இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்

ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகளின் முழுமையானது வெவ்வேறு சகாப்தங்கள் வந்து போனதால் படிப்படியாக மாறியிருக்கிறது. இந்தக் கிரியையின் மாற்றங்கள் உலகின் ஒட்டுமொத்த சூழ்நிலை மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன; நிர்வாகத்திற்கான கிரியை அதற்கேற்ப படிப்படியாக மாறியிருக்கிறது. இவை அனைத்தும் சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட உடனேயே, கிரியையின் முதற்கட்டமான நியாயப்பிரமாணத்தையோ; கிரியையின் இரண்டாம் கட்டமான கிருபையையோ; அல்லது மூன்றாம் கட்டமான ஜெயத்தையோ யேகோவா திட்டமிடவில்லை. முதலில் மோவாபின் சந்ததியினரிடமிருந்து தொடங்கி, அதன் மூலம் முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றுவதே அவரது கிரியையாக இருக்கிறது. உலகை சிருஷ்டித்தபின், அவர் ஒருபோதும் இந்த வார்த்தைகளைப் பேசவில்லை, மோவாபிற்குப் பிறகும் அவர் ஒருபோதும் பேசவில்லை; உண்மையில், லோத்துக்கு முன்புவரை, அவர் அவற்றை ஒருபோதும் உச்சரிக்கவேயில்லை. தேவனின் கிரியைகள் அனைத்தும் தன்னிச்சையாகச் செய்யப்படுகின்றன. இவ்வாறே அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத்தின் கிரியைகள் முழுவதும் வளர்ந்தன; உலகைச் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அத்தகைய திட்டத்தை “மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சுருக்க விளக்கப்படம்,” என்ற வடிவத்தில் அவர் எழுதியிருக்கவில்லை. தேவனின் கிரியையில் இருப்பதை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார்; ஒரு திட்டத்தை வகுக்க அவர் தனது மூளையைக் கசக்குவதில்லை. நிச்சயமாக, சில தீர்க்கதரிசிகள் ஏராளமான தீர்க்கதரிசனங்களைக் கூறியிருக்கிறார்கள், ஆனால் தேவனின் கிரியை எப்போதுமே துல்லியமான திட்டமிடலில் ஒன்றாகும் என்று சொல்லிவிட முடியாது; அந்த தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தேவனின் கிரியைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. அவர் செய்யும் அனைத்து கிரியைகளும் மிகவும் உண்மையான கிரியைகளே. ஒவ்வொரு யுகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ப அதை அவர் செயல்படுத்துகிறார், மேலும் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, கிரியை செய்வது என்பது ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்தை வழங்குவதற்கு ஒத்ததாகும்; அவர் தன் கிரியையைச் செய்யும்போது, அவர் அவதானிக்கிறார், அவருடைய அவதானிப்புகளின்படி அவருடைய கிரியையைத் தொடர்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன் தம்முடைய ஏராளமான ஞானத்தையும் திறனையும் வெளிப்படுத்த வல்லவர்; எந்தவொரு குறிப்பிட்ட யுகத்தின் கிரியைக்கு ஏற்பவும் அவர் தனது ஏராளமான ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறார், மேலும் அந்த யுகத்தில் அவரால் திரும்பக் கொண்டுவரப்பட்ட ஜனங்கள் அனைவரையும் தன் முழு மனநிலையைக் காண அனுமதிக்கிறார். ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்ப, செய்ய வேண்டிய எந்தக் கிரியையையும் செய்து, அவர் ஜனங்களுக்கான தேவைகளை வழங்குகிறார். சாத்தான் எந்த அளவிற்கு அவர்களைச் சீரழித்தான் என்பதன் அடிப்படையில் ஜனங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகிறார். இதுபோலவே, யேகோவா ஆரம்பத்தில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, பூமியில் தேவனை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காகவும், சிருஷ்டிப்பின் மத்தியில் அவர்கள் தேவனுக்குச் சாட்சிக் கொடுக்கவும் அவர் அதைச் செய்தார். ஆயினும், சர்ப்பத்தால் சோதிக்கப்பட்டபின் ஏவாள் பாவமிழைத்தாள், ஆதாமும் அவ்வாறே செய்தான்; தோட்டத்தில், அவர்கள் இருவரும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதலால், அவர்கள் மீது செயல்பட யேகோவாவுக்கு கூடுதல் கிரியை இருந்தது. அவர்களின் நிர்வாணத்தைக் கண்ட அவர், அவர்களின் சரீரங்களை மிருகத்தின் தோலால் ஆன ஆடைகளைக் கொண்டு மூடினார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் … நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” என்றார். அப்போதிலிருந்து, நவீனகால மனுஷன் இப்போது பூமியில் ஜீவித்திருப்பதைப் போலவே, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, அதற்கு வெளியே ஜீவித்திருக்கும்படி செய்தார். தேவன் மனுஷனை ஆதியிலே சிருஷ்டித்தபோது, மனுஷனை சர்ப்பத்தால் சோதிக்க அனுமதிப்பதும், பின்னர் மனுஷனையும் சர்ப்பத்தையும் சபிப்பதும் அவருடைய திட்டமாக இருக்கவில்லை. அவர் உண்மையில் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை; சம்பவங்கள் உருவான விதம்தான் அவரது சிருஷ்டிப்புகளில் புதிய கிரியைகளைச் செய்ய வைத்தது. யேகோவா பூமியில் ஆதாம் மற்றும் ஏவாள் மத்தியில் இந்தக் கிரியையைச் செய்தபின், “பூமியில் மனுஷனின் அக்கிரமம் பெருகினது என்பதையும், அவனது இருதயத்தின் எண்ணங்களின் ஒவ்வொரு கற்பனையும் தொடர்ந்து தீமையாக மட்டுமே இருந்ததையும் யேகோவா கண்டார். பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக யேகோவா மனம் வருந்தினார், அது அவருடைய இருதயத்திற்கு விசனமாயிருந்தது. … ஆனால் நோவா, கர்த்தரின் பார்வையில் கிருபையைப் பெற்றான்.” இது வரை மனிதகுலம் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் யேகோவாவுக்கு இன்னும் பல புதிய கிரியைகள் இருந்தன, ஏனென்றால் அவர் படைத்த மனிதகுலம் சர்ப்பத்தால் சோதிக்கப்பட்ட பின்னர் மிகவும் பாவம்கொண்டதாக வளர்ந்திருந்தது. இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், மனிதகுலம் அனைத்திலும், நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் என்று யேகோவா தேர்ந்தெடுத்தார், அதன் பின்னர் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழிக்கும் கிரியையை அவர் மேற்கொண்டார். இவ்வாறே இன்றுவரை மனிதகுலம் தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது, பெருகிய முறையில் சீரழிவு வளர்ந்து வந்திருக்கிறது, மேலும் மனுஷனின் வளர்ச்சியானது அதன் உச்சத்தை அடையும் நேரம் வரும்போது, அது மனிதகுலத்தின் முடிவாகப் பொருள்கொள்ளப்பட வேண்டும். உலகத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, அவருடைய கிரியையின் உள்ளார்ந்த உண்மை எப்போதுமே இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, எப்போதும் இவ்வாறுதான் இருக்கும். இது, ஜனங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள் என்பது போன்றது; ஒவ்வொரு நபரும் ஆரம்பத்திலேயே ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்படும் நிகழ்வுக்கும் இதற்கும் வெகுதூர இடைவெளி உண்டு; மாறாக, வளர்ச்சிக்கான செயல்முறைக்கு உட்பட்ட பின்னரே அனைவரும் படிப்படியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். முடிவில், முழுமையான இரட்சிப்பைக் கொண்டுவர முடியாத எவரும் தங்கள் “மூதாதையர்களிடம்” திரும்பிச் செல்வார்கள். உலகம் சிருஷ்டிக்கப்படும் போதே மனிதகுலத்தின் மத்தியில் எவ்வித கிரியையும் தேவனால் ஆயத்தப்படுத்தப்படவில்லை; மாறாக, மனிதகுலத்தின் மத்தியில் படிப்படியாக, மிகவும் யதார்த்தமாக, நடைமுறைரீதியாக தேவன் தனது கிரியையைச் செய்ய அனுமதித்த விஷயங்களின் வளர்ச்சியே இது. உதாரணமாக, யேகோவா தேவன் அந்த ஸ்திரீயைத் தூண்டுவதற்காக சர்ப்பத்தைப் படைக்கவில்லை; அது அவருடைய குறிப்பிட்ட திட்டமாக இருக்கவில்லை, அதை அவர் வேண்டுமென்றே முன்னரே தீர்மானிக்கவும் இல்லை. இது ஓர் எதிர்பாராத நிகழ்வு என்றும் கூறலாம். ஆகவே, இதன் காரணமாகவே யேகோவா ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, மீண்டும் ஒருபோதும் மனுஷனை உருவாக்க மாட்டேன் என்று ஆணையிட்டார். இருப்பினும், இந்த அஸ்திபாரத்தின் மீது மட்டுமே ஜனங்கள் தேவனின் ஞானத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். நான் முன்பு கூறியது போலவே: “சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு நான் என் ஞானத்தைப் பயன்படுத்துகிறேன்.” சீர்கெட்ட மனிதகுலம் எப்படியாக வளர்ந்தாலும் அல்லது சர்ப்பம் அவர்களை எப்படித் தூண்டினாலும், யேகோவாவிடம் அவருடைய ஞானம் எப்போதும் இருக்கிறது; அவர் உலகை சிருஷ்டித்ததிலிருந்தே புதிய கிரியைகளில் ஈடுபட்டு வருகிறார், இந்தக் கிரியையின் படிகள் எதுவும் திரும்பச் செய்யப்படுவதில்லை. சாத்தான் தொடர்ச்சியாகச் சதிகளை செயல்படுத்தி வருகிறான், மனிதகுலம் தொடர்ந்து சாத்தானால் சீர்கெட்டுப்போகிறது, மேலும் யேகோவா தேவன் தம்முடைய ஞானமான கிரியையை இடைவிடாமல் செய்துவருகிறார். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர் ஒருபோதும் தோல்வியடையவும் இல்லை, கிரியை செய்வதையும் நிறுத்தவில்லை. மனுஷர் சாத்தானால் சீர்கெட்டப் பிறகு, அவர்களுடையச் சீர்கேட்டுக்கு ஆதாரமாய் இருக்கும் எதிரியைத் தோற்கடிக்க அவர் அவர்களிடையே தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். இந்த யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே உக்கிரமாக இருந்துவருகிறது, இது உலகின் இறுதி வரை தொடரும். இந்தக் கிரியையைச் செய்வதில், யேகோவா தேவன் சாத்தானால் சீர்கெட்ட மனுஷர்களை அவரது பெரிய இரட்சிப்பைப் பெற அனுமதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஞானத்தையும், சர்வ வல்லமையையும், அதிகாரத்தையும் காண அனுமதிக்கிறார். மேலும், இறுதியில், அவர் துன்மார்க்கரைத் தண்டிப்பதும் நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பதும் ஆகிய தம்முடைய நீதியுள்ள மனநிலையை பார்க்க அனுமதிப்பார். அவர் இன்றுவரை சாத்தானுடன் போரிட்டு வருகிறார், ஒருபோதும் தோற்கடிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு ஞானமுள்ள தேவன், மேலும் சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்துகிறார். ஆகையால், தேவன் பரலோகத்தில் உள்ள அனைத்தையும் தம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வது மட்டுமல்லாமல், பூமியிலுள்ள அனைத்தையும் அவருடைய பாதப்படிக்குக் கீழே வைத்திருக்கிறார், மேலும், மனிதகுலத்தை ஆக்கிரமித்து துன்புறுத்தும் துன்மார்க்கரை அவர் சிட்சைக்குள்ளாக்குகிறார். அவருடைய—ஞானத்தின் காரணமாகவே இந்தக் கிரியைகளின் முடிவுகள் அனைத்தும் கொண்டு வரப்படுகின்றன. மனிதகுலத்தின் இருப்புக்கு முன்னர் அவர் ஒருபோதும் தனது ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை, ஏனென்றால் அவருக்கு பரலோகத்திலோ, பூமியிலோ, அல்லது முழு பிரபஞ்சத்திலோ எங்கும் எதிரிகள் இல்லை, மேலும் இயற்கையின் இடையே எதையும் ஆக்கிரமிக்கும் அந்தகாரச் சக்திகள் இல்லை. பிரதான தூதன் அவருக்குத் துரோகம் செய்த பிறகு, அவர் பூமியில் மனிதகுலத்தை படைத்தார், மனிதகுலத்தினால்தான் அவர் பிரதான தூதனாகிய சாத்தானுடனான தனது ஆயிரம் ஆண்டுகால நீண்ட யுத்தத்தை முறையாகத் தொடங்கினார், இந்தப் போர் ஒவ்வொரு தொடர்ச்சியான கட்டத்திலும் உக்கிரமடைகிறது. இந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய சர்வவல்லமையும் ஞானமும் இருக்கிறது. அப்போதுதான் பரலோகத்திலும் பூமியிலும் உள்ள சகலமும் தேவனின் ஞானம், சர்வவல்லமை மற்றும் குறிப்பாக தேவனின் மெய்மை ஆகியவற்றைக் கண்டன. அவர் இன்றுவரை தனது கிரியையை இதே யதார்த்தமான முறையில் செய்துவருகிறார்; கூடுதலாக, அவர் தனது கிரியையைச் செயல்படுத்தும்போது, அவர் தனது ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு கட்ட கிரியையின் ஆழ்ந்த உண்மையைப் பார்க்கவும், தேவனின் சர்வவல்லமையை எவ்வாறு விளக்குவது என்பதைக் காணவும், மேலும், தேவனின் மெய்மையைப் பற்றிய உறுதியான விளக்கத்தைக் காணவும் அவர் உங்களை அனுமதிக்கிறார்.

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது குறித்து, சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்: இது உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்படவில்லையா? உண்மையில், பரிசுத்த ஆவியானவர் இந்தத் திட்டங்களை அக்காலத்தின் யதார்த்தத்தின் அடிப்படையில் உருவாக்கினார். யூதாஸ் என்ற பெயரில் ஒருவன் எப்போதும் நிதி கையாடல் செய்து கொண்டிருந்தான், எனவே இவன் இந்தப் பாத்திரத்தை வகிக்கவும், இவ்வழியில் ஊழியத்தில் ஈடுபடவும் தேர்ந்தெடுக்கப்பட்டான். நம்மிடம் இருக்கும் வளங்களையே பயன்படுத்துவதற்கு இது ஓர் உண்மையான எடுத்துக்காட்டாக இருக்கிறது. முதலில் இதை இயேசு அறிந்திருக்கவில்லை; யூதாஸ் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரே அவர் அதைப் பற்றி அறிந்து கொண்டார். வேறு யாராவது இந்தப் பாத்திரத்தை வகிக்க முடிந்திருந்தால், அந்த நபர் யூதாஸுக்கு பதிலாக அதைச் செய்திருப்பார். முன்னரே முன்குறிக்கப்பட்டவை, உண்மையில், பரிசுத்த ஆவியானவர் அந்தத் தருணத்தில் செய்த ஒன்று தான். பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது; அவரால் எந்த நேரத்திலும் தனது கிரியையைத் திட்டமிட முடியும், எந்த நேரத்திலும் அதைச் செயல்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியானவரின் பணி மெய்மையானது என்றும், அது எப்போதும் புதியது என்றும், ஒருபோதும் பழையது அல்ல என்றும், எப்போதும் மிக உயர்ந்த அளவிற்கு புதியது என்றும் நான் ஏன் எப்போதும் சொல்கிறேன்? உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவருடைய கிரியை முன்பே திட்டமிடப்படவில்லை; நடந்தது அதுவல்ல! கிரியையின் ஒவ்வொரு படியும் அந்தந்த நேரத்திற்கு அதன் சரியான முடிவை அடைகிறது, மேலும் அந்தப் படிகள் ஒன்றோடொன்று தலையிடுவதும் இல்லை. அநேக நேரங்களில், நீ மனதில் வைத்திருக்கக்கூடிய திட்டங்கள் பரிசுத்த ஆவியானவரின் சமீபத்திய கிரியைகளுக்கு ஒப்பாகாது. அவரது கிரியை மனுஷனின் பகுத்தறிவு போன்று எளிமையானதும் அல்ல, மனுஷக் கற்பனையைப் போன்று சிக்கலானதும் அல்ல—இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜனங்களுக்கு அவர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதை உள்ளடக்கியது. அவரை விட மனுஷனின் சாராம்சத்தைப் பற்றி யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை, மேலும் சரியாக இந்தக் காரணத்திற்காகவே ஜனங்களின் யதார்த்தமான தேவைகளுக்கும், அவருடைய கிரியைகளுக்கும் வேறேதும் பொருந்துவதில்லை. எனவே, மனுஷனின் கண்ணோட்டத்தில், அவருடைய கிரியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இப்போது உங்களிடையே கிரியை செய்கையில், நீங்கள் இருக்கும் நிலைகளை அவர் கவனித்துக் கொண்டே கிரியை செய்யும்போதும் மற்றும் பேசும் போதும்—ஒவ்வொரு விதமான நிலையையும் எதிர்கொண்டு பேச அவரிடம் சரியான வார்த்தைகள் உள்ளன—ஜனங்களுக்குத் தேவையானதை மட்டுமே பேசுகிறார். அவருடைய கிரியையின் முதல் படியை எடுத்துக் கொள்ளுங்கள்: சிட்சிக்கும் நேரம். அதன் பிறகு, ஜனங்கள் எல்லா விதமான நடத்தைகளையும் வெளிப்படுத்தினர், மேலும் சில வழிகளில் கலகத்தனமாகவும் நடந்து கொண்டனர்; சில எதிர்மறை நிலைகளைப் போலவே பல்வேறு நேர்மறை நிலைகளும் தோன்றின. அவர்கள் தங்களையே வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் எதிர்மறையான நிலைகளையும், மிகவும் இழிவான வரம்பையும் அடைந்தனர். இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தேவன் தம்முடைய கிரியையை நடத்தியுள்ளார், இதனால் அவருடைய கிரியை மூலம் மிகச் சிறந்த முடிவை அடைய அவர்களைக் கைப்பற்றுகிறார். அதாவது, எந்த நேரத்திலும் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர் ஜனங்களிடையே நிலையான கிரியையைச் செய்கிறார்; ஜனங்களின் உண்மையான நிலைகளுக்கு ஏற்ப அவர் தனது கிரியையின் ஒவ்வொரு படியையும் செயல்படுத்துகிறார். சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் அவருடைய கைகளில் உள்ளன; அவர் அவர்களை எப்படி அறியாமல் போவார்? ஜனங்களின் நிலைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எங்கும் செய்யப்பட வேண்டிய அடுத்தக் கட்ட கிரியைகளை தேவன் செய்கிறார். எந்த வகையிலும் இந்தக் கிரியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்படவில்லை; அது மனுஷனின் கருத்து! அவர் தனது கிரியையின் முடிவுகளை அவதானித்துக் கொண்டே கிரியை செய்கிறார், மேலும் அவருடைய கிரியை தொடர்ந்து ஆழமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஒவ்வொரு முறையும், அவருடைய கிரியையின் முடிவுகளை அவதானித்தபின், அவர் தனது கிரியையின் அடுத்தப் படியை செயல்படுத்துகிறார். அவர் படிப்படியாக மாறுவதற்கும் காலப்போக்கில் தனது புதிய படைப்பை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் சகலத்தையும் பயன்படுத்துகிறார். இந்த விதமான கிரியையால் ஜனங்களுக்கான தேவைகளை வழங்க முடியும், ஏனென்றால் தேவன் ஜனங்களை நன்கு அறிவார். இப்படியாகவே அவர் தனது கிரியையைப் பரலோகத்திலிருந்து செயல்படுத்துகிறார். அதேபோல், தேவனின் மனுஷ அவதாரமும் அவருடைய கிரியையை அதே வழியில் செய்கிறது, உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகளைச் செய்து ஜனங்களிடையே கிரியை செய்கிறது. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய சிருஷ்டிப்புகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை, கவனமாக முன்பே திட்டமிடப்படவும் இல்லை. உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், மனுஷகுலம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை யெகோவா கண்டார், அதனால் அவர் ஏசாயா தீர்க்கதரிசியின் வாயைப் பயன்படுத்தி, நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிந்தபின், கிருபையின் யுகத்தில் மனுஷகுலத்தை மீட்பதற்கான தனது கிரியையைச் செய்வார் என்று யெகோவா முன்னறிவித்தார். இது யெகோவாவின் திட்டமாகும், ஆனால் அந்த நேரத்தில் அவர் அவதானித்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது; ஆதாமைச் சிருஷ்டித்த உடனேயே அவர் நிச்சயமாக அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஏசாயா வெறுமனே ஒரு தீர்க்கதரிசனத்திற்கு குரல் கொடுத்தார், ஆனால் யெகோவா நியாயப்பிரமாண யுகத்தில் இந்தக் கிரியைக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை; மாறாக, கிருபையின் யுகத்தின் ஆரம்பத்தில் அவர் அதைச் செயல்படுத்தினார்; யோசேப்பின் கனவில் தூதர் தோன்றி, தேவன் மாம்சமாகுவார் என்ற செய்தியை அவருக்குத் தெளிவூட்டினார், அப்போதுதான் அவருடைய மனுஷ அவதாரக் கிரியை தொடங்கியது. ஜனங்கள் கற்பனை செய்தபடி, உலகத்தைச் சிருஷ்டித்த உடனேயே மனுஷ அவதாரம் எடுப்பதற்கு தேவன் தயாராக இருக்கவில்லை; மனுஷகுலம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது மற்றும் சாத்தானுக்கு எதிரான அவரது போரின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்கப்பட்டது.

தேவன் மாம்சமாக மாறும்போது, அவருடைய ஆவி ஒரு மனுஷனின் மீது இறங்குகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் ஆவி தன்னை ஒரு சரீரத்தால் அலங்கரிக்கிறது. சில வரையறுக்கப்பட்ட படிகளைத் தன்னுடன் கொண்டு வரக்கூடாது என்பதற்காக அவர் பூமியில் தனது கிரியையைச் செய்ய வருகிறார்; அவரது கிரியை முற்றிலும் வரம்பற்றது. பரிசுத்த ஆவியானவர் மாம்சத்தில் மேற்கொள்ளும் கிரியையானது அவரது கிரியையின் முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அவர் மாம்சத்தில் எவ்வளவு காலத்திற்குக் கிரியை செய்வார் என்பதை தீர்மானிக்க இதுபோன்றவற்றைப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தன் கிரியையின் ஒவ்வொரு படியையும் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அவர் முன்னேறிச் செல்லச் செல்லத் தன் கிரியையை ஆராய்கிறார்; இந்தக் கிரியை மனுஷக் கற்பனையின் வரம்புகளை நீட்டிக்கும் அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. இது வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டிப்பதில் யேகோவாவின் கிரியை போன்றது; அவர் ஒரே நேரத்தில் திட்டமிட்டு பணியாற்றினார். அவர் அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்தைப் பிரித்தார், காலையும் மாலையும் உருவானது—இதற்கு ஒரு நாள் பிடித்தது. இரண்டாவது நாளில், அவர் வானத்தைச் சிருஷ்டித்தார், அதுவும் ஒரு நாள் எடுத்தது; பின்னர் அவர் பூமி, சமுத்திரங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் அனைத்து ஜீவஜந்துக்களையும் சிருஷ்டித்தார், அதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது. ஆறாம் நாள் வரை இது தொடர்ந்தது, தேவன் மனுஷனைச் சிருஷ்டித்து பூமியில் உள்ள அனைத்தையும் நிர்வகிக்க அனுமதித்தார். பின்னர், ஏழாம் நாளில், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்ததும், அவர் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை ஒரு புனித நாளாக நியமித்தார். இந்தப் புனித நாளை அவர் மற்ற அனைத்தையும் சிருஷ்டித்தப் பிறகுதான் நிறுவ முடிவு செய்திருந்தார், அவற்றை உருவாக்குவதற்கு முன்பு அல்ல. இந்தக் கிரியையும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது; சகலத்தையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அவர் ஆறு நாட்களில் உலகையும், ஏழாம் நாளில் ஓய்வையும் சிருஷ்டிக்க முடிவு செய்திருக்கவில்லை; அது உண்மைகளுக்கு ஏற்ப இல்லை. அவர் அப்படி ஒரு விஷயத்திற்குக் குரல் கொடுக்கவும் இல்லை, அதைத் திட்டமிடவும் இல்லை. சகலத்தையும் சிருஷ்டிப்பது ஆறாம் நாளில் நிறைவடையும் என்றும் ஏழாம் நாள் ஓய்வெடுப்பார் என்றும் அவர் சொல்லவில்லை; மாறாக, அந்த நேரத்தில் அவருக்கு நல்லதாகத் தோன்றியதைப் பொறுத்து அவர் சிருஷ்டித்தார். அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்ததும், அது ஏற்கனவே ஆறாவது நாளாக இருந்தது. அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தது ஐந்தாவது நாளாக இருந்திருந்தால், அவர் ஆறாவது நாளை ஒரு புனித நாளாக நியமித்திருப்பார். ஆனால், அவர் ஆறாவது நாளில்தான் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தார், இதனால் ஏழாம் நாள் ஒரு புனித நாளாக மாறியது, தற்போதுவரை இந்நாளே அப்படியாக இருந்து வருகிறது. ஆதலால், அவரது தற்போதைய பணிகள் இதே முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் தேவைகளுக்கு அவர் பேசவும், வழங்கவும் செய்கிறார். அதாவது, ஆவியானவர் ஜனங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேசுகிறார், செயல்படுகிறார்; அவர் சகலத்தையும் கண்காணித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கிரியை செய்கிறார். நான் செய்வது, சொல்வது, உங்கள் மீது வைப்பது, உங்களுக்கு வழங்குவது, இவை அனைத்தும் விதிவிலக்கு இல்லாமல், உங்களுக்கு தேவையானது மட்டுமே ஆகும். ஆகவே, எனது கிரியை எதுவும் யதார்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டதல்ல; அவை அனைத்தும் உண்மையானது தான், ஏனென்றால் “தேவனின் ஆவி அனைவரையும் கண்காணிக்கிறது,” என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவை அனைத்தும் காலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தால், இவை மிகவும் துல்லியமாக இருந்திருக்காதா? ஆறாயிரம் ஆண்டுகள் முழுமைக்குமான திட்டங்களை தேவன் வகுத்ததாகவும், பின்னர் மனுஷகுலத்தைக் கலகக்காரர்களாக, எதிர்ப்பவர்களாக, வக்கிரமும் வஞ்சகமும் கொண்டவர்களாக, மாம்சத்தின் சீர்கேட்டினைக் கொண்டவர்களாக, சாத்தானின் மனநிலையைக் கொண்டவர்களாக, கண்களில் ஆசை கொண்டவர்களாக மற்றும் தனிப்பட்ட இன்பங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர் முன்னரே முன்குறிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் நினைப்பது போலாகும். இவை எதுவும் தேவனால் முன்னரே முன்குறிக்கப்படவில்லை, மாறாகச் சாத்தானின் சீர்கேட்டின் முடிவாகவே இவை அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. “சாத்தானும் தேவனின் பிடியில் இருந்திருக்கவில்லையா? சாத்தான் இவ்விதத்தில் மனுஷனைச் சீரழிப்பான் என்று தேவன் முன்னரே தீர்மானித்திருந்தார், அதன் பிறகு, தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே செயல்படுத்தினார்,” என்று சிலர் பேசுவர். மனுஷகுலத்தைச் சீரழிக்க தேவன் உண்மையிலேயே சாத்தானை முன்குறித்திருப்பாரா? மனுஷகுலத்தை இயல்பாக வாழ அனுமதிக்கவே தேவன் மிகவும் ஆர்வமாக உள்ளார், எனவே அவர் உண்மையில் அவர்களது ஜீவிதங்களில் தலையிடுவாரா? அப்படியானால், சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலத்தை இரட்சிப்பது ஒரு பயனுள்ள முயற்சியாக இருந்திருக்காதா? மனுஷகுலத்தின் கலகத்தன்மை எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? அது சாத்தானின் குறுக்கீட்டால் நிகழ்ந்த ஒன்று, எனவே அதை தேவனால் எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? நீங்கள் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தான், நான் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தானிடமிருந்து மிகவும் வித்தியாசமானவன். “தேவன், சர்வவல்லவர். சாத்தான் அவரது கைகளுக்குள் இருக்கிறான்,” என்ற உங்களது கூற்றுகளின்படி பார்த்தால், சாத்தானால் ஒருபோதும் அவருக்குத் துரோகமிழைத்திருக்க முடியாது. தேவன் சர்வவல்லமை கொண்டவர் என்று நீங்கள் சொல்லவில்லையா? உங்கள் அறிவு மிகவும் சிறியதாக இருக்கிறது, மேலும் அது மெய்மையுடன் தொடர்பில் இல்லை; மனுஷனால் ஒருபோதும் தேவனின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியாது, மனுஷனால் ஒருபோதும் அவருடைய ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியாது! தேவன் சர்வவல்லமை உள்ளவர்; இது ஒரு பொய்யே அல்ல. பிரதான தூதன் தேவனுக்கு துரோகமிழைத்தான், ஏனென்றால் தேவன் ஆரம்பத்தில் அவனுக்கு அதிகாரத்தின் ஒரு பங்கைக் கொடுத்திருந்தார். நிச்சயமாக, ஏவாள் சர்ப்பத்தின் சோதனையில் வீழ்ந்ததைப் போல இதுவும் ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இருப்பினும், சாத்தான் தனது துரோகத்தை எப்படி நிகழ்த்தினாலும், அவனால் இன்னும் தேவனைப் போல சர்வவல்லமை கொள்ள முடியவில்லை. நீங்கள் கூறியது போல், சாத்தான் வெறும் வலிமைமிக்கவன்தான்; அவன் என்ன செய்தாலும், தேவனின் அதிகாரம் எப்போதும் அவனைத் தோற்கடிக்கும். “தேவன் சர்வவல்லமையுள்ளவர், சாத்தான் அவருடைய கைகளுக்குள் இருக்கிறான்,” என்ற கூற்றின் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் இதுதான். எனவே, சாத்தானுடனான போர் ஒரு நேரத்தில் ஓர் அடியெடுத்து வைப்பதாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், சாத்தானின் தந்திரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே தேவன் தனது கிரியையைத் திட்டமிடுகிறார்—அதாவது, அவர் மனுஷகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்து, காலத்திற்கு ஏற்றவாறு அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார். அதேபோல், கடைசி நாட்களுக்கான கிரியை ஆரம்ப காலத்திலேயே, கிருபையின் யுகத்திற்கு முன்பே முன்குறிக்கப்படவில்லை; பின்வருவனவற்றை போல முன்குறித்தல்கள் ஒழுங்கான முறையில் செய்யப்படவில்லை: முதலாவதாக, மனுஷனின் வெளிப்புற மனநிலையை மாற்றுதல்; இரண்டாவதாக, மனுஷனை அவனுக்கான சிட்சைக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்துதல்; மூன்றாவதாக, மனுஷன் மரண விசாரணைக்கு உட்படுத்தப்படுதல்; நான்காவதாக, மனுஷன் தேவனை நேசிக்கும் நேரத்தை அனுபவிக்க வைத்தல் மற்றும் அவனை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தீர்மானத்தை வெளிப்படுத்த வைத்தல்; ஐந்தாவது, தேவனின் விருப்பத்தைக் காணவும் அவரை முழுமையாக அறிந்து கொள்ளவும் மனுஷனை அனுமதித்தல், இறுதியாக மனுஷனை பரிபூரணப்படுத்துதல். அவர் கிருபை யுகத்தில் இவை அனைத்தையும் திட்டமிடவில்லை; மாறாக, அவர் தற்போதைய காலத்தில் அவற்றைத் திட்டமிடத் தொடங்கினார். தேவனைப் போலவே சாத்தானும் தன் கிரியையைச் செய்கிறான். சாத்தான் அவனது சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறான், அதேசமயம் தேவன் நேரடியாகப் பேசி, சில இன்றியமையாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை, மேலும், உலகத்தைச் சிருஷ்டித்த பின்னர், நீண்ட காலத்திற்கு முன்பே இதேபோன்று செயல்படும் கிரியைதான் பயன்படுத்தப்பட்டது.

தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், பின்னர் அவர் ஒரு சர்ப்பத்தையும் படைத்தார். எல்லாவற்றைக் காட்டிலும், இந்த சர்ப்பம் மிகுந்த விஷம் கொண்டதாக இருந்தது; அதன் சரீரத்தில் விஷம் இருந்தது, சாத்தான் அதைப் பயன்படுத்திக் கொண்டான். சர்ப்பமே ஏவாளை பாவம் செய்ய தூண்டியது. ஏவாள் பாவம் செய்தபின் ஆதாம் பாவம் செய்தான், பின்னர் அவர்கள் இருவராலும் நன்மை தீமைகளை வேறுபடுத்தி அறிய முடிந்தது. சர்ப்பம் ஏவாளைச் சோதிக்கும் என்றும் ஏவாள் ஆதாமைச் சோதிப்பாள் என்றும் யேகோவா அறிந்திருந்தால், அவர் ஏன் அனைவரையும் ஒரு தோட்டத்திற்குள் வைத்திருந்தார்? இந்த விஷயங்களை அவரால் கணிக்க முடிந்திருந்தால், அவர் ஏன் ஒரு சர்ப்பத்தைச் சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்திற்குள் வைத்தார்? நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஏதேன் தோட்டம் ஏன் கொண்டிருந்தது? அவர்கள் அந்தக் கனியை புசிக்க வேண்டும் என்பதற்காகவா? யேகோவா வந்தபோது, ஆதாமோ ஏவாளோ அவரை எதிர்கொள்ளத் துணியவில்லை, அப்போதுதான், அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசித்து, சர்ப்பத்தின் தந்திரத்திற்கு இரையாகிவிட்டார்கள் என்பதை யேகோவா அறிந்தார். இறுதியில், அவர் சர்ப்பத்தைச் சபித்தார், ஆதாமையும் ஏவாளையும் கூட சபித்தார். அவர்கள் இருவரும் அந்த விருட்சத்தின் கனியைப் புசித்தபோது, அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதை யேகோவா அறிந்திருக்கவில்லை. தீமை கொண்டவர்களாகவும் மற்றும் பாலியல் ரீதியாக ஒழுங்கற்ற நிலையைக் கொண்டவர்களாகவும் மனிதகுலம் சீர்கெட்டுப்போனது, அவர்கள் இருதயத்தில் அடைத்து வைத்திருந்த அனைத்தும் தீயவையாகவும், அநீதியானவையாகவும் மாறிப்போனது; அவை அனைத்தும் அசுத்தமானவை. ஆகவே மனிதகுலத்தைச் சிருஷ்டித்ததற்காக யேகோவா வருந்தினார். அதன்பிறகு, நோவாவும் அவனுடைய குமாரரும் தப்பிப்பிழைத்த ஒரு ஜலப்பிரளயத்தால் உலகை அழிக்கும் தன் கிரியையை அவர் மேற்கொண்டார். சில விஷயங்கள் உண்மையில் ஜனங்கள் நினைக்கும் அளவுக்கு மேம்பட்டதாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகவும் இருப்பதில்லை. சிலர், “பிரதான தூதன் தனக்கு துரோகமிழைப்பான் என்று தேவன் அறிந்திருந்ததால், அவர் எதற்காக அவனை சிருஷ்டித்தார்?” என்று கேட்கிறார்கள். இவை தான் உண்மைகள்: பூமி சிருஷ்டிக்கப்படும் முன், பிரதான தூதனே பரலோகத்தின் தேவதூதர்களில் மிகப் பெரியவனாக இருந்தான். பரலோகத்திலுள்ள எல்லா தேவதூதர்கள் மீதும் அவன் அதிகாரம் கொண்டிருந்தான்; இதுவே தேவன் கொடுத்த அதிகாரம். தேவனுக்கு அடுத்து, இவனே பரலோக தேவதூதர்களில் மிகப் பெரியவன். பின்னர், தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்த பிறகு, பூமியில் பிரதான தூதன் தேவனுக்கு எதிராக இன்னும் பெரிய துரோகத்தை நிகழ்த்தினான். அவன் மனிதகுலத்தை நிர்வகிக்கவும் தேவனின் அதிகாரத்தை மிஞ்சவும் விரும்பியதால், அவன் தேவனுக்குத் துரோகமிழைத்தான் என்று நான் சொல்கிறேன். ஏவாளை பாவம் செய்யத் தூண்டியது பிரதான தூதனே, மேலும் அவன் அவ்வாறு செய்ததற்குக் காரணம், அவன் பூமியில் தன் ராஜ்யத்தை நிலைநாட்டவும், மனுஷர் தேவனுக்குப் புறம்பாகத் திரும்பி, அதற்குப் பதிலாகப் பிரதான தூதனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்பினான் என்பதே ஆகும். தேவதூதர்கள் மற்றும் பூமியிலுள்ள ஜனங்கள் உட்பட சகலமும் தனக்குக் கீழ்படியும் என்று பிரதான தூதன் அறிந்துகொண்டான். பறவைகள் மற்றும் மிருகங்கள், விருட்சங்கள், காடுகள், மலைகள், ஆறுகள் மற்றும் மனுஷரின் பராமரிப்பில் இருக்கும் சகலமும்—அதாவது ஆதாமும், ஏவாளும்—அதேநேரத்தில் ஆதாமும் ஏவாளும் பிரதான தூதனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆகவே, பிரதானத் தூதன் தேவனின் அதிகாரத்தை மீறி தேவனுக்குத் துரோகமிழைக்க விரும்பினான். அதன்பிறகு, அவன் பல தேவதூதர்களை தேவனுக்கு எதிரான கலகத்திற்கு வழிநடத்தினான், பின்னர் அவர்கள் பல்வேறு வகையான அசுத்த ஆவிகளாக மாறிப்போயினர். இன்றுவரை மனிதகுலத்தின் வளர்ச்சி பிரதான தூதனின் சீர்கேட்டால் ஏற்பட்டவை, இல்லையா? பிரதான தூதன் தேவனுக்குத் துரோகமிழைத்ததாலும், மனிதகுலத்தைச் சீரழித்ததாலும்தான் மனுஷர் இன்று இந்நிலையில் இருக்கிறார்கள். ஜனங்கள் கற்பனை செய்யக்கூடிய அளவிற்குச் சுருக்கமாகவும் எளிமையாகவும் இந்தப் படிப்படியான கிரியைகள் ஒருபோதும் இருக்கவில்லை. சாத்தான் ஒரு காரணத்திற்காகத் தனது துரோகத்தை மேற்கொண்டான், ஆனாலும் இதுபோன்ற ஓர் எளிய உண்மையை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்த தேவன் எதற்காகச் சாத்தானையும் சிருஷ்டித்தார்? தேவன் சாத்தானை மிகவும் வெறுக்கிறார், மேலும் சாத்தான் அவருடைய எதிரியும் கூட, இருப்பினும் அவர் ஏன் சாத்தானைச் சிருஷ்டித்தார்? சாத்தானைச் சிருஷ்டிப்பதன் மூலம், அவர் ஓர் எதிரியைச் சிருஷ்டிக்கவில்லையா? தேவன் உண்மையில் ஓர் எதிரியைச் சிருஷ்டிக்கவில்லை; மாறாக, அவர் ஒரு தேவதூதனைச் சிருஷ்டித்தார், பின்னர் அந்த தேவதூதன் அவருக்குத் துரோகமிழைத்தான். அவனது நிலை மிகவும் உயர்ந்ததாக வளர்ந்தது, அதன் காரணமாகவே அவன் தேவனுக்குத் துரோகமிழைக்க விரும்பினான். இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூட ஒருவர் கூறலாம், ஆனால் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வும் கூட. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு முதிர்ச்சியடைந்த பின்னரும் ஒருவன் எவ்வாறு தவிர்க்க முடியாமல் மரிக்கிறானோ, இதுவும் அதுபோலத்தான்; விஷயங்கள் இப்போது அந்த நிலைக்கு வளர்ந்திருக்கின்றன. சில அபத்தமான முட்டாள்கள், “சாத்தான் உம் எதிரி என்பதால், நீர் ஏன் அதைச் சிருஷ்டித்தீர்? பிரதான தூதன் உமக்கு துரோகமிழைப்பான் என்று உமக்குத் தெரியாதா? உம்மால் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை பார்க்க முடியவில்லையா? பிரதான தூதனின் இயல்பு உமக்குத் தெரியாதா? அவன் உமக்குத் துரோகமிழைப்பான் என்பதை நீர் தெளிவாக அறிந்திருந்ததால், நீர் ஏன் அவனை ஒரு பிரதான தூதனாக மாற்றினீர்? அவன் உமக்குத் துரோகமிழைத்தது மட்டுமல்லாமல், தன்னுடன் பல தேவதூதர்களையும் வழிநடத்தி, மனிதகுலத்தைச் சீர்கெட்டுப்போக வைக்க மனுஷரின் உலகத்திற்கு வந்திறங்கினான். ஆனாலும் இன்றுவரை, உம்மால் உமது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தை முழுமையாக்க முடியவில்லை,” என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தைகள் சரியானவையா? நீ இவ்வாறாகச் சிந்திக்கும்போது, அவசியமானதை விட அதிக சிக்கலில் நீ உன்னையே சிக்க வைத்துக் கொள்வதில்லையா? இன்னும் சிலர், “சாத்தான் இன்றுவரை மனிதகுலத்தைச் சீர்கெட்டுப்போக வைக்கவில்லை என்றால், தேவன் இப்படி மனுஷகுலத்தின் இரட்சிப்பைக் கொண்டு வந்திருக்க மாட்டார். எனவே, தேவனின் ஞானமும், சர்வவல்லமையும் கண்ணுக்குத் தெரியாததாக இருந்திருக்கும்; அவருடைய ஞானம் எங்கே வெளிப்பட்டிருக்கும்? ஆகவே, தேவன், பின்னர் தனது சர்வவல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகச் சாத்தானுக்கான ஒரு மனித இனத்தை உருவாக்கினார்—இல்லையெனில், தேவனின் ஞானத்தை மனுஷன் எவ்வாறு கண்டுபிடிப்பான்? மனுஷன், தேவனை எதிர்க்கவில்லை அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்யவில்லை என்றால், அவருடைய செயல்கள் வெளிப்படுவது தேவையற்றதாக இருந்திருக்கும். சிருஷ்டிக்கப்பட்டவை அனைத்தும் அவரை வணங்கி அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் செய்ய வேண்டிய எந்தக் கிரியையும் இருந்திருக்காது,” என்கின்றனர். இது மெய்மைக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் தேவனைப் பற்றி இழிவானது என்று எதுவுமே இல்லை, எனவே அவரால் அசுத்தத்தை உருவாக்க முடியாது. தன் எதிரியைத் தோற்கடிப்பதற்கும், தாம் படைத்த மனுஷரை இரட்சிப்பதற்கும், மேலும், தேவனை வெறுக்கும், அவருக்குத் துரோகஞ்செய்யும், அவரை எதிர்க்கும் பிசாசுகளையும் சாத்தானையும் தோற்கடிப்பதற்கும் மட்டுமே அவர் தனது கிரியைகளை இப்போது வெளிப்படுத்துகிறார். ஆதியில் பிசாசுகளும், சாத்தானும் தேவனின் ஆதிக்கத்தின் கீழ், அவருக்கே சொந்தமானவையாக இருந்தவை. தேவன் இந்தப் பிசாசுகளை தோற்கடிக்க விரும்புகிறார், அவ்வாறு செய்யும்போது, சகலத்திற்கும் தன் சர்வவல்லமையை வெளிப்படுத்துகிறார். மனுஷகுலமும், பூமியிலுள்ள சகலமும் இப்போது சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன, மேலும் பொல்லாதவர்களின் ஆதிக்கத்தின் கீழும் உள்ளன. தேவன் தம் கிரியைகளைச் சகலத்திற்கும் வெளிப்படுத்த விரும்புகிறார், இதனால் ஜனங்கள் அவரை அறிந்துகொள்வார்கள், இதன் மூலம் சாத்தானைத் தோற்கடித்து, எதிரிகளை முற்றிலுமாக வெல்வார்கள். இந்தக் கிரியையின் முழுமையானது அவருடைய கிரியைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அவருடைய சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன, எனவே தேவன் தம்முடைய சர்வவல்லமையை அவர்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார், இதன் மூலம் சாத்தானைத் தோற்கடிப்பார். சாத்தான் இல்லை என்றால், அவர் தன் கிரியைகளை வெளிப்படுத்தத் தேவையில்லை. சாத்தானின் துன்புறுத்தல் இல்லாதிருந்திருந்தால், தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்து அதனை ஏதேன் தோட்டத்தில் வாழ வழிநடத்தியிருப்பார். சாத்தானின் துரோகத்திற்கு முன்பு, தேவன் தம்முடைய எல்லாக் கிரியைகளையும் தேவதூதர்களிடமோ அல்லது பிரதான தூதனிடமோ ஏன் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை? ஆரம்பத்தில், எல்லா தேவதூதர்களும், பிரதான தூதனும் தேவனை அறிந்திருந்தால், அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் அந்த அர்த்தமற்ற கிரியைகளைச் செய்திருக்க மாட்டார். சாத்தான் மற்றும் பிசாசுகள் இருப்பதனாலேயே, மனுஷரும் தேவனை எதிர்க்கிறார்கள், மேலும் கலகத்தனமான மனநிலையால் நிரப்பப்படுகிறார்கள். ஆகவே தேவன் தம்முடைய கிரியைகளை வெளிப்படுத்த விரும்புகிறார். அவர் சாத்தானுடன் போர் செய்ய விரும்புவதால், அவனைத் தோற்கடிக்க அவர் தனது சொந்த அதிகாரத்தையும் தன் எல்லாக் கிரியைகளையும் பயன்படுத்த வேண்டும்; இவ்வாறாக, அவர் மனுஷரிடையே செய்யும் இரட்சிப்பின் கிரியை அவர்களை அவரது ஞானத்தையும் சர்வவல்லமையையும் காண அனுமதிக்கும். இன்று தேவன் செய்து வரும் கிரியை அர்த்தமுள்ளதாக இருக்கிறது, “நீர் செய்யும் கிரியை முரண்பாடானதாக இல்லையா? இந்தக் கிரியையின் தொடர்ச்சியானது உமக்குச் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு விஷயமல்லவா? நீர் சாத்தானை சிருஷ்டித்தீர், பின்னர் உமக்குத் துரோகஞ்செய்யவும், எதிர்க்கவும் அவனை அனுமதித்தீர். நீர் மனுஷரைச் சிருஷ்டித்து, பின்னர் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைத்தீர், ஆதாமையும் ஏவாளையும் சோதிக்க அனுமதித்தீர். இவற்றையெல்லாம் நீர் வேண்டுமென்றே செய்ததால், நீர் ஏன் இன்னும் மனிதகுலத்தை வெறுக்கிறீர்? நீர் ஏன் சாத்தானை வெறுக்கிறீர்? இவை அனைத்தும் உம் சொந்தச் சிருஷ்டிப்புக்கள் இல்லையா? நீர் வெறுக்குமளவிற்கு என்ன இருக்கிறது?” என்று ஒரு சில அபத்தமான ஜனங்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஒருபோதும் தேவனின் கிரியை ஒப்பாகாது. அவர்கள் தேவனை நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் இருதயத்தின் ஆழத்தில், அவர்கள் தேவனைப் பற்றி குறை கூறுகிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! நீ உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை, உனக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பல எண்ணங்கள் உள்ளன, மேலும் தேவன் தவறு செய்ததாகவும் கூட நீ கூறுகிறாய்—நீ எவ்வளவு அபத்தமானவன்! நீதான் சத்தியத்தைத் தவறாகக் கையாளுகிறாய்; தேவன் தவறு செய்திருக்கிறார் என்பது விஷயம் அல்ல! சிலர் மீண்டும் மீண்டும், “நீர்தான் சாத்தானைச் சிருஷ்டித்தீர், நீர்தான் சாத்தானை மனுஷரிடையே அனுப்பி, அவர்களை இவனிடம் ஒப்படைத்தீர். மனுஷர், சாத்தானிய மனநிலையைப் பெற்றதும், நீர் அவர்களை மன்னிக்கவில்லை; மாறாக, நீர் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெறுத்தீர். முதலில் நீர் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நேசித்தீர், ஆனால் இப்போது நீர் அவர்களை வெறுக்கிறீர். நீர்தான் மனிதகுலத்தை வெறுத்தீர், ஆனாலும் மனிதகுலத்தை நேசித்தவரும் நீரே. இங்கே என்ன தான் நடக்கிறது? இது ஒரு முரண்பாடு அல்லவா?” என்று புகார் கூறுகிறார்கள். நீ அதை எப்படிப் பார்த்தாலும், பரலோகத்தில் இதுதான் நடந்தது; பிரதான தூதன், தேவனுக்குத் துரோகமிழைத்த விதமும், மனிதகுலம் சீர்கெட்டுப்போனதும் இப்படித்தான், மேலும் மனுஷர் இன்றுவரை இப்படித்தான் இருந்துவருகிறார்கள். நீங்கள் அதை எப்படிப்பட்ட விதத்தில் சொல்ல நினைத்தாலும், அதுதான் முழுக் கதை. எவ்வாறாயினும், தேவன் இன்று செய்து வரும் இந்தக் கிரியையின் முழு நோக்கமும் உங்களை இரட்சிப்பதற்காகவும், சாத்தானை தோற்கடிப்பதற்காகவும்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவதூதர்கள் குறிப்பாக பலவீனமானவர்களாகவும், பேசும் திறனற்றவர்களாகவும் இருந்ததால், அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டவுடன் அவர்கள் திமிர்பிடித்தவர்களாக மாறினார்கள். இது குறிப்பாக பிரதான தூதனின் விஷயத்தில் உண்மையாக இருந்தது, அவனது நிலை வேறு எந்த தேவதூதரை விடவும் மேலான ஒன்றாக இருந்தது. தேவதூதர்களிடையே ஒரு ராஜாவாக, அவன் லட்சக்கணக்கானவர்களை வழிநடத்தினான், யேகோவாவின் கீழ், அவனது அதிகாரம் மற்ற தேவதூதர்கள் எவரையும் விட அதிகமாக இருந்தது. அவன் அனைத்தையும் செய்ய விரும்பினான், மேலும் உலகைக் கட்டுப்படுத்த தேவதூதர்களை மனுஷரிடையே வழிநடத்திச் சென்றான். தேவன், தாம்தான் பிரபஞ்சத்தின் பொறுப்பாளர் என்று கூறினார்; ஆனால் பிரதான தூதனோ, தானே பிரபஞ்சத்தின் பொறுப்பாளர் என்று கூறினான்—அதன்பின்னர், பிரதான தூதன் தேவனுக்குத் துரோகமிழைத்தான். தேவன் பரலோகத்தில் வேறொரு உலகைப் படைத்திருந்தார், பிரதான தூதன் இந்த உலகத்தைக் கட்டுப்படுத்தவும், சாவுக்கேதுவான சாம்ராஜ்யத்திற்கு இறங்கவும் விரும்பினான். அவ்வாறு செய்ய தேவன் அனுமதிப்பாரா? இவ்வாறு, அவர் பிரதான தூதனைத் தாக்கி, அவனைக் காற்றின் நடுவே வீசினார். அவன் மனுஷரைச் சீர்கெட்டுப்போக வைத்ததிலிருந்து, தேவன் அவர்களை இரட்சிப்பதற்காகப் பிரதான தூதனுடன் போர் தொடுத்திருக்கிறார்; அவர் இந்த ஆறாயிரம் ஆண்டுகளை அவனது தோல்விக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனைப் பற்றிய உங்கள் கருத்தாக்கம் தேவன் தற்போது செய்து வரும் கிரியைக்குப் பொருந்தாது; இது முற்றிலும் நடைமுறைக்கு மாறானது, இது மிகவும் தவறானதும் கூட! உண்மையில், பிரதான தூதனின் துரோகத்திற்குப் பிறகுதான் தேவன் அவனைத் தனது எதிரி என்று அறிவித்தார். அவனது துரோகத்தின் காரணமாகவே, பிரதான தூதன் சாவுக்கேதுவான சாம்ராஜ்யத்திற்கு வந்திறங்கியதும் மனிதகுலத்தை மிருகத்தனமாக மிதித்தான், மேலும் இந்தக் காரணத்தினால்தான் மனிதகுலம் இந்த நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அது நடந்தபின், தேவன் சாத்தானிடம் சபதம் செய்தார், “நான் உன்னைத் தோற்கடித்து, நான் சிருஷ்டித்த சகல மனுஷருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவேன்.” முதலில் ஒப்புக் கொள்ளாத சாத்தான், “உண்மையில் உம்மால் என்னை அப்படியென்ன செய்துவிட முடியும்? உம்மால் உண்மையிலேயே என்னைத் தாக்கி, காற்றின் நடுவே வீசிடக் கூடுமோ? உம்மால் என்னை உண்மையிலேயே தோற்கடிக்க முடியுமா?” என்று பதிலளித்தான். தேவன் அவனை வீழ்த்தி காற்றின் நடுவே வீசிய பிறகு, அவர் அந்தப் பிரதான தூதன் மீது மேலும் கவனம் செலுத்தவில்லை, பின்னர் சாத்தானின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியிலும் மனிதகுலத்தை இரட்சிக்கவும், தனது சொந்த கிரியையைச் செய்யவும் தொடங்கினார். சாத்தானால் சகலத்தையும் செய்ய முடிந்தது, ஆனால் தேவன் முன்பு அவனுக்குக் கொடுத்த வல்லமையே அதற்கெல்லாம் காரணமாக இருந்தது; அவன் அவற்றைக் காற்றின் நடுவே எடுத்துச் சென்று, இன்றுவரை அவற்றை வைத்திருக்கிறான். பிரதான தூதனைக் காற்றின் நடுவே அடித்துத் துரத்திவிடும் போது, தேவன் அவனது அதிகாரத்தைத் திரும்பப் பெறவில்லை, எனவே சாத்தான் தொடர்ந்து மனிதகுலத்தைச் சீர்கெட்டுப் போகவைத்தான். தேவன், மறுபுறம், மனிதகுலத்தை இரட்சிக்கத் தொடங்கினார். மனிதகுலம் சிருஷ்டிக்கப்பட்டதும், அதனைச் சீர்கெடுக்கத் துவங்கியிருந்தான். பரலோகத்தில் இருந்தபோது தேவன் தம்முடைய கிரியைகளை வெளிப்படுத்தவில்லை; இருப்பினும், பூமியை சிருஷ்டிப்பதற்கு முன்பு, அவர் பரலோகத்தில் சிருஷ்டித்த உலகில் உள்ள ஜனங்களை அவருடைய கிரியைகளைக் காண அனுமதித்தார், இதன்மூலம் அந்த ஜனங்களைப் பரலோகத்திற்கு மேலே வழிநடத்துகிறார். அவர் அவர்களுக்கு ஞானத்தையும் புத்திசாலித்தனத்தையும் கொடுத்தார், அந்த ஜனங்களை அந்த உலகில் ஜீவிக்க வழிநடத்தினார். இயற்கையாகவே, நீங்கள் யாரும் இதனை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பின்னர், தேவன் மனுஷரைச் சிருஷ்டித்த பிறகு, பிரதான தூதன் அவர்களைச் சீரழிக்கத் தொடங்கினான்; பூமியில், மனிதகுலம் அனைத்தும் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தது. அப்போதுதான் தேவன் சாத்தானுக்கு எதிரான போரைத் தொடங்கினார், இந்த நேரத்தில்தான் மனுஷர் அவருடைய கிரியைகளைக் காணத் தொடங்கினர். ஆரம்பத்தில், இதுபோன்ற கிரியைகள் மனிதகுலத்திடம் இருந்து மறைக்கப்பட்டன. சாத்தான் காற்றின் நடுவே அடித்து நொறுக்கப்பட்ட பிறகு, அவன் தன் சொந்த காரியங்களைச் செய்தான், தேவன் தொடர்ந்து தனது சொந்தச் கிரியைகளைச் செய்யத் தொடங்கினார். கடைசி நாட்கள் வரை சாத்தானுக்கு எதிராக தொடர்ந்து போரை நடத்துகிறார். இப்போது சாத்தான் அழிக்கப்பட வேண்டிய நேரம். ஆரம்பத்தில், தேவன் அவனுக்கு அதிகாரம் கொடுத்தார், பின்னர் அவர் அவனை காற்றின் நடுப்பகுதிக்கு அடித்து விரட்டினார், ஆனாலும் அவன் எதிர்த்துக் கொண்டேயிருக்கிறான். அதன் பிறகு, அவன் பூமியில் மனிதகுலத்தைச் சீரழித்தான், ஆனால் தேவனே மனிதகுலத்தை நிர்வகித்து வந்தார். தேவன், சாத்தானைத் தோற்கடிக்க மனுஷ நிர்வகித்தலைப் பயன்படுத்துகிறார். ஜனங்களைச் சீரழிப்பதன் மூலம், சாத்தான் அவர்களின் தலைவிதியை நெருக்கி, தேவனின் கிரியையைச் சீர்குலைக்கிறான். மறுபுறம், மனிதகுலத்தை இரட்சிப்பதே தேவனின் கிரியையாக இருக்கிறது. தேவன் செய்யும் கிரியையின் எந்தக் கட்டம் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக இல்லை? எந்த நடவடிக்கை ஜனங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும், அவர்கள் நீதியுடன் நடந்துகொள்வதற்கும், நேசிக்கக்கூடியவர்களின் உருவத்தை வெளிப்படுத்துவதற்கும் இல்லை? இருப்பினும், சாத்தான் இதைச் செய்வதில்லை. அவன் மனிதகுலத்தைச் சீரழிக்கிறான்; அவன் தொடர்ந்து பிரபஞ்சம் முழுவதும் மனிதகுலத்தைச் சீரழிக்கும் கிரியையை மேற்கொள்கிறான். நிச்சயமாக, தேவன் சாத்தானிடம் கவனம் செலுத்தாமல் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறார். சாத்தானுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரம் தேவனால் வழங்கப்பட்டதே; தேவன் அவருடைய எல்லா அதிகாரத்தையும் மொத்தமாகக் கொடுக்கவில்லை, எனவே சாத்தான் என்ன செய்தாலும், அவனால் ஒருபோதும் தேவனை மிஞ்ச முடியாது, எப்போதும் தேவனின் பிடியில்தான் இருக்கமுடியும். தேவன் பரலோகத்தில் இருந்தபோது அவருடைய எந்தக் கிரியைகளையும் வெளிப்படுத்தவில்லை. அவர் வெறுமனே சாத்தானுக்கு அதிகாரத்தின் ஒரு சிறிய பகுதியைக் கொடுத்து, மற்ற தேவதூதர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர அவர் அனுமதித்தார். ஆகையால், சாத்தான் என்ன செய்தாலும், அவனால் தேவனின் அதிகாரத்தை மிஞ்ச முடியாது, ஏனென்றால் தேவன் முதலில் வழங்கிய அதிகாரம் மிகக் குறைவானதுதான். தேவன் கிரியை செய்கையில், சாத்தான் இடையூறு செய்கிறான். கடைசி நாட்களில், அவனது இடையூறுகள் முடிவடையும்; அதேபோல், தேவனின் கிரியையும் முடிவடையும், மேலும் தேவன் பரிபூரணப்படுத்த விரும்பும் மனுஷர், பரிபூரணப்படுத்தப்படுவர். தேவன், ஜனங்களை நேர்மறையாக வழிநடத்துகிறார்; அவரது வாழ்க்கை ஜீவத்தண்ணீர்போன்றது, அளவிட முடியாதது மற்றும் எல்லையற்றது. சாத்தான் மனுஷனை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சீரழித்துவிட்டான்; முடிவில், ஜீவத்தண்ணீர் மனுஷனைப் பரிபூரணப்படுத்தும், சாத்தானால் தலையிட்டு அவனது கிரியையைச் செய்ய இயலாது. இதன்மூலம், தேவனால் இந்த ஜனங்களை முழுமையாகத் திரும்பப் பெற முடியும். இப்போது கூட, சாத்தான் இதை ஏற்க மறுக்கிறான்; அவன் தொடர்ந்து தேவனுக்கு எதிராகத் தன்னைத் தூண்டுகிறான், ஆனால் அவர் அதைக் கவனிப்பதே இல்லை. “சாத்தானின் அந்தகாரப் படைகள் அனைத்தையும், சகல அந்தகாரச் செல்வாக்குகளையும் நான் வெற்றி கொள்வேன்,” என்று தேவன் கூறியுள்ளார். இது இப்போது மாம்சத்தில் செய்யப்பட வேண்டிய கிரியை, மேலும் இதுவே தேவன் மாம்சமாக மாறுவதையும் முக்கியமாக்குகிறது: அதாவது, கடைசி நாட்களில் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையின் கட்டத்தை நிறைவு செய்வதற்கும், சாத்தானுக்குச் சொந்தமான அனைத்தையும் துடைத்தெறிவதற்கும் இந்தக் கிரியை செயல்படுத்தப்படும். சாத்தானுக்கு எதிரான தேவனுடைய வெற்றி தவிர்க்கமுடியாதது! உண்மையில், சாத்தான் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே தோல்வியடைந்து விட்டான். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் முழுவதும் சுவிசேஷம் பரவத் தொடங்கியபோது—அதாவது, தேவனின் மனுஷ அவதரிப்பு அவருடைய கிரியையைத் தொடங்கியதும், இந்தக் கிரியை செயல்பாட்டிற்கு வந்தது—சாத்தான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டான், ஏனென்றால் மனுஷ அவதரிப்பின் நோக்கம் சாத்தானை வெல்வதே ஆகும். தேவன் மீண்டும் மாம்சமாகி, எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாத தன் கிரியையைத் துவங்கிவிட்டார் என்பதைச் சாத்தான் கண்டவுடனேயே, இந்தக் கிரியையைக் கண்டு அவன் திகைத்துப்போனான், மேலும் எந்தக் குறும்புகளையும் செய்யத் துணியவில்லை. முதலில் சாத்தான், தானும் ஏராளமான ஞானத்தைக் கொண்டிருப்பதாக நினைத்து, தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவித்தான்; எவ்வாறாயினும், தேவன் மீண்டும் மாம்சமாக மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அல்லது அவருடைய கிரியையில், மனுஷரை வென்று சாத்தானைத் தோற்கடிக்க தேவன் சாத்தானின் கலகத்தனத்தை மனிதகுலத்திற்கான வெளிப்பாடாகவும் நியாயத்தீர்ப்பாகவும் பயன்படுத்துவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தேவன் சாத்தானை விட புத்திசாலி, அவருடைய கிரியைகள் அதை விட புத்திசாலித்தனமானவை. ஆகையால், நான் முன்பு கூறியது போல், “நான் செய்யும் கிரியை சாத்தானின் தந்திரங்களுக்குப் பிரதியுத்தரமாக மேற்கொள்ளப்படுகிறது; இறுதியில், நான் என் சர்வவல்லமையையும், சாத்தானின் வல்லமையற்ற தன்மையையும் வெளிப்படுத்துவேன்.” தேவன் தனது கிரியையை முன்னணியில் மேற்கொள்வார், அதே நேரத்தில் சாத்தான் பின்னால் மேற்கொள்வான், இறுதியில், அவன் அழிக்கப்படுவான்—தன்னை எது அடித்தது என்று கூட அவனுக்குத் தெரியாது! அடித்து நொறுக்கப்பட்ட பின்னரே அவன் உண்மையை உணருவான், அதற்குள் அவன் ஏற்கனவே அக்கினிக்கடலில் எரிக்கப்பட்டிருப்பான். அப்போது அவன் முழுமையாக உறுதிப்பட்டிருப்பான் இல்லையா? ஏனென்றால், சாத்தானுக்குக் கிரியை செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இருக்காது!

இந்தப் படிப்படியான, மெய்யான கிரியையே பெரும்பாலும் தேவனின் இருதயத்தை மனிதகுலத்திற்கான துயரத்துடன் எடைபோடுகிறது, எனவே சாத்தானுடனான அவரது போர் ஆறாயிரம் ஆண்டுகளாக நீடித்துவருகிறது, மேலும் தேவன், “நான் மீண்டும் ஒருபோதும் மனிதகுலத்தை உருவாக்கவும் மாட்டேன், மீண்டும் தேவதூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கவும் மாட்டேன்,” என்று கூறியிருக்கிறார். அப்போதிருந்து, தேவதூதர்கள் பூமியில் கிரியை செய்ய வந்தபோது, அவர்கள் சில கிரியைகளைச் செய்ய தேவனை வெறுமனே பின்தொடர்ந்தார்கள்; அவர் மீண்டும் அவர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. இஸ்ரவேலர் கண்ட தேவதூதர்கள் தங்கள் கிரியைகளை எவ்வாறு செயல்படுத்தினார்கள்? தேவதூதர்கள் தங்களை சொப்பனங்களில் வெளிப்படுத்தி யேகோவாவின் வார்த்தைகளை எடுத்துரைத்தனர். சிலுவையில் அறையப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டபோது, பாறாங்கல்லைப் பக்கவாட்டில் தள்ளியவர்கள் தேவதூதர்கள்தான்; தேவனின் ஆவி இந்தக் கிரியையைத் தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. தேவதூதர்கள் இந்த மாதிரியான கிரியைகளை மட்டுமே செய்தார்கள்; அவர்கள் துணைப் பாத்திரங்களாக இருந்தார்கள், ஆனால் அவர்களிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை, ஏனென்றால் தேவன் மீண்டும் அவர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கியிருக்கவில்லை. சிறிது நேரம் கிரியை செய்த பிறகு, தேவன் பூமியில் பயன்படுத்திய ஜனங்கள், தேவனின் நிலையை ஏற்றுக்கொண்டு, “நான் பிரபஞ்சத்தை மிஞ்ச விரும்புகிறேன்! நான் மூன்றாம் வானத்தில் நிற்க விரும்புகிறேன்! இறையாண்மை அதிகாரத்திற்கான ஆட்சியை நாங்கள் வைத்திருக்க விரும்புகிறோம்!” என்றனர். பல நாட்கள் கிரியை செய்த பிறகு அவர்கள் அகங்காரம் கொள்வர்; பூமியில் இறையாண்மை அதிகாரம் வைத்திருக்கவும், வேறொரு தேசத்தை ஸ்தாபிக்கவும், சகலத்தையும் தங்கள் பாதத்தின் கீழ் வைத்திருக்கவும், மூன்றாம் வானத்தில் நிற்கவும் அவர்கள் விரும்பினர். நீ வெறுமனே தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் என்பது உனக்குத் தெரியாதா? மூன்றாம் வானத்திற்கு உன்னால் எப்படி ஏற முடியும்? தேவன் அமைதியாகவும், கூக்குரலிடாமலும் கிரியை செய்ய பூமிக்கு வருகிறார், பின்னர் யாவருமறியாமல் தனது கிரியையை முடித்த பிறகு வெளியேறுகிறார். மனுஷரைப் போல அவர் ஒருபோதும் கூக்குரலிடுவதில்லை, மாறாக அவருடைய கிரியையைச் செய்வதில் நடைமுறைக்குரியவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் ஒரு திருச்சபைக்குள் நுழைந்து, “நான் உங்கள் அனைவரையும் துடைத்துப் போடுவேன்! நான் உங்களை சபித்து, சிட்சிப்பேன்!” என்று கூக்குரலிடுவதில்லை. அவர் வெறுமனே தனது சொந்தக் கிரியையைத் தொடர்ந்து செய்கிறார், அதனை முடித்ததும் அவர் வெளியேறுகிறார். நோயுற்றவர்களைக் குணப்படுத்தும், பிசாசுகளை விரட்டியடிக்கும், பிரசங்கத்தில் மற்றவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றும், நீண்ட மற்றும் ஆடம்பரமான உரைகளைக் கொடுக்கும், மற்றும் நம்பத்தகாத விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் அந்த மதப் போதகர்கள் அனைவருமே அகங்காரமானவர்கள்! அவர்கள் பிரதான தூதனின் சந்ததியினர்!

இன்றைய நாளிலும் தனது ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியைகளைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தேவன், தம்முடைய பல கிரியைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார், இதன் முதன்மை நோக்கம் சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலம் முழுமைக்குமான இரட்சிப்பைக் கொண்டுவருவதாகும். பரலோகத்தில் உள்ள அனைத்தையும், பூமியிலுள்ள சகலத்தையும், சமுத்திரங்களுக்குள் உள்ள அனைத்தையும், மற்றும் பூமியில் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கடைசிப் பொருளையும் அவருடைய சர்வவல்லமையைக் காணவும், அவருடைய எல்லா கிரியைகளுக்கும் சாட்சியாகவும் இருக்க அனுமதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். சாத்தானை அவர் தோற்கடித்ததன் மூலம் அவர் செய்த எல்லாக் கிரியைகளையும் மனுஷருக்கு வெளிப்படுத்தவும், அவர்கள் அவரைப் புகழ்ந்து பேசவும், மற்றும் சாத்தானைத் தோற்கடித்ததில் அவருடைய ஞானத்தை உயர்த்தவும் இந்த வாய்ப்பைக் கைக்கொள்கிறார். பூமியிலும், பரலோகத்திலும், சமுத்திரங்களிலும் உள்ள சகலமும் தேவனை மகிமைப்படுத்துகின்றன, அவருடைய சர்வவல்லமையைப் புகழ்கின்றன, அவருடைய ஒவ்வொரு கிரியையையும் புகழ்கின்றன, அவருடைய பரிசுத்த நாமத்தைக் கூக்குரலிடுகின்றன. அவர் சாத்தானைத் தோற்கடித்ததற்கு இதுவே சான்று; அவர் சாத்தானை வென்றதற்கு இதுவே சான்று. மிக முக்கியமாக, அவர் மனுஷகுலத்தை இரட்சித்ததற்கும் இதுவே சான்று. தேவனின் சிருஷ்டிப்புக்கள் சகலமும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருகின்றன, அவருடைய எதிரியைத் தோற்கடித்து வெற்றிகரமாகத் திரும்பியதற்காக அவரைப் புகழ்கின்றன, மேலும் அவரை வெற்றிகரமான ராஜா என்றும் புகழ்கின்றன. அவருடைய நோக்கம் சாத்தானை தோற்கடிப்பது மட்டுமாக இருக்கவில்லை, அதனால்தான் அவருடைய கிரியை ஆறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. மனிதகுலத்தை இரட்சிக்க அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்துகிறார்; அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்தி அவருடைய எல்லாக் கிரியைகளையும் அவருடைய எல்லா மகிமையையும் வெளிப்படுத்துகிறார். அவர் மகிமையைப் பெறுவார், தேவதூதர்கள் அனைவரும் அவருடைய எல்லா மகிமையையும் காண்பார்கள். பரலோகத்திலுள்ள தூதர்களும், பூமியிலுள்ள மனுஷரும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் சிருஷ்டிகரின் மகிமையைக் காண்பார்கள். அவர் செய்யும் கிரியை இது. வானத்திலும் பூமியிலும் அவர் சிருஷ்டித்தவை அனைத்தும் அவருடைய மகிமைக்கு சாட்சியாக இருக்கும், மேலும் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்தபின் அவர் வெற்றிகரமாகத் திரும்பி வருவார், மேலும் மனிதகுலம் அவரைப் புகழ்ந்துப் பேச அனுமதிப்பார், இதனால் அவருடைய கிரியையில் இரட்டை வெற்றியைப் பெறுவார். இறுதியில், மனிதகுலம் முழுவதும் அவரால் ஜெயங்கொள்ளப்படும், அவரை எதிர்த்து நிற்கும் அல்லது கலகம் செய்யும் எவரையும் அவர் அழிப்பார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுக்குச் சொந்தமான அனைவரையும் அவர் அழிப்பார். நீ தற்போது தேவனின் பல கிரியைகளுக்குச் சாட்சியாக இருக்கிறாய், ஆனாலும் நீ எதிர்க்கிறாய், கலகக்காரனாக இருக்கிறாய், கீழ்ப்படியவும் மறுக்கிறாய்; நீ பல விஷயங்களை உனக்குள் வைத்திருக்கிறாய், மேலும் நீ விரும்பியதைச் செய்கிறாய். நீ உன் சொந்த ஆசைகளையும் விருப்பங்களையும் பின்பற்றுகிறாய்; இவை அனைத்தும் கலகத்தன்மையையும், எதிர்ப்பையும் கொண்டவை. மாம்சத்துக்காகவும், ஒருவரின் ஆசைகளுக்காகவும், அதேபோல் ஒருவரின் சொந்த விருப்பங்களுக்காகவும், உலகம் மற்றும் சாத்தானுக்காகவும் தேவன் மீதுள்ள எந்த விசுவாசமும் இழிவானதே; அது இயற்கையாகவே எதிர்ப்புத்தன்மையும், கலகத்தன்மையும் கொண்டது. இப்போதெல்லாம், எல்லா விதமான விசுவாசங்களும் உள்ளன: சிலர் பேரழிவு காரணமாக தஞ்சமடைய விழைகிறார்கள், மற்றவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற முற்படுகிறார்கள்; சிலர் மறைபொருட்களைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள், மற்றவர்கள் பணத்தை நாடுகிறார்கள். இவை அனைத்தும் எதிர்ப்பின் வடிவங்கள், மேலும் இவை அனைத்தும் இறைபழி கொண்டவை! ஒருவர் எதிர்க்கிறார் அல்லது கலகம் செய்கிறார் என்று சொல்வது இது போன்ற நடத்தைகளைக் குறிக்கவில்லையா? இந்த நாட்களில் பலர் முணுமுணுக்கிறார்கள், குறை சொல்கிறார்கள், அல்லது நியாயத்தீர்ப்பளிக்கிறார்கள். அவை அனைத்தும் பொல்லாதவர்களால் செய்யப்படுபவை; அவை மனுஷனின் எதிர்ப்பு மற்றும் கலகத்தின் எடுத்துக்காட்டுகள். அத்தகையவர்கள் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். தேவன் யாரையெல்லாம் பெறுகிறாரோ, அவர்களெல்லாம் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவர்கள் ஆவர்; அவர்கள் சாத்தானால் சீர்கெட்டுப்போனவர்கள், ஆனால் தேவனின் தற்போதையக் கிரியையால் இரட்சிக்கப்பட்டு ஜெயங்கொண்டவர்கள், இன்னல்களைச் சகித்தவர்கள், இறுதியில், தேவனால் முற்றிலுமாகப் பெற்றுக் கொண்டவர்கள், சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இனியும் வாழாதவர்கள், அநீதியிலிருந்து விடுபட்டுக் கொண்டவர்கள், பரிசுத்த தன்மையுடன் வாழத் தயாராக இருப்பவர்கள்—அத்தகையவர்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் உண்மையில் பரிசுத்தவான்கள். உன் தற்போதைய நடவடிக்கைகள் தேவனின் தேவைகளின் ஒரு பகுதியுடன் கூட பொருந்தவில்லை என்றால், நீ புறம்பாக்கப்படுவாய். இது மறுக்க முடியாதது. சகலமும், தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது; நீ முன்னரே முன்குறிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இன்றும் உன் செயல்கள் உன் முடிவைத் தீர்மானிக்கும். உன்னால் இப்போது சரியாகச் செயல்பட முடியாவிட்டால், நீ புறம்பாக்கப்படுவாய். உன்னால் இப்போது செயல்பட முடியாவிட்டால், பின்னர் எப்போது செயல்படுவாய்? இதுபோன்ற ஒரு பெரிய அற்புதம் உனக்கு முன் தோன்றியிருக்கிறது, ஆனாலும் நீ இன்னும் விசுவாசிக்கவில்லை. அப்படியானால், அவர் தனது கிரியையை முடித்துவிட்டு, இனிமேல் அத்தகைய கிரியைகளைச் செய்யமாட்டார் என்றிருக்கும் போது எப்படி நீ அவரை விசுவாசிப்பாய்? அச்சமயத்தில் நீ அவரைப் பின்பற்றுவது மேலும் சாத்தியமற்றதாகிவிடும்! பிற்காலத்தில், தேவன், உன் அணுகுமுறை, தேவனின் கிரியையைப் பற்றிய உன் அறிவு, மற்றும் நீ பாவம் மிக்கவனா அல்லது நீதியுள்ளவனா என்பதைத் தீர்மானிக்கும் உன் அனுபவம், அல்லது நீ பூரணப்படுத்தப்பட்டு இருக்கிறாயா அல்லது புறம்பாக்கப்பட்டிருக்கிறாயா என்பனவற்றில் உன்னைச் சார்ந்திருப்பார். நீ இப்போது தெளிவாகக் காண வேண்டும். பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு கிரியை செய்கிறார்: இன்று உன் நடத்தைக்கு ஏற்ப அவர் உன் முடிவைத் தீர்மானிக்கிறார். இன்றைய வார்த்தைகளைப் பேசுவது யார்? இன்றைய கிரியையைச் செய்வது யார்? இன்று நீ புறம்பாக்கப்படுவாய் என்று தீர்மானிப்பது யார்? உன்னைப் பரிபூரணப்படுத்த முடிவு செய்வது யார்? இவற்றையெல்லாம் நானேதான் மேற்கொள்கிறேன், இல்லையா? இந்த வார்த்தைகளைப் பேசுபவர் நானே; அத்தகைய கிரியைகளைச் செய்வதும் நான்தான். ஜனங்களைச் சபித்தல், சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பளித்தல் ஆகிய சகலமும் எனது கிரியையின் பகுதிகள்தான். முடிவில், உன்னை புறம்பாக்கும் முடிவை எடுப்பதும் நானாகவே இருப்பேன். இந்தக் கிரியைகள் அனைத்தும் எனது வேலைதான்! உன்னை முழுமையாக்குவதும் எனது வேலைதான், மேலும் உன்னை ஆசீர்வாதங்களை அனுபவிக்க அனுமதிப்பதும் எனது வேலைதான். இதெல்லாம் நான் செய்யும் கிரியைகள். உனது முடிவு யேகோவாவால் முன்னரே முன்குறிக்கப்படவில்லை; அது இன்றைய தேவனால் தீர்மானிக்கப்படுகிறது. அது இப்போது தீர்மானிக்கப்படுகிறது; உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே அது தீர்மானிக்கப்படவில்லை. சில அபத்தமான ஜனங்கள், “ஒருவேளை உமது கண்களில் ஏதோ தவறு இருக்கலாம், நீர் காண வேண்டிய விதத்தில் நீர் என்னைக் காண்பதில்லை. இறுதியில், ஆவியானவர் வெளிப்படுத்துவதை நீர் காண்பீர்!” என்று கூறுகிறார்கள். இயேசு முதலில் யூதாஸை தனது சீடனாகத் தேர்ந்தெடுத்தார். ஜனங்கள்: “அவரைக் காட்டிக் கொடுக்கும் சீடனை அவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்?” என்று கேட்கிறார்கள். முதலில், யூதாஸுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணம் இல்லை; இது பின்னர்தான் நடந்தது. அந்த நேரத்தில், இயேசு யூதாஸை மிகவும் சாதகமாகத்தான் பார்த்தார்; அவர் அந்த மனுஷனைப் பின்பற்றச் செய்தார், மேலும் அவர்களுடைய நிதி விஷயங்கள் தொடர்பானப் பொறுப்பை அவனுக்குக் கொடுத்தார். யூதாஸ் பணத்தைத் தவறாகக் கையாளுவான் என்று இயேசு அறிந்திருந்தால், அவர் ஒருபோதும் அவனுக்கு அத்தகைய விஷயங்களுக்குப் பொறுப்பேற்க விட்டிருக்க மாட்டார். இந்த மனுஷன் வக்கிரமானவன், வஞ்சகமுள்ளவன் என்றோ, அல்லது இவன் தன் சகோதர சகோதரிகளை ஏமாற்றுவான் என்றோ இயேசு முதலில் அறிந்திருக்கவில்லை என்று சொல்லலாம். பின்னர், யூதாஸ் சிறிது காலம் இயேசுவைப் பின்பற்றியபின், அவன் தம் சகோதர சகோதரிகளையும், தேவனையும் இனிமையாகப் பேசி ஏமாற்றுகிறான் என்பதை இயேசு அறிந்துக்கொண்டார். யூதாஸுக்குப் பணப் பையில் இருந்து பணம் எடுக்கும் பழக்கம் இருப்பதையும் ஜனங்கள் கண்டுபிடித்தனர், பின்னர் அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். அப்போதுதான் நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் இயேசு அறிந்துக் கொண்டார். ஏனென்றால், இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையைச் செயல்படுத்த வேண்டியிருந்தது, அவரைக் காட்டிக் கொடுக்க யாராவது தேவைப்பட்டார்கள், மேலும் யூதாஸ் இந்தப் பாத்திரத்தை நிறைவேற்ற சரியான நபராக இருந்ததால், இயேசு, “நம்மிடையே ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன், தாம் சிலுவையில் அறையப்பட இந்த துரோகத்தைப் பயன்படுத்துவார், மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுப்பப்படுவார்,” என்றார். அந்த நேரத்தில், இயேசு, தன்னைக் காட்டிக் கொடுப்பதற்காக யூதாஸைத் தேர்ந்தெடுக்கவில்லை; மாறாக, யூதாஸ் ஒரு விசுவாசமான சீடனாக இருப்பான் என்று அவர் நம்பியிருந்தார். எதிர்பாரா விதமாக, யூதாஸ் தேவனைக் காட்டிக்கொடுத்த ஒரு பேராசையுள்ளத் தரங்கெட்டவனாக மாறினான், எனவே இந்தக் கிரியைக்கு யூதாஸைத் தேர்ந்தெடுக்க இயேசு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தினார். இயேசுவின் பன்னிரண்டு சீடர்கள் அனைவரும் விசுவாசமுள்ளவர்களாக இருந்திருந்தால், யூதாஸைப் போன்றவர்கள் அவர்களில் யாரும் இல்லாமல் இருந்திருந்தால், இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் நிச்சயம் அந்தச் சீடர்களில் இல்லாத ஒருவனாக இருந்திருப்பான். இருப்பினும், அந்த நேரத்தில், லஞ்சம் வாங்குவதில் மகிழ்ச்சியடையும் ஒருவன், சீடர்களில் ஒருவனாக இருந்தான்: அவனே யூதாஸ். ஆகவே, இயேசு தனது கிரியையை முடிக்க இந்த மனுஷனைப் பயன்படுத்தினார். இது எவ்வளவு எளிமையானது! இயேசு தனது கிரியையின் ஆரம்பத்தில் இதை முன்னரே முன்குறிக்கவில்லை; நடப்பவை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளர்ந்த பின்னரே அவர் இந்த முடிவை எடுத்தார். இது இயேசுவின் முடிவு, அதாவது இது தேவனின் ஆவியின் முடிவு என்றும் சொல்லலாம். முதலில், யூதாஸைத் தேர்ந்தெடுத்தது இயேசு; யூதாஸ் பின்னர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது என்பது, பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சொந்த நோக்கங்களுக்காகச் செய்த காரியம். அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசுத்த ஆவியின் கிரியை அது. இயேசு யூதாஸைத் தேர்ந்தெடுத்தபோது, யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த மனுஷன் யூதாஸ்காரியோத்து என்பதை மட்டுமே அவர் அறிந்திருந்தார். உங்கள் முடிவுகளும் கூட, உங்களது இன்றைய கீழ்படியும் நிலைக்கு ஏற்பவும், உங்கள் ஜீவிதத்தின் வளர்ச்சியின் அளவிற்கு ஏற்பவும் தீர்மானிக்கப்படுகின்றன, மாறாக உலகம் சிருஷ்டிக்கப்பட்ட போதே உனது முடிவுகள் முன்குறிக்கப்பட்டன எனும் மனுஷனின் கருத்துக்கு ஏற்ப அல்ல. நீ இந்த விஷயங்களை தெளிவாக உணர வேண்டும். இந்தக் கிரியைகள் எதுவும் நீ கற்பனை செய்யும் விதத்தில் செய்யப்படுவதில்லை.

முந்தைய: மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

அடுத்த: பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக