிதனின் இரட்சிப்பாகும்—அதாவது, சகல சிருஷ்டிப்பையும் சிருஷ்கரை தொழுதுகொள்ளச் செய்வதாகும். இவ்வாறு, கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் சிறப்பான அர்த்தம் உள்ளது; தேவன் அர்த்தமில்லாத அல்லது பெறுமதியில்லாத எதையும் செய்வதில்லை. ஒருபுறம், கிரியையின் இந்த கட்டம் ஒரு புது யுகத்தை ஆரம்பித்து, முந்தைய இரண்டு யுகங்களையும் முடிக்கின்றது; மறுபுறம், இது அனைத்து மனித கருத்துக்களையும், மனித நம்பிக்கை மற்றும் அறிவின் பழைய வழிகளையும் உடைத்தெறிகிறது. முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகள் பல்வேறு மனித கருத்துக்களின்படி செய்யப்பட்டன; எவ்வாறாயினும், இந்த கட்டம் மனித கருத்துக்களை முற்றிலுமாக நீக்குகிறது, இதன் மூலம் மனிதகுலத்தை முற்றிலுமாக ஜெயிக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்” என்பதிலிருந்து

6. யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்த தற்போதையக் கட்டம் வரை, என இந்த மூன்றுக் கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியை தான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்றுக் கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

7. மூன்று கட்ட கிரியைகளும் ஒரே தேவனால்தான் செய்யப்பட்டன; இதுதான் மிகப் பெரிய தரிசனமாகும், மேலும் இதுதான் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரே பாதையாகும். மூன்று கட்ட கிரியைகளும் தேவனால் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும், எந்த மனுஷனாலும் அவர் சார்பாக இதுபோன்ற கிரியையைச் செய்திருக்க முடியாது. அதாவது, தேவனால் மட்டுமே ஆதியில் இருந்து இன்று வரை தனது சொந்தக் கிரியையைச் செய்திருக்க முடியும். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகள் வெவ்வேறு யுகங்களிலும் இடங்களிலும் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கிரியையும் வேறுபட்டதாக இருந்தாலும், இவை அனைத்தும் ஒரே தேவனால் செய்யப்படும் கிரியையாகும். எல்லா தரிசனங்களிலும், இதுவே மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. மனுஷனால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தால், அவனால் உறுதியாக நிற்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

8. மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு நிர்வாகத்தின் மையத்தில் உள்ளன, அவற்றில் தேவனுடைய மனநிலையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளைப் பற்றி அறியாதவர்களால் தேவன் தமது மனநிலையை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை உணர முடிவதில்லை, தேவனுடைய கிரியையின் ஞானத்தையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை. அவர்கள் மனுக்குலத்தை இரட்சிக்கும் பல வழிகளைப் பற்றியும், முழு மனுக்குலத்திற்கான அவருடைய சித்தத்தைப் பற்றியும் அறியாதிருக்கிறார்கள். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் முழு வெளிப்பாடாகும். மூன்று கட்ட கிரியைகளையும் அறியாதவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் பல்வேறு வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட கட்ட கிரியையில் எஞ்சியிருக்கும் உபதேசத்தை மட்டுமே உறுதியாக பிடித்துக்கொண்டிருப்பவர்கள் தேவனை உபதேசத்திற்குள் அடக்குபவர்களாக இருக்கிறார்கள், தேவன் மீதான அவர்களுடைய நம்பிக்கை தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. இதுபோன்றவர்கள் ஒருபோதும் தேவனுடைய இரட்சிப்பைப் பெற மாட்டார்கள். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளால் மட்டுமே தேவனுடைய மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும் மற்றும் முழு மனுக்குலத்தையும் இரட்சிப்பதற்கான தேவனுடைய நோக்கத்தையும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் முழு செயல்முறையையும் முழுமையாக வெளிப்படுத்த முடியும். இதுவே அவர் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஆதாயப்படுத்தினார் என்பதற்குச் சான்றாகும்; இதுவே தேவன் வெற்றிசிறந்ததற்க்கான சான்றாகும், மேலும் இதுவே தேவனுடைய முழு மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில் ஒரு கட்டத்தை மட்டுமே புரிந்துகொள்பவர்கள் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை மட்டுமே அறிவர். மனுஷனுடைய கருத்துக்களில், இந்த ஒரு கட்ட கிரியை உபதேசமாக மாறுவது எளிதானது. மேலும், மனுஷன் தேவனைப் பற்றி நிலையான விதிமுறைகளை உருவாக்கி, தேவனுடைய மனநிலையின் இந்த ஒரு பகுதியை தேவனுடைய முழு மனநிலையின் பிரதிநிதித்துவமாகப் பயன்படுத்துவான் என்பது சாத்தியமாகிறது. மேலும், மனுஷனுடைய கற்பனையின் பெரும்பகுதி கலக்கப்படுகிறது, அதாவது தேவன் ஒரு காலத்தில் இப்படி இருந்ததால், அவர் எல்லா காலத்திலேயும் இப்படியே இருப்பார், ஒருபோதும் மாற மாட்டார் என்று நம்பி, தேவனுடைய மனநிலை, இருக்கும் நிலை மற்றும் ஞானம், அத்துடன் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் ஆகியவற்றை குறுகிய வரம்பிற்குள் மனுஷன் மட்டுப்படுத்துகிறான். மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொண்டவர்களாலும் புரிந்துகொண்டவர்களாலும் மட்டுமே தேவனை முழுமையாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ள முடியும். குறைந்தபட்சம், அவர்கள் தேவனை இஸ்ரவேலரின் அல்லது யூதர்களின் தேவன் என்று வரையறுக்க மாட்டார்கள், மனுஷருக்காக எப்போதும் சிலுவையில் அறையப்படும் ஒரு தேவனாக அவரைப் பார்க்க மாட்டார்கள். தேவனுடைய ஒரு கட்ட கிரியையின் மூலமாக மட்டுமே ஒருவர் தேவனை அறிந்துகொண்டால், அவரது அறிவு மிகச் சிறியதாக இருக்கிறது, இது சமுத்திரத்திலுள்ள ஒரு துளியின் அளவை விட பெரியது அல்ல. இல்லையென்றால், பல பழைய மத காவலாளிகள் ஏன் தேவனை சிலுவையில் உயிருடன் அறைந்தார்கள்? இது மனுஷன் தேவனை குறிப்பிட்ட வரம்புகளுக்குள் அடைத்து வைத்திருப்பதனால்தான் அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

9. மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு கிரியையின் பதிவாகும்; அவை மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் பதிவாகும், அவை கற்பனையானவை அல்ல. நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய முழு மனநிலையைப் பற்றிய அறிவைக் கண்டடைய விரும்பினால், தேவனால் செய்யப்படும் மூன்று கட்ட கிரியைகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், நீங்கள் எந்த கட்டத்தையும் தவிர்க்கக்கூடாது. இதுவே தேவனை அறிய முற்படுபவர்களால் அடையப்பட வேண்டிய குறைந்தபட்ச காரியங்களாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவை மனுஷனால் பொய்யாக புனைய முடியாது. இது மனுஷனால் கற்பனை செய்யக்கூடிய ஒன்றல்ல, ஒரு தனி நபருக்கு வழங்கப்படும் பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு தயவின் விளைவும் அல்ல. மாறாக, இது தேவனுடைய கிரியையை மனுஷன் அனுபவித்த பிறகு வரும் ஒரு அறிவாகும். மேலும், இது தேவனுடைய கிரியையைப் பற்றிய உண்மைகளை அனுபவித்த பிறகு மட்டுமே வரும் தேவனைப் பற்றிய அறிவாகும். இத்தகையதொரு அறிவை விருப்பப்படி அடைய முடியாது, மேலும் இது கற்பிக்கக்கூடிய ஒன்றும் அல்ல. இது முற்றிலும் தனிப்பட்ட அனுபவத்துடன் தொடர்புடையதாகும். மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பானது இந்த மூன்று கட்ட கிரியைகளின் மையத்தில் தான் உள்ளது, ஆனாலும் இரட்சிப்பின் கிரியைக்குள் பல கிரியை செய்யும் முறைகளும், தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தப்படும் பல வழிமுறைகளும் அடங்கும். இதுதான் மனுஷன் அடையாளம் காண்பதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது, மேலும் இதுதான் மனுஷன் புரிந்துகொள்வதற்கு கடினமானதாக இருக்கிறது. யுகங்களைப் பிரித்தல், தேவனுடைய கிரியையில் காணப்படும் மாற்றங்கள், கிரியை நடக்கும் இடத்தின் மாற்றங்கள், இந்த கிரியையைப் பெறுபவரின் மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற பல என இவை அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் முறையிலுள்ள வேறுபாடு, அத்துடன் தேவனுடைய மனநிலை, சாயல், நாமம், அடையாளம் ஆகியவற்றின் மாற்றங்கள் அல்லது பிற மாற்றங்கள் என அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளின் பகுதியாகும். ஒரு கட்ட கிரியையால் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இது யுகங்களைப் பிரிப்பதையோ, அல்லது தேவனுடைய கிரியையின் மாற்றங்களையோ மற்றும் பிற அம்சங்களையோ உள்ளடக்குவதில்லை. இது தெளிவாகத் தெரிந்த உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய முழு கிரியையாகும். இரட்சிப்பின் கிரியையில் தேவனுடைய கிரியையையும் தேவனுடைய மனநிலையையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டும்; இந்த உண்மையில்லாமல், தேவனைப் பற்றிய உங்கள் அறிவு வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை, அது வெற்றுப் பேச்சே தவிர வேறு எதுவுமில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

10. தேவனின் முழு மனநிலையும் ஆறாயிரம் ஆண்டுக்கால ஆளுகைத் திட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது கிருபையின் யுகத்திலோ, நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ, கடைசிக் காலத்திலோ மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியையானது நியாயத்தீர்ப்பு, கோபாக்கினை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியைகளால் நியாயப்பிரமாணத்தின் யுகம் அல்லது கிருபையின் யுகத்தின் கிரியைகளுக்கு மாற்றாக முடியாது. இருப்பினும், இந்த மூன்று கட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்து, ஒரு உள்பொருளை உருவாக்குகின்றன, மேலும் இவை அனைத்தும் ஒரே தேவனின் கிரியை தான். இயற்கையாகவே, இந்த கிரியையை நிறைவேற்றும் செயல் தனி யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தொடக்கத்திற்கான கிரியையை செய்ததை போல; கிருபையின் யுகத்தில் மீட்பிற்கான கிரியையைச் செய்தது போல; கடைசிக் காலத்தில் சகலத்தையும் இறுதிக்குக் கொண்டுவரும் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆறாயிரம் ஆண்டுக்கால ஆளுகைத் திட்டத்தினுடைய கிரியைகளின் தரிசனங்களைப் பொறுத்தவரை, யாராலும் நுண்ணறிவு அல்லது புரிதலைப் பெற முடியாது, இந்த தரிசனங்கள் கடைசிவரை புதிராகவே இருக்கும். கடைசிக் காலத்தில், ராஜ்யத்தின் யுகத்தை முன்னெடுப்பதற்காக வார்த்தையின் கிரியை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது சகல யுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. கடைசிக் காலம் என்பது கடைசிக் காலத்தை விடவும், ராஜ்யத்தின் யுகத்தை விடவும் பெரியதாக இல்லை, மேலும் அது கிருபையின் யுகம் அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதாவது கடைசிக் காலத்தில், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தில் உள்ள அனைத்து கிரியைகளும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவே மறைபொருளின் வெளிப்பாடாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

11. ஆறாயிரம் ஆண்டுக்கால ஆளுகைத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டத்தாலும் தனியாக மூன்று யுகங்களின் கிரியைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் ஒட்டுமொத்தத்திலிருந்து ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா என்ற நாமத்தால் தேவனின் முழு மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் தமது கிரியையைச் செய்தார் என்பது தேவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவில்லை. யேகோவா மனுஷனுக்காக நியாயப்பிரமாணங்களை வகுத்து, அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, ஆலயத்தையும் பலிபீடங்களையும் கட்டியெழுப்பும்படி மனுஷனிடம் கேட்டார்; அவர் செய்த கிரியை நியாயப்பிரமாணத்தின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் செய்த இந்த கிரியை, மனுஷனை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றச் சொல்லும் தேவன் மட்டுமே தேவன் என்பதை, அல்லது அவர் ஆலயத்தில் இருக்கும் தேவன் என்பதை, அல்லது பலிபீடத்தின் முன் இருக்கும் தேவன் என்று நிரூபிக்கவில்லை. இதை சொல்லியிருக்க முடியாது. நியாயப்பிரமாணத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் ஒரு யுகத்தை மட்டுமே குறிக்கும். ஆகையால், தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மட்டுமே கிரியையைச் செய்திருந்தால், மனுஷன், “ஆலயத்தில் இருக்கும் தேவனே தேவன், மேலும், தேவனுக்கு ஊழியம் செய்ய நாம் ஆசாரிய உடைகளை அணிந்து ஆலயத்தினுள் நுழைய வேண்டும்,” என்ற வரையறைக்குள் தேவனைக் கட்டுப்படுத்தியிருந்திருப்பான். கிருபையின் யுகத்தில் கிரியைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிருக்காமலும், நியாயப்பிரமாணத்தின் யுகம் இன்றுவரை தொடர்ந்திருந்தால், தேவன் இரக்கமுள்ளவர், அன்பானவர் என்பதையும் மனுஷன் அறிந்திருக்க மாட்டான். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் கிரியை செய்யப்பட்டிருக்காவிட்டால், அதற்கு பதிலாகக் கிருபையின் யுகத்தில் மட்டுமே கிரியை செய்யப்பட்டிருந்தால், தேவனால் மனுஷனை மீட்டு மனுஷனின் பாவங்களையும் மன்னிக்க முடியும் என எல்லா மனுஷரும் அறிந்திருப்பர். அவரே பரிசுத்தமானவர், பாவமறியாதவர் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருப்பான், மேலும் மனுஷனுக்காகவே அவர் தம்மை பலியாகக் கொடுத்து சிலுவையில் அறைந்துகொள்ள முடியும் என்பதையும் மனுஷன் அறிந்திருப்பான். மனுஷனுக்கு இந்த விஷயங்கள் மட்டுமே தெரியும், ஆனால் வேறு எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொரு யுகமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில், கிருபையின் யுகத்தில், மற்றும் தற்போதைய கட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய மனநிலையின் அம்சங்களை பொறுத்தவரை: மூன்று கட்டங்களும் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கப்பட்டால்தான் அவற்றால் தேவனின் மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். மூன்று கட்டங்களையும் மனுஷன் அறிந்தால் மட்டுமே அவனால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மூன்று கட்டங்களில் எதையும் தவிர்க்க முடியாது. கிரியையின் இந்த மூன்று கட்டங்களையும் அறிந்த பிறகு மட்டுமே உன்னால் தேவனின் மனநிலையை முழுமையாகக் காண முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவன் தமது கிரியையை நிறைவு செய்தார் என்பது அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் தேவன் மட்டுமே என்பதை நிரூபிக்கவில்லை, மேலும் அவர் மீட்பின் கிரியையை நிறைவுசெய்தார் என்பதற்குத் தேவன் மனுஷகுலத்தை என்றென்றும் மீட்பார் என்று அர்த்தமல்ல. இவை அனைத்தும் மனுஷனால் உருவாக்கப்பட்ட முடிவுகள். கிருபையின் யுகம் முடிவுக்கு வந்துவிட்டதால், தேவன் சிலுவையைச் சேர்ந்தவர் என்றும் சிலுவை மட்டுமே தேவனின் இரட்சிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் உன்னால் சொல்ல முடியாது. அவ்வாறு செய்வது தேவனை வரையறுப்பதாகும். தற்போதைய கட்டத்தில், தேவன் முக்கியமாக வார்த்தையின் கிரியையை மட்டுமே செய்கிறார், ஆனால் தேவன் ஒருபோதும் மனுஷனிடம் இரக்கம் காட்டவில்லை என்றும் அவர் கொண்டு வந்ததெல்லாம் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் மட்டும் தான் என்றும் உன்னால் சொல்ல முடியாது. கடைசிக் காலத்தில் செய்யப்பட்ட கிரியைகள் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளையும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன, இதனால் மனுஷகுலம் சென்றுசேரும் இடத்தையும் முடிவையும் வெளிப்படுத்தவும், மனுஷரிடையே இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளையும் முடிக்கவும் முடியும். கடைசிக் காலத்தினுடைய கிரியையின் இந்தக் கட்டம், சகலத்தையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது. மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும், அவனை அவற்றின் ஆழத்திற்குள் தள்ளவும், அவனது இருதயத்தில் முற்றிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷ இனத்தை வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியும். ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் முடிந்தபிறகுதான், தேவனின் மனநிலையை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்வான், ஏனென்றால் அவருடைய ஆளுகை அப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

12. இன்றையக் கிரியை கிருபையின் கால கிரியையை முன்னோக்கித் தள்ளியுள்ளது; அதாவது, முழுமையான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கிரியை முன்னோக்கி நகர்ந்துள்ளது. கிருபையின் காலம் முடிந்துவிட்டாலும், தேவனின் கிரியையில் முன்னேற்றம் இருந்துவருகிறது. கிரியையின் இந்தக் கட்டம் கிருபையின் காலம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் காலத்தின் மேல் கட்டமைகிறது என்று ஏன் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்? ஏனெனில் இந்த நாளின் கிரியை கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தொடர்ச்சியாக இருக்கிறது, மேலும் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்யப்பட்டவற்றின் ஒரு முன்னேற்றமாகவும் உள்ளது. இந்த மூன்று கட்டச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் அடுத்ததோடு நெருக்கமாகக் கட்டப்பட்டு ஒன்றுக்கொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயேசு செய்தவற்றின் மேல் இந்தக் கட்டத்தின் கிரியை கட்டமைகிறது என்று ஏன் நான் கூறுகிறேன்? இந்தக் கட்டம் இயேசு செய்த கிரியையின் மேல் கட்டமையவில்லை என்று வைத்துக்கொண்டால், இந்தக் கட்டத்தில் இன்னொரு சிலுவைமரணம் ஏற்பட வேண்டும், மேலும் முந்திய கட்டத்தின் இரட்சிப்பின் கிரியை மீண்டும் முழுவதுமாக செய்யப்பட வேண்டும். இது அர்த்தமற்றதாக இருக்கும். ஆகவே கிரியை முற்றிலுமாக முடிக்கப்படவில்லை, ஆனால் காலம் முன்னோக்கி நகர்ந்துள்ளது மற்றும் கிரியையின் நிலை முன்னை விட கூடுதல் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கிரியை நியாயப்பிரமாண காலம் என்னும் அடித்தளத்தின் மீதும் இயேசுவின் கிரியை என்ற பாறையின் மீதும் கட்டப்படுகிறது என்று கூறலாம். தேவனுடைய கிரியை கட்டம் கட்டமாக கட்டமைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கட்டம் ஒரு புதிய தொடக்கம் அல்ல. மூன்று கட்டக் கிரியை மட்டுமே ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் எனக் கருதப்படலாம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து

13. மூன்று கட்டங்களின் எந்த ஒரு கட்டமும் முழு மனுக்குலத்தாலும் அறியப்பட வேண்டிய ஒரே தரிசனம் என்று கருத முடியாது, ஏனென்றால் இரட்சிப்பின் முழு கிரியையும் மூன்று கட்ட கிரியைகளையும் குறிக்கிறது, அவற்றில் ஒரு கட்டத்தை மட்டும் குறிக்கவில்லை. இரட்சிப்பின் கிரியை நிறைவேற்றப்படாத வரை, தேவனுடைய நிர்வாகத்தால் ஒரு முழுமையான முடிவுக்கு வரமுடியாது. தேவனுடைய இயல்பு, அவருடைய மனநிலை மற்றும் அவருடைய ஞானம் ஆகியவை இரட்சிப்பின் கிரியை முழுவதும் வெளிப்படுத்தப்படுகின்றன. இவை மனுஷனுக்கு ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் படிப்படியாக இரட்சிப்பின் கிரியையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரட்சிப்பின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், அவருடைய இயல்பின் ஒரு பகுதியையும் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு கட்ட கிரியையும் தேவனுடைய இயல்பை நேரடியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு, மூன்று கட்ட கிரியைகள் முடிந்த பிறகு மட்டுமே இரட்சிப்பின் கிரியை முழுமையாக முடிக்க முடியும், ஆகையால் தேவனுடைய முழுமையைப் பற்றிய மனுஷனுடைய அறிவை தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு கட்ட கிரியையிலிருந்து மனுஷன் பெறுவது அவருடைய கிரியையின் ஒரு பகுதியில் வெளிப்படுத்தப்படும் தேவனுடைய மனநிலையாகும். இக்கட்டங்களுக்கு முன்னும் பின்னும் வெளிப்படுத்தப்படும் மனநிலையையும் இயல்பையும் இது குறிக்க முடியாது. ஏனென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையை ஒரு காலகட்டத்தில் அல்லது ஒரு இடத்தில் உடனடியாக முடிக்க முடியாது, ஆனால் வெவ்வேறு காலங்களிலும் இடங்களிலும் மனுஷனுடைய வளர்ச்சி நிலைக்கு ஏற்ப படிப்படியாக ஆழமாகிறது. இதுதான் இக்கட்டங்களில் செய்யப்படும் கிரியையாகும், இது ஒரு கட்டத்தில் மட்டும் முடிக்கப்படுவதில்லை. ஆகையால், தேவனுடைய முழு ஞானமும் ஒரு தனி கட்டத்தில் மட்டுமல்லாமல் மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய முழு இயல்பும் மற்றும் முழு ஞானமும் இந்த மூன்று கட்டங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய இயல்பு உள்ளது மற்றும் ஒவ்வொரு கட்டமும் அவருடைய கிரியையின் ஞானத்தின் ஒரு பதிவாக இருக்கிறது. இந்த மூன்று கட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய முழு மனநிலையையும் மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் இருப்பது எல்லா மனிதர்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். மேலும், தேவனை வணங்கும் போது ஜனங்களுக்கு இந்த அறிவு இல்லையென்றால், அவர்கள் புத்தரை வணங்குபவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர் மத்தியில் மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகளை நிறைவேற்றியிருப்பதால், இந்த மூன்று கட்ட கிரியைகளின் போது அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் மனுஷன் செய்ய வேண்டும். தேவன் மனுஷனிடமிருந்து மறைப்பதை எந்த மனுஷனாலும் அடைய முடியாது, அதை மனுஷன் அறிந்துகொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் தேவன் மனுஷனுக்குக் காண்பிப்பதை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் எந்த மனுஷனும் அதைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் முந்தைய கட்டத்தின் அஸ்திபாரத்தின் மீது செய்யப்படுகின்றன; இது இரட்சிப்பின் கிரியையிலிருந்து பிரிந்து தனியாக செய்யப்படுவதில்லை. யுகத்திலும் செய்யப்படும் கிரியையின் வகையிலும் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அதன் மையத்தில் இன்னும் மனுக்குலத்தின் இரட்சிப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு கட்ட இரட்சிப்பின் கிரியையும் முந்தையதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

14. தேவனுடைய முழு ஆளுகையும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நிலையிலும், பொருத்தமான கோரிக்கைகள் மனிதனுக்கு வைக்கப்படுகின்றன. மேலும், யுகங்கள் கடந்துசென்று வளருகையில், மனிதகுலம் யாவருக்குமான தேவனுடைய கோரிக்கைகள் எப்போதும் மிகவும் உயர்ந்தவை ஆகின்றன. இவ்விதமாக, மனுஷன் “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்ற உண்மையைப் பற்றிக்கொள்கிற வரையில், தேவனுடைய நிர்வாகக் கிரியை, படிப்படியாகத் தனது உச்சத்தை அடைகின்றது, இந்த வழியில் மனுஷன் சாட்சியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் போன்றே, அவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் இன்னும் அதிகமாகின்றன. மனுஷன் தேவனுடன் உண்மையிலேயே எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கக் கூடுமோ, அவ்வளவு அதிகமாக அவன் தேவனை மகிமைப் படுத்துகிறான். மனிதனின் ஒத்துழைப்பு என்பது அவன் கொடுக்க வேண்டிய சாட்சியாக உள்ளது, மற்றும் அவன் கொடுக்கிற சாட்சியம் மனிதனின் நடைமுறையாக உள்ளது. ஆகையால், தேவனுடைய கிரியை சரியான விளைவை ஏற்படுத்துமா இல்லையா, மற்றும் உண்மையான சாட்சியம் இருக்க முடியுமா இல்லையா என்பது பிரிக்க இயலாத வகையில் மனுஷனின் ஒத்துழைப்பு மற்றும் மனுஷனின் சாட்சியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரியை முடிக்கப்படுகின்றபோது, அதாவது, தேவனுடைய நிர்வகித்தல் அனைத்தும் அதன் முடிவை எட்டுகின்றபோது, மனுஷன் உயர்ந்த சாட்சியம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவான், மேலும் தேவனுடைய கிரியை முடிவடையும்போது, மனுஷனின் நடைமுறையும் பிரவேசமும் அவற்றின் உச்சத்தை அடையும். கடந்தகாலங்களில், மனுஷன் நியாயப் பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் இணங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், மற்றும் அவன் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டான். இன்று, மனுஷன் தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் மற்றும் அவன் தேவனுடைய மிக உயர்வான அன்பைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அவன் உபத்திரவங்களுக்கு மத்தியில் இன்னமும் தேவனை அன்புகூர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். இந்தமூன்று கட்டங்களும் தேவன் தம்முடைய முழு நிர்வகித்தலிலும் படிப்படியாக மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையதை விட ஆழமாகச் செல்கின்றது, மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷனின் தேவைகள் முந்தையதை விட மிகவும் ஆழ்ந்தவைகளாக உள்ளன, மேலும் இந்த வழியில், தேவனுடைய முழு ஆளுகையும் படிப்படியாக வடிவம் பெறுகிறது. மனுஷனின் தேவைகள் எப்போதுமே அதிகமாக இருப்பதால், மனுஷனின் மனநிலை தேவனால் கோரப்படும் தரங்களுக்கு எப்போதைக் காட்டிலும் மிகநெருக்கமாக வந்துள்ளது என்பது மிகத்துல்லியமானதாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகுதான் முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத் திலிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது, தேவனுடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வருகிறபோது, முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும். அந்த நேரம் வருகிறபோது, தேவனுடைய கிரியை அதன் முடிவை எட்டியிருக்கும், மேலும் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களை அடைவதற்குத் தேவனுடனான மனுஷனுடைய ஒத்துழைப்பு இனி இருக்காது, மற்றும் மனிதகுலம் முழுவதும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்வார்கள், மற்றும் அப்போதில் இருந்து, தேவனுக்கு எதிரானகலகமோ எதிர்ப்போ இருக்காது. மனுஷனிடம் தேவன் எந்தக்கோரிக்கைகளையும் வைக்க மாட்டார், மற்றும் மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையில் இன்னும் அதிகமாக இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும், இது மனுஷனும் தேவனும் ஒன்றாக இருக்கும் ஒரு வாழ்வாகும், தேவனுடைய நிர்வகித்தல் முடிந்த பின்பு மற்றும் மனுஷன் சாத்தானின் பிடியிலிருந்து தேவனால் முழுமையாக மீட்கப்பட்ட பிறகு வரும் வாழ்வாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

15. தேவனுடைய நிர்வகித்தல் இதுதான்: மனிதனை சாத்தானிடம் ஒப்படைப்பது—தேவன் என்றால் என்ன, சிருஷ்டிகர் என்றால் என்ன, தேவனை ஆராதிப்பது எப்படி, அல்லது தேவனுக்கு அடிபணிய வேண்டியதன் அவசியம் ஏன் என்று தெரியாத மற்றும் சாத்தானை தன்னை சீர்கெட்டுப் போகச் செய்ய அனுமதித்த ஒரு மனிதகுலம். மனிதன் தேவனை முழுமையாக ஆராதித்து சாத்தானை நிராகரிக்கும் பட்சத்தில் தேவன் மனிதனை சாத்தானின் கைகளிலிருந்து படிப்படியாக மீட்டுக்கொள்கிறார். இது தேவனுடைய நிர்வகித்தலாகும். இது ஒரு புராணக் கதையாகத் தோன்றலாம், மேலும் அது மனக்கலக்கமாகத் தோன்றலாம். இது ஒரு புராணக் கதை என்று மக்கள் உணர்கிறார்கள், ஏனென்றால் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் மனிதனுக்கு எவ்வளவு நேர்ந்தது என்பது குறித்து அவர்களுக்கு எந்தவிதமான தகவலும் இல்லை, பிரபஞ்சத்திலும், ஆகாயவிரிவிலும் எத்தனை கதைகள் நிகழ்ந்தன என்பது அவர்களுக்குத் தெரியாது. மேலும், பொருள் உலகத்திற்கு அப்பால் இருக்கும் மிகவும் ஆச்சரியமூட்டும், பயத்தைத் தூண்டும் உலகத்தை அவர்களால் பாராட்ட முடியாது, ஆனால் அவர்களின் மரணக் கண்கள் அவற்றைப் பார்ப்பதைத் தடுக்கின்றன. மனிதனுக்கு தேவனுடைய இரட்சிப்பின் முக்கியத்துவம் அல்லது அவருடைய நிர்வாகக் கிரியையினுடைய முக்கியத்துவம் பற்றி மனிதனுக்கு எந்த புரிதலும் இல்லாததால், அது மனிதனுக்கு புரியவில்லை என்று உணர்கிறது, மேலும் தேவன் இறுதியில் மனிதகுலத்தை எப்படி விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ளவில்லை. ஆதாமும் ஏவாளும் இருந்ததைப் போல சாத்தானால் முற்றிலும் தடையின்றி இருக்க வேண்டுமா? இல்லை! தேவனுடைய நிர்வகித்தலின் நோக்கம் என்னவென்றால், தேவனை ஆராதித்து அவருக்குக் கீழ்ப்படிந்த ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்துவதாகும். இந்த மக்கள் சாத்தானால் சீர்கெட்டுப் போயிருந்தாலும், அவர்கள் இனி சாத்தானை தங்கள் தகப்பனாக பார்க்க மாட்டார்கள்; அவர்கள் சாத்தானின் வெறுக்கத்தக்க முகத்தை அடையாளம் கண்டு அதை நிராகரிக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சிப்பையும் ஏற்றுக்கொள்ள தேவனுக்கு முன்பாக வருகிறார்கள். அசிங்கமானவை என்றால் என்ன, அது பரிசுத்தமானவற்றுடன் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள், மேலும் தேவனுடைய மகத்துவத்தையும் சாத்தானின் தீமையையும் அங்கீகரிக்கிறார்கள். இது போன்ற ஒரு மனிதகுலம் இனி சாத்தானுக்கு வேலை செய்யாது, அல்லது சாத்தானை வணங்குவதில்லை, அல்லது சாத்தானை வணங்காது. ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே தேவனால் ஆதாயப்படுத்தப்பட்ட ஒரு கூட்ட ஜனங்களாவார்கள். மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனுடைய கிரியையின் முக்கியத்துவம் இதுதான். இந்த நேரத்தில் தேவனுடைய நிர்வாகக் கிரியின் போது, சாத்தானின் சீர்கேடு மற்றும் தேவனுடைய இரட்சிப்பு ஆகிய இரண்டுக்கும் மனிதகுலம்தான் இலக்காகும், மேலும் தேவனும் சாத்தானும் சண்டையிடுவதற்கு மனிதன்தான் பொருளாக இருக்கிறான். தேவன் தமது கிரியையைச் செய்வதால், அவர் படிப்படியாக மனிதனை சாத்தானின் கைகளிலிருந்து மீட்டு வருகிறார், எனவே மனிதன் தேவனிடம் நெருங்கி வருகிறான் …

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

16. தேவனுடைய முழு நிர்வாகமும் அதன் முடிவை நெருங்கும் போது, தேவன் எல்லாவற்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். மனுஷன் சிருஷ்டிகரின் கைகளால் சிருஷ்டிக்கப்பட்டான், இறுதியில் அவர் மனுஷனை தமது ஆளுகையின் கீழ் முழுமையாகத் திருப்பிக் கொண்டுவர வேண்டும்; இதுவே மூன்று கட்ட கிரியைகளின் முடிவாகும். கடைசிக்கால கிரியையின் கட்டமும், இஸ்ரவேல் மற்றும் யூதேயாவிலுள்ள முந்தைய இரண்டு கட்டங்களும் முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள தேவனுடைய நிர்வாகத் திட்டமாகும். இதை ஒருவராலும் மறுக்க முடியாது, இது தேவனுடைய கிரியையைக் குறித்த உண்மையாகும். இந்தக் கிரியையை ஜனங்கள் அதிகம் அனுபவித்திருக்கவில்லை அல்லது கண்டிருக்கவில்லை என்றாலும், உண்மைகள் இன்னும் உண்மைகளாகவே இருக்கின்றன, இது எந்த மனிதனும் மறுக்க முடியாததாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தேசத்திலும் தேவனை நம்புகிறவர்கள் எல்லோரும் மூன்று கட்ட கிரியைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். நீ ஒரு கட்ட கிரியையை மட்டுமே அறிந்திருந்து, மற்ற இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் கடந்த காலத்திலுள்ள தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றிய முழுமையான சத்தியத்தை உன்னால் பேச முடியாது மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ தேவனை அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ இல்லை, ஆகையால் தேவனுக்குச் சாட்சி பகருவதற்கு நீ பொருத்தமானவனாக இல்லை. இக்காரியங்களைப் பற்றிய உனது தற்போதைய அறிவு ஆழமானதா அல்லது மேலோட்டமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இறுதியில் அறிவைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் முழுமையாக நம்பியிருக்க வேண்டும். ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய முழு கிரியையையும் கண்டு அவருடைய ஆளுகையின் கீழ் அடிபணிவார்கள். இக்கிரியையின் முடிவில், எல்லா மதங்களும் ஒன்றாகிவிடும், எல்லாச் சிருஷ்டிகளும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் திரும்புவார்கள், எல்லாச் சிருஷ்டிகளும் ஒரே மெய்த்தேவனை வணங்குவார்கள். தீய மதங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும், மீண்டும் ஒருபோதும் தோன்றாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

17. மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய இந்த தொடர்ச்சியான குறிப்பு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? யுகங்கள் கடந்து செல்வது, சமுதாய வளர்ச்சி மற்றும் இயற்கையின் மாறிவரும் முகம் அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் மாற்றங்களைப் பின்பற்றுகின்றன. மனுக்குலமானது தேவனுடைய கிரியையுடன் காலப்போக்கில் மாறுகிறது, அது தானாகவே உருவாவதில்லை. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளும் சகல சிருஷ்டிகளையும், ஒவ்வொரு மதத்தையும், மதப்பிரிவையும் சேர்ந்த அனைவரையும் ஒரே தேவனுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்காக குறிப்பிடப்படுகின்றன. நீ எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இறுதியில் நீங்கள் எல்லோரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் அடிபணிவீர்கள். தேவனால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இதை எந்த மதத் தலைவராலும் செய்ய முடியாது. உலகில் பல முக்கியமான மதங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த தலைவரைக் கொண்டுள்ளன. மேலும், பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறார்கள். பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு நாடும் தனக்குள் வெவ்வேறு மதங்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் உள்ள எல்லா ஜனங்களும் இறுதியில் ஒரே தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மதத் தலைவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. அதாவது, மனுக்குலம் ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்த, மனுக்குலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகராலேயே மனுக்குலம் வழிநடத்தப்படுகிறது, இதுதான் உண்மை. உலகில் பல பெரிய மதங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ்தான் உள்ளன, அவை எதுவுமே இந்த ஆளுகையின் எல்லையை மீற முடியாது. மனுக்குலத்தின் வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், இயற்கை அறிவியலின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இக்கிரியை குறிப்பிட்ட எந்தவொரு மதத் தலைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மதத் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் தலைவர்களாக மட்டுமே இருக்கின்றனர், அவர்களால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. மதத் தலைவர்களால் முழு மதத்திற்குள்ளும் உள்ள எல்லோரையும் வழிநடத்த முடியும், ஆனால் அவர்களால் வானத்திற்கு கீழுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் கட்டளையிட முடியாது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மதத் தலைவர்கள் தலைவர்களாக மட்டுமே இருக்கிறார்கள், அவர்களால் தேவனுக்கு (சிருஷ்டிகருக்கு) சமமாக நிற்க முடியாது. சகலமும் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளன, இறுதியில் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளுக்குத் திரும்பும். மனுக்குலம் ஆதியில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்புவார். இது தவிர்க்க முடியாதது. தேவன் மட்டுமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும், சகல சிருஷ்டிகளுக்கு மத்தியிலும் அவரே மிகவும் உயர்ந்த ஆட்சியாளராகவும் இருக்கிறார், சகல சிருஷ்டிகளும் அவருடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும். ஒரு மனுஷனுடைய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த மனுஷனால் மனுக்குலத்தை ஒரு பொருத்தமான சென்றுசேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. யாராலும் சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாது. யேகோவா தாமே மனுக்குலத்தை சிருஷ்டித்து ஒவ்வொன்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தினார். கடைசிக்காலம் வரும்போது, அவர் தமது சொந்த கிரியையை தாமே செய்வார், சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். இக்கிரியையை தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆதி முதல் இன்று வரை செய்யப்பட்ட மூன்று கட்ட கிரியைகள் எல்லாமே தேவனாலேயே செய்யப்பட்டன, அவை ஒரே தேவனாலேயே செய்யப்பட்டன. மூன்று கட்ட கிரியைகளின் உண்மை என்பது முழு மனுக்குலத்திற்கான தேவனுடைய தலைமைத்துவத்தைப் பற்றிய உண்மையாகும், இது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளின் முடிவில், சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும். ஏனென்றால், முழு பிரபஞ்சத்திலும் இந்த ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார், வேறு எந்த மதங்களும் இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

18. ஒருவேளை, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய புதிர் மனுக்குலத்திற்கு தெரியப்படுத்தப்படும்போது, தேவனை அறிந்த திறமையானவர்களைக் கொண்ட ஒரு கூட்டம் அடுத்தடுத்து தோன்றும். நிச்சயமாகவே, அதுதான் விஷயம் என்று நம்புகிறேன். மேலும், நான் இக்கிரியையைச் செய்வதற்கான செயல்முறையில் இருக்கிறேன் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற திறமையான நபர்கள் தோன்றுவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். அவர்கள் இந்த மூன்று கட்ட கிரியைகளின் உண்மைக்கு சாட்சி கொடுப்பவர்களாக மாறுவார்கள். நிச்சயமாகவே, இந்த மூன்று கட்ட கிரியைகளுக்கு அவர்கள்தான் முதலில் சாட்சி பகருகிறவர்களாக இருப்பார்கள். ஆனால், தேவனுடைய கிரியை முடிவடையும் நாளில் இதுபோன்ற திறமையானவர்கள் வெளிப்படாவிட்டால் அல்லது மாம்சமாகிய தேவனால் பரிபூரணமாக்கப்படுவதை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்ட ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே இருந்தால், அதைவிட வேதனையும் வருத்தமும் மிக்கது எதுவுமில்லை. ஆனாலும், இது மிகவும் மோசமான சூழ்நிலைதான். எது எப்படி இருந்தாலும், உண்மையிலேயே பின்தொடர்பவர்களால்தான் இந்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆதிகாலம் முதற்கொண்டு, இதுபோன்ற கிரியைகள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இதுபோன்ற கிரியை மனித வளர்ச்சி வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. தேவனை அறிந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக உன்னால் உண்மையிலேயே மாற முடிந்தால், இது சகல சிருஷ்டிகளுக்கு மத்தியில் மிகவும் மேலான கெளரவமாக இருக்காதா? மனுக்குலத்தின் மத்தியில் எந்த சிருஷ்டியாகிலும் தேவனால் அதிகமாக பாராட்டப்படுவானா? இதுபோன்ற கிரியையை அடைவது எளிதானதல்ல, ஆனால் இறுதியில் இன்னும் வெகுமதிகளை அறுவடை செய்யும். அவர்களுடைய பாலினம் அல்லது நாடு என எதுவாக இருந்தாலும், தேவனைப் பற்றிய அறிவை அடையக்கூடிய அனைவரும் இறுதியில் தேவனுடைய மிகப் பெரிய கனத்தைப் பெறுவார்கள், மேலும் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். இதுதான் இன்றைய கிரியையாகும். இது எதிர்காலத்தின் கிரியையும் ஆகும். இது 6,000 ஆண்டுகால கிரியைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கடைசி மற்றும் மிக உயர்ந்த கிரியையாகும், மேலும் இது ஒவ்வொரு வகை மனுஷரையும் வெளிப்படுத்தும் ஒரு கிரியை முறையாகும். தேவன் மனுஷனை அறிந்துகொள்ளச் செய்யும் கிரியையின் மூலம், மனுஷனுடைய வெவ்வேறு தராதரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன: தேவனை அறிந்தவர்களே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியுள்ளவர்கள், அதேநேரத்தில் தேவனை அறியாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியற்றவர்கள். தேவனை அறிந்தவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள், தேவனை அறியாதவர்களை தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று அழைக்க முடியாது. தேவனுக்கு நெருக்கமானவர்களால் தேவனுடைய எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியும், ஆனால் அவருக்கு நெருக்கமில்லாதவர்கள் அவருடைய எந்த கிரியைக்கும் தகுதியானவர்கள் அல்ல. இது உபத்திரவங்கள், சுத்திகரிப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் இறுதியில் தேவனைப் பற்றிய அறிவை மனுஷனை அடைய அனுமதிப்பதற்காகவே உள்ளன, இதன்மூலம் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிவான். இதுதான் இறுதியில் அடையப்படும் பலனாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

19. மூன்று கட்ட கிரியைகளும் முடிவுக்கு வரும்போது, தேவனுக்கு சாட்சி பகருகிறவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும், தேவனை அறிந்தவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும் உருவாக்கப்படும். இவர்கள் அனைவரும் தேவனை அறிந்துகொள்வார்கள், இவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலும். இவர்கள் மனிதத்தன்மையையும் அறிவையும் கொண்டிருப்பார்கள், தேவனுடைய மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியையாகும், இவர்கள்தான் 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் பலன்களாவார்கள் மற்றும் சாத்தானின் இறுதி தோல்விக்கு மிகவும் வல்லமையான சாட்சிகளாவார்கள். தேவனுக்கு சாட்சி பகரக்கூடியவர்களாலேயே தேவனுடைய வாக்குத்தத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் மற்றும் இறுதியில் மீதியான ஜனக்கூட்டமாக இருப்பார்கள், இவர்களே தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் தேவனுக்கு சாட்சி பகருவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

20. இன்றைய நாளிலும் தனது ஆறாயிரம் ஆண்டுகால கிரியைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கும் தேவன், தம்முடைய பல கிரியைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார், இதன் முதன்மை நோக்கம் சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலம் முழுமைக்குமான இரட்சிப்பைக் கொண்டுவருவதாகும். பரலோகத்தில் உள்ள அனைத்தையும், பூமியிலுள்ள சகலத்தையும், சமுத்திரங்களுக்குள் உள்ள அனைத்தையும், மற்றும் பூமியில் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கடைசி பொருளையும் அவருடைய சர்வவல்லமையைக் காணவும், அவருடைய எல்லா கிரியைகளுக்கும் சாட்சியாகவும் இருக்க அனுமதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். சாத்தானை அவர் தோற்கடித்ததன் மூலம் அவர் செய்த எல்லாக் கிரியைகளையும் மனுஷருக்கு வெளிப்படுத்தவும், அவர்கள் அவரைப் புகழ்ந்து பேசவும், மற்றும் சாத்தானைத் தோற்கடித்ததில் அவருடைய ஞானத்தை உயர்த்தவும் இந்த வாய்ப்பைக் கைக்கொள்கிறார். பூமியிலும், பரலோகத்திலும், சமுத்திரங்களிலும் உள்ள சகலமும் தேவனை மகிமைப்படுத்துகின்றன, அவருடைய சர்வவல்லமையைப் புகழ்கின்றன, அவருடைய ஒவ்வொரு கிரியையையும் புகழ்கின்றன, அவருடைய பரிசுத்த நாமத்தைக் கூக்குரலிடுகின்றன. அவர் சாத்தானை தோற்கடித்ததற்கு இதுவே சான்று; அவர் சாத்தானை வென்றதற்கு இதுவே சான்று. மிக முக்கியமாக, அவர் மனுஷகுலத்தை இரட்சித்ததற்கும் இதுவே சான்று. தேவனின் சிருஷ்டிப்புக்கள் சகலமும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருகின்றன, அவருடைய எதிரியைத் தோற்கடித்து வெற்றிகரமாகத் திரும்பியதற்காக அவரைப் புகழ்கின்றன, மேலும் அவரை வெற்றிகரமான ராஜா என்றும் புகழ்கின்றன. அவருடைய நோக்கம் சாத்தானை தோற்கடிப்பது மட்டுமாக இருக்கவில்லை, அதனால்தான் அவருடைய கிரியை ஆறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. மனிதகுலத்தை இரட்சிக்க அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்துகிறார்; அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்தி அவருடைய எல்லாக் கிரியைகளையும் அவருடைய எல்லா மகிமையையும் வெளிப்படுத்துகிறார். அவர் மகிமைப்படுத்தப்படுவார், தேவதூதர்கள் அனைவரும் அவருடைய எல்லா மகிமையையும் காண்பார்கள். பரலோகத்திலுள்ள தூதர்களும், பூமியிலுள்ள மனுஷரும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் சிருஷ்டிகரின் மகிமையைக் காண்பார்கள். அவர் செய்யும் கிரியை இது. வானத்திலும் பூமியிலும் அவர் சிருஷ்டித்தவை அனைத்தும் அவருடைய மகிமைக்கு சாட்சியாக இருக்கும், மேலும் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்தபின் அவர் வெற்றிகரமாகத் திரும்பி வருவார், மேலும் மனிதகுலம் அவரைப் புகழ்ந்துப் பேச அனுமதிப்பார், இதனால் அவருடைய கிரியையில் இரட்டை வெற்றியைப் பெறுவார். இறுதியில், மனிதகுலம் முழுவதும் அவரால் ஜெயங்கொள்ளப்படும், அவரை எதிர்த்து நிற்கும் அல்லது கலகம் செய்யும் எவரையும் அவர் அழிப்பார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுக்குச் சொந்தமான அனைவரையும் அவர் அழிப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

முந்தைய: முன்னுரை

அடுத்த: A. நியாயப்பிரமாண காலத்தில் அவருடைய கிரியைப் பற்றிய தேவனுடைய வெளிப்பாடு குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக