பரிபூரணத்தை அடைவதற்கு தேவனுடைய சித்தத்தைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருங்கள்

நீ தேவனுடைய சித்தத்தைக் குறித்து எவ்வளவு கவனமாக இருக்கிறாயோ, அவ்வளவு அதிகமான பாரங்களைச் சுமப்பாய், எவ்வளவு அதிகமான பாரங்களை நீ சுமக்கிறாயோ, அவ்வளவு வளமானதாக உன் அனுபவம் இருக்கும். நீ தேவனுடைய சித்தத்தைக் குறித்து கவனமாய் இருக்கும்போது, தேவன் உன் மீது ஒரு பாரத்தை வைப்பார், அதன்பின் அவர் உன்னிடத்தில் ஒப்படைத்தப் பணிகளைக் குறித்து உனக்குத் தெளிவுபடுத்துவார். இந்தப் பாரத்தைத் தேவன் உனக்குக் கொடுக்கும்போது தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது, தொடர்புடைய எல்லா சத்தியங்களுக்கும் நீ கவனம் செலுத்துவாய். உன் சகோதர சகோதரிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஒரு பாரம் உனக்கிருந்தால், இது தேவனால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பாரமாகும், மேலும் இந்தப் பாரத்தை நீ எப்போதும் உன் தினசரி ஜெபங்களில் சுமப்பாய். தேவன் செய்கிறது உன் மீது சுமத்தப்பட்டுள்ளது, தேவன் செய்ய விரும்புவதைச் செய்ய நீ தயாராக இருக்கிறாய்; தேவனுடைய பாரத்தை உன்னுடைய சொந்தப் பாரமாக எடுத்துக்கொள்வது என்பது இதுதான். தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பானம்பண்ணும் இந்தக் கட்டத்தில், நீ இவ்வகையான சிக்கல்களில் கவனம் செலுத்துவாய், மேலும் இந்தச் சிக்கல்களை நான் எவ்வாறு தீர்க்கப்போகிறேன் என்று வியப்படைவாய். நான் எவ்வாறு என் சகோதர சகோதரிகளை விடுதலையையும், ஆவிக்குரிய இன்பத்தையும் அடையச் செய்ய முடியும்? ஐக்கியம் கொள்ளும்போது, இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நீ கவனம் செலுத்துவாய், மேலும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுகையில், இந்தச் சிக்கல்களுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதில் நீ கவனம் செலுத்துவாய். அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, நீ ஒரு பாரத்தையும் சுமப்பாய். தேவனுடைய தேவைகளை நீ புரிந்து கொண்டவுடன், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான யோசனை உனக்குக் கிடைக்கும். இது உன் பாரத்தால், கொண்டுவரப்பட்ட பரிசுத்த ஆவியின் தெளிவும் வெளிச்சமுமாகும், மேலும் இது உன்மேல் அருளப்பட்ட தேவனுடைய வழிநடத்துதலும் ஆகும். நான் ஏன் இதைச் சொல்கிறேன்? உனக்கு எந்தப் பாரமும் இல்லையென்றால், நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது கவனமாக இருக்க மாட்டாய். ஒரு பாரத்தைச் சுமக்கும்போது, தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பானம்பண்ணுகையில், அதனுடைய சாராம்சத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும், உன் வழியைக் கண்டுபிடிக்க முடியும், தேவனுடைய சித்தத்தைக் குறித்துக் கவனமாய் இருக்க முடியும். ஆகையால், உன் ஜெபங்களில், தேவன் உன் மீது அதிகப் பாரங்களை வைக்க வேண்டும், இன்னும் பெரிதான பணிகளை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீ விரும்ப வேண்டும், இதனால் உனக்கு முன்னால் பின்பற்ற வேண்டிய பாதை பெரிய அளவில் இருக்கும், தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பண்ணுவதும் பானம்பண்ணுவதும் ஒரு பெரிய விளைவைப் பெற்றிருக்கும்; இதனால் அவருடைய வார்த்தைகளின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளம்படி நீ வளர்கிறாய்; மேலும் நீ பரிசுத்த ஆவியினால் ஏவப்படுவதற்கு அதிகத் திறனுள்ளவனாக மாறுவாய்.

தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவது, ஜெபம் செய்வது, தேவனுடைய பாரத்தை ஏற்றுக் கொள்வது, அவர் உன்னிடம் ஒப்படைக்கும் பணிகளை ஏற்றுக்கொள்வது, இவை அனைத்தும் உனக்கு முன் ஒரு பாதை இருக்கக் கூடும் என்பதாலேயே செய்யப்படுகிறது. தேவனுடைய ஒப்படைத்ததன் பாரம் உன்மீது எவ்வளவு அதிகமாக அமிழ்த்துகிறதோ, அவ்வளவு சுலபமாக நீ அவரால் பரிபூரணப்படுத்தப்படுவாய். சிலர் தேவனுக்கு ஊழியம் செய்கையில், அவர்கள் அழைக்கப்பட்டாலும் கூட மற்றவர்களுடன் ஒத்துழைக்க விரும்புவதில்லை; இவர்கள் சுகமாகக் களியாட மட்டுமே விரும்பும் சோம்பேறிகளாவர். மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து ஊழியம் செய்ய எவ்வளவு அதிகமாகக் கேட்கப்படுகிறாயோ, அவ்வளவு அதிகமான அனுபவத்தை நீ பெறுவாய். அதிகமான பாரங்களும் அனுபவங்களும் இருப்பதால், நீ பரிபூரணமாக்கப்பட அதிக வாய்ப்புகளைப் பெறுவாய். ஆகையால், நீ நேர்மையுடன் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முடிந்தால், தேவனுடைய பாரத்தை நீ கவனத்தில் கொள்வாய்; அதன் காரணமாக, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும். இது போன்ற ஒரு குழுதான் தற்போது பரிபூரணமாக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு அதிகமாக உன்னைத் தொடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுடைய பாரத்தைக் குறித்து கவனமாய் இருப்பதற்கு நேரத்தை அர்ப்பணிப்பாய், அவ்வளவு அதிகமாக தேவனால் நீ பரிபூரணப்படுத்தப்படுவாய், மேலும் தேவனால் பயன்படுத்தப்படுகிற நபராகக் கடைசியில் நீ மாறும் வரையிலும் அவ்வளவு அதிகமாக நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படுவாய். தற்போது திருச்சபைக்கான எந்தவிதமான பாரங்களையும் சுமக்காத சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த மாம்சத்தைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிற மந்தமும், அசட்டையுமாயிருக்கிற ஜனங்களாவர். அத்தகையவர்கள் மிகவும் சுயநலவாதிகள், மேலும் அவர்கள் குருடருமாவார்கள். இவ்விஷயத்தை நீ தெளிவாகக் காண முடியாவிட்டால், நீ எந்தப் பாரத்தையும் சுமக்க மாட்டாய். தேவனுடைய சித்தத்தைக் குறித்து எவ்வளவு அதிகமாகக் கவனமாய் இருக்கிறாயோ, அவ்வளவு அதிகமான பாரத்தை அவர் உன்னிடம் ஒப்படைப்பார். சுயநலவாதிகள் இதுபோன்ற விஷயங்களை அனுபவிக்க விரும்புவதில்லை; அவர்கள் விலைக்கிரயத்தைச் செலுத்த விரும்பவில்லை, இதன் விளைவாக அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை இழப்பார்கள். அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார்களல்லவா? நீ தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொண்ட ஒரு நபர் என்றால், நீ திருச்சபைக்காக உண்மையான பாரத்தை வளர்த்துக் கொள்வாய். உண்மையில், இதைத் திருச்சபைக்காக நீ சுமக்கும் பாரம் என்று சொல்வதற்குப் பதிலாக, உன் சொந்த வாழ்க்கையின் பொருட்டு நீ சுமக்கும் பாரம் என்று சொல்வது நன்றாக இருக்கும், ஏனென்றால் திருச்சபைக்காக நீ கொள்ளும் பாரத்தின் நோக்கம் என்னவென்றால் தேவனால் பரிபூரணமாகப்படுவதற்கு நீ இந்த அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆகையால் திருச்சபைக்காக மிகப் பெரிய பாரத்தை யாரெல்லாம் சுமக்கிறார்களோ, ஜீவனுக்குள் நுழைவதற்கு யாரெல்லாம் பாரத்தைச் சுமக்கிறார்களோ, அவர்களே தேவனால் பரிபூரணமாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். நீ இதைத் தெளிவாகக் கண்டிருக்கிறாயா? நீ இருக்கும் திருச்சபையானது மணலைப் போலச் சிதறடிக்கப்பட்டிருந்தும், நீ வருத்தமோ கவலையோ கொள்ளவில்லையெனில், உன் சகோதர சகோதரிகளும் இயல்பாக தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணாமல் இருக்கையில், நீ கண்டுகொள்ளாமல் இருப்பாயெனில், நீ எவ்வகையான பாரங்களையும் சுமக்கவில்லை. அத்தகையவர்கள் தேவன் பிரியப்படும் வகையானவர்கள் அல்லர். நீதிக்காக பசி தாகம் கொள்பவர்களும், தேவனுடைய சித்தத்தைக் குறித்து அதிகம் கவனம் கொள்பவர்களுமே தேவன் பிரியப்படும் ஜனங்களாவர். ஆகவே, நீ இங்கே இப்பொழுதே தேவனுடைய பாரத்தைக் குறித்து கவனமுள்ளவனாக மாறவேண்டும்; தேவனுடைய பாரத்தின் மீது கவனம்கொள்வதற்கு முன்பு, தேவன் தம்முடைய நீதியான மனநிலையை எல்லா மனிதர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டுமென்று நீ காத்திருக்கக் கூடாது. அதற்குள் மிகுந்த தாமதமாகிவிடாதா? தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் நீ நழுவ விட்டாயானால், மோசே நல்ல கானான் தேசத்திற்குள் நுழைய முடியாமல் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டு, மிகுந்த வருத்தத்துடன் மரித்ததைப் போல, உன் வாழ்நாள் முழுவதும் நீ வருத்தப்படுவாய். தேவன் தம்முடைய நீதியான மனநிலையை எல்லா ஜனங்களுக்கும் வெளிப்படுத்தியவுடன், நீ வருத்தத்தால் நிரப்பப்படுவாய். தேவன் உன்னைத் தண்டிக்காவிட்டாலும், உன் சொந்த வருத்தத்தால் உன்னை நீயே தண்டித்துக் கொள்வாய். சிலர் இதை நம்பவில்லை, ஆனால் நீ நம்பவில்லை என்றால் காத்திருந்து பார். இந்த வார்த்தைகளை நிறைவேற்றுவதை மாத்திரமே ஒரே நோக்கமாகக் கொண்ட சில ஜனங்கள் உண்டு. இந்த வார்த்தைகளுக்காக உன்னை நீயே தியாகம் செய்யத் தயாரா?

நீ தேவனால் பூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளைத் தேடவில்லை என்றால், பரிபூரணத்திற்கான உன் தேடலில் வெற்றியடையும்படி நீ போராடவில்லை என்றால், நீ இறுதியில் வருத்தத்தால் நிரப்பப்படுவாய். பரிபூரணத்தை அடைய சிறந்த வாய்ப்பு நிகழ்காலமே; இப்போதே மிகவும் நல்ல நேரம். நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை வாஞ்சையுடன் தேடவில்லையெனில், அவருடைய கிரியை முடிந்தவுடன் அது மிகவும் தாமதமாகிவிடும், நீ அந்த வாய்ப்பை இழந்திருப்பாய். உன் அபிலாஷைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் கிரியை செய்யாமல் இருப்பார் எனில், நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், உன்னால் ஒருபோதும் பரிபூரணத்தை அடைய முடியாது. பரிசுத்த ஆவியானவர் அவருடைய பெரிதான கிரியையைச் செய்யும்போது, நீ அந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும். இந்த வாய்ப்பை நீ தவறவிட்டால், நீ என்ன முயற்சி செய்தாலும், உனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது. உங்களில் சிலர், “தேவனே, உம்முடைய பாரத்தைக் குறித்து கவனமாய் இருக்க நான் விரும்புகிறேன், நான் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறேன்!” என்று அழுவீர்கள். இருப்பினும், உனக்கு நடப்பதற்கு எந்தப் பாதையும் இல்லை, அதனால் உன் பாரங்கள் நிலைத்திராது. உனக்கு முன் ஒரு பாதை இருந்தால், ஒரு நேரத்தில் ஒரு படி அனுபவத்தைப் பெறுவாய், மேலும் உன் அனுபவம் கட்டமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்படும். ஒரு பாரம் முடிக்கப்பட்டவுடன், மற்றொன்று உனக்கு வழங்கப்படும். உன் வாழ்க்கையின் அனுபவம் ஆழமடையும்போது, உன் பாரங்களும் இன்னும் ஆழமாக வளரும். சிலர் பரிசுத்த ஆவியால் தொடப்படும் போது மட்டுமே ஒரு பாரத்தைச் சுமக்கிறார்கள்; ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர்கள் நடக்க ஒரு பாதை இல்லையென்றால், அவர்கள் எந்தப் பாரங்களையும் சுமப்பதை நிறுத்திக் கொள்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணுவதால் மட்டுமே நீ பாரங்களை வளர்த்துக் கொள்ள முடியாது. பல சத்தியங்களைப் புரிந்து கொள்வதன் மூலம், நீ பகுத்தறிவைப் பெறுவாய், சத்தியத்தைக் கொண்டு சிக்கல்களைத் தீர்க்க அனுபவ ரீதியாகக் கற்றுக்கொள்வாய், மேலும் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி இன்னும் துல்லியமான புரிதலைப் பெறுவாய். இந்த விஷயங்களைக் கொண்டு, நீ சுமக்கும்படி பாரங்களை வளர்த்துக் கொள்வாய், அப்போதுதான் உன்னால்கிரியையைச் சரியாகச் செய்ய முடியும். உனக்குப் பாரம் இருந்தும், சத்தியத்தைப் பற்றிய தெளிவானப் புரிதல் இல்லை என்றால், அப்போது அது சரிப்படாது; நீ தனிப்பட்ட முறையில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்து, அவற்றை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நீயே யதார்த்தத்திற்குள் நுழைந்த பின்னரே, உன்னால் மற்றவர்களுக்குக் கொடுக்கவும், மற்றவர்களை வழிநடத்தவும், தேவனால் பூரணப்படுத்தப்படவும் முடியும்.

நீங்கள் அனைவரும் ராஜ்யத்தின் ஜனங்கள், யுகங்களுக்கு முன்பாகவே தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள், ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதவர்கள் என்று “பாதை … (4)” இல் எழுதப்பட்டிருக்கிறது. அனைவரும் தேவனால் பயன்படுத்தப்பட வேண்டும், பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்றும், அவர்கள் தேவனுடைய ஜனங்களாக நிற்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் என்றும், மேலும் தேவனுடைய ஜனங்களாக மாறுவதன் மூலம் மட்டுமே அவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், நீங்கள் அனைவரும் இந்த விஷயம் குறித்து ஐக்கியம் கொண்டீர்கள், தேவனுடைய ஜனங்களுக்கான தரங்களின் அடிப்படையில் நுழைவுப் பாதையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டீர்கள். ஆகையால் அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியையானது எல்லா ஜனங்களையும் அவர்களின் எதிர்மறை நிலையிலிருந்து வெளியேற்றி அவர்களை ஒரு நேர்மறையான நிலைக்கு எடுத்துச் சென்றதாகும். அந்த நாட்களில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது எப்போதும் போல எல்லோரையும் தேவனுடைய வார்த்தைகளை தேவனுடைய ஜனங்களாக அனுபவிக்கச் செய்வதும், மேலும் யுகங்களுக்கு முன்பதாக முன்குறிக்கப்பட்டபடியே, நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய ஜனங்கள், சாத்தானால் உங்களைப் பறித்துக்கொள்ள முடியாது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள அனுமதிப்பதும் ஆகும். எனவே நீங்கள் அனைவரும், “தேவனே! உம்முடைய ஜனங்களில் ஒருவனாக இருக்க எனக்கு விருப்பம், ஏனென்றால் நாங்கள் யுகங்களுக்கு முன்பதாகவே உம்மால் முன்குறிக்கப்பட்டோம், மற்றும் இந்த அந்தஸ்தை நீர் எங்களுக்கு அளித்திருக்கிறீர். இந்த நிலையிலிருந்து உம்மைத் திருப்திபடுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்று ஜெபித்தீர்கள். நீ இவ்வாறு ஜெபிக்கும்போதெல்லாம் பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தொடுவார்; பரிசுத்த ஆவியானவர் இப்படித்தான் வழக்கமாகச் செயல்பட்டார். இந்த நேரத்தில், தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயங்களை அமைதிப்படுத்த நீங்கள் ஜெபித்து, உங்களை நீங்களே பயிற்றுவிக்க வேண்டும், இதனால் நீங்கள் ஜீவனுக்காகப் போராடலாம் மற்றும் ராஜ்யத்தின் பயிற்சிக்கான நுழைவைத் தேடலாம். இதுவே முதல் படியாகும். இந்நேரத்தில், எல்லோரையும் சரியான பாதையில் நுழையச்செய்வதும், ஒரு வழக்கமான ஆவிக்குரிய வாழ்க்கையும் உண்மையான அனுபவங்களும் கொண்டிருக்கச் செய்வதும், பரிசுத்த ஆவியினால் நடத்தப்படச் செய்வதும், மேலும் இவற்றை அடித்தளமாகக் கொண்டு தேவனுடைய கட்டளைகளை ஏற்றுக் கொள்ளப் பண்ணுவதுமே தேவனுடைய கிரியையாகும். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தை, செயல், இயக்கம், சிந்தனை மற்றும் யோசனை ஆகியவற்றை தேவனுடைய வார்த்தைகளுக்குள் நுழைய அனுமதிப்பது; தேவனால் அடிக்கடித் தொடப்படுவது, அதன்மூலம் அவர் மீதான அன்பான இருதயத்தை வளர்த்துக் கொள்வது; தேவனுடைய சித்தத்தின் பாரங்களை நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது, இதனால் எல்லோரும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான பாதையில் இருப்பது, இதனால் அனைவரும் சரியான பாதையில் இருக்கச் செய்வதே ராஜ்யத்தின் பயிற்சிக்குள் நுழைவதின் நோக்கமாகும்; தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான இந்தப் பாதையில் நீ வந்தவுடன், நீ சரியான பாதையில் செல்கிறாய். உன் எண்ணங்களும் யோசனைகளும் மற்றும் உன் தவறான நோக்கங்களையும் கூடச் சரிப்படுத்த முடிந்தவுடன், உன்னால் மாம்சத்தின் கவனத்திலிருந்து தேவசித்தத்தின் கவனத்திற்கு மாறமுடியும் என்றால், தவறான நோக்கங்கள் எழும்புகையில் அதன் கவனச்சிதறலை உன்னால் எதிர்த்து, அதற்குப் பதிலாக தேவனுடைய சித்தத்தின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அத்தகைய மாற்றத்தை உன்னால் அடைய முடிந்தால், வாழ்க்கை அனுபவத்தின் சரியான பாதையில் நீ இருக்கிறாய். உன் ஜெப நடைமுறைகள் சரியான பாதையில் வந்தவுடன், உன் ஜெபங்களில் நீ பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவாய். ஒவ்வொரு முறை நீ ஜெபிக்கும்போதும், பரிசுத்த ஆவியானவரால் நீ தொடப்படுவாய்; ஒவ்வொரு முறை நீ ஜெபிக்கும் போதும், உன்னால் தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை அமைதிப்படுத்த முடியும். ஒவ்வொரு முறையும் நீ தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பகுதியைப் புசித்துப் பானம்பண்ணுகையில், அவர் தற்போது செய்து கொண்டிருக்கும் கிரியையை உன்னால் புரிந்துகொள்ள முடிந்தால் மற்றும் எப்படி ஜெபிக்க வேண்டும், எப்படி ஒத்துழைக்க வேண்டும், எப்படி நுழைவை அடைய வேண்டும் என்று கற்றுக் கொள்ள முடியும் என்றால், தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பானம்பண்ணுவது பலன்களைத் தரும். தேவனுடைய வார்த்தைகளின் மூலம் உன்னால் நுழைவதற்கான பாதையைக் கண்டுபிடிக்கவும், தேவனுடைய கிரியையின் தற்போதைய வல்லமைகளையும், அதோடுகூட பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் திசையையும் உன்னால் பகுத்தறியவும் முடிந்தால், நீ சரியான பாதையில் நுழைந்திருப்பாய். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது முக்கியமான பகுதியை நீ புரிந்து கொள்ளவில்லை என்றால், அதற்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய பாதையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தேவனுடைய வார்த்தைகளை எப்படிச் சரியாகப் புசித்துப் பானம்பண்ணவேண்டும் என்று இன்னும் உனக்குத் தெரியவில்லை என்பதையும், அவ்வாறு செய்வதற்கான முறை அல்லது கொள்கையை நீ கண்டுபிடிக்கவில்லை என்பதையும் இது காண்பிக்கும். தேவன் தற்போது செய்து கொண்டிருக்கும் கிரியையை நீ புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் உன்னிடம் ஒப்படைக்கப் போகும் கிரியைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவன் தற்போது செய்யும் துல்லியமான கிரியையானது மனிதர்கள் இப்போது நுழைந்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும். இந்த விஷயங்களைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா?

தேவனுடைய வார்த்தைகளை நீ திறம்பட புசித்துப் பானம்பண்ணினால், உன் ஆவிக்குரிய வாழ்க்கை இயல்பானதாகி விடும், நீ எப்படிப்பட்ட சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், எப்படிப்பட்ட உடல்ரீதியான நோய்களைத் தாங்கிக்கொள்ள நேர்ந்தாலும், சகோதர சகோதரிகளிடமிருந்து எப்படிப்பட்ட பிரிவை அல்லது குடும்பச் சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தாலும், உன்னால் தேவனுடைய வார்த்தைகளை வழக்கமாகப் புசித்துப் பானம்பண்ணவும், வழக்கமாக ஜெபிக்கவும், திருச்சபை வாழ்க்கையை வழக்கமாகத் தொடரவும் முடியும்; உன்னால் இவை அனைத்தையும் அடைய முடிந்தால், அது நீ சரியான பாதையில் இருப்பதைக் காண்பிக்கும். சிலர் மிகவும் வலுவற்றவர்களாகவும், விடாமுயற்சி இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு சிறு தடையை எதிர்கொண்டவுடன், அவர்கள் பலமின்றி சிணுங்கி எதிர்மறையாகின்றனர். சத்தியத்தைப் பின்தொடர்வது விடாமுயற்சியையும் உறுதியையும் கோருகிறது. இம்முறை தேவனுடைய சித்தத்தைப் பூர்த்திசெய்ய நீ தவறிவிட்டால், உன்னை நீயே வெறுத்து, அடிமனதில் சிந்தித்து, அடுத்த முறை வெற்றிபெற அமைதியுடன் உறுதிகொள்ள வேண்டும். இம்முறை நீ தேவனுடைய பாரத்தைக் கவனத்தில் கொள்ளவில்லையெனில், எதிர்காலத்தில் அதே தடையை எதிர்கொள்ளும்போது, மாம்சத்திற்கு விரோதமாகப் போராட நீ உறுதியாக இருக்க வேண்டும் மற்றும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற தீர்மானிக்க வேண்டும். இப்படித்தான் நீ பாராட்டுக்குரியவனாவாய். சிலருக்குத் தங்கள் சொந்த எண்ணங்கள் அல்லது கருத்துக்கள் சரியானதா என்று கூடத் தெரியாது; அந்த ஜனங்கள் முட்டாள்கள்! நீ உன் இருதயத்தை அடக்கி, மாம்சத்திற்கு எதிராகப் போராட விரும்பினால், உன் நோக்கங்கள் சரியானதா என்பதை நீ முதலில் அறிந்திருக்க வேண்டும்; அப்போது மட்டுமே உன்னால் உன் இருதயத்தை அடக்க முடியும். உன் நோக்கங்கள் சரியானதா என்று உனக்குத் தெரியாவிட்டால், உன்னால் சாத்தியமான வகையில் உன் இருதயத்தை அடக்கி மாம்சத்திற்கு விரோதமாகப் போராட முடியுமா? நீ போராடினாலும், குழப்பமான முறையில் போராடுவாய். தவறாக வழிநடத்தும் உன் நோக்கங்களுக்கு எதிராக எவ்வாறு போராட வேண்டும் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும்; மாம்சத்திற்கு விரோதமாகப் போராடுவதன் அர்த்தம் இதுதான். உன்னுடைய நோக்கங்கள், எண்ணங்கள், மற்றும் யோசனைகள் தவறானவை என்பதை நீ உணர்ந்தவுடன், நீ சீக்கிரமாக திசையைத் திருப்பி, சரியான பாதையில் நடக்க வேண்டும். இந்தச் சிக்கலை முதலில் தீர்த்துக் கொள், இந்த விஷயத்தில் நுழைவை அடைவதற்கு உன்னை நீயே பயிற்றுவி, ஏனென்றால் உனக்குச் சரியான நோக்கங்கள் இருக்கிறதா இல்லையா என்பது உனக்குத்தான் நன்றாகத் தெரியும். உன் தவறான நோக்கங்கள் சரி செய்யப்பட்டு, இப்போது தேவனுக்காக இருக்கிறாய் என்றவுடன், உன் இருதயத்தை அடக்குகிற இலக்கை நீ அடைந்திருப்பாய்.

தேவன் மற்றும் அவருடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறுவதே நீ இப்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியமாகும். மனிதகுலத்தின் மீது பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதையும் நீ அறிந்திருக்க வேண்டும்; சரியான பாதைக்குள் நுழைவதற்கு இந்தச் செயல்கள் அவசியமானதாகும். இந்த முக்கியக் குறிப்பை நீ புரிந்து கொண்டவுடன், அவ்வாறு செய்வது உனக்கு எளிதாக இருக்கும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், தேவனை அறிந்திருக்கிறாய், இது தேவன் மீதான உன் விசுவாசம் உண்மையானது என்பதைக் காட்டுகிறது. நீ தொடர்ந்து அனுபவத்தைப் பெற்றும் கூட, முடிவில் தேவனை அறிய முடியவில்லை என்றால், நீ நிச்சயமாக தேவனை எதிர்க்கும் ஒரு நபரே. இன்றைய மனுவுருவான தேவனை விசுவாசிக்காமல் இயேசு கிறிஸ்துவை மட்டும் விசுவாசிப்பவர்கள் அனைவரும் ஆக்கினைத்தீர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பிந்தைய-நாள் பரிசேயர்கள், ஏனெனில், அவர்கள் இன்றைய தேவனை அங்கீகரிப்பதில்லை; அவர்கள் அனைவரும் தேவனை எதிர்ப்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இயேசுவை ஆராதித்தாலும் அவை அனைத்தும் வீணாய்ப்போம்; தேவன் அவர்களைப் புகழ மாட்டார். தாங்கள் தேவனை நம்புவதாகப் பறைசாற்றிக்கொண்டு, தேவனைப் பற்றிய மெய்யான அறிவைத் தங்கள் இருதயத்தில் பெற்றிராதவர்கள் அனைவரும் மாயக்காரர்களாய் இருக்கிறார்கள்!

தேவனால் பரிபூரணமடைய முற்படுவதற்கு, ஒருவன் அவரால் பூரணப்படுத்தப்படுவதன் அர்த்தம் என்ன என்பதையும், பரிபூரணப்பட ஒருவன் எந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் கூட முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்களை ஒருவர் புரிந்து கொண்டவுடன், ஒருவர் பயிற்சியின் பாதையைத் தேட வேண்டும். பரிபூரணப்பட ஒருவர் ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்துடன் இருக்க வேண்டும். பலர் இயல்பாகவே போதுமான குணாதிசயமுள்ளவர்கள் அல்லர், இந்த விஷயத்தில் நீ ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்த வேண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் கடினமாக உழைக்க வேண்டும். உன் குணாதிசயம் எவ்வளவு மோசமானதோ அந்த அளவிற்கு நீ தனிப்பட்ட முறையில் முயற்சி செய்ய வேண்டும். எந்த அளவிற்கு தேவனுடைய வார்த்தைகளை நீ புரிந்து கொள்கிறாயோ, மேலும் எந்த அளவிற்கு நீ அவற்றைக் கடைபிடிக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரமாக நீ பரிபூரணத்தின் பாதையில் கால் பதிக்கலாம். ஜெபத்தின் மூலம், ஜெபத்திற்கான பகுதியில் நீ பரிபூரணப்படலாம்; தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதின் மூலமும், அவற்றின் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதன் மூலமும், அவற்றின் யதார்த்தத்தின்படி வாழ்வதன் மூலமும் கூட நீ பரிபூரணமடையலாம். அனுதின அடிப்படையில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம், உன்னிடம் இல்லாததை நீ அறிந்து கொள்ள வேண்டும்; மேலும் உன் அபாயகரமான குறைபாட்டையும் பலவீனங்களையும் நீ அடையாளங்கண்டு தேவனிடம் ஜெபமும் விண்ணப்பமும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நீ படிப்படியாகப் பரிபூரணப்படுத்தப்படுவாய். பரிபூரணத்தின் பாதையானது: ஜெபிப்பது, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவது; தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்தைப் புரிந்து கொள்வது; தேவனுடைய வார்த்தைகளின் அனுபவத்திற்குள் நுழைவைப் பெறுவது; உன்னிடம் இல்லாததை அறிந்து கொள்வது; தேவனுடைய கிரியைகளுக்கு அர்ப்பணிப்பது; தேவனுடைய பாரங்களைக் குறித்து கவனத்துடன் இருப்பது மற்றும் தேவன் மீதான உன் அன்பின் மூலம் மாம்சத்தைத் துறப்பது; உன் அனுபவங்களை வளமாக்கும்படி உன் சகோதர சகோதரிகளுடன் அடிக்கடி ஐக்கியத்தில் இணைந்து கொள்வது ஆகியவையாகும். அது பொதுஜன வாழ்க்கையாக இருந்தாலும் அல்லது உன் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் மற்றும் அது பெரிய கூட்டங்களாக இருந்தாலும் அல்லது சிறியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் உன் இருதயம் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்து, அவரிடம் திரும்பத்தக்கதாய் அனுபவத்தைப் பெறவும் பயிற்சியைப் பெறவும் உன்னை அனுமதிக்க முடியும். இவை அனைத்தும் பரிபூரணமாவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும். முன்னர் குறிப்பிட்டது போல, தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பது என்பது உண்மையில் அவற்றை ருசிக்க முடியவும், அவற்றின்படி வாழ உன்னை அனுமதிப்பதும், இதன் மூலம் நீ தேவன் மீது பெரிதான விசுவாசத்தையும் அன்பையும் பெற்றுக்கொள்வதாகும். இவ்வகையில் நீ படிப்படியாக உன் சீர்கேட்டையும், சாத்தானிய மனநிலையையும் விட்டு விடுவாய்; உன்னை நீயே முறையற்ற உந்துதல்களிலிருந்து விடுவித்துக் கொள்வாய்; ஒரு சாதாரண நபரின் சாயலில் வாழ்வாய். தேவன் மீதான உன் அன்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதாவது, நீ எவ்வளவு அதிகமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்படுகிறாயோ, அவ்வளவு குறைவாக சாத்தானுடைய சீர்கேட்டால் நீ ஆட்கொள்ளப்பட்டிருப்பாய். உன் நடைமுறை அனுபவங்களின் மூலம் நீ படிப்படியாகப் பரிபூரணத்தின் பாதையில் கால் பதிப்பாய். ஆகவே, நீ பரிபூரணமாக்கப்பட விரும்பினால், தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்வதும் அவருடைய வார்த்தைகளை அனுபவிப்பதும் மிக முக்கியமானதாகும்.

முந்தைய: தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதல்

அடுத்த: தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக