மாம்சமாகியதன் மறைபொருள் (2)

அந்தக் காலகட்டத்தில் இயேசு யூதேயாவில் கிரியை செய்தபோது, அவர் அதை வெளிப்படையாகச் செய்தார், ஆனால் இப்போது, நான் உங்களிடையே ரகசியமாகக் கிரியை செய்கிறேன், ரகசியமாகப் பேசுகிறேன். அவிசுவாசிகளுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. உங்களிடையேயான எனது கிரியை, என்னை அறியாதவர்களுக்குத் தெரியாது. இந்த வார்த்தைகள், இந்த சிட்சைகள் மற்றும் நியாயத்தீர்ப்புகள் ஆகியவற்றை நீங்கள் மட்டுமே அறிவீர்கள், மற்றவர்கள் அறியார். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு உங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன; அவிசுவாசிகளில் எவருக்கும் இது தெரியாது, ஏனென்றால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இங்குள்ள இந்த ஜனங்கள் சிட்சைகளை அனுபவித்தபின் பரிபூரணமாக்கப்படும் நிலையில் இருக்கின்றனர், ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு இது எதுவும் தெரியாது. இந்தக் கிரியை அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது! அவர்களுக்கு மாம்சமாகிய தேவன் தம்மை வெளிக்காட்டுவதில்லை, ஆனால் இந்தப் பிரவாகத்தில் இருப்பவர்களுக்கு அவர் வெளிப்படையாக இருக்கிறார் என்று சொல்லலாம். தேவனிடத்தில் சகலமும் வெளிப்படையாக இருந்தாலும், சகலமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், சகலமும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், இது அவரை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே சத்தியமாக இருக்கிறது; மீதமுள்ளவர்களைப் பொறுத்தவரை, அவிசுவாசிகளைப் பொறுத்தவரை, எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. உங்களுக்கிடையில் மற்றும் சீனாவில் தற்போது செய்யப்பட்டுவரும் கிரியைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க, அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிரியையை அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் செய்வதெல்லாம் அதைக் கண்டிப்பதும், அதைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதுமே ஆகும். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். மிகவும் பின்தங்கிய இடமான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் கிரியை செய்வது எளிதான காரியமல்ல. இந்தக் கிரியை வெளிப்படையாகச் செய்யப்படுமானால், இதைத் தொடர்ந்து செய்வது சாத்தியமற்றதாகிவிடும். இந்தக் கட்டக் கிரியையை இந்த இடத்தில் வெறுமனே செய்ய முடியாது. இந்தக் கிரியை வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டுமானால், அவர்கள் அதை எவ்வாறு முன்னோக்கிச் செல்ல அனுமதிப்பர்? இது கிரியையை இன்னும் பெரிய ஆபத்தில் சிக்க வைக்காதா? இந்தக் கிரியை மறைக்கப்படாமல், இயேசுவின் காலத்தில் அவர் நோயுற்றவர்களை அற்புதமாகக் குணமாக்கி, பேய்களை விரட்டியடித்தது போலத் தற்போதும் நிகழ்ந்திருந்தால், இந்தக் கிரியை வெகு காலத்திற்கு முன்பே பிசாசுகளால் “பிடிக்கப்பட்டிருக்காதா”? தேவன் இருக்கிறார் என்பதை அவர்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா? மனுஷனுக்குப் பிரசங்கிப்பதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும் நான் இப்போது ஜெப ஆலயங்களுக்குள் நுழைந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே துண்டுகளாகிப் போயிருக்க மாட்டேனா? இது நடந்திருந்தால், எனது கிரியை எவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும்? எந்த அடையாளங்களும் அதிசயங்களும் வெளிப்படையாக வெளிப்படுவதில்லை என்பதற்கான காரணம் அவற்றை மறைப்பதற்காகத்தான். எனவே, அவிசுவாசிகளுக்கு, எனது கிரியையைக் காணவோ, அறியவோ, கண்டுபிடிக்கவோ முடியாது. கிருபையின் யுகத்தில் இயேசு செய்ததைப் போலவே கிரியையின் இந்தக் கட்டமும் செய்யப்பட வேண்டும் என்றால், அது இப்போது இருப்பதைப் போலச் சீராக இருந்திருக்க முடியாது. எனவே, இவ்வழியில் ரகசியமாகக் கிரியை செய்வது உங்களுக்கும், கிரியைக்கும் மொத்தமாகப் பயனளிக்கும். பூமியில் தேவனின் கிரியை நிறைவடையும் போது, அதாவது, இந்த ரகசியக் கிரியை நிறைவடையும் போது, கிரியையின் இந்தக் கட்டம் வெளியரங்கமாக வெளிப்படுத்தப்படும். சீனாவில் ஜெயங்கொண்டவர்களின் குழு ஒன்று இருப்பதை அனைவரும் அறிவார்கள்; தேவன் சீனாவில் மாம்சமாகியிருக்கிறார் என்பதையும், அவருடைய கிரியை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்வார்கள். அப்போதுதான் அது மனுஷன் மீது விடியும்: சீனா ஏன் இன்னும் தனது வீழ்ச்சியையோ அல்லது தகர்ந்துபோதலையோ வெளிக்காட்டவில்லை? தேவன் தமது கிரியையை சீனாவில் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு வருகிறார், மேலும் ஒரு குழுவினரை ஜெயங்கொண்டவர்களாகப் பரிபூரணமாக்கியிருக்கிறார்.

மாம்சமாகிய தேவன், தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும்போது அவரைப் பின்தொடரும் ஜனங்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார், சகல ஜீவன்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவதில்லை. அவர் தமது கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்வதற்காக மட்டுமே மாம்சமாக மாறினார், மனுஷனிடம் தம்முடைய உருவத்தைக் காண்பிப்பதற்காக மாறவில்லை. இருப்பினும், அவருடைய கிரியையை அவரே செய்ய வேண்டும், ஆகவே அவர் மாம்சத்தில் அவ்வாறு செய்வது அவசியமாகும். இந்தக் கிரியை நிறைவடைந்ததும், அவர் மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் செல்வார்; வரவிருக்கும் கிரியையின் வழியில் குறுக்கே நின்றிடுவோம் என்ற பயத்தால் அவர் மனுஷரிடையே நீண்ட காலம் தங்கியிருக்க மாட்டார். அவருடைய நீதியுள்ள மனநிலையையும், அவருடைய எல்லா கிரியைகளையும் மட்டுமே பெருந்திரளான ஜனங்களுக்கு அவர் வெளிப்படுத்துகிறார்; அவர் இரண்டு முறை மாம்சமாக வந்தபோது இருந்த உருவங்களை வெளிப்படுத்துவதில்லை, ஏனென்றால் தேவனின் உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே காட்ட முடியும், அதை அவருடைய மாம்சமாகிய உருவத்தால் மாற்ற முடியாது. அவருடைய மாம்சத்தின் உருவம், அவர் மாம்சத்தில் செயல்படுவதால் அவரைப் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்களுக்கு மட்டுமே காட்டப்படுகிறது. இதனால்தான் இப்போது மேற்கொள்ளப்படும் கிரியைகள் இரகசியமாகச் செய்யப்படுகின்றன. அதேபோல், இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது அவர் யூதர்களுக்கு மட்டுமே தம்மை காட்டிக் கொண்டார், வேறு எந்த நாட்டிற்கும் பகிரங்கமாகத் தம்மைக் காட்டவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையை முடித்தவுடன், இங்கேயே தங்கிவிடாமல் உடனடியாக மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் சென்றார்; அதன் பின்னர், மனுஷனுக்குத் தம்மைக் காட்டிய இந்த மனுஷ உருவம் அவரல்ல, மாறாக, பரிசுத்த ஆவியானவரே நேரடியாகக் கிரியை செய்தார். மாம்சமாகிய தேவனின் கிரியை முற்றிலும் நிறைவடைந்தவுடன், அவர் மரணத்திற்குரிய உலகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வார், மேலும் அவர் மாம்சத்தில் இருந்தபோது அவர் செய்ததைப் போன்ற எந்த கிரியையையும் மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதற்குப் பிறகு, கிரியைகள் அனைத்தும் நேரடியாகப் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில், மனுஷனால் தேவனின் மாம்ச சரீரத்தின் உருவத்தைக் காண முடியாது; அவர் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிக் கொள்ளாமல், ஆனால் என்றென்றும் மறைந்திருக்கிறார். மாம்சமாகிய தேவனின் கிரியைக்கான நேரம் குறைவாகவே உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட யுகம், காலம், தேசம் மற்றும் குறிப்பிட்ட நபர்களிடையே மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிரியை தேவன் மாம்சமாகிய காலகட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் இது ஒரு யுகத்தின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது; இது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கான தேவ ஆவியானவரின் கிரியையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவருடைய முழு கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் உருவம் சகல ஜனங்களுக்கும் காட்டப்படாது. அவர் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த அவருடைய உருவத்தை விட, தேவனின் நீதியும், அவருடைய மனநிலையுமே முழுவதுமாகப் பெருந்திரளான ஜனங்களுக்குக் காட்டப்படுகிறது. இது மனுஷனுக்குக் காட்டப்படும் ஒரே ஓர் உருவமோ, இரண்டு உருவங்கள் இணைக்கப்பட்ட ஓர் உருவமோ இல்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் மாம்சம், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடித்தவுடன் பூமியை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது அவசியமானதாகும், ஏனென்றால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே அவர் வருகிறார், அவருடைய உருவத்தை ஜனங்களுக்கு காட்ட வரவில்லை. மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் தேவன் இரண்டு முறை மாம்சமாகியபோது நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை ஒருபோதும் பார்த்திராத எந்தவொரு தேசத்திற்கும் அவர் வெளிப்படையாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். இயேசு மீண்டும் ஒருபோதும் யூதர்களுக்குத் தம்மை நீதியின் சூரியனாகக் காட்டிக்கொள்ள மாட்டார், ஒலிவ மலை உச்சியில் நின்று சகல ஜனங்களுக்கும் தோன்றமாட்டார்; இயேசு யூதேயாவில் இருந்தபோது இருந்த தோற்றத்தின் உருவப்படத்தைதான் சகல யூதர்களும் கண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இயேசு மாம்சமாகிய காலத்தில் அவர் செய்த கிரியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தது; அவர் ஒரு யூதரின் சாயலில் யூதேயாவுக்குத் திரும்ப மாட்டார், எந்தவொரு புறஜாதி தேசங்களுக்கும் ஒரு யூதரின் உருவத்தில் தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார், ஏனென்றால் மாம்சமாகிய இயேசுவின் உருவம் என்பது வெறும் யூதரின் உருவம்தான், யோவான் கண்ட மனுஷகுமாரனின் உருவம் அல்ல. தாம் மீண்டும் வருவேன் என்று இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தாலும், புறஜாதி தேசங்களில் உள்ள அனைவருக்கும் வெறுமனே தம்மை யூதரின் சாயலில் காட்டமாட்டார். மாம்சமாகிய தேவனின் கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிரியை சில ஆண்டுகளுக்கென வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் தேவ ஆவியின் எல்லா கிரியைகளையும் அவரால் முடிக்க முடியாது. யூதராக இயேசுவின் உருவமானது யூதேயாவில் அவர் கிரியை செய்த தேவனின் உருவத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அவரால் சிலுவையில் அறையப்படும் கிரியையை மட்டுமே செய்ய முடியும். இயேசு மாம்சத்தில் இருந்த காலகட்டத்தில், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அல்லது மனுஷகுலத்தை அழிக்கும் கிரியையை அவரால் செய்ய முடியவில்லை. ஆகையால், அவர் சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய கிரியையை முடித்தபின், அவர் மிகவும் உயர்ந்த இடத்தின் மீது ஏறி, மனுஷனிடமிருந்து தம்மை எப்போதும் மறைத்துக்கொண்டார். அப்போதிருந்து, புறஜாதி தேசங்களைச் சேர்ந்த உண்மையுள்ள விசுவாசிகள் இயேசுவாகிய கர்த்தரின் வெளிப்பாட்டைக் காண முடியவில்லை, ஆனால் சுவரில் ஒட்டப்பட்டிருந்த உருவப்படத்தை மட்டுமே அவர்கள் கண்டனர். இந்த உருவப்படம் மனுஷனால் வரையப்பட்ட ஒன்றாகும், ஆனால் தேவன் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிய உருவம் அல்ல. தேவன் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த உருவத்திலேயே பெருந்திரளான ஜனங்களுக்குத் தன்னை வெளிப்படையாகக் காட்டவில்லை. மனுஷரிடையே அவர் செய்யும் கிரியை, அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ள அவர்களை அனுமதிக்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு யுகங்களின் கிரியைகள் மூலம் மனுஷனுக்குக் காட்டப்படுகின்றன; இயேசுவின் வெளிப்பாட்டின் மூலம் அல்லாமல், அவர் அறிந்த மனநிலை மற்றும் அவர் செய்த கிரியையின் மூலமே அது நிறைவேற்றப்படுகிறது. அதாவது, தேவனின் உருவம் மனுஷனுக்குத் தெரியவருவது மாம்சமாவதன் மூலம் அல்ல, மாறாக உருவமும் வடிவமும் கொண்ட மாம்சமாகிய தேவனால் மேற்கொள்ளப்படும் கிரியையின் மூலமாகவே மனுஷனுக்குத் தெரியவருகிறது; அவருடைய கிரியையின் மூலம், அவருடைய உருவம் காட்டப்பட்டு, அவருடைய மனநிலை அறியப்படுகிறது. அவர் மாம்சத்தில் செய்ய விரும்பும் கிரியையின் முக்கியத்துவம் இதுதான்.

தேவனுடைய இரண்டு மாம்சத் தோற்றங்களின் கிரியைகளும் முடிவடைந்தவுடன், அவர் அவிசுவாசிகளின் தேசங்கள் முழுவதும் தம்முடைய நீதியுள்ள மனநிலையைக் காட்டத் தொடங்குவார், மேலும் அவருடைய உருவத்தைக் காணப் பெருந்திரளான ஜனங்களை அவர் அனுமதிப்பார். அவர் தமது மனநிலையை வெளிப்படுத்துவார், மேலும் மனுஷனுடைய வெவ்வேறு வகைகளின் முடிவுகளையும் தெளிவுபடுத்துவார், இதன் மூலம் பழைய யுகத்தை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவருவார். மாம்சத்தில் அவர் செய்த கிரியை பெரியளவிற்கு விரிவடையாததன் காரணம் (இயேசு யூதேயாவில் மட்டுமே கிரியை செய்தது போல, இன்று நான் உங்களிடையே மட்டுமே கிரியை செய்கிறேன்) ஏனெனில், மாம்சத்தில் அவர் செய்த கிரியைக்கு எல்லைகளும் வரம்புகளும் உள்ளன. அவர் வெறுமனே ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தின் உருவத்தில் ஒரு குறுகிய காலக் கிரியையைச் செய்கிறார்; அவர் இந்த மாம்சத்தை நித்திய கிரியையையோ அல்லது அவிசுவாசிகளுடைய தேசங்களின் ஜனங்களுக்குத் தோன்றும் கிரியையையோ செய்யப் பயன்படுத்துவதில்லை. மாம்சத்தில் செய்த கிரியைகள் வரம்புக்குட்பட்டதாக (யூதேயாவில் மட்டுமே கிரியை செய்வது அல்லது உங்களிடையே மட்டுமே கிரியை செய்வது போல) மட்டுமே இருக்க முடியும், பின்னர், இந்த எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்படும் கிரியைகளின் மூலம், அதன் எல்லை விரிவாக்கப்படலாம். நிச்சயமாக, விரிவாக்கத்தின் கிரியை அவருடைய ஆவியால் நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும், அது இனியும் அவருடைய மாம்சத்தின் கிரியையாக இருக்காது. மாம்சத்தில் செய்த கிரியைக்கு எல்லைகள் உள்ளன, மேலும் இது பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலும் விரிவடையாது—இதை நிறைவேற்ற முடியாது. மாம்சத்தில் செய்த கிரியையின் மூலம், அவருடைய ஆவியானவர் அதற்குப் பின்வரும் கிரியையைச் செய்கிறார். ஆகையால், மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது குறிப்பிட்ட எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்படும் துவக்கக் கிரியை ஆகும்; இதற்குப் பிறகு, அவருடைய ஆவியானவர் இந்தக் கிரியையைத் தொடர்கிறார், மேலும் அவர் இதனை ஒரு விரிவாக்கப்பட்ட எல்லையில் மேற்கொள்கிறார்.

யுகத்தை வழிநடத்துவதற்காக மட்டுமே தேவன் பூமியில் கிரியை செய்ய வருகிறார், ஒரு புதிய யுகத்தை ஆரம்பிப்பது, பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை மட்டுமே அவரது நோக்கமாகும். அவர் பூமியில் ஒரு மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்கவோ, மனுஷ உலக ஜீவிதத்தின் சந்தோஷங்களையும் துயரங்களையும் அனுபவிக்கவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை தமது கையால் பரிபூரணப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் வளர்வதைத் தனிப்பட்ட முறையில் பார்க்கவோ வரவில்லை. இது அவருடைய கிரியை அல்ல; அவரது கிரியை புதிய யுகத்தைத் தொடங்குவதும் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் மட்டுமே ஆகும். அதாவது, அவர் நேரடியாக ஒரு யுகத்தைத் தொடங்குவார், நேரடியாக மற்றொன்றை முடிவுக்குக் கொண்டுவருவார், மேலும் தமது கிரியையைச் செய்வதன் மூலம் அவர் நேரடியாகச் சாத்தானை தோற்கடிப்பார். ஒவ்வொரு முறையும் அவர் தமது கிரியையை நேரடியாகச் செய்யும்போது, அது அவர் யுத்தக்களத்தில் கால் வைப்பது போலாகும். முதலாவதாக, மாம்சத்தில் இருக்கும்போதே அவர் உலகை ஜெயங்கொண்டு, சாத்தானை விட மேலோங்கி நிற்கிறார்; அவர் எல்லா மகிமையையும் கைப்பற்றி, இரண்டாயிரம் ஆண்டுகாலக் கிரியையின் முழுமை மீது திரைச்சீலையை எழுப்புகிறார், இது பூமியிலுள்ள அனைவருக்கும் நடந்து செல்லச் சரியானப் பாதையை அமைக்கவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியான ஜீவிதத்தை ஜீவித்திருக்கவும் உதவுகிறது. இருப்பினும், தேவன் பூமியில் மனுஷனுடன் நீண்ட காலம் ஜீவித்திருக்க முடியாது, ஏனென்றால் தேவன் என்பவர் மனுஷன் அல்ல, தேவன். அவரால் ஒரு சாதாரண மனுஷனின் வாழ்நாளில் ஜீவித்திருக்க முடியாது, அதாவது சாதாரணமானதிலிருந்து வந்த ஒன்றுமில்லாத ஒரு நபராக அவரால் பூமியில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் ஒரு சாதாரண மனுஷனின் சாதாரண மனுஷத் தன்மையின் குறைந்தபட்சப் பகுதியை மட்டுமே அவர் தமது மனுஷ ஜீவிதத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் எப்படிப் பூமியில் ஒரு குடும்பத்தைத் தொடங்கி, ஒரு தொழில் செய்து, குழந்தைகளை வளர்க்க முடியும்? இது அவருக்கு அவமானமாக இருக்காதா? அவர் சாதாரண மனுஷத் தன்மையுடன் இருக்கிறார் என்பது ஒரு சாதாரண முறையில் கிரியை செய்வதற்கான நோக்கத்திற்காக மட்டும்தான், ஒரு சாதாரண மனுஷனைப் போல ஒரு குடும்பத்தையும் தொழிலையும் பெறுவதற்காக இல்லை. அவருக்கு ஒரு சாதாரண மனுஷத்தன்மை தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க அவருடைய இயல்பான உணர்வும், சாதாரணமான மனமும், அவரது மாம்சத்தின் சாதாரண புசிக்கும் மற்றும் உடை உடுத்தும் தன்மையும் போதுமானது; அவர் ஒரு சாதாரண மனுஷத் தன்மையுடன்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு குடும்பமோ அல்லது ஒரு தொழிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இது முற்றிலும் தேவையற்றதாக இருக்கும்! தேவன் பூமிக்கு வருவது தான் மாம்சமாகிய வார்த்தை என்பது; அவர் வெறுமனே மனுஷனை அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அவருடைய வார்த்தையைக் காணவும் அனுமதிக்கிறார், அதாவது, மாம்சத்தால் செய்யப்படும் கிரியையைப் பார்க்க மனுஷனை அனுமதிக்கிறார். அவருடைய நோக்கம் ஜனங்கள் அவருடைய மாம்சத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்த வேண்டும் என்பதல்ல, ஆனால் மனுஷன் கடைசிவரை கீழ்ப்படிய வேண்டும் என்பதாகவே இருக்கிறது, அதாவது, மனுஷன் அவரது வாயிலிருந்து வெளிவரும் எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதும், அவர் செய்யும் எல்லா கிரியைகளுக்கும் கீழ்ப்படிவதும் மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறது. அவர் வெறுமனே மாம்சத்தில் கிரியை செய்கிறார்; அவர் வேண்டுமென்றே மனுஷனைத் தமது மாம்சத்தின் மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் உயர்த்தும்படிக் கேட்கவில்லை, மாறாக மனுஷனுக்கு அவருடைய கிரியையின் ஞானத்தையும் அவர் பயன்படுத்தும் அனைத்து அதிகாரத்தையும் காட்டுகிறார். ஆகையால், அவர் ஒரு சிறந்த மனுஷத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அவர் எந்த அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தேவன் மாம்சத்தில் வந்தும், அவருடைய சாதாரண மனுஷத்தன்மையை விளம்பரப்படுத்தவோ அல்லது சாட்சிக் கொடுக்கவோ செய்யாமல், வெறுமனே தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், மாம்சமாகிய தேவனிடம் நீங்கள் காணக்கூடிய அனைத்தும் அவர் தெய்வீகமாக இருக்கிறார் என்பது மட்டுமேதான்; ஏனென்றால், மனுஷன் பின்பற்றுவதற்காக அவர் மனுஷனாக இருப்பதை அவர் ஒருபோதும் அறிவிக்க மாட்டார். மனுஷன் ஜனங்களை வழிநடத்தும்போதுதான், அவன் தனது மனுஷத்தன்மையைப் பற்றி பேசுகிறான். அவர்களுடைய போற்றுதலையும் நம்பிக்கையையும் பெற்று அதன் மூலம் மற்றவர்களைத் தலைமை தாங்குவதுதான் நல்லது. இதற்கு நேர்மாறாக, தேவன் தமது கிரியையின் மூலம் மட்டுமே மனுஷனை ஜெயங்கொள்கிறார் (அதாவது, மனுஷனால் அடைய முடியாத கிரியையை); அவர் மனுஷனால் போற்றப்படுவாரா அல்லது மனுஷனை வணங்க வைப்பாரா என்பது முக்கியமில்லை. அவர் செய்வதெல்லாம் மனுஷனுக்குள் அவரைப் பற்றிய பயபக்தியான உணர்வைச் செலுத்துவதோ அல்லது அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத தன்மையை உணர்த்துவதோ மட்டுமே ஆகும். தேவனுக்கு மனுஷனைக் கவர வேண்டிய அவசியமில்லை; அவருடைய மனநிலையை நீ சாட்சி கூறியவுடன் நீ அவருக்குப் பயபக்தியாயிருக்கவேண்டும் என்பதே அவருக்குத் தேவை. தேவன் செய்யும் கிரியை அவருடையது; அதை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது, அதை மனுஷனால் அடையவும் முடியாது. தேவனால் மட்டுமே அவரது சொந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி மனுஷனைப் புதிய ஜீவிதங்களுக்கு அழைத்துச் செல்லவும் முடியும். அவர் செய்யும் கிரியை, ஒரு புதிய ஜீவிதத்தை மனுஷனுக்குள் கொண்டு வந்து, அவனை ஒரு புதிய யுகத்திற்குள் நுழையவைக்க உதவுகிறது. மீதமுள்ள கிரியைகள் மற்றவர்களால் போற்றப்படும் சாதாரண மனுஷத்தன்மை உள்ளவர்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. ஆகையால், கிருபையின் யுகத்தில், மாம்சத்தில் அவர் ஜீவித்திருந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் தமது இரண்டாயிரம் ஆண்டுகாலக்கிரியையை வெறும் மூன்றரை ஆண்டுகளில் முடித்தார். தேவன் தமது கிரியையைச் செய்ய பூமிக்கு வரும்போது, இரண்டாயிரம் ஆண்டுகால அல்லது ஒரு முழு யுகத்தின் கிரியையை எப்போதும் ஒரு சில ஆண்டுகளுக்குள் முடிக்கிறார். அவர் காத்திருப்பதில்லை, அவர் தாமதிப்பதும் இல்லை; அவர் வெறுமனே பல ஆண்டுகளின் கிரியையைச் சுருக்குகிறார், இதனால் அந்தக் கிரியை ஒரு சில குறுகிய ஆண்டுகளில் முடிக்கப்படுகிறது. ஏனென்றால், அவர் நேரடியாகச் செய்யும் கிரியை, ஒரு புதிய பாதையைத் திறந்து ஒரு புதிய யுகத்தை வழிநடத்துவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது.

முந்தைய: மாம்சமாகியதன் மறைபொருள் (1)

அடுத்த: மாம்சமாகியதன் மறைபொருள் (3)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக