மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

எனது முழு நிர்வாகத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று கட்டங்களை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய நியாயப்பிரமாணத்தின் காலம்; கிருபையின் காலம் (இது மீட்பின் காலமும் ஆகும்); மற்றும் கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று காலங்களிலும் எனது கிரியை ஒவ்வொரு காலத்தின் தன்மைக்கு ஏற்ப உள்ளடக்கத்தில் வேறுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்தக் கிரியை மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சாத்தானுக்கு எதிராக நான் செய்யும் யுத்தத்தில் சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. என் கிரியையின் நோக்கம் சாத்தானை மடங்கடிப்பதும், என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துவதும், சாத்தானின் தந்திரங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அதன் மூலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் முழு மனித இனத்தையும் இரட்சிப்பதுமே ஆகும். இது என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிக்காட்டுவதும், சாத்தானின் தாங்கமுடியாத வெறுப்பை வெளிப்படுத்துவதும் ஆகும். அதற்கும் மேலாக, சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களை நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள பாகுபாட்டைக் கண்டறிய அனுமதிப்பதும், எல்லாவற்றிற்கும் நானே அதிபதி என்பதை அறிந்துகொள்ளச் செய்வதும், சாத்தான் மனிதகுலத்தின் எதிரி, மனிதகுலத்தை சீரழித்தவன், தீயவன் என்பதையும் தெளிவாகக் காண்பிப்பதும், மேலும் நன்மை மற்றும் தீமையை, சத்தியம் மற்றும் பொய்யை, பரிசுத்தம் மற்றும் அசுத்தத்தை, மற்றும் எது மகத்துவமானது, எது இழிவானது என இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவர்கள் உறுதியாகச் சொல்ல அனுமதிப்பதுமே ஆகும். இவ்வாறு, நான் மனிதகுலத்தைச் சீர்கெடுக்கவில்லை, சிருஷ்டிகராகிய என்னால் மட்டுமே மனிதகுலத்தை இரட்சிக்க முடியும், மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கக்கூடிய காரியங்களை வழங்க முடியும், நான் எல்லாவற்றிற்கும் அதிபதி என்பதையும், நான் சிருஷ்டித்தவைகளில் ஒருவன்தான் சாத்தான் என்பதையும், பின்னர் எனக்கு எதிராகத் திரும்பினான் என்பதையும் அறியாமையில் உள்ள மனிதகுலம் அறிந்து எனக்கு சாட்சி கொடுக்க முடியும். எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று காலகட்டங்களாகப் பிரிந்துள்ளது. மேலும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களை எனக்கு சாட்சி கொடுக்கவும், என் சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், நானே சத்தியம் என்பதை அறிந்து கொள்ளவும் செய்யும் பலனை அடைவதற்கும் இவ்வாறு கிரியை செய்கிறேன். இவ்வாறு, எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் தொடக்க காலத்தின்போது, நான் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தேன். இதனைக் கொண்டு தான் யேகோவா ஜனங்களை வழிநடத்தினார். இரண்டாம் கட்டத்தில் யூதேயா கிராமங்களில் கிருபையின் காலத்தின் கிரியையை நான் செய்தேன். கிருபையின் காலத்தின் அனைத்து கிரியைகளையும் இயேசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; அவர் மாம்சத்தில் அவதரித்தார், சிலுவையில் அறையப்பட்டார், மேலும் அவர் கிருபையின் காலத்தையும் தொடங்கினார். மீட்பின் கிரியையை நிறைவு செய்வதற்கும், நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கிருபையின் காலத்தைத் தொடங்குவதற்கும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். எனவே அவர் “பிரதான அதிபதி,” “பாவநிவாரணபலி” மற்றும் “மீட்பர்” என்று அழைக்கப்பட்டார். இதன் விளைவாக, இயேசுவின் கிரியையும், யேகோவாவின் கிரியையும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருப்பினும் உள்ளடக்கத்தில் வேறுபடுகின்றன. யேகோவா நியாயப்பிரமாண காலத்தைத் தொடங்கினார். பூமியில் தேவனுடைய கிரியைக்கான அடிப்படையை, அதாவது தோற்றுவிக்கும் இடத்தை நிறுவி நியாயப்பிரமாணங்களையும், கற்பனைகளையும் வழங்கினார். இவை அவர் மேற்கொண்ட இரண்டு கிரியைகளாகும், மேலும் இவை நியாயப்பிரமாண காலத்தைக் குறிக்கின்றன. கிருபையின் காலத்தில் இயேசு செய்த கிரியை, நியாயப்பிரமாணங்களை வழங்குவதல்ல, அவற்றை நிறைவேற்றுவதேயாகும். இதன் மூலம் கிருபையின் காலத்தை அறிமுகப்படுத்துவதும், இரண்டாயிரம் ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாண காலத்தை நிறைவு செய்வதும் ஆகும். அவர் கிருபையின் காலத்தைத் தொடங்குவதற்காக வந்த வழிகாட்டியாக இருந்தார், ஆனாலும் அவருடைய கிரியையின் முக்கிய பகுதி மீட்பில் இருந்தது. ஆகவே அவருடைய கிரியையும் இரு மடங்காக இருந்தது: ஒரு புதிய காலத்தைத் தொடங்குவதும், தாம் சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மீட்பின் பணியை முடிப்பதும் அந்த இரு மடங்கான கிரியை ஆகும். அதன் பிறகு அவர் புறப்பட்டார். இவ்வாறு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்து கிருபையின் காலம் ஆரம்பமானது.

இயேசு செய்த கிரியை அந்தக் காலத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதுமாக இருந்தது. ஆகவே அவருடைய மனநிலையானது மனத்தாழ்மை, பொறுமை, அன்பு, பக்தி, சகிப்புத்தன்மை, இரக்கம், கிருபை மற்றும் தயை ஆகிய அனைத்தும் கலந்த ஒன்றாக இருந்தது. அவர் மிகுதியான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் மேலும் மக்கள் அனுபவிக்கக்கூடிய எல்லாவற்றையும் மனிதகுலத்திற்குக் கொண்டுவந்தார். சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, அவருடைய சகிப்புத்தன்மை மற்றும் அன்பு, அவருடைய இரக்கம், மற்றும் அன்பான தயை ஆகியவற்றை அவர்களுடைய இன்பத்திற்காக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில், ஜனங்கள் இன்பத்துடன் அனுபவித்த அனுபவங்களாவன—அவர்களின் இருதயங்களுக்குள் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உணர்வு, அவர்களின் ஆவிகளுக்குள் நிச்சயத்தின் உணர்வு, மற்றும் இரட்சகராகிய இயேசுவை அவர்கள் சார்ந்திருத்தல்—என இவை அனைத்தும் அவர்கள் வாழ்ந்த, அந்தக் காலம் முழுவதும் நிறைந்திருந்தன. மனிதன் ஏற்கனவே சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறான். ஆகவே கிருபையின் காலத்தில், எல்லா மனிதர்களையும் மீட்கும் கிரியைக்கு, மிகுதியான கிருபையும், எல்லையற்ற சகிப்புத்தன்மையும், பொறுமையும் தேவைப்பட்டது. அதற்கும் மேலாக, ஒரு பலனைப் பெற, மனிதகுலத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்குப் போதுமான பலி ஒன்று தேவைப்பட்டது. கிருபையின் காலத்தில் மனிதகுலம் கண்டது மனிதகுலத்தின் பாவங்களுக்கான எனது பாவநிவாரணபலியான இயேசுவை மட்டுமே. அவர்கள் அறிந்ததெல்லாம், தேவன் இரக்கமுள்ளவராகவும், சகிப்புத்தன்மையுள்ளவராகவும் இருக்க முடியும் என்பதாகும். மேலும் அவர்கள் பார்த்ததெல்லாம் இயேசுவின் இரக்கத்தையும், தயையையும் மட்டுமேயாகும். இவை அனைத்திற்கும் காரணம் அவர்கள் கிருபையின் காலத்தில் பிறந்தார்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பு, இயேசு தங்களுக்கு அளித்த பல வகையான கிருபையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. இது மட்டுமே அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்தது. இவ்வாறு, அவர்கள் கிருபையை அனுபவிப்பதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற முடிந்தது. மேலும் இயேசுவின் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அனுபவிப்பதன் மூலமும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற முடிந்தது. இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையினால் மட்டுமே அவர்கள் மன்னிப்பைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றனர், மேலும் இயேசு அளித்த மிகுதியான கிருபையினை அனுபவித்தனர். இயேசு சொன்னது போல்: நீதிமான்களையல்ல, பாவிகள் அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறத்தக்கதாக அனுமதிக்கும்படி, அவர்களை மீட்பதற்கே வந்திருக்கிறேன். இயேசு மாம்சமானபோது, அவர் மனிதனின் குற்றங்களுக்கு சகிப்பின்மையையும், நியாயத்தீர்ப்பையும், சாபத்தையும் கொண்டு வந்திருந்தால், மனிதன் ஒருபோதும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான், என்றென்றும் பாவியாகவே இருந்திருப்பான். இது அவ்வாறு இருந்திருந்தால், ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் நியாயப்பிரமாண காலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும், மேலும் நியாயப்பிரமாணத்தின் காலம் இன்னும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். மனிதனின் பாவங்கள் மிகுதியானதாக மற்றும் மிகவும் மோசமானதாக வளர்ந்திருக்கும். மேலும் மனிதகுலத்தின் சிருஷ்டிப்பு வீணானதாக இருந்திருக்கும். மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு யேகோவாவுக்கு ஊழியம் மட்டுமே செய்திருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பாவங்கள் முதலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் பாவங்களைவிட அதிகமாக இருந்திருக்கும். இயேசு எவ்வளவு அதிகமாக மனிதகுலத்தை நேசித்து, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களிடம் போதுமான இரக்கத்தையும் கிருபையையும் கொண்டுவந்தாரோ, அவ்வளவு அதிகமாக மனிதர்களும், இயேசு ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்தி மீட்டுக்கொண்ட வழித்தவறிய ஆட்டுக்குட்டிகள் என்று அழைக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தார்கள். இந்தக் கிரியையில் சாத்தானால் தலையிட முடியவில்லை, ஏனென்றால் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஓர் அன்பான தாய் குழந்தையைத் தன் மார்பில் சாய்த்துக்கொள்வது போல நடத்தினார். அவர்களைக் குறித்து கோபத்தையோ வெறுப்பையோ அவர் வளர்த்துக்கொள்ளவில்லை, ஆனால் ஆறுதல் நிறைந்தவராக இருந்தார். அவர் ஒருபோதும் அவர்களிடம் கோபப்படவில்லை, ஆனால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களின் முட்டாள்தனத்திற்கும் அறியாமைக்கும், “மற்றவர்களை ஏழெழுபதுதரமட்டும் மன்னியுங்கள்” என்று சொல்லும் அளவிற்குக் கண்டுகொள்ளாதவராக இருந்தார். இவ்வாறு மற்றவர்களின் இருதயங்கள் அவருடைய இருதயத்தால் மாற்றப்பட்டன. இவ்வாறு ஜனங்கள் அவருடைய சகிப்புத்தன்மையின் மூலம் தங்கள் பாவங்களுக்குப் பாவ மன்னிப்பைப் பெற்றார்கள்.

இயேசு தம்முடைய மனுவுருவாதலில் முற்றிலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதிருந்தபோதிலும், அவர் எப்போதும் தம்முடைய சீஷர்களை ஆறுதல்படுத்தினார், அவர்களுக்குத் தேவையானதை வழங்கினார், உதவினார், மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தார். அவர் எவ்வளவு கிரியையைச் செய்தாலும், எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும், அவர் ஒருபோதும் ஜனங்களிடம் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, மாறாக எப்போதும் பொறுமையுள்ளவராகவும், அவர்களின் பாவங்களை சகிப்பவராகவும் இருந்தார். எனவே கிருபையின் காலத்தின் ஜனங்கள் அவரை “பிரியமான இரட்சகராகிய இயேசு” என்று அன்பாக அழைத்தனர். அக்கால ஜனங்களுக்கு—அதாவது எல்லா ஜனங்களுக்கும்—இயேசு என்னவாக இருந்தார் மற்றும் என்ன கொண்டிருந்தார் என்றால், இரக்கமும் கிருபையுமாகும். அவர் ஒருபோதும் ஜனங்களின் மீறுதல்களை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களை அவர் நடத்திய விதம் அவர்களின் மீறுதல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது வேறுபட்ட காலம் என்பதால், அவர்கள் நிறைவாகப் புசிக்கத்தக்கதாக, அவ்வப்போது ஜனங்களுக்கு மிகுதியான ஆகாரத்தை அவர் வழங்கினார். தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையோடு நடத்தினார், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். ஜனங்கள் அவரை விசுவாசிப்பதற்கும், அவர் செய்த அனைத்தும் மிகுந்த அக்கறையுடனும், உண்மையுடனும் செய்யப்பட்டிருப்பதை ஜனங்கள் காணும் பொருட்டும், அவருடைய கரங்களில் மரித்தவர்கள் கூட உயிர்த்தெழ முடியும் என்பதையும் வெளிக்காட்ட, அழுகிய சடலத்தையும் உயிர்த்தெழும்பச் செய்தார். இவ்வாறு அவர் மௌனமாக சகித்துக்கொண்டு, அவர்களிடையே மீட்பின் கிரியையைச் செய்தார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, அவர் மனிதகுலத்தின் பாவங்களைத் தம்மீது எடுத்துக்கொண்டு மனிதகுலத்திற்கான பாவநிவாரணபலியாக மாறியிருந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் சிலுவைக்கான வழியைத் திறந்திருந்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையின் பொருட்டு தம்மையே தியாகம் செய்து, தம்முடைய இரக்கம், கிருபை மற்றும் பரிசுத்தம் என அனைத்தையும் மனிதகுலத்திற்கு வழங்கினார். அவர் மனிதகுலத்திடம் எப்போதும் சகிப்புத்தன்மை உள்ளவராகவும், ஒருபோதும் பழிவாங்காதவராகவும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பவராகவும், மனந்திரும்பும்படி அவர்களை அறிவுறுத்தியவராகவும், பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தவராகவும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிலுவையின் பொருட்டு தங்களைத் தியாகம் செய்யக் கற்றுக் கொடுத்தவராகவும் இருந்தார். அவர் சகோதர சகோதரிகளிடம் கொண்டிருந்த அன்பு மரியாள் மீதான அன்பையும் மிஞ்சியது. அவருடைய மீட்பிற்காக, வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதும், பிசாசுகளைத் துரத்தியதும் அவர் செய்த கிரியையின் கொள்கைகளாக இருந்தன. அவர் எங்கு சென்றிருந்தாலும், தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையுடன் நடத்தினார். அவர், ஏழைகளை ஐஸ்வரியவான்களாகவும், முடவர்களை நடக்கவும், குருடர்களைப் பார்க்கவும், மேலும் செவிடர்களைக் கேட்கவும் செய்தார். தாழ்த்தப்பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும், பாவிகளையும்கூட தன்னுடன் ஒரே மேஜையில் அமர அவர் அழைத்தார். அவர்களை ஒருபோதும் விலக்கிக் கொள்ளாமல், எப்போதும் பொறுமையாக இருந்தார். ஒரு மேய்ப்பனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்ப்போனால், அவன் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுப் போய்க் காணாமற்போனதைத் தேடுவான். அவன் அதைக் கண்டுபிடித்தால், அதைக்குறித்து அதிகமாய் சந்தோஷப்படுவான் என்றும் கூறினார். ஒரு தாய் ஆடு தனது ஆட்டுக்குட்டிகளை நேசிப்பதைப் போல அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை நேசித்தார். அவர்கள் மூடர்களாகவும், அறிவற்றவர்களாகவும், அவருடைய பார்வையில் பாவிகளாகவும் இருந்தபோதிலும், சமுதாயத்தில் கீழானவர்களாக இருந்தபோதிலும், இந்தப் பாவிகளை, அதாவது மற்றவர்களால் இகழப்பட்ட மனிதர்களை அவருடைய கண்மணிபோல கருதினார். அவர்களுக்கு அவர் தயவாக இருந்ததால், பலிபீடத்தின் மீது ஓர் ஆட்டுக்குட்டி பலியிடப்படுவது போல, அவர்களுக்காக அவர் தம் உயிரைக் கொடுத்தார். அவர்களுடைய ஊழியக்காரனைப் போல அவர் அவர்களுக்கிடையே சென்று, தம்மைப் பயன்படுத்தவும், தம்மைக் கொல்லவும் அனுமதித்தார். நிபந்தனையின்றி அவர்களுக்குத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் பிரியமான இரட்சகராகிய இயேசுவாக இருந்தார். ஆனால் ஓர் உயர்ந்த பீடத்திலிருந்து ஜனங்களுக்கு அறிவுரை வழங்கிய பரிசேயர்களுக்கு, அவர் இரக்கத்தையும் கிருபையையும் காட்டவில்லை, மாறாக வெறுப்பையும் மனக்கசப்பையும் காட்டினார். அவர் பரிசேயர்களிடையே தமது கிரியையை அதிகமாக நடப்பிக்கவில்லை, அவ்வப்போது அவர்களுக்குப் போதித்துக் கண்டித்தார். அவர்களின் மத்தியில் அவர் மீட்பின் கிரியையையும் செய்யவில்லை, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யவில்லை. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவருடைய இரக்கத்தையும், கிருபையையும் அளித்தார். இந்தப் பாவிகளுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, கடைசி வரை சகித்துக்கொண்டார். மேலும், எல்லா மனிதர்களையும் முழுமையாக மீட்டுக்கொள்ளும் வரை ஒவ்வொரு அவமானத்தையும் அனுபவித்தார். இது அவரது கிரியைகளின் மொத்த விவரமாகும்.

இயேசுவின் மீட்பு இல்லாவிட்டால், மனிதகுலம் என்றென்றும் பாவத்தில் வாழ்ந்து, பாவத்தின் சந்ததியாக, பிசாசுகளின் சந்ததியாக மாறியிருக்கும். இவ்வாறு தொடர்ந்தால், உலகம் முழுவதும் சாத்தான் வசிக்கும் இடமாக, அவனின் வசிப்பிடமாக மாறியிருக்கும். எவ்வாறாயினும், மீட்பின் கிரியைக்காக மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும் கிருபையையும் காட்ட வேண்டும். அத்தகைய வழிமுறைகளால் மட்டுமே மனிதகுலம் மன்னிப்பைப் பெற முடியும். மேலும் இறுதியாக, மனிதகுலம் தேவனால் முற்றிலுமாகவும் முழுமையாகவும் ஆதாயப்படுத்தப்படுவதற்கான உரிமையைப் பெற முடியும். இந்தக் கிரியையின் கட்டம் இல்லாதிருந்தால், ஆறாயிரம் ஆண்டு இரட்சிப்பின் திட்டம் முன்னேறியிருந்திருக்க முடியாது. இயேசு சிலுவையில் அறையப்படாமல், நோயாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் மட்டுமே செய்திருந்தால், ஜனங்களால் தங்கள் பாவங்களிலிருந்து முழுமையான மன்னிப்பைப் பெற்றிருக்க முடியாது. இயேசு பூமியில் தமது கிரியையைச் செய்யச் செலவழித்த மூன்றரை ஆண்டுகளில், அவர் மீட்பின் கிரியையில் பாதியை மட்டுமே முடித்தார்; பின்னர், சிலுவையில் அறையப்பட்டு, பாவ மாம்சத்தின் தோற்றமாக மாறுவதன் மூலம், பிசாசிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம், அவர் சிலுவையில் அறையப்படுவதைச் செய்து முடித்து, மனிதகுலத்தின் தலைவிதியை மேற்கொண்டார். அவர் சாத்தானின் கைகளில் கொடுக்கப்பட்ட பின்னரே, அவர் மனிதகுலத்தை மீட்டுக்கொண்டார். முப்பத்தி மூன்றரை ஆண்டுகளாக அவர் பூமியில் துன்பப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டார், அவதூறாகப் பேசப்பட்டார், கைவிடப்பட்டார், அவர் தலை சாய்க்க இடமில்லை, ஓய்வெடுக்க இடமில்லை, பின்னர் அவர் உயிரோடு சிலுவையில் அறையப்பட்டார். ஒரு பரிசுத்தமான பாவமறியா உடல் சிலுவையில் அறையப்பட்டது. அங்குள்ள ஒவ்வொரு விதமான துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைக் கேலி செய்து வாரினால் அடித்தார்கள், சேவகர்கள் அவருடைய முகத்தில் துப்பினர். ஆயினும் அவர் மவுனமாக இருந்தார், இறுதிவரை சகித்துக்கொண்டார், நிபந்தனையின்றி மரணம் வரைக்கும் தம்மை ஒப்புக்கொடுத்தார். அதன்பிறகு அவர் மனிதகுலம் முழுவதையும் மீட்டுக்கொண்டார். அதற்குப் பிறகுதான் அவர் இளைப்பாற அனுமதிக்கப்பட்டார். இயேசு செய்த கிரியை கிருபையின் காலத்தை மட்டுமே குறிக்கிறது. இது நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் குறிக்கவில்லை, கடைசி நாட்களின் கிரியைக்கு மாற்றாகவும் இல்லை. கிருபையின் காலத்தில் மனிதகுலம் கடந்து வந்த இரண்டாவது காலத்தில், அதாவது மீட்பின் காலத்தில் இயேசுவினுடைய கிரியையின் சாராம்சம் இதுவே.

முந்தைய: நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை

அடுத்த: இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கான வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக