அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்

நான் என்னைப் பின்பற்றுபவர்களாக இருக்க பூமியில் பலரைத் தேடினேன். இந்தப் பின்பற்றுபவர்கள் எல்லோருக்கும் மத்தியில் ஆசாரியர்களாக ஊழியம் செய்பவர்கள், வழிநடத்துபவர்கள், தேவனுடைய புத்திரர்கள், தேவ ஜனங்கள், மற்றும் ஊழியக்காரர்கள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் என்னிடம் காட்டும் விசுவாசத்தின் அடிப்படையில் நான் அவர்களை வகைப்படுத்துகிறேன். அனைவருமே வகையின்படி வகைப்படுத்தப்பட்டிருக்கும் போது, அதாவது, ஒவ்வொரு வகையான நபரின் சுபாவமும் தெளிவுபடுத்தப்படும் போது, மனுக்குலத்தை நான் இரட்சிக்கும் இலக்கை அடைவதற்கு நான் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் சரியான வகைக்குள் கணக்கிட்டு, ஒவ்வொரு வகையினரையும் அவர்களுக்கான பொருத்தமான இடத்தில் வைப்பேன். நான் இரட்சிக்க விரும்புவோரை கூட்டம் கூட்டமாக எனது வீட்டிற்கு அழைக்கிறேன், அதன்பின் அவர்கள் அனைவரும் என்னுடைய கடைசிக் காலக் கிரியையை ஏற்றுக்கொள்ளச் செய்கிறேன். அதே நேரத்தில், நான் அவர்களை அவரவர் வகைக்கு ஏற்ப பிரித்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்கைக்குத் தக்கப் பலனை அல்லது தண்டனையை வழங்குகிறேன். இவையே என் கிரியையை உள்ளடக்கிய படிநிலைகளாகும்.

இன்று, நான் பூமியில் வாழ்கிறேன். மனிதருக்கு மத்தியில் நான் வாழ்கிறேன். மனிதர்கள் என்னுடைய கிரியையை அனுபவிக்கிறார்கள். என் பேச்சுக்களைக் கவனிக்கிறார்கள், இதனுடன் என்னைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் என் சத்தியங்களை அளிக்கிறேன் அதனால் அவர்கள் என்னிடமிருந்து ஜீவனைப் பெறுவார்கள், இதன் மூலம் தாங்கள் நடக்கக்கூடிய ஒரு பாதையைப் என்னிடமிருந்து பெறுவார்கள். ஏனென்றால் நான் தேவன், ஜீவனைக் கொடுக்கிறவர். பல ஆண்டுகளாக நான் செய்த கிரியைகளினால், மனிதர்கள் அதிகமாக ஆதாயம் அடைந்துள்ளனர், அதிகமாகக் கைவிட்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் என்னை உண்மையாக விசுவாசிக்கவில்லை என்று நான் இன்னும் சொல்கிறேன். ஏனென்றால், ஜனங்கள் வெறுமனே தங்கள் வாயால் என்னை தேவன் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பேசுகிற சத்தியங்களுடன் அவர்கள் உடன்படவில்லை, அதுமட்டுமின்றி நான் அவர்களிடம் கடைப்பிடிக்குமாறு கேட்கும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதாவது, ஜனங்கள் தேவன் இருப்பதை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய சத்தியத்தை அல்ல. ஜனங்கள் தேவன் இருப்பதை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய ஜீவனை அல்ல. ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய சாராம்சத்தை அல்ல. அவர்களின் வைராக்கியத்திற்காக நான் அவர்களை வெறுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் என்னை ஏமாற்றுவதற்காக மட்டுமே இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் யாரும் என்னை உண்மையாக ஆராதிப்பதில்லை. உங்கள் வார்த்தைகளில் சர்ப்பத்தின் சோதனை உள்ளது. மேலும், அவை தீவிர இறுமாப்புள்ளவைகளாகவும், பிரதான தூதனின் உண்மையான அறிவிப்புமாக இருக்கின்றன. மேலும் என்னவென்றால், உங்கள் செயல்கள் சிதைக்கப்பட்டு அவமானகரமான அளவிற்கு கிழிந்திருக்கின்றன. உங்கள் அளவற்ற ஆசைகளும் பேராசை நோக்கங்களும் கேட்பதற்கே அருவருப்பாக இருக்கின்றன. நீங்கள் அனைவரும் என் வீட்டில் அந்துப்பூச்சிகளாகிவிட்டீர்கள், அப்புறப்படுத்தப்பட வேண்டிய வெறுக்கத்தக்க பொருட்களாகிவிட்டீர்கள். ஏனெனில் உங்களில் யாரும் சத்தியத்தை நேசிப்பதில்லை. அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்கள். பரலோகத்திற்கு ஏறிப்போக வேண்டும் என்றும், கிறிஸ்து பூமியில் தமது வல்லமையைப் பயன்படுத்தும் அற்புதமான காட்சியைக் காணவேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். ஆனால் உங்களைப் போன்ற, மிகவும் சீர்கேடான, தேவன் யார் என்று தெரியாத ஒருவர் தேவனைப் பின்பற்றுவதற்குத் தகுதியானவரா என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? உங்களால் எப்படிப் பரலோகத்திற்கு ஏறிப்போக முடியும்? முன்னெப்போதும் நடந்திராத அத்தகைய அற்புதமான காட்சிகளைப் பார்க்க நீங்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்? உங்கள் வாயில் வஞ்சனையும் அசுத்தமுமான வார்த்தைகளும், துரோகமும் ஆணவமும் நிறைந்த வார்த்தைகளும் நிறைந்துள்ளன. நீங்கள் ஒருபோதும் என்னிடம் உண்மையான வார்த்தைகளைப் பேசவில்லை. என் வார்த்தையை அனுபவித்த பின்னும் உங்களிடம் பரிசுத்தமான வார்த்தைகளும் இல்லை, எனக்குக் கீழ்ப்படியும் வார்த்தைகளும் இல்லை. இறுதியில், உங்கள் விசுவாசம் தான் என்ன? உங்கள் உள்ளங்களில் ஆசை மற்றும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதில் பொருள் காரியங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும், என்னிடமிருந்து எதையாவது பெறுவது எப்படி என கணக்கிடுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், நீங்கள் என்னிடமிருந்து எவ்வளவு செல்வம் பெற்றிருக்கிறீர்கள் என்றும் எத்தனைப் பொருட்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும் எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகமான ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இறங்க காத்திருக்கிறீர்கள், இதனால் நீங்கள் இன்னும் அதிகமான அளவிலும், உயர்ந்த தரத்திலும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு கணத்திலும் உங்கள் எண்ணங்களில் இருப்பது நான் இல்லை, என்னிடமிருந்து வரும் சத்தியமும் இல்லை, மாறாக உங்கள் கணவன் அல்லது மனைவி, உங்கள் மகன்கள், மகள்கள், நீங்கள் புசிக்கும் ஆகாரங்கள், அணியும் பொருட்கள் என இவைகளே உள்ளன. நீங்கள் எப்போதுமே மிகப் பெரிய, உயர்ந்த இன்பத்தை எவ்வாறு பெற முடியும் என்றே நினைக்கிறீர்கள். ஆனால் இவ்வாறு உங்கள் வயிற்றை நிரப்பி வெடிக்கச் செய்த பின்னும், நீங்கள் இன்னும் ஒரு சடலமாக இல்லையா? வெளிப்புறமாக, நீங்கள் அழகான ஆடைகளில் உங்களை அலங்கரிக்கும் போது கூட, நீங்கள் இன்னும் ஜீவனற்ற ஒரு நடைப்பிணமாக இல்லையா? உங்கள் தலைமயிர் நரைக்கும் வரை, உங்கள் வயிற்றின் பொருட்டு நீங்கள் உழைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் யாரும் என் கிரியைக்காக ஒரு தலைமயிரையும் தியாகம் செய்வதில்லை. நீங்கள் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சொந்த மாம்சத்திற்காகவும், உங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்காகவும் உங்கள் உடலுக்கு அதிகப் பாடுகளைக் கொடுத்து, உங்கள் மூளையைக் கசக்குகிறீர்கள். ஆனால் இன்னும் உங்களில் ஒருவர் கூட என் சித்தத்தின் மீது எந்தக் கவலையும் அக்கறையும் காட்டவில்லை. என்னிடமிருந்து நீங்கள் இன்னும் எதைப் பெறுவீர்கள் என்று நம்புகிறீர்கள்?

நான் கிரியை செய்யும் போது ஒருபோதும் அவசரப்படுவதில்லை. மனிதர்கள் என்னை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எனது திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு படிநிலைக்கும் ஏற்ப, நான் எனது கிரியையைச் செய்கிறேன். ஆகவே, நீங்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்த போதிலும், நான் இன்னும் இடைவிடாமல் கிரியை செய்துகொண்டு நான் பேச வேண்டிய வார்த்தைகளைத் தொடர்ந்து பேசுகிறேன். என் வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு, நான் முன்குறித்தவர்களை என் வீட்டிற்கு அழைக்கிறேன். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களையும், என் வார்த்தைகளுக்காக ஏங்குகிறவர்களையும், நான் என் சிங்காசனத்தின் முன் கொண்டுவருகிறேன். என் வார்த்தைகளுக்குச் செவிகொடாமல், எனக்குக் கீழ்ப்படியாமல், என்னை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அனைவரையும், அவர்களின் இறுதித் தண்டனைக்காகக் காத்திருக்க ஒருபுறமாக அவர்களை வைக்கிறேன். ஜனங்கள் அனைவரும் சீர்கேட்டுக்கு மத்தியிலும், பொல்லாங்கனின் கரத்தின் கீழும் வாழ்கிறார்கள், எனவே என்னைப் பின்பற்றுபவர்களில் பலரும் சத்தியத்திற்காக ஏங்குவதில்லை. அதாவது, பெரும்பாலானவர்கள் என்னை உண்மையாக ஆராதிப்பதில்லை. அவர்கள் என்னைச் சத்தியத்தோடு ஆராதிப்பதில்லை. ஆனால் சீர்கேடு மற்றும் கலகம் மூலமாகவும், வஞ்சக வழிமுறைகளாலும் என் நம்பிக்கையைப் பெற முயற்சிக்கிறார்கள். இந்தக் காரணத்தினால்தான் நான் சொல்கிறேன்: அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர். அழைக்கப்பட்டவர்கள் ஆழமாக சீர்கெடுக்கப்பட்டிருக்கின்றனர், அனைவரும் ஒரே காலத்தில் வாழ்கின்றனர், ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் அவர்களில் ஒரு பகுதியினர், அவர்கள் சத்தியத்தை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இந்த ஜனங்கள் மொத்தத்தில் மிகச் சிறிய பகுதியினரே. அவர்களிடமிருந்து நான் அதிக மகிமையைப் பெறுவேன். இந்த வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறீர்களா என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் முடிவு எவ்வாறு இருக்கும்?

நான் சொன்னது போல், என்னைப் பின்தொடர்பவர்கள் பலர், ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் சிலரே. ஒருவேளை சிலர், “நான் உம்மை நேசிக்காவிட்டால் நான் இவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்தியிருப்பேனா? நான் உம்மை நேசிக்காவிட்டால் நான் இந்த நிலை வரையிலும் பின்பற்றி வந்திருப்பேனா?” என்று கூறலாம். நிச்சயமாக, உன்னிடம் பல காரணங்கள் உள்ளன, உன் அன்பு, நிச்சயமாக, மிகச் சிறந்தது, ஆனால் என் மீதான உன் அன்பின் சாராம்சம் என்ன? “அன்பு” அது அழைக்கப்படுவது போலவே, தூய்மையான மற்றும் களங்கமில்லாத ஓர் உணர்ச்சியைக் குறிக்கிறது, இங்கு நீங்களோ உங்கள் மனதை நேசிக்கவும், உணரவும், சிந்தனைமிக்கதாய் இருக்கவும் பயன்படுத்துகிறீர்கள். அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, இடைவெளியும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை மற்றும் தூய்மையற்றது எதுவும் இல்லை. நீ நேசித்தால், நீ ஏமாற்றவோ, குறைகூறவோ, துரோகம் செய்யவோ, கலகம் செய்யவோ, பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கவோ, எதையாவது பெற்றிடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறவோ முயலமாட்டாய். நீ நேசித்தால், நீ மகிழ்ச்சியுடன் உன்னை அர்ப்பணிப்பாய், மகிழ்ச்சியுடன் கஷ்டங்களை அனுபவிப்பாய். நீ என்னுடன் ஒத்துப்போவாய், எனக்காக உன்னிடம் உள்ள அனைத்தையும் கைவிடுவாய், உன் குடும்பம், உன் எதிர்காலம், உன் இளமை மற்றும் உன் திருமணம் என அனைத்தையும் கைவிடுவாய். இல்லையென்றால், உன் அன்பு அன்பாகவே இருக்காது, வஞ்சகமும் துரோகமுமாய் இருக்கும்! எத்தகையது உன்னுடைய அன்பு? அது உண்மையான அன்பா? அல்லது பொய்யானதா? நீ எவ்வளவு கைவிட்டிருக்கிறாய்? நீ எவ்வளவு வழங்கியிருக்கிறாய்? உன்னிடமிருந்து நான் எவ்வளவு அன்பைப் பெற்றுள்ளேன்? உனக்குத் தெரியுமா? உங்கள் இருதயங்கள் பொல்லாப்பினாலும், துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு இருப்பதால், உங்கள் அன்பு எவ்வளவு தூய்மையற்றதாயிருக்கிறது? நீங்கள் ஏற்கனவே எனக்காகப் போதுமானதை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். என் மீதான உங்கள் அன்பு ஏற்கனவே போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் ஏன் எப்போதும் கலகத்தனமாகவும் வஞ்சகமாகவும் இருக்கின்றன? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என் வார்த்தையை ஏற்கவில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விலக்கிவைக்கிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் உங்களால் நான் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனாலும் நான் யார் என்பதற்கேற்ப என்னை நடத்துவதில்லை, மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எனக்குக் காரியங்களைக் கடினமாக்குகிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனாலும் நீங்கள் என்னை முட்டாளாக்கி ஒவ்வொரு காரியத்திலும் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் எனக்கு ஊழியம் செய்கிறீர்கள், ஆனால் நீங்கள் எனக்குப் பயப்படுவதில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் எல்லா வகையிலும் எல்லாவற்றிலும் என்னை எதிர்க்கிறீர்கள். இதெல்லாம் அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் அதிகம் அர்ப்பணித்திருக்கிறீர்கள், அது உண்மைதான், ஆனாலும் நான் உங்களிடம் கேட்பதை நீங்கள் ஒருபோதும் கடைபிடிப்பதில்லை. இதை அன்பாகக் கருத முடியுமா? நீங்கள் கவனமாகக் கணக்கிட்டுச் செயல்படுவது எனக்கான அன்பின் சிறிதளவு அடையாளமும் உங்களுக்குள் இல்லை என்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளான என் கிரியைக்குப் பிறகும், நான் வழங்கிய பல வார்த்தைகளுக்குப் பிறகும், நீங்கள் உண்மையில் எவ்வளவு பெற்றுக் கொண்டீர்கள்? கவனமாகத் திரும்பிப் பார்ப்பதற்கு இது தகுதியற்றதா? நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்: நான் என்னிடம் அழைப்பவர்கள் அனைவரும் ஒருபோதும் சீர்கெடுக்கப்படாதவர்கள் அல்ல; மாறாக, நான் தெரிந்துகொள்பவர் அனைவரும் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஆவர். ஆகையால், உங்கள் சொற்களிலும் செயல்களிலும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் உங்கள் நோக்கங்களையும் எண்ணங்களையும் எல்லை மீறாதபடி அவற்றை ஆராய வேண்டும். கடைசி நாட்களில், என் கோபம் உங்களிடமிருந்து விலகி இருக்கும்படிக்கு, எனக்கு முன் உங்கள் அன்பைச் செலுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்!

முந்தைய: கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்

அடுத்த: நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக