தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 392

அக்டோபர் 13, 2022

கடந்த காலத்தில், அநேகர் கட்டுப்பாடற்ற குறிக்கோள்களுடனும் கருத்துக்களுடனும் தேடினர், அவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளின் விளைவாகத் தேடினர். இப்படிப்பட்ட பிரச்சினைகளை இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம்; நாம் தேவனுக்கு முன்பாக ஒரு சாதாரணமான நிலையினைக் கொண்டிருக்க வேண்டும், படிப்படியாக சாத்தானின் ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்று அதனால் தேவன் உங்களை ஆதாயப்படுத்தி, நீங்கள் தேவன் எதிர்பார்க்கின்றபடியான வாழ்க்கையை இந்த உலகில் வாழ உதவும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதே இப்போதைய முக்கியமான தேவையாயிருக்கிறது. இந்த வழியாகத்தான் தேவனுடைய நோக்கங்களை உங்களால் நிறைவேற்ற முடியும். அநேகர் தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனாலும் தேவன் எவற்றை விரும்புகிறார் அல்லது சாத்தான் எவற்றை விரும்புகிறான் என்பதை அறியாது இருக்கின்றனர். அவர்கள் குழப்பமான ஒரு வழியை நம்பி, அது செல்லும் வழியிலேயே செல்வதினால், ஓர் இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இயல்பான தனிப்பட்ட உறவுகளையும் பெற்றிருக்கவில்லை; தேவனுடன் சரியான உறவையும் கொண்டிருக்கவில்லை. மனிதனின் கஷ்டங்கள், மீறுதல்கள் மற்றும் பல காரணங்கள் தேவனுடைய சித்தத்திற்குத் தடையாக உள்ளன என்பதை இதன் மூலம் காணலாம். மனிதன் தேவனை விசுவாசிப்பதில் செல்ல வேண்டிய சரியான பாதையில் இன்னும் செல்லவில்லை, மனித வாழ்க்கையில் மெய்யான அனுபவத்திற்குள் செல்லவில்லை என்பதை நிரூபிக்க இதுவே போதுமானது. தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பது எதைக் குறிக்கிறது? தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை எப்பொழுதும் அமைதலாக்கி தேவனுடன் ஓர் இயல்பான ஐக்கியத்தை அனுபவித்து, படிப்படியாக மனிதனில் என்ன குறை இருக்கின்றது என்பதை அறிந்து தேவனைக் குறித்து ஆழமான அறிவை மெதுவாகப் பெற்றுக் கொள்வதையே சரியான பாதையில் செல்வது என்பது குறிக்கின்றது. இதன் மூலமாக, உன் ஆவி புதிய நுண்ணறிவையும் புதிய பிரகாசிப்பித்தலையும் அனுதினமும் பெற்றுக் கொள்கிறது. உன் ஆர்வம் வளர்கின்றது, நீ சத்தியத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறாய், ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் மற்றும் புதிய புரிதல் உண்டாகிறது. இந்தப் பாதையில் பயணிக்கும் போது, படிப்படியாக நீ சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று வாழ்க்கையில் வளருகிறாய். இப்படிப்பட்ட மக்கள் சரியான பாதையில் நுழைந்திருக்கின்றனர். உன்னுடைய நடைமுறை அனுபவங்களையும், நீ சென்ற உன் விசுவாசப் பாதையையும் சோதித்துப் பார். மேலே குறிப்பிட்டவற்றை நீ ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதைக் கண்டறிகிறாயா? சாத்தானின் ஆதிக்கத்தின் பிடிகளிலிருந்தும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்தும் எந்தக் காரியங்களில் விடுதலைப் பெற்று இருக்கிறாய்? இன்னும் சரியான பாதையில் செல்ல நீ ஆரம்பிக்கவில்லை என்றால் சாத்தானோடு நீ கொண்டிருக்கும் உறவு இன்னும் வேரோடு வெட்டப்படவில்லை என்றுதான் அர்த்தம். இப்படியாக உன் நிலை இருக்குமானால், தேவனிடம் அன்புகூருவதற்கான உனது தேடுதல் உன்னை நம்பகமான, ஒரே நோக்கமுடைய மற்றும் சுத்தமான அன்பிற்கு நேராக வழிநடத்துமா? தேவன் மீதான உன் அன்பு தடுமாற்றம் இல்லாததும் மனப்பூர்வமானதும் என்று நீ சொல்கிறாய், ஆனாலும் நீ சாத்தானுடைய கட்டுகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. நீ தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? தேவனிடம் நீ கொண்டிருக்கும் அன்பு கலப்படமில்லா நிலைக்கு வர வேண்டும் எனவும், தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட வேண்டும் எனவும், ராஜ்யத்தின் மக்களின் எண்ணிக்கைக்குள் வர வேண்டும் எனவும் நீ விரும்புவாயானால், தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் முதலில் நீ உன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க