தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்

தேவன் இப்போது, அவருடன் ஒத்துழைக்க முயற்சிப்பவர்கள், அவருடைய கிரியைக்குக் கீழ்ப்படியக்கூடியவர்கள், தேவன் பேசும் வார்த்தைகள் உண்மை என்று விசுவாசிப்பவர்கள், தேவனின் தேவைகளை நடைமுறைப்படுத்தக்கூடியவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட ஜனக்குழுவைப் பெற விரும்புகிறார்; அவர்கள் தங்களது இருதயங்களில் உண்மையான புரிதலைக் கொண்டவர்கள், அவர்கள்தாம் பூரணப்படுத்தப்படக்கூடியவர்கள், மேலும் அவர்களால் நிச்சயமாய்ப் பரிபூரணத்தின் பாதையில் நடக்க முடியும். தேவனின் கிரியையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்கள், தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணாதவர்கள், அவருடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தாதவர்கள், மற்றும் தங்களது இருதயங்களில் தேவனுக்கான எந்த அன்பும் இல்லாதவர்கள் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள் ஆவர். மனுவுருவான தேவனை சந்தேகிப்பவர்கள், அவரைப் பற்றிய நிச்சயமற்றவர்களாகவே இருக்கிறார்கள், அவருடைய வார்த்தைகளை ஒருபோதும் தீவிரமாகக் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் அவரை வஞ்சிக்கிறவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள் மற்றும் சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் ஆவார்கள்; அத்தகையவர்களைப் பரிபூரணப்படுத்த வழியே இல்லை.

நீ பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், நீ முதலில் தேவனால் தயவு பெற வேண்டும். ஏனென்றால், அவரால் தயவு செய்யப்படுபவர்களையும் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களையும் அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் நீ இருக்க விரும்பினால், அவருடைய கிரியைக்குக் கீழ்ப்படியும் ஓர் இருதயம் உன்னிடத்தில் இருக்க வேண்டும், நீ சத்தியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும், சகலத்திலும் தேவனின் ஆழ்ந்த சோதனையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ செய்கிற அனைத்தும் தேவனின் ஆழ்ந்த சோதனைக்கு உட்பட்டதா? உனது நோக்கம் சரியானதா? உனது நோக்கம் சரியாக இருந்தால், தேவன் உன்னைப் பாராட்டுவார்; உனது நோக்கம் தவறாக இருந்தால், உனது இருதயம் நேசிப்பது தேவனை அல்ல, மாம்சத்தையும் சாத்தானையும் என்பதை இது காட்டுகிறது. ஆகையால், சகலத்திலும் தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக நீ ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ ஜெபிக்கும்போது, நான் உனக்கு முன்னால் நேரில் நிற்கவில்லை என்றாலும், பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கிறார், மேலும் நீ ஜெபிப்பது என்னிடமும் மற்றும் தேவனுடைய ஆவியானவரிடமுமே. இந்த மாம்சத்தை நீ ஏன் நம்புகிறாய்? தேவனின் ஆவியானவரை அவர் கொண்டிருப்பதால் நீ நம்புகிறாய். இந்த மனிதன் தேவனின் ஆவியினைக் கொண்டிருக்காமல் இருந்தால் நீ அவரை நம்புவாயா? இந்த மனிதனை நீ நம்பும்போது, நீ தேவனின் ஆவியை நம்புகிறாய். இந்த மனிதனுக்கு நீ பயப்படும்போது, நீ தேவனின் ஆவிக்குப் பயப்படுகிறாய். தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கை இந்த மனிதன் மீதான நம்பிக்கையும், இந்த மனிதனின் மீதான நம்பிக்கை தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கையும் ஆகும். நீ ஜெபிக்கும்போது, தேவனுடைய ஆவி உன்னிடத்தில் இருப்பதையும், தேவன் உனக்கு முன்பாக இருப்பதையும் உணர்கிறாய், ஆகவே, நீ அவருடைய ஆவியிடம் ஜெபிக்கிறாய். இன்று, பெரும்பாலான ஜனங்கள் தங்களது செயல்களை தேவனின் முன் கொண்டுவர மிகவும் பயப்படுகிறார்கள்; நீ அவருடைய மாம்சத்தை ஏமாற்றும்போது, அவருடைய ஆவியை நீ ஏமாற்ற முடியாது. தேவனின் ஆழ்ந்த சோதனையைத் தாங்க முடியாத எந்தவொரு விஷயமும் சத்தியத்துடன் முரண்படுகின்றன, அவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும்; வேறு வகையில் செய்வது தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும். ஆகவே, நீ ஜெபிக்கும்போதும், பேசும்போதும், உன் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படும்போதும், உன் கடமையைச் செய்யும்போதும், உன் தொழிலைக் கவனிக்கும்போதும், எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தை தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும். உன் செயல்பாட்டை நீ நிறைவேற்றும்போது, தேவன் உன்னுடன் இருக்கிறார், உனது நோக்கம் சரியானது மற்றும் தேவனின் வீட்டின் பணிக்காக நீ இருக்கும் வரை, நீ செய்யும் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார்; உனது செயல்பாட்டை நிறைவேற்ற நீ உண்மையாக உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீ ஜெபிக்கும்போது, உன் இருதயத்தில் தேவன்மீது அன்பு வைத்திருந்தால், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியை நாடினால், இவை உனது நோக்கமாக இருந்தால், உனது ஜெபங்கள் பலனளிக்கும். உதாரணமாக, நீ கூட்டங்களில் ஜெபிக்கும்போது, உனது இருதயத்தைத் திறந்து தேவனிடம் ஜெபம் செய்து, பொய்யைப் பேசாமல் உனது இருதயத்தில் இருப்பதை அவரிடம் கூறினால், உனது ஜெபங்கள் நிச்சயமாகப் பலனளிக்கும். உனது இருதயத்தில் தேவனை நீ ஊக்கமாக நேசிக்கிறாயானால், தேவனிடம் ஆணையிட்டுக்கொடு: “வானத்திலும் பூமியிலும் சகலத்திலும் இருக்கும் தேவனே, நான் உம்மிடம் சத்தியம் பண்ணுகிறேன்: உம்முடைய ஆவியானவர் நான் செய்யும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்து கவனித்துக்கொள்வதோடு, நான் செய்யும் எல்லாம் உம்முடைய சமூகத்தில் நிற்பதை சாத்தியமாக்கும். என் இருதயம் எப்போதாவது உம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டாலோ அல்லது அது எப்போதாவது உமக்குத் துரோகம் செய்தாலோ என்னைக் கடுமையாக சிட்சித்து சபித்துவிடும். இந்த உலகத்திலோ அல்லது அடுத்த உலகத்திலோ என்னை மன்னிக்க வேண்டாம்!” அத்தகைய ஆணையைச் செய்துகொடுக்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ தைரியமில்லாதவன் என்பதையும், நீ இன்னும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறாய் என்பதையும் இது காட்டுகிறது. இந்தத் தீர்மானம் உன்னிடம் உள்ளதா? இது உண்மையிலேயே உனது தீர்மானமாக இருந்தால், நீ இந்த ஆணையைச் செய்ய வேண்டும். அத்தகைய ஆணையைச் செய்ய உனக்குத் தீர்மானம் இருந்தால், தேவன் உனது தீர்மானத்தை நிறைவேற்றுவார். நீ தேவனிடம்ஆணையிட்டுக் கொடுக்கும்போது, அவர் அதற்குச் செவிகொடுக்கிறார். உன் ஜெபத்தின் அளவையும் உனது கைக்கொள்ளுதலையும் பொறுத்து நீ பாவமுள்ளவனா அல்லது நீதிமானா என்பதை தேவன் தீர்மானிக்கிறார். இது இப்போது உன்னை பரிபூரணப்படுத்துவதற்கான செயல்முறையாகும், மேலும், நீ பரிபூரணமாக்கப்படுவதில் உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருந்தால், நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வந்து அவருடைய ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வாய்; நீ ஏதாவது ஒழுக்கக்கேடான கலகத்தைச் செய்தால் அல்லது நீ தேவனுக்குத் துரோகம் செய்தால், அவர் உனது ஆணையை நிறைவேற்றுவார், இதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும், அது அழிவோ சிட்சையோ எதுவாக இருந்தாலும், இது உன் சொந்தச் செயலாகும். நீ ஆணையிட்டுக்கொடுத்தாய், எனவே, நீ அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நீ ஆணையிட்டுக்கொடுத்தும், அதைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ அழிவை அனுபவிப்பாய். ஆணை உன்னுடையது என்பதால், தேவன் உன் ஆணையை நிறைவேற்றுவார். சிலர் ஜெபித்த பிறகு பயந்து, “எல்லாம் முடிந்துவிட்டது! ஒழுக்கக்கேட்டிற்கான என் வாய்ப்பு போய்விட்டது; துன்மார்க்கமான காரியங்களைச் செய்வதற்கான என் வாய்ப்பு போய்விட்டது; என் உலக ஏக்கங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!” என புலம்புகிறார்கள். இந்த ஜனங்கள் இன்னமும் உலகப்பற்றையும் பாவத்தையும் நேசிக்கிறார்கள், அவர்கள் அழிவை அனுபவிப்பது உறுதி.

தேவனை விசுவாசிப்பவனாக இருப்பதன் அர்த்தம், நீ செய்யும் அனைத்தும் அவர் முன் கொண்டுவரப்பட்டு அவருடைய ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீ செய்வதை தேவனின் ஆவியானவரின் முன் கொண்டுவர முடியும், ஆனால், தேவனின் மாம்சத்திற்குமுன் கொண்டுவர முடியாது என்றால், இது அவருடைய ஆவியால் நீ ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. தேவனுடைய ஆவியானவர் யார்? தேவன் சாட்சி கூறும் மனிதர் யார்? அவர்கள் இருவரும் ஒருவரே அல்லவா? பெரும்பாலான ஜனங்கள் அவர்களை இரு வேறானவர்களாகக் காண்கிறார்கள், தேவனின் ஆவியானவர் தேவனுடைய ஆவியானவர் என்றும், தேவன் சாட்சியம் அளிப்பவர் வெறுமனே ஒரு மனிதர் என்றும் காண்கிறார்கள். ஆனால் நீ தவறாக நினைக்கவில்லையா? இந்த மனிதர் யாருடைய சார்பாகச் செயல்படுகிறார்? மனுவுருவான தேவனை அறியாதவர்களுக்கு ஆவிக்குரிய புரிதல் இல்லை. தேவனின் ஆவியானவரும் அவருடைய மனுவுருவான மாம்சமும் ஒன்றே ஆகும். ஏனென்றால், தேவனின் ஆவியானவர் மாம்சத்தில் உருவானார். இந்த மனிதர் உனக்கு இரக்கமற்றவராக இருந்தால், தேவனின் ஆவியானவர் தயவு காட்டுவாரா? நீ குழப்பமடையவில்லையா? இன்று, தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத அனைவருமே அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது, மேலும் மனுவுருவான தேவனை அறியாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. நீ செய்யும் எல்லாவற்றையும் பார், அதை தேவனின் முன் கொண்டுவர முடியுமா என்று பார். நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனின் முன் உன்னால் கொண்டு வர முடியாவிட்டால், நீ ஒரு பொல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. பொல்லாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியுமா? நீ செய்யும் அனைத்தும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நோக்கமும், ஒவ்வொரு எதிர்வினையும் தேவனின் முன்பாகக் கொண்டுவரப்பட வேண்டும். உன் அன்றாட ஆவிக்குரிய ஜீவிதம்—உன் ஜெபங்கள், தேவனுடனான உனது நெருக்கம், தேவனுடைய வார்த்தைகளை நீ எப்படி புசித்துப் பானம் பண்ணுகிறாய், உனது சகோதர சகோதரிகளுடனான உனது ஐக்கியம், திருச்சபைக்குள் உனது ஜீவிதம்—மற்றும் பங்காளித்துவத்தில் உனது ஊழியம் ஆகியவை தேவனுக்கு முன்பாக அவருடைய ஆழ்ந்த சோதனைக்காகக் கொண்டு வரப்படலாம். இதுபோன்ற நடைமுறையே ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைய உதவும். தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வதற்கான செயல்முறையே சுத்திகரிப்புச் செயல்முறையாகும். தேவனின் ஆழ்ந்த சோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு அதிகமாக நீ சுத்திகரிக்கப்படுகிறாய், அவ்வளவு அதிகமாக தேவனின் சித்தத்திற்கு இணங்க இருக்கிறாய், இதனால் நீ ஒழுக்கக்கேட்டிற்குள் இழுக்கப்பட மாட்டாய், மேலும் உனது இருதயம் அவருடைய சமூகத்தில் ஜீவிக்கும். அவருடைய ஆழ்ந்த சோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்கிறாயோ, அந்த அளவிற்கு சாத்தானின் அவமானமும் மாம்சத்தைக் கைவிடுவதற்கான உன் திறனும் அதிகமாயிருக்கும். எனவே, தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வது ஜனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையின் பாதையாகும். நீ என்ன செய்தாலும், உன் சகோதர சகோதரிகளுடன் உரையாடும்போது கூட, நீ உன் செயல்களை தேவனின் முன்பாகக் கொண்டு வந்து அவருடைய ஆழ்ந்த சோதனையை நாடலாம், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நோக்கமாகக் கொள்ளலாம்; இது நீ கடைப்பிடிப்பதை மிகவும் சரியானதாக மாற்றும். நீ செய்யும் அனைத்தையும் தேவனின் முன்பாகக் கொண்டு வந்து தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நீ தேவனின் சமூகத்தில் ஜீவிக்கும் ஒருவராக இருக்க முடியும்.

தேவனைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒருபோதும் தேவனுக்குக் முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது. இது போன்றவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாவர். அவர்கள் மிகவும் பேராவலுள்ளவர்கள், அவர்களில் அதிகமான கலகங்கள் உள்ளன. எனவே, அவர்கள் தேவனிடமிருந்து தங்களைத் தூர விலக்குகிறார்கள், அவருடைய ஆழ்ந்த சோதனையை ஏற்கத் தயாராக இல்லை. இது போன்றவர்களை எளிதில் பூரணப்படுத்த முடியாது. சிலர் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணுவதிலும், அவற்றை ஏற்றுக்கொள்வதிலும் தேர்ந்தெடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற தேவனுடைய வார்த்தைகளின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளுகிறார்கள், ஒத்துப்போகாத பகுதிகளைப் புறக்கணிக்கிறார்கள். இது தேவனுக்கு எதிரான மிகவும் அப்பட்டமான கலகமும் எதிர்ப்பும் அல்லவா? யாராவது தேவனைப் பற்றி ஒரு சிறிய புரிதலைக் கூட பெறாமல் பல ஆண்டுகளாக நம்பினால், அவர்கள் ஓர் அவிசுவாசி. தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் அவரைப் பற்றிய புரிதலைத் பின்தொடர்பவர்கள், அவருடைய வார்த்தைகளை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் ஆவர். அவர்கள் தேவனின் சுதந்திரத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள், மேலும் அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தங்கள் இருதயத்தில் அவருக்கு இடம் அளிக்காதவர்களை தேவன் சபிக்கிறார், அத்தகையவர்களை அவர் சிட்சிக்கிறார் மற்றும் கைவிடுகிறார். நீ தேவனை நேசிக்கவில்லை என்றால் அவர் உன்னைக் கைவிடுவார், நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால், தேவனின் ஆவியானவர் உன்னைக் கைவிடுவார் என்று நான் உறுதியளிக்கிறேன். நீ நம்பவில்லை என்றால் முயற்சி செய்துபார்! இன்று நடைமுறைக்கான பாதையை நான் உனக்குத் தெளிவுபடுத்துகிறேன், ஆனால் நீ அதை நடைமுறைப்படுத்துவாயா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும். நீ அதை நம்பவில்லை என்றால், நீ அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்படுகிறாரா இல்லையா என்பதை நீயே காண்பாய்! நீ தேவனைப் புரிந்துகொள்வதைத் தொடரவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்ய மாட்டார். தம்முடைய வார்த்தைகளைப் பின்தொடர்ந்து அவற்றைப் பொக்கிஷமாகக் கருதுபவர்களில் தேவன் கிரியை செய்கிறார். தேவனின் வார்த்தைகளை நீ எவ்வளவு அதிகமாகப் பொக்கிஷமாகக் கருதுகிறாயோ, அவ்வளவு அதிகமாக அவருடைய ஆவி உன்னிடத்தில் கிரியை செய்வார். ஒரு மனிதன் தேவனின் வார்த்தைகளை எவ்வளவு அதிகமாகப் பொக்கிஷமாகக் கருதுகிறானோ, அவ்வளவு அதிகமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான அவர்களின் வாய்ப்பும் அதிகம். தம்மை உண்மையாக நேசிப்பவர்களை தேவன் பரிபூரணப்படுத்துகிறார், மேலும், அவருக்கு முன்பாக எவருடைய இருதயங்கள் அமைதியாக இருக்கின்றனவோ அவர்களை அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனின் எல்லாக் கிரியைகளையும் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் பிரகாசத்தைப் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் சமூகத்தைப் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் கவனிப்பையும் பாதுகாப்பையும் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் வார்த்தைகள் எவ்வாறு உன் யதார்த்தமாகின்றன, உன் வாழ்க்கைக்கு எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பொக்கிஷமாகக் கொள்வது என இவை அனைத்தும் தேவனின் இருதயத்துடன் சிறந்த முறையில் இசைந்து போகின்றன. தேவனின் கிரியையை நீ பொக்கிஷமாகக் கருதினால், அதாவது, அவர் உன்மீது செய்த எல்லா கிரியைகளையும் நீ பொக்கிஷமாகக் கருதினால், அவர் உன்னை ஆசீர்வதிப்பார், உன்னுடைய அனைத்தையும் பெருகச் செய்வார். தேவனின் வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கொள்ளாவிட்டால், அவர் உன்னிடத்தில் செயல்பட மாட்டார். ஆனால் அவர் உன் விசுவாசத்திற்காக அற்பமான கிருபையை மட்டுமே வழங்குவார், அல்லது மிகக்குறைந்த செல்வத்தையும், உன் குடும்பத்தினரையும் மிகக் குறைந்த பாதுகாப்போடு ஆசீர்வதிப்பார். தேவனின் வார்த்தைகளை உன் யதார்த்தமாக்க நீ கடும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் அவரைத் திருப்திப்படுத்தவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருக்க வேண்டும்; அவருடைய கிருபையை அனுபவிக்க மட்டுமே நீ பாடுபடக்கூடாது. தேவனின் கிரியையைப் பெறுவது, பரிபூரணத்தை அடைவது, தேவனுடைய சித்தத்தைச் செய்பவர்களாக மாறுவதை விட விசுவாசிகளுக்கு வேறு எதுவும் அதிக முக்கியமில்லை. இது நீ தொடர வேண்டிய இலக்காக இருக்கிறது.

கிருபையின் யுகத்தில் மனிதன் பின்தொடர்ந்த அனைத்தும் இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனென்றால், தற்போது உயர்ந்த தரம் வாய்ந்த பின்தொடர்தல் உள்ளது; பின்தொடரப்படுவது மிகவும் உயர்ந்ததாகவும், மேலும் அதிகமாக நடைமுறைக்கு ஏற்றவாறும் உள்ளது. பின்தொடரப்படுவது உள்ளாக மனிதனுக்கு என்ன தேவை என்பதைச் சிறப்பாகப் பூர்த்தி செய்ய முடியும். கடந்த காலங்களில், தேவன் இன்று ஜனங்கள் மீது கிரியை செய்வதைப் போல அப்போது கிரியை செய்யவில்லை; அவர் இன்று இந்த அளவிற்குப் பேசுவதைப் போல அப்போது அவர்களிடம் பேசவில்லை, அப்போது அவர்களிடமான அவரின் தேவைகளும் அவருடைய இப்போதைய தேவைகளைப் போல அதிகமானவை அல்ல. தேவன் இந்த விஷயங்களை உன்னிடம் பேசுகிறார் என்பது இப்போது தேவனின் இறுதி நோக்கம் உன் மீது, இந்த ஜனக்குழுவின் மீது கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், அதை உன் மைய இலக்காகப் பின்பற்று. நீ சுற்றித் திரிந்து, உன்னை ஒப்புக்கொடுத்து, ஒரு செயல்பாட்டைச் செய்கிறாயா, அல்லது தேவனின் கட்டளைகளைப் பெற்றிருக்கிறீர்களா என்பது முக்கியமல்ல, இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு எப்போதும் நோக்கம் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், தேவனின் சித்தத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேவன் மூலமாகப் பரிபூரணப்படுத்தப்படுவதை அல்லது ஜீவப்பிரவேசத்தைப் பின்தொடர்வதில்லை என்றும், மாம்ச அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்று யாராவது சொன்னால், அவர்கள் மனிதர்களில் குருடரானவர்கள். ஜீவிதத்தின் யதார்த்தத்தைப் பின்தொடராமல், ஆனால், வரப்போகும் உலகத்தில் நித்திய ஜீவனையும் மற்றும் இவ்வுலகில் பாதுகாப்பை மட்டுமே பின்தொடர்வோர், மனிதர்களில் குருடரானவர்கள். எனவே, நீ செய்யும் அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு ஆதாயம்பண்ணப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செய்யப்பட வேண்டும்.

தேவன் ஜனங்களில் செய்யும் கிரியை அவர்களின் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவதாகும். ஒரு மனிதனின் ஜீவிதம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் தேவை இருக்கிறது. மேலும், அவ்வளவாக அவர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த கட்டத்தில் உனக்கு எந்தப் பின்தொடர்தலும் இல்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைக் கைவிட்டுவிட்டார் என்பதை இது நிரூபிக்கிறது. ஜீவிதத்தைத் தொடர்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்; அத்தகையவர்கள் எப்போதும் பின்தொடர்கிறார்கள், எப்போதும் தங்களது இருதயத்தில் ஏக்கம் கொள்கிறார்கள். அத்தகையவர்கள் தற்போதுள்ள விஷயங்களில் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு நிலையும் உன்னில் ஒரு விளைவை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் நீ மெத்தனமாக மாறினால், உனக்கு இனி தேவைகள் இல்லையென்றால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ இனி ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் உன்னைக் கைவிடுவார். ஜனங்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவனின் ஆழ்ந்த சோதனை தேவைப்படுகிறது; அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவனிடமிருந்து ஏராளமான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தேவனின் வார்த்தையைப் புசித்துப் பானம் பண்ணாமல் ஜனங்களால் சமாளிக்க முடியுமா? தேவனின் வார்த்தையைப் போதுமான அளவு புசிக்கவோ பானம் பண்ணவோ முடியாது என்று யாராவது எப்போதும் உணர்ந்தால், அவர்கள் எப்பொழுதும் அதைப் பின்தொடர்ந்தால், அதற்காகப் பசி தாகம் கொண்டால், பரிசுத்த ஆவியானவர் அவர்களில் எப்போதும் கிரியை செய்வார். ஒருவர் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாரோ, அவ்வளவு நடைமுறை விஷயங்கள் அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து வெளிவரக்கூடும். ஒருவர் எவ்வளவு தீவிரமாகச் சத்தியத்தை நாடுகிறாரோ, அவ்வளவு விரைவாக அவர்கள் தங்களது ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைகிறார்கள். அது அவர்களை அனுபவத்தில் பணக்காரர்களாகவும், தேவனுடைய வீட்டில் வசிக்கும் செல்வந்தர்களாகவும் ஆக்குகிறது.

முந்தைய: தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்

அடுத்த: உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக