தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?

தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, மேலும் அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும், அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து மாறுகிறது, அதாவது தேவனைப் பின்பற்றுகிறவர்களும்கூட தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறார்கள். தேவன் அதிகமான கிரியையைச் செய்யச்செய்ய, தேவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாகிறது. தேவனின் கிரியையின் விளைவாக மனிதனின் மனநிலையிலும் அதற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தேவனுடைய கிரியை எப்போதும் மாறிக்கொண்டு இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மேலும் சத்தியத்தை அறியாத அந்த மூடத்தனமான மக்கள் தேவனை எதிர்ப்பவர்களாகின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப இருப்பதில்லை, ஏனெனில் அவரது கிரியை எப்போதும் புதியதே தவிர ஒருபோதும் பழையதல்ல, மற்றும் அவர் ஒருபோதும் பழைய கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை, ஆனால் மாறாக முன்னெப்போதும் செய்யப்படாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார். தேவன் தாம் செய்த அதே கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை என்பதாலும், மனிதன் எப்போதும் தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்தே அவரது தற்போதைய கிரியையை மதிப்பிடுவதினாலும், புதிய காலத்தின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவேற்றுவது தேவனுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்! அவன் தனது சிந்தனைகளில் மிகவும் பழமைவாதியாக இருக்கிறான்! தேவனின் கிரியையை எவரும் அறியவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் அதை வரம்பிற்குட்படுத்துகின்றனர். தேவனை விட்டு விலகும் போது மனிதன் ஜீவன், சத்தியம் மற்றும் தேவ ஆசீர்வாதங்களை இழக்கிறான், ஆனால் அவன் ஜீவனையோ அல்லது சத்தியத்தையோ பெறுவதில்லை, மனுக்குலத்திற்குத் தேவன் அருளும் பெரும் ஆசீர்வாதங்களையும் பெறுவதில்லை. எல்லா மனிதர்களும் தேவனை அடையவே விரும்புகின்றனர், ஆனால் தேவனின் கிரியைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவனின் புதிய கிரியையை ஏற்காதவர்கள் தேவனின் கிரியை மாறாதது என்றும் அது என்றென்றும் நிலைமாறாமல் இருக்கும் என்றும் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கையின்படி, நித்திய இரட்சிப்பை அடையத் தேவையானதெல்லாம் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பது மட்டுமே, மேலும் அவர்கள் மனந்திரும்பி தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டாலே தேவனின் சித்தம் எப்போதும் நிறைவேறிவிடும். நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் தேவனும், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்பட்ட தேவனும் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்; வேதாகமத்தை தேவன் மிஞ்சக் கூடாது மற்றும் மிஞ்ச முடியாது என்பதும் கூட அவர்களது எண்ணம் ஆகும். சரியாகச் சொல்லப்போனால், இந்த எண்ணங்களே அவர்களைப் பழைய நியாயப்பிரமாணங்களுடன் பிணைத்து செத்த விதிகளுடன் சேர்த்துவைத்து அறைந்துள்ளன. தேவனின் புதிய கிரியை எதுவாக இருந்த போதிலும், அது தீர்க்கதரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும் அத்தகைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், “உத்தம” இருதயத்துடன் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் வெளிப்பாடுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி இல்லை என்றால், அத்தகைய கிரியைகள் தேவனின் கிரியைகளாக இருக்க முடியாது என்று நம்பும் மேலதிகமானோரும் உள்ளனர்; தேவனை அறிந்துகொள்ளுவது என்பது மனிதனுக்கு ஏற்கெனவே ஓர் எளிமையான காரியம் அல்ல. மனிதனின் மூட இருதயத்தோடு அவனது சுய-முக்கியத்துவம் மற்றும் அகம்பாவம் என்னும் கலக சுபாவத்தின் காரணமாக தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளுவது அவனுக்கு இன்னும் கடினமானதாக இருக்கிறது. தேவனின் புதிய கிரியையை மனிதன் கவனமாக ஆராய்வதுமில்லை, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை; அதற்குப் பதிலாக, அவன் தேவனிடம் இருந்து வெளிப்பாடுகளுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருந்து ஓர் அலட்சியமான மனப்பாங்கைக் கடைபிடிக்கிறான். இது தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரை எதிர்ப்பவர்களின் நடத்தை அல்லவா? இத்தகைய மக்கள் தேவனின் அங்கீகாரத்தை எவ்வாறு பெற முடியும்?

இயேசுவின் கிரியையும் தகர்ந்து போய்விட்டது என்று இன்று நான் கூறுவது போலவே கிருபையின் காலத்தில் யேகோவாவின் கிரியை தகர்ந்து போய்விட்டது என்று இயேசு கூறினார். கிருபையின் காலம் இல்லாமல் இருந்து நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க மாட்டார் மேலும் அனைத்து மனுக்குலத்தையும் இரட்சித்திருக்கவும் மாட்டார். நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், மனுக்குலம் இன்றளவும் வந்தடைந்திருக்க முடியாது. வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் வரலாறு என்பது தேவனின் கிரியையின் இயற்கைச் சட்டம் அல்லவா? பிரபஞ்சம் முழுவதிலும் அவர் மனிதனை நிர்வகிப்பது பற்றிய ஒரு சித்தரிப்பு அல்லவா இது? வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் தேவனின் கிரியையும் அவ்வாறே முன்னோக்கி நகர்கிறது. தேவ சித்தம் தொடர்ந்து மாறுகிறது. அவரால் ஆறாயிரம் ஆண்டுகளாகக் கிரியை என்னும் ஒற்றைக் கட்டத்திலேயே நிலைத்திருக்க முடியாது, ஏனெனில் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது போல, தேவன் எப்போதுமே புதியவராக இருக்கிறார், மேலும் அவர் ஒருபோதும் பழையவர் அல்ல, மற்றும் சிலுவையில் அறையப்பட்டது போல ஒருமுறை, இருமுறை, மூன்று முறைகள்…. என அவர் தொடர்ந்து அறையப்பட்டு அவ்விதமான கிரியையை அவரால் ஆற்ற முடியாது, அவ்வாறு சிந்திப்பதே கேலிக்குரியதாக இருக்கும். தேவன் தொடர்ந்து ஒரே கிரியையை செய்துகொண்டே இருப்பதில்லை; நான் எவ்வாறு உங்களிடம் புதிய வார்த்தைகளைப் பேசியும் ஒவ்வொரு நாளும் புதிய கிரியையைச் செய்கிறேனோ அதுபோல அவருடைய கிரியையும் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் எப்போதும் புதிதானது. இதுதான் நான் செய்யும் கிரியை, மற்றும் எது முக்கியம் என்றால் “புதிது” மற்றும் “அற்புதமானது” என்ற வார்த்தைகளே. “தேவன் மாறாதவர், மற்றும் தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார்”: இந்தக் கூற்று நிச்சயமாகவே உண்மையானது; தேவனின் சாராம்சம் மாறுவதில்லை, தேவன் எப்போதும் தேவனே, மற்றும் அவர் ஒருபோதும் சாத்தானாக மாற முடியாது, ஆனால் இது அவரது கிரியையானது அவரது சாரம்சத்தைப் போன்று நிலையாகவும் மாறாததாகவும் இருக்கும் என்று நிரூபிக்காது. தேவன் மாறாதவர் என்று நீ அறிவிக்கிறாய், ஆனால் எவ்வாறு, பின்னர், தேவன் எப்போதும் புதியவர் மற்றும் ஒருபோதும் பழையவர் அல்ல என்று உன்னால் விளக்க முடியுமா? தேவனின் கிரியை தொடர்ந்து பரவுகிறது மேலும் தொடர்ந்து மாறுகிறது, மற்றும் அவரது சித்தம் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு மனிதனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மனிதன் தேவனின் கிரியையை அனுபவிக்கும்போது, அவனது மனநிலை முடிவின்றி மாறுகிறது போல அவனது அறிவும் மாறுகிறது. பின் எங்கிருந்து இந்த மாற்றம் எழுகிறது? அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் தேவனின் கிரியையில் இருந்தல்லவா? மனிதனின் மனநிலை மாறமுடியும் என்றால், என்னுடைய கிரியையும் என் வார்த்தைகளும் தொடர்ந்து மாற மனிதனால் ஏன் அனுமதிக்க முடியாது? மனிதனின் கட்டுப்பாடுகளுக்கு நானும் உட்பட வேண்டுமா? இதில், திணிக்கப்படும் வாதங்களையும் நெறியற்ற தர்க்கங்களையும் நீ பயன்படுத்தவில்லையா?

தமது உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், இயேசு சீடர்களுக்குக் காணப்பட்டு, “என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.” இந்த வார்த்தைகளை எவ்வாறு விளக்கலாம் என்று உனக்குத் தெரியுமா? இப்போது நீ அவரது பெலனால் தரிப்பிக்கப்பட்டிருக்கிறாயா? “பெலன்” எதைக் குறிக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ளுகிறாயா? கடைசி நாட்களில் சத்தியத்தின் ஆவி மனிதனுக்கு வழங்கப்படும் என்று இயேசு அறிவித்தார். கடைசி நாட்கள் இதோ இப்போது இருக்கின்றன; சத்தியத்தின் ஆவி வார்த்தைகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை நீ புரிந்துகொள்ளுகிறாயா? சத்தியத்தின் ஆவி எங்கே வெளிப்பட்டுக் கிரியை செய்யும்? ஏசாயா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசன புத்தகத்தில், புதிய ஏற்பாட்டின் காலத்தில் இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு குழந்தை பிறக்கும் என்று ஒருபோதும் எந்த ஒரு குறிப்பும் இல்லை; இமானுவேல் என்னும் பெயர் கொண்ட ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்றுதான் எழுதப்பட்டுள்ளது, “இயேசு” என்ற பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை? இந்தப் பெயர் பழைய ஏற்பாட்டில் எங்கும் காணப்படவில்லை, பின்னர் ஏன் நீ இன்னும் இயேசுவை நம்புகிறாய்? நிச்சயமாக நீ உன் கண்களால் இயேசுவைக் கண்டதால் மட்டுமே அவரை நம்பத் தொடங்கவில்லை, இல்லையா? அல்லது ஒரு வெளிப்பாட்டைப் பெற்றதனால் நீ நம்பத் தொடங்கினாயா? தேவன் உண்மையிலேயே உனக்கு இத்தகைய கிருபையைக் காட்டுவாரா? அவர் இத்தகைய பெரும் ஆசீர்வாதங்களை உனக்கு வழங்குவாரா? இயேசுவின் மேல் நீ வைக்கும் நம்பிக்கையின் அடிப்படை என்ன? இன்று இயேசு மாம்சமாகி இருப்பதை நீ ஏன் நம்பவில்லை? உனக்கு தேவனிடம் இருந்து வெளிப்பாடு இல்லாமல் இருப்பது அவர் மாம்சத்தில் அவதரிக்கவில்லை என்பதற்கான நிரூபணம் என்று நீ ஏன் கூறுகிறாய்? தேவன் தமது கிரியையைத் தொடங்கும் முன்னர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா? அவர் முதலில் அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமா? ஓர் ஆண் குழந்தை ஒரு முன்னணையில் பிறக்கும் என்றுதான் ஏசாயா முன்னறிவித்தார்; அவர் மரியாள் இயேசுவைப் பெறுவாள் என்று ஒருபோதும் தீர்க்கதரிசனம் கூறவில்லை. மரியாளிடம் பிறந்த இயேசுவிடம் எந்த அடிப்படையில் நீ உன் நம்பிக்கையை வைக்கிறாய்? நிச்சயமாக உன் நம்பிக்கை குழப்பமடையவில்லையா? தேவனின் நாமம் மாறுவதில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். பின் ஏன் யேகோவா என்ற நாமம் இயேசு என்றானது? மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, பின் ஏன் இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதர் வந்தார்? தேவனுடைய நாமம் ஏன் மாறியது? இத்தகைய கிரியை வெகு காலத்திற்கு முன்னர் செய்யப்படவில்லையா? இன்று புதிய கிரியைகளை தேவன் செய்யாமலிருக்கிறாரோ? நேற்றைய கிரியையை மாற்ற முடியும், யேகோவாவின் கிரியையில் இருந்து இயேசுவின் கிரியை தொடர முடியும். முடியாதென்றால், இயேசுவின் கிரியையின் இடத்தில் அதற்குப் பதிலாகப் பிற கிரியைகளால் நடைபெறுமா? யேகோவாவின் நாமம் இயேசு என்று மாற்றப்பட்டால், பின் ஏன் இயேசு என்ற நாமமும் மாற்றப்படக்கூடாது? இவற்றில் ஒன்றும் புதுமையானது அல்ல; மக்கள் மிகவும் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தேவன் எப்போதும் தேவனாகவே இருக்கிறார். அவருடைய கிரியை எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய நாமம் எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது. தேவனை இயேசு என்ற நாமத்தினால் மட்டுமே அழைக்க வேண்டும் என்று நீ நம்பினால், உனது அறிவு மிகவும் குறைந்தது என்றுதான் பொருள். இயேசு என்பதுதான் தேவனுடைய நாமமாக எப்போதும் இருக்கும் என்றும் தேவன் என்றென்றும் எப்போதும் இயேசு என்ற நாமத்தையே கொண்டிருப்பார் என்றும் இது ஒருபோதும் மாறாது என்றும் நீ தைரியமாக உறுதிபடச் சொல்கிறாயா? இயேசு என்ற நாமமே நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடித்துவைத்தது என்றும் இறுதி காலத்தை முடிக்கும் என்றும் உன்னால் தைரியமாக உறுதிபடச் சொல்ல முடியுமா? காலத்தை இயேசுவின் கிருபை முடிவுக்குக் கொண்டுவரும் என்று யாரால் கூற முடியும்? இந்த சத்தியங்களைப் பற்றிய தெளிவான புரிதல் உனக்கு இல்லை என்றால், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நீ திறமையற்றவனாக இருப்பதோடு, உன்னாலேயே உறுதியாக நிற்க முடியாதவனாய் இருப்பாய். நாள் வரும்போது அதில் அந்த மதம் சார்ந்த மக்களின் எல்லா சிரமங்களையும் தீர்த்து, அவர்களுடைய எல்லா பொய்மைகளையும் நீ பொய்யென்று நிரூபிக்கும்போது, கிரியையின் இந்தக் கட்டத்தைப் பற்றி நீ முற்றிலும் உறுதியாக இருக்கிறாய் என்பதற்கும் சிறிதளவும் சந்தேகம் உனக்கில்லை என்பதற்கும் அதுவே அத்தாட்சியாக இருக்கும். அவர்களுடைய பொய்மைகளை உன்னால் பொய்யென்று நிரூபிக்க முடியவில்லை என்றால், அவர்கள் உன்னைக் குற்றப்படுத்தி அவதூறு செய்வார்கள். அது அவமானகரமானதாக இருக்காதா?

யூதர்கள் யாவரும் பழைய ஏற்பாட்டைப் படித்து ஒரு முன்னணையில் ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை முற்றிலுமாக அறிந்திருந்த பின்னும் அவர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்? அது அவர்களது கலக சுபாவத்தினாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த அறியாமையினாலும் அல்லவா? அக்காலத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆண் பிள்ளையைப் பற்றி தாங்கள் அறிந்திருந்ததை விடவும் இயேசுவின் கிரியை வேறாக இருப்பதாக பரிசேயர்கள் நம்பினார்கள், மேலும் மனிதனாகப் பிறந்த தேவனுடைய கிரியை வேதாகமத்தோடு இணக்கமானதாக இல்லை என்பதால் இன்று மக்கள் தேவனை நிராகரிக்கிறார்கள். தேவனிடத்தில் அவர்களுடைய கலகப்புத்தியின் சாராம்சம் ஒரேமாதிரியாக இருக்கிறதல்லவா? பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளையும் உன்னால் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால் அதுவே சரியான நீரோட்டம் ஆகும், மேலும் எந்த ஒரு சந்தேகமும் இன்றி நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதை ஏற்க வேண்டும் என்பதை நீ தேர்ந்தெடுக்கக் கூடாது. நீ தேவனுக்குள் நுண்ணறிவைப் பெற்று அவரைக் குறித்து அதிக கவனமாக இருந்தால், இது தேவையற்றதாக இருந்திருக்கும் அல்லவா? நீ வேதாகமத்தில் இருந்து இன்னும் அதிக ஆதாரத்தைத் தேடக் கூடாது; அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், நீ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நீ தேவனைப் பின்பற்றவே அவரை நம்புகிறாய், மேலும் அவரை நீ சோதித்தறியக் கூடாது. நான் உன்னுடைய தேவன் என்பதை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை நீ தேடக் கூடாது, ஆனால் நான் உனக்குப் பயனுள்ளவராக இருக்கிறேனா என்பதை உய்த்துணர்ந்து கொள்ளும் திறனுடையவனாக நீ இருக்கவேண்டும்—இதுவே மிகவும் முக்கியமானதாகும். நீ வேதாகமத்துக்குள் மறுக்கமுடியாத சான்றுகளைக் கண்டறிந்தாலும், அது உன்னை என் முன் முழுமையாகக் கொண்டுவர முடியாது. நீ வேதாகமத்தின் வரையறைக்குள்ளேயே வாழ்கிறாய், எனக்கு முன் அல்ல; என்னை அறிந்துகொள்ள வேதாகமம் உனக்கு உதவமுடியாது, என் பேரில் உனக்குள்ள அன்பையும் அதனால் ஆழப்படுத்த முடியாது. ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைத்த போதிலும், மனிதன் தேவனுடைய கிரியையை அறிந்திருக்கவில்லை என்பதால், ஒருவராலும் யாரைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் இதுவே இயேசுவுக்கு எதிராகப் பரிசேயர்களை நிற்கவைத்தது. என் கிரியை மனிதனின் நலனுக்கானது என்று சிலர் அறிவர், ஆனால் அவர்கள் தொடர்ந்து நானும் இயேசுவும் முற்றிலும் தனியான, ஒருவருக்கொருவர் இணக்கமற்ற இருவர் என தொடர்ந்து நம்புகின்றனர். அக்காலமான கிருபையின் காலத்தில், எவ்வாறு கடைப்பிடித்து நடப்பது, எவ்வாறு ஒன்றுகூடுவது, எவ்வாறு ஜெபத்தின் போது வேண்டுதல் செய்வது, எவ்வாறு பிறரை நடத்துவது, போன்ற தலைப்புகளில் இயேசு மட்டுமே தமது சீடர்களுக்கு ஒரு தொடர் போதனையை அளித்தார். அவர் செய்த கிரியை கிருபையின் காலத்திற்குரியது, மேலும் அவர் சீடர்களும் தம்மைப் பின்பற்றியவர்களும் எவ்வாறு கடைபிடித்து நடக்கவேண்டும் என்று மட்டுமே விளக்கினார். அவர் கிருபையின் காலக் கிரியையை மட்டுமே செய்தார், மேலும் கடைசி நாட்களின் கிரியை ஒன்றையும் செய்யவில்லை. நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களை யேகோவா விதித்தபோது, பின் ஏன் அவர் கிருபையின் காலக் கிரியையை ஆற்றவில்லை? கிருபையின் காலக் கிரியையை முன்கூட்டியே ஏன் அவர் தெளிவுபடுத்தவில்லை? மனிதன் அதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு இது உதவி இருக்குமல்லவா? ஓர் ஆண் குழந்தை பிறந்து ஆளுகை செய்யும் என்று மட்டுமே அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார், ஆனால் அவர் கிருபையின் காலக் கிரியையை முன்கூட்டியே செய்யவில்லை. தேவனின் கிரியைக்கு ஒவ்வொரு காலத்திலும் தெளிவான எல்லைகள் உள்ளன; அவர் நடப்புக் காலத்தின் கிரியையை மட்டுமே செய்கிறார், மற்றும் கிரியையின் அடுத்த கட்டத்தை அவர் ஒருபோதும் முன்கூட்டியே ஆற்றுவதில்லை. இவ்வாறே ஒவ்வொரு காலத்தினுடைய அவரது பிரதிநிதித்துவக் கிரியையை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இயேசு கடைசி நாட்களின் அடையாளங்களைப் பற்றி, எவ்வாறு பொறுமையாக இருப்பது என்பது பற்றி, மற்றும் எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது பற்றி, எவ்வாறு மனந்திரும்பி பாவ அறிக்கை செய்வது என்பது பற்றி மற்றும் எவ்வாறு சிலுவையை எடுத்துக்கொண்டு பாடுகளை சகிப்பது என்பது பற்றி மட்டுமே பேசினார்; கடைசி நாட்களில் எவ்வாறு மனிதன் வருகைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றோ அல்லது அவன் எவ்வாறு தேவ சித்தத்தைத் திருப்தி செய்ய முயலவேண்டும் என்றோ ஒருபோதும் அவர் பேசவில்லை. இவ்வாறிருக்க, தேவனின் கடைசி நாட்களின் கிரியையை வேதாகமத்தில் தேடுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? வேதாகமத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் மட்டுமே உன்னால் என்ன காண முடியும்? ஒரு வேத விளக்கவுரையாளராக இருந்தாலும் சரி அல்லது ஒரு போதகராக இருந்தாலும் சரி, இன்றைக்கான கிரியையை முன்கூட்டியே யாரால் கண்டிருக்க முடியும்?

“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இப்போது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டீர்களா? தேவனின் வார்த்தைகள் உங்களிடம் வந்துள்ளன. நீங்கள் அவற்றைக் கேட்கிறீர்களா? தேவன் கடைசி நாட்களில் வார்த்தைகளின் கிரியையை செய்கிறார், மற்றும் இத்தகைய வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவருடையவை, ஏனெனில் தேவனே பரிசுத்த ஆவியானவர் மேலும் அவரால் மாம்சமாகவும் முடியும்; ஆகவே, கடந்த காலத்தில் பேசப்பட்ட ஆவியானவரின் வார்த்தைகள்தாம் இன்று மனிதனாக அவதரித்த தேவனுடைய வார்த்தைகள். பேசுவது பரிசுத்த ஆவியானவர் என்பதால், மக்கள் கேட்கும்படி அவரது குரல் வானத்தில் இருந்து பேச வேண்டும் என்று நம்பும் பல அறிவற்ற மக்கள் உள்ளனர். இந்த வகையில் சிந்திக்கும் எவனும் தேவனின் கிரியையை அறிந்தவனல்ல. உண்மையில், பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் மாம்சமான தேவனால் பேசப்பட்டவையே. பரிசுத்த ஆவியானவரால் மனிதனிடம் நேரடியாகப் பேச முடியாது; நியாப்பிரமாணத்தின் காலத்திலும், யேகோவா மக்களிடம் நேரடியாகப் பேசவில்லை. இன்றைய காலத்திலும் அவர் பேசுவார் என்பது மிகவும் சாத்தியக்கூறு அற்ற ஒன்றே ஆகும் அல்லவா? ஏனெனில் தேவன் தமது கிரியையை ஆற்றப் பேச வேண்டும் என்றால், அவர் மாம்சம் ஆகவேண்டும்; இல்லையெனில் அவரது கிரியைகள் அதன் இலக்குகளை அடைய முடியாது. தேவ மனுவுருவை மறுப்பவர்கள் ஆவியையோ அல்லது தேவன் செயல்படும் கொள்கைகளையோ அறியாதவர்களாவர். தற்போதுதான் பரிசுத்த ஆவியானவரின் காலம் என்று நம்பியும், அவரது புதிய கிரியையை ஏற்காதவர்கள் ஒரு தெளிவற்ற மற்றும் அருவமான விசுவாசத்தின் மத்தியில் வாழ்கிறவர்கள். இத்தகைய மக்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை பெற மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே பேசி தமது கிரியையை நேரடியாகச் செய்யவேண்டும் என்று கேட்டும், மனிதனாக அவதரித்த தேவனுடைய வார்த்தைகளை அல்லது கிரியைகளை ஏற்காதவர்கள், ஒருபோதும் புதிய காலத்துக்குள் நுழைய முடியாது அல்லது அவர்களை தேவனால் முழு இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியாது.

முந்தைய: நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்

அடுத்த: தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக